திங்கள், 1 அக்டோபர், 2018

சின்னத்தம்பி கதை

மக்கள் இலக்கியமாக, வழிவழியாக வழங்கிவரும் உரைநடைக் கதைகள், கதைப் பாடல்கள், பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள் போன்ற பல்வேறு வகைகளில் நாட்டுப்புற இலக்கியங்கள் அமைந்திருக்கின்றன.  இவற்றில் கதைப்பாடலும் ஒன்று. இக்கதைப் பாடல் இன்று ஓலைச்சுவடி வழியாகவும் வாய்மொழி வழியாகவும் பல கிடைக்கின்றன.  இவற்றில் ஏட்டுருவம் பெற்றவை சிலவே.  இன்னும் சில கதைப்பாடல்கள் ஓலைச்சுவடி மற்றும் வாய்மொழி வடிவமாகவே இருத்தல் கண்கூடு.  இந்நிலையில் 'சின்னத்தம்பி கதை' என்னும் கதைப்பாடல் ஓலைச்சுவடி வடிவமாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறைச் சுவடிகள் நூலகத்தில் (சு.எண்.1849) பாதுகாக்கப்பெற்று வருகின்றது.  ஓலைச்சுவடியில் இருக்கக்கூடிய இக்கதையை அறிமுகப்படுத்தும் வகையானும் அதில் உள்ள சிறப்புக் கூறுகளை ஆயும் முகத்தானும் இவ்வாய்வு அமைக்கப்பெற்றுள்ளது.

சுவடி அமைப்பு

பதினெட்டு ஏடுகள்-முப்பத்தாறு பக்கங்களைக் கொண்ட இச்சுவடி 52 செ.மீ. நீளமும், 3 செ.மீ. அகலமும் கொண்டது.  ஒவ்வொரு பக்கமும் மூன்று பத்திளைக் கொண்டும் பத்திக்கு ஏழு வரிகளைக் கொண்டும் அமைந்துள்ளது.  நாட்டுப்பாடல் அமைப்பைக் கொண்ட இக்கதை 719 அளவடியினைக் கொண்டதாக அமைந்துள்ளது.  இச்சுவடியின் முதலேட்டில் 'கடவுள்துணை - K. கோலப்பிள்ளை - சின்னத்தம்பி கதை' என்று குறிப்பிடப்பெற்றிருக்கின்றது.  இம்முற்குறிப்பினைப் பார்க்கும்போது K.கோலப்பிள்ளை அவர்கள் படியெடுத்தவரா? சுவடி எழுதியவரா? சுவடி எழுதுவித்தவரா? நூலாசிரியரா? என்று உறுதிப்படுத்த முடியவில்லை.

சின்னத்தம்பி கதைச்சுருக்கம்

திருநெல்வேலிக்கு அருகில் வேப்பலாங்குளம் என்னும் சிற்றூரில் சக்கிலியப்படைச் சாதியைச் சேர்ந்த இராமப்பகடையும் அவன் மனைவி பூலுடையாளும் வாழ்ந்து வந்தனர்.  இவ்விருவருக்கும் குழந்தை இல்லையே என்ற மனக்கவலை நீண்ட நாள்களாகவே இருந்து வந்தது.  இக்கவலை இராமப்பகடையை அதிகம் பாதிப்பதாகக் கருதிய பூளுடையாள் தன் கணவனை இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ளச் சொல்லுகின்றாள்.  இதுகேட்ட இராமப்பகடை, 'மடமயிலே, கோடிப்பொன் கொடுத்தாலும் உன்னைப்போல் ஒருவளைத் தேடமுடியாது.  உன்னைத் தவிர மற்ற பெண்கள் எனக்குத் தாயல்லவோ! நான் எப்படி மறுமணம் செய்துக்கொள்ள முடியும்.  நமக்கு மைந்தனில்லாததற்கு என்ன குறையென்று சோதிடரை அழைத்து கேட்போம்' என்கின்றான்.  சோதிடர், சோழி உருட்டி பஞ்சாங்கத்தை முறைப்படி ஆராய்ந்து, சர்ப்பசாந்தியும் தானதர்மமும் செய்து வந்தால் உங்களுக்குக் குழந்தைப்பேறு கிட்டும்' என்று சொல்லிச் செல்கின்றார்.

சோதிடரின் சொற்படியே இராமப்பகடையும் பூலுடையாளும் காத தூரத்திற்கு ஒரு கல்கிணறும், பாதையோரம் சுமைதாங்கியும், சத்திரங்கள் தோறும் தண்ணீர் மடமும் அமைத்தார்கள்.  சாலைதோறும் மரங்கள் நட்டு வளர்த்தார்கள். பங்குனிமாத வெயிலில் நடக்கும் நடைபாதை வாசிகளுக்கு காலணியும் குடையும் கொடுத்தார்கள்.  பரதேசிகளுக்கு அன்னதானம் செய்தார்கள்.  இவற்றோடு சர்ப்பசாந்தியும் செய்தார்கள்.  இவ்வாறு இராமப்பகடையும் பூலுடையாளும் சோதிடரின் சொற்படி செய்து வந்ததினால் பூலுடையாள் கருவுற்று பத்தாவது மாதத்தில் அழகிய பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்கின்றாள்.

பெண்பிள்ளை பிறந்ததென்று பூலுடையாள் வருத்தமடைகின்றாள்.  பெண்பிறந்த வயிற்றில் நிச்சயமாக ஆண்குழந்தை பிறக்கும் என்று மருத்துவச்சி தேறுதல் கூறுகின்றாள்.  குழந்தை பிறந்து பதினாறு நாள் கழித்து பூலுடையாள் ஆண்பிள்ளை வேண்டுமென்று மீண்டும் விரதமிருக்கின்றாள்.  இவ்வேளையில், கேதாரத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் வேப்பலாங்குளத்திற்குப் பங்குனி மாதத்தில் கிருஷ்ணதாசர் என்னும் சந்நியாசி வருகின்றார்.  அவர் வேப்பலாங்குளத்திற்கு அருகில் ஓடும் ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கின்றார்.  ஆற்றில் நீர் எடுக்கச் செல்லும் வழியில் பூலுடையாள் ஆற்றில் விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்த்துத் தனக்கிப்படியோர் பிள்ளை இல்லையே என்று வருத்தமடைகின்றாள்.   இவளின் வருத்தத்தை ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணதாசர் உற்றுநோக்கி, பூலுடையாளின் குறைகளைக் கேட்டறிகின்றார்.  எனக்குக் காலணியும் குடையும் கொடுப்பீராகில் 'நீ ஆல்போல் தழைத்து அறுகதுபோல் வேரூன்றுவாய்' என்கின்றார்.  இவ்வார்த்தைதனைக் கேட்ட பூலுடையாள் வீட்டிற்கு ஓடிச்சென்று இராமப்பகடையுடன் வந்து கிருஷ்ணதாசரை வணங்கி அவருக்கு காலணியும் குடையும் கொடுக்கின்றனர். கிருஷ்ணதாசர், இவ்விருவரையும் பார்த்து 'நீங்கள் அழகியநம்பி கோயில் சென்று அங்கு ஒரு மண்டலம் தவமிருந்தால் உங்களுக்கு ஆண்குழந்தை பிறக்கும்' என்று வாழ்த்திச் செல்கின்றார்.

கிருஷ்ணதாசரின் சொல்படியே இராமப்பகடையும் பூலுடையாளும் தவத்திற்குத் தேவையான பொருட்களையெல்லாம் வண்டியில் ஏற்றிக்கொண்டு அழகியநம்பி கோயில் நோக்கிப் புறப்படுகின்றனர்.  வழியில் நம்பியாற்றில் குளித்துத் திருநீறு பூசிக்கொண்டு அழகியநம்பி கோயிலுக்குள் செல்கின்றனர்.  அங்கு அன்னம் தண்ணீர் இறக்கமின்றி அழகியநம்பியை சிந்தையில் வைத்து ஸ்ரீராமா ராமா என்று நித்தம் சிந்தித்திருக்கும் வேளையில், கிருஷ்ணதாசர் குறிப்பிட்ட தவ நாளின் முடிவில் அழகியநம்பி கோயில் அர்ச்சகராக வேடம் பூண்டு தவம் மேற்கொண்டிருக்கும் இருவரையும் சந்திக்கின்றார்.  அவர்களுக்குத் தீர்த்தமும் திருநீறும் கொடுத்து அவர்களின் விரதத்தை முடிகின்றார்.  தவம் முடித்த இருவரும் வேப்பலாங்குளம் திரும்புகின்றனர்.  அம்மாதமே பூலுடையாள் கருத்தரித்து பத்தாம் மாதத்தில் அழகிய ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்கின்றாள்.  ஆண்குழந்தை பிறந்தது என்று இராமப்பகடையும் பூலுடையாளும் மிக்க மகிழ்ச்சியடைந்து தானதர்மங்கள் பல செய்கின்றனர்.  குழந்தைக்குப் பதினாறாவது நாளில் அழகியநம்பி கோயில் சென்று நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு குழந்தைக்குச் சின்னத்தம்பி என்று பெயர் சூட்டுகின்றனர். சின்னத்தம்பி, ஒரு வயதில் சிறுதேருருட்டி விளையாடுகின்றான்.  மூன்று வயதில் காதுகுத்து விழா கண்டு ஐந்து வயதில் பள்ளிக்கூடம் செல்கின்றான்.  பத்து வயதில் பல வகையான சிலம்பப் பயிற்சிகளையும், பன்னிரண்டாம் வயதில் யானை மற்றும் குதிரை ஏற்றப் பயிற்சிகளையும், மாயவித்தை, குறளிவித்தை, கண்கட்டு வித்தைகளையும் முறையாகச் சின்னத்தம்பி கற்றுத் தேர்கின்றான்.

சின்னத்தம்பிக்குப் பதினைந்து வயதாயிருக்கும் போது, களக்காட்டு மலையில் புலிகளின் அட்டகாசமும், பணகுடி மலையில் பன்றிகளுடைய அட்டகாசமும் அதிகரித்து இருந்தது. வேடர்கள் இவைகளின் அட்டகாசங்களை அடக்க முடியாமல் பயந்திருந்தார்கள்.  அப்பகுதி இராசாக்கள் இம்மிருகங்களின் அட்டகாசங்களை அடக்கச் சொல்லி விளம்பரஞ் செய்தார்கள்.  இதுகேட்ட சின்னத்தம்பி மிருகங்களின் அட்டகாசத்தை ஒடுக்க எண்ணி, தந்தையிடம் பூச்சிநாய் ஒன்று வேண்டிப்பெற்று, வேட்டைக்கு நாளைக்குச் செல்வதாக நகரிலுள்ளோர் அறியும் விதமாக பறையடித்துத் தெரிவிக்கின்றான்.

குறிப்பிட்ட நேரத்தில் சின்னத்தம்பி பூச்சிநாயுடன் தடி, வில். வல்லயம், கட்டாரி, கைக்கத்தி, கேடயம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பெற்றோரின் அனுமதியுடன் களக்காடு மற்றும் பணகுடி மலைகளில் அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் மிருகங்களை வேட்டையாடிவிட்டு வெற்றிக் களிப்புடன் வேப்பலாங்குளம் திரும்புகின்றான். இவ்வேட்டையின் மூலம் சின்னத்தம்பியின் புகழ் திக்கெட்டும் பரவுகின்றது.

இப்படியாகச் சின்னத்தம்பி வீரப்புகழின் உச்சியிலிருக்கும் வேளையில், திருக்குறுங்குடி பட்டினத்தில் கோட்டைகட்டி  பணகுடி நகரை மாணிக்கவாசகம் பிள்ளை என்பவர் ஆண்டுவந்தார்.  கோட்டைக்கு நாலு பக்கமும் வாசல் வைத்து, வாசலுக்கு ஒரு தலைவரை நியமித்து, அவருக்கு ஆயிரம் குதிரைப் படைகளையும் ஈய்ந்து அண்டை நாட்டாரிடமிருந்து தன்னைக் காத்துக்கொண்டு சிறப்புடன் வாழ்ந்து வந்தார்.  பாப்பாக்குடி திருப்பணமருதூர் பட்டினத்தை ஆண்டு வரும் தர்மராசாவின் தங்கையான தங்கநாச்சியம்மாளை மாணிக்கவாசகம் பிள்ளை மணஞ்செய்து வாழ்ந்து வரும் வேளையில், வடக்குவாசல் அரண்மனைக் குதிரைகளில் ஒரு குதிரை யாருக்கும் அடக்காது இருந்தது.  இதனால் பலர் பல தொல்லைகளை அனுபவிக்க நேர்ந்தது.  இதனைக் கேள்விப்பட்ட மாணிக்கவாசகம் பிள்ளை அவர்கள் வடக்குவாசல் தலைவரை அக்குதிரையை அடக்கச் சொல்கின்றார்.  அவரோ அக்குதிரையை அடக்க பயந்து தன்னுடைய வடக்குவாசல் தலைவர் வேலையை விட்டு ஓடி விடுகின்றார்.  அப்போது மந்திரியானவர் வேப்பலாங்குளத்தில் வசித்து வரும் சின்னத்தம்பியின் சிறப்பை எடுத்துச் சொல்லவும், மாணிக்கவாசகம் பிள்ளை சின்னத்தம்பியை வடக்குவாசல் தலைவனாக்க எண்ணுகின்றார்.  இவ்வெண்ணத்தை பணி ஆணையாக ஓட்டக்காரன் மூலம் ஓலையில் எழுதி அனுப்புகின்றார்.

மன்னரின் பணி ஆணையைக் கண்ட சின்னத்தம்பி தாய் தந்தையரின் அனுமதியும் ஆசியும் பெற்று பூச்சிநாயுடன் திருக்குறுங்குடி நகர் வருகின்றான்.  அங்கு மாணிக்கவாசகம் பிள்ளையைச் சந்தித்து வடக்குவாசல் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றான்.  பணி ஆணையில் குறிப்பிட்டது போல் அடங்காத பேய்க்குதிரையை சின்னத்தம்பி நாளை அடக்கப் போவதாகவும், அதனால் பாலிகள், சூலிகள், பச்சைப் பிள்ளைதாட்சிகள், பாலர்கள், குருடர்கள், நொண்டிகள், சவ்வாரி வண்டிகள், சந்நியாசிகள், ஆடுகள், மாடுகள் போன்றன வழியில் வரக்கூடாது என்றும் பறையடித்துத் தெரிவித்தார்கள்.

குறித்த நாளில் குறித்த நேரத்தில் மாணிக்கவாசகம் பிள்ளை அவர்களின் முன்னிலையில் சின்னத்தம்பி அடங்காத குதிரையை அவிழ்த்து விடுகின்றார்.  கட்டவிழ்ந்த குதிரை அட்டகாசம் செய்யத் தொடங்குகின்றது.  குதிரை சாத்திரம் தெரிந்த சின்னத்தம்பி அக்குதிரையை யாரும் எதிர்பார்க்காத நிலையில் அதன் மீது ஏறி சவாரி வருகின்றான்.  இதனைக் கண்ட மாணிக்கவாசகம் பிள்ளை சின்னத்தம்பியை வடக்குவாசல் தலைவனாக்கி நாட்டைக் காக்கும் பொறுப்பினை அளிக்கின்றான். சின்னத்தம்பி வடக்குவாசல் தலைவனாக பொறுப்பேற்றுச் சிறப்புடன்  கோட்டைக் காவல் செய்துவருகின்றான்.  

இவ்வேளையில், சின்னத்தம்பிக்கு வயது பதினாறு நிறைவடைகின்றது. அவனது பெற்றோர் மாமன்மகள் சோணச்சியை வைகாசி மாதம் 25ஆம் தேதி வௌ¢ளிக்கிழமை காலை 5 நாழிகையில் திருமணம் செய்வதாக நிச்சயம் செய்கின்றனர். இச்செய்தியறிந்த மாணிக்கவாசகம் பிள்ளை சின்னத்தம்பிக்குப் பதினாயிரம் பொன்னும் ஒரு வாரம் விடுப்பும் அளித்து வேப்பலாங்குளத்திற்கு அனுப்பிவைக்கின்றார்.

வேப்பலாங்குளத்தில் இராமப்பகடையின் வீட்டில் திருமண வேலைகள் அதிவேகமாக நிகழ்ந்து கொண்டிருந்தது.  திருமணத்திற்கு முன்னதாகவே மணமகள் சோணச்சியை வேப்பலாங்குளம் அழைத்துவந்து பிறர் வீட்டில் தங்கவைத்திருந்தனர்.  உற்றார் உறவினர் அனைவருக்கும் பாக்கு வெற்றிலை கொடுத்து நாளது தேதியில் நடக்கும் திருமணத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தனர்.  உறவுமுறையார் பலர் திருமணத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்திருந்தனர்.  

இவ்வேளையில், மாணிக்கவாசகம் பிள்ளையின் மைத்துனரான பாப்பாக்குடி திருப்பணமருதூர் பட்டினத்து ராசர் தர்மராசா, தன்னுடைய நிலத்தில் புதையல் ஒன்று இருப்பதை உணர்கின்றான்.  அப்புதையலைப் பூதங்கள் காத்து வருவதையும் அதைப் பெற சுத்தவீரன் ஒருவனை பலிகொடுக்க வேண்டும் என்பதையும் பறைமாடன் மற்றும் மந்திரவாதி குமாருப்பிள்ளை மூலம் அறிகின்றான்.  தமது நாட்டில் பூதங்கள் கேட்கும் அளவிலான சுத்தவீரன் ஒருவனும் இல்லாதது கண்டு வருத்தமடைகின்றான்.  அப்போது தர்மராசாவின் மந்திரியானவர், தங்கள் தங்கையின் அரண்மனை வடக்குவாசல் தலைவனாக சின்னத்தம்பி ஒருவன் இருக்கின்றான்.  அவனே இதற்கு பொருத்தமானவன் என்கின்றான்.  மந்திரியின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட தர்மராசா, மாணிக்கவாசகம் பிள்ளைக்கு ஓலை ஒன்றை வரைகின்றார்.  

அதில் 'தனக்குத் தீராத தலைவலியால் உடல்நிலை சரியில்லாம லிருக்கின்றது. அதற்குத்தக்க மருந்தும் மருந்தரைக்கும் ஆளும் என்னிடம் இல்லை.  ஆகவே, தன்னிடம் வடக்குவாசல் தலைவனாக இருக்கும் சின்னத்தம்பியிடம் பணகுடி மலையில் இருக்கும் பச்சிலையைக் கொடுத்தனுப்பவும்' என்று வெளியோலையும், 'என்னுடைய காணி நிலத்தில் முன்னோர் புதைத்துவைத்த புதையல்கள் ஏராளம் இருக்கின்றன.  அவற்றைப் பெரும்பூதங்கள் காத்து வருகின்றன.  அப்பூதங்களை வருத்திக் கேட்டபோது, சுத்தவீரன் ஒருவனை பலிகொடுத்தால் புதையலை எடுத்துக்கொள்ள அனுமதிப்போம் என்கின்றன. அவ்வகைப்பட்ட சுத்தவீரன் என்னுடைய நாட்டில் எங்கேயும் இல்லை,  உன்னுடைய வடக்குவாசல் தலைவன் சின்னத்தம்பி அதற்குகந்தவனாக இருக்கின்றான்.  எனவே, அவனை உடன் அனுப்பி வைத்தால் கிடைக்கும் புதையலில் ஆளுக்குப் பாதியாக பங்கிட்டுக் கொள்ளலாம்' என்று உள்ளோலையும் வைத்து ஓட்டக்காரன் மூலம் கொடுத்தனுப்புகின்றான்.

ஓட்டக்காரன் கொண்டுவந்து கொடுத்த வெளியோலை மற்றும் உள்ளோலை படித்த மாணிக்கவாசகம் பிள்ளையும் அவனது மனைவி தங்கநாச்சியும் சின்னத்தம்பியை அனுப்பிவைக்க தீர்மானிக்கின்றனர்.  திருமண வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சின்னத்தம்பிக்கு மாணிக்கவாசகம் பிள்ளை ஓட்டக்காரன் மூலம் ஓலை ஒன்றை எழுதி அனுப்புகின்றான்.  அதில் 'என்னுடைய மைத்துனர் பாப்பாக்குடி தர்மராசாவுக்குத் தீராத தலைவலி உண்டாகி இருக்கின்றது.  அதற்கு நீ பணகுடி மலையில் இருக்கும் மூலிகை மருந்துகளை எடுத்துக்கொண்டு போய் அரைத்துக் கொடுத்துவிட்டு சீக்கிரம் வா' என்று எழுதியிருந்தார்.

மாணிக்கவாசகம் பிள்ளையின் ஓலையைக் கண்ட சின்னத்தம்பி உடனே புறப்படத் தயாராகின்றான்.  தாய் பூலுடையாள், திருமணம் நிச்சயம் செய்யப்பெற்ற பின் ஊரைவிட்டுப் போகக் கூடாது, மணப்பெண்ணை அழைத்துவந்து பிறர் வீட்டில் விட்டிருக்கின்றது என்று கூறித்  தடுக்கின்றாள்.  தாயின் சொல்லைக் கேட்காமல் சின்னத்தம்பி புறப்படத் தயாராகின்றான்.  சின்னத்தம்பி வழியில் சாப்பிடுவதற்காக- கட்டுச்சாதம் கட்டுவதற்காக அரிசியை உரலில் போட்டு உலக்கையால் குத்தும் போது ஒற்றைக்குரலோசை கேட்கின்றது. சாதம் வடிக்கும் போது பல்லி தலையில் விழுகின்றது.  இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்த பூலுடையாள் கெட்டசகுனமாக இருக்கின்றதே என்று மீண்டும் தடுத்துப் பார்க்கின்றாள்.  சின்னத்தம்பி தாயின் சொல் கேளாமல் கட்டுச்சோற்றை எடுத்துக்கொண்டு பூச்சிநாயை முன்னே விட்டு குதிரையிலேறி புறப்படுகின்றான்.  

வீட்டைவிட்டுப் புறப்படும் போது சின்னத்தம்பிக்கு நடை இடிபடுகின்றது.  இச்சகுனத்தையும் பொருட்படுத்தாத அவன் வீதியில் செல்லும் போது காகங்கள் கரைகின்றன, கருங்கூவை கூவுகின்றன, சந்நியாசி, ஒற்றைப் பார்ப்பான், தலைமொட்டை வாணியன் ஆகியோர் எதிரே வருகின்றனர்.  இவற்றையெல்லாம் கண்ட சின்னத்தம்பி தயக்கம் கொள்ளாமல் பணகுடி மலையில் பச்சிலைகளையெல்லாம் பறித்துக்கொண்டு சேரன்மாதேவி - வீரவநல்லூர் - தாளநல்லூர் வழியாக தாமிரபரணி ஆற்றங்கரை வந்தடைகின்றான்.  அப்போது நண்பகல், ஆகவே அங்குக் கட்டுச்சோற்றைச் சாப்பிட குதிரையைக் கருவை மரத்தில் கட்டிவிட்டு அமர்கின்றான்.  அங்குத்  தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக இரண்டு இளம்பெண்கள் வருகின்றனர்.  அப்போது கருவை மரத்திலிருந்து பல்லி பலபலென்று அடிப்பதையும், ஆந்தை அலறுவதையும் கேட்கின்றனர்.  இவ்விரு அறிகுறிகளைப் பற்றி உணர்ந்த அவர்கள் இவன் வெட்டுப்பட்டு மாளப்போகின்றான் என்று தீர்மானிக்கின்றனர்.  சின்னத்தம்பியின் நிலையினை உணர்ந்த அவர்கள் வருத்தமடைகின்றனர்.  இவர்களின் வருத்தத்தை உணர்ந்த சின்னத்தம்பி அவர்களைப் பார்த்து ஏன் வருத்தப் படுகின்றீர்கள் என்று கேட்கின்றான், உன்னைப்போல் ஆணழகனாக எங்கள் கணவன்மார்கள் இருப்பார்கள்.  அவர்கள் உன்னைப்போல் தேசாந்திரம் சென்றிருக்கின்றார்கள்.  அவர்கள் நினைவு எங்களுக்கு வந்துவிட்டது என்று பொய்க்கூறிச் செல்கின்றனர்.

சின்னத்தம்பி தான் கொண்டுவந்த கட்டுச்சோற்றை அவிழ்க்கின்றான்.  அதனுள் கொத்துக்கொத்தாய்த் தலைமுடி இருக்கக் காண்கின்றான்.  அவற்றை ஒதுக்கித் திண்ண முற்படும் போது காகம் ஒன்று ஓடிவந்து கொத்திச் செல்கின்றது.  அப்போது காகத்திற்குச் சிறிது சோறு எடுத்துவைத்துத் திண்ணும் போது வாந்தி வருகின்றது.  இனிச் சாப்பிட முடியாது என்று நினைத்தவன் கட்டுச்சோற்றைப் பூச்சிநாய்க்கு வைக்கின்றான். அதுவும் முகர்ந்து பார்த்துவிட்டு திண்ண மறுக்கின்றது.  கட்டுச்சோறு கெட்டுவிட்டது என்று நினைத்த சின்னத்தம்பி அவற்றைத் தாமிரபரணி ஆற்றில் தள்ளிவிட்டு நீர்த்தாகம் தணித்துக்கொண்டு பாப்பாக்குடி நோக்கிப் புறப்படுகின்றான்.  புறப்படும் போது பூச்சிநாய் வானத்தைப் பார்த்து ஊளையிட்டு மண்ணைப் பறிக்கின்றது.  சாப்பாட்டு மயக்கத்தில் பூச்சிநாய் இவ்வாறு செய்கின்றது என்று எண்ணிய சின்னத்தம்பி தமது பயணத்தைத் தொடங்குகின்றான்.

மறுநாள் காலையில் தர்மராசாவின் அரண்மனைக்குள் செல்கின்றான்.  தான் பணகுடி மலையிலிருந்து கொண்டு வந்த பச்சிலை மூலிகைகளையெல்லாம் அரண்மனை காவலர் மூலம் கொடுத்தனுப்புகின்றான்.  சின்னத்தம்பி வந்துவிட்டான் என்ற செய்தி அறிந்த தர்மராசா போர்வையைப் போர்த்திக்கொண்டு பாசாங்கு செய்கின்றான்.  சின்னத்தம்பிக்கு மாப்பிள்ளைச்சோறு போட மாடன்சாம்பன் ஏற்பாடு செய்கின்றான். அச்சோற்றில் மயக்க மருந்து கலந்து கொடுக்க, அவன் மயக்கமடைகின்றான்.  இவ்வேளையில் மந்திரவாதி குமாரு பிள்ளை, மந்திரி அழகப்பப் பிள்ளை,  பண்ணைக்கார சோமப்பிள்ளை, தர்மராசா, தர்மராசாவின் மகன் ஆகியோர் புதையல் இருக்கும் இடத்திற்கு மயக்கத்திலிருக்கும் சின்னத்தம்பியை அழைத்துக்கொண்டு வருகின்றனர்.  புதையலிருக்கும் இடத்தைச் சுற்றி வலையமைத்து சுத்தம் செய்து பலி பூசைகள் பல செய்து மந்திரவாதி குமாருபிள்ளை சின்னத்தம்பியைப் பலி கொடுக்கின்றான்.

பலி கொண்ட சின்னத்தம்பி ஈசுவரரையும் காட்டாளம்மனையும் வேண்டிக் கொள்கின்றான்.  அதாவது, என்னை பலி வாங்கத் துணையாக இருந்தவர்களின் வமிசங்களை நான் வேரோடருக்கவேணும்.  அதற்கு எனக்கு உத்தரவு தரவேணும் என்று வேண்டுகின்றான்.  நடந்தவை நல்லவையல்ல என்றுணர்ந்த காட்டாளம்மன் சின்னத்தம்பியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு வரம் தருகின்றாள். சின்னத்தம்பி வெட்டுப்பட்டுக் கிடப்பதைக் கண்ட பூச்சிநாய் அழுது ஊளையிட்டு கைவிரல் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வேப்பலாங்குளம் நோக்கி ஓடுகின்றது.

இவ்வேளை, காணிநிலத்தில் தர்மராசா பலிகொடுத்த நிம்மதியில் புதையல் பொருள்களையெல்லாம் ஏழு மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு அரண்மனைக்குப் போய்க்கொண்டு இருக்கின்றான்.  பலி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த பூதங்கள் எல்லாம் சின்னத்தம்பியைத் திண்ண முற்படுகின்றன.   வீரசூரனாகிய சின்னத்தம்பி வெட்டுப்பட்ட நிலையிலும் ஆவியாக நின்று பூதங்கள் தன்னை நெருங்கவிடாமல் விரட்டியடிக்கின்றான்.  பலி பெற்றும் திண்ண முடியவில்லையே என்று கோபம் கொண்ட பூதங்கள் அத்தனையும் திரும்பிச்சென்று புதையல் எடுத்துச் செல்லும் மாட்டுவண்டிகளை மூணுகிணற்றில் தள்ளிவிட்டு வண்டிக்காரர்களை உணவாக எடுத்துக்கொள்கின்றன.

பூச்சிநாய் தனியாக வருவதைக் கண்ட பூலுடையாள் சின்னத்தம்பிக்கு ஏதோ தீங்கு நிகழ்ந்திருக்கின்றது என்பதை உணர்கின்றாள்.  பதைபதைத்து இராமப்பகடை மற்றும் சோணச்சியுடன் பூச்சிநாயைத் தொடர்கின்றாள் பூலுடையாள்.  பூச்சிநாய் சின்னத்தம்பி வெட்டுப்பட்டுக் கிடக்கும் இடத்தைக் காட்டுகின்றது.  இதைக் கண்ட பூலுடையாள் - இராமப்பகடை - சோணச்சி - பூச்சிநாய் ஆகிய அனைவரும் சின்னத்தம்பியின் பிரிவை ஏற்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக மாள்கின்றனர்.  இவற்றையெல்லாம் பார்த்து வந்த காட்டாளம்மன் மாண்டவர்களை மீட்டெடுக்கின்றாள்.  வெட்டுப்பட்ட சின்னத்தம்பியை யார் கண்ணுக்கும் தெரியாதிருந்து நல்லவர்க்கு நல்லனவும் தீயவர்க்கு கேடுகளும் செய்துகொண்டு இருக்கும்படி கூறுகின்றாள்.  ஏற்கெனவே காட்டாளம்மனின் அனுமதி பெற்றிருந்த சின்னத்தம்பி தர்மராசா மற்றும் மாணிக்கவாசகம் பிள்ளை ஆகியோரது வமிசங்களையும் அவர்களுக்குத் துணையாக இருந்தவர்களது வமிசங்களையும் வேரோடு அழித்துவிட்டு காட்டாளம்மன் கோயிலுக்கு வருகின்றான்.  அக்கோயிலில் சின்னத்தம்பிக்கு எனத் தனியே ஓர் இடம் ஒதுக்கப்பெற்றது.  உயிர்மீண்ட சின்னத்தம்பியின் பெற்றோர்களும் சோணச்சியும் சின்னத்தம்பிக்கு  முன்பூசையும் காட்டாளம்மனுக்குப் பின்பூசையும் செய்து வரலாயினர்.  

கதை நிகழிடம்

திருநெல்வேலி மாவட்டம்-நாங்குநேரி வட்டாரத்தில் இக்கதையின் மையப்பகுதி அமைந்திருக்கின்றது எனலாம்.  வேப்பலாங்குளம், பணகுடி, பாபாப்பாக்குடி ஆகிய ஊர்களில் பெரும்பகுதியான கதை அமைந்திருக்கின்றது.  இம்மூன்று ஊர்களும் இன்று நாங்குனேரி வட்டாரத்தில் அமைந்திருக்கின்றது.  மேலும், கதைப்போக்கிற்கு ஏற்ப, கதை நிகழ்விடங்கள் அமைந்திருக்கின்றன.  அதாவது, சின்னத்தம்பி கதையில் ஐந்து விதமான கதை நிகழ்விடங்கள் குறிப்பிடப்பெற்றிருக்கின்றன.  அவை,

1.  இராமப்பகடை, பூலுடையாள் ஆகிய இருவரும் ஆண்குழந்தை பெறவேண்டும் என்பதற்காக வேப்பலாங்குளத்தில் இருந்து நம்பியாற்றில் குளித்து அழகியநம்பி கோயில் செல்கின்றனர்.  இங்கு வேப்பலாங்குளம் - நம்பியாறு - அழகியநம்பி கோயில் என்னும் வழித்தடம் அமைதலைக் காணமுடிகின்றது.

2.  சின்னத்தம்பிக்கு இராமப்பகடை பூச்சிநாய் வாங்கச் செல்லும் பாதை.
"நெல்வேலி யூர்தாண்டி நேர்வடக்காய்(க்) கயத்தாற்போய்
வானறம்பட்டி வழிகூடிவந்து(ச்) சேர்ந்தான் சிப்பிப்பாறை"(202-203) 
என்ற வரிகளின்படி திருநெல்வேலி - கயத்தாறு - வானறம்பட்டி - சிப்பிப்பாறை என்னும் வழித்தடம் அமைதலைக் காணமுடிகின்றது.

3.  இராமப்பகடை பூச்சிநாய் வாங்கிவிட்ட மகிழ்ச்சியில் சீக்கிரமாக வேப்பலாங்குளம் செல்ல வேண்டும் என்பதற்காக திருநெல்வேலிக்குள் வராமல் குறுக்கு வழியாக வேப்பலாங்குளம் வருகின்றான்.
"சிப்பிப்பாறை தன்னைவிட்டு சீக்கிரம் கயத்தாற்வழி
தச்சநல்லூர் தான்தாண்டி தாளவூத்து(த்) தான்கடந்து
வீற்றிருந்தான் பாதைகூடி வேப்பலாங்குளத்தில் வந்தான்" (211-214)
என்ற வரிகளின்படி சிப்பிப்பாறை - கயத்தாறு - தச்சநல்லூர் - தாளவூத்து - வீற்றிருந்தான் பாதை - வேப்பலாங்குளம் என்னும் வழித்தடம் அமைதலைக் காணமுடிகின்றது.

4.  சின்னத்தம்பி தர்மராசாவுக்கு பச்சிலை மூலிகைகளைக் கொடுக்க பாப்பாக்குடி செல்கின்றான்.
"பணகுடி மலைதேடி பறித்தானே மருந்துவகை
ஓலையிலே கண்டபடி உள்ளமருந் தத்தனையும்
மூட்டைகட்டி தோளிலிட்டு மூடிக்குதிரை யோட்டிக்கொண்டு
சேரன்மா தேவிவழி வீரவநல்லூர் பாதைகூடி
அத்தாளநல்லூர் தாம்பிரவரணி ஆத்தாங்கரை யோரம்
............      ..............        ............       ..............
பறியேறிப் பாதைகூடி  பாப்பாக்குடி ஊரில்வந்தான்" (496-541)
என்ற வரிகளின்படி வேப்பலாங்குளம் - பணகுடி மலை - சேரன்மாதேவி - வீரவநல்லூர் - தாளநல்லூர் - தாமிரபரணி ஆறு - பாப்பாக்குடி என்னும் வழித்தடம் அமைதலைக் காணமுடிகின்றது.

5.  பாப்பாக்குடியில் வெட்டுப்பட்ட சின்னத்தம்பி காட்டாளம்மனிடம் அனுமதி பெற்று தனக்குக் கொடுமை இழைத்த அனைவரின் வமிசங்களையெல்லாம் வேரோடு அழிக்கச் செல்கின்றான்.
"பாப்பாக்குடி ஊரையெல்லாம் பதறடித்து சின்னத்தம்பி
தர்மராசா சோமபிள்ளை ஆண்டாபிள்ளை அழகப்பபிள்ளை
மந்திரவாதி குமாருபிள்ளை மாடன்சாம்பான் வம்மிசமும்
குத்திரெத்தம் தான்குடித்து குடல்பிடுங்கி மாலைபோட்டு
அழகியநம்பி குறுங்குடிநம்பி அவர்களையஞ் சேர்வைசெய்து
மலையின்நம்பி ராசரையும் மண்டிலிய சாஸ்தாவையும்
கன்னிமார் பெண்களையும் கருமாண்டி யம்மனையும்
அடிதொழுது சின்னத்தம்பி அனேகம்பேய்ப் படையுடனே
மலையாள தேசத்தையும் வந்துசுத்தி பார்த்துக்கொண்டு
நாகப்பொதிகை பாதைகூடி வருகிறானே சின்னத்தம்பி
அஞ்சுதலைப் பொதிகையிலே அகஸ்தியரைச் சேர்வைசெய்து
ஆனைமொட்டைத் தேரியிலே அய்யன்காக்ஷி பெரும்படைகள்
  சங்கிலி பூதத்தாரிடம் தகைதீர்த்து யெழுந்திருந்து
குளத்துப்பிள்ளை அய்யர்பாதம் கும்மிட்டடி வணங்கி
  ஏகப்பொதிகை வழியாக இறங்கியே பூதப்பேய்கள்
  வான்தீர்த்தம் தானாடி வருகிறானே சின்னத்தம்பி
சொரிமுத்து அய்யரையும் அடிவணங்கி தெண்டனிட்டு
  கலியாணி தீர்த்தமாடி பாவனாசம் வாறானே
பாபவினாச நாதரையும் பக்தியுடன் தொழுதுகொண்டு
குற்றால நாதரையும் குழல்வாய்மொழி அம்மனையும்
அச்சம்பொழிக் காவதிலே திருவாலி அய்யரையும்
கண்டுதெரி சித்துக்கொண்டு காவுவிட்டு கீழிறங்கி
கடையம் கிஷ்ணாபுரம்கூடி காக்கைநல்லூர் பாதைகூடி
  காட்டாளம்மன் கோவிலிலே வந்துசேர்ந்தான் சின்னத்தம்பி"(686-709)
என்ற வரிகளின்படி பாப்பாக்குடி - அழகியநம்பி - திருக்குறுங்குடிநம்பி - மலைநம்பி - கருமாண்டியம்மன் கோயில் - மலையாள தேசம் - நாகைப்பொதிகை - கலியாண தீர்த்தம் - பாவனாசம் - குற்றாலம் - கடையம் - கிஷ்ணாபுரம் - காக்கைநல்லூர் - காட்டாளம்மன் கோயில் என்னும் வழித்தடம் அமைதலைக் காணமுடிகின்றது.  

சின்னத்தம்பி கதையில் கதைக்கூறுகள்

சின்னத்தம்பி கதையில் பல்வேறு வகையான கூறுகள் இடம்பெற்றிருக்கின்றன.  குறிப்பாக, வாழ்வியல் மற்றும் இறப்புச் சடங்குகள், சகுனம் பார்த்தல், அறச்செயல் புரிதல், பலியிடுதல், பறையடித்தல், விரத முறைகள், சாபமிடுதல், நாட்டுப்புற மருத்துவம், பணி ஆணை அமைப்பு, உவமைகளும் பழமொழிகளும், கலைச்சொற்கள் என்பன போன்ற பல கூறுகள் இதனுள் இடம்பெற்றிருக்கின்றன.  இவற்றை முறையே பின்வருமாறு காணலாம்.

சடங்குகள்

நாட்டுப்புறப் பழக்கவழக்கங்களில் 'சடங்கு' குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றது.  சடங்கை வாழ்வுச் சடங்கு என்றும், இறப்புச் சடங்கு என்றும் இரண்டாகப் பிரிப்பர்.  வாழ்வுச் சடங்கைப் பிறப்புச் சடங்கு, பூப்புச் சடங்கு, மணச் சடங்கு என மூன்றாக்குவர். இவற்றில் பிறப்புச் சடங்கு மேலும் மூன்றாகப் பகுக்கப்படுகின்றது.  அதாவது, குழந்தை பிறப்பதற்கு முன் செய்யும் சடங்கு, குழந்தை பிறந்த அன்று செய்யும் சடங்கு, குழந்தை பிறந்தபின் செய்யும் சடங்கு என அவை அமையும்.  பிறப்புச் சடங்கைப் போல் மணச்சடங்கையும் மூன்றாக்குவர்.  அதாவது, திருமணத்திற்கு முன் நடக்கும் சடங்கு, திருமணத்தன்று நடக்கும் சடங்கு, திருமணத்திற்குப் பின் நடக்கும் சடங்கு என அவை அமையும்.  அதேபோல் இறப்புச்  சடங்கை இரண்டாக்குவர்.  அவதாவது, இறந்த அன்று செய்யும் சடங்கு, இறந்தபின் செய்யும் சடங்கு என அவை அமையும்.  சின்னத்தம்பி கதையில் பிறப்புச் சடங்கும், இறப்புச் சடங்கும் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது.

அ.  பிறப்புச் சடங்கு

சின்னத்தம்பி கதையில் மூன்று வகையான பிறப்புச் சடங்குகளும் இடம்பெற்றிருக்கின்றன.  குழந்தை பிறப்பதற்கு முன் செய்யும் சடங்காக,
"மூன்றுநல்லோ மாத்தையிலே முகமதிலே களைகொடுத்து
நாலாம்நல்லோ மாத்தையிலே நடைகடறா நாளையிலே
ஆபரணந்தான் பூட்டிப்பூலாளை அலங்கரித்து உறமுறையார்
ஒட்டகைத் தடம்போலே செனையிட்டலிகள் மோதகங்கள்
ஆனைநல்ல தடம்போலே அப்பளங்கள் அறியோதரம்
அதிரச முருக்குடனே அடைவடை தேன்குழலும்
கொண்டுவந்து இறக்கினார்கள் குணமுள்ள பூலாளுக்கு.
  அஞ்சாநல்லோ மாத்தையிலே பூலாள்அங்கமெல்லாந் தங்கநிறம்
  சூல்காப்பு சூல்வளையல் சுற்றத்தார்கள் தானடுக்கி
  ஆறாநல்லோ மாத்தையிலே எல்லோரு மறிந்திடவே
  ஸ்ரீமந்தக் கலியாணம் சிறப்பாகச் செய்தனரே" (54-64)

என்றும், குழந்தை பிறந்த அன்று செய்யும் சடங்காக,

"விரைவுடனே சொர்ணங்களும் வெல்லங்கள் பழத்துடனே
மருவுசர்க்கரை கலந்து மகிழ்ந்தங்கே தானமிட்டான்
பிள்ளைத்தொட்டில் செய்யச்சொல்ல பிரியமுள்ள கம்மாளர்
பால்மரத்தால் தொட்டிலும் பசும்பொன்னால் சங்கிலியும்
தடங்கலொன்றும் இல்லாமலே தக்ஷணமே செய்துவைத்தார்
பிள்ளைதனைத் தொட்டிலிட்டுப் பெற்றெடுத்த பூலாளும்
சந்தோஷ மகிழ்ச்சிகொண்டு தாலாட்டுப் பாடலுற்றாள்
கண்ணே! உறங்குறங்கு, கண்மணியே! என்மகனே! 
மின்னலைப்போல் மேனியனே! மேகவர்ணா கண்ணுறங்கு!
பொன்னே! நவமணியே! பூலோக சுந்தரமே! 
தவத்தினால் வந்துதித்த தற்பரமே கண்ணுறங்கு,
எங்கள் தண்டிக்கு இளவரசாய் வந்துதித்த
சிங்கப் பெருமானே! செல்வனே கண்ணுறங்கு,
மலடன் மலடியென்று வையகத்தோர் பேசாமல்
பிள்ளைக்கலி தீர்க்கவந்த பெருமானே! கண்ணுறங்கு" (வரி.151-165)

என்றும்,  குழந்தை பிறப்பிற்குப் பின் செய்யும் பெயர் சூட்டுவிழாச் சடங்காக,

"பதினாறாம் நாளையிலே பரதேசிக் கன்னமிட்டு
நேர்ச்சைசெய்த கோவிலுக்கு நேர்த்திக்கடன் தீர்க்கவைத்து
சின்னத்தம்பி என்றுபெயர் செப்பினார்கள் மூன்றுதரம்" (166-168)

என்றும் பிறப்புச் சடங்குகள் அமைந்திருத்தலைக் காணமுடிகின்றது.

ஆ. திருமணச்சடங்கு

வாழ்வுச் சடங்கில் மணச்சடங்கும் ஒன்று.  சின்னத்தம்பி கதையில் திருமணத்திற்கு முன் நடக்கும் மணச்சடங்கு மட்டும் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது.

"மாமன்மகள் சோணச்சியை மணஞ்செய்யவே நினைந்து
வைகாசி மாஸ்தையிலே இருபத்தய்ந்தாந் தேதியிலே
வௌ¢ளிக் கிழமையிலே விடிந்துஐந்து நாழிகையில்
பக்கமுள்ள ஊர்களுக்கு பாக்குமே கொடுத்தனுப்பி
திருக்குறுங் குடியாளும் தேசராசர் மாணிக்கவாசகர்
இனாமாக பதினாயிரம் பொன்யீய்ந்தார் மாணிக்கவாசகர்
ஒருவாரம் ரசாபெற்று ஊருக்குவந்து சேர்ந்திருந்தான்
பந்தல் அலங்காரத்தை பார்க்க முடியாது
பெண்ணழைத்துக் கொண்டுவந்து பிறவீட்டில் வைத்திருந்தார்" (368-376)

என்னும் வரிகளில் சடங்குகள் பெரிதாக இல்லையென்றாலும் திருமணத்திற்கு நாள் குறிப்பிட்டதையும், திருமணத்திற்கு முன் மணப்பெண்ணை மணமகன் வீட்டில் வைத்துக் கொள்ளாமல் பிறர்வீட்டில் வைத்திருப்பதையும், திருமணத்திற்கு உற்றார் உறவினர்களை பாக்கு வைத்து அழைக்கும் முறையையும்  உணர முடிகின்றது.

இ. இறப்புச் சடங்கு

ஒருவன் இறந்த பின் செய்யும் சடங்குகள் பலவாக இருந்தாலும் சின்னத்தம்பி கதையில் ஒப்பாரி வைத்து உயிர்மாய்த்துக் கொள்ளும் பாங்கு அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.  பூலுடையாள், சோணச்சி, இராமப்பகடை மற்றும் பூச்சிநாய் ஆகியோர் ஒருவர்பின் ஒருவராக சின்னத்தம்பி வெட்டுப்பட்டதைக் கண்டு ஒப்பாரி வைத்து மாள்வதை முறையாகக் காட்டப்பெற்றிருக்கின்றது.  சின்னத்தம்பி வெட்டுப்பட்டுக் கிடப்பதைக் கண்ட அவனது தாய் பூலுடையாள்,

"இதற்கோ தவமிருந்தேன் பாவி இத்தனைக்கோ பேருபெற்றேன்
பெற்ற அருமையென்ன உனக்குப் பேரிட்ட நேர்த்தியென்ன
வளர்த்த அருமையென்ன கண்ணே! 
                        உன்னை வைத்திருந்த நேர்த்தியென்ன
தரையிலுன்னை விட்டாக்கால் தண்டக்கால் நோகுமென்று
பூமியில் விட்டாக்கால் உனக்கு புத்திகெட்டு போகுமென்று
வட்டிலிலே சோறுகட்டி யுன்னை ஊட்டி வளர்த்தேனடா" (வரி.630-635)

என்றும்,

"அழகை யெழுதினவரயே சின்னத்தம்பி ஆயுசை எழுதலையோ
பட்டமர மிங்கிருக்க என்மகனே பச்சமரம் சாயலாமோ
உழுத்தமர மிங்கிருக்க யென்கண்ணே உத்தரத்தூண் சாயலாமோ
உன்னை வரவழைத்து சேவுகத்தில் வைத்துமே வங்குலையாய்
மாளச்செய்தோன் வங்கிசமும் மண்ணாகப் போயிடாதோ" (வரி.644-648) 

என்றும்,

"வெட்டுப்பட வுன்தலையில் விதித்தானோ பிரம்மதேவன்
என்மகனே சின்னத்தம்பி இனிநா னிருக்கலாமோ
வாய்க்கரிசி யிட்டுமே வழியனுப்ப பிள்ளையில்லை
கொள்ளிவைக்கப் பிள்ளையில்லை குடமுடைக்கப் பாலனில்லை
இருந்ததினால் என்னபலன் இறப்பதுவே நலமென்று
சேலைபோட்டு நாவிழுத்து செத்திறந்து மாண்டாளே" (வரி.652-657)

என்றும் பூலுடையாள் ஒப்பாரி வைத்து மாள்கின்றாள்.  சின்னத்தம்பிக்கு நிச்சயம் செய்த மணப்பெண் மாமன்மகள் சோணச்சி,

"மணவறை பந்தலிட்டு அதில் மங்கிலியம் பூட்டலையே
நான்கூட யிருந்துகொண்டு என்சாமி நான் கூட்டுப்பால் உங்கலையே
உங்கலையே திங்களையே உடன்படுத் துறங்கலையே
மாமன்மகன் சின்னத்தம்பி என் மணவாள னென்றுசொல்லி
அசலூரி லுள்ளவர்க்கு ஆளனுப்பி ஓலைவிட்டு
பக்கத்தி லுள்ளவர்க்கு பாக்கு கொடுத்தனுப்பி
உயிர்வைத்து நானிருந்து இன்னோருடன் வாழ்ந்தாக்கால்
தேசத்தி லுள்ளவர்கள் செப்புவார் யிப்பெருமை
ஈஸ்பரரே தஞ்சமென்று இறந்தாளே சோணச்சியும்" (வரி.659-667)

என்று ஒப்பாரி வைத்து மாள்கின்றாள்.  இவ்விருவரும் மாண்டதைக் கண்ட இராமப்பகடையும் பூச்சிநாயும் ஒப்பாரி வைக்கவில்லை என்றாலும் சின்னத்தம்பியின் பிரிவைத் தாங்காமல் மூச்சடைத்து மாள்கின்றனர்.


சகுனம் பார்த்தல்

சகுனம் என்பது ஒருவருடைய வாழ்வில் பின்னர் நிகழவிருக்கும் நன்மைகளையும் தீமைகளையும் சில குறிப்புகளின் மூலம் முன்னதாக உணர்த்துவது ஆகும்.  இதனைக் காரணம், நிமித்தம், சகுனம், அடையாளம், பொருட்டு என்றெல்லாம் அழைப்பர்.  சங்க இலக்கியம் 'புள்' (குறுந்.140:1-3) என்றும், தொல்காப்பியம் 'நிமித்தம்' (தொல்.பொருள்.39:1-4) என்றும் சுட்டுகின்றன.  சகுனம் பார்த்து காரியம் செய்தல் என்பது மக்களின் பண்டுதொண்டு இன்றுவரையுள்ள பழக்க வழக்கங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.  இச்சகுனத்தைத் தீயசகுனம், நற்சகுனம் என இரண்டாகப் பகுப்பர்.  சின்னத்தம்பி கதையில் ஆறு வகையான தீய சகுனங்கள்  சுட்டிக்காட்டப் பெற்றுள்ளன.

மாணிக்கவாசகம் பிள்ளையின் ஆணைப்படி பாப்பாக்குடி செல்வதற்காக பூலுடையாள் கட்டுச்சோறு தயார் செய்யும்போது, ஒற்றைக் குரலோசை ஓகோவென்கின்றது, சோறு வடிக்கும் போது தலையில் பல்லி விழுகின்றது.  இதனை,

"ஒற்றைக் குரலோசை ஓகோவென்று கேட்டிடவே
சாதம் வடிக்கையிலே தலையில்பல்லி விழுந்திடவே" (வரி.485-486)

என்றும், சின்னத்தம்பி பாப்பாக்குடிக்குச் செல்ல வீட்டை விட்டு வெளியில் வரும்போது வாசற்படி தலையில் இடிபடுகின்றது.  இதனை,

"நடை தலையில் தட்டிடவே" (வரி.491)

என்றும்,  சின்னத்தம்பி வீட்டைவிட்டு வெளியில் வந்து தெருவில் போகும் போது காகங்கள் கரைவதும், கருங்கூவை கூவுவதும், சந்நியாசி, ஒற்றைப் பார்ப்பான், தலைமொட்டை வாணியன் ஆகியோர் எதிரில் வருகின்றனர்.  இதனை,

"காகங்கள் கத்துறதும் கருங்கூவை கூவுறதும்
சன்யாசி ஒருபாப்பான் தலைமொட்டை வாணியனும்
இவ்விதமாய்ச் சகுனம்வர" (வரி.493-495)

என்றும்,  சின்னத்தம்பி தாமிரபரணி ஆற்றங்கரை கருவ மரத்தடியில் கட்டுச்சோறு சாப்பிட அமரும்போது மரத்திலிருக்கும் பல்லியும் ஆந்தையும் கூப்பிடுகின்றன. இதனை,

"பல்லி மரத்திலிருந்து பலபலென் றடித்திடவே
மரமதி லாந்தையிருந்து யதறிடுமா மப்போது" (வரி.505-506) 

என்றும்,

"வங்குலையாய் மாள்வானென்று வல்லாந்தை கூப்பிடுதே
வெட்டுப்பட்டு மாள்வானென்று விரைவாய் பல்லி கூப்பிடுதே" 
                                                                                                            (வரி.513-514)
என்றும்,  சின்னத்தம்பி தாமிரபரணி ஆற்றங்கரையில் கட்டுச்சோறு உண்ணும் போது சோற்றில் கொத்துக் கொத்தாகத் தலைமுடி இருக்கின்றது, காகம் கட்டுச்சோற்றைக் கொத்துகின்றது, சின்னத்தம்பி வாந்தி பண்ணுகின்றான், பூச்சிநாய் கட்டுச்சோற்றை முகர்ந்து பார்த்துத் திண்ண மறுக்கின்றது, பூச்சிநாய் வானம் பார்த்து ஊளையிடுகின்றது.  இதனை,

"கொத்தோடே தலைமயிரும் கோர்வையாக கண்டெடுத்தான்
தலைமயிரை தள்ளிவிட்டு சாதமெடுத்து திங்கையிலே
காக்கைநல்லோ ஓடிவந்து கட்டுச்சாதத்தைக் கொத்திடுமாம்
சாதமதை தரையிலிட்டு அப்புறத்தே திங்கையிலே
ஓங்கரித்து வாந்திபண்ணி உடலுக்குள்ளே போகாமலே
பூச்சிநாய் முன்பாக பொட்டணத்தோடே வைத்திடவே
பூச்சிநாயும் முகர்ந்துபார்த்து போனதுவே யப்புறத்தே
கட்டுச்சாதம் பலகாரம் கங்கையிலே தள்ளிவிட்டு
ஜலமதைத் தானருந்தி தாகசாந்தி செய்துகொண்டு
குதிரையேறும் தருணமதில் கோவென்று பூச்சிநாயும்
மானம்பார்த்து ஊளையிட்டு மண்ணைப் பறித்திடுமாம்" (வரி.518-528)

என்றும்,  சின்னத்தம்பியைக் காணி வயலில் பலிகொடுக்கப் பலிபூசை நடத்தும்போது தேங்காய்ச்  சிதறுகின்றது, தீபதூபம் கொடுக்கும் போது திருவிளக்கு அணைகின்றது.   இதனை,

"தேங்கா யுடைக்கயிலே சிதறியே போச்சுதையோ
தீபதூபங் கொடுக்கையிலே திருவிளக்கு அணைந்ததங்கே" (வரி.573-574)

என்றும் இந்நூலாசிரியர் தீயசகுனங்களாகக் குறிப்பிடுகின்றார்.

அறச்செயல் புரிதல்

குழந்தைப்பேறு அடையாதவர்களை இச்சமுதாயம் மலடி-மலடன் என்று இழிவுபடுத்துகின்றது.  இம்மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கு இன்று அறிவியல் உத்திகள் பல வளர்ந்துள்ளன.  இருந்தாலும், அறச்செயல்கள் பல செய்வதன் மூலம் பலருடைய வாழ்த்து கிடைத்து அதன்மூலம் குழந்தைப்பேறு அடையமுடியும் என்ற நம்பிக்கை மக்களிடையே பரவலாக இருந்துவருகின்றது.  இக்கதையில் இராமப்பகடையும் பூலுடையாளும் குழந்தைப் பேறுக்காக பல அறச்செயல்களைச் செய்கின்றனர்.  குறிப்பாகக் கல்கிணறு கட்டுவது, சுமை தாங்கி அமைப்பது, சத்திரங்கள், தண்ணீர் மடம், சாலை மரம் ஆகியவற்றை அமைத்தும்; பாதரட்சை மற்றும் குடை ஆகியவற்றைக் கொடுத்தும் வந்தனர்.  இதனை,

"மன்னவரும் மங்கையரும் மனம்ஒன்றாய்த் தான்கூடி
காதத்துக் காதவழி கல்கிணறு கட்டிவைத்தார்
தூரதுலை போறவர்க்கு சுமைதாங்கி நாட்டிவைத்தார்
சத்திரங்கள், தண்ணீர்மடம் தகையடங்கச் செய்துவைத்தார்
சாலைக்குச் சாலையெங்கும் சாலைமரம் தழுக்கவைத்தார்
பங்குனி மாத்தையிலே பகல்வழி நடப்போர்க்கு
பாதரட்சை குடையுடனே பதிவாய்க் கொடுத்துவந்தார்" (வரி.45-50)

என்னும் வரிகள் உணத்துவதைக் காணலாம்.

பலியிடுதல்

பலியிடுதல் என்பது மக்களிடையே தொன்றுதொட்டு இருந்துவரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாகும்.  தொடக்கத்தில் தெய்வத்தை அமைதிப்படுத்துவதற்காகக் கையாண்ட ஒருவகையான வழிபாட்டு முறையாக இருந்தது.  இந்தப் பலியிடுதல் இரண்டு நிலைகளில் அமைந்திருந்தது.  அவை 1, உயிர்ப்பலி, 2. மலர்ப்பலி என்பனவாகும்.  உயிர்ப்பலியின் வளர்ச்சியில் - மனிதனின் மனமாற்ற நிலையினை வெளிப்படுத்தும் போக்கில் மலர்ப்பலி உருவாகியது எனலாம்.  தெய்வங்களை அமைதிப்படுத்தத் தொடங்கிய இந்தப் பலியிடும் பழக்கம் நாளாவட்டத்தில் யாரையெல்லாம்/எவற்றையெல்லாம் அமைதிப்படுத்த வேண்டும் என்று மனிதன் நினைத்தானோ அவர்களுக்கெல்லாம்/ அவைகளுக்கெல்லாம் உயிர்ப்பலி கொடுக்கத் தொடங்கியிருக்கின்றான்.  ஓரறிவு கொண்ட உயிர் முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரை இன்று பலிப்பொருளாகி இருக்கின்றது எனலாம்.  சின்னத்தம்பி கதையில் மனிதனை பலிகொள்ளும் பாங்கு வெளிப்படுகின்றது.  பலிபூசை அமைப்பினையும் பலியிடும் பாங்கினையும் இக்கதையில் தெளிவாக விளக்கப்பெற்றுள்ளது.  இதனை, 

"நாலுபக்கந் திரைவளைந்து நடுவாகத் தீபம்வைத்து
சாந்தால் தரைமெழுகி சந்தனத்தால் கோலமிட்டு
ஓமகுண்டந் தானும்வெட்டி அதற்குள்ள வரிசைசெய்து
ஆலஞ்சிப்பி அரசன்சிப்பி அத்திச்சிப்பி புரசன்சிப்பி
சிப்பிகளைத் தான்பரப்பி தீயதனை மேலேவைத்து
ஆறுமுகவர்க்கு மூத்தோனை அதின்முன்பு தானிருத்தி
தீபதூபந் தான்கொடுத்து திருவிளக்குப் பூசைசெய்து
அத்திப்பலகை போட்டு அதின்மேலே உட்கார்ந்து
அஞ்செழுத்து மந்திரத்தை ஆராய்ந்து வுள்ளிருத்தி
நாங்குயெண்ணை கோங்குயெண்ணை நறுநெய்யும் தான்வார்த்து
மந்திர விதிப்படிக்கு மாவிலைக் கரண்டியதால்
கோரியங்கே தானும்விட்டு குமாரசுவாமி பிள்ளையுமே
தேங்கா யுடைக்கயிலே சிதறியே போச்சுதையோ  
தீபதூபங் கொடுக்கையிலே திருவிளக்கு அணைந்ததங்கே
மந்திரவாதி குமாருபிள்ளை மகாமோசம் வந்ததென்று
மறுபடியும் விளக்கேத்தி மாடன்சாம்பானுக்கு ஆளுவிட்டு
அந்தவேளை மாடன்சாம்பான் அணைத்துக்கொண்டு சின்னத்தம்பி
கைதாங்கல் கூட்டிக்கொண்டு கரையாளன் வயல்தனிலே
கன்னிமூலை தென்மேற்கில் கிடாரமிருக்கும் இடந்தனிலே
கையைவிட்டு கீழ்கிடத்தி கண்ணீர்விட்டு மாடன்சாம்பான்
மந்திரவாதி குமாருபிள்ளை மன்னனிடம் வந்துசேர்ந்தான்
நஞ்சுபோட்டால் நஞ்சறுக்கும் நடுச்சாம வேளையிலே
மையெடுத்துத் திலர்தமிட்டு மந்திரவாதி குமாருபிள்ளை
திருநீறும் தீர்த்தங்களும் சின்னத்தம்பி சிரசதிலேதான்போட்டு
மந்திரவாள் கையிலெடுத்து மந்திரவாதி குமாருபிள்ளை
செவிட்டுநொண்டி பூதங்களைத் திறமாகத் தான்வருத்தி
வாளெடுத்து கையில்வைத்து மாடன்சாம்பானிடம் கொடுக்க
வெட்டினான் பிடரியிலே வேறுபட்டு துண்டுரெண்டாய்
பட்டுவிழுந்தானே சின்னத்தம்பி" (561-589)

என்னும் வரிகள் தெளிவாக உணர்த்துவதைக் காணலாம்.

பறையடித்தல்

பொதுவான ஒரு தகவலை ஒருவன் மற்றவர்க்குத் தெரியப்படுத்த பல்வேறு வகையான ஊடகங்களைப் பயன்படுத்துகின்றான்.  இவற்றில் பறையடித்துச் செய்தி அறிவிப்பது என்பது மக்களிடையே தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும். சங்க இலக்கியம் தொடங்கி இன்றுவரையுள்ள பல்வேறு வகையான இலக்கியங்கள் வரை பறையடித்துச் செய்தி சொல்லும் பாங்கு காணமுடிகின்றது.  இக்கதையில், சின்னத்தம்பி களக்காடு மற்றும் பணகுடி மலைகளில் மிருகங்களை வேட்டை யாடுகின்றான்.  இச்செய்தியினை பொதுமக்களுக்குப் பறையடித்துத் தெரியப் படுத்துகின்றான்.  

".................        ..............     தமுக்கடித்தான் சின்னத்தம்பி
களக்காட்டு மலையதிலே கரடிவேட்டை யாடவேணும்
பணகுடி மலையதிலே பன்றிவேட்டை யாடவேணும்
புலிக்கரடி கடுவாயும் பிடித்தடைத்து வரவேணும்
நாளைத்தினம் வேட்டையென்று நகரிலுள்ளோர் தானறிய
பக்கத்தில் உள்ளோரறிய பறையடித்தான் சின்னத்தம்பி" (215-219)

என்னும் பாடல் வரிகள் இதனை உணர்த்தும், வரி கட்டாதவர்களின் பெயர்களை ஊராருக்குத் தெரியப்படுத்தும் விதமாக பாப்பாக்குடி மன்னர் தர்மராசா கையாண்டுள்ளார்.

"பக்கத்து அரசரெல்லாம் தர்மராசாவுக்கு பகுதிகட்டி வரவேணும்
பகுதிப்பணம் வராவிட்டால் பறையடித்துப் போர்செய்து
ஆறிலொரு கடமைவாங்கி...." (261-263)

என்னும் பாடல் வரிகள் இதனை உணர்த்தும்.  திருக்குறுங்குடி பட்டினத்து வடக்கு வாசல் காவல் குதிரைகளில் அடங்காத பேய்க்குதிரையைச் சின்னத்தம்பி நாளை அவிழ்த்துவிட்டு அடக்கப் போவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று பறையடித்துத் தெரிவிக்கின்றனர்.

"அடங்காத குதிரையைநான் நாளையவிழ்க்கிற படியாலே
பாலிகளும் சூலிகளும் பச்சைப்பிள்ளைத் தாட்சிகளும்
பாலர்களும் குருடர்களும் பாதைதன்னில் நொண்டிகளும்
சவ்வாரி வண்டிகளும் சந்நியாசி யானவரும்
மாடுஆடு கூட்டத்துடன் வழியில்வரக் கூடாது
வயதுசென்ற மன்னவரும் வரப்படாது வீதியிலே
என்று சொல்லி பறையடிக்க" (வரி.330-336)

என்னும் பாடல் வரிகள் இதனை உணர்த்தும்.  இப்படியாக இக்கதையில் செய்தியை அறிவிப்பதற்காகவும், மக்களை எச்சரிக்கை படுத்துவதற்காகவும் என இரண்டு நிலைகளில் பறையடிக்கப்பெற்ற செய்தி அறிய முடிகின்றது.

சாபமிடுதல்

தனக்கு மற்றொருவரால் தீங்கு நேர்ந்தபோதும், அத்தீங்கைத் தன்னால் ஆற்றுப்படுத்த முடியாத போதும், தீங்கிழைத்தவன் இவ்வாறாகக் கடவாயாக என்று சாபம் இடும் பழக்கம் மக்களிடையே தொன்றுதொட்டு இருந்து வருவதாகும்.  சின்னத்தம்பி கதையில், தாம் வெட்டுப்படுவோம் என்று தெரியாமல் வெட்டுப்பட்ட சின்னத்தம்பி, தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய சூழ்ச்சிக்காரர்கள் அத்தனை பேரையும் சபிக்கின்றான்.  

"உடல்வேறு தலைவேறாய் உயிர்கிடந்து தான்துடித்து
இட்டுதே பெருஞ்சாபம் ஈஸ்பரரே தஞ்சமென்று
பாப்பாகுடி பள்ளிகொண்டான் பார்த்திருந்த தோஷத்தாலே
பாழடைய வேணுமென்று பருஞ்சாபங் கொடுத்தானே
தர்மராசா கோட்டையெல்லாம் தானிடிய வேணுமென்றான்
ஆண்டாபிள்ளை அழகப்பபிள்ளை பணக்காரச் சோமபிள்ளை
மந்திரவாதி குமாருபிள்ளை மாடன்சாம்பான் வமிசமும்
திருக்குறுங்குடியில் வாழும் மாணிக்க வாசகம்பிள்ளை
வம்மிசமும் நாசமாகி மண்ணடைந்து போணுமென்றான்
காட்டாணைப் பெலிவாங்கும் காட்டாளம்மா என்தாயே
என்னைவெட்டிப் பெலிகொடுத்து எடுத்துப்போகுங் கிடாரமதை
மூணுமுக்கு கிணறுதன்னில் முங்கச்செய்ய வேணுமம்மா" (590-601)

என்னும் வரிகள் இதனை உணர்த்தக் காணலாம்.

நாட்டுப்புற மருத்துவம்

அனுபவ முறையில் பல்வேறு வகையான மருந்துகளை நாட்டுப்புற மக்கள் பயன்படுத்தி வந்தனர்/வருகின்றனர்.  இம்மருந்துகளையும் நோய்களையும் மருந்து செய்முறைகளையும் சிலர் அனுபவ வைத்தியமாக ஓலைகளில் எழுதிவைத்து இருக்கின்றனர்.  சில தேர்ந்த புலவர்கள் மருந்து - நோய் - மருந்து செய்முறை ஆகியவற்றை முறையாகப் பாடல் வடிவில் நூலாக யாத்திருக்கின்றனர்.  இதுபோக, பல்வேறு வகையான இலக்கியங்களுக்குள்ளும் இலக்கியப் போக்கிற்கேற்ப ஆங்காங்கு அனுபவ மருத்துவச் செய்திகள் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.  சின்னத்தம்பி கதையில் இருவேறு இடங்களில் மருந்து தயாரிப்பு முறைகள் சுட்டப்பெற்றிருக்கின்றன.

  பாப்பாக்குடியை ஆண்டு வரும் தர்மராசாவுக்கு ஒற்றைத் தலைவலியும் புகைச்சலிருமலும் இருப்பதாகக் கூறி அதற்கு மருத்துவர்கள்,

"ஒருதலை மண்டையிடி ஒருமாஸ்தை காலமாக
புகச்ச லிருமல்கொண்டு புலம்பி மயங்கினதில்
வருத்த மடைகிறதை வைத்தியர்கள் தான்கேட்டு
ஆதளங்காய் தூதளங்காய் அறளவத்தக் கொடியுடனே
திரிகடுகு மாவிலங்கு செண்பகப்பூ கோரோசனை
ஒழுக்கறை இரும்புப்பொடி ஊமத்தன்பூ சாருவிட்டு
தாம்பூரம் ராகமுடன் தைரியவானால் இடித்து
மைபோ லரைக்கவேணும்" (வரி.429-436)

என்னும் மருந்து வகையைக் கூறுகின்றனர்.  சின்னத்தம்பி மயக்கமடைய சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுக்கின்றனர்.  இம்மயக்க மருந்து தயாரிக்கும் முறையினை,

"ஊமத்தஞ்சார் மதனகாமப்பூவும் ஒன்றாகத் தானரைத்து
அபினுடன் கஞ்சாவும் அதில்கொஞ்சம் தான்சேர்த்து
சாப்பிடச்சொல்லி கொடுத்தானே மாடன் சாம்பான்" (வரி.553-555)

என்னும் வரிகள் உணர்த்தக் காணலாம்.

விரத முறைகள்

வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்காக மக்கள் பல்வேறு வகையான விரதங்களைக் கையாள்வர்.  விரதங்களை இறைவழிபாட்டு விரதம், வாழ்வியல் தொடர்பான விரதம் என்று இரண்டாகப் பகுக்கலாம்.  இறைவழிபாட்டு விரதத்தில் பெரும்பாலும் எதிர்பார்ப்பு இருக்காது.  ஆனால் வாழ்வியல் தொடர்பான விரதத்தில் எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும்.  சின்னத்தம்பி கதையில் குழந்தைப்பேறடைய வேண்டும் என்னும் எதிர்பார்ப்பில் பூலுடையாள் கடும் விரதம் இருக்கின்றாள்.

"எடுத்தாள் விரதமது யேகாதேசி துவாதேசி
பவரணைப் பொங்கல்வைத்து பரதேசிக் கீய்ந்திடுவாள்
சாதம் தரையில்வைத்து தலைசாய்ந்து கவிழ்ந்துதின்பாள்
சனிவாரந் தோறும் தப்பாமல் விரதம்வைப்பாள்" (88-91)

என்னும் வரிகள் பூலுடையாளின் விரத முறையைத் தெளிவுபடுத்தக் காணலாம்.

பணி ஆணை

திறமை இருந்தால் அதற்குத்தக்கவேலை தானாகத் தேடிவரும் என்பதையும், பணி ஆணை எவ்வாறு அமையவேண்டும் என்பதையும் இக்கதையில் வரும் பணி ஆணை சுட்டிக்காட்டுகின்றது.  இதில் பணி ஆணை யார், யாருக்கு அனுப்புகின்றார் என்ற விவரமும், பணியின் விவரமும், பணி நிமித்தமாக மேற்கொள்ளவேண்டிய சில கடமைகளையும் தெளிவாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது.

"வேப்பலாங் குளமதிலே வீற்றிருக்கும் சின்னத்தம்பி
வடக்கு(க்)கோட்டை வாசலுக்கு வாசல்பிர தானியாக்கி
மாசமொன்றுக் காயிரம்பொன் மற்றுமுள்ள சிலவுயெல்லாம்
கொட்டாரந் தனிலிருந்து கோப்புவகை கொடுத்திடுவோம்
உத்தரவு கிடைத்தவுடன் ஓட்டமும் நடையுமாக
ஓடிவந்து சமூகங்கண்டு அதற்குள்ளவிருது வாங்கிக்கொண்டு
ஆயிரங் குதிரையிலே அடங்கவொண்ணாப் பேய்குதிரை
அக்குதிரை தனையவிழ்த்து அடக்கிநீ வைத்துக்கொண்டு
சேவுகத்தில் அனுவெழுதி திறமுடனே யிருப்பாயென்று
மாணிக்க வாசகரும் மகிழ்ந்தெழுதி ஓலைவிட்டார்" (வரி.293-302)

என்னும் பாடல் வரிகள் இதனை உணர்த்தக் காணலாம்.

உவமைகளும் பழமொழிகளும்

எந்தவொரு இலக்கியத்தை எடுத்துக்கொண்டாலும் அவற்றுள் சில உவமைகளும் சில பழமொழிகளும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.  சின்னத்தம்பி கதையில்,

"ஓட்ட கைத்தடம் போலே செனையிட்டலிகள் மோதகங்கள்
ஆனைநல்ல தடம்போலே அப்பளங்கள் அறியோதரம்" (57-58) 

"ஆலுபோல் தழைத்திடுவாய் அறுகதுபோல் வேரூணி" (115)

"வருகுதையோ யிவர்களுக்கு முடிவுகாலம் வயிரபுனை
  சாய்ந்ததுபோல்"(378)

"தேக்கிலையில் தண்ணீர் போல்" (523)

போன்ற உவமைகளும்,

"பிள்ளையில்லா வாசலென்றால் பிச்சைகூட வாங்கமாட்டார்
மைந்தனில்லா வாசலென்றால் வரக்கூட மாட்டார்கள்" (17-18)

"மங்கையரே!  உன்னைத்தவிர மறுபெண்கள் தாயல்லவோ" (31)

"பெண்பிறந்த வயர்தனிலே பிள்ளையுண்டுங் கண்டாயே" (84)

"குதிரை யிருப்பறியுங் கொண்டவளுங் குணமறிவாள்" (347)

"ஊருக்குப் பெற்றெடுத்தேன் உத்தபிள்ளை எனக்கில்லையே"(82)

போன்ற பழமொழிகளும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

கலைச்சொற்கள்

சின்னத்தம்பி கதையில் பல கலைச்சொற்கள் இடம்பெற்றிருக்கின்றன.  அவை பின்வருமாறு:-
அக்ஷணம்(410)                      - அப்பொழுது
ஆசாரவாசல்(317)                      - தலைவாசல், வெளிவாயில்
ஆலாத்தி(247)                      - ஆலத்தி
ஆலாத்திகாரர்(247)              - ஆலத்தி எடுப்பவர்
இக்ஷணம்(468)                      - இப்பொழுது
ஈணாக்கிடாரி(14)                      - மலட்டெருமை
ஈத்துக்கூலி(716)                      - பூசைக் கட்டணம்
உள்ளோலை(466)                      - ஓர் ஓலைக்கடிதத்திற்குள் பிறிதொரு 
                                                                ஓலைக்கடிதம் வைத்தல்
ஊழியூழி(467)                      - தலைமுறை தலைமுறையாக
எப்பிழைப்பு(65)              - ஏப்பம்
ஓட்டக்காரன்((பல)                      - கடிதம் கொண்டு செல்வோன்
ஓலை வாருதல்(292)              - கடிதம் எழுதுவதற்கு ஏற்ற வகையில் 
                                                               பனையோலையைச் 
                                           சீவிப் பக்குவப்படுத்துதல்
கங்கை (535)                     - ஆற்றுநீர்
கணையாழி(625,626)             - மோதிரம்
கந்தை(100)                     - பயன்படாத துணி
கல்கிணறு(44)                     - கல்லால் கட்டப்பெற்ற கிணறு
காணி வயல்(385)                     - உரிமை வயல்
காய்ச்சல்தண்ணீர்(393)           - காய்ந்த நிலத்திற்கிடும் தண்ணீர்
காராம்பசு(15)                     - தெய்வப்பசு
கிடாரம்(418)                     - புதையல்
கேதாரம்(97)                     - இந்தியாவின் வடக்கிலுள்ள ஓர் புனிதத் தலம்
கொட்டாரம்(296)                     - கோட்டையின் முதல் வாசல்
சாலைமரம்(47)             - பாதையின் இருமருங்கிலும் 
                                                               நிழலுக்காக வைக்கப்பெற்ற மரம்
சுமைதாங்கி(45)                     - ஏதண்டை, பலகைத்தூக்கு, 
                                                              சுமை தாங்கும் கற்பலகை
சுருள் ஓலை(440)                    - செய்தியை ஓலையில் எழுதிச் சுருட்டப்பெற்றது
சேர்வை(696)                    - ஐக்கமாகுதல்
தண்டி(162)                            - குலம்
திரவியம்(407)                    - புதையல் பொருட்கள்
பகுதி கட்டுதல்(261)            - குடியிறை செலுத்துதல்
பகுதிப்பணம்(262)                    - இறைப்பணம்
பர்த்தா(118)                    - கணவன்
பரல்(39)                            - பருக்கைக்கல்
பாதரட்சை(49)                    - காலணி
புசித்தல்(69)                    - குடித்தல்
புலம்பல்(69)                    - அழுதல்
மறையவர்(120)            - முனிவர்
மறுமன்னர்(522)                    - பகைவர்
மன்னவர்(பல)                    - கணவர்
மாயவர்(130)                    - திருமால்
முசியாமல்(116)                    - மெலிக்காமல், இளைக்காமல்
ரசா(374)                            - விடுப்பு
லெக்கம்(121)                    - எண்
வாட்டம்(9)                            - வருத்தம்
வெளியோலை(469)            - இரு ஓலைக் கடிதத்தில் 
                                                              வெளியிலிருக்கும் ஓலைக்கடிதம்
ஸ்ரீமந்தகலியாணம்(64)           - கருவுற்ற பெண்ணுக்கு 6-9 மாதத்திற்குள் 
                                                              செய்யும் ஓர் சடங்கு

இவ்வாறமைந்துள்ள இந்தச் சின்னத்தம்பி கதை இன்னும் அச்சேறவில்லை. இவற்றை அச்சிட்டால் நாட்டுப்புறவியல் இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந்துணையாய் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக