புதன், 16 மே, 2018

இதழ்களில் மருத்துவச் சுவடிப்பதிப்புகள்

இதழ்களில் மருத்துவச் சுவடிப்பதிப்புகள்
முனைவர் மோ.கோ. கோவைமணி
செய்திகளை மக்களுக்கறிவிக்கும் ஊடகங்களில் ஒன்றே இதழ்.  வெளிவரும் காலம், பொருண்மை, வெளியிடும் அமைப்பு ஆகியவற்றைக்கொண்டு இதழ்களைப் பல வகைகளாகப் பகுக்கலாம். அதாவது, வெளிவரும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு நாளிதழ், வார இதழ், திங்கள் இருமுறை இதழ், திங்கள் மும்முறை இதழ், திங்களிதழ், காலாண்டிதழ், நாத்திங்களிதழ், அரையாண்டிதழ், ஆண்டிதழ் என்றும்; பொருண்மையை அடிப்படையாகக் கொண்டு அரசியலிதழ், அறிவியலிதழ், ஆய்வு இதழ், இணைய இதழ், இலக்கிய இதழ், கணினி இதழ், கதை இதழ், கலை இதழ், கல்வி இதழ், கல்வெட்டியல் இதழ், கவிதை இதழ், கால்நடை அறிவியலிதழ், கிராமநல இதழ், கூட்டுறவு இதழ், சட்ட இதழ், சமய இதழ்கள், சமூக இதழ், சோதிட இதழ், தகவல் இதழ், திரைப்பட இதழ், தொழில் இதழ், நாடக இதழ், நாட்டுப்புறவியல் இதழ், நூலக இதழ், நூலிதழ், பயண இதழ், பாலுணர்வு இதழ், பொறியியல் இதழ், மருத்துவ இதழ், மொழியியல் இதழ், விளையாட்டு இதழ், வேளாண்மை இதழ் என்றும்; வெளியிடும் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு இயக்க இதழ்கள் (தனித்தமிழ் இயக்க இதழ், தேசிய இயக்க இதழ், பகுத்தறிவு இயக்க இதழ்), கட்சி இதழ்கள் (அ.இ.அ.தி.மு.க. இதழ், தி.மு.க. இதழ், தி.க. இதழ், ம.தி.மு.க. இதழ்), சர்வோதய இதழ், தொழிற்சங்க இதழ், நாட்டுநிர்வாக இதழ் என்றும் பகுக்கலாம். இப்பகுப்புக்களில் பொருண்மை அடிப்படையில் அமைந்ததே மருத்துவ இதழ் ஆகும்.

மருத்துவ இதழ்
கி.பி.1812ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் அச்சகம் நடத்தத் தொடங்கினர்.  மாச தினசரிதையின் அச்சுக்கூடம் ஒரு கிறித்துவத் தமிழரால் சென்னையில் நடத்தப்பெற்றிருக்கின்றது.  இந்த அச்சுக்கூடத்தின் வழியாக 'மாச தினசரிதை' என்னும் மாதஇதழ் வெளிவந்திருக்கின்றது. இதுவே இந்தியாவில் இந்தியரால் குறிப்பாகத் தமிழரால் நடத்தப்பெற்ற முதல் இதழ் ஆகும்.  இவ்வச்சுக் கூடத்தின் வழியாகத் தான் 'திருக்குறள் மூலமும் நாலடியார் மூலமும்' என்னும் முதல் சுவடிப்பதிப்பு நூல் கி.பி.1812இல் வெளியாகியிருக்கின்றது. அச்சகங்களைத் தொடங்கிய தமிழர்கள் அவ்வச்சகத்தின் வழியே இதழ்களையும் வெளியிட்டிருக்கின்றனர். அத்தோடு பண்டைய இலக்கியஇலக்கண மருத்துவ சோதிட நூல்களையும் வெளியிட்டிருக்கின்றனர் என்பது தெரிகின்றது. 

தொடக்கக் காலத் தமிழக இதழ்களில் கிறித்துவ, சைவ, வைணவ, பௌத்த, இசுலாமிய சமயக் கருத்துகளுக்கிடையே சில இதழ்கள் மக்களின் தேவைக்கேற்ப மருத்துவப் பகுதிகளையும் இணைத்து வெளியிடலாயின.  இவ்வகையில்,  கி.பி.1831 ஆம் ஆண்டு வெளிவந்த 'தமிழ் மேகசின்' இதழில் காச நோய் பற்றிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையே இதழ்களில் வெளிவந்த முதல் அறிவியல் கட்டுரையாகும் (தமிழில் மருத்துவ இதழ்கள், ப.19).  இவ்விதழைத் தொடர்ந்து பல அறிவியல் செய்திகளைப் பல்வேறு வகையான இதழ்கள் வெளியிட்டிருக்கின்றன. மருத்துவ இதழ்கள் வெளிவந்த காலத்தை மூன்று பகுப்பாகப் பகுக்கலாம். 

அ. 1900க்கு முன் மருத்துவ இதழ்கள்
முதன்முதலாக மருத்துவம் பற்றிய செய்தி கி.பி.1831ஆம் ஆண்டு 'தமிழ் மேகசின்' என்னும் இதழில் வெளிவந்தது.  இம்முதல் செய்தி காசநோய் பற்றியதாக அமைந்திருக்கின்றது.  "தமிழகத்தில் வெளிவந்த தமிழ் மேகசின் இதழைப் போலவே இலங்கையில் பணியாற்றிவந்த சமயப் பணியாளர்களால் 1841ஆம் ஆண்டு 'உதய தாரகை' தொடங்கப்பெற்றது.  மாதம் இருமுறையாக வெளிவந்த இந்த இதழில் சமயச் செய்திகளுடன் அறிவியல் கட்டுரைகளும் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளன.  ஐரோப்பிய மருத்துவத்தை, குறிப்பாக ஐரோப்பிய அறிவியலைத் தமிழில் வெளியிட்ட உதயதாரகை தமிழ் மருத்துவத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டது.  தமிழ் மருத்துவச் சுவடிகளில் இருந்த அகத்தியர் மருந்து தயாரிப்பு வகையை ஆங்கிலத்தில் உதயதாரகை வெளியிட்டது" (தமிழில் மருத்துவ இதழ்கள், ப.19) என்பதைப் பார்க்கும் போது கி.பி.1841ஆம் ஆண்டு உதயதாரகையில் மருத்துவச் சுவடிப்பதிப்பு தொடங்கப்பெற்றிருப்பது தெரிகிறது.

அதன்பிறகு கி.பி.1855ஆம் ஆண்டு பெர்சிவல் பாதிரியாரால் தொடங்கப் பெற்ற தினவர்த்தமானி இதழில் அறிவியல் கட்டுரைகள், சுகாதாரம், பொது மருத்துவம் போன்ற பொருண்மைகள் இடம்பெற்றிருக்கின்றன.  கி.பி.1870இல் தொடங்கப்பெற்ற ஜனவிநோதினி இதழில் தொற்றுநோய் தடுப்புமுறை, கள்ளுண்ணாமை போன்ற பொருண்மைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஜனவிநோதினி வெளிவந்த அதே ஆண்டில்  'அகத்திய வர்த்தமானி' என்னும் மருத்துவ இதழ் சென்னையிலிருந்து வெளிவந்திருக்கின்றது.  இவ் இதழ்தான் மருத்துவத்திற்கென்றே வெளிவந்த தனி இதழாகும்.  எனவே, அகத்திய வர்த்தமானியை முதல் மருத்துவ இதழ் என்பர்(தமிழில் அறிவியல் இதழ்கள், ப.140). 

அகத்திய வர்த்தமானியைத் தொடர்ந்து சுகஜீவனி (1887), ஆயுர்வேத பாஸ்கரன்  (1889), விவேக சிந்தாமணி (1892), விவேக சுந்தரம் (1894), சுகாதார   போதினி  (1891), வைத்திய போதினி (1897), வைத்திய விசயன் (1897) போன்ற மருத்துவ இதழ்கள் ஐரோப்பிய மருத்துவத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரை வடிவில் கொடுத்துவந்தன.  என்றாலும் சில இதழ்கள் சித்த மருத்துவச் செய்திகளையும் சித்த மருத்துவ நூல்களையும் வெளியிட்டுள்ளன.

ஆ. 1990 முதல் 1947 வரை மருத்துவ இதழ்கள்
1900ஆம் ஆண்டு முதல் சென்னை மாகாணத்தின் பல பகுதிகளில் ஐரோப்பிய அடிப்படையிலான கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் பல தொடங்கப்பட்டன. இக்கல்வி நிறுவனங்களில் ஐரோப்பிய அறிவியல் பாடங்கள் தமிழ், தெலுங்கு மொழிகளில் கற்பிக்கப்பட்டன.  ஐரோப்பிய அறிவியல் பாடநூல்களை எழுதிய ஆசிரியர்கள் இக்கால  கட்டத்தில் வெளிவந்த இதழ்களில் சுகாதாரம் மற்றும் தொற்றுநோய் குறித்த மருத்துவக் கட்டுரைகளை எழுதினர்.  பொது இதழ்களை நடத்திவந்த இதழாசிரியர்கள் மக்களிடம் அறிவியல் அறிவு, மருத்துவ அறிவியல் அறிவு, குறிப்பாக ஐரோப்பிய மருத்துவ அறிவியல் அறிவு பரவவேண்டும் என்பதில் ஆர்வமுடையவர்களாக இருந்தனர்.

இந்நோக்கத்தில் அறிவு விளக்கம் (1901), யதார்த்த பாஸ்கரன் (1902), தமிழகம் (1905), சுகாதார போதினி (1906), ஆரோக்கிய போதினி (1908), வைத்திய போதினி (1910), நல்வழி (1912), வைத்திய கலாநிதி (1913), தமிழ் வைத்தியக் களஞ்சியம் (1921), ஆரோக்கியமும் சிசுவின் வாழ்க்கையும் (1923), தன்வந்திரி (1923), ஆயுள்வேதம் (1023), ஆரோக்கிய தீபிகை (1924), செல்வக் களஞ்சியம் (1926), இயற்கை (1926), மருத்துவன் (1928), வைத்தியக் களஞ்சியம் (1930), ஆரோக்கிய சிந்தாமணி (1930), வைத்தியன் (1931), ஆயுர்வேத சீவரட்சகம் (1932), சித்தர் களஞ்சியம் (1934), சித்தன் (19345), வைத்திய சந்திரிகா (1938), தமிழ் மருத்துவப்பொழில் (1941), அகஸ்தியர் (1944), «உறாமியோபதி (1947) போன்ற இதழ்கள் மருத்துவக் கருத்துக்களையும் மருத்துவத் துணுக்குகளையும் மருத்துவக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளதோடு பல மருத்துவச் சுவடிப்பதிப்புகளையும் வெளியிட்டுள்ளன.

இ. 1947க்குப் பின் மருத்துவ இதழ்கள்
விடுதலைக்குப் பிந்தைய அறிவியல் இதழ்கள் என்று பட்டியலிட்டுப் பார்க்கும் நிலையில் மருத்துவ இதழ்கள் அதிகமான எண்ணிக்கையில் உள்ளன.  இவ்விதழ்கள் ஏறத்தாழ 1970ஆம் ஆண்டு வரை பெரும்பாலும் பொதுச் சுகாதாரம், உடல்நலம், துப்புரவு என்று பொதுமையான கருத்துக்களைச் சொல்லி அவற்றுடன் ஆன்மீகம் மற்றும் மனநலம் குறித்த செய்திகளை அவ்விதழ்கள் தவறாது எழுதி உடலுடன் மனமும் சுற்றுப் புறமும் சீராக இருக்கப் பாடுபட்டு வந்தன.   மருத்துவ இதழ்களைவிடுத்துப் வார மற்றும் மாத இதழ்களும் கூடப் பொதுச் சுகாதாரத்தையும், உடல்நலத்தைப் பேணுவதையும் குறித்துக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.

இந்நோக்கத்தில்  «உறாமியோபதி மித்திரன் (1951), ஆரோக்கியம் (1955), தி வாய்ஸ் ஆப் «உறாமியோபதி (1956), «உறாமியோ பிரகடனம் (1958),  ஞானி வைத்திய செய்தி (1959), ஆர்கனான் (1961), உறானிமன் (1962), நந்தி (1962), ஆரோக்கிய மார்க்கம் (1962), மூலிகைமணி (1964). கிராம வைத்தியன் (1965), தமிழ் முனிவன் (1971), சுகவழி (1977), ஆரோக்கிய மலர் (1980), இருமலர் (1980), சித்தர் கருவூலம் (1981), «உறாமியோ அறிவியல் (1981), ஜீபிடரின் மருத்துவ மஞ்சரி (1982), கண்ஒளி (1983), பேதியின் சேதி (1984), கற்பக அவிழ்தம் (1986), உலகக்ஷேமம் (1989), வாழ்க நலமுடன் (1989), ஓம்சக்தி மருத்துவ மலர் (1990), உங்கள் உடல்நலம் (1991), உங்கள் நலம் நாடும் ªஉறல்த் (1992), ப்யூட்டி மற்றும் ªஉறல்த் (1992), மருத்துவ அறிவியல் மலர் (1992), தந்வந்திரி (1993), நவீன மருத்துவ மலர் (1993), ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் (1994), உங்கள் ஆரோக்கியம் (1995), நவபாஷாண மருத்துவம் (1995). தேனமுதம் (1995), ஜீவ மூலிகை (1996), உறலோ டாக்டர் (1996), ªஉறல்த் லைப் (1997), பேமிலி ªஉறல்த் (1997), புதிய மருத்துவ உலகம் (1997),  மூலிகை மலர் (1997), சித்தர் அறிவியல் (2000), மூலிகை குழந்தைகள் (2000), ªஉறல்த் டைம் (2000), மருத்துவ உலகம் (2000), தமிழ் வைத்தியம் (2001), உங்கள் ªஉறல்த் (2001), ªஉறல்த் பாய்ண்ட் (2002), குமுதம் ªஉறல்த் (2002), மெடிகேர் டைஜஸ்ட் (2002), பாடி பில்டிங் (2002) போன்ற இதழ்களைக் குறிப்பிடலாம்.  இவற்றில் சில இதழ்கள் சுவடிப்பதிப்புகளையும் வெளியிட்டுள்ளன.  இம்மருத்துவ இதழ்கள் மட்டுமல்லாமல் பல இலக்கிய இதழ்களிலும் சித்தமருத்துவச் சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.  குறிப்பாக உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை (1897), ஞானபோதினி (1897), விவேகபாநு (1900), செந்தமிழ் (1902), செந்தமிழ்ச் செல்வி (1923), கலாநிலையம் (1928), கலைமகள் (1932), சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ் (1939) போன்ற இலக்கிய இதழ்களிலும் மருத்துவச் சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.  இதழ்களில் வெளிவந்த மருத்துவச் சுவடிப்பதிப்புகள் அனைத்தையும் ஆயின் ஆய்வு விரியும் என்பதால் விவேகபாநு, செந்தமிழ், சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ், தமிழ் மருத்துவப்பொழில் ஆகிய நான்கு இதழ்களில் வெளிவந்திருக்கக் கூடிய மருத்துவச் சுவடிப்பதிப்புகளை மட்டும் இங்கு ஆய்வுப்பொருளாகக் கொண்டு ஆய்வு செய்யப்பெறுகிறது.

1. விவேகபாநு (1900)
விவேகபாநு எனும் திங்களிதழ் வள்ளிநாயக சுவாமி அவர்களை ஆசிரியராகக் கொண்டு திருநெல்வேலியிலிருந்து 1900ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வெளிவந்துள்ளது.  அறிவு, உலகப்பற்று, பண்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றை மக்களுக்கு ஊட்டும் முக்கிய நோக்கத்தோடு இவ்விதழ் தோற்றுவிக்கப்பெற்றுள்ளது.  என்றாலும் இதழின் இடையிடையே மருத்துவக் குறிப்புகள் சுவடிகளிலிருந்து சில இடம்பெற்றிருக்கின்றன.  காட்டாக, "கூவிளத் தைலம்: - வில்வவேர் பலம் 100. இதனை மேல்மண் போக்கிச் சிறுக நறுக்கி மட்பாண்டமொன்றிலிட்டு 8 வள்ளச் சுத்த சலம் வார்த்து அடுப்பேற்றிக் கமலாக்கினி(இருசுடர் கொண்டு எரியும் நெருப்பு)யா யெரித்து ஒரு வள்ளமாகக் குறுக்கி வடித்த கஷாயத்தில் வௌ¢ளேலம் பலம் 10, அதிமதுரம், தேவதாரம், சிற்றாமுட்டி வேர், பேராமுட்டிவேர், செம்முள்ளி சமூலம் வகைக்குப் பலம் 8.  இவற்றையிடித்து 8 படி சுத்த சலத்திலிட்டு ஒரு படியாய்க் குறுக்கிய கஷாயத்தையும் 2 படி நல்லெண்ணையையும் 2 படி பசும் பாலையும் விட்டு இக்கூட்டில் மிளகு, சீரகம், அதிமதுரம், நெல்லிவற்றல், பூஞ்சாந்துப் பட்டை, கிளியூரம் பட்டை வகைக்குப் பலம் 1/2 இவற்றைப் பசும் பாலாலரைத்துக் கரைத்து அடுப்பேற்றி முதலில் கமலாக்கினி யாகவும், பின்னர் தீபாக்கினி(ஒருசுடர் கொண்டு எரியும் நெருப்பு) யாகவும் எரித்து அடிக்கடி கிளறிக் கொடுத்து மெழுகு பதத்தில் வடித்து விநாயக பூசை செய்து 40 நாள் தானிய புடம் வைத்தெடுத்துக் கொண்டு வாரம் இருமுறை முழுகிவர வேண்டியது. தீரும் வியாதிகள்: பித்தம் 40, கபரோகம் 96, மேகம் 21, சுவாசரோகங்கள், மீளாத இருமல் ரோகங்கள் முதலிய அநேக பயங்கர ரோகங்களும், தேக முற்றும் வேரூன்றி நிலைத்த சொரி, படர்தாமரை, புண்கள், அறிவுகெடல், மறதி, வாய்வு, பிதற்றல் முதலிய எல்லா ரோகங்களும் குணமாகும்"(விவேகபாநு, 3:4:1904, ப.119) என்பதிலிருந்து இவ்விதழ் மருத்துவத்துக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவம் புலப்படும்.

2. செந்தமிழ் (1902)
கி.பி.1902ஆம் ஆண்டு மு. இராகவையங்கார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பெற்று இன்றுவரை வெளிவந்துகொண்டிருக்கும் ஓர் சிறந்த இலக்கிய இதழ் "செந்தமிழ்" ஆகும்.  இவ்விதழில் 109க்கும் மேற்பட்ட இலக்கிய இலக்கணச் சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன (பருவஇதழ்களில் சுவடிப்பதிப்புகள், பக்.40-41). இவற்றோடு ஆரியன் வாகட வெண்பா, உதரக் கிரியை ஆகிய இரண்டு மருத்துவச் சுவடிப்பதிப்புகளும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அ. ஆரியன் வாகட வெண்பா
மனிதனுக்கு ஏற்படக்கூடிய கொடிய நோய்கள் சிலவற்றுக்கு வெண்பா யாப்பில் மருத்துவம் கூறும் நூல் "ஆரியன் வாகட வெண்பா". இந்நூல் செந்தமிழ் இதழ்த் தொகுதி 28, பகுதி 3, 1929இல் வெளியாகியிருக்கின்றது.  இந்நூல் பதிப்பு குறித்து செந்தமிழ் இதழின் உதவிப்பத்திராதிபர் அவர்கள் "மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பாண்டியன் புத்தகசாலையில் உள்ள ஓலைச்சுவடிகளில் வைத்திய ஏடுகளை ஆராய்ந்ததில் ஆரியன் வாகட வெண்பா என்னும் சிறிய மருத்துவ நூலின் ஏட்டுப்பிரதியொன்று காணப்பட்டது.  அது 141 வெண்பாக்களில் பல கொடிய பிணிவகைகளுக்கு எளிய சிகிச்சை முறைகளைத் தொகுத்துக் கூறுவது.  அதனை இயற்றினார் பெயர் முதலிய விவரமொன்றும் தெரியவில்லை.  அதிலுள்ள பாடல்கள் பல பிழைபட்டும் சிதைந்தும் உள்ளன.  ஒரு பிரதியே யிருத்தலால் அவற்றைத் திருத்திச் செப்பஞ் செய்து புத்தகமாக வெளியிட இயலவில்லை.  ஆயினும் கூடியவரை திருத்தமாயிருந்த பாடல்கள் இங்கே மாதிரியாகக் காட்டப்பட்டுள்ளன.  அந்நூலிற் கூறும் சிகிச்சை முறை எல்லாரும் எளிதிற்செய்து பயனடையத் தக்கதாயிருத்தலால் அந்நூற்பிரதியுடையார் கொடுத்துதவுவார்களாயின், பரிசோதித்துத் திருத்தித் தனிப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட உதவியாயிருக்கும்" (செந்தமிழ், 28:3:1929, ப.121) என்று கூறுவதைப் பார்க்கும் போது இம்மருத்துவச் சுவடிப்பதிப்பானது சுவடியிலிருந்து வெளியானது என்பதும் இதற்கு முன் இந்நூல் அச்சாகவில்லை என்பதும் தெரிகின்றது.  இக்குறை நூல் இப்பதிப்பிற்குப் பிறகும் அச்சானதாகத் தெரியவில்லை.  இந்நூலில் கல்லடைப்பு நீரடைப்புக்கு மருந்து செய்முறையைப் பின்வரும் பாடல்கள் சுட்டுவதைக் காணலாம்.
"ஈருள்ளிச் சாறுழக்கோ டேற்றகா ரங்கழஞ்சு
சார்குக் குடத்தினெச்சந் தான்கழஞ்சு - வார்முலையாய்
ஒன்றா யளாவி யுடனருந்தக் கல்லடைப்புச்
சென்றோடு நீரடைப்புந் தீர்ந்து.
விட்ட நெருஞ்சியின்வேர் வெண்சுரையின் தண்டுசுக்குக்
கிட்டு கடுத்தான்றி கீழ்க்காய்வேர் - இட்டசிறு
பூளையின்வே ரோடு புகலுஞ் சிறுகீரை
வாளைவென்ற கண்ணாய்நீர் வார்த்து.
வார்த்தநீ ரெட்டொன்றாய் வற்றியபின் றானிருத்தே
யேற்றவெண்ணெய் மேற்போட் டிதையருந்தப் - பார்த்துத்
திகைத்தோடு நீரகடப்புச் சேர்கல் லடைப்பும்
பகைத்தோடுஞ் சொன்னேன் பரிந்து." (செந்தமிழ்,28:3:1929,ப.123)

ஆ. உதரக் கிரியை
வயிற்றில் உண்டாகும் 70க்கும் மேலான நோய்களுக்கான குறிகுணங்களைப் பற்றியும் அவற்றின் விவரங்களைப் பற்றியும் உதரக் கிரியை என்னும் நூல் விளக்குகின்றது.  இந்நூல் செந்தமிழ் இதழ்த் தொகுதி 28, பகுதி 4, 1929இல் வெளியாகியிருக்கின்றது. இந்நூல் பதிப்பு குறித்து  செந்தமிழ் இதழின் உதவிப் பத்திராதிபர் அவர்கள் "உதரக்கிரியை யென்பது வயிற்றிலுண்டாகும் நோய்களின் விவரமும் அவற்றை அறிதற்கான குணங்குறிகளும் அவற்றுக்குச் செய்யும் சிகிச்சைகளும் விளங்க எளிய விருத்தச் செய்யுள்களால் அகத்தியர் வைத்தியத்தின் வழி நூலாக இயற்றப்பட்டதென்று தெரிகின்றது.  இதனை இயற்றியவர் பெயர் முதலிய விவரம் ஒன்றும் தெரியவில்லை. இந்நூலின் ஏட்டுச்சுவடியொன்று மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் பாண்டியன் புத்தகசாலையிலுள்ளது.  அது வயிற்றிலுண்டாகும் நோய்களிற் சற்றேறக்குறைய 70க்கு ஏதுவம் குணம் குறிகளும் மட்டும் கூறும் குறைப்பிரதியாயிருக்கிறது. ஆயினும் நாளடைவில் சிதல் முதலியவற்றால் அழிந்தொழி யாது பாதுகாக்கக்கருதி ஏட்டிலிருந்தபடியே அது இங்கே வெளியிடப்பட்டுள்ளது. முழுதும் உள்ள பிரதிகளுடையார் கொடுத்துதவுவார்களாயின் பரிசோதித்துப் புத்தகமாக வெளியிடலாம்" (செந்தமிழ்,28:4:1929,ப.149) என்று கூறுகின்றார். இவ்விதழ்ப் பதிப்பிற்குப் பிறகு இந்நூல் தனிநூலாக வெளிவந்த விவரம் ஒன்றும் தெரியவில்லை. எனினும் இந்நூல் அமைப்பினை அறிய பின்வரும் பாடல் ஏதுவாக அமையலாம்.
"உதரத்தில் வாத பித்த சிலேற்பன மூன்றி னாலுங்
கதியுறு தொந்தத் தாலுங் கருதுநோ யொருநூற் றெட்டு
மதியுறு கிரியை தானு மருந்துசாத் தியம சாத்தியம்
விதியுறு நோவு சேரு மேதுவம் விளம்பக் கேளே."                                        
                                                                             (செந்தமிழ்,28:4:1929,ப.150)

3. சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ்
தஞ்சை மகாராஜா சரபோஜியின் சரஸ்வதிமகால் நூலகத்தின் நாத்திங்களிதழாக "சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ்" 1939ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று இன்றுவரை வெளிவந்துகொண்டிருக்கின்றது.  இவ் இதழில் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் கட்டுரைகளும் பல்வேறு வகையான பதிப்பு நூல்களும் மொழிபெயர்ப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  இவ்விதழில் மருத்துவப் பதிப்பாக தன்வந்தரி வைத்தியம், தேரர் அருளிச்செய்த சிறுநீர்க்குறி சோதனை, ஆயுர்வேத உபதேசங்கள், குழந்தை பராமரிப்பு, கர்ப்பிணி ரஷை, பத்தியமும் அபத்தியமும் போன்ற சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

அ. தன்வந்தரி வைத்தியம்
பல்வேறு வகையான நோய்களின் குறி குணங்களையும் அவற்றின் வகைகளையும் "தன்வந்தரி வைத்தியம்" என்னும் நூல் சிறப்பாக எடுத்து விளக்குகின்றது.  பொதுவான நோய்களின் குறி குணங்கள் சித்த மருத்துவ நூல்களில் ஆங்காங்கு கூறிச்செல்ல இந்நூல் பெரும்பான்மையான நோய்களின் குறி குணங்களை எடுத்துக் கூறுவதாக  அமைந்திருக்கின்றது.  மேலும் இவற்றுள் சுர ரோக சிகிச்சை முறைகள், வாத ரோகம், பித்த ரோகம், கபரோகம், நேத்ர ரோக சிகிச்சை முறைகள் போன்றனவும் இடம்பெற்றிருக்கின்றன.  இம்மருத்துவ நூலினை டாக்டர் எஸ். வெங்கட்டராஜன் அவர்கள் சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ்த் தொகுதி 12 முதல் தொகுதி 31வரை மூன்று பாகங்களாத் தொடர்ப் பக்கவெண் கொடுத்து வெளியிட்டிருக்கின்றார்.  இவ்விதழ்ப் பகுதிகள் 1962, 1966, 1980ஆம் ஆண்டுகளில் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களாக வெளிவந்திருக்கின்றன.

ஆ. தேரர் அருளிச்செய்த சிறுநீர்க்குறி சோதனை
அகத்தியர் நூல்களில் காணப்படும் சிறுநீர்க்குறி சோதனைகளையும், சித்தசாரனவம், சித்திய வித்தியாதரம், நித்திய நாதீயம், மாதவ கற்பம் போன்ற நூல்களிலுள்ள சிறுநீர்க்குறி சோதனைகளையும் ஆராய்ந்து தேரர் என்பார் "சிறுநீர்க்குறி சோதனை" என்ற நூலை யாத்துள்ளார்.  இந்நூல் சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ்த் தொகுதி 21, பகுதி 1, 1967இல் ஆ.சண்முகவேலன் அவர்களால் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இவ்விதழ்ப் பதிப்பு, பின்னர் இந்நூலக வெளியீடாக 1967ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இந்நூலில், "சிறுநீர் இலக்கணம்:- சிறுநீர் தெளிந்திருந்தால் வாதநோய் காரணமாகும்.  மஞ்சள் நிறத்திலிருந்தால் பித்த நோய் காரணமாகும்.  வெண்மையாய் நுரைத்திருந்தால் கபநோய் காரணமாகும்.  கலந்திருந்தால் தொந்த நோய் காரணமாகும்" (சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ், 21:1:1967,ப.10) என்பன போன்ற பல செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.

இ. ஆயுர்வேத உபதேசங்கள்
மனிதன் நோயற்று நீண்டநாள் வாழ்வதற்கான வழிமுறைகளை சரக ஸம்உறிதை, ஸுஸ்ருத ஸம்உறிதை, பேல ஸம்உறிதா, காச்யப ஸம்உறிதா, அஷ்டாங்க ஸங்கிரஉறம், அஷ்டாங்க உறிருதயம், சார்ங்கதர ஸம்உறிதா, பாவப் பிரகாசம், மானஸோல்லாஸம், சிகித்ஸா திலகம், க்ஷேம குதூஉறலம், போஜன குதூஉறலம் முதலிய சமஸ்கிருத நூல்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.  இச்செய்திகளை எல்லாம் சி. ராஜராஜேச்வர சர்மா அவர்கள் திரட்டித் தமிழில் மொழிபெயர்த்து "ஆயுர்வேத உபதேசங்கள்" என்னும் பெயரில் சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ்த் தொகுதி 21 முதல் 23 வரையிலான பகுதிகளில்(1967-1969) வெளியிட்டிருக்கின்றார். பின்னர் இவ்விதழ்ப் பகுதிகள் 1969ஆம் ஆண்டு இந்நூலக வெளியீடாக வெளிவந்திருக்கின்றது.  இந்நூலில், "மூங்கிற் விசிறியின் காற்று வெப்பத்தை உண்டாக்கும்.  ரத்த சம்பந்தமான நோய்களையும் பித்தத்தையும் கிளப்பிவிடும்"(சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ், 22:1-3:1969,ப.11) என்பன போன்ற பல செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.

ஈ. குழந்தை பராமரிப்பு
பெற்றோர்கள் குழந்தைகளை நன்றாகப் பேணிக்காக்கும் முறைகளைத் தெரிந்து வைத்திருப்பது இன்றியமையாததாகும்.  குழந்தைகளைப் பேணிக்காக்கப் பின்பற்றப்படவேண்டிய முறைகளை சரக ஸம்உறிதை, ஸூஸ்ருத ஸம்உறிதை போன்ற சமஸ்கிருத நூல்களில் கூறப்பெற்றிருக்கும் செய்திகளைத் திரு.சி. ராஜராஜேச்வர சர்மா அவர்கள் திரட்டித் தமிழில் மொழிபெயர்த்து சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ்த் தொகுதி 24, பகுதி 3, 1971இல் "குழந்தை பராமரிப்பு" என்னும் தலைப்பில் வெளியிட்டிருக்கின்றார்.  பிரசவித்த குழந்தை பால் உண்ணாத காலத்து பராமரிக்க வேண்டிய வழிமுறைகளை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அதாவது, "பிரசவித்த அறையில் குழந்தை முலையுண்ணாவிடில் கடுக்காய், நெல்லிமுள்ளி, திப்பிலி இவற்றின் தூளுடன் நெய்யும் தேனும் கலந்து நாவில் தடவவேண்டும்"(சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ், 24:3:1971,ப.20) என்பதிலிருந்து இந்நூலின் அமைப்பை உணரலாம்.  இவ்விதழ்ப் பகுதி இந்நூலக வெளியீடாக 1971ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

உ. கர்ப்பிணி ரஷை
கருவுற்ற பெண்ணைச் சிறந்த முறையில் பேணிக்காக்கப்படுதல் அவசியம்.  இதனைச் சரக ஸம்உறிதா, ஸூஸ்ருத ஸம்உறிதா போன்ற சமஸ்கிருத நூல்கள் ஆங்காங்குத் தெளிவாக விளக்கியிருக்கின்றன.  இத்தகவல்களையெல்லாம் திரு.சி. ராஜராஜேச்வர சர்மா அவர்கள் திரட்டித் தமிழில் மொழிபெயர்த்து "கர்ப்பிணி ரஷை" என்னும் பெயரில் சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ்த் தொகுதி 23, பகுதி 2-3, 1970இல் வெளியிட்டிருக்கின்றார்.  இவ்விதழ்ப் பகுதி இந்நூலக வெளியீடாக 1970ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இந்நூலில் "கருத்தரித்தவள் முதல்தினம் தொடங்கி எப்பொழுதும் மகிழ்வுடனும், சுத்தமாகவும், அலங்கரித்துக் கொண்டும் வெண்ணிறமுள்ள ஆடைகளை அணிந்தும், சாந்திகள், மங்களச் செயல்கள், கடவுள் பக்தி இவற்றில் ஈடுபட்டவளாகவும் இருக்கவேண்டும்" (சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ்,23:2-3:1970,ப.1) என்பன போன்ற பல செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.

ஊ. பத்தியமும் அபத்தியமும்
இதமான உணவே மனிதன் நூறு வருடங்கள் வாழ்வதற்கு ஏற்றது.  ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்றவாறு எவ்வகையான உணவைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும், அவ்வுணவுப் பொருட்களுக்கான குணங்கள் என்னென்ன என்பதைப் பற்றியெல்லாம் இந்நூல் விளக்குகின்றது.  சரக ஸம்உறிதா, ஸூச்ருத ஸம்உறிதா, பாவப் பிரகாசம், சாலிக்கிராம நிகண்டு போன்ற நூல்களில் கூறப்பெற்றிருக்கும் உணவுப் பொருட்களின் குணங்களை மட்டும் தேர்ந்தெடுத்து விரிவான தமிழ் மொழிபெயர்ப்புடன் திரு.சி. ராஜராஜேச்வர சர்மா அவர்கள் "பத்தியமும் அபத்தியமும்" என்னும் பெயரில் சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ்த் தொகுதி 27, பகுதி 1-3, 1975இல் வெளியிட்டிருக்கின்றார். இவ்விதழ்ப் பகுதிகள் 1975ஆம் ஆண்டு இந்நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூல் தண்ணீர் பருகுவதில் உள்ள நியமங்கள் என்ன என்பது பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றது.  அதாவது, "ஓரிடத்தில் தண்ணீர் சீரணமாகாமலிக்கும் போது மற்றொரு இடத்து தண்ணீரைக் குடிக்கக்கூடாது.  கிணற்று நீரைக் குடித்து அது சீரணமாவதற்கு முன்பே ஆறு, குளம் முதலியவைகளின் நீரைப் பருகக் கூடாது.  குளிர்ந்த நீர் சீரணமாகாமலிருக்கும் போது கொதித்த நீரையும் குடிக்கக் கூடாது.  கொதித்த நீரைக் குடித்து அது சீரணமாகிய பின்பும் அடுத்த வேளையில் சாப்பிடுவதற்கு முன்பே குளிர்ந்த நீரைப் பருகக் கூடாது. தண்ணீரை மாற்றி மாற்றிக் குடிப்பதால் ஜலதோஷம், தொண்டைக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல், தலைவலி முதலிய நோய்கள் உண்டாக இடமுண்டு"(சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ், 27:1-3:1975,ப.8) என்பன போன்ற பல செய்திகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

4. தமிழ் மருத்துவப் பொழில்
தமிழ் மருத்துவப் பொழில் என்னும் மருத்துவ மாத இதழ் மாங்காடு பண்டிதர் எம். வடிவேலு முதலியார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1941ஆம் ஆண்டு சனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பெற்றுள்ளது.  இவ்விதழ் கவர்ன்மெண்ட் இந்திய மருத்துவப் பாடசாலையின் சித்த மாணவர் கழகத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கின்றது.  இவ்விதழில் பொதுச் சுகாதாரவியல் தொடர்பான கட்டுரைகள், நோய்த்தடுப்பு முறைகள் தொடர்பான கட்டுரைகள், சித்த மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் மற்றும் சித்த மருத்துவச் சுவடிப்பதிப்புகள் என வெளிவந்திருக்கின்றன.  இவற்றில் வைத்திய சதகநாடி, பிரமமுனி கருக்கடைச் சூத்திரம், தேரர் பொருட்பண்பு வெண்பா, அகத்தியர் அருளிச்செய்த வைத்திய ரத்தினச் சுருக்கம் 360, கவுசிகர் குழம்பு போன்ற மருத்துவச் சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

அ. வைத்திய சதகநாடி
மனிதன் உயிர்வாழ உடம்பில் நாடி சீராகத் தன் போக்கில் ஓடவேண்டும்.  நாடி தடுமாறில் உடல் நோய் காணும் என்பது உண்மை.  நாடியின் அமைப்பு அவற்றின் தன்மை அவற்றால் அறியத்தகும் நோயின் அறிகுறிகள் போன்றவற்றை இந்நூல் எடுத்தியம்புகின்றது.  இந்நூல் தமிழ் மருத்துவப்பொழில் இதழ்த் தொகுதி 1, பகுதி 12, 1941இல் வெளிவந்திருக்கின்றது.  இந்நூல் ஏற்கெனவே பல பதிப்புகளைப் பெற்றுள்ளது என்றாலும் திருத்தப் பதிப்பாக இவ்விதழ்ப் பதிப்பு வெளிவந்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது. நாடியின் பத்துக்கால் குறித்து இந்நூல் பின்வரும் பாடல் மூலம் விளக்குவதைக் காணலாம்.
"பத்தான வாயுத்தான் பிராணனொ டபாணன் 
பதிவான வியானனுதா னன்ச மானன்
சித்தான கூர்மனுட னாகன்கிரி கரனும் 
தேவதத்த னுடன்தனஞ் சயன்பத் தாகும்
வித்தான பாணன்மூ லத்தைச் சேர்ந்து 
மேனோக்கிச் சிரசில்முட்டி விழியின் கீழாய்ச்
செத்தாக நாசிவழி யோடுமீ ராறில் 
திரும்பியெட் டுள்புகுந்து நால்வீண் போமே" (பா.11)

ஆ. பிரமமுனி கருக்கடைச் சூத்திரம்
மனிதனுக்கு ஏற்படக் கூடிய பல்வேறு வகையான நோய்களுக்கு மருந்துகளையும் அம்மருந்துகளைச் செய்யும் முறைகளையும் பிரமமுனி கருக்கடைச் சூத்திரம் என்னும் நூல் விளக்குகின்றது. எண்சீர் விருத்தத்தால் மூலம் மட்டும் கொண்ட இந்நூல் தமிழ் மருத்துவப் பொழில் இதழ்த் தொகுதி 1, பகுதி 8, 1941இல் வெளிவந்திருக்கின்றது. ஏழுவகைப் பீனிசத்துக்கு முடிதயிலம் செய்முறையை,
     "பாரப்பா ஏழுவகைப் பீனிசமும் போகப் 
பாடுகிறேன் வெகுசுருக்கோர் நெய்யைக் கேளாய்
    காரப்பா எண்ணெய்படி தானி ரண்டு 
கரிசாலை அவிரிகஞ்சா பொன்னாங் காணி
    ஊரப்பா வெற்றிலைநீர் முசுமு சுக்கை 
உள்ளுலர்த்தி மூக்கிரட்டை அத்திப் பட்டை
    ஆரப்பா வகைவகைக்கே ஒருபடிதான் சாறு 
ஆதண்டைச் சாறுபடி யிரண்டு வாரே"(பா.117)
எனும் பாடல் விளக்குவதைக் காணலாம். இதுபோல் இந்நூலில் பல்வேறு வகையான நோய்களுக்கான மருந்துகளும் மருந்து செய்முறைகளும் கூறப்பெற்றிருக்கின்றன.

இ. தேரர் பொருட்பண்பு வெண்பா
உலகில் உள்ள பொருட்களின் பண்புகளையும் அப்பொருட்கள் மருத்துவத்திற்குப் பயன்படும் விதம் குறித்தும் இந்நூல் தெளிவாக விளக்கிச் செல்கின்றது. குறிப்பாக தேள், கமடம், பன்றிநெய், கோலக்கட்டு, நாகப்பெருமை, மருந்துப்பு, கச்சோதம் போன்றவற்றிற்குப் பண்புகள் கூறப்பெற்றிருக்கின்றன. இந்நூல் தமிழ் மருத்துவப் பொழில் இதழ்த் தொகுதி 1, பகுதி 2, 1941இல் வெளிவந்திருக்கின்றது. தனிப்பக்க எண்ணுடன் இவ்விதழ்ப் பதிப்பு அமைந்திருப்பதைப் பார்க்கும் போது இந்நூல் 1941ஆம் தனிநூலாக வெளிவந்திருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது.  காட்டாக, வெண்ணிறப் பசும்பாலின் பொருட்பண்பைப் பின்வரும் பாடல் சுட்டுவதைக் காணலாம்.
"பித்தமெனு மந்திரியைப் பேசாம லோட்டுமகா
ரத்தமுதற் காசத்தை நாட்டாது - நித்தியங்
கவளத்தைச் செல்லுவத்துக் காயத்தைக் காக்குந்
தவளப் பசுவின்சு தை." (பா.17)

ஈ. அகத்தியர் அருளிச்செய்த வைத்தியரத்தினச் சுருக்கம் 360
இந்நூல் எண்சீர் விருத்தம் 365 கொண்டது.  இந்நூல் பல்வேறு வகையான நோய்களுக்கு மரூந்துகளையும் மருந்து செய்முறைகளையும் தெளிவாக விளக்குகின்றது.  இந்நூல் தமிழ் மருத்துவப்பொழில் இதழ்த் தொகுதி 1, பகுதி 2, 1941இல் பதிப்பாகியிருக்கின்றது. இந்நூல் ஏற்கெனவே பல பதிப்புகள் வெளிவந்திருந்தாலும் இந்நூலைத் திருத்தியவர் பதிப்பித்தவர் ஆகியோரின் பெயரைக்கொண்டு சிறப்படைந்திருக்கின்றது. இந்நூலின் முகப்பட்டையில், 
அகத்திய முனிவர் அருளிச்செய்த
வைத்திய ரத்தினச் சுருக்கம்
(முந்நூற்றறுபது)
திருத்தியவர்:
அகத்தியர் பின் எண்பது, வீரமாமுனிவர் நசகாண்டம்,
குறுந்திரட்டு, புலிப்பாணி 500 என்னும் இவற்றின்
உரையாளரும்
வானமெழுகின் ஆராய்ச்சியுரை யாளரும்
வடமொழி ஸத்வயித்திய ஜீவனம் என்னும் நூலைத்
தமிழில் மொழிபெயர்த்தவரும்
கவர்ன்மெண்ட் இண்டியன் மெடிகல் ஸ்கூல்
டெக்ஸ்ட்புக் கமிட்டித் தலைவரும்
தமிழ்ப் பண்டிதரும், தமிழ் மருத்துவ பண்டிதருமாகிய
மாங்காடு-வடிவேலு முதலியார்.
பதிப்பித்தவர்:
காரியக் கமிட்டியார்: சித்த மாணவர் கழகம்,
கவர்ன்மெண்ட் இந்திய மருத்துவ பாடசாலை
கீழ்ப்பாக்கம், மதராஸ்.
என அமைந்திருப்பதைப் பார்க்கும் போது இந்நூலின் சிறப்பு புலப்படும்.

உ. கவுசிகர் குழம்பு
ஒரே மருந்து பல்வேறு நோய்களுக்கும் பயன்படுத்துவது சித்த மருத்துவத்தில் உண்டு. இவ்வகையில் அமைவது "கவுசிகர் குழம்பு" என்னும் மருந்து.  இக்குழம்பு 215 அகவல் வரிகளாலானது. இதில் இம்மருந்து செய்முறை பற்றியும் அதற்கான துணை மருந்துகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறுகின்றது. இந்நூல் தமிழ் மருத்துவப்பொழில் இதழ்த் தொகுதி 4, பகுதி 8, 1945இல் வெளிவந்துள்ளது. இந்நூற்பெயர் குறித்து இந்நூற் பதிப்பாசிரியர் "இவ்வகவல் கவுசிகர் குழம்பென்றும் கவுசிகர்மையென்றும்  சொல்லப்படுகிறது.  இஃதன்றி இக்குழம்பின் கடைசி அடியாகிய 215ஆம் அடியில் "வரமிகு கௌசிக மாமுனி தானே" என்று சொல்லப்பட்டிருக்கிறது.  இவ்விரண்டையும் நோக்கி இம்மெழுகு கவுசிகமுனிவர் செய்ததென்று சொல்லுகிறார்கள்.  ஆனால் இம்மெழுகு தவிர வேறோர் மெழுகாவது வேறோர் நூலாவது இம்முனிவர் செய்ததாகக் காணப்படவில்லை.  இவர் மருந்து மரபினருமாகார், மருத்துவருமாகார். ஆகையால் இம்மெழுகு கௌசிக முனிவரால் செய்யப்பட்டதென்னும் வழக்கு ஒப்பக்கூடியதாகாது. அன்றி, இக்குழம்பைப் புதுச்சேரி முதலிய சில ஊர்களிலுள்ள மருத்துவத் தொழிலினர் "சவுரியார் குழம்பு" என்கிற பெயரால் கையாளுகின்றனர்.  இவ்வாறிருத்தலால் இந்தப் பேர்களை ஒருவாறு ஒழித்து "கௌசிக பலம்" என்னும் பேர் தேங்காய்க்கு வழங்கப்படுதலின், அத்தேங்காய் ஓட்டுக்கரி இதில் சேர்க்கப்படுதலின் "கௌசிக பலகுழம்பு" என்று இதற்குப் பெயர் இருத்தல் வேண்டும்.  பிறகு பலம் என்பது விடப்பட்டு "கௌசிக மெழுகு", "கௌசிக குழம்"பென்று வழங்கிவிட்டதாகக் கொள்ளவேண்டியிருக்கிறது"(தமிழ் மருத்துவப் பொழில், 4:8:1945,ப.7) என்கின்றார்.  இவரின் கூற்று ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

முடிவுரை
இதுபோல் மருத்துவ இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் மருத்துவச் சுவடிப்பதிப்புகள் பல இடம்பெற்றிருக்கின்றன.  இவற்றையெல்லாம் தொகுத்தால் மருத்துவச் சுவடிப்பதிப்பின் வரலாறு விரிவதோடு மறைந்திருக்கும்  பல மருத்துவச் சுவடிப்பதிப்புகளை வெளிக்கொணரலாம்.  இக்கட்டுரை இப்பெரும் பணிக்கு ஓர் வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ஆய்வுக்குப் பயன்பட்டவை
1.  சரஸ்வதிமகால் நூலகப் பருவஇதழ், தொகுதிகள்  12 முதல் 31 வரை
2.  செந்தமிழ் - தொகுதி 28, 1929
3.  தமிழ் மருத்துவப்பொழில் - தொகுதிகள் 1 & 4, 1941 & 1945
4.  தமிழில் அறிவியல் இதழ்கள், இரா. பாவேந்தன், சாமுவேல் ஃபிஷ்கிறீன் 
   பதிப்பகம், கோவை, 1998
5. தமிழில் மருத்துவ இதழ்கள், முனைவர் சு. நரேந்திரன், உலகத்தமிழாராய்ச்சி
   நிறுவனம், சென்னை, 2003 
6.  பருவஇதழ்களில் சுவடிப்பதிப்புகள், மோ.கோ. கோவைமணி, முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2003
7.  விவேகபாநு - தொகுதி 3, 1904.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக