ஞாயிறு, 7 ஜனவரி, 2024

கோவை மனம் (001-200)

 

கோவை மனம் (001-200)


கோவை மனம் 1. நீ வளமாக இருந்தபோது உன் அருகில் இருந்தவர்களை விட, வருத்தப்பட்டு இருக்கும்போது உன் அருகில் இருப்பவர்களே உன்னை நேசிப்பவர்கள்.

கோவை மனம் 2. நீ, கோபப்பட்டுப் பேசும் போது நெடுநாளாக உன் உள்ளத்தில் உள்ளது வெளிப்படும். கோபத்தில் பேசும்போது கவனமாகப் பேசினால் உன்னை நீ காப்பாய்.

கோவை மனம் 3. ஒரு செயலைச் செய்யும்போது, சிந்தித்துச் செயற்பட்டால் வெற்றி நிச்சயம். சிந்தித்துச் செய்யாத எந்தவொரு செயலும் தோல்வியில் முடியும்.

கோவை மனம் 4. நீ, தந்தை ஆன போது இருந்த உணர்வு, உன் தந்தை, தந்தை ஆன போது இருந்திருக்கும். காலம் மாறலாம் உணர்வு மாறாதது.

கோவை மனம் 5. உன்னால் வளர்ந்தவர்கள் உன்னை மதிக்கவில்லை என்றாலும் கவலை கொள்ளாதே. அது குறித்து அவர்களே வருத்தப்படும் காலம் வரும்.

கோவை மனம் 6. எதிரியை எப்பொழுதும் எதிரியாக எண்ணாமல் நண்பனாகவே கருதிப்பார். ஒருநாள் அவனே உனது உற்ற நண்பனாவான்.

கோவை மனம் 7. உன் செயலைப் பாராட்டுபவனை விட குறை சொல்பவனை அருகில் வைத்துக் கொள்.

கோவை மனம் 8. உன் பொருள் ஒன்றை ஒருவன் கவர்ந்தான் என்றால் அவனுக்கு ஏதோவொரு காலத்தில் நீ அவனுக்குக் கடமைபட்டிருக்க வேண்டும். அப்பொருளின் முக்கியத்துவம் இழந்தவனுக்குப் பேரிழப்பு. என்றாலும் எதிர் காலத்தில் இதுபோன்றதொரு தவறு இதைவிட பெரிதாக நிகழாமல் இருக்க இதுவொரு அழைப்பு மணி.

கோவை மனம் 9. கணவனோ மனைவியோ நோய்வாய்ப்படும் பொழுதுதான் அவர்களுக்குள் உள்ள உண்மையான அன்பு வெளிப்படும்.

கோவை மனம் 10. ஒருவன் ஆணித்தரமாக ஒரு செய்தியைப் பேசும் போது கண்ணில் மயக்கமோ வார்த்தையில் தயக்கமோ இல்லாத போது அச்செய்தி உண்மை உடையதாகவே கொள்ள வேண்டும்.

கோவை மனம் 11. தற்செயலான சுகம் நிரந்தரமல்ல என்பதை உணர்ந்து கொண்டாலே நீ உன் வாழ்வில் மேன்மை அடைவாய்.

கோவை மனம் 12. பலனை எதிர்பார்பார்க்காமல் செய்த உதவி சிறிதெனினும் உதவி பெற்றவனுக்கு அவ்வுதவி பேருதவியாகும்.

கோவை மனம் 13. மண்ணும் பெண்ணும் ஒருவனுக்கு அமைவதைப் பொறுத்தே அவனது வீடுபேறு நிலை அமையும்.

கோவை மனம் 14. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை வந்தபோதும் தன்னம்பிக்கையோடு செயற்பட்டால் இழந்தவை தானாக தன்னை வந்தடையும்.

கோவை மனம் 15. தாயும் தந்தையுமாக இருந்து ஒரு தாய் தன் மகனை அவையில் முந்தியிருப்பச் செய்ததற்கு மகன் அந்தத் தாய்க்கு ஆற்றும் உதவி அவ்வவையில் தன் தாயை முன்னிலைப்படுத்துவதே சிறந்த மகனுக்கு அழகு.

கோவை மனம் 16. தான் கற்றதையும் கற்றபின் அது தொடர்பாக உணர்ந்ததையும் சேர்த்து கற்பிப்பவரே நல்ல ஆசிரியர்.

கோவை மனம் 17. உயர் பதவிகள் பல பெற்ற பின்னும் தனக்குக் கற்பித்த ஆசிரியர்களைத் தக்க நேரத்தில் நினைவு கூர்வது நல்ல மாணவர்க்கு அழகு.

கோவை மனம் 18. சேமிப்பும் வருவாயும் இல்லாத போது துன்பங்கள் அணி வகுத்து நிற்கும்.

கோவை மனம் 19. அதிக ஈடுபாட்டோடு செய்த ஒருவேலை தன்னைவிட்டுப் போகும் போதும் கலங்காமல் எதிர்கொண்டால் தானாக அவ்வேலை உன்னை வந்து சேரும்.

கோவை மனம் 20. எதைவேண்டுமானாலும் அழிப்பது எல்லோராலும் எளிதாக முடியும்.  ஆனால் சிலரால் மட்டுமே சிலவற்றை ஆக்க முடியும்.

கோவை மனம் 21. ஆழ் மனதில் இருந்து உண்மையாக எல்லோரிடமும் நீ நடந்துக்கொண்டால் .அவர்களுக்கு நீயே கடவுள்.

கோவை மனம் 22. எவ்வளவுதான் உயர் பதவிகள் பெற்று உலகையே சுற்றி வந்து வாழ்ந்துக் கொண்டு இருந்தாலும் தொட்டில் மண்ணில் உன் தாயையும் உறவுகளையும் சந்திக்கும்போது உண்டாகும் மகிழ்ச்சியே உன்னதமானதும் உண்மையானதும் ஆகும்.

கோவை மனம் 23. கெட்ட எண்ணம் கொண்டவர்கள் சூழ்நிலையால் நிகழ்காலத்தில் புகழோடு வாழ்ந்து வருவர். ஆனால் நல்ல எண்ணம் கொண்டவர்கள் சூழ்நிலையால் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்தாலும் காலம் அவர்களை அடையாளம் காட்டும்போது அழியா புகழை எய்துவர்.

கோவை மனம் 24. பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே உன்னை நீ வளர்த்துக் கொண்டால் நிலையான புகழ் அடைவாய்.

கோவை மனம் 25. பிறரிடம் குறைகளைக் காண்பதை விட்டுவிட்டு, உன்னிடம் உள்ள குறைகளைக் களைந்து பார், மனம் நிச்சயம் அமைதி அடையும். மனம் அமைதி அடைந்தால் நீ வாழ்வில் பல வளம் பெறுவாய்.

கோவை மனம் 26. தொழிலாளி மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே முதலாளியின் முதலீடு பல மடங்கு உயரும்.

கோவை மனம் 27. ஒழுக்கமான மன நிறைவே உடல் நலத்தைப் பேணும்.

கோவை மனம் 28. ஒருவனின் செயல்களே அவனின் அடையாளம்.

கோவை மனம் 29. ஒருவனின் உயர்ந்த சிந்தனையானது அவனது முன்னேற்றத்திற்கு ஊன்றுகோளாய் அமையும்.

கோவை மனம் 30. குருவிற்கு முன்னோடியாகத் திகழ்பவர் பொறுப்புள்ள தந்தை.

கோவை மனம் 31. பயன்பாட்டில் இல்லாத விலையுயர்ந்த பொருளானாலும் பாழ்.

கோவை மனம் 32. உன் எதிரியின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்தாலே! நீ, தவறு செய்வதை நிறுத்திக் கொள்வாய்.

கோவை மனம் 33. எதையும் நம்பும் குழந்தைக்கு நல்லவற்றையே சொல்லிக் கொடுத்தால் நல்லவனாக வளர்ந்து வல்லவனாவான்.

கோவை மனம் 34. உடலும் உள்ளமும் உயிரும் பயன்பாட்டில் இருந்தால்தான் வலிமை பெற்று வளரும்.

கோவை மனம் 35. நீரின்றி அமையாதுலகு. ஆனால், உயிரின்றி அமையும் புகழ்பெற்ற உடல்.

கோவை மனம் 36. மனம் விட்டுச் சிரித்தால் சினம் குறைந்து போகும்.

கோவை மனம் 37. அசட்டுச் சிரிப்பும், ஆபாசச் சிரிப்பும், கள்ளச் சிரிப்பும் கொண்ட மனம் குற்றச் செயலையே செய்யும்.

கோவை மனம் 38. நிகழ்காலத்தில் தவமாய் வாழ்ந்து பார். எதிர்காலத்தில் நீயும் மகாத்மா.

கோவை மனம் 39. உதவி செய்யாத உறவும், உபத்திரம் கொடுக்காத உறவும் பாழ்.

கோவை மனம் 40. உறவாடாத நல்லுறவில் நம்பிக்கை வை. பின்னாளில் வாழ்க்கை  இனிக்கும்.

கோவை மனம் 41. ஒருவனின் கடைசி ஆசையே அவனின் வாழ்நாள் ஏக்கங்கள்.

கோவை மனம் 42. நல்லோரை எதிர்வினை தற்செயலாக தாக்கினாலும் எதிர் காலத்தில் அவர்களின் செயல்களால் எதிர்வினை நல்வினையாக மாறும்.

கோவை மனம் 43. நல்லோர்கள் நல்லதையே எண்ணிச் செய்வர்.

கோவை மனம் 44. பேச்சின் உண்மைத் தன்மையை அவனது பார்வை வெளிப்படுத்தும்.

கோவை மனம் 45. தண்ணீரில் தான் மூழ்கினாலும் தன் மகனைத் தலைக்கும்மேல் தூக்கிச் சுமப்பவள் தாய்.

கோவை மனம் 46. தனக்கு இல்லை என்றாலும் தன் மகனுக்குக் கொடுத்து மகிழ்பவள் தாய்.

கோவை மனம் 47. தனி இழை துணி ஆகாது.

கோவை மனம் 48. காரணம் தெரியாமல் காத்திருப்பதை விட காரணம் தெரிந்து காத்திருப்பது வீண்.

கோவை மனம் 49. பயிற்சி பெறுபவர்களைவிட பயிற்சி அளிப்பவர் கவனமுடன் இருக்க வேண்டும்.

கோவை மனம் 50. நடுவதுதான் விளையும்.

கோவை மனம் 51. பொருளியல் இல்லாத வாழ்வியல் கசக்கும்.

கோவை மனம் 52. உனக்கு அது இல்லை என்று உறுதியாகத் தெரிந்திருந்தும் அதைப்பெறுவதற்கு முயற்சிப்பது வீண்.

கோவை மனம் 53. செல்வத்தைச் சொத்தாகத் தருவதைவிட தொழிலைத் தன் மக்களுக்குச் சொல்லித் தருபவரே சிறந்த தந்தை.

கோவை மனம் 54. ஆழ்ந்த அன்பு ஒருவரிடம் வெளிப்பட்டால் அவரிடம் உண்மையைக் காணலாம்.

கோவை மனம் 55. போக வேண்டிய இடத்திற்கான பாதை கரடு முரடான பாதையாக இருந்தாலும் எச்சரிக்கையாக நடந்தால் போக வேண்டிய இடத்தை உறுதியாக அடையலாம்.

கோவை மனம் 56. வளர்த்தவனை மறப்பதும் மறைப்பதும் வளர்பவனுக்கு அழகல்ல.

கோவை மனம் 57. நிறை குடத்தில் மேலும் திணிப்பதால் விளையப்போவது ஒன்றுமில்லை.

கோவை மனம் 58. காத்திருப்பதிலும் சுகம் இருப்பதை நீ உணர்ந்தால் காத்திருப்பதால் தவறில்லை.

கோவை மனம் 59. நல்லதொரு வடிவத்தைச் செதுக்கும் போது சேதாரம் தவிர்க்க முடியாதது.

கோவை மனம் 60. அழுக்கைக் களைவதை விட அழுக்கு ஆகாமல் பார்த்துக் கொள்பவனே புத்திசாலி.

கோவை மனம் 61. தன்னைவிடச் சிறந்தவன் எவனுமில்லை என்று நினைப்பவனைவிட தனக்கும் மேல் ஒருவன் இருக்கிறான் என்று நினைப்பவனே தவறுகள் செய்ய அச்சப்படுவான்.

கோவை மனம் 62. உன்னுடைய கஷ்ட காலத்தில் உன்னுடைய உறவுகள் உன்னுடன் இருப்பதைவிட உன்னை எதிரியாகப் பார்த்தவன் உன்னுடன் இருந்தால் என்றால் நீ சரியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய் என்று உணர்ந்துக்கொள்.

கோவை மனம் 63. பதவியில் நீ இருக்கும்போது கூடுதலாக பல பதவிகள் உன்னை வந்து சேர்ந்திருந்தால் உன்னுடைய பதவிக் காலத்திற்குப் பிறகு நீ பலருக்குப் பதவிகள் கொடுக்கும் நேரம் வரும்.

 

கோவை மனம் 64. நல்ல அறிவு கிடைக்கும் இடம் எதுவாக இருந்தாலும், எங்கிருந்தாலும், எவ்விடத்திருந்தாலும் நாடிச் சென்று பெறுவதே சிறந்த அறிவாளிக்கு அழகு.

கோவை மனம் 65. நீ தலைவனாக இருக்கும் இடத்தில் உன் பின்னால் உன் தொண்டர்கள் அணி வகுப்பர். அதே சமயம் உன் தலைவன் பின்னால் நீ அணி வகுக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டால் எதிர்காலத்தில் நீயே சிறந்த தலைவனாக உருவெடுப்பாய்.

கோவை மனம் 66. கடல்மீன் குளத்தில் வாழாததுபோல் வசதியாக வாழ்ந்தவனால் கஷ்டத்தில் வாழ முடியாது.

கோவை மனம் 67. கொதிக்கும் நீருக்குத் தெரியும் இறக்கி வைத்ததும் ஆறிவிடுவோம் என்று. ஆனால், ஆறிய பிறகு தண்ணீரின் குணம் தனக்கில்லை என்று ஒத்துக்கொள்ளாததுபோல் இருக்கும் மனிதர்களால்

பயனேதுமில்லை.

கோவை மனம் 68. உன்னால் இதைச் செய்ய முடியும் என்பதைச் செய்வதைவிட, செய்யவே முடியாது என்பதைச் செய்து காட்டுபவனே உயர்ந்தவன்.

கோவை மனம் 69. பிறரைப் பற்றிப் பேசுபவன், தன்னைப் பிறருக்கு அறிமுகப்படுத்துவதோடு தன் இயலாமையை வெளிப்படுத்தி இழிவுபடுத்திக் கொள்கின்றான்.

கோவை மனம் 70. மலையின் உச்சி சிறப்பானதாக இருந்தாலும் மலையின் அடிவாரம் அதைவிட முக்கியமானதாகும்.

கோவை மனம் 71. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்தவனைக் கெட்டவனாக்குவது எளிது. ஆனால், எல்லோரிடமும் கெட்ட பெயர் எடுத்தவனை நல்லவனாக்குவது எளிமையல்ல.

கோவை மனம் 72. தனக்கு நஷ்டம் ஏற்பட்டபோது வருந்தியதைவிட பிறருக்கு நஷ்டம் ஏற்பட்டதை அறிந்து வருந்துபவனே வாழ்க்கையில் விரைவாக முன்னேறுவான்.

கோவை மனம் 73. பருவத்தே நட்ட பயிர் நல்ல விளைச்சலைத் தந்தாலும் பதர் தவிர்க்க முடியாதது என்பதை நினைவில் கொள்.

கோவை மனம் 74. இலாபம், முதலீடு பொருத்தல்ல உழைப்பைப் பொருத்ததே ஆகும்.

கோவை மனம் 75. விதைத்த விதை வீணாகிவிட்டதே என்று கவலை கொள்ளாதே. ஒரு காலத்தில் அதுவும் முளைக்கும். அவ்வாறு முளைக்கும் காலத்தே அது ஏராளமான பலனைத் தரும்.

கோவை மனம் 76. அதிகாரத்தால் அடையும் பயன் அனுதினமும் நிலைக்காது.

கோவை மனம் 77. இடைவெளி இல்லாமல் அழகாக இருந்த கைவிரல்களுக்கு இடையில் இடைவெளி உண்டாக்குமே அழகுக்காக போட்ட மோதிரம்.

கோவை மனம் 78. ஏணி ஏறுவதற்கு மட்டுமல்ல இறங்கவும் பயன்படும்.

கோவை மனம் 79. அணையிலிருந்து நீர் வழியலாம் ஒழுகத்தான் கூடாது.

கோவை மனம் 80. வாழ்க்கையில் தவறுகள் நடக்கலாம். வாழ்க்கையே தவறாகத்தான் இருக்கக் கூடாது.

கோவை மனம் 81. அரசியலில் இருந்துவிட்டு, அதிலிருந்து நீங்கள் விலகி இருந்தாலும் நாயது வால்போல் அரசியல் உங்களை விலக்கி வைக்காது.

கோவை மனம் 82. உனக்குத் தொடர்பில்லாத பேச்சுக்கள் உன் காதில் விழுந்தாலும் கேட்டுக்கொள். எதிர்காலத்தில் ஏதோவொரு நேரத்தில் அது உனக்கும் பயன்படும்.

கோவை மனம் 83. விரும்பாமல் சுமப்பதைவிட விரும்பிச் சுமப்பதே சுகம்.

கோவை மனம் 84. மரணம் தனக்கும் உண்டு என்பதை உணர்ந்து செயல்படு குற்றங்கள் குறையும்.

கோவை மனம் 85. வலிக்கிற இடத்தில் காயம் சிறியதே என்றாலும் காயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது முக்கியம்.

கோவை மனம் 86. மரணக் காலத்தில் வாழ்ந்து பார். உன்னால் கொடுமையை அனுபவித்தவர்களின் நிலைமை புரியும்.

கோவை மனம் 87. மன்னிக்க முடியாததையும் மன்னித்துப் பார் உலகில் நீயே மாமனிதன்.

கோவை மனம் 88. எளிமையான மனிதருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்போது உணர்ச்சி வசப்படுபவரே சிறந்த மனிதர்.

கோவை மனம் 89. தொடர்ந்து வெற்றி பெற்றாலும் உன்னை வீழ்த்த, நீ வீழ்த்தியவனே உனக்கு எமனாக வருவான்.

கோவை மனம் 90. வேண்டியதெல்லாம் கிடைக்கும் இடத்தில் நீ இருக்கும்போது வேண்டாமல் இருப்பவன் முட்டாள். அதேசமயம் வேண்டுவதெல்லாம் கிடைக்கிறதே என்று தேவையற்றவற்றையும் பெறுபவன் அடிமுட்டாள்.

கோவை மனம் 91. அழகாய்த் தெரிவதெல்லாம் அழகல்ல. ஒப்பனை, அழகில்லாததையும் அழகாக்கிக் காட்டும்.

கோவை மனம் 92. போலி அழகில் நெஞ்சைச் செலுத்தாதே. வாழ்க்கை பொய்யாகிவிடும்.

கோவை மனம் 93. தொட்டில் பழக்கம் அதிகப் பணம் சேரும் வரையே.

கோவை மனம் 94. கடந்த காலங்கள் தனதானதாக இருந்தாலும் நிகழ்காலமும் எதிர்காலமும் தனதில்லை என்றாகலாம். கவனமுடன் காலத்தோடு ஒத்து வாழப்பழகு.

கோவை மனம் 95. வயதைப் பொறுத்து அமைவது அல்ல முதுமை. உணர்ச்சியையும், செயற்பாட்டையும், உள்ளத் தெளிவையும் கொண்டதே முதுமையின் அளவுகோல்.

கோவை மனம் 96. இயல்பான வாழ்க்கையைத் திரையில் காட்ட வேண்டும் என்றால் நடிக்கத்தான் வேண்டும். நடிப்பவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு உரியவர்கள் அல்ல.

கோவை மனம் 97. கணவன் நினைப்பதை மனைவியும், மனைவி நினைப்பதை கணவனும் உணர்ந்து செயற்பட்டால், உலகில் அவர்களே சிறந்த வாழ்விணையர்.

கோவை மனம் 98. குழு ஆட்டத்தில் வெற்றி-தோல்வி யாருக்கும் நிரந்தரமில்லை. ஆட்டத்தில் தோற்றதற்காக தலைமை ஏற்றவர் மட்டும் பொறுப்பாகமாட்டார். தானே பொறுப்பேற்று விலகுவதும் விவேகமல்ல. எந்த சூழலையும் எதிர்கொள்பவனே தலைமைக்குரியவன்.

கோவை மனம் 99. பணத்தை நேசிப்பவன் உறவை வெறுப்பான்.

கோவை மனம் 100. ருசிப்பவனை விட பசிப்பவனுக்கே உணவின் உன்னதம் புரியும்.

கோவை மனம் 101. குறையொன்றும் இல்லாமல் குடிசையில் ஏக்கமின்றி வாழ்ந்தால் அதுவே அவனுக்குச் சொர்க்கம்.

கோவை மனம் 102. பிறரைப் போல வாழ நினைப்பது போலி வாழ்க்கை.  நீ நீயாக வாழ்ந்தால், நீ சாதிப்பதெல்லாம் உன்னுடைய சாதனையே.

கோவை மனம் 103. வாங்கிய பொருளைப் பயன்படுத்தாமல் இருப்பதும், யாருக்கும் கொடுக்காமல் வைத்திருப்பதும் அந்தப் பொருள் உற்பத்தியாகாமலே இருந்திருக்கலாம்.

கோவை மனம் 104. பசிக்கும்போது அழுபவன் மனிதன், அலைபவன் பாவி.

கோவை மனம் 105. வல்லவன் நிலை தடுமாறும் போது புல்லவன் கை ஓங்கும்.

கோவை மனம் 106. உனக்குத் தெரிந்தவர்களுக்கு உன்னைத் தெரியாமலிருக்கலாம்.  ஆனால், உன்னைத் தெரிந்தவர்களை நீ தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

கோவை மனம் 107. கண்ட தோற்றத்திலேயே மனம் ஒன்றியிருப்பதெல்லாம் அழகல்ல. நினைவிலும் கனவிலும் எவன் செயற்பாட்டில் மனம் ஒன்றுகிறதோ அதுவே அழகு.

கோவை மனம் 108. எப்படியும் வாழலாம் என்பவனைவிட இப்படித்தான் வாழ்வேன் என்று கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவனுக்குச் சோதனைகள் பல வரும். அச்சோதனைகள் நிலையானது அல்ல. வந்த சோதனைகளைச் சாதனைகளாக்குபவனே வாழ்க்கையில் வெற்றி பெற்றவனாவான்.

கோவை மனம் 109. தன்னுடைய அனுபவங்களின் தொகுப்பிலிருந்து பலர் பின்பற்றும்படி வாழ்ந்தாலே வாழ்ந்தவன் இறவாத புகழ் பெற்றவனாவான்.

கோவை மனம் 110. எதிரிகளே இல்லாத சபையில் தானே முதல்வன் என்பதில் பெருமை இல்லை. ஆனால் எதிரிகள் நிறைந்த சபையில் எதிரிகளும் போற்றும் வண்ணம் திகழ்பவரே உண்மையில் உன்னதமான முதல்வன் ஆவான்.

கோவை மனம் 111. எதிரிகளே இல்லாமல் வாழ்பவன் கோழை.

கோவை மனம் 112. உன்னை மதிக்காதவனை அரியணையிலும் பார்க்காதே.

கோவை மனம் 113. அரண்மனைச் செய்தியே யானாலும் அறிவுக்கே இடம் கொடு.

கோவை மனம் 114. பிடிவாதக்காரன், தனக்குப் பிடிக்காத செயலை மற்றவர்கள் செய்வதைத் தடுப்பான்.

கோவை மனம் 115. வஞ்சனை செய்வோனிடம் தஞ்சம் புகாதே.

கோவை மனம் 116. ஓட்டுநரே உரிமையாளராக இருக்கும்போது சேதாரம் குறைவாக இருக்கும்.

கோவை மனம் 117. மறித்தால், பூனையும் புலியாகும்.

கோவை மனம் 118. புலியை அடைத்தாலும் புலி புலியாகத்தான் இருக்கும்.

கோவை மனம் 119. மனம் இல்லாதோர் கொடுக்கும் பணத்தை எப்போதும் ஏற்காதே.

கோவை மனம் 120. தன்னுடைய தாகம் தணிய உகந்ததை மட்டும் கொள். பிறரின் தாகம் தணிக்க அவரால் ஏற்பதை மட்டும் கொடு. அறம் சிறக்கும்.

கோவை மனம் 121. உங்கள் மீது தவறுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டாலே உங்களின் அமைதி பாதுகாக்கப்படும்.

கோவை மனம் 122. அஞ்சத்தக்க இடத்தில் அஞ்சாதவன் அழிவான்.

கோவை மனம் 123. நல்லோரை வஞ்சிக்காதே. வஞ்சித்தால் வஞ்சிக்கப்படுவீர்.

கோவை மனம் 124. வல்லோரின் பொறுமை புல்லோர்க்குத் தற்காலிகப் பெருமை.

கோவை மனம் 125. நல்லோர் சொல் கேட்காவிட்டாலும் புல்லோர் சொல் கேளாதீர்.

கோவை மனம் 126. பேராபத்துக் காலத்தில் அஞ்சாதவன் முரடன், அஞ்சுபவன் மனிதன்.

கோவை மனம் 127. கொடைஞனுக்குக் கோடி பணம் கொடுத்தாலும் கொப்பியில் வைக்கமாட்டான்.

கோவை மனம் 128. உள்ளம் கட்டுப்பட்டால் நோய் கட்டுக்குள் இருக்கும்.

கோவை மனம் 129. மனமும் குணமும் வெந்தால் நிம்மதி அறும்.

கோவை மனம் 130. எந்த வகையிலும் எவருக்கும் உதவி செய்யாதவன் எதற்கும் உதவான்.

கோவை மனம் 131. பற்றாக்குறைதான் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும்.

கோவை மனம் 132. உள்ளத்தில் வேதனையும் உடலில் வலியும் ஒருசேரக் கொண்டவன் நோயாளி.

கோவை மனம் 133. மருத்துவமும் மருந்தும் துன்பம் தருமாயினும் பின்னாளில் இன்பம் தருமாயின் ஏற்க.

கோவை மனம் 134. ஒருவனின் உணர்ச்சிகளினால் பிறருக்கு ஏற்படும் நன்மை தீமைகளைக் கொண்டே அவனின் வாழ்க்கை அளவிடப்படுகிறது.

கோவை மனம் 135. நல்ல தூக்கமே இன்பத்திற்கு விடை.

கோவை மனம் 136. நாம் வாழும் மண்ணைப் பொருத்தே நோயும் மருந்தும் அமையும்.

கோவை மனம் 137. கேடு நினைப்பவன் தானாகக் கெடுவான்.

கோவை மனம் 138. பிறரின் துன்பத்தைத் தனதாக்கிப் பார், உன் துன்பம் தானாய் மறையும்.

கோவை மனம் 139. இன்றைய சோதனை நாளைய சாதனை.

கோவை மனம் 140. பணத்தை விரும்புபவன் பணத்தைத் தேடுகிறான். நல்மனதை விரும்புபவன் மனிதனைத் தேடுகிறான்.

கோவை மனம் 141. உள்ளம் நினைப்பதை நாக்கு பேசும் போது அதில் உண்மை மட்டுமே இருக்கும். அது மாறினால் பொய் இருக்கும். அவன் பார்வையே இதன் அளவுகோல்.

கோவை மனம் 142. பிறருக்குக் கேடு நினைப்பவன் தானே கெடுவான்.

கோவை மனம் 143. துன்பத்தில் உதவாத உறவும், இன்பத்தில் வரலாத சுற்றமும் கேடு.

கோவை மனம் 144. உலகப் பற்று குறையக் குறைய மனதில் அமைதி வளரும்.

கோவை மனம் 145. சோம்பலினால் உடலும் மனமும் கெடும்.

கோவை மனம் 146. இயக்கம் இல்லாத பொருள் பாழ்.

கோவை மனம் 147. போக வாழ்க்கை பாழ்.

கோவை மனம் 148. தூய்மை இல்லாத துறவு பாழ்.

கோவை மனம் 149. கேட்காத கடனும் பேசாத உறவும் வீண்.

கோவை மனம் 150. செலவே இல்லாத வருமானம் வீண்.

கோவை மனம் 151. பொருள் இல்லார்க்குச் சுற்றமும் உறவும் இருந்தும் இல்லாததாகவே இருக்கும்.

கோவை மனம் 152. பொருள் மட்டும் வாழ்க்கையில் முக்கியத்துவம் இல்லை என்பதை உணர்.

கோவை மனம் 153. சேர்த்த பொருள் ஒருநாள் பொன்னம்பலம் ஏறும்.

கோவை மனம் 154. பொருள் என்பது போகப் பொருள்.

கோவை மனம் 155. நிலையற்ற போகத்தில் மனதைச் செலுத்தி பொருளை இழப்பதால் நித்திரையும் வாழ்க்கையும் கெடும்.

கோவை மனம் 156. ஆறு சுருங்க ஊறு விளையும்.

கோவை மனம் 157. ஏரிக்குள்ளேயும் கீழேயும் அமையும் ஊர் என்றும் பாழ்.

கோவை மனம் 158. வளமான ஊரானாலும் வடிகால் அவசியம்.

கோவை மனம் 159. வளமான குரல் இருந்தாலும் அதில் நலமான குரல் ஒலி (பேச்சு) வேண்டும்.

கோவை மனம் 160. என்றோ வரும் வெள்ளத்திற்கு என்றும் இடம் விட்டுவைக்க வேண்டும்.

கோவை மனம் 161. நோய்க்குப் புற மருந்து உடனடி தீர்வாகலாம். ஆனால், நோய் வரும் பாதையை உணர்ந்து அடைத்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

கோவை மனம் 162. உன் செயல்களைக் கண்ணுக்குத் தெரியாத ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணமே குற்றம் புரிவதைத் தடுக்கும்.

கோவை மனம் 163. காமக் கண்ணும் போகப் பொருளும் சோகம் கொடுக்கும்.

கோவை மனம் 164. காமம் களை, மனம் அமைதி கொள்ளும்.

கோவை மனம் 165. தலை வணங்கி மாலை ஏற்ற உன்னத மாமனிதனின் சிலைக்குத் தூக்கி வீசி மாலை அணிவிக்கும் எதிர்கால மாமனிதர்கள்.

கோவை மனம் 166. நல்லோரை நண்பனாகவும், வல்லோரை குருவாகவும் கொள்.

கோவை மனம் 167. தீயோரை ஒரு பொழுதும் மதியாதே.

கோவை மனம் 168. ஆசை கொண்டோன் வாழ்வை இழப்பான். பேராசை கொண்டோன் உலகையே துறப்பான்.

கோவை மனம் 169. அத்தியாவசியத் தேவைக்கு ஆசைப்படு. ஆடம்பரத்திற்கு ஆசைபடாதே.

கோவை மனம் 170. அளவுக்கு மீறிய ஆசை ஆளையே கொள்ளும்.

கோவை மனம் 171. பலனை எதிர்பார்த்துச் செய்யும் எந்த உதவியும் சபை ஏறாது.

கோவை மனம் 172. மனமும் உடலும் சோர்வடைந்திருக்கும் போது தினப் பணியில் இருந்து ஓய்வு கொடு. ஓய்வே இவைகளுக்குச் சிறந்த மருந்து.

கோவை மனம் 173. தண்டனை பெற்ற குற்றவாளியை எண்ணிப் பார் குற்றம் புரிவது குறையும். குற்றம் குறையக் குறைய உன்னை நீ பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறாய் என்பதை உணர்.

கோவை மனம் 174. அழுவது உடலுக்கு நன்மை. பேரழுகை தீங்கு.

கோவை மனம் 175. நேய உலகில் திளைத்தவன் மாய உலகைத் துறப்பான்.

கோவை மனம் 176. சுற்றம் இழந்த குற்றவன் சுத்தமாக வாழ்ந்தால் சுற்றங்கள் மீண்டும் தானாய் வந்திணையும்.

கோவை மனம் 177. ஒத்த மனமும் ஒத்த எண்ணமும் ஒத்த உணர்வும் கொண்டவனை நண்பனாகக் கொள்.

கோவை மனம் 178. என்னால் இது முடியாது என்பதைத் தவிர்த்து முடியும் என்று நம்பிக்கையோடு முயற்சி செய், முடியாததும் முடியும்.

கோவை மனம் 179. உங்கள் மீது முழுமையாக நம்பிக்கை வை, நீங்களே வெற்றியாளர்.

கோவை மனம் 180. ஒருவனுக்கு ஏற்படும் எதிர்மறையான நிகழ்வே அவன் மேன்மைக்கா விதை.

கோவை மனம் 181. உடல் வலிமையால் செய்ய முடியாததையும் மன வலிமை செய்து முடிக்கும்.

கோவை மனம் 182. அதிக சுகம் கேடு தரும்.

கோவை மனம் 183. உன்னை மதிக்காதவரைச் சந்திக்கவும் சிந்திக்கவும் செய்யாதே.

கோவை மனம் 184. மெளனப் பாசமும் போலிப் பாசமும் நாசமாகும். ஊரும் உலகமும் உண்மைப் பாசம் உணர வாழ்.

கோவை மனம் 185. நினைவைப் போற்றுவது சுகமானது.

கோவை மனம் 186. மிதிபட்டாலும் மிதிப்பவரைக் காக்கும் மிதியடி(செருப்பு) போல் தனக்கே பாதுகாப்பு இல்லாத போது தக்காரைக் காப்பாற்றுபவனே மனிதரில் மாணிக்கம்.

கோவை மனம் 187. கணவனும் மனைவியும் மனம் ஒத்த வாழ்க்கை வாழ்ந்தால் அவர்களின் வாழ்க்கை செம்புலப் பெயல்நீர் போல் அமையும்.

கோவை மனம் 188. சுவையையே பார்த்த நாக்கு நெருக்கடி காலத்தில் கிடைத்த உணவை ஏற்கும்.

கோவை மனம் 189. நல்லதையே பேசு, நல்லதையே செய், நல்லதையே நினை; உன்னைச் சூழ்ந்த கேடு தானாய் விலகும்.

கோவை மனம் 190. கடல் சீற்றம் கொண்டால் பெரும் பாதிப்பு நிலத்தில் அமைவது போல் கணவன்-மனைவிக்குள் ஏற்படும் மோதல் தன் பிள்ளைகளையே பெருமளவு பாதிக்கும்.

கோவை மனம் 191. சகுனியை வெல்ல அறிவாளத் தன்மையோடு சகுனியாகவும் செயல்படு.

கோவை மனம் 192. எல்லோர் மனதிலும் சிறந்து வாழ்ந்தவர்கள் இறந்தாலும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.

கோவை மனம் 193. சுமப்பதைச் சுமை தாங்கி போல் சுமப்பதில் சுகம் காண்பவர் தந்தை.

கோவை மனம் 194. ஒத்ததை ஒத்தது அறிவதுபோல் மகனின் துடிப்பைவிட மகளின் துடிப்பை அதிகம் உணர்பவள் தாய்.

கோவை மனம் 195. பிறர் சமயத்தையும் அறிந்து உணர்ந்து மதித்துத் தன் சமயத்தைப் போற்றுபவனே சமயவாதி.

கோவை மனம் 196. துரோகி செய்யும் துரோகத்தைவிட உற்ற நண்பன் செய்யும் துரோகமானது இமையே கண்ணைக் குத்துவது போன்றதாகும்.

கோவை மனம் 197. நம்பினோர் எல்லாம் துரோகிகளாக இருக்கும்போது உனக்கு நீயே தூண். இதைப் புரிந்த பின் இனியாவது கவனமுடன் வாழ்.

கோவை மனம் 198. மறதியும் நல்ல தூக்கமும் இருந்தால் நரக வாழ்க்கை விடுதலை பெறும்.

கோவை மனம் 199. ஆழ்கடலில் உள்ள பொற்குவியலை அனுபவிக்காமல் கரையில் சுகத்தைத் தேடும் அலையைப்போல் புறச்சுகத்திற்கு அலைபவர்கள் பாவிகள்.

கோவை மனம் 200. கோடித் துணி கூட உனக்குச் சொந்தமில்லை என்பதை உணர், உன் வாழ்க்கை மிளிரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக