ஞாயிறு, 15 மே, 2022

மணக்குடவரில் வ.உ.சி.

 

மணக்குடவரில் வ.உ.சி.

முனைவர் மோ.கோ. கோவைமணி

தலைவர், ஓலைச்சுவடித்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் – 613 010.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிதம்பரனார் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்று வழக்கறிஞர், பேச்சாளர் (சேலத்தில் நடந்த மூன்றாவது காங்கரஸ் மாநாட்டில் அவர் நிகழ்த்திய தலைமையுரை "எனது அரசியல் பெருஞ்சொல்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது), தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப்போராட்ட வீரர், பத்திரிகையாசிரியர் (விவேகபானு, இந்து நேசன், தி நேஷனல் போன்ற இதழ்களின் ஆசிரியர்), எழுத்தாளர் (1914இல் மெய்யரம், 1915இல் மெய்யறிவு மற்றும், 1915இல் பாடல் திரட்டு, 1946இல் சுயசரிதை ஆகிய நான்கும் கவிதை நடையில் அமைந்தவை), மொழிபெயர்ப்பாளர் (ஜேம்ஸ் ஆலனின் "As a man Thinketh" என்ற நூலை 1909இல் மனம் போல் வாழ்வு எனவும், ஜேம்ஸ் ஆலனின் "Out from the heart" என்ற நூலை 1914இல் அகமே புறம் எனவும், ஜேம்ஸ் ஆலன் எழுதிய "From Poverty to Power"என்ற நூலின் முதல் பகுதி "The part of prosperity" என்ற நூலை 1916இல் வலிமைக்கு மார்க்கம் எனவும், ஜேம்ஸ் ஆலன் எழுதிய "From Poverty to Power"என்ற நூலின் இரண்டாம் பகுதி "The way to peace" என்ற நூலை 1934இல் சாந்திக்கு மார்க்கம் எனவும் மொழிபெயர்த்துள்ளார்), கட்டுரை ஆசிரியர் (கடவுளும் பக்தியும், கடவுள் ஒருவரே, மனிதனும் அறிவும், மனமும் உடம்பும், வினையும் விதியும், விதி அல்லது ஊழ்), ஆராய்ச்சியாளர், உரையாசிரியர் (1917இல் இன்னிலை, 1935இல் திருக்குறள் மற்றும் சிவஞான போதம்), பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களை வெளிக்கொணர்ந்த பதிப்பாசிரியர் (1917இல் திருக்குறள் மணக்குடவர் உரை-அறத்துப்பால், 1928இல் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணம்) எனப் பன்முகத் தன்மை வாய்ந்தவராகத் திகழ்ந்திருக்கிறார்.  இவரின் எழுத்து ஆக்கங்களைத் தனியொரு ஆய்வாக மேற்கொள்ளலாம்.  என்றாலும், ஓலைச்சுவடிகளில் இருந்து பதிப்பித்துள்ள திருக்குறள் அறத்துப்பால் மணக்குடவர் உரைப் பதிப்பில் வ.உ.சி. கொண்ட பதிப்பு நெறிமுறைகள் இங்கு ஆராயப்பெறுகிறது.

ஓலைச்சுவடிகளில் இருந்த வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் கி.பி.1812 முதல் அச்சிட்டுப் பயின்றும் பயிற்றுவிக்கப்பெற்றும் வருகிறது. முதலில் மூலமும் அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளிவந்த நிலையில், திருக்குறளுக்கு என்று சிறந்ததாகக் கருதப்பெற்ற பதின்மர் உரைகளில் பரிமேலழகர் உரையே பரவலாகப் பயிலப்பெற்ற நிலையில், வ.உ.சி. ஏனைய உரைகளையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டு மணக்குடவர் உரையைக் கண்டு அவற்றில் தோய்ந்து அவற்றை வெளிப்படுத்த எண்ணினார். 

“(திருக்குறள்) பதின்மர் உரைகளில் தற்காலம் தமிழ்நாட்டில் பயின்று வழங்குவது பரிமேலழகர் உரை ஒன்றே.  அவ்வுரையைச் சில வருடங்களுக்கு முன்னர் யான் படிக்கத் தொடங்கினேன்.  அப்பொழுது மற்றைய ஒன்பதின்மர் உரைகளையும் பார்க்க வேண்டுமென்னும் அவா எனக்கு உண்டாயிற்று.  அதுமுதல், தமிழ் நூல்கள் இருக்கும் இடங்களில் தேடவும் தேடுவிக்கவும் முயன்றேன். 

அம்முயற்சியின் பயனாக எனக்குக் கிடைத்தவற்றில் மணக்குடவருரைப் பிரதி ஒன்று.  அது வள்ளுவர் கருத்துக்களைத் தெள்ளென விளக்குவதாகவும், இனிய செந்தமிழ் நடையில் எழுதப்பெற்றதாகவும் தோன்றிற்று.  அதுபற்றி, யான் அதனை அச்சிட்டு வெளிப்படுத்த”1 எண்ணிப் பதிப்புப் பணியை மேற்கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. 

இவரின் பதிப்புப் பணிக்குச் சென்னை அரசாட்சியாரது கையெழுத்துப் புத்தகசாலையிலுள்ள மணக்குடவ ருரைப்பிரதி ஒன்றும், மஹோபாத்தியாய மகா.ள.ள.ஸ்ரீ. உ.வே. சாமிநாதையரவர்களிடத்தில் உள்ள மணக்குடவருரைப் பிரதி ஒன்றும் ஆக இரண்டு சுவடிகள் பயன்படுத்தப்பெற்றுள்ளன.  இவ்விரு சுவடிகளும் படியேடும் வழியேடுமாக இருந்ததை, “அரசாட்சிப் புத்தகசாலைப் பிரதியில் அதிகாரப் பெயரும் முறையும் பரிமேலழகருரையைப் பின்பற்றி யிருக்கின்றன.  அன்றியும், சில குறள்களின் மூலமும்  உரையும் சிதைந்தும் குறைந்து மிருக்கின்றன.  பின்னர், மஹோபாத்தியாய மகா.ள.ள.ஸ்ரீ. உ.வே. சாமிநாதையரவர்களிடத்தில் உள்ள மணக்குடவருரைப் பிரதியைத் தருவித்துப் பார்த்தேன்.  அது, அரசாட்சிப் புத்தகசாலைப் பிரதியினின்று பிரதி செய்யப்பட்டதாகத் தெரிந்தது.  ஆயினும், அதனையும் ஸ்ரீசகஜாநந்த சுவாமி யவர்களையும் துணையாகக் கொண்டு, எனது பிரதியில் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் என்னும் மூன்றையும் புரிந்து மணக்குடவருரையை ஒருவாறு பூரணமாக்கி அச்சிற்குக் கொடுத்தேன்”2  என்பதாலும், அஃது அச்சாகி வருங்காலையில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி சுதேசபாஷா அத்தியக்ஷகர் ஸ்ரீமான் தி. செல்வகேசவராய முதலியாரவர்களும், சென்னைக் கிரிஸ்டியன் கல்லூரி சுதேசபாஷா அத்தியக்ஷகர் ஸ்ரீமான் த. கனகசுந்தரம் பிள்ளையவர்களும் அதனைப் பலமுறை பார்த்துச் சீர்படுத்தித் தந்தார்கள்”3 என்பதாலும் இப்பதிப்பில் வ.உ.சி. மேற்கொண்ட செயன்மைகள் புலப்படுகின்றன.

பரவலாக பயின்றுவரும் பரிமேலழகர் உரையை விட மணக்குடவர் உரையில் பல மாற்றங்களைக் கண்டுணர்ந்த வ.உ.சி. அவ்வுரையின் சிறப்பைத் தமிழுலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்னும் முயற்சியின் விளைவே திருக்குறள் மணக்குடவர் உரைப் பதிப்பு எனலாம்.  “மணக்குடவரும் பரிமேலழகரும் அதிகார முறையிற் சிறிதும் குறட்பாக்களின் முறையிற் பெரிதும் வேறுபட்டிருப்பதோடு, பல குறள்களில் வெவ்வேறு பாடங்கள் கொண்டும், பலபல குறள்களுக்கு வெவ்வேறு பொருள்கள் உரைத்துமுள்ளனர்.  இவ்வேற்றுமைகளைக் காண்பார் திருக்குறளின் பெருமைகளையும் அதன் மூலபாடங்கள் வேறுபட்டுள்ள தன்மையையும் நன்கு அறிவதோடு, குறள்களுக்கு இவருவம் உரைத்துள்ள பொருள்களைச் சீர்தூக்கிப் பார்க்கவும் புதிய பொருள்கள் உரைக்கவும் முயலுவர்.  அவர் அவ்வாறு செய்யவேண்டுமென்னும் விருப்பமே, யான் இவ்வுரையை அச்சிடத் துணிந்ததற்கு முக்கிய காரணம்”4 என்னும் வ.உ.சி.யின் கூற்று இதனை மெய்ப்பிக்கும். 

திருக்குறள் மணக்குடவர் உரை முப்பாலுக்கும் இருக்க, வ.உ.சி. அறத்துப்பாலை மட்டும் வெளியிட்டுள்ளார்.  அதற்கான காரணத்தை அவரே தன்னுடைய பதிப்புரையில் வெளிப்போந்துள்ளார்.  “இந்நூலின் ஒவ்வொரு பாலும் அச்சாகி முடிந்தவுடன் வெளிவருதல் நலமென்று எனக்கு இப்பொழுது தோன்றுவதனால், இன்று வரையில் அச்சாகி முடிந்திருக்கிற அறத்துப்பாலை இப்பொழுது வெளியிடுகிறேன்.  பொருட்பாலும் காமத்துப்பாலும் விரைவில் அச்சாகி வெளிவரும்.  இந்நூலை யான்அச்சிடத் தொடங்கிய பின்னர்க் காகிதத்தின் விலை மிக ஏறிவிட்டதால், இதற்கு முன் குறித்த விலை ரூபா இரண்டை ரூபா மூன்றாக ஏற்றி, அதனை அறத்துப்பாலுக்கு ரூபா 1-0-0ம், பொருட்பாலுக்கு ரூபா 1-1-0ம், காமத்துப்பாலுக்கு ரூபா 1-12-0ம் விதானம் செய்துள்ளேன்”5 என்று சொல்லப்பெற்றுள்ளதைக் காணும்போது முப்பாலையும் தனித்தனியா வெளியிட எண்ணி முதலில் அறத்துப்பாலை 1917இல் வெளியிட்டிருக்கிறார்.  ஏனைய பொருட்பாலும், காமத்துப்பாலும் வெளியிடத் தகுந்த நிலையில் உருவாக்கி இருந்தமையால்தான் அதற்கான விலையையும் தீர்மானித்திருக்கிறார்.  காகித விலையேற்றத்தினாலும் பொருளாதார நெருக்கடியாலும் மூன்று பகுதிகளையும் ஒன்றாக வெளியிடாமல் அப்போது அச்சாகி இருந்த அறத்துப்பாலை மட்டும் வெளியிட்டு, ஏனைய பகுதிகள் வெளிவருங்கால் அதன் விலை மாற்றம் பெற்றதையும் குறிப்பிட்டிருக்கிறார். இவ்விரு பகுதிகளும் இன்றுவரை எங்கும் கிடைக்கவில்லை என்பது நெஞ்சு நோகும் செயலாகவே இருக்கிறது. வெளிவந்த அறத்துப்பால் மணக்குடவர் உரையில் வ.உ.சி. எவ்வாறு மிளிர்கிறார் என்பதை இனிக் காண்போம்.

            மூல நூலாசிரியரின் பாடங்களுக்கு உரையாசிரியர்கள் மூலபாட ஆய்வும், பாடவேறுபாடுகளும் சுட்டும் நிலையே சுவடிப்பதிப்பில் காலந்தோறும் பின்பற்றப்பெறுவதை பெரும்பான்மையான சுவடிப் பதிப்புகளில் காணக்கூடிய ஒன்று.  ஆனால், உரையாசிரியரின் உரைகளில் போதிய விளக்கமும் தெளிவும் குழப்பமும் உண்டாகும் காலத்து அவ்வுரையைப் பதிப்பிப்பவர்கள் அவ்வுரையைத் தற்காலத்து மக்களுக்குப் புரியும் வண்ணம் கால மாற்றத்திற்கு ஏற்ப எளிமைப்படுத்திப் பதிப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.  இந்நிலையில்தான் ஒரே பதிப்பாசிரியர் அவர் பதிப்பித்ததின்  இரண்டாம் பதிப்பைப் பதிப்பிப்பதையும், ஒரு பதிப்பாசிரியர் ஒரு நூலைப் பதிப்பித்த பின்னர் வேறொரு பதிப்பாசிரியர் அதே நூலை மீண்டும் பதிப்பிப்பது என்பது அப்பதிப்பிலிருந்து வேறுபட்ட கருத்துக்களை விளக்கிப் பதிப்பிப்பதையும் பதிப்பு நெறியாகக் கொண்டிருக்கின்றனர்.  அவ்வகையில், மணக்குடவரின் உரையில் புரியாத சொற்களை வ.உ.சி. சுருக்கமாகவும், விரித்தும் பல இடங்களில் காட்டியிருக்கிறார்.

Ø சேர்ந்தவரன்றே என்பது சேர்ந்தவரே (குறள்.3) என்று பாடவேறுபாடு சுட்டிக் காட்டி இருப்பதைக் காணமுடிகிறது.

Ø இ.ள்.- அழுக்காற்று அகன்றாரும் இல்லை – அழுக்காற்றினான் செல்வமுடைய ரானாரும் இல்லை;  அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் – அழுக்காறில்லாதாராய்ச் செல்வத்தினின்று நீங்கினாரும் இல்லை.  உரையாசிரியர் (மணக்குடவர்) இக்குறட்கு வேறாகப் பொருள் கூறாது, “முன்பு சொன்னதே பொருள்” என்று கூறிச் சென்றார் (குறள்.295) என்று பொருள் கூறாதவிடத்து தாமே உரையாசிரியராக இக்குறட்பாக்கு உரை வரைந்திருக்கிறார்.

Ø “கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம், உடுப்பதூஉம், உண்பதூஉம் இன்றிக் கெடும்” என்னும் குறட்பாக்கு அழுக்கறுப்பான் என்பதனை அழுக்கு எனவும் அறுப்பான் எனவும் பிரித்து, அழுக்கு என்பதற்கு அழுக்காற்றினால் எனவும், அறுப்பான் என்பதற்கு விலக்குவான் எனவும் இவ்வுரையாசிரியர் (மணக்குடவர்) உரைத்திருப்பது கவனித்தற்பாலது.  அழுக்கறுத்தல் என்பதனை ஒரு சொல் நீர்மைத்தாகக் கொண்டு உரைத்துள்ளார் பரிமேலழகர் (குறள்.297) என்று மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையையும் ஒப்புநோக்கிய தன்மை வெளிப்படுகிறது.

Ø வாக்கினால் நிகழும் பாவம் நான்கினுள் பொய்யை “வாய்மை” யாலும், கடுஞ்சொல்லை “இனியவை கூற”லாலும், குறளையைப் “புறங்கூறாமை”யாலும் விலக்கிப் பயனில் சொல்லை இவ்வதிகாரத்தால் (பயனில சொல்லாமை) விலக்குகின்றார் (அறம். 33ம் அதிகாரம்) என்றும், வாய்மையாதுவது பொய்சொல்லாமை.  அஃதாவது, தீமையில்லாத சொற்களைச் சொல்லுதல்.  இது விருந்தோம்பலின் கண்ணே இன்றியமையாது வேண்டப்படுவதொன்றாதலின், அதன்பின் கூறப்பட்டது (91) என்றும் உரைக்கப்பெற்றவற்றைக் காணும்போது அதிகார முறைவைப்பை மணக்குடவர் பார்வையில் வ.உ.சி. பார்த்திருப்பது வெள்ளிடை.

Ø பொறிகள் ஐந்தாவன – மெய், வாய், கண், மூக்கு, செவி.  அவற்றிற்கு நுகர்ச்சியான (அஃதாவது அநுபவமான) ஐந்தாவன ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை.  அந்நுகர்ச்சியான ஐந்தையும் சொல்லுதலாவது, அவை தன்மனத்தைக் கவராதபடி அவற்றை அடக்கியாளுதல் (குறள்.341) என்றும், தெள்ளியா – அறிவுடையார்.  தெள்ளியராதலும் என்றதனால், திருவினராதலும் என்று கொல்லப்பட்டது (குறள்.378) என்றும் சுட்டப்பெற்றமையைக் காணும்போது வ.உ.சி. மணக்குடவரின் உரையை விளக்கும் பான்மை வெளிப்படும்.

Ø விதானம் பண்ணினவன் – ஒவ்வோர் உயிரின் வினையின் பயனை அஃதஃது அநுபவிக்கும்படி விதித்தவன்.  வினைப்பயன் சடமாதலால் தன்னைச் செய்த உயிரை அறிந்து பொருந்தாது. அதனை அறிந்து பொருந்துவோன் கடவுளென்பது ஆசிரியர்கொள்கை.  “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து, கெடுக உலகியற்றி யான்” என்று பிறாண்டும் கூறியுள்ளார் (குறள்.377) என்பதால் மணக்குடவரின் கொள்கையை விளக்கித் தன்கருத்தினை சுட்டும் பாங்கு வெளிப்படும்.

இலக்கணக் குறிப்பு

மணக்குடவர் உரையில் வரக்கூடிய சொற்களுக்கு வ.உ.சி. இலக்கணக் குறிப்பு சுட்டிச் செல்லும் பான்மை அவரின் நுண்மான் நுழைபுலத்தை வெளிப்படுத்துகிறது.  வணங்காத (10), பிறங்காத (62), இல்லாத (72), புறத்ததாக (82), ஓம்பாத (89), ஒருதலையாக (112, 355), எய்தாத (137), செல்லாத (154), ஆங்கு (196), செய்யாது (210), பொருளாக (261), அறிய (285), உடைய (338), ஊட்டாது (379) போன்ற மூலத்திலும் உரையிலும் வரக்கூடிய சொற்களை அடையாளம் கண்டு அவை ஈறுகெட்டு நின்றிருப்பதை எடுத்துரைக்கிறார்.

மேலும், மணக்குடவர் உரையில் வரக்கூடிய இலக்கணக் குறிப்புக்களை எல்லாம் சுட்டிக் காட்டிய தன்மையைப் பார்க்கும்போது வ.உ.சி.யின் இலக்கணப் புலமை தெள்ளிதின் விளங்குகிறது.  அவர் பொருள் (63) என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை; அனிச்சம் (90) என்பது ஆகுபெயர்; பொய்யாமை (97) என்பது அதனால் வரும் புகழுக்காயினமையால் ஆகுபெயர்; காலத்தினால் (105), பிறப்பு (133) என்பது ஆகுபெயர், அதன் பயனுக்காயினமையால்; தவ்வையை (298) என்பன வேற்றுமை மயக்கம்; எழு (107) என்பது வினைத்தொகை இங்கு எதிர்காலத்தைக் குறித்து நின்றது; ஓரால் (126) என்பது ஆல் விகுதிபெற்ற தொழிற்பெயர்; படுபாக்கு (134) என்பது தொழிற்பெயர்; ஒன்றோ (149), ஓடு (325) என்பன எண்ணுப்பெயர்; எனல் (192, 327-முதல்) என்பன எதிர்மறை வியங்கோள்; எனல் (327-இரண்டாவது) என்பது உடன்பாட்டு வியங்கோள்; கூறுவனாயின் (324), திரண்டால் (333), திரளுமாறு (333) என்பன எச்சம்; அத்து (333) என்பது சாரியை, சேர்ந்தாரைக் கொல்லி (156) என்பது காரணக்குறி; உளர் சிலராகிய காரணம் (279) என்பது சொல்லெச்சமாகக் கொள்ளப்பட்டது; நெருநல் உளனொருவன் இன்று இல்லை (336) என்பது உலகத்தார் கூற்றாகக் கூறப்பட்டுள்ளது; பகுதியால் என்பதில் ஆல் (113) என்பது உடனிகழ்ச்சியாய் வந்தது; ஒழுகப்படும் (123), ஓம்பப்படும் (140) என்பதில் வரும் ‘படும்’ என்பது வேண்டும் என்னும் பொருளில் வந்தது போன்ற இலக்கணக் குறிப்புகளைச் சுட்டும் நெறிகளைப் பார்க்கும்போது மணக்குடவர் உரையில் வ.உசி.யின் ஈடுபாடு தெள்ளிதின் வெளிப்படுகிறது.

கெட்டு வந்த சொற்கள்

மணக்குடவர் உரையிலும் திருக்குளிலும் வரும் சொற்களில் கெட்டு வந்த சொற்களை அடையாளம் கண்டு தன்னுடைய பதிப்புப் பாங்கை வ.உ.சி. வெளிப்படுத்துகின்றார். காட்டாக, புரிந்த (55) என்பது ‘ஈற்று அகரம்’ கெட்டும், இல்லவர்க்கு (73) என்பது ‘ல ர ஒற்று’ கெட்டும், நாடாத (78) என்பது ‘ர று’ கெட்டும், கொன்றால் (109), கொண்டற்று (22), தளிர்த்தற்று (72), விளிந்தால் (33) என்பனவற்றில்  ‘ஆல்’ கெட்டும், வாரியினுடைய (16) என்பது ‘யகரம்’ கெட்டும், எச்சத்திற்கும் (120) என்பது ‘உம்மை’ கெட்டும், ஒழுக்காறாக (291) என்பது ‘று’ கெட்டும், பிழையாதது (157) என்பது குறைந்து நின்றது, எனைத்தானும் என்பதில் ஆயினும் (165) என்பது ‘ஆனும் எனக் குறைந்தும்’ நின்றது, கவர்ந்த (260) என்பது ‘ஈற்றகரம் கெட்டு’ நின்றது, ஆகாதது (267) என்பது ‘ஆகாது எனக் குறைந்து’ நின்றது, யாதொன்றானும் (93) என்பது தொகுத்தலாய் யாதொன்றும் என நின்றது, தீதே (322) என்பது ‘தேற்றேகாரம்’ கெட்டும், அஃது (334) என்பது ‘ஆய்தம்’ கெட்டும், நலத்துக்கு (149) என்பது ‘நலக்கு’ எனக் குறைந்தும், கண்டாரே (358), உடம்புகளே (74) என்பனவற்றில் ‘ஏகாரம்’ கெட்டும் வந்தமையை எல்லாம் இடம் சுட்டிக் காட்டுகின்றார்.

அசைச் சொற்கள்

மணக்குடவர் உரையில் அசைச் சொல்லாக இடம்பெற்றவற்றை அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறார்.  குறிப்பாக, ஏகாரம் (64, 71, 127, 139, 192, 304, 333, 338), கொல் (70, 85, 167, 212, 259, 318, 340, 343), தான் (17, 206), ஆம் (38, 376), ஆல் (185-இரண்டு, 218), மற்று (15, 30, 65, 173, 205, 254, 271, 365), ஓ (31), ஓரும் (361-இரண்டு) ஆகியன அசைச்சொல் என்று வ.உ.சி. இடம்சுட்டிக் காட்டுகிறார்.

ஒருமை பன்மை

“ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி

பன்மைக் காகு மிடனுமா ருண்டே”

என்னும் தொல்காப்பியர் சூத்திரப்படி எனைத்தொன்றும் என்னும் ஒருமைப் பெயர் எவையும் என்னும் பன்மைப் பெயர்க்காயிற்று (92) என்றும், தேரான் என்னும் ஒருமைப் பெயர் தேரார் என்னும் பன்மைப் பெயர்க்காயிற்று (143) என்றும், ஈதல் என்னும் ஒருமைப் பெயர் உள என்னும் பன்மை வினையோடு பொருந்தி நின்றது (223) என்றும் ஒருமையாக சுட்டியவை பன்மைப் பொருளாகி நின்றதை வ.உ.சி. சரியான முறையில் உரையில் விளக்கம் தந்திருக்கிறார். 

மேலும், உணல் என்னும் ஒருமைப் பெயர் இன்னாத என்னும் பன்மைச் சொல்லோடு பொருந்தி நின்றது (227) என்றும், அறிவு என்பது அறிவுடையனாயிருக்குத் தன்மையைக் குறித்து நின்றது (302) என்றும், நட்பு என்பது நட்பின் விடுகையை உணர்த்தி நின்றது (338) என்றும், நின்றானும் என்பது உம்மை தொக்கு நின்றது.  உம்மை உயர்வு சிறப்பும்மை, அஃத, அருளை விரும்பி அறநெறியில் நின்றவன் வேறொன்றாலும் கெடான் என்பதனைச் சுட்டி நின்றது (306) என்றும், ஈந்து என்பது வலித்து நின்றது (226) என்றும், கொல் என்பது ஈண்டு ஐயப்பொருளைத் தந்து நின்றது (226) என்றும், பெண்மை என்பது அவளது நலத்தை உணர்த்தி நின்றது (141) என்றும், அவ்வாறு என்பது அவ்வைந்து புலன்களாக. அவற்றின் காரணம் – அவ்வைந்து புலன்களையும் உணரும் அறிவு (24) என்றும் சொல்லப்பெற்றிருக்கிற தொடர்களைப் பார்க்கும்போது மணக்குடவர் உரைத்ததற்கு எளிய முறையில் விளக்கம் சொல்லப்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

உரை விளக்கம்

மணக்குடவர் உரையில் விளங்காத, இன்னும் விளக்கம் பெறவேண்டிய இடங்களை அடையாளம் கண்டு காலத்தின் தேவைக்கேற்ப எளிய முறையில் மணக்குடவர் உரைத்ததற்கு உரைத்த உரையாக சில இடங்களில் வ.உ.சி.சி உரை அமைந்திருக்கிறது. வலைபோலத் துன்பத்தைத் தருதலின் பிறப்பினை வலையென்று கூறினார் (348), ஐம்புலம் என்பது சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.  அவற்றை வெல்லலாவது, அவற்றைப் பற்றி எழும் அவாவினை ஒழித்தல் (303), அகத்துள் கொள்ளுதலே உணர்தலாதலால், “பொருளென்று உணரும்” என்பதற்குப் “பொருளாகக் கொள்கின்ற” என்று உரைத்தனர் (352), இது , தவத்தினர் வடிவு கண்டு நேர்படாரென்றது தவத்தினர் வடிவை ஒருவன் கொண்டுள்ளதாலேயே (அவன் உண்மையான தவத்தினனென்று கருதி) அவனோடு இணங்கார் அறிவுடையாரென்றது இது (282), வான் அளவும் உயர்ந்த பெருமை உண்டாயினும் என்பது தவத்தினால் மிக வுயர்ந்த பெருமையைப் பெற்றிருப்பினும் (285), மனவறி வின்றி ஐம்பொறி யறிவையுடைய மனித உருவினரை மாக்களென்பர் தொல்காப்பியர் (179), செல்வம் முதலியவற்றின் களிப்பால் பெரும்பாலும் தீவினை நிகழ்வதால் “தீவினை யென்னும் செருக்கு” என்றார் (208), கேட்டவர் அவை இனிதென்று சொல்லார் என்றவாறு (66) என்பவற்றினால் என்று வரும் இடங்களையெல்லாம் பார்க்கும்போது வ.உ.சி.யின் உரைத்திறனை அறியமுடிகிறது. 

முடிவுரை

            பல நூல்களைப் பதிப்பித்து பதிப்பாசிரியர் ஆனோரும், சில நூல்களைப் பதிப்பித்து பதிப்பாசிரியர் ஆனோரும் தமிழுலகில் பெயர் பெற்றிருக்கின்றனர்.  இவர்களில் உரையாசிரியராய் இளம்பூரணரை, பரிமேலழகரைக் கருதுவதுபோல் பதிப்பாசிரியர் என்றாலே உ.வே. சாமிநாதையர், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை போன்றோரை எண்ணமிடும் இடத்தில் இரண்டு நூல்களையே பதிப்பித்த வ.உ.சி.யும் அவரின் பதிப்புத் திறனால் முன்னிற்கின்றார் என்றால் அது மிகையில்லை. 

அடிக்குறிப்பு

1. வ.உ.சி., திருக்குறள் மணக்குடவர் உரை, பதிப்புரை, பக்.2-3.

2. மேலது.

3. மேலது,ப.3.

4. மேலது, பக்.4-5.

5. மேலது, பக்.4-5.

குறிப்பு :- அடைப்புக் குறிக்குள் இடம்பெற்றிருக்கும் எண்கள் குறள் எண்ணைக் குறிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக