ஞாயிறு, 14 அக்டோபர், 2018

தஞ்சைப் பெரியதாசர்

பக்தி மார்க்கத்தில் இறைவனைப் பற்றியும் இறைத்தொண்டர்களைப் பற்றியும் என இரண்டு நிலைகளில் நூல்கள் எழுந்துள்ளன.  சைவத்தில் 'திருத்தொண்டர்புராணம்' இருப்பது போல் வைணவத்தில் தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் எழுதிய 'பக்தமான்மியம்' இருக்கிறது.  இப்பக்தமான்மியம் வடமொழியில் சந்திரதத்தரின் 'பக்தமாலா'வில் இருக்கக் கூடிய வைணவ ஆசாரியர்களை மட்டும் எடுத்துக் கூறும் தமிழ் நூலாக இது அமைந்துள்ளது.  இந்நூலுள் இடம்பெற்றிருக்கும் ஆசாரியர்கள் அனைவரும் வடநாட்டைச் சார்ந்தவர்களாக இருப்பதால் தென்னாட்டு வைணவ ஆசாரியர்கள் சிலரைத் தமது குரு தவத்திரு. இராமானந்த சுவாமிகளின் கருத்துப்படி தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் அனுபந்தமாக இயற்றியுள்ளார்.  இவ்வனுபந்தத்தில் இரண்டாவது இடம்பெற்று இருப்பவர்தான் பெரியதாசர்.

பெரியதாசர் வரலாறு

தஞ்சை மாநகரத்தில் வளைவணிகர் குலத்தில் சேசாசலம் செட்டியாருக்கும் பகீரதி அம்மையாருக்கும் திருமகனாய்த் தோன்றி பெரியசாமி எனப் பெயரிட்டு வரலாயினர்.  இவரது தந்தையார் தஞ்சை மாநகர்க் குறுநில மன்னராக இருந்த மன்னார் நாயுடுவிடத்தில் பொக்கிஷ அதிகாரியாய்ப் பணியாற்றி வந்தார்.  ஐந்தாவது வயதில் பெரியசாமியைப் பெற்றோர்கள் பள்ளியில் சேர்த்தனர்.  அழகும் நுண்ணறிவும் கொண்ட பெரியசாமி மற்ற பிள்ளைகளோடு பழகவும் விளையாடவும் நாட்டமில்லாமல் தனித்தே இருந்து எல்லோரும் போற்றும் வண்ணம் கல்வியில் சிறந்து இருந்தான்.  நரசிங்கமூர்த்தியின் வடிவமும் அவனது கீர்த்திகளும் பெரியசாமியின் உள்மனதை ஆட்கொண்டிருந்தன.  இளம்பருவம் மாறாத காலத்தே தன் தந்தையின் உடல்நிலை குன்றியவுடன், தந்தையார் மகனை அழைத்து, குடும்பம் பிழைக்க பெரியசாமியைத் தாம் செய்து வந்த பொக்கிஷ அதிகாரிப் பணியை மேற்கொள்ளச் சொன்னார்.  தந்தையின் சொல்லை ஏற்காத பெரியசாமி எம்பெருமான் நாராயணனுக்குத் தொண்டு செய்யவே என்மனம் நாட்டம் செல்கிறது.  எனவே என்னால் அரண்மனை பணியை ஏற்கமுடியாது என்றார்.  குலத்தொழிலான வளையல் விற்கும் தொழிலையாவது மேற்கொள் என்றார்.  அதிலும் நாட்டமில்லாத பெரியசாமி நாரண மந்திரம் துதிப்பதே எத்தொழிலினும் மேலானது என்று மற்றதொழிலைச் செய்யாது தன்னுடைய உள்மனத்தை ஆட்கொண்ட தஞ்சை கீழநரசிங்கப்பெருமாள் கோயிலை அடைந்தார்.  அன்று முதல் பெரியசாமி பெரியதாசரானார்.  இவர் இக்கோயிலிலேயே தங்கி தினமும் நாரணனைத் துதித்தவாறே இருந்தார்.

ஒருநாள் மன்னர் மன்னார்நாயுடு அவர்கள் திருவீதியுலா வரும்போது கெச்சைக் காயினைத் தெருவினில் உருட்டிச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர்.  குதிரையின் காலில் இக்காய் பட்டுத் தெரித்து அரசர் மீது விழுந்தது.  ஆத்திரம் கொண்ட படைவீரர்கள் அவர்களை அடிக்கத் துரத்தினர்.  சிறுவர்கள் பயந்து கீழநரசிங்கப்பெருமாள் கோயிலே கதியென்றிருக்கும் பெரியதாசரிடம் அடைக்கலம் புகுந்தனர்.  பெரியதாசர் பட்டைநாமம் தீட்டிக் கொண்டு எப்பொழுதும் நாரணனின் திருநாமத்தைத் துதித்தவராகக் காணப்பட்டார்.  பெரியதாசரின் மகிமைகளை எடுத்துக் கூறியும் பொருட்படுத்தாத அரசர் அவரை ஏலனம் செய்யத் தொடங்கினார்.  வைகுந்த நாதனையே துதிக்கின்றீரே 'வைகுந்தம் எவ்வளவு தூரத்திலிருக்கிறது' என வினவினார்.  கோவிந்தன் நாமமே கதியென்றிருந்தவர்க்கு இதுவொன்றும் பெரியதாகத் தெரியவில்லை.  பாஞ்சாலி கூப்பிட்டவுடன் அபயம் அளித்து மானம் காத்ததால் கூப்பிடும் தொலைவில்தான் எம்பெருமான் வீற்றிருக்கும் வைகுந்தம் இருக்கிறது என்றார்.

இதனைக் கேட்ட மன்னர் எங்கள் மூதாதையர் முதற்கொண்டு என்வரை உம்வாயால் வாழ்த்திப் பாடுக என்றார்.  எம்பெருமானைப் பாடும் திருவாயால் அற்பர்களைப் பாடேன் என மறுத்தார்.  இதனால் கோபம் கொண்ட அரசர் இன்னல்கள் பல செய்ய ஆணையிடுகிறார்.   கழுதைக்குப் பட்டைநாமம் தீட்டிக் கொண்டு வந்து இதனைத் துதி என்கிறார் அரசர்.  கோபம் கொண்ட பெரியதாசர் 'கழுதை கெட்டால் குட்டிச்சுவர்' என்ற பழமொழியைச் சொல்லி மன்னவரை இகழ்ந்தார்.  படைகளை ஏவி இவரைக் கட்டி இழுத்துக்கொண்டு வரச்சொன்னார்.  இப்படைகளால் சற்றும் அஞ்சாததைக் கண்ட அரசர் வெகுண்டு யானைகொண்டு மிதிக்கச் சொன்னார்.  யானை பெரியதாசரைக் கண்டதும் வணங்கிப் பின்னடைந்தது.  அடுத்து வேங்கைப் பெட்டிக்குள் அடைக்க அதுவும் வணங்கிப் பின்னடைந்தது.  பின்னர் ஆற்று வௌ¢ளத்தில் தூக்கி எறிந்தனர்.  பெரியதாசரோ பஞ்சணையில் துயில்வது போல் மிதந்து கரையேறினார்.  இனித் தூக்கிலிட வேண்டியது தான் என்று துணிந்து கழுமரத்தில் தூக்கிலிட எத்தனித்தனர்.  கழுமரமோ ஒடிந்து பெரியதாசரின் மீது பூமழை பொழிந்தது.  இனிக் கட்டி வைத்து உதைக்கவேண்டும் என்று சொல்ல, பெரியதாசரைக் கட்டி உதைத்தனர்.  உதைகள் எல்லாம் அரசர் மீதே பட, தம் தவறை உணர்ந்தார் அரசர் மன்னார்நாயுடு.  தம்மால் நிகழ்த்தப்பட்ட இன்னல்களுக்குப் பெரியதாசரிடம் மன்னிப்புக்கேட்டார்.  இதன்பிறகு பெரியதாசரின் பெருமைகளும் அவரது புகழும் நாடு முழுக்க பரவின.  பெரியதாசரோ எப்பொழுதும் பட்டைநாமம் தீட்டிக்கொண்டு நாரணன் பெயரைப் போற்றியவராகத் தஞ்சை கீழநரசிங்கப்பெருமாள் கோயிலே வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து அங்கேயே தம்முடலையும் நீத்தார்.

பெரியதாசர் காலம்

பழமை வாய்ந்த தஞ்சை நரசிங்கப்பெருமாள் கோயிலைத் தஞ்சை நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பெற்றதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.  இக்கோயிலே கதியென்றிருந்த பெரியதாசர் காலம் நாயக்கர் காலமாகக் கருதலாம்.  பெரியதாசரைத் தெலுங்கில் 'பெத்ததாசரி' என்பர்.  இக்கோயிலில் உள்ள கல்வெட்டொன்று இவரின் காலத்தை ஓரளவிற்கு நிர்ணயம் செய்கிறது.  'இவர் தஞ்சை நாயக்க மன்னர் காலத்தில் கும்பகோணத்தை அடுத்த கடலங்குடியில் இருந்த அரசு அலுவலர்.  நெற்றியில் எப்பொழுதும் பெரிய நாமம் தரித்துக் கொண்டிருப்பார்.  பணி துறந்து பக்தி வழியில் ஈடுபட்டு கீழவாயில் நரசிங்கப் பெருமாள் கோயிலை உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்தார்.  இறுதியில் இந்நரசிம்மன் சந்நதியில் ஐக்கியம் ஆனார் என்பர்' (தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள், ப.3).  தஞ்சையை ஆட்சிபுரிந்த நாயக்க மன்னர்களின் காலம் கி.பி.1530-1674 வரையாகும்.  எனவே, இக்காலத்திற்கு உட்பட்டவராக இவரின் காலத்தைக் கணிக்கலாம்.  புராணங்களும் வரலாற்றுண்மைகளைக் கொடுக்கக் கூடியவையே.  இவ்வரலாற்றுச் செய்தி பெரியதாசர் கதியில் விரவி வருகிறதையும் அறியமுடிகிறது.  இவ்வரலாற்றுச் செய்தியில் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் ஒரு மாற்றத்தைச் செய்துள்ளார்.  அரசுப் பணி ஏற்றுச் செய்ததாகக் கல்வெட்டுச் செய்தி கூற, சுவாமிகள் எத்தொழிலையும் ஆற்றாதவராகக் குறிப்பிடுகின்றார்.  இக்கருத்து உண்மைக்கு மாறாகத் தோன்றினும், ஆசிரியரின் கருத்துள்ளம் இதன் மூலம் வெளிப்படுகிறது.  அதாவது, பெரியதாசர் இறைவனுக்கன்றி வேறெவர்க்கும் பணியாற்றியவர் அல்லர் என்பதை நிலைநிறுத்துகின்றார்.

கீழநரசிங்கப்பெருமாள் கோயில்

கீழநரசிங்கப்பெருமாள் கோயில் இன்றும் தஞ்சையில் கோட்டைக் கீழவாயில் அருகே கொண்டிராஜ பாளையத்தில் உள்ளது.  தஞ்சை நாயக்கர் காலத்துக் கோயிலாகக் கருதப்படுகிறது.  'கோயிலில் மூலவர் யோக நரசிம்ம வடிவில் உள்ளார்.  தாயார் மகாலட்சுமி, தஞ்சை நாயகி எனவும் வழங்கப்பெறுவார்.  இக்கோயிலின் உற்சவமூர்த்தி வடிவம்தான் இலட்சுமி நரசிம்மர் வடிவில் உள்ளது.  முகப்புச் சுதைச் சிற்பமும் இலட்சுமி நரசிம்மர் வடிவமாகவே உள்ளது.  இக்கோயிலின் உள்ளே நர்த்தனக் கிருட்டிணனுக்குத் தனிச் சந்நிதி உள்ளது.

பழமையான இக்கோயிலை இரண்டாம் சரபோசி மன்னர் 1820ஆம் ஆண்டு புதுப்பித்துக் குடமுழுக்கு செய்துள்ளார்.  இதனை,

"1. ஸ்ரீலெட்சுமி நறசிம்ம சுவாமி புறா
2. தனம் கோவில் பழுதாயிருந்தது அ
3. தெ சத்தறபதி சறபோசி மகாராசா அ
4. வற்கள் கோவில் புதுசாயிக் க
5. ட்டி ஸ்த்தலம் சீறணோத்தாறம் ப
6. ண்ணினாற்கள் சாலியவாகன
7. சகம் 1742 விக்கிறம
8. தையி 27 புதவாரம் பிறதி
9. ஷ்ட்டெ ஆச்சுது"

எனும் கல்வெட்டு ஆதாரம் உணர்த்தும் (தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், ப.4).  குருவப்ப நாயுடு என்பவர் 1917இல் திருப்பணிகள் சிலவற்றை இக்கோயிலுக்குச் செய்துள்ளார்.  1938இல் குருவப்ப நாயுடு அவர்களே மணி ஒன்றை இணைக்கப்பெற்ற தூணுடன் கொடையாக அளித்துள்ளார் (தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், பக்.3-4).  இக்கோயில் இன்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் பொறுப்பில் இருக்கிறது.  சென்ற 1998ஆம் ஆண்டு இக்கோயில் மீண்டும் சீர்செய்யப்பெற்று கும்பாபிசேகம் செய்யப்பெற்றுள்ளது.

பெரியதாச கதியில் பழமைகள்

தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் வருணனையில்லாத வரலாற்றுச் செய்தியாகவே இந்நூலினை யாத்துள்ளார்.  எனினும், சிற்சில இடங்களில் பொருத்தமான புராணச் செய்திகளையும் பழமொழிகளையும் எடுத்துக் கூறத் தவறவில்லை.  பெரியதாசரின் வரலாற்றில், பெரியதாசரின் மனநிலையை விளக்குமிடத்து, 

"கடலினிடை மூழ்கினானாய்" (5:2) 
"குடமுட் பொதிந்த சுடரொத்திலகினான்" (5:3) 

என்றவாறெல்லாம் குறிப்பிடுகின்றார்.  தந்தையார் உடல் நலிவுற்ற போழ்து இளம்பருவம் மாறாத பெரியசாமியைப் பணிக்குச் செல்லப் பணித்தார்.  நாரண வடிவத்தை உள்மனம் ஏற்றுக்கொண்ட பிறகு நாரணனுக்குத் தொண்டு செய்யவே என்மனம் நாடுகிறது.  எனவே வேறு எத்தொழிலையும் என்னால் செய்ய முடியாது என்று மறுத்த போழ்து, தந்தையின் வாக்காக,

"தந்தைசொலின் மிக்கமந்திரமொன்று மில்லை" (7:2)
"பந்தமறுபரசுரா மன்றந்தைவார்த்தைபரி பாலனஞ்செய்திட்டனன்" (7:4)
"சீராமனுந்தசர தன்மொழிபுரந்தழிவில் சீர்த்திருமருவுற்ற" (8:1)

என்றவாறெல்லாம் இடம்பெற்றுள்ளன.  அரசர் மன்னார்நாயுடு கழுதைக்குப் பட்டைநாமம் தரித்து இதனையும் வணங்கு எனப் பெரியதாசரை இகழும் போழ்து, பெரியதாசர் கழுதை கெட்டால் குட்டிச்சுவர் எனும் பழமொழியைக் கூறுகின்றார்.  அதாவது,

"குட்டிச்சுவரே சார்ந்தவாலே யஞ்சூனியமார்
நீசநின்போல்வ தாகையால்" (43:1-2)

என்கிறார்.  வைகுந்தம் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று மன்னன் கேட்க, பாஞ்சாலியின் மானம் காக்கக் கூப்பிட்டவுடன் வந்துதவினான் எம்பெருமான்.  எனவே, வைகுந்தம் கூப்பிடும் தொலைவில் தான் இருக்கிறது என்கிறார்.  இதனைத்,

"திரைபொருவாவி யிடைகராப்பிடித்த சிந்துரமழைத்தலும்வந்தான்
கரையறுதுயர்கொண் டழைத்தபாஞ்சாலி கவின்றுகில்வளர்தரப்புரிந்தா
னுரைதருசெயலாற் கூப்பிடுந்தூரத் துள்ளதுவைகுந்தமென்றார்" (36)

எனும் பாடல் வரிகளால் உணரலாம்.

பெரியதாசரின் தனிச்சிறப்பு

ஒவ்வொரு அடியவர்க்கும் ஒரு தனிச்சிறப்புண்டு.  ஒரு சிறு செயலே யானாலும் அதில் உறுதியாக இருப்பவர்கள் அடியவர்கள்.  பெரியதாசர் பட்டைநாமம் தீட்டிக்கொண்டு எப்பொழுதும் நாரணன் பெயரையே போற்றித் துதித்துக் கொண்டிருப்பது தான் அவரது தொழில்.  இறைவன், அடியவர்களுக்குப் பல இன்னல்களைத் தந்து அதிலிருந்து அவரை வெற்றிபெறச் செய்து அவர்களை உலகுக்கு அறிமுகம் செய்துவைப்பார்.  அதுபோலவே பெரியதாசரையும் பல இன்னல்களுக்கு உட்படுத்தி உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.

அரசர் மன்னார்நாயுடு தம்மையும் தம் குலத்தையும் போற்றிப் பாடச் சொல்ல நாரணன் நாமமே என் நா பாடுமேயொழிய அற்பர்களைப் பாடாது என்கிறார்.  இதனைத்,

"தாரணிதனக்கோர் தாரணிந்தென்னத் தழைத்திடு தஞ்சையினிறைபா
னாரசிங்கத்தைப் புகழ்ந்து போற்றிடுமென் னாக்கியலூர்ச் சிங்கமாகுந்
தூரனா நின்னைப் பாடிடா தென்ன" (39:1-3)

எனும் செய்யுள் மூலம் மன்னரையே எதிர்க்கும் துணிச்சலைக் காணமுடிகிறது.  இதனால் கோபம் கொண்ட மன்னன் பல இன்னல்களைச் செய்கின்றான்.  யானை கொண்டு மிதிக்கச் செய்கின்றான்; வேங்கை இருக்கும் பெட்டிக்குள் அடைக்கச் செய்கின்றான்; புனலில் போடச் சொல்கின்றான்.  இவ்வகை இன்னல்களிலிருந்து பெரியதாசர் எவ்வாறு மீண்டார் என்பதைக் கந்தசாமி சுவாமிகள்,

"எப்படையாலு மூறுசற்றடையா திருந்தடக்கண்டமன்வெகுண்டு
மைப்பருவதநேர் யானை கடம்மை மகிமைதோய்தாசர்மேனடத்தத்
துப்பவிர்தாசர் நாரசிங்கத்தைத் தோத்திரித்தனரவருருவங்
கைப்பகடுகள்கண் கட்கரியேறாக் காணலாற்சாலவுகலங்கி" (46)
"எண்டிசைக்கரிக டாமுமிக்கஞ்ச விரிந்தனதிசைதொறுமதனைக்
கண்டிறையான ஞானசூனியன்மெய்க் கண்பெறுதாசரைவேங்கை
மண்டியபெட்ட கத்தினுட்செலுத்த மற்றதுதொண்டரைக்கண்டே
யண்டிடற்கஞ்சி யரற்றிடப்புறஞ்செய் தறனிறைதடத்தினுள்ளழுத்த" (47)
"ஏவினன்றூதர் பலவினைபுனலுள் ளியைதரவழுத்தியுமமிழார்
மேவியசுரைபோன் மிதந்திடத்தூதர் மெய்சலித்திறையுடன்விளம்பி
யாவிபோம்படியா டாணநஞ்சயில்வித் தவயவங்களையெலாங்கட்டி
யோவிடச்சிலையும் பிணித்தெறிந் தெம்மை யுறுசனியொழிந்த தென்றகன்றே"  (48)

எனக் குறிப்பிடுகின்றார்.  இக்கொடுமைகளிலிருந்தெல்லாம் பிழைத்துவிட்டாரே என்று வெதும்பிய மன்னர் பெரியதாசரைக் கழுமரத்தில் தூக்கிலிடவும் அதுவும் சரிவராது போனால் கட்டி உதைக்கவாவது செய்யுங்கள் என்கின்றார்.  இதனைச் சுவாமிகள் வாக்கால் உணரலாம்.

"அன்னகாலையினிற் றூதர்கள்பெரிய தாசரையவிர்கழுமரத்தின்
முன்னமைத்தனர்சித் தஞ்செயப் பெரியோர் முகுந்தனைத் துதித்தனர் நாடப்
பன்னகாபரணன் முன்னுறுமதன்போற் பருங்கழுபற்பமாகிடலுந்
துன்னருட்செயல்கள் டமரர்பூப்பொழிந்து துந்துபியதிர்த்தனர்மாதோ" (54)

"அக்கணத்தரிமன் னவன்புடைவிரைவி லடைந்துமாபாவியாங்காரி
பொக்கமார்வஞ்சப் புலையநெஞ்சிரக்கம்  பொருந்திடா வரக்கவென் றோதிக்
கைக்கண்மேவியவன் கசைகொடென்றொண்டற் கடியதண்டனை பலசெயலா
லிக்கணத்துன்னை மடிப்பனென்றவனியிடைபுரட்டினனடித்தகன்றான்" (55)

"ஒப்பின் மாதவன்ற னடிகளைச்சகியா னோவெனக்கதறினனாகித்
தப்பின் மாதவரைக் கழுவிலேற்றாதே சணத்தழைத்துறுமினிங்கென்ன"(56:1-2)

இதுபோன்ற செயல்களின் மூலம் பெரியதாசரை இறைவன் உலகுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் எனலாம்.  பக்தமான்மியத்திலும் பக்தமான்மிய அனுபந்தத்திலும் கதிகளின் இறுதிப் பாடலாக அவ்வவ் கதித் தலைவர்களின் கதையினைச் சுருக்கமாகக் கூறியிருப்பது ஆசிரியர் கந்தசாமி சுவாமிகளின் புலமையை வெளிப்படுத்துகிறது.  பெரியதாசர் கதியில் இடம் பெற்றிருக்கும் பாடலை இங்கு எடுத்துக்காட்டாகக் காட்டலாம்.

"பட்டைநாமந் தரித்தவரைப் பரமபாக வதரெனவே
பரவும்பெரிய தாசர்தஞ்சைப் பார்த்தீபன்செய் பெருந்துயரா
விட்டைகலையா தருள்புரிந்து நிரூபன்குற்றங் கசையடியா
னிவிர்த்தியுறச்செய் தன்பர்பணி நிறைபேருவப்பிற் புரிந்தவர்க்குன்
வெட்டையுருவந் திருவரங்க நியமத்திடைகாட் டுபுபுவிப்பா
னேராதயிக்க முறப்புரிந்தாய் நிலையாமனத்தாற் றட்டழிவேற்
கெட்டையிரண்டை யறிவித்திட் டெந்நாளின்ப முறப்புரிவா
யிராமானந்தப் பெயர்கொடென திதயத்திலுங்கும் பெருமாளே" (66)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக