செவ்வாய், 10 ஜூலை, 2018

உ.வே.சா.வின் பதிப்புலக அறிமுகம்

உ.வே.சா.வின் பதிப்புலக அறிமுகம்

21.10.1880 அன்று தமிழ் இலக்கிய வெளியீட்டிற்கு ஒரு வௌ¢ளி முலைத்த நாள்.  கும்பகோணம் முன்சீப் சேலம் இராமசாமி முதலியாரை உ.வே. சாமிநாதையர் சந்தித்த அந்த முதல் தமிழுக்கு எழுச்சியும் நிலைபேறும் கிடைத்த நாள்.  கல்வியில் சிறந்த சேலம் இராமசாமி முதலியாரை திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் அவர்கள் காறுபாறு தம்பிரானையும் உடன் சிலரையும் அனுப்பியிருந்தார்.  அப்போது அவருடன் வந்த சிவசுப்பிரமணிய பிள்ளை உ.வே.சாமிநாதையரைப் பற்றிக் குறிப்பிட, முதலியார் அவரைக் காண விரும்பினார்.  இதனை உ.வே.சா.விடம் பிள்ளை கூற, ஐயர்  மரியாதை நிமித்தமாக 21.10.1880இல் சென்று முதலியாரைப் பார்க்கலானார். 

முதலியாரும் ஐயரும்
சேலம் இராமசாமி முதலியார் ஐயர் படித்த நூல்கள் என்ன என்ன என்று வினவிய போது, ஐயர் தாம் படித்த, கேட்ட "குடந்தையந்தாதி, மறைசையந்தாதி, புகலூரந்தாதி, திருவரங்கத்தந்தாதி, அழகரந்தாதி, கம்பரந்தாதி, முல்லையந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், திருக்கோவையார், தஞசைவாணன் கோவை.. என்று அந்தாதிகளில் இருபது, கலம்பகங்களில் இருபது, கோவைகளில் பதினைந்து, பிள்ளைத்தமிழ்களில் முப்பது, உலாக்களில் இருபது, தூகள் இப்படியே பிரபந்த நூல்களையெல்லாம் பட்டியலிட்டார்.  முதலியார் இவற்றில் எல்லாம் திருப்தி ஏற்படாமல் மேற்கொண்டு என்னவெல்லாம் படித்திருக்கிறாய் என்றார்.  அதற்கு ஐயர், "திருவிளையாடற் புராணம், திருநாகைக்காரோணப் புராணம், மாயூரப் புராணம், கந்தபுராணம், பெரியபுராம், குற்றாலப் புராணம், நைடதம், பிரபுலிங்க ல¦லை, சிவஞானபோதம், சிவஞானசித்தியார் உரை, கம்பராமாயணம்" போன்றவற்றையெல்லாம் படித்திருக்கிறேன் என்றார்.  இவற்றிலும் திருப்தி ஏற்படாத முதலியார் பழைய நூல்களைப் படித்ததுண்டா என்ற வினாவை எழுப்பினார்.  நான் கூறியவற்றில் பல பழைய நூல்கள் இருக்கின்றனவே, முதலியார் என்ன நூல் பற்றிக் கேட்கிறார் என்று ஐயர் குழம்பினார்.  அப்போது, முதலியார் இந்நூல்களுக்கு எல்லாம் மூலமான சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களைப் படித்திருக்கின்றீரா என்றார்.  உண்மையில் ஐயர் இந்நூல்களை அதுநாள்வரை கேள்விப்பட்டது கூட இல்லை.

இப்புத்தகங்கள் எனக்குக் கிடைக்கவில்லை.  கிடைத்தால் படிக்க உச்சிதமாக இருக்கிறேன் என்றார் ஐயர்.  அதற்கு முதலியார் நான் தருகிறேன் படித்துப் பாடம் சொல்வீர்களா என்றார்.  சரி என்ற ஐயர் அடுத்த வாரம் சென்று சீவக சிந்தாமணிக் கடிதப் பிரதியை ஐயர் பெற்றார்.  அப்போது முதலியார் அவர்கள், "எனக்குச் சிந்தாமணி முதலிய பழைய புஸ்தகங்களைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்தது.  இந்தத் தேசத்தில் நான் சந்தித்த வித்துவான்களில் ஒருவராவது அவற்றைப் படித்ததாகவே தெரியவில்லை.  ஏட்டுச் சுவடிகளும் கிடைக்கவில்லை.  திருநெல்வேலிப் பக்கத்தில் உள்ள கவிராயர்கள் வீட்டில் பிரதிகள் கிடைக்கலாமென்று எண்ணி ஸ்ரீவைகுண்டத்தில் முன்ஸீபாக இருந்த என் நண்பர் ஏ. இராமசந்திரையர் என்பவரிடம் விஷயத்தைச் சொல்லி வைத்திருந்தேன்.  அவர் யார் யாரையோ விசாரித்துப் பார்த்தார்.  ஒன்றும் கிடைக்கவில்லை.

"ஒரு சமயம் ஸ்ரீவைகுண்டத்துக்கு அருகிலுள்ள ஓர் ஊரில் பரம்பரை வித்துவான்களாக இருந்த கவிராயர் குடும்பமொன்றில் உதித்த ஒருவர் ஒரு வழக்கில் சாக்ஷியாக வந்தார்.  அவரை விசாரிக்கும்போது, அவர் கவிராயர் பரம்பரையைச் சேர்ந்தவரென்றும், அவருடைய முன்னோர்கள் பல நூல்களை இயற்றியிருக்கின்றார்களென்றும் என் நண்பருக்குத் தெரியவந்தது.  விசாரணையெல்லாம் முடிந்த பிறகு முன்ஸீப் அந்தச் சாட்சியைத் தனியே அழைத்து அவர் வீட்டில் ஏட்டுக் சுவடிகள் இருக்கின்றனவா என்று விசாரித்தார்.  அவர், 'இருக்கின்றன' என்று சொல்லவே, சிந்தாமணிப் பிரதி இருந்தால் தேடி எடுத்துத் தரவேண்டுமென்று கூறினார்.  அதிகாரப் பதவியிலிருந்தமையால் அவர் முயற்சி பலித்தது.  அந்தக் கவிராயர் சீவகசிந்தாமணியைப் பிரதியைக் கொண்டு வந்து கொடுத்தார்.  அதற்கு முப்பத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கி எனக்கு அனுப்பினார்.  அதிலிருந்து காகிதத்திற்கு பிரதி பண்ணிய புஸ்தகம் இது.

"இவ்வளவு கஷ்டப்பட்டு இதனைப் பெற்றும் படிப்பதற்கு முடியவில்லை.  நான் காலேஜில் படித்தபோது (1870இல் பி.ஏ., படித்தபோது) இதன் முதற் பகுதியாகிய நாமகளிலம்பகம் மாத்திரம் பாடமாக இருந்தது.  அதை ஒரு துரை அச்சிட்டிருந்தார்.  அதில் தமிழைக் காட்டிலும் இங்கில¦ஷ் அதிகமாயிருந்தது.  நூல் முற்றும் படித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசையால் நான் போகும் இடங்களில் உள்ள விததுவான்களை எல்லாம் விசாரித்துப் பார்க்கிறேன்.  எல்லோரும் அந்தாதி, பிள்ளைத்தமிழ், புராணங்கள் இவைகளோடு நிற்கிறார்களேயொழிய மேலே போகவில்லை.  அதனால் நான் மிகவும் அலுத்துப்போய்விட்டேன்"

"புஸ்தகம் மிகச் சிறந்த புஸ்தகம். கம்பராமாயணத்தின் காவ்ய கதிக்கெல்லாம் இந்தக் காவியமே வழிகாட்டி.  இதைப் படித்துப் பொருள் செய்துகொண்டு பாடம் சொல்வீர்களானால் உங்களுக்கும் நல்லது; எனக்கும் இன்பம் உண்டாகும்." (என் சரித்திரம், பக்.533-34) என்றார்.

முதலியார் அவர்களுக்கே புலப்படாத இப்பாடம் எனக்கு எப்படி புலப்படும் என்று எண்ணிய ஐயர், தமிழ் நூல் தானே, எப்படியும் படித்துவிடலாம் என்ற துணிவு மேற்கொண்டு சேலம் இராமசாமி முதலியார் கொடுத்த நச்சினார்க்கினியர் உரையுடன் கூடிய சீவகசிந்தாமணியைப் படிக்கலானார்.

இந்நூலில் உள்ள பாடத் தெளிவின்மையைப் போக்குவதற்கு இடர்ப்பட்டு பல ஜைன அன்பர்களை நாடி நண்பர்களாக்கிக் கொண்டு பொருள் புரிந்து முதலியாருக்குப் பாடம் நடத்தி வந்தார். அப்போது முதலியார் ஐயரைப் பார்த்து, "சிந்தாமணியின் பெருமையை நீங்கள் இப்போது நன்றாக உணர்ந்திருக்கிறீர்கள். இந்த அருமையான காவியம் படிப்பாரற்கு வீணாகப் போகாமல் நீங்கள் பாதுகாக்க வேண்டும்.  இன்னும் சில பிரதிகள் சம்பாதித்து நீங்களே அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டும்.  அதைப்போன்ற உபகாரம் வேறு ஒன்றும் இல்லை" (என் சரித்திரம், ப.543) என்று சொன்னார். 

சேலம் இராமசாமி முதலியார் கும்பகோணத்தை விட்டு சென்னை சென்றபோதும் சீவகசிந்தாமணியை ஐயர் பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கடிதங்கள் வழி தெரிவித்து ஐயரை ஊக்கப்படுத்தி பதிப்புலகில் ஐயரைப் புகுத்தினார்.  

சிந்தாமணியால் வெளிப்பட்ட சங்கச்செய்யுட்கள்
முதலியாரின் வேண்டுகோளை ஏற்ற ஐயர் சீவகசிந்தாமணி சுவடிகளைத் திரட்டிப் படித்துப் பார்க்கும்போது சீவகசிந்தாமணியின் உரையில் நச்சினார்க்கினியர் இடையிடையே மேற்கோளாகக் காட்டக் கூடிய பல பாடல்கள் எவை என்று உணரமுடியாமல் இருந்தது.  இந்நிலை ஏற்பட்ட போது, இதுபோன்று என்னவெல்லாம் இருக்கின்றன என்ற எண்ணம் தோன்ற, ஐயர் பழைய நூல்களைத் தொகுக்கக் தொடங்கினார்.

இவ்வெண்ணம் உற்பத்தியானதும் முதலில் திருவாவடுதுறைப் புஸ்தக சாலையில் உள்ள பழைய நூல்களைத் தேடுகின்றார்.  இதனை அவரே, "நான் அங்கிருந்த பழஞ் சுவடிக் கட்டுக்களைப் புரட்டிப் பார்க்கலானேன்.  ஏடுகளெல்லாம் மிகப் பழமையானவை; எடுத்தால் கையில் ஒட்டிக் கொள்ளக் கூடியவை. ஒரு கட்டில் 'ஏட்டுத் தொகை' என்றும், 'சங்க நூல்போல் தோன்றுகிறது' என்றும் எழுதிக் குமாரசாமித் தம்பிரான் கட்டி வைத்திருந்தார்.  அதை எடுத்துப் பார்க்கையில் நற்றிணை முதலிய சங்க நூல்களின் மூலம் என்று தெரிந்தது.  எட்டுத் தொகையென்பது தான் ஏட்டுத்தொகை ஆயிற்றென்று உணர்ந்தேன்.  நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகையாகும்.  ஒரு பழைய பாட்டிலிருந்து அந்த எட்டின் பெயர்களும் எனக்குத் தெரியவந்தன.  எல்லாவற்றின் மூலத்தையும் சேர்த்தெழுதிய ஏட்டுச் சுவடி ஒன்று அக்கட்டில் அகப்பட்டது.  அதில் கலித்தொகையும், பரிபாடலும் இல்லை.

எட்டுத் தொகையோடு பிள்ளையவர்கள் வைத்துக் கொண்டிருந்த வேறு ஓர் ஏட்டுச் சுவடி கிடைத்தது.  அவர்கள் காலத்தில் அந்தச் சுவடியை எப்பொழுதாவது வெயிலில் எடுத்துப் போடுவார்.  முதலில் பொருநராற்றுப்படை என்று அதில் இருந்தது.  "என்ன நூல் இது"? என்று கேட்டபோது, "இது திருமுருகாற்றுப்படையைப் போன்ற ஓர் ஆற்றுப்படை" என்று மாத்திரம் ஆசிரியர் சொன்னார்.  அதற்கு மேலே என்ன என்ன உள்ளனவென்று பார்க்கும் முயற்சி அக்காலத்தில் உண்டாகவில்லை.  அந்தப் பிரதிதான் மடத்துப் புத்தக சாலையிலிருந்து கிடைத்தது.

  திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பத்து நூல்கள் சேர்ந்த தொகுதிக்குப் பத்துப்பாட்டு என்று பெயர்.  கடைச்சங்க காலத்தைச் சார்ந்த நூல்களுள் எட்டுத் தொகையும், பத்துப்பாட்டும் முக்கியமானவை.  பத்துப்பாட்டு என்ற பெயரோ, அதில் அடங்கியவை இன்ன பாட்டுக்கள் என்பதோ அக்காலத்தில் தெரிந்துகொள்ள இயலவில்லை.

பொருநராற்றுப்படை என்று இருந்த சுவடியை நான் அதிகமாகப் பார்க்கவில்லை.  பதினெண்கீழ்க்கணக்கு அடங்கிய அபூர்த்தியான சுவடி ஒன்றும் கிடைத்தது.  சிந்தாமணிப் பிரதி பழையதாக ஒன்று இருந்தது" (என் சரித்திரம், பக்.555-56) என்கின்றார்.

சீவகசிந்தாமணியில் இருக்கக் கூடிய ஐயப் பாடல்களையும், உரையில் இருக்கக் கூடிய விளக்கப் பாடல்களையும் தனித்தனியாக ஆராய்ந்து அவற்றில் சங்கப் பாடல்களாக வருவனவற்றைக் கண்டும், தொல்காப்பிய உரைகளில் வருவனவற்றைக் கண்டும் தெளிவு கொண்ட ஐயர் அவர்கள், 23 சீவகசிந்தாமணிப் பிரதிகளை ஒப்பீடு செய்து 1887இல் பதிப்பித்தார்.

சிந்தாமணிப் பதிப்பின் போது சங்க நூல்களின் மீது ஐயருக்கு ஏற்பட்ட எண்ணத்தை அவரே, "அகநானூற்றைப் படித்து அதில் உள்ள செய்யுட்களுக்கு இலக்கமிட்டு அவற்றிலுள்ள அரும்பதங்களையும் தொடர்களையும் தொகுத்து அகராதி வரிசையில் எழுதி வைத்துக் கொண்டேன்.  நச்சினார்க்கினியர் எங்கெங்கே 'என்றார் பிறரும்' என்று எழுதுகின்றாரோ அங்குள்ள மேற்கோட் பகுதிகளிலுள்ள பதங்களையும் தொடர்களையும் அந்த அகராதியிலே பார்ப்பேன்.  ஒன்று இரண்டு கிடைக்கும்.  அந்தப் பாட்டை எடுத்துப் பார்ப்பேன்.  சிந்தாமணியில் நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் உரையால் அந்தச் செய்யுள் ஒருவாறு விளங்கும்.  அதிலே ஈடுபட்டு ஒரு முறை இரண்டு முறை மூன்று முறை படித்துப் பார்ப்பேன்.  சங்க நூல்களாகிய புதிய உலகத்தின் காட்சிகள் பனி மூடிய மலைபோல என் கண்ணுக்குத் தோன்றலாயின. பனிப்படலம் படந்திருந்தாலும் மலையினுடைய உயரமும் பருமையும் கண்ணுக்குப் புலப்படுதல் போலத் தெளிவாக விளங்காவிட்டாலும் அந்தச் சங்க நூற் செய்யுட்கள் பொருளமைதியால், 'நிலத்தினும் பெரியனவாகவும், வானிலும் உயர்ந்தனவாகவும், கடல் நீரினும் ஆழமுடையனவாகவும்' தோன்றின" (என் சரித்திரம், ப.557) என்கின்றார்.

சீவகசிந்தாமணியின் ஆறாவது இலம்பகமாகிய கேமசரியாரிலம்பகம் வரை அச்சான நிலையில் சிந்தாமணிப் பதிப்பை மேலும் செம்மைப்படுத்த எண்ணிய ஐயர், தன்னிடமுள்ள ஏடுகளைப் படிக்கலானார்.  அப்போது சிந்தாமணியில் தெளிவாகாத பாடல்கள் அவரிடமிருந்த ஏடுகளில் தெளிவுபடக் கட்டார்.  இதனை அவரே, "ஒரு நாள் இரவு என்னிடமிருந்த ஏடுகளில் ஒன்றை எடுத்துப் படித்தேன்.  முதலும் ஈறும் இல்லாதது அது.  பொருநராற்றுப்படை என்ற பெயர் முதலேட்டிலிருந்தது.  பிள்ளையவர்கள் பிரதியாகிய அதைப் படித்து வருகையில் சிந்தாமணி உரையில் வந்திருந்த மேற்கோள்கள் காணப்பட்டன.  "அடடா! இதை இதுகாறும் ஊன்றிக் கவனிக்கவில்லையே" என்று வருந்தி மேலும் படித்து வந்தேன்.  பொருநராற்றுப் படைக்குப் பின் சிறுபாணாற்றுப்படை இருந்தது.  பிறகு பெரும்பாணாற்றுப்படையும், முல்லைப் பாட்டும், மதுரைக் காஞ்சியும் இருந்தன.  உரையுடன் உள்ள அந்தப் பிரதியைப் படித்து வருகையில், "முருகு பொருநாறு" என்ற தனிப்பாட்டு ஒன்று நினைவுக்கு வந்தது.  அதுகாறும் அந்தச் சுவடி பத்துப் பாட்டென்று தெரியாது.  ஊன்றிக் கவனியாததால் வந்த குறை அது.  அது பத்துப்பாட்டென்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டேன்.  படிக்கப் படிக்கச் சிந்தாமணி உரையில் வரும் மேற்கோள்கள் பல அகப்பட்டன" (என் சரித்திரம், பக்.559-600) என்கின்றார்.

இதேபோல், புறநானூறு கண்டுபிடித்த விதத்தை ஐயர் அவர்கள், "என்னிடமுள்ள எட்டுத் தொகைச் சுவடிகளையெல்லாம் ஏடு ஏடாக வரி வரியாக எழுத்தெழுத்தாக ஆராயலானேன்.  ஆதியும் அந்தமும் இல்லாத மற்றொரு நூலை எடுத்தேன்.  பிரித்துப் பார்த்தேன்.  "கொற்றுறைக் குற்றில" என்னும் பகுதி கண்ணிற்பட்டது.  உடனே வியப்புற்றேன்.  அதே தொடரை நச்சினார்க்கினியர் சிந்தாமணி உரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.  ஆனால் அவர் தம் வழக்கத்தை விடாமல், ...... நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்து முடிக்கும் வேளையில், வேலூரிலுள்ள வீரசைவராகிய குமாரசாமி ஐயரென்பவர் பத்துப் பாட்டுச் சுவடியைக் கொடுத்துள்ளார்.  இவர் இயற்றமிழாசிரியராகிய விசாகப் பெருமாளையருடைய மருகர்.  இவர் பழைய வித்துவான்களின் வீடுகளில் ஆதரவற்றுக் கிடக்கும் ஏட்டுச் சுவடிகளை இலவசமாகவாவது, சிறு பொருள் கொடுத்தாவது அவ்வீட்டுப் பெண்பாலார் முதலியவர்களிடம் வாங்கி விரும்பியர்களுக்கு கொடுத்து வரக்கூடியவர்.  ஐயரின் வேண்டுகோளுக்கிணங்க, இவர் பத்துப்பாட்டுச் சுவடியைக் கொடுத்து அதற்காக ஐப்பது ரூபாயைப் பெற்றுள்ளார்.

உ.வே. சாமிநாதையர், பத்துப்பாட்டு நச்சினார்க்கினியர் உரையுடன் 1889ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்திருக்கின்றார். இப்பதிப்பே பத்துப்பாட்டு முழுமையும் வெளிவந்த முதற் பதிப்பாகும்.

திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வேலூர் குமாரசாமி ஐயர், ஆறுமுகமங்கலம் குமாரசாமி பிள்ளை, திருநெல்வேலி  கவிராச நெல்லையப்பப் பிள்ளை, வண்ணாரப்பேட்டை திருப்பாற்கடனாத கவிராயர், ஆழ்வார் திருநகரி தேவர்பிரான் கவிராயர், பொள்ளாச்சி வித்துவான் சிவன் பிள்ளை, திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை, ம.வி. கனகசபைப் பிள்ளை, களக்காடு சாமிநாத தேசிகர் ஆகியோரின் சுவடிகளையும், தருமபுர ஆதீனப் புத்தகசாலை, சென்னை அரசாங்கக் கையெழுத்து நூல்நிலையம் ஆகிய இடங்களில் உள்ள சுவடிகளையும் அடிப்படையாகக் கொண்டு உ.வே.சா. இப்பதிப்பைப் பதிப்பித்திருக்கின்றார்.  இதனையடுத்து மேலும் சில திருத்தங்களுடன் உ.வே.சா. அவர்கள் 1918ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பைக் கொணர்ந்துள்ளார்.  இதன் மூன்றாம் பதிப்பு 1961ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  இம்மூன்றாம் பதிப்பை நிழற்படப் பதிப்பாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1986ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. 1931ஆம் ஆண்டு மூலம் மட்டும் கொண்ட பதிப்பை உ..வே. சாமிநாதையர் வெளியிட்டுள்ளார்.  

இவ்வாறு பல நூல்களை மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் அவர்கள் ஏட்டுச் சுவடியில் இருந்து தமிழுலகு நன்கு அறியும் பொருட்டு ஆய்வாளர்களுக்குப் பல வகையில் உதவும் வகையில் பலப்பல பதிப்பு உத்திகளை புதுமையாகக் கையாண்டு பதிப்பித்து இன்று தமிழ் செவ்வியல் தமிழாக ஏற்றம்பெற பெருந்துணை புரிந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக