புதன், 22 நவம்பர், 2023

முக்கூடற்பள்ளு மூலமும் உரையும் - அணிந்துரை

 

முக்கூடற்பள்ளு மூலமும் உரையும்

அணிந்துரை

முனைவர் மோ.கோ. கோவைமணி

பேராசிரியர் (ப.நி)

ஓலைச்சுவடித்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் – 613 010.

 

      கல்வியறிவு மிக்கோர் பயன்படுத்துவதாகவே பழங்காலத்தில் தோன்றிய இலக்கண இலக்கியங்கள் இருந்தன.  பெருங்காப்பியங்கள் செய்த பெருமக்கள்  எளியோரும் உணரும் வண்ணம் தன்னுடைய காப்பியங்களில் சிலசில இடங்களில் எளிமையான பாடல்களைப் புகுத்தியுள்ளனர்.  குறிப்பாக, சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை போன்ற பகுதிகளில் உள்ள வரிப்பாடல்கள், வாழ்த்துக் காதையிலுள்ள வரிப் பாடல்களை வேட்டுவர்களும் ஆயரும் குறவரும் பாடி ஆடினார்கள் என்பதை உணரலாம்.  அதாவது, மக்கள் பிறந்த நிலத்தின் தன்மைக்கு ஏற்ப அவர்களின் தொழிலின் தன்மை தோன்ற பாடி நடித்தலே வரிப் பாடலாகும் என்பர்.  அதன்பின் அருட்பாசுரங்களான தோத்திரப் பாடல்களில் இதுபோன்றதொரு நடையைக் காணலாம்.  பிற்காலத்தில் எளியவர்களையும் இலக்கிய வேந்தகளாக்கிய பெருமை பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் ஆகியவற்றுக்கு உண்டு. இவ்விலக்கியங்கள் மக்கள் ஆடிப் பாடுவதற்கு ஏற்ற வகையில் அமைந்தவையாகும்.

 

      பழந்தமிழ் இலக்கியங்களில் தலைவன், தலைவி, தோழன், தோழி, செவிலித்தாய், கூத்தர், பாணன், பாடினி, விறலி போன்றவாறு பொதுப்பெயர்களாகவே அமைந்திருக்கும்.  பக்தி இலக்கியக் காலத்தில் இறைவன்-இறைவியின் பெயராலே நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய தோத்திரப் பாடல்களில் வரிப்பாடல் அமைப்புடைய பண்களைப் பார்க்க முடிகிறது. இப்பாடல்கள் தனித்தனிப் பாடல்களாகவே பெரும்பான்மை அமைந்திருக்க சில கதை தழுவிய இலக்கியங்களில் கூட இவ்வாறான எளிய நடையில் அமைந்ததைக் காணமுடிகிறது.  குறிப்பாக தஞ்சைப் பெரிய கோயிலில் இசையுடன் நடத்தப்பெற்ற இராசராச நாடகம் பற்றி பழங்கால ஆவணங்களால் அறிகிறோம்.

 

      சிற்றிலக்கியக் கால தொடக்கத்தில் அரசன், அரசியர், இறைவன், இறைவி போன்றோர்களின் பெயர்களில் பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடக வகைகள் தோன்றின.  இவ்வகைப்பட்ட இலக்கியங்களில் கதாபாத்திரங்களாக எளியவர்களின் பெயர்கள் அமைந்ததைக் காணலாம்.  குறவஞ்சி இலக்கியத்தில் குறவன், குறத்தி, குளுவன் போன்றோர் முக்கிய கதைமாந்தர்கள், நொண்டி நாடகத்தில் நொண்டி ஒருவேனே கதைமாந்தன்.  அதுபோல், பள்ளு இலக்கியதில் பள்ளனாகிய குடும்பன், மூத்தபள்ளியான முக்கூடற்பள்ளி, இளையபள்ளியான மருதூப்பள்ளி, பண்ணைக்காரன் ஆகியோரே முக்கியக் கதைமாந்தர்களாவர்.   

     

      பள்ளன்-பள்ளியர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை கதைக் கருவாகக் கொண்டு பள்ளு இலக்கியம் அமைந்திருக்கிறது.  இன்னும் எளிமையாகச் சொல்லப் போனால் இவ்விலக்கியம் சேரி மொழியில் அமைவது இதன் சிறப்பாகும். தோல்காப்பியர் சுட்டும் எட்டு வனப்புகளில் புலன் பற்றி இளம்பூரணரும் பேராசிரியரும் சொல்லுகையில் பாரம மக்கள் வழங்கும் சொற்களால் ஆக்கப்பட்டு அவர்கள் ஆடியும் பாடியும் வரும் நாடகச் செய்யுளே அதற்கான இலக்கியம் என்றுரைப்பதைப் பார்க்கும் போதே தொல்காப்பியர் காலத்திற்கும் முன்னமே இவ்வகைப்பட்ட இலக்கியம் நிலவுலகில் தவழ்ந்திருக்கிறது என்பது புலப்படுகிறது. சைவ-வைணவ போட்டி நிலவிய காலத்தில் அவ்விரு மத்தினரையும் இணைக்கும் ஒரு கதையாக பள்ளு அமைந்திருக்கிறது.  பள்ளர் வாழ்க்கையில் அமைந்த அகப்பொருட் தழுவிய கதையினை எடுத்துரைப்பதாகப் பள்ளு இலக்கியம் அமைந்திருக்கிறது.

 

      திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் சித்திரா நதி, கோதண்டராம நதி, பொருநை நதி இம்மூன்றும் கூடும் இடமே முக்கூடல் ஆகும்.  இம்முக்கூடல் தலத்தில் திருமால் கோயில் கொண்டிருக்கிறார்.  விஷ்ணு குலத்தில் பிறந்தவர்களே இக்கதையின் நாயகன் குடும்பன் – நாயகிகளான முக்கூடல் பள்ளியான மூத்தபள்ளியும், இளையபள்ளியான மருதூர்ப்பள்ளியும் முறையே வைணவ-சிவ குலத்தில் பிறந்தவர்கள்.  இவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மையமிட்டதாக முக்கூடற்பள்ளு என்னும் இவ்விலக்கியம் அமைந்திருக்கிறது. அதாவது, பள்ளர் பள்ளியரது ஏழை வாழ்க்கையில் நிகழக் கூடிய நிகழ்ச்சிகளை எளிய நடையில் ஆடிப் பாடும் முறையில் அகப்பொருட் கருத்துக்கள் அமையப் பள்ளு வகையில் பாடப்பெற்றதே யாகும்.

 

      ஒரு பண்ணையில் பள்ளன் ஒருவன் பரம்பரையாகப் பயிர்த்தொழில் செய்து வருகிறான்.  அவனுக்கு மூத்தபள்ளி, இளையபள்ளி என்ற இரண்டு மனைவியர்.  இளையவளின் மோகத்தில் மூழ்கிய பள்ளன் மூத்தபள்ளியைக் கண்டுக்கொள்வதே இல்லை.  மூத்தபள்ளியானவள் பள்ளன் வேலை செய்யும் பண்ணையின் முதலாளியான பண்ணைக் காரனிடம் சென்று, பள்ளன் தன்னுடைய வேலையை மறந்து இளையபள்ளியின் மோகத்தில் அவளுடைய வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதைக் கூறுகிறாள்.  பண்ணைக்காரன் இளையபள்ளியைக் கோபிக்க, பள்ளன் இளையபள்ளியின் வீட்டிலிருந்து வெளிப்படுகிறான். பண்ணையில் நடந்தவற்றைச் சொல்லுமாறு பண்ணைக்காரன் கேட்க, பள்ளன் விதை வர்க்கம், மாட்டு வகை, மேழி முதலான கருவிகளின் வகை எல்லாம் கூறி மூத்தபள்ளி கூறிய பழிச் சொல்லில் இருந்து மீள்கிறான். பண்ணைக்காரனின் சொற்படியே சென்று வயலில் கிடை வைப்பதற்காக ஆட்டிடையனை அழைத்து வருகிறான்.  இடையனை வயலில் ஏவிவிட்டு மறுபடியும் இளையபள்ளியின் வீடே கதியாகப் போய்விடுகிறான்.  மூத்தபள்ளி மீண்டும் பண்ணைக்காரனிடம் முறையீடு செய்கிறாள்.  இது அறிந்த பள்ளன் பயிர்த்தொழில் செய்து வருவதுபோல் பாசாங்கு செய்கின்றான். பள்ளனது கள்ளத் தனத்தைக் கண்ட பண்ணைக்காரன் அவனைத் தொழுவில் கட்டி மாட்டுகின்றான். பள்ளன் படும் துன்பத்தைக் கண்ட மூத்தபள்ளி, மனம் பொறாமல் பள்ளனை பண்ணைக்காரனிடமிருந்து மீட்கிறாள்.  மூத்தபள்ளியின் வேண்டுகோளுக்கு இணங்கி விடுவிக்கப்பட்ட பள்ளன் விதைக்கணக்கு முதலியன சொல்லி, பண்ணைக்காரன் சொன்ன நல்ல முகூர்தத்தில் பள்ளர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு பண்ணைகாரன் நிலத்தை உழுகிறான்.  பள்னை மாடு ஒன்று முட்ட மயங்கி விழுகிறான்.  மூத்தபள்ளியும் இளையபள்ளியும் வருந்து நிற்கின்றனர்.  பின்னர் மயக்கத்தில் இருந்து தேறி எழுந்து உழவு வேலையைக் கவனிக்கின்றான்.  நாற்றுப் பறித்து நடவு நட்டு முறையாக பாசனம் செய்ய பயிர் நன்றாக விளைகிறது.  அறுவடை செய்து செலவு வகைகளுக்குப் பள்ளன் நெல் அளந்து போடுகிறான்.  தன்னைப் புறக்கணித்துத் தனக்குரிய பங்கினை பள்ளன் சரியாகத் தராததை பள்ளியர் முன்பு மூத்தபள்ளி முறையிடுகிறாள்.  இதனைக் கேட்டுக்கொண்டிருந்த இளையபள்ளி அவளுடன் வாதுக்குச் சென்று ஏசல் மூளுகிறது.  இறுதியில் இருவரும் தானே சமாதானமாகி பாட்டுடைத் தலைவனை வாழ்த்திப் பள்ளனோடு ஒத்து இணைந்து வாழ்வதாக நலமுடன் இக்கதை முடிவுறுகிறது.

 

      பதிப்பாசிரியரால் குறிப்பிடப்பெற்ற சில பாடவேறுபாடுகளைப் பார்க்கும்போது கதையின் சில போக்கினை மாற்றிக் காட்டுவதை அறியமுடிகிறது.

 

 “தஞ்சப் பள்ளன்” என்பது “தஞ்சைப் பள்ளன்” என்றும் பாடமாக இருக்கிறது என்று மு. அருணாசலம் பதிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.  இச்சுவடியில் “தஞ்சைப் பள்ளன்” என்றே குறிப்பிடப் பெற்றிருக்கிறது. இப்பாடமே சரியானதாக விளங்குகிறது.  இப்பாடலில் செஞ்சியையும், கூடல் என்கிற மதுரையையும், தஞ்சையையும் இப்பாடலின் முதலில் எடுத்துரைக்க இறுதியில் தஞ்சப் பள்ளன் என்றிருப்பது ஏற்றுக் கொள்வதாக இல்லை.  செஞ்சி, மதுரை, தஞ்சை ஆகிய மூன்றையும் வடமலையப்பப் பிள்ளை தனது ஆதிக்கத்தில் கொண்டிருந்த பரப்பைக் காட்டுவதால் சுவடித் தொடராகிய தஞ்சை என்பதே சரியானது எனலாம்.

 

      மழைக்குறியை எடுத்துரைக்கும் பகுதியில்,

மேக மெல்லாம் ஒன்றாய்க் கூடித் தான்கறுக்குதே – மெத்த

       மின்னல் மின்ன வாசவன் கை      வில்லெடுக்குதே

நாகரிகப் பொதியமலைக் காற்றடிக்குதே – கொண்டல்

       நாலு திக்கும் கோடையிடி தானிடிக்குதே

ஏகபோக மாமரத்தில் குயில்கள் கூவுதே – மழைக்

       கேற்றமாம் சொறித்தவளை கூப்பிடுகுதே

ஆகையினால் எங்கள்திரு முக்கூடல் நகரில்

       அந்திநேர மெல்லாம்மழை வந்து பெய்யுதே”

என்ற பாடலை எடுத்துக்காட்டிவிட்டு இப்பாடல் முக்கூடற்பள்ளில் இடைச்செருகலாக இருக்கலாம் என்று எழுதுகின்றார்.  இப்பாடல் பதிப்பிற்கு எடுத்துக் கொண்ட சுவடியில் இல்லை என்பதால் இப்பாடல் அவரின் கூற்றுப்படி இடைச்செருகல் என்பது திண்ணம்.

 

மூத்தபள்ளி பள்ளனைப் பற்றிப் பண்ணைக்காரனிடம் முறையிடும்போது பள்ளன் “லிடறியே விழுந்தான்” என்று இருக்கிறது.  பாடவேறுபாடாக “உதறியே எழுந்தான்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்விரு சொல்லுக்கும் இருவேறு பொருள்கள் உண்டு.  இடறியே விழுந்தான் என்பது நின்றுக் கொண்டிருந்தவன் பயத்தால் உதறலெடுத்துக் கீழே விழுந்தான் என்று பொருள்படும்.  உதறியே எழுந்தான் என்பது படுத்துக் கொண்டிருந்தவன் பயத்தால் உதறலெத்து எழுந்தான் என்று பொருள்படும்.  இளையபள்ளியின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பள்ளனை மூத்தபள்ளி காலையிலே அவளது வீட்டில் பார்த்ததும் பள்ளன் உதறலெடுத்து எழுந்தான் என்பதே பொருத்தமான பாடமாகக் கொள்ளலாம்.  இங்குக் கொண்ட “லிடறியே விழுந்தான்” என்ற பாடம் இவ்விடத்துப் பொருந்துவதாகத் தெரியவில்லை. பாடவேறுபாடாகச் சுட்டியிருக்கும் பாடமே சரியானதாகும். இதுபோல் பின்வருமாறு பாடமும் பாடவேறுபாடுகளும் அமைந்திருக்கின்றன.

 

சீவலர் மங்கைத் தென்கரை நாடே.  (18)

வேறு:

சீவல மங்கைத் தென்கரை நாடே

சீவலார் மங்கை தென்கரை நாடே.

 

வருவிவரு திருமலைக் கொழுந்திமுகில்   (28)

வேறு:

       காவைவரு வடமலையப்ப முகில்

       கீர்த்திபெறுந் திருமலைக் கொழுந்து முகில்

கச்சிவரு சொக்பகலிங் கேந்திர முகில்

கச்சிவருந் திருமலை நராதிபதி

 

கூரை வயிறும் (53)

வேறு:

       கூறு வயிறும்

       கூறை வயிறும்

 

       பின்னை யென்பாராம் (54)

வேறு:

       பெண்ணே சாய்த்து நிற்பாராம்

 

காதலித்துத் தம்பியுடன்

சீதை பொருட்டா - லன்று

கடலேறிப் போனா னுங்கள்

கண்ண னல்லோடி?         (133)

வேறு:

       சீதை தன்னை வாளரக்கன்

கொண்டேகவே – கடலில்,

             சென்றிலங்கை கொண்டானுங்கள்

             விண்டு வல்லோடி                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 

இக்கதைக்குள் பல புராணக் கதை நிகழ்வுகள் எடுத்துக்காட்டாகக் காட்டப்பெற்றிருக்கின்றன.  குறிப்பாக, குரங்குகள் இலங்கையை அழித்தது, கல்லைப் பெண்ணாக்கியது, குகனின் துணைவனானது, கைகேசியின் சொல்படி வனம் புகுந்தது, சீதை நிமித்தமாக கடல் கடந்தது, மரவுரி யுடுத்தது, வாலியைக் கொன்றது போன்ற இராமபிரான் தொடர்பான கதைகளையும்,  இராவணன் பத்துத் தலையை வெட்டிய கதை,  கஞ்சனைக் கொன்றது, காளிங்க நர்த்தனம் ஆடியது, கோவர்த்தன கிரியை எடுத்தது, சிசுபாலன் வையக்கேட்டு நின்றது, புள்வாய் கிழித்தது, மண்ணை உண்டது, வேய்ங்குழல் ஊதியது போன்ற கண்ணபிரான் தொடர்பான கதைகளையும், இமவான் மகளை மணந்தது, கனலைத் தரித்தது, காமனைக் காய்ந்தது, சுந்தரன் வையக்கேட்டு நின்றது, நஞ்சை உண்டது, நரியைப் பரியாக்கியது, மங்கைபங்கனாக நின்றது போன்ற சிவபெருமான் தொடர்பான கதைகளையும், கடல் கடைந்து தேவர்களுக்கு அமுதம் ஊட்டியது,  சுக்கிரத்தேவர் தாயைக் கொன்றது, திரிவிக்கிரம அவதாரம் எடுத்தது, நெய்யில் கைவிட்டது, தசாவதாரம் கொண்டது போன்ற திருமால் தொடர்பான கதைகளையும் குறிப்பிடலாம்.

 

காவை அம்பலவாணன், காவை திருமலைக்கொழுந்து, இராசவாணன், உடையாரையர், காரைக்காட்டார், கோனேரிக்கோன், சாத்தூர் பெரியநம்பி ஐயங்கார், ஞானிச்செட்டி, தஞ்சைப்பள்ளன், தாண்டவராயன், வடமலையப்பர், வடமலேந்திரன், மாணிக்கவாசகன், தாதக்கோன், பூதக்கோன், மருதப்பர், வேதக்கோன் போன்றோரின் பெயர்களும், சில நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் பெயர்களும் ஆங்காங்கே விரவி வருவதைக் காணமுடிகிறது.

 

Ø  தன்வினை தன்னைச் சுடும்

Ø  சாலப் பசித்தால் ஆருந் தின்னாததுண்டோ

Ø  சகதியிலே கல்லெறிந்த கதை

Ø  கொழியலரிசி இட்டாலும் குப்பை கிண்டும் கோழி

Ø  பஞ்சில் பற்றும் நெருப்பதுபோல்

Ø  போக்கு நீக்கில்லை மூக்கிலே கோபம்

Ø  வடு வந்தால் மறைக்கப் போமோ

Ø  வரத்தினை மீறும் செலவுக்குத் தரித்திரம் ஏறும்

Ø  விருந்து விட்டபின் வெட்டினாருண்டோ

Ø  வைதவரை வாழ்த்தினவர் வையகத்துண்டோ

 

போன்ற சிறந்த பழமொழிகள் பொருத்தமான இடத்தில் நூலாசிரியரால் பயன்படுத்தப்பெற்று இருப்பது நூலில் சுவையை ஏற்படுத்துகிறது. மேலும், முக்கூடலில் வாழ்ந்த 39 பள்ளர் பெயர்களையும், 56 பள்ளியர்களின் பெயர்களையும், 37 நெல் வகைகளையும், 29 மாட்டு வகைகளையும், 16 மேழி (உழவுப் பொருள்கள்) வகைகளையும், 38 மீன் வகைகளையும் இவ்வாசிரியர்  பட்டியலிட்டிருப்பதைப் பார்க்கும்போது வளம் மிகுந்த முக்கூடலில் வாழ்ந்திருப்பாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

 

இவ்வாறு பல சிறப்புக்கள் அமையப் பதிப்பிக்கப் பெற்ற இப்பதிப்பு பதிப்பு வரலாற்றில் தடம் பதிக்கும் வண்ணம் அமைத்திருப்பதற்கு இந்நூலின் பதிப்பாசிரியர் பேராசிரியர் ப. ஜெயகிருஷ்ணன் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகின்றேன்.

 

தஞ்சாவூர் – 10                                            - மோ.கோ.கோவைமணி

31.10.2023

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 .

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக