இதழாளர் அண்ணா
முனைவர் மோ.கோ. கோவைமணி
இணைப்பேராசிரியர், தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் - 613 010.
பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி ஊடகங்களின் வளர்ச்சியும் அதனில் இடம்பெற்ற செய்திகளால் நாட்டின் பல்வேறு விதமான மாற்றங்களும் பல்வேறு நிலைகளில் நிகழ்ந்திருப்பதை வரலாறு எடுத்துக்காட்டும். சமயம், சமூகம், அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் செய்தி ஊடகத்தின் பங்களிப்பு தொடக்க காலத்தில் சிறப்பாகவே செயலாற்றி வந்துள்ளதைக் காணலாம். அரசியல் நிலையில், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முன் மற்றும் பின் எனச் செய்தி ஊகடங்களின் பங்களிப்பை வகைப்படுத்தலாம். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கும் முயற்சியில் நம்முடைய அரசியல் தலைவர்கள் செய்த முயற்சிகளின் வெளிப்பாடுகளை அன்றைய இதழ்கள் வெளிப்படுத்தின. சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு சமூக நீதிக்காகவும், அரசியல் மாற்றத்திற்காகவும் பல்வேறு கட்சிகள் தோற்றம் பெறத் தொடங்கின. அப்போது தங்களுடைய கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் எளிய ஊடகமாக இதழ்களைக் கையாண்டுள்ளனர். “நாளிதழ் இல்லாத அரசியல் இயக்கம் கவசமில்லாத போர் வீரனைப் போன்றது” என்பார் மா.ரா. அரசு (மேற்கோள், திராவிட இயக்க இதழ்கள் ஓரு பார்வை, ப.26). “ஓர் இதழ் ஆயிரம் குத்து வாளுக்கு ஈடானது” என்றும், “ஓர் செய்தித்தாள் இருப்பது ஓர் இனம் தன்னைத்தானே பேசிக்கொள்வது போன்றது” என்றும் மலையமான் குறிப்பிடுகின்றார் (மேற்கோள், மேலது, ப.28).
தமிழகத்தில் சமூகநீதி இயக்கம் செல்வாக்குப் பெற்றதற்கும் எல்லாத் துறைகளிலும் தமிழ் முக்கியத்துவம் பெற்று வருவதற்கும் திராவிட இயக்கமே முக்கிய காரணமாக இருந்துள்ளது. எல்லா மொழிகளும் வடமொழியில் இருந்துதான் பிறந்தவை என்று நம்பிக்கொண்டிருந்த நேரத்தில் திராவிட மொழி என்பது வேறு, ஆரிய மொழி என்பது வேறு என்று நிலைநிறுத்திய பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு.
பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதற்கு எழுச்சிமிகு பேச்சும் ஆற்றல் மிகு எழுத்தும் அக்காலத்தில் தேவைப்பட்டது. இவ்விரண்டையும் ஒருசேரக் கொடுத்தார் பேரறிஞர் அண்ணா. மேடைப் பேச்சுக்களில் எழுச்சிமிகு பகுத்தறிவுச் சிந்தனைகளை எடுத்தோதிய அண்ணா, தன் பேச்சின் மூலத்தை அச்சிட்டும் பிற பகுதிக்கு எடுத்துச்செல்ல ஒரு கருவியாக இதழைக் கைக்கொண்டார்.
அண்ணாவின் இதழ்கள்
அறிஞர் அண்ணா, நவயுவன் எனும் இதழைக் காஞ்சி மணி மொழியார் துணையுடன் முதலில் தொடங்கி நடத்தினார். பின்பு 1942இல் காஞ்சியிலிருந்து திராவிட நாடு எனும் வார இதழைத் தொடங்கி 1963ஆம் ஆண்டு வரை திறம்பட நடத்தி வந்தார். இதில், இவர் பரதம், வீரன், சி.என்.ஏ. என்ற பல பெயர்களில் கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது அடுக்கு மொழிநடை பல்லோரைக் கவர்ந்து இழுத்தது. இவ்விதழ் அரியதொரு கருத்துப் பெட்டகமாக, அரசியல் விழிப்புணர்ச்சி, சமூகச் சீர்திருத்தம், பகுத்தறிவு முதலிய செய்திகளைத் தாங்கி வெளிவந்தது. திராவிட நாடு இதழில் தலையங்கமாக ‘தம்பிக்கு’ எனும் பகுதி இடம்பெற்றது. ‘தம்பிக்கு’ என்ற கடித இலக்கியம் தோற்றம் பெற்றதும் திராவிட நாடு இதழில்தான். இவரது ‘தம்பிக்கு’ என்னும் மடல்கள், தமிழ் இலக்கியத்தில் புது வரவைக் கொடுத்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கைகளைப் பரப்ப அறிஞர் அண்ணாவை ஆசிரியராகக் கொண்ட ‘மாலைமணி’ நாளிதழ் 1949இல் தொடங்கப்பட்டது. முன்னதாக ‘திராவிடன்’ (1946), ‘போர்வாள் (1947) போன்ற தி.மு.க. இதழ்களை வெளியிட்டு வந்துள்ளார். பிரிவினைத் தடுப்புச் சட்டத்தை இந்திய அரசு கொண்டுவந்தபோது காஞ்சி எனும் பெயரில் 1963இல் வார இதழை வெளிக் கொண்டு வந்து நடத்தினார்.
தலையங்கம்
இதழுக்கு இன்றியமையாப் பகுதி தலையங்கம். மனிதனுக்கு இதயம் போன்று இதழுக்கு இதயம் போன்றது. தலையங்கம் இல்லா இதழ் முதுகெலும்பும் நாடும் இல்லா மனிதனையும் மறை திரை இல்லா வீட்டினையும் ஒக்கும் என வால்ட்ராப் தலையங்கத்தின் இன்றியமையாமையைக் குறிப்பிடுகிறார். ‘தலையங்கம் செய்தித்தாளின் கருத்துக்கண்ணாடி; அதன் அழிவற்ற ஆன்மா; அதன் மனச்சான்று; பெரிதும் போற்றப்படுகிறது; செயலைத் தூண்டுகிறது; பணிகளை முடுக்குகிறது; சட்டத்தைத் திருத்திப் புரட்சியைத் தோற்றுவிக்கிறது’ என்று காமத் கூறுகிறார். ‘தலையங்கம் பொதுமக்களுக்கு வழிகாட்டியாகவும் அவர்கள் கருத்தை எதிரொலிப்பதாகவும் இருக்க வேண்டும்’ என டாக்டர் இராதாகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். இதழின் கண்ணோட்டத்தைத் தலையங்கம் வெளிப்படுத்துகிறது. ஆசிரியர் தலையங்கம் மூலம் வாசகர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்கிறார். ஆசிரியர் ஒரு பொருள் பற்றிய எண்ணங்களைத் தலையங்கம் மூலம் அலசி ஆராய்கிறார். எல்லாச் செய்திகளுக்கும் தலைமையானதால் ‘தலையங்கம்’ எனப் பெயர் பெற்றது. ஆங்கிலத்தில் Editorial என்றும், Leader என்றும் குறிப்பிடுவதுண்டு. (இதழியல், சு. சக்திவேல், பக்.98-99).
தலையங்கத்தின் நோக்கம்
தலையங்கத்தின் பொருளுக்கேற்ப அதன் நோக்கம் மாறுபடுகிறது. பொதுவாக, பொதுமக்களின் கருத்து வெளிப்பாடு தலையங்கம் எனலாம். தலையங்கத்தின் பொருள், அதனை ஆராய்தல், முடிவு காணல் என மூன்று குறிக்கோள்கள் உண்டு. அப்பொருள் பற்றிப் பொதுமக்கள் இவ்வாறு கருதுகிறார்கள்; துறை வல்லுநர்கள் இவ்வாறு கருதுகிறார்கள் எனக் கோடிட்டுக் காட்டவேண்டும். அன்றாட நிகழ்ச்சிகளின் அழுத்தமான வெளிப்பாடே தலையங்கமாகும். தலையங்கம் விருப்பு வெறுப்பின்றி நடு நிலையுடன் அமையவேண்டும். அத்தலையங்கத்தின் பயன் சமுதாயப் பயனாக அமைய வேண்டும். ஒருதலைச் சார்பாக அமையக் கூடாது. நுண்மை, தெளிவு, சுருக்கம் ஆய்வு என்ற அடிப்படையில் அமைய வேண்டும். குறிப்பிட்ட கருத்தை மக்களிடம் உருவாக்கவும் தலையங்கம் துணைசெய்கின்றது. வாசகர்களுக்குச் சிலவற்றைக் கற்றுத்தரும் கருவியாகவும் பயன்படுகின்றது. நாட்டு நலனும் சமுதாய நலனும் முக்கிய நோக்கமாக அமையவேண்டும். தலையங்கம் தெளிவாகவும் சுருக்கமாகவும் அமையவேண்டும். தலையங்கத்தில் ஆசிரியர் தீர்வு காணும் முறைகளையும் குறிப்பிடலாம். விமர்சனம் செய்வதும் உண்மையைக் கொணர்வதும் சிக்கலைத் தீர்ப்பதும் தலையங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
அண்ணாவின் தலையங்கச் செய்திகள்
பேரளிஞர் அண்ணா அவர்கள் தம்முடைய தலையங்கச் செய்திகளில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும், தம்முடைய கொள்கைகளையும் எளிய தமிழ் நடையில் பாமரனுக்கும் புரியும் வகையில் வெளிப்படுத்தி உள்ளார். “செய்தித் தொடர்பியல் மிக உயர்ந்துள்ள நிலையில் உலகத்து நடப்புகளை விநாடிக்கு விநாடி விரல் நுனியில் குறிப்பெடுத்து உலக மக்களுக்கு வழங்கும் இந்நாளில் தலைமை அமைச்சரோ குடியரசுத் தலைவரோ தமது பயணங்களின்போது செய்தித் தொடர்பாளர்களைத் தம்முடன் அழைத்துச் சென்று தம் கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்கின்றனர். இதுபோல தம் பேச்சுக்களைப் பட்டித் ª£ட்டிகளில் உள்ள மக்கள் கேட்கிறார்கள் - என்றாலும் அவற்றின் சிறப்புப் பகுதிகள் மையக் கருவாக உள்ள செய்திகள் எழுத்தில் பதிவு செய்யப்படவில்லை என்ற மன உளைச்சல் அண்ணாவுக்கு உண்டு. ஆனாலும், அவர்தமது பேச்சை முத்துகிருஷ்ணன் அவர்களை உடன் அழைத்துச் சென்று பதிவு செய்வார்கள். அப்பேச்சுக்கள் தான் நம் நாட்டில் (திராவிட நாடு) வெளிவந்தன”… என்றும், “அறிஞர் அண்ணா அவர்கள் செய்தியாளர் முத்துகிருஷ்ணன் போன்றவர்கள் யாரும் இல்லாதபோது, அவரது பேச்சை அவரே கூட எழுதி அனுப்புவார்கள்” என்பார் மா.செ. (மேற்கோள், திராவிட இயக்க இதழ்கள் ஒரு பார்வை, பக்.49-50). அவற்றுள் சில தலையங்கச் செய்திகளை இங்குச் சுட்டிச் செல்வதால் உணரலாம்.
“காற்றடிக்குது கடல் குமுறுது; கப்பலும் பிரயாணத்தைத் தொடங்கி விட்டது. இருண்ட வானம் சுருண்டு எழும் அலைகள், மை இருட்டு; ஆனாலும் பிரயாணம் நடந்தே தீர வேண்டும். கொந்தளிப்பிலும் கப்பல் சென்று தானாக வேண்டும். கடமை அழைக்கும் போது காலத்தினால் விளையுங் கஷ்டத்தைச் சாக்காகக் கூறித் தப்பித்துக் கொள்வது மன்னிக்க முடியாத குற்றமாகும். எனவே, கொத்தளிப்பு மிக்க இவ்வேளையில் ‘திராவிட நாடு’ தமிழர்க்குப் பணியாற்றப் புறப்படுவதற்காகத் தமிழர் அமைதியும், ஆனந்தமும் குடிகொண்ட காலத்தில் ஆதரிக்கும் அளவை விடச் சற்று அதிகமாகத் தமது ஆதரவை, ‘திராவிட நாட்’டுக்குக் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
“புகை சூழ்ந்த பூ மண்டலத்தில், போர் தீர்ந்து சமாதானம் நிலவும் போது, சமதர்ம வாடை வீசாத இடமே இருக்கப் போவதில்லை! ஒவ்வோர் நாட்டிலும், அரசியல், மதம், சமுதாயம் ஆகிய துறைகளில் மதோன் மத்தர்களாக, மமதையின் பிம்பங்களாக, ஜார்களாகக் கொலு வீற்றிருக்கும் கொடுமைகளும் பேதங்களும் சாய்ந்து சரிந்து தொலையத்தான் போகின்றன!...
…திராவிடருக்காகப் பணியாற்றும் நாம் அச்சம், தயை தாட்சண்யமின்றி, புரட்டுகளை வெளிப்படுத்துவோம். புல்லர்களைப் பொசுக்குவோம்; புதுமைக்காகப் போராடுவோம். நமது கடமையைச் செய்கையில் எத்தகைய எதிர்ப்புத் தடுக்கினும் தடுமாறும் உள்ளங் கொள்வோம்!” (அண்ணா, திராவிடநாடு, ‘கொந்தளிப்பில்’ - தலையங்கம்,8.3.42) என்று திராவிட இயக்கத்தினர்க்கு வேண்டுகோள் வைக்கின்றார்.
திராவிட இயக்கம் வளர்ச்சி பெறுவதற்கு அவ்வியக்கத்தினர் கொள்ளவேண்டிய கடமையினையும், கண்ணியத்தினையும், கட்டுப்பாட்டையும் தம்முடைய பேச்சில் வெளிப்படுத்தக் காணலாம். குறிப்பாக, “நாம் மேற்கொண்டுள்ள செயல், காகிதப்பூ செய்திடுவது போன்றது அல்ல; முல்லை பூத்திடும் பூங்கா அமைப்பது போன்றதாகும்; பல்வேறு வகையான வலிவினைத் தேக்கி வைத்துக் கொண்டு, துரைத்தனத்தார், இந்தி ஆதிக்கத்தைப் புகுத்துகின்றனர். அதனை எதிர்க்கும் நம்மிடம், தூய்மையும், நேர்மையும், அஞ்சாமையும், துவளாமையும், அவசரப்படாத தன்மையும், நம்பிக்கையும் படைக்கலன்களாக உள்ளன…
ஒரு இயக்கம் எதிர்ப்பைத் தாங்கிக் கொள்ள, சில காலத்திற்கெல்லாம் பயிற்சி பெற்றுவிடும். பக்குவம் பெற்றிடும். ஆனால், ஏளனத்தைத் தாங்கிக் கொள்ளும் மனப்போக்கு எளிதில் வளராது!... ஆனால், தாங்கிக் கொண்டாலன்றி, அந்த இயக்கம் தணலில் தங்கம் போலாவது முடியாது - ஆகவே தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!...
எரிச்சலூட்டும் ஏளனம் பலனற்றது. கண்டவர்கள் இட்டுக் கட்டுவதும், ஒட்டி உருவாக்குவதும், பலன் தருமென்று, அந்த ‘வித்தை’யையும் செய்து காட்டுகின்றனர். அதிலும் அவர்கள் காண்பது தோல்வியே!... கமலம் மட்டுமல்ல, கருத்தும் அப்படித்தான்! உரிய காலம் வரும்போது மலரும், சில காலத்தில் குவிந்த தாமரை போலிருக்கும் உணர்ந்து கொள் என்பான் தெளிவளிப்போன், அதுபோலத் தம்பி! கழகம் காலமறிந்து காரியமாற்றுகிறது (அண்ணா, காஞ்சி, 26.7.2964) என்பதால் உணரமுடிகிறது.
மேலும், மக்களின் சக்தி எப்பேர்பட்டது என்பதை, “மாற்றத்தக்கது ஆட்சி; நீக்கத் தக்கவர்கள் ஆளவந்தோர்; தீர்ப்பளிக்கத் தக்கவர்கள் மக்கள் என்ற இலக்கணத்தின் அடிப்படையில் அமைக்கப்படாத அரசுகள், அடித்தளம் அற்ற கட்டடங்களாகும். மக்களின் கோபம் எனும் கடுங்காற்று வீசும் போது சரிந்து வீழ்ந்து போகும்!” என்கிறார். (திராவிட நாடு, மடல்246).
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்படிப்பட்டது, எப்படி இருக்கவேண்டும், எப்படி இருந்தால் சமூதாய நலனைக் காக்கும் என்றெல்லாம் சிந்தித்த அண்ணா அவர்கள் தம்முடைய கருத்தை, “சட்டம், சமுதாய ஏற்பாடாக, கட்டுக்கோப்பு, கண்ணியம், ஒழுங்கு, நீதி, நியாயம், நேர்மை ஆகியவற்றினைப் பாதுகாத்திடத் தக்கதாக, அறநெறி மேற்கொள்வதாக அமைந்திருக்குமானால், அப்படிப்பட்ட சட்டத்தை அனைவரும் வரவேற்றுப் போற்றி அதன் கட்டுக்கு அடங்கி, சமூக மேம்பாடு எழில் பெற ஒழுக வேண்டும் - ஒழுகி வருகின்றனர் மிகமிகப் பெரும்பாலோர். ஆனால், சட்டம் தான்தோற்றித்தனமாக, ஆணவப் போக்குடன், ஆய்ந்து பார்க்காமல், ஆதிக்க வெறி கொண்டு, அக்கிரமத்துக்குத் துணையாக அநீதியைக் கொலுவேற்ற இயற்றப்படுமானால், சட்டம் மதிப்பற்றுப் போகும்! துச்சமென்று எண்ணுவார், எதிர்த்திட முனைவர் - எதிர்த்துள்ளனர் - எதிர்த்து நிற்பர்.
சட்டம் நோய் தீர்க்கும் மருந்து என்று கொள்வோமானால், அம்மருந்து முறைப்படி செய்யப்பட்டதாக, அத்துறை வல்லுநரின் ஒப்பம் பெற்றதாக, நோய் தீர்க்க வல்லதாக அமைந்திருக்க வேண்டும். அங்ஙனம் தயாரிக்கப்பட்டதாக இருப்பின் கசப்பு, குமுட்டல், எரிச்சல் ஏற்படினும் சகித்துக் கொண்டு, நோய் போக அம்மருந்து உட்கொள்வர். பொருள் வகை, செய்முறை அறியாது, கண்மூடித்தனமாக, விளக்கமற்ற நிலையில் விரைவு அதிகம் காட்டி, தயாரித்த மருத்து எனின், அதனை உட்கொள்ளார். உட்கொள்பவர்க்கு நோயினும் கேடான நிலையே ஏற்பட்டுவிடும்!
சட்டத்தை மீறலாம் என்ற நினைப்பும், மீற வேண்டும் என்ற துடிப்பும், மீறத்தக்க துணிவும் மக்கள் - அல்லது குறிப்பிடத்தக்க பகுதியினர் கொள்ளத்தக்க விதமான கோணற் சட்டத்தை இயற்றிவிட்டு, சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு, அதனை மீறலாகாது என்று பேசிப் பயன் இல்லை.
அவ்விதம் செய்யப்பட்ட சட்டங்கள் நிலைத்திருப்பதுமில்லை!
எனவேதான், சமூகத்தில், விவரம் அறியாமல், விளக்கம் பெறாமல், ஆரஅமர யோசியாமல், தீது பயக்கத்தக்க, தன்மானம் அழிக்கத் தக்க, உரிமையை உருக்குலையச் செய்யத்தக்க, வலியோர்க்குத் துணைநிற்கத்தக்க விதமான சட்டங்களை எதிர்த்து நிற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன - நடைபெற்றுக்கொண்டு வருகின்றன; நடைபெற்றுத் தீரும்!” (திராவிட நாடு, மடல், 2.8.64, ப.9) என்கின்றார்.
பேரறிஞர் அண்ணா, அரசியல் நுழைவுக்கு முன் இருந்த அவரது பேச்சுக்கும், அரசியல் நுழைவின் போது இருந்த அவரது பேச்சுக்கும், திராவிட இயக்கத்தில் இருந்த போது அவரது பேச்சுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது அவரது பேச்சுக்கும், திராவிட முன்னேற்றக் கழகம் அரசுப் பொறுப்பில் இருந்த போது அவரது பேச்சுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என்றும், மேடைப் பேச்சுக்கள் அவ்வூர் மக்களால் அச்சிடப்பெற்று வேற்றிடங்களுக்கு பரப்பியுள்ளனர் என்றும் வீ.சு. இராமலிங்கம் கூறுகின்றார் (பேரறிஞர் அண்ணாவின் பேச்சும் பதிவுகள் - சொற்பொழிவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 11.8.2009).
திராவிட நாடு நிறுத்தப்பட்டதற்குக் காரணம்
1942முதல் தொடர்ந்து தனது பணியினை செவ்வனே செய்து வந்த திராவிட நாடு எனும் வார இதழ் 1963ல் நின்றுவிடுகிறது. அதற்கான காரணத்தை அண்ணா அவர்கள், “கடுமையான பணியாற்றுவதற்கு இடையிலேயும், உனக்கு மடல் எழுதுவதும், கதை, கட்டுரை, உரையாடல் போன்ற வடிவங்களில் என் எண்ணங்களை வெளியிடவும் நான் தயங்கினதுமில்லை. அஃது எனக்குப் பளுவான வேலையாகவும் தோன்றினதில்லை. சொல்லப் போனால், மனதிலே ஏற்றப்பட்டுவிடும் சுமையும், அதனாலே நீ படும் சோர்வும், உனக்காக எழுதும்போது, பெருமளவு குறைந்து போவதுடன், புதிய தெம்பும் பிறந்திருக்கிறது.
ஆகவே, இடையில் இதழ் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் எனக்கு எழுத நேரமும் நினைப்பும் கிடைக்க வில்லை என்பதுமல்ல; எழுதுவதால் களைப்பும் இளைப்பும் ஏற்பட்டுவிட்டது என்பதுமல்ல; இதழ் நடத்தும் நிர்வாகப் பொறுப்பினைப் பார்த்துக் கொள்ள, முட்டுப்பாடின்றி நடத்திச் செல்ல, எனக்கு நேரம் கிடைக்காததும் அதன் காரணமாக ஏற்பட்ட, பொருளாதார நெருக்கடியும், ‘திராவிட நாடு’ இதழ் நிறுத்தப்பட்டதற்குக் காணரம். எனக்கு மட்டுமே தொல்லை தந்த நிலைமைகளைப் பற்றித் தம்பி! உன்னிடம் சொல்லி, உன் மனதுக்குச் சங்கடத்தை உண்டாக்க விரும்பவில்லை; பல்வேறு காரணங்களால், ‘திராவிட நாடு’ என்ற பெயருடன் இதழ் நடத்த துரைத்தனம் அளித்திருந்த அனுமதி காலாவதி ஆகிவிட்டது. மீண்டும் அதே பெயருடன் இதழ் நடத்த துரைத்தனத்தாரை அணுகும் முயற்சி நடைபெற்ற வண்ணம் இருக்கிறது…. அதற்கான உத்தரவு கிடைத்திட எத்தனை காலமாகுமோ யார் கண்டார்கள்! துரைத்தனத்தாருக்குத்தான் என்மீது அளவு கடந்த அன்பாயிற்றே!! அறிவாயே! அதனால், நான் சிறையில் இருந்தபோது, என் இளைய மகன் இளங்கோவன், ‘காஞ்சி’ எனும் பெயரில் கிழமை இதழ், இலக்கிய இதழ நடத்த - பெற்றிருந்த அனுமதியைப் பயன்படுத்தி, என் பணியினைத் தொடர்ந்திட முனைகின்றேன். ‘திராவிட நாடு’ இதழ் நடத்த துரைத்தன அனுமதி கிடைத்ததும், அந்தப் பெயருடன் இதழ் வெளிவரும்! ‘காஞ்சி’ இலக்கிய இதழாகிவிடும்” (தமிழ் இதழியல் சுவடுகள், மா.சு. சம்பந்தன், பக்.177-78) என்கின்றார்.
காஞ்சி இதழ்
காஞ்சி இதழ் திராவிட நாடு வார இதழின் மறு உருவம் என்பதை, “காஞ்சி” புதிய கிழமை இதழ். எனினும் அதற்காகப் புதிதாகக் கொள்கைகளைத் தேடிப் பெற வேண்டிய நிலையில் நாம் இல்லை. ஏனெனில், ‘திராவிட நாடு’ இதழ் நடத்தி வந்த நற்பணியினைத் தொடர்ந்து நடத்திச் செல்லவே, ‘காஞ்சி’ வருகிறது.
காஞ்சி ஒரு ஊரின் பெயர் மட்டுமல்ல, அதற்குள்ள பல பொருள்களிலே ஒன்று, பகைவரை எதிர்த்து நிற்பது என்பதாகும்.
நாடு வாழ்ந்திட எடுத்துக் கொள்ளப்படும் நன்முயற்சிகளுக்குக் கேடு விளைத்திடும் எதுவும், பகை எனும் நிலை பெறுகிறது.
பகையை எதிர்த்து நிற்பது என்று கூறும்போது தாக்குதல், மோதுதல், வன்முறை என்று எண்ணிடத் தேவையில்லை.
கரியுடன் கரியும், பரியுடன் பரியும் மோதிட, கையும் காலும் அறுபட, கழுகு வட்டமிட, ஓநாய் ஓடிவர, வெட்டியும் குத்தியும், வேல் வீசியும், வாள் சுழற்றியும், இடித்தும் பெயர்த்தும், கொளுத்தியும் கருக்கியும் நாசத்தை நடமிடவிடும் போர் அல்ல, நாம் மேற்கொள்வது - கருத்துடன் கருத்து உரசிட, வாதங்கள் ஒன்றினை மற்றொன்று வெட்டிட, தயங்காது தடுமாற்றம் கொள்ளாது அஞ்சாது ஆசைக்கு ஆட்படாது, வழிபலவற்றிலே எம் வழியே நல்வழி, பிறவழி சென்று நலனை இழந்திடாதீர். எம் வழி வருக என அன்புடன் அழைத்துச் செல்லும் முயற்சியே நாம் மேற்கொள்ளும் போர் முறை.
இருளழிக்க எவரே ஈட்டி எறிவர். காட்டுக் கூச்சலிடுவர்! இருட்பகை அழிந்துபட ஒளியைப் பயன்படுத்துவர். அஃதே போல, அறநெறி நடந்திடாததால், மூண்டிடும் இடர்மிகு இருள் நிலையை மாற்றிட ஒளிவளர் விதமான தூய தொண்டாற்றிக் காட்டுவதன் மூலம் இருட்பகை அழிப்போம்.
அருளாளர் கூறுகிறார். அர்த்த மற்றது போலத் தோன்றிடினும் அவர் உரையை நாம் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இல்லையேல் பெரும்பாலும் இடர் வந்து சேரும் என்று மக்கள் நடுக்குங் குரலிற் பேசிக் கிடக்கும் காலமல்ல இது.
சொல்கிறேன், கேட்டு அதன்படி நட! இல்லையேல் வெட்டுப் பாறை என்று மிரட்டி மக்களைப் பணியவைக்கும் கொடுங்கோலரின் கொடி பறந்திடும் காலமுமல்ல.
புரியும்படி சொல்லு! பொருள் விளங்கும்படி பேசு! பொருத்தமானதாகக் கூறு! மறுத்திடுவோரின் வாதங்கள் பொய் என்பதை மெய்ப்பித்துக் காட்டு! - என்று மக்கள் கேட்டிடும் நாட்கள்.
இந்த நாட்களிலே, நாம் ஒருவழி என்று நம்பினாலும், நாம் அந்த நம்பிக்கை கொள்வதற்குத் தகுந்த பல காரணங்கள் நமக்குத் தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் அவ்வழியைத் தமக்கும் ஏற்ற வழி என்று கொட்டிடச் செய்ய வேண்டுமெனில் பொறுப்புடனும் பொறுமையுடனும் தனிப்பட்டோர் மீது காழ்ப்பு துளியும் கொள்ளாமலும், நமக்குச் சரி என்று பட்டதிலிருந்து வழுவாமலும் இருந்து இதமாகக் கருத்தினை விளக்கிட வேண்டும். மற்றவரின் இசைவு கிடைத்திடும் விதமாக, இஃதே நாம் மேற்கொள்ளும் போராகும்.
இதிலே நாம் மகிழ்ச்சியும் பெருமையும் பெறத்தக்க விதமான வெற்றியைக் கண்டிட வேண்டுமெனில், முதலில் பிரச்சினைகளிலே நமக்குத் தெளிவும், வாதங்களிலே தரமும், அதனை எடுத்துக் கூறிடும் முறையினிலே திறமும் பெற வேண்டும். ‘காஞ்சி’ இதழ் இந்த வழி நின்றே, பிரச்சினைகளை அணுகிடும்” ஆய்வுரை கூறிடும்.
இது உரிமைக்குரல் எங்கும் எழுந்துள்ள காலம். உரிமைகளைப் பெற்று விட்ட காலம் என்று கூறுவதற்கில்லை; உரிமை பெற்றாக வேண்டும் என்ற துடிப்பு எழுந்துள்ள காலம்.
மக்களாட்சி முறை காரணமாக, சில அடிப்படை உரிமைகள் மனித குலத்துக்குக் கிடைத்துள்ளன; அந்த உரிமைகள் உருக்குலையாதிருக்கவும், அவைகளின் முழுப் பயனைத் துய்க்கவுமான முயற்சி, உலகில் பல்வேறு இடங்களிலே, நடைபெற்றுக் கொண்டிருக்கக் காண்கிறோம்.
ஒரு நாடு மற்றோர் நாட்டின் மீது பூட்டியுள்ள தளைகள், ஒரு இனம் மற்றோர் இனத்தின் மீது பூட்டியுள்ள தளைகள், பழமை புதுமையின் மீது வீசிடும் தளைகள் என்று இன்னோரன்ன பிற தளைகள், பொடி பட, மக்கள் விடுபட, நடத்தப்பட்டு வரும் எல்லா நன் முயற்சிகளையும் வாழ்த்தி வரவேற்று துணை நிற்க விழைகிறது ‘காஞ்சி’.
மொழி, கலை, பொருளாதாரப் பொறி, அரசியல் அமைப்பு எனும் எம் முறையிலே பூட்டப்படும் தளையெனினும், அவை அறுபட பெருமுயற்சி எடுத்துக் கொண்டாக வேண்டும். ‘காஞ்சி’ இந்தப் புனிதப்போரில் ஒரு படைக்கலனாக நல்வழி நாடுவோர் பக்கம் உரிமை பெற விழைவோர் சார்பில், இருந்திடும் பெரு விருப்பம் கொண்டுள்ளது.
மொழியைக் கொண்டு ஒரு பகுதி மக்கள், பிற பகுதியினரை, மட்டமாக்கிடும் முயற்சியாகவே, நாம் இந்தி ஆட்சி மொழி ஆக்கப்படுவதைக் கருதுகிறோம். எனவே எதிர்த்து நிற்கிறோம்.
இவைகளேயன்றி, பசியும் பிணியும், பேதமும், பிளவும், ஏழ்மையும் பிற்போக்குத் தன்மையும், மனிதகுல முன்னேற்றத்தைத் தடுத்திடும் ‘பகை’யாக நெளிகின்றன.
அந்தப் பகையை அழித்திடும் பணியினிலே, ‘காஞ்சி’ தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விழைகிறது.
இந்தச் சீரிய பணியினைச் செம்மையாகச் செய்திடும் ஆற்றலும் வாய்ப்பும் ‘காஞ்சி’ பெற்றிட, உமது நல்லாதரவு மிகுதியும் தேவை. நல்கிடுவீர் என்ற நம்பிக்கையுடன் ‘காஞ்சி’ உரிமைக்குரல் எழுந்திடச் செய்ய வந்துளது. உமது வாழ்த்தும் வரவேற்பும் உண்டு என்ற எண்ணத்தின் துணை கொண்டு” (காஞ்சி - வார இதழ், மலர் 1, இதழ் 1, 26.7.1964, காஞ்சிபுரம்) இவ்விதழ் வெளிவரத் தொடங்குகிறது என்கின்றார்.
முடிவுரை
அறிஞர் அண்ணா தமது அரிய பேச்சாலும் எழுத்தாலும் மக்கள் உள்ளங்களைக் கவர்ந்தார். மிகக் குறுகிய காலத்துக்குள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் செல்வாக்கு பெறச் செய்து, 30 ஆண்டுக் கால காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, தி.மு.கழக ஆட்சியை அமைத்தார். அண்ணா, இரா. நெடுஞ்செழியன், மு. கருணாநிதி, கே.ஏ. மதியழகன், சத்தியவாணி முத்து ஆகியோர் இதழாசிரியர்களாக அமைச்சரவையைக் கண்டவர்கள். ஏறக்குறைய இதழ் ஆசிரியர்களைக் கொண்ட அமைச்சரவையாகவே இருந்தது.
அண்ணா நடத்திய இதழ்களும், அவர் எழுதிய கட்டுரைகளும், சிறுகதைகளும், நாவல்களும், ஓரங்க நாடகங்களும், நாடகங்களும், திரைப்பட உரையாடல்களும், அவர் பேசிய பேச்சுக்களும் நூல்களாக ஆக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் ஒருசேரப் பார்த்துப் படித்துக் களித்துப் பயன்பெற்று, அவர் செப்பியவற்றைப் பேணிக்காத்து மேன்மைப்படுத்துவதே அவருக்குச் செய்யும் நன்றிக் கடனாகும்.
அறிஞர் அண்ணாவின் பொன்விழாக் கவிதை
அவன் மெல்ல நகைத்தான்
அதில் உள்ளம் நகைத்தது.
கலங்கா நெஞ்சம் கண்களில் தெளிந்தது.
அரும்பு மீசையில் அலட்சியம் புறப்பட்டது.
பகைவரையும் பண்போடு நோக்கினான்.
வினாக்களுக்கு விடையும் தந்தான்.
நம்பாத பகைவரை மடமை கெடுத்தது.
நம்பிய பகைவரைத் தன்னலம் இழுத்தது.
அவன் தூங்குவது போல் நடிப்பவரை விட்டு விட்டுத்
தூங்குபவரை எழுப்பப் புறப்பட்டான்.
“நினைத்ததைச் சொல்கிறேன்; நடப்பது நடக்கட்டும்!”
தூய்மை சுமந்தவன் துணிந்து நடந்தான்
துணிந்தவன் கால்களில் முள்ளும் மலரே!
கருத்துப் பழுத்தால் கடலும் கடுகே
புரிந்தவன் காணும் புயலும், தென்றலே!
அறிவிலா தவர்க்கே இவ்வுலகம் பெரிது!
அறிஞனின் முன்அது, அணுவிலும் சிறிது!
தனிவழி நடந்தான்; தானே நடந்தான்.
தளர்ந்தவன் ஒருவன், பின்னோடி வந்தான்.
ஒருவன் பின்னே மற்றவன் வந்தான்.
நிலத்தில் விழுந்த துளிகள், ஓடிக் குளத்தில் விழுந்தன.
குளம் நிறைந்தது.
ஆயிரமாயிரம் படை திரண்டது!
‘அந்நாள் வாழ்வை அடைவோம் எனும்குரல்
அங்கும் இங்கும் எங்கும் எழுந்தது.
என்றோ பிரிந்தவர் இன்று கூடினர்.
ஒன்றே குலமென உரத்துக் கூவினர்.
உள்ளங் கெட்டவர் ஓலமிட் டழுதனர்
கள்ள மிகுந்தவர் கடுஞ்சொல் வீசினர்.
“ஒருவன் பின்னே மாபெரும் படையா?
உண்மை உரைப்போன் ஒருவன் அவனா?
யார் அவன்? யார் அவன்? - கேள்வி எழுந்தது.
பாரோர் அவனைப் பார்க்க விரும்பினர்.
கேளார் அவன் சொல் கேட்க விரும்பினர்.
வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் வல்லவன்
புகழில் மயங்கி நின்றன!
ஒன்றே குலம்; அது எங்கள் தமிழ்க்குலம்!
ஒருவனே தேவன்; பழம் புகழ் மீண்டது.
நாடு மலர்ந்தது; கூடி மகிழ்ந்தது.
அன்னவன் - திராவிட மன்னவன் - பண்புள
தென்னவன் - ஐம்பதை எட்டினான்!
பொன்விழா மன்றம் பூத்துச் சிரித்தது!
வானுள வரைக்கும் வாழ்க அவன் புகழ்!”
- கவிஞர் கண்ணதாசன், ‘தென்றல்’, 12.9.2959
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக