ஞாயிறு, 14 அக்டோபர், 2018

தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் ஓலைச்சுவடிகள் -கற்றல் கற்பித்தல்

தொடக்க காலத்தில் பனையோலைகளில் எழுதப்பெற்ற செய்திகளைப் படியெடுத்தல் என்ற முறையில் மீண்டும் பனையோலைகளிலேயே படியெடுத்தனர்.  இது அச்சுப்பொறியும் காகிதமும் கண்டெடுக்கப்படுவதற்கு முன்பு வரையே இவ்வழக்கம் இருந்தது.  இவ்விரண்டின் வரவிற்குப் பிறகு சுவடிகளில் உள்ள செய்திகளை அச்சிட்டு பதிப்பிக்கத் தொடங்கினர்.  ஒரு சிலர் அச்சுப் புத்தகத்தின் நம்மபகத் தன்மை உறுதிப்படுத்தப்படாததால் அச்சுப் புத்தகத்தைப் பார்த்து பனையோலைகளில் எழுதிப் படித்த வழக்கத்தையும் காணமுடிகிறது.  அண்மைக் காலத்தில் பனையேடுகளில் உள்ள செய்திகளை மாற்றுருவாக்கிப் பாதுகாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.  மாற்றுருவாக்குதல் என்பது, பனையோலையில் உள்ள செய்திகளைப் பனையோலையில் உள்ளவாறே மின்னணுக் கருவி கொண்டு மின்நகலெடுத்தல் ஆகும்.  மாற்றுருவாக்குவதற்குச் செராக்ஸ், டிஜிட்டல் கேமரா, ஸ்கேனர்,  கணினி போன்ற மின் கருவிகள் தேவைப்படுகின்றன.  இக்கருவிகளால் பனையோலைச் சுவடிகளை மாற்றுரு வாக்குவதனால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன? அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகள் யாவை? தகவல் தொடர்புத் தொழில்நுட்பக் கருவிகளின் மூலம் ஓலைச்சுவடிகளைக் கற்றலும் கற்பித்தலும் எவ்வாறு அமைகிறது என்பது குறித்து இவ்வாய்வு அமைகிறது.

ஓலைச்சுவடிகளின் நிலை

  • தனியார் மற்றும் அரசு சுவடி நூலகங்கமாற்றுருவாக்குதல் என்பது, பனையோலையில் உள்ள செய்திகளைப் பனையோலையில் உள்ளவாறே மின்னணுக் கருவி கொண்டு மின்நகலெடுத்தல் ஆகும்.  மாற்றுருவாக்குவதற்குச் செராக்ஸ், டிஜிட்டல் கேமரா, ஸ்கேனர்,  கணினி போன்ற மின் கருவிகள் தேவைப்படுகின்றன.  மாற்றுருவாக்குதல் என்பது, பனையோலையில் உள்ள செய்திகளைப் பனையோலையில் உள்ளவாறே மின்னணுக் கருவி கொண்டு மின்நகலெடுத்தல் ஆகும்.  மாற்றுருவாக்குவதற்குச் செராக்ஸ், டிஜிட்டல் கேமரா, ஸ்கேனர்,  கணினி போன்ற மின் கருவிகள் தேவைப்படுகின்றன.  சுவடி நூலகங்களில் பாதுகாக்கப்பெற்ற நிலையிலும், தனியார் வீடுகளில் பலரிடம் பாதுகாப்பற்ற நிலையிலும் சுவடிகள் இருக்கும்.  இச்சுவடிகள் நல்ல நிலையில், சுமாரான நிலையில், பழுதுற்ற நிலையில், மிகவும் பழுதுற்ற நிலையில், செல்லரித்த நிலையில், முறிந்த நிலையில், உடைந்த நிலையில், கிழிந்த நிலையில், தேய்ந்த நிலையில் என்றவாறு பல்வேறு நிலைகளில் இருக்கும்.  
  • எண்ணெய்க்காப்பு செய்யப்பெறாத வௌ¢ளெழுத்து கொண்ட சுவடிகளாகவும், ஓலைகள் சுத்தம் செய்து எண்ணெய்க்காப்பு செய்யப்பெறாத சுவடிகளாகவும், சுத்தம் செய்யப்பெறாமல் கறை, தூசு மற்றும் அழுக்குடன் எண்ணெய்க்காப்பிடாத சுவடிகளாகவும் இருக்கும்.
  • ஓலைச்சுவடிக் கட்டுகளில் உள்ள ஓலைகள் கட்டு பிரிந்து இடம்மாறி இருக்கும்.
  • தொடக்கம், இடையில் மற்றும் இறுதியில் சிலபல ஏடுகள் இல்லாமலும், முறிந்தும், செல்லரித்தும் இருக்கும்.
  • ஏட்டெண் குறிப்பிடாமல் இருக்கும்.
  • ஒரு சுவடிக் கட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கும் போது ஏட்டெண் தொடரெண்ணாக இருக்கும் அல்லது ஒவ்வொரு நூலுக்கும் தனி ஏட்டெண் கொடுக்கப்பட்டிருக்கும் அல்லது நூலெட்டெண்ணும் தொடரேட்டெண்ணும் முறைப்படி கொடுக்கப்பட்டிருக்கும்.
  • உரைநடையாகவோ செய்யுள் நடையாகவோ அல்லது இரண்டும் கலந்த செய்யுளும் உரைநடையுமாகவோ சுவடிகள் இருக்கும்.
  • நாட்டுப்பனை, சீதாளப்பனை ஆகியவற்றின் தன்மைக்கேற்ப சுவடிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நீளம் மற்றும் அகலம் உடையதாக இருக்கும்.  ஒரே கட்டில் வெவ்வேறு நீள அகலங் கொண்ட ஏடுகளும் இருக்கும்.
  • ஒவ்வொரு சுவடிகளிலும் உள்ள கையெழுத்துக்கள் சுவடி எழுதுபவரின் கையெழுத்துப்படி வெவ்வேறாக இருக்கும்.  ஒரே சுவடியில் பலருடைய கையெழுத்தும் இருக்கும்.  ஒருவருடைய கையெழுத்தே பல்வேறு காலத்தில் எழுதப்படும் போது வேறுபட்டமைந்து, வேறுபட்ட கையெழுத்து கொண்ட ஒரே சுவடியாகவும் இருக்கும்.
  • ஓரு நூல் ஒரு ஏடு தொடங்கி பல நூறு ஏடுகள் கொண்டதாக இருக்கும்.
  • ஒரு சுவடியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கும்.  அந்நூல்கள், ஒரு பொருண்மை கொண்டவையாகவும், வெவ்வேறு பொருண்மை கொண்டவையாகவும் இருக்கும்.  இந்நூல்கள் செய்யுளாகவும், உரைநடையாகவும், செய்யுளும் உரைநடையுமாகவும் முறையே தனித்தனியாகவும் கலந்தும் இருக்கும்.
  • ஓலையின் ஒரு பக்கம் எழுதப்பெற்றும், இரு பக்கமும் எழுதப்பெற்றும் சுவடிகள் இருக்கும்.  இரு பக்கமும் எழுதப்பெற்ற சுவடிகளே பெரும்பான்மை இருக்கின்றன.
  • ஒரு பக்கத்தில் பல்வேறு எண்ணிக்கையிலான வரிகளையும், ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு பத்திகள் கொண்டவையாகவும் இருக்கும்.
  • பல்வேறு மொழிகளில் (தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, பாலி, ஒரியா போனற…), பல்வேறு பொருண்மைகளில் (இலக்கணம், உரைநடை இலக்கியம், காப்பியம், சிற்றிலக்கியம், சைவத் திருமுறைகள், சோதிடம், தத்துவம், தலபுராணம், நாட்டுப்புற இலக்கியம், நீதிநூல், பதினெண்கீழ்க்கணக்கு, பல்வகை நூல்கள், பிற தோத்திரங்கள், மருத்துவம், மாந்திரீகம், மெய்கண்ட சாத்திரம்) சுவடிகள் இருக்கும்.
  • பிற்குறிப்பு மற்றும் முற்குறிப்புச் செய்திகள் பெற்றும் பெறாமலும் இருக்கும்.  பிற்குறிப்பு மற்றும் முற்குறிப்புச் செய்திகளில் ஏடெழுதிய காலம், இடம், ஏடெழுதியவர், ஏடெழுதுவித்தவர், நூலாசிரியர் மற்றும் உரையாசிரியர் குறிப்பு, சுவடி பாதுகாப்பதற்கான வாசகம் போன்ற செய்திகள் இருக்கும்.

மாற்றுருவாக்குவதன் நோக்கம்

மேற்காணும் நிலைகளில் அமைந்த ஓலைச்சுவடிகளை மாற்றுருவாக்குவது இன்றைய தேவையாகிறது.  ஏனெனில், ஓலைச்சுவடிகளை நன்றாக பாதுகாத்து வந்தால் குறைந்தது நானூறு ஆண்டுகளே இருக்கக் கூடும்.  அதற்கு மேல் அவை அழியும் நிலைக்குத் தள்ளப்படும்.  அதனால்தான் முற்காலத்தில் சுவடிகளில் உள்ள செய்திகள் தேவைப்பட்டோரும், அழிந்து வரும் நிலையில் உள்ள சுவடிச் செய்திகளைப் பனையோலைகளில் படியெடுத்து வந்துள்ளனர்.  அவ்வாறு பனையோலைகளில் படியெடுக்கப்பட்டதாலேயே இன்று ஒரு நூலுக்குப் பல பனையோலை படிநிலைச் சுவடிகள் கிடைக்¢கக் காண்கிறோம்.  இன்று பனையோலைகளில் எழுதும் வழக்கம் அருகிவிட்டதின் காரணத்தினாலும், அண்மைக்கால அறிவியல் கருவிகளின் வரவினாலும் பனையோலையில் எழுதும் வழக்கம் மாறி, அறிவியல் கருவிகளின் மூலம் மாற்றுருவாக்கிக் கொள்ளும் நிலை வளர்ந்துள்ளது.   இன்று, சுவடிகள் அழியும் நிலைக்கு வரும் முன்பே அவற்றை அண்மைக்கால அறிவியல் கருவிகளின் மூலம் மாற்றுருவாக்கிக் கொள்வதால் பழைய பொருளைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் பழைய செய்திகளைக் காப்பாற்றலாம் என்ற உயரிய எண்ணமே இதன் நோக்கமாகும்.  இருப்பினும் இவ்வாறு மாற்றுருவாக்குவதற்கு முன் சில வரன்முறைகளைச் சுவடிகளில் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.  ஆனால், வேகமாக அழிந்துவரும் இச்சுவடிகளை வேகமாக மின்னணுப் பதிவு செய்துவிடல் என்ற நோக்கத்தில் இன்றைய கணினியாளர்கள் கருதுகின்றனர்.  இதுவொரு வகையில் உண்மையானதும் கூட, இருப்பினும்,  முறைப்படுத்தப்பெறாத பனையோலைகளையெல்லாம் மின்னணுப் பதிவு செய்துவிட்டால், அவற்றை முறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் தோன்றுகின்றன.

மாற்றுருவாக்குவதில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்

        ஓரு நூலுக்கான ஏடுகள் முழுமையும் முறையாக ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைக்கப்பெற்றிருக்கும் ஓலைச்சுவடிகளில் ஒவ்வொரு ஏட்டிற்கும் பக்க எண் கொடுக்கப்படாமல் ஏட்டெண் கொடுக்கப்பட்டிருக்கும்.  இதனால் ஏட்டின் முதல் பக்கத்தில் ஏட்டெண்ணும் அதன் மறுபக்கத்தில் எண் குறிப்பிடாமலும் இருக்கும்.  மறுபக்கத்தை அப்படியே மாற்றுருவாக்குவதால் கவனக்குறைவின் காரணமாக சிக்கல் தோன்றும்.  அதாவது, எண் குறிப்பிடாத பக்கத்தை எந்த ஏட்டெண்ணின் பக்கத்தில் வைப்பது?,  மாற்றி வைத்துவிட்டால் பொருள் குற்றம் நிகழும்.  மாற்றுருவாக்கும் போது ஒவ்வொரு ஏட்டின் முன் மற்றும் பின் பக்கத்திற்குப் புதியதாக தொடரெண் கொடுக்கப்படல் வேண்டும்.  சுவடிக் கட்டில் உள்ள ஏடுகளை முறைப்படுத்தி, சுத்தப்படுத்தி வைக்கப்பெற்றிருக்கும் சுவடிகளை மின்னணுப்பதிவு செய்வதில் ஏட்டெண், பக்கவெண் குழப்பமே யன்றி வேறொன்ரும் நிகழ வாய்ப்பில்லை.  இவற்றை கனமுடன் செய்தால் இச்சிக்கலை எளிமையாக்கலாம்.  தொடரெண் அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தினால் இச்சிக்கல் தீரும்.  

v கட்டு பிரிந்து களைந்த ஏடுகளையும், உதிரி ஏடுகளையும், முறிந்த, செல்லரித்த, குறைச்சுவடிகளையும் வரன்முறைப்படுத்துவதில் பல்வேறு வகையான சிக்கல்கள் தோன்றுகின்றன.  அச்சிக்கல்கள் பின்வருமாறு:-

  • பல்வேறு அளவுடைய ஏடுகளில் ஒரு நூல் எழுதப்பெற்றிருக்கும்.  இவ்வாறு எழுதப்பெற்ற சுவடி கட்டு பிரிந்துவிட்டது என்றால் வரன்முறைப்படுத்துவது இயலாது.
  • பல நூல்கள் ஒரே அளவுடைய ஏடுகளில் ஒரே வகையான கையெழுத்தில் எழுதப்பெற்றிருக்கும்.
  • பலவகையான கையெழுத்தில் ஒத்த அளவுடைய ஒரு நூல் எழுதப்பெற்றிருக்கும்.
  • இடைச்செருகலாக எழுதப்பெற்றிருக்கும்.
  • ஒரே வகையான கையெழுத்தில் ஒத்த அளவுடைய ஏட்டில் இருவேறு நூல்களின் ஏட்டின் கடைசித் தொடர் வேறொரு நூலேட்டின் தொடக்கம் பொருள் மாறுபடாமல் ஒத்து வரல்.
  • ஒரே வகையான கையெழுத்தில் ஒத்த அளவுடைய ஏட்டில் இருவேறு நூல்களின் ஏட்டின் கடைசிச் சொல்லின் விடுபாடு (நிலைமொழி) வேறொரு நூலேட்டின் தொடக்கச் சொல்லின் விடுபாடு (வருமொழி) பொருள் மாறுபடாமல் ஒத்து வரல்.
  • பாட்டெண் ஒத்து வரல்.
  • முதல், இடை, கடை-யில் ஏடு குறைதல்.
  • முதல், இடை, கடை-யில் ஏடு மிகுதல்.
  • ஏட்டெண் இல்லாமல் ஒரு சுவடியில் பல நூல்கள் இருத்தல்.
  • ஒரு கட்டில் பல நூல்கள் இருந்து, வரிகளும் பத்திகளும்  வேறுபடல் மற்றும் ஒத்துவரல்.
  • உரைநடையாக இருந்து ஏட்டெண் இல்லாதிருத்தல்.
  • நரம்பு நீக்கப்பட்ட நாட்டுப்பனையோலை, நரம்பு நீக்கப்படாத நாட்டுப்பனை, சீதாளப்பனை என்று பனையோலையின் புறஅமைப்பு கொண்டு பிரித்தல்.
  • கறையான் அரித்திருத்தல்.
  • முறிந்த பகுதியும், கறையான் அரித்த பகுதியும் ஏட்டெண் பக்கமாக (வலது பக்கமாக) இருத்தல். 
  • முறிந்த பகுதியும், கறையான் அரித்த பகுதியும் இடது பக்கமாக இருத்தல்.

இவ்வாறெல்லாம் இருக்கக் கூடிய ஓலைச்சுவடிகளை முதலில் மாற்றுருவாக்குவதற்கு முன் செப்பனிட்டுக் கொள்ள வேண்டும். செம்மைப்படுத்தப்பட்ட ஓலைச்சுவடிகளை மின்னணுக்கருவி கொண்டு (செராக்ஸ், கேமரா, ஸ்கேனர்) ஒளிப்பட நகல் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு ஒளிப்பட நகல் எடுத்த பகுதிகளை கணிப்பொறிக்குள் உள்ளீடு செய்து Floppy, CD-ROM, DVD-ROM, VCD, Pen Drive, External Hard Disc  போன்றவற்றில் நகலெடுத்துக் கொள்ளவேண்டும்.  இவ்வாறு சுவடிகளை மாற்றுருக்களில் நகலெடுத்துக்கொண்ட பிறகு சுவடிகளை அறிவியல் முறையிலான பாதுகாப்பறையில் வைக்கவேண்டும்.  இனி, சுவடிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றால் சுவடிகளைக் கையாளாமல் மாற்றுருக்களில் நகலெடுக்கப்பட்டவற்றைக் கையாள்வதால் சுவடிகளின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்யலாம்.

கற்றலும் கற்பித்தலும்

பழங்காலத்தில் குருகுலக் கல்வியில் மணல் பரப்பி விரலில் எழுத்துக்களை எழுதச் சொல்லிக் கொடுத்தனர்.  அக்காலத்தில் பாடஞ்சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும், பாடங்கேட்கும் மாணவர்களுக்கும் சில தகுதிகள் இருந்ததாக நன்னூல் எடுத்தோதுகிறது.  

குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை
        கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
        நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
        உலகிய லறிவோ  டுயர்குண மினையவும்
        அமைபவ னூலுரை யாசிரி யன்னே. (நன்.26)

என்று நல்லாசிரியரின் இலக்கணம் குறித்தும்,  அவ்வாசிரியர் பாடங்கற்பிக்கும் விதத்தை,

ஈத லியல்பே யியம்புங் காலைக்
        காலமு மிடனும் வாலிதி னோக்கிச்
        சிறந்துழி யிருந்துதன் தெய்வம் வாழ்த்தி
        உரைக்கப் படும்பொரு ளுள்ளத் தமைத்து
        விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
        கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொள்
        கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப. (நன்.36)

என்றும், பாடங்கற்றலுக்குரியவர் யார் என்பதை,

தன்மக னாசான் மகனே மன்மகன்
        பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே
        உரைகோ ளாளற் குரைப்பது நூலே.  (நன்.37)

என்று கல்வி கற்கும் மாணாக்கர் பற்றிக் குறிப்பிடுவதையும், ஒரு மாணாக்கன் பாடங்கற்கும் நிலையினை, 

கோடன் மரபே கூறுங் காலைப்
        பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
        குணத்தொடு பழகி  யவன்குறிப் பிற்சார்ந்
        திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப்
        பருகுவ னன்ன வார்வத் தனாகிச்
        சித்திரப் பாவையி னத்தக வடங்கிச்
        செவிவா யாக  நெஞ்சுகள னாகக்
        கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
        போவேனப் போத லென்மனார் புலவர்.    (நன்.40) 

என்றும் சுட்டியிருப்பதைக் காணலாம்.  

ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்கள் முதலில் நரம்பு பிரிக்கப்படாத பனையோலையில் குண்டெழுத்தாணி கொண்டு அரிச்சுவடி, எண் கணிதம் போன்ற தொடக்கநிலை நூல்களை எழுதிப் பழகினர்.  பின்னர் எழுதுவதில் தேர்ந்த பின் மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, கூரெழுத்தாணி போன்ற எழுத்தாணிகளைக் கொண்டு செவ்வியல் நூல்களை எழுதப் பழகினர்.  ஓலையில் எழுதுவது என்பது மிகவும் கடினமாகவும், ஒலைகள் பற்றாக்குறையாகவும் இருந்த அக்காலத்தில் தேவைக்கேற்பவே ஓலைகளில் எழுதியிருக்கின்றனர்.

குருகுலத்தில் ஆசிரியர் பாடம் சொல்ல மாணவர்கள் அவற்றைக் கேட்டுக் கொள்வர்.  இன்றைய மாணவர்கள் புத்தகங்களைக் கையில் வைத்திருப்பது போல் அக்காலத்தில் மாணவர்கள் சுவடிகளைக் கையில் வைத்துக்கொண்டு பாடங்களைக் கற்பதில்லை.  குருகுல ஆசிரியரே பெரும்பாலும் மனன நிலையில்தான் பாடங்களை நடத்துவார்.  ஆசிரியர் சொல்லச் சொல்ல மாணவர்களும் பாடங்களை மனன நிலையிலேயே கற்ற சூழ்நிலை அது.  நூல்களில் சந்தேகம் ஏற்படும்போது மட்டும் ஆசிரியரோ மாணவரோ ஆசிரியரிடம் இருக்கும் சுவடிகளைப் பார்வையிடுவர்.  அக்காலத்தில் கற்றல் மற்றும் கற்பித்தல் திறன் அத்தகையது. ஒரு மாணவருக்கு ஆசிரியரிடம் இருக்கக் கூடிய நூல் தேவைப்படும் போது மட்டும் அச்சுவடியைப் பார்த்து  நகலெடுத்துக் கொள்வார்.  மேலும், சுவடிகள் அழிவுக்குள்ளாக நேரிடும் போதும் சுவடிகளை நகலெடுத்து இருக்கின்றனர்.  பரவலாகப் பேசப்பட்ட சில சுவடிகள் மட்டும் சிலரால் படியெடுக்கப்பட்டு பல்கிப்பெருகி வளர்ந்துள்ளன.  இதனால்தான் மக்கள் பெருமளவில் போற்றும் திருக்குறளுக்குப் பல சுவடிகள் கிடைக்கின்றன. சில சுவடிகள் மூலச் சுவடிகளாகவே இருந்து அழிந்திருக்கின்றன.  பல சுவடிகள் அழிவிலிருந்து காக்கும் பொருட்டு பயன்படுத்துவோரால் படியெடுக்கப்பட்டு வந்துள்ளன.

ஆகப்  பழங்காலத்தில்-அச்சு  முறை நடைமுறைக்கு வரும் வரை ஒலைச்சுவடியில் உள்ள வரிவடிவங்கள் படியெடுக்கப்பட்ட நிலையிலேயே வளர்ந்திருக்கின்றன.  இதனால் ஒரு நூல் ஒருவருக்கு வேண்டும் என்றால் அந்நூலை அவர் கையால் படியெடுக்க வேண்டிய நிலை. இதனால் தேவைப்படுவோர் மட்டுமே அக்காலத்தில் சுவடிகளைப் படியெடுத்துள்ளனர்.  சுவடிகளைக்  கற்பதற்கும் அவற்றைப் பிறருக்குக் கற்பிப்பதற்கும் தேவைப்படும் சுவடிகளைக் கற்போரும் கற்பிப்போரும் மூல சுவடியில் இருந்து படிச்சுவடிகளை எழுதியிருக்கின்றனர்.  ஆனால், இன்று அறிவியல் தொழில்நுட்பத்தில் தொடக்க வரவாக காகிதமும் அச்சு இயந்திரமும் வந்த பிறகு ஓலைச்சுவடியில் உள்ள செய்திகளைப் படியெடுத்து பல நூறு நகல்களை அச்சிட்டுள்ளனர்.  இதனால் ஒரு நூலை ஒருவர் மட்டும் படிக்கும் நிலை மாறி பலரும் பல்வேறு இடங்களில் படிக்கும் நிலை உருவாகியது எனலாம். 

காலந்தோறும் எழுதப்படுபொருள்களும், எழுதுபொருள்களும், எழுது கருவிகளும் காலத்தின் தேவைக்கேற்ப மாறிக்கொண்டே வருவது இயல்பு.  பழங்காலத்தில் ஓலை, இலை, பட்டை, தோல் போன்ற எழுதப்படுபொருள்களைக் கொண்டு மை, மற்றும் எழுத்தாணி கொண்டு எழுதிய நிலை மாறி காகிதத்தில் அச்சு மை கொண்டு அச்சிட்டனர்.  இதனால் எழுத்தாணி கொண்டு வௌ¢ளோலையில் எழுதும்போது எழுத்து தெளிவாகத் தெரியாது.  ஆனால், அச்சு மை கொண்டு அச்சிடும் போது எழுத்து தெளிவாகத் தெரியும்.  இவ்விரு அமைப்புகளுக்கும் எழுதப்படுபொருள்கள் மிகுதியும் தேவைப்படுவதாகும்.  இதனால் சுவடியையோ அச்சு நூலையோ குறிப்பிட்ட சுமைக்குமேல் மாற்றிடத்திற்கு எடுத்துச் செல்வதில் இடர்ப்பாடு நேரிடுகிறது.  இதனால்  கற்கச் செல்லும் மாணவர்க்கும் கற்பிக்கச் செல்லும் ஆசிரியருக்கும் சுமை கூடுகிறது.

இதனால் ஓலைச்சுவடிகளை எழுதிப்படித்த நிலை மாறி எழுதப்பட்டவற்றை (அச்சிடப்பெற்ற நூல்)ப் படிக்கும் நிலை உருவாகியது.  காகிதமும்  அச்சும் பயன்பாட்டுக்கு வந்த பிறகு மக்கள் ஓலைச்சுவடிகள் எழுதும் வழக்கத்திலிருந்து மாறியிருக்கின்றனர்.  ஓலைச்சுவடிகளை அச்சு நூல்களாக்கிப் பயன்படுத்தி வந்தனர். இதுவொரு வகையில் வளர, அண்மைக் காலமாக - கடந்த முப்பதாண்டுகளில் இதன் வளர்நிலை பன்மடங்கு தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் பங்குகொண்டுள்ளது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்.

தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் கற்றல் கற்பித்தல்

தகவல் தொடர்புத் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை அண்மைக் காலமாக வெகுவேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகும்.  இதன் மூலமாக எழுதப்படுபொருள்களின் சுமை குறைந்து எழுதப்பட்ட செய்திகளின் கனம் குறைந்த இடத்தில் மிகுந்த செய்திகளை சேர்க்க முடிந்தது.  தொடக்கக் காலத்தில் சுவடிகளைச் செராக்ஸ் மூலம் காகிதத்திலும், OHP Sheetலும் நகலெடுத்து OHP மூலம் பயன்படுத்தினர்.  இதனால் ஒரு சுவடியை  ஒருவர் படித்த நிலை மாறி ஒரு வகுப்பறை மாணவர்கள் அனைவரும் படிக்கும் நிலை உருவாகியது.

அதன்பிறகு, ஓலைச்சுவடிகளை ஸ்கேன் மற்றும் கேமரா மூலம் ஒளிப்படம் எடுத்து சேமிக்கத் தொடங்கினர்.  ஸ்கேனர்  மூலம் ஒளிப்படம் எடுத்து கணிப்பொறியில் சேமித்தனர். கேமராவில் ஒளிப்படம் எடுத்து படச்சுருள் மூலம் சேமித்தனர்.  இந்நிலை நாளுக்கு நாள் வளர்ந்து ஸ்கேனர் மற்றும் கேமிராவில் ஒளிப்படம் எடுப்பவற்றை கணிப்பொறியின் உதவியுடன் மாற்றுருக்களில் சேமிக்கத் தொடங்கினர்.  குறிப்பாக,  Floppy, CD-ROM, DVD-ROM, VCD, Pen Drive, External Hard Disc போன்றவற்றின் மூலம் சேமிக்கத் தொடங்கினர்.  இதனைப் பின்வரும் வரைபடம் தெளிவுபடுத்தும்.

இவ்வாறு தகவல் தொடர்புக் கருவிகளில் சேமிக்கப்பெற்ற சுவடிகளைக் கணிப்பொறியின் உதவியுடன் சேமிக்கப்பெற்றவற்றிலிருந்து கற்பதற்கு ஏற்ற வகையிலும், கற்பிப்பதற்கு ஏற்ற வகையில் செய்திகளை(சுவடிகளை) OHP மற்றும் LCD மூலம் ஒளிர்விடச் செய்து மாணவர்களுக்குக் கற்பிக்கச் செய்யலாம். தகவல் தொடர்புக் கருவிகளில் சேமிக்கப்பெற்ற சுவடிகளைக் கணிப்பொறியின் உதவியுடன் PPT தயார்செய்து LCD மூலமாகவோ, கணிப்பொறி வாயிலாகவோ கற்பிக்கலாம்.  இதனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இருந்து  கற்கும் கற்பிக்கும் நிலை மாறி எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கற்கும் கற்பிக்கும் நிலை உருவாகியது. இதனால் ஆசிரியரிடம் சென்று கற்க வேண்டிய நிலையில் இருந்து செல்லும் இடமெல்லாம் கற்கும்நிலை உருவாகியது எனலாம்.  தகவல் தொடர்புக் கருவிகளில் சேமிக்கப்பெற்ற சுவடிகளைக் கணிப்பொறியின் உதவியுடன் கற்பிக்கப்படும் படிநிலையைப் பின்வரும் வரைபடம் விளக்கும்.

 தகவல் தொடர்புத்தொழில்நுட்பத்தில் இன்னொரு படியான இணையத்தில் மின்னணுப்படியாக்கம் செய்யப்பெற்ற ஓலைச்சுவடிகளை வெளியிட்டு கற்கவும் கற்பிக்கவும் செய்யலாம்.  இதனால் கற்கப்போகும் இடத்திலும், கற்பிக்கப்படும் இடத்திலும் கணிப்பொறியும் இணையதள இணைப்பும் இருந்தாலே போதும் என்ற நிலை தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இன்றைய உச்சாணி நிலை எனலாம்.

நிறைவுரை

அக்காலத்தில் எழுதிப்படித்த நிலை, இன்றைய தகவல் தொடர்புத் தொழில்நுட்ப  வளர்ச்சியில் எழுதப்பட்டதைப் படிக்கும் நிலை வளர்ந்துள்ளது.  குறுகிய வட்டத்திற்குள் இருந்த கற்பித்தல் நிலை இன்று பரவலாக்கப்பட்டுள்ளது.  பழம்பொருள்களைக் கற்குந்தோறும் பயன்படுத்துவதால் அவை எளிதிலும் அழிவிற்குள்ளாகும் தன்மையினைப் பெறும்.  ஆனால் தகவல்தொடர்புத் தொழில்நுட்பத்தில் கற்பதாலும் கற்பிப்பதாலும் பழம்பொருள்கள் அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.  மேலும், மூலப்பொருட்களை நிலையான பாதுகாப்பறையில் வைத்துவிட்டு, நகலெடுக்கப்பட்டவற்றை உலகின் பல்வேறு இடங்களுக்கும் எடுத்துச்செல்லவும் பயன்படுத்தவும் இயலும் என்பதே உண்மை.  விரல் நுனியில் உலகம் என்பது  கற்றல் கற்பித்தலுக்கும் பொருந்துவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக