திங்கள், 14 ஜனவரி, 2019

சித்தமருத்துவச் சுவடிகளை அட்டவணைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள்



ஓலைச்சுவடிகளில் பல்வேறுபட்ட பொருண்மைகள் இடம்பெற்று இருக்கின்றன.  குறிப்பாக, சித்தமருத்துவம், இலக்கியம், இலக்கணம், மாந்திரீகம், வரலாற்றுச் செய்திகள் போன்றன இடம்பெற்றிருக்கின்றன.  இவ்வகைப்பட்ட ஓலைச்சுவடிகள் தொகுப்பாக இருக்கும் இடத்தில் அவற்றை எளிதாக அடையாளப்படுத்துவதற்கு அட்டவணைகள் பயன்படுகின்றன.  இவ்வாறு அட்டவணைப்படுத்தும்போது பல்வேறுபட்ட சிக்கல்கள் தோன்றுகின்றன. சித்த மருத்துவச் சுவடிகளை அட்டவணைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் பற்றி இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.
அட்டவணை
            தனித்தனியாக பாடல்களாகவோ நூல்களாகவோ இருந்தபோது வராத சிக்கல் தொகுப்பிக்கும்போது ஏற்பட்டது.  பல பாடல்கள்,  நூல்கள் ஓரிடத்தில் தொகுத்து வந்தமையும்போது அவற்றை அடையாளப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு முயற்சியே அகர வரிசைப்படுத்தல். இவ்வகரவரிசைப் பட்டியலே அட்டவணை உருவாவதற்குத் தோற்றுவாயாக அமைகிறது எனலாம்.  ஒரு துறை அறிவிலிருந்து பல்துறை அறிவு விரிவாக்கம் மனிதன் மேற்கொள்ளும்போது எல்லாவற்றையும் ஒருங்கே பெற்றிருப்பது கடினம்.  இதனால் அவற்றை எளிய முறையில் நினைவில் கொண்டவற்றை அடையாளப்படுத்துவதற்கு அட்டவணைப்பணி பெரிதும் உதவுகிறது எனலாம்.
            பல பொருண்மை கொண்ட ஓலைச்சுவடிகள் ஓரிடத்தில் இருக்கும்போது அவற்றைப் பொருள் பாகுபாட்டின் அடிப்படையில் பிரித்து வைத்தலும், அவற்றைப் பயன்படுத்தலும் எளிமையாக இருக்க வேண்டுமாயின் அட்டவணைப்படுத்தப்பட்டிருத்தல் அவசியம். 
            பழங்காலத்தில் புலவர் வீடுகளில் தனித்தனியாக அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இருந்த ஓலைச்சுவடிகள், அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள அவற்றிற்கு முகப்பில் தொடர் எண்ணிட்டும் பெயரிட்டும்  அடையாளப்படுத்தி வைத்திருப்பர்.  ஒரு சுவடிக்கட்டில் பல நூல்கள் இருக்கும்போது முகப்பில் அமைந்திருக்கும் ஏட்டில் அக்கட்டிற்குள் இடம்பெற்றிருக்கும் நூல்களின் பெயர்களை வரிசைப்படுத்தி எழுதிவைத்திருப்பர்.  இப்பணியிலிருந்தே ஓலைகளில் அட்டவணைப்படுத்தும் பணி தொடங்கியது எனலாம். 
மருத்துவர் வீட்டில் மருத்துவச் சுவடிகளும், புலவர் வீட்டில் இலக்கண இலக்கியச் சுவடிகளும், சோதிடர் வீட்டில் சோதிடச் சுவடிகளும், மந்திரவாதி வீட்டில் மாந்திரீகச் சுவடிகளும் இருந்த நிலை என்பது, அவ்வவர்கள் நித்தம் சுவடிகளைப் பயன்படுத்தியவர்களே யாவர்.  இதனால் அவர்களுக்கு அச்சுவடிகளில் இருக்கும் பொருண்மைகள் எளிதில் புலப்படும்.  ஆனால், அச்சுவடிகள் பற்றி அறியாதவர்கள் அவற்றை அடையாளங்காண வேண்டுமாயின் பயன்படுத்தியவர்கள் அடையாளப்படுத்தியிருக்க வேண்டும்.  அவ்வாறு அடையாளப்படுத்துவதே அட்டவணை ஆகும்.
பிற்காலத்தில் சுவடியைப் படிக்கும் பழக்கமும் பயன்படுத்தும் வழக்கமும் குறையத் தொடங்கிய காலத்தில் அவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியது.  அவ்வாறு காதுகாக்க வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் சில அமைப்புகள், நிறுவனங்கள், மன்னர்கள் தமிழரின் அடையாளங்களைத் தொகுக்கத் தொடங்கி ஓலைச்சுவடி நூலகங்களை உருவாக்கிப் பாதுகாத்தனர்.
பல்வேறு இடங்களில் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகளைத் தொகுத்து ஓரிடத்தில் சேர்த்துப் பாதுகாத்து வந்தாலும், அவை பயன்பாட்டில் இல்லாது போனால் அழிந்துவிடும் என்ற நிலை உருவானது.  அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றால், அவற்றைப் பற்றிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.  அவ்வாறு தெரிவிக்க உருவாக்கப்பட்டதே அவ்வவ் நூலக அட்டவணைகள்.  ஓலைச்சுவடியைப் பொருத்தவரை பல்வகைப்பட்ட அட்டவணைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
அட்டவணை வகைகள்
            ஓலைச்சுவடி அட்டவணைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1.    தற்காலிகச் சுவடி அட்டவணை
2.    சுவடிப்பெயரட்டவணை
3.    சுவடி அட்டவணை
4.    சுவடி விளக்க அட்டவணை
5.    சுவடிப் பேரட்டவணை
எனப் பாகுபடுத்தலாம்.
1.         தற்காலிகச் சுவடி அட்டவணை
            பல்வேறு இடங்களில் இருந்து தொகுத்து வரப்பெற்ற ஓலைச்சுவடிகள் ஓரிடத்தில் வந்தவுடன் அவற்றைச் சுத்தம் செய்து, அவற்றில் உள்ள நூற்பெயர், நூற்பெயர் இல்லாது போனால் செய்திகளின் அடைப்படையில் வரிசை எண் கொடுத்து தற்காலிகமாகப் பதியப்படுவது தற்காலிகச் சுவடி அட்டவணை எனப்படும்.  இத்தற்காலிகச் சுவடி அட்டவணை சுவடிப்பெயரட்டவணை, சுவடி விளக்க அட்டவணை, சுவடிப்பேரட்டவணை தயாரிக்கும் வரை பயன்படுத்தப்படுவதாகும்.  இத்தற்காலிகச் சுவடி அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நூற்பெயர், நூலாசிரியர் பெயர், பொருண்மை போன்றவை நுணுகி அட்டவணைப்படுத்தும்போது மாற்றத்திற்குரியனவாகும்.
2.         சுவடிப்பெயரட்டவணை
            சுவடிகளைப் பெயரளவில் தெரிவிப்பது சுவடிப்பெயர் அட்டவணை ஆகும்.  இது ஏறக்குறைய தற்காலிகச் சுவடி அட்டவணை போன்றதென்றாலும் நூற்பெயர், ஆசிரியர் பெயர், பொருள் ஆகியன உறுதிப்படுத்தப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்டிருப்பதாகும்.  ஒரு சுவடி நூலகத்தில் உள்ள சுவடிகளை அடையாளப்படுத்தி எடுப்பதற்கு இவ்வகைப்பட்ட சுவடிப்பெயரட்டவணை மிகுந்த உதவி புரியும். சுவடி நூலகத்தில் உள்ள சுவடிகளின் நூற்பெயர், ஆசிரியர் பெயர், நூற்பொருண்மை என்ற முறையில் தனித்தனியே அகரவரிசைப் பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டிருப்பின் பயன்படுத்துவோர் எளிதில் தங்களுக்குத் தேவையானதை உடனடியாக அடையாளப்படுத்தி பயன்படுத்த முடியும்.
3.         சுவடி அட்டவணை
            மேலது சுவடிப்பெயரட்டவணையுடன் சுவடியின் அளவு (நீளம், அகலம்), ஏடுகளின் எண்ணிக்கை, நிறை/குறை, தன்மை (நல்லநிலை, சுமாரான நிலை, பழுதுற்றநிலை, மிகப்பழுதுற்ற நிலை) போன்ற குறிப்புகள் மட்டும் கொண்டதாக அமைக்கப்பட்டிருப்பது சுவடி அட்டவணை.
4.         சுவடி விளக்க அட்டவணை
சுவடி அட்டவணைக் குறிப்புகளை மேலும் விளக்கம் தருவதாக அமைப்பது சுவடி விளக்க அட்டவணையாகும்.  இச்சுவடி விளக்க அட்டவணையில் நூலகக் குறிப்புகள், நூல் விவரம், தோற்றக் கூறுகள், சிறப்புச் செய்திகள், பிற செய்திகள் போன்றன இடம்பெற்றிருக்க வேண்டும்.
நூலகக் குறிப்புகள் என்ற பகுதியில் நூலின் வரிசை எண், சுவடி எண், பொருட்பகுப்பு எண் இடம்பெற்றிருக்க வேண்டும்.
நூல் விவரம் என்ற பகுதியில் நூற்பெயர், நூலாசிரியர் பெயர், பொருள் (பாட்டும் தொகையும், பதினெண்கீழ்க்கணக்கு, இலக்கணம், மெய்கண்ட சாத்திரம், தத்துவம், சைவத்திருமுறை, பிறதோத்திரங்கள், காப்பியம், தலபுராணம், உரைநடை இலக்கியம், சிற்றிலக்கியம், நாட்டுப்பாடல், மருத்துவம், சோதிடம், மாந்திரீகம், நீதிநூல், பல்வகை நூல்கள், திவ்வியப்பிரபந்தம்), வடிவமும் அளவும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
சுவடியின் தோற்றக் கூறுகள் என்ற பகுதியில் ஏடுகளின் எண்ணிக்கை, ஏடுகளின் நீளம் மற்றும் அகலம், எழுதப்பட்டுள்ள நிலை (ஒரு பக்கம் எழுதப்பட்டுள்ளதா? இருபக்கம் எழுதப்பட்டுள்ளதா?), ஒரு பக்கத்திற்கு எழுதப்பட்டுள்ள வரிகளின் எண்ணிக்கை, கையெழுத்து நிலை (தெளிவு, சுமார், கிறுக்கல்), சுவடி முழுமையா அல்லது குறையா போன்ற செய்திகள் இடம்பெற்றிருக்க வேண்டும். 
சுவடியின் சிறப்புச் செய்திகள் என்ற பகுதியில் நூலின் தொடக்கப்பகுதி, நூலின் இறுதிப்பகுதி, நூலுக்கு முன்னுள்ள முற்குறிப்புச் செய்திகள், நூலுக்குப் பின்னுள்ள பிற்குறிப்புச் செய்திகள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
பிற செய்திகள் என்ற பகுதியில் மேலது செய்திகள் தவிர குறிப்பிடத்தக்க செய்திகள் அந்நூலைப் பற்றித் தெரிவிக்க வேண்டியிருப்பின் அவற்றைப் பிற செய்திகள் என்ற இப்பகுதியில் சேர்க்க வேண்டும்.  குறிப்பாக, ஒரு சுவடியின் தொடக்கத்தில் மருத்துவச் செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்து, இடையில் சில மாந்திரீகச் செய்திகளைச் குறிப்பிட்டுவிட்டு மீண்டும் மருத்துவச் செய்திகளைக் கூறியிருப்பின், அவ்வகைப்பட்ட சுவடிகளைப் பற்றி அட்டவணைப்படுத்தும்போது, மாந்திரீகச் செய்திகளை அட்டவணைப்படுத்த முடியாது.  அவ்வாறமைந்தவற்றைப் பிற செய்திகள் என்ற பகுதியில் இடையிடையே மாந்திரீகச் செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற குறிப்பினைத் தருவதாகும்.
5.         சுவடிப் பேரட்டவணை
சுவடிப் பேரட்டவணை என்பது சுவடி அட்டவணை போன்றதே ஆகும்.  சுவடி அட்டவணை என்பது ஒரு சுவடி நூலகத்தில் உள்ளதை மட்டும் எடுத்துரைப்பது.  சுவடிப் பேரட்டவணை என்பது பல்வேறு சுவடி நூலகங்களில் உள்ளதை ஒன்றுபட எடுத்துரைப்பதாகும். 
மேலது அட்டவணை வகைகள் எல்லாச் சுவடி நூலகங்களிலும் தேவை கருதி தயாரித்திருக்கின்றனர்.  ஆனால், சுவடிப் பேரட்டவணையைத் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டுமே இதுவரை செய்திருக்கிறது. 
உலகெங்கிலும் உள்ள 46  நூலகங்களில் உள்ள தமிழ்ச்சுவடிகளின் பெருந்தொகுப்பாக இவ்வட்டவணை அமைந்திருப்பதால் இதனைச் சுவடிப் பேரட்டவணை எனலாம்.  ஐந்து தொகுதிகளால் ஆன இப்பேரட்டவணை முதல் தொகுதி முதல் நான்கு தொகுதி வரை 21972 சுவடிகளுக்கான குறிப்புகள் பொருண்மை அடிப்படையில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.  ஐந்தாவது தொகுதி இந்நான்கு தொகுதியில் இடம்பெற்றிருப்பதின் அகரவரிசை தரப்பட்டுள்ளது.
இவ்வாறான இவ்வட்டவணைகள் தயாரிக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் பலப்பல.  அவ்வாறு ஏற்படும் சிக்கல்கள் பற்றியும், அச்சிக்கல்களைத் போக்கும் முறைகள் பற்றியும் இனிக் காண்போம்.
சிக்கல் தோன்றும் முறைகள்
Ø  பயன்பாடற்ற நிலையில் பல இடங்களில் உள்ள சுவடிகள் கட்டவிழ்ந்து ஒன்றோடொன்று கலந்த நிலை.
Ø  கட்டவிழ்ந்த சுவடிகளை முறைப்படுத்தும்போது பல சிக்கல்கள் தோன்றுகின்றன. 
v     நீளஅகலம் ஒன்றாகவிருந்து….
·                  கையெழுத்து மாறுபடல்
·                  துளைகள் மாறுபடல்
·                  வரிகள் மாறுபடல்
·                  பத்திகள் மாறுபடல்
·                  ஓலைகளின் பழமை மாறுபடல்
·                  செய்யுள் மற்றும் உரைநடை மாறுபடல்
Ø  பாகப்பிரிவினையால் ஒரு சுவடியைப் பிரித்துக் கொள்ளுதல்.
Ø  ஒரு கட்டுக்குள் பல நூல்கள் இருக்கும்போது ஏட்டெண் தொடரேட்டெண் இல்லாமல் நூலேட்டெண் மட்டும் இடப்பட்டிருத்தல்.
Ø  நூலேட்டெண் இல்லாத பலநூற் கொண்ட சுவடி.
o   யாப்பு ஒன்றாக இருந்து ஒரே ஆசிரியரின் வெவ்வேறு நூற்பாடல்கள் கலந்திருத்தல்.
o   யாப்பு ஒன்றாக இருந்து வெவ்வேறு ஆசிரியர்களின் வெவ்வேறு நூற்பாடல்கள் கலந்திருத்தல்.
o   நூற்பொருண்மை ஒன்றாகவிருந்து நூல் வேறுபடல்.
o   நூலுக்கிடையில் ஏடு இல்லாமை.
o   உரைநடை, செய்யுள் கலந்த ஏடு கொண்ட சுவடி.
Ø  ஒரே நீள அகலங்கொண்ட சுவடிகள் ஒன்றாகக் கலந்திருத்தல்.
Ø  ஏட்டெண்ணோ தொடரேட்டெண்ணோ இல்லாமல் இருத்தல்.
Ø  ஒரே வகையான யாப்பமைப்பு கொண்டு, இடையேடு விடுபட, அவ்விடத்திருக்கும் ஏட்டில் புதியதொரு நூல் தொடங்குதல்.
Ø  முற்குறிப்பு மற்றும் பிற்குறிப்புக் காலக்குறிப்புக்களால் ஏற்படும் சிக்கல்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக