புதன், 21 நவம்பர், 2018

வையாபுரிப்பிள்ளை படைப்புகளின் அமைப்பும் சிறப்பும்



            பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் 'கட்டுரைகள் வரைந்திருப்பதோடு, ஆராய்ச்சிகள் செய்திருப்பதோடு, கவிதைகளும் இயற்றியுள்ளார்; கதையும் எழுதியுள்ளார்' என்பார் மா.சு. சம்பந்தன் (அச்சும் பதிப்பு, ப.407).  வையாபுரியாரின் ஒன்பது சிறுகதைகளும் ஒரு நாவலும் அவரின் எண்ணத்தையும் வளர்ச்சி நிலையையும் காட்டும் கருக்கோலாக இருக்கின்றன.  வையாபுரியாரின் சிறுகதைகள் 'பாலையா' என்ற புனைபெயரில் வெளிவந்திருக்கின்றன.
            "சிறந்த புதினத்திற்கு இன்றியமையாத உறுப்புக்களாக சூழ்ச்சி அல்லது சதி, பாத்திரங்கள், உரையாடல், காலம், இடம், நடை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டப்பெற்றுள்ள வாழ்க்கைத் தத்துவம் என்பனவற்றைக் கூறலாம்.  இவை அனைத்தும் ஒரே அளவாகவோ அனைத்துமோ இருந்து தீரல் வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை.  ஒவ்வொன்றும் மிக்கும் குறைந்தும் இருப்பினும் தவறு இல்லை" (அ.ச. ஞானசம்பந்தம், இலக்கியக்கலை, ப.346).  வையாபுரிப்பிள்ளையவர்களின் பத்து கதைகளிலும் சூழ்ச்சி அல்லது சதி தவிர்த்த மேற்கூறிய அனைத்தும் வெளிப்படையாகவே அமைந்திருத்தலைக் காணமுடிகிறது.
கதை சொல்லும் முறை
            கதை சொல்லுதல் என்பது ஒவ்வொருவருக்கும் கை வந்த கலையாக அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்றது.  கதையில் நல்ல கருப்பொளும் அதை நடைபோட்டுச் செல்ல கதைமாந்தர்கள் நல்ல பண்பு உள்ளவர்களாகவும் இருந்தால் மட்டும் போதாது.  சுவைஞர் மனதில் கதை பதியும்  அளவுக்குக் கதை சொல்லும் முறை அமைந்திருக்க வேண்டும்.  பெரும்பாலான கதைகள் ஆசிரியர் வெளியில் இருந்துகொண்டும் கதைக்குள்  இருந்துகொண்டும் தானே ஒரு மாந்தராகக் கருதிக்கொண்டும் கதையைச் சொல்லுதல் என்பது ஒரு சிறந்த உத்தி.  இதனால் அவரின் (ஆசிரியர்) எண்ணத்தை முழுமையாக கதையின் மூலம் வெயியுலகுக்குக் காட்டமுடியும்.  இந்த முறையை ஆசிரியர் கூற்று என்கின்றோம்.  கதையை நடத்திச் செல்லும் முதன்மைக் கதைமாந்தர்களோ துணைக்கதைமாந்தர்களோ கூடக் கதையைச் சொல்லலாம்.  இந்த முறையை கதைமாந்தர் கூற்று என்கிறோம்.  பேராசிரியர் வையாபுரிப் பிள்ளைவர்களின் கதைகளை உற்று நோக்கும் போது பெரும்பான்மை ஆசிரியர் கூற்றாகவும் சிறுபான்மை கதைமாந்தர் கூற்றாகவும் அமைந்திருப்பதைக் காணமுடியும்.  ராஜி, பாலகோபாலன் வழக்கு, மத்தளக்காரன், சந்திரா பழி வாங்கியது, பேசாமடந்தை, உதிர்ந்த மலர், ராமுவின் சுயசரிதம், சுசீலை போன்ற கதைகள் ஆசிரியர் கூற்றாகவும்; மணிமுடி மாளிகை, ஓர் இரவு போன்ற கதைகள் கதைமாந்தர் கூற்றாகவும் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.


மாந்தரின் பெயர்ச்சுருக்கம்
            அன்பில் உருவான நெருக்கம் அதிகமாகும் போது, பேசும் பேச்சில் மதிப்பு தானாகக் குறைந்துவிடும்.  இந்த மதிப்பு அன்பு கொண்டவரின் பெயரைச் சுருக்கியோ தனக்குப் பிடித்த மாற்றுப் பெயரையோ வைத்துவிடத் தூண்டும்.  கதைகளிலும் இவ்வாறு மாந்தர்களின் பெயர்களைச் சுருக்கிக் கையாள்வது சில கதாசிரியர்களின் கரைகண்ட கலையாக இருக்கின்றன.  கதையோடு ஒன்றிப்படிக்கும் சுவைஞர் கதைமாந்தரின் பெயர்ச்சுருக்கத்தினால் தன்னுடன் அன்பு கொண்டவரை மனதில் எண்ணுவதாய்க் கதையைச் சுவைப்பர்.
            வையாபுரிப் பிள்ளையவர்கள் கதை போகும் போக்கில் மாந்தர்தம் பெயர்களை (மனதில் இடம் பிடிக்கும் மாந்தர்தம் பெயர்களை மட்டும்) சுருக்கிக் கையாண்டுள்ளார்.  சீனிவாசனை சீனு என்றும், நாராயணசாமியை நாணு என்றும், ரங்கநாயகி அம்மாளை ரங்கா என்றும், மோகனரங்கத்தை ரங்கு என்றும், ஆராவமுதை அமுது என்றும், அம்புஜத்தை அம்பு என்றும் சுருக்கியுள்ளார்.  இவ்வாறு பெயர்களைச் சுருக்கிவிடுவதால் கதையை ஊன்றிப் படிக்கும் நமக்கு நம்முடைய வாழ்க்கையில் நடந்தவற்றையோ அல்லது உணர்ந்தவற்றையோ நினைவூட்டும் நிகழ்ச்சியாகவே கதையை எண்ணத் தோற்றுவிக்கும்.  இப்பெயர்ச் சுருக்கம் நம்மை கதைக்குள் ஐக்கியப்படுத்திவிடும்.


இடச்சூழல்
            தாம் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த இடங்களை என்றும் எப்பொழுதும் யாரும் எச்சூழ்நிலையிலும் மறப்பதில்லை.  ஏதாவதொரு வகையில் தம்மோடு தொடர்புடைய ஊரின் பெயரையோ ஊரின் சுற்றுப்புறச் சூழலையோ நேரிடையாகவோ மறைமுகமாகவோ சுட்டிச்செல்வர்.  இம்மரபு சிறுகதை மற்றும் நாவலாசிரியர்களுக்குக் கைவந்த கலை.  இடத்திற்குத் தக்கவாறும் மாந்தருக்குத் தக்கவாறும் இவர்கள் மொழி அமைப்புகளையும் மாற்றி அமைத்துக்கொள்வர்.
            வையாபுரிப் பிள்ளையவர்கள், தாம் பிறந்த திருநெல்வேலியையும் படித்த திருவனந்தபுரத்தையும் பணியாற்றிய சென்னையையும் பெரும்பாலான கதைகளின் நிகழிடமாகக் கொண்டுள்ளார்.  மணிமுடி மாளிகை, திருவனந்தபுரத்தில் தொடங்கி சென்னையில் முடிகிறது.  ராமுவின் சுயசரிதம், சென்னையில் தொடங்கி திருநெல்வேலியில் முடிகிறது.  ராஜி நாவல், பெரும்பான்மையான பகுதிகள் சென்னையில் நிகழ்வதாகவே அமைந்துள்ளது.  இவற்றையெல்லாம் பார்க்கும் போது வையாபுரியாருக்கும் இடப்பற்று இருப்பது தெளிவாகிறது.
புராணத்தாக்கம்
            "புராணங்களும் பழங்கதைகளும் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் படைப்பாற்றலுக்கு உணவாகவும் உள்ளார்ந்த தூண்டுதலாகவும் இருந்து வந்துள்ளது.  பழங்கதைகளைத் தம் காலத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்பப் புதிய நோக்கில் கண்டு சில விளக்கங்களை நம் எழுத்தாளர்கள் தந்துள்ளனர்" என்று காணும் போது வையாபுரிப் பிள்ளையவர்கள் சமைத்த தழுவல் கதையான 'சந்திரா  பழி வாங்கிய'தில் நம்முடைய காப்பிய இலக்கியமான சிலம்பின் கதைக்கு ஒத்து இருப்பதைக் கண்டு வியக்கிறார்.  "தக்காணத்துப் பண்டை நாட்கள்" என்று பொருள்படும் ஓர் ஆங்கில நூலிலுள்ள கதையைத் தழுவி இக்கதை எழுதப்பட்டுள்ளது.  ஆங்கில நூலை எம். பிரேரே அவர்கள் 1868இல் எழுதி வெளியிட்டுள்ளார்.  இக்கதைக்கும் சிலப்பதிகாரக் கதைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை அறியத்தக்கன" என்கிறார்.  இவ்வொற்றுமை வேற்றுமைகளைச் சுட்டிச் செல்லுதல் சால்புடைத்து.
ஒற்றுமைகள்
1.         கதைத்தலைவன் வணிகன் மகள் கோவிலன் (கோவலன்)
2.         கோவிலன் நடனத்தைக் காணச் செல்லுகிறான்
3.         மனைவியின் காற்சிலம்பை விற்பதற்காகக் கோவிலன் மனைவியுடன்           மதுரை மாநகருக்குச் செல்லுகிறான்
4.         சிலம்பு விற்குமுன் தன் மனைவி சந்திராவைப் பால்காரக் கிழவியிடம் ஒப்புவித்துச் செல்லுகிறான் கோவிலன்
5.         கள்வன் பட்டத்தை மதுரை மாநகர்ச் சபையில் சூட்டப்பெற்று கொலை செய்ய ஆணை இடுகிறார்கள்
6.         கோவிலன் இறந்துபட்டான் என்ற செய்தி அறிந்த சந்திரா மதுரை மாநகருக்கு விரைந்து நீதி கேட்டு கோபக் கனலில் முழு மதுரையையும் தீக்கிரையாக்குகிறாள்.
வேற்றுமைகள்
1.         கோவலன் கோவிலனாகவும், கண்ணகி சந்திராவாகவும், மாதவி மௌலியாகவும் பெயர் மாற்றம் பெறுகின்றனர்
2.         கோவிலன், சந்திரா மற்றும் மௌலியின் பிறப்பு வரலாறு சொல்லப்படுகிறது
3.         கோவிலன் தந்தையால் சந்திரா வளர்க்கப்படுகிறாள்
4.         சூழ்நிலையின் காரணமாக மௌலியுடன் வாழ்கிறான் கோவிலன்
5.         பொருளுக்காக கோவிலனைப் பிரிகிறாள் மௌலி
6.         மௌலிக்குக் கடன் தீர்ப்பதற்கே தன்மனைவியின் காற்சிலம்பை விற்கத் துணிகிறான் கோவிலன்
7.         கணவன் மீது நம்பிக்கை இல்லாத சந்திரா தானும் மதுரைக்கு வருவேன் என்று உடன் புறப்படுகிறாள்
8.         தன் மகள் தான் சந்திரா என்பதை உணர்கிறாள் பாண்டிமாதேவி
9.         சிலம்பின் வரலாற்றையும் உணர்கிறாள் பாண்டிமாதேவி
10.       கயவர்களால் மாள்வதைத் தவிர்க்க கோவிலனே தற்கொலை செய்து கொள்கிறான்
11.       கோவிலன் இறந்துபட்டான் என்பதைப் பால்காரக்கிழவி தெரிந்து வந்து சந்திராவுக்குச் சொல்லுகிறாள்
12.       சந்திராவின் காலடிக்குக் கோவிலன் கையில் இருந்து பறித்து பேழைக்குள் வைக்கப்பட்ட சிலம்பானது உருண்டு வருகிறது
13.       கோவிலனுடைய உடலையும் தலையையும் ஊசியால் தைத்து மகாதேவனிடம் உயிர் பெற்று வாழ்கிறாள் சந்திரா
14.       மதுரை மாநகர் தீக்கிரையாக்கப்பட்ட போது அதனுடன் மௌலியும் அவர் தாயும் தீக்கு இரையாகிறார்கள்.
            இதுபோன்ற கருத்துகள் ஒத்தும் மாறுபட்டும் இருக்கக் காணலாம்.  காலவோட்டம் எவ்வளவு வேகமாக ஓடுகிறதோ அதற்குத் தக்கவாறு மனிதனுடைய உணர்வும் எண்ணங்களும் மாறுபடும்.  இக்கதை சிலப்பதிகாரக் கதைக்கருவைக் கொண்டிருந்தாலும் வளர்ந்து வரும் சமுதாய மாற்றத்தில் இக்கதைப் பின்னலும் அதன் பின்னணியும் மாறுபட்டு, சமுதாய வளர்ச்சிக்குத் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ளது எனலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக