வெள்ளி, 15 மார்ச், 2024

கோவை மனம் (401-600)

 கோவை மனம் 401.      மனத்தைக் கட்டுப்படுத்துபவன் மனிதனாகிறான்.

கோவை மனம் 402.      நல்லவர்களுக்குச் செய்த உதவியும், தீயவர்களிடம் சொன்ன இரகசியமும், அறிவாளிகளுக்குக் கூறிய அறிவுரையும் விரைவாகப் பரவும்.

கோவை மனம் 403.      அன்பு கொண்டவன் வெகுதொலைவில் இருந்தாலும் என்றும் நம் இதயத்தில் இருப்பான்; வெறுக்கத்தக்க ஒருவன் அருகில் இருந்தாலும் என்றும் வெகுதொலைவிலேயே இருப்பான்.

கோவை மனம் 404.      தோல்விகளைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டு, அதற்கான காரணங்களை ஆராய்ந்து தவறுகளைக் களைந்து செயற்படு வெற்றி நிச்சயம் கிட்டும்.

கோவை மனம் 405.      நல்லொழுக்கமே ஐம்புலன்களை அடக்கும்.

கோவை மனம் 406.      தற்பெருமையே தன்னுடைய இரகசியத்தை எதிராளிக்குக் காட்டிக் கொடுக்கும்.

கோவை மனம் 407.      தன்னுடைய கருத்துரையும் ஆலோசனையும் பிடிவாதமாக ஒருவன் வழங்கினால் அவை சபை ஏறாது.

கோவை  மனம் 408.     இரும்பும் இரும்பும் உருக்கும் வரை ஒட்டாது.

கோவை மனம் 409.      தீய பழக்கங்கள் கொண்டவனால் எச்செயலிலும் வெற்றி காண்பது அரிது.

கோவை மனம் 410.      சூதாட்டம் கேடு தரும்.

கோவை மனம் 411.      காமமும் மோகமும் ஒழுக்கச் சீர்கேட்டைத் தரும்.

கோவை மனம் 412.      ஒருவனின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவனது ஒழுக்கமும் பண்புமே காரணம்.

கோவை மனம் 413.      சரியான முறையில் திட்டமிடுதலே பணியை எளிதாக்கும்.

கோவை மனம் 414.      அதிகமான மன அழுத்தமே ஒருவனைச் சோகமாக்கும்.

கோவை மனம் 415.      நிகழ்கால அழிவானது வருங்கால அழிவைவிடப் பெரியது.

கோவை மனம் 416.      ஒரேவொரு குறை பல நிறைகளை அழிக்கும்.

கோவை மனம் 417.      சோம்பேறிக்கு நிகழ்காலமும் எதிர்காலமும் இருக்காது.

கோவை மனம் 418.      எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி இணையும் உறவே சிறந்தது.

கோவை மனம் 419.      பகைவரை நண்பனாக்கிக் கொண்டாலும் பகைவராகவே பார்; உன்னை நீ காப்பாய்.

கோவை மனம் 420.      பொறுமையற்றவன் ஆடம்பர வாழ்வில் ஈடுபட்டு நிகழ்காலம், எதிர்காலம் இன்றி அழிவான்.

கோவை மனம் 421.      உண்ட உணவு செரித்தால் நோய் நாடாது. செரிக்காத உணவு துன்பம் தரும்.

கோவை மனம் 422.      நோயை விட எதிரியின் நட்பு கொடுமையானது.

கோவை மனம் 423.      தீமை சிறிதே யானாலும் துன்பம் தரும்.

கோவை மனம் 424.      திறமை உள்ளவன் பிறப்பைக் கண்டு அஞ்சமாட்டான்.

கோவை மனம் 425.      அதிக கலவி விரைவில் முதுமை.

கோவை மனம் 426.      தற்புகழ்ச்சியே அவனின் பெரிய பகைவன்.

கோவை மனம் 427.      புகழ் படைத்தவனுக்கு அழிவே இல்லை.

கோவை மனம் 428.      எல்லை மீறும் நட்பும், அன்பும், காதலும் பாழ்.

கோவை மனம் 429.      அழுக்காறு கொண்டோன் அழுக்காறால் அழிவான்.

கோவை மனம் 430.      கற்பித்தவனுக்கு ஏற்பவே கற்றோன் வாழ்வான்.

கோவை மனம் 431.      மாணவர் மீது கொண்ட பாசத்தால் வருவதே ஆசிரியரின் கோபம்.

கோவை மனம் 432.      கோபத்தை அடக்குபவன் அன்பைப் பெறுவான்.

கோவை மனம் 433.      அழிவு வரும் நேரத்தில் ஒருவனுக்கு நல்ல எண்ணங்கள் தோன்றாது.

கோவை மனம் 434.      உயர்ந்த மனிதனுக்குக் காலத்தால் செய்த உதவி சிறிதாயினும், அவன் அதைப் பெரியதாகவே போற்றுவான்.

கோவை மனம் 435.      வஞ்சகனுக்கு உதவி செய்யாதே. வஞ்சகனுக்குச் செய்த பேருதவியும் பகையாய் மாறும்.

கோவை மனம் 436.      நல்லொழுக்கமே ஒருவனுக்குச் சொக்கத்தின் வாடிவாசல்.

கோவை மனம் 437.      இனிமையாகப் பேசுபவனுக்குப் பகைவன் இல்லை.

கோவை மனம் 438.      கருத்து மாறுபாடு வரும்போது அவன் செய்த உதவியை எண்ணிப் பார்.

கோவை மனம் 439.      கடல் நீர் தாகம் தீர்க்காததுபோல் உதவாத பெருஞ்செல்வத்தால் பயனில்லை.

கோவை மனம் 440.      ஒருவனின் செயற்பாடே குணத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி.

கோவை மனம் 441.      மன்னிப்பவன் மனிதனாகிறான்; மன்னிக்காதவன் மிருகமாகிறான்.

கோவை மனம் 442.      ஒழுக்கம் கெட்டவனுக்கு ஒருவன் செய்யும் தொண்டால் அவனது ஒழுக்கம் கெடும்.

கோவை மனம் 443.      தானம் கொடுத்த பொருள் மீது உரிமை கொள்ளக் கூடாது.

கோவை மனம் 444.      தனக்கு மிஞ்சிய ஆடை, உணவு, இருப்பிடத்தைப் பகிர்ந்துக் கொள்ளாதவனுக்குத் தூக்கம் விடைபெறும்.

கோவை மனம் 445.      தன்னால் என்ன செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பதைத் தீர்மானித்து, தன்னுடைய பலம், பலவீனத்தை அறிந்து செயல்படுபவனே மனிதரில் மாணிக்கமாவான்.

கோவை மனம் 446.      முன்னோர் செயலைப் போற்றுபவனும், முன்னோர் விட்டதைத் தொடர்பவனும் சிறந்த வாழ்வைக் கொள்வர்.

கோவை மனம் 447.      எதையும் செய்யாமல் தன்னுடைய அறிவு, திறமையால் தானாகவே எல்லாம் கிடைத்துவிடும் என்று நினைப்பவன் மூடன்.

கோவை மனம் 448.      ஒரு வேலையைத் தக்க நேரத்தில் முடிப்பவன் அறிவாளி.

கோவை மனம் 449.      காலம் தவறி செய்யும் வேலை காலத்திற்கு ஒப்பாமல் பயனற்றுப் போகும்.

கோவை  மனம் 450.     தன் மீது உள்ள குற்றங்களை எண்ணாமல் பிறர் மீது பழி சொல்பவன் மூடன்.

கோவை  மனம் 451.     குடத்து நீர் ஒரு சிறு ஓட்டை இருந்தாலும் வெளியேறுவது போல் ஐம்புலன்களில் ஒரு புலன் தன் கட்டுப்பாட்டை இழந்தாலும் மற்ற புலன்களும் கட்டுக்கடங்காமல் போகும்.

கோவை மனம் 452.      தீயோன், மறந்த பகையை நினைவூட்டுவான்.

கோவை மனம் 453.      ஆத்மாவும் உடம்பும் ஒன்றென்று நினைப்பவர்கள் உடம்பு சுகத்திற்காக ஆத்மாவைக் கலங்கப்படுத்துவர்.

கோவை மனம் 454.      தனது சொத்து முற்றிலும் இழந்தபோதும் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு மீள்பவன் தைரியசாலி.

கோவை மனம் 455.      ஆசை கொண்டால் பயம் வரும்.

கோவை மனம் 456.      மற்றவர்கள் மீது கொள்ளும்  பொறாமையே ஆசையில் வாசல்.

கோவை மனம் 457.      தக்காரிடம் தக்கவற்றை கூறுதல் சால்பு.

கோவை மனம் 458.      பிறரை மனத்தாலோ, உடம்பாலோ, சொல்லாலோ வஞ்சிக்காதவர்கள் காலத்தால் வாழ்வர்.

கோவை மனம் 459.      நேர்மையற்ற வழியில் சேர்த்த பொருளைத் தானமாகக் கொடுப்பதைவிட நேர் வழியில் சேர்த்த பொருளைக் கொடுப்பதே சிறந்த தானம்.

கோவை மனம் 460.      தானம் செய்ததைச் சுட்டிக் காட்டுவது தானமல்ல.

கோவை மனம் 461.      சதிக்கே முக்கியத்துவம் கொடுத்து உண்மைக்கும் உழைப்புக்கும் மரியாதை கொடுக்காத நாடும் வீடும் பாழ்.

கோவை மனம் 462.      கேடு புரிவதாலே புகழ் அடைந்தவனும், நல்லது செய்தே புகழ் அடைந்தவனும் எதிர்காலத்தில் அவரவர் வினைப்படி பாராட்டுப் பெறுவர்.

கோவை மனம் 463.      உங்களின் ஒவ்வொரு நற்சிரிப்பும் மற்றவர்கள் மீது உங்களின் அன்பு வெளிப்படும் ஒரு அளவுகோல்.

கோவை மனம் 464.      நேற்று நம் கையில் இல்லை. இன்று நீ செய்யும் செயலே நாளை உனதாக இருக்கும்.

கோவை மனம் 465.      அன்பான வார்த்தைகள் சுருக்கமாகவும் பேசுவதற்கு எளிதாகவும் இருந்தால் அவற்றின் எதிரொலி உன்னை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.

கோவை  மனம் 466.     உலக அமைதியை மேம்படுத்துவதற்கு முதலில் குடும்ப அமைதியை மேற்கொள்.

கோவை  மனம் 467.     குடும்ப அமைதியை மேற்கொண்டவனால் மட்டுமே உலக அமைதிக்கு வித்திட முடியும்.

கோவை மனம் 468.      சோற்றுப் பசியைக் கூட அகற்றிவிடலாம்.  ஆனால், அன்புப் பசியை ஒருவனுக்கு அகற்றுவது எளிதல்ல.

கோவை மனம் 469.      எல்லோரிடமும் பணிவுடன் இருப்பதே ஆண்மைக்கு அழகு.

கோவை மனம் 470.      புகழும் அவமானமும் பணிவதால் வருவதல்ல.  அவனவன் செயல்களால் வருவதே.

கோவை மனம் 471.      ஒருவரை ஏமாற்றிப் பெற்ற சொத்து, உனக்கென நிலைக்காமல், நிச்சயம் ஒருநாள் உன்னை விட்டுப் போகும்.

கோவை மனம் 472.      அவமானப்பட்ட இடத்திலேயே உன் சாதனையை நிகழ்த்திக்காட்டு, உன் புகழ் உச்சிமேல் ஏறும்.

கோவை மனம் 473.      உன்னதமான தாயும் தந்தையுமே ஏமாற்றத உறவு.

கோவை மனம் 474.      ஆடம்பரமாக வாழ்வதல்ல வாழ்க்கை. ஆரோக்கியமாக வாழ்வதே ஆனந்தமான வாழ்க்கை.

கோவை மனம் 475.      ஊருக்காக உறவாடாதே. உனக்காக உறவாடு.

கோவை மனம் 476.      பெண்மையைக் கொண்டாடாத நாடும் வீடும் பாழ்.

கோவை மனம் 477.      மனம் நாடுவதைச் செய்தால் வெற்றியோ தோல்வியோ எதுவானலும் அதைத் தாங்கும் சக்தி மனதிற்கு மட்டுமே உண்டு.

கோவை மனம் 478.      உண்மைக்காக எதையும் துறக்கலாம்.  ஆனால், எக்காரணம் கொண்டும் உண்மையைத் துறக்காதே.

கோவை மனம் 479.      துன்பக் காலத்தில் பெற்ற அனுபவமே வாழ்க்கையில் உன்னைச் செப்பனிடும் சிற்பி.

கோவை மனம் 480.      தோல்விகளையே பெற்றவனின் மனம் வலிமையுடையதாக இருந்தால்தான் இவ்வுலகில் வாழ முடியும்.

கோவை மனம் 481.      உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டு அவனும் சாதனையாளனாவான்.

கோவை மனம் 482.      ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை மறைந்திருக்கும்.  அத்திறமை வெளிப்படாத வரையே அவன் கையாளாகாதவன்.  வெளிப்பட்டபின் அவனே ஆகச் சிறந்தவன்.

கோவை மனம் 483.      வீட்டைப்போல் வீதியையும் நாட்டையும் பேணிப்பார், சுகாதாரம் தானாய் வரும்.

கோவை மனம் 484.      நாவடக்கம் உன்னை நாளும் உயர்த்தும்.

கோவை மனம் 485.      நன்றி இல்லாதவனிடம் நன்றியை எதிர்பார்க்காதே.

கோவை மனம் 486.      தாயின் பாசத்திற்கும் தந்தையின் வளர்ப்பிற்கும் விலை வைக்க முடியாது.

கோவை மனம் 487.      தந்தையின் வருமானத்தில் மகனுக்குப் பங்குண்டு.  ஆனால், மகனின் வருமானத்தில் தந்தைக்கு?

கோவை மனம் 488.      நாம் எதைப் பிறருக்குச் செய்கிறோமோ, அதுவே நமக்கு வந்து சேரும்.

கோவை மனம் 489.      நல்லோர் மனம் வருந்தினாலே வருத்தியவர்களுக்குத் தானே தண்டனை கிடைக்கும்.

கோவை மனம் 490.      கோபக்காரர்கள் குழந்தை மனம் கொண்டவர்கள்.

கோவை மனம் 491.      அழுது அடம்பிடிக்கும் கோபக்காரன் யாரையும் ஏமாற்ற மாட்டான்.

கோவை மனம் 492.      கஷ்டத்தில் உதவியவரையும், கஷ்டத்தில் உதவாதவரையும், கஷ்டத்தை உண்டாக்கியவரையும் ஒருபொழுதும் மறக்காதே.

கோவை மனம் 493.      சொத்து சேர்க்காவிட்டாலும் வாழ்நாளில் பாவத்தை மட்டும் சேர்க்காதே.

கோவை மனம் 494.      மதிக்கும் இடத்தில் மண்டியிடவும் தயங்காதே. ஆனால், மதிக்காத இடத்தில் மன்னிப்புக் கூட கேட்காதே.

கோவை மனம் 495.      தனக்குண்டான வலியைப்போல் பிறருக்கும் வலிக்கும் என்று உணர்பவனே நல்லவன்.

கோவை மனம் 496.      அன்பாகப் பேசிக்கொண்டு இருக்கின்ற உறவை விட, அடிக்கடி சண்டையிட்டு உறவாடும் உறவுக்கு ஆயுள் அதிகம்.

கோவை மனம் 497.      ஆயிரமாயிரம் அன்பை மனத்திற்குள் வைத்துக் கொண்டு வெளிக்காட்டத் தெரியாமல் எதிரியாகவே நடமாடும் ஓர் உயிர் “அப்பா”.

கோவை மனம் 498.      நீ அழும்போது அனுமதி பெறாமல் நீ சாய எந்த தோள் அனுமதிக்கிறதோ அதுவே உனக்கான உண்மையான உறவு.

கோவை மனம் 499.      தோல்விகளையே சந்தித்தவன் என்றும் சோர்ந்து போகமாட்டான்.

கோவை மனம் 500.      தாய்க்குப் பின் தாரம். ஆனால், தந்தைக்குப் பின் தந்தையே.

கோவை மனம் 501.      விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால் எதிரிகூட அஞ்சுவான்.

கோவை மனம் 502.      கோபத்தில் கோபத்தைத் தூக்கி எறி. வாழ்க்கை இனிக்கும்.

கோவை மனம் 503.      வீசப்படும் கல்லிலும் பேசப்படும் சொல்லிலும் கவனமாக இரு.  கல் உயிரைக் கொல்லும், சொல் உறவைக் கொல்லும்.

கோவை மனம் 504.      கை நீட்டி அழைப்பது உத்தம தந்தையாக இருக்கும்போது நீ கடலிலும் துணிந்து குதிக்கலாம்.

கோவை மனம் 505.      யாரையும் நம்பி வாழாதே. உன்னை  மட்டுமே நம்பி வாழ்.

கோவை மனம் 506.      யாரையும் முழுவதும் சார்ந்து இருக்காதே.  காலம் மாறும்போதும் கலங்கிப் போவாய்.

கோவை மனம் 507.      முட்டாளாக ஏமாந்தவர்களைவிட இரக்கக் குணத்தால் ஏமாறுபவர்களே அதிகம்.

கோவை மனம் 508.      பிறரால் காயப்படலாம். பிடித்தவர்களால் காயப்படாதே.

கோவை மனம் 509.      இளமையில் தந்தையையும், முதுமையில் மனைவியையும் இழக்கக் கூடாத சொத்து.

கோவை மனம் 510.      எதுவும் இல்லாமல் பிறந்து, எல்லாம் பெற்று வாழ்ந்து, எதுவும் இல்லாமல் பெற்ற அனைத்தையும் விட்டுச் செல்வதுதான் வாழ்க்கை.

கோவை மனம் 511.      தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டெழு, வெற்றி உனதே.

கோவை மனம் 512.      சதிக்கே முக்கியத்துவம் கொடுத்து உண்மைக்கும் உழைப்புக்கும் மரியாதை கொடுக்கத் தவறிய நாடு பாழாகும்.

கோவை மனம் 513.      உண்மையாய் இருப்பதால் காயப்படுகிறோம். நேர்மையாய் இருப்பதால் சோதிக்கப்படுகிறோம். உரிமையாய் இருப்பதால் கோபப்படுகிறோம்.

கோவை மனம் 514.      உறவு பிரியும் என்று உணர்ந்தவன் சண்டையிடும் போது அமைதி காப்பான்.

கோவை மனம் 515.      உன் துன்பத்தைத் துடைக்க எவரும் வரமாட்டார்.  ஆனால், நீ ஒரு சிறு தவறு இழைத்தாலும் சுட்டிக்காட்ட ஒன்று கூடும் உலகம் இது.

கோவை மனம் 516.      நீ யாருக்கு அதிகம் உதவினாயோ அவனே உனக்கு முதல் எதிரி.

கோவை மனம் 517.      ஊதியம் பெறும் வரை கிடைத்த மதிப்பானது ஊதியமற்ற பிறகும் தொடர வாழ்.

கோவை மனம் 518.      அன்புள்ளவரிடம் கோபமும், பாசமுள்ளவரிடம் பயமும், உண்மை உள்ளவரிடம் பிடிவாதமும், உரிமை உள்ளவரிடம் சண்டையும் இருக்கும்.

கோவை மனம் 519.      இருந்தால் உறவு, இறந்தால் நினைவு என்பதை உணர்ந்தால் கசப்பே இல்லாத வாழ்க்கை அமையும்.

கோவை மனம் 520.      சீரான மலக்கழிவால் உடல் சுகம் பெறுவதுபோல் சீரான வாழ்க்கையே வீடு பெறு பெறும்.

கோவை மனம் 521.      உயிர்  இருந்தும் உணர்வுகள் இல்லாத உடலைச் சுமக்கும் ஒவ்வொரு உடலும் கல்லறையே.

கோவை மனம் 522.      உன்னைப் பயன்படுத்திக் கொள்கிறவர்களுக்கு நீயே குப்பைத் தொட்டி.  உன்னால் பயன் பெறுபவர்களுக்கு நீயே புத்தகம்.

கோவை மனம் 523.      பெற்றவர்களின் நிலை அறிந்து தன்னுடைய ஆசைகளை உயிருடன் அடக்கம் செய்யும் குழந்தைகள் அனைத்தும் வாழும் தெய்வங்களாகும்.

கோவை மனம் 524.      இல்லாததால் வருந்தாதே.  இருக்கிறது என்பதால் ஆடாதே.  இல்லாதது கிடைக்கும், இருப்பது பறிபோகும் என்பதை உணர்ந்து வாழ்.

கோவை மனம் 525.      விழுந்து விடுவேனோ என்ற பயத்தோடு ஓடாதே.  விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்ற நம்பிக்கையில் ஓடு.  தடுமாறாத வாழ்க்கை அமையும்.

கோவை மனம் 526.      மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் அம்மாவின் கருவறை. அரவணைக்கும் அப்பாவின் மடியும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தான்.

கோவை மனம் 527.      நல்லவர்களாய் நடிப்பவர்களோடு நம்பிக்கையோடு பயணிப்பதுதான் உலகிலேயே மிகவும் ஆபத்தான பயணம்.

கோவை மனம் 528.      நடிப்பவனுக்கு ரோஷம் இருக்காது, உறவுகள் இருக்கும். நடிக்கத் தெரியாதவனுக்கு ரோஷம் இருக்கும் உறவுகள் இருக்காது.

கோவை மனம் 529.      எழுத வைப்பதோ படிக்க வைப்பதோ அல்ல; சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் பயன்படுவதே கல்வி.

கோவை மனம் 530.      தாய்-தந்தையர்க்கு சோறு போடாதவன் ஊருக்கே சோறு போட்டாலும் புண்ணியம் அணுவளவும் கிடைக்காது.

கோவை மனம் 531.      நாய் குரைப்பதைச் சிங்கம் எப்பொழுதும் பொருட்படுத்தாததுபோல் புறம் பேசுவோரை மதியாதே. 

கோவை மனம் 532.      உனக்குத் தரப்படும் முக்கியத்துவம் குறையும்போது நீயாகவே விலகி விடுவதுதான் உனக்கு மரியாதை.

கோவை மனம் 533.      எதுவுமே நிரந்தரம் இல்லாத உலகில் உறவுகள் மட்டும் நிரந்தரமாக இருக்கும் என்று நினைப்பது தவறு.

கோவை மனம் 534.      உன்னை நம்மாத உறவுகளிடம் உறவாடுவதை விட ஒதுங்கி இருப்பதே நல்லது.

கோவை மனம் 535.      ஏமாற்றிப் பெறும் பணமும் பாசமும் நிலைக்காது.

கோவை மனம் 536.      உடன் பிறந்தவரின் உண்மையான பாசமும் அன்பும் மூதாதையர் சொத்துக்களைப் பிரிக்கும்போது தெரியும்.

கோவை மனம் 537.      பழி சொல்லத் தெரிந்தவர்களுக்கு வழி சொல்லத் தெரியாது.

கோவை மனம் 538.      தவறான புரிதல் இருக்குமிடத்தில் சொல்லப்படும் எந்த விளக்கமும் பயனற்றது.

கோவை மனம் 539.      நண்பர்கள் நிறைய பேர் இருப்பதை விட ஆபத்துக் காலத்தில் உதவும் நண்பன் ஒருவனைக் கொண்டிருத்தலே உனக்குப்  பெருமை.

கோவை மனம் 540.      வலி தந்தவரை மறந்தும், குறை சொன்னவரை மன்னித்தும், துரோகம் செய்தவனை ஒதுக்கியும் வாழ்ந்தால் வாழ்க்கைப் பாதை சிறக்கும்.

கோவை  மனம் 541.     உலகத்தைக் காட்டிய தாயும், நாமே உலகமாய் இருக்கும் மனைவியும் நம்முடைய இரு கண்கள்.

கோவை மனம் 542.      தாயை நேசி, மனைவியை சுவாசி.

கோவை மனம் 543.      காலம் கடந்த கண்ணீரும், காயம் ஆறிய பின் கிடைக்கும் மருந்தும், வயது கடந்தபின் கிடைக்கும் உறவும் வீண்.

கோவை மனம் 544.      மௌனமும், புன்னகையும், தனிமையும் தன்னைக் காக்கும் கேடயங்கள்.      

கோவை மனம் 545.      உன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு வார்த்தையால் பதிலிடாமல் வாழ்க்கையில் பதிலிடு.

கோவை மனம் 546.      உன் வாழ்க்கைப் பயணத்தில் வரும் எல்லா உறவுகளும் வழிப்போக்கர்களே. உன் பயணத்தில் உனக்குத் துணை நீயே என்பதை உணர்ந்து வாழ்.

கோவை மனம் 547.      தானாக சாத்திக்கொண்ட கதவைத் தட்டலாம்.  ஆனால், தெரிந்தே சாத்திக் கொண்ட கதவைத் தட்டாதீர்கள். திறக்காது, திறந்தால் உனக்கு அவமானம்.

கோவை மனம் 548.      கிடைக்காததை நினைத்து ஏங்குவதைவிட அவை அனைத்தும் பிடிக்காது என்று கருதி பழகிக்கொள். ஏக்கமற்ற வாழ்க்கை அமையும்.

கோவை மனம் 549.      உன் வாழ்க்கையில் அன்பும் பொருளும் கிடைக்க சில காலம் தள்ளிப்போகலாம். ஆனால், கிடைக்காமல்  போகாது. 

கோவை மனம் 550.      கடமையில் வழுவாது தொடர்ந்து செய். தனது திறமையும் நேர்மையும் வெளிப்படும்போது உன்னுடைய எதிரி கூட மதிக்கத் தொடங்குவான்.

கோவை மனம் 551.      ஒருவரை இழக்கும்போது வரும் கண்ணீரை விட அவர்களை இழக்கக் கூடாது என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு வலி அதிகம்.

கோவை மனம் 552.      யாரும் குளத்தைக் கலங்கடிக்கச் செய்யலாம். தெளிய வைக்க அந்தக் குளத்தால் மட்டுமே முடியும் என்பதுபோல் நம் மனதை யாரும் கலங்கடிக்கலாம், கலங்கிய மனது தெளிவு பெற உன்னால் மட்டுமே முடியும்.

கோவை மனம் 553.      பயத்தால் வரும் பக்தியும், பக்தியால் வரும் புத்தியும், புத்தியால் வரும் வெற்றியும், வெற்றியால் வரும் வசதியும், வசதியால் வரும் திமிரும், திமிரால் வந்த ஆணவமும், ஆவணத்தால் அழிவும் வரும்போது மீண்டும் பயம் வருகிறது, பயம் வந்ததும் பக்தி வருகிறது. இதுதான் மனித வாழ்க்கை.

கோமைவ மனம் 554.   முதலில் பெற்றோருக்காகவும், பிறகு கணவருக்காகவும், அடுத்து பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்து தனக்காக வாழாதவள்தான் பெண்.

கோவை மனம் 555.      துன்பம் தருபவர்களைச் சந்திப்பதையும் சிந்திப்பதையும் தவிர்த்துப்பார், உன்னால் நிம்மதியாக வாழ முடியும்.

கோவை மனம் 556.      உத்தம நண்பனாக இரு அல்லது  எதிரியாக இரு. ஆனால், துரோகியாக மட்டும் இருக்காதே.

கோவை மனம் 557.      உறவுகளை இழக்க மனம் இல்லாதவர்கள் விட்டுக் கொடுப்பார்கள். உறவுகளே வேண்டாம் என்பவர்கள் விட்டுப் போவார்கள்.

கோவை மனம் 558.      நம்மிடம் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்களிடம் கோபம் கொள்ளாதே.  மாறாக, குறைகளைச் சரி செய். வாழ்க்கை சுகமாகும்.

கோவை மனம் 559.      முடிந்ததைக் கனவாகவும், நடக்கப்  போவதைச் சவாலாகவும் கொள். வாழ்க்கை இனிக்கும்.

கோவை மனம் 560.      உன் மதிப்பு உன்னை மட்டும் சார்ந்தது அல்ல.  நீ சேரும் இடத்தைப் பொருத்தே உன் மதிப்பு அமையும்.

கோவை மனம் 561.      துன்பம் கண்டபோதெல்லாம் தளராமல் ஓய்வெடுத்துச் சிந்தித்துச் செயற்படு. வெற்றிப் பாதை தெளிவாகத் தெரியும்.

கோவை மனம் 562.      சொல் புத்தியும், சுய புத்தியும் இல்லாதவன் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்.

கோவை மனம் 563.      கோபச் சொற்கள் உண்மையானவை. கொஞ்சும் சொற்கள் பொய்யானவை என்பதை உணர்ந்தால் மனம் தெளிவடையும்.

கோவை மனம் 564.      உண்மையும் நேர்மையும் உன்னுடைய அழியாச் சொத்து.

கோவை மனம் 565.      ஒரு மனதைக் காயப்படுத்தி வேறொரு மனதை மகிழ்விக்காதே.  நீ எய்த அம்பு எப்பொழுதும் உன்னைத் தாக்கும்.

கோவை மனம் 566.      இன்று நீ முக்கியமாகக் கருதப்பட்டவர்களுக்கு, நாளை அவர்களுக்கு ஒன்றுமில்லாதவர்களாக ஆவீர். எனவே, தனியே வாழப் பழகு.

கோவை மனம் 567.      கூட்டமாக இருக்கின்ற இடத்தில் உட்கார இடம்தேடுபவன், காலியாக இருக்கும் இடத்தில் எந்த இடத்தில் உட்காரலாம் என ஆராயத் தொடங்குபவன் அலைமனம் கொண்டவன்.

கோவை மனம் 568.      பறவை உயிருடன் இருக்கும்போது எறும்பைத் தின்னும்.  அதே பறவை இறந்தவுடன் எறும்புகள் பறவையைத் தின்னும்.  இதனை உணர்ந்தவன் வாழ்க்கை சிறக்கும்.

கோவை மனம் 569.      ஒருவளிடம் மட்டும் அதிகமாகக் கோபப்படும் ஆண், மற்ற பெண்களிடம் கொஞ்சிப் பேசாதவன்.

கோவை மனம் 570.      ஏற்றப்பட்டவனை விட ஏற்றிவிட்டவன் உயர்ந்தவன்.

கோவை மனம் 571.      நாம் பாவம் பார்த்த யாரோ ஒருவர்தான் தக்க நேரத்தில் நம்மைப் பதம் பார்த்திருப்பார்கள்.

கோவை மனம் 572.      யார் மனதையும் காயப்படுத்தாமல் ஒதுங்கிச் செல்பவரைத் தேடிச் சென்று அவர்மீது முதல் கல்லை எறியும் உலகம் இது.

கோவை மனம் 573.      சாப்பிடுங்க என்று மனைவியும், சாப்பிட்டாயா என்று கணவனும் கேட்டுக் கொண்டாலே அவர்களுக்குள்ளான ஊடல் கூடலாகும்.

கோவை மனம் 574.      உன்னைத் தனிமைப்படுத்திப் பார், உன்னைச் சுற்றி உள்ளவர்கள் எவ்வளவு போலியானவர்களாக இருந்தார்கள் என்பதை உணர்வீர்.

கோவை மனம் 575.      உன்னுடைய தனிமையே உன் வாழ்க்கையைச் செதுக்கும் சிற்பி.

கோவை மனம் 576.      உதவிகள் செய்தால் வழிப்போக்கனும் உறவாவான்.  உதவிகள் கேட்டால் இரத்த உறவும் எட்டி நிற்கும் பொல்லாத உலகம் இது.

கோவை மனம் 577.      இறந்தவர்களுக்குச் சிலை வைப்பதை விட இல்லாதோருக்கு இலை போடு, செய்த தவறுகள் தீயாய்ப் போகும்.

கோவை மனம் 578.      தவறிழைக்காமல் தன்மானத்திற்குச் சீர்கேடு வந்தால் எவராக இருந்தாலும் எதிர்த்து நில்.

கோவை மனம் 579.      யாரைப் போலவும் வாழாமல், தன்னுடைய பாதையில் இயல்பு மாறாமல் பயணம் செய். அதுவே, உன்னை தலை நிமிரச் செய்யும்.

கோவை மனம் 580.      இப்போதைக்கு மரணம் இல்லை என்று நினைப்பவன் பொருள் சேர்ப்பதில் நாயாய் அலைவான்.  எப்பொழுதும் மரணம் வரலாம் என்று நினைப்பவன் வாழ்க்கை ஒவ்வொரு பொழுதும் அனுபவித்து வாழ்வான்.

கோவை மனம் 581.      நிர்வாணத்தில் காமத்தைக் காணாதவனிடம் உண்மையான அன்பு குடிகொண்டிருக்கும்.

கோவை மனம் 582.      உன்னை எதிர்ப்பவரை நேர்மையாக எதிர்த்து நில். உலகம் உன் பின்னால் நிற்கும்.

கோவை மனம் 583.      அனாதையாக்கப்பட்ட நெஞ்சமானது கூட்டை இழந்த குருவியைப் போல அன்பாய் யார் பேசினாலும் அப்படியே நம்பும்.

கோவை மனம் 584.      அஞ்சியும் கெஞ்சியும் வாழாமல் நேர்மையாய் வாழ்.

கோவை மனம் 585.      ஒருவனுக்கு நீ தேவைப்படும் வரையே நல்லவன்.  அவனுடைய தேவை முடிந்த பிறகு நீயே அவனக்குக் கெட்டவன்.

கோவை மனம் 586.      பசிக்கும் போது கூட தன் உழைப்பினால் மட்டுமே உண்பவன் உண்மையான மனிதன்.

கோவை மனம் 587.      வேடிக்கை பார்ப்பவர்களுக்குப் பாதிக்கப்பட்டவரின் வலி புரியாது.

கோவை மனம் 588.      ஒருவனுக்கு, உன்னுடைய நேர்மையைவிட மற்றொருவர் முக்கியமாகிவிடும்போது தன் மானத்துடன் விலகிச் செல்.

கோவை மனம் 589.      கடிக்கும் விலங்குகளோடு வாழ்ந்து விடலாம்.  ஆனால், நடிக்கும் மனிதர்களோடு வாழ்வது கடினம்.

கோவை மனம் 590.      துணியாதவரை வாழ்க்கையில் அச்சம் காட்டும்.  துணிந்த பிறகு வாழ்க்கையில் வெளிச்சம் காட்டும்.

கோவை மனம் 591.      படிக்காதவன் கல்லூரியின் முதலாளி ஆகலாம்.  ஆனால், அவனால் கல்லூரியில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க முடியாது.

கோவை  மனம் 592.     ஒட்டாத உறவுகள் உன்னை நேசிக்கவில்லை என்பதை உணர்.

கோவை மனம் 593.      நீ விழும் போது முதலில் உதவி செய்பவன், ஏற்கெனவே தானும் அந்த வலியை உணர்ந்தவனாக இருப்பான்.

கோவை மனம் 594.      உனக்கு ஏற்பட்ட அவமானமே, நீ யாரென்று உனக்குப் புரிய வைக்கும் ஆயுதம்.

கோவை மனம் 595.      யாருடைய உதவியும் கிடைக்காத வரை தானாக தன்னைக் காக்க முயற்சிப்பவன், உதவி கிடைத்தவுடன் தன்னுடைய முயற்சியைக் கைவிடுவான்.

கோவை மனம் 596.      வைத்த இடத்தில் வைத்த பொருள் இல்லாதபோது அலைபாயும் மனம்.  பொருள் சென்ற இடமும் இருக்கும் இடமும் அறிந்ததும் மனம் அமைதி கொள்ளும்.

கோவை மனம் 597.      யார் சொல்லையும் கேட்காதவரும், யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்புபவரும் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது.

கோவை மனம் 598.      இன்று இல்லை என்பதற்காக வாடாதே.  இன்று எல்லாம் இருக்கிறதே என்று ஆடாதே. வாழ்க்கை, நேர்க்கோடல்ல. அதுவொரு சக்கரம்.

கோவை மனம் 599.      தவறான புரிதல் இருக்கும் இடத்தில் எப்பேர்ப்பட்ட விளக்கமும் எடுபடாது.

கோவை மனம் 600.      காயப்படுத்தியவரை மன்னித்துக் கடந்து செல். அப்போதுதான் உன்னுடைய மன வலியின் உச்சம் புரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக