வெள்ளி, 14 செப்டம்பர், 2018

சாத்துக்கவிகளில் பக்தமான்மியம்

பக்தமான்மியம் என்னும் நூல் மூல நூலன்று; வழி நூலாகும்.  ஸ்ரீநாராயணன் மீது அன்பு செலுத்திய வைணவ பக்தர்களின் பெருமைகளை விளக்குவதே இந்நூல்.  வடமொழியில் சந்திரதத்தரால் இயற்றப்பெற்ற 'பக்தமாலா'வில் வைணவம், சாத்தேய, சைவ அடியார்களது வரலாறுகள் இடம்பெற்றுள்ளன.  இவற்றில் வைணவ பக்தர்களின் வரலாறுகள் தமிழில் தவத்திரு. கந்தசாமி சுவாமிகளால் 'பக்தமான்மிய'மாக உருவெடுத்துள்ளது.

பக்தி என்பது எளிதான ஒன்றன்று.  கருமம், ஞானம் என்னும் இரு நிலைகளுக்குமிடையில் நடுநிலைத் தீபமாய் நின்று, தன்னையடைந்தவர்களுக்கு போக மோட்சங்களை இனிது கொடுக்கும் சிறப்பினதாகும்.  பசுவாகிய ஆன்மாவானது பதியாகிய தெய்வத்தை அடைவதற்குரிய சோபானமாயுள்ளது.  "பத்திவலையிற்  படுவோன் காண்க" என்ற மணிவாசகத் தமிழ்மறை அக்கொள்கையை வலியுறுத்துகிறது.  மேலும், "பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதிகொடுத்தருள் செய்யுஞ் சித்தன்" என்கிறது.  "பத்தியென்கை தெளிந்தவுபா சனையேயாகும்" என்ற கௌமார முறைமை.  "அன்பெனும் பிடியுளகப்படு மலையே" என்ற அருட்பிரகாச வள்ளலார் கருத்தும் இதற்கு ஒத்ததே.  அன்பு, பக்தி என்பன வொரோவழி யொத்தபொருளனவாகும்.  இதனால் அதீதப் பொருளாகிய தெய்வத்தை வசப்படுத்துவதற்குரிய கருவி பக்தியே என்பது தெற்றென விளங்கும்.  இப்பக்தியை அடிப்படையாகக் கொண்டே 'பக்தமான்மியம்' எழுந்துள்ளது.

இதில் நாபதாசர், அநுமார், விபீடணன், சபரி, அசாமிள, சடாயு, அம்பரீட, விதுரமங்கை, குசேலர், சந்திரகாச, சிபிச்சக்கரவர்த்தி, பாஞ்சாலி, வான்மீகர், உருக்குமாங்கதன், மயூரத்துவர், பிரகலாதர், நிம்பாதித்தியர், சாமாதர், சீமார்க்கர், இராமாநுசர், சீரங்கபத்தர், கிருட்டிணதாசர், கீல்காக்கிரதாசர், சங்கராசாரியர், உதயனாசாரியர், விட்டலபுண்டரீகர், சமர்த்தராமசுவாமி, நாமதேவர், செயதேவர், சீதரசுவாமி, வில்மங்கலர், விட்டுணுசர்மர், திரிலோசனர், குலசேகரர், இரதீமதிர், கன்னிகாத்துவயர், கருமாபாயிர், சாத்துவீகராஜன், பாஞ்சாலராஜன், ராஜகன்னி, சொன்னகாரர், அன்னலியாதர், வைசியபத்தி, சாமத்துவசர், ஜயமல்லர், கிருட்டிணபத்தர், அரிபாலர், சாக்ஷிகோபாலர், இராமதாசர், பத்திராசல ராமதாசர், கபீர்தாசர், முராரிபத்தர், சூரநாதர், துளசிதாசர், பிம்பாசிபத்தர், கனாபத்தர், வேசியாபத்தர், இரவிதாசர், நரகரிபத்தர், தத்துவாசிசீவாசி, மாதவதாசர், இரகுநாதர், கிருட்டிணசைதன்யப் பிரபு, சூரதாசர், அரிவியாசர், விட்டலதாசர், உரூபசனாதனர், உச்சவியாசர், அரிதாசர், சதனபத்தி, சோசீபத்தி, சூத்திரதம்பதி, கோவிந்தசாமி, குஞ்ஞாமாலி, இலசாபத்தி, நரசிம்மபத்தர், சதுர்ப்புஜர், மீராபாய், சசூசியாமர், சகந்நாதர், இராசபத்தி, சுகானந்தர், சேனாபத்தி, நந்ததாசர், பிருதுவிராஜர், கோகுலநாதர், கதாதரபட்டர், இரத்தினாவதி, கூபதாசர், கரமௌதி, பிரேமநிதி, ஜகதேவநர்த்தகி, கோவிந்தடக்கரர், அந்தர்பத்திராஜன், குருபத்தி, இராமப்பிரசாதர், வருணனை ஆகிய 108 அடியார்களது வரலாறு(கதி)களையும், இதன் அனுபந்தமாக போசலபாவா, பெரியதாசர், தாமாசிபண்டிதர், ஏகநாதசுவாமி, ஞானேசுரர், துக்காராமசுவாமி ஆகிய ஆறு அடியார்களது வரலாறுகளையும் இந்நூல் குறிப்பிடுகின்றது.

இந்நூலுக்குச் சாத்துக்கவிகள் பலர் இயற்றியிருக்கின்றனர்.  இச்சாத்துக் கவிகள் எல்லாம் கோவை கௌமார மடத்து வெளியீடான 'பக்தமான்மியம் அநுபந்தம்' என்னும் நூலுள் இடம்பெற்றுள்ளன.  அக்கவிகளின் வாயிலாக இந்நூலைப் பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும் நூலின் சிறப்பும் பயனும் பற்றியும் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகிறது.  

பக்தமான்மியம் எழுந்த வரலாறு

நூலுள் நுழையுமுன் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம், பாயிரம் போன்றவற்றை அமைத்து நூலுக்குச் சிறப்பு செய்வது போல சில நூல்களுக்குச் சாத்துக்கவிகளும் அணிந்துரையாக நின்று சிறப்புச் செய்வதுண்டு.  நூலாசிரியரின் உடன் பயின்றவர்களோ, நூலாசிரியர் காலப் புலவர்களோ, நூலாசிரியரை நன்கு அறிந்தவர்களோ, நூலை நன்குப் பயின்றவர்களோ சாத்துக்கவிகளை இயற்றத் தகுதியானவர்களாவர்.  பாயிரம் பாடுபவர்களுக்கு நன்னூல் இலக்கணம் கூறுகிறது(நூ.15).  இவ்விலக்கணம் சாத்துக்கவிகளைப் பாடுவோர்க்கும் பொருந்துவதாகும்.

வைணவ பக்தர்களின் வரலாறுகள் தமிழில் பக்தமான்மியமாக தவத்திரு கந்தசாமி சுவாமிகளால் இயற்றப்பட்டுள்ளது என்பதைத் திருமதி சுந்தர அம்மையார்,

"பத்தமான் மியத்தை முன்னூற் படியருந் தமிழின்ஞான
சத்துவங் கமழப் பாவாற் சாற்ற" (2:1-2)

என்கிறார்.  தவத்திரு. கந்தசாமி சுவாமிகளின் குருவான தவத்திரு. இராமானந்தரின் கட்டளைப்படியே இந்நூல் யாக்கப்பெற்றது என்பதை,

"அன்னவற் பார்த்தருட்குரவ னரிதாசர் கதையினை மெய்யருட் சீரோடு
சொன்னய மாதிய பொலியப் பக்தமான்மிய மெனும்பேர் தோயச் செப்பேன்
றுன்னரு மன்பினி லுரைத்த வுத்தரவைச் சிரமேற்கொண் டுரைத்தான்" (2:1-3) 
எனும் ஸ்ரீஎறிபத்த சுவாமிகளின் கவிகளால் அறியலாம்.  இந்நூலை யாக்கும் முன் தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் மலையாளம், வடமொழி இவைகளில் தேர்ச்சிபெற்றிருந்தார் என்பதை,

"மலையாளத் தோடு வடமொழியுந் தென்சொற்
கலையாவுந் தானாய்ந்து கண்டு - நிலையான
தெய்வத் தமிழ்க்கவிதைத் தென்பொழிந்தான் பாருலகை
யுய்விபத்த மான்மியநூ லொன்று" (3)

என்கிறார் வி.நா. மருதாசலக் கவுண்டர்.  வடமொழியில் உள்ள நூலை மனதில் வாங்கிக்கொண்டு தன்னுடைய புலமைத் திறத்தால் நறுந்தமிழில் சந்தப் பாக்களாக யாத்தமையை,

"கண்மணியா யொளிர்கின்ற கருணைத்தேசிகன் மலர்த்தாள் கருத்திலுன்னித்
தண்மதியால் வடமொழிச் சந்திரதத்தர் நூலைநறுந் தமிழிற்சந்தப்
பண்மலிபாக் கொடுவிரித்துப் பாரிலுள்ளோர் பெருவாழ்வு படைத்துவாழ
விண்மணிபோல் விளங்கியிருண் மாயையற விண்டனைகார் மேகம்போன்றே" (2)

எனக் கண்ணப்பசுவாமிகள் கூறுகிறார்.  இப்புண்ணிய பரத கண்டத்தில் புலவர்களும் பக்தர்களும் ஞானாசிரியர்களும் பலர் வாழ்ந்து வந்தனர்.  அவர்களுள் சிலர் தெய்வத்தன்மை வாய்ந்தவர்களாகத் திகழ்ந்தனர்.  அவர்களைப் பற்றித் தமிழில் வடமொழி நூலுக்கொப்ப எழுந்ததே பக்தமான்மியம் என்பதை,

"புண்ணியப்பரத கண்டமிப்புவியிற் புலவராய்ப் பத்தராய் ஞானத்
திண்ணியர்வாழ்ந்தா ரருஞ்செயலினருட் சிலர்சரிதங் கொளும்வடசொ
ணண்னியபத்த மாலைமிக்கோர்பே ணயம்பொருட் சொற்சுவை யூற்றுப்
பண்ணியற்றமிழிற் பெயர்த்தனன்பாவாப் பத்தமான்மியமெனு நூலே" (2)

என்கிறார் ஸ்ரீசிவராமலிங்க சுவாமிகள்.  இந்நூல் யாருக்காகப் பாடப்பெற்றது என்பதை, 

"நிதியநற்கலை மகடந்நிலை யதனினிலைத்திடவே நிறுவிவாழ்த்திப்
பத்தியுள் வடிவயவர்களுக்குப் பாடிய மாதிய நூல்கள்" (1:1-2)

என்கிறார் சுப்பையஞானதேசிகேந்திர சுவாமிகள்.  இவ்வாறு பக்தமான்மியம் எழுந்த வரலாற்றைச் சாத்துக்கவிகள் மூலம் அறியமுடிகிறது.

பக்தமான்மியச் சிறப்பு

பக்தமான்மியத்தைப் பெட்டகத்துள் வைத்து மூடினாலும் உலகம் அவரையும் (தவத்திரு. கந்தசாமி சுவாமிகள்) அவரது நூலையும் புகழும்.  இந்நுலைத் தொட்ட கையும் மணக்கும், சொன்ன நாவும் மணக்கும் என்பதை ஸ்ரீலஸ்ரீ இராமானந்த சுவாமிகள்,

"பெட்டகத்துள் ளமைத்தாலு மெவ்வுலகும் புகழ்மணக்கும் பிழைதீரன்பிற்
றொட்டவர்க்குங் கைமணக்குஞ் சொன்னர்க்குநா மணக்குந் துகடீர்நெஞ்சி
னட்டவர்க்குந் தமிழ்ப்பயிரா யுலவாத பேரின்ப நல்குந்தானே" (2:2-4)

என்கிறார்.  வடமொழிப் புலமையாலும் தன்னுடைய அனுபவத் திறத்தாலும் இந்நூல் உலகமெலாம் போற்றத்தக்க வகையில் சிறந்து விளங்குகிறது என்பதை ஸ்ரீசபாபதி ஐயர் அவர்கள்,

"மிடன்மலிமெயப் பத்தர்கண்மான் மியங்கடமை யுலகமெலாம் வியந்துபோற்ற
வடன்மலிதன் னநுபவமு மிடையிடையே யமைத்தனி லணியாச்சொல்ல
றிடமலிமெய்ப் பத்தியொடு புலமையுமுள் ளவருளத்திற் றெளிவர்மாதோ"

எனக் கூறுகிறார்.  வைணவ பக்தர்களின் வரலாறுகளைத் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் செந்தமிழில் எழுதப்பட்டதால் மலையுச்சியின் மேல் வைத்த விளக்கொளி ஊருக்கெல்லாம் தெரிவதுபோல் பக்தமான்மியம் எனும் நூல் சூரியன் போல் உலகெங்கும் தன்புகழ்ப் பரப்பும் என்பதை ஸ்ரீஇராமசாமி சுவாமிகள்,

"மைத்தகைக் கருணைமேனி வாய்ந்தமான் மலர்ப்பதத்தின்
மெய்த்தகைப் பத்திகொண்டு விளங்கினோர் கதைவெற்பின்மேல்
வைத்தவொன் சுடரேபோல வயங்கிடப் புரிந்தானொப்பில்
பத்தமான் மியப்பேர்கொண்டு பரிதிபோல் விளங்கமாதோ" (2)

என்கிறார்.  விண்ணோரும் மண்ணோரும் மெச்சும்படியான நூல் இது என்கிறார் இரங்கமுத்து ஐயா அவர்கள்.  இதனை,

"விட்புலத்தோர் மெச்சும் வியன்பத்த மான்மியநூல்
கட்புலத்திற் கண்டவர்கட்கு" (2:3-4)

என்கிறார்.  இதே கருத்தைக் கொண்டவராக கிருஷ்ணசாமி ஐயா அவர்கள்,

"விண்ணவர் புகழ்ந்து போற்றும் விண்டுவின் பத்தர்காதை
மண்ணிணி லன்பர்தேர்வான் வழுத்தின னன்னோனாற்ற
றண்மதிக் குடையோன்றந்தை தாளுளத் தூன்றலில்லா
வெண்மதி யினர்களோர்தன் மிகவரி தரிதாமன்றோ" (2)

என்கிறார்.  தவத்திரு. கந்தசாமி சுவாமியால் சொல்லப்பட்ட பக்தமான்மியம் எனும் நூலுக்கு நிகர் வேறொரு நூல் உண்டோ என்கிறார் எறிபத்த சுவாமிகள்.

"கந்தமாமல ருற்றவாணியுண் மகிழ்வீறார்
கந்தசாமிசொல் பக்தமான்மிய நிகழ்யாதே" (3:4)

என்பதால் இக்கருத்தை உணரலாம்.  இந்நூலின் கவிதையானது மழைபோல் தொடர்ந்து யாக்கப்பட்டுள்ளது என்பதை இராமசாமி செட்டியார் அவர்கள்,

"கருமணிவண்ணன் பத்தர்காவியமாங் கவிமழை பொழிந்தனன் கார்போல்" (1:4)

என்கிறார்.  இந்நூலைப் படிக்கும் போதும் கேட்கும் போதும் உள்ளத்துள் அன்பு கிளர்வதன்றி வாட்டம் சிறிதும் வராது.  இந்நூல் கேட்கும் முன் வீட்டையடையும் ஆவல் கொண்ட எனக்கு அது அற்றுப்போய்விட்டதை,

"கேட்டவர்கட் கினுங்கேட்போங் கேட்பமெனவுளத்திலன்பு கிளர்வதன்றி
வாட்டமென லெவருளத்துஞ் சிறிதுமுற மாட்டாதிவ் வண்மைதன்னைக்
கோட்டமுறு மென்மனத்தின் செயலையுன்னிக் கூறலுற்றேன் குவலயத்தீர்
வீட்டடையு மாவலுண்டேன் மாட்டடைந்து கேட்கிலுள்ளம் விமலமாமே" (4)

என்கிறார் ப. இராமசாமி முதலியார்.   வைணவ நூல் சிந்தாமணியாக பக்தமான்மியம் விளங்க இவரை வைணவச் சேக்கிழார் என்கிறார் வி.நா. மருதாசலக் கவுண்டர்.  மதத்தால் சைவர் ஆயினும் யாத்த கவியால் வைணவராகக் கருதும் வண்மை கொண்டவர் என்பதை,

"சீரார் சிரவணபு ரிக்கந்த சாமிமுனி
தாரார்வித் தாரகவித் தன்மைகண்டோர் - பேராய்ந்து
வைணவநூற் சிந்தா மணியென்பார் மற்றிவனோ
வைணவச் சேக்கிழார் மன்" (4)

என்கிறார்.

நூற்பயன்

எச்செயலைச் செய்யினும் மானிடர் பயன் கருதியே செய்வர்.  நூலை யாக்கும் போதும் படிக்கும் போதும் இதனால் என்ன பயன் என்பர்.  இதற்கு விடை கூறும் முகமாக சிலர் சாத்துக் கவிகளில் இப்பக்தமான்மியத்தைப் படித்தாலோ கேட்டாலோ, தொட்டாலோ என்னென்ன  பயன் விளையும் என்பதைக் கூறுகின்றனர்.  ஸ்ரீலஸ்ரீ இராமானந்த சுவாமிகள், 

"பொன்னுலகின் புத்தமுதைப் பத்தமான்மியத் துணையாப் புகல்வாரஃதைத்
தின்னுமவர்துன் பினுக்கோ ரெல்லையில்லை யெனவுலகஞ் செப்புஞ்சேடன்
பன்னரிய விவ்வமுதைப் பார்த்தவர்க்குங் கேட்டவர்க்கும் பசிநோயோடு
மின்னறரு பிறப்பிறப்பாம் பெரும்பிணியுஞ் சாராதென் றிசைக்கலாமே" (1)
என்றும், ப. இராமசாமி முதலியார் அவர்கள்,

"பத்தர்கடம்மான்மியமா மிக்கதையையன்புகொடு படிப்போர் கேட்போர்
நத்தியவாறிகபோகம் வேணமட்டுமநுபவித்து நவிலந்தத்திற்
பத்தர்கண்முன்னடைந்திடுமெய்ப் பரகதியுமடைவரெனல் பழுரேயில்லாச்
சத்தியஞ்சத்தியமாகு மெனவுரைத்தேன்முக்காலுஞ் சரதந்தானே" (5)

என்றும் கூறுவதால் உணரலாம்.  இவ்வாறு சாத்துக்கவிகளில் நூலின் வரலாறு, நூலாசிரியரின் தனிச் சிறப்புகள், நூற்பயன் போன்றவைகள் தெளிதின் விளங்கக் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக