செவ்வாய், 15 மே, 2018

கவிஞர்கள் பார்வையில் எம்.ஜி.ஆர்.


கவிஞர்கள் பார்வையில் எம்.ஜி.ஆர்.
முனைவர் மோ.கோ. கோவைமணி
இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்-613 010.

M.G.R. என்ற ஆங்கில மூன்றெழுத்து தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகிவிட்ட ஆங்கில எழுத்துக்கள் என்றே சொல்லலாம்,  புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல், காவியத் தலைவன் என்றெல்லாம் வழங்கினாலும் உலகெங்கும்  உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நிலைகொண்டு வாழ்ந்திருப்பவராக எம்.ஜி.ஆர். விளங்குகின்றார்.  இன்றும் அவர் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.  தலைமுறை மாற்றங்களால் பல தலைவர்களை மக்கள் மறந்திருக்கிறார்கள்.  ஆனால் எத்தனை தலைமுறை மாற்றங்கள் வந்தாலும் எல்லா தலைமுறையினராலும் நினைவுபடுத்திக் கொள்ளும் ஒரே தலைவராக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் டாக்டர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜ்.ஆர்.  இவரைப் பற்றிப் பலர் பல கருத்துக்கள் கூறியிருந்தாலும் கவிஞர்கள் பார்வையில் அவர்களின் எண்ணத்தில் அவரைப் பற்றிய எண்ணத்தினை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.
அண்ணா தமிழக முதல்வராக ஆனபோது சென்னையில் 1968ஆம் ஆண்டு இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது.  அப்போது சென்னையின் மையப் பகுதியான அப்போதைய மவுண்ட்ரோடு இப்போதைய அண்ணா சாலயில் தி இந்து தமிழ் நாளிதழ் அலுவலம் எதிரே கையை உயர்த்திய படி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையைத் தன்னுடைய சொந்த செலவில் புரட்சித்தலைவர் நிறுவிய பெருமைக்குரியவர்க்கு இன்று தமிழகமெங்கும் ஏன் உலகமெங்கும் எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கின்றனரோ அங்கெல்லாம் புரட்சித்தலைவருக்குச் சிலை எடுக்கின்றனர்.  இந்நிலையில் தாம் உருவாக்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவனராகிய புரட்சித்தலைவருக்குத் தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் பணியாளர்களும் சேர்ந்து அவரது நூற்றாண்டில் சிலை வைக்க உள்ளனர். இச்செயல் காலங்கடந்தாலும் கனிந்து வந்த நூற்றாண்டைப் பண்பால் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
1968ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் பேரறிஞர் அண்ணா அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கும் போது புரட்சித்தலைவர் கவிதையைப் பற்றி,
அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்த்துதான் கவிதை
என்கின்றார்.  அதற்கு அங்குக்  கூடியிருந்த பெருவெள்ள மக்கள் பலத்த கரகோஷம் எழுப்புகின்றனர்.  இதனைக் கண்ணுற்ற பேரறிஞர் அண்ணா தாம் பேச வரும்போது தக்கவாறு அதற்கு மேலும் விளக்கம் அளித்து அவருக்கு அரசியலிலும் அறிவிலும் ஆசான் என்பதை நிரூபித்திருக்கின்றார். 
       அறித்தனை அறிந்தோர்க்கு
       அறிவிக்கும் போதினிலே
       அறிந்த்துதான் என்றாலும்
       எத்துணை அழகம்மா? என்று
       அறிந்தோரையும் வியக்க வைக்கும்
       அருங்கலையே கவிதையாகும்
என்று கவிதையாலேயே  கவிதைக்கு விளக்கம் அளிக்கின்றார் பேரறிஞர் அண்ணா.  தொடர்ந்து அண்ணா அவர்கள், “அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார்.  நீங்கள் கை தட்டினீர்கள்.  எதற்கு என்று யோசித்தேன்.  பிறகுதான் தெரிந்தது.  அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார் என்று.  ஆம், அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானேஎன்று அண்ணா தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்த மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.  மேலும், அண்ணா அவர்கள் மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா?  என்று பலர் ஆவலாக காத்திருந்தனர்.  நல்ல வேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்த்து.  அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக்கொண்டேன்.  அந்த இதயக்கனிதான் எம்.ஜி,ஆர்.” என்பதால் இதயக் கனியின் ஈர்ப்பு ரகசியம் அண்ணாவிற்கு மட்டுமல்ல இதயங்கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தெரிந்ததுதானே.
புரட்சித் தலைவருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு என்னவென்றால், தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தன்னைத் தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுபவர். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பர்.  இதற்குக் கவிஞர் கண்ணதாசன் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்.
எம்.ஜி.ஆர். நடித்தஆயிரத்தில் ஒருவன்படத்தின் இறுதிக்கு முன் ஒரு பாடல் அடிமை முறையை ஒழித்து சுதந்திரச் சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல் அமையவேண்டும்.  அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை. அப்போது கவிஞர் கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். என்றாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கண்ணதாசன் கடுமையாக விமர்சித்து வந்தார். கண்ணதாசன் என் படங்களுக்குப் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். என்றும் கூறியதில்லை. அதுபோல், எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று கண்ணதாசனும் சொன்னதில்லை. மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங்கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறமல் போனதுதான் உண்மை.  நிலைமை இப்படி இருக்க, ஆயிரத்தில் ஒருவன்படத்தில் மேலே குறிப்பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் கண்ணதாசனை விட்டே அந்தப் பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை தயாரிப்பாளர்க்குப் பிறந்தது. படக்குழுவினர் கண்ணதாசனிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையைப் பாராட்டி அந்தப் பாடலை ஏற்றுக்கொண்டார்.
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
என்று தொடங்கும் பாடலே அது.  கண்ணதாசன் கடுமையாக எம்.ஜி.ஆரைத் தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
       எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமானமாட்டுக்கார வேலன்படத்தில்,
பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’
என்ற இனிமையான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகியைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்,   
       பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு,
நீ இல்லையென்றால்
நான் தொடுப்பேன் காதல் வழக்கு
என்பதாக வரும். பதிலுக்கு நாயகி,
போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்..
நான் போதும் என்று சொல்லும் வரை
நீதி சொல்லுங்கள்
என்று பாடுவதுபோல கண்ணதாசன் எழுதியிருந்தார். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு உடன்பாடு இல்லை. அதனால்,
போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள்,
உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து
வெற்றி கொள்ளுங்கள்
என்று மாற்றிக் கொடுத்திருக்கின்றார். 
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ர். என்ற ஒரு தனி மனிதருக்குத்தான் பொருந்தும். ‘குடும்பத் தலைவன்படத்தில்
கட்டான கட்டழகு கண்ணா,
உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன். எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையைநீதிக்குப் பின் பாசம்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார்.
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது
என்ற கண்ணதாசனின் இந்த வரிகளைப் படித்தாலோ கேட்டாலோ நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது.
நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.
அரசவைக் கவிஞர்பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்கிறார்.
அவர் கூறியது போலவே கண்ணதாசனின் வாழ்க்கையில் நடந்தேறியது. அமெரிக்காவுக்குச் சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறி கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்கிறார். கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் புலப்படும்.
கவிஞர் வைரமுத்து கருத்தால் வேறுபட்டிருந்தாலும் உள்ளத்தால் கண்ணதாசனைப்போல் ஒன்றுபட்டவர் என்பதை அவரது கவிதை ஒன்று புலப்படுத்துகிறது.  எம்.ஜி.ஆருக்காக அவர் எழுதிய காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள் என்ற இரங்கற்பாவில் புரட்சித்தலைவரின் உன்னத தன்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றார்.
ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.
நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.
தி.மு. மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.
பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.
தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க'டொக்'என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு "யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்" என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.
வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது "ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா"? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.
என்று சொல்லியிருப்பதிலிருந்து வைரமுத்துவின் உள்ளக் காட்சி வெளிப்படுகிறது.  மேலும், தான் தி.மு..வின் தீவிர உடையணிந்தவன் என்பதை தெரிந்திருந்தும் எனக்கு தாங்கள் மரியாதை செய்திருப்பதை எண்ணிப்பார்க்கும் நெஞ்சம் நனைகிறதோடு மட்டுமல்ல என் இரத்தமும் உரைகிறது என்கிறார் கவிஞர் வைரமுத்து.  இதனை, “என்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள். தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள். இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள். உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன். உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்- நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது. உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம். ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான். உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன. எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது. நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிரஎன்று கூறியிருப்பதிலிருந்து வைரமுத்துவின் ஆசையும் அவரின் பார்வையில் புரட்சித்தலைவர் வீற்றிருக்கும் இடமும் வெளிப்படுகிறது.
இதுபோல் இம்மூவர் பார்வை என்பது இங்கு காட்டாக மட்டுமே எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  புரட்சித்தலைவர் டாக்டர் பொன்மனச்செம்மல், காவியத்தலைவன் ஆகிய ஒருவருக்குப் பாடல்கள் பாடிய கவிஞர்கள் பலர் இருக்கின்றனர்.  அவர்களின் பார்வையில்  எல்லாம் புரட்சித்தலைவரைக் கண்ணுற்று ஆராய்வது அவரது நூற்றாண்டு விழாவில் அவருக்குச் செய்யும் தொண்டுகளில் ஒன்றாகும் என்றால் அது மிகையல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக