வெள்ளி, 2 நவம்பர், 2018

தீர்த்தப் பண்பாடு

தீர்த்தம் என்பது சுத்தம், திருமஞ்சனநீர், திருவிழா, தீ, நீர், பிறப்பு, புண்ணிய தீர்த்தம், பெண்குறி, யாகம் என்னும் பொருள்களைச் சுட்டுவதாக தமிழ்மொழி அகராதி குறிப்பிடுகிறது.  தீர்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்த்தக் கட்டம், தீர்த்தக்கரை (புண்ணிய நீர்த்துறை), தீர்த்தக்கரைப்பாவி (தீர்த்தக்கரையில் வசித்தாலும் அதில் முழுகியறியாத பாவி), தீர்த்தக்காரர் (கோயிலில் பூசைக்குப்பின் சுவாமி தீர்த்தம் முன்னர்ப் பெறும் உரிமையாளர்), தீர்த்தகவி (திருமண் தரித்துக்கொள்ளும்போது நீர் வைத்துக்கொள்ள உதவும் தேங்காயோட்டகல்), தீர்த்தங்கொடுத்தல் (கோயிலில் சுவாமி தீர்த்தம் அளித்தல், திருநாள்முடிவில் அடியார்கள் நீராடும்படி சுவாமி தீர்த்தத்துறையில் ஸ்நானஞ் செய்தல்), தீர்த்தசேவை (தீர்த்த யாத்திரை), தீர்த்தத் துறை (தீர்த்தகட்டம்), தீர்த்தத் தொட்டி (அபிஷேகநீர் தேங்கும்படி கட்டிய தொட்டி), தீர்த்த நீர் (புண்ணிய நீர்), தீர்த்தம் (பரிசுத்தம், நீர், புண்ணிய நீர்த்துறை, அடியார்கட்கு வழங்கப்படும் ஆராதனை நீர், ஸ்ரீபாத தீர்த்தம், திருவிழா, தீர்த்தவாரி, தீ, யாகம், பிறப்பு, பெண்குறி), தீர்த்தமாடுதல் (புண்ணிய காலத்தில் புண்ணிய நீரில் ஸ்நாநஞ் செய்தல்), தீர்த்த யாத்திரை (புண்ணிய தீர்த்தங்களில் நீராடப் பிரயாணஞ் செல்லுகை), தீர்த்தவாசி (புண்ணியத் துறைப்பக்கத்து வசிப்போன், தீர்த்த யாத்திரை செய்வோன்), தீர்த்தவாரி (திருவிழா முடிவில் சுவாமிக்கு நடைபெறும் நீராட்டுற்சவம்), தீர்த்த வேதி (சுவாமியின் அபிஷேக நீர் விழும்படி வைக்கப்படும் பாத்திரம்), தீர்த்தன் (பரிசுத்தன்) என்றெல்லாம் தீர்த்தம் தொடர்பாக உள்ள சொற்களைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி பட்டியலிடுகிறது.

தீர்த்தம் என்பதைத்,

"தீர்த்த முக்கண் முதல்வனை" (தேவாரம், 584.9)

"பாததீர்த்தம் பருகினான் (காஞ்சிப்பு. திருமண.59)

"குமரித் தீர்த்த மரீஇய வேட்கையின்" (பெருங். உஞ்சைக்.36, 236)

"தீர்த்தந் தெரிந்துய்த்து" (சீவக.1247)

"தீர்த்தத்தி னன்றிராத் திருமாலையைப் பாடி"(ஈடு.5.10.6)

என்றெல்லாம் இலக்கியங்கள் குறிப்பிடுவதைக் காணலாம்.

கங்கை, கோதாவரி, நருமதை, சிந்து, ஜம்புமார்க்கம், கோடி தீர்த்தம், சர்மண்வதி, சோமநாதம், பிரபாஸகம், சரஸ்வதி, பிண்டாரகம், கோமதி, சர்வசித்தி, பூமி தீர்த்தம், பிரம்மதுங்கம், பஞ்சநதம், பீம தீர்த்தம், கிரீந்திரம், தேவிகை, பாபநாசநி, குமாரகோடி, குருக்ஷேத்ரம், வாரணாசி, கபாலமோசனம், பிரயாகை, சாளக்ராமம், வடேச தீர்த்தம், வாமந தீர்த்தம், காளிகாசங்கம், லௌஹித்யம், கரதோயம், சோணம், ஸ்ரீபர்வதம், கோல்வகிரி, சக்யதீர்த்தம், மலயதீர்த்தம், துங்கபத்திரை, வரதா, தபதி, பயோஷ்ணி, தண்டகாரண்ய தீர்த்தம், காளஞ்சரம், முஞ்சவடம், சூர்ப்பாரகம், மந்தாகினி, சித்ரகூடம், சிருங்கபேரம், அவந்தி, அயோத்யா தீர்த்தம், சரயு, நைமிச தீர்த்தம், கும்பகோணம், பாபநாசம், யமுனை, சேது, மணிகர்ணிகை, பலபத்ரை, மாயா, மதுரா, அவந்தி, கேதாரம், நீலதண்டம், நேபாளம், இமவந்தம், கிருஷ்ணை, க்ஷீரம், பினாகி, தாம்ரபர்ணி, வைகை முதலிய தீர்த்தங்களைத் தீர்த்தமாகாத்மியம் என்னும் நூல் சுட்டிக் காட்டுவதை அபிதான சிந்தாமணி எடுத்துரைக்கிறது.

தீர்த்தப் பெருமை

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஓங்கு மாகடல் ஓதநீ ராடிலென்
எங்கும் ஈசனெ னாதவர்க் கில்லையே" 
(தேவாரம், 5:பாவநாசத் திருக்குறுந்தொகை:2)

என்ற திருநாவுக்கரசப் பெருமானின் பாடல் தீர்த்தமாடுதற்குரிய பெருமையினை விளக்கி நிற்பதையும், ஆற்றுத் தீர்த்தங்களை எடுத்துரைப்பதையும் காணமுடிகிறது.  இந்தியாவின் வடபகுதியில் சிந்து, யமுனை, சரசுவதி முதலிய ஆறுகள் ஓடினாலும் கங்கையாறே மிகச் சிறப்பானதாக மக்களால் போற்றப்படுகிறது.  அதுபோல், தென்பகுதியில் கோதாவரி, கிருஷ்ணா, தென்பெண்ணை, பாலாறு, வைகை முதலிய ஆறுகள் ஓடினாலும் காவிரியாறே மிகச் சிறப்பானதாக மக்களால் போற்றப்படுகிறது.  மக்கள் தம் தீவினைகளைப் போக்கிக் கொள்ள இவ்வாறான புனித ஆற்றிலோ குளத்திலோ அருவியிலோ கடலிலோ நீராடுதலைப் பண்பாடாகக் கொண்டிருக்கின்றனர்.  

திருக்கோயிலின் சிறப்புக்களை எடுத்துரைப்பன மூன்று.  அவை, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகும்.  உருவமாக விளங்கும் மூர்த்தியின் சிறப்பினையும், அம்மூர்த்தி திருக்கோயில் கொண்டிருக்கும் தலத்தின் சிறப்பினையும் ஒருங்கே பெற்றதாக விளங்குவது அத்தலத் தீர்த்தம் ஆகும்.  தலத்தீர்த்தங்கள் எம்மதத்திற்கும் பொதுவானது.  சைவம், வைணவம், சீக்கியம், பௌத்தம், இசுலாமியம், கிறித்துவம் போன்ற எம்மதமானாலும் அம்மதத் தலங்களுக்கு என நீராடும் துறை ஒன்று இருக்கும்.  இத்துறை அவ்விடத்தின் சிறப்பினையும், அவ்விடத்து நாயகனின் சிறப்பினையும் எடுத்துரைப்பனவாக இருக்கும்.  இத்தலங்களில் காணப்படும் தீர்த்தங்களின் பெருமைகளைப் பல்வேறு நிலைகளில்/கோணங்களில் கண்டு இன்புறுகின்றோம்.  

மண்ணில் வாழ்ந்த முனிவர்கள், சித்தர்கள் முதலியோரேயன்றி விண்ணகத் தேவர்களும், தெய்வங்களும் நீராடிப் பல தீர்த்தங்களுக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.  இதனைப் பல புராணங்கள் கதை கதையாகக் கூறக் காணலாம்.  பல திருத்தலங்களில் அமைந்த தீர்த்தங்கள் மக்களின் மன நோயையும், உடல் நோயையும், பழி பாவங்களையும் நீக்கி முத்தியும் சித்தியும் பெறச் செய்கின்றன என்று மக்கள் நம்புகின்றனர்.  இத்தீர்த்த வழிபாடு மக்களின் பண்பாட்டில் ஒன்றாக ஊன்றி வளர்ந்து ஆலம் விழுதாகிவிட்டதை உணரமுடிகிறது.

தீர்த்தங்களும் தீர்த்தப் பெருமையும்

கடல் தீர்த்தம், ஆற்றுத் தீர்த்தம், குளத்தீர்த்தம், கிணற்றுத் தீர்த்தம் என நான்காக  இந்தியாவெங்கும் பரந்து விரிந்திருப்பதைக் காணமுடிகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் திருவிடைமருதூர்த் தீர்த்தம், இராமேசுவர - சேது தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம், திருக்கடவூர் மயானத் தீர்த்தம், மதுரைப் பொற்றாமரைக்குளத் தீர்த்தம், குடந்தை மகாமகத் தீர்த்தம், திருவாரூர்க் கமலாலய தீர்த்தம், திருநள்ளாறு நள தீர்த்தம், திருவெண்காடு முக்குளத் தீர்த்தம் போன்ற ஒன்பது தீர்த்தங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

திருவிடைமருதூர்த் தீர்த்தம்

இடைமருது என்று புகழப்படும் ஊர்.  இவ்வூர் மகாலிங்கத் தலம் என்று புகழப்படும்.  வடக்கே ஆந்திர 'ஸ்ரீசைலம்' தலைமருது என்றும், தெற்கே நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள 'திருப்புடைமருதூர்' கடைமருது என்றும், இவையிரண்டுக்கும் இடைப்பட்ட 'திருவிடைமருதூர்' இடைமருது என்றும் அழைப்பர்.  உமையன்னை மூகாம்பிகை வடிவில் இறைவனை வேண்டித் தவமிருந்த தலம் இது.  இத்தலத்திறைவன் தைப்பூசத் திருநாளில் காவிரிக்கு எழுந்தருளி ஐராவணத்துறையில் தீர்த்தம் கொடுப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.  காருண்யாமிர்தம் (இன்றுள்ள திருக்குளம்), பாணதீர்த்தம் (இராமபிரானால் ஏற்படுத்தப்பட்டது), பராசர தீர்த்தம், சோம தீர்த்தம், சோம கூபம், ருத்ர தீர்த்தம், பதும தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், எம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், கிருஷ்ண கூபம்,  கனக தீர்த்தம், கங்கா கூபம், கருட தீர்த்தம், வசு தீர்த்தம், சூரிய தீர்த்தம், மருத்துக்கள் தீர்த்தம், நரசிங்க தீர்த்தம், நந்தி தீர்த்தம், துரோண தீர்த்தம், ராகவ கூபம், சுர தீர்த்தம், முனி தீர்த்தம், கச்சப தீர்த்தம், கௌதம தீர்த்தம், கல்யாண தீர்த்தம், சேஷ தீர்த்தம், கந்த தீர்த்தம், ஐராவத தீர்த்தம் முதலியன இருந்ததாகவும், தற்போது 25 தீர்த்தங்கள் இருப்பதாகவும் அறிஞர் பெருமக்கள் குறிப்பிடுவர் (தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, ப.635).  

இராமேசுவர - சேது தீர்த்தம்

பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரமும் ஒன்று.  இங்கு, இராவணனைக் கொன்ற பாவம் நீங்க இராமபிரான் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.  இத்தலத்தில் மூர்த்தி வழிபாட்டினும் சிறந்ததாகக் கருதப்படுவது தீர்த்த வழிபாடே ஆகும்.  இராமேஸ்வர தீர்த்தத்துடன் இணைந்த சிறப்பினைக் கொண்டது தனுஷ்கோடியில் உள்ள சேது தீர்த்தம் ஆகும்.  இராமேஸ்வரக் கடல் தீர்த்தமும், திருக்கோயிலின் உள்ளே உள்ள பல தீர்த்தங்களும் உடல் நோயையும் உள்ளத்து நோய்களையும் தீர்த்து ஆன்ம நலம் மிகுவிக்கும் என்ற நம்பிக்கையில் இங்குத் தீர்த்தப் பண்பாடு போற்றப்படுகிறது.

தல யாத்திரையில் 'காசி - இராமேஸ்வரம்' குறிப்பிடத்தக்க ஒன்று.  ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் 'காசி - இராமேஸ்வரம்' தல யாத்திரை செல்ல வேண்டும் என்பர்.  அவ்வாறு செல்வோர் முதலில் இராமேஸ்வரம் வந்து கடல் நீராடி, இராமநாதரைத் தொழுது, இங்கிருந்து கடல் மண்ணை எடுத்துக் கொண்டு, காசி சென்று, கங்கையில் கரைத்து, கங்கையில் நீராடி, விசுவநாததைத் தொழுது, கங்கை நீருடன் திரும்பவும் இராமேஸ்வரம் வந்து இராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வணங்கிய பிறகு தல யாத்திரை நிறைவடையும்.  இவ்வாறு முறையாகத் தலயாத்திரை மேற்கொள்ளாவிடில், அடுத்த முறை காசி செல்வது கடினம் என்பர்.  இப்பண்பாடு ஆய்வாளரால் உணரப்பட்டது.  இராமேஸ்வரம் செல்லாமல் காசி சென்ற நிலையிலும், காசி சென்ற பின் இராமேஸ்வரம் செல்லாத நிலையிலும் இருக்கும்போது, பலமுறை வாய்ப்பு கிடைத்தும் அடுத்த முறை காசி செல்ல முடியாத சூழலையே உருவாக்கி உள்ளது. 

தனுஷ்கோடி சேது தீர்த்தம் என்று வழங்கப்படும் கோடி தீர்த்தம் இங்குள்ள தீர்த்தங்களுள் முக்கியமானது.  இது கிணறு வடிவில் உட்புறத்தில் அமைந்துள்ளது.  நீராடுவோர் வெளியே இருந்து தீர்த்தத்தை ஏற்றுக் கொள்ள கோமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தீர்த்தத்தில் முப்பத்தாறு முறை குளியலாட வேண்டும் என்பது விதி.  மக்கள் இவ்விதியில் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர்.  36 முறை குளியலாட தினம் ஒரு குளியலாட ஒரு மாதத்திற்குமேல் தங்கியிருக்க வேண்டும்.  இதற்கு மாற்றாக, ஒரே நாளிலோ ஓரிரு நாள்களிலோ முப்பத்தாறு முழுக்குகள் போட்டுத் தீர்த்தப் பலனையடைகின்றனர்.

தேசிய ஒருமைப் பாட்டிற்குக் காசி - இராமேஸ்வர தீர்த்தமாடல் ஒரு சின்னமாக இருப்பதை உணரலாம்.  சிவாலயங்களில் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில் மட்டுமே அருச்சகர்கள் தீர்த்தம் வழங்கும் சிறப்புப் பெற்றதாகத் திகழ்கிறது.

தாமிரபரணி தீர்த்தம்

இந்தியத் துணைக் கண்டத்தில் ஆற்றுத் தீர்த்தத்தில் வடக்கே கங்கைக்கும், தெற்கே காவிரிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் இடையிடையே வேறு சில ஆற்றுத் தீர்த்தங்களுக்கும் மக்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.  இவ்வகையில் தாமிரபரணி ஆறும் ஒன்றாகும்.  திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் பொருநை அல்லது தாமிரபரணி எனும் ஆறு ஆற்றுத் தீர்த்தத்தில் தனித்தன்மையுடன் விளங்குகிறது.  பாபநாசினியான வடக்கே ஓடும் கங்கை ஆறு ஒரு முறை தனது புண்ணியத்தில் பாதியை, தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் ஜீவநதியான தாமிரபரணிக்குக் கொடுத்ததாக மச்சபுராணத்தில் உள்ள 'தாமிரபரணி மகாத்மியம்' கூறுகிறது.  மேலும், தாமிரபரணியாகிய பெண் ஆறு நதிதீரத்தில் இந்திர தீர்த்தம், பாண தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பாபநாச தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்களாகத் தோன்றி ஓடி, இறுதியில் ஆத்தூர் என்ற ஊருக்கருகில் தன் கணவரான சமுத்திர ராசனுடன் சங்கமமாகிறாள் என்கிறது.  மார்கழி மாதத்தில் தாமிரபரணியில் நீராடுபவர்க்கு கங்கையில் நீராடிய புண்ணியம் கிட்டும் என்பர். 

திருக்கடவூர் மயானத் தீர்த்தம்

சோழ நாட்டுத் தென்கரைத் தலங்களுள் திருமயானம் என்று வழங்கும் திருமெய்ஞ்ஞானத் தலமும் ஒன்று.  திருக்கடவூருக்கு நேர்கிழக்கே 2கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.  சிவபெருமான் பிரமனை நீறாக்கி, மீண்டும் உயிர்ப்பித்து, அவருக்குப் படைப்புத் தொழிலை அருளிய தலம்.  பிரமன் வழிபட்ட தலம்.  இத்தலத்துக்கு அருகே ஒரு கிணறு இருக்கிறது.  இக்கிணறு 'கடவூர் தீர்த்தக் கிணறு' என்று வழங்கப்படுகிறது.  இக்கிணற்றில் உள்ள தீர்த்தத்தைக் காசி தீர்த்தம் என்று வழங்குவர்.  இத்தீர்த்தம் தெய்வ நலம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  இத்தீர்த்தத்தைத் திருக்கடவூர் அமிர்தகடேசுவரப் பெருமானுக்கு அபிடேகம் செய்ய வண்டியில் எடுத்துச் செல்லப்படுகிறது.  பங்குனி மாதம், அசுவினி நட்சத்திரத்தில் கங்கையானது, இத்தீர்த்தமாக வந்ததால் இதனை 'அசுவினி தீர்த்தம்' என்றும் வழங்குவர்.  ஒவ்வொரு பங்குனி மாத வளர்பிறை அசுவினி நட்சத்திரத்தில் இவ்விடத்தில் தீர்த்தமாடுவது மிகுந்த புண்ணியமாகக் கருதப்படுகிறது.  ஏனைய காலங்களில் இத்தீர்த்தத்தில் நீராடுவது இல்லை.  இதற்கான காரணமும் புலப்படவில்லை.

மதுரைப் பொற்றாமரைக்குளத் தீர்த்தம்

இறைவன் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்தியதும், புலவர்களுடன் இறைவனும் ஒருவராயிருந்து தமிழ்ச்சங்கத்தில் தமிழாராய்ந்ததும், நாகம் உமிழ்ந்த நஞ்சை இறைவன் அமுதத்தால் மாற்றி மதுரமாக்கியதும் திருஆலவாய், சிவராசதானி, பூலோக கயிலாயம், கடம்பவனம்,கூடல், நான்மாடக்கூடல் என்றெல்லாம் புகழப்படும் மதுரைத்தலமாகும்.  இக்கோயில் வளாகத்திற்குள் பொற்றாமரைக்குளம் அமைந்துள்ளது.  இந்திரன் தன் வழிபாட்டிற்காகப் பொன்மலர் பறித்தது இக்குளத்தில்தான். 

இப்பொற்றாமரைத் தீர்த்தம் தெய்வநலம் மிகப்பெற்றதாகத் திகழ்கிறது.  முற்காலத்தில் இக்குளம் சங்கப் பலகை ஒன்று பெற்றிருந்தது என்றும், நூலரங்கேற்றம் புரிய விரும்பும் புலவர்கள் தங்களது நூலைச் சங்கப் பலகையில் வைக்க, அந்நூல் நீரினுள் தள்ளாமல் இருந்தால் பிழையற்ற நூலென்று கருதி சங்கப் புலவர்கள் ஏற்பர் என்றும் கூறுவர்.  திருவள்ளுவப் பெருமான் செய்த உலகப் பொதுமறையாம் திருக்குறளைச் சங்கப் புலவர்கள் இக்குளத்தில் சங்கப்பலகையில் வைத்துத்தான் ஏற்றுக்கொண்டதாகக் கூறுவர்.  அழகிய படிக்கட்டுக்கள் கொண்ட இக்குளத்தின் வடக்குக் கரையில் உள்ள தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்களும், தென்கரை மண்டபத்தில் திருக்குறட் பாக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

கோயிலினுள் உள்ள இக்குளத்திற்குப் பல சிறப்புக்கள் உண்டு.  பொற்றாமரைத் தீர்த்தம் கங்கை முதலிய புண்ணிய ஆறுகளும், கடல்களும், மேகங்களும் படைக்கப்படுவதற்கு முன்பே, சிவபெருமான் தன்னை வழிபடுவோர் திருவபிடேகம் செய்வதற்காக முதன்முதலில் திருவருளால் அமைத்த ஆதிதீர்த்தம் இதுவாகும்.  இதனைப் பரம தீர்த்தம், அருட்சிவ மூர்த்தம், ஞானதீர்த்தம், முத்தி தீர்த்தம், உத்தம தீர்த்தம், தரும தீர்த்தம், மோட்ச தீர்த்தம், பொற்றாமரைத் தீர்த்தம் என்று இத்தீர்த்தப் பலன்களுக்கு ஏற்ப இத்தீர்த்தப் பெயர்கள் அமைந்திருக்கின்றன.

கும்பகோணம் மகாமக தீர்த்தம்

"திருஞான சம்பந்தர் திருக்குட மூக்கினைச் சேர
வருவார்தம் பெருமானை வண்தமிழில் திருப்பதிகம்
உருகாநின்று உளமகிழக் குடமூக்கை உகந்திருந்த
பெருமான்எம் இறைஎன்று பெருகிசையால் பரவினார்"
(பெரியபுராணம், திருஞானசம்பந்தர் புராணம், பா.407)

என்பதில் வரும் திருக்குடமூக்கே கும்பகோணம் ஆகும்.  பேரூழிக் காலத்தில் இறைவன் தந்த அமுத கலசம், பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி தங்கிய தலமாகியதால் இதனைக் கும்பகோணம் என்றனர்.  இப்பெயரே இன்று நிலைபெற்றதாகிறது.  இத்தலத்தில் பதினான்கு கோயில்களும் பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன.  குரு சிம்ம ராசியில் நிற்க, சந்திரன் கும்ப ராசியில் இருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளே மகாமக நாளாகும்.  இந்நாள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும்.  இந்நாளில் புண்ணியப் பேராறுகளான கங்கை, யமுனை, நர்மதா, கோதாவரி, பொன்னி, பயோகினி, சரயு, கன்னியாகுமரி ஆகியவை தம் பாவங்களைப் போக்கிக் கொள்ளவும் மக்களுக்குப் புண்ணியஞ் சேர்க்கவும் மகாமகத் திருநாளில் மகாமகக் குளத்தில் நீராட வருவர் எனப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.  மேலும், அனைத்துத் தீவினைகளையும் போக்கக் கூடிய கங்கையே இன்றைய தினம் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடி தம் பாவங்களைப் போக்கித் தூய்மையடைய வருவதால்  இக்குளம் பெருஞ்சிறப்படைகிறது எனலாம்.  இத்தகைய சிறப்புப் பெற்ற மகாமகத் திருநாளில் இக்குளத்தில் நீராடினால் தாங்கள் பன்னிரண்டு ஆண்டுகளாகச் சேர்த்துவைத்த பாவங்கள் நீங்கிப் புதுப்பொலிவு பெற்று புண்ணியதாரர்களாக ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில் மக்களும் நீராடுகின்றனர்.  இந்நாளில் நடைபெறும் விழாவே மகாமகத் திருவிழா என்றழைக்கப்படுகிறது.  

திருவாரூர்க் கமலாலய தீர்த்தம்

பஞ்ச பூதத் தலங்களுள் பிருதிவித் தலமாகவும், சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகவும், சோழநாட்டுத் தென்கரைத் தலங்களுள் ஒன்றாகவும்  திருவாரூர் விளங்குகிறது. இவ்வூர், 'பிறக்க முத்தி' என்னும் சிறப்பினைப் பெற்றது.  இத்தலம், க்ஷேத்திரவரபுரம், ஆடகேசுரபுரம், தேவயாகபுரம், முசுகந்தபுரம், கலிசெலாநகரம், அந்தரகேசுபுரம், வன்மீகநாதபுரம், தேவாசிரியபுரம், சமற்காரபுரம், மூலாதாரபுரம், கமலாலயபுரம் எனப் பல பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.  இங்குத் தியாகராஜர் அஜபா நடன மூர்த்தியாகக் காட்சி தருகின்றார்.  கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, ஓடை ஐந்து வேலி என்னும் சிறப்புக்குரியது இத்தலம்.  இங்குள்ள தீர்த்தம் கமலாலயம் எனப்படும் தேவ தீர்த்தம் எனப்படுகிறது.  இத்திருக்குளத்தில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.  பங்குனி உத்திரம், மார்கழித் திருவாதிரை, மகோதயம் போன்ற புண்ணிய காலங்களில் தீர்த்தவாரி நடைபெறும்.  அந்நன்னாள்களில் நீராடுவது நலம் பயக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.

திருநள்ளாறு நள தீர்த்தம்

தர்ப்பாரண்யேசுவரர், திருநள்ளாற்றீஸ்வரர் போன்ற பெயர்களில் இறைவன் இத்தலத்தில் கோயில் கொண்டிருந்தாலும் சனி பகவானுக்கே மக்கள் இங்குச் பெருஞ்சிறப்பு செய்கின்றனர்.  இதற்குக் காரணம், சுயம்வரத்தின் மூலம் நளன் தமயந்தியைத் திருமணம் செய்து கொண்டான்.  தமயந்தி, தேவர்களைப் புறக்கணித்து நளனை மணந்து கொண்டதை நளபகவான் கோபம் கொள்கின்றார்.  நளனிடம் குறை காணாத சனிபகவான் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்து, காலில் நீர் பட்டும் படாமலும் கழுவிச் சென்ற குற்றங்கண்டு அவனைப் பற்றுகின்றார்.  பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி திருநள்ளாறு சென்று, தீர்த்தம் உண்டாக்கி,  நீராடி திருநள்ளாற்று இறைவன் தர்ப்பாரண்யேசுவரராகிய தர்ப்பையில் முளைத்த சுயம்புமூர்த்தியை வழிபட ஆலயத்துள் நுழைகின்றான்.  அப்போது அவனைப் பற்றியிருந்த 'சனி' உள்ளே நுழைய அஞ்சி ஆலயப் பிரகாரத்திற்கு வெளியிலேயே நின்று விடுகின்றார்.  நளன் பட்ட துன்பங்களையும், அத்துன்பங்களிலிருந்து நளன் செய்த வழிமுறைகளையும் மக்கள் கண்டனர்.  சனியின் தொல்லையில் இருந்து நீங்க  சனிப்பெயர்ச்சிக் காலத்தில் நள தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து நீராடினால்  தங்களைப் பிடித்த பீடைகளும் துன்பங்களும் விலக்கிப்போகும்  என்று அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டு நள தீர்த்தமாடுகின்றனர்.

திருவெண்காடு முக்குளத் தீர்த்தம்

சோழ நாட்டு வடகரைத் தலங்களுள் திருவெண்காடு ஒன்று.  இத்தலம், இந்திரன் வௌ¢ளையானை வழிபட்டதும், அச்சுதக்களப்பாளர் மூலமாக மெய்கண்டார் அவதாரத்தை நாட்டுக்களித்து நலம் செய்த முக்குளநீர் உள்ளதும் ஆகும்.  ஊர் சிறியது, கோயில் பெரியது என்னும் சிறப்புக்குரியது இத்தலம்.  மூன்று மூர்த்திகள் (சுவேதாரண்யர், அகோரர், நடராசர்), மூன்று தலமரங்கள் (ஆலமரம், கொன்றை, வில்வம்), மூன்று அம்பிகைகள் (பிரம்மவித்யா நாயகி, துர்க்கை, காளி), மூன்று தீர்த்தங்கள் (சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்) ஆகியவற்றைப் பெற்றுள்ள சிறப்பினை இத்திருக்கோயில் பெற்றுள்ளது.  இக்கோயிலில் உள்ள முக்குளத்தை வெண்காட்டு முக்குளநீர் என்று குறிப்பிடுவர்.  இத்திருக்கோயிலில் உள்ள முக்குளத்தில் நீராடி இறைவனை வழிபடின் மகப்பேறு வாய்க்கும், தீவினைகள் நீங்கும், நினைத்த செயல் கைகூடும் என்பதைத் திருஞானசம்பந்தப் பெருமான்,

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே" 
                                                                                          (தேவாரம், 2.48.2)
என்று தம்முடைய திருவாக்கால் குறிப்பிடுகின்றார்.

தொகுப்புரை

இவ்வாறு புண்ணிய தீர்த்தங்கள் இந்தியாவெங்கும் பரந்து விரிந்துள்ளன.  இத்தீர்த்தங்களில் நீராடினால் தாங்கள் செய்த தீச்செயல் விளைவுகள் நீங்கி நற்பேறு அடையலாம் என்று எளியோரும் பெரியோரும் எண்ணிப் போற்றுகின்றனர்.  இவ்வெண்ணம் உலகம் முழுதும் பரவிக் கிடக்கிறது.  அயல் நாட்டினர் கூட தம்முடைய தீச்செயல் விளைவுகளை இந்தியாவில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடிப் போக்கிக் கொள்ளும் செயல் முறைகள் பக்தி இயக்கப் பண்பாட்டின் தாக்கம் எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக