செவ்வாய், 15 மே, 2018

அச்சுக்குப்பின் எழுந்த சுவடிகள்


அச்சுக்குப்பின் எழுந்த சுவடிகள்
முனைவர் மோ.கோ. கோவைமணி
இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்-613 010.
       பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்துதான் தமிழ் நூல்கள் முபமையாகவும் தொகுதி தொகுதியாகவும் பதிப்பிக்கப்பெற்றுள்ளன.  சுவடியில் இருந்து பதிப்பிக்கப்பெற்ற நூல்களை அக்காலத்தில் அப்படியே படியெடுத்துப் பதிப்பித்து வந்துள்ளனர்.  பொதுவாக நூலை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் என்னும் எண்ணத்திலேயே சுவடிகளை அச்சிலேற்றி வந்துள்ளனர்.  சிலர் இவ்வாறு அச்சேற்றி வந்தபோதும் பிறிதொரு சாரார் அச்சிட்ட நூல்களைப் பார்த்து மீண்டும் சுவடியில் எழுதிப் படித்தும் வந்துள்ளனர் என்பது ஓர் அரிய செய்தியாகும்.  இதன் காரணத்தைச் சற்று சிந்திக்கவேண்டிய நிலையில் நாம் இன்று இருக்கின்றோம்.
       பதினெட்டாம் நூற்றாண்டில் 1712ஆம்ஆண்டில் முதன் முதலில் தமிழகத்தில் அச்சகம் தொடங்கப்பட்டது.  இத்தொடக்க காலத்தில் கிருத்துவப் பாதிரிமார்கள் தங்கள் சமயச் செய்திகளைத் தமிழில் அச்சிட்டு மதத்தைப் பரப்பிவந்துள்ளனர்.  19ஆம் நூற்றாண்டில் 1812இல் தான் தமிழில் நூல்கள் அச்சேறின.  இத்தொடக்க நிலையில் பழமை விரும்பிகள் இதை விரும்பாததாலும், அச்சு நூலைப் படிப்பதைவிட ஓலைச்சுவடியில் படிப்பது எளிமையாக இருந்ததாலும், அச்சு நூல் பற்றாக்ககுறையினாலும், அச்சு நூலைவிடப் பனையோலைச் சுவடிகளை நீண்ட நாள் பாதுகாக்க முடியும் என்பதாலும் சிலர் தமக்குக் கிடைத்த அச்சுப் புத்தகத்தைப் பார்த்துப் பனையோலைகளில் எழுதி வைத்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
       இச்செய்தி ஏட்டுச்சுவடிகளில் உள்ள முற்குறிப்பு மற்றும் பிற்குறிப்புகளால் அறியமுடிகிறது.  இச்செய்திகளையெல்லாம் தொகுத்து அச்சுக்குப் பின்னும் சுவடிகளாக எழுந்த நூல்கள் எவையெவை என்பதைக் காண்போம்.  இத்தகைய சுவடிகள் தோன்றிய காரணம் சிறப்பாகச் சுட்டப்படுகிறது.  மேலும், சூடாமணி நிகண்டு, கைவல்ய நவநீதம், முக்கூடற்பள்ளு ஆகிய மூன்று நூல்கள் அச்சுக்குப் பிறகும் சுவடிகளாக எழுந்த செய்தியையும், சுவடிப்பதிப்பு மற்றும் பதிப்பு வரலாற்றுச் சான்றுகளையும் அடிப்படையாகக் கொண்டு இங்கு ஆராயப்பெற்றுள்ளது.
       இக்குறிப்புகளைத் திரட்டுவதற்குச் சென்னைக் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகம், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூலகம், தஞ்சை சரஸ்வதிமகால் நூலம், தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிகள் நூலகம், கேரளப் பல்கலைக்கழகச் சுவடிகள் நூலகம், கல்கத்தா தேசிய நூலகம் ஆகிய நிறுவனங்களின் சுவடி அட்டவணைகள் உறுதுணையாக நிற்கின்றன.  தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிகள் மட்டும் சுவடி விளக்க அட்டவணைகளோடு நேராக ஒப்புநோக்கப்பெற்று இக்குறிப்புகளைத் தெளிவாக்கப்பெற்றுள்ளது.
ஆய்விற்கு எடுத்துக்கொண்ட சுவடிகள்
அ.    கைவல்ய நவநீதம்
       இந்நூல், நாராயண தேசிகரின் மாணாக்கராகிய ஸ்ரீமத் தாண்டவராய சுவாமிகளால் இயற்றப்பட்ட ஒரு செய்யுள் நூலாகும்.  இந்நூல் வேதாந்தத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.  இது, இதுவரை சுவடிப்பதிப்பாகவும் பிற பதிப்புகளாகவும் சற்றேறக்குறைய முப்பது பதிப்புகள் வெளிவந்துள்ளன.  தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடியின் குறிப்பில், "இஃது (கைவல்ய நவநீதம்) கௌத்தூர் வயித்தியலிங்கம் பிள்ளையவர்கள் கேட்டுக் கொண்டபடி பொய்கைப்பாக்கம் வீராசாமி முதலியாரவர்கள் இளைய சகோதரராகிய அப்பாசாமி முதலியாரால் தமது வித்துவரக்ஷாமிர்த அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.  குரோதி வருஷம் பங்குனி மாதம்.  இதன் விலை ரூ.5 3/4.   மேற்படி அச்சுப் பொஸ்தகத்தைப் பார்த்துக் கோரிப்பாளையம் பாக்கிய முதலியாருக்காக மதுரை ராமாயணச் சாவடிக் கணக்குத் தவசிக்கோன் மகன் தேவேந்திரன் எழுதினது" (சுவடி எண்.1431).
இக்குறிப்பின்படி இந்நூல் 1844ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.  ஆனால் இப்பதிப்பு இதுவரை கிடைக்கவில்லை.  இதுபோன்ற பல செய்திகள் சுவடிகளில் எழுதப்படாமையாலும், எழுதிய ஏடுகள் அழிந்துபோனதாலும் இப்பதிப்புச் செய்திகள் அறியமுடியாத நிலை ஏற்படுகிறது.  இதனால் சுவடிப் பதிப்பின் வரலாற்றை முழுமையாக அமைக்க இயலாத நிலை ஏற்படுகிறதென்பதும் தெளிவு.  இந்நூலின் பதிப்பு வரலாற்றைப் பின்வருமாறு காண்போம்.
       கி.பி.1843ஆம் ஆண்டு 'கைவல்ய நவநீதம்' கோவிலூர் மடம் ஸ்ரீஅருணாசல ஞானதேசிக சுவாமிகள் இயற்றிய 'பதசாரம்' என்னும் உரையுடன் மூலமும் உரையுமாகப் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.
       கி.பி.1844ஆம் ஆண்டு பொய்கைப்பாக்கம் வீராசாமி முதலியாரவர்கள் இளைய சகோதரராகிய அப்பாசாமி முதலியாரவர்கள் தம்முடைய வித்துவரக்ஷாமிர்த அச்சுக்கூடத்தில் வெளியிட்டுள்ளார்.  இது, சுவடியில் இருந்து எடுக்கப்பட்ட செய்தியாகும்.  இந்நூலின் விலை ஐந்தேமுக்கால் ரூபாயாகும்.
       கி.பி.1861ஆம் ஆண்டு ஒரு பதிப்பு வெளியாகியுள்ளது.  இது பற்றிய செய்தியை ஜான்மர்டாக் நூல்விவரப்பட்டி குறிப்பிடுகின்றது.
       கி.பி.1864ஆம் ஆண்டு பிறையாறு அருணாசல சுவாமியவர்களால் உரை எழுதப்பட்டுத் திரிசிரபுரம் முனியப்ப முதலியார் அவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.  இதே ஆண்டு இராமானுஜ முதலியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் ஒரு பதிப்பு வெளிவந்துள்ளது.  1868, 1880ஆம் ஆண்டுகளில் இராமானுஜ முதலியார் அவர்களின் மறுபதிப்புகள் வெளிவந்துள்ளன.
       கி.பி.1876ஆம் ஆண்டு பிறையாறு அருணாசல சுவாமிகள் இயற்றிய உரையுடன் திருவெண்காடு ஆறுமுக சுவாமிகளால் பார்வையிடப்பட்டுத் திருவொற்றியூர் இருசப்ப முதலியார் குமாரன் பரசுராம முதலியார் அவர்களின் பரப்பிரம முத்திராக்ஷர சாலையில் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது.
       கி.பி.1880ஆம் ண்டு 1864ஆம் ஆண்டு வெளியான முனியப்ப முதலியாரின் அச்சுப் பதிப்பிற்கு மறுபதிப்பு வெளிவந்துள்ளது.  இவருடன் டி.ஆறுமுக முதலியும் சேர்ந்து இரண்டாம் பதிப்பை வெளிக்கொணர்ந்துள்ளார்.
       கி.பி.1889ஆம் ஆண்டு திருத்துருத்தி இந்திரபீடங் கரபாத்திர சுவாமிகளாதீனத்திற்குரிய ஈசூர் சச்சிதானந்த சுவாமியவர்களால் செய்யப்பட்ட விரித்தியுரையுடன் சென்னை அத்துவித சபையாரால் சை. இரத்தினநாயக்கர் செட்டியாரது ரிப்பன் அச்சுக்கூடத்தின் வாயிலாக இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது.  இந்நூலின் முதற்பதிப்பு விவரம் அறியக்கூடவில்லை.
       கி.பி.1895ஆம் ஆண்டு பிறையாறு அருணாசல சுவாமிகள் தம் உரையுடன் தாமே பதிப்பித்துள்ளார்.
       கி.பி.1898ஆம் ஆண்டு 'தத்துவார்த்த தீபம்' என்னும் உரையுடன் பொன்னம்பல சுவாமிகள் (1832-1904) அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.  இதே ஆண்டு இந்நூலைச் சுப்பராய சுவாமிகளைப் பதிப்ப்£சிரியராகக் கொண்டு இராமானுஜ முதலியார் அவர்கள் இரண்டாம் பதிப்பாகச் சென்னையில் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
       கி.பி.1903ஆம் ஆண்டு மூலம் மட்டும் கொண்ட ஒரு பதிப்பாக (இரண்டாம் பதிப்பு) சென்னை மனோன்மணி விலாச அச்சுக்கூடத்தின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.  இதன் முதற்பதிப்பு விவரம் தெரியவில்லை.
       கி.பி.1904ஆம் ஆண்டு கோயிலூர் ஸ்ரீமுத்துராமலிங்க சுவாமிகள் ஆதீனத்திற்குரிய ஸ்ரீசிதம்பர சுவாமிகளின் மாணாக்கராகிய அ. இராமசாமிச் சுவாமிகளால் பரிசோதிக்கப்பட்ட சுவடியைக் கொண்டு ஆ. எத்திராஜ முதலியார் தம்முடைய 'பிரின்ஸ் ஆப் வேல்ஸ்' அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.
       கி.பி.1905ஆம் ஆண்டு 'கைவல்ய நவநீதம் - விசேட விருத்தியுரை'யுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூல் பிறையாறு அருணாசல சுவாமிகளின் உரையைத் தழுவி ஸ்ரீமத் ஞானகுருயோகி இராமலிங்க சுவாமிகளால் எழுதப்பட்ட விசேட உரை சென்னை தி. பாஷா முதலியாரவர்களால் தொண்டை மண்டலம் அச்சு யந்திரசாலையின் வாயிலாக வெளிவந்துள்ளது.  இந்நூலை ஒன்றறை ரூபாய் விலையில் ஐந்நூறு பிரதிகள் அச்சிட்டிருக்கின்றனர்.
       கி.பி.1913ஆம் ஆண்டு பொன்னம்பல சுவாமி அவர்களால் இயற்றப்பட்ட 'தத்துவார்த்த தீபம்' என்னும் உரையுடன் நான்காம் பதிப்பாக சிதம்பரசுவாமி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வைஜயந்தி அச்சுயந்திர சாலையில் அச்சிடப்பெற்று வெளிவந்துள்ளது.  இந்நூல் 1898இல் முதல் இரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன.  மூன்றாம் தொகுதி வெளியான ஆண்டும் வெளியிட்டோர் பற்றிய குறிப்பும் இதுவரை கிடைக்கவில்லை.
       கி.பி.1914ஆம் ஆண்டு காசிகானந்த சுவாமி அவர்கள் சென்னை சச்சிதானந்தம் பிரஸில் மூலம் மட்டும் அச்சிட்டுத் தன்னுடைய முதற் பதிப்பாகக் கொண்டுவந்துள்ளார்.
       கி.பி.1915ஆம் ஆண்டு கைவல்ய நவநீதம் - வசனம், வினா-விடைகளுடன் கூடிய ஒரு பதிப்பாக கோ. வடிவேலு செட்டியார் மற்றும் சண்முக முதலியார் ஆகியோரால் சென்னை சச்சிதானந்தம் பிரஸ் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.  இதன் மறுதோன்றிப் பதிப்பாக அண்மைக்காலத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1985ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
       கி.பி.1916ஆம் ஆண்டு கொ. லோகநாத முதலியார் அவர்கள் தாமெழுதிய கைவல்ய நவநீத 'வசன'ப் பதிப்பை முதற் பதிப்பாக சென்னை மனோன்மணி விலாச அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.  இந்நூல் கற்றோர் கல்லார் யாவர்க்கும் பொதுப்படப் பயன்படுமாறு புணர்ச்சி விகாரங்களை நீக்கிப் பதிப்பித்துள்ளார்.
       இதே ஆண்டு(1916) பிறையாறு அருணாசல சுவாமிகள் இயற்றிய உரையுடன் பி. இரத்தின நாயக்கர் அவர்கள் சென்னை அமெரிக்கன் டைமண்ட் அச்சுயந்திர சாலையில் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார்.  இப்பதிப்பு இவர் காலத்திற்கு முன் வந்த பதிப்புகளை எல்லாம் உற்று நோக்கிப் பிழைகளை முற்றிலும் களைந்து வெளிவந்துள்ளது எனப்படுகிறது.  இப்பிழைகளை நீக்கச் சிதம்பரம் ஆறுமுக சுவாமிகள் அவர்கள் துணைபுரிந்திருக்கிறா.
       கி.பி.1922ஆம் ஆண்டு மூலம் மட்டும் கொண்ட ஒரு பதிப்பை எஸ். கணேசன் அவர்கள் சென்னை அமெரிக்கன் டைமண்ட் பிரஸில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.
       கி.பி.1923ஆம் ஆண்டு வசன வினா-விடையும் விரிவுரையுடனும் கூடிய ஒரு பதிப்பு ம. சண்முக முதலியாரால் (முதற்பதிப்பு) சென்னை நோபில் பிரஸில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
       1925ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மூலம் மட்டும் கொண்ட முதற் பதிப்பாக பி. இரத்தன நாயக்கர் அண்டு சன்ஸ் சென்னை திருமகள் விலாசம் பிரஸில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள்.
       1931ஆம் ஆண்டு மூலம் கொண்ட ஒரு பதிப்பாகக் காசிகானந்த ஞானாசார்ய சுவாமிகளால் திருப்பூவணம் மீனலோசனி அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
       1932ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'வேதாந்த சாஸ்திர ரத்னாவலி' என்னும் தொகுப்பு நூலில் ஒன்பது நூல்கள் உள்ளன.  இவை நாநாஜீவவாதக் கட்டளை, கீதாசாரத் தாலாட்டு, சசிவன்னபோதம், மஹாராஜா துறவு, பக்தி சதகம், வைராக்கிய தீபம், பிரதீம நஹ்மாவளி, வேதாந்த சூடாமணி, கைவல்ய நவநீதம் என்பனவாம்.  இந்நூலைக் காசிகானந்த ஞானாசாரிய சுவாமிகள் திருப்பூவணம் மீனலோசனி பிரஸில் (மதுஐர) அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.
       1936ஆம் ஆண்டு பிறையாறு அருணாசல சுவாமிகள் இயற்றிய உரையுடன் பி. இரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் அவர்களால் சென்னை திருமகள் விலாச அச்சுயந்திர சாலையில் ஒரு சுத்தப்பதிப்பாக வெளிவந்துள்ளது.
       1961ஆம் ஆண்டு கோவிலூர் மடம் ஸ்ரீமுக்திராமலிங்க ஞானதேசிக சுவாமிகள் அவர்கள் மாணாக்கர் துறவு ஆண்டவர் என்னும் ஸ்ரீஅருணாசல ஞானதேசிக சுவாமிகளவர்கள் 1840ஆம் ஆண்டு இயற்றிய அவதாதிதை பதசாரம் தாத்பரியம் விசேஷம் என்னும் உரை வகைகள் அடங்கிய பதிப்பு திருப்பூவண மடம் ஸ்ரீகாசிகாநந்த ஞானாசார்ய சுவாமிகளவர்களால் பிழையின்றிப் பரிசோதிக்கப்பட்டு மதுரையிலுள்ள கருணாநிதி பிரஸிலும், வி. சுப்பராயலு நாயுடு பிரஸிலும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  இதன் விலை மூன்றரை ரூபாய்.  இந்நூலுக்கு, இப்பதிப்பு வரை பன்னிரண்டு பேர் உரையெழுதி இருக்கிறார் என்னும் அரிய செய்தி இப்பதிப்பாசிரியரின் பதிப்புரையில் காணப்படுகிறது.
"1. இந்தக் கைவல்ய நவநீதம் என்னும் நூலுக்கு உரை இயற்றியவர் கோவிலூர் மடத்தில் இரண்டாவது குருஸ்தானமாக இருந்த பட்டினத்தார் போன்று துறவறத்தைப் பெற்று துறவாண்டவர் என உலகப்புகழ் பெற்ற ஸ்ரீஅருணாசல ஞானதேசிகர் ஆவார்கள்.   அவ்வுரை பரசாரம் என வழங்கப்படும்.  அதன் நீநாள் பின்னர், 2.   பிறையாறு அருணாசல சுவாமிகள் என்பவர் ஓர் உரை இயற்றினார்கள்.  அதன் பின்னர், 3.       ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள் ஓர் உரை இயற்றினார்கள்.  அதன் பின்னர், 4.     சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகள் ஓர் உரை இயற்றினார்கள்.  அதன் பின், 5. தஞ்சாவூர் வெங்கடாசல சுவாமிகள் தத்துவார்த்த தீபம் என ஓர் உரை இயற்றினார்கள்.  அதன்பின், 6. மதுரை பி.எல். சாமிநாத பிள்ளை ஓர் உரை இயற்றினார்கள்.  அதன்பின், 7. காளையார்கோவில் செல்லப்ப சுவாமிகள் ஓர் உரை இயற்றினார்கள்.  அதன்பின், 8. திருமாநிலையம் கோவிந்தய்யர் ஓர் உரை இயற்றினார்கள்.  அதன்பின், 9. சென்னை கோ. வடிவேலு செட்டியார் ஓர் உரை இயற்றினார்கள்.  அதன்பின், 10. உடையார்பாளையம் ஆறுமுக சுவாமிகள் பதவுரை மட்டும் இயற்றினார்கள்.  அதன்பின், 11. குடியேற்றம் செங்கல்வராய முதலியார் ஓர் உரை இயற்றினார்கள்.  அதன்பின், 12. திருப்பூவணம் ஸ்ரீகாசிகானந்த ஞானாசார்ய சுவாமிகள் 'கிருதபானம்' என்று ஒரு பதவுரையும் பலர் தவறாக உரையெழுதிய செய்யுட்கட்கு மட்டும் ஆராய்ச்சி உரையும்" செய்தார்கள் என்ற செய்தியைக் காண்கிறோம்.  இவையனைத்தையும் தொகுத்து ஆய்வு செய்தால் சிறப்பாக இருக்கும்.
       1964ஆம் ஆண்டு கோவிலூர் மடம் சிதம்பரம் ஸ்ரீபொன்னம்பல ஞானதேசிக சுவாமிகள் இயற்றிய 'தத்துவார்த்த தீபிகை' உரையும், திருப்பூவணம் வேதாந்த மடம் ஸ்ரீகாசிகானந்த ஞானாசார்ய சுவாமிகள் இயற்றிய 'ஆதித்தன்' என்னும் உரையும் கூடிய பதிப்பாக ஸ்ரீகசிகானந்த ஞானாச்சார்ய சுவாமிகளின் பதிப்பாக மதுரை அஜந்தா பிரஸில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.  இதன் விலை ரூபாய் இரண்டரை ஆகும்.
       1967ஆம் ஆண்டு திருப்பூவணம் ஸ்ரீகாசிகானந்த ஞானாசார்ய சுவாமிகளின் 'கிரதபானம்' என்னும் உரையும் ஆராய்ச்சியும் கூடிய ஒரு பதிப்பாக மதுரை வி. சுப்பராயலு நாயுடு பிரஸில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.  இதன் விலை ரூபாய் மூன்று ஆகும்.
       1974ஆம் ஆண்டு இதே உரை பூவணநாதர் புத்தகாலயத்தின் (106a கீழப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை-1) சார்பில் தனலட்சுமி பிரஸில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.  இதன் விலை ரூபாய் ஏழு ஆகும்.
       ஆண்டறியப்படாத (தெளிவாக) நிலையில் ஒரு பதிப்பும் காணப்படுகிறது. இந்நூலில் முறையான பதிப்பு வரலாற்றைக் காணமுடிகிறது.  "ஸ்ரீமத் பொன்னம்பல ஞானதேசிகரவர்களால் முதுனல்களைத் தழுவி, 'தத்துவார்த்த தீபம்' என்னும் உரை இயற்றப்பட்டது.  அது மடாலயத்தின் பேரால் காபிரைட் ரிஜிஸ்தராய் இருக்கிறது.  அவ்வாறியற்றிய உரையின் முதற்பதிப்பு தஞ்சை, நாஷனல் பிரஸிலும், 1887ஆம் ஆண்டு 'கைவல்ய நவநீதம் மூலமும் ஸ்ரீகோவிலூர் பொன்னம்பல சுவாமிகள் இயற்றிய தத்துவார்த்த தீபமென்னும் உரையும்' என்னும் நூல் திருப்பாரிப்புலியூர் க.ரா. சிவசிதம்பர முதலியாரால் மொழித்திறமுட்டறவாராயப்பட்டு சிதம்பரம் செல்லப்பசுவாமி, சீ. இராமாநுஜ முதலியார் அவர்களால் கி. துரைசாமிப்பிள்ளை அவர்களது தஞ்சை 'நாஷனல் அச்சுக் கூடத்தில' பதிப்பிக்கப்பட்டுள்ளது.  இதன் விலை ரூபாய் 3.  இரண்டாம் பதிப்பு கொண்ணூர் மாணிக்க முதலியாரால் சென்னை மனோன்மணி விலாசம் பிரஸிலும் (1903ஆம் ஆண்டு பதிப்பான நூலாகக் கருதலாம்), மூன்றாம் பதிப்பு சென்னை சாது மஹாத்மா சை. இரத்தின செட்டியார் குமாரர் ஸ்ரீமத் சிவசங்கர செட்டியாரவர்களால் தமது ரிப்பன் பிரசிலும், நான்காம் பதிப்பு சென்னை ஆனந்ததாஸ்ரம சாது மஹாசங்கத்தாரால் சென்னை வைஜயந்தி பிரஸிலும் பதிப்பிக்கப்பட்டன" என்ற செய்தி நான்கு பதிப்புகள் வெளியாகியுள்ளமையைக் கூறுகிறது.
       இவ்வாறாகக் கைவல்ய நவநீதம் எனும் நூலுக்கு இதுவரை இருபத்தெட்டு பதிப்புகளுக்குமேல் வெளியாகியுள்ளமையையும், இதற்கு இதுவரை மொத்தம் பதினான்கு உரைகள் எழுதப்பட்டுள்ளமையையும் அறிகிறோம்.
ஆ. சூடாமணி நிகண்டு
       இந்நூல் மண்டலபுருடர் அவர்களால் இயற்றப்பட்டது.  இந்நூல் சுவடிப்பதிப்பாகவும் பிறவகை பதிப்புகளாகவும் இதுவரை முப்பத்தேழு பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.  தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடி ஒன்றின் முற்குறிப்பில், "இஃது (சூடாமணி நிகண்டு) பொய்கைப்பாக்கம் ஹரிரபுத்ர உபாத்தியாயரவர்கள் குமாரராகிய அப்பாசாமி முதலியாரவர்கள் தமது வித்வரக்ஷாமிர்த அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.  குரோதி வருஷம் மாசி மாதம். இதன் விலை ரூ.3"(சுவடி எண்.1478) என்றிருப்பதைக் காண, இந்நூல் 1844இல் பதிப்பான செய்தி அறியப்படுகிறது.  அப்பதிப்பு இதுவரை கிடைக்கவில்லை.  இந்நூலின் பதிப்பு வரலாற்றைக் காண்போம்.
       1839ஆம் ஆண்டு திரு. தாண்டவராய முதலியார் அவர்களால் தி. விசாகப்பெருமாள் ஐயருடைய கல்வி விளக்க அச்சுக்கூடத்தில் அச்சிட்டு முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.  இப்பதிப்பு 'சூடாமணி நிகண்டின்' முதற் பதிப்பாகும்.  இப்பதிப்பு மூலத்தை மட்டுமே கொண்டெழுந்தது.  இதே ஆண்டு புதுவை நயனப்ப முதலியார் (1779-1845) அவர்களால் பதினொன்றாம் பகுதிவரை சரஸ்வதி அச்சுக்கூடத்தில் அச்சிட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.  இதன் இரண்டாம் பதிப்பு 1853ஆம் ஆண்டும், மூன்றாம் பதிப்பு (முதல் பத்து பகுதிகள் முடிய) 1856ஆம் ஆண்டும், நான்காம் பதிப்பு 1866ஆம் ஆண்டும் என நான்கு பதிப்புகள் வெளியாகியுள்ளன.
       1843ஆம் ஆண்டு சூடாமணி நிகண்டின் பதினோராம் பகுதிக்கு மட்டும் உரையெழுதி முகவை இராமாநுஜக் கவிராயர் அவர்களால் யாழ்ப்பாணத்துச் சங்கத்து வாயிலாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.  இதே ஆண்டு வேதகிரி முதலியார் அவர்களைப் பதிப்பாசிரியராகப் பெற்று இன்னொரு பதிப்பும் வெளியாகியுள்ளது.
       1844ஆம் ஆண்டு அப்பாசாமி முதலியாரவர்கள் தமது வித்துவரக்ஷாமிர்த அச்சுக்கூடத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.  இச்செய்தி சுவடியில் காணப்படும் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
       1849ஆம் ஆண்டு சூடாமணி நிகண்டுரையைச் சென்னையில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் (1822-1879) அவர்களால் அச்சிடப்பெற்று பதிப்பிக்கப்பட்டுள்ளது.  இப்பதிப்பு உரைப்பகுதியை மட்டும் கொண்டதாகும்.
       யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1854, 1856, 1867 (சென்னை)இ 1880 (சென்னை), 1894 (கொக்குவில்), 1899ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளது.
       1857ஆம் ஆண்டு 'சூடாமணி நிகண்டு மூலமும் உரையும்' யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரவர்களால் பரிசோதிக்கப்பெற்று முதலிரண்டு தொகுதிப் பெயர்ப்பொருளோடு சுவாமிநாத பண்டிதரால் சென்னைப் பட்டணத்தில் தமது சைவ சித்தியாநுபாலன யந்திர சாலையில் அச்சிட்டு மூன்றாம் பதிப்பாக வெளியிட்டுள்ளார்.  இம்மூனறாம் பதிப்பு சுவாமிநாத பண்டிதரின் மூன்றாம் பதிப்பா? ஆறுமுக நாவலர் எழுதிய உரைகொண்ட மூன்றாம் பதிப்பா? முதற் பதிப்பு 1854, இரண்டாம் பதிப்பு 1856 ஆகிய இரண்டையும் தொடர்ந்ததா என்பதை ஆய்வு செய்தல்வேண்டும்.
       1862ஆம் ஆண்டு ஒரு பதிப்பு வெளியாகியுள்ள செய்தி 'ஜான்மர்டாக்' நூல்விவரப் பட்டியால் அறியமுடிகிறது.
       1875ஆம் ஆண்டு எஸ். வைத்தியலிங்கம் பிள்ளை அவர்களால் சென்னையிலிருந்து ஒரு பதிப்பு வெளியாகியுள்ளது.  இதே ஆண்டு யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்களால் 'சூடாமணி நிகண்டு' சைவ வினா-விடையுடன் சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
       1876ஆம் ஆண்டு சூடாமணி நிகண்டின் பதினொன்றாம் தொகுதி மட்டும் கொண்ட ஒரு பதிப்பு வெளியாகியுள்ளதாக ஜான்மர்டாக் நூல்விவரப்பட்டி குறிப்பிடுகின்றது.
       1885ஆம் ஆண்டு சூடாமணி நிகண்டின் பதினோராவது தொகுதி எஸ். வைத்தியலிங்கம் பிள்ளையவர்களால் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.
       1888ஆம் ஆண்டு 'சூடாமணி நிகண்டு மூலமும் உரையும்' கொண்ட ஒரு பதிப்பை யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் பரிசோதித்து, சி. தம்பையா பிள்ளையால் யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலையில் அச்சிட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
       1894ஆம் ஆண்டு சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளை செய்த சொற்பொருளோடு யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலையில் முதற்தொகுதி அச்சிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.  இதன் விலை சதம் 25ஆகும்.
       1897ஆம் ஆண்டு 'சூடாமணி நிகண்டு மூலமும் உரையும்' யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்களால் பரிசோதித்து மேற்படியூர் சதாசிவப் பிள்ளையால் சென்னைப் பட்டணம் வித்தியாநுபாலன யந்திர சாலையில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டுள்ளது.  இப்பதிப்பில், இது ஏழாம் பதிப்பு எனவும் இதன் விலை ஒரு ரூபாய் எனவும் கொண்டுள்ளது.  இப்பதிப்பு ஏழாம் பதிப்பாக வெளிவந்திருப்பதைக் காணும்போது இதற்கு முன்னுள்ள ஆறு பதிப்புகள் எவையெவை எனக் கண்டெடுத்தல் பதிப்பு வரலாற்றிற்கு அவசியமாகிறது.
       1903ஆம் ஆண்டு 'சூடாமணி நிகண்டு முதலாவது தே(தெய்)வப்பெயர்த்தொகுதி' என்னும் தலைப்பில் யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவரவர்கள் இயற்றிய பதங்களின் பொருள் விளக்கம் என்னும் உரையோடு வண்ணார்பண்ணை க. கார்த்திகேய பிள்ளையால் கொக்குவில் சோதிடப்பிரகாச யந்திர சாலையில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது.  இதுவோர் இரண்டாம் பதிப்பாகும்.  இதன் முதற் பதிப்பைக் காணவேண்டும்.
       1907ஆம் ஆண்டு குமாரசாமிப் புலவர் (1854-1922) அவர்களாலும் ஒரு பதிப்பு வெளியாகியுள்ள செய்தியினை அச்சும் பதிப்பும் என்னும் நூலில் மா. சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
       1912ஆம் ஆண்டு 'சூடாமணி நிகண்டு மூலமும் உரையும்' பதிப்பை, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரால் சோதிக்கப்பட்டு யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர் இயற்றிய முதலிரண்டு தொகுதிகளின் சொற்பொருள் விளக்கத்துடன் எஸ். பொன்னம்பலம் பிள்ளை அவர்கள் சென்னை வித்தியாநுபாலன யந்திர சாலையின் வாயிலாக அச்சிட்டு பதிப்பித்துள்ளார்.
       1919ஆம் ஆண்டு உரையுடன் கூடிய ஒரு பதிப்பை (முதற் பதிப்பாக) சென்னை ஏ. முத்துவடிவேலு முதலியார் அவர்கள் சென்னை பூமகள் விலாச அச்சுக்கூடத்தின் வாயிலாகப் பதிப்பித்துள்ளார்.
       1921ஆம் ஆண்டு சூடாமணி நிகண்டின் முதல் தொகுதியான தெய்வப்பெயர்த் தொகுதியும், சிறப்புப் பாயிரமும் அடங்கிய திருந்திய இரண்டாம் பதிப்பாகச் சென்னை பீ. நாராயணசாமிப் பிள்ளை அண்டு பிரதர்ஸ் அவர்களால் சென்னை நற்றமிழ் விலாச அச்சியந்திர சாலையின் வாயிலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
       1922ஆம் ஆண்டு சூடாமணி நிகண்டின் முதலாவது தெய்வப்பெயர்த் தொகுதியை ஒரு திருத்தமான பதிப்பாக டி.எஸ். ராமாநுஜ அய்யங்கார் அவர்கள் தமது அச்சியந்திர சாலையின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
       1924ஆம் ஆண்டு 'பதினோராவது நிகண்டு' சென்னை பி.நா. சிதம்பர முதலியார் அண்டு பிரதர்ஸ் அவர்களால் சென்னை வித்தியாரத்னாகர அச்சுக்கூடத்தின் வாயிலாக மறுபதிப்பாக வெளியிட்டுள்ளார்.  இதன் முதற்பதிப்பை அறிதல்வேண்டும்.
       1933ஆம் ஆண்டு சூடாமணி நிகண்டின் பதினோராவது மூலமும் உரையும் பன்னிரண்டாவது மூலம் மட்டும் கொண்ட ஒரு பதிப்பு சென்னை பூமகள் விலாச அச்சுக்கூடம் வாயிலாக வெளிவந்துள்ளது.  இதே ஆண்டு முதலாவது தெய்வப்பெயர்த் தொகுதி மட்டும் கொண்ட ஒரு பதிப்பைச் சென்னை அமரம்பேடு இரங்கசாமி முதலியார் அண்டு சன்ஸ் அவர்கள் சென்னை பூமகள் விலாச அச்சுக்கூடத்தின் வாயிலாக வெளியிட்டுள்ள்£ர்.  இதன் மறுபதிப்பு 1935ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
       1934ஆம் ஆண்டு சூடாமணி நிகண்டின் முதல் பத்து தொகுதிகள் வரை மூலமும் உரையும் கொண்ட பதிப்பாகச் சென்னை பூமகள் விலாச அச்சுக்கூடம் வெளியிட்டுள்ளது.
       1954ஆம் ஆண்டு சூடாமணி நிகண்டு பதினோராவது பன்னிரண்டாவது தொகுதிகள் மூலமும் உரையுமாக யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகராய் இருந்த ச. பொன்னம்பல பிள்ளையால் பரிசோதிக்கப்பட்டு மேற்படி வித்தியாசாலையின் மற்றொரு தருமபரிபாலகர் ச. பொன்னுசுவாமி அவர்களால் சென்னைப் பட்டணம் வித்தியாநுபாலன யந்திர சாலையில் பன்னிரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.
       1957ஆம் ஆண்டு 'சூடாமணி நிகண்டு - முதலிரண்டு தொகுதிகளின் பதப்பொருள் விளக்கம்' என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவரால் இயற்றப்பட்டுச் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகர் வி. கந்தசுவாமி அவர்களால் சென்னைப் பட்டணம் வித்தியாநுபாலன யந்திர சாலையில் எட்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.  இதே ஆண்டு 'சூடாமணி நிகண்டு மூலமும் உரையும்' யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் பரிசோதித்துச் சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகர் வி. கந்தசாமி அவர்களால் சென்னைப்பட்டணம் வித்தியாநுபாலன யந்திர சாலையில் பதினேழாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.  இப்பதிப்பு நூலைக் காணும்போது பல மறுபதிப்புகள் தேடப்படவேண்டும் என்பது தெளிவாகிறது.
       மேற்கூறிய குறிப்புகளிலிருந்து கீழ்வரும் முடிவுகளை எட்டமுடிகிறது.
       சூடாமணி நிகண்டு வழக்கில் குறைந்ததற்குக் காரணம் அகராதிகளின் தோற்றமே யாகும்.
       ஒரு நூலுக்கே பதினேழு பதிப்புகள் வெளிவந்துள்ள போது சில  பதிப்புகளே கிடைத்திருக்கின்றன.  மீதியுள்ள பதிப்புகளையெல்லாம் திரட்டுதல் வேண்டும்.
       யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்கள் பெயர் பெற்ற பதிப்புகள் எல்££ம் தொடர் பதிப்பெண்ணைப் பெற்றனவா? அவரின் பதிப்பு மட்டும் தனிப்பதிப்பெண்ணைப் பெற்றனவா? என்றறிதல் வேண்டும்.
       ஆறுமுக நாவலரவர்களை உரையாசிரியராகக் கொண்டு சுவாமிநாதப் பண்டிதரால் வெளியிடப்பட்ட (1857) பதிப்பும், 1880ஆம் ஆண்டு ஆறுமுக நாவலர் அவர்கள் பதிப்பித்த பதிப்பும் மூன்றாம் பதிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளதே இச்சிக்கலைத்(பதிப்பெண்) தோற்றுவிக்கிறது.
       இந்நூலின் முதற்பதிப்பு திரு. தாண்டவராய முதலியார் அவர்களால் 1839ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.
       இந்நூலுக்கு யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்களின் பதிப்பே மிகுதியாக வெளிவந்துள்ளது.
       இந்நூலின் முதல் மற்றும் பதினோராம் தொகுதிக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பது நூல் வெளிவந்துள்ள முறையிலிருந்து புலனாகின்றது.
       இந்நூலுக்கு மூவர் உரையே இதுவரை வெளிவந்துள்ளதாக அறியமுடிகிறது.  முகவை இராமாநுஜக்கவிராயர், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் ஆகியவர்களே அம்மூவர்.
       மேற்கூறப்பட்டவற்றுள் சுவடிப்பதிப்பாக வெளிவந்துள்ளவை ஒன்பதும் மற்றவை மறுபதிப்புகளுமே யாகும்.
3.    முக்கூடற்பள்ளு
       ஆசிரியர் பெயர்தெரியாத இச்சிற்றிலக்கியம் இதுவரை சுவடிப்பதிப்பாகவும் பிற பதிப்பாகவும் ஆறு பதிப்புகள் வெளியிடப்பெற்றதாக அறியமுடிகிறது.  டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களின் நூலகச் சுவடி ஒன்றில், "கலியுக சகாப்தம் 4976, இதற்குமேல் செல்லாநின்ற யுவ வருஷம் மாசி மாதம் 10, ஆதித்த வாரமும் ஏகாதசியும் மூல நட்சத்திரமும் அமிர்த யோகமும் பெற்ற சுபதினத்தில் என்னாயினாப் புலவர் அவர்களால் இயற்றிய முக்கூடற்பள்ளு நாடகம் எழுதி நிறைவேறியது.  மொட்ட வாத்தியான் அஸ்தலிகிதம்.  அச்சுப் பிரதியில் பார்வையிடப்பட்டு எழுதினது" (சுவடி எண்.442) என்னும் செய்தி அறியமுடிகிறது.  இச்சுவடி கி.பி.1876ஆம் ஆண்டு எழுதப்பட்டதென்பது தெளிவு.  முக்கூடற்பள்ளுவின் முதற்பதிப்பு 1864ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது.  எனவே இச்சுவடி அப்பதிப்பைப் பார்த்து எழுதப்பட்ட முக்கூடற்பள்ளு நாடமாகத் திகழ்கின்றது.  எனவே இச்சுவடி அப்பதிப்பைப் பார்த்து எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று துணியலாம்.  இந்நூலின் பதிப்பு வரலாற்றை இனிக் காண்போம்.
       1864ஆம் ஆண்டு திருநெல்வேலிப் பேட்டைப் பரிமளகார வீதியிலிருந்த உயர்திரு ம. மேத்தர் முகீதின் அவர்கள், விருத்தாசலம் தியாகராசக் கவிராசரவர்களைக் கொண்டு பல சுவடிகளை ஆராய்ந்து பாங்காக்கி உருத்திரோத்காரி ஆண்டு ஆடி மாதம் முதற்பதிப்பு வெளியிட்டார்கள்.  இப்பதிப்பே முக்கூடற்பள்ளு அச்சேறிய முதற் சுவடிப்பதிப்பாகும்.
       1886ஆம் ஆண்டு மற்றும் 1894ஆம் ஆண்டுகளில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ந.வீ. ஜெயராமன் அவர்களின் 'பள்ளு இலக்கியம்' என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது(ப.82).
       1940ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 20ஆம் நாளன்று மு. அருணாசலம் பிள்ளையவர்கள் தம்முடைய குறிப்புரையுடன் ஒரு முழுமையான முக்கூடற்பள்ளை வெளியிட்டுள்ளார்.  இவர் முற்பதிப்புகளைப் பார்க்கவில்லை என்பது 'இந்நூலே முதன் முதலில் வெளியாகும் சுவடிப்பதிப்பு' என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்து புலனாகிறது.  இந்நூல் வையாபுரிப்பிள்ளை, பாளையங்கோட்டை சி. வீரபாகுப்பிள்ளை, இருளப்ப சண்முகசுந்தரம், வே. வேங்கடராஜுலு ரெட்டியார், ரா.பி. சேதுப்பிள்ளை ஆகியோர் திரட்டிக் கொடுத்த ஏட்டுப் படிகளை ஆதாரமாகக் கொண்டு ஒரு சுவடிப்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.  இதன் மறுபதிப்பு 1949ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது.
       1957ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ந. சேதுரகுநாதன் அவர்களால் பொருளுரை, விளக்கவுரையுடன் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் வாயிலாகச் சுத்தமான பதிப்பாக வெளிவந்துள்ளது.  இதனையடுத்து மார்ச்சு மாதம் 1963ஆம் ஆண்டு இண்டாம் பதிப்பும், நவம்பர் மாதம் 1968ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பும், அக்டோபர் மாதம் 1970ஆம் ஆண்டு நான்காம் பதிப்பும், ஏப்ரல் மாதம் 1984ஆம் ஆண்டு ஐந்தாம் பதிப்பும் எனக் கழகப் பதிப்புகள் வெளிவந்துள்ளமை காணத்தகும்.
       1959ஆம் ஆண்டு பதிப்பாசிரியர்க் குழுவினரால் பல பிரதிகளை ஒப்புநோக்கிப் பரிசோதித்து எஸ். ராஜம் அவர்கள் மூலம் மட்டும் நல்ல பதிப்பாகப் பதிப்பித்துள்ளார்.
       இதுவரை வெளியான முதற்பதிப்புகள் அனைத்தும் கழகப் பதிப்பைத் தவிர ஏனையவை எல்லாம் சுவடிப் பதிப்பாகவே வெளிவந்துள்ளமையைக் காணமுடிகிறது.  அதாவது, மு. அருணாசலம் பிள்ளையவர்களின் பதிப்பும், ந. சேதுரகுநாதன் அவர்களின் பதிப்பும் தவிர்த்த மற்ற ஐந்து பதிப்புகளும் சுவடிப்பதிப்புகளாகும்.  முக்கூடற்பள்ளின் முதற் சுவடிப்பதிப்பு ம. மேத்தர் முகீதின் அவர்களின் பதிப்பாகும்.  (இது, பெயர் தெரியாத ஒரு ஆசிரியரால் எழுதி நிறைவேற்றப்படாத பள்ளின் ஒரு பகுதியாகும்.  முக்கூடற்பள்ளினை முழுமையாக்கியவர் என்னாயினார் புலவர் ஆவர்.  இவரின் முழுமையான முக்கூடற்பள்ளினை மு. அருணாசலம் பிள்ளை அவர்கள் முதற்பதிப்பாக முதன் முதலில் பதிப்பித்துள்ளார்).
ஆய்விற்குரிய சுவடிகள்
1.    திருக்குறள்
       "இது (திருக்குறள்) பொத்தகம் கலியுகாப்தம் 4900க்கு ஆங்கீரச வருஷம் தொண்டை மண்டலம் சென்னைப்பட்டணத்தில் தஞ்சை நகரம் மலையப்பப் பிள்ளை குமாரன் ஞானப்பிரகாசனால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது.  மாசதினச்சரிதையின் அச்சுக்கூடம்"(சுவடி எண்.125) என்னும் கல்கத்தா தேசிய நூலகச் சுவடியில் காணப்படும் குறிப்பைக் காணும் போது இச்சுவடிக்கு மூலமான அச்சுநூல் ஆங்கில வருஷம் 1812ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பது அறியமுடிகிறது.
2.    ஆனந்த கீதரசம்
       "ஸ்ரீமத் பழனிமா மலையில் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய சிவசுப்ரமண்யக் கடவுளின் பேரில் ஆனந்தகீதரசம் எனும் பிரபந்தம்.  இந்நூல் பழனாபுரியிலிருக்கும் வி. ஆனந்தரச கிருஷ்ண்சாமி ஐயர் கேட்டுக்கொண்டபடிக்கு மேற்படியூர் ஸ்ரீ மு. மாம்பழக் கவிச்சிங்க நாவலர் அவர்களால் இயற்றப்பட்டது.  புதுவை சுப்பிரமணிய முதலியார் அவர்களால் குமாரன் மர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1879ஆம் வருஷம் சூன்" (சுவடி எண்.1599-3) என்னும் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடியில் காணப்படும் குறிப்பைக் காணும்போது இச்சுவடியும் முன்பே பதிப்பிக்கப்பட்ட நூலின் படி என்பதை அறியலாம்.
3.    தெய்வயானை ஏசல்
       "எட்டுக்குடி ஏசல் என்று வழங்குகின்ற தெய்வயானை ஏசல்.  இஃது களத்தூர் தமிழ்ப்புலவர் வேதகிரி முதலியார் குமாரர் ஆறுமுக முதலியாரால் பரிசோதித்துத் தக்கோலம் நரசிம்முலு நாயகர் அவர்களது விவேகசந்த்ரோதய அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.  பிரபவ வருடம் புரட்டாசி மாதம்" (சுவடி எண்.1599-6) என்னும் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடியில் காணப்படும் குறிப்பு இந்நூலும் 1867ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டதென்பதும், அதற்குப் பிறகே இச்சுவடி எழுதப்பட்டுள்ளதென்பதும் தெரியவருகிறது.
4.    மெஞ்ஞானச் சிந்து
       "ஸ்ரீமத் தண்டபாணி சுவாமி பேரில் மெஞ்ஞான கீதரசம் என்னும் பிரபந்தம்.  இஃது பழனிமாநகர் சைவசிகாமணியாகிய ஆறுமுக தாசரால் இயற்றப்பட்டு புதுவை சுப்பிரமணிய முதலியார் அவர்களால் குமாரன் மர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.  1869ஆம் வருஷம் சூன் மாதம்.  இவை இரங்கசாமி மெஞ்ஞான கீதரசம் என்றும் சொல்லப்படும்" (சுவடி எண்.1599-1) என்னும் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடியில் காணப்படும் செய்தியைக் காணும் போது, இந்நூல் முன்பே பதிப்பாகியுள்ளதை அறியமுடிகிறது.
5.    கதித்தமலை முருகன் பதிகம்
       "ஊற்றுக்குழிக் கதித்தமலை முருகர் மீதில் பதிகம், சிந்தும்.  இஃது கொங்குதேசத்தில் குறுப்புநாடு விசயமங்கலம் குருஸ்தானம் மடாதிபராகிய கூனம்பட்டி மாணிக்கவாசக சுவாமிகள் சிஷ்ய்ரான மேற்படி நாட்டுக்கு அதிபராகிய படைத்தலை வேளாளர் ஐவரில் நான்காவது கோயமுத்தூர் ஜில்லா ஈரோடு தாலுக்கா தேவஸ்தானம் கமிட்டி கிராமமணியம் சின்னரங்கையக் கவுண்டன் குமாரன் மணியம் நாகப்பக் கவுண்டனால் இயற்றப்பட்டு மேற்படி நான்காவதிற் சேர்ந்த வடமலைக் கவுண்டர் குமாரன் கூனம்பட்டிக் கிராம முன்சீப் தர்மகர்த்தராகிய வில்லேஜ் மாஜிஸ்த்திரேட் குழைந்தைக் கவுண்டன் கேட்டுக்கொண்ட படிக்குச் சென்னை கலாநிதி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.  பவ வருஷம் தை மாதம்" (சுவடி எண்.1599-4) என்னும் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடியில் காணப்படும் குறிப்பைக் காணும் போது, இந்நூல் முன்பே கி.பி.1875ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டதென்பதை அறியமுடிகிறது.
6.    சத்தப்பிரகரணம்
       "இது(சத்தப்பிரகரணம்) சுத்த வேதாந்த பரம்பரை தி. கரபாத்திர சுவாமிகள் மரபிலுள்ள பிறையாறு அருணாசல சுவாமிகளாற் பரிசோதித்து அவர்கள் மாணாக்கரில் ஒருவராகிய சென்னை வேங்கடாசல முதலியாரும், வி. ரங்கசாமி முதலியாரும் கேட்டுக்கொண்டபடி சென்னை மாநகரம் 'வேதாந்த விளக்கம்' என்னும் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.  விசுவாவசு வருஷம் ஆவணி மாதம்.  இதன் விலை ரூபா.1, அணா.2" (சுவடி எண்.1491) என்னும் சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகச் சுவடியில் காணப்படும் குறிப்பைக் காணும்போது, இந்நூல் கி.பி.1845ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது.  மேலும், "விரோதிகிருது வருஷம் கார்த்திகை மாதம் 12ந் தேதி எழுதினது" என்ற குறிப்பும் இச்செய்திக்கு முன் இடம்பெற்றுள்ளதைக் காணும் போது 1845ஆம் ஆண்டு பதிப்பான அச்சுப் புத்தகத்தைப் பார்த்து 1851ஆம் ஆண்டு (26.11.1851) எழுதப்பெற்றதைத் தெளிவாக உணரமுடிகிறது.
7.    ஆரூட நவநீதம்
       "இது (ஆரூட நவநீதம்) நாகப்பட்டிணத்துச் சமீபம் வடக்குப் பொய்யூரென்று வழங்குகின்ற 'பொய்கைநல்லூர்' சுப்பையதேசிகரால் மொழிபெயர்த்தியற்றப்பெற்றது.  சென்னைப்பட்டிணம் கவிரஞ்சனி அச்சுக்கூடத்தில் பதிப்பித்த புஸ்தகத்தை முருச்சாம்பேடு அப்பாவு உபாத்தியாயர் எழுதத் தொடங்கியது.  தாது வருஷம் தை மாதம் 5ந் தேதி" (சுவடி எண்.2300) என்னும் சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகச் சுவடியில் காணப்படும் குறிப்பைக் காணும்போது இந்நூல் சென்னை கவிரஞ்சனி அச்சுக்கூடத்தில் 1877க்கு முன்பே பதிப்பிக்கப்பெற்றது என்றும், அதனைப் பார்த்து 1877ஆம் ஆண்டு மீண்டும் சுவடியில் எழுதப்பெற்றதென்றும் அறியமுடிகிறது.
8.    காசிக்கலம்பகம்
       "சுத்த பாடமாக வழங்குவிக்கும் பொருட்டுத் தொண்டை மண்டலத்து வேளாளர்களில் உயர்துளுவ வேளாளராகிய தேனாம்பேட்டை வேங்கடகிருஷ்ண முதலியார் குமாரர் சின்னத்தம்பி முதலியார், காஞ்சிபுரம் சபாபதி முதலியாரால் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்துச் சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப் புலவர் திருவேங்கடாசல முதலியாரது சரஸ்வதி அச்சுக்கூடத்தில் பதிப்பித்தார்.  சாலிவாகன சகாப்தம் 1762, சார்வாரி வருஷம் ஆனி மாதம், சார்வாரி ஆவணி மாதம் 22ந் தேதி 22ந் தேதி முடிந்தது. அண்ணாசாமி எழுதியது" (சுவடி எண்.433) என்னும் டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் நூலகச் சுவடியில் காணப்படும் குறிப்பைக் காணும்போது, இந்நூல் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்த பிறகு 1840க்கு முன் பதிப்பிக்கப்பட்டது என்றும், அதனைப் பார்த்து 1840ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் எழுதத் தொடங்கிய இந்தச் சுவடி ஆவணி மாதம் 22ந் தேதி எழுதி நிறைவேறியதென்பதையும் அறியமுடிகிறது.
9.    திருக்குறள் - சரவணப்பெருமாளையர் உரை
       "கலியுக சகாப்தம் 4931 சாலிவாகன சக வருஷம் 1750ஆம் ஆங்கிரஸ வருஷம் 1830ஆம் ஆகிய இதில் நிகழ்கின்ற விகிருதி வருஷம் சென்னைப் பட்டணத்தில் அச்சில் பதிப்பிக்கப்பட்டது" (சுவடி எண்.2469) என்னும் சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகச் சுவடியைக் காணும்போது, இச்சுவடிக் குறிப்பானது கி.பி.1830ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்ற செய்தியை உணர்த்துகிறது.
சுவடிச் சுவடிப்பதிப்பு முறை
       இன்று, அச்சு இயந்திரத்தைக் கொண்டு பல்லாயிரம் நூற்படிகளை எடுத்துக்கொள்கிறோம்.  இதே பழக்கம் நம்முன்னோர்கள் காலத்திலும் இயன்ற அளவில் இருந்திருக்கிறது.  அச்சு இயந்திரம் இல்லாத அந்தக் காலத்தில் கையாலேயே தமக்கு வேண்டிய பிரதிகளை எடுத்து வந்திருக்கின்றனர்.  இதை முறையாகச் சுவடியில் குறிப்பிட்டும் வந்திருக்கின்றனர்.
       சுவடியைப் பார்த்துப் படியெடுத்து, திருத்தி, முகவுரை, குறிப்புரை, விளக்கவுரை, பொழிப்புரை, பாடல் முதற்குறிப்பு அகராதி, அருஞ்சொற்பொருள் அகராதி, சிறப்புப்பெயர் அகராதி போன்ற இன்னோரன்ன பதிப்பு நெறிமுறைகளோடு அச்சு நூலாகப் பதிப்பிக்கப்பெற்றாலும், ஒரு சுவடியைப் பார்த்து அப்படியே இன்னொரு சுவடியாக்கப்பெற்றாலும் அதுவும் ஒருவகைப் பதிப்பாகவே கருதப்படல் வேண்டும்.  பதிப்பு என்பது ஒன்றிலிருந்து பிறிதொன்றில் அதன் உண்மைச் செய்தி மாறுபடாமல் பதிப்பதாகும்.  இக்கருத்தினை ஏற்றுக்கொள்வோமானால், சுவடியைப் பார்த்து எழுதிய சுவடிகளும் சுவடி வரலாற்றைத் தருகின்றதைக் காணலாம்.  டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் சுவடி நூலகத்திலுள்ள 'வைஷ்ணவ குருபரம்பரை' (சுவடி எண்.100) என்னும் சுவடிக் குறிப்பில், "விகாரி வருஷம் ஆனி மாதம் 2ந் தேதி சோமவாரம் தியோதசி ரோகணி நட்சத்திரமும் பெற்ற சுபதினத்தில் ஆழ்வார் திருநகரியில் எழுதுவித்தது.  தவிர ஸ்ரீவிஷ்ணு புராணமும் ஆறங்கிசையும் எழுதி நிறைவேறிச்சு.  இதுகள் திருநெல்வேலியில் தளவாய் திருமலையப்ப முதலியாராண்டைக்கு சென்னைப் பட்டணம் துபாசி பொன்னப்பிள்ளை பணத்துக்குத் தாசீலாக ஸ்ரீநிவாசனை அனுப்பிவச்சிருந்தபோது எழுதுவிச்சது.  இந்தப் பிரதியைப் பார்த்துச் சென்னைப் பட்டணத்தில் பெத்துநாயகன் பேட்டையில் லஷ்மணப்பிள்ளை வீட்டில் அவருடைய அம்மான் குமரப்பிள்ளை குரோதி வருஷத்தில் ஒரு பிரதி எழுதி இருக்கிறார்.  விரோதி வருஷம் பட்டணத்தில் அய்யாசாமிப் பிள்ளை தம்பி எழுதினார்.  ஸ்ரீவிஷ்ணு புராணம் காஞ்சிபுரம் மளிகை ரங்கப்ப செட்டியார் ஒரு பிரதியும், நவாபு துபாசி முத்துக்கிருஷ்ண முதலியார் ஒரு பிரதியும் எழுதுவிச்சிருக்கிறார்கள்" என்னும் குறிப்பைக் காணும்போது, கி.பி.1779ஆம் ஆண்டு எழுதப்பெற்ற சுவடியைப் பார்த்து கி.பி.1784ஆம் ஆண்டு குமரப்பிள்ளையாலும், கி.பி.1829ஆம் ஆண்டு அய்யாசாமிப் பிள்ளை தம்பியாலும் எழுதப்பட்டதை அறியமுடிகிறது.  இக்குறிப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, 'வைஷ்ணவ குருபரம்பரை' என்னும் இந்நூல் கி.பி.1779ஆம் ஆண்டும், கி.பி.1784ஆம் ஆண்டும், கி.பி.1829ஆம் ஆண்டும் என மூன்று முறை இவ்வடிவத்தில் பதிப்பாகியிருப்பதைக் காணமுடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக