உரைவேந்தரின் மணிமேகலை உரைத்திறன்
தமிழ் நூல்கள் பலவற்றிற்கு உரை வரைந்து உரைவேந்தர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் ஔயார்க்குப்பம் துரைசாமிப்பிள்ளை அவர்கள். உரை வரையும் திறத்தில் பிள்ளையவர்களின் தமிழ்நடை ஆற்றல் நிறைந்தது; எடுத்துக்கொண்ட பொருளைப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக விளக்குவது; தமிழ் மற்றும் வடமொழி நூல்களில் தமக்குள்ள புலமையை உரைக்குள் பொருத்தி ஆராய்வது போன்ற பல்வேறு வகையான திறன்களைப் பெற்றது இவரது உரைகள். இவர் மணிமேகலையில் சமயக்கணக்கர்தந் திறங்கேட்ட காதை, கச்சிமாநகர் புக்க காதை, தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதை, பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை ஆகிய இறுதி நான்கு காதைகளுக்கு உரை வரைந்திருக்கின்றார். இவ்வுரையில் இவர்தம் உரைத்திறன் எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பதை இக்கட்டுரை ஆராய்கின்றது.
மணிமேகலை
சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பெற்ற மணிமேகலை ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகவும், இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றது. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளால் கேட்கப்பெற்ற பெருமையுடையது. இந்நூலுக்குப் பழைய உரை எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் 1891ஆம் ஆண்டு முதன் முதலாக திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் மணிமேகலையை வெளியிட்டார். இப்பதிப்பில் பல பிழைகள் இருப்பதைக் கண்ட உ.வே. சாமிநாதையர் அவர்கள் 1898ஆம் ஆண்டு தம்முடைய முதற்பதிப்பை வெளியிட்டார். அதன் பிறகு 1921, 1931ஆம் ஆண்டுகளில் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் பதிப்புகளை வெளியிட்டார். இவருக்குக் கிடைத்த பிரதிகள் அனைத்தும் மூலம் மட்டுமே என்பதால், உரைப் பிரதி கிடைக்குமா எனச் சென்னை, தஞ்சையிலுள்ள பழைய கையெழுத்துப் புத்தக சாலைகளில் தேடியும், யாழ்ப்பாணம், பாரீஸ் போன்ற நகரங்களுக்கு எழுதிக் கேட்டும் கிடைக்காததால், கிடைத்த பத்து மூல ஓலைச்சுவடிப் பிரதிகளை வைத்துக்கொண்டு இப்பதிப்பை வெளியிட்டுள்ளார். இப்பிரதிகளில் மிதிலைப்பட்டிப் பிரதியே திருத்தமாக அமைந்து, பதிப்பிற்கு ஆதாரப் பிரதியாக அமைந்தது எனவும், ஐயரவர்கள் தம் முன்னுரையில் குறித்துள்ளார். மேலும், ஐயரவர்கள் முதன் முதல் உரை எழுதிய நூல் மணிமேகலையே ஆகும். இவ்வுரைப் பதிப்பை ஆதாரமாகக் கொண்டு மணிமேகலையின் முதல் 26 காதைகளுக்கு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும், இறுதி 4 காதைகளுக்கு உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்களும் உரை வரைந்திருக்கின்றனர். இவ்வுரைப் பதிப்பு 1985ஆம் ஆண்டு செல்லூர்க்கிழார் செ.ரெ. இராமசாமிப்பிள்ளை அவர்களின் ஆராய்ச்சி முன்னுரையுடன் சென்னை, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் வெளியிட்டுள்ளது. இப்பதிப்பை மையமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகின்றது.
உரையாசிரியர்
மொழிவளம் சிறக்கத் தொண்டாற்றும் புலமையாளரை நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர் என மூன்று வகைகளாகப் பிரிப்பர். நூல்களை இயற்றியவர் நூலாசிரியர். அந்நூல்களை விளக்கும் ஆசிரியர் மற்ற இருவர் ஆவர். நூல்களின் உரைகளை இயற்றிப் பலருக்குப் பயன்படும்படி வழங்குபவர் உரையாசிரியர். மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி நூல்களை விளங்க வைப்பவர் போதகாசிரியர்.
நூலாசிரியரது மனக் குறிப்பினை உய்த்துணர்ந்து போதகாசிரியர்க்குத் தெளிய அறிவிக்கும் நுண்ணுணர்வும் சொல் வளமும் ஒருசேரப் பெற்றவர்கள் உரையாசிரியர்கள். நூலாசிரியர்களுக்கு எத்துனை சிறப்புண்டோ அத்துனை சிறப்பு உரையாசிரியர்க்கும் உண்டு. இதனால்தான் தொல்காப்பியத்திற்கு உரை வரைந்த இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோரின் உரைச் சிறப்பால் தொல்காப்பியம் இளம்பூரணம் என்றும், தொல்காப்பியம் நச்சினார்க்கினியம் என்றும் அழைக்கின்றோம்.
நன்னூலில் உரையின் பொதுவிலக்கணம் கூறும் பவணந்தி முனிவர் உரை பதினான்கு வகைப்படும் என்று கூறுகின்றார்.
"பாடம் கருத்தே சொல்வகை சொற்பொருள்
தொகுத்துரை உதாரணம் வினாவிடை விசேடம்
விரிவதி காரம் துணிவு பயனோடு
ஆசிரிய வசனமென் றீரே ழுரையே" (நன்னூல் பொதுப்பாயிரம், 21)
1. பாடமென்னும் மூலபாடம் எடுத்துரைத்தல், 2. கருத்துரை, 3. சொல்வகை - சொற்களைப் பிரித்துரைத்தல், 4. சொல்லுக்குப் பொருளெழுதும் பதவுரை, 5. தொகுத்துரை என்னும் பொழிப்புரை, 6. உதாரணம் எடுத்துரைத்தல், 7. வினா, 8. விடை, 9. விசேடம் - சூத்திரத்து உள்ள பொருளன்றியும் அவ்விடத்துக்கு வேண்டுவனவற்றைத் தந்துரைத்தல், 10. விரித்துரை, 11. அதிகாரத்தோடு பொருத்திக் காட்டியுரைத்தல், 12. துணிந்துரை, 13. பயனுரை, 14. ஆசிரிய வசனமெனும் ஆன்றோர் நூல்களினின்று மேற்கோள் காட்டியுரைத்தல் என்னும் இவை அனைத்தையும் மரபாகப் போற்றிய உரையாசிரியர்களை உய்த்துணர்ந்த பிள்ளையவர்கள் தாம் நூல்களுக்கு உரை எழுதியவிடத்தெல்லாம் மரபு வழுவாமலும், புதுமைப் போக்குடனும் தம் முத்திரையைப் பதித்துள்ளார். இவருடைய மணிமேகலை உரைப் பகுதிகள் பல்வேறு நிலைகளில் நூல் பயில்வோருக்குப் பயன்படத்தக்க வகையில் அமைந்திருக்கக் காணலாம்.
பிள்ளையவர்களுடைய மணிமேகலை உரைப்பகுதியில் நாட்டார் அவர்கள் கையாண்ட அதே உத்தியை பெரும்பாலும் கையாண்டாலும் சிற்சில இடங்களில் உரைவேந்தரின் தனித்திறன் வெளிப்படுவதைக் காணமுடிகின்றது. முதலில் பதவுரையும் அடுத்து விரிவான விளக்க உரையும் என அமைத்த பிள்ளையவர்களின் உரைப்பகுதியில் காணப்படும் பல்வேறு நிலைகளில் ஆராய இடம் தருகின்றது.
உரையில் கையாண்ட மேற்கோள் நூல்கள்
ஔவை துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம்முடைய மணிமேகலை உரைப் பகுதியில் தமிழ், வடமொழி மற்றும் ஆங்கில நூல்களைப் பல நிலைகளில் மேற்கோளாகக் காட்டியிருக்கின்றார். தொல்காப்பியம் சொல்லதிகாரம், நன்னூல், வீரசோழியம் ஆகிய இலக்கண நூல்களையும்; திருக்குறள், நாலடியார், சிவஞானசித்தியார்-பரபக்கம் & சுபக்கம், சிவஞான போதம், சிவநெறிப் பிரகாசம், பெரியபுராணம், மேருமந்தர புராணம், மூவர் தேவாரம், திருவெம்பாவை, திருப்பல்லாண்டு, நீலகேசி, சூளாமணி, பெருங்கதை, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பரிபாடல், மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, பொருநராற்றுப்படை, முருகாற்றுப்படை, அகநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய இலக்கிய நூல்களையும்; நீலகேசி உரை, திருக்குறள் பரிமேலழகர் உரை, தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் நச்சினார்க்கினியர் உரை, தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சிவநெறிப்பிரகாச உரை ஆகிய உரைகளையும்; திரு. நாராயணையங்கார் அவர்கள் செந்தமிழ்த்தொகுதி 32 மற்றும் 34இல் வெளியிட்ட கட்டுரைப் பகுதிகளையும் பிள்ளையவர்கள் தம்முடைய உரைப் பகுதியில் மேற்கோளாகக் கையாண்டிருக்கின்றார்.
மேலும், அவதான சதகம், அனுமான பரிச்சேதம் - சுலோக வார்த்திகமுடையார், இலங்காவதார சூத்திரம், இஷ்ட சகஸ்ர பிரக்ஞ பாரமிதை, உத்தர மீமாஞ்சை - வாதராயணன், குசு மாஞ்சலி, சத்த பதார்த்தி - சிவாதித்தர், சந்த பதார்த்தி, சத சஉறஸ்ரிக பிரஞ்சை பாரமிதை, சமய திவாகரம், சருவதரிசன சங்கிரகம் - மாதவர், சாக்கிய காரிகை - ஈசுர கிருஷ்ணர், சாக்கிய பிரவசன பாடியம், சாங்கிய காரிகை, சாத்திர தீபிகை, நவகதிர் - மற்கலி, நியாய கந்தலி, நியாய சாரம், நியாய பாடியம் - அரிபத்திரர், நியாய பிந்து, நியாயப் பிரவேசம், நியாய மஞ்சரி, நியாய வார்த்திகை, தச பூமிக சூத்திரம், தத்துவ சங்கிரம் - கமலசீலர், தத்துவ சிந்தாமணி - கங்கேசர், தத்துவ பிந்து - தருமகீர்த்தி, தம்ம சங்கணி, தருக்க சங்கிரக தீபிகை, திக்க நிகாயம், திவ்வியாவதானம், பதார்த்த தரும சங்கிரகம், மனு தர்மம், பதஞ்சலியார் பாடியம் - பதஞ்சலி, பரமத திமிரபானு, பிரசத்த பாடியம், பிரமாண சமுச்சயம் - திக்கநாகர், பூருவ மீமாஞ்சை - சைமினி, போதி சத்துவ அவதான கற்பம் - க்ஷேமேந்திரர், போதி சத்துவ பூமி, போதி சரியாவதார பஞ்சிகை - சாந்திதேவர், வைசேடிக சூத்திரம் - கணாதர், வைசேடிக பாடியம் - பிரசத்தபாதர், லளிதா விஸ்தரம் ஆகிய வடமொழி நூல்களையும்; விதுசேகரனார், வாற்சாயனர், உத்தியோதகரர், அளவை நூலார், குமரிலபட்டர், ஒல்டன்பர்க், அசுவகோசர், வாசபந்து, சீதரர், கோதமர் போன்றோரின் நூல்களையும்; Fragments from Dinnaga, Bodhi Sathva Docrine, Compendium of Philosophy - Rys Davids, Indian Philosophy - Dr. Radakrishnan, History of Indian Philosophy ஆகிய ஆங்கில நூல்களையும் பிள்ளையவர்கள் தம்முடைய உரைப் பகுதியில் மேற்கோளாகக் கையாண்டிருக்கின்றார்.
பிள்ளையவர்கள் உரைப்பகுதியில் மேற்கோளாகக் கையாண்டிருக்கும் நூல்களைப் பார்க்கும் போது அவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லவராக திகழ்ந்திருக்கின்றார் என்பது தெரிகின்றது. எனவே, பிள்ளையவர்கள் பன்மொழித் திறன் பெற்றவராக விளங்கினார் என்றால் அது மிகையாகாது.
பதவுரை
மூல நூலில் இடம்பெறும் அருஞ்சொல், அருஞ்சொற்றொடர் முதலானவற்றிற்குப் பொருள் தரும் நிலையில் அமைவதே பதவுரை ஆகும். இதனைப் பிள்ளையவர்கள் தம்முடைய மணிமேகலை உரைப் பகுதியில் பலவாறாக அமைத்திருக்கக் காணலாம்.
"நிம்ப முளைத்து நிகழ்த னித்தியம்
நிம்பத் தப்பொரு ளன்மை யநித்தியம்
பயற்றுத் தன்மை கொடாதுகும் மாயம்
இயற்றி யப்பய றழிதலு மேதுத்" (மணி.27:183-186)
என்னும் வரிகளுக்கு "நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் - வேம்பின் முளை முளைத்து வேம்பாகவே தோன்றுவது நித்தியமாம்; நிம்பத்து அப்பொருள் அன்மை அந்நித்தியம் - வேம்பினை நட்டு முளைத்த வழி அதன் விதை யழிவது அநித்தியமாம், பயற்றுத்தன்மை கெடாது - பயறு கும்மாயமாயவழியும் அதன் தன்மை கெடாமையின் நிலைபேறும், கும்மாயம் இயற்றி - கும்மாயத்தை யுண்டுபண்ணுதலின் தோற்றமும், அப்பயறு அழிதலும் - அப்பயறு அழிந்து போதலால் கேடும் கொள்க" என்று பிள்ளையவர்கள் பதவுரை கூறுகின்றார்.
இப்பதவுரை வழங்கியதன் தொடர்ச்சியாக இவ்வரிகளுக்கான விளக்கவுரையை ஓர் ஆய்வுரையாக அமைத்திருக்கும் நேர்த்தியைக் காணமுடிகின்றது. அதாவது, "எனவே, நித்தாநித்தங்கட்கு வேம்பும், தோற்றக் கேடுகட்குப் பயற்றது கும்மாயமும் எடுத்துக்காட்டாகக் கொள்க. இனி, நித்தா நித்தங்கட்கு நீலகேசியுரைகாரர், 'கல்வியா னல்லனே காமாதி யாற்றீயன், செல்வத் துயர்ந்தான் குலத்தினிற் றாழ்ந்தனனாம், வல்லுவா னொன்றொன்று வல்லா னிதுவன்றோ, நில்லாமை நிற்றனிலை' (378, உரை மேற்,) என்று காட்டுகின்றார். கும்மாய எடுத்துக்காட்டால் தோற்றநிலை யிறுதி கூறும் இயல்பை, 'கெட்ட திரட்சியுந் தோன்றிய சாந்தும் பொருளெனவும், பட்டன வப்பொருள் பையைகளே யென்னும் பான்மையினால், விட்ட திரள்வினுந் தோன்றிய சாந்தினும் வேற்றுமையாம், நட்டமுந் தோற்றமு நாட்டே னுருவிற்கு நானுமென்றாள்' (நீல.389) என்று நீலகேசியும் கூறுகிறது. கும்மாயம், பயற்றைக் குழையச் சமைத்த குழைவு" என்று அமைந்திருப்பதைக் காணும்போது பிள்ளையவர்களின் பதவுரைத் திறனும் விளக்கவுரைத் திறனும் வெளிப்படுவதைக் காணலாம்.
சொற்பொருள் விளக்கம்
பிள்ளையவர்களின் மணிமேகலை உரைப்பகுதியில் சொற்பொருள் விளக்கம் அளிக்கும் பாங்கு பல நிலைகளில் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. அதாவது, சொல்லுக்குச் சொற்பொருள் விளக்கம் தருவதாகவும், சொற்றொடருக்குச் சொற்பொருள் விளக்கம் தருவதாகவும், சொல்லுக்கும் சொற்றொடருக்கும் சொற்பொருள் விளக்கம் தரும்போது பிற நூல்களையும் பிற நூல்களின் உரைகளையும் மேற்கோளாகக் கொண்டு சொற்பொருள் விளக்கம் தருவதாகவும் போன்ற பல நிலைகளில் அமைந்திருக்கக் காணலாம்.
அருத்தா பத்தி - அருத்தாபத்தியளவை யென்பது (27:45). இதற்குப் பிள்ளையவர்கள், "அருத்தாபத்தியாவது ஒரு பொருளைக்கொண்டு அதனோ டியைபுடைய பிறிதொன்றனை யுணர்தல், அருத்தம் - பொருள்; ஆபத்தி - பிறிதொரு பொருள். 'அடுத்துல கோதும் பொருளருத் தாபத்தி யாவதுதான், எடுத்த மொழியினஞ் செப்புவ தாகுமிவ் பூரிலுளார், படைத்தவ ரென்னிற் படையா தவரு முண்டென்றுமிவன், கொடுப்பவ னென்னிற் கொடாதாரு முண்டென்று கொள்வதுவே' (சிவ.சித்தி.அளவை.உரை) என்று மறைஞான தேசிகர் காட்டும் மேற்கோளாலும் இதன் இயல்புணரப்படும். கங்கேசர் முதலிய ஆசிரியன்மார், இவ் வருத்தாபத்தி வியதிரேக வியாத்தியால் உணரப்படுவ தென்றோதி, 'பகலுண்ணான் சாத்தன் பருத்திருப்பான்' என்றவழி, உண்ணாதான் பருத்திருப்பானல்ல னென்பதால் உண்பதுண்டெனத் துணிந்து, 'பகலுண்ணா' னெனவே, 'இரவிலுண்பான்' எனத் துணிந்து 'சாத்தன் இரவில் உண்பன்' எனக் கோடல் என்றுரைத்து இதனைப் பின்வருமாறு விளக்குப,
'யாவன் உண்ணாதான் அவன் பருத்திருப்பானல்லன்; இவன் பருத்திருக்கின்றான்; ஆகவே, இவன் உண்ணாதானல்லன்; உண்போனாவான், 'யாவனொருவன் உண்போன் அவன் பகலிலாதல் இரவிலாதல் உண்டல்வேண்டும், இவன் பகலில் உண்ணான்; ஆகவே, இவன் இரவில் உண்போனாவான்" என்று சான்றுகளுடன் 'அருத்தாபத்தி' எனும் சொல்லுக்குச் சொற்பொருள் விளக்கம் தருகின்றார்.
"சொற்றடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு" (27:166)
என்னும் சொற்றொடருக்குப் பிள்ளையவர்கள், "முன்மொழிந்ததும் பின்மொழிவதும் மாறுபடக் கூறுமுகத்தால் உண்மை தோன்றாமற் கூறுவது, சொற்றடுமாற்றம்; 'நில நீர் தீக் காற்றென நால்வகையின், மலைமரம் உடம்பெனத் திரள்வதும் செய்யும்' (மணி.27:116-117) என்று முன்னே மொழிந்து, பின்னே 'முது நீரணு நிலவணு வாய்த்திரியா' (மணி.27:129) என்பது முதலாகத் தடுமாற்ற மெய்தக் கூறுதல் சொல்தடுமாற்றம். தடுமாற்றமுற்று மொழிவோனுடன் சொல்லாடுவது பயனில் செயலாதலின், 'தொடர்ச்சியை விட்டு' என்றார்" என்று சொற்பொருள் விளக்கம் தருகின்றார்.
அதேபோல், "வேதக்கு, ஆதியந்த மில்லை" (மணி.27:103-104) என்னும் சொல்லுக்கு உரை வரையும் பிள்ளையவர்கள் "வேதம் அநாதி நித்தியமென்பது பற்றி நிகழும் தடை விடைகளை நியாய பாடியத்தும் நியாயவார்த்திக தாற்பரியடீகை (ii.1.68)யிலும் நீலகேசி வேதவாதச் சருக்கத்தும் (ix) சாத்திர தீபிகை (அதி.viii) முதலிய வேறு பல நூல்களிலும் காணலாம் என்றும்; 'மாயா வாய்மொழி' (பரி.3.47) என்பதற்கும், 'முதுமொழி' (பரி.3.47) என்பதற்கும் கூறப்படும் உரையகத்தும், 'அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதி' (குறள்.543) என்பதன் உரையகத்தும் ஆசிரியர் பரிமேலழகர் வேதம் அநாதி நித்தியம் என்பது காணப்படும்" (பக்.424) என்றும் சொற்பொருள் விளக்கம் தருகின்றார். இப்பொருள் விளக்கத்தில் பிற நூல்களையும் பிற நூல்களின் உரைகளையும் துணைக்கழைத்து சொல்லின் பொருளை நிலைநாட்டுவது பிள்ளையவர்களின் உரைத்திறனை வெளிப்படுத்துகின்றது.
அருஞ்சொற்பொருள்
அங்கி - நெருப்பு (27:209)
அந்தர சாரிகள் - வானின் வழியாகச் சொல்வோர் (28:69)
அருத்தா பத்தி - பொருள் அளவை; ஒன்றைக் கொண்டு
மற்றொன்றை அறிதல் (27:45)
அறுகு - அறுப்பேன்; நீக்குவேன் (30:264)
ஆர்ப்பு - ஆரவாரம் (27:213)
இடங்கர் - முதலை (28:18)
கவயமா - காட்டுப்பசு (27:42)
காலக்கணிதர் - சோதிடர் (28:40)
கூவியர் - அப்பவாணிகர் (28:32)
தாதகிப்பூ - ஆத்திப்பூ (27:264)
பாசவர் - வெற்றிலை விற்போர் (28:33)
மலைதல் - மாறுபடுதல் (30:264)
என இவ்வாறு பல சொற்களுக்கு அருஞ்சொற்பொருள் சுட்டுகின்றார்.
ஒருபொருள் தரும் பல சொற்களை எடுத்துரைத்தல்
மணிமேகலையில் ஒருபொருள் தரக்கூடிய பலசொற்களை இனங்கண்டு அவற்றையும் பிள்ளையவர்கள் தம்முடைய உரைப் பகுதியில் எடுத்துக்காட்டி யிருக்கின்றார். குறிப்பாக, பொய்யுரு (28:85), மாயை (28:245) ஆகிய இருசொற்களும் மாற்றுருவம், வேற்றுருவம் என்ற ஒத்த பொருளில் அமைந்திருப்பதைச் சுட்டுகின்றார். இதுபோல் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கக் கூடிய பல சொற்களைத் தம்முரையில் சுட்டிச்செல்வதைக் காணமுடிகிறது.
இலக்கணக் குறிப்புரைத்தல்
பழைய உரையாசிரியர் மரபில் நின்று, பிள்ளையவர்கள் தம்முடைய மணிமேகலை உரைப்பகுதியின் பல இடங்களில் சொற்களுக்கு இலக்கணக் குறிப்புத் தந்துள்ளார். பொருள் மயக்கம் ஏற்படாமல் இருக்க, தேர்ந்த பொருள் இதுவென உணர்த்த உரையாசிரியர்கள் இலக்கணக் குறிப்பு தருவதை மரபாகக் கொண்டுள்ளனர். இம்மரபின் அடிப்படையில் பிள்ளையவர்கள் தரும் இலக்கணக் குறிப்புகளும் அமைந்திருக்கின்றன.
அண்டலை - 'ஐ' சாரியை (27:70)
வேதக்கு - சாரியை பெறாது வந்துள்ளது (27:103)
மேலை - மேன்மை; ஐ: பண்புப்பொருண்மை குறித்து
நின்றது; சாரியையுமாம் (28:11)
கவல் - முதனிலைத் தொழிற்பெயர் (28:80)
செவ்விது - பன்மை ஒருமை மயக்கம் (28:88)
ஆங்கு - அசைநிலை (28:106)
அழிந்து - செயவெனெச்சத்திரிபு (28:156)
மடிய - செயவெனெச்சம் (28:157)
நண்ணினள் - முற்றெச்சம் (18:171)
கட்டுரையெல்லாம்
வாயாகின்றன - பன்மை ஒருமை மயக்கம் (18:185-186)
பாவை - ஆகுபெயர் (28:220)
மொழிந்த - செயப்பாட்டுவினைப் பெயரெச்சம் (29:122)
சாதித்து - செய்தெனெச்சம் (29:301)
ஆதலால் - குறிப்பெச்சம் (29:352)
விரிந்த - அன் பெறாது முடிந்த அஃறிணைப் பன்மை
வினைமுற்று (30:234)
அறுகு - செய்கென வாய்ப்பாட்டுத் தன்மை ஒருமை
வினைமுற்று (30:264)
என இவ்வாறு இலக்கண குறிப்புகளைத் தம்முடைய உரைப்பகுதியில் பிள்ளையவர்கள் அங்கங்கே உரைத்திருக்கின்றார்.
பாடவேறுபாடு
மணிமேகலையில் உரைவேந்தரின் உரைப்பகுதியில் சில பாட வேறுபாடுகள் உரைப்பகுதிக்குள்ளும் அடிக்குறிப்பாகவும் காட்டப்பெற்றிருக்கின்றன. உரைவேந்தரின் உரைக்கு உ.வே. சாமிநாதையரின் மணிமேகலைப் பதிப்பு துணைநின்றது என்றாலும் உ.வே.சா. குறிப்பிடாத சில பாடவேறுபாடுகளை உரைவேந்தர் குறிப்பிடுவதைப் பார்க்கும் போது இப்பதிப்பைத் தவிர வேறு சில சுவடிகளையும் பார்வையிட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது. சுவடி பற்றிய செய்தியைப் பிள்ளையவர்கள் எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. பிள்ளையவர்களின் உரைப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் பாடவேறுபாடுகளை உ.வே.சா.வோடு ஒத்த பாடவேறுபாடுகள், உ.வே.சா.வோடு மாறுபடும் பாடவேறுபாடுகள், பிள்ளை மட்டும் குறிப்பிடும் பாடவேறுபாடுகள் என மூன்றாக்கிக் காணலாம்.
உ.வே.சா.வோடு ஒத்த பாடவேறுபாடுகள்
உ.வே. சாமிநாதையரின் மணிமேகலை பதிப்பிலும் உரைவேந்தர் பிள்ளையவர்களின் பதிப்பிலும் குறிப்பிடப்பெறும் ஒரே மாதிரியான பாடவேறுபாடுகள் கீழ்க்காணுமாறு அமைவதைக் காணலாம். இங்கு முதலில் இடம்பெறுவது நூல் பகுதியையும் அடுத்து இடம்பெறுவது பாடவேறுபாட்டுப் பகுதியையும் குறிக்கும்.
பகர்ந்திட்டனர் - பகிர்ந்திட்டனர் (27:8)
கருதலுவம - கருத்தேயுவம (27:9)
குறிக்கொளனுமானத் - குறிகொளனுமானத் (27:26)
நிச்சயியா - நிச்சயியாது (27:65)
கடுமாப்புலியொன்று - கடுமருப்புலியி லோர்ந்து (27:69)
வேற்றியல் பெய்தும் - வேற்றிய லெய்தும் (27:125)
வரைப்பாம் - வரைப்பால் (27:137)
மிக்கதனாற் - மிக்க வதனிற் (27:141)
மயிரறியார் - மயிருமறியார் (27:148)
பெறுதலு மிழத்தலும் - இறத்தலு மிழத்தலும் (27:159)
ஒத்துக் கூடி - ஒத்துத் தோன்றி (27:195)
முக்குண மன்றி - முக்குணமின்றி (27:227)
பொதுவுமன்றி - பொருளுமின்றி (27:228)
வேதக், காதி யந்த மில்லையது நெறியெனும்
- வேதத், தாதியந்த மில்லை யதுவே நெறியெனும்
(27:103-104)
உ.வே.சா.வோடு மாறுபடும் பாடவேறுபாடுகள்
இங்கு அடிக்கோடிட்டிருப்பது நூல் பகுதியில் உள்ளது எனவும், அடுத்து இடம்பெறுவது உ.வே.சா.வின் பாடவேறுபாடாகவும், இறுதியாக இடம்பெறுவது உரைவேந்தரின் பாடவேறுபாடாகவும் கொள்ளவேண்டும்.
ஆண்டைய வருத்தா பத்தி யோடியல்பு (27:10)
- ஆண்ட வருத்தா பத்தியோடியைபு
- மாண்டவருத் தாபந் தீயோடியைபு
பொழுதே கலக்கும் (27:162)
- பொழுதே பிறக்கும், பொழுதே யிறக்கும்
- பொழுதே பிறக்கும்
பாற்பட்டுப் பிறந்தோர்
கழிவெண் பிறப்பிற் கலந்துவீ டணைகுவர் (27:154-155)
- பாற்படக் கழிந்த
கழிவேய் பிறப்பிற் கலந்து வீடணைவர்
- பாற்பட்டுப் பிறந்தோர்
கழிவேய் பிறப்பிற் கலந்துவீ டணைகுவர்
தேரார் பூதத் திரட்சியு ளேனோர் (27:147)
- நோலா பூதத் திரட்சியு யானோர்
- நோலா பூதத் திரட்சியு ளேனோர்
அரைக்கா லாயுறும், துன்று (27:140)
- அரைக்கா லாயுந், துன்று
- அரைக்கா லாதுன்றும்
பிறவாக் கூடும் பலவும் (27:133)
- பிறவாய்க் கூடுமலையும்
- பிறவாக் கூடுமலையும்
புதிதாய்ப் பிறந்தொன்று (27:128)
- புத்தாப் பிறந்தொன்று
- புத்தாய்ப் பிறந்தொன்று
நால் வகையின (27:116)
- நால்வகையினு, மூவணு
- நால்வகையினு
இயல்பியானை (27:47)
- இயைபிலியானை
- இயைபியானை
காரிய காரண சாமானியக் (29:52)
- காரிய காரண சாமானியக்
- காரண காரிய சாமானியக்
மேய விபக்கத்து (29:66)
- மேய விபக்கத்து
- மேவிய பக்கத்து
பிள்ளை மட்டும் குறிப்பிடும் பாடவேறுபாடுகள்
புராணனை - பூரணனை (27:108)
பன்னெடுநாள் ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் அறிவு நிரம்பினமை தோன்றப் 'புராணன்' என்றார். பூரணனென்றும் பாடம். பூரணன், ஆசீவக நூலைக் கூறிய மற்கலி. 'விரையாவறிவிற் புகழ்பூரணனே' (நீல.673) என்புழி, பூரணன் என்பதற்கு, 'பூரணனென்னு மெம்முடைய ஆப்தன்' என்று சமயதிவாகர வாமனமுனிவர் உரை கூறுவதனாலறிக.
மாலைப் போதிலொரு மயிரறியார்
- மாலைப் போதிலோர் மயிரு மறியார் (27:148)
ஞானக்கண்ணுடையவர்கள் ஒவ்வோரணுவினையும் கண்டறிவர் என்றும்; அஃதறியாதவர் பிற வகையினர் என்றும் பிள்ளையவர்கள் தம்முரையில் விளக்குகின்றார். அதாவது, "கண் முதலிய பொறிகளால் எளிதில் காணமுடியாத அணுக்களை நுண்ணுணர்வுகொண்டு நுணுகிக் காண்டலின், ஞானவான்களைத் 'தெய்வக்கண்ணோர்' என்றார். ...... ஏனோர்க்கு அவ்வணு தோற்றப்படாமைக்கு மயிர்த்திரளை யெடுத்துக் காட்டினான். மாலைபோது கூறியது, அறியாமை சூழ நிற்கும் இயல்புகாட்டி நிற்கிறது" என்று பொருள் கூறியவர் மேற்காணும் பாடவேறுபாட்டையும் குறிப்பிடுகின்றார். இப்பாடவேறுபாட்டில் பொருள் மாறுபாடின்றி உம்மைத்தொகை இடையே வந்திருப்பதைக் காண்க.
பூதத்தழிவுகளின் - பூதத்தழிவின் (27:267)
இங்குப் பன்மை - ஒருமையாகப் பாடம் வேறுபட்டிருக்கின்றது.
என்றுநக்கிடுதலும் - எனநக்கிடுதலும் (27:280)
இங்கு 'என்று - என'வாகப் பாடம் வேறுபட்டிருக்கின்றது.
பாரக விதியின் - பாரக வீதியின் (28:201)
கோமுகிப் பொய்கையை மணிபல்லவத்தின்கண் பண்டையோர் இழைத்தனராதலின், கடனடுவணுள்ள தீவின்கண்ணுள்ளது போல நிலத்திடத்தும் முறைப்படி செய்தமைத்தலின், 'பாரக விதியின்' என்றார். ஆனால், 'பாரக வீதியின்' என்றும் பாடம் இருக்கின்றது என்றவர், விதியை வீதியாக்கியிருக்கின்றனர் என்று பாடவேறுபாட்டைச் சுட்டுகின்றார்.
அன்னிய தராசித்தம் - அநித்திய தராசித்தம் (29:198)
அநித்திய தராசித்த மென்பதே உண்மைப்பாடம். முதல் துணை நிமித்தமெனக் கொண்டு செய்யும் காரணகாரிய வாராய்ச்சிக்கண் அன்னியதராசித்த மென்ற குற்றவாராய்ச்சி நிகழ்த்தப்படுதலைச் சிந்தாந்த முக்தாவளி முதலிய வடநூல்களுட் காண்க. அன்னியதராசித்த மென்பது உற்பாத காரணத்துக் கூறப்படும் குற்றமாதலாலும், ஈண்டு அனுமானத்துக்கு வேண்டும் ஏதுக்கட்காகா வென்ற குற்றமே கூறப்படலாலும், 'இம்மணிமேகலையைப் பின்பற்றி யெழுந்த நியாயப் பிரவேசத்து அன்னியதராசித்தமென்ற பாடமே காணப்படலாலும், பிரசத்த பாதர் முதலாயினோரும் ஏதுப்போலி வகைகளுள் அன்னியதராசித்தம் என்றே ஏதுப்போலி காட்டுதலாலும் அன்னியதராசித்தம் என்ற பாடம் பொருந்தாமை யறிக.
சீத்தலையாரின் நூலாக்கத் திறன்
மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரின் நூலாக்கத்திறனை உரைவேந்தர் பிள்ளையவர்கள் தம் உரையில் பல நிலைகளாகப் பகுத்துரைக்கின்றார். அவையாவன:
அ. முன் - பின் ஒத்த தொடரைச் சுட்டுதல்
ஆ. தொகுத்தலை விரித்தல்
இ. தொடர்ச்சியைத் தொடர்தல்
ஈ. சுருக்கியதை விரித்தல்
உ. விரித்ததைச் சுருக்குதல்
ஊ. பிற நூலார் சுருக்குதலும் விரித்தலும்
முன் - பின் ஒத்த தொடரைச் சுட்டுதல்
"பிறப்பிற் றுன்பமும் பிறவா வின்பமும்" (28:119)
என்னும் பாடலடிக்கு உரை வரையுமிடத்து,
'பிறந்தோருறுவது பெருகிய துன்பம்
பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்' (மணி.2:54) என்றும்;
"பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும்" (28:229)
என்னும் பாடலடிக்கு உரை வரையுமிடத்து,
'அறத்தி னீட்டிய வொண்பொரு ளறவோன்
திறத்து வழிப்படூஉஞ் செய்கை போல
வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்துத்
தான்தொலை வில்லாத் தகைமை' (மணி.17:3-4)
என்றும்;
"வேத்தியல் பொதுவிய லென்றிவ் விரண்டின், கூத்தியல்" (28:46-47)
என்னும் பாடல் வரிகளுக்கு உரை வரையுமிடத்து,
"வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்துக், கூத்தும்" (2:18-19)
என்றும் முன் வந்த ஒப்புமையான நூற்பகுதிகளைப் பிள்ளையவர்கள் பின்னர் வந்த பகுதிக்கு உரை வரையும் போது ஒப்பிட்டுக் காட்டுகின்றார்.
"செவ்வி தன்மையிற் சிந்தைவை யாததும்" (28:88)
என்னும் பாடலடிக்கு உரை வரையுமிடத்து,
"செவ்வி தன்மையிற் சிந்தையின் வைத்திலேன்" (29:44) என்று பின்னர் வரும் ஒப்புமையான நூற்பகுதியைப் பிள்ளையவர்கள் முன்னர் வந்த பகுதிக்கு உரை வரையும் போது ஒப்பிட்டுக் காட்டுகின்றார். ஆக, மணிமேகலையில் வந்த தொடர்கள் முன்-பின்னாக இருந்தாலும் அவற்றைத் தக்க இடத்தில் ஒப்பிட்டுக் காட்டும் திறனைப் பிள்ளையவர்கள் தம் உரைப்பகுதியில் வெளிப்படுத்தக் காணலாம்.
தொகுத்ததை விரித்தல்
சீத்தலைச் சாத்தனார் நூலின் ஓரிடத்தில் தொகுத்துச் சொன்னதை பிறிதோரிடத்தில் அத்தொகுப்பின் விரிவை வெளிப்படுத்துகின்றார். நூலாசிரியரின் இத்திறனை உரையாசிரியரான பிள்ளையவர்கள் தக்கவாறு அவற்றைத் தம் உரையில் சுட்டிக்காட்டுகின்றார். அதாவது, "உயிரோடொரு நால்வகையணு" (மணி.27:113) என்று தொகுத்தோதியதை "நிலநீர் தீக்காற்றென" (மணி.27:116)ப் பின்னர் ஆசிரியர் விரித்திருக்கின்றார் என்று சுட்டிக்காட்டுவதால் உணரலாம். இதுபோல் இத்தன்மை நூல் முழுக்க விரவியிருக்கக் காணமுடிகின்றது.
தொடர்ச்சியைத் தொடர்தல்
நித்தியம் அநித்தியம் என்ற பந்தத்தின் இயல்பை உணர்த்த வந்த சாத்தனார்,
"நல்வினை யுந்தீ வினையுமவ் வினையாற்
செய்வுறு பந்தமும் வீடுமித் திறத்த" (மணி.27:175-176)
என்பதில் இருவினைகளை "அவ்வினையாற், செய்வுறு பந்தமும்" என்று கூறியவர் இவற்றின் தொடர்ச்சியாக,
"வருவழி ணிரண்டையு மாற்றி முன்செய்
அருவினைப் பயனனு பவித்தறுத் திடுதல்
அதுவ டாகும்" (மணி.27:199-201)
என்று முன்னிரு வினையை(நல்வினை, தீவினை)க் கூறாது, வீட்டினை மட்டும் கூறியிருக்கின்றார் என்று பிள்ளையவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்.
சுருக்கியதை விரித்தல்
"பாதம் பணிந்துதன் பாத்திர தானமும்" (மணி.28:74)
என்னும் தொடரில் மணிமேகலையின் கையிலுள்ள அமுதசுரபியை மாசாத்துவான் வியந்து நோக்கும் போது, அதன் பயனைப் பின்னர் விரித்துக் கூறவேண்டிய இடம் இருத்தலின், அதன் பயனைப் "பாத்திர தானம்" என்று சுருக்கிக் கூறினார் என்றும்; அதன் பிறகு அப்பாத்திர தானத்தின் பயனை அதே காதையில்,
"பங்கயப் பீடிகைப் பசிப்பிணி மருந்தெனும்
அங்கையி னேந்திய வமுத சுரபியை
வைத்துநின் றெல்லா வுயிரும் வருகெனப்
பைத்தர வல்குற் பாவைதன் கிளவியின்
மொய்த்த மூவறு பாடை மாக்களில்
காணார் கேளார் கான்முட மானோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
படிவ நோன்பியர் பசிநோ யுற்றோர்
மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும்
பன்னூ றாயிரம் விலங்கின் றொகுதியும்
மன்னுய ரடங்கலும் வந்தொருங் கீண்டி
அருந்தியோர்க் கெல்லா மாருயிர் மருந்தாய்ப்
பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும்
நீரு நிலமுங் காலமுங் கருவியும்
சீர்பெற வித்திய வித்தின் விளைவும்
பெருகிய தென்னப் பெருவளஞ் சுரப்ப" (மணி.28:217-232)
என்று விரித்துக் கூறினார் என்றும் பிள்ளையவர்கள் தம்முரையில் எடுத்துக் காட்டுகின்றார்.
விரித்ததைச் சுருக்குதல்
"மீட்சியொழிவறிவு" (மணி.27:11) என்னும் தொடர் இக்காதையின் 11ஆம் அடியில் மீட்சியாலறியும் ஒழிபளவையும் என்று விரித்துரைக்கும் ஆசிரியர், 53ஆம் அடியில் "மீட்சி" (மணி.27:53)யாகச் சுருக்கினார் என்று பிள்ளையவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்.
"உயிரும் வாயிலும் மனமுமூ றின்றி" (மணி.27:20) என்னும் தொடர் இக்காதையின் 20ஆம் அடியில் விரித்துக் கூறிய சீத்தலைச் சாத்தனார் அதே காதையில் 39ஆம் அடியில் "மாண்ட வுயிர்முதல்" எனச் சுருக்கினார் என்று கூறுகின்றார். அதாவது, "காண்பொருளும், இடைநிற்கும் ஒளி முதலியனவும், பொறியும், மனமும், உயிரும் என்ற ஐந்தனுள், காட்சிப் பயன் கோடற்கும், மனமும் பொறியும் காண்டலைச் செய்தற்கும், உயிர் இன்றியமையாமையின், "மாண்ட வுயிர் முதல்" என்றும், மனமும் பொறியும் குற்றமுற்ற வழிக் காட்சி நிகழாமையின், "மாசின்றாகி" யென்றும் கூறினார்; "உயிரும் வாயிலும் மனமுமூ றின்றி" (மணி.27:30) என்றதே மீளவும் கூறியது" (பக்.417) என்று பிள்ளையவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்.
"வானவன் விழாக்கோள் மாநக ரொழிந்தது
மணிமேகலா தெய்வ மற்றது பொறாஅள்
அணிநகர் தன்னை யலைகடல் கொள்கென
இட்டனள் சாபம்" (மணி.25:197-200)
என்று மணிமேகலா தெய்வம் இட்ட சாபத்தை விரித்துரைக்கும் ஆசிரியர் பின்னர் அச்சாபத்தைக் குறிக்குமிடத்து,
"மணிமேகலா தெய்வம், என்பவட் கொப்ப" (மணி.29:28-29)
எனச் சுருக்கியுரைத்தலைப் பிள்ளையவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்.
பிற நூலார் சுருக்குதலும் விரித்தலும்
மணிமேகலை ஆசிரியர் கூறிய ஒரு கருத்தை பிற நூலாசிரியர்கள் ஒத்தும் வேறுபடுத்தியும் விரித்தும் கூறியிருப்பதைப் பிள்யைவர்கள் தம்முடைய உரைப் பகுதியில் பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார். குறிப்பாக, சீத்தலைச் சாத்தனார் திட்டாந்தப் போலியைச் சாதன்மிய திட்டாந்தப்போலி என்றும், வைதன்மிய திட்டாந்தப்போலி என்றும் இரண்டு வகைப்படும் என்றும்; சாதன்மிய திட்டாந்தப் போலியானது சாதன தன்ம விகலம், சாத்திய தன்ம விகலம், உபய தன்ம விகலம், அநந்நுவயம், விபரீதாந்நுவயம் என்றும்; வைதன்மிய திட்டாந்தப்போலியானது சாத்தியா வியாவிருத்தி, சாதனா வியாவிருத்தி, உபயா வியாவிருத்தி, அவ்வெதிரேகம், விபரீத வெதிரேகம் என்றும் மேலும் ஐந்து வகையாகப் பகுக்கப்படும் என்கின்றார். சாத்தனாரின் இக்கருத்தை சில நூலாசிரியர்கள் ஏற்பதும், மாற்றுப் பெயர் வைப்பதும், வகைகளை விரித்துரைப்பதும் இருந்துள்ளதைப் பிள்ளையவர்கள் தம்முடைய உரைப் பகுதியில் சுட்டிக் காட்டுகின்றார்.
அதாவது, "நியாயப் பிரவேசமுடையாரும் இவ்வாறே சாதன்மியம் வைதன்மியம் என்ற இரண்டையும் தனித்தனியாக நிறுத்தி அவ்வைந்து வகையாக வகுத்துரைப்பர். ஆயினும் அவர் வகுத்துரைக்கும் பெயர்வகை சிறிது வேறுபடுகிறது. சாதன்மிய திட்டாந்தப் போலியைச் சாதன தன்மா சித்தம், சாத்திய தன்மா சித்தம், உபய தன்மா சித்தம், அநந்நுவயம், விபரீதாந்நுவயம் என்றும்; வைதன்மிய திட்டாந்தப் போலி வகையைச் சாத்தியவியா விருத்தம், சாதனவியா விருத்தம், உபயாவியா விருத்தம், அவ் வெதிரேகம், விபரீத வியதிரேகம் என்றும் கூறுகின்றார். பிரசத்தபாதந் (வைசேடிக பாடியம்) சாதன்மிய திட்டாந்தப்போலியைச் சாதன்மிய நிதரினாபாசமென்று கொண்டு, இலிங்கா சித்தம், அனுமேயா சித்தம், உபயா சித்தம், ஆசிரயா சித்தம், அனனுகதம், விபரீதானுகதம் என அறுவகையாகவும், வைதன்மிய நிதரிசனாபாசத்தை இலிங்கா வியா விருத்தம், அனுமேயா வியா விருத்தம், உபயா வியா விருத்தம், ஆசிரயா சித்தம், அவியா விருத்தம், விபரீத வியா விருத்தம் என அறுவகையாகவும் கூறுவர். தருமகீர்த்தி (நியாயபிந்து) யென்பார் இம்மணிமேகலை யாசிரியர் கொண்டதனைப் பெருக்கி இனத்துக்கு ஒன்பதாக வகுத்துரைக்கின்றார். பிற்காலத்து நையாயிகரான நியாயசாரமுடையார் ஒவ்வொன்றையும் பப்பத்தாக வகுத்துரைப்பர். இத்திட்டாந்தப் போலி, நையாயிகருட் சிலரால் உதாகரணாபாசம் என்று வழங்கப்படுகிறது. சைவாகமங்கள், சாதன்மிய திட்டாந்தப்போலியைச், சாதன வைகலியம், சாத்திய வைகலியம், உபய வைகலியம், சொரூப வைகலியம் என நான்காகவும், வைதன்மிய திட்டாந்தப் போலியைச் சாத்தியாபாவ விகலம், சாதனாபாவ விகலம், உபயா பாவ விகலம், ஆசிரயா பாவ விகலம் என நான்காகவும் வகுத்துக் கூறும்" (பக்.538) என்று சீத்தலையாரின் கருத்தைச் சுருக்குதலையும் விரித்தலையும் பிள்ளையவர்கள் தம்முரையுள் சுட்டிக் காட்டுகின்றார்.
ஒப்பீட்டுத் திறன்
உரைவேந்தர் பிள்ளையவர்கள் தம்முடைய உரைப்பகுதியில் மணிமேகலைக்கு ஒப்பான பிற நூல்களை ஒப்பிட்டு உரை வரைவதில் கைவந்தவராகத் திகழ்கின்றார். இவர்தம் உரைப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் மேற்கோள்களை நோக்கின் இவரின் ஒப்பீட்டுத் திறன் தௌ¢ளிதின் விளங்கும், பிள்ளைவர்கள் மேற்கோள்களை ஒப்பீடு செய்ததைப் பின்வருமாறு பகுக்கலாம்.
அ. மேலைநாட்டார் நூலோடு ஒப்பிடுதல்
ஆ. வடமொழி நூலோடு ஒப்பிடுதல்
இ. தமிழ் நூலோடு ஒப்பிடுதல்
அ. மேலைநாட்டார் நூலோடு ஒப்பிடுதல்
"சொல்லுதன் மூலப் பகுதிசித் தத்து
மானென் றுரைத்த புத்தி வெளிப்பட்
............. ............ ........... ..............
............. ............ ............ ..............
ஒன்றா யெங்கம் பரந்துநத் தியமாம்" (மணி.27:206-226)
என்னும் வரிகளுக்கு விளக்கம் கூறும் பிள்ளையவர்கள், "மூலப் பகுதியிலிருந்து மானென்னும் புத்தி தோன்றுமென்றும், அப் புத்தியிலிருந்து ஆகாயமும் அதிலிருந்து ஒன்றன்பின் னொன்றாய்ப் பரம்பரையாய் ஏனைப் பூதங்களும் தோன்றுமென்றும், அவற்றின் கூட்டத்தால் மனமும் அதிலிருந்து ஆங்காரமும் தோன்றுமென்றும், ஆகாய முதலிய பூதங்களிலிருந்து முறையே செவி முதலிய பொறிகளும் ஒலி முதலிய புலன்களும் தோன்றுமென்றும், மெய்யாகிய பொறியின் விகாரமாய் வாக்கு முதலிய கன்மேந்திரியங்களும், பூதங்களின் விகாரமாய் மலை மரம் முதலியனவும் தோன்றி யுலகாய் நிலவுமென்றும், இவ்வுலகம் முடிவில் தோன்றியமுறையே ஒடுங்குமென்றும், அம்மூலப்பகுதி ஒன்றாய் வியாபியாய் நித்தமாய் உள்ளதென்றும் கூறியவாறாம். இம்முறை பரமார்த்த ரென்னும் சீன நாட்டவர் எழுதிய சாங்கியக் கொள்கையுடன் பெரிதும் ஒத்திருப்பது ஆராயத்தக்கது" (பக்.437) என்று கூறுவதிலிருந்து பிள்ளையவர்கள் மேலைநாட்டவரின் நூலோடு தொடர்பு கொண்டிருக்கின்றார் என்பது புலனாகின்றது.
ஆ. வடமொழி நூலோடு ஒப்பிடுதல்
வடமொழி நூலமைப்பைப் போலவே மணிமேகலையில் சாங்கிய சமய அமைப்பைச் சாத்தனார் அமைத்திருக்கின்றார் என்று பிள்ளையவர்கள் ஒப்பிட்டாய்ந்து தம்முரையில் சுட்டிச் செல்கின்றார். "சாங்கிய பிரவசன சூத்திரம் முதன் மூன்று அதிகாரங்களில் சாங்கியநூற் கருத்துக்களையும், நான்காவதில் திருட்டாந்தங்களையும் ஐந்தாவதில் பரபக்கமறுதலையையும், ஆறாவதாகிய இறுதி யதிகாரத்தில் ஏனையவற்றுட் கூறியவற்றைத் தொகுத்தும் கூறுகிறது. அம்முறையே இம்மணிமேகலையும் முதற்கண் மூலப்பகுதியையும், பின் அதனோடியைபுடைய தத்துவங்களையும், அவற்றிற்குப் பிறகு புருடனையும் கூறி, முடிவில் அவற்றின் தொகை விரிகளைத் தொகுத்துக் கூறுவது குறிக்கத்தக்கது" (பக்.439) என்று கூறுவதிலிருந்து பிள்ளையவர்கள் வடமொழி நூலை எவ்வாறு தெரிந்திருக்கின்றார் என்பது புலனாகின்றது. இதுபோல் இவர்தம் உரைப்பகுதி முழுமையும் வடநூற் கருத்துகள் ஒப்பீடு செய்யப்பெற்றிருக்கின்றன.
இ. தமிழ்நூலோடு ஒப்பிடுதல்
முன்னர் சாங்கிய நூற்கொள்கையை வடமொழி நூலோடு ஒப்பீடு செய்தவர் அதனைத் தொடர்ந்து தமிழ்நூற் கருத்துகளோடும் ஒப்பீடு செய்திருக்கின்றார். "நீலகேசியுரைகாரர், "அந்தப் பிரகிருதியிற் பிறந்த மகானில் அகங்காரமாம்; அந்த அகங்கார தத்துவத்து மனசும் பஞ்சதன்மாத்திரையும், ஞானேந்திரிய மைந்தும், கன்மேந்திரிய மைந்துமாகப் பதினாறும் பிறக்கும்; பஞ்ச தன்மாத்திரையிற் பஞ்சபூதம் பிறக்கும்" (நீல.737.உரை) என்பர்; இனிப் பரிமேலழகர், மூலப்பகுதியின்கண் மானும் அதன்கண் ஆங்காரமும் அதன்கண் தன்மாத்திரையும் தோன்றுமென்று கூறி, "அவற்றின்கண் தோன்றிய மனமும் ஞானேந்திரியமும் கன்மேந்திரியமும் பூதங்களுமாகிய பதினாறும்" விகுதியாகுமென்றும், மானும் ஆங்காரமும் தன்மாத்திரை யைந்துமாகிய ஏழும் விகுதியும் பகுதியுமா மெனவும் கூறுவர். இருவர் கூற்றினும் வேறுபாடுணர்ந்து கொள்க" (பக்.437) என்று கூறுவதிலிருந்து பிள்ளையவர்கள் தமிழ் நூல்களோடு இருந்த ஈடுபாட்டைப் புலப்படுத்துகின்றது. இதுபோல் இவர்தம் உரைப்பகுதி முழுதும் தமிழ்நூற் கருத்துகள் ஒப்பீடு செய்யப்பெற்றிருக்கின்றன.
சிலப்பதிகாரம் - மணிமேகலை ஒத்த தொடரைச் சுட்டுதல்
இரட்டைக் காப்பியம் என்று வழங்கப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் சில தொடர்கள் ஒத்திருக்கின்றன. இவ்வாறமைந்த ஒத்த தொடர்களைப் பிள்ளையவர்கள் தம்முடைய உரைப் பகுதியில் எடுத்துக் காட்டுகின்றார். மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனார் வணிகர்களின் வகையை,
"கண்ணொடை யாட்டியர் காழியர் கூவியர்
மைந்நிண விலைஞர் பாசவர் வாசவர்
என்னுநர் மறுகு மிருங்கோ வேட்களும்" (மணி.28:32-34)
என்பதை இந்நூற்கு முன் நூலான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்,
"காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர்,
மீன்விலைப் பரதவர் வௌ¢ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோ
டோசுநர் செறிந்த வூன்மலி யிருக்கை" (சிலப்.5:24-27)
என்று குறிப்பிட்டிருப்பதை மணிமேகலை உரைப்பகுதியில் பிள்ளையவர்கள் சுட்டிக் காட்டுகின்றார். இதேபோல் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு செய்திகள் மணிமேகலையிலும் இடம்பெற்றிருப்பதைத் தக்கவாறு தக்கவிடத்தில் பிள்ளையவர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றார்.
நூலாசிரியரின் மாற்றுப்பெயர் சுட்டுதல்
மணிமேகலை உரைப்பகுதியில் இடம்பெறக்கூடிய நூலாசிரியர்களின் மாற்றுப் பெயர்களை பிள்ளையவர்கள் சிலவிடங்களில் குறிப்பிடுகின்றார். அதாவது, அக்கபாதரை கௌதமபுத்தர் (ப.421) என்றும், கணாதரை கணாசனர் (ப.421) என்றும், மற்கலியை மற்கலி கோசலர் (ப.426) என்றும், புத்தரை சுகதர் (ப.465) என்றும் குறிப்பிடுவதைக் காணலாம். இந்நூலாசிரியர்களை அக்காலத்தில் இருபெயரில் அழைக்கப்பட்டதைப் பிள்ளையவர்கள் இவ்வுரைப் பகுதியின் மூலம் தெளிவுபடுத்துகின்றார்.
நூலாசிரியரின் விடுபாட்டைச் சுட்டுதல்
புத்த மத நூல்கள் அனுமானம் என்பது இரண்டு வகைப்படும் என்று கூற சீத்தலைச் சாத்தனார் மட்டும் அனுமானம் ஒன்றே எனக் கூறுகின்றார். அனுமானம் இரண்டு வகை எனக் கூறியிருக்க வேண்டும் என்று பிற நூல்களைச் சான்று காட்டிப் பிள்ளையவர்கள் நூலாசிரியரின் விடுபாட்டைச் சுட்டிக் காட்டுகின்றார். அதாவது, "அனுமானம் தன் பொருட்டென்றும் பிறர் பொருட்டென்றும் இருவகைப்படும் என எல்லாப் புத்த நூல்களும் கூறியிருப்பவும், இவ்வாசிரியர் கூறாராயினார். இவ்வகைமையை ஏனோரும் மேற்கொண்டிருத்தலின் பதார்த்த தரும சங்கிரக முடையார் சுநிச்சிதார்த்தம் என்றும், பரார்த்தம் (பக்.231) என்றும், நியாயபிந்து டீகையுடையார் ஞானான்மகம், சத்தான்மகம் (பக்.21) என்றும், சத்த பதார்த்தியுடையார் அருத்தரூபத்வம், சத்தரூபத்துவம் (பக்.154) என்றும் கூறுப" (பக்.500) என்கின்றார்.
குறள் நடையில் மணிமேகலை
திருவள்ளுவரின் திருக்குறள் மக்களின் மனப்போக்கைப் பல்வேறு நிலைகளாக படம்பிடித்துக் காட்டுவது. இத்திருக்குறட் கருத்துகளை நூலாசிரியர்கள் தங்கள் தங்கள் நூல்களில் பலவிடங்களில் புகுத்தி அழகு பார்த்திருக்கின்றனர். இவ்வகையில் திருக்குறளை அப்படியே கையாண்டும், குறட் கருத்துகளை மட்டும் கையாண்டும் வெளிவந்த நூல்கள் பல. சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையிலும் திருக்குறளின் தாக்கம் இருப்பதை உரைவேந்தர் பிள்ளையவர்கள் தம்முடைய உரைப்பகுதியில் எடுத்துக்காட்டுகின்றார். "என்னோற்றான் கொல்லெனும் சொல்" (குறள்.70) என்னும் குறள் தொடர் போல மணிமேகலையில், "நினக்கிவர் தாயுந் தந்தையு மென்று, பிறர் சொலக் கருதல்" (மணி.27:76-77) என்னும் தொடர் அமைந்திருக்கின்றது என்கின்றார்.
பிறர் கருத்தைச் சுட்டும் விதம்
உரைவேந்தர் பிள்ளையவர்கள் மணிமேகலை உரைப்பகுதியில் மேற்கோளாகப் பல நூல்களையும் நூற்கருத்துகளையும் விளக்கமாகவோ குறிப்பாகவோ மேற்கோளாகவோ சுட்டிச்செல்கின்றார். அவ்வாறு சுட்டிச்செல்லும் போது பொதுவான சில நெறிமுறைகளைக் கையாண்டிருக்கின்றார். என்பர், என்பர் பிறரும், என்பார், என்ப, என்று சான்றோர் வழங்குமாறு காண்க, என்றும், என்று பிறரும் கூறுப, என்றார், என்பாரும் உளர், என்றார் பிறரும், என்பதும், என்பதும் காண்க, எனப் பிறரும் கூறுப, எனப் பிறரும் விளக்குப, சான்றோராற் குறிப்பிடப்படுமாறு காண்க, விளக்குப, இவற்றின் விரிந்த ஆராய்ச்சியை ..... முதலியோர் கூறிய நூல்களிற் கண்டுகொள்க, அவற்றையெல்லாம் விரிந்த நூல்களுட் கண்டு கொள்க, இவற்றின் விரிவை வடநூலுள் கண்டு கொள்க போன்றவாறெல்லாம் பிறர் நூல் கருத்துகளைக் கூறுமிடத்துப் பயன்படுத்தியிருக்கின்றார்.
வடவர்க்கும் முந்திய மேகலை
"சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி
விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்" (மணி.29:49-50)
என்னும் வரிகளுக்குப் பொருள் கூறப்புகுந்த பிள்ளையவர்கள் "எனச் சொலி விட்டனர்" என்பதால் பிறர்மேல் வைத்துக் கூறினார் என்பர். இதுபோல் அல்லாமல்,
"ஒட்டிய வுபநய நிகமன மிரண்டுந்
திட்டாந் தத்தி லேசென் றடங்கும்" (மணி.29:109-110)
என்னும் வரிகளுக்கப் பொருள் கூறப் புகுந்த பிள்ளையவர்கள் "திட்டாந்தத்திலே சென்றடங்கும்" என்பதால் பிறர்மேல் கூறாமல் சீத்தலைச் சாத்தனாரே தெளிந்து கூறியதாகக் கூறுகின்றார். மேலும், "அறவணடிகள் இருந்து அறங்கூறும் காஞ்சியம்பதியில் இருந்து வடநாடு சென்று சிறந்த திக்கநாகரும் பக்க முதலிய மூன்றுமே வடமொழி வாயிலாக வடவர்க் கறிவுறுத்தியிருக்கின்றார். இம்மூன்றனையும் முதன் முதலில் வடிகட்டி யுரைத்த ஆசிரியர் மணிமேகலை யாசிரியரென்ப தறியாது நாகார்ச்சுனரென்பார் தாமெழுதிய உபய கௌசல்ய சூத்திரமென்னும் நூலிற் கூறியுள்ளார் என்று கூறுவாரும் மூன்றாக வடிகட்டிய முதலாசிரியர் திக்கநாகரே யென்பாரும் உளர்" (பக்.506) என்று கூறுகின்றார். இவரின் இக்கூற்றுப்படி வடநூற் கருத்துக்கும் முந்தியதாக மணிமேகலைக் கருத்து நிலவுகின்றது என்று கூறுகின்றார்.
மேலும், பக்கப்போலி குறித்து உரை வரையப் புகும் பிள்ளையவர்கள் வடமொழி நூலான நியாயப்பிரவேசத்தின் வழி வந்ததே மணிமேகலை என்பாரின் கூற்றை மாற்றி மணிமேகலையின் வழி வந்ததே நியாயப்பிரவேசம் என்று நிறுவுகின்றார். அதாவது, "தமிழகத்தில் நிலவிய பௌத்தர்களிடையே பக்கப்போலி யொன்பது வகையாகப் பகுப்புண்டு நிலவிய காலத்தே வடநாட்டில் வடமொழி வாணரிடையே பிரத்தியக்க விருத்த முதலிய ஐந்துமே நிலவின; தமிழகத்திலிந்து வடநாடு சென்ற பௌத்தர்கள் பக்கப்போலி யொன்பது வகையினையும் எடுத்துக் கூறினர். அங்ஙனம் கூறியோருள் நியாயப்பிரவேச முடையார் தாம் முதன்முதலில் நூல் வாயிலாக வடமொழியில் வெளிப்படுத்தினார். அப்பிரசித்த சம்பந்தமென மணிமேகலையாசிரியர் முதலிய அக்காலப் பௌத்த ஆசிரியன்மார் உரைத்த பக்கப்போலியைப் பிரசித்த சம்பந்தமெனப் பிறழக் கொண்ட பிறழ்ச்சி முன்னுக்குப்பின் முரண்விளைத்து நிற்கின்றதென்றும், நியாயப்பிரவேசத்திற் குறிக்கப்பட்ட பிழை, பின்னே தமிழகத்திற் புலனாகாது திபேத்துக்கும் சீனாவுக்கும் சென்று மறுபடியும் வடமொழிக்குள்ளே சுழலத் தொடங்கினமையின், அதன் விருத்தியுரைகாரராதல் அவரிற் பின்வந்தோராதல் ஒருவரும் தமிழ் நூல்களை யாராய்ந்து திருத்தஞ் செய்து கொள்ளாதொழிந்தனரென்றும் அறிக. இவ்வுண்மையை நுனித்துணரும் மதுகையில்லாதாரர் சிலர், நியாயப்பிரவேசத்தின் வழி வந்த தாகும் இம்மணிமேகலையென்று கொண்டு ஈண்டுக் கூறப்படும் அப்பிரசித்த சம்பந்த முதலியவற்றிற்குத் தமிழ்நெறி யல்லாத முறையிற் பொருள் கூற முயன்று குன்றுமுட்டிய குரீஇப்போல இடர்ப்படுவாராயினர்" (பக்.518-19) என்பதால் அறியலாம்.
சொல் ஒன்று பொருள் பல
அனுமானம் என்று சொல்லக்கூடிய அளவைக்குக் காலங்காலமாக பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி வந்துள்ளனர். இக்கருத்தைப் பிள்ளையவர்கள் மணிமேகலை உரைப் பகுதியில் அனுமான அளவை பற்றி விளக்கும் போது விரிவாக எடுத்துரைக்கின்றார். அதாவது, "நியாய வார்த்திகை யென்னும் நூலுடையார், தெரியாததொரு பொருளையாதல், தெரிந்ததொரு பொருளையாதல் காண்டற்குப் பயன்படுவதன்றி, ஐயப் புலப்பொருளொன்றினைத் துணிதற்குப் பயன்படுவது அனுமானவளவை யென்றும், நியாய சாரமுடையார், பொறிகளின் காட்சியெல்லைக்கப்பாற்பட்டு நிற்குமொரு பொருளை அதனிற் பிரிப்பறத் தொடர்புற்று, அப்பொறிகளின் காட்சிக் ககப்பட்டிருக்கும் பிறிதொன்றின் வாயிலாகக் காண்டற்கு அனுமானம் அளவையாமென்றும், தத்துவசிந்தாமணி யாசிரியரான கங்கேசரும், சத்த பதார்த்தி யாசிரியரான சிவாதித்தரும் ஓரறிவைக் கொண்டு பெறலாகும் பிறிதோரறிவு அனுமான வறிவாம் என்றும் கூறுவர். இது குறித்து ஏனை வைசேடிகர், சாங்கியர், புத்தர், சமணர் முதலாயினோர் வேறு வேறு கூறியுள்ளனர்; அவற்றை அவ்வவர் நூல்களுட் காண்க" (பக்.412) என்பதால் அறியலாம்.
ஒரே சொல் வெவ்வேறிடங்களில் பொருத்துதல்
உவமவளவையை பல நூலாசிரியர்கள் பலவேறு வகைகளுக்கள் புகுத்தியிருக்கின்றனர். உவமவளவையை விளக்க வந்த உரைவேந்தர் பிள்ளையவர்கள் இம்மாறுபட்ட நிலையினை தம்முரையில் எடுத்துக் காட்டியிருக்கின்றார். அதாவது, "பொருளும் உவமமும் என்ற இரண்டனுள் உவமத்துக்கும் பொருட்கும் "சாதன சாத்திய பாவம்" இன்றியமையாது என்று நியாய பாடியம் (ii. 1-45) கூறுகிறது. இவ்வளவை நூலாரைப் போலவே சட்தரிசனமுச்சயம் என்னும் நூலாசிரியரான அரிபத்திரரும் இக் கவயமாவையே உவமளவைக்குப் பொருளாகக் காட்டுவர். இவ் வளவையை வைசேடிகர் கருதலளவைக் கண்ணும், சாங்கியரும் புத்தரும் காட்சிக் கண்ணும் அடக்கிக்கொள்வர். பூருவ மீமாஞ்சகரும் வேதாந்திகளும் இதனை மேற்கொண்டு இலக்கத்திற் சிறிது வேறுபடக் கூறுவர்" (பக்.413) என்பதால் அறியலாம்.
தாமறியாத நூற்கருத்துகளைச் சுட்டுதல்
உரைவேந்தர் பிள்ளையவர்கள் மணிமேகலைக்கு உரை வரைந்த போது பல்வேறு வகையான நூல்களை மேற்கோள்களாகக் கையாண்டிருப்பது தெரிந்ததே. ஆனால், சில கருத்துகள் எந்த நூலில் இருந்ததென்பது தெரியாதை தெரியாததாகக் காட்டுகின்றார்.
"பேதைமை செய்கை யென்றிவை யிரண்டும்
காரண வகைய வாத லானே
இரண்டாங் கண்ட மாகு மென்ப" (மணி.30:135-137)
என்னும் வரிகளுக்கு விளக்கம் கூறும் பிள்ளையவர்கள் "கண்டம் நான்காகப் பகுத்துக் கூறும் முறை வடநூல்களுள் எதன்கண் உளது என்பது தெரியவில்லை. "என்ப" எனப் பிற ஆசிரியர்மேல் வைத்தோதுதலால், இப்பாகுபாட்டினை யுணர்த்தும் நூல்கள் இருந்திருக்க வேண்டுமென்ப தொருதலை" (பக்.580) என்பதால் அறியலாம்.
முடிவுரை
மணிமேகலையின் இறுதி நான்கு காதைகளுக்கு உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளையவர்கள் தௌ¢ளிய உரை வரைந்திருக்கின்றார். இவ்வுரையில் பிள்ளையவர்களின் உரைத்திறன் பல நிலைகளில் வெளிப்பட்டிருக்கக் காண்கின்றோம். இவரின் வடமொழிப் புலமை, தமிழ்ப் புலமை, மேலைநாட்டார் கருத்துகளில் இவருக்குள்ள ஆர்வம், ஆங்கில நூற் புலமை, சுவடிப் பயிற்சி ஆகியவற்றிலெல்லாம் தலைசிறந்து விளங்கியதால் தான் இவரால் தெளிவான உரை வரைந்திருக்க முடிகிறது எனலாம். இவரின் உரையில் மேற்கோள் அமைக்கும் விதம், முன்-பின் வந்த தொடர்களைச் சுட்டுதல், பாடவேறுபாடுகளை இனங்கண்டு சுட்டுதல், பிற நூல் கருத்துகளை மணிமேகலை கருத்துகளோடு இணைத்து மணிமேகலையை முந்தியிருப்பச் செய்த தன்மை, குறள் மற்றும் சிலப்பதிகார நூல் கருத்தை மணிமேகலை சுட்டிய விதத்தைக் கூறுதல், இலக்கணக் குறிப்பு சுட்டுதல், அருஞ்சொற்பொருள் காட்டுதல், பதவுரை மற்றும் விளக்கவுரை தருதல், சொல்லாய்வில் ஒருசொல் வேறுவேறு பொருள் உணர்த்துவதையும், ஒரே சொல் வேறுவேறு வகைகளுக்குள் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டுதல் போன்ற பல்வேறு வகையான திறன்களை பிள்ளையவர்கள் தம்முடைய உரைப்பகுதியில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இவற்றையெல்லாம் காணும்போது உரைவேந்தர் அவர்களே மணிமேகலை முழுமைக்கும் உரைவரைந்திருந்தால் இவரின் உரைத்திறன் பன்மடங்கு உயர்ந்திருக்கும் என்றால் அது மிகையல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக