ஞாயிறு, 14 அக்டோபர், 2018

சுவடி எழுதிய முறைகள்


தங்களின் எண்ணங்களைப் பதிவு செய்யவேண்டும் என மக்கள் என்று நினைத்தார்களோ அன்றே எழுத்து வடிவங்கள் தோன்றலாயின.  இவ்வெழுத்து வடிவங்கள் காலந்தோறும் மாறிமாறி வந்துள்ளன.  அதேபோல் எழுதுபொருள்களும் காலந்தோறும் மாறிமாறி வந்துள்ளன.  எழுதப்படும் செய்தியின் பாதுகாப்பு கருதியும் வாழ்நாள் கருதியும் எழுதுபொருள்கள் வேறுபட்டு இருக்கின்றன.  அரசாங்கச் செய்திகளை செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகளிலும்; இலக்கணம்,  இலக்கியம், மருத்துவம், மாந்திரீகம் மற்றும் சோதிடச் செய்திகளைப் பனையோலை மற்றும் சீதாள ஓலைகளிலும் எழுதி இருக்கின்றனர்.  பெரும்பாலும் இலக்கண இலக்கியச் செய்திகளை மட்டும் சீதாள ஓலைகளில் எழுதியிருக்கின்றனர் என்று அறிய முடிகிறது.

எழுத்தாணி கொண்டு பனையோலை மற்றும் சீதாள ஓலைகளில் எழுதப்படுவதை 'ஏடெழுதுதல்' என்றும், 'ஓலையெழுதுதல்' என்றும் சொல்வர்.  இவ்வோலை எழுதுவோரை 'ஏடெழுதுபவர்' என்றழைப்பர்.  ஏடெழுதுபவரைக் கொண்டு அக்காலத்தில் (அச்சு நூல்கள் தோன்றுவதற்கு முன்) மூன்று நிலைகளில் ஏடுகள் எழுதப்பெற்று இருக்கின்றன. அவை,
1. மூல ஏடெழுதுதல்
2. நகலேடு எழுதுதல்
3. திருத்திய ஏடெழுதுதல் 
என்பவையாகும்.

1. மூல ஏடெழுதுதல்

எழுதப்படும் முதற்படியே மூல ஏடாகும்.   மூல ஏடெழுதுதல் என்பது, நூலாசிரியர் தனக்காகத் தானாகவோ தன் தலைமாணாக்கரைக் கொண்டோ தன் மகனைக் கொண்டோ ஏடெழுதுவதில் வல்லாரைக் கொண்டோ முதன் முதல் எழுதுவதாகும்.  மூல நூலும் மூல நூலிற்கு வரைந்த உரையும் முதற் நூலாகும்.  மூல ஏட்டில் உருவான இலக்கண இலக்கியம், மருத்துவம் போன்றன பலதலைமுறை வாய்மொழியாக வளர்ந்து பின்னரே ஏட்டில் பழங்காலத்தில் எழுதியிருக்கின்றனர். இலக்கண உரைகள், இலக்கிய உரைகள், மருத்துவக் குறிப்புகள், மருத்துவ நூல்கள், நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், சிற்றிலக்கியங்கள் போன்றன இதில் அடங்கும்.  இவற்றில் சில மட்டுமே நூலாசிரியர் சொல்லச் சொல்ல பிறர் எழுதியவையாகவோ நூலாசிரியர் எழுதியவையாகவோ இருக்கின்றமையைக் காணமுடிகிறது.

ஒன்பது தலைமுறை வாய்மொழியாக வழங்கி வந்து ஏடெழுதியமையை, "மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம் மகனார் கீரங்கொற்றனார்க்கு உரைத்தார்.  அவர் தேனூர்க்கிழார்க்கு உரைத்தார்.  அவர் படியங்கொற்றனார்க்கு உரைத்தார்.  அவர் செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்க்கு உரைத்தார்.  அவர் மணலூர் ஆசிரியர் புளியங்காய்ப் பெருஞ்சேந்தனார்க்கு உரைத்தார்.  அவர் மாதளவனார் இளநாகர்க்கு உரைத்தார்.  அவர் திருக்குன்றத்தாசிரியர்க்கு உரைத்தார்.  அவர் முசிறியாசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார்" என இறையனார் அகப்பொருள் உரை வழங்கியமையை அறியமுடிகிறது.

"தர்மபரிபாலன நாராயணன் செட்டியார் கவிச்சக்கரவார்த்தியாகிய கம்பனானவர் நூற்கப்பட்ட இராமாயணக்கதை விருத்தத்துக்குப் பொருள் விளக்குவதரிதென்று பெரியோர்கள் சொல்லுவதாகிய கதைக்குத் தெரிந்த மாத்திரம் கிட்கிந்தா காண்டம் ஒரு காண்டத்துக்கு உரைசெய்து அதற்கு இலக்கணச் சொல்லுமெழுது வேணுமென்று சொன்ன படியினாலே எழுதி முடிந்தது" (ஆர்.431:கீ) என்பதில் உரையாசிரியர் தானே ஏடெழுதியமையும், "பாலபாரதி வெங்கிடாசலமய்யன் குமாரன் காமாட்சி அய்யன், புதுக்கோட்டையில் இருக்கும் பூமன் செட்டியார் குமாரன் திருப்பூமன் செட்டியாருக்குச் சொல்ல தேரூர்ந்தபுராணம் எழுதி நிறைந்தது" (டி.611:கீ) என்பதில் ஒருவர் சொல்ல பிறிதொருவர் ஏடெழுதியமையையும் அறியலாம்.

2.  நகலெடெழுதுதல்

முன்னேட்டைப் பார்த்து எழுதப்படும் பிறிதொரு ஏடே நகலேடு என்பர்.  இதனை வழியேடு என்றும் அழைப்பர். முன்னேடு என்பது எழுதப்படும் ஏட்டிற்கு மூலயேடாவதாகும்.  நகலேடு எழுதும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தமையினாலேயேதான் இன்றும் நமக்குப் பழைய இலக்கிய இலக்கண மருத்துவ நூல்கள் கிடைக்கின்றன.  பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் அக்காலத்தில் மக்கள் நகலேடுகள் எழுதியிருக்கின்றனர்.  நகலேடுக்கப்பட்டதற்கான காரணங்களைக் கீழ்வருமாறு சுட்டலாம்.

அ. அழிவிலிருந்து சுவடிகளைக் காக்கவேண்டியும்
ஆ. படிப்பதற்காகவும்
இ. சொந்தமாக வைத்துக்கொள்வதற்காகவும்
ஈ. வாரிசுதாரர்கள் பங்கு பிரித்துக்கொள்ளும் போது ஒரே
சுவடியைப் பலருக்குக் கொடுக்க நேரிடும் போதும்
உ. செப்பேட்டைப் பார்த்தும்

என இவ்வைந்து நிலைகளில் நகலேடு எழுதியிருக்கின்றனர்.

பனையேடுகள் அதிகப்படியாக நானூறு ஆண்டுகளே வாழக்கூடிய திறனைப் பெற்றவை என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு.  சங்ககால இலக்கிய இலக்கணங்கள் இன்றும் நமக்குக் கிடைப்பதைக் காணும் போது பழைய சுவடியைப் பார்த்து நகலெடுக்கும் வழக்கம் இருந்திருத்தல் வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது.  "சிறந்த சுவடியாகத் தேர்ந்து சீரிய பாடங்கள் செய்து, போற்றிக் காக்கப் பெற்றுவரும் ஏட்டுச் சுவடிகளே முந்நூறு, நானூறு ஆண்டுக்காலம் வாழமுடியும் என்பர்!   அவ்வாறாக மூவாயிர ஆண்டுகள் எத்துனையோமுறை, தவறாமல் படியெடுத்துப் பாதுகாத்து வந்தமையால்தான் நம்கையில் தொல்காப்பியனார் அருளிய தொல்காப்பியம் கிடைத்தது.  ஒவ்வொருவரும் தாம் படித்துவரும் ஏட்டையே படியெடுத்தமையால் காலந்தோறும் ஏற்பட்டுவந்த எழுத்து மாற்றங்கள் அவர்களுக்குப் புதிதாகத் தோன்றாமல் - மயக்கம் உண்டாக்காமல் - இயல்பாகத் தோன்றின.  வழிவழியே படியெடுக்கவும் படிக்கவும் தடையின்றி ஆயிற்று.  இத்தகைய படியெடுப்புப்பணி இல்லாது போயிருக்மானால் தொல்காப்பியனார் கையெழுத்துச் சுவடியே நமக்குக் கிடைப்பினும் நன்மை எளிமையாக வாய்த்திராது" என்பர்(இரா. இளங்குமரன், சுவடிக்கலை, ப.5).  

அழிவிலிருக்கும் சுவடிகளைக் காக்கவேண்டி அதிலுள்ள செய்திகளைப் பிறிதொரு ஏட்டில் எழுதிக்கொண்டு பழைய ஏடுகளை ஆடிப்பெருக்கிலோ நல்லதொரு கிழமையிலோ ஓமம் வளர்த்துத் தீயிலோ போட்டு எறிந்தும் எறித்தும் இருக்கின்றனர்.  இப்படிச் செய்து வந்ததன் உண்மையான காரணத்தைப் புரிந்துகொள்ளாமல் பலர் சுவடிகளை ஆடிப்பெருக்கில் விட்டும் தீயிட்டும் அழித்திருக்கின்றனர்.  அவர்கள் படியெடுக்காமல் இப்படிச் செய்தமையால்தான் இன்று பல ஏட்டுச் சுவடிகள் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டன.  இதனையே உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் தம்முடைய 'என் சரித்திரம்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

படிப்பதற்காக நகலெடுத்தமையை "வஞ்சுஞ்சேரியிலிருக்கும் கிறும்வெங்கடாசல நாயகன் குமாரன் பாலகிருஷ்ண நாயகன் எழுதி வாசிக்கிற பெரியபுராண ஆத்திச்சுவடி எழுதி முடிந்தது" (ஆர்.1697:கீ). என்னும் குறிப்பிலிருந்தும்;  சொந்தத்திற்கு நகலெடுத்தமையை "....... இந்தச் சுவடி சாஸ்திரம் முத்தய்யபிள்ளை குமாரன் முத்துச்சாமிப் பிள்ளை எழுதிச் சொந்தமாய் வைத்துக்கொண்டது" (171:த) என்னும் குறிப்பிலிருந்தும் அறியமுடிகிறது.

பெற்றோரின் சொத்துக்களை அவரின் வாரிசுதாரர்கள் பங்கு பிரித்துக்கொள்ளும் போது அவர்  பயன்படுத்திய - பாதுகாத்து வந்த சுவடிகளையும் சமமாகப் பிரித்திருக்கின்றனர்.  ஒரே சுவடியைப் பலருக்கு அதிலுள்ள ஏடுகளைப் பிரித்துக் கொடுத்திருக்கின்றனர்.  இந்நிலையில் சுவடி முழுமை பெற மற்ற ஏட்டிலுள்ள செய்திகளை ஒவ்வொருவரும் நகலெடுத்திருக்கின்றனர்.  நகலேடு ஒருத்தரும் நகலெட்டின் முன்படி ஒருத்தரும் வைத்துக்கொண்டால் என்ன?  தம்முடைய பெற்றோர் அல்லது மூதாதையர் வாசித்த/எழுதிய சுவடி தங்களிடமும் இருக்கவேண்டும் என்ற தணியாத ஆர்வமே இதற்குக் காரணம் எனலாம்.  இவ்வாறு சுவடியை எழுதும் போது முன்னேட்டை எழுதியவர் பெயரையும் பின்னேட்டை எழுதியவர் பெயரையும் முற்குறிப்பு/பிற்குறிப்பில் குறிப்பிடுவது வழக்கம்.  இதனைத்,  "திருவான்மியூர் முத்தப்பிள்ளை படிக்கின்ற வாதவூரர் புராணம்.  மேல்மண்மேடு முத்தையா முடிவிலும், திருமழிசைக் கந்தப்பிள்ளை முதலிலுமாய் எழுதி நிறைந்தது"(583:சா) என்ற சான்றால் உணரலாம்.  என்றாலும், மேற்கூறியவாறு பொருள் கொண்டாலும் சுவடியை விரைவாக எழுதி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு மூன்று நான்கு பேர்களைக் கொண்டு எழுதிக் கொள்வது வழக்கமாக இருந்திருக்கின்றமையையும் காணமுடிகிறது.  எனவே ஒரு சுவடியை ஒருவர் மட்டும் எழுதாமல் பலரும் எழுதியமை தௌ¢ளத் தெளிவாகத் தெரிகிறது.

காலங்காலமாக வைத்துப் போற்றக் கூடிய செப்பேடு மற்றும் கல்வெட்டுகளை எல்லோரும் அறிய வேண்டிச் செப்பேட்டைப் பார்த்தும் கல்வெட்டுகளைப் பார்த்தும் பனையோலைகளில் எழுதியிருக்கின்றனர்.  "சீர்காழித் திருஞானசம்பந்தமூர்த்தி அடிமையான மருதநாயக மூர்த்தி நாகூர் கந்தசாமி முதலியாருக்கு எழுதினது.  திருவாரூர்ச் செப்பேட்டுப் படிக்கு உலோகநாத பண்டாரத்துத் திருவுளத்தினாலே பதினோராந் திருமுறையார் எழுதி நிறைந்தது" என்ற இக்கருத்து செப்பேட்டில் கூறப்பட்ட செய்திக்கேற்ப பதினோராந் திருமுறை எழுதியமையை அறியலாம்.

3. திருத்திய ஏடெழுதுதல்

மூல நூலாசிரியர் எழுதிய/எழுதுவித்த ஒரு சுவடிக்குப் பலர் தாமாகவோ பிறரைக் கொண்டோ எழுதிய நகலேடுகள் பக்கிப்பெருகியபின், நகலேடுகள் மூல ஏட்டிலிருந்து மாறுபட்டமையும் நிலைக்கு வந்தபிறகு கல்வியிற் சிறந்த ஒருவரால் ஒரு நூல் குறித்த பல சுவடிகளைத் திரட்டி ஒப்பாய்வு செய்து திருத்திய பாடமாக - உண்மையான பாடமாக பிறிதொரு சுவடியை உருவாக்கலே திருத்திய ஏடெழுதுதல் எனப்படும்.  இத்திருத்திய ஏடு இரண்டு நிலைகளில் எழுதப்பட்டுள்ளது.  அவை,

அ. அச்சாவதற்கு முன் எழுதப்பட்டது
ஆ. அச்சானதற்குப் பின் எழுதப்பட்டது 

எனப் பிரிக்கலாம்.

"இந்தப்புராணம்(சாந்தாதி யசுவமகம்) படித்த அமிர்தகவி செய்தது முகம்மது அண்ணாவியார் அவர்கள் குமாரர் சீவரத்தின அண்ணாவியார் அவர்கள் பரிசோதித்து சுத்தப்படுத்தி எழுதியிருந்த ஏட்டைப் பார்த்து மேற்படியார் தம்பி நூர்முகம்மது அண்ணாவியார் குமாரர் நவரத்தினக்கவி என்னும் காதர் முகையத்தீன் அண்ணாவியார் கை அட்சரம்" (714:த).  இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்து எழுதும் போது திருத்தி எழுதியவர் எவையெவை மட்டும் திருத்தியுள்ளார் இன்னும் என்னென்ன திருத்த வேண்டிய குறைபாடுகள் உள்ளன என்பதனையும் சுட்டிச் செல்வர்.  இதனை, "இவ்வுரையாசிரியர் கருத்துணராமல் காலத்தார் வேண்டாதனவற்றிற்கு வேண்டுவனவாகக் கருதி இடையிடைமடுத்த தப்புரைகளைச் சொல் வேறுபாட்டாலும் பொருள் வேறுபாட்டாலும் இலக்கண வழுவானும் வாசக பேதத்தானுங் கண்டு தள்ளி எழுதின சிந்தாமணி.  நச்சினார்க்கினியர் முதற் புத்தகம் முடிந்தது.  இன்னுமுரை வாசகங்களினு மிலக்கண வாய்ப்பாடுகளினு மோரோவிடங்களிற் சிறிது மிகையுண்டு அவற்றைப் பல பிரதிகளும் பார்த்துய்த்துணர்ந்து விலக்கிக் கொள்க" (1092:சா) என்று சுட்டப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது.

இதுபோல், அச்சிற்பதிப்பித்ததற்குப் பிறகும் பல சுவடிகளைத் திரட்டி அச்சு நூலோடு ஒப்பிட்டுப் பரிசோதித்துத் திருத்திய சுவடியொன்றை உருவாக்கித் தந்திருக்கின்றனர்.  இதனைத், "திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் பிழை தீர்த்துச் சென்னைப் பட்டனத்துக்கு அனுப்புவிச்சு வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடிக் கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டு அச்சிற்பதிப்பித்த காயிதப் பொத்தகத்தை ஆழ்வார்திருநகரியில் தேவர்பிரான் கவிராயர் ஆதிநாதபிள்ளை தலத்தேடுகள் வைத்துச் சோதித்து வேறேடு எழுதி இருப்பது.  மறுபடி திருநெல்வேலியில் அம்பலவாண கவிராயரிடத்தில் தீர்மானமானது.  ஆழ்வார்திருநகரியில் சோதித்தது . . . . . . . . .  நம்முடைய ஏடு சுத்தமாய்த் திருத்தியிருக்கிறது" (3074:க) என்று சுட்டப்பட்டுள்ளமையைக் காணலாம்.

இன்று கிடைக்கக்கூடிய; இருக்கக்கூடிய சுவடிகளில் 75 விழுக்காடு நகலெடுத்த சுவடிகளாகவேதான் இருக்கின்றன.  இவைகளில் பெரும்பாலும் இலக்கியம் மற்றும் மருத்துவச் சுவடிகளே உள்ளன.  மூல  ஏட்டினைப் பார்த்துப் பல நகலேடுகள் எழுந்தமையால்தான் உண்மையான மூல ஏட்டின் பாடத்தைக் காண திருத்திய ஏடு உருவாக்கப்படலாயிற்று எனலாம்.  நகலெடுத்தமை மக்கள் கல்வியின் மீது கொண்டிருந்த காதலையும்; திருத்திய ஏடெழுதியமை பாடம் பிழைபடக் கூடாது என்ற ஆராய்ச்சித் திறனையும் வெளிப்படுத்துகிறது எனலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக