ஞாயிறு, 14 அக்டோபர், 2018

தமிழ் வளர்ச்சியில் நூலிதழ்கள்

ஒரு நூல் பல பகுதிகளாகத் தொடர்ந்து வெளிவருவதைத் 'தொடர் வெளியீட்டு நூல்' என்கிறோம்.  இதனை வரிசை வெளியீடு என்றும், பகுதி வெளியீடு என்றும் குறிப்பிடுகின்றோம்.  இவ்வெளியீடுகளில் நூல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.  இவ்வெளியீடுகள் மாதத்திற்கொன்றோ, மாதத்திற்கு இரண்டோ, வாரத்திற்கொன்றோ, ஆண்டிற்கு நான்கோ(காலாண்டு) எனக் காலத்தை முறையாக வகுத்துக்கொண்டு தொடர்ந்து வெளிவருதால் இவற்றைச் சஞ்சிகைகள் - இதழ்கள் - பருவ இதழ்கள் என்றெல்லாம் குறிப்பிடுகின்றோம்.  இப்பருவ இதழ்களில் நூல்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பனவற்றை 'நூலிதழ்கள்' என்று குறிப்பிடலாம். (இக்கட்டுரைக்குள் குறிப்பிடப்பெற்றிருக்கும் ஆண்டு நூலிதழின் தொடக்க ஆண்டைக் குறிக்கும்).

நூலிதழ் வகைப்பாடு 

நூலிதழ்களை தமிழ் நூலிதழ்கள் என்றும், மொழிபெயர்ப்பு நூலிதழ்கள் என்றும், பல நூலிதழ்கள் என்றும் மூன்றாகப் பகுக்கலாம்.  ஒரு குறிப்பிட்ட தமிழ் நூலை மட்டுமே தொடர்ந்து பகுதி பகுதியாக வெளியிட்டு வரும் நூலிதழை 'தமிழ் நூலிதழ்' என்றும், பிற இந்திய மொழிகளில் உள்ள சிறந்த நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து தொடர்ந்து பகுதி பகுதியாக வெளியிட்டு வரும் நூலிதழை 'மொழிபெயர்ப்பு நூலிதழ்' என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களை(தமிழ் நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள்)த் தொடர்ந்து பகுதி பகுதியாக ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வரும் நூலிதழைப் 'பல நூலிதழ்' என்றும் அழைக்கலாம்.  

தமிழ் நூலிதழ் என்பது, ஒரு குறிப்பிட்ட தமிழ்நூல் தொடர்ந்து வெளிவந்து நூல் முற்றுப் பெற்றவுடன் இதழின் வாழ்நாளும் நிறைவுறுவதாகும்.  குறிப்பாக, கம்பர் தமிழில் எழுதிய 'கம்பராமாயணம்' எனும்  நூல் 'கம்பராமாயணம்' என்ற நூலிதழில் பகுதி பகுதியாகத் தொடர்ந்து வெளியிட்டு நூல் முற்றுப் பெற்றவுடன் இவ்விதழ் நின்றுவிட்டதைக் குறிப்பிடலாம்.

மொழி பெயர்ப்பு நூலிதழ் என்பது, பிறமொழிகளில் உள்ள சிறந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து ஒரு நூலிதழ் போல் தொடர்ந்து வெளிவந்து நூல் முற்றுப் பெற்றவுடன் இதழின் வாழ்நாளும் நிறைவுறுவதாகும்.  குறிப்பாக, மராத்திய மொழியில் மகிபதிபாவா என்பார் இயற்றிய 'பக்த விஜயம்' என்ற நூலைப் பலர் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றனர்.  

பல நூலிதழ் என்பது, நூற்பெயரையோ நூலாசிரியர் பெயரையோ நூலிதழின் பெயராகப் பெறாமல் ஒரு பொதுப்பெயரைப் பெற்று அவற்றுள் ஒரு தன்மைத்தான நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதாகும்.  இவற்றில் ஒரு நூல் முற்றுப்பெற்றவுடன் வேறொரு நூல் தொடர்வதாக அமைந்திருக்கும்.  குறிப்பாக, 'இதிகாச மஞ்சரி' என்னும் பல நூலிதழில் முதலில் இராமாயணக் கதையின் உரைநடைப் பகுதி தொடர்ந்து வெளிவந்துள்ளது.  இப்பகுதி முடிவடைந்தவுடன் அடுத்த இதழில் மகாபாரதக் கதையின் உரைநடைப் பகுதி தொடர்ந்து வெளிவந்துள்ளது.  இப்படி இதிகாசக் கதைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வெளிவந்ததால் இதற்கு 'இதிகாச மஞ்சரி' என்ற பெயர் இட்டிருக்கின்றனர் எனலாம்.

நூலிதழ் அமைப்பு

நூலிதழ்களை அமைப்பு நிலையில் அகநிலை அமைப்பு, புறநிலை அமைப்பு என இரண்டு நிலைகளாகப் பகுக்கலாம். அகநிலை அமைப்பானது தமிழ் நூலிதழ், மொழிபெயர்ப்பு நூலிதழ், பல நூலிதழ் என்றவாறு அமைகிறது.  புறநிலை அமைப்பானது பக்கங்களை அடிப்படையாகக் கொண்டும் இதழின் அளவு அடிப்படையாகக் கொண்டும் அமைகிறது. 

நூலிதழை நூல் பெயரில் அமைந்த நூலிதழ் என்றும், நூலாசிரியர் பெயரில் அமைந்த நூலிதழ் என்றும், பொதுப்பெயரில் அமைந்த நூலிதழ் என்றும் மூன்றாகப் பிரிக்கலாம்.  மேலும் இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.  நூல் பெயரில் அமைந்த அகநிலை நூலிதழை,

1.  தமிழ் நூலிதழ்
2.  மொழிபெயர்ப்பு நூலிதழ்
3.  பல நூலிதழ்
அ.  ஒரு நூலாசிரியரின் நூல்களைக் கொண்ட பல நூலிதழ்
ஆ.  பல நூலாசிரியர்களின் நூல்களைக் கொண்ட பல நூலிதழ்

என்றும், நூலாசிரியரின் பெயரில் அமைந்த அகநிலை நூலிதழை,

1.  ஒரு நூலாசிரியர் பெயரிலமைந்த நூலிதழ்
2.  ஒன்றுக்கும் மேற்பட்ட நூலாசிரியர் பெயரிலமைந்த நூலிதழ் 

என்றும், பொதுப்பெயரில் அமைந்த அகநிலை நூலிதழை,

1.  அமைப்புப் பெயரிலமைந்த நூலிதழ்
2.  சிறப்புப் பெயரிலமைந்த நூலிதழ் 

என்றும் வகைப்படுத்தலாம்.  பக்க வரையறை கருதியும் காலங் கருதியும் இங்குத் தமிழ் நூலிதழ் மற்றும் மொழிபெயர்ப்பு நூலிதழ் குறித்து மட்டும் விளக்கப்பெற்றுள்ளது.

1.  நூல் பெயரிலமைந்த அகநிலைத் தமிழ் நூலிதழ்

ஒரு குறிப்பிட்ட தமிழ் நூலின் பெயரிலேயே வெளிவரும் நூலிதழை 'நூல் பெயரிலமைந்த அகநிலை தமிழ் நூலிதழ்' எனலாம்.  இவ்வகையான நூலிதழ் மேலும் மூன்று நிலைகளாகப் பகுக்கலாம்.  அவை, 
அ.  செய்யுள் நடையில் அமைந்த தமிழ் நூலிதழ்
ஆ.  உரைநடையில் அமைந்த தமிழ் நூலிதழ்
இ.  செய்யுளும் உரைநடையும் அமைந்த தமிழ் நூலிதழ்  
என அமையும்.

அ. செய்யுள் நடையில் அமைந்த தமிழ் நூலிதழ்

செய்யுள் நடையில் அமைந்த தமிழ் நூலிதழானது செய்யுள் வடிவமாகவே நூலிதழ் முழுவதும் அமைந்திருப்பதாகும்.  இவ்வகையில் தமிழியில் இயற்றப்பெற்ற பல நூல்கள் பல்வேறு கால கட்டங்களில் நூலிதழ்களாக வெளிவந்திருக்கின்றன.  குறிப்பாக,  
1868 - கிருஷ்ணமாச்சாரியாரின் 'முதலாயிரம்' 
1872 - சண்முக சுந்தரம் அவர்களின் 'சிவஞான போதம்' 
1881 - பாலசுந்தர முதலியார் & வாசுதேச பிள்ளை ஆகியோரின் 'தேவாரப் 
பதிகத் திருமுறைகள்' 
1882 - கிருஷ்ணமாச்சாரியாரின் 'நாலாயிர திவ்வியப்பிரபந்தம்' 
1885 - திருவேங்கடசாரியாரின் 'இயல்பா' 
1897 - நல்லசாமியின் 'சிவஞான சித்தியார்' 
1894 - திருப்பாதிரிப்புலியூர் சிவசிதம்பர முதலியாரின் 'திருப்புகழ்'
1914 - என். கோடீஸ்வர ஐயரின் கவிகுஞ்சரபாரதி இயற்றிய
'ஸ்கந்தபுராண கீர்த்தனை' 
1933 - திரு.வி. கலியாணசுந்தர முதலியாரின் 'திருவிளையாடற் புராணம்' 
போன்ற நூலிதழ்களைக் குறிப்பிடலாம்.

ஆ.  உரைநடையில் அமைந்த தமிழ் நூலிதழ்

உரைநடை(வசனம்)யில் அமைந்த தமிழ் நூலிதழானது உரைநடை வடிவமாகவே நூலிதழ் முழுவதும் அமைந்திருப்பதாகும்.  இவ்வகையில் தமிழில் இயற்றப்பெற்ற பல நூல்கள் பல்வேறு கால கட்டங்களில் நூலிதழ்களாக வெளிவந்திருக்கின்றன.  குறிப்பாக,  1847ஆம் ஆண்டு ஏ. சிற்றம்பல முதலியார் வெளியிட்ட 'வில்லிபாரத வசனம்' என்னும் நூலிதழைக் குறிப்பிடலாம்.

இ,  செய்யுளும் உரைநடையும் அமைந்த தமிழ் நூலிதழ்

செய்யுளும் உரைநடையும் அமைந்த தமிழ் நூலிதழானது செய்யுளும் உரைநடையுமாகவே நூலிதழ் முழுவதும் அமைந்திருப்பதாகும்.  இவ்வகையில் தமிழியில் இயற்றப்பெற்ற பல நூல்கள்  பல்வேறு கால கட்டங்களில் நூலிதழ்களாக வெளிவந்திருக்கின்றன.  குறிப்பாக, 
1840 - இராமாநுஜக் கவிராயரின் விளக்கவுரையுடன் 'திருக்குறள் பரி. உரை'
1872 - சண்முக முதலியார் உரையுடன் வெளிவந்த 'உண்மை விளக்கம் எனும் 
சித்தாந்த தீபிகை'
1873 - சி. திருவேங்கடாசாரியார் உரையுடன் வெளிவந்த 'முதலாயிர 
வியாக்கியானம்'
1880 - பெரியவாச்சான் பிள்ளை உரையுடன் சோமையா முதலியாரின் 
'திருவாய்மொழி'
1881 - பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானமும் பூர்வாசாரியர்கள் 
சேர்த்தருளின அரும்பத விளக்கமும், வியாக்கியானங்களைத் 
தழுவிச்சேர்க்கப்பட்ட பதவுரையும் கொண்டு திருவேங்கடாசாரியார் & கிருஷ்ணமாசாரியார் ஆகியோரின் 'பெரிய திருமொழி'
1882 - பெரியவாச்சான் பிள்ளை உரையுடன் எஸ். பார்த்தசாரதி ஐயங்கார் 
அவர்களின் 'பெரிய திருமொழி'
1883 - தி.க. சுப்பராயச்செட்டியார் உரையுடன் இ. ரத்தினவேலு முதலியார் 
வெளியிட்ட 'திருவிளையாடற்புராணம் உரையுடன்'
1883 - ஆறுமுகத்தம்பிரான் & அட்டாவதானம் சுப்பராய முதலியார் உரையுடன் 
பி. கிருஷ்ணசாமி முதலியார் & ஏ.ஆர். நாகலிங்க முதலியார் 
ஆகியோரின் 'பெரியபுராணம் உரையுடன்'
1891 - டி.கே. சுப்பராயசெட்டியார் உரையுடன் சென்னை ஆதிகலாநிதி 
அச்சுக்கூடம் வெளியிட்ட 'காஞ்சிப்புராணம்'
1891 - சுப்பராயலு நாயக்கர் உரையுடன் வெளிவந்த 'பெரியபுராணம் உரையுடன்'
1892 - ஈக்காடு இரத்தினவேலு முதலியார் உரையுடன் டி. குப்புசாமி நாயக்கர் 
வெளியிட்ட 'காசி காண்டம்'
1894 - வேலூர் திருவேங்கடம் உரையுடன் வெளிவந்த 'நந்தமண்டல சதகம்'
1896 - இரத்தினவேலு முதலியார் உரையுடன் டி. குப்புசாமி நாயக்கர் 
வெளியிட்ட 'திருவிளையாடற்புராணம் உரையுடன்'(இதன் மறு 
நூலிதழ்ப் பதிப்பு 1935ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது)
1896 - சூ. சுப்பராய நாயக்கர் உரையுடன் வெளிவந்த 'கந்தபுராணம் உரையுடன்'
1897 - என். வேதாசலம்பிள்ளை(மறைமலையடிகள்) உரையுடன் வெளிவந்த
'உண்மை விளக்கம் என்னும் சித்தாந்த தீபிகை' 
1902 - கோ. வடிவேலு செட்டியார் & வி.பி. தெய்வநாயக முதலியார் 
ஆகியோரின் 'திருக்குறள் பரிமேலழகர் உரை'
1904 - காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு உரையுடன் சை.ர. நமசிவாய செட்டியார் 
அவர்களின் 'திருவருட்பா-திருமுறைகள் முழுதும்'
  1908 - திரு.வி. கலியாணசுந்தர முதலியாரின் அரும்பதக்குறிப்புரையும் வசனமும் 
கொண்டு வி. உலகநாத முதலியார் & ஆ. சிவசங்கர முதலியார் 
வெளியிட்ட 'திருத்தொண்டர் புராணம்'
1910 - காஞ்சிபுரம் மகாவித்துவான் இராமாநந்த யோகிகளின் சொற்பொருள், 
பொழிப்புரை, கருத்துரை, விளக்கவுரையுடன் பு. சண்முக 
முதலியார் வெளியிட்ட 'தேவாரம்'
1911 - ஈக்காடு இரத்தினவேலு முதலியார் பொழிப்புரையுடன் வெளிவந்த 
கோனேரியப்பரின் 'உபதேச காண்டம்'
1911 - ஏ.ஆர். திருவேங்கடாசாரியாரின் 'திருவாய்மொழி - பகவத் விஷயம்'
1913 - இராமானந்தயோகி உரையுடன் பி. சண்முக முதலியார் வெளியிட்ட 
'சீகாளத்திப் புராணம்'
1913 - பி.பி. சீனிவாசாச்சாரியாரின் 'திருவாய்மொழி - பகவத் விஷயம்'
1914 - பூவை. கலியாணசுந்தர முதலியாரின் மெய்கண்ட விருத்தி எனும் 
உரையுடன் எஸ்.ஆர். மாணிக்க முதலியார் அவர்களின்  
'திருப்பாடற்றிரட்டு'(தாயுமானவர் பாடல்கள்)
1924 - 'திருக்குறட் குமரேச வெண்பா உரையுடன்' 
1925 - பி.எஸ். சுப்பிரமணியர் உரையுடன் சென்னை அல்லையன்ஸ் 
வெளியிட்ட 'திருப்புகழ்-விருத்தியுரை'
1930 - திரு.வி. கலியாணசுந்தர முதலியார் உரையுடன் சாது அச்சுக்கூடம் 
வெளியிட்ட 'திருத்தொண்டர் புராணம் உரையுடன்'
1931 - ஆ. பாலகிருஷ்ண்பிள்ளை உரையுடன் வெளிவந்த 'திருவருட்பா'
1935 - சி.கே. சுப்பிரமணிய முதலியார் அவர்களின் 'திருத்தொண்டர் புராணம்'
போன்ற நூலிதழ்களைக் குறிப்பிடலாம்.

2.  நூல் பெயரிலமைந்த அகநிலை மொழிபெயர்ப்பு நூலிதழ்

பிற மொழியில் மிகச் சிறந்து விளங்கும் நூல்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்வது காலங் காலமாக நடந்து வரும் ஒரு வழக்கமாகும்.  இவ்வகையில் நூலிதழும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றது எனலாம்.  இவ்வகையில் வெளிவந்த மொழிபெயர்ப்பு நூலிதழ்களை மூன்று நிலைகளாகப் பகுக்கலாம்.  அவை, 
அ.  வடமொழி ? தமிழ் மொழிபெயர்ப்பு நூலிதழ்
ஆ.  மராட்டிய மொழி ? தமிழ் மொழிபெயர்ப்பு நூலிதழ்
இ.  தெலுங்கு ? தமிழ் மொழிபெயர்ப்பு நூலிதழ் 
என்பனவாகும்.

அ.  வடமொழி ? தமிழ் மொழிபெயர்ப்பு நூலிதழ்

வடமொழியில் சிறப்புற்று விளக்கிய நூல்களைத் தமிழர்களும் உய்த்துணர வேண்டி வடமொழியும் தமிழ்மொழியும் கற்ற வல்லவர்கள் பலர் வடமொழி நூல்களைத் தமிழில் செய்யுள் வடிவமாகவும் வசனமாகவும் மூலமும் உரையுமாகவும் மொழிபெயர்த்திருக்கின்றனர்.  இவ்வகையில் செய்யுள் வடிவில்,
1878 - இ. சீனிவாசராகவாச்சாரியாரின் 'வால்மீகி ராமாயணம்'
1891 - கந்தசாமி முதலியாரின் 'புராண பாகவதம்'
1891 - எம். ரங்காச்சாரியாரின் 'புராண பாகவதம்'
1911 - ஏ.வி. நரசிம்மாச்சாரியாரின் 'பாகதவதம்' (1-8 பாகங்கள்)
1913 - நடேச சாஸ்திரியாரின் 'பாகவதம்' (9-30 பாகங்கள்)
1915 - வி. வைத்தியநாத ஐயரின் 'பாகவதம்' (31-36 பாகங்கள்)
(இறுதி மூன்றும் ஒரே நூல்.  இந்நூலை முறையே மூவரும் மொழிபெயர்த்திருக்கின்றனர்) போன்ற மொழிபெயர்ப்பு நூலிதழ்களையும்;  உரைநடை வடிவில், 
1876 - டி. சீனிவாசாச்சாரியாரின் வசன மொழிபெயர்ப்பில் 'வால்மீகி ராமாயணம்'
1878 - தாதாதேசிக தாதாச்சாரியாரின் வசன மொழிபெயர்ப்பில் 'வால்மீகி 
ராமாயணம்'
1878 - எஸ். சுப்பிரமணிய பிள்ளையின் வசன மொழிபெயர்ப்பில் 'புராண 
பாகவத வசனம்'
1878 - தாதாதேசிக தாதாச்சாரியாரின் வசன மொழிபெயர்ப்பில் 'மகாபாரத 
வசனம்'
1886 - கே. சீனிவாசராகவனின் வசன மொழிபெயர்ப்பில் 'வால்மீகி ராமாயணம்'
1890 - பி.எம். சீனிவாசராகவாச்சாரியாரின் வசன மொழிபெயர்ப்பில் 'வால்மீகி 
ராமாயணம்'
1890 - வரதராசனின் வசன மொழிபெயர்ப்பில் 'மகாபாரதம் அல்லது ஆரம்பர 
காலம் முதல் உள்ள இந்திய சரித்திரம்'
1891 - பஞ்சாபிகேசனின் வசன மொழிபெயர்ப்பில் 'மகாபாரதம்'
1891 - தாதாதேசிக தாதாச்சாரியாரின் வசன மொழிபெயர்ப்பில் 'வால்மீகி 
ராமாயணம்' (மறுபதிப்பு)
1892 - வைத்தியநாதனின் வசன மொழிபெயர்ப்பில் 'ஸ்ரீமத் ஆதிமகாபாரதம்'
1901 - உ.வே. ஸ்ரீநிவாஸாசார்யரின் வசன மொழிபெயர்ப்பில் 'மஉறாபாரதம்'
1901 - எஸ்.எம். நடேச சாஸ்திரியாரின் வசன மொழிபெயர்ப்பில் 'வால்மீகி 
ராமாயணம்'
1909 - சி.ஆர் சீனிவாச ஐயங்காரின் வசன மொழிபெயர்ப்பில் 'வால்மீகி 
ராமாயணம்'
1909 - ஆர். சிவராம சாஸ்திரியாரின் வசன மொழிபெயர்ப்பில் 'பாகவதத் 
தமிழ் வசனம்'
1910 - கணபதி சாஸ்திரியின் வசன மொழிபெயர்ப்பில் 'ஆநந்த ராமாயணம்'
1910 - எம்.கே. வீரராகவ ஐயங்காரின் வசன மொழிபெயர்ப்பில் 'பாகவத தசம 
ஸ்கந்தம்'
1912 - ஏ.வி. நரசிம்உறாச்சாரியாரின் வசன மொழிபெயர்ப்பில் 'வால்மீகி 
ராமாயணம்'
1913 - கே. ஸ்ரீநிவாச ஐயங்கார் & பி. சண்முகம் ஆகியோரின் வசன 
மொழிபெயர்ப்பில் 'ஆத்ம புராணம்'
1916 - ஏ.வி. நரசிம்மாச்சாரியரின் வசன மொழிபெயர்ப்பில் 'பாகவதத் தமிழ் 
வசனம்' 
போன்ற மொழிபெயர்ப்பு நூலிதழ்களையும்; மூலமும் உரையுமாக,
1890 - வித்தியாரணிய அடிகளின் உரையுடன் கு. சீனிவாசன் அவர்கள் 
வெளியிட்ட 'சூதசங்கிதை'
1906 - டி. சுந்தரராஜசர்மா அவர்களின் 'பகவத்கீதையும் ஸ்ரீசங்கராசாரிய 
பாஷ்யமும்'
1913 - வீரசுப்பையர் சுவாமிகளின் உரையுடன் 'பகவத்கீதை மூலமும் உரையும்'
1917 - வீரமெய்யப்ப சுவாமிகளின் உரையுடன் 'பவகத்கீதை மூலமும் உரையும்'
1926 - பி.எஸ். கிருஷ்ணசாமி ஐயர் உரையுடன் 'வால்மீகி ராமாயணம்'
போன்ற மொழிபெயர்ப்பு மூலமும் உரையுமான நூலிதழ்களையும் குறிப்பிடலாம்.

ஆ.  மராட்டிய மொழி ? தமிழ் மொழிபெயர்ப்பு நூலிதழ்

மராத்திய மொழியில் தலைசிறந்து விளங்கும் ஓர் இலக்கியத்தைத் தமிழ்மொழியில் பெயர்ப்புச்செய்து நூலிதழாக வெளியிட்டிருக்கின்றனர்.  இவ்வகையில் மராத்திய மொழியில் பகிபதிபாவா அவர்களின் 'பக்த விஜயம்' என்ற நூலைத் தமிழ்மொழியில் வசனமாக நான்கு விதமாக மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றனர்.  அம்மொழிபெயர்ப்புகள் நூலிதழ்களாக வெளிவந்திருக்கின்றன.  அவை, 
1898 - புதுவை நாராயணதாசரின் 'மகாபக்த விஜயம்'
1907 - வி. பாலகிருஷ்ண முதலியாரின் 'பக்தமாலா வசனம்'
1911 - வி. சீனிவாசராவின் 'பக்த மாலிகை'
1912 - டி. நரசிம்ம பாகவதரின் 'பக்தமாலா வசனம்'
போன்ற மொழிபெயர்ப்பு நூலிதழ்களைக் குறிப்பிடலாம்.

இ.  தெலுங்கு ? தமிழ் மொழிபெயர்ப்பு நூலிதழ்

தெலுங்கு மொழியில் தலைசிறந்து விளங்கும் ஓர் இலக்கியத்தைத் தமிழ்மொழியில் பெயர்ப்புச் செய்து நூலிதழாக வெளியிட்டிருக்கின்றனர்.  இவ்வகையில், வியாசர் வடமொழியில் எழுதிய பிரமாண்ட புராணத்தில் வரும் கதைப்பகுதியே 'அத்யாத்ம இராமாயணம்'.  இராமனுடைய பரப்பிரம்ம சொரூபம், சரஸ்வதி பிரம்மா உரையாடலில் இக்கதைப்பகுதி இடம்பெறுகிறது.  இந்த ராமாயணத்தைச் சிவன் பார்வதிக்கு உபதேசித்தார் என்பர்.  இந்த அத்யாத்ம ராமாயணம் தெலுங்கில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கஞ்சர்ள சரபனகவி என்பார் காப்பியமாகப் படைத்துள்ளார்.  இவரைத் தொடர்ந்து இம்மடிஜெக தேவராயலு (17ஆம் நூற்.), இராபாக ஸ்ரீராமகவி (கி.பி.18ஆம் நூற்.), கோட்டமராஜூ நாகையா (கி.பி.18ஆம் நூற்.), கிருஷ்ணகிரி வேங்கடரமண கவி (கி.பி.19ஆம் நூற்.), அல்லமராஜு ராமகிருஷ்ண கவி (கி.பி.19ஆம் நூற்.), இராமையா மாத்யுடு (கி.பி.19ஆம் நூற்.) போன்றோரும் இக்காப்பியத்தைத் தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கின்றனர். இவர்களைத் தவிர சீதாராம சாஸ்திரி என்பாரும் தெலுங்கில் இக்காப்பியத்தை மொழிபெயர்த்திருக்கின்றார்.  இம்மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு வே. பாலகிருஷ்ண முதலியார் அவர்கள் தமிழில் வசனமாக மொழிபெயர்த்திருக்கின்றார்.  இம்மொழிபெயர்ப்பு 1903ஆம் ஆண்டு நூலிதழாக வெளிவந்துள்ளது.

முடிவுரை

இவற்றையெல்லாம் பார்க்கும் தமிழிலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் இதழ்கள் - குறிப்பாக நூலிதழ்கள் எவ்வாறெல்லாம் பயன்பட்டிருக்கின்றதென்பது விளங்கும்.  இவற்றில் பெரும்பான்மையானவை நூலிதழாக வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற பின்பே தனி நூலாக வலம் வந்திருக்கின்றன என்பதை உணரும் போது தமிழிலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் இதழ்களின் பங்கு தெற்றென விளங்கும்.  இவ்வாறு காலங்காலமாக வெளிவந்திருக்கக் கூடிய நூலிதழ்களை எல்லாம் தொகுத்துத் தனியொரு ஆய்வேடாக நூலாக உருவாக்க முயற்சிப்பதின் தொடக்கமே இக்கட்டுரையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக