கோவை சிரவையாதீனத்தின் மூன்றாம் பட்டத்தில் வீற்றிருந்த தவத்திரு சுந்தர சுவாமிகள் உலக நம்மைக்காக 108 யானைகளை நிறுத்திக் கஜபூஜை என்னும் உலகப் பெருவேள்வியை 1987இல் மார்ச்சு மாதம் மூன்று நாட்கள் நடத்திப் பெரும்பேரெய்தியவர். இதனாலேயே
இவருக்கு கஜபூஜை சுவா மிகள் என்ற பட்டப்பெயர் நின்று நிலவுவதாயிற்று. இவருடைய
உரைநடை ஆக்கங்களும், செய்யுட் படைப்புக்களும் தனித்தனி தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இந்நிலையில்,
தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகளின் பனுவல் திரட்டாக வெளிவந்துள்ள “சுந்தரர் சொற்றமிழ்” என்னும் தொகுப்புநூல் கஜபூஜை சுந்தர சுவாமிகள் 16ஆம் ஆண்டு குருபூசை வெளியீடாகவும், சிரவைக் கௌமார சபை வெளியீட்டெண்.285ஆவதாகவும் 21.05.2010இல் வெளிவந்துள்ளது. இந்நூலில்
இடம்பெற்றுள்ள முருகன் பற்றிய பாடல்களில் தவத்திரு சுந்தர சுவாமிகளின் முருகாளுமையை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
இரத்தினாசலம் என்கிற சரவணம்பட்டி குமரக்கடவுள் பதிகம் (சுந்தரர் சொற்றமிழ், பா.55-69), கீரநத்தம் (கீரணம்) சென்னியாண்டவர் பதிகம் (பா.253-268), கொங்கணகிரி கந்தசாமி பெருமான் பதிகம் (பா,281-296), சித்தோடு பாலதண்டபாணிக் கடவுள் பதிகம் (பா.397-410), சிரவையாதீனம் கௌமாரமடாலயம் தண்டபாணிக் கடவுள் திருப்பள்ளியெழுச்சி (பா.447-456), குமரகுருபரக்கடவுள் மாதப் பதிகம் (பா.457-469), குமரகுருபரக்கடவுள் வாரப் பதிகம் (470-476), பூராண்டாம்பாளையம் முத்துக்குமாரசாமி போற்றிப் பதிகம் (பா.591-600), பெரிய நாயக்கன் பாளையம் கல்யாண சுப்பிரமணியர் பதிகம் (பா.612-623), மருதமலை தண்டபாணிக் கடவுள் பதிகம் (பா.706-721), மேட்டுப்பாளையம் பாலதண்டாயுதபாணி பதிகம் (பா.738-749) போன்ற பதினொரு முருகன் பற்றிய பனுவல்களில் 128 பாடல்களும், அரசூர் தங்கநாயகி அம்மை பதிகத்தில் தண்டபாணிக்கடவுள் திருப்புகழ் (சுந்தரர் சொற்றமிழ், பா.29), உடையாம்பாளையம் விசாலாட்சியம்மை பதிகத்தில் முருகப்பெருமான் திருப்புகழ் (பா.93), இராயப்பெருமான் பதிகத்தில் முருகப்பெருமான் துதி (பா.160), கணவாய்ப்பாளையம் கருணாம்பிகை அம்மன் பஞ்சரத்தினத்தில் முருகப்பெருமான் துதி (பா.207, 208), பூராண்டாம்பாளையம் பதிகத்தில் முருகக்கடவுள் துதி (பா.577), பொள்ளாச்சி இராமபட்டணம் கிராமம் இராமநாதபுரம் பத்திரகாளியம்மன் பதிகத்தில் முருகன் துதி (பா.658) போன்றவற்றில் 7 பாடல்களும் ஆகச் சுந்தரர் சொற்றமிழில் கஜபூஜை சுந்தர சுவாமிகள்135 பாடல்கள் முருகனைப் பற்றியதாகப் பாடியிருக்கின்றார்.
இரத்தினாசலக்
குமரக்கடவுள்
பதிகம்
கோயம்புத்தூருக்கு வடக்கே சத்தியமங்கலப் பெருவழிப் பாதையில் அமைந்துள்ள சரவணம்பட்டியை அடுத்து அமைந்துள்ள மணிக்குன்றே இரத்தினாசலம் என்னும் இரத்தினகிரி. இவ்வூர்
முன்னர் செவ்வணன்பட்டிக்கரடு என வழங்கப்பட்டது. இவ்
மணிக்குன்றில் வீற்றிருக்கும் முருகன்பெருமான் மீது சுந்தர சுவாமிகள் இரத்தினாசலக் குமரக்கடவுள் பதிகம் பாடியுள்ளார். இந்நூல்
காப்பு வெண்பா 1ம், எழுசீர் ஆ சிரிய விருத்தப்
பாடல்கள் 12ம் ஆகப் பதின்மூன்று
பாடல்களால் ஆனது. “இரத்தின
கிரிவாழ், குமரனே அமரர் நாயகனே!” என்பது இந்நூற் பாடல்களின் மகுடமாக அமைந்திருக்கிறது.
இப்பதிகத்தில் சிறப்பம்சங்கள் பல இருக்கின்றன.
குறிப்பாக, முருகப்
பெருமான் தினைப்புனத்தில் வேடனாகி, வேங்கை மரமாகி, வயது முதிர்ந்த முனிவனாகிப் பின் குறமகள் வள்ளியை மணஞ்செய்து கொண்ட காட்சியைச் சுந்தரசுவாமிகள்,
“மறவர்கோன் ஆகி, வேங்கைஆய்ப் பின்பு
மாதவ முனிவனும் ஆகிக்
குறமகட் கொண்டாய்!” (பா.61:3-4)
என்பதால்
நன்கு விளங்கும். மேலும்,
கீரநத்தம் சென்னியாண்டவர் பதிகத்திலும் இதே கருத்தினை எடுத்தோதுகின்றார். அதாவது,
“உருமறைத் தந்நாள் வள்ளிநா யகிமா
உவந்தவா!” (பா.260:2)
என்ற
வரி உணர்த்தக் காணமுடிகிறது.
கல்வியிற் சிறந்த பிரம்மனை யாரிடமும் முருகப் பெருமான் கற்றதாக கந்தபுராணம் கூறாததில் இருந்து கற்ற பிரம்மனை கல்லாத முருகப்பெருமான் ஓம் என்ற மந்திரத்திற்குப் பொருள் விளக்க முடியாதபடி சிறை வைத்து, சிவனார் மகிழும்படி வேதாந்தப் பொருளை தெளிவுற விளக்கி தகப்பன் சாமியாக ஆனவர் முருகப் பெருமான் என்பதை சுந்தரசுவாமிகள்,
“படித்த மாமறை வேதியன்
அழச்செய் தேமறை தோய்பொருள்
பயிற்று தேசிகன் ஆகிய முருகோனே!” (பா.68:3)
என்பதால்
உணர முடிகிறது. மேலும்,
கீரநத்தம் சென்னியாண்டவர் பதிகத்தில் வேதத்திற்குப் பொருள் சொல்ல முடியாமல் தவித்த பிரம்மனைச் சிறைப்படுத்திய செய்தியை,
“திருமறை யவனைக் குட்டி, வன்சிறையில்
தளர்வுறத் தளைசெய்யும் தலைவா!” (பா.260:3)
என்பதால்
உணர முடிகிறது.
கீரநத்தம் சென்னியாண்டவர்
பதிகம்
கோயம்புத்தூர் - சத்தியமங்கலப் பெருவழிப் பாதையில் அமைந்துள்ள சரவணம்பட்டிக்கு அடுத்துள்ள இரத்தினகிரிக்கு வடக்கே உள்ளது கீரநத்தம். கி.பி.1865ஆம் ஆண்டு இவ்வூரில் சென்னியண்டவர் என்னும் முருகப் பெருமான் திருக்கோயில் தோற்றுவிக்கப்பட்டது. இக்கோயிலில்
குடிகொண்டிருக்கும் சென்னியாண்டவர் மீது சுந்தர சுவாமிகள் கீரநத்தம் சென்னியாண்டவர் பதிகம் பாடியுள்ளார். இந்நூல்
காப்பு வெண்பா 1ம், எழுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்கள் 12ம் ஆகப் பதின்மூன்று
பாடல்களால் ஆனது.
இப்பதிகத்தில் பல சிறப்பம்சங்கள் பல
வீற்றிருக்கின்றன. குறிப்பாக, மாமரத்தின்
வடிவாக மாறுவேடத்தில் இருந்த சூரனை அடையாளம் கண்டு அவனுக்குப் பயந்து இருந்த பிரம்மனையும், மன்மதனையும், இயமனையும் காப்பாற்றியவன் முருகப்பெருமான் என்பதை சுந்தரசுவாமிகள்,
“கஞ்சமா மலரோன், மாயவன், மதவேள்
காலன்என் றிடுமவர் கரத்தில்
தஞ்சம்ஆய் அடியேன் நைவுறா தாண்டுன்
சரணம்ஏத் திடஅருள் தருவாய்” (பா.255:1-2)
என்கின்றார். மேலும்,
முருகப் பெருமானின் தோற்றத்திற்குப் பிறகு பார்வதி தேவியின் சிலம்பின் நவரத்தினப் பரல்களில் இருந்து வீரவாகு முதலிய நவ வீரர்கள் தோன்றினார்கள்
என்றும் அவர்களுக்கு படைவீரர்களாக ஒரு இலட்சம் பேர் தோன்றினார்கள் என்றும் கூறும் புராணச் செய்தியைச் சுந்தரசுவாமிகள்,
“கயிலையில் உமையாள் காற்சிலம் பிடையே
கவினவந் திடுநவ வீரர்
பயிலவாழ் இலக்கம் வீரர்பூ தரும்சூழ்
பரமனே!” (பா.256:1-2)
என்று
கூறுவதால் பதிகங்களில் அவரின் புராண ஆளுமை வெளிப்படுகிறது.
இதுவரை முருகன் பதிகங்களில் சுந்தர சுவாமிகளின் முருகாளுமை பற்றிக் கண்டோம். இனி,
சுந்தர சுவாமிகளின் பிற பதிகங்களில் முருகாளுமை பற்றிக் காணலாம்.
அரசூர் தங்கநாயகி அம்மை பதிகத்தின் இறுதியில் தண்டபாணிக் கடவுள் திருப்புகழ் இடம்பெற்றுள்ளது. இத்திருப்புகழில்
முருகப்பெருமானை திருமாலின் மருகர் என்று விளிக்கின்றார். அதாவது,
மகாபாரத்தில் பாஞ்சாலிக்கு உரிய நேரத்தில் வந்து ஆடை வழங்கி காத்த
திருமாலின் மருகன் திருமுருகன் என்கிறார். இதனை,
“கருமேகம் என்று நீடு குழல்சோர நின்ற மாது
களிகூர வந்த மாயன் மருகோனே!” ( பா.29:3)
என்கின்றார்.
முருகப்பெருமானின் திருமுகம் எத்தன்மைத்து என்றும், அவனுடைய வேலும் புயமும் எத்தன்மைத்து என்றும் அவனுடைய முத்திரைகள் எத்தன்மைத்து என்றும், வாகனம் எத்தன்மைத்து என்றும் சுந்தர சுவாமிகள்பூராண்டாம்பாளையம்
பதிகம் முருகக் கடவுள் துதியில் பின்வருமாறு காட்டுகிறார்.
“ஆயிரம்மன் மதன்உருவம் அனையதிரு முகமும்,
அயில்வேலை
அணிபுயமும், அபயவர தம்கொள்
சேயதிருக் கரமலரும், செந்தகைச்சே வடியும்
சிறியேன்முன்
சிகிப்பரியில் திகழ்ந்தருள வேண்டும்
மேயநில வளத்துடனே நீர்வளமும் பொருந்தி
மேவுசெல்வர்
அறம்புரியும் மேன்மைஉளத் துடனே
தூயதிருப் பணிசெய்யும் பூராண்டாம் பதியில்
துலங்குசிவ
சுதபால சுப்பிரமண் ணியனே!” (பா.577)
என்பதின்
வாயிலாக ஆயிரம் மன்மதனின் முகத்திற்கு ஒப்பானது நம்முடைய முருகனின் அழகு
முகம் என்று கூறும் பாங்கு சுவாமிகளின் உளப்பாங்கு தெளிவாகிறது. இதுபோன்று
இவரது பாடல்களில் முருகன் பெருமானின் செயற்பாடுகளையும் முருகாளுமைகளையும் தனியொரு ஆய்வாக மேற்கொள்ள வேண்டும் என்பது அவா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக