செவ்வாய், 10 ஜூலை, 2018

ஓலை எழுதுவோரும் எழுதுவிப்போரும்

ஓலை எழுதுவோரும் எழுதுவிப்போரும்

எழுத்துகள் தோன்றியதற்குப் பிறகு மொழிகள் நிலைகொள்ளத் தொடங்கின.  எழுத்துகளின் வரலாற்றை அறிய காலங்காலமாக எழுந்த எழுத்து வடிவங்களே துணைசெய்கின்றன.  காலந்தோறும் நாகரீகம், பண்பாடு மாறிமாறி வந்துள்ளதை/வருவதைப்போல் எழுதுபொருள்களும் மாறிமாறி வந்துள்ளன.  செய்தியின் தன்மையைப் பொறுத்து எழுதுபொருள்கள் மாறுபட்டமையும், கல், ஓட்டுச்சில், செங்கல், உலோகம்(தங்கம், வௌ¢ளி, பித்தளை, தாமிரம், இரும்பு), தாவரப்பொருட்கள், செடி(பேப்பரைஸ்), மரப்பட்டை, மரப்பலகை, இலை (பனையோலை, சீதாளவோலை), மிருகத்தின் பொருட்கள்(தோள், எலும்பு), கலப்புப் பொருட்கள்(துணி, பருத்தி, பட்டு), காகிதப் பொருட்கள் போன்ற பல்வேறு எழுதுபொருட்கள் இருந்துவந்துள்ளன.  இவ்வகைப்பட்ட எழுதுபொருட்களில் பலவகையான செய்திகளை வெட்டியும் எழுதியும் வந்துள்ளனர்.

எளிதாகக் கிடைக்கக்கூடிய; எளியோரும் பயன்படுத்தக்கூடிய எழுது பொருளாக அக்காலத்தில் பனையோலைகள் இருந்துவந்துள்ளன.  இவைகளில் பெரும்பாலும் இலக்கிய-இலக்கணங்கள், மருத்துவம், சோதிடம் போன்ற இன்னோரன்ன அடிப்படை நிலைச் செய்திகள் உள்பட இடம்பெறலாயின.

ஓலை எழுதுதல் என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும்.  இவ்வழக்கம் இன்றும் உள்ளதைக் காண்கிறோம்.  திருமணத்தை உறுதி செய்யும் போது முகூர்த்தவோலை எழுதுவதை `ஓலையெழுதுதல்' என்பர்.  அக்காலத்தில் பனையோலைகளில் எழுதிவந்தனர்.  இன்றோ காகிதத்தில் எழுதுகின்றனர்.  ஓலைச்சுவடியை எழுதியது யார்? எழுதுவித்தது யார்? போன்ற பல செய்திகளைச் சுவடிகளில் காணப்படக்கூடிய முற்குறிப்பு மற்றும் பிற்குறிப்புகளில் அறியலாம்.  பெரும்பான்மைச் சுவடிகளில் இக்குறிப்புகள் இல்லை.  இல்லாமைக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

1. எழுதின ஏடு உதிர்ந்தோ, அழிந்தோ இருக்கவேண்டும்

2. எழுதாமல் விடப்பட்டிருக்க வேண்டும்

இல்லாத சுவடிகளைத் தள்ளி, இருக்கக் கூடிய சுவடிகளைத் திரட்டிப் பார்க்கும் போது பல புதிய செய்திகள் கிடைக்கின்றன.

ஏடெழுதுவோர்

இக்காலத்தில் அச்சகங்கள் பல்கிப் பெருகி தம் பணியைச் செவ்வனே செய்து வருவதைப் போல் அக்காலத்தில் ஏடெழுதுவோர் இப்பணியினைச் செவ்வனே செய்துவந்தனர்.  இவர்களை எழுத்தர் என்றும் அழைக்கலாம்.  ஏடெழுதுவோர் தனக்காகவும் தன்குடும்பம் வறுமையில் இருந்து நீங்கி வாழ பொருளீட்ட வேண்டும் என்ற உந்துதலின் - பணத்தேவையின் காரணமாகவும் ஏடெழுதியிருக்கின்றனர்.  பெரும்பாலானோர் தனக்காக எழுதிக் கொள்வதைவிட பணத்திற்காக எழுதிக் கொடுத்ததாகத்தான் அறியமுடிகிறது.  மிகுதியான ஏடுகளில் ஏடெழுதியவரைப் பற்றியோ எழுதுவித்தவரைப் பற்றியோ எவ்விதக் குறிப்பும் இல்லை.  இருந்தாலும் இப்போது கிடைக்கக் கூடிய சான்றுகளைக் கொண்டு பார்க்கும் போது பணத்துக்காக; பொருளீட்டுவதற்காக ஏடெழுதினார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

பொருளாதாரக் குறைவினால் பொருளீட்டும் பொருட்டு சுவடிகளை வேகமாகவும் வேகத்தின் பொருட்டு பிழைகளாகவும் எழுதியிருக்கின்றனர்.  இதுவொருபுறம் இருந்தாலும் எழுதுகோல் எடுத்தவரெல்லாம் எழுத்தாளராகிவிட முடியாது என்பதுபோல எழுத்தாணி பிடித்தவரெல்லாம் ஏடெழுதுவோராகிவிட முடியாது.

"தன்மகன் ஆசான் மகனே மன்மகன்

பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே

உரைகோ ளாளற் குரைப்பது நூலே"

நூல் யார்யார்க்கு உரைத்தல் வேண்டும் என்று நன்னூல் பட்டியலிடுவது போல ஏடெழுதுவோருக்கும் எழுதுவிப்போருக்கும் என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும் எனப் பட்டியலிட முடிகிறது.

சிறந்த இலக்கிய இலக்கணங்களை ஏட்டில் எழுதுவதற்குக் கற்றறிந்த வல்லாரைக் கொண்டே ஏடெழுதி வந்திருக்கின்றனர்.  அடிப்படைநிலைக் கல்வி நூல்களான ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற நீதிநூற் சுவடிகளைக் கற்கப்போகும் மாணாக்கர்களைக் கொண்டே எழுதுவித்து படிப்பித்துத் தந்துள்ளனர்.  மேலும் இவர்கள் ஏட்டில் எழுதுவது முதல்முறை என்பதால் பிரிக்கப்படாத பனையோலையைக் கொண்டே எழுதச் சொல்லிப் பழக்கியிருக்கின்றனர்.  

ஆசிரியர், ஆசிரியரின் மகன், குரு, குருவின் மகன், மாணவன், வழிபடுவோன், தந்தை, அண்ணன், தம்பி, கல்வியில் வல்லார் ஆகிய இவர்களே நற்சுவடிகளை எழுதும் வல்லமை வாய்ந்தவர்களாகப் போற்றி வந்திருக்கின்றனர்.  இவர்கள் கல்வியோடு நெருங்கிய தொடர்பு இருப்பதால் தவறுகள் மிகுதியாக ஏற்படாது என்ற நம்பிக்கை எழுதுவிப்போரிடம் இருந்திருத்தல் வேண்டும்.

உரையாசிரியர் ஏடெழுதியமையை, "தர்மபரிபாலன நாராயணன் செட்டியார் கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பனானவர் நூற்கப்பட்ட இராமாயணக்கதை விருத்தத்துக்குப் பொருள் விளக்குவதரிதென்று பெரியோர்கள் சொல்லுவதாகிய கதைக்குத் தெரிந்த மாத்திரம் கிட்கிந்தா காண்டம் ஒரு காண்டத்துக்கு உரை செய்து அதற்கு இலக்கணச் சொல்லுமெழுத வேணுமென்று சொன்னபடியினாலே எழுதி முடிந்தது" (ஆர்.431:கீ) என்பதால் உணரமுடிகிறது.

குருவின் மகன் ஏடெழுதியமையை, "ஸ்ரீவிசைய சென்னப்பட்டணத்திலே வாழும் தன வைசிய குலாதிபரில் தர்மம் செட்டியார் அவர்கள் பிரதான குமாரர் ரொட்டிக்கிடங்கு நாராயணச் செட்டியார், சாமி செட்டியார், ஆதிநாராயணச் செட்டியார் இவர்கள் குமாரர்களுக்கு வித்தைக் கற்பித்துக் கொடுத்த வாத்தியார் ஊற்றுக்காட்டு ஊர்க்கணக்குக் கேசவப்பிள்ளையார் சொற்படிக்கு அவர் புத்திரன் ஸ்ரீநிவாசதாசன் எழுதின திருவரங்கத்தந்தாதி எழுதி முடிந்தது" (டி.256:கீ) என்பதால் உணரமுடிகிறது.

மகனுக்குத் தந்தை ஏடெழுதியமையை, "பல்லவராயபட்டியில் இருக்கும் சாத்துக்குட ராமலிங்கம் பிள்ளையவர்கள் குமாரர் சொக்கலிங்கம் கையினாலே மேற்படியார் குமாரர் தில்லைநாயகம் பிள்ளைக்குக் கும்பகோணத் தலபுராணம் எழுதி நிறைந்தது" (டி.570:கீ) என்பதால் உணரமுடிகிறது.

மாணவன் ஏடெழுதியமையை, "துரைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய அபிடேகமாலை மூலமும் அதற்கு ஆனையாபுரியில் வீற்றிருந்த அப்பாவு சுவாமிகள் என்று வழங்கிய வேலாயுத சுவாமிகள் செய்த உரையும் இதில் வரையலாயிற்று.  வரைந்தது மன்னார்பாளையம் உரையாசிரியர் தங்கை புத்திரனும் பிரதம மாணாக்கனுமாகிய ஏ.எஸ். சோமசுந்தரம் தனக்கும் மற்றவர்களுக்கும் இதன் பிரயோசனத்தைத் தெரிந்து கிருதார்த்தனாக மிகுந்த அவாவுடன் வரையலாயிற்று" (215:த) என்பதால் உணரமுடிகிறது.

தந்தைக்கு மகன் ஏடெழுதியமையை, "தாழம்பட்டியிலே இருக்கும் வீரமலைப்பிள்ளைக்கு ஸ்ரீ புண்ணிய குமாரனாகிய திருமலைக்கொழுந்தாபிள்ளை கைப்பட எழுதியது" (836-2:த) என்பதால் உணரமுடிகிறது.

அண்ணனுக்குத் தம்பி ஏடெழுதியமையை, "வேலூருக்குத் தென்மேற்கான உசினிபாது பேட்டைக்கு மேற்கு கைலாசகடிக்கு வடமேற்கான கங்கை பத்துக்குடியில் சேர்ந்த இனாம்கிராமம் புலிமேடு மணியம் சின்னாண்டிக் கவுண்டன் குமாரன் தாண்டவன் கவுண்டன் அசுவமேத யாகம் எழுதி நிறைந்தது.  இந்தப் புஸ்த்தகத்தை யார்யார் எழுதினது என்றால் மேற்படி தாண்டவக் கவுண்டனுடைய தம்பி கந்தசாமியும் கணக்கு முத்துவீரப்பப்பிள்ளையும்" (648:த) என்பதால் உணரமுடிகிறது.

வல்லார் ஒருவர் ஏடெழுதியமையை, "தங்கச்சம்மாபட்டிக் கிராமம் உள்கிடை சீரங்கக் கவுண்டன் பதூரிலேயிருக்கும் கொசப்பட்டி ரங்கநாதக் கவுண்டனுக்கு மேற்படி கிராமம் சிந்திரிப் பட்டியிலிருக்கும் குட்டயண்ண உபாத்தியாயர் மகன் இராமசாமி அநேக பவுசு பெற்றுக்கொண்டு சீரங்கக் கவுண்டனூர் பள்ளிக்கூடத்தில் எழுதிக் கொடுத்தது" (1801:த) என்பதால் உணரமுடிகிறது.

மேலும், அந்தக் கால அரசாங்க அவைகளில் அரசர்கள் ஏடெழுதுபவர்களைப் பணியில் அமர்த்தி இருக்கின்றனர் என்ற செய்தியையும் அறிய முடிகிறது.  இதனை, "மகாராச ஸ்ரீ சரபோசி மகாராசா சத்திரபதி சாயபு அவர்களுக்கு வைத்தியம் கோபாலப்பிள்ளை குமாரனாகிய கொட்டிய மத்தியஸ்தம் அய்யாக்கண்ணுப்பிள்ளை தன்னுடைய பேர் நிமித்த மாத்திரம் ரெத்தினச் சுருக்க மென்னும் வைத்திய சாஸ்த்திரத்தை அரண்மனையில் எழுதுகிறவர்களைக் கொண்டு எழுதிய நிறைவேற்றினதைச் செலுத்தி சாஷ்டாங்க விண்ணப்பம்" (20:ச) என்பதால் உணரமுடிகிறது.

சுவடிகள் காப்பதில் ஏடெழுதுவோரின் பங்கு

சுவடி அழிப்பான்களிடம் இருந்து சுவடிகளைக் காக்கப்படுவதைப் போல் சுவடிகள் இடம் மாறாமல் காக்கப்படுதலும் அவசியமாகிறது.  தனியார் நூலகங்களின் வாயிலாகவோ மடங்களின் வாயிலாகவோ சுவடிகளைக் காத்து வந்தனர்.  இன்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆங்காங்குக் கிடைக்கும் சுவடிகளைத் திரட்டிக் காத்து வருகின்றன.  இவற்றினுள்ளெல்லாம் செல்லாமல் ஏடெழுதியவர் சுவடிகள் காக்கப்படுவதில் ஆற்றிய பங்கைப் பற்றி மட்டுமே இங்கே விளக்க முற்படுகிறேன்.

அச்சகங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான நூல்களை உருவாக்குவது போல் சுவடிகளை எழுதி உருவாக்குவது என்பது கடினமே.  குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே சுவடிகள் வைத்திருப்பர்.  அவற்றைப் படிக்க, படியெடுக்க விரும்புகிறவர்கள் அவர்களிடம் வேண்டிப் பெற்றுத்தான் படிக்கவோ படியெடுக்கவோ முடியும்.  இதனால் சுவடிகளில் பலரின் கைப்பட வாய்ப்பேற்படுகிறது.  ஒருவர் சுவடியைக் கையாளுவதைப் போல் மற்றொருவர் நிச்சயமாகச் சுவடியை வேறுவிதமாகவே கையாளுவார்.  படியெடுப்போரிடம் இருந்தும் படிப்போரிடம் இருந்தும் சுவடியைக் காக்கப்பட வேண்டும் என்பதற்காக ஏடெழுதுவோர் சுவடியின் இறுதி ஏட்டிலோ அல்லது தொடக்க ஏட்டிலோ அல்லது இரண்டு ஏடுகளிலுமோ சில செய்திகளைக் குறிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர்.  மக்களிடையே இறைநம்பிக்கையும் பயனும் பக்தியும் மிகுதியாக இருந்த அந்தக் காலகட்டத்தில் கீழ்க்காணும் வழக்குச் சொற்கள் சுவடிகள் காக்கப் பயன்படும் என்று எண்ணியே ஏடெழுதியவர்கள் நினைத்து எழுதியிருக்கலாம்.

"இந்தப் புஸ்தகம் யாராவது வாசிக்க எடுத்தவர்கள் வாசித்துப் பார்வையிட்டு இந்தப் புஸ்தகக் காரனிடத்தில் சகிதமாய்க் கொடுப்பது. அப்படி யேதாவது கொடுக்கத் தவறினால் இந்தப் புஸ்தகத்தில் கண்டிருக்கிற ஏழாவது ரவுரவாதி நரகத்திலே சேரக்கடவது" (1712:த).

"இந்தப் புஸ்தகத்தை யாராவது எடுத்தவர் படித்துச் சுவடிக்காரன் வசத்திலே சேர்க்கவும்.  அப்படிச் சேர்க்காமல் அபகரிக்க நினைத்தால் துரியோதனன் ஆதியர்கள் பெற்ற பயன் பெறுவார்கள் என்று அறிந்து சேர்க்கவும்" (648:த).

"புவியின் கண் விளங்கும் புண்ணிய க்ஷேத்திரமாகிய காசி மகாநதியிலே போய்க் காராம்பசுவை அறுத்துச் சாப்பிட்டால் எவ்வளவு தோஷமோ அவ்வளவு தோஷம் வந்து சேரும்" (92:த) என்றும், "எடுத்தவர் படித்துவிட்டுக் கொடுத்துவிடவும், அப்படி இல்லாவிட்டால் திருடினவனை விட்டுணு மூடனாகச் சபித்துவிடுவார்" (1107:த).

". . . . .கொடுக்கவும்.  கொடாது போனால் ஆனைக்காலில் கட்டி கடமுடாவென்று அடிக்கவும்.  அதிலேயும் பயன்படாது போனால் ஊரைச்சுற்றி மண்ணுக்கூடை வைத்தடிக்கவும்" (1131:த).

"எடுத்தவன் கொடுக்காவிட்டால் அஞ்சுமணிக் குறடாவில் கெஞ்சக் கெஞ்ச அடிக்கிறது" (1144:த).

"கொடுக்காமல் போனால் கர்ப்பத்திலே இருக்கிற சிசுவைக் கொன்ற தோஷத்திலே போவானென்றவாறு" (584:த).

"இந்தக் கதையை எவனாகிலும் படித்துக்கட்டி அவர் வங்கிசம் எங்கே இருந்தாகிலும் தேடிக் கொடுக்கவும்.  கொடுத்தவர்களுக்கு அனேக மோட்சமுண்டு.  கொடாத பேருக்கு அனேக பாவம் வந்து சேரும்" (1157:த).`

ஏடெழுதுவோரின் நற்பண்புகள்

சுவடிகள் காப்பதில் ஏடெழுதுவோரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் கண்டோம்.  இனி, அவர்கள் சுவடிப் படித்தலினால், கேட்டலினால், காப்பதினால் ஏற்படும் நன்மைகளையும் சுட்டிச் சென்று இருக்கின்றனர்.  அவைகள் பின்வருமாறு:-

"படித்த பேர்களும் கேட்ட பேர்களும் படிப்பிக்கிற பேர்களும் நீடூழி காலம் வாழ வேண்டியது" (443:கீ).

"சகல சாம்பிராச்சியமும் சந்தான சவுக்கியமும் சிவஞானம் தீர்க்காயுசும் உண்டாக வேணுமென்று ஆசீர்வதித்து எழுதிக் கொடுத்த பெரியபுராணம்" (620:கீ).

"இந்த(ச்) சிவானந்த கணேசபரம் படித்தவர்கள் கேட்டோர்கள் பாலும் சோறும் பசியாமல் பின்னையும் என்னென்ன வேண்டுமோ அதெல்லாம் ஆகாசமாய் வந்திருக்கும்" (26-4:சா).

"யாதொரு நாயன்மார்கள் வாசிக்குந் தோறும் அடியேன் மாசிலாமணிக்கு நல்லபுத்தி வரும்படி சிந்திக்க வேண்டுவது" (1105:த).

எழுதின பேர்களும் படித்த பேர்களும் அன்புடனே கேட்ட பேர்களும் ஆல்போல் தழைத்து அருகதுபோல் வேர் ஊன்றி மூங்கில்போல் அன்ன சுற்றம் முசியாமல் வாழ்ந்து சுகமே இருப்பார்களென்றவாறு" (1425:த).

"இந்தக் கதை எழுதிய பேருக்கும் படிச்ச பேருக்கும் கேட்ட பேருக்கும் வச்சு பூசை பண்ணின பேருக்கும் வைகுண்டப் பதவி கிடைக்குமென்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்" (1371:ச).

இவற்றையெல்லாம் பார்க்கும் போது ஏடெழுதியவரின் நல்ல உள்ளம் புலப்படுகிறது.  இவையல்லாமல் நூற்பயனையும், நூலின் உட்செய்திகளையும், பாடலமைப்பையும் இவ்வாறே சுட்டிச் செல்வர்.  இதனை முறையே கீழ்வரும் சான்றுகள் சுட்டும்.

"பஞ்ச தந்திரத்தை யாதாமொருவர் வாசிக்கிறார்களோ அவர்கள் நீதிமான்களாயிருப்பார்களாகில் தங்கள் நீதிகளிலே வேறுபடாமலும் தர்மம் தப்பாமல் நிலையான நியாயமான சீவனஞ் செய்து நல்லோர்களென்று கீர்த்தியடைந்து அந்தியத்திலே அழிவில்லாத பரம பதத்தைப் பெறுவார்களென்றும் இதை வாசிக்க நின்றபேர்கள் மோசக்காரர்களாய் இருப்பார்களாகில் தங்கள் மோசங்களிலே அனேக தந்திரவாதிகளென்னும் அபகீர்த்திகளுடனே உலகத்திலே வாழ்வார்கள் என்றும் பெரியவர்களாலே ஆசீர்வதிக்கப்பட்ட பஞ்சதந்திரக்கதை அஞ்சும் முற்றும்" (428:கீ).

"இதன்பின் சொல்லப்பட்ட பெண்பான் நால்வரும் ஆண்பான் மூவருமாகிய ஏழு பிள்ளைகளையும் பிறந்த விடங்களிலே வைத்துவிட்டு ஆதியும் பகவனும் அப்புறம் போகும் போது தாதியானவள் பிள்ளைகளை நோக்கி, இந்தப் பிள்ளைகளை யாவர் காப்பாற்றுவாரென்று இரங்கிக் காலெழாது நிற்க, அப்போது அவள் மனவருத்தந் தீரும்படி குழந்தைகள் கடவுளருளினாலே தெரிந்து சொல்லிய பாடல்கள்" (599-2:த).

"தேவாரம், திருவாசகம் என்கிற தமிழ் வேதஞ் செய்தருளிய சைவசித்தாந்த சமயாசாரியராகிய நால்வர்களிலே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கு வெண்பாவும், திருநாவுக்கரசு நாயனாருக்குக் கலித்துறையும், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விருத்தமும், மாணிக்கவாசக சுவாமிகளுக்கு அகவலுமாக அருளிச் செய்த நால்வர் நான்மணிமாலை முற்றுப் பெற்றது" (ஆர்.5567:கீ).

உள்ளதை உள்ளவாறு சுட்டும் பண்பும் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மையும் அதைத் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் ஏடெழுதுவோர் பெற்றிருந்திருக்கின்றனர் எனலாம்.  "மேல்பிரதி குறும்புநாட்டு விசையமங்கலம் நடராசபிள்ளை ஏடு" (952:சா) என்று தான் எழுதிய ஏட்டிற்கு மூலப்படியைச் சுட்டுவதும், "இந்தக் கிருஷ்ணவிலாசம் எழுதியதினாலேயே எழுத்துக்குற்றம் வரிக்குற்றம் சொற்குற்றம் உயிரெழுத்துக்குற்றம் மெய்யெழுத்துக்கள் தப்பியிருந்தால் பெரியோர்கள் பொறுத்துக் கொள்ளவும்" (1168:த) என்று தான் ஏடெழுதியதில் மேற்காணும் குற்றங்கள் நேர்ந்திருக்கலாம் அவற்றைப் பெரியோர்கள் மன்னிக்கவேண்டும் எனச் சுட்டுவதும் அவர்களின் பண்புகளை மேலும் மேலும் வளர்த்திருப்பதை உணரலாம்.

பரம்பரையாகச் சுவடியெழுதுவோர்

தொடர்ந்து ஒரு குடும்பத்தினர் சுவடி எழுதுவதிலும் எழுதுவிப்பதிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.  தாழப்பட்டி வீரமலைப்பிள்ளை யவர்களுக்கு (1662ஆம் வருடம்-ஆங்கிலம்) அவருடைய மகன் திருமலைக்கொழுந்தாபிள்ளை எழுதிக்கொடுத்து இருக்கின்றார்.  அதற்கடுத்து தாழப்பட்டி வீரமலைப்பிள்ளையின் மகன் கொழுந்தாபிள்ளை எழுதியிருக்கின்றார்.  அவருடைய மகன் முனியப்பப்பிள்ளை எழுதியிருக்கிறார்.  அவருடைய மகன் தொப்பப் பிள்ளை (1915ஆம் வருடம்-ஆங்கிலம்) எழுதுவித்திருக்கின்றார்.  இதற்குமுன் வீரமலைப்பிள்ளையின் தந்தை தொப்பப்பிள்ளை (1634ஆம் வருடம்-ஆங்கிலம்) எழுதுவித்திருக்கின்றார்.  இவற்றையெல்லாம் ஒன்றுகூட்டிப் பார்க்கும் போது இக்குடும்பம் ஏறத்தாழ 350 ஆண்டுகள் சுவடிகள் எழுதுவதிலும் எழுதுவிப்பதிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்ற செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்தவே செய்கிறது.

சுவடி விற்பனை

இக்காலத்தில் பதிப்பகங்களும் விற்பனை நிலையங்களும் செய்துவரும் பணியை அக்காலத்தில் சுவடிப்பதிப்பு நிலையங்களும் விற்பனை நிலையங்களும் செய்துவந்திருக்கவேண்டும். தனிப்பட்ட ஒருவர் எழுதுவித்து எழுதியதை மட்டும் அல்லாமல் ஒரு நிறுவனமும் பலரைக் கொண்டு எழுதுவித்திருக்கவேண்டும் அல்லது ஒரு தனிமனிதனே பல படிகளை எழுதி விற்பனை செய்திருக்கவேண்டும் அல்லது பொருளாதாரக் குறைவின் காரணமாக தம் மூதாதையரின் சுவடிகளை விற்பனை செய்திருக்கவேண்டும்.  மொத்தத்தில் பார்க்கும் போது அக்காலத்தில் சுவடிகள் விற்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறியமுடிகிறது.

"இந்த உயுத்த காண்டம் எழுதினது அபிமான சிகாமணி நல்லூர் உடைய நயினார் சீ கயிலாயமுடையார் கரிய மாணிக்கம் எழுதி முகிந்தது முற்றும்.  திருமேனி பெரியதிருவடி இரத்தினக் கவிராயர் விலைக்கு வாங்கினது.  இதனையடுத்த ஒரு துண்டு ஏட்டில் "ஆழ்வார்திருநகரி லஷ்ம்ண கவிராயர் வீட்டுப் புஸ்தகம்" (983:சா) என்றும், "வஞ்சுஞ்சேரியிலிருக்கும் கிறும் வெங்கடாசல நாயகன் குமாரன் பாலகிருஷ்ண நாயகன் எழுதி வாசிக்கிற பெரியபுராண ஆத்திச்சுவடி எழுதி முடிந்தது.  இதை எழுதினது வௌ¢ளரிதாங்கலிலிருக்கும் வெங்கடகிருஷ்ணராஜா.  இதன் விலை வராகன் 'க'.  சிவமயம்" (ஆர்.1697:கீ) என்றும், ". . . . 10 வருடங்களுக்கு முன்னால் இது சோமசுந்தரம் மகனுக்கு ஒருவரி இனாமாகக் கொடுத்தது" (993:3) என்றும் குறிப்பிட்டுள்ளமையைக் காணும் போது அக்காலத்திலும் சுவடிகளை விற்றும் விலைவைத்தும் இனாமாகக் கொடுத்தும் இருந்திருக்கின்றனர்.  இதனை வைத்துப் பார்க்கும் போது இன்றுள்ள அச்சகங்களுக்கும் பதிப்பகங்களுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் தமிழர்கள் முன்னோடிகளாக விளங்கியிருக்கின்றனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ஏடெழுதுவிப்போர்

இக்காலத்தில் பதிப்பங்கள் செய்துவரும் பணியை அக்காலத்தில் ஏடெழுதுவிப்போர் செய்து வந்தனர் எனலாம்.  இவர்கள் படிப்பதற்கும் காப்பதற்கும் சுவடிகளை ஏடெழுதுவோர்களைக் கொண்டு நகலெடுத்து வைத்திருக்கின்றனர்.  இவர்களுக்கும் சில அடிப்படைத் தகுதிகள் இருந்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது.  அதாவது,

1. பொருளாதாரம் மிக்கவர்கள்

2. சுவடிகள் மீது ஆர்வம் கொண்டவர்கள்

3. ஏடெழுதுவோருக்கு மனக்குறைவு நேராவண்ணம் நடப்பவர்கள்

4. கற்றறிஞர்கள்

5. ஏடெழுதுபவர்கள்

என்ற நிலைகளில் எல்லாம் ஏடெழுதுவிப்போர் இருந்திருக்கவேண்டும்.  இவர்கள் தன்னாசிரியரிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் சகோதரரிடமிருந்தும் சுவடிகளை எழுதிப் பெற்றிருக்கின்றனர்.  இதனை ஏடெழுதுவோர் பகுதியில் குறிப்பிடப்பெற்றுள்ளதை அறியலாம்.

ஏடெழுதுவோர் எழுதுவிப்போராகவும், எழுதுவிப்போர் ஏடெழுதுவோராகவும் இருந்திருக்கின்றனர்.   இந்த நிலை மாற்றத்திற்கு அவர்களின் பொருளாதார எற்றத்தாழ்வு ஒரு காரணமாக இருந்தாலும் தன்னாலேயே தான் படிக்கும் பாதுகாக்கும் சுவடியை எழுத வேண்டும் என்ற உயர்ந்த மனத்தாலும் இருக்கலாம்.  ". . . . இவை எழுதியது திருவழுதி வளநாடு ஸ்ரீவைகுண்டம் அம்பலத்தெரு வடசிறகிலிருக்கும் சூரியநாராயண பிள்ளையவர்கள் புத்திரன் சொக்கலிங்கம் எழுத்து" (112:த),  "ஸ்ரீவைக்குண்டமென்னும் நகரத்தில் ஸ்ரீ கயிலாய நயினார் அடிமையான சூரியநாராயண பிள்ளை புத்திரன் சொக்கலிங்கத்திற்கு மேற்படியூர் சிதம்பரநாத முதலியார் திருக்கோவையார் எழுதினது" (113:த) என்ற இவ்விரு எடுத்துக்காட்டுக்களையும் காணும்போது சொக்கலிங்கம் என்பவர் ஏடெழுதுபவராகவும் எழுதுவிப்போராகவும் இருந்திருக்கின்றார் என்பது தெரிகிறது.  மேலும் 112ஆம் எண் கொண்ட சுவடி எழுதப்பட்ட காலம் 1809ஆம் ஆண்டு.  113ஆம் எண் கொண்ட சுவடி எழுதப்பட்ட காலம் 1788ஆம் ஆண்டு.  இவற்றை வைத்துப் பார்க்கும் போது இவர் முதலில் எழுதுவிப்போராகவும் பின்னர் எழுதுபவராகவும்(எழுத்தராகவும்) மாறியிருக்கிறார் என்று துணியலாம்.

ஏடெழுதுவோர் பெரும்பாலும் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எழுதி வந்துள்ளனர்.  இதனால் அவர்கள் மகனுக்கும் மாணவனுக்கும் தம்பிக்கும் கூட எழுதியிருக்கின்றனர்.  இருந்தாலும் ஏடெழுதுவதை அவர்கள் புனிதமாகவும் கருதி வந்திருக்கின்றனர்.  நோய் தீர்க்கும் மருந்தாகவும் ஏடெழுதுவதை எண்ணிப் போற்றி எழுதி வந்திருக்கின்றனர்.  சுவடியைக் காக்கவேண்டும் என்ற உந்துதலும் அவர்களிடம் மிகுதியாக இருந்திருக்கின்றது.  அதேபோல் நூற்பனையும் நூலின் உட்பொருளையும் சுட்டும் திறன் அவர்களின் கல்வி மேன்மைக்குச் சான்றாக அமைகின்றன.  ஏடெழுதுவிப்போர் இல்லையென்றால் ஏடெழுதுபவர் இல்லை.  ஏடெழுதுபவர் இல்லையென்றால் ஏடெழுதுவிப்போர் இல்லை என்ற உணர்வில் இவ்விரு வகையினரும் வாழ்ந்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக