செவ்வாய், 15 மே, 2018

பழந்தமிழ் இலக்கியங்களில் கடலியல்


பழந்தமிழ் இலக்கியங்களில் கடலியல்

முனைவர் மோ.கோ. கோவைமணி
இணைப்பேராசிரியர், தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்-613 010.
            ஒரு நாடு தம் மக்களுக்கு வேண்டிய இயற்கை வளம் யாவற்றையும் பெற்றிருத்தல் இயலாதுஅப்படியே தன்னிறைவு பெற்று விளங்கினாலும் உபரியாக உள்ளதைப் பிற மக்களுடன் பகிர்ந்தே வாழத் தலைப்படும்எனவே, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பொருள் பரிமாற்றம் என்பது அவசியமான ஒன்றாகும்இஃது வெளிநாட்டு வணிகம் எனப்பட்டதுதமிழகத்தில் இவ்வாறான வணிகம் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளதுதமிழர்கள் ஐரோப்பிய ஆசிய நாடுகளோடு கடல் மூலமாக வாணிகம் செய்துள்ளனர்இவற்றை இலக்கியச் சான்றுகள் மூலம் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
கடல்வழி வாணிகம்
            தமிழ் நாட்டின் இயற்கையைத் தமிழர்கள் கடல் கடந்து வாணிகம் செய்து சிறப்புப் பெற வைத்துள்ளனர்தொன்மைக் காலம் தொட்டே இவர்கள் கடல் நீரின் வலிமை புரிந்து அதை அடக்கி ஆண்டுள்ளனர் என்பதற்குப் புறப்பாடல் வரிகளே சான்றாக உள்ளன (நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி). தமிழர்கள் கடலோர மற்றும் நடுக்கடலில் பயணம் செய்தும் வாணிகம் செய்துள்ளனர்.1   பண்டையத் தமிழர்கள் கடல்கடந்து அயல்நாடுகளுக்குச் செல்லும் பொழுது பெண்களை அழைத்துச் செல்வதில்லைஇதனை,
            “முந்நீர் வழக்கம் மகவோடு இல்லை2     
என்னும் தொல்காப்பியத் தொடர் விளக்குகிறதுஇதன் மூலம் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் கடற்பயணம் செய்துள்ளனர் என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது.
            கடலில் வணிகம் செய்வதற்குக் கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசல், புனை, தோணி, திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் ஆகியவை பயன்படுத்தப்பட்டு உள்ளனநாட்டின் கரையோரங்களில் செல்வதற்குச் சிறுசிறு ஓடங்களையும், பிறநாட்டு வணிகத்திற்கு நுண்ணிய தொழில்நுட்பமடைந்த நாவாய்களையும் பயன்படுத்தியுள்ளனர் என அறிகிறோம்நாவாய் என்ற இலத்தீனிய சொல்லே தமிழகக் கப்பல் வணிகத்துடன் யவனர்கள் கொண்டுள்ள தொடர்பினை விளக்கும் சான்றாக அமைகிறது.3    வங்கம், நாவாய், கலம் நெடுந்தொலைவு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.  இதனை,
            “அருங்கலம் தரீஇயர், நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் திசைதிரிந் தாங்கு4  
            நாவாயில் கடல் வணிகம் செய்தவர் நாவிகர் என்று பெயர் பெற்றனர்கடல் வாணிகம் செய்த பெரிய நாவிகர் மாநாவிகர் என்று பெயர் பெற்றனர்மாநாவிகர் என்னும் பெயர் மருவி மாநாய்கர் என்று வழங்கப்பட்டது.
நாவாய் என்பது மரக்கலம்நாவாய்களில் வாணிகம் செய்தவன் நாவிகன்நாவிகன் என்பது நாய்கன் என்று மருவிற்குசிலப்பதிகாரத் தலைவியாகிய கண்ணகி காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த ஒரு மாநாய்க்கனுடைய மகள்கி.பி.2ஆம் நூற்றாண்டிலிருந்த அந்த மாநாய்க்கனையும் அவள் மகளான கண்ணகியையும் சிலப்பதிகாரம் கூறுகிறது.
அயலக வாணிகத் தொடர்புகள்     
தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, கடல் கடந்து சென்று வாணிகம்           செய்திருப்பதைச் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன.
          “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடற் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணவும், காழகத் தாக்கமும்5 
          கடியலூர் உருத்திரங்கண்ணனார் இப்பொருட்கள் கடல் வழியாகக் கப்பல்களில் வந்தவை எனக் குறிப்பிடுகின்றார்நிமிர்பரிப் புரவிகள் தமிழ் நாட்டிற்கோ அல்லது இந்தியாவிற்கோ உரிய விலங்கு அன்னுஎனவே, இவை பாரசீகம், சிந்து போன்ற தேசங்களில் இருந்து கப்பல் வழியாகக் கொண்டு வரப் பட்டவையாகும்கால் என்பது காற்றைக் குறிக்கிறதுகாற்றின் உதவியினால் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்ட மிளகு மூட்டையைக் குறிக்கிறதுஅக்காலத்தில் சிறந்த சேரநாட்டு மலைச்சரிவுகளில் மிளகு விளைந்ததுஅதற்கடுத்து தெற்காசிய நாடுகளான ஜாவா, சுமத்திரா தீவுகளில் மிளகு பயிராயிற்று.
          சாவகநாட்டு மிளகு சேரநாட்டு மிளகைப் போல அவ்வளவு சிறந்ததல்லசேர நாட்டு மிளகை யவனர்கள் பெரிய நாவாய்களில் வந்து பெருவாரியாக வாங்கிக் கொண்டு போனபடியால் அது பற்றாக்குறையாகவே கீழக்கரைப் பக்கத்திலிருந்த சோழநாட்டு வாணிகர் சாவக நாட்டிலிருந்து மிளகைக் கொண்டு வந்தனர் என்பர்.6
          மிளகில் வெண்மை, கறுப்பு என இருவகை உள்ளனஇலத்தீன் மொழியில் Paper Nigarum என்று வழங்கப்படுகிறதுரோமப் பேரரசர்களின் எகிப்தின் படையெடுப்பின் போதும், ஆசியா மைனரின் படையெடுப்பின் போதும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு அயல்நாடுகளில், செலாவணியாகும் மிளகையும், இலவங்கப் பட்டையையும் தங்கள் நாட்டிற்கு வரவழைக்கத் தொடங்கினர்எகிப்தியர்களும் பாபிலோனியர்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மிளகைப் பயன்படுத்தி வந்துள்ளனர்சீனா, கேரளத்து மிளகைக் கி.மு.3ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இம்மிளகு வாணிகமே முற்கால வாணிகர்களுக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்ததுரோமப் பேரரசிற்கும், இந்தியாவிற்கும் இடையே சென்ற கப்பல்களின் சரக்கில் முக்கால் பகுதி மிளகும், வாசனைத் திரவியங்களும்அரிய கல் மணிகளுமாகவே இருந்தனஇவை தென்னிந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனஇம்மிளகு மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டதால் ரோம் நகரில் இது ஒரு பவுண்டு 15 தினாரி வரை விற்கப்பட்டது என்பர்.7
          வடமலைப் பிறந்த மணியும், பொன்னும் என்பது வடமலையிலிருந்து வந்தனவற்றைக் குறிக்கிறதுகுடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உண்டான சந்தனம், அகில் இவற்றைக் குறிக்கின்றதுதென்கடல் முத்து என்பது பாண்டியநாட்டு மன்னார் வளைகுடாவில் உண்டான முத்தாகும்குணகடல் துகிர் என்பது கிழக்குக் கரையிலிருந்து வந்த பவளத்தையும், கங்கைவாரி என்பது கங்கை ஆற்றங்கரை மேலிருந்த பாடலிபுரம், வாரணாசி முதலான ஊர்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருள்கள் பற்றியும், ஈழத்து உணவு என்பது இலங்கையில் உண்டான உணவுப் பொருட்களைப் பற்றியும், காழகம் என்பது தென்கிழக்காசிய நாடுகளில் ஸ்வர்ணம் விளையும் ஒரு பகுதி என்பது பற்றியும் அறியமுடிகிறது
இவ்வாறாக தமிழகம் பிற நாட்டினருடன் கொண்டிருந்த கடலியல் வாணிக உறவு புலப்படுகிறது.
அடிக்குறிப்புகள்
1. மயிலை சீனி. வேங்கடசாமி, பழங்காலத் தமிழர் வணிகம், .40.
2. தொல். அகத்திணை.37,
3. Puranalingam PIllai, Tamil India, 1963, p.77,
4. பதிற். 52:3-4,
5. பட்டினப்.185-191,
6. பழந்காலத் தமிழர் வணிகம், .126,
7. எஸ்.வி. இராகவன், பெரிப்ளூஸ், 1977, பக்.234-235.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக