புதன், 24 ஜனவரி, 2024

கோவை மனம் (201 - 400)

 கோவை மனம் 201. தோல்வியை ஏற்றாலும் ஏமாறுவதும் ஏமாற்றுவதையும் ஏற்கவே கூடாது.

கோவை மனம் 202. நிகழ்காலத்தில் செய்யப்படும் உன்னுடைய செயற்பாடுகளே கடந்த காலத்தை வெற்றியுடையதாக்கவும் எதிர்காலத்தில் நிலைத்து நிற்பதற்கும் உதவும்.

கோவை மனம் 203. உன்னுடைய நண்பர்களிடமிருந்து நட்பிற்கான இலக்கணத்தைத் தேடாமல், உன்னுடைய தீவிர எதிரியின் எதிர்மறையிலிருந்து தேடு, நட்பிற்கான இலக்கணம் புரியும்.

கோவை மனம் 204. தவறு செய்தவனை மன்னிக்காதே. மன்னிப்பது மேலும் தவறு செய்யத் தூண்டும். தவறுக்கேற்ற தண்டனையை அவன் ஏற்றால் திருந்த வாய்ப்புண்டு. எனவே, தவறுக்கான தண்டனையை உடனே கொடு.

கோவை மனம 205. உலக மக்களை உண்மையான அன்புடன் மதித்துப் போற்றி வாழ்ந்தவனே சிறந்த மாமனிதன்.

கோவை மனம் 206. கோபம், ஒருவனின் பிறவிக்குணம் அல்ல. அது, தன்னைச் சார்ந்தவர்கள் மற்றும் சூழ்ந்தவர்கள் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு.

கோவை மனம் 207. நீ, பதவிகளில் இருந்தபோது கிடைத்த பாராட்டுக்கள் உனக்குக் கிடைத்தவை அல்ல. பதவியேதும் இல்லாத போழ்தும் உன்னைத் தேடி வரும் பாராட்டுக்கள் மட்டுமே உனக்கான அங்கீகாரம்.

கோவை மனம் 208. உன்னை விட்டு வெளியேறிய நட்பை நாடாதே, என்றாலும் எப்பொழுதும் அவர்களைத் தூற்றாதே.

கோவை மனம் 209. தாய் உள்ளத்தோடு கேட்டு உணர்ந்து அறிந்த குரல் எத்திசையில் இருந்து வந்தாலும் தானாய் உணரும்.

கோவை மனம் 210. ஆண்ட காலங்கள் பல கடந்தாலும் ஆண்ட காலத்தை நிகழ் காலத்தார் போற்ற வாழ்ந்தவரே வாழ்வாங்கு வாழ்ந்தவர்.

கோவை மனம் 211. ஒத்த மனமும் உணர்வும் கொண்டோரிடம் என்றும் நட்பாய் இரு.

கோவை மனம் 212. உண்மையே பேசி வன்மம் தவிர்.

கோவை மனம் 213. உன் சக்திக்கும் மீறிய சுமையைச் சுமக்கும்போது ஏற்படும் அழர்ச்சிக்கு உற்ற துணை கை கொடுத்தால் அழர்ச்சி விலகும்.

கோவை மனம் 214. உதவி தேவைப்படுமோ என்ற யூகத்தில் உதவி தேவைப்படாதவர்க்குச் செய்வதைத் தவிர்.

கோவை மனம் 215. நடை பயிற்சியில் சுமை தூக்காதே.

கோவை மனம் 216. உன்னைக் கேள்வி கேட்கும் ஆளே இல்லை என்றாலும் உன் செயற்பாடுகளை எல்லோரும் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயல்பட்டால் எதிர்காலம் உனதாகவே இருக்கும்.

கோவை மனம் 217. உழைத்துப் பிழைப்பவன் பிறரைப் பற்றிப் பேச மாட்டான்.

கோவை மனம் 218. மண், பெண், பொன் மீது ஆசையுள்ளவனே தற்புகழ்ச்சி பேசுபவன்.

கோவை மனம் 219. ஞானியர் உரைபோல் இருந்தாலும் தற்புகழ்ச்சி பேசுபவனின் உரையில் வஞ்சகம் இருக்கும்.

கோவை மனம் 220. ஒருவனின் துன்பக் காலத்தில்தான் அவனின் உண்மை மனம் வெளிப்படும்.

கோவை மனம் 221. சுற்றத்தையும் நட்பையும் ஒருவன் தன் மனைவிக்குப் பிறகாகவும், ஒருவள் தன் கணவனுக்குப் பிறகாகவும் எண்ணி செயற்பட்டால் கணவன் மனைவிக்குள்ளே கருத்து வேறுபாடில்லாத வாழ்க்கை அமையும்.

கோவை மனம் 222. தொட்டில் உறவுகளைக் காட்டிலும் கட்டில் உறவுகளுக்கு முதன்மை கொடுத்து கூட்டுக் குடும்பமாக வாழ்க்கை நடத்துபவளே சிறந்த இல்லாள்.

கோவை மனம் 223.      வழிபாடுகளில் மூத்தோர் வழிபாடு சிறந்தது.

கோவை மனம் 224. கசடறக் கற்றவன், கற்பிக்கும்போது கற்பவன் கசடறவில்லை என்றால் கற்றவனால் எந்தப் பயனும் இல்லை.

கோவை மனம் 225. குற்றம் செய்தவனை தண்டிப்பவன் மனிதன், மன்னிப்பவன் ஞானி, தண்டிப்பதா மன்னிப்பதா என்று சிந்திப்பவன் அறிவாளி.

கோவை மனம் 226.      மனதை ஈர்க்கக் கூடிய புறப்பொருள்கள் எல்லாம் அழியும் தன்மை உடையன.  ஆனால், அகப்பொருள்கள் எல்லாம் ஆக்கும் தன்மை கொண்டன.

கோவை மனம் 227. மன ஒருமைப்பாடு இல்லாத தியானம் வீண்.

கோவை மனம் 228.      மனம் சுத்தமாக இருந்தால் அறிவு பெருகும்.

கோவை மனம் 229.      மாசுற்ற மனம் கொண்டவன் பிறரிடம் குற்றங்களையே காண்பான்.  ஆனால், மாசற்ற மனம் கொண்டவன் பிறரிடம் குற்றங்கள் இருந்தாலும் அவற்றிலும் நல்லதையே தேடுவான்.

கோவை மனம் 230.      பிறரிடம் குற்றங்களைக் காண்பதை விட்டுவிட்டு, உன்னிடம் உள்ள குற்றங்களை எண்ணிப்பார் உன் மனம் அமைதி காணும்.

கோவை மனம் 231.      தேவையான இடங்களில் நாவடக்கம் தேவை.

கோவை மனம் 232.      விலையில்லாத குப்பைதான் வீதிக்கு வருகிறது. எல்லா குப்பைக்கும் விலை வைத்துப் பார். வீடும் நாடும் சுத்தமாகும்.

கோவை மனம் 233.      நல்லதை செய்வதற்கு நேரங்காலம் பார்க்காதே.

கோவை மனம் 234.      வேலையில் கவனம் செலுத்து. உன்னுடைய வீணான நினைவுகள் காணாமல் போகும். நிம்மதி பெருகும்.

கோவை மனம் 235.      எச்செயலுக்கும் அச்செயலுக்குரிய பலனை அடைவாய்.

கோவை மனம் 236.      ஒருவனின் உள்ளுணர்ச்சிகளுக்கு ஏற்பதே அவனுடைய அன்பின் அளவுகோல் அமையும்.

கோவை மனம் 237.      குரு பக்தியே சீடனின் முக்தி.

கோவை மனம் 238.      மரியாதையுடன் செய்யும் செயலே உன்னிடம் மற்றவர்கள் மரியாதை காட்டச் செய்யும்.

கோவை மனம் 239.      ஒத்த கருத்துடைய கணவன்-மனைவியால் குடும்பம் உயரும்.

கோவை மனம் 240.      வாழ்க்கையில் எவனொருவன் துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபடுகிறானோ அவனே பேறு பெற்றவனாவான்.

கோவை மனம் 241.      எண்ணம், ஆற்றல், நம்பிக்கை ஆகிய மூன்றும் ஓர் இலக்கு நோக்கியதாக இருக்கும்போது உன்னுடைய வெற்றிப் பாதை திறந்திருக்கும்.

கோவை மனம் 242.      உங்களின் இலக்குகளைத் தினந்தினம் எண்ணிச் செயற்படும்போது வெற்றிப் படியை விரைவில் எட்டுவீர்.

கோவை மனம் 243.      சுயநலம் கொண்டவன் நட்பைத் தேடிச் செல்வான். சுயநலமில்லாதவன் நட்பைத் தேடுவதில் எண்ணம் கொள்ள மாட்டான். ஆனால், தானாக அமையும் ஒத்த மனத்தினரோடு நட்பாவான்.

கோவை மனம் 244.      முட்டாள்களை அறவே துடைத்தெறி.

கோவை மனம் 245.      நான் என்பதை நாம் என்று மாற்றிப்பார் ஆசையற்ற வாழ்வு அமைந்து, வாழ்க்கை சிறக்கும்.

கோவை மனம் 246.      ஒருவனின் ஆசையே அவன் வாழ்க்கையில் முன்னேற்றத் தடைக்கல்.

கோவை மனம் 247.      மக்கள் விரும்புவதைப் படைப்பவனைவிட மக்கள் விரும்பப் படைப்பவனே எழுத்தாளன்.

கோவை மனம் 248.      மழை குறைவாக பெய்தாலும், வடிகால் இல்லை என்றால் அதுவும் பெருமழையே.

கோவை மனம் 249.      ஆற்றில் ஊற்று நீர் இல்லையென்றாலும் நிலத்தடி நீர் இருக்கும்.

கோவை மனம் 250.      ஆணவக்காரன், நல்ல நண்பர்களை இழப்பான்.

கோவை மனம் 251.      தன்னால் செய்ய முடியாததைப் பிறர் செய்யும் போது அவர் மீது வெறுப்பு வருவது இயல்பு.  இது அவரால் எப்படி முடிந்தது என்று விடை காண்பது அறிவு.

கோவை மனம் 252.      மனைவியிடம் காமம் கொள்ளாதே.

கோவை மனம் 253.      இருவர்க்கிடையே ஒத்த அன்பு நிலவினால் குடும்பம் முன்னேறும்.  அதே அன்பு ஒரு குழுவினரிடேயே நிலவினால் நாடே முன்னேறும்.

கோவை மனம் 254.      நம்பிக்கை அளவுக்கு மீறும்போது அழிவும் கேலியும் எதிரே நிற்கும்.  இதனை எதிர்த்து வெல்பவனே அறிவாளி.

கோவை மனம் 255.      ஊசி நுழையாத இடத்திலும் காற்று நுழையும் என்பதை உணர்ந்து வீண் பேச்சைத் தவிர்.

கோவை மனம் 256.      நூல் நுழைய ஊசி இடம் கொடுத்ததால் ஊசியைக் கேவலப்படுத்தாதே.  அதுவே இடம்கொடுக்க மறுக்கும்போது நீ அசிங்கப்பட்டு நிற்பாய்.

கோவை மனம் 257.      கொடுத்துப் பார் சுகம் தெரியும்.  எடுத்துப் பார் வலி புரியும்.

கோவை மனம் 258.      வாழ்ந்தவர்களின் முடிவுரையே வாழ்பவர்களுக்கு முன்னுரை.

கோவை மனம் 259.      கோடி கொடுத்தாலும் கொடி பிடிக்காதவன் உயர்ந்தவன்.

கோவை மனம் 260.      மாற்றத்தை நினைப்பவன், தொடக்கத்தில் சோதனைகளைச் சந்தித்துப் பின்னர் சாதனை புரிவான்.

கோவை மனம் 261. கள்வன் களவாடிப் பெற்றதை வல்லவன் ஒருபோதும் மீளப் பெறமாட்டான்.  ஆனால், இனி ஏமாறாமல் இருக்கவும், கள்வன் பெற்றதைப்போல் பல மடங்கு உயர்வானதைப் பெறவும் முயற்சி செய்வான்.

கோவை மனம் 262. வானம் நிலவை மறைப்பதில்லை.  ஆனால், மேகம் நிலவை மறைக்கின்றது.  வானம் நிலையானது, மேகமோ நிலையற்றது.

கோவை மனம் 263. தொடர்ந்து இனிப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இனிப்பும் ஒருநாள் கசக்கும்.  எனவே, சுவையில் இனிப்பும் காரமும் மாறிமாறி இருத்தல் வேண்டும். அதுபோலத்தான், வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறிமாறி அமைதல் வேண்டும்.

கோவை மனம் 264. இன்ப துன்பங்களின் அளவுகோலை வைத்தே அவனுடைய வாழ்க்கை அமையும்.

கோவை மனம் 265. இழப்பின் விலையே அறிவுக் கொள்முதல்.

கோவை மனம் 266. உலகம் உன்னை ஏசினாலும் உன்னை நீ ஏசாமல் பார்த்துக்கொள்.

கோவை மனம் 267. உன்னைப் பழிப்பவர்கள் நிச்சயம் ஒருநாள் பழிக்கப்படுவார்கள்.

கோவை மனம் 268. உணர்ச்சியில் வாழ்பவர்கள் கற்பனையில்தான் வாழ வேண்டும்.

கோவை மனம் 269. மென்மையான இதயம் எங்கிருக்கிறதோ அங்கே அமைதி இருக்கும், அழகு இருக்கும், இரக்கம் இருக்கும், நல்ல குணம் இருக்கும்.

கோவை மனம் 270. சொந்தங்கள் ஆயிரம் இருந்தாலும் சொத்து இல்லை என்றால் அவனே இவ்வுலகில் அனாதை.

கோவை மனம் 271.      இலக்கை எட்டிய மனம் அமைதியடையாமல் வேட்கை கொள்ள வேண்டும்.

கோவை மனம் 272.      உணர்ச்சியற்ற உடலும், உணர்வற்ற மனமும் பாழ்.

கோவை மணம் 273.     ஒத்த மன இணைவு சிறக்கும்.

கோவை மனம் 274.      காலத்தே நடை பழகு, காலமும் உடல் சிறக்கும்.

கோவை மனம் 275.      தேவையறிந்து உதவி செய். பின்னாளில், உன் தேவைக்குக்கு அது உதவும்.

கோவை மனம் 276.      ஆணவக்காரன் நல்ல நண்பர்களை இழப்பான்.

கோவை மனம் 277.      தன்னால் செய்ய முடியாததைப் பிறர் செய்யும்போது அவர்மீது வெறுப்பு தோன்றுவது இயல்பு.  இது அவரல் எப்படி முடிந்தது என்று விடை கண்டு செயற்படுவது சால்பு.

கோவை மனம் 278.      முட்டாள்களை அறவே துடைத்தெறி.

கோவை மனம் 279.      கணவன்-மனைவிக்கிடையே ஒத்த அன்பு நிலவினால் குடும்பம் முன்னேறும், குழுவினரிடையே ஒத்த அன்பு நிலவினால் நாடே முன்னேறும்.

கோவை மனம் 280.      நம்பிக்கை அளவுக்கு மீறும்போது அழிவும் கேலியும் எதிரே நிற்கும்.  இதனை வெல்பவனே அறிவாளி.

கோவை மனம் 281.      மனைவியிடம் காமம் கொள்ளாதே.

கோவை மனம் 282.      செத்த பிணத்திலிருந்து கோடித் துணியை வெட்டியான் உருவிக் கொள்வதைப்போல் உன் வாழ்க்கையில் எதுவும் இறுதிவரை இல்லை என்பதை உணர்ந்தால் நீ, மாமனிதன்.

கோவை மனம் 283.      நீ செய்யும் எந்தச் செயலானாலும் அதன் அடித்தளம் வரை சென்று நன்றாகப் புரிந்துக்கொண்டு செயற்படு, நீயே அதில் வல்லவனாகத் திகழ்வாய்.

கோவை மனம் 284.      உண்மையாக நேசித்துச் செய்த ஒரு வேலையை மறப்பது கடினம்தான். என்றாலும் உண்மையை உணர்ந்து அதன் மறுசிந்தனையை எண்ணிச் செயற்படு, உனக்கான இன்னொரு பரிமாணத்தின் சொர்க்க வாசல் திறக்கும்.

கோவை மனம் 285.      உனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு உலகை வலம் வந்தால் உன்னுடைய உள்ளங்கைக்குள் உலகம் இருக்கும்.

கோவை மனம் 286.      நோய் கண்டு சிகிச்சை பெறுவதைவிட நோய் வராமல் காத்துக் கொள்வதே சாலச் சிறந்தது.

கோவை மனம் 287.      உயிர் வீடுபேறு அடைய உடலைப் பேணு.

கோவை மனம் 288.      உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்தும் முறையே சீராக இருந்தால் உடல் நலம் காக்கப்படும்.

கோவை மனம் 289.      தூக்கம், தாகம், சிறுநீர், மலம், தும்மல், இருமல், வாந்தி, பசி, கொட்டாவி, ஏப்பம், சுக்கிலம், கண்ணீர், அபானவாயு, மூச்சு ஆகியவற்றை அடக்கின் உடல் நலம் கெடும்.

கோவை மனம் 290.      மனத்தை அடக்காதே. அது அலையும். ஆனால், மனத்தை அறிந்து பார், அது அடங்கும்.

கோவை மனம் 291.      மனம் நோய்வாய்ப்பட்டால் அதற்கு மருந்து மனமே.

கோவை மனம் 292.      தேவைகளைச் சுருக்கு வாழ்க்கை சுகமாகும்.

கோவை மனம் 293.      ஆசைகளைச் சீரமைத்தால் உடல் நலம் பெறும்.

கோவை மனம் 294.      கோபம், அச்சம், கவலை ஆகியன மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சு.

கோவை மனம் 295.      ஒருவனின் தவறைக் குத்திக் காட்டும் அறிவுரை பலன் தராது.

கோவை மனம் 296.      துன்பத்தில் எதிர் நீச்சல் போட்டால் இன்பம் நிச்சயம் உண்டு.

கோவை மனம் 297.      ஒருமித்த உணர்வோடும் எண்ணத்தோடும் நிலையாக வாழ்ந்தால் ஒரு கதவு மூடப்பட்டாலும் மறுகதவு உனக்காகத் திறந்திருக்கும்.

கோவை மனம் 298.      இலை உதிர்ந்து மக்கி காட்டில் தானே உரமாவது போல் நாட்டில் வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை தன்னைச் சார்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

கோவை மனம் 299.      பணத்தைச் சரியான முறையில் கையாளாத வீடும் நாடும் பிறரின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

கோவை மனம் 300.      தனி மனிதக் கொள்கையைப் பொது நலத்தில் பார்ப்பதும், பொது நலத்தில் தனி மனிதக் கொள்கையை நுழைப்பதும் எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும்.

கோவை மனம் 301.      ஒன்றின் மீது பற்று வைக்கும்போது அப்பற்று நம்பிக்கையாக உருமாறி உன் முயற்சியைத் திருவினையாக்கும்.

கோவை மனம் 302.      தன் தந்தையின் முன்னேற்றத்தில் தொற்றி வால் பிடித்து வளர்வது முறையான வளர்ச்சி அல்ல.

கோவை மனம் 303.      சம்பாதித்த பணத்தைச் சரியான முறையில் கையாளதவர் பிறரின் கட்டுப்பாட்டுக்குள் வருவர்.

கோவை மனம் 304.      மூத்தோர் வாழ்க்கை தன்னைச் சார்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

கோவை மனம் 305.      செய்யாத குற்றத்திற்குத் தண்டனை கிடைத்தது என்றால், இத்தண்டனை முன் செய்த குற்றத்திற்கு என்று ஏற்று, கற்றுக்கொள்.

கோவை மனம் 306.      தன்னை உணர்ந்தவனும், தனக்குத் தெரிந்ததைச் செயலாற்றுபவனும் செயலாற்றும்போது ஏற்படும் சிக்கல்களைக் களைபவனே சிறந்த மனிதன்.

கோவை மனம் 307.      அதிக கோபமும், மிக்க மகிழ்ச்சியும், கர்வமும், வெட்கமும், திமிரும் நீக்கி வாழ்பவனே எல்லோராலும் மதிக்கப்படுவான்.

கோவை மனம் 308.      உள்ளுணர்வோடு ஒருவரை வாழ்த்தும்போது உன் மனதிலிருந்து பகைமை மாறும், அமைதி பெருகும்.

கோவை மனம் 309.      ஒருவனின் பழக்க வழக்கங்களே ஒழுக்கத்தின் கண்ணாடி.

கோவை மனம் 310.      முற்கால அனுபவத்தால் இக்காலத் தேவைகளை எதிர்கால நலனுக்கு எவையெவை பயன்படும் என்று கண்டு வாழ். நீயே, உலகின் சிறந்த மனிதன்.

கோவை மனம் 311.      கொலை செய்வதற்கு ஈடானது காமக்காதல்.

கோவை மனம் 312. சாலையில் நடந்தவற்றை நினைத்துக் கொண்டு சோலைக்குள் நுழையாதே. சோலைத் தென்றல் அனலாகிவிடும்.

கோவை மனம் 313.      அதிருப்தி என்றால் பெற்ற இன்பமும் துன்பமே.

கோவை மனம் 314. நண்பர்களை ஒட்டியே அவன் நல்லவனாவதும், கெட்டவனாவதும்.

கோவை மனம் 315.      பேராபத்தில் மாட்டிக் கொண்டவன் தன் முயற்சி ஏதும் இல்லாமல் தன்னைக் காப்பாற்ற பிறரை அழைப்பவன் தன்னையே இழப்பான்.

கோவை மனம் 316.      பெற்றோரைப் போற்றி வாழ்ந்தவனும், மற்றோரை நேசித்து வாழ்ந்தவனும், உற்றாரைச் சுற்றி வாழ்ந்தவனும் என்றும் நிலைத்து எல்லோர் மனதிலும் நீடித்து வாழ்ந்து கொண்டிருப்பான்.

கோவை மனம் 317.      கரையாது சேரும் சேமிப்பை விட கரைந்து சேரும் சேமிப்பே உன்னைத் தலைநிமிரச் செய்யும்.

கோவை மனம் 318.      தன் கடமையைச் சரியாக ஆக்கிய தந்தைக்குத் தன் மக்கள் உடனிருப்பதே வீடு பேறு.

கோவை மனம் 319.      இன்பத்திலேயே வாழ்ந்தவனுக்கு ஒரு துளி துன்பமும் பெருந்துன்பம்.  துன்பத்திலேயே வாழ்ந்தவனுக்கு ஒரு துளி இன்பமும் பேரின்பம்.

கோவை மனம் 320.      இன்பத்திலேயே வாழ்ந்து பார் துன்பத்தின் எல்லை புரியும். துன்பத்திலேயே வாழ்ந்து பார் இன்பத்தின் எல்லை புரியும்.  ஏனெனில், இன்பமும் துன்பமும் நிலையற்றவை.

கோவை மனம் 321.      மகளாகப் பிறந்து மனைவியாக வாழ்வதும், மகனாகப் பிறந்து கணவனாக வாழ்வதும் இயல்பு. என்றாலும் கணவன் – மனைவியாக ஒத்ததை ஒத்ததே ஏற்கும் என்ற விதிப்படி இருவரும் ஒத்து வாழ்வதே சிறப்பு.

கோவை மனம் 322. கூச்சப்படாமல் கேட்கும் உதவியும், யோசிக்காமல் செய்யும் உதவியும் மேன்மை அடையும்.

கோவை மனம் 323.      ஆணவத்திலிருந்து உன் மனதை வெளியேற்று.  எவ்வளவு பெரிய பாராட்டும் உனக்குச் சாதாரணமாகவே இருக்கும்.  

கோவை மனம் 324.      ஆயுதத்தின் வலிமையை உன்னுடைய கையே தீர்மானிக்கும்.

கோவை மனம் 325.      கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தில் கவனம் கொள்.  எதிர்காலம் உனதாகும்.

கோவை மனம் 326.      எவ்வளவு உயர்ந்த கருத்தானாலும் அலங்காரச் சொல்லோடு சபை ஏறினால்தான் வரவேற்பு இருக்கும்.

கோவை மனம் 327.      கடவுளை வழிடாதவரும் மூத்தோரை வழிபடு.

கோவை மனம் 328.      மூத்தோரை வழிபடாதவன் மூடன்.

கோவை மனம் 329.      உன் சுமையை முதுகும் தோள்பட்டையும் உணரும்.

கோவை மனம் 330.      ஆற்று நீரை, அணைப்பது கரை; தடுப்பது அணை. நீரின் வலிமைக்கு ஏற்பவே கரையும் அணையும்.

கோவை மனம் 331.      ஆராயாத நட்பு கெடும்.

கோவை மனம் 332.      வளர்த்தவனே வாதுக்கு வரும்போது வளர்த்தவனுக்குப் பெருவலி உண்டாகும்.

கோவை மனம் 333.      கொடுப்பவன் கை மேலே இருந்தால் வாங்குபவன் கடனாளி; கொடுப்பவன் கை கீழே இருந்தால் வாங்குபவன் புகழாளி.

கோவை மனம் 334.      கவனம் பெற ஒலி எழுப்பு; கவனம் சிதர ஒலி எழுப்பாதே.

கோவை மனம் 335.      சில்லரைக்காகக் காத்திருப்பதைவிட சிந்தனைக்குக் காத்திரு.

கோவை மனம் 336.      நேற்று உதிர்ந்தது பதராகட்டும், இன்று உதிர்ந்தது உரமாகட்டும், நாளை உதிர்வது உயிர்ப்பாகட்டும்.

கோவை மனம் 337.      சோகத்தில்தான் சோம்பல் விடைபெறும்.

கோவை மனம் 338.      தர்மம் செய்யாத உயிர் பிணம்.

கோவை மனம் 339.      வினை புரிந்தவனே அதன் விளைவுகளை அனுபவிப்பான்.

கோவை மனம் 340.      சுய அறிவே சிறந்த இன்பம்.

கோவை மனம் 341.      உலகக் கவர்ச்சிகளை விலக்கி, மன்னிக்கும் குணத்தை வளர்த்துக் கொண்டால், நீயே உலக மக்களின் வாரிசு.

கோவை மனம் 342.      சேர விரும்பும் இடமும் அடைய விரும்பும் பொருளும் உனக்கு வெகுதொலைவில் கடினமானதாக இருந்தாலும் விடாமுயற்சி மட்டும் இருந்தால் அடையலாம்.

கோவை மனம் 343.      ஐம்புலன்களால் உண்டாகும் மன உணர்வுகளை நீக்கித் தன் நிலை உணர்ந்து கடமையே கண்ணாக இருப்பவன் அறிவாளி.

கோவை மனம் 344.      பிறரை ஏசாமல் நாவைக் கட்டுப்படுத்தினால் உலகம் உன்னுடைய ஒரு சொல்லுக்காகக் காத்திருக்கும்.

கோவை மனம் 345.      அனைத்து உயிர்களிடத்தும் எவனின் இதயம் கருணையால் நிரம்பியுள்ளதோ அவனே ஞானி.

கோவை மனம் 346.      ஒருவன் சேர்த்த பொருளைத் தானும் கொள்ளாமல், பிறருக்கும் கொடுக்காமல் வைத்திருந்து, ஒரு நாள் அப்பொருள் களவாடப்படும்போது அவன் தேனீபோல் ஆவான்.

கோவை மனம் 347.      கல்வியிலும், எளிமையிலும், கொடையிலும், தவத்திலும் எவனொருவன் எப்போதும் முழுமை பெறாதவனே தேடல் வல்லான்.

கோவை மனம் 348.      தாய்க்கும் மேலான தெய்வம் இல்லை.

கோவை மனம் 349.      ஒரு மரத்தீயால் காடே சாம்பலாவதுபோல் ஒரு தீய மகனால் அக்குடும்பமே அழியும்.

கோவை மனம் 350.      நஞ்சிலிருந்து அமுதமும், குப்பையிலிருந்து தங்கமும் கிடைக்கிறது என்றால் அவற்றைப் பெறுவதற்குத் தயங்காதே.

கோவை மனம் 351.      மகனைச் சிரத்தையில் நல்ல நிலையில் வளர்த்த தந்தையும், தந்தையிடம் பக்தி  கொண்ட மகனும், நம்பிக்கைக்குரிய நண்பனும், கணவன் மனம் அறிந்த மனைவியும் உலகில் ஆகச்சிறந்தவர்கள்.

கோவை மனம் 352.      பயணத்தில் அறிவும், வீட்டில் மனைவியும், நோய்க்கு மருந்தும், இறப்பில் தர்மமும் ஒருவனுக்கு நண்பனாக அமையும்.

கோவை மனம் 353.      தன்னை அறிதலே உயர்ந்த இன்பம்.

கோவை மனம் 354.      முதுமையில் மனைவியின் மரணமும், உறவுகளின் கட்டுப்பாடும் மிகுந்த துன்பத்தைத் தரும்.

கோவை மனம் 355.      மனதில் திடம் இல்லாதவன் கூட்டத்தில் இருக்கும்போது தனிமைக்காகவும், தனிமையில் இருக்கும்போது கூட்டத்திற்காகவும் ஏங்குவான்.

கோவை மனம் 356.      உயர்குடியில் பிறந்து வனப்பும் வசீகரமும் பெற்று கல்வியறிவு இல்லையென்றால் வாசமில்லா மலருக்கு ஒப்பாவான்.

கோவை மனம் 357.      வெட்டிப்பேச்சு, காமப்புணர்ச்சி, கோபம், பேராசை, சுய ஒப்பனை, கேளிக்கை நாட்டம், புறப்பொருள் நாட்டம், அதிக தூக்கம் நீக்குபவனே சிறந்த மாணவன்.

கோவை மனம் 358.      பொருட்செல்வம் இல்லாதவன் என்றும் ஏழையல்ல; ஒருநாள் அவனும் செல்வந்தனாகலாம். கல்விச் செல்வம் இல்லாதவனே பரம ஏழை.

கோவை மனம் 359.      ஒருவனின் பொருட்செல்வத்தைவிட அவனின் ஒழுக்கமே ஓம்பப்படும்.

கோவை மனம் 360.      ஒழுக்கமானவனுக்கு ஆதரவு இல்லையென்றால் இரத்தினக் கல்லுக்கு ஒளிவீச இடம் தேவை என்பதுபோல் இடர்படத்தான் கொள்வான். 

கோவை மனம் 361.      வாய்மையைத் தாயாகவும், ஞானத்தைத் தந்தையாகவும், தர்மத்தைச் சகோதரனாகவும், கருணையை நண்பனாகவும், அமைதியை மனைவியாகவும், மன்னிப்பைத் தனையனாகவும் கொண்டவனே சிறந்த உறவுடையான்.

கோவை மனம் 362.      ஒருவனின் சிறந்த குணமே அவனின் அனைத்து குற்றங்களையும் நீக்கும் மருந்து.

கோவை மனம் 363.      தற்புகழ்ச்சி கொண்டோன் நிலை தானாக கவிழும்.

கோவை மனம் 364.      பாலையும் தண்ணீரையும் பிரிந்தறியும் அன்னம்போல் நல்லதையும் கெட்டதையும் பகுத்தறியக் கூடியவன் சான்றோன்.

கோவை மனம் 365.      வருமானம் அற்றவனின் பிறப்பே பாழ்.

கோவை மனம் 366.      ஒரு சிறந்த பணிக்காக ஒரு நொடிப் பொழுதேனும் வாழ்ந்தால் அவன் பலவாண்டு வாழ்ந்த பயன் பெறுவான்.

கோவை மனம் 367.      கொடியவன் பாம்பை விட ஆபத்தானவன்.

கோவை மனம் 368.      வேப்ப மரத்தை இனிப்பாக்கும் முயற்சிபோல் கொடியவனை மேலோனாக மாற்ற முயச்சிப்பது.

கோவை மனம் 369.      தீயோரைத் தீமையால் எதிர்கொள்வதில் தவறில்லை.

கோவை மனம் 370.      ஒருவனின் துன்பக் காலத்தில் அவனின் நிலை  தாழ்ந்தாலும் அவனின் உள்ளார்ந்த மதிப்பு என்றும் குறையாது.

கோவை மனம் 371.      தீய செய்திகளையும் செயல்களையும் இரசியம் காப்பதே சிறந்தது.

கோவை மனம் 372.      மூடனுக்குப் பாடம் எடுப்பதும், தீய பெண்ணுக்கு அடைக்கலம் கொடுப்பதும் வீண்.

கோவை மனம் 373.      கெட்டதே மனதில் குடிகொண்ட வேளையில் அறிவு வேலை செய்யாது.

கோவை மனம் 374.      பொதுவாழ்வில் கிடைக்கும் அனுபவமே ஒருவனின் அறிவைப் பெருக்கும் சிறந்த வழி.

கோவை மனம் 375.      ஒருவன் தன்னுடைய கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டால் அவனது தூய்மை அழிந்துவிடும்.

கோவை மனம் 376.      சிறிய நாணல்கள் ஒன்று சேர்ந்து பெருமழையை எதிர்கொள்வதுபோல் பல சிறிய பொருள்கள் ஒன்று சேர்ந்தால் மிகப்பெரிய எதிரியையும் வீழ்த்தலாம்.

கோவை மனம் 377.      அகத்தொன்றும் புறத்தொன்றும் பேசுபவனை நண்பனாக என்றும் ஏற்காதே.

கோவை மனம் 378.      இரகசியங்களை ஆறுதலுக்குக் கூட மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர். மற்றவர்களின் கோபக் காலத்தில் உன் இரகசியங்கள் பகிரப்படும்.

கோவை மனம் 379.      தன்னுடைய நல்ல திட்டங்களையும் நோக்கங்களையும் செயற்படுத்துவதற்கு முன் இரகசியம் காப்பதே சிறந்தது.

கோவை மனம் 380.      நெருக்கமானவர் மீது கொள்ளும் அளவுக்கு அதிகமான பாசம் பல குறைபாடுகளை உண்டாக்கும்.

கோவை மனம் 381.      தான் செய்யும் தவறை முன்னரே ஒருவன் உணர்ந்து விட்டால் அவனது முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

கோவை மனம் 382.      நெருக்கடியில் உதவாத உறவையும், ஆபத்தில் உதவாத நண்பனையும் விலக்கு.

கோவை மனம் 383.      புத்திக் கூர்மையும், அறிவுத் திறனும் உடல் வலிமையைவிட மேலானது.

கோவை மனம் 384.      மிகுதியான இன்பமும் மிகுதியான துன்பமும் கேடு தரும்.

கோவை மனம் 385.      குறிக்கோளுடன் செய்யும் விடாமுயற்சி உயர்வைத் தரும்.

கோவை மனம் 386.      கடினமான நேரம் வந்த போதும் எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து எதிர்கொண்டால் வெற்றி தனதாகும்.

கோவை மனம் 387.      பயிற்சி இல்லாத கல்வியும், செரிக்காத உணவும் நஞ்சு.

கோவை மனம் 388.      கொடியவனிடம் வெளிப்படைப் பேச்சு இருக்காது.

கோவை மனம் 389.      இன்பமும் துன்பமும் துயரமும் உலக மக்களின் வாழ்வில் அங்கங்கள்.

கோவை மனம் 390.      நஞ்சற்ற பாம்பு படமெடுத்து தன்னைக் காத்துக் கொள்வதுபோல் இச்சமூகத்தில் நிம்மதியாக வாழ சிறிதளவு பகட்டும், கண்டிப்பும் தேவை.

கோவை மனம் 391.      கற்பிக்காத கல்வியும், விவசாயம் செய்யாத நிலமும், பயன்படாத பொருளும் தளபதி இல்லாத படைபோல் விரைவில் அழியும்.

கோவை மனம் 392.      தர்மம் ஏழ்மையையும், நன்னடத்தை சோகத்தையும், உண்மையறிவு அறியாமையையும், மனவுறுதி அச்சத்தையும் ஒழிக்கும்.

கோவை  மனம் 393.     பயன்படுத்தாத அறிவு வீண்.

கோவை மனம் 394.      ஒழுக்கமில்லாத அழகு உயிரற்ற உடல்.

கோவை மனம் 395.      தனது இரகசியங்களைப் பகிர்ந்து கொள்பவர், தன்னுடைய நஞ்சால் தானே அழியும் பாம்பாவர்.

கோவை மனம் 396.      ஒருவனின் இனிமையான சொற்கள் பகைவனையும் நண்பனாக்கும்.

கோவை மனம் 397.      கொக்கைப்போல் செயற்படுவான் அறிவாளி.

கோவை மனம் 398.      கடலில் பெய்யும் மழை போல பசிக்காதவனுக்கு அளிக்கும் உணவும், செல்வந்தனுக்குத் தரும் தர்மமும்,  பகலில் எரியும் விளக்கும் வீண்.

கோவை மனம் 399.      மதுப்பானையை நெருப்பில் சுட்டாலும் சுத்தமாகாது போல் தீய எண்ணம் கொண்டவனின் மனம் எத்தனை முறை தூய நீரில் கழுவினாலும் சுத்தமாகாது.

கோவை மனம் 400.      ஒருவன் உண்ணும் உணவுக்கு ஏற்பவே அவனது குணமும் பண்பும் நடத்தைகளும் அமையும்.

புதன், 17 ஜனவரி, 2024

பழந்தமிழரின் கலன்கள்

 

பழந்தமிழரின் கலன்கள்


         உணவுகளைச் சமைப்பதற்கும் உண்பதற்கும், கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கு உணவு கொடுப்பதற்கும், உணவுப் பொருள்களைப் பாதுகாப்பதற்கும் எனப் பல்வேறு வகையான பொருள்களைப் பழந்தமிழர் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் சான்றுகளின் மூலம் அறியமுடிகிறது. 

பழந்தமிழர்கள் இயற்கையாகக் கிடைத்த இலைகள், மரம், மண், இரும்பு, பித்தளை, வெண்கலம், தங்கம், வெள்ளி போன்றவற்றால் செய்யப்பெற்ற கலன்களைப் பயன்படுத்தியுள்ளனர்.  தற்போது வெண்கலம், தங்கம், வெள்ளி, மரம் போன்றவற்றால் செய்யப்பெற்ற கலன்கள் வழக்கிழந்து காட்சிப் பொருளாகி இருக்கிறது எனலாம்.  கலம் என்பது உள்ளீடற்ற குப்பி போன்று அமைந்திருக்கும்.  இதனைப்,

புரிநூல் அந்தணர் பொலம்கலம் ஏற்ப,

‘வெம்பாதாக, வியல்நில வரைப்பு! (பரி.11:79-80)

ஆயர் கறவைக்கலம் வைத்த உறியையும் கழு

சூட்டுக்கோல் முதலியன இட்டுச் சுருக்கிய தோற்பையையும்

கொன்றையங் குழலையும் உடையரா யிருத்தல் (கலி.108:30-32)

பொன்னிற் பிறிதாகிய பொற்கலனே        (கம்ப. இரணிய. 112).

          பால் கறக்கும் ஏனம்                                    (சீவக. 69, உரை.)

போன்ற இலக்கியச் சான்றுகள் மூலம் பொலம்கலம், கறவைக்கலம், பொற்கலம், பால் கறக்கும் ஏனம் ஆகியன இருந்ததை அறியலாம்.  மேலும், சங்க இலக்கியங்களில் கலம் (கலி.106), குழிசி (அகம்.393), சாடி (நற்.341), தாலம் (புறம்.120) போன்ற சொற்களால் கலன் பற்றி எடுத்துரைக்கும் சொற்களாகும்.

அடுத்தல் என்பது சமைத்தல் என்ற பொருளில் சமையல் சமைக்கும் இடத்தை அடுக்களை என்று அழைக்கிறோம். அதைபோன்று சமையல் செய்வதற்குப் பயன்படுத்தும் கலன்களை ‘அடுகலம்’ என்பர். இதனை,

“கடும்பி னடுகல நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவ னென்றோ”        (புறம். 32: 1-2)

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் மூலம் அறியலாம். சமைத்த உணவுகளை மூடியுள்ள கலன்களில் பாதுகாப்பாக வைத்துப் பயன்படுத்தும் வழக்கத்தையும் நம் முன்னோர் கடைபிடித்து வந்துள்ளனர். இதனை,

“அருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும்
விருப்புடை மரபிற் கரப்புடை யடிசில்
மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி”      (பெரும். 475-477)

என்ற பெரும்பாணாற்றுப் பாடலடிகள் தெளிவுபடுத்துகின்றன. சங்ககால மக்கள் பயன்படுத்திய கலன்களை இயற்கை கலன்கள் என்றும், செயற்கை கலன்கள் என்றும் பிரித்துப் பார்க்கலாம். 

இயற்கை கலன்கள்

பழந்தமிழ் மக்கள் இயற்கையில் கிடைக்கும் வாழை இலை, தேக்கு இலை, ஆம்பல் இலை, பனையோலை, மூங்கில் ஆகியவற்றை இயற்கை கலன்களாகப் பயன்படுத்தி உணவு உண்டுள்ளனர்.

வாழையிலை

பழந்தமிழரின் பாரம்பரியத்திலும், விருந்தோம்பலிலும் 'வாழையிலை' எல்லா வகை மக்களாலும் சிறப்பு உண்கலமாக எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருமணம் மற்றும் சிறப்பு விருந்தின் போது வாழையிலையில் உணவு வழங்கும் மரபு இன்றும் காணப்படுகின்றது. பழந்தமிழர்கள் வாழையிலையின் பயனை அறிந்து அதனை உண்கலமாகப் பயன்படுத்தியுள்ளனர். இதனை,

“வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப்
புகையுண்டு அமர்த்த கண்கள்”     (நற். 120: 5-6)
“செமுங்கோள் வாழையகலிலைப் பகுக்கும்”(புறம். 168:13)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. 

வாழை இலையில் எவ்வாறு உணவு பரிமாற வேண்டும் என்ற நியதியையும் அறிவியல் தன்மையில் கண்டுபிடித்தவர்கள் பழந்தமிழர்கள்.   முதலில் நுனி இலையிலிருந்து உப்பு, சட்டினி, ஊறுகாய், பச்சடி, காய்கறி, வடகம், வடை, சித்திரான்னம், அப்பளம் போன்றவற்றைப் பரிமாற வேண்டும். அதன் பக்கத்திலேயே மூன்று வாழை இலை தொன்னைகளில் தனித்தனியே கூட்டு, ரசம், குழம்புகளை ஊற்றி, பனியாரம், பாயாசம் வைத்து இறுதியாக, சோறும் அதன் அருகில் மற்றொரு தொன்னையில் நெய்யும் வைத்து உபசரிக்க வேண்டுமாம். வாழையிலையில் உண்பதால் ஆயுள் கூடும் என்பர்.

வாழையிலையில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள் உள்ளன. இவைகள் கண்களைப் பாதுகாத்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குடற்புண்களை ஆற்றும் வைட்டமின் ஏ, சி, மற்றும் கே ஆகியவை வாழையிலையில் உள்ளன.

ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம் உறைவதைத் தடுக்கும். சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அழிக்கும். இத்தனையும் வாழை இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னிப்பிணைந்துள்ளன.

வாழையிலையின் மேல் முதலில் நீரைத் தெளித்து வாழை இலையைக் கழுவி, அதன் மேல் நெய்யைத் தடவி, இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, இலையில் உள்ள சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதெல்லாம் சேர்ந்துதான் நமக்கும் ஆயுளைக் கூட்டுகிறது.

சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்தச் சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.

வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும் வாழை இலையின் குளோரோபில் செல்கள் நீண்ட காலம் அழியாமல் இருக்கக் கூடியவையாம். அதுமட்டுமல்லாமல், வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள என்சைம்கள் மற்றும் செரிமான செல்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்குப் பேருதவி புரிகின்றன. வாழை இலையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் உடலின் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் இதனால், தடுக்கப்படுகின்றன. சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் போன்றவை விரைவில் வாடாது. பூக்கடைகளில் கட்டிய பூ வாங்கினால்கூட, அதை வாழை இலையில் தான் கட்டித்தருவார்கள். ஆகமொத்தம், இந்த வாழை என்றுமே நம்மை வாழையடி வாழையாக வாழ வைக்கும்.

தேக்கிலை

தேக்கு மரத்தின் இலையைப் பயன்படுத்தி உணவு உண்ணும் வழக்கம் பழங்காலந்தொட்டு அண்மைக் காலம் வரை கிராமப்புறம் மற்றும் மலைவாழ் மக்களிடம் காணப்படுகின்றது. சங்க கால மக்கள் தேக்கிலையை உண்கலமாகப் பயன்படுத்தினர். இதனை,

“சேக்குவள் கொல்லோ தானே தேக்கின்
அகலிலை குவிந்த புதல்போல் குரம்பை
ஊன் புமுக் கயரு முன்றில்”     (அகம். 315: 15-17)

என்ற அகநானூற்றுப் பாடலடிகள் உணர்த்துகிறது. மேலும், பயணம் மேற்கொள்ளும்போது வழியில் உணவு உண்ணத் தேக்கிலை கலமாக இருந்துள்ளது. இதனை,

“தேய்வ மடையிற் றேக்கிலைக் குவைஇக் . . . . . “  (பெரும்: 105)

என்ற பெரும்பாணாற்றுப் பாடலடி சான்று பகர்கின்றது.

தற்போது, தேக்கிலையில் உள்ள ஊறுகாய் அதிக சுவையுடையதாக இருப்பதாலும், நீண்ட நாள்கள் கெடாமலிருப்பதாலும் தேக்கிலையில் வைத்து விற்பனை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேக்கிலைகளின் சாறு இரத்தத்தை அதிகரிக்கும், இரத்தக் கசிவைத் தடுக்கும் மற்றும் சிறிய இரத்த நாளங்களை சுருங்கச் செய்யும்.  புதிய இலைகளின் சாறு புண்கள் மற்றும் வெட்டுக்களை ஆற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பனையோலை

         பனையோலையை உணவு உண்ணும் கலனாகப் பயன்படுத்தி உள்ளனர்.  பனையோலையை வெயிலில் உலர வைத்தால் உடைந்து விடும். எனவே மாலை நேரத்தில் நிழலில் உலர்த்தி ‘குடைபோன்ற வடிவில் கலனை உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். மன்னன் வழங்கும் உணவினை இரவலர்கள் பனையோலையில் அமைந்த குடையிலே பெற்று உண்டனர் என்பதை,

வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய

ஈரும்பனங் குடையின் மிசையும்

பெரும்புலர் வைகறைச்சீர் சாலாதே (புறம். 177: 15-17).

என்னும் புறநானூற்றுப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

ஆம்பலிலை

ஆம்பலிலையினையும் உணவு உண்ணுவதற்கு பயன்படுத்தி உள்ளனர். தலைவி தனது கணவனுக்கு ஆம்பலின் அகன்ற இலையில் சோற்றுடன் பிரம்பின் இனிப்புடன் கூடிய புளிப்பான பழத்தினைப் பெய்து இடுகின்ற அழகினை,

“ஆம்பல் இலைய வமலை வெஞ்சோறு
தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து
விடியல் வைகறை யிடுஉமுர”        (அகம். 196: 5-7)

என்ற அகநானூற்றுப் பாடல் வரிகள் நயம்படச் சுட்டுகிறது. இதனை திடப் பொருட்களை மட்டுமின்றித் திரவப் பொருட்களை உண்ணவும் பயன்படுத்தியுள்ளனர். உழவர்கள் அகன்ற ஆம்பலிலையில் கள்ளினை ஊற்றி உண்டிருக்கின்றனர் என்பதனை,

“கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகலடை அரியன் மாந்தி”      (புறம். 209: 3-9)

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.  மேலும், ஆம்பல் இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும்.

மூங்கில்

இயற்கையில் கிடைக்கும் மற்றொரு பொருள் மூங்கில். இதனையும் கலன் போன்று பயன்படுத்தி உள்ளனர். இன்னும் கிராமப்புறத்தில் மூங்கிலின் பயன்பாட்டைக் காணமுடிகின்றது. மாடுகளுக்கு மருந்து கொடுப்பதற்கு மூங்கிலைக் கணுவின் மேற்பகுதியில் வெட்டிப் பயன்படுத்துகின்றனர். பழந்தமிழர்கள் மூங்கில் குப்பிகளிலே மதுவினை நிரப்பி முற்ற வைத்து பின் எடுத்து உண்டு விட்டு குரவைக் கூத்தினைக் கண்டு களித்துள்ளனர். இதனை,

“வாங்கமை பழனிய நறவுண்டு
வேங்கை மூன்றிற் குரவையும் கண்டே”   (நற். 276: 9-10)

என்ற நற்றிணைப் பாடலடிகள் மூலம் அறியலாம்.  இதிலிருந்து கள் போன்ற மதுப்பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு மூங்கில்களைப் பயன்படுத்தி உள்ளமை புலனாகிறது.

செயற்கை கலன்கள்

பழந்தமிழர்கள் உலோகங்களின் பயன்பாட்டினை நன்கு அறிந்திருந்தமையினால் பல்வேறு விதமான கலன்களைப்  பயன்படுத்தியுள்ளனர். இவ்வகையில் மண் கலன்கள், பொன், வெள்ளி, இரும்பு, செம்பு, அலுமினியம், சில்வர், பிளாஸ்டிக் போன்றவற்றால் தயார் செய்யப்பட்ட கலன்கள் செயற்கை கலன்கள் எனலாம்.

மட்கலன்கள்

பழந்தமிழர்கள் மண்ணின் பயன்பாட்டை அறிந்து அதனைப் பயன்படுத்தித் தனக்குத் தேவையான மட்பாண்டங்களைச் செய்துள்ளனர். இவ்வகையில் அளவு, பயன்பாடு, அடிப்படையில் தாழி, பானைகள், தசும்பு, குழிசி, காடி, கன்னல், குப்பி, தடவு, உடைந்த கலம் போன்ற மண்ணால் செய்யப்பெற்றவற்றையும், காடி, தாலம், பிழா, வள்ளம், செம்புப்பானை, தூதை, குடம், சட்டி போன்றவற்றைப் பயன்படுத்தி உள்ளனர்.

தாழி

இறந்தவர்களின் உடலை பாதுகாப்பாகப் புதைப்பதற்குப் பண்டையத் தமிழர்கள் மண்ணால் செய்யப்பட்ட பெரிய தாழிகள் செய்து அதனுள் வைத்ததை ‘முதுமக்கள் தாழி’ என்று அழைக்கப்பட்டது. இதனை,

“கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலி தாக வனைமோ . . . . . . . . . . . .” (புறம், 256: 1-6)

என்ற புறநானூற்றுப் பாடடிகள் மூலம் இருவருடைய உடலை வைக்கும் அளவிற்கு பெரிய அளவிலான முதுமக்கள் தாழி இருந்துள்ளமையை அறிய முடிகின்றது.  தற்போது மக்களிடையே தானியங்களைப் பாதுகாத்து வைக்கும் கூனிப்பானைகள் புழக்கத்தில் காணப்படுகின்றன. இதனை, “அகழாய்வில் எடுக்கப்பட்ட தாழிக்கும் தற்போது உள்ள கூனிப்பானைகளுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. ஏறத்தாழ இரண்டும் ஒன்று போல இருப்பதால் முன்னோர்கள் இறந்தவர்களை பூமிக்குள் பாதுகாக்கப் பயன்படுத்திய அதே மட்பாண்டத்தை அதன் பின்னர் தானியங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படுத்தி இருக்கலாம். இது கால மாற்றத்தாலும், நாகரீக முன்னேற்றத்தாலும் ஏற்பட்டிருக்கலாம்” என்பர். மேலும் இத்தாழி மண்ணால் செய்து சுடப்பட்டதை,

“கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த”    (புறம், 238: 1)

என்ற புறநானூற்றுப் பாடலடி மூலம் அறிய முடிகிறது.

தசும்பு

இப்பானையானது பால், தயிர், கள் போன்றவற்றை நிறைத்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை,

“இஞ்சிவி விராய பைந்தார் பூட்டிச்
சாந்துபுறத் தெறிந்த தசும்புதுளங் கிருக்கை
தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்”      (பதிற்று, 42: 10-12)

என்ற பதிற்றுப்பத்துப் பாடலடிகள் மூலம் ‘கள்’ நிறைத்து வைக்கும் தசும்புகளை மலர் மாலையாலும், இஞ்சி மாலையாலும் அலங்கரித்து மண்மீது வைத்து அதன் மேற்புறத்தைச் சந்தனத்தால் பூசி வைக்கப்பட்டமை கூறப்பட்டுள்ளது.  இன்றும் பல கிராமங்களில் இவ்வாறு பால், தயிர் நிறைத்து வைப்பதற்குத் தசும்பு போன்ற மட்பாணை பயன்படுத்துவதைக் காண முடிகிறது.

குழிசி

வீட்டில் உணவு சமைப்பதற்குப் பயன்படுத்தும் மண்ணால் செய்யப்பட்ட பானையினை ‘குழிசி’ என்பர். இதனை,

“மான்றடி பழுக்கிய புலவுநாறு குழிசி”      (புறம். 165:6)

“கயறு பிணிக் குழிசி”              (அகம். 77:7)

“முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி”     (பெரும். 99)

போன்ற பாடலடிகள் மூலம் உணர முடிகிறது.

காடி

பக்குவப்படுத்தி செய்யப்பட்ட நெல்லிக்காய், எலுமிச்சை, புளியங்காய், மாங்காய் முதலிய ஊறுகாய்களை மண்ணால் செய்யப்பட்ட காடிகளில் அடைத்து வைக்கின்றனர். இது அவை கெடாமல் இருப்பதற்குப் பயன்படுகின்றது. இதனை,

“காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடுபுறந் துரப்பக்” (பெரும். 57-58)

என்ற பெரும்பாணாற்றுப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

கன்னல்

தண்ணீர் எடுத்து வைக்கும் மட்பானையினைக் ‘கன்னல்’ என்பர். இரண்டு விதமான கன்னல் பானைகள் உள்ளன. அவை ‘தொகுவாய்க் கன்னல்’, ‘குறுநீர்க் கன்னல்’ என்பனவாகும். குவிந்த வாயையுடைய தண்ணீர் வைக்கும் மண் பாத்திரம் தொடுவாய்க் கன்னல் ஆகும். இதனை,

“தொடுவாய்க் கன்னற் றண்ணி ருண்ணார்
பகுவாய்த் தடவிற் செந் நெருப்பார”       (நெடுநல். 65-66)

என்ற நெடுநல்வாடைப் பாடலடிகள் மூலம் அறியலாம்.

குறுநீர்க் கன்னல் என்பது மட்பானையில் தண்ணீர் விட்டு அதன் அடியில் சிறுதுளை வழியாக அத்தண்ணீரைச் சிறிது சிறிதாகக் கசிய விட்டு அத்தண்ணீனை அளந்து காணும் கருவியாகலின் குறுநீர்க் கன்னல் ஆகும். இதனை,

“ஏறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்
குறுநீர்க் கன்ன லினைத்தென் றிசைப்ப” (முல்லை. 57-58)

என்ற முல்லைப்பாட்டுப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

தடவு

பழந்தமிழர்கள் குளிர்காலத்தில் நீரை சூடாக்கிக் குளித்துள்ளனர். எனவே, அதற்கென்று பெரிய மண்தாழிகளைப் பயன்படுத்தி உள்ளனர். இத்தகைய பெரிய மண்பானையினைத் தடவு என்று அழைக்கப்பட்டு உள்ளது. இதனை,

“பகுவாய்த் தடவிற் செந்றெருப் பயர”    (நெடுநல். 66)

என்ற நெடுநல்வாடைப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது. மக்களின் தேவைக்கு ஏற்ப மட்பாண்டங்கள் செந்நிறத்திலும், கருப்பு நிறத்திலும் செய்துள்ளனர். இதனை,

“செந்தாழிக் குவிபுறந் திருந்த”        (புறம். 238:1)

“பெருங்கட் குறுமுயல் கருங்கலன்”    (புறம். 322:5)

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

உடைந்த கலம்

மண்ணால் செய்யப்பட்ட கலன்கள் உடைந்த பின்பும் பயன்பாட்டைப் பெற்றிருக்கின்றன. இவ்வாறு உடைந்த கலத்தினை ‘ஓட்டைப்பானை’ என்பர். இப்பானையின் உடைந்த கழுத்துப் பகுதியைச் செடிகளைப் பாதுகாப்பாக நட்டு வைப்பதற்குப் பயன்படுத்துகின்றனர். பெரிய பானைகள் உடைந்தால் அதன் ஓட்டினைப் பயன்படுத்தி புளியங்கொட்டை, கொல்லாங்கொட்டை, வேர்க்கடலை, சோளப்பொரி, அரிசிப்பொரி போன்றவற்றை வறுத்து சாப்பிடுவதற்குப் பயன்படுத்துகின்றனர். மேலும், புகையிலை தயார் செய்யவும் இவ் ஓட்டினைப் பயன்படுத்துகின்றனர். உடைந்த ஓடுகளின் சிறிய துண்டுகளைப் பயன்படுத்தி வட்டுக்கழித்தல், மாசம் வைத்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடுகின்றனர். வட்டுக்கழித்தலைக் குறித்து,

“வட்டு உருட்டு வல்லாய்”        (பரி. 18:42)

“கல்லாச் சிறா அர்நெல்லி வட்டாடும்”    (நற். 3:4)

என்ற பாடலடிகள் மூலம் பண்டையத் தமிழர்கள் உடைந்த பானை ஓட்டினைப் பயன்படுத்தியுள்ளமை அறிய முடிகிறது.

சாடி

திரவப் பொருட்களை வைப்பதற்குச் சாடிகளைப் பழந்தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது கீழ்ப்பாகம் தரையில் நன்கு அழுத்தும்படி தட்டையாகவும், கழுத்துப்பகுதி நீண்டும், நடுப்பகுதி நன்கு பருத்த அமைப்பினதாகவும், மேற்புறம் மூடியினால் மூடப்படும் வகையிலும் இருந்துள்ளது. கள்ளினைக் காய்ச்சுவதற்கும், அதனைப் பதப்படுத்தி எடுத்து வைப்பதற்கும் இச்சாடி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை,

“வல்வாய்ச் சாடியின் வழைச்சுற விளைந்த”      (பெரும். 280)
“நன்மரம் குழீஇய நனைமுதிர் சாடிப்
பன்னாள் அரிந்தகோஓ யுடைப்பின்”(அகம். 166: 1-2)

என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், இச்சாடி அழகிய கலை நயத்துடனும் வடிவமைக்கப்பட்டிருந்தன என்பதைக்,

“கலிமடைக் கள்ளின் சாடி அன்னஎம்”(நற். 295:7)

என்ற பாடலடி சான்று பகர்கின்றது.

தாலம்

நாக்கு போன்று தட்டையான விரிந்த பரப்பினைக் கொண்டதாக இருப்பது தாலம் என்று வழங்கப்படும். உணவுப் பொருட்களை உண்பதற்குத் தட்டு போன்று பயன்படுத்திய கலன் தாலம் ஆகும். தாலம் என்பதற்குப் பனை என்றும் பொருள் உண்டு. எனவே, இது பனையோலை போன்று விரிந்த வடிவில் இருந்துள்ளமையால். பழந்தமிழர்கள் தாலத்தில் உணவு உண்ணப் பழந்தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை,

“நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்டுப்
பெருந்தோ டாலம் பூசன் மேவர”     (புறம். 120: 14-15)

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

பிழா

உணவு உண்ண பயன்படுத்தும் அகன்ற வாயினை உடைய தட்டினைப் பிழா என்பர். கொழியலரிசிக் கஞ்சியினை உண்பதற்கு அகன்ற வாயினை உடைய பிழாவினைப் பழந்தமிழர்கள் பயன்படுத்தி உள்ளனர்.  இதனை,

“அவையா வரிசி யங்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றி”    (பெரும். 275-276)

என்ற பெரும்பாணாற்றுப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

வள்ளம்

கிண்ணம் போன்று உட்பகுதி குழிந்து வட்ட வடிவில் உள்ள கலனே வள்ளம் ஆகும். இதனை ‘வட்டில்’ என்று கூறுவதுண்டு. இது பால், மோர், கள் போன்ற நீர்மப் பொருட்களை உண்ணுவதற்குப் பழந்தமிழர்கள் பயன்படுத்தியுள்ளர் என்பதைப்,

“பால்பெய் வள்ளஞ் சால்கை பற்றி
எம்பா டுண்டனை யாயின்”      (அகம். 219: 5-6)

“கண்பொர ஒளிவிட்ட வெள்ளிய வள்ளத்தால்
தண்கமழ் நறுந்தேறல் உண்பான் முகம்போல” (கலி. 73: 3-4)

என்ற பாடலடிகள் சான்று பகர்கின்றன. இவ்வாறு, தங்கம், வெள்ளி போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட கலன்களையும் பழந்தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை,

“பொன்செய் வள்ளத்துப் பால்கிழக் கிருப்ப” (நற். 297:1)

என்ற நற்றிணைப் பாடலடி தெளிவுறுத்துகிறது.

செம்புப் பானை

பழந்தமிழர்கள் செம்பு என்ற உலோகத்தின் பயனை நன்கு அறிந்திருந்தனர். எனவேதான், கம்மியர்கள் செம்பினை வார்த்து செம்புப் பானையினைச் செய்துள்ளனர். இதனை,

“. . . . . . . . . . . கம்மியர்
செம்புசொரி பானை”       (நற். 153: 2-3)

என்ற நற்றிணைப் பாடடிகள் மூலம் அறிய முடிகிறது.

தூதை

மரத்தினால் செய்யப்பட்ட சிறிய பானையே தூதை. சிறு பெண்கள் மரத்தினால் செய்த தூதைகளை வைத்து விளையாடியுள்ளனர் என்பதைச்,

“சுடர்விரி வினைவாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட அரிப்பெய்த அழகமை”(கலி. 59: 5-6)

என்ற கலித்தொகைப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

பொன், வெள்ளி

பொன், வெள்ளியினால் செய்யப்பட்ட கலன்கள் பொற்கொல்லர் கைவண்ணத்தால் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்ததை,

“ஆசில் கம்மியன் மாசறப்புனைந்த
பொலஞ் செய் பல்காசு அணிந்த அல்குல்”          (புறம். 353: 1-2)

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

குடம்

வாய் குறுகிய பாத்திரம் குடம் என்று வழங்கப்படுகிறது. குடம் செய்வதற்குப் பயன்படுத்தும் உலோகத்தை வைத்து மட்குடம், செம்புக் குடம், சில்வர்க் குடம், அலுமினியக் குடம், தகரக் குடம், பிளாஸ்டிக் குடம் என்று அழைக்கப்படுகின்றது.  பல்வேறு அளவில் செய்யப்பெற்ற குடங்கள் புழக்கத்தில் காணப்படுகின்றன.  குடங்களை உபயோகத்தின் அடிப்படையில் தண்ணீர்க்குடம், தயிர்க்குடம், மோர்க்குடம், நெய்க்குடம், எண்ணெய்க்குடம், புட்டுக்குடம், அக்கானிக்குடம் என்பர். கிராமங்களில் கிணற்றுநீர், ஊற்றுநீர், ஆற்றுநீர், குழாய்நீர் போன்றவற்றை எடுத்து வருவதற்குக் குடங்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

விவசாய நிலங்களில் பயிர்களுக்கு நீர் விடவும் பெரும்பாலும் குடங்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.  தம்பு, மிடா என்னும் சொற்களும் குடத்தைக் குறிப்பிடுகின்றன.

பலாப்பழம் போன்று குடம் (அகம். 352) இருந்ததாகவும், ஆய் மகளிர் பால், தயிர் போன்றவற்றை வைப்பதற்கு குடங்களைப் (புறம். 33, 276; மலை.462) பழந்தமிழர்கள் பயன்படுத்தியதை அறிய முடிகிறது.

சட்டி

உணவு சமைப்பதற்கும், வேக வைத்த உணவை வைப்பதற்கும், உணவுப் பண்டங்களைச் சேகரித்து வைப்பதற்கும் சட்டிகளைப் பழந்தமிழர்கள் பயன்படுத்தினர். புளிப்பான ஊறுகாய், தேறல் போன்றவற்றை வைப்பதற்குக் காடிச் சட்டியினைப் (பெரும்.310) பயன்படுத்தியதாக அறிய முடிகிறது.  இன்று மண்சட்டிகள் மறைந்து வருகின்ற நிலையில் அலுமினியம், பித்தளை, சில்வர் போன்ற உலோகங்களான பல்வேறு வடிவிலான பாத்திரங்கள் புழங்குப் பொருள்களாக வந்து கொண்டிருக்கின்றன.

வாய் அகன்று விரிவாக உள்ளவை சட்டிகள் எனப்படுகின்றன. இவை செய்யப்படும் உலோகத்தின் அடிப்படையில் மண்சட்டி, அலுமினியச் சட்டி, வெண்கலச் சட்டி, பித்தளைச் சட்டி, இரும்புச் சட்டி, ஈயச்சட்டி, சில்வர்ச்சட்டி என்பர். இச்சட்டிகளில் சமைக்கும் பொருட்களை வைத்துக் கறிச்சட்டி, கூட்டுச்சட்டி, மீன்சட்டி, இறைச்சிச்சட்டி, பருப்புச்சட்டி, சாம்பார்ச்சட்டி, பால்சட்டி, தயிர்ச்சட்டி, மோர்ச்சட்டி, மாவுச்சட்டி, பணியாரச்சட்டி, குழிப்பணியாரச் சட்டி, ஆப்பச்சட்டி, இட்லிச்சட்டி, காப்பிச்சட்டி, குழம்புச்சட்டி, தவிட்டுச்சட்டி, எண்ணெய்ச்சட்டி, சீனிச்சட்டி என்று அழைக்கப்படுகிறது.

மேலும் பனை, தென்னை போன்ற மரங்களிலிருந்து சாறு சேகரிப்பதற்குப் பயன்படும் சட்டியைக் கலயச்சட்டி என்றும் தேங்காயைப் பக்குவம் செய்து எண்ணெய்க் காய்க்கின்றவர்கள் பயன்படுத்தும் சட்டியை நெய்ச்சட்டி அல்லது உருக்கெண்ணெய்ச்சட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

அதைப் போன்றே அரிசி மாவை வறுப்பதற்கு வாய் விரிவான மாவுச்சட்டியை உபயோகிக்கின்றனர். சமையற் கூடங்களில் அரிசியிலிருக்கும் கல்லை நீக்குவதற்குப் பயன்படுத்தும் சட்டியை அரிச்சட்டி என்றும் உணவு உண்பதற்குப் பயன்படும் கிண்ணம் போன்ற அமைப்புடைய சட்டியைக் கும்பாச்சட்டி என்றும் மருந்துப் பொருட்களைப் பக்குவம் செய்வதற்குரிய வாய் விரிவான சட்டியை மருந்துசட்டி என்றும் செடி வைப்பதற்குப் பயன்படும் சட்டியைச் செடிச்சட்டி என்றும் குறிப்பிடுகின்றனர்.

சங்க கால மக்கள் தங்களின் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப பல்வேறு உலோகங்களைப் பயன்படுத்தி கலன்களை வடிவமைத்து பயன்படுத்தியுள்ளமை அறிய முடிகிறது. இக்கலன்கள் அனைத்தும் சங்க கால மக்களின் பண்பாட்டினை வெளிப்படுத்துவதாக உள்ளன. இன்று சில கலன்கள் மக்களின் வாழ்வில் இருந்து வழக்கிழந்து காட்சிப் பொருளாக விளங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கதாகும்.