மங்கலங்கிழாரின்
தமிழ்ப்பணி
முனைவர் மோ.கோ. கோவைமணி
இணைப்பேராசிரியர்
மற்றும் தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப்
பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்-613
010.
வட ஆற்காடு மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள புளியமங்கலம் எனும் சிற்றூரில் 1897ஆம் ஆண்டு திரு.ஐயாசாமி – திருமதி.பொன்னுரங்கம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஐயாசாமி அவ்வூரில் மணியம் (ஊர்த் தலைவர்) வேலை பார்த்து வந்தவர். அவர் தம் மகனுக்குக் குப்பன் என்று பெயரிட்ட போதிலும் மற்றவர்கள் அவரைக் குப்புச்சாமி என்றே அழைத்துள்ளனர். எனது தந்தையார் வடவெல்லை போராட்டத் தியாகி மோ.கு. கோதண்ட
முதலியார் மற்றும் குருவராஜபேட்டை குமரேச முதலியார் அவர்களும் எனக்குச்
சிறுவதியதிலிருந்து சொல்லப்பட்ட செய்திகளின் அடிப்படையில் கட்டுரை
அமைக்கப்படுகிறது.
கல்வியும்
தொழிலும்
குப்புச்சாமி தனது தொடக்கக் கல்வியைப் புளியமங்கலத்தில் கற்று வந்தார். அவரின் தமக்கையாருக்குக் குழந்தைப்பேறு இல்லை. இந்நிலையில் பத்து வயது நிரம்பிய குப்புச்சாமியை வளர்க்க விரும்பி தாம் வசித்த வந்த சென்னை புரசைவாக்கத்திற்கு 1908இல் அழைத்துச் சென்று அங்குள்ள பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடரச் செய்தார்.
கல்வி கேள்விகளில் சிறப்புற்று விளங்கியதைக் கண்டு இன்புற்ற அவரின் தமக்கையார் எதிர்காலத்தில் குப்புச்சாமியைப் பெரிய வழக்கறிஞராக்கவேண்டும் என்று விரும்பினார். அவரின் கனவோ நிறைவேறவில்லை. கணவர் எதிர்பாராமல் இறந்துவிட, குடும்பம் வறுமையில் மூழ்கத் தொடங்கியது. இதன் காரணமாக குப்புச்சாமி படிப்பைக் கைவிட்டு தமக்கையின் கணவர் செய்து வந்த தச்சுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்.
1914இல் இளமையில் கல்வி கற்க முடியாத நிலையை எண்ணி வருந்திய குப்புச்சாமிக்கு இரவுப் பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இரவுப் பள்ளியை டி.என். சேஷாசலம் ஐயர் என்பவர் கல்வியை இடையில்
விட்ட மாணவர்களுக்காக நடத்தி வந்தார். அப்பள்ளியில் குப்புச்சாமி சேர்த்துக் கொள்ளப்பட்டார். டி.என். சேஷாசலம் ஐயர் சிறந்த வழக்கறிஞர் மட்டுமல்ல; சிறந்த தமிழுணர்வாளர்; ஆங்கிலம், தமிழ், வடமொழியில் புலமை மிக்கவர். இவரின் தமிழுணர்வும் குப்புச்சாமியின் தமிழார்வமும் இரவுப் பள்ளியில் ஒன்றாய்க் கலந்தன.
"செக்கிழுத்த செம்மல்" வ.உ.சி.யுடன் நட்பு கொண்டு, அவருடன் இணைந்து திருக்குறளில் நன்கு தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு சைவ, வைணவ நூல்களையெல்லாம் ஆராய்ந்து தெளிவு பெற்றார்.
தமிழ்மொழி மேம்பாட்டுக்காக ஐயர் “கலாநிலையம்” எனும் இலக்கிய இதழ் ஒன்றை நடத்தி வந்தார். அவர் அவ்விதழின் பொறுப்பு முழுவதையும் குப்புச்சாமியிடம் ஒப்படைத்தார். அவ்விதழ் தொடர்ந்து வெளிக்கொணர நிதி தேவைப்பட்டதால் மாணவர்கள் மத்தியில் “கலாநிலையம்” பெயரிலே நாடகம் தயாரிக்கப்பட்டு சென்னை, சிதம்பரம், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் நடத்தி அதன் மூலம் கிடைத்த
நிதியில் கலாநிலையம் இதழ் நின்று போகாமல் நடத்தியிருக்கின்றார். இந்நாடகத்தில் பங்கு பெற்ற மாணவர்களுக்குத் ”தமிழ் நாடகக்கலை தந்தை” சங்கரதாஸ் சுவாமிகள் பயிற்சியளித்திருக்கின்றார். இந்நாடகத்தில் பெண் வேடமிட்டு குப்புச்சாமி சிறப்பாக நடித்திருக்கிறார். இவரின் நடிப்பைக் கண்டு பிரபல நாடக நடிகர் கிட்டப்பா வியந்து பாராட்டியுள்ளார். நாடகம் மூலம் கலாநிலையப் பணிகள் பலரின் பாராட்டைப் பெற்றபோதிலும் நிதியுதவி கிடைக்கப் பெறாததால் காலப்போக்கில் கலாநிலையம் வெளிவராமல் 1928இல் நின்றுவிட்டது.
இதற்கிடையில், 1922-இல் தமது இருபத்தைந்தாம் வயதில் கமலாம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தமிழ் மீதான ஈடுபாடு கூடியதே தவிர குறையவில்லை. தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களை பிழையறக் கற்றுக் கொள்ளவும், இலக்கண, உரை விளக்க நூல்களில் சிறப்பெய்திடவும் விரும்பி “இலக்கணப்புலி” கா.ரா. கோவிந்தசாமி முதலியார் என்பவரிடம் போய்ச் சேர்ந்து தெள்ளத்தெளிவாக்க்
கற்றுத் தேர்ந்தார். இக்கால கட்டத்தில் இவரோடு மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை என்பவரும் இணைந்து படித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தச்சுத் தொழிலாளி மிகுந்த ஆர்வத்தோடு இலக்கணம் கற்பதில் சிறந்து விளங்குவதைக் கண்டு வியப்புற்ற இலக்கணப்புலி கா.ர. கோவிந்தசாமி முதலியார் அவர்கள் பெரம்பூர் கலவலகண்ணன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக நியமனம் செய்யப் பரிந்துரைத்தார். அங்குப் பதினைந்து ஆண்டுகள் பணிபுரிந்து வந்த குப்புச்சாமிக்கு இரத்த அழுத்த நோய் கூடி, பற்கள் கொட்டி விடவே ஆசிரியப் பணியைக் கைவிட்டார். இந்நிலையில், புளியமங்கலத்தில் மணியம் வேலை பார்த்து வந்த தந்தையார் இறந்துவிடவே, அவரின் உறவினர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி “மணியம்” வேலையை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று குப்புச்சாமியும் சென்னையிலிருந்து தம் பிறந்த ஊரான புளியமங்கலத்திற்கு இடம் பெயர்ந்தார். 1934இல் ஊர்த்தலைவர் பொறுப்பை ஏற்றுத் திறம்பட பணியாற்றியதால் அவ்வூர் மக்கள் “மங்கலங்கிழார்” என்று அழைக்கலாயினர். இப்பெயரே நாளடைவில் எல்லோரும் அழைக்கும் பொதுப் பெயராக நிலைத்துவிட்டது.
தமிழ்ப்
பணி
மங்கலங்கிழார் தனக்குக் கல்வி புகட்டிய டி.என். சேஷாசல ஐயர் வழியில் புளியமங்களத்தில் இரவுநேரப் பள்ளியைத் தொடங்கித் தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது இராணிப்பேட்டை சின்மயானந்தா அடிகளோடு தொடர்பு கிடைத்ததால் துறவு நிலைக்கு மாறினார். அதுமுதல் வெண்மையான வேட்டியும், காவி ஜிப்பாவும், கதர் சால்வையும் அணியத் தொடங்கினார். அவரின் புறத்தோற்றம் மாறினாலும் உளத்தோற்றம் மாறவில்லை. சித்தூர் மாவட்டம் முழுவதும் தெலுங்குமொழி ஆதிக்கத்தால் தமிழ்மொழி அழியும் நிலைகண்டு அவரின் உள்ளம் குமுறியது. உடனடியாக அங்குள்ள தமிழர்களுக்குத் தமிழ் விழிப்புணர்ச்சியூட்டிட “அறநெறித் தமிழ்ச்சங்கம்” என்னும் அமைப்பை நிறுவினார். 1939-இல் வளர்புரத்தில் முதல் அறநெறி தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டது. பின்னர் அது படிப்படியாக விரிவடைந்து குருவராயப்பேட்டை, அம்மையார்குப்பம், மின்னல், நரசிங்கபுரம், கீழ்ப்புத்தூர், மேல்புத்தூர், நாராயணவனம், சத்திரவாடி, சிந்தலப்பட்டடை, பொதட்டூர்ப்பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, புதுப்பேட்டை, சுரைக்காயப்பேட்டை, மத்தூர், மத்தேரி முதலிய 16 கிராமங்களுக்கு இவ்வறநெறி தமிழ்ச்
சங்கத்தின் கிளை பரப்பியது.
மங்கலங்கிழார் முயற்சியால் மேற்கண்ட ஊர்களில் தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டு ஆரம்ப வகுப்பு, ஒளவை வகுப்பு, சிற்றிலக்கிய வகுப்பு, பேரிலக்கிய வகுப்பு என நான்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. முதலிரண்டு வகுப்பு மாணவர்களுக்கு இலக்கியம் கற்கும் மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்கள் பாடம் நடத்தினர். மூன்றாம், நான்காம் மாணவர்களுக்கு மங்கலங்கிழார் பாடம் நடத்துவார். வகுப்புகள்
தினந்தோறும் நடைபெறாது. மேற்கண்ட அறநெறித்தமிழ்ச் சங்கம் உள்ள ஊர்களுக்கு அவர்
முறையாக முறைவைத்துப் பயணம் மேற்கொண்டு பாடங்களை நடத்தி வந்தார் என்பர். அறநெறித் தமிழ்ச்சங்கம் மூலம் தமிழுணர்வு பெற்ற மாணவர்களைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஊரிலும் “மாணவர் மாநாடு” என்ற பெயரில் விழா நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் தமிழறிஞர்கள் தொ.ப.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் ஆகியோர் பங்கு பெற்று தமிழ் எழுச்சியூட்டினர். அதுபோல், தமிழ் தழைக்கப் பாடுபட்ட சமயச் சான்றோர்களான திருஞானசம்பந்தர், அப்பரடிகள், சுந்தரருக்கும் “திருநாள்” பெயரில் விழா கொண்டாடியுள்ளார்.
பல்வேறு விழாக்கள் நடத்தி மங்கலங்கிழார் செய்த தமிழ்த்தொண்டிற்கு நல்ல பலன் கிடைத்தது. சித்தூர் பகுதியில் தமிழ் படித்த பல்லாயிரக்கான மாணவர்கள் உருவாயினர். பலநூறு மாணவர்கள் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்று ஆசியர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அடுத்த கட்டமாக திருத்தணிகையில் தமிழ் வளர்ச்சிக் கழகமும், பொதட்டூர்ப்பேட்டையில் தமிழாசிரியர் பயிற்சிப் பள்ளியும் என்று மங்கலங்கிழாரின் தமிழ்ப்பணி விரிவடைந்தது. மங்கலங்கிழாருக்கு தமிழ்ப்பணி ஒரு கண்ணென்றால் ‘தமிழ்மண் மீட்புப்பணி’ மறுகண்ணாகத் திகழ்ந்தது.
பொதட்டூர்ப்பேட்டையில் தமிழாசிரிரியர் பயிற்சிப்பள்ளி கட்டட வேலையில் தீவிரம் காட்டி வந்த மங்கலங்கிழாருக்குத் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் பள்ளிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி 31.8.1953இல் காலமானார்.
நூல்கள்
மங்கலங்கிழார் எழுதிய நூல்கள் பத்துக்கும் மேற்பட்டவை. அவற்றுள் வடவெல்லை, தமிழ்நாடும் வடவெல்லையும், தமிழ்ப் பொழில், நளவெண்பா விளக்க உரை, இலக்கண விளக்கம், இலக்கண வினா விடை, நன்னூல் உரை ஆகியவை முதன்மையான நூல்களாகும்.
நினைவகங்கள்
இவரின் நினைவைப்
போற்றும் வகையில் அரக்கோணம் மற்றும் திருத்தணி வட்டப் பகுதிகளில் உள்ள எட்டுக்கும் மேற்பட்ட ஊர்களில் மங்கலங்கிழார் பெயரில் தொடக்கப்பள்ளி, தெரு, இலக்கிய மன்றம், நூல் நிலையம், உருவச்சிலை, அறக்கட்டளை, நற்பணி மன்றம், பூங்கா, மாளிகை போன்றவை அமைக்கப்பட்டிருப்பதும் அவரின்
தமிழ்ப் பணிக்குக் கிடைத்த வெகுமதி என்றால் அது மிகையாகாது.
புகழாரங்கள்
தமிழ்மா முனிவர்
மங்கலங்கிழாரின் தமிழ்ப் பணியையும் வடவெல்லை மீட்டுப் பணியையும் உற்று நோக்கிய
தமிழறிஞர்கள் இவரைப் பலவாறு பாராட்டியுள்ளனர்.
“தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார், தன்னலங்கருதாது பணி பல புரிந்து தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டு உழைத்த சான்றோர், அவர்தம் நினைவைப் போற்றுதல் தமிழர்க்குக் கடமையாகும்” எனத் தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
“வித்துவான்களின் தமிழ்த் தொண்டு கிராமங்களில் நடைபெறுதல் வேண்டுமென்று அறைகூவுவோருள் யானும் ஒருவன். அதைச் செயலில் நிகழ்த்திக் காட்டுவோர் சிலர்; அவருள் சிறந்து விளங்குவோர், அன்பர் ‘வித்தியானந்தர் (மங்கலங்கிழார்). அப்பெரியோர் தொண்டு நிகழும் எந்தக் கிராமத்தினின்றும் அழைப்பு வந்தால், யான் உடனே ஓடுவதை ஒரு வழக்கமான தமிழ்த் தொண்டாகக் கொண்டுள்ளேன்” எனப் பாராட்டினார் திரு.வி.க.!
“மங்கலங்கிழார், எனக்கு வழிகாட்டியாக விளங்கினார்; அவரைப் போன்று தாய்மொழிப் பற்றும் தமிழின உணர்ச்சியும் உடையவர்கள் தமிழினத்தாரில் வெகு சிலரே இருக்க முடியும்”. என ம.பொ.சி.
கருத்துரைத்துள்ளார்.
“இமைப்போதும் தமிழ் மறவார்; இயன்ற தொண்டை இனிதாற்றும் அருளுள்ளம் உடையார்; அன்னார் அமைத்த தமிழ் நிறுவனங்கள் பலவாம்; இங்கே அவையனைத்தும் விளைந்த பயன் பெரிதேயாகும்!” –எனப் புகழ்ந்துள்ளார் புரட்சிக்கவி பாரதிதாசன்!
தம் வாழ்வின் இறுதி மூச்சுவரை தமிழுக்காகவும், தமிழரின் நலனுக்காகவும் தன்னலங்கருதாது தொண்டு செய்த மங்கலங்கிழார், தமது
58ஆம் வயதில், 1953 ஆகஸ்ட் திங்கள் 31 ஆம் நாள் இயற்கை எய்தினார் என்பது இயற்கையின் நியதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக