செவ்வாய், 10 ஜூலை, 2018

ஓலைச்சுவடிகளில் ஊர்ப்பெயர்கள்


ஓலைச்சுவடிகளில் ஊர்ப்பெயர்கள்

      ஒன்றைச் சுவட்டுவதற்குண்டான குறியீடே பெயர்கள். ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்தைப் பிரித்தறியத் தோன்றியவையே இடப்பெயர்கள்.  "பெயர்களை ஒருவகையில் புதைபொருட்களுக்கு ஒப்பானவை என்றும் கூறலாம்.  புதைபொருட்களைப் போலவே பெயர்களும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வந்திருக்கின்றன.  ஆகையால் புதைபொருட்களைப் போலவே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைப் பற்றிக் கூறும் தன்மையன பெயர்கள்" (மேற்கோள், கல்வெட்டில் ஊர்ப்யெர்கள், ஆளவந்தான், பக்.) என்ற கருத்தை எண்ணிப் பார்க்கும்போது கல்வெட்டுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் குறிப்பிடப் பட்டிருக்கும் பெயர்களை ஆய்வு செய்தல் தேவையாகிவிடுகின்றது.  இங்கு ஓலைச்சுவடிகளில் இடம்பெற்றிருக்கும் ஊர்ப்பெயர்களைப் பற்றி மட்டும் ஆராய முற்படுகிறேன்.
      இவ்வாய்விற்குச் சென்னைக் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகம்(கீ.), டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் சுவடிகள் நுலகம்(சா.), தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிகள் நூலகம்(த.), திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகச் சுவடிகள் நூலகம் (தி.) ஆகிய ஆறு சுவடி நூலகங்களில் இருந்து சுமார் 6,500 சுவடிகளைப் பார்வையிட்டதில் 410 ஊர்ப்பெயர்களே கிடைத்தன.  இவ்வூர்ப்பெயர்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு அமைகிறது.  இதுவே முடிந்த முடிபாகாது.  இதுதவிர, இன்னும் இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான சுவடிகளை ஆய்ந்து அதிலுள்ள ஊர்ப்பெயர்களைத் தெரிவுசெய்து பின்வரும் ஆய்வுகள் அமைந்தால்தான் ஓலைச்சுவடிகளில் ஊர்ப்பெயர்கள் ஆய்வு முழுமைபெற்றதாக அமையும்.
      ஓலைச்சுவடிகளில் அமைக்கப்பட்டிருக்கும் முற்குறிப்பு மற்றும் பிற்குறிப்புச் செய்திகளில் ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  இப்பெயர்கள் மூன்று விதங்களில் அமைந்துள்ளன.  ஒன்று, ஏடெழுதியவரின் ஊர்ப்பெயர்; மற்றொன்று, ஏடெழுதுவித்தோரின் ஊர்ப்பெயர்; இன்னுமொன்று, ஏடெழுதிய ஊரின் பெயர் என அமைந்திருத்தலைக் காணலாம்.  காட்டாக, சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகச் சுவடி எண்.2436 'கந்தபுராணம்' என்னும் சுவடியில் இடம்பெற்றிருக்கும் குறிப்பில், "தட்டையநாடு புலியூரிலிருக்கும் காணியாளர் புல்லங்கை கோத்திரம் சின்னத்தம்பிக் கவுண்டர் மகன் பெரியதம்பிக் கவுண்டன்.  அவன் மகன் சின்னகுமார கவுண்டன்.  அவர் மகன் பழனிக்கவுண்டன்.  அவர் மகன் குமாரசாமிக் கவுண்டனக்கு பாண்டி நாட்டினில் வாசுகிதேவநல்லூரிலிருக்கும் காரைக்காத்த வேளாளர் வகையில் மயிலேறும் பெரும்மாள்பிள்ளை மகன் திருஞானசம்பந்தம் பிள்ளை.  அவர் மகன் சங்கரசீகாமணிப்பிள்ளை கோயம்புத்தூர் சீமையில் புலிகுத்திக்கொப்பன மன்றாடியார் சீமைக்கிணத்துக் கடவுக் கிராமம் சித்தூரில் கந்தபுராணம் எழுதி நிறைந்தது" எனும் குறிப்பில் தட்டையநாடு புலியூர் ஏடெழுதுவித்தோரின் ஊர்ப்பெயராகவும், வாசுகிதேவநல்லூர் ஏடெழுதியவரின் ஊர்ப்பெயராகவும், சித்தூர் ஏடெழுதிய ஊரின் பெயராகவும் அமைந்திருத்தலைக் காணலாம்.
ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகள்
      இயற்கையமைப்பு, மண்வளம் போன்றவற்றால் வேறுபடும் ஊர்களுக்குள் காணப்படும் ஒற்றுமைத் தன்மைகளே பொதுக்கூறுகள் என்று கூறப்படுகின்றன.  "ஊர்ப்பெயர் அமைப்பில் பொதுக்கூறுகள் நிலையானவை; வரப்பு போன்றவை.  ஏதேனும் ஒரு காலகட்டத்தில், காரணங்கள் விளங்குமாறு அமையும் தன்மை உடையது பொதுக்கூறு.  மொழிக்கு இலக்கணம் போன்று அமைந்தது ஊர்ப்பெயருக்கும் பொதுக்கூறுகள் எனலாம்.  பொதுக்கூறுகளின் இலக்கணத்திற்குப் பொருந்துமாறு புதிய ஊர் அமைகிறது; அமையும் இடச்சூழலுக்கேற்பச் சிறப்புக் கூறுகளாகிய முன்னொட்டு அதனுடன் இணைகிறது" (செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள், ப.79).  ஒரே ஒரு பொதுக்கூறு பெற்றுத் தனியாகவும், ஒன்றற்கு மேற்பட்ட பொதுக்கூறுகள் பெற்றுத் தொகையாகவும், ஒரேயொரு சிறப்புக்கூறு பெற்றுத் தனியாகவும், ஒன்றற்கு மேற்பட்ட சிறப்புக்கூறு பெற்றுத் தொகையாகவும் என ஓலைச்சுவடிகளில் ஊர்ப்பெயர்கள் அமைந்திருத்தலைக் காணமுடிகிறது.
      ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊர்ப்பெயர்கள் இன்ன மாவட்டத்தைச் சேர்ந்த, இன்ன வட்டத்தைச் சேர்ந்த ஊர் என்ற குறிப்பு பெரும்பான்மையான சுவடிகளில் காண்பதரிது.  ஒரே ஊர்ப்பெயர் ஒரே மாவட்டத்தில் பல இருக்கும் போது மாவட்டங்களை உணரமுடியாமல் உர்ப்பெயர்களை மட்டும் கொடுக்கப்பட்டுள்ள சுவடிகளின் ஊர்ப்பெயர்கள் குழப்பத்தை உண்டாக்கும்.  மேலும் பல்வேறு காலகட்டங்களில் ஒரே ஊருக்குப் பல பெயர்கள் மாற்றமடைகின்ற இந்த சூழ்நிலையில் முந்தைய ஊர்ப்பெயரையும் உணரமுடிகிறது.  இதுபோன்ற ஊர்ப்பெயர் மாற்ற நிலையையும் குழப்ப நிலையையும் போக்கிய ஆய்வை உருவாக்குவதென்பது ஒரு பெரிய நீண்ட ஆய்வுக்கு வழிவகுக்கும்.  எனவே இங்கு 410 ஊர்களில் பெயர்களை மட்டும் ஆய்வு செய்யப்பெற்றுள்ளன.
அடி         3                      கோணம்     1                       பாகை       1

ஆறு        2                      கோவில்     3                      பாக்கம்      6

ஊர்         92                     சுரம்         2                          பாடி         7

ஏரி         7                       சேரி        6                            பாளையம்     18

கரை        4                     துறை        6                          புரி          6

கல்         1                      தோப்பு       2                          பூண்டி 4

காசி        1                      நகரம்        1                          பேடு        2

காடு        7                      நகரி        2                            பேட்டை    14

கிரி         2                       நகர்         3                            மங்கலம்      2

குடி         17                     நாடு         8                            மணல்       1

குடை        1                    பட்டணம்     5                         மலை        7

குப்பம்       3                    பட்டி         29                           மேடு        5

குளம்        5                    பட்டு        4                              வனம்        1

குறிச்சி            2              பரம்         25                             வாசல்       1

கூடல்       1                     பள்ளம்       1                             வாயில்       1

கோடு       2                     பட்டாளம்     1                           வேலி        1

கோட்டை     7                 பள்ளி        2                              இதரவை     69

போன்ற 51 வகையான ஊர்ப்பெயர் முடிபுகளை அடிப்படையாகக் கொண்டும் எஞ்சியுள்ள 69 ஊர்கள் பொதுவான சொற்களைக் கொண்டும் முடிந்துள்ளன.
தனிப்பொதுக்கூறுகள் கொண்ட ஊர்ப்பெயர்கள்
      ஓலைச்சுவடிகளில் காணப்படும் ஊர்ப்பெயர்களில் பொதுக்கூறுகளாக அமையும் பின்னொட்டு ஒரே ஒரு பொதுக்கூற்றைப் பெற்றுத் தனியாக அமைந்துள்ளது தனிப்பொதுக்கூறு என்பர்.  இவ்வடிப்படையில் தனிப்பொதுக் கூறு பெற்ற ஊர்ப்பெயர்களாக காக்காவடி, திருவரங்கம், திருவையாறு, அரியலூர், குறலேரி, ஊரக்கரை, திண்டுக்கல், தென்காசி, ஔக்காடு, காவல்குடி, கண்ணங்குடை, அரியாங்குப்பம், ஆனைக்குளம், எதுரக்கோட்டை, கும்பகோணம், கடம்பர் கோவில், பட்டீச்சுரம், சாவுகச்சேரி, குட்டத்துறை, பல்லவநகரம், பெருநகர், கரடிப்பட்டி, நீச்சம்பட்டு, இராமீசுபரம், முன்னீர்ப்பள்ளம், நல்லியப்பள்ளி, பொய்கைப்பாகை, பிள்ளைப்பாக்கம், கண்ணிப்பாடி, அய்யம்பாளையம், உமையாள்புரம், அனபூண்டி, இரும்பேடு, அய்யம்பேட்டை, கண்டமங்கலம் போன்ற ஊர்ப்பெயர்கள் அமைந்திருத்தலைக் காணலாம்.
தொகைப் பொதுக்கூறுகள் கொண்ட ஊர்ப்பெயர்கள்
      ஓலைச்சுவடிகளில் காணப்படும் ஊர்ப்பெயர்களில் ஒன்றற்கு மேற்பட்ட பொதுக்கூறுகள் பெற்றுத் தொகையாக அமைந்தது தொகைப் பொதுக்கூறு என்பர்.  இவ்வடிப்படையில் தொகைப் பொதுக்கூறு பெற்ற ஊர்ப்பெயர்களாக அன்னதானப்பட்டி, ஆர்வார்திருநகரி, குட்டந்தீர்த்ததுறை, குமாரசாமிப்பேட்டை, கொடிமடிக்கோட்டை, கோமளீசுவரன்பேட்டை, கோனாசேரிக்குப்பம், சிதம்பரநாதன்பேட்டை, தங்கச்சம்மாபட்டி, பண்டசோழநல்லூர், பல்லவராயன்பட்டி, புதுத்தேவங்குடி, புதூர்புலிமேடு, புலியூர்க்குறிச்சி, பெத்துநாயக்கன்பேட்டை, மிட்டாகாடுபட்டி, மோழையாழ்பூண்டி, வீரநாராயணஞ்சேரி, வீரப்பிடையான்பட்டி போன்ற ஊர்ப்பெயர்கள் அமைந்திருத்தலைக் காணலாம்.
      இவ்வூர்ப்பெயர் முடிவுகள் அனைத்தையும் இருவகையாகப் பிரிக்கலாம்.  ஒன்று, இயற்கையமைப்பு; மற்றொன்று, செயற்கையமைப்பு.  குடி, பட்டி, ஊர், குளம், காடு, நல்லூர், பாடி, துறை, ஏரி, மலை, பட்டு, வேலி, கரை, குறிச்சி போன்றன இயற்கையமைப்பினையும்; புரம், மங்கலம், சேரி, குப்பம், கோட்டம், கொல்லை, கோவில், வாசல், பேட்டை, பாக்கம், பட்டிணம், நகர், நகரம், பள்ளி, பாளையம் போன்றன செயற்கையமைப்பினையும் குறிக்கும்.
தனிச்சிறப்புக்கூறு கொண்ட ஊர்ப்பெயர்கள்
      ஓலைச்சுவடிகளில் காணப்படும் ஊர்ப்பெயர்களில் சிறப்புக்கூறு முன்னொட்டாக அமையும்.  தனியாக ஒரேயொரு முன்னொட்டாக அமைந்த சிறப்புக்கூறு தனிச்சிறப்புக்கூறு என்பர்.  இவ்வடிப்படையில் தனிச்சிறப்புக் கூறு கொண்ட ஊர்ப்பெயர்களாக ஆனைக்குளம், கோவிலூர், புலியூர், புலிமேடு போன்ற ஊர்ப்பெயர்கள் அமைந்திருத்தலைக் காணலாம்.
தொகைச் சிறப்புக்கூறு கொண்ட ஊர்ப்பெயர்கள்
      ஓலைச்சுவடிகளில் காணப்படும் ஊர்ப்பெயர்களில் ஒன்றற்கு மேற்பட்ட முன்னொட்டாக அமைந்த சிறப்புக்கூறு தொகைச் சிறப்புக்கூறு என்பர்.  இவ்வடிப்படையில் தொகைக் சிறப்புக்கூறு கொண்ட ஊர்ப்பெயராக திருவல்லிக்கேணி மட்டும் அமைந்திருத்தலைக் காணலாம்.
ஊராய்வு
      சுவடிகளில் ஊர்களை ஆய்வு செய்து சரியான முடிவை வெளிப்படுத்துவது என்பது ஒரு மாபெரும் ஆய்வுப் பணியாகும்.  இப்பணியில் ஏற்படும் சீர்மையையும் சிக்கல்களையும் இங்குத் தொட்டும் இட்டும் செல்கிறேன்.  சுவடி ஊர்களை ஆய்வு செய்த மூன்றுவித செயற்பாடுகள் பயன்படுத்தல் வேண்டும்.  ஒன்று, அறையாய்வு; மற்றொன்று, கள ஆய்வு; இன்னுமொன்று, ஊர்ப்பெயர் விளக்க ஆய்வு.  இம்மூன்று நிலைகளும் ஊராய்வின் சீர்மைக்கு இட்டுச்செல்லும் வழிகளாகும்.  இம்மூன்று நிலைகளிலும் ஆய்வு செய்து ஊர்ப்பெயரை நிலைப்படுத்த முடியாத நிலையும் சுவடி ஊராய்வில் ஏற்படும்.  இதுவே சுவடி ஊராய்வில் ஏற்படும் சிக்கலாகும். 
சீர்மை நோக்கில் ஊராய்வு
      இவ்வாய்வு மேற்கூறப்பட்ட மூன்று நிலைகளில் நிகழ்த்தப்படுவதாகும்.  கள ஆய்வு செய்வதும், ஊர்ப்பெயர் விளக்க ஆய்வு செய்வதும் இவணின் நோக்கமன்று.  சுவடிகளில் காணப்படும் ஊர் எந்த இடத்தில் உள்ளதென்பதை அறையாய்வு மூலம் உணர்த்தப்படுவதேயாகும்.  இதற்குப் பல்வேறு சுவடி நூலகங்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஊர்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டும், 1972இல் தமிழக அரசால் வெளியிடப்பட்ட 'கிராமங்களின் அகர வரிசைப்பட்டி' என்னும் நூலை ஆதாரமாகக் கொண்டும் இவ்வாய்வு நிகழ்த்தப்படுகிறது.
      ஒரே ஊர்ப்பெயர் ஒரு மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கும்போது சுவடிகளில் காணப்படும் சில குறிப்புகளைக் கொண்டு ஊர்ப்பெயரை நிலைகொள்ளச் செய்யமுடியும்.  இம்முறையில் இங்குச் சில ஊர்ப்பெயர்களை மட்டுமே நிலைகொள்ளச்செய்ய இவனால் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1.       அந்தியூர்

      கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திலும், தென்னாற்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்திலும் என இரண்டு இடங்களில் இவ்வூர்ப்பெயர் அமைந்திருத்தலை அறியமுடிகிறது.  சுவடியில், "கோயம்புத்தூர் ஜில்லா அந்தியூர்" (2877-கீ) என்றிருப்பதைக் காணும்போது, இங்குக் குறிப்பிட்ட ஊர் முதலில் குறிப்பிட்ட இடத்தையே சாரும் என்பது தெளிவுபடும்.
2.      அப்பிபாளையம்
      திருச்சிராப்பள்ளி மாவட்டம் கரூர் வட்டத்திலும், மதுரை மாவட்டம் பழனி வட்டத்திலும் இவ்வூர்ப்பெயர் அமைந்திருத்தலை அறியமுடிகிறது.  சுவடியில் "கரூர் தாலுகா அப்பிபாளையங் கிராமம்"(250-த) என்றிருப்பதைக் காணும்போது, இங்குக் குறிப்பிட்ட ஊர் முதலில் குறிப்பிட்ட இடத்தையே சாரும் என்பது தெளிவு.  இவ்வூர்ப்பெயர் இடம்பெற்ற 'வீரகுமார நாடகம்' (250-த) என்றும் சுவடி, பிங்கள வருடம் வைகாசி மாதம் பதினான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரத்தன்று (27.5.1917) எழுதப்பட்டதென்று அறியமுடிகிறது.
3.      அன்னதானப்பட்டி
      "சேலம் அன்னதானப்பட்டி" (1470-த) என்னும் சுவடிக் குறிப்பில் இருந்து இவ்வூர் சேலம் மாவட்டம் சேலம் வட்டத்தைச் சேர்ந்தது என்பது தெளிவுபடுகிறது.  இவ்வூர்ப்பெயரில் எந்தவொரு மாற்றமும் இல்லாத காரணத்தாலும், இடப்பகுதி மாற்றமில்லாத காரணத்தாலும் இச்சுவடி தற்காலத்துச் சுவடியாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
4.      இரும்பிலி
      வட ஆற்காடு மாவட்டம் வந்தவாசி வட்டத்திலும், தென் ஆற்காடு மாவட்டம் செஞ்சி வட்டத்திலும், செங்கற்பட்டு மாவட்டம் செங்கற்பட்டு வட்டத்திலும், மதுராந்தகம் வட்டத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்திலும் இவ்வூர்ப்பெயர் இருப்பதை அறியமுடிகிறது.  சுவடியில் "தென் ஆற்காடு ஜில்லா செஞ்சி தாலுகாவைச் சேர்ந்த இரும்பிலி கிராமம்" (1277-சா) என்றிருப்பதைக் காணும்போது, இங்குக் குறிப்பிட்ட ஊர் செஞ்சி வட்டத்தைச் சேர்ந்ததென்பது வௌ¢ளிடை.
5.      கண்டமங்கலம்
      தென் ஆற்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திலும், இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்திலும் என மூன்று இடங்களில் இவ்வூர்ப்பெயர் இருப்பதை அறியமுடிகிறது.  சுவடியில், "இராமநாதபுரம் ஜில்லா கண்டமங்கலம்" (831-த) என்றிருப்பதைக் காணும்போது இவ்வூர் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தைச் சேர்ந்ததென்பது தெளிவு.
6.      கிள்ளியூர்
      கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம், மாயுரம் வட்டங்களிலும் இவ்வூர்ப்பெயர் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது.  சுவடியில், "காவேரிக்கரை அருகான கிள்ளியூர்" (407-ச) என்றிருப்பதைக் காணும்போது காவிரியாற்றின் கரையோரமாக இருக்கும் மாயுரம் வட்டத்தைச் சேர்ந்த கிள்ளியூரே சுவடியில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஊராகும்.
7.      புலிமேடு
      "வேலூருக்குத் தென்மேற்கான உசினிபாது பேட்டைக்கு மேற்கு கைலாசகடிக்கு வடமேற்கான கங்கைபத்துக் குடியில் சேர்ந்த இனாம் கிராமம் புலிமேடு" (648-த) என்றிருப்பதைக் காணும்போது வட ஆற்காடு மாவட்டம் வேலூர் வட்டத்தைச் சேர்ந்த புலிமேட்டைக் குறிக்கும் என்பது இவ்வூரின் புற அமைப்பைக் கொண்டு அறியலாம்.
8.      வேலூர்
      வட ஆற்காடு மாவட்டம் வேலூர், அரக்கோணம், செங்கம், வாலாஜா வட்டங்களிலும், தென் ஆற்காடு மாவட்டம் திண்டிவனம், திருக்கோவிலூர் வட்டங்களிலும், செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம், பொன்னேரி வட்டங்களிலும், கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திலும், இராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கை வட்டத்திலும், சேலம் மாவட்டம் சேலம் வட்டத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் வட்டங்களிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பரலூர், உடையாளர்பாளையம் வட்டங்களிலும் என பதினாறு இடங்களில் இவ்வூர்ப்பெயர் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது.
      சுவடியில் காணப்படும் வேலூர் வட ஆற்காடு மாவட்டம் வேலூர் வட்டத்தையே குறிக்கும்.  இவ்வேலூரை இராயவேலூர் என்றும் அழைப்பர்.  இராயவேலூர் என்று இவ்வூர்ப்பெயரை நினைவில் கொண்டு பார்க்கும்போது ஒரு குழப்பத்தை உருவாக்கும் நிலை தோன்றுகிறது.  சுவடியில் "இராயவேலூர் சைதாப்பேட்டை" (815-த) என்றிருப்பதைக் காணும்போது வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த வேலூர் எல்லைக்குட்பட்ட சைதாப்பேட்டையைக் குறிக்கின்றதா? மதுரை மாவட்டத்தில் பெரியகுளம் வட்டத்திலுள்ள இராயவேலூர் எல்லைக்குட்பட்ட சைதாப்பேட்டையைக் குறிக்கின்றதா? என்பது உள்ளாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
கால ஆய்வுக்கு இட்டுச் செல்லும் ஊர்ப்பெயர்கள்
      காலவோட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டிருக்கும் மாவட்ட வட்டங்களுக்குள் மாறுதலடைந்திருக்கும் ஊர்ப்பெயர்களை பழமையான சுவடிகளில் காணும்போது அச்சுவடி எழுந்த காலத்து அச்சுவடி எழுந்த ஊர், எழுதியவரின் ஊர், எழுதுவித்தோரின் ஊர் இன்று இருக்கும் மாவட்ட வட்ட எல்லைக்குள் இல்லாமல் பிறிதொரு மாவட்ட வட்ட எல்லைக்குள் நுழைந்திருப்பதைக் காணமுடிகிறது.  இம்மாவட்ட வட்ட மாற்றத்தினால் ஓரளவிற்கு சுவடியெழுந்த காலத்தை நிர்ணயம் செய்யலாம்.  குறிப்பாக, இக்காலத்தை நிர்ணயம் செய்ய கள ஆய்வே துணைபுரிவனவாகும்.  என்றாலும், கள ஆய்வுக்கு முன் முயற்சியாக அறையாய்வு வாயிலாக ஒருசில முடிபு மேற்கொள்ளப்படுதல் மேலும் ஆய்வுக்கு வழிவகுக்கும் என்ற எண்ணத்தில் அய்யம்பாளையம், அரியலூர், அல்லிக்குள்ம் ஆகிய மூன்று ஊர்களை எடுத்துக்கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1.       அய்யம்பாளையம்
      வட ஆற்காடு மாவட்டம் ஆரணி, திருவண்ணாமலை ஆகிய வட்டங்களிலும், கோயம்புத்தூர் மாவட்டம் அவனாசி, ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய வட்டங்களிலும், மதுரை மாவட்டம் திண்டுக்கல், பழனி வட்டங்களிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி, முசிரி வட்டங்களிலும் இவ்வூர்ப் பெயர் இருப்பதை அறியமுடிகிறது.  சுவடியில், "கோயமுத்தூர் ஜில்லா தாராபுரந் தாலுகா அய்யம்பாளையம்" (1144-த) என்றிருப்பதைக் காணும்போது இங்குக் குறிப்பிட்ட ஊர் மேலே குறிப்பிட்ட கோயம்புத்தூர் மாவட்டத்து நான்கு வட்டங்களிலும் அன்றி வேறொரு வட்டமான தாராபுரத்தில் அமைந்திருப்பதைக் குறிப்பிட்டிருப்பதைக் காணும்போது தாராபுரம் வட்டத்தில் அய்யம்பாளையம் என்றொரு ஊர் இருக்கின்றா? இல்லை, வட்டப் பகுதிகள் மாற்றமடைந்ததில் மேலே குறிப்பிட்ட நான்கு வட்டங்களில் எந்த வட்டத்தில் இவ்வூர் இடம்பெற்றுள்ளது? காலத்தை நிர்ணயம் செய்தபின் இவ்வூர் இடம்பெற்ற சுவடியின் சுவடி எழுந்த காலத்தை ஓரளவுக்குத் தீர்மானிக்கலாம்.
2.      அரியலூர்
      தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்திலும், தென் ஆற்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் வட்டங்களிலும், செங்கற்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை வட்டத்திலும் இவ்வூர்ப்பெயர் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.  சுவடியில், "விருத்தாசலம் அரியலூர்" (551-5-சா) என்றிருப்பதைக் காணும்போது மேலே குறிப்பிட்ட எந்த வட்டத்திலும் இவ்வூர் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.  'விருத்தாசலம் அரியலூர்' என்றிருப்பதால் விருத்தாசலம் என்னும் ஊர் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டத்தின் பெயர் என்பது தெளிவு.  இவ்வட்டத்திற்குட்பட்ட அரியலூர் என்பது சுவடிச் செய்தி.  ஆனால் கிராமங்களின் அகரவரிசைப் பட்டியினைக் கொண்டு பார்வையிடும் போது இவ்வூர்ப்பெயர் விருத்தாசலம் வட்டத்தில் இல்லாது கள்ளக்குறிச்சி வட்டத்திலும் விழுப்புரம் வட்டத்திலும் என இரண்டு வட்டங்களிலும் இடம்பெற்றுள்ளது.  விருத்தாசலம் வட்டத்திலிருந்து இவ்வூர் எப்போது இந்த இரு (கள்ளக்குறிச்சி, விழுப்புரம்) வட்டங்களில் இணைந்தது என்பதைக் காண்போமாயின் ஓரளவிற்குச் சுவடி எழுந்த ஊரையும் காலத்தையும் நிர்ணயம் செய்யலாம்.
3.      அல்லிக்குளம்
      "இராமநாதபுரம் சீமை பள்ளிமடம் தாலுகா அல்லிக்குளம்" (880-த) என்ற குறிப்பிலிருந்து பள்ளிமடத் தாலுகா அல்லிக்குளம் என்றிருப்பதைக் காணும்போது கிராமங்களின் அகர வரிசைப்பட்டியில் பள்ளிமடமும் அல்லிக்குளமும் அருப்புக்கோட்டை வட்டத்திற்குள் இருப்பதைக் காணலாம்.  இவ்வூர்ப்பெயரும் மேலே குறிப்பிட்ட ஆய்வு முறைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஊர்ப்பெயராய்வில் ஏற்படும் சிக்கல்கள்
      சுவடிகளில் காணப்படும் ஊர்ப்பெயர்களை ஆய்வு செய்யும் போது பலவகையான சிக்கல்கள் ஏற்படும்.  ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்தில் குடிபெயர்ந்தே தங்களின் வாழ்க்கையைப் பெரும்பாலான மக்கள் அமைத்துக்கொண்டிருக்கின்றனர்.  அவ்வாறு வாழ்ந்தவர்கள் தங்களின் பூர்வீக இடத்தைத் தங்கள் பெயருக்கு முன்னொட்டாக சேர்த்துக்கொண்டுள்ளனர்.  இப்பழக்க வழக்கம் இன்றும் இருப்பதைக் காணலாம்.  இம்முறையில் தங்களின் பெயர்களை எழுதிய சுவடிகளின் ஊர்ப்பெயரில் இடத்தை (ஊர்) நிர்ணயம் செய்தல் என்பது சற்று கடினமே.  இக்குறையைப் போக்கக் குறிப்பிட்ட நபரைப் பற்றிய உண்மைச் செய்தி கிடைக்கும் வரை அவர் பெயருக்கு முன் இடப்பட்ட முன்னொட்டு ஊர் எந்த ஊர் என்பதைக் காண்பதரிதே.  குறிப்ப்£க, ஒதியத்தூர் என்னும் ஊரை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.  இவ்வூர், சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்திலும், வட ஆற்காடு மாவட்டம் வேலூர் வட்டத்திலும், தென் ஆற்காடு மாவட்டம் செஞ்சி, திருக்கோயிலூர் வட்டங்களிலும் இப்பெயர் இருப்பதை அறியமுடிகிறது.  சுவடியில், "தஞ்சாவூரிலிருக்கும் ஒதியத்தூர்" (404-1-ச) என்றிருப்பதைக் காணும்போது மேற்கூறப்பட்ட வட்டத்தில் இவ்வூர்ப்பெயர் இல்லாமை புலப்படும்.  இவ் ஒதியத்தூர் ஏடெழுதியவரின் சொந்த ஊராகும்.  இவர் தஞ்சைக்குக் குடிவந்தவராக இருத்தல் வேண்டும்.   அப்படி குடிவந்தவராக கருதிக்கொள்வோமானால் மேலே கூறப்பட்ட நான்கு ஒதியத்தூரில் எந்த ஒதியத்தூர் இச்சுவடி எழுதியவரின் ஊர் என்பதை நிர்ணயம் செய்தல்வேண்டும்.  மேலும் இந்நான்கு ஒதியத்தூர் அன்றி வேறொரு ஒதியத்தூராகவும் இவ்வூர் அமைந்திருக்கலாம்.  இவ்வூரை உள்ளாய்வு செய்து தீர்மானித்தல் ஆய்வு நெறியாகும்.
      பெரும்பாலான சுவடிகளில் ஊர்ப்பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டு எழுதியவர் பெயர் பின்னொட்டாக அமைந்திருத்தலைக் காணமுடிகிறது.  இந்நிலையில் சுவடி எழுந்த ஊரின் பெயரை நிர்ணயிப்பது என்பது சிக்கலான செயலே.  ஒரே ஊர் பல இருக்கும் நிலையில் சிக்கலை தீர்ப்பதென்பது எந்தக் குறிப்பிலேனும் சுட்டப்படாத நிலையில் சிக்கலான செயலேயாகும்.  குறிப்பாக, புத்தூர், புதூர், நல்லூர், கூடலூர், புலியூர் என்னும் ஊர்ப்பெயர்களை இங்கு நோக்குவோம்.  இவ்வூர்ப் பெயர்களுக்கு மாவட்டம் வட்டம் என்ற குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை.  இப்பேர்ப்பட்ட நிலையில் ஊர்ப்பெயர்களை ஆய்வு செய்தல் பெரும் சிக்கலே.
ஊர்                       மாவட்டம்                      வட்டம்

புத்தூர்                  வட ஆற்காடு                  வேலூர்
                             தென் ஆற்காடு               திருக்கோயிலூர், செஞ்சி,
                                                                   விருத்தாசலம்,
                            செங்கற்பட்டு                  செங்கற்பட்டு 
                            கோயம்புத்தூர்                தாராபுரம்
                            இராமநாதபுரம்               சிவகங்கை, ஸ்ரீவில்லிபுத்தூர்
                            சேலம்                            நாமக்கல், சேலம்
                            தஞ்சாவூர்                      கும்பகோணம், பாபநாசம், சீர்காழி,
                                                                  திருத்துறைப்பூண்டி
                           திருச்சிராப்பள்ளி             குளித்தலை, திருச்சிராப்பள்ளி,                                                                        முசறி
புதூர்                   வட ஆற்காடு                  குடியாத்தம், திருப்பத்தூர்
                           தென் ஆற்காடு                விழுப்புரம், விருத்தாசலம்
                          செங்கற்பட்டு                    பொன்னேரி, பள்ளிப்பட்டு
                          கோயம்புத்தூர்                   பவானி, ஈரோடு
                          கன்னியாகுமரி                  கல்குளம்
                          மதுரை                              மேலூர், பழனி, பெரியகுளம்
                          இராமநாதபுரம்                   பரமகுடி, சாத்தூர், சிவங்கை,
                                                                    திருப்பத்தூர்
                          சேலம்                               கிருஷ்ணகிரி, சேலம்,                                                                                      திருச்செங்கோடு
                         தஞ்சாவூர்                           கும்பகோணம், நாகப்பட்டினம்,
                                                                    ஒரத்தநாடு, தஞ்சாவூர்
                         திருச்சிராப்பள்ளி                 குளத்தூர்
                         திருநெல்வேலி                    கோவில்பட்டி, செங்கோட்டை,
                                                                     திருநெல்வேலி
நல்லூர்             வட ஆற்காடு                       திருவண்ணாமலை, வாலாஜா.
                                                                     வந்தவாசி
                         தென் ஆற்காடு                     திண்டிவனம், விருத்தாசலம்
                         செங்கற்பட்டு                        செங்கற்பட்டு, பொன்னேரி,
                                                                      ஸ்ரீபெரும்புதூர்
                         கோயம்புத்தூர்                       கோபிசெட்டிப்பாளையம்,
                                                                      பொள்ளாச்சி
                          கன்னியாகுமரி                     அகத்தீஸ்வரம், விளவங்கோடு
                          மதுரை                                 திண்டுக்கல், மதுரை
                          இராமநாதபுரம்                     முதுகுளத்தூர், பரமகுடி
                          சேலம்                                  ஓசூர், சேலம்
                          திருநெல்வேலி                     திருச்செந்தூர்
கூடலூர்             வட ஆற்காடு                        போரூர், திருவண்ணாமலை,
                                                                       சிதம்பரம், கூடலூர், செஞ்சி,
                                                                        கள்ளக்குறிச்சி, திண்டிவனம்,
                                                                        விருத்தாசலம்,                                                                                                திருக்கோவிலூர்
                         செங்கற்பட்டு                           செங்கற்பட்டு
                         கோயம்புத்தூர்                         கோயம்புத்தூர்
                         மதுரை                                     திண்டுக்கல்
                         நீலகிரி                                      கூடலூர்
                         இராமநாதபுரம்                         திருவாடானை
                         சேலம்                                     ஓசூர், திருச்செங்கோடு
                         தஞ்சாவூர்                               அறந்தாங்கி, மாயுரம்,                                                                                      தஞ்சாவூர்
                        திருச்சிராப்பள்ளி                      ஆலங்குடி, குளத்தூர்,                                                                                       குளித்தலை,
                                                                         பெரம்பலூர், திருமயம்
                         திருநெல்வேலி                         சங்கரநயினார் கோயில்
புலியூர்              வட ஆற்காடு                           செங்கம்
                         தென் ஆற்காடு                         கூடலூர், விருத்தாசலம்
                         செங்கற்பட்டு                            செங்கற்பட்டு, காஞ்சிபுரம்,                                                                                திருவள்ளூர்
                          இராமநாதபுரம்                          பரமகுடி, சிவகங்கை,                                                                                       திருவாடானை
                          சேலம்                                       சேலம்
                          தஞ்சாவூர்                                  நன்னிலம்
                          திருச்சிராப்பள்ளி                        குளத்தூர், திருச்சிராப்பள்ளி
                          திருநெல்வேலி                           தென்காசி
சிக்கல் தோன்றுவதற்கான காரணங்கள்
1.     சுவடியெழுந்த இடம் ஒன்றாகவும், அதைப் பயன்படுத்துபவர் வாழும் இடம் வேறொன்றாகவும் இருக்கும் போதும்,
2.     சுவடியெழுதியவரின் சொந்த ஊரோ, எழுதுவித்தவரின் சொந்த ஊரோ முன்னொட்டாக எழுதி தற்போது (சுவடியெழுந்த காலம்) அவர்கள் வாழும் இடத்தைக் குறிப்பிடாமல் இருக்கும் போதும்,
3.     மாவட்டம் மற்றும் வட்டப் பகுதிகளை அரசு அவ்வப்போது பிரிக்கும் போதும்,
      4.     ஊர்ப்பெயரில் திரிபேற்படும் போதும்,
      5.     சுவடிகளில் காணப்படும் எழுத்துக்களை மாற்றிப் படிக்கும்
போதும்,
6.     ஏடெழுதியவர் தெளிவான ஊர் குறித்த மாவட்ட வட்டப் பகுதிகளைக் குறிப்பிடாத போதும் என ஆறு காரணங்களைச் சுட்டலாம்.

சிக்கல் போக்கும் வழிமுறைகள்

1.     சுவடி ஊர்ப்பெயர்களில் ஏற்படும் சிக்கல்களைக் கள ஆய்வு செய்து சுவடி எழுதியவர்களின் பரம்பரை மற்றும் எழுதுவித்தவரின் பரம்பரை ஆகியோரிடம் இருந்து உண்மைச் செய்திகளைத் திரட்டி ஊர்ப்பெயர்களை உறுதிசெய்யலாம்.
2.     அரசால் மாவட்டம் மற்றும் வட்டப் பகுதிகள் மாற்றமடைந்த இந்த நிலையில் தொடக்கம் முதல் இன்றுவரை ஊர்ப்பகுதிகளை மாற்றம் செய்யப்பட்ட அனைத்து ஆணைக் குறிப்புக்களையும் திரட்டி இன்றுள்ள மாவட்டம் மற்றும் வட்டப் பகுதியில் அன்றைய சுவடியில் காணப்பட்ட மாவட்டம் மற்றும் வட்டப் பகுதியை ஒப்பிட்டு தெரிவு செய்யலாம்.
3.     ஊர்ப்பெயர் விளக்க ஆய்வு செய்வதன் மூலம் ஊர்ப்பெயர் திரிபேற்பட்டதை அறியமுடியும்.
4.     கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊர்ப்பெயர் களையும் ஊர்ப்பெயர் விளக்கங்களையும் ஆய்வு செய்து சுவடிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊர்ப்பெயர்களைத் தெரிவு செய்யலாம்.
5.     பண்டைய கால ஏட்டுப் பத்திரங்களைக் கொண்டும் ஊர்ப்பெயர்களைத் தெரிவு செய்யலாம்.

சுவடி ஊர்ப்பெயராய்வில் மேற்கொள்ளப்பட வேண்டியவை

1.     சுவடிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊர்ப்பெயர்கள் இன்றும் உள்ளனவா என்றறிதல் வேண்டும்.
      2.     ஊர்ப்பெயர் விளக்க ஆய்வு செய்தல்வேண்டும்.
      3.     ஊர்ப்பெயர் பகுதியாய்வு செய்தல்வேண்டும்.
      4.     ஊர்ப்பெயராய்வால் ஏடெழுதியவர் மற்றும் ஏடெழுதுவித்தவர் ஆகியோரின் சொந்த முகவரியை உறுதி செய்தல்வேண்டும்.
5.     ஊர்ப்பெயராய்வில் சுவடியெழுந்த காலம் இல்லாத சுவடிகளுக்குக் காலத்தை உறுதி செய்தல்வேண்டும்.
      6.     ஊர்ப்பெயர் வரலாற்றை அமைத்தல்வேண்டும்.
      சுவடிகளில் காணப்படும் ஊர்ப்பெயர்களில் அறையாய்வு 25 சதவிகிதம் என்றால் கள ஆய்வு 75 சதவிகிதம் ஆகும்.  எனவே, ஊர்ப்பெயர் ஆய்விற்குக் கள ஆய்வே முற்றிலும் துணைபுரிவன என்றாலும், சுவடிகளில் ஊர்ப்பெயராய்வின் தொடக்கமாக இவ்வாய்வு நிகழ்ந்திருக்கின்றது. 
      இனிச் சுவடிகளில் எடுக்கப்பெற்ற ஊர்ப்பெயர்களின் அகரநிரலைக் காண்போம்.
அகச்சக்கரபாண்டலம்,  அட்டாவதனாதம், அண்டைநாடு, அதிராமபட்டினம், அதிவீரராமன்பட்டினம், அந்தியூர், அப்பிபாளையம், அம்மாப்பட்டி, அம்மையாகரம், அய்யம்பாளையம், அய்யம்பேட்டை, அரசலூர், அரியாங்குப்பம், அலங்காபட்டி, அல்லிக்குளம், அனபூண்டி, அன்னதானப்பட்டி, அன்னவாசல், ஆண்டிக்குப்பம், ஆத்திக்காடு, ஆப்பனூர், ஆயலூர், ஆய்குடி, ஆரணி, ஆவுடையார்பட்டி, ஆழ்வார்திருநகரி, ஆழ்வார்பேட்டை, ஆறுமுகமங்கலம், ஆறையூர், ஆனைக்குச்சேரி, ஆனைக்குளம், ஆனையாபுரி, இராஜபாளையம், இராசிபுரம், இராமநாதபுரம், இராமீசுபரம், இராயவேலூர், இரும்பிலி, இரும்பேடு, உசேனாபாதுபேட்டை, உடுமலைப்பேட்டை, உடையார்பாளையம், உமையாள்புரம், உலகுடையாபாளையம், உழலூர், உளுந்தூர்ப்பேட்டை, ஊரக்கரை, ஊற்றுக்காடு, எட்டயபுரம், எதுமலை, எதுரக்கோட்டை, எலவம்பாடி, எலவாடி, ஔங்காடு, ஏகாம்பரநல்லூர், ஏழூருபுதுப்பட்டி, ஒரத்தப்பாளையம், ஒருச்சேரி, ஓதியத்தூர், ஓலைப்பாளையம், கங்கைபத்துக்குடி, கசுப்பாபுதுக்கோட்டை, கசுப்பாவிசூரி, கடம்பர்கோவில், கடவூர், கண்டமங்கலம், கண்ணங்குடை, கண்ணபுரம், கம்புளியம்பட்டி, கயிலாசகெடி, கயிலாசபுரம், கரககோவில், கரடிப்பட்டி, கருப்பூர், கருவிடுகளத்தூர், கருவூர், கரூர், கரைக்கண்டம், கர்ணம்ராசுப்பேட்டை, கலவை, கலைக்கோடு, கல்லூரணி, களத்தூர், கள்ளப்புலியூர், கன்னிப்பாடி, காக்காபாடி, காக்காவடி, காங்கேயநல்லூர், காங்கேயம், காசைநகர், காஞ்சிபுரம், காடுபட்டி, காப்பட்டி, காவல்குடி, காவளூர், காவேரிக்கரை, காவேரிதீர்த்தம், காவேரிபுரம், காளப்பட்டி, கிள்ளியூர், குடக்கியம், குடிவாயில், குட்டத்துரை, குட்டந்தீர்த்ததுறை, குண்ணகம்பூண்டி, குண்ணாலைபட்டி, குமாரசாமிப்பேட்டை, கும்பகோணம், கும்மிடிப்பூண்டி, குயவர்புரம், குழப்பலூர், குறுப்பைநாடு, கூடமலை, கூடலூர், கூந்தலூர், கூனம்பட்டி, கூனம்பாடி, கெங்கைபத்துக்குடி, கேசரமங்கலம், கைலாசகடி, கொக்கம்பட்டி, கொசவப்பட்டி, கொடிமடிக்கோட்டை, கொடுமணல், கொல்லாபுரம், கொளத்தூர், கோக்காலடி, கோநாடு, கோமளீசுவரன்பேட்டை, கோயம்முத்தூர், கோயம்பேடு, கோரல்கிராமம், கோரிப்பாளையம், கோவிந்தம்பாளையம், கோவிலூர், கோனாசேரிகுப்பம், கோனேரி, சரமணந்தோப்பு, சாத்தமங்கலம், சாத்துக்குடி, சிங்கநல்லூர், சிதம்பரநாதன்பேட்டை, சிதம்பரம், சித்திரிப்பட்டி, சிவகங்கை, சிறுபத்தூர், சிறுனூர், சின்னகாஞ்சிபுரம், சின்னம்மனூர், சீகாழி, சுண்ணாம்புபாளையம், சுவர்க்கபுரம், சுவர்க்கபுரி, சுவாமிமலை, செக்காலைக்குடி, செங்கம்பூண்டி, செங்கரைப்பட்டுபாளையம், செஞ்சி, செம்பரம்பாக்கம், செருக்கூர், செல்கரி, செறுவேங்கைப்புரி, சென்னகரை, சென்னபட்டணம், சென்னை, சேகரங்கனுங்காட்டாங்குளம், சேத்துப்பட்டுக்குடி, சேயூர், சேலம், சைதாப்பேட்டை, தங்கச்சம்மாபட்டி, தஞ்சாவூர், தட்டையநாடு, தணிகைமலை, தண்டையார்பட்டு, தம்பிரெட்டிபாளையம், தயங்கம்பாடி, தரங்கைகயிலாபுரம், தருமபுரம், தர்மபுரி, தலையநல்லூர், தாராபுரம்,  தாழம்பட்டி, தாழ்குடி, தாழ்குளம், தாளப்பட்டி, தாளைப்பட்டி, தானப்பட்டி, திடாவூர், திண்டிவனம்,திண்டுக்கல்,தியாகசமுத்திரஅக்கிரகாரம்,  திரிசிரபுரம்,  திருக்கண்ணமங்கை, திருக்கலசை, திருக்குராச்சேரி, திருக்கோகருணம், திருக்கோவிலூர், திருக்கோளூர், திருசிரபுரங்கோட்டை, திருசிரபுரம், திருச்சத்துரை, திருச்சிராபுரம், திருச்சிராப்பள்ளி, திருச்செங்கோடு, திருச்செந்தூர், திருத்தணிகை, திருநகரி,திருநறுங்கோட்டை, திருநீர்மலை, திருநெல்வேலி, திருப்பரம்பூர்,  திருப்பாதிரிப்புலியூர், திருப்பரம்பியம், திருப்பூந்துருத்தி, திருப்பெருந்துரை, திருமயிலாப்பூர், திருமயிலை, திருமழிசை, திருவண்ணாமலை, திருவரங்கம், திருவல்லிக்கேணி, திருவழுதிவளநாடு, திருவாரூர், திருவாலங்காடு, திருவாலைப்பதி, திருவாவடுதுறை, திருவான்மியூர், திருவேட்டிசுவரன்பேட்டை, திருவைகுந்தை, திருவையாறு, திருவோத்தூர், திரைலோக்கி, தில்லை, துபாசி, துரைமங்கலம், தெக்கழூர், தெப்பக்குளம், தென்கரைநாடு, தென்காசி, தேரூர், தேவங்குடி, தேவனாம்பட்டணம், தேனாம்பேட்டை, தொடுக்காடு, தொரைப்பாடி, தொழுவூர், தோதண்டி, தோப்பூர், நங்காத்தூர், நொச்சலூர், நஞ்சுண்டாபுரம், நத்தக்காரையூர், நத்தப்பாளையம், நத்தமாங்குடி, நத்தமேடு, நயினார்பாளையம், நரசிங்கபுரம், நல்லியப்பள்ளி, நல்லூர், நல்லூர்பெருமணம், நாகப்பட்டணம், நாங்குனேரி, நெல்லித்தோப்பு, நொரசக்கூர், பட்டிநீளாருருக்குடி, பட்டீச்சுரம், பட்டுக்கோட்டை, பருத்தியூர், பல்லவநகரம், பல்லவராயன்பட்டி, பல்லாடம், பவானிக்கூடல், பழந்தேவங்குடி, பழவேற்காடு, பழனாபுரி, பழனிமாநகர், பழனியூர், பள்ளிமடம், பற்பெனேரி, பாஞ்சாலங்குறிச்சி, பாடியந்தலபாக்கம், பாபநாசம், பாலபாத்தி, பாளையங்கோட்டை, பிச்சம்பட்டி, பிடாரக்கிராமம், பிரகம்பி, பிள்ளைபாக்கம், பிறையாறு, பின்னத்துரை, புஷ்பகிரி, புட்டுளூர், புண்ணாச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரி, புதுப்பட்டி, புதுப்புத்தூர், புதுத்தேவங்குடி, புதுவை, புதூர், புதூர்புலிமேடு, புத்தூர், புத்தேரி, புலிமேடு, புலியூர், புலியூர்க்குறிச்சி, புவனகிரி, பூந்தமல்லி, பூந்துரைநாடு, பெத்துநாயகன்பேட்டை, பெரியபுத்தூர், பெரியமேடு, பெருங்களத்தூர், பெருநகர், பெரும்புலியூர், பெரியபட்டி, பெரியமட்டு, பெருவளப்பூர், பெறங்கியூர், பையனூர், பொங்கலூர், பொய்கைப்பாக்கம், பொய்கைப்பாகை, பொய்கைநல்லூர், பொய்யூர், பொருவனூர், பொழிச்சலூர், பொன்னூர், மஞ்சக்கொல்லை, மஞ்சுவலி, மடியூர், மணவூர், மணியாண்டபட்டு, மண்ணச்சிநல்லூர், மதுரபாக்கம், மதுராந்தகம், மதுராபுரி, மதுரை, மத்தூர், மன்னார்குடி, மன்னார்கோவில், மன்னார்பாலையம், மாங்குடி, மாவண்டூர், மானாமதுரை, மிட்டாகாடுபட்டி, மீஞ்சூர், மீருசாயபுபேட்டை, மீனம்பாக்கம், முசிரி, முளையாம்பூண்டி, முன்னீர்பள்ளம், மூவர்மங்கை, மெய்யூர், மேட்டுக்குடி, மேலக்காவேரி, மேலையூர், மேல்புதுப்பட்டு, மேல்நாரியப்பனூர், மேல்மண்மேடு, மையிழூர், மொட்டரப்பாளையம், மோட்டூர், மோழையாழ்பூண்டி. யாழ்பாணம், யானைமலை, லால்குடி, வஸ்தாதுபட்டாளம், வடசிறகு, வடசேரி, வடசேரிப்பட்டி, வந்தவாசி, வரகனேரி, வரகுப்பை, வரதநல்லூர், வலங்கைமான், வழுதாவூர், வழுதியூர், வளத்திகிராமம், வளவனூர், வள்ளியூர், வாசுகிதேவநல்லூர், வாழைக்கரை, வானூர், விசயபுரம், விசையராமபுரம், விருத்தாசலம், விரையாச்சிலை, வீரசோழபுரம், வீரநாராயணஞ்சேரி,வீரபயங்கரம்,வீரபாண்டி,  வீரப்புடையான்பட்டி, வீரைமடம், வௌ¢ளாளப்பட்டி, வௌ¢ளைக்கல்லுப்பட்டி, வேட்டையார்பாளையம், வேதாரணியம், வேம்பற்றூர், வேலூர், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவைகுண்டம்.
      சுவடிகளில் காணப்படும் இவ்வூர்ப் பெயர்களை மேற்காணும் முறைகளில் ஆய்வு செய்து இடத்தை உறுதி செய்திடல் மேலாய்வுப் பணியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக