ஐக்கூக்கவிதை - ஓர் ஆய்வு
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றியது எங்கள் தமிழ்க்குடி என்னும் பெருமைக்கு இலக்கணமாய் நிற்பது தமிழினம். ஓரினத்தின் வரலாறுகளே அறிவுள்ள சிலரின் முயற்சியால் பின்னால் இலக்கியங்களாகப் பரிணாமம் அடைந்திருக்கின்றன. இலக்கியங்களில் இருந்து இலக்கணங்கள் முகிழ்ந்து இருக்கின்றன. ஒவ்வொரு இலக்கியத்தினுள்ளும் உணர்ச்சி, கற்பனை, கருத்து, வடிவம், பாடுவோரின் பட்டறிவு போன்ற இன்னோரன்ன கூறுகள் ஒருங்கமைந்து இருக்கும். இந்த ஒருமைக் கூறுகள் பாடுவோரைப் பொருத்தும் பாடும் இடத்தைப் பொருத்தும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் வேறுபடுவதோடல்லாமல் ஒருவருக்குள்ளேயே வேறுபட்டும் அமைந்திருக்கும். எனவே, இலக்கியம் காலமாறுபாட்டிற்கு ஏற்ப மாறுபடும் இயல்பினைப் பெற்றதாகின்றது.
காலவௌ¢ளத்தால் திரண்டு புரண்டு வந்த இலக்கியங்கள் காலத்திற்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொண்டு வந்திருக்கின்றன. சங்க காலத்தில் அகவலும் வெண்பாவும் அரசோச்சியது. இடைக்காலத்தில் அகவலும் வெண்பாவும் இடம்பெயர்ந்து விரும்பிய விருத்தம் நிலைபெற்றது. தற்காலத்தில் இவையெல்லாம் மாறிப் பலப்பல இலக்கிய வகைகள் தோன்றலாயின. சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் தோன்றிய இலக்கியங்கள் கவிதை நடையாகவே இருந்துவந்துள்ளன. தற்காலத்தில் உரைநடையாகவும் இலக்கியங்கள் ஆக்கும் திறன் இலக்கியவாதிகளிடம் முகிழ்க்கத் தொடங்கிவிட்டன.
உரைநடை இலக்கியத்துள் நாவல், சிறுகதை, கட்டுரைகளும்; கவிதை இலக்கியத்துள் மரபுக்கவிதை, புதுக்கவிதைகளும் நிலைகொண்டுவிட்டன. இந்த முறையில் தற்பொழுது தமிழுக்கு புதியதாக அறிமுகமாகி இருக்கும் கவிதை வடிவம் தான் 'ஐக்கூ'. காலவோட்டத்தின் பின்னணியில் சிக்கிக்கொண்ட ஒவ்வொரு மொழியும் அதன் போக்கிற்கு மாறுபடாமல் இருந்ததில்லை. கால வளர்ச்சியோடு பின்னிப்பிணைந்து மொழியும் அம்மொழியின் இலக்கியமும் வளரலாயிற்று. சமுதாயம், சமுதாயத்தின் அமைப்பிலும், சூழ்நிலையிலும், மக்கள் பிற இனத்தவரிடம் ஏற்படுத்திக் கொள்ளும் வணிகத் தொடர்பிலும், வேற்றுமொழித் தொடர்பால் வளர்ந்த ஒவ்வொரு மொழியிலும், அம்மொழியின் இலக்கியங்களிலும் புதுப்புது வடிவங்களைப் பெறுவதும், முன்னரே பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இலக்கிய மரபுகளில் மாற்றங்களைக் காண்பதும் இயல்பாகிவிட்டது.
ஜப்பானிய ஐக்கூ
இந்தியாவில் தோன்றிய பௌத்தமதம் சீனாவில் வடவியீ (கி.பி.386-636) வமிச காலத்தில் பரவத் தொடங்கியது. பௌத்த மதம் சீனாவில் பரவிய பின் தான் சிற்பம், ஓவியம், கட்டிடம், இலக்கியம் போன்றவை வெகுவாக வளரத் தொடங்கின. சீனாவில் தோன்றிய அனைத்துக் கலைகளும் பின்னாளில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ஜப்பானிலும் செழித்தோங்கச் செய்தன. சீனக் கலைகளே ஜப்பானியக் கலைகளாயின. கலைகள் மட்டுமன்று சீனர்களின் வாழ்க்கை முறைகளும் பழக்க வழக்கங்களும் ஜப்பானியர்களின் பழக்க வழக்கங்களாகவும் வாழ்க்கை முறைகளாகவுமாயின.
ஜென்(பௌத்த) துறவிகள் சிறந்த கவிஞர்களாக, கலைஞர்களாக, ஓவியர்களாக, கட்டிடக்கலை தோட்டக்கலை வல்லுநர்களாகப் பயிற்சியும் அனுபவமும் பெற்று சீன, ஜப்பானியக் கலாச்சார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியிருக்கிறார்கள். ஜுடோ, கராத்தே, கெண்டோ, கத்திவீச்சு, வில்வித்தை இவற்றிற்கெல்லாம் ஜென் தான் அடிப்படை. தேநீர் அருந்தும் சடங்கும் சீனாவில் இருந்தே ஜப்பானுக்குப் பரவியது. மொழி அமைப்பிலும் ஜப்பானியர்கள் சீனாவையே பின்பற்றுகிறார்கள்.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஜப்பானியர்கள் தங்கள் மொழியைச் சீன லிபியிலேயே எழுதி வருகிறார்கள். சீன மொழிகளில் பெரும்பாலும் ஈரசைச் சொற்களே உள்ளன. இக்காலச் சீன மொழியில் கூட்டுச் சொற்கள் கையாளப்படுகின்றன. சீன அகராதிகள் வேறுபட்ட 40,000 சித்திர எழுத்துக்களை வெளியிட்டாலும் நடைமுறையில் 10,000 சித்திர எழுத்துக்கள் தெரிந்தாலே போதுமானதாக உள்ளது. தமிழ் மொழியில் பலபொருட்சொற்கள் இருப்பதைப்போல், உச்சரிப்பு முறையில் பொருள் வேறுபாட்டை உணர்த்துவது போல் சீன மொழியிலும் உள்ளது.
காமாக்கூராக் (கி.பி.1192-1332) காலத்தில் 'ஜென்' என்னும் பௌத்த மதம் ஜப்பானில் தலைமை வகித்தது. தியானத்திலேயே ஞானமும் முத்தியும் சித்திப்பதாக ஜென்மதம் போதித்தது. இது மக்களிடையே பரவி இரத்தத்தோடு இரத்தமாகக் கலந்து இலக்கியம், ஓவியம், சிற்பம் முதலிய எல்லாத் துறைகளிலும் ஜப்பானியப் பண்பாட்டை வளர்த்து வருவதாயிற்று. இந்தக் காலத்தில் தான் பண்டைய ஜப்பானிய மொழியானது சீன மொழியுடன் சேர்ந்து புதிய உருவம் பெற்றுத் தேசிய மொழியானது. இம்மொழியே இன்றும் ஜப்பானில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, கலையிலும் மொழியமைப்பிலும் சீனர்களை ஒட்டியே ஜப்பானியர்கள் வாழ்ந்து வந்தார்கள் எனலாம். அவ்வப்போது கருத்துவேறுபாடுகள் தத்துவத்துறையில் நிகழ்ந்தாலும் கலை, பண்பாடு, மொழியமைப்பில் வேறுபாடு கொள்ளாதிருந்தது அவர்களின் கலையுணர்வையும் மொழிப்பற்றையும் வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில் கி.பி.17ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றிய இலக்கிய வடிவமே ஐக்கூ. இவ்வடிவம் ஜென் பௌத்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஜென் பௌத்தம் பற்றி அறிந்து கொள்வதற்காக சீனா சென்ற ஜப்பானிய பௌத்த குருமார்கள், அளவில் சிறியதான சீனக் கதைகளை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். இதுதான் ஐக்கூவின் தொடக்கம்.
பதினேழு அசைகளைக் கொண்ட (5-7-5) ஐக்கூ ஒரு குறிப்பிட்ட மனநிலையைத் தோற்றுவிக்கிறது. வாசகன் அல்லது கேட்பவனின் கற்பனையைத் தூண்டிவிடுகிறது. நல்ல ஓவியம் ஏற்படுத்துகிற பாதிப்பு இந்தக் கவிதை வடிவில் சாத்தியமாகிறது. கவிஞன் விட்ட இடத்தில் வாசகன் தொடர வழிசெய்கிறது. இலக்கணப்படி அமையும் வாக்கியத்திற்குத் தேவையான எல்லாச் சொற்களும் ஐக்கூவில் இருக்காது. இருக்க வேண்டுமென்பதில்லை. சொற்சிக்கனம் அதனுடைய சிறப்பியல்பு என்று 'ஜென் கதைகள் கவிதைகள்' (ப.38) என்னும் நூலில் குறிப்பிடப்பெற்றுள்ளது.
ஐக்கூவில் குறியீடு இல்லை; படிமம், அணி, அலங்காரம் இல்லை. ஒரு குறிப்பிட்ட மனநிலையைத் தோற்றுவிக்கக் கவிஞன் ஒரு செய்தியைச் சொல்வான். அதோடு கவிஞனின் வேலை முடிந்துவிடும். அதன்பிறகு அதிலுள்ள கருத்தாழப் பொருள்களை வாசகனோ கேட்போனோ தோண்டி இறைத்துக்கொள்ள வேண்டும். இவ்வகைப்பட்ட ஐக்கூக் கவிதைகள் 17ஆம் நூற்றாண்டு முதல் ஜப்பானில் வளம் சிறந்த இலக்கிய வடிவமாகத் திகழ்ந்து வருகின்றது.
இத்தகைய மாற்றங்கள் தமிழ் இலக்கியத்திலும் ஏற்பட்டிருக்கின்றது என்பதைத் தமிழ் இலக்கிய வரலாற்றைக் காணுகின்றபோது தெரிகின்றது, காலந்தோறும் தமிழிலக்கியம் தம் வடிவங்களையும், உள்ளடக்கங்களையும் மாற்றிக்கொண்டு வாழ்ந்து வளர்ந்து வருவதைக் காணமுடிகிறது. சமணமும் பௌத்தமும் பிற சமயங்களுடன் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது தங்களின் புராண-இதிகாச செய்திகளையும், தத்துவக் கருத்துகளையும் பரிமாற்றம் செய்திருக்கின்றன.
இவ்வாறே தமிழ் இலக்கியத்தில் சமணர்களின் வருகையாலும் பௌத்தர்களின் வருகையாலும் பல துறைகளில் பலப்பல புதிய மாற்றங்கள் உண்டாயின. அவ்வத்துறைகளுக்கான வடிவங்களையும் உள்ளடக்கக் கருத்துக்களையும் வளர்த்துக்கொள்ள வழிவகுத்தன. கி.பி.19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தமிழ் இலக்கியங்கள் செய்யுள் வடிவாகவே செய்யும் முயற்சி இருந்தது. இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் வருகை தந்த ஐரோப்பியர்களின் மூலமாகத்தான் தமிழ் இலக்கியத்தில் பல புதிய வடிவங்களும் வகைகளும் தோன்றலாயின. இதற்கெல்லாம் காரணம், அவர்கள் அறிமுகப்படுத்திய அச்சுப்பொறியும், மேலை இலக்கிய மோகமுமேயாகும்.
இதனை மனதில் நிறுத்தியே, தமிழர்களின் மனங்களை ஒன்றுகூட்டி இலக்கணமாக வகுத்த தொல்காப்பியர், காலத்திற்கு ஏற்ப புதுப்புது கலை வடிவங்கள் வந்திணையும் என்பதை, "விருந்தேதானும், புதுவது புனைந்த யாப்பின் மேற்றே" என்கின்றார். இதற்கு உரை கூற வந்த இளம்பூரணர், "விருந்தாவது முன்புள்ளோர் சொன்ன நெறிபோய்ப் புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது என்றவாறு" என்கின்றார். இவ்வழியில் இன்றைய காலத்தில் தமிழ் இலக்கிய வகைக்குப் புதிய வடிவமாக 'ஐக்கூ' என்னும் ஜப்பானியக் கவிதை புகுந்து இருக்கின்றது.
'ஐக்கூ' ஒரு வரையறை
ஐக்கூ 'பொருளாழம் மிக்கது' என்னும் பொருள் கொண்டது. மூன்றடிகளே இதன் கவிதை எல்லை. மூன்றடிக்குள்ளே பதினேழு அசைகள் கொண்டிருக்கும். முதல் அடியில் ஐந்து அசையும் இரண்டாமடியில் ஏழு அசையும் மூன்றாமடியில் ஐந்து அசையும் என அமைந்திருக்கும்.
ஐக்கூவின் இயல்புகள்
இக்கவிதை வகைக்கு மூன்றடிகளே வரையறுக்கப்பட்டுள்ளன. இதைத் திரிவிக்கிரமன் மாதிரி 'ஐக்கூ'வுக்கும் மூன்றடிதான். இந்த மூன்றடிக் கவிதைக்குள்ளும் இரண்டு கூறுகள் இருக்கின்றன. முதல் இரண்டு அடிகள் ஒர் கூறாகவும், ஈற்றடி ஓர் கூறாகவும் இருக்கும். ஈற்றடியில்தான் அழகும் ஆற்றலும் இருக்கின்றன. அது ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வை, அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிப்படுத்தும் என்கிறார் அப்துல்ரகுமான்(சின்னதாக இருக்கும் பெரிய அற்புதம்-புள்ளிப்பூக்கள், ப.8). மேலும் அவர், "ஒரு காட்சியைக் காட்டுவதோடு 'ஐக்கூ'வின் வேலை முடிந்துவிடும். அதன் பின்னர், அதிலுள்ள அர்த்தங்களைத் தோண்டி இறைத்துக்கொள்வது வாசகன் பொறுப்பு. இந்த வகையில், வாசகனும் கவிதையில் ஒரு கூட்டுப்படைப்பாளி" என்கிறார்.
"வாசகனைக் கவிதை எழுதச் சொல்லித் தரப்படுகிற தலைப்புத்தான் ஐக்கூ" என்ற கருத்தை நோக்கும் போது, ஒரு காட்சியின் மூலம் விளக்கம் பெறச் செய்வதே ஐக்கூ. ஒவ்வொரு ஐக்கூவிலும் வேனில், இலையுதிர் முதலிய பருவ காலங்களில் ஏதாவதொன்றைப் பற்றிய செய்தி இடம்பெறும். பருவ காலங்களின் பெயர்கள் நேரடியாக இடம்பெறவில்லை என்றால், அவற்றை மறைவாகவாவது சுட்டும் குறிப்பைக் கொண்டதாகவே ஐக்கூ அமையும்.
"இயற்கைப் படிமங்கள் கருத்துக்களின் பதுக்கல் அறைகளாக இருக்கும். இலக்கிய மரபையும், பௌத்தம், தாவோயிஸம், ஜப்பானுக்கே உரிய ஆன்மவாதம் ஆகியவற்றின் விளைவான கலப்புக் கலாச்சாரத்தையும் இயற்கைப் படிமங்கள் தமது குறியீட்டுச் சக்திக்கு அடிப்படைகளாகக் கொண்டுள்ளன" என்பார் தமிழன்பன் (சூரியப் பிறைகள், ப.8).
தாவோயிஸம் உலக ஆசைகளைக் கைவிட்டால் நீண்டநாள் நிலைத்து வாழலாம் எனவும், பௌத்தமோ ஆசைகளைக் கைவிட்டால் உன்னதமான ஞானநிலையையும் விழிப்புணர்வையும் பெறலாம் எனவும் கூறுகின்றன. ஒரு மனமும் இன்னொரு மனமும் தொடர்புகொள்ள வார்த்தைகள், எழுத்துகள் அவசியமில்லை. கருத்துப் பரிமாற்றம் சைகைகள் மூலமும் குறிப்புணர்த்துவதன் மூலமும் நிகழ இயலும். இதனைக் கௌதம புத்தர், தாம் உணர்த்த விரும்பும் கருத்துகளை உபதேசஞ் செய்யாமல் சைகைகளின் மூலமாகவும் குறிப்புணர்த்துவதன் மூலமாகவும் உணரச் செய்துவந்தார்.
அதனடிப்படையில் ஐக்கூக் கவிதையானது, "உணர்ச்சிகளைத் தூண்டி ஒரு காட்சியில் திடீரென்று திரைவிலகித் தெரியும் சத்தியத்தின் சௌந்தரியத்தைத் தரிசித்து பிரமிக்கும் குறியீட்டுப் பார்வையை நாம் விட்டுவிடக்கூடாது. ஏனென்றால், இங்கேதான் 'ஐக்கூ'வின் உயிர்நாடி இருக்கிறது" என்பார் அப்துல்ரகுமான் (புள்ளியின் நுனியில் பனித்துளி).
ஜப்பானியப் புலவர்கள் கூறும் மூன்று கருத்துகள் 'ஐக்கூ'வின் இயல்பை வெளிப்படுத்துகின்றன. முதலாவது, கவிஞன் எண்ணத்தை நேராக வெளியிட வேண்டும்; இரண்டாவது வீண் சேர்க்கையாக கவிதைகளின் சொற்கள் இருக்கக் கூடாது; மூன்றாவது எதுகை, சந்தம் கருதி கவிதையின் பொருளம்சத்திற்குப் புறம்பான சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்னும் இம்மூன்று இயல்புகள், கவிஞனின் எண்ண உணர்ச்சியோடு தொடர்புடையன. கவிஞனின் எண்ண உணர்ச்சியோடு வெளிப்படும் கவிதை, நுகர்வோனின் எண்ண உணர்ச்சியைத் தூண்டி அதிலிருந்து பலப்பல விளக்கங்களைப் பெறுவதே இதன் சிறப்பியல்பு. 'ஐக்கூ'ப் பாட்டைப் படித்துவிட்டுத் திரும்பத் திரும்ப மனனம் செய்ய வேண்டும். படிப்பவனுடைய அனுபவத்திற்குத் தக்கபடி அதிலிருந்து நூறு வகையான மறைபொருள் தோன்றும்.
ஐக்கூவின் கூறுகள்
'தன்கா' என்னும் குறும்பாட்டிலிருந்து மேலும் குறுகியும், இறுகியும் வாமனப்பட்ட வடிவம்தான் ஐக்கூ. ஐக்கூக் கவிதை வடிவம் முன்னோடியாக பல வடிவங்களில் இருந்து திரிந்து பிரிந்து வந்துள்ளமை புலப்படுகிறது. அதாவது, ஐந்து அசை முதலடியும் ஏழசை அடுத்த அடியுமாக, முறைப்படி அமைந்த ஐந்து ஏழு அசைச் செய்யுட்களைக் கொண்டது 'வாகா' (Waka) கவிதை வடிவம். இக்கவிதை வடிவம் இரண்டு கூறுகளைக் கொண்டது. ஒன்று, 'தன்கா' (Tanka). இது குறுகிய அடியளவைக்கொண்டது. முதலடியில் ஐந்து அசையும், அதைத் தொடர்ந்த அடி ஏழு அசையும் அதையும் தொடர்ந்து ஐந்து, ஏழு, ஏழு (5, 7, 5, 7, 7) என ஐந்து அடிகளால் அமைவது. இரண்டாவது, 'சோக்கா' (Choka). இது நெடிய அடியளவைக் கொண்டது. முதலடியில் ஐந்து அசையும் அதைத்தொடர்ந்த அடியில் ஏழு அசையுமாகக் கொண்டு அமையும். இவ்விதம் இரண்டிரண்டடிகளாகத் தொடர்ந்து வரும். இறுதியில் இரண்டு அடிகளும் ஏழு அசைகளாக (5, 7, 5, 7, 5, 7, . . . . . . .7, 7) என அமைவது.
தன்கா வகைக் கவிதைக்குள் தொடக்கப்பகுதி எனவும் முடிவுப்பகுதி எனவும் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. முதல் மூன்று அடிகள் (5, 7, 5) தொடக்கப்பகுதி எனவும், இறுதி இரண்டு அடிகள் (7, 7) முடிவுப்பகுதி எனவும் கொண்டு இருபொருள்பட கவிதை அமைந்து பொருளமைதி பெற்றுள்ளன. தன்கா கவிதையின் தொடக்கப் பகுதியை (5, 7, 5)மட்டும் தனியாகப் பிரித்து, பிரிதொருவகைக் கவிதை வடிவமாக உருவாக்கினர். இக்கவிதை வடிவத்திற்குத் 'தொடங்கும் பகுதி' என்பொருள் கொண்ட 'ªஉறாக்கு' (Hokku) எனப் பெயரிட்டனர்.
'வேடிக்கைச் சார்பினது' என்னும் பொருள்கொண்ட '¬உறகை' (Haikai), 'ªஉறாக்கு' (Hokku)வின் அடியளவையையும் அசையமைப்புகளையும் (5, 7, 5) அடிப்படையாகக் கொண்டு உருவானது. 'ªஉறாக்கு'வின் இலக்கண மரபுகள் '¬உறகை'யின் இலக்கண மரபாக மாற்றம் பெற்றன. ªஉறாக்கு மற்றும் ¬உறகை என்னும் பா வடிவங்களில் அமைந்த மேலோங்கிய நகைவிளைக்கும் வேடிக்கைக் கூறு மாறிப் பொருளாழம் சிறந்து, பல்பொருள் உணர்த்துவதாக '¬உறகூ' (Haiku) என்னும் பா வடிவம் திரிபாக்கம் பெற்றது. பொருளாழம் மிக்கது என்னும் பொருள்பட அமைந்த '¬உறகூ' (Haiku) தமிழில் மொழிபெயர்க்கும் போது அவர்வர்களின் வசதிக்கேற்ப '¬உறக்கு', '¬உறக்கூ', 'ஐக்கூ', 'ஐகூ', 'ஐக்கு' எனப் பலவாறாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இக்கவிதை வகைக்கு மூன்றடிகளே வரையறுக்கப்பட்டுள்ளது. அடிவரையறையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஓரடி சிற்றெல்லையாக இருக்கின்றதைக் காண்கிறோம். இதை,
"ஓரடி யானும் பலவடி யானும்
ஓரோவழி இயலும் உரைத்தவச் செய்யுள்"
என இலக்கண விளக்கம் பதினேழாம் நூற்பாவும், சுவாமிநாதம் அகவற்பாவின் சிற்றெல்லையை மூன்றடியில் இருந்து ஓரடியாகவும் குறைத்திருக்கின்றதைக் காணலாம். மேலும், சங்க அகப்பாடல்களின் தனித் தன்மையினை ஐக்கூக் கவிதை பெற்றிருக்கின்றது எனலாம்.
". . . . . . . அகணைந் திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்"
என்னும் தொல்காப்பியரின் கூற்றுப்படி ஐக்கூக் கவிதைகளும் அமைந்திருக்கின்றன.
வடிவக் குறுக்கத்தில் பொருட்பெருக்கத்தைக் காட்டும் போக்கு தமிழ் இலக்கியத்தில் தொன்று தொடே இருந்து வந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே சிலர் ஐங்குறுநூற்றுப் பாடல்களும், திருக்குறளும், ஆத்திசூடியும், கொன்றைவேந்தனும் ஐக்கூக் கவிதைகளே என்கின்றனர்.
ஐக்கூவின் உள்ளடக்கமே அதன் தனிச்சிறப்பிற்குக் காரணம். அதாவது, மகாயான பௌத்தத்தின் உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஜென். அது சீனாவில் தோன்றி, ஜப்பானுக்குப் பரவி, ஜப்பானிய கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்த ஒன்றாகும். அங்குப் பல்வேறு துறைகளில் ஜென் தன் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஜென் மதத் தத்துவத்தினால் ஜப்பானிய இலக்கியங்களிலும் அதன் பாதிப்பைக் காணமுடிகிறது. ஜென் புத்த மதத் தத்துவப் பார்வையே ஐக்கூவின் அடிப்படைப் பண்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்கிறது.
இந்த உலகத்தின் ஒவ்வொரு படைப்பும் எல்லையற்ற வாழ்க்கை மாக்கடலில் எழுந்து மறையும் அலைகள்; மூல சத்தியத்தின் முகச்சாயல் காட்டும் வெளிப்பாடுகள். சிகரம் உயர்த்திய மலையோ, சின்னஞ்சிறு பூவோ எதுவாயினும் அகண்டத்தின் அங்கங்கள்; ஒரே வயிற்றின் உடன்பிறப்புகள். இந்த ஜென் தத்துவப் பார்வையில் ஜப்பானியர்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். அதனால் ஓர் எளிய காட்சி, ஒரு சாதாரண நிகழ்ச்சி கூட குறியீடாகிவிடுகிறது. குறியீடுகளே ஐக்கூக் கவிதையாக உருவெடுக்கிறது எனலாம்.
மேலை நாடுகளில் ஐக்கூ
ஜப்பானிய இலக்கிய உலகில் வரலாறு படைத்த ஐக்கூக் கவிதையானது பதினைந்தாம் நூற்றாண்டில் அரும்பி, பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மலர்ந்து, மணந்து உலகத்தின் கவனத்தைத் தன்பால் ஈர்த்தது. பிற்கால நிலமானிய சமூகப் பின்னணியில் (கி.பி.1630-1867) ஐக்கூ வளர்ந்த முறைக்கும், அயல்நாட்டுக் கலாச்சாரம், அறிவியல் தொழில் நுட்பம் ஆகியவை வௌ¢ளமாக ஜப்பானில் புகுந்துவிட்ட (1868-1901) காலப் பகுதியில் அது பெற்ற பரிமாணங்களுக்கும், இன்றுவரை அடைந்துள்ள மாறுதல்களுக்குமிடையே வேறுபாடுகள் உண்டு என்பார் தமிழன்பன்.
மோரிடாகே (Moritake 1473 - 1549), சோகன் (Sokan 1465 - 1553) என்பவர்கள் தான் ஐக்கூவின் முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள். பாஷோ (Basho 1644 - 1694)தான் மிகப் பெரிய ஐக்கூக் கவிஞராகத் திகழ்ந்தார். ஐக்கூவிற்குப் பூரண வடிவம் கொடுத்து இலக்கியத் தகுதியை ஏற்படுத்தியதும் புனைவியலின் கற்பனா வாதத்திலிருந்து அன்றாட வாழ்வின் யதார்த்த நிலைக்கு ஐக்கூவைக் கொண்டு வந்ததும் ஐக்கூவிற்கு ஜென்னின் ஆழத்தை ஏற்படுத்தியதும் பாஷோ தான். பாஷோவிற்குப் பிறகு ஐக்கூவிற்கு மேன்மையையும் புலனுணர்வையும் எண்ணத்தையும் தந்த பூசன் (Buson 1716 - 1784), ஐக்கூவை சாமான்யர்களின் கையில் கொண்டுவந்து கொடுத்த இஸ்ஸா (Issa 1763 - 1823) ஐக்கூவில் இயற்கையான, உண்மையான சித்திரங்களையே வரையவேண்டும் என்ற ஷிகி (Shiki 1867 - 1902) மற்றும் கோஷி(Kyoshi 1874 - 1959) ஆகியோர் ஐக்கூக் கவிதையின் பரிணாம வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தோராவர்.
காட்சியால் ஒன்றுபட்டவர்கள், கருத்தால் வேறுபட்ட பாஷோ மற்றும் பூசனின் ஐக்கூக் கவிதை அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
"harusame ya
dosta no kimi no
Samamegoto"
என்னும் பாஷோவின் கவிதையை,
"Ah, the rains of spring
Dear lady driwing with me here,
your whispering!"
என்றும்,
"harusame ya
kawazu no hara no
moda murexu"
என்னும் பூசவின் கவிதையை,
"Spring rain! And as yet
The little froglets 'bellies
Haven't got wet!"
என்றும்,
"Katatsumuri
Saro Sora nobore
Fuji no yama"
என்னும் இஸ்ஸாவின் கவிதையை,
"Snail, my little man,
slowly-oh, very slowly-
climb up Fujison!"
என்றும்,
"Kumo no mine
schircho Minami ni
Muragateri"
என்னும் ஷிகியின் கவிதையை,
"Mountain-peaks of cloud;
white sails, in the South
corwded together"
என்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்றனர்.
கி.பி. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஜப்பானிய ஐக்கூக் கவிதை வடிவமும் அதன் செறிவும் உள்ளடக்கமும் ஃபிரான்சில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவ்வடிவத் தாக்கத்தின் காரணமாக 1910இல் மார்சல் ரெவான் என்பவர் ஜப்பானியக் கவிதைத் தொகுதி ஒன்றை (Anthologie de la Litterature Japanise - Marcel Revon's) பிரென்ஞ்சு மொழியில் வெளியிட்டார். இக்கவிதைத் தொகுதி பிரென்ஞ்சு நாட்டில் பெரும் பரபரப்புடன் வரவேற்கப்பட்டது. அதன்பின் 1920இல் பன்னிரண்டு கவிஞர்களின் பிரென்ஞ்சு ஐக்கூக் கவிதைகளைத் தொகுத்து (Nouvelle Rewe Francaise Published) வெளியிடப்பட்டன.
நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய் ஜப்பானிய ஐக்கூக் கவிதைகள் பிரென்ஞ்சு நாட்டில் நிலைகொள்ள ஆரம்பித்தன. இதன் விளைவாக ஐக்கூக் கவிதையைப் பற்றிப் பலர் சிந்திக்கவும் அச்சிந்தனையின் அடியூற்றாகப் பல போட்டிகள் நடத்தவும் செய்தனர். 1924இல் ஐக்கூக் கவிதைக்காகப் போட்டிகள் நடத்தப்பெற்றிருக்கின்றன. மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் செய்யப்படும் எதுவும் நிலைத்து நீண்டநாள் வாழ்ந்ததில்லை. பிரென்ஞ்சு நாட்டின் தத்துவக் கூறுகளுள் புகுந்து பதினைந்து ஆண்டுகளாய் ஆட்சிபுரிந்து வந்த ஐக்கூக்கவிதை 1925இல் வடிவதற்கு ஆரம்பித்துவிட்டது. ஐக்கூவின் அலை பிரென்ஞ்சு மொழியில் ஓய்ந்துவிட்டாலும் அதன் செறிவும் திட்டவட்டமான வடிவமும் அறிவுரை வற்புறுத்தப்படாமை முதலிய பண்களும் பிரென்ஞ்சுக் கவிதை உலகம் தன்னகத்தே ஏற்றுக் கொண்டிருக்கின்றது.
ஜப்பானிய ஐக்கூக் கவிதைகள் பிரென்ஞ்சு நாட்டில் வரவேற்புப் பெற்ற அதே காலகட்டத்தில் ஆங்கில, அமெரிக்க படிமவியல் வாதிகளின் கவனத்தையும் இக்கவிதை வடிவம் கவர்ந்தது. தொடக்க காலத்தில் டி.,இ. உற்யூம் (T.E. Hulme), எப்.எஸ். ஃபிலிண்ட் (F.S. Flint), அமிலாவல் (Amy Lowell)இ ஜான் கோல்ட் ஃலக்சர் (John Gould Fletcher) மற்றும் ஜேம்ஸ் கிர்குப் (James Kirkup) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் ஐக்கூவை முன்மாதிரியாகக் கொண்டு நகல் கவிதைகளை எழுதலாயினர். இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு இவர்களைத் தொடர்ந்து இவர்களுடைய நெருங்கிய நண்பரும் புகழ்பெற்ற மறுமலர்ச்சிக் கவிஞருமான எஸ்ராபவுண்ட் என்பவர் ஐக்கூவைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். ஏறத்தாழ இவரின் சிந்தனை 1912இல் ஐக்கூவின் பக்கம் திரும்பியது. ஐக்கூவின் பாதிப்பால் எஸ்ராபவுணட் எழுதிய முதல் கவிதை The Fortnighty என்னும் இதழில் 1914ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்தது. இதன் தலைப்பு In a station at the Metro.
இந்தக் கவிதை, படைப்பு உருவாக்கத்தில் ஒரு புதிய வழித்தடத்தை அறிமுகம் செய்துள்ளது என்பர். கவிதையின் படிமம் பற்றிய கோட்பாடுகளை உருவாக்கவும், பவுண்டின் சொந்தக் கவிதைகளில் பயன்படுத்தத் தேவையான உத்திகளை உருவாக்கவும் ஜப்பானிய ஐக்கூக் கவிதை பெரிதும் உதவியிருக்கிறது. ஜேம்ஸ் கிர்குப்பின் கவிதைகள் சிறப்பாகப் பேசப்படுகிறது. இங்கிலாந்து கடலைப் பற்றி அவர் பாடிய நான்கு கவிதைகள் சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது.
"In the amber dusk
Each island dreams its own night
The sea swarms with gold"
என்பது அவரின் கவிதைகளில் ஒன்று. ஆங்கிலக் கவிதை உலகில் பல புதிய மாறுதல்களை இந்தக் கவிதை ஏற்படுத்தியிருக்கிறது. எந்தவொன்றும், ஒன்றுடன் சேரும் போதோ ஏற்றுக்கொள்ளும் போதோ ஏற்பவை மாற்றம் பெறுவது இயல்பு. இதை ஆங்கில, அமெரிக்கக் கவிதை உலகிலும் காணலாம். இம்மாற்றங்கள் புதிய தத்துவக் கருத்துகளுக்கு வழி வகுக்கின்றன.
தமிழில் ஐக்கூ
தமிழ்க் கவிதை உலகில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவரின் இலக்கிய ஆர்வம் தமிழுக்குப் பல இலக்கிய வடிவங்களைத் தேடித் தந்திருக்கின்றன. அவரின் முயற்சியின் விளைவே வசன கவிதை என்னும் புதுக்கவிதை. ஐக்கூவைப் பற்றிய சிந்தனையையும் முதன் முதலில் அறிமுகம் செய்தவரும் பாரதியார் தான். 1916ஆம் ஆண்டு உயோநே நோகுச்சி என்னும் ஜப்பானியக் கவிஞர் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு சுதேசமித்திரன் இதழில் அதே ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் நாளில் ஐக்கூக் கவிதையைப் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் ஐக்கூக் கவிதை பற்றிய அவரது கருத்துகளையும் எண்ணங்களையும் காணமுடிகிறது.
"சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்" ஜப்பானியக் கவிதையின் சிறப்புத் தன்மை என்று நோக்குச்சிப் புலவர் சொல்வதாக பாரதியார் குறிப்பிட்டதுடன் ஐக்கூப் பாட்டைப் படித்துவிட்டுத் திரும்பத் திரும்ப மனனம் செய்யவேண்டும்; படிப்பவனுடைய அனுபவத்திற்குத் தக்கபடி அதிலிருந்து நூறு வகையான மறைபொருள் தோன்றும் என்கிறார். சில கவிதைகளை மொழிபெயர்த்தும் தந்துள்ளார். பூஸோன் யோஸாவேறா என்ற ஜப்பானியக் கவிராயரின் கவிதையையும், ªஉறாகூஷி என்ற ஜப்பானியக் கவிராயரின் கவிதையையும் முறையே,
"பருவ மழையின் புழையொலி கேட்பீர்
இங்கென்
கிழச் செவிகளே" (சுதேசமித்திரன், 18.10.1916)
என்றும்,
"தீப்பட்டெறிந்தது;
வீழு மலரின்
அமைதியென்னே" (சுதேசமித்திரன், 18.10.1916)
என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது.
மேலும், பாரதியாரின் ஐக்கூ மோகத்தைப் பாரதிதாசன், பாரதிக்கும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றி 1960இல் எழுதி கட்டுரை ஒன்றில்,
"மயங்கினேன் முயங்கிலாள், ப்ரீசு
வாய்ந்து - எழில் மறந்திலேன் காவின்
தயங்குபுறவு, தன்பெடை மருவலின்
தளிர்ந்து உயிர், திரும்பிட ஆங்கு
முடிந்த வாழ்வு, இதழ் உணவின் மீண்டது;
முயங்கிலை; முயங்கினை ஏன்? - என
முயக்க நிலவுக்கு எனப்பினும் முயங்கினாள்" (காற்றின் கைகள், ப.12)
என்று குறிப்பிட்டதுமல்லாமல், பாரதியார் மொழிபெயர்த்த 'வெர்«உறரன்' கவிதையை எடுத்துக்காட்டி இருப்பதையும் காணமுடிகிறது. இப்படியாக பாரதியாரும் பாரதிதாசனும் ஐக்கூக் கவிதைகளைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சில கவிதைகளை மொழிபெயர்த்து முன்மாதிரியாகவும் காட்டித் தத்தம் இலக்கியப் பணியைச் செம்மையாகச் செய்து முடித்திருக்கின்றனர்.
அதன்பின் நீண்ட நெடுங்காலமாக தூங்கிவிட்டு இருந்த ஐக்கூ இலக்கிய வடிவம் சிலரின் முயற்சியால் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு மறுபிறவி எடுத்து வந்துள்ளதெனலாம். இந்தக் காலகட்டத்தில் அப்துல்ரகுமான், சி. மணி, தமிழ்நாடன் போன்ற தமிழ்க்கவிஞர்கள் ஜப்பானிய ஐக்கூக் கவிதைகளை மொழிபெயர்க்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
'நடை' என்னும் காலாண்டு இதழில் சி. மணியின் சில ஜப்பானிய மொழிபெயர்ப்புக் கவிதைகளையும், 'தீபம்' என்னும் திங்களிதழில் தமிழ்நாடன் மொழிபெயர்த்துள்ள சில மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் காணமுடிகிறது. 'நடை' முதலிதழிலேயே (அக்டோபர் 1968) சி. மணி என்னும் செல்வத்தின் பத்து ஜப்பானியக் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணமாக,
"திருடன் விட்டுச் சென்றது
இதுவே
பலகனி நிலவு"
போன்ற அருமையான கவிதைகளைத் தந்திருக்கின்றார். தமிழைப் பொருத்த வரையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளே முதலில் தொடங்கின. அப்துல்ரகுமான், நீலமணி, வைத்தியலிங்கம், கலாப்பிரியா, வைத்தீஸ்வரன், கல்யாண்ஜி போன்ற கவிஞர்கள் ஐக்கூ பாணியில் அமைந்த கவிதை வடிவங்களைக் கையாண்டுள்ளனர். படிம, குறியீட்டு கவிதைகளும், ஜப்பானிய ஐக்கூக் கவிதைகளும் 'எழுத்து'க் கவிஞர்களின் மனத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இம்மாற்றத்தினால் தமிழ் இலக்கிய வடிவம் பாதிப்பையும் மாற்றத்தையும் கண்டன. இதுவரை மொழிபெயர்ப்புக் கவிதைகளின் மூலம் வளர்ந்து வந்த ஐக்கூக் கவிதையானது இந்தக் காலகட்டக் கவிஞர்களால் தமிழ் ஐக்கூக் கவிதைகள் தோன்றலாயின.
"Her feet beneath her petticoat
Like little mice, stole in and out"
என்ற Sukkling இன் கவிதையை வைத்தீஸ்வரன் மொழிபெயர்க்கும் போது,
"கிளைக்குத் திரும்பும்
விழுந்த சருகா
பட்டுப்பூச்சி" (வைத்தீஸ்வரன், நடை இதழ்)
என்ற வடிவம் பெற்றிருப்பதைக் காணலாம். ஒன்றன் தாக்கத்தால் ஏற்படும் ஒருமுக சிந்தனை பல அரிய செயற்பாடுகளையும் அதன் மூலம் பல வெளிப்பாடுகளையும் ஏற்படுத்தும். ஒரு கவிஞன் மனத்தில், ஒன்றைப் பற்றிய சிந்தனையே முழுதாக நிலைகொண்டிருக்கும் போது அதைப் பற்றிய பல புதிய சிந்தனைகள் தோன்றுவது இயல்பு. Sukklingஇன் கவிதையை மொழிபெயர்த்த வைத்தீஸ்வரன் அவர்கள் தன்மனத்தை அதிலேயே ஆழப்பதித்துத் தமிழ் ஐக்கூவை உருவாக்கியுள்ளார். அக்கவிதை,
"கொடியில் மலரும் பட்டுப்பூச்சி
கைப்பிடி நழுவிக்
காற்றில் பறக்கும் மலராச்சு" (வைத்தீஸ்வரன், உதயநிழல்)
என்பதாகும். புதுக்கவிதைத் தொகுப்புக்களிலும் ஐக்கூக் கவிதைகள் ஆங்காங்கு காணப்படுகின்றன. 'சிந்தர்' என்னும் தலைப்பில் அப்துல்ரகுமானும், பதி, பாலகுமாரன், அமுதபாரதி போன்றோர்களும் தங்களின் புதுக்கவிதை வடிவத்திலே ஐக்கூவின் உள்ளடக்கக் கவிதையை வெளியிட்டுள்ளனர்.
"இளவேனில் இரவு
நட்சத்திர முள்ளில்
விரக நிலவு" (அப்துல்ரகுமான், பால்வீதி)
எனும் கவிதையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
மொழிபெயர்க்கும் முயற்சியில் இருந்து 1980க்குப் பிறகே தமிழில் ஐக்கூக் கவிதைகள் தோன்றலாயின. இந்த ஆரம்பக் காலகட்டத்தில் ஐக்கூவின் இலக்கண வரம்புகளை மீறி, மூன்றடிகளுக்கு உட்பட்டதும் முதல் இரண்டு அடிகள் ஒரு கூறாகவும் ஈற்றடி பிறிதொரு கூறாகவும் கொண்டு பொருளமைதியோடு எழுதியிருக்கின்றனர். இந்த நிலையில் முழுமூச்சோடு ஈடுபட்டவர்கள் அமுதபாரதி, அறிவுமதி, கழனியூரன், தமிழன்பன், சாந்தானந்தன், கோவைமணி, மேத்தாதாசன், புதுவை சீனு. தமிழ்மணி, செருவென்றான், வாவேந்தரன்பன், தாமரைக்கோ, பாரதிவசந்தன், கோ. செந்தமிழன், எஸ். அறிவுமணி, சூலூர் நா. தமிழ்நெஞ்சன், புதுவை தமிழ்நெஞ்சன், திறவோன், தரங்கை பன்னீர்செல்வம், தோழன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
"நிழல் தந்த இலை
சருகு ஆகியும்
எரு" (சீனு. தமிழ்மணி, கரந்தடி, இதழ் 4)
"முகவரி மாறிய மடலில்
எத்தனை யெத்தனை
முத்திரைகள்" (அமுதபாரதி, புள்ளிப்பூக்கள், ப.37)
"அலைகள் ஓய்வதில்லை
உப்புள்ள நீர். . . .
அரசியல் தொண்டர்கள்" (கோவைமணி, கவிதாமண்டலம், செப்.88)
எனும் கவிதைகளில் இலக்கண அமைப்பு இல்லை என்றாலும் பொருளமைதி உள்ளதைக் காணமுடிகிறது. ஐக்கூவின் மரபுத் தன்மையான 5-7-5 அசை அமைப்பினைக் கொண்ட கவிதைகளை டாக்டர் கு. மோகனராசு அவர்கள் முதன் முதலில் எழுதி இருக்கிறார். அவரின் கவிதைகள் 'ஒன்றே உலகம்' என்னும் திங்களிதழில் இடம்பெற்றுள்ளன. அவரைத் தொடர்ந்து இலக்கண வரம்போடு கூடிய கவிதைகளைக் கவிஞர் அமுதபாரதி(காற்றின் கைகள்)யும், மோ.கோ. கோவைமணி(ஐக்கூ ஐநூறு)யும் எழுதியிருக்கின்றனர்.
"இளங்காலைப் பொழுது
மேனி இருட்டையா கழுவும்
நீர் குளிக்கும் காக்கை" (அமுதபாரதி, காற்றின் கைகள், ப.33)
"குடிக்கத் தயாரான
பாலில் வந்து விழுந்ததே ஈ!
திருமணத்தில் ஜாதகம்" (கோவைமணி, ஐக்கூ ஐநூறு, ப.22)
போன்ற கவிதைகளைக் குறிப்பிடலாம்.
இதுநாள் வரை (கி.பி.2000) நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும், இதழ்களின் வாயிலாக 3000க்கும் மேற்பட்ட ஐக்கூக் கவிதைகளையும் பலரும் வெளியிட்டுள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கும் போதும், படிக்கும் போதும் ஐக்கூவின் வடிவமைப்பு சிதறி பொருளமைப்பே வெளிப்படுதலைக் காணமுடிகிறது. மேலும், இவற்றினுள் வியப்புச் சொற்களும் குறியீடுகளும் வினா-விடைச் சொற்களும் இடம் பெற்றுள்ளமையும் காணமுடிகிறது. இன்றைய ஐக்கூக் கவிதைகள் பெரும்பாலானவை புதுக்கவிதைகள் என்றே சொல்லத் தோன்றுகின்றன. தமிழ்க் கவிதையில் ஆங்கிலக் கலப்பு தேவையற்றது. கழனியூரனின் 'நிரந்தர மின்னல்கள்' என்னும் கவிதை நூலில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கவிதைகளிலும் ஆங்கிலச் சொல் உள்ளமை இக்கவிதையின் நிலையினையும் போக்கையும் உணர்த்தும். மேலும்,
"சோம்பேறிகளுக்குத் தெரியாது
எறும்புகளின்
எலும்புகள்" (மித்ரா)
"எரிந்த பூந்தோட்டத்துடன்
குடலையின் சாம்பல் -
சதியா. . . .?" (அவைநாயகன்)
"நகைவாங்கிவர
பணத்தோடு போனார்கள்
வங்கிக்கு" (மீனாதாஸ், தமிழ்மணி, 3.8.1991)
போன்ற கவிதைகள் ஐக்கூவின் வடிவமைப்பிற்கும் பொருளமைப்பிற்கும் அதன் தன்மைக்கும் ஒத்துவனவாக இல்லை. இதுபோன்ற கவிதைகளே இன்று அதிகமாக வெளிவரத் தொடங்கிவிட்டன. இவ்வாறு ஐக்கூவின் 5-7-5 வடிவமைப்பையும் தன்மையையும் சிதறிவிட்ட அமைப்புக்கு ஐக்கூக் கவிதை என்று பெயரிடுதல் எந்த விதத்தில் சரியாகும்.
ஜப்பானில் செல்வாக்குப் பெற்ற இக்கவிதை வடிவம் 18ஆம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த காரை சென்ரியூ (1718-1790) என்பவர் ஒரு புதுவிதமான ஐக்கூப் பாடலை உண்டாயக்கினார். அதற்கு சென்ரியூ பாடல் என்றே பெயருமிட்டார் (கலைக்களஞ்சியம், தொகுதி 9) என்பதை அறியும் போது பொருளமைப்பில் ஒன்றுபட்டாலும் வடிவமைப்பில் வேறுபட்டமைந்ததாலேயே அதற்கு வேறொரு பெயரிடப்பெற்றுள்ளமை புலப்படுகிறது. அப்படியிருக்க ஐக்கூவின் வடிவமைப்புச் சிதற எழுதப்படும் கவிதைகளை ஐக்கூக் கவிதைகள் எனல் எப்படிப் பொருந்தும்.
"கருப்பாக இருந்தாள்
மனைவியாக ஏற்க மறுத்தேன்-
சுட்டது அகல் விளக்கு"
"அணை கட்டாதவரை
அனைவருக்கும் உரியது ஆறு-
கழுத்தில் மங்கல நாண்"
"தென்னைமரத்தின் நிழல்
மாடியைச் சுத்தம் செய்கின்றது-
தூசு களையவில்லை"
போன்ற கோவைமணியின் கவிதைகளில் ஐக்கூவின் 5-7-5 வடிவமைப்பும் பொருளமைப்பும் பொருந்தி வருவதைக் காணலாம். இவ்வமைப்பில் ஐக்கூக் கவிதைகள் எழுதினாலொழிய கவிதையின் உண்மைத் தன்மையைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். தமிழ்க் கவிஞர்கள் ஜப்பானியக் கவிஞர்களுக்குக் கொடுக்கும் மதிப்பும் கவிதைக்குண்டான வரவேற்பும் பயனற்றதாகிவிடும். எனவே இனிவரும் ஐக்கூக் கவிதைகளாவது 5-7-5 வடிவமைப்புடனும் ஐக்கூப் பொருளமைப்புடனும் வருதல்தான் தமிழ்க் கவிதை உலகில் ஐக்கூக் கவிதை தனியிடத்தைப் பிடித்துக்கொள்ள முடியும். இன்றுள்ள போக்கே இருக்குமாயின் ஐக்கூவின் தன்மையே மாறிவிடும்.
பழந்தமிழில் ஐக்கூ
ஐக்கூக் கவிதையின் புறவடிவையும் அகவடிவையும் காணும்போது இக்கவிதை வடிவம் தமிழுக்குப் புதியனவாகத் தெரியவில்லை. பௌத்தத் தத்துவத்தின் வெளிப்பாடாக இக்கவிதை பிறந்தது என்கிறோம். அப்படிப் பார்க்கும் போது பௌத்த மதமோ இந்தியாவில் தோன்றி சீனாவிற்குப் பரவி ஜப்பானில் நிலைகொண்டது என்கிறோம். இதனால் இந்தியக் கவிதைகளில் ஐக்கூவின் தாக்கம் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஜப்பானில் ஐக்கூக் கவிதை வடிவத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்த கவிதை வடிவம் ரெங்கா (Renka), தன்கா(Tanka) ஆகிய இரண்டு வடிவங்கள். நம்முடைய அம்மானையையும் விடுகதையையும் இவைகள் நினைவு படுத்துகின்றன. அதாவது, அம்மானையை ஒத்தது ரெங்கா எனும் கவிதை வடிவம் என்றும்; விடுகதையை ஒத்தது தன்கா எனும் கவிதை வடிவம் என்றும் கூறலாம். அதைப் போலவே ஐங்குறுநூறு, ஆசாரக்கோவை, சிந்தடிப் பாடல்கள் என அமைந்த மூன்றடிப் பாடல்களை ஒத்ததே ரெங்காவின் திரிந்த வடிவமான ஐக்கூக் கவிதை வடிவம் என்று ஆணித்தரமாக அரிதியிட்டுக் கூறலாம்.
மூன்றடி ஐக்கூக் கவிதையின் முதலிரண்டடி ஒரு செய்தியையும் மூன்றாமடி மற்றொரு முத்தாய்ப்பான செய்தியையும் அமைத்துப் பாடுவர். இப்படி அமையும் ஐக்கூக் கவிதைக்கு இலக்கணமும் உண்டு. 5-7-5 எனும் சீர்கொண்டது ஜப்பானிய ஐக்கூ வடிவம். ஜப்பானிய மொழியில் ஒவ்வொர் எழுத்தும் ஒரு சீர்(சொல்) எனும் அளவைக் கொண்டது. அப்படிப் பார்க்கும் போது ஜப்பானிய மொழியில் ஐக்கூக் கவிதையானது 5-7-5 எனும் பதினேழு சீர்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. இச்சீர் அமைப்பைத் தமிழில் கையாளுவது கடினம் எனக் கருதி சீரை அசையாகக் கொண்டு 5-7-5 எனும் அசைகளில் ஐக்கூக்களை எழுதி வருகின்றனர். இன்னும் சிலர் இந்த அசையமைப்பிலும் கவனம் செலுத்தாமல் மூன்றடிகளில் ஐக்கூக் கவிதைகளை எழுதுகின்றனர். "ஜப்பானிய மொழியில் அசை என்பது வெறும் ஒலிக்குறிப்பு, உச்சரிப்பு விதம் மட்டுமே என்றுரைக்கலாம்" (தமிழில் ¬உறகூ, ப.50). ஆனால், தமிழில் அப்படி இல்லை. தமிழில் ஓரசைச்சொல், ஈரசைச்சொல், மூவசைச்சொல், நான்கசைச்சொல், ஐந்தசைச்சொல் என அமையக் காணலாம்.
பழந்தமிழ்ப் புலவர்கள் நிகண்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் சித்திரக் கவிதைகளை எளிதாக யாக்க முடிந்திருக்கிறது. ஜப்பானிய சீர் எழுத்தைப் போல் நம் புலவர்களும் 'ஓரெழுத்துப்பாட்டு' எழுதி இருக்கின்றனர். வே.இரா. மாதவன் அவர்கள் தம்முடைய 'சித்திரக்கவி' என்னும் நூலில் தண்டியலங்கார மேற்கோள் பாடலாக,
"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்கக் - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா"
என்ற நேரிசைச் சிந்தியல் வெண்பாவையும்,
"தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைத்ததா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது"
என்ற இன்னிசை வெண்பாவையும் பக்கம் 146இல் குறிப்பிடுகின்றார். இந்த அமைப்பே ஜப்பானிய ஐக்கூவிலும் இருக்கின்றது. ஜப்பானிய ஐக்கூ வடிவம் எப்படி இருக்கிறது என்பதை நெல்லை சு. முத்து அவர்கள் 'தமிழில் ¬உறகூ' என்னும் நூலில்(ப.51) பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.
"ய-தொ-நொ-உற-ரு
ந-னி-மொ-ந-கி-கொ-ஸொ
ந-னி-மொ-அ-ரெ
என்ற யமகுச்சி ஸோடோ எழுதிய இந்த ஐக்கூவின் பொருள்,
வசந்தத்தில் என் குடிசை
பொருள் ஏதுமில்லை - உண்மையில்
பொருளெல்லாம் அதுவே"
என யமகுச்சி ஸோடோ அவர்களின் கவிதை உட்பொருளை மட்டுமே மேலோட்டமாகக் கொண்டு தமிழில் பொருத்தமான வார்த்தைகளில் வடித்து வருகின்றோம் என்கின்றார்.
இப்படித்தான் ஐக்கூ
ஜப்பானிய சீர் எழுத்து ஐக்கூக் கவிதையைத் தமிழில் எழுத முடியுமா என்ற வினா நீண்ட காலமாகவே என்னுள் இருந்து வருகிறது. தமிழின் பழமை யாப்பமைப்பு மொழியமைப்பு சொற்றொடரமைப்பு இவற்றையெல்லாம் மனதில் கொண்டு பார்க்கும் போது தமிழிலும் சீர் எழுத்துக் கவிதைகளை ஐக்கூவிற்கு ஒப்ப எழுத முடியும் என்று முயற்சித்துள்ளேன்.
நா-மா-க-தூ-வீ
வை-தீ-க-ம-து-ஆ-வீ
வை-தீ-க-பா-மா
(நா-அயலார்; மா-நிலம், புமி; க-அரசன்; தூ-பகை; வீ-விரும்புதல்; வை-வையகம்; தீ-தீய; க-காற்று; ம-நஞ்சு; து-வளர்தல்; ஆ-பசு,உயிர்; வீ-சாவு; வை-வைக்கோல்; தீ-நெருப்பு; க-காற்று; பா-பரவுதல்; மா-துகள்)
(இ-ள்.) நா-மா-க-தூ-வீ என்பது அயல் நிலத்தரசன் மீது பகைகொண்டு; வை-தீ-க-ம-து-ஆ-வீ என்பது வையகம் முழுவதும் தீய காற்றில் கலந்த நஞ்சு அதிகரித்து உயிர்கள் மடிவது; வை-தீ-க-பா-மா என்பது வைக்கோலில் பட்ட நெருப்பு காற்றில் பரவும் துகள்.
பா-கை-சீ-க-தை
க-தா-கௌ-சீ-தா-மா-யா
மா-சீ-பூ-கோ-தை
(பா-நெசவு செய்யும் பாவு; கை-படை வகுப்பு; சீ-பெண்; க-உடல்; தை-தைத்துக்கொள்ளல்; க-காமன்; தா-கேடு; கௌ-கொள்ளுதல்; சீ-பெண்; தா-அழிவு; மா-சீலை; யா-இல்லை; மா-வண்டு; சீ-நித்திரை; பூ-மலர்; கோ-இறைவன்; தை-தைத்துக்கொள்ளல்)
(இ-ள்.) பா-கை-சீ-க-தை என்பது நூலை(இழை)ப் படை வகுத்து நெசவு செய்து துணியாக்கிப் பெண்கள் தங்களின் உடலை மறைக்க ஆடையாக தைத்துக்கொள்ளுதல்; க-தா-கௌ-சீ-தா-மா-யா என்பது பெண்களின் மீது காமுகன் ஒருவன் கேடு கொள்வானேயாயின் ஆடையால் அழிவைத் தடுக்க முடியுமா?; மா-சீ-பூ-கோ-தை என்பது வண்டு உறங்கிய(நித்திரை) மலரை இறைவனுக்குச் சூட்டுவதைப் போன்றது.
இதுபோன்ற கவிதைகளே உண்மையான ஜப்பானிய ஐக்கூவின் மறுபிறப்பாக இருக்கமுடியும். இம்முறையில் ஐக்கூவை எழுதினால் கவிஞனாலேயே எழுத்திற்குப் பொருளும் சொல்லும் எழுத வேண்டியதாகிறது. ஜப்பானியக் கவிதைகளும் கவிஞராலேயே பொருள்விளக்கம் தரப்பெற்றததை இங்குச் சுட்டலாம். இவ்வாறு தமிழில் எளிதில் எழுதிவிட முடியாது. எனவேதான் நம் தமிழ் ஐக்கூக் கவிஞர்கள் சீர் எழுத்திற்கு ஈடாக அசையைப் பயன்படுத்தி 5-7-5 எனும் அசை அமைப்பைக் கொண்டதாக ஐக்கூவைப் படைக்கின்றனர். காட்டாக,
"என் மனப்பாடங்களை
சரிபார்த்துக்கொண்டிருக்கிறது-
புத்தக அட்டைப்படம்" (கோவைமணி, ஐக்கூ ஐநூறு, ப.15)
எனும் ஐக்கூக் கவிதை 5-7-5 அசையமைப்பு பெற்றிருப்பதைக் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக