ஞாயிறு, 23 டிசம்பர், 2018

நெசவாளர் கொண்டாடும் “தறிபுகு விழா”

மனிதனின் மிக முக்கியத் தேவைகளில் ஆடையும் ஒன்று.  இவ்வாடையைத் தயாரிப்பவன் 'நெசவாளி'.  நெசவாளியின் தொழில் 'நெசவுத் தொழில்'.  இத்தொழில் செய்யும் பொருளினைக் கொண்டு இவற்றை இரு நிலைகளாகப் பிரிக்கலாம்.  அவை ஒன்று, கைத்தறி; மற்றொன்று, விசைத்தறி. நெசவு செய்யப் பயன்படுத்தப்படும் நூலினை அடிப்படையாகக் கொண்டும் இத்தொழிலினை இரு நிலைகளாகப் பிரிக்கலாம்.  அவை ஒன்று, பருத்தி நெசவு; மற்றொன்று பட்டு நெசவு. அண்மைக் காலமாக நெசவாளர்களிடையே விசைத்தறியின் மோகம் அதிகரித்து வருவதால் கைத்தறி செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  தமிழ் நாட்டில் தொண்டை மண்டலத்தின் வடக்குப் பகுதியில் செங்குந்தர்கள் அதிகம் வசிக்கும்  பள்ளிப்பட்டு வட்டம் (பொதட்டூர் பேட்டை, சொரக்காய் பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை, இராமகிருஷ்ணராஜி பேட்டை, வங்கனூர், அம்மையார்குப்பம்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள புச்சிரெட்டிபள்ளி, நல்லாட்டூர், நல்லவாடம்பேட்டை, மத்தூர், மத்தேரி, சிந்தலபட்டடை, குருவராஜி பேட்டை, பனப்பாக்கம், ஆரணி, சோளிங்கர், ஏகாம்பரகுப்பம், நாராயணவனம், சத்திரவாடா போன்ற பகுதிகளில் தமிழரின் ஆண்டுத் தொடக்கமான தைப்பொங்கலுக்குப் பின் நெசவுத்தொழில் செய்வதை ஒரு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.  இவ்விழாவே தறிபுகு விழா எனப்படும்.  இவ்விழா காலப்போக்கில் காலத்தின் தேவைக்கு ஏற்ப எப்படி மாறிவிட்டது என்பதையும், அதன் இன்றைய நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் இரண்டாம் வார நன்னாளில் தறியில் புகுதலே 'தறி புகுதல்' என்பர்.  இந்நாளை நெசவாளர் அனைவரும் விழாவாகக் கொண்டாடுவர்.  இவ்விழாவே 'தறி புகு விழா' எனப்படும்.  இத்தறி புகு விழா ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் நடத்தப்பெறுகிறது.  தை மாதமே ஆண்டின் தொடக்கமாக இவர்கள் கருதுகின்றனர்.  இந்தியாவில் இந்துக்கள் சூரிய ஆண்டையும், முகமதியர்கள் சந்திர ஆண்டையும் குறிப்பிடுவர்.  சூரிய ஆண்டுக்குள் இடம்பெறும் நாள்கள் சூரியனின் உதய காலத்தை அடிப்படையாகக் கொண்டும், சந்திர ஆண்டுக்குள் இடம்பெறும் நாள்கள் சந்திரனின் உதய காலத்தை அடிப்படையாகக் கொண்டும் தொடங்கும் என்பர். நாட்டில் சூரிய வழிபாடு இடத்திற்கு இடம் தொழிலுக்குத் தொழில் மாறுபட்டமைவதைக் காணமுடிகிறது.  இந்நிலையில், நெசவாளர்கள் தங்களின் ஆண்டுத் தொடக்கம் நன்றாக அமையவேண்டும் என்று சூரியனை வணங்கித் தங்கள் தொழிலைத் தொடங்குகின்றனர்.  

மார்கழி மாத இறுதி, போகியன்று தங்கள் தொழிலை நிறுத்தும் நெசவாளர்கள் தை மாதம் முதல் வாரம் முழுவதும் தைப்பொங்கல் கொண்டாடுகின்றனர்.  இரண்டாம் வாரம் 'மயிலேறி' (தைப்பொங்கல் நாளிலிலிருந்து எட்டாம் நாள்)க்கு அடுத்த ஒரு நல்ல நாளில் தறி புகுகின்றனர்.  இந்நாளை ஊர்ப் பெயரியவர்கள் தண்டோரா மூலம் அறிவிப்பர்.  அறிவித்த நாளன்று நெசவாளர்கள் அனைவரும் தங்கள் ஊரில் இருப்பர்.  வெளியூர் சென்றவர்களும் ஊர் திரும்பிவிடுவர்.

குறிப்பிட்ட நாள் வந்தவுடன் அதிகாலையில் குடும்பத்தார் அனைவரும் குளித்துவிட்டு வீட்டைச் சுத்தம் செய்து தெருவில் கோலம் போடுவர்.   பின்னர் கைத்தறிப் பொருட்கள் அனைத்தையும் நீர் விட்டுக் கழுவியும் துடைத்தும் சுத்தம் செய்வர்.  அதன்பின், விபூதி, சந்தனம், குங்குமம் மற்றும் பூ ஆகியவற்றைக் கொண்டு தறி மற்றும் அதற்குப் பயன்படும் ஏனைய உபகரணங்களுக்கு அலங்காரம் செய்வர்.  அன்று போட்ட பசுஞ்சாணத்தைக் கொண்டு சாணப்பிள்ளையார் செய்வர்.  இச்சாணப்பிள்ளையாரைச் சந்தனம், குங்குமம் மற்றும் அருகம்புல்லால் அலங்காரம் செய்வர்.  இச்சாணப்பிள்ளையாரைக் கைத்தறிக்குப் பக்கத்தில் கதிரவன் ஒளிபடும் இடத்தில் வைப்பர்.  ஊறவைத்த பச்சரியுடன் வெல்லம் கலந்து ஒரு தட்டில் சாணப்பிள்ளையாருக்கு எதிரில் வைப்பர்.  அடுத்த தட்டில் பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் மற்றும் மாவிளக்கு வைப்பர்.

ஊர்ப் பெயரியவர்கள் குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் நெசவாளர் அனைவரும் மாவிளக்கேற்றி கதிரவனை நோக்கிச் சாணப்பிள்ளையாரின் எதிரில் ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் காட்டித் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வர்.  குடும்பத்தார் அனைவரும் இவ்வழிபாட்டில் கலந்துகொள்வர்.

இவ்வழிபாடு முடிந்தவுடன் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் நெசவுத் தொழிலில் தங்கள் தங்களின் பணிகளைச் செய்யத் தொடங்குவர்.  முதலில், குடும்பத்தில் குடும்பத் தலைவியோ அல்லது பெண் பிள்ளையோ பல்லை இராட்டினம் கொண்டு பல்லையில் நூல் சுற்றிப் பின் தார் இராட்டினத்தில் தார் சுற்றுவர்.  அடுத்து, குடும்பத் தலைவரோ அல்லது ஆண்பிள்ளையோ புதியதாகத் திரித்த தார் எடுத்துக்கொண்டு தறியில் புகுந்து நெசவு செய்வர்.  அதன்பின் ஒவ்வொருவராகத் தறியில் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக நெசவு செய்வர்.  கூலியாட்கள் இருப்பின் அவர்களும் அவர்கள் பணிபுரியும் வீட்டினரின் தறியில் தறி புகுந்து நெசவு செய்வர்.  அதன் பின்னர், படைத்த பச்சரிசி, வெல்லம், தேங்காய் ஆகியவற்றைக் கலந்து குடும்பத்தார் அனைவரும் உண்டு சுற்றத்தாருக்கும் கொடுத்து மகிழ்வர்.  இம்மகிழ்ச்சி என்றும் நிலைக்க சூரியனையும் முழுமுதற் கடவுளான சாணப்பிள்ளையாரையும் வணங்கி வழிபடுவர்.  

இதற்குப் பிறகு தாங்கள் நூல் பெறும் மளிகை(நூல் வழங்கும் இடம்)க்குக் குடும்பத்தலைவர் சென்று புதிய கணக்குத் தொடங்கி நூல், பணம், இனிப்பு ஆகியவற்றைப் பெற்று வருவர்.  இவ்வாறு ஆண்டுத் தொடக்கத்தில் பெறுவதால் ஆண்டு முழுவதும் மென்மேலும் தொழில் வளர்ச்சி பெற்று மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.  இதுவே தறிபுகு விழாவன்று நிகழ்த்தும் நிகழ்ச்சியாகும்.

நெசவுத் தொழிலின் துணைத் தொழில்களில் ஒன்றான பாவு சுற்றுதல் என்பது மட்டும் பிறிதொரு நெசவாளி செய்து கொடுப்பதாகும்.  பாவு சுற்றுதல் என்பது பொந்தாக இருந்த வண்ண வண்ண நூலினைச் சிலப்பையாக எடுத்து, கொமக்கோல் மற்றும் குச்சி இராட்டினம் கொண்டு பல்லை இராட்டினத்தில் பல்லையில் சுற்றுவர்.  இவ்வாறு சுற்றிய பல்லை நூலினைப் பாவு சுற்றுபவர் பாவு ஆலையில் நெசவு செய்யப்படும் வண்ணத்திற்கொப்ப வண்ண நூல் சுற்றப்பட்ட பல்லைகளை வைத்து பாவு ஆலையில் பாவு சுற்றுவர்.  இந்தப் பாவு 100 முதல் 150 மீட்டர் வரை இருக்கும்.  இத்தொழில் செய்வதற்கு நான்கு கைத்தறி போடும் அளவிற்கு இடவசதி தேவைப்படுவதால் இத்துணைத்தொழில் மட்டும் குடும்பத்து உறுப்பினர்களால் மேற்கொள்ளாமல் பிறிதொரு நெசவாளியால் செய்து தரப்படுகிறது.  இத்தொழிலினைப் பெரும்பாலும் கைம்பெண்களே செய்கின்றனர்.  சில ஆண்களும் செய்கின்றனர்.  நெசவுத் தொழில் சார்ந்த இந்தப் பாவு சுற்றுதல் தொழிலும் தைப்பொங்களுக்கு அடுத்த தறிபுகு விழா நாளிலேயே ஊர்ப் பெயரியவர்கள் குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் மாவிளக்கேற்றி கதிரவனை நோக்கிச் சாணப்பிள்ளையாரின் எதிரில் ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் காட்டித் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வர்.  அதன் பின்னர், படைத்த பச்சரிசி, வெல்லம், தேங்காய் ஆகியவற்றைக் கலந்து குடும்பத்தார் அனைவரும் உண்டு சுற்றத்தாருக்கும் கொடுத்து மகிழ்வர்.  

தை மாத முதலில் பாவு ஆலையில் முதல் பாவு ஏற்றுவதற்குக் கடும் போட்டி நிலவும்.  முதல் பாவு ஏற்றுவதற்குச் சில நாட்களுக்கு முன்னதாகவே பாவு சுற்றுபவரிடம் என்னுடைய பாவு முதலில் சுற்றவேண்டும் என்று சொல்லிச் செல்வர்.  பலர் இவ்வாறு சொல்லிச் செல்வதால் பாவு சுற்றுபவர்க்கு முதல் பாவு சுற்றுவதில் கடும் சிக்கல் ஏற்படும்.  முதன் முதலில் தன்னுடைய பாவு சுற்றினால் ஆண்டு முழுவதும் நிறைய பாவு சுற்றலாம் என்று நம்புகின்றனர்.  பெரும்பாலான நெசவாளர்கள் கூட்டுக் குடும்பமாகவே இருப்பதால், இச்சிக்கலைப் போக்குவதற்குப் பாவு சுற்றுபவர் பெரும்பாலும் தனக்கோ அல்லது தன்னுடைய மகன்களுக்கோ பாவு சுற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பார்.  பாவு ஆலையில் முதல் பாவு சுற்றிக் கொள்ள நெசவாளர்களிடையே கடும் போட்டி நிகழும்.  முதல் பாவு சுற்றுதல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடுவதாகக் கருதி இக்கடும் போட்டி நிகழும். 
இன்னொரு துணைத்தொழில் நூலிற்கு வண்ணம் போடுதல்.  வண்ணம் போடுதலும் நெசவுத் தொழிலில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  பருத்தியில் இருந்து காரிகமாக வரும் நூலிற்கு வண்ணம் கொடுக்கப்படுகிறது.  வௌ;ளை, கருப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை போன்ற பல்வேறு வகையான வண்ணங்கள் காரிக நூலிற்குத் தரப்படுகிறது.  இவ்வாறு வண்ணம் கொடுப்பவர்கள் சாயப்பட்டறையை வைத்து வண்ணம் கொடுக்கின்றனர்.  ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் தைப் பொங்கலுக்குப் பிறகு சாயப்பட்டறையில் தொழில் தொடங்கும் முன் முன்னர் குறிப்பிட்டது போல் விழாவெடுத்து சூரிய வழிபாடு செய்து தொடங்குகின்றனர்.

இவ்விழா இத்துடன் நின்றுவிடுவதில்லை.  இதன் தொடர்ச்சியாக நெசவுத் தொழில் சார்பான துணைத்தொழில்கள் தொடங்கும் ஒவ்வொரு நாளிலும் அதற்கேற்ப விழா எடுக்கின்றனர்.

நூல் மளிகையில் முதலில் பெற்று வந்த நூலை இழைத்துப் பாவு ஆலை கொண்டு கையால் சுற்றிப் பாவாக்குகின்றனர்.  இப்பாவைத் தெருவில் தோயும் போதும் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.  தெருவில் போடும் ஒவ்வொரு குடும்பத்து முதற் பாவிற்கும் முன்னர் சொன்னது போல் கதிரவன்-சாணப்பிள்ளையார் வழிபாடு நிகழ்த்துவர்.  இவ்வழிபாடு நிகழ்த்தாமல் தை மாத முதல் பாவை எவரும் வீட்டிற்குள் எடுத்துச் செல்வதில்லை.  அதாவது, பாவு ஆலை கொண்டு சுற்றிய பாவை தறி புகு விழாவன்றோ அல்லது அதற்கு அடுத்த தமக்குகந்த நல்லதொரு நாளில் தெருவில் பாவு தோய்கின்றனர்.  சூரியன் உதயமாவதற்கு முன்னமே தெருவில் சாணப்பிள்ளையாரைப் பாவு போடும் மேற்கிலிருந்து கிழக்கு,  தெற்கிலிருந்து வடக்கு, வடக்கிலிருந்து தெற்குத் திசையில் வைத்து கற்பூர தீபம் காட்டி குதிரை கட்டுவதற்குக் கடப்பாறை தட்டுவர்.  அதன் பிறகு பாவு விரித்து இழைப் போக்குகளைச் சரிசெய்து, கஞ்சி ஊற்றிப் பிசைந்து ஈர நூலாக்குவர்.  இவ்வாறான ஈர நூலினை விரித்து காற்றாற்றிப் பசை போடுவர்.  பசை நூல் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க புணியில் அலகு கொண்டு நூலினைப் பிரித்து தனித்தனியாக ஆக்குவர்.  பசை காய்ந்தவுடன் விரிந்த நிலையில் பாவை உருளை கொண்டு சுற்றுவர்.  இவ்வாறு பாவு பசை போட்டு சுற்றி முடித்த பிறகு தெருவில் சாணப்பிள்ளையாரின் எதிரில் ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்வர்.  குடும்பத்தார் அனைவரும் இவ்வழிபாட்டில் கலந்துகொள்வர்.  அதன் பின்னர், படைத்த பச்சரிசி, வெல்லம், தேங்காய் ஆகியவற்றைக் கலந்து குடும்பத்தார் அனைவரும் உண்டு சுற்றத்தாருக்கும் கொடுத்து மகிழ்வர்.  

கைத்தறித் தொழிலில் அதனைச் சார்ந்த துணைத்தொழில்களில் நூலிற்கு வண்ணம் போடுதல் மற்றும் பாவு சுற்றுதல் தவிர்த்து ஏனைய துணைத் தொழில்களான நூலிழைத்தல், பாவுக்குப் பசை போடுதல், தறியில் பிணைத்தல், தார் சுற்றுதல், நெசவு செய்தல் போன்ற அனைத்து செயல்களையும் ஒரு குடும்பத்து உறுப்பினர்களே செய்கின்றனர்.  
அறிவியல் வளர;ச்சிக்கு ஏற்ப காலவோட்டத்தில் நெசவுத் தொழில் செயற்பாடுகளிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன.  காரிக நூலிற்குப் பல்வேறு வண்ணங்கள் போட்டு, வண்ண பொந்து நூலிற்குப் பசைபோட்டு பல்லையில் சுற்றி, பாவு ஆலை மூலம் பாவு உருளை சுற்றுகின்றனர்.  பொந்து நூலிற்கே பசை போடுவதால் தெருவில் பாவு பரப்பி பசை போட்டு உருளையில் சுற்றும் வேலை தவிர்க்கப்படுகிறது. வீட்டிற்கு வெளியே வெயிலில் செய்யப்படும் இவ்வேலை பொந்துக்குப் பசை போடுவதால் பாவு சுற்றும் ஆலையின் செயற்பாடு வேறு விதமாக மாற்றி அமைக்கப்படுகிறது.  இவ்விதத்தில் பாவு சுற்றும் ஆலையானது உருளையாக மாறி, உருளையிலே பசை போட்ட நூலினைச் சுற்றிக் கொடுத்து விடுகின்றனர். 

உருளைப் பாவு தறியில் பழைய பாவுடன் பிணைத்தல் மற்றும் பிணைத்த பாவு, ஊடை நூலினை பல்லையில் சுற்றி, குழலில் தார் சுற்றி, நாடாவில் தார் ஏற்றி நெசவு செய்தல் போன்ற செயல்பாடுகள் முறையே நிகழும்.
இவ்வாறு ஒரு குடும்பத்து உறுப்பினர்கள் செய்யும் தொழிலாக கைத்தறி நெசவுத்தொழில் இருக்க, விசைத்தறி நெசவுத்தொழில் பல குடும்பத்து உறுப்பினர்கள் செய்யும் தொழிலாக இன்று மாறியுள்ளது. நூலிழைத்தல் ஒரு குடும்பத்தவராகவும், பாவு சுற்றுதல் ஒரு குடும்பத்தவராகவும், நூலிற்குப் பசை போடுதல் ஒரு குடும்பத்தவராகவும், தறியில் பிணைப்பவர் வேறொருவராகவும், தார் சுற்றுவர் ஒரு குடும்பத்தவராகவும், நெசவு செய்பவர்கள் வெவ்வேறு குடும்பத்தவர்களாகவும் இருப்பர்.  கைத்தறி நெசவுத் தொழிலின் துணைத் தொழில்களைப் பெரும்பாலும் ஒரே குடும்பத்தார் மேற்கொள்வர்.  ஆனால், விசைத்தறியின் துணைத்தொழில்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு குடும்பத்தார் மேற்கொள்கின்றனர்.  

இதனால், தறிபுகு விழா கைத்தறி நெசவாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு நூலிற்கு வண்ணம் போடுதல், பாவுக்குப் பசை போடுதல், பாவு தறியில் பிணைத்தல், நெசவு செய்தல் போன்றவற்றைத் தேவைக்கு ஏற்ப கொண்டாடுகின்றனர்.  ஆனால், விசைத்தறியின் துணைத்தொழில்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு குடும்பத்தார் தனித்தனியே மேற்கொள்வதால் ஊரார் குறிப்பிடும் அதே நாளில் எல்லோரும் ஒன்றாக முன்னர் குறிப்பிட்ட முறைப்படி தறிபுகு விழா கொண்டாடுகின்றனர்.

இவ்வாறு கால மாறுபாட்டின் காரணமாக கைத்தறி நெசவானது விசைத்தறி நெசவாக மாறியபோது அதற்கு எடுக்கும் விழாவின் தன்மையும் காலவோட்டத்தில் மாறுபட்டிருப்பதை உணரலாம்.

செவ்வாய், 27 நவம்பர், 2018

திருவள்ளுவர் கூறும் குற்றங்கள்

சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் தம் சமுதாய வாழ்க்கையிலும் தனிமனித வாழ்க்கையிலும் பல குற்றங்களைச் செய்ய நேரிடுகின்றது.  சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளில்  மக்கள் எவ்வெவ் குற்றங்களைச் செய்ய நேரிடுகின்றது என்றும், அவற்றால் எவ்வெவ்வற்றை இழக்க நேரிடுகின்றது என்றும் கூறுகின்றார்.  இதன் மூலம் சமுதாய மேம்பாட்டுக்கும் தனிமனித மேம்பாட்டுக்கும் வழி செய்கின்றார்.  

   அளவறியாது ஈதல், அறிவின்மை, அன்பின்மை, இறைவனை வணங்காமை, ஈயாமை, ஊக்கமின்மை, ஊன் உண்ணல், ஒழுக்கமின்மை, கல்லாமை, களவு செய்தல், கள்ளுண்ணல், காமத்தில் மயங்கல், கேள்விச் செல்வமின்மை, கொலைத்தொழில் செய்தல், சினம் கொள்ளல், சூதாடல், சோம்பல் கொள்ளல், தீச்சொல் கூறல், தீயன செய்தல், நடுவுநிலைமை தவறுதல், நல்ல நட்பை இகழ்தல், நல்லாரைத் துணைக்கோடாமை, நற்பண்புகளைக் காக்காமை, நன்றி மறத்தல், நாணமின்மை, பகுத்துக் கொடுக்காத செல்வம், பயனில் கூறல், பிறரை வருத்திச் செல்வம் தேடல், பிறர் பொருளைக் கவர நினைத்தல், பொருளல்லவற்றைப் பொருள் என்று உணர்தல், பொறாமைப்படல், மக்கட் பண்பு இல்லாமை, மறதியுடைமை, விருந்தோம்பாமை, விலைமகளிர் தொடர்பு, வினைசெய்து முடித்தற்குரிய இடத்தினை அறியாமை, வெறுப்பை வளர்க்கும் தீய எண்ணம் கொள்ளல் போன்ற குற்றங்களைக் கூறுகின்றார்.  இவ்வெல்லாக் குற்றங்களையும் விவரிக்கின் தனி ஆய்வாகிவிடும்.  இவற்றில் சான்றுக்குச் சில மட்டும் இக்கட்டுரைக்கண் காண்போம்.

அறிவின்மை

அறிவு என்பது கற்றலால் மட்டுமே வருவதன்று.  கற்றதை உள்ளவாறு உணர்ந்து அதன் படி நடத்தலே சிறந்த உண்மையான அறிவாகும்.  இதனாலேயே வள்ளுவர்,

”கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” (குறள்., 391)

என்று கூறுகின்றார்.  அறிவே ஒருவனுக்கு இறுதி வரைக்கும் அழிவு வராமல் தடுக்கும் கருவியாகும்.  பாதுகாக்கும் அரணாகும்.  மனதைப் போன போக்கெல்லாம் போக விடாமல் தீமையை நீக்கி நல்வழிப்படுத்துவது அறிவு.  யார் எதைச் சொன்னாலும் அதனைத் தீர ஆராய்ந்து உணர வல்லது அறிவு.  இந்த அறிவைப் பெறாதவர் நிலையை வள்ளுவர்,

”அறிவுடையார் ஆவத தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்” (குறள்., 427)

என்கிறார்.  அறிவின்மையால் ஒருவன் தனக்கு வரப்போகின்றதை அறியாதவனாக இருப்பதால் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமையாகிய பேதமைத் தன்மை அதிகரித்து அல்லல் உறுவான் என்று கூறுகின்றார்.

இதிலிருந்து அறிவில்லாதவன் தனக்கு வரக்கூடிய இன்னலை முன்பே அறிந்து கொள்ளும் திறனில்லாததால் அதிலிருந்து தப்பக் கூடிய நிலையினை இழக்க நேர்கின்றது என்பதை அறியலாம்.

அன்பின்மை

அன்பு என்பது வாழும் உயிர்களுக்குப் பொதுவான ஒன்றாகும்.  இது இயற்கையான உணர்வுகளில் ஒன்று. அதனால்தான் மனிதப் பிறவி விழுமியது என்று ஆன்றோரால் போற்றப்படுகிறது.  நட்புப் பாராட்டுதல், இல்லறத்தில் சிறத்தல் உயிர்களிடம் இரக்கம் கொள்ளுதல், நாட்டில் ஒற்றுமையை நிலவச் செய்தல் இத்தகைய பண்புகள் மூலம், மனித உலகத்தை இணைத்து வாழச் செய்யும் அற்புதச் சக்தி அன்பிற்கே உண்டு.  உலகத்தின் குற்றங் குறைகள், கொடுமைகள் ஆகியவற்றை அகற்றித் தூய்மை செய்யும் ஆற்றல் அன்பிற்கே உண்டு.

மண்ணில் மனித குலம் தழைக்க அன்பின் ஊற்று தடையின்றிப் பெருக்கெடுத்து ஓட வேண்டும்.  இன்று தடையிலா அன்பு இந்த உலகத்திற்குத் தேவை.  இத்தகைய உயரிய அன்பியலை வாழ்வியலின் உயிர்நிலையாகக் காட்டுகிறது வள்ளுவம்.

”அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்
கென்புதோல் போர்த்த உடம்பு”  (குறள்., 80)

எவ்வளவு கடுமையாக அன்பின்மையை வள்ளுவம் விமர்சிக்கிறது.  ஒருவர்க்கு உயிர் இருக்கிறதா, இல்லையா என்பதை அவர் சுவாசிப்பதிலிருந்துதான் நாம் தீர்மானிப்போம்.  ஆனால் அவன் வாழ்வில் அன்பின் விளக்கம் இருந்தால்தான் அவனுக்கு உயிர் உண்டு.  இல்லையானால் உயிரற்ற உடம்பே என்று வள்ளுவம் தீர்மானிக்கிறது.

இத்தகைய அன்பை நாடாதவனால் குற்றங்கள் அதிகரித்துச் சமுதாயம் பாழ்படும்.  இந்நிலையினைத் தடுக்கவே வள்ளுவம்,

”என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்” (குறள்.,77)

என்ற குறளில் காட்டுகிறது.  எலும்பில்லா உயிரை வெயில் வருத்துவது போல அன்பில்லாத உயிரை அறக்கடவுள் தண்டிக்கும் என்று கூறுகின்றது.

இதிலிருந்து ஒருவன் அன்பின்மையால் தனி மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லறத்தினையும், சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய அறத்தினையும் செய்யாமல் அவற்றால் விளையக் கூடிய பயனை இழப்பதோடு, அறவழியிலிருந்து பிறழ்ந்ததால் அறக்கடவுளால் தண்டிக்கப்படும் நிலைக்கு ஆளாவான் என்று வள்ளுவம் எச்சரிக்கின்றது.

இறைவனை வணங்காமை

பிறவித் துன்பத்திற்குக் காரணமாகிய காம, வெகுளி, மயக்கங்களைப் போக்கி, பேரின்ப அருள் அளிக்க வல்லது இறைவன் திருவடியாகும்.  அதனைச் சேராதவர்கள் பிறவித் துன்பத்திலிருந்து மீள முடியாமல் இன்னலுறுவர்.  இதனையே வள்ளுவர்,

”பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடிசேரா தார்” (குறள்.,10)

என்ற குறள் மூலம் காட்டுகிறார்.  இறைவன் அடியைச் சேர்ந்தவரே பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பர் என்றும், இறைவனை வணங்காமையாகிய குற்றத்தைப் புரிந்தோர் அதனைக் கடக்க முடியாமல் காம, வெகுளி மயக்கங்களில் அழுந்தி வருந்துவர் என்றும் எச்சரிக்கின்றார்.

ஈயாமை

'செல்வத்துப் பயனே ஈதல்' என்பது நம் நாட்டில் பண்டு தொட்டே வந்த ஒரு அறநெறிக் கொள்கை.  ஈட்டியானுக்கும் பிறருக்கும் பயன்படாத செல்வம் 'நன்றியில் செல்வம்' என ஒதுக்கப்பெறுகிறது.  சமுதாய நலங்களுக்குச் செலவழிக்கப் பெறாமல் ஒரு நாட்டில் செல்வம் குவிந்து கிடந்தாலும், அதனால் அவனுக்கோ சமுதாயத்துக்கோ, யாதொரு பயனுமில்லை. தீமையே விளையும்.  இதனைத் தடுக்கவே வள்ளுவர்,

”எச்சமென் றென்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்” (குறள்., 1004)

என்ற குறளில் அறிவுரை கூறுகின்றார்.  பிறருக்கு உதவி செய்தால்தான்  உலகில் அன்பை வளர்க்கலாம்.  அதனால் புகழ் தானே வந்தெய்தும்.  மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும், தாம் இவ்வுலகை விட்டு நீங்கும் போது நிலைத்த புகழை விட்டு வைத்துச் செல்ல வேண்டும்.  ஆனால், பிறருக்கு ஈயாத செல்வமுடையவன், அன்பையும் சுற்றத்தையும் வளர்க்கவில்லை.  ஆதலால் இறுதிக் காலத்தில் எச்சம் என்று எண்ணுவதற்கு ஒன்றுமில்லாமல் போகும் என்று எச்சரிக்கின்றார்.

ஒழுக்கமின்மை

மனித வாழ்க்கையை முறையாக வளப்படுத்தி வளர்ப்பது ஒழுக்கம்.  ஒழுக்கம் என்பது மருந்துமன்று; பத்தியமுமன்று.  ஒழுக்கம் வாழ்வாங்கு வாழும் பாங்குடையவர்க்கு எளிதாக இனிதாக அமைவதேயாகும்.  மனிதன் பெற்றுக்கொண்ட, வளர்த்துக் கொண்ட அறிவு, ஆள்வினை ஆற்றல், அன்பு முதலியன சிதறிச் சிறு நெறிகளில் சென்று வீணாகாமல் தடுத்து நிறுத்தி அவனை அகநிலையில் வளர்த்துப் புறநிலையில் உயர்த்திச் சிறப்பிப்பது ஒழுக்கமேயாகும்.  இத்தகைய ஒழுக்கத்தை வள்ளுவர் உயிரினும் சிறந்ததெனக் கூறுகின்றார்.  இதனையே,

”ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை” (முதுமொழி, சிறந்தபத்து : 1)

என்று முதுமொழிக் காஞ்சியும், உயிரைத் தேயாது காப்பது ஒழுக்கமே என்று சீவக சிந்தாமணியும் எடுத்துரைக்கின்றது.

ஒழுக்கத்தின் தன்மையை அறிந்து வாழாதவர் அறிவிலார்.  அவர்கள் உள்ளத்துக் கோடியினும் பல எண்ணங்கள் வீணான எண்ணங்கள் இப்படி வாழ்வதிலும் உயிரினும் சிறந்த ஒழுக்கத்துடன் வாழ்தலே உயர்ந்தது என்கிறார் வள்ளுவர்.  ஒருவனுக்கு வாழ்வில் புகழையும், உயர்வையும் ஏற்படுத்தித் தருவது ஒழுக்கமே.  இத்தகைய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காதவன் வாழ்வில் உயர்வடையமாட்டான்,

”அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு” (குறள்., 135)

என்று வள்ளுவர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காத குற்றத்தால் ஒருவனுக்கு வாழ்வில் உயர்வில்லை என்று சுட்டிக் காட்டி நெறிப்படுத்துகிறார்.

கல்லாமை

உலக வாழ்வின் மக்களாய்ப் பிறந்தோருக்கும் பிற உயிரினங்களுக்குமுள்ள வேற்றுமையை மக்களுக்கு இருக்கும் அறிவினாலும் அது பிற உயிரினங்களுக்கு இல்லாமையாலும் கண்டு கொள்ள முடியும்.  இயற்கையாகவே அமைந்துள்ள அறிவொடு நூற்கல்வி, கேள்வி வாயிலாகப் பெறும் செயற்கை அறிவும் சேர்ந்து மக்கள் வாழ்க்கை சிறப்பது போல, கல்லாதவன் வாழ்க்கை சிறக்காது. கல்லாமை இருளில் கிடந்துழலும் குடிமக்கள் நிறைந்த நாடு முன்னேற்றம் இல்லாத நாடாகும்.  எனவேதான் ஒரு நாட்டு அரசுக்குத் தலைவனாகிய அரசனுக்குக் கல்வி, கேள்வி, அறிவுடைமை இன்றி அமையாதவைகளாக வகுத்த வள்ளுவர் முதியவர், இளைஞர், ஆண், பெண் அனைவருக்குமே அவை வேண்டுமென்று கருதி,

”எண்ணென்ப ஏனை எழுத்தென்ப, இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு” (குறள்., 392)

என்று கல்வியின் அவசியத்தை வற்புறுத்தினார்.

”கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே” (வெற்றிவேற்கை : 35)

”கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி” (கொன்றைவேந்தன், 22)

என்று கல்வியின் தேவையைப் பிற நீதிநூல்களும் எடுத்துரைக்கின்றன.

கல்வி வேண்டுமென்பது மட்டும் போதாது.  கல்லாவிட்டால், கல்லாமை நிலவினால், நாட்டு மக்களின் நிலையும், நாட்டின் நிலையும் என்னாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கல்லாதவர்களுக்கு அறிவு சிறவாதாதலால் அவர்கள் கற்றறிந்தார் அவையின் கண் ஒன்றையும் எடுத்துச் சொல்ல இயலாது விழிப்பார்கள்.  அவ்வாறு எடுத்துச் சொல்ல விரும்பினாலும் அது பெண் தன்மை அற்ற அலிகள் காதல் வேட்கை கொள்வது போல் பயன் இல்லாமல் போகும்.  கல்லாதவர்கள் உயிரோடு உள்ளார்கள் என்ற அளவிலேயன்றி, விளைபொருள் தராத களர் நிலம் போன்று தனக்கும், சமுதாயத்திற்கும் பயனற்றவர்கள் என்றும், கல்வியால் நுட்பமாக ஆராய்ந்து தெளியும் பகுத்தறிவின் மாண்பு அற்றவர்கள் அழகாகத் தோன்றினாலும் உயிரற்ற மரப்பாவை போன்றவர்கள் என்றும் கல்லா¬மையின் பயனின்மையைக் கூறும் வள்ளுவர்,

”மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு” (குறள்., 409)

என்கிறார்.  கல்லாதார் உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும் தாழ்ந்த குலத்தில் பிறந்த கற்றாரின் பெருமைகளைப் பெற இயலாது என்று கல்லாமையால் ஏற்படும் இழப்பினைச் சுட்டிக்காட்டுகின்றார்.  இதனையே நாலடியாரும்,

”கடைநிலத்தோ ராயினும் கற்றுணர்ந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்” (நாலடி., 133)

என்கின்றது.  கற்றவர் என்ற பெருமை சமுதாய, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டது.  கல்லாதவனிடம் என்ன தான் அறிவு, அழகு, செல்வம் இருந்தாலும் அவற்றால் எந்தவொரு பயனும், பெருமையும் இல்லை.

களவு செய்தல்

உயிரைப் பேணிக்காப்பதற்கு அறத்தை நாடுவதே சிறந்த வழியாகும். அழியும் உடம்பைக் காத்தற் பொருட்டுப் பொருளை விரும்பி, அதைப் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ளக் கருதுதல் இழுக்கினையே தரும்.  களவினால் வருகின்ற பொருள் வளர்வது போலத் தோன்றினாலும், விரைவில் அழிந்து விடும்.  மேலும் முயற்சியும், உழைப்பும் இன்றி வந்த பொருளாதலால் மனநிறைவும் இருக்காது.  இத்தகைய களவைத் தொழிலாகக் கொண்டவர்கள் தினம் தினம் செத்து மடிவர்.  மனத்தாலும் செயலாலும் களவு தவிர்த்து வாழ்கின்றவர்களே புகழடைவர்.

”கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு” (குறள்., 290)

என்பதிலிருந்து களவு செய்பவன் எல்லோராலும் இகழப்படுவதோடு, சேர்த்து வைத்த செல்வத்தையும் விரைவிலேயே இழந்து, மனநிறைவு இன்றி, வீடு பேற்றை அடையும் தகுதியையும் இழந்து அல்லல் உறுவான் என்கிறது வள்ளுவம்.

கள்ளுண்ணல்

கள்ளுண்ணல் சமுதாய வாழ்வில் மட்டுமின்றி இல்லற வாழ்விலும் கேடு விளைவிக்கும்.  கள்ளுண்பவனைக் கண்டு சான்றோர் விலகிச் செல்வர்.  கள்ளுண்பவன் மகனாக இருந்தாலும் தாயும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.  அறிவைக் கெடுக்கும் கள்ளை உண்பவர்களுக்குச் சமுதாயத்தில் எந்த ஒரு மதிப்பும் இல்லை.  வள்ளுவர் 'கள்ளுண்பவரை நஞ்சுண்பவர்' என்கிறார்.  மேலும், கள்ளுண்ணலால் ஏற்படும் இழப்பை,

”உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்” (குறள்., 921)

என்கிறார்.  கள்ளின் மேல் தீராத வேட்கை கொண்டு அறிவு கெட்டுத் திரிபவர்கள் தம் புகழை இழப்பதோடு, சமுதாயத்தில் மதிப்பற்ற நாணமுடைய வாழ்க்கையே வாழ வேண்டிவரும் என்று எடுத்துரைக்கின்றார்.

விலைமகளிர் தொடர்பு

மன உறுதியும், அறிவுத் தெளிவும் இல்லாத சிலர் நாடுகின்ற இழி செயல்களாகிய பொதுமகளிர் நாட்டம், கள்ளுண்ணல், சூதாடுதல் போன்றவைகள் குடும்பத்தை மட்டுமல்ல, சமுதாயத்தையும் சீர்குலைக்கின்றன.

நெஞ்சத்தை நிலை நிறுத்தி ஆளும் திறன் இல்லாதவர்களும் எதையும் ஆராய்ந்து காணும் அறிவில்லாதவர்களும், உயர்வு சிறிதும் இல்லாத கீழ்மக்களும், பொது மகளிரை விரும்பித் தம் வாழ்நாளை வீணாக்குகின்றனர்.   அவர்களைப் பார்த்து வள்ளுவர்,

”இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு” (குறள்., 920)

என்ற குறளில் கூறுகின்றார்.  வஞ்சகம் கொண்ட விலைமகளிர் நாட்டம், மயக்கும் மது, கெடுக்கும் சூது இவற்றால் ஒருவரின் அறிவும், செல்வமும் கெடும் என்று கூறி எச்சரிக்கின்றார்.

இவ்வாறு திருவள்ளுவப் பெருந்தகை தம்முடைய திருக்குறளில் மக்கள் ஆற்றும் குற்றங்களை பட்டியலிட்டிருக்கிறார்.  இவற்றினை உணர்ந்து திருந்தி நன்னடத்தையில் செயல்படவேண்டும் என்பது அவரது அவாவும் இக்கட்டுரையாளரின் அவாவுமாகும்.

புதன், 21 நவம்பர், 2018

வையாபுரிப்பிள்ளையின் படைப்புத் தன்மை



            கசடறக் கற்ற கல்வியின் மேன்மையை ஆய்வுகளாகவும், எண்ண உறுத்தல்களைப் படைப்புகளாகவும் ஒருசேரச் செய்து வந்த பெருமக்கள் ஒரு சிலரே ஆவர்.  அவர்களுள் சரவணப்பெருமாளையர், த. சிவக்கொழுந்து தேசிகர், ஆறுமுக நாவலர், வடலூர் இராமலிங்க அடிகள், மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.  இவர்களுள் ஒருவராக வைத்துப் போற்றத்தக்கவரே பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை.
            வையாபுரிப் பிள்ளையவர்கள் 'கட்டுரைகள் வரைந்திருப்பதோடு, ஆராய்ச்சிகள் செய்திருப்பதோடு, கவிதைகளும் இயற்றியுள்ளார்; கதையும் எழுதியுள்ளார்' என்பார் மா.சு. சம்பந்தன் (அச்சும் பதிப்பு, ப.407).  வையாபுரியாரின் ஒன்பது சிறுகதைகளும் ஒரு நாவலும் அவரின் எண்ணத்தையும் வளர்ச்சி நிலையையும் காட்டும் கருக்கோலாக இருக்கின்றன.  வையாபுரியாரின் சிறுகதைகள் 'பாலையா' என்ற புனைபெயரில் வெளிவந்திருக்கின்றன.
            "சிறந்த புதினத்திற்கு இன்றியமையாத உறுப்புக்களாக சூழ்ச்சி அல்லது சதி, பாத்திரங்கள், உரையாடல், காலம், இடம், நடை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டப்பெற்றுள்ள வாழ்க்கைத் தத்துவம் என்பனவற்றைக் கூறலாம்.  இவை அனைத்தும் ஒரே அளவாகவோ அனைத்துமோ இருந்து தீரல் வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை.  ஒவ்வொன்றும் மிக்கும் குறைந்தும் இருப்பினும் தவறு இல்லை" (அ.ச. ஞானசம்பந்தம், இலக்கியக்கலை, ப.346).  வையாபுரிப்பிள்ளையவர்களின் பத்து கதைகளிலும் சூழ்ச்சி அல்லது சதி தவிர்த்த மேற்கூறிய அனைத்தும் வெளிப்படையாகவே அமைந்திருத்தலைக் காணமுடிகிறது.
காதல் கொள்கை
            "ஆணும் பெண்ணுமாய்க் கூடி வாழும் வாழ்வுக்கு அடிப்படையாய் இருப்பது காதலும் காமமுமே.  எல்லாக் காலத்து இலக்கியங்களிலும் எல்லா நாட்டு இலக்கியங்களிலும் இவ்விரண்டும் அளவுக்கதிகமாகவே பேசப்பட்டு வந்துள்ளன" (விடுதலைக்கு முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள், ப.100).  வையாபுரிப் பிள்ளையவர்களின் காதல் உறவினர், தெரிந்தவர், அறிமுகமானவர் என்ற முறையிலேயே வளர்ந்துள்ளது.  மேலும், அவரின் கதைகளில் காமமும் இடம்பெற்றுள்ளது.  இளம்பருவ வேட்கை காரணமாக எழும் இளம்பருவக் காதல் அனுபவங்களை மணிமுடி மாளிகையில் சீனிவாசன் - ரங்கநாயகி ஆகியோர்க்கிடையேயும், ராமுவின் சுய சரிதத்தில் இராமஸ்சுவாமி - பத்மாவுக்கிடையேயும் காட்டுகின்றார்.
            வேட்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அன்பு ஒன்றே காதலின் அடிப்படை என்பதை பேசாமடந்தையில் கோபு - சுகுணா காதலையும், ஓர் இரவில் சோமு - பங்கஜத்தின் காதலையும், பாலகோபாலன் வழக்கில் பாலகோபாலன் - சுந்தரி காதலையும், ராஜியில் நாராயணசாமி - ராஜி மற்றும் வரதராஜ அய்யங்கார் - ருக்கு ஆகியோரின் காதலையும் குறிப்பிடுகின்றார்.
            பொருந்தாக் காதலை (காமத்திற்பாற்பட்ட) உதிர்ந்த மலரில் சதக்அலி - சுரைதா மீது கொண்ட காதலை - காமத்தைக் குறிப்பிகின்றார்.  எவ்வகைப்பட்ட காதலாயினும் வெற்றியைப் பெறுதல் வேண்டும் என்னும் வையாபுரியாரின் காதற்கொள்கை தெளிவாகத் தெரிகிறது.
புரட்சிப்பெண்
            அடக்கு முறையில் வெளிப்பாடும் மனவேதனையின் எல்லைக் கோடுமே புரட்சி.  வையாபுரிப் பிள்ளையவர்களின் புரட்சிப்பெண் பாரதி,  பாரதிதாசன் படைத்த புதுமைப் பெண்ணைப் போல் முழுவதும் மாறி வெளியுலகிற்கு வரவில்லை.  தன் மனதுக்குள்ளேயே குமுறிக் குழம்பிக் கொண்டிருக்கும் வேதனையை அவ்வப்போது திடீரென்று வெளிப்படுத்தும் நிலையிலேயே இருக்கிறார்கள்.  அதைவிட்டு வெளியுலகிற்கு வர மறுத்து அடங்கி ஒடுங்குகின்றனர்.
            அறுபது வயதான சதக்அலி சுரைதாவை மூன்றாவது மனைவியாக்கித் தன் வேட்கையைத் தணித்துக்கொள்ள விரும்புகிறார்.  சுரைதாவின் தந்தை பணத்துக்கு மயங்கி சதக்அலிக்குத் தன் ஒரே மகளை மணம்முடிக்க வாக்குத் தருகிறார்.  இதைக் கேள்விப்பட்ட சுரைதா, "சதக்அலி பெரிய தனவந்தராகவும் புத்திசாலியாகவும் இருக்கலாம்.  ஆனால் அவர் எனக்குத் தாத்தா அல்லவா?  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! குழந்தையாகிய நான் எப்படி அறுபது வயது கிழவரைக் கலியாணம் செய்து கொள்வது?" (உதிர்ந்த மலர், ப.56) என்று இந்தப் பேச்சோடு நின்றுவிட்டு பின் சதக்அலியின் வஞ்சகக் செயலால் சுரைதாவின் காதலன் மாளும் போது அவ்விடத்திலேயே சுரைதாவும் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறாள்.  எந்தவொரு புரட்சியையும் தன்னந்தனியாகவும் அமைதியாகவுமே செயல்படுத்தவேண்டும் என்னும் காந்திய சிந்தனையில் ஆசிரியர் மூழ்கியவராகக் காணப்படுகிறார்.
பெண்களைப் பற்றிய எண்ணம்
            'ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே' என்ற கூற்றை மெய்ப்பிக்கிறார் வையாபுரியார்.  பேசாமடந்தையில் சுகுணா கோபுவை உருவாக்குகிறாள்.  சந்திரா பழி வாங்கியதில் சந்திரா மதுரை நகரையே எரித்து சாம்பலாக்குகிறாள்.  பெரும்பாலான பெண் மாந்தர்கள் அனைவரும் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டை பேணிக்காப்பவர்களாகவே இருக்கிறார்கள்.  ஒரு சில மாந்தர்களின் வாயிலாக காலவோட்டத்தின் பின்னணியில் சமூகம் எவ்வாறு மாறுபாடு அடைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டத் தவரவில்லை.  காலமாறுபாட்டிற்கு ஏற்றவாறு பெண்கள் சமுதாயத்தில் ஏற்பட்ட பாதிப்பையும் ஆங்காங்குச் சுட்டித் தமிழர்தம் பண்பாட்டை மறந்த நிலையையும் சுட்டிக்காட்டுகிறார்.
மனித உள்ளுணர்வு
            மனிதனுடைய உள்ளுணர்வு எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பதில்லை.  ஏதாவதொன்றின் தூண்டுதலே அதன் இயக்கத்திற்கு அடிப்படைக் காரணமாக அமையும்.  தன்னால் ஆவது ஒன்றுமில்லை; எல்லாம் இறைவன் செயலே என்று விட்டுவிடாமல், முயற்சி செய்தால் எல்லாம் வல்ல இறைவனையும் காணலாம் என்னும் குறிக்கோள் கொண்டிருத்தல் ஒவ்வொருவரின் கடமையாகும்.  வையாபுரியார் கோபுவின் உள்ளுணர்வை சுகுணாவின் மூலம் தட்டி எழுப்புகிறார்.  அறிவுள்ள கோபு பேச்சாற்றல் அற்றிருப்பதைச் சுகுணா அறிந்து, கோபுவைத் தூண்டுகிறாள்.  பின்னர் கோபு 'பிரசங்கமாரி' என்னும் பட்டம் பெறும் அளவிற்குத் தன்னுடைய பேச்சாற்றலை வளர்த்துக்கொள்கிறான்.  மனிதனுடைய உள்ளுணர்வு வெளிப்படும் போதுதான் அவனுடைய உண்மையான ஆற்றலும் திறனும் வெளிப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
விருந்தோம்பல்
            பன்நெடுங்காலமாகத் தமிழர்களின் தனிச்சிறப்புப் பெற்றது விருந்தோம்பல்.  இவ்விருந்தோம்பல் இலக்கியங்களிலும் முறையாகச் சொல்லப்பட்டு வருகிறது.  உற்றார் உறவினர் என்ற வேறுபாடின்றி விருந்தோம்புதல் என்பது தமிழருக்கு உரிய தனிச் சிறப்பம்சமாகும்.  பேராசிரியர் வையாபுரியார் தம்முடைய படைப்புகளில் விருந்தாம்பல் தன்மையை மிகத் தெளிவாக, பரவலாக எடுத்துச் சொல்லிச் செல்கிறார்.
            மணிமுடி மாளிகையில் இராமநாதன் மற்றும் இரங்கநாயகிக்கு விலாசாட்சியும், விசாலாட்சிக்கு இராமநாதனும், இராமநாதன் இரங்கநாயகி மற்றும் சீனிவாசனுக்கு ஜலஜாவின் தந்தை கொடுக்கும் விருந்தும்;  ராஜியில் சௌந்தரத்தம்மா மற்றும் நாராயணசாமிக்கு இராமையர் கொடுக்கும் விருந்துகளும், நாராயணசாமி கோபாலையங்கார் குடும்பத்துக்குக் கொடுக்கும் விருந்தும்; நாராயணசாமிக்குக் கோபால அய்யங்கார், உறர்ட்டி, வரதராஜ அய்யங்கார் போன்றோர் கொடுக்கும் விருந்துகளும் விருந்தோம்புதல் முறையைச் சுட்டுகிறது.  இவற்றையெல்லாம் பார்க்கும் போது பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள் விருந்தோம்புதலைப் பாராட்டி வந்துள்ளார் என்பது தெளிவாகிறது.
            இதுபோன்ற கருத்துகள் ஒத்தும் மாறுபட்டும் இருக்கக் காணலாம்.  காலவோட்டம் எவ்வளவு வேகமாக ஓடுகிறதோ அதற்குத் தக்கவாறு மனிதனுடைய உணர்வும் எண்ணங்களும் மாறுபடும்.  இக்கதை சிலப்பதிகாரக் கதைக்கருவைக் கொண்டிருந்தாலும் வளர்ந்து வரும் சமுதாய மாற்றத்தில் இக்கதைப் பின்னலும் அதன் பின்னணியும் மாறுபட்டு, சமுதாய வளர்ச்சிக்குத் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ளது எனலாம்.
முடிவுரை
            வையாபுரிப்பிள்ளை அவர்கள் பத்துக் கதைகள் எழுதப்பட்டிருந்தும் சமூகத்தையோ சமுதாயத்தையோ எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை.  பெரும்பாலான கதைகள் காதல் வேட்கை சார்புடையதாகவும் காதல் உணர்ச்சியைத் தூண்டக் கூடியதாகவும் அமைக்கப்பெற்றுள்ளன.  ஒரு அடிப்படை நிலை எழுத்தாளர் எழுதக்கூடிய சாதாரண கதைக்கருவைக் கொண்டே கதை பின்னப்பட்டுள்ளது.  தம் கதைகளில் கொள்கை உடையவர்களைக் காட்டத் தவரவில்லை.  என்றாலும், இறுதியில் அவர்களையும் வழுவாக்கிவிடுகிறார்.   இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது வையாபுரியார் அவர்கள் கதாசிரியர் என்ற அளவில் பெரிய வெற்றி பெற்றார் என்று சொல்வதற்கில்லை.

வையாபுரிப்பிள்ளையின் படைப்பிலக்கிய அமைப்பு



            கசடறக் கற்ற கல்வியின் மேன்மையை ஆய்வுகளாகவும், எண்ண உறுத்தல்களைப் படைப்புகளாகவும் ஒருசேரச் செய்து வந்த பெருமக்கள் ஒரு சிலரே ஆவர்.  அவர்களுள் சரவணப்பெருமாளையர், த. சிவக்கொழுந்து தேசிகர், ஆறுமுக நாவலர், வடலூர் இராமலிங்க அடிகள், மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.  இவர்களுள் ஒருவராக வைத்துப் போற்றத்தக்கவரே பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை.
            வையாபுரிப் பிள்ளையவர்கள் 'கட்டுரைகள் வரைந்திருப்பதோடு, ஆராய்ச்சிகள் செய்திருப்பதோடு, கவிதைகளும் இயற்றியுள்ளார்; கதையும் எழுதியுள்ளார்' என்பார் மா.சு. சம்பந்தன் (அச்சும் பதிப்பு, ப.407).  வையாபுரியாரின் ஒன்பது சிறுகதைகளும் ஒரு நாவலும் அவரின் எண்ணத்தையும் வளர்ச்சி நிலையையும் காட்டும் கருக்கோலாக இருக்கின்றன.  வையாபுரியாரின் சிறுகதைகள் 'பாலையா' என்ற புனைபெயரில் வெளிவந்திருக்கின்றன.
            "சிறந்த புதினத்திற்கு இன்றியமையாத உறுப்புக்களாக சூழ்ச்சி அல்லது சதி, பாத்திரங்கள், உரையாடல், காலம், இடம், நடை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டப்பெற்றுள்ள வாழ்க்கைத் தத்துவம் என்பனவற்றைக் கூறலாம்.  இவை அனைத்தும் ஒரே அளவாகவோ அனைத்துமோ இருந்து தீரல் வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை.  ஒவ்வொன்றும் மிக்கும் குறைந்தும் இருப்பினும் தவறு இல்லை" (அ.ச. ஞானசம்பந்தம், இலக்கியக்கலை, ப.346).  வையாபுரிப்பிள்ளையவர்களின் பத்து கதைகளிலும் சூழ்ச்சி அல்லது சதி தவிர்த்த மேற்கூறிய அனைத்தும் வெளிப்படையாகவே அமைந்திருத்தலைக் காணமுடிகிறது.
வகைப்பாடு
            படைப்புகளை, கதையின் கருப்பொருளை மையமாகக் கொண்டும், மாந்தர்களின் பண்பு நலன்களை மையமாகக் கொண்டும், ஆசிரியரின் நடை கொண்டும், சமுதாய சரித்திர அமைப்பு கொண்டும் எனப் பலவாறு வகைப்படுத்தலாம்.  ஆனால் இவ்வகைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அமைந்துள்ளது வையாபுரிப் பிள்ளையின் கதைகள்.  இவரின் கதைகளை மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம்.
                        1.  தன் கதை
                        2.  தழுவல் கதை
                        3.  பதிப்புக் கதை
என அவை அமையும்.  தன் கதையாக பேசா மடந்தை, ஓர் இரவு ஆகிய சிறுகதைகளையும் ராஜி என்னும் நாவலையும்; தழுவல் கதையாக சுசீலை, உதிர்ந்த மலர், சந்திரா பழி வாங்கியது, மத்தளக்காரன் மற்றும் பாலகோபாலன் வழக்கு ஆகிய சிறுகதைகளையும்; பதிப்புக் கதைகளாக மணிமுடி மாளிகை, ராமுவின் சுயசரிதம் ஆகிய சிறுகதைகளையும்  இவ்வகைகளுக்குள் அடக்கலாம்.
            தழுவல் கதையாக இருந்தாலும் பதிப்புக் கதையாக இருந்தாலும் அவைகள் தன்கதையில் இருந்து வேறுபடுத்திக் காட்டவும் ஆய்வு நெறிமுறையில் ஊன்றிய தன்மையை வெளிப்படுத்தவும் பிறரின் கருத்தைப் பிறருடையதாகவே காட்டவும் வையாபுரியார் ஒருபொழுதும் தவறியதில்லை.  கதை தொடங்குவதற்கு முன்னதாகவோ இறுதியிலோ கதையின் தொடக்கப் பக்க அடிப்பகுதியிலோ தழுவல் அல்லது பதிப்பு பற்றிய குறிப்பு காணமுடிகிறது.
            தழுவல் கதையாக அமைந்த 'சந்திரா பழி வாங்கியது' என்னும் சிறுகதை தென்தமிழ் நாட்டுப்புற மக்களால் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வரும் நாட்டுப்புறக் கதையாகும்.  இக்கதையை வையாபுரியார் அவர்கள் ஆங்கிலக் கதையாசிரியர் எம்.பிரேரே அவர்களின் 'தக்காணத்துப் பண்டை நாட்கள்' என்று பொருள்படக் கூடிய நூலில் உள்ள கதையைப் படித்திருக்கிறார்.  தாம் ஆங்கில நூலில் படித்த கதையும் தென்தமிழ்நாட்டில் நாட்டுப்புறக் கதையும் ஒத்திருப்பதைக் கண்டு இக்கதையைத் தழுவல் கதையாக உருவாக்கி இருக்கலாம் என்று துணிய எண்ணமிடும்.
நடை அமைப்பு
            எந்தவொரு இலக்கியமானாலும் அதற்கென ஒரு நடையைப் படைப்பாளன் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.  இந்நடை படைப்பாளருக்கு இயல்பாக வரக்கூடியவை.  ஒருவரின் நடையே அவரின் இலக்கியச் செழிப்பிற்கு வித்திட்டதாக அமையும் சிறப்புடைத்து எனலாம்.  பேரா. வையாபுரிப் பிள்ளையவர்களின் நடையில் கட்டுரை மணம் கமழ்கிறது எனலாம்.  இன்றைய சிறுகதை மற்றும் நாவலாசிரியர்கள் பெரும்பாலான வழக்குச் சொற்களைத் தம் நடைக்குப் பயன்படுத்துகின்றனர்.  அவ்வகைக் கதைகள் வட்டார வழக்குத் தொடர்புடைய கதைகளாக மிளிர்கின்றன.  ஆனால் இவரின் கதைகளை அவ்வகைகளுக்கு உட்படுத்த முடியவில்லை.  இவரின் நடையில் கட்டுரைப் போக்கு இருந்தாலும் சிற்சில இடங்களில் பாத்திரங்களை உரையாட விடும்போது நாடகநிலை வெளிப்படுவதைக் காணமுடிகிறது.
"சுசீலை                                  -  யார் காத்திருக்கிறார்கள்?
அம்மணியம்மாள்                 -  யார்! இராமநாதன்.
                                                சுசீலையின் அடிவயிற்றில் நெருப்பைக் கொண்டினது
                                                போல் இருந்தது.
அம்மணியம்மாள்     -  சுந்தரி என் அண்ணாவின் குழந்தை.  இராமநாதனும்
                                       சுந்தரியும் சிறு குழந்தைகளாயிருக்கும் பொழுதே
                                       இணைபுரியாத தோழர்களா யிருந்தார்கள். 
                                       ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு பாராட்டி வந்தார்கள்.
                                       இதைக்கண்டு இவருடைய பெற்றோர்களும் இருவரையும்
                                       மணமுடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்து விட்டார்கள்.
                                       ஆனால் சௌகரியம் வாய்க்கவில்லை; என் அண்ணா தூர
                                       தேசங்களிலே வேலையா யிருந்தார்.  இப்போதுதான்
                                       வருகிறார்" (சுசீலை, பக்.26-27)
இதுபோன்ற அமைப்பு ராஜி, சுசீலை, பேசாமடந்தை, பாலகோபாலன் வழக்கு போன்ற கதைகளிலும் காணமுடிகிறது.
            கதைமாந்தர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பாங்கு இவரின் நடை உத்தியில் சிறந்ததாகக் கருதலாம்.  தலைவியின் கூற்றாக வெளிப்படும் கதையில் தலைவியை இன்னாரென்று அறியாத தலைவன் தன் கூற்றாக்கும் காட்சி ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  "ரங்கா, உன் மறுமொழியில் தான் என் உயிர் இருக்கிறது.  நீ இன்னாரென்று எனக்குத் தெரியும்.  திருவனந்தபுரத்திற்கு ஒருமுறை உன்னைப் பார்ப்பதற்கென்றே வந்தேன்.  என் தகப்பனார் அப்போது உயிரோடிருந்தார்.  உங்கள் வீட்டுக்குப் போகக்கூடாது என்பது அவருடைய கடுமையான உத்தரவு.  அவ்வுத்தரவுக்குப் பங்கம் வராமல் உன்னைப் பார்த்துத் திரும்பினேன்.  நான்கு வருஷம் ஆய்விட்டது . . . .   நான் பார்த்தது முதல் உன் முகத்தை என் மனத்திலே பிரதிஷ்டை செய்துவிட்டேன்.  என்னை உனக்குத் தெரியக் காரணமில்லை.  உன் அப்பாவோடு உடன் பிறந்த அத்தையொருத்தி உண்டென்று கேள்விப்பட்டு இருப்பாயோ என்னவோ தெரியாது.  நான் அவளுடைய ஏக புத்திரன்தான்' என்று கூறி என்னை நோக்கிக் கொண்டே நடந்தார்" (சிறுகதை மஞ்சரி, மணிமுடி மாளிகை, ப.13).  இதுபோன்ற நடை உத்தி - கூற்று மாற்றிச் சொல்லும் நடை உத்தி சில உள்ளதைக் காணமுடிகிறது.
சொல்லமைப்பு
            இக்கால இலக்கியத்திற்கு எப்படி நடையமைப்பு சிறந்திருக்கவேண்டுமோ அதே அளவிற்கு சொல்லமைப்பும் அமைந்திருத்தல் வேண்டும்.  வையாபுரிப் பிள்ளையவர்கள் இலக்கியத்தின் பாற்கொண்ட பெரும் ஈடுபாட்டின் காரணமாகவோ என்னவோ உலக வழக்குச் சொற்களைப் பெரிதும் கையாளாமல் செய்யுள் வழக்கின் இயல்பான சொற்களையே மொழிக்கலப்புடன் கையாண்டுள்ளார் எனலாம்.  இன்றைய எழுத்தாளர்களின் சொல்லமைப்பைப் பார்க்கும் போது இவர் அவர்களில் இருந்து மாறுபட்டு தனித்து நிற்கிறார்.  வையாபுரியாரின் சொல்லமைப்பில் வடமொழி மற்றும் ஆங்கிலச் சொற்களின் தாக்கம் பெரும்பாலும் காணமுடிகிறது.  "அப்பாவின் நண்பரொருவர் வந்து ஸ்டேஷனில் எங்களைச் சந்தித்தார்.  எங்கள் ஜாகைக்கு அழைத்துச் சென்றார்.  எங்களுக்கு வேண்டிய சௌகரியங்களை எல்லாம் ஏற்கனவே செய்திருந்தார்" (மணிமுடி மாளிகை, ப.3).  இந்தத் தொடரில் ஆங்கிலம் மற்றும் வடமொழிச் சொற்கள் கலந்து வந்துள்ளமை புலப்படும்.  மேலும், 'கீச்கீச்', 'திக்திக்', 'விறுவிறு', 'ஆ!', 'ஆஉறா!', 'கிரீச்' போன்ற உணர்வுச் சொற்களையும் சிற்சில இடங்களில் கையாண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கதை சொல்லும் முறை
            கதை சொல்லுதல் என்பது ஒவ்வொருவருக்கும் கை வந்த கலையாக அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்றது.  கதையில் நல்ல கருப்பொளும் அதை நடைபோட்டுச் செல்ல கதைமாந்தர்கள் நல்ல பண்பு உள்ளவர்களாகவும் இருந்தால் மட்டும் போதாது.  சுவைஞர் மனதில் கதை பதியும்  அளவுக்குக் கதை சொல்லும் முறை அமைந்திருக்க வேண்டும்.  பெரும்பாலான கதைகள் ஆசிரியர் வெளியில் இருந்துகொண்டும் கதைக்குள்  இருந்துகொண்டும் தானே ஒரு மாந்தராகக் கருதிக்கொண்டும் கதையைச் சொல்லுதல் என்பது ஒரு சிறந்த உத்தி.  இதனால் அவரின் (ஆசிரியர்) எண்ணத்தை முழுமையாக கதையின் மூலம் வெயியுலகுக்குக் காட்டமுடியும்.  இந்த முறையை ஆசிரியர் கூற்று என்கின்றோம்.  கதையை நடத்திச் செல்லும் முதன்மைக் கதைமாந்தர்களோ துணைக்கதைமாந்தர்களோ கூடக் கதையைச் சொல்லலாம்.  இந்த முறையை கதைமாந்தர் கூற்று என்கிறோம்.  பேராசிரியர் வையாபுரிப் பிள்ளைவர்களின் கதைகளை உற்று நோக்கும் போது பெரும்பான்மை ஆசிரியர் கூற்றாகவும் சிறுபான்மை கதைமாந்தர் கூற்றாகவும் அமைந்திருப்பதைக் காணமுடியும்.  ராஜி, பாலகோபாலன் வழக்கு, மத்தளக்காரன், சந்திரா பழி வாங்கியது, பேசாமடந்தை, உதிர்ந்த மலர், ராமுவின் சுயசரிதம், சுசீலை போன்ற கதைகள் ஆசிரியர் கூற்றாகவும்; மணிமுடி மாளிகை, ஓர் இரவு போன்ற கதைகள் கதைமாந்தர் கூற்றாகவும் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. 
முடிவுரை
            பேராசிரியர் வையாபுரிப்பிளிளை அவர்கள் பத்து கதைகள் எழுதப்பட்டிருந்தும் சமூகத்தையோ சமுதாயத்தையோ எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை.  பெரும்பாலான கதைகள் காதல் வேட்கை சார்புடையதாகவும் காதல் உணர்ச்சியைத் தூண்டக் கூடியதாகவும் அமைக்கப்பெற்றுள்ளன.  ஒரு அடிப்படை நிலை எழுத்தாளர் எழுதக்கூடிய சாதாரண கதைக்கருவைக் கொண்டே கதை பின்னப்பட்டுள்ளது எனலாம். 




வையாபுரிப்பிள்ளை படைப்புகளின் அமைப்பும் சிறப்பும்



            பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் 'கட்டுரைகள் வரைந்திருப்பதோடு, ஆராய்ச்சிகள் செய்திருப்பதோடு, கவிதைகளும் இயற்றியுள்ளார்; கதையும் எழுதியுள்ளார்' என்பார் மா.சு. சம்பந்தன் (அச்சும் பதிப்பு, ப.407).  வையாபுரியாரின் ஒன்பது சிறுகதைகளும் ஒரு நாவலும் அவரின் எண்ணத்தையும் வளர்ச்சி நிலையையும் காட்டும் கருக்கோலாக இருக்கின்றன.  வையாபுரியாரின் சிறுகதைகள் 'பாலையா' என்ற புனைபெயரில் வெளிவந்திருக்கின்றன.
            "சிறந்த புதினத்திற்கு இன்றியமையாத உறுப்புக்களாக சூழ்ச்சி அல்லது சதி, பாத்திரங்கள், உரையாடல், காலம், இடம், நடை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டப்பெற்றுள்ள வாழ்க்கைத் தத்துவம் என்பனவற்றைக் கூறலாம்.  இவை அனைத்தும் ஒரே அளவாகவோ அனைத்துமோ இருந்து தீரல் வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை.  ஒவ்வொன்றும் மிக்கும் குறைந்தும் இருப்பினும் தவறு இல்லை" (அ.ச. ஞானசம்பந்தம், இலக்கியக்கலை, ப.346).  வையாபுரிப்பிள்ளையவர்களின் பத்து கதைகளிலும் சூழ்ச்சி அல்லது சதி தவிர்த்த மேற்கூறிய அனைத்தும் வெளிப்படையாகவே அமைந்திருத்தலைக் காணமுடிகிறது.
கதை சொல்லும் முறை
            கதை சொல்லுதல் என்பது ஒவ்வொருவருக்கும் கை வந்த கலையாக அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்றது.  கதையில் நல்ல கருப்பொளும் அதை நடைபோட்டுச் செல்ல கதைமாந்தர்கள் நல்ல பண்பு உள்ளவர்களாகவும் இருந்தால் மட்டும் போதாது.  சுவைஞர் மனதில் கதை பதியும்  அளவுக்குக் கதை சொல்லும் முறை அமைந்திருக்க வேண்டும்.  பெரும்பாலான கதைகள் ஆசிரியர் வெளியில் இருந்துகொண்டும் கதைக்குள்  இருந்துகொண்டும் தானே ஒரு மாந்தராகக் கருதிக்கொண்டும் கதையைச் சொல்லுதல் என்பது ஒரு சிறந்த உத்தி.  இதனால் அவரின் (ஆசிரியர்) எண்ணத்தை முழுமையாக கதையின் மூலம் வெயியுலகுக்குக் காட்டமுடியும்.  இந்த முறையை ஆசிரியர் கூற்று என்கின்றோம்.  கதையை நடத்திச் செல்லும் முதன்மைக் கதைமாந்தர்களோ துணைக்கதைமாந்தர்களோ கூடக் கதையைச் சொல்லலாம்.  இந்த முறையை கதைமாந்தர் கூற்று என்கிறோம்.  பேராசிரியர் வையாபுரிப் பிள்ளைவர்களின் கதைகளை உற்று நோக்கும் போது பெரும்பான்மை ஆசிரியர் கூற்றாகவும் சிறுபான்மை கதைமாந்தர் கூற்றாகவும் அமைந்திருப்பதைக் காணமுடியும்.  ராஜி, பாலகோபாலன் வழக்கு, மத்தளக்காரன், சந்திரா பழி வாங்கியது, பேசாமடந்தை, உதிர்ந்த மலர், ராமுவின் சுயசரிதம், சுசீலை போன்ற கதைகள் ஆசிரியர் கூற்றாகவும்; மணிமுடி மாளிகை, ஓர் இரவு போன்ற கதைகள் கதைமாந்தர் கூற்றாகவும் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.


மாந்தரின் பெயர்ச்சுருக்கம்
            அன்பில் உருவான நெருக்கம் அதிகமாகும் போது, பேசும் பேச்சில் மதிப்பு தானாகக் குறைந்துவிடும்.  இந்த மதிப்பு அன்பு கொண்டவரின் பெயரைச் சுருக்கியோ தனக்குப் பிடித்த மாற்றுப் பெயரையோ வைத்துவிடத் தூண்டும்.  கதைகளிலும் இவ்வாறு மாந்தர்களின் பெயர்களைச் சுருக்கிக் கையாள்வது சில கதாசிரியர்களின் கரைகண்ட கலையாக இருக்கின்றன.  கதையோடு ஒன்றிப்படிக்கும் சுவைஞர் கதைமாந்தரின் பெயர்ச்சுருக்கத்தினால் தன்னுடன் அன்பு கொண்டவரை மனதில் எண்ணுவதாய்க் கதையைச் சுவைப்பர்.
            வையாபுரிப் பிள்ளையவர்கள் கதை போகும் போக்கில் மாந்தர்தம் பெயர்களை (மனதில் இடம் பிடிக்கும் மாந்தர்தம் பெயர்களை மட்டும்) சுருக்கிக் கையாண்டுள்ளார்.  சீனிவாசனை சீனு என்றும், நாராயணசாமியை நாணு என்றும், ரங்கநாயகி அம்மாளை ரங்கா என்றும், மோகனரங்கத்தை ரங்கு என்றும், ஆராவமுதை அமுது என்றும், அம்புஜத்தை அம்பு என்றும் சுருக்கியுள்ளார்.  இவ்வாறு பெயர்களைச் சுருக்கிவிடுவதால் கதையை ஊன்றிப் படிக்கும் நமக்கு நம்முடைய வாழ்க்கையில் நடந்தவற்றையோ அல்லது உணர்ந்தவற்றையோ நினைவூட்டும் நிகழ்ச்சியாகவே கதையை எண்ணத் தோற்றுவிக்கும்.  இப்பெயர்ச் சுருக்கம் நம்மை கதைக்குள் ஐக்கியப்படுத்திவிடும்.


இடச்சூழல்
            தாம் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த இடங்களை என்றும் எப்பொழுதும் யாரும் எச்சூழ்நிலையிலும் மறப்பதில்லை.  ஏதாவதொரு வகையில் தம்மோடு தொடர்புடைய ஊரின் பெயரையோ ஊரின் சுற்றுப்புறச் சூழலையோ நேரிடையாகவோ மறைமுகமாகவோ சுட்டிச்செல்வர்.  இம்மரபு சிறுகதை மற்றும் நாவலாசிரியர்களுக்குக் கைவந்த கலை.  இடத்திற்குத் தக்கவாறும் மாந்தருக்குத் தக்கவாறும் இவர்கள் மொழி அமைப்புகளையும் மாற்றி அமைத்துக்கொள்வர்.
            வையாபுரிப் பிள்ளையவர்கள், தாம் பிறந்த திருநெல்வேலியையும் படித்த திருவனந்தபுரத்தையும் பணியாற்றிய சென்னையையும் பெரும்பாலான கதைகளின் நிகழிடமாகக் கொண்டுள்ளார்.  மணிமுடி மாளிகை, திருவனந்தபுரத்தில் தொடங்கி சென்னையில் முடிகிறது.  ராமுவின் சுயசரிதம், சென்னையில் தொடங்கி திருநெல்வேலியில் முடிகிறது.  ராஜி நாவல், பெரும்பான்மையான பகுதிகள் சென்னையில் நிகழ்வதாகவே அமைந்துள்ளது.  இவற்றையெல்லாம் பார்க்கும் போது வையாபுரியாருக்கும் இடப்பற்று இருப்பது தெளிவாகிறது.
புராணத்தாக்கம்
            "புராணங்களும் பழங்கதைகளும் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் படைப்பாற்றலுக்கு உணவாகவும் உள்ளார்ந்த தூண்டுதலாகவும் இருந்து வந்துள்ளது.  பழங்கதைகளைத் தம் காலத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்பப் புதிய நோக்கில் கண்டு சில விளக்கங்களை நம் எழுத்தாளர்கள் தந்துள்ளனர்" என்று காணும் போது வையாபுரிப் பிள்ளையவர்கள் சமைத்த தழுவல் கதையான 'சந்திரா  பழி வாங்கிய'தில் நம்முடைய காப்பிய இலக்கியமான சிலம்பின் கதைக்கு ஒத்து இருப்பதைக் கண்டு வியக்கிறார்.  "தக்காணத்துப் பண்டை நாட்கள்" என்று பொருள்படும் ஓர் ஆங்கில நூலிலுள்ள கதையைத் தழுவி இக்கதை எழுதப்பட்டுள்ளது.  ஆங்கில நூலை எம். பிரேரே அவர்கள் 1868இல் எழுதி வெளியிட்டுள்ளார்.  இக்கதைக்கும் சிலப்பதிகாரக் கதைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை அறியத்தக்கன" என்கிறார்.  இவ்வொற்றுமை வேற்றுமைகளைச் சுட்டிச் செல்லுதல் சால்புடைத்து.
ஒற்றுமைகள்
1.         கதைத்தலைவன் வணிகன் மகள் கோவிலன் (கோவலன்)
2.         கோவிலன் நடனத்தைக் காணச் செல்லுகிறான்
3.         மனைவியின் காற்சிலம்பை விற்பதற்காகக் கோவிலன் மனைவியுடன்           மதுரை மாநகருக்குச் செல்லுகிறான்
4.         சிலம்பு விற்குமுன் தன் மனைவி சந்திராவைப் பால்காரக் கிழவியிடம் ஒப்புவித்துச் செல்லுகிறான் கோவிலன்
5.         கள்வன் பட்டத்தை மதுரை மாநகர்ச் சபையில் சூட்டப்பெற்று கொலை செய்ய ஆணை இடுகிறார்கள்
6.         கோவிலன் இறந்துபட்டான் என்ற செய்தி அறிந்த சந்திரா மதுரை மாநகருக்கு விரைந்து நீதி கேட்டு கோபக் கனலில் முழு மதுரையையும் தீக்கிரையாக்குகிறாள்.
வேற்றுமைகள்
1.         கோவலன் கோவிலனாகவும், கண்ணகி சந்திராவாகவும், மாதவி மௌலியாகவும் பெயர் மாற்றம் பெறுகின்றனர்
2.         கோவிலன், சந்திரா மற்றும் மௌலியின் பிறப்பு வரலாறு சொல்லப்படுகிறது
3.         கோவிலன் தந்தையால் சந்திரா வளர்க்கப்படுகிறாள்
4.         சூழ்நிலையின் காரணமாக மௌலியுடன் வாழ்கிறான் கோவிலன்
5.         பொருளுக்காக கோவிலனைப் பிரிகிறாள் மௌலி
6.         மௌலிக்குக் கடன் தீர்ப்பதற்கே தன்மனைவியின் காற்சிலம்பை விற்கத் துணிகிறான் கோவிலன்
7.         கணவன் மீது நம்பிக்கை இல்லாத சந்திரா தானும் மதுரைக்கு வருவேன் என்று உடன் புறப்படுகிறாள்
8.         தன் மகள் தான் சந்திரா என்பதை உணர்கிறாள் பாண்டிமாதேவி
9.         சிலம்பின் வரலாற்றையும் உணர்கிறாள் பாண்டிமாதேவி
10.       கயவர்களால் மாள்வதைத் தவிர்க்க கோவிலனே தற்கொலை செய்து கொள்கிறான்
11.       கோவிலன் இறந்துபட்டான் என்பதைப் பால்காரக்கிழவி தெரிந்து வந்து சந்திராவுக்குச் சொல்லுகிறாள்
12.       சந்திராவின் காலடிக்குக் கோவிலன் கையில் இருந்து பறித்து பேழைக்குள் வைக்கப்பட்ட சிலம்பானது உருண்டு வருகிறது
13.       கோவிலனுடைய உடலையும் தலையையும் ஊசியால் தைத்து மகாதேவனிடம் உயிர் பெற்று வாழ்கிறாள் சந்திரா
14.       மதுரை மாநகர் தீக்கிரையாக்கப்பட்ட போது அதனுடன் மௌலியும் அவர் தாயும் தீக்கு இரையாகிறார்கள்.
            இதுபோன்ற கருத்துகள் ஒத்தும் மாறுபட்டும் இருக்கக் காணலாம்.  காலவோட்டம் எவ்வளவு வேகமாக ஓடுகிறதோ அதற்குத் தக்கவாறு மனிதனுடைய உணர்வும் எண்ணங்களும் மாறுபடும்.  இக்கதை சிலப்பதிகாரக் கதைக்கருவைக் கொண்டிருந்தாலும் வளர்ந்து வரும் சமுதாய மாற்றத்தில் இக்கதைப் பின்னலும் அதன் பின்னணியும் மாறுபட்டு, சமுதாய வளர்ச்சிக்குத் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ளது எனலாம்.




பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் படைப்புக்கள்



            கசடறக் கற்ற கல்வியின் மேன்மையை ஆய்வுகளாகவும், எண்ண உறுத்தல்களைப் படைப்புகளாகவும் ஒருசேரச் செய்து வந்த பெருமக்கள் ஒரு சிலரே ஆவர்.  அவர்களுள் சரவணப்பெருமாளையர், த. சிவக்கொழுந்து தேசிகர், ஆறுமுக நாவலர், வடலூர் இராமலிங்க அடிகள், மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.  இவர்களுள் ஒருவராக வைத்துப் போற்றத்தக்கவரே பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை.
            வையாபுரிப் பிள்ளையவர்கள் 'கட்டுரைகள் வரைந்திருப்பதோடு, ஆராய்ச்சிகள் செய்திருப்பதோடு, கவிதைகளும் இயற்றியுள்ளார்; கதையும் எழுதியுள்ளார்' என்பார் மா.சு. சம்பந்தன் (அச்சும் பதிப்பு, ப.407).  வையாபுரியாரின் ஒன்பது சிறுகதைகளும் ஒரு நாவலும் அவரின் எண்ணத்தையும் வளர்ச்சி நிலையையும் காட்டும் கருக்கோலாக இருக்கின்றன.  வையாபுரியாரின் சிறுகதைகள் 'பாலையா' என்ற புனைபெயரில் வெளிவந்திருக்கின்றன.
            "சிறந்த புதினத்திற்கு இன்றியமையாத உறுப்புக்களாக சூழ்ச்சி அல்லது சதி, பாத்திரங்கள், உரையாடல், காலம், இடம், நடை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டப்பெற்றுள்ள வாழ்க்கைத் தத்துவம் என்பனவற்றைக் கூறலாம்.  இவை அனைத்தும் ஒரே அளவாகவோ அனைத்துமோ இருந்து தீரல் வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை.  ஒவ்வொன்றும் மிக்கும் குறைந்தும் இருப்பினும் தவறு இல்லை" (அ.ச. ஞானசம்பந்தம், இலக்கியக்கலை, ப.346).  வையாபுரிப்பிள்ளையவர்களின் பத்து கதைகளிலும் சூழ்ச்சி அல்லது சதி தவிர்த்த மேற்கூறிய அனைத்தும் வெளிப்படையாகவே அமைந்திருத்தலைக் காணமுடிகிறது.
கதைக்கரு - சிறுகதைகள்
அ.  மணிமுடி மாளிகை
            ரங்க நாயகியின் விருப்பப்படி இந்தியாவின் வடவெல்லை வரை சுற்றிப்பார்க்க தந்தை இசைவு தருகிறார்.  தந்தையுடன் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்னையில் வெகுநாளாக சந்திக்காதிருந்த அத்தை விசாலாட்சியைச் சந்திக்கிறார்கள்.  பின் டெல்லியில் அத்தை மகன் சீனிவாசனைச் சந்திக்கிறார்கள்.  அங்கு, ரங்கநாயகிக்கும் சீனிவாசனுக்கும் காதல் மலர்கிறது. பின் பெற்றோர்களின் ஆசியுடன் திருமணம் நடைபெறுகிறது.
ஆ.  சுசீலை
            குழந்தையிலேயே அனாதையாகிவிட்ட சுசீலையைத் தூரத்து உறவு அம்மணியம்மாள் வளர்த்து வருகிறார்.  அம்மணியம்மாளின் தங்கை மகன் இராமநாதன் அவளின் வீட்டிற்கு  களோக சாத்திரம் - புத்தகம் எழுதுவதற்காக அமைதியான இடத்திற்கு வருகிறான்.  சுசீலை இராமநாதனைக் காதலிக்கிறாள்.  இராமநாதன் தன் மாமன் மகள் சுந்தரியைக் காதலிக்கிறான்.  சுந்தரி தன் தாயாரின் விருப்பப்படி தன் தாய்மாமனையே மறுமணஞ் செய்து கொள்கிறாள்.  சுந்தரி இன்னொருவனுக்கு என்று முடிவானதும் இராமநாதன் பெண்களையே வெறுக்கிறான்.  அவனோடு அன்புடன் பழகும் சுசீலையையும் சேர்த்தே வெறுக்கிறான்.  சுசீலையின் மாறாத அன்பில் சிக்கிக்கொண்ட இராமநாதன் மனம் மாறி சுசீலையைக் காதலிக்கின்றான்.  பின் அவளைத் திருமணமும் செய்து கொள்கின்றான்.
இ.  ராமுவின் சுயசரிதம்
            தீபாவளிக்குப் பத்மாவும் இராமஸ்வாமியும் சென்னையில் இருந்து தங்களுடைய சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் தனித்தனியே இரயில் மூலம் புறப்படுகிறார்கள்.  இரயிலில் இரண்டு பேரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.  பத்மாவுக்கு தன்பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை இவர் என்பதை தனக்குப் பெற்றோர் அனுப்பிய புகைப்படத்தை எடுத்துச் சரிபார்த்துக் கொண்டு அவனுடன் பழகத் தொடங்குகிறாள்.  பழக்கம் காதலாகிறது. பின் பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் நிச்சயிக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது.
ஈ.  உதிர்ந்த மலர்
            தாய் இழந்த சுரைதா தந்தையின் ஆதரவில் அன்பாக வளர்கிறாள்.  தன் வயதொத்த அமீர்கானைக் காதலிக்கிறாள்.  தந்தையின் கட்டளைப்படி சுரைதா சதக்அலியைத் திருமணம் செய்து கொள்கிறாள்.  அமீர்கானுடன் சுரைதா அன்பு கொண்டிருப்பதை அறிந்த சதக்அலி அமீர்கானைக் கொன்று சவப்பேழைக்குள் வைத்து சுரைதாவுக்கு அன்புப் பரிசாகக் காதலன் பிணத்தை அளிக்கிறான்.  ஆறாத அன்பு கொண்ட சுரைதா நெஞ்சில் உரங்கொண்டு சதக்அலியிடம் இருந்த கத்தியை எடுத்து தற்கொலை செய்துகொள்கிறாள்.


உ.  பேசாமடந்தை
            கோபுவும் சுகுணாவும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்.  சுகுணா கோபுவைக் காதலிக்கிறாள்.  கோபு ஓர் பேசாமடந்தையாக இருப்பது கண்டு வெட்கி தலைகுனிகிறாள்.  எப்படியாகிலும் கோபுவை இந்நிலையில் இருந்து மாற்றவேண்டும் என்று சுகுணா முடிவெடுக்கிறாள்.  சுகுணாவின் தூண்டுதலால் கோபு 'பிரசங்கமாரி' என்னும் பட்டம் பெறும் அளவிற்குப் பேச்சில் முன்னேறுகிறான்.  பெற்றோர் ஆசியுடன் சுகுணாவைத் திருமணஞ் செய்துகொள்கிறான்.  தாம் படித்த மருத்துவத் தொழிலைவிட கோபு பேச்சுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருவதைக் கண்ட சுகுணாவும் அவர்களின் பெற்றோர்களும் வருத்தமடைகின்றனர்.  பின்னர் அவர் பேசுவதை எந்த வகையிலாவது குறைக்கவேண்டும் என்று பலவகையில் முயற்சி செய்கின்றனர்.
ஊ.  ஓர் இரவு
            காமுகர்களால் விரட்டி வரப்பட்ட பஞ்கஜத்தை சோமு காப்பாற்றி வீட்டில் கொண்டுபோய் விடுகிறான்.  பங்கஜத்தின் அண்ணன் தன்னுடன் பயின்ற நண்பன் என்பதை அறிகிறான்.  பின் பெற்றோர்களின் ஆசியுடன் பங்கஜத்தை சோமு திருமணம் செய்து கொள்கிறான்.
எ.  சந்திரா பழி வாங்கியது
            குழந்தையில்லாத கோவிலிங்கி ராணி, நடனமாது, வணிகன் மனைவி ஆகிய மூவரும் மகாதேவரிடம் வரம் கேட்க தவத்திடத்திற்குப் புறப்படுகிறார்கள்.  மூவரும் ஓரிடத்தில் சந்திக்கின்றனர்.  மூன்று பேரும் சேர்ந்து மகாதேவரைக் கண்டு வரம் கேட்போம் என்று செல்கின்றனர்.  வழியில் அக்கினி ஆற்றைக் கடந்து போகும் சூழ்நிலை வரும் போது முதல் இரண்டு பேரும் தயங்குகிறார்கள்.  வணிகன் மனைவி மட்டும் ஆற்றில் இறங்கி கடக்க முற்படுகிறாள்.  அப்படி கடக்கும் போது இரண்டு பேரும் எனக்கும் வரம் பெற்று வா என்று சொல்லி அனுப்புகின்றனர்.  வணிகன் மனைவி மகாதேவரைக் கண்டு மாம்பழத்தை வரமாகப் பெற்று வந்து மூன்று பேரும் பழத்தை உண்ணுகிறார்கள்.  மூவருக்கும் முறையே சந்திரா, மௌலி, கோவிலன் என்ற பெயருக்குகந்த குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். 
            சந்திராவின் சாதகத்தைக் கணித்த போது ஆபத்து வரும் என்று உணர்ந்த கோவிலிங்கி ராணி சந்திராவை ஆற்றில் மிதக்கவிட்டுவிடுகிறாள்.  அக்குழந்தையை வணிகன் எடுத்து வளர்த்து தன் மகன் கோவிலனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான்.  பின் கோவிலன் மௌலியின் நடனத்தைக் காணச் சென்று அவளையும் ஏற்றுக்கொண்டு சிறிது காலம் அவளுடன் வாழ்கின்றான்.  பின் மௌலியுடன் கசப்பு உணர்வு (பொருளுக்காக) ஏற்பட தன்மனைவி சந்திராவிடம் வந்து அவளின் காற்சிலம்பை விற்று மௌலியின் கடனைத் தீர்த்துவிட்டு நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என்கிறான்.  சந்திரா கணவனை நம்பாமல் தானும் உங்களுடன் வரவேண்டும் என்று கூறிக் கணவனுடன் காற்சிலம்பை விற்க மதுரைக்கு புறப்படுகிறாள்.  கோவிலனை மதுரையில் கள்வன் எனப் பட்டம் கட்டி கொலை செய்யச் சொல்கிறார்கள்.  பாவிகள் கையால் கொலைபடுவதைத் தவிர்க்க கோவிலனே தன் கை வாளால் மாள்கிறான்.  இதையுணர்ந்த சந்திரா கோபப்பட்டு மதுரையைத் தீக்கிரையாக்கித் தன் கணவன் உடலையும் தலையையும் ஊசியால் தைத்து மகாதேவரிடம் உயிர்பெற்று இன்பமாக வாழ்கிறாள்.

ஏ.  மத்தளக்காரன்
            மாயக்காரியின் வலையில் சிக்கிக்கொண்ட அரசகுமாரியைக் காப்பாற்றுகிறான் மத்தளக்காரன்.  பின் அவளையே திருமணமும் செய்துகொள்கிறான்.
ஐ.  பாலகோபாலன் வழக்கு
            ஏழைத்தாய் சுமதியின் வழக்கில் தலையிட்டு தீர்த்து வைக்கிறான் வக்கீலுக்குப் படித்துக்கொண்டு இருக்கும் மாணவன் பாலகோபாலன்.  சுமதியின் ஒரே மகள் சுந்தரியை பாலகோபாலன் காதலிக்கின்றான்.  படிப்பினை முடித்த பிறகு சுந்தரியைத் திருமணம் செய்துகொள்கிறான்.
ஒ.  ராஜி - நாவல்
            ராஜி மோகனரங்கத்தைக் காதலிக்கின்றாள்.  நாராயணசாமி ராஜியைக் காதலிக்கின்றாள்.  மோகனரங்கம் ராஜியைக் காதலித்துவிட்டு வசதியான பெண் கமலினி கிடைத்தவுடன் அவளையே திருமணஞ் செய்துகொள்கின்றான்.  ருக்கு நாராயணசாமியை மனதில் நினைத்து அவன் கிடைக்காது போகவே வரதராஜ அய்யங்காரரைக் காதலிக்கிறாள்.  மாறாத அன்பு கொண்ட நாராயணசாமி இறுதியில் ராஜியைத் திருமணஞ் செய்துகொள்ள வெளிநாட்டிலிருந்து சென்னை வருகின்றான். பெங்களூரில் நோய்வாய்ப்பட்டு இருக்கும் ராஜியைக் காணச் செல்கின்றான்.
முடிவுரை
            பேராசிரியர் வையாபுரிப்பிளிளை அவர்கள் பத்து கதைகள் எழுதப்பட்டிருந்தும் சமூகத்தையோ சமுதாயத்தையோ எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை.  பெரும்பாலான கதைகள் காதல் வேட்கை சார்புடையதாகவும் காதல் உணர்ச்சியைத் தூண்டக் கூடியதாகவும் அமைக்கப்பெற்றுள்ளன.  ஒரு அடிப்படை நிலை எழுத்தாளர் எழுதக்கூடிய சாதாரண கதைக்கருவைக் கொண்டே கதை பின்னப்பட்டுள்ளது.  தம் கதைகளில் கொள்கையுடையவர்களைக் காட்டத் தவரவில்லை.  என்றாலும், இறுதியில் அவர்களையும் வழுவாக்கிவிடுகிறார்.   இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது வையாபுரியார் அவர்கள் கதாசிரியர் என்ற அளவில் பெரிய வெற்றி பெற்றார் என்று சொல்வதற்கில்லை.