வெள்ளி, 15 மார்ச், 2024

கோவை ஊற்று (001-150)

1.              அஞ்சி வாழாமல் நேர்மையாய் வாழ்.

2.              அடுத்தவர் நோகத் தூற்ற வாழாதே.

3.              அலட்சியம் செய்வோரிடம் அன்பைத் தேடாதே.

4.              அறத்தை விளம்பல் அறவோர்க் கில்லை.

5.              அறத்தொடு நிற்போற்கு அறநூல் வேண்டாம்.

6.              அறம் செய்ய, கரம் நீட்டு.

7.              இயக்குபவன் இல்லையேல் ஓடுவது ஓடாது.

8.              இழிபொழி நவில்வோரை எழுபிறப்பும் நாடாதே.

9.              ஈதற்குப் பொருளை ஈட்டுதல் மேன்மை.

10.         ஈருடல் ஆனாலும் ஒத்த மனங்கொள்.

11.         உண்டு வாழ், உறிஞ்சி வாழாதே.

12.         உண்மைக் காதல் சாவது இல்லை.

13.         உண்மையாய்ப் பழகு, உயிராய் இரு.

14.         உதட்டளவுப் பாசம் ஊர்போய்ச் சேராது.

15.         உயர்குடிப் பிறப்பினும் சிறந்தது கல்வி.

16.         உழவன் வியர்வை உண்பவன் குருதி.

17.         உழைப்பைக் கொடுத்து ஊதியம் பேணு.

18.         உழைப்பை நாடு, இழப்பைத் தவிர்.

19.         உறவாடாத உறவுடன் உறவு கொள்ளாதே.

20.         உறவாடிக் கெடுப்போரை ஒருபொழுதும் நம்பாதே.

21.         உற்ற ஒழுக்கம் பெருமை காக்கும்.

22.         உன்னைச் சுமையாக நினைப்பவரிடம் தூரஇரு.

23.         ஊதியம் இல்லாமல் ஊழியம் செய்யாதே.

24.         ஊருக்கு வாழாமல் உனக்காக வாழ்.

25.         எண்ணெழுத்து இகழின் மண்கெட்டுப் போகும்.

26.         எளியாரை இகழாமல், ஈத்துண்டு பழகு.

27.         ஏழைக்கு உதவுதல் உள்ளோர் கடமை.

28.         ஒதுக்குவதாய் இருந்து ஒதுங்குவதாய் இராதே.

29.         ஒதுங்கியதை ஒழித்து ஏற்பதைக் கொள்வாய்.

30.         ஒழுக்க மில்லார் கல்வி பயனற்றது.

31.         ஒழுக்க முடையார் மாசற் றிருப்பர்.

32.         கடலில் மூழ்கு, கடனில் மூழ்காதே.

33.         கரும்பு கசத்தால் வாயின் குற்றம்.

34.         கல்லாதார் நற்சொல்லும் கல்லெழுத் தாகும்.

35.         கல்லாது காலம் கழிபடக் கூடாது.

36.         கற்புடை பெண்டிர்க்குக் கல்வியே அழகு.

37.         கற்றதில் நிற்றலே உற்றதில் மிக்கது.

38.         கற்றது மறவாமை மேதைக்கு அழகு.

39.         கற்றோர் வாக்கு ஏற்போர் மாட்டே.

40.         காட்டு வாழ்வை நாட்டில் தேடாதே.

41.         காமக் காதல் தன்னைக் கெடுக்கும்.

42.         கீழ்மக்கள் உறவு, ஏற்பது இகழ்ச்சி.

43.         குறை கண்டால் நிறை போகும்.

44.         குற்றம் கொள்ளா தொழுகுவதே ஒழுக்கம்.

45.         கோடி கொடுத்தாலும் கொள்கை விடாதே.

46.         சான்றோர் நெறியே நல்லொழுக்க மாகும்.

47.         சிறிய தீமையும் துன்பம் தரும்.

48.         சூதர் கொள்ளின் ஏதம் விளையும்.

49.         செய்தவை எல்லாம் சேர்ந்தே கிடைக்கும்.

50.         செய்தி தேடு, செயலைக் காட்டு.

51.         சேர்ந்தபின் சேறையும் சகதியும் வேறல்ல.

52.         சொல்லைக் காப்பான் அகப்பட மாட்டான்.

53.         சொற்போர் தவிர்த்து செயலில் காட்டு.

54.         சோதனை ஓட்டம் மறுக்கவும் செய்யும்.

55.         சோதனை வாழ்க்கை நிரந்தரம் அல்ல.

56.         தங்கச் செருப்பு மகுடம் ஆகாது.

57.         தங்குற்றம் நீக்காமல் பிறர்குற்றம் நீக்காதே.

58.         தடுமாறாத எண்ணமே தடையிலா வாழ்க்கை.

59.         தந்தையின் தடங்களே தனயனின் பயணம்.

60.         தனிமனித ஒழுக்கம் தரணியை உயர்த்தும்.

61.         தன்குறை உணர்ந்தோன் பிறர்குறை மறப்பான்.

62.         தன்மானம் விலைபோகும் இடத்தில் நிற்காதே.

63.         தானே கெட்டாலும் கேடு செய்யாதே.

64.         தீமை செய்தார்க்கும் தீமை செய்யாதே.

65.         தீயன பேசும்நா நாவெனப் படாது.

66.         தீயில் இட்டநெய் மீண்டு வராது.

67.         துணிச்சல் இல்லாதவன் துணையை நாடுவான்.

68.         துன்பங்களே உயர்வின் ஏணிப்படி.

69.         துன்பம் போக்க சிரிப்பே மருந்து.

70.         தூக்கம் துறந்தால் துக்கம் உறவாடும்.

71.         தொட்டிலன்றி கட்டிலே சார்ந்தோர் சிறப்பு.

72.         தொலைந்ததைப் பெறலாம் இழந்ததைப் பெறமுடியாது.

73.         தோல்வி அடைந்தால் துணிந்து எழு.

74.         நட்பிலார் மாட்டு நட்பினைக் கொள்ளாதே.

75.         நம்பிக்கை உடைத்தவனை ஒருபோதும் நம்பாதே.

76.         நல்லோரின் வறுத்தம் வல்லவனுக்கும் கேடு.

77.         நல்லோரை அழிக்க வல்லவனாலும் முடியாது.

78.         நல்வழிப் பொருளை ஈவோன் வாழ்வான்.

79.         நற்குடிப் பிறந்தும் நல்லோர்  பேணு.

80.         நற்குடிப் பிறப்பே உயர்குடி நல்கும்.

81.         நாடு கடந்தாலும் நாய்குணம் மாறாது.

82.         நாடும் உறவு உதறி விடாதே.

83.         நாவடக்கமே தவறின் நானிலம் தூற்றும்.

84.         நினைந்தோரை நினை, வெறுப்போரை மற.

85.         நெகிழ்ந்த அருளே அறத்தைக் காட்டும்.

86.         பகைவன் இறப்பில் மகிழ்வைத் தேடாதே.

87.         பசிக்கு உண், ருசிக்கு உண்ணாதே.

88.         படித்ததை மறந்தாலும் படைத்ததை மறவாதே.

89.         பழிக்கு அஞ்சார் மனம்வருந்தம் கொள்ளார்.

90.         பழிக்கு அஞ்சுவது நல்லோர் இயல்பு.

91.         பழி சொல்வோர் வழி சொல்லார்.

92.         பிச்சை எடுத்துப் படிப்பது நன்று.

93.         பிறருன்னைச் சுமையாகச் சுமக்க வாழாதே.

94.         புகழுக் கேற்ப ஈகை குணங்கொள்.

95.         புத்திக்கும் அறிவுக்கும் பொருந்தாதைச் செய்யாதே.

96.         புரிதல் இல்லாத அன்பு பாழ்.

97.         புறவழகு அழகல்ல, அகவழகே அழகு.

98.         புறவழகு புண்பட்டாலும் அகவழகு புண்படாது.

99.         பெரியோர் ஏளனம் கொள்ள வாழாதே.

100.     பெரியோர்முன் தவிர்ப்பதை ஒருபோதும் செய்யாதே.

101.     பொய்பேசா நட்பு பேராண்மை கொள்ளும்.

102.     பொய் பேசாமல் மெய் பேசு.

103.     பொருளின்றிப் பெற்றது பொறுப்பில் தங்காது.

104.     பொருள் கொடுத்து இருளைக் கொள்ளாதே.

105.     பொல்லார் என்றும் பழிக்கு அஞ்சார்.

106.     போதனை எல்லாம் புனிதம் ஆகாது.

107.     மண்ணாளும் மன்னன் பொன்னாளக் கூடாது.

108.     மதியாதார் அழைப்பை ஒருபோதும் ஏற்காதே.

109.     மதியாதார் வீட்டில் உணவு கொள்ளாதே.

110.     மரபுக் கெதிராகத் தீந்தொழில் செய்யாதே.

111.     மனம்விட்டுப் பேசாத உறவு பாழ்.

112.     மனம்வேறு கொண்டால் நிறைகுடமும் தளும்பும்.

113.     மாசறக் கற்று மதிநலம் பேணு.

114.     முட்டாள் நண்பர்களை அறவே துடைத்தெறி.

115.     மூத்தோரைப் பேணு, முத்தியைப் பெறு.

116.     யாரையும் நம்பாதே, உன்னையே நம்பு.

117.     வருவதால், இருந்த செல்வத்தை இழக்காதே.

118.     வளர்த்தவன் வறுத்தப்பட்டால் வளர்பவனுக்குக் கேடு.

119.     வாழ்ந்து கெட்டவனின் வறுமையைத் தூற்றாதே.

120.     விரும்பியதைச் செய், சோம்பல் வராது.

121.     வெற்றி பெற்றால் பணிந்து நில்.

122.     வேண்டாத சுமையை வேலிக்குள் வைக்காதே.

123.     வேத வாழ்க்கை நாதம் ஆக்காதே.

124.     வேலியே ஆனாலும் இணைவு வேண்டும்.

125.     வறுமையில் செம்மை அறிஞர்க் கழகு.

126.     வினைப்பயன் ஆவது பெருமையும் சிறுமையும்,

127.     சான்றோர் கோபம் தானாய்த் தணியும்.

128.     கீழோர் கோபம் யாராலும் தணியாது.

129.     கீழோர் துன்பம் மேலோர் வெகுளார்.

130.     வைதாரை வைவது அறிவுடைமை ஆகாது.

131.     தம்மை இகழ்ந்தாரை இகழாது காப்பாய்.

132.     சினம்மிகக் கொள்ளின் குணம்கரை ஏறும்.

133.     ஆராத கோபம் உறவைச் சேர்க்காது.

134.     நல்லவையுள் கற்றகல்வி நானிலம் போற்றும்.

135.     தற்பெருமை தவிர்த்தல் பெரியோர்க் கழகு.

136.     மனவ டக்கம் உயிரைக் காக்கும்.

137.     சிற்றிளி யானாலும் பாறையும் உடைக்கும்.

138.     இரப்போனிடம் செல்வச் செருக்கு கொள்ளாதே.

139.     கல்லாரொடு கல்விச் செருக்கு கொள்ளாதே.

140.     அல்லன செய்யினும் நல்லன கொள்ளே.

141.     தகுந்தாற் மாற்றே அறிவுடையோ ராவர்.

142.     சிற்றறிவு பெருக்க, பேரறிவு அடங்கும்.

143.     வெண்கலம் ஒலிக்கும், பொற்கலம் ஒலிக்காது.

144.     கற்றோர்க் கழகு அடங்கி நடத்தல்.

145.     அறிவிலான் செய்தபிழை வழுக்கிச் செலல்நலம்.

146.     சிறியோர் சிறுபிழை பெரியோர் பொறுப்பர்.

147.     வம்பலர் கூற்றை அம்பலம் ஏற்று.

148.     மடிகடித்தாலும் கன்றுக்குப் பால்சுரக்கும் மாடு.

149.     தீயினால் சுட்டாலும் தீமையை ஏற்காதே.

150.     தீயன செய்வது சிறியோர் மாட்டே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக