ஞாயிறு, 28 அக்டோபர், 2018

சமயக் குரவர்களின் சமூகச் சிந்தனை


சமூகத்தில் வாழும் மக்களின் நலன்களுக்காகவே சமயக் குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி போன்றோர் தலங்கள் தோறும் சென்று வழிபட்டு தங்களின் சமூகச் சிந்தனைகளை பனுவல்களா கப் பாடி வைத்துள்ளனர்.  திருக்கோயில் சென்று இறைவனை வழிபட்டு முத்தி அடைவதோடு தம் ஆன்மீக உணர்வைச் சுருக்கிக் கொள்ளாமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று சிந்தித்துத் தேவார மூவரும் தங்களின் பனுவல்களில் பல்வேறுபட்ட சிந்தனைகளைப் புலப்படுத்தியுள்ளனர்.  அவற்றுள் சிலவற்றை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.  திருநாவுக்கரசர்,
“என்க டன்ப ணிசெய்து கிடப்பதே”               (தேவாரம், 5:19:9)
என்று பணிசெய்வதே தன்னுடைய கடமை எனப் பாடியுள்ளார்.  திருமூலரும் அடியார்களுக்குச்செய்யும் தொண்டு நேரடியாக இறைவனை அடையும் என்ற கருத்தில்,
            “படமாடக் கோயிற் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயிற் பகவற்க தாமே”               (திருமந்திரம், பா.1857)
என்று பாடியுள்ளார்.  சமயக் குரவர்களின் செயற்பாடுகள் அவர்களின் சமூகச் சிந்தனையை படம்பிடித்துக் காட்டுவனவாக உள்ளன.  குறிப்பாக சில மட்டும் எடுத்துரைக்கப்படுகிறது. 
வழிபாட்டுச் சிந்தனை
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இணைந்து சில தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டனர்.  அவ்வாறு அவர்கள் திருமறைக்காடு என்னும் தலத்திற்கு வந்தபோது வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக்கோயிலின் கதவுகள் திறக்கப்படாமல் இருந்தது.  மக்கள் வேறோர் பக்கத்தில் வாயில் ஒன்றை அமைத்து அதன் வழியே சென்று வழிபட்டு வருவதைக் கண்டனர்.  திருஞானசம்பந்தர், மக்கள் நேர்வழியே சென்று இறைவனை வழிபட வேண்டும் எனக் கருதி, திருநாவுக்கரசரைப் பணிந்து, மறைக்கதவம் திறக்கப் பாடுமாறு வேண்டினார்.  திருநாவுக்கரசர், “பண்ணி னேர்மொழி” என்று தொடங்கும் பதிகம் பாடினார் (தேவாரம், 5:10:1). இறைவன் அருளால் கதவு திறந்தது.  மக்கள் மகிழ்ச்சியுடன் இறைவனை அவ்வாயிலின் வழியே சென்று வழிபட்டனர்.  திருஞானசம்பந்தர் “சதுரம் மறைதான்” எனத் தொடங்கும் பதிகம் பாடி மீண்டும் அக்கதவுகள் மூடவும் திறக்கவும் வழிசெய்தார் (2:மறைக்காடு:1). பொதுமக்கள் அதுநாள் தொடங்கி நேர்வழியில் சென்று இறைவனை வழிபாடு செய்யத் தொடங்கினர் என்பதால் இவ்விருவரின் சமூகச் சிந்தனை வெளிப்படுகிறது.
மனிதநேயச் சிந்தனைகள்
            தேவார ஆசிரியர்கள் வழிபாட்டோடு மனிதநேயச் சிந்தனைகளைச் சமூகத்தில் வளர்ப்பதிலும் மிகுந்த அக்கறை செலுத்தினர்.  இனம், மொழி, பண்பாடு, நாடு என்று பலவாக வேறுபட்டுள்ள மனிதர்களை ஒன்றுபடுத்துவதில் பக்தியையும் திருக்கோயில் வழிபாட்டையும் பயன்படுத்தி உள்ளனர்.  அதில் வெற்றியும் கண்டனர் எனலாம்.  மனிதர்களுக்குள் வேறுபாடுகள் இல்லை எனவும், ஆன்மாவிற்கு ஆண், பெண், அஃறிணை என்ற தன்மைகள் இல்லை எனவும், பக்தியும் இறைவழிபாடும் அனைவருக்கும் அனைத்திற்கும் பொதுவானது எனவும், நாடெங்கும் வலியுறுத்தி தலயாத்திரை சென்றுள்ளனர்.  திருமூலர்,
            “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”                        (திருமந்திரம், பா2104)
என்று குறிப்பிடுவது ஈண்டு சிந்திக்கத் தக்கது.  இக்கருத்தினை அடியொற்றியே தேவார மூவர்களும் தலயாத்திரை சென்று மனித நேயத்தை வளர்த்துள்ளனர்.  மனிதன் இறைவனுக்குச் செய்யும் தொண்டை விட, மனிதன் மனிதனுக்கும் பிற உயிரினங்களுக்கும் செய்யும் தொண்டே சிறந்தது என்று போற்றி உரைத்துள்ளனர்.
            திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் பாணர் குலத்து அடியாரைக் குலவேறுபாடு கருதாது தாம் செல்லும் தலங்கள் அனைத்திற்கும் உடன் அழைத்துச் சென்றவர் திருஞானசம்பந்தர்.  திருஞானசம்பந்தர் பாடல்களுக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணரே பண்ணமைத்து யாழில் இசைத்து சம்பந்தரின் பாடல்களுக்கு உயிரூட்டியவராவார்.
            திருஞானசம்பந்தர், பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் அழைப்பை ஏற்று மதுரை வந்து ஒரு திருமடத்தில் தங்கினார்.  இதனை அறிந்த சமணர்கள், அவர் தங்கியிருந்த மடத்திற்கு இரவு தீர் வைத்தனர்.  இதனை அறிந்த சம்பந்தர் இச்செயலுக்குக் காரணம் அரசனே என உணர்ந்து அத்தீயை வெப்பு நோயாகப் பாண்டிய மன்னனைப் பற்றுமாறு செய்தார்.  இந்நிகழ்ச்சியிலும் பாண்டிய மன்னனை அத்தீ அழிக்கக் கூடாது என்ற மனிதநேயச் சிந்தனையுடனும், தவறுக்குத் தண்டனை என்ற நிலையில் வருத்தமுறச் செய்து, அம்மன்னன் திருந்தப் பயன்படவேண்டும் என்ற நிலையிலும்,
            “செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே”          (தேவாரம், 3:33:9)
என்று பாடினார்.  இப்பாடலில் சம்பந்தர் ‘பையவே’ என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் தன்மையை நோக்கும்போது தண்டிப்பதிலும் ஒரு மென்மையைக் கடைபிடித்துள்ளமை வெளிப்படுகிறது.  வழிபாடு, மனித நேயத்திற்குத் துணைபுரிய வேண்டும் என்ற அடிப்படையைச் தங்களுடைய செயல்கள் மூலம் சமயக் குரவர்கள் புலப்படுத்தியுள்ளனர்.
சுயமரியாதைச் சிந்தனை
            மனிதன் தன்னை முழுமையாக நம்பினால் மட்டுமே அவனுடைய வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும்.  தாழ்வு மனப்பான்மை வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்தி மனிதனை நிலைகுலையச் செய்யும்.  இத்தாழ்வு மனப்பான்மையை அகற்றவும், மனிதப் பிறவியின் மேன்மையை உணர்த்தவும் சமயக் குரவர்கள் பலவிடங்களில் தங்களின் கருத்துக்களைப் புலப்படுத்தியுள்ளனர்.
            “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்”  (தேவாரம், 4:81:5)
என்ற பாடலடியைச் சுட்டலாம்.  மேலும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் முகமாக,
            “மலையே வந்து வீழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்”        (தேவாரம், 5:91:5)
“அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை” (தேவாரம், 4:2:1)
என்றெல்லாம் பாடி மனிதனுக்கு வாழ்வில் ஊக்கமளித்துள்ளனர்.
சமூகச் சிந்தனைகள்
            சமயக் குரவர்கள் தம் வாழ்வில் சிறந்து விளங்கவும், வீடுபேறு அடையவும் பல அறிவுரைகளைக் கூறிச் சென்றுள்ளனர்.  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் வஞ்சம் என்பர்.  இத்தீய குணம் இல்லாத மனித்தையே இறைவன் விரும்புவான் எனக் கூறி மனிதனை ஆற்றுப்படுத்தியுள்ளனர்.  இதனை,
            “வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லான்”     (தேவாரம், 7:19:5)
“வஞ்சம் மனத்து இறையும் நெஞ்சணு காதவன்”       (தேவாரம், 7:84:7)
“கள்ள நெஞ்சே வஞ்சகக் கருத்தை விட்டு அருத்தியோடு
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளன்”   (தேவாரம், 2:10:6)
என்றெல்லாம் சுட்டுவதைக் காணலாம்.  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதும், நம்பிக்கைத் துரோகம் செய்வதுமாகிய வஞ்சகச் செயல்களை மனதில் எண்ணுதல் கூடாது என்பதே இப்பாடலடிகள் பெரிதும் வலியுறுத்துகின்றன. 
            வள்ளுவர், ஒருவன் வாய்மையைக் கடைபிடித்தால் வேறு அறங்கள் செய்ய வேண்டியதில்லை என்கிறார்.  இக்கருத்தைச் சமயக் குரவர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.  இதனைச் சுந்தரர்,
            “பொய்யாத வாய்மையால் பொடிபூசிப் போற்றிசைத்து” (தேவாரம், 7:30:6)
என்கிறார்.  சங்க காலந்தொட்டே ஈதலறம் பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளது.  “ஈதம் இசைபட வாழ்தல்” என்று வள்ளுவப் பெருந்தகை ஈதலறம் பற்றிக் குறிப்பிடுகிறார்.  நக்கீரரும்,
 “செல்வத்துப் பயனே ஈதல்”               (புறம், பா.189)
என்கிறார்.  சமயக் குரவர்கள் ஈதலறத்தை நேர்மறையாகவும், செய்யாவிடில் ஏற்படும் துன்பத்தை எதிர்மறையாகவும் கூறி வலியுறுத்தியுள்ளனர்.
            “இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
காப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்” (தேவாரம், 4:ஐயாறு:10)
            “தாழாது அறம் செய்ம்மின்”                            (தேவாரம், 7:79:11)
            “அறம் புரிந்து நினைப்பது ஆண்மை”             (தேவாரம், 7:53:3)
என்றெல்லாம் சுட்டிச் செல்கின்றனர்.  இவைகள் அறம் செய்பவர்களுக்குப் பொருளை வாரி வழங்குவான் என்பதும், கள்ளத்தால் பொருளைப் பதுக்கினால் நரகமே அவர்களுக்குக் கிட்டும் என்பதும் இதன் மூலம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், ஊக்கத்தோடு அறம் செய்ய வேண்டும் என்பதையும் இது பற்றி நிற்கிறது.
            இவ்வாறு சமயக்குரவர்களின் பாடல்களில் சமூகச் சிந்தனைகள் எவ்வளவோ இருப்பினும் அவற்றுள் ஒருசில மட்டும் சான்றுக்கு எடுத்துக்காட்டுப்பட்டுள்ளது எண்ணற்பாலது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக