வியாழன், 17 மே, 2018

இதழியல் வரலாற்றில் பருவ இதழ்கள்

இதழியல் வரலாற்றில் பருவ இதழ்கள்

முனைவர் மோ.கோ. கோவைமணி
இணைப்பேராசிரியர், தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் - 613 010.

இதழை 'Journal' என்றும், செய்தியை 'News' என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றோம்.  சென்னைப் பல்கலைக்கழக 'ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம்' எனும் நூலில் 'Journal'யை "நாட்குறிப்புச்சுவடி, அன்றாட நடப்புக் குறிப்பு, தொழிற்கணக்கு முறையில் நாளேடு, செய்தித்தாள், பத்திரிகை, குறிப்புப்புத்தகம்" (ப.552) என்றும்; 'News'யைச் "செய்தி, புதுத்தகவல், புதிய நிகழ்ச்சிகளின் விவரம்" (ப.666) என்றும் குறிப்பிடுவதைக் காணும்போது Journal மற்றும் News ஆகிய இரண்டும் செய்தியைக் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

செய்தியை ஆங்கிலத்தில் News என்பதைப் போல் அதற்குச் சொல்லும் விளக்கமும் விசித்திரமாகவே இருக்கிறது. "N - வடக்குத் திசையையும் (North), E - கிழக்குத் திசையையும் (East), W - மேற்குத் திசையையும் (West), S - தெற்குத் திசையையும் (South) குறிக்கின்றது.  நான்கு திசைகளிலிருந்து வருவதைத்தான் 'News' என்கின்றனர்" என்பார் பேராசிரியர் சு. சக்திவேல் (இதழியல், ப.11).  ஆக, இதழானது நான்கு திசைகளிலிருந்து கிடைக்கக் கூடிய செய்திகளின் பேழை எனலாம்.

இதழியலின் தோற்றம்

தொன்றுதொட்டே நம்மிடம் இதழியல்துறை இருந்துள்ளது.  மனிதனின் தோற்றத்தோடு இவ்வியலும் பிறந்தது எனலாம்.  கூட்டுவாழ்க்கையில் மனிதன் ஈடுபட்ட காலத்திலிருந்தே மனிதர்கள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினர்.  முதலில் மனிதன் ஓசையெழுப்பிப் பேசுவதற்கு முன்பு செய்கைகளின் மூலம் தம் கருத்தைப் பிறருடன் பரிமாறிக்கொண்டான்.  அதன் பிறகு சீழ்க்கை ஒலியாலும், பறையறைவித்தும், மணியடித்தும் புகையெழுப்பியும், தீயம்புகளை வானத்தில் எறிந்தும் ஓரிடத்தில் நடப்பதை சுற்றுவட்டாரத்து மக்களுக்கு அறிவிக்கும் பழக்கம் தோன்றியது.  பின்னர் மனிதன் உணர்ச்சியின் உந்துதலால் தனது குரல் வளத்தைப் பயன்படுத்திச் சிலவகையான ஒலிகளை எழுப்பினான்.  உணர்ச்சியொலியாலும், போலியொலியாலும், குறிப்பொலியாலும் தம்கருத்தை வெளிப்படுத்தினான்.  இம்மூன்றுவகை ஒலிகளினால் மனிதனுடைய பேச்சு நாளடைவில் நன்றாகச் சீர்திருத்தி - பண்பட்டு - மொழி, எழுத்து வடிவாகத் தோன்றியது.

இவ்வாறு உருவான எழுத்து கல்வெட்டாகவும், செப்பேடாகவும் ஓலைச்சுவடியாகவும் உருவாகின.  அரசர்கள் தங்களது அறிக்கைகளையும் கட்டளைகளையும் ஓலை, தோல், துணி போன்றவற்றில் குறிக்கச் செய்து தம் குடிமக்களுக்கு அறிவித்தனர்.  குறிப்பாகத் துணியால் எழுதப்பெற்ற அரசின் செய்திகள் பொது இடங்களில் வைத்து மக்களுக்கு அறிவித்தனர்.  காதலர்கள் தங்கள் அன்பைப் பல வழிகளில் புலப்படுத்தியுள்ளனர்.  சான்றாக, மாதவி பிரிந்து சென்ற கோவலனுக்குத் தாழம்பூவின் தோட்டில், பித்திகையின் முகையாகிய எழுத்தாணியால் செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து மடல் வரைந்து வசந்தமாலையிடமும் மாடலனிடனும் கொடுத்தனுப்பினான் என்று சிலப்பதிகாரம் (வேனில் காதை, வரி.45-71) சுட்டும்.  இம்மடலைத் 'திருமுகம்' என்பர்.  சகுந்தலை தாமரை இலையின் பின்புறத்தில் நகத்தால் கீறித் தனது காதலுணர்ச்சிகளைத் துஷ்யந்தனுக்குப் புலப்படுத்தினாள் என்று  சாகுந்தலம் உணர்த்துகின்றது.

மேலும், பழங்காலத்தில் செய்திகளை எழுதித் தெரிவிப்பதைவிட பறையறைந்து (திருமணம், படையெடுப்புச் செய்திகள்) சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  இதற்கு நம் பழந்தமிழ் இலக்கியங்களில் பல சான்றுகள் இருக்கின்றன.  செங்குட்டுவன் சிலைக்குக் கல் எடுக்க இமயமலை செல்ல எத்தனித்தபோது 'அமைச்சன் அழும்பில் வேள்' என்பான்,
"நாவலம் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம்
காவலர் வஞ்சிக் கடைமுகம் பிரியா; 
  வம்பு அணியானை வேந்தர் ஒற்றே
தம்செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறைபறை என்றே அழும்பில்வேள் உரைப்ப"(சிலப்.காட்சிக்., வரி.173-177)
என்று பறையறைந்து வடதிசை செல்வதைச் சொல்லலாம் என்கின்றார். பின் வள்ளுவன் பட்டத்து யானை மீதேறி பறை அறிவித்தான்.  இதனைச் சிலம்பு,
"இறையிக லியாணை யெருத்தத் தேற்றி
அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கென்" (காட்சி, 263-264)
என்கின்றது.  அரசுச் செய்திகளை முரசறைந்து அறிவிப்பவனை 'வள்ளுவ முதுமகன்' (பெருங்கதை) என்பர்.  புனல்நெல்லையும் நெற்கதிரையும் நனைத்த செய்தியை துடிமூலம் மற்றவர்க்கு அறிவித்ததைப் பரிபாடல்,
"அகவயல் இளநெல் அரிகால் சூடு
தொகுபுனல் பரத்தெனத் துடிபட" (பரி.7:27-28)
என்றும், மதம் கொண்ட யானை தெருவில் செல்வதைப் பறையறைந்து தெரிவித்ததைப் பதிற்றுப்பத்து - மூன்றாம்பத்து (22)ம், சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை (46)யும் உணர்த்துகின்றன.  முதுகுடிப் பிறந்தோனாகிய வள்ளுவன் யானை மீதேறி ஊரையும் மன்னனையும் வாழ்த்திச் முரசறைந்ததை மணிமேகலை,
"வச்சிர்க் கோட்டத்து மணங்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி
ஏற்றுரி போர்த்த இடியுவ முழக்கின்
கூற்றுக்கண் விளிக்குங் குருதி வேட்கை
முருசுகடிப் படூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி
வான மும்மாரி பொழிக மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோ னாகுக" (மணிமேகலை, விழா.27-31)
என்று சுட்டுகின்றது.  அதியமான் நெடுமானஞ்சி ஔவையைத் தூது விட்டதையும் (புறம்.95), பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனிடம் அன்னச் சேவலைத் தூது விட்டதையும் (புறம்.67) காணலாம்.  மேலும், திருவள்ளுவர் 'தூது' என்ற அதிகாரமே எழுதியுள்ளார்.  திருவள்ளுவர் 'ஒற்றாடல்' (59) என்னும் அதிகாரத்தில் ஒற்று, ஒற்றர்கள் பற்றியும் விளக்கியுள்ளார்.

மேற்காணும் இவைகளெல்லாம் பண்டைக்காலத்துத் தகவல் தொடர்புச் சாதனங்கள் என்றே சொன்னாலும், இவைகளே, இதழியலின் தோற்றமாகத் திகழ்கின்றன.  கி.பி.3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அசோகர் கல்வெட்டுக்களில் தம் ஆணைகளையும், அறிக்கைகளையும், அறிவுரைகளையும், புத்தரின் கொள்கைகளையும் பொறித்தார். "ரோம் நாட்டை ஆண்ட ஜுலியஸ் சீசர் கி,மு. 60இல் அரண்மனைச் செய்திகளை 'ஆக்டா டைர்னா' என்ற பெயரில் எழுதிப் பொது இடங்களில் வைத்தார்.  அவர் போரிட்டுக் கொண்டிருந்த பொழுது, போர்ச்செய்திகளை தலைநகருக்கு அனுப்பிவைத்தார். இதனால் சீசரை 'இதழியலின் தந்தை' என்று அழைக்கின்றனர்.  ஆனால் சிலர், சீசருக்கு முன்பே கி.மு.106இல் சிசரோ பிறப்பு-இறப்பு விவரங்களை எழுதித் தனது அரண்மனைக்கு முன்னால் பலரும் பார்க்க அறிவித்தாரென்றும், ஆதலால் அவரையே இதழியலின்  முன்னோடியாகக் கருதவேண்டுமென்றும்" க. குளத்தூரான் அவர்களின் கருத்தை டாக்டர் மா.பா. குருசாமி அவர்கள் (இதழியல் கலை, பக்.40-41) மேற்கோளாகக் காட்டியுள்ளார்.  இவற்றினைப் பார்க்கும்போது, உலக இதழியலின் தந்தையாக சிசரோவையும், இந்திய இதழியலின் தந்தையாக அசோகரையும் குறிப்பிடலாம்.

அச்சுக்கலையும் இதழ்களின் தோற்றமும்

மொழியை ஏற்படுத்தி, அதனைப் புலப்படுத்த மனிதன் பலவகையான எழுது பொருள்களையும் எழுதப்படு பொருள்களையும் கண்டுபிடித்தான்.  எழுது பொருள்களாக கோரைப்புல், களிமண், மூங்கில் பத்தை, பட்டுத்துணி, கல், மரப்பட்டை, பனையோலை, செப்புத்தகடு, தோல், தங்கத்தகடு, வௌ¢ளித்தகடு போன்றனவும், எழுதப்படு பொருள்களாக தடித்த கூர்மையான நாணல் குச்சி, செடிகொடிகளின் சாறு, மிருகத்தின் இரத்தம், கூரான இரும்புக் கருவி, தூரிகை, உளி போன்றனவும் பயன்பட்டுள்ளன.

இவ்வாறு இப்பொருள்களில் பொறிக்கப்பட்டு வந்த செய்திகள் காகிதத்தின் வரவுக்குப் பிறகு இவற்றின் போக்கே மாறிவிட்டது.  காகிதத்தின் வரவும் அச்சுப்பொறியின் கண்டுபிடிப்பும் இத்தகவல் சாதனப் போக்கின் திசையை முற்றிலும் மாற்றிவிட்டது.  கி.பி.105இல் மல்பெரி மரப்பட்டையிலிருந்து சாய்லன் என்ற சீனாக்காரர் முதன் முதலாக காகிதம் செய்வதைக் கண்டுபிடித்தார்.  சீனர்களோடு வாணிபம் செய்த உலக மக்கள் காகிதம் செய்யும் கலையைக் கற்றுச் சென்றனர். கி.பி.795இல் அரேபியர்கள் பாக்தாத்தில் காகிதம் செய்யும் ஆலை ஒன்றை நிறுவினர்.

அச்சுக்கலையும் முதன்முதலில் சீனாவில் தான் தோன்றியது.  அவற்றில் மை தடவி தாளில் 'அழுத்தி' (press) அச்சிட்டனர்.  அச்சகத்திற்குப் 'பிரஸ்' என்று பெயர் வந்ததற்கும் இதுவே காரணமாகும்.  கி.பி.1041இல் பிசெங் என்ற சீனாக்காரர் களிமண்ணில் எழுத்துக்களைச் செய்து சுட்டு, தகடு சுத்தி, கடினப்படுத்தி, அச்சிடும் முறையைக் கொண்டு வந்தார்.  அதன்பின்பு அச்சுக் கலையில் புரட்சி ஏற்பட்டது.  கி.பி.1450இல் ஜான் கூடன்பர்க் என்ற ஜெர்மானியர் முதன் முதலில் அச்சுப் பொறியினைக் கண்டுபிடித்தார்.

காகிதமும் அச்சு எந்திரமும் கண்டு பிடிக்கப்பட்ட பின்பு இதழ்களின் வளர்ச்சி தொடங்குகின்றது எனலாம்.  ஜெர்மனி நாட்டில் மெயின்ஸ் நகரில் பிறந்த ஜான்கூடன்பர்க் தனித்தனி உலோக அச்சு எழுத்துக்களைக் கண்டுபிடித்த போது அச்சுப்பொறியையும் கண்டுபிடித்தார்.  அச்சுக் கலையின் தந்தை எனப் போற்றப்படும் அவர் கி.பி.1455இல் 'கீர்த்தனைகள்' என்ற புத்தகம் முழுமைபெற அச்சு எழுத்துக்களைப் பயன்படுத்தினார்.  இதுவே அச்சில் வெளியான முதல் புத்தகமாகும்.  உலோக அச்சு, அச்சுப்பொறி, அச்சுப் புத்தகம் ஆகிய மூன்றினுக்கும் 'ஜான்கூடன்பர்க்' தந்தையாவார்.  அதன் பின்பு இத்தாலியில் கி.பி.1465லும், பிரான்சில் கி.பி.1470லும், ஸ்பெயினில் கி.பி.1474லும், இங்கிலாந்தில் கி.பி.1477லும், மென்மார்க்கில் கி.பி.1482லும், போர்ச்சிகலில் கி.பி.1495லும், ரஷ்யாவில் கி.பி.1553லும் அச்சுக்கலை பரவியது.

இந்தியாவில் கி.,பி.1556ஆம் ஆண்டு கோவாவில் முதலாவது அச்சுக்கூடம் தோன்றியது.  இங்குக் கி.பி.1557இல் 'தம்பிரான் வணக்கம்' என்ற தமிழ் நூல் அச்சிடப்பட்டது.  இதற்குமுன், கி.பி.1498இல் வாசுகோடகாமா சேர நாட்டில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார்.  கி.பி.1550இல் அம்பலக்காட்டில் திருச்சபை ஒன்றை நிறுவினார்.  இச்சபையில் பயன்படுத்துவதற்காக கி.பி.1554இல் இலிச்பனில் (போர்த்துக்கல்) 'கார்த்தில்யா' என்ற 38 பக்கத் தமிழ் நூல் ரோமன் எழுத்துக்களில் அச்சாயிற்று.  இதுதான் முதல் தமிழ் அச்சுநூல்.

கி.பி.1577இல் கொல்லத்திற்கு ஓர் அச்சகம் வந்தது.  அங்கு கி.பி.1578ஆம் ஆண்டு மீண்டும் 'தம்பிரான் வணக்கம்' அச்சானது.  கி.பி.1578இல் திருநெல்வேலி புன்னைக்காயலில் ஓர் அச்சுக்கூடம் நிறுவப்பட்டது.  இங்குத் 'தமிழ் அச்சுத்தந்தை' என்று போற்றப்படும் திருத்தந்தை அண்டிறீக் எழுதி அச்சிட்ட 'அடியார் வணக்கம்' எனும் நூல் கி.பி.1586இல் அச்சானது.  அதன்பிறகு கி.பி.1674ஆம் ஆண்டு பம்பாயிலும், கி.பி.1679ஆம் ஆண்டு கேரளாவிலுள்ள அம்பலக்காட்டிலும் அச்சுக்கூடங்கள் நிறுவப்பட்டன.  கி.பி.1712ஆம் ஆண்டு தமிழ்நாடு-தஞ்சை மாவட்டம் - தரங்கம்பாடியில் ஓர் அச்சுக்கூடம் நிறுவப்பட்டது.  கி.பி.1713இல் இங்குத் தமிழ் எழுத்துக்கள் வார்க்கப்பட்டன.  கி.பி.1715இல் தாள் ஆலையும் நிறுவப்பட்டது.  இப்படித் தரங்கம்பாடியில் அச்சு எந்திரம், அச்சு வார்ப்பு, தாள் ஆலை என மூன்றும் ஒருசேர இருந்து இந்தியாவின் அச்சுக்கலைக்கு வித்தாய் அமைந்திருந்தது.  சீகன் பால்கு என்ற கிறித்துவத்துறவி 'நற்செய்தி'யை (பைபிள்) முதன் முதலில் தமிழ்ப்படுத்தினார்.  இந்நூல் கி.பி.1715இல் தரங்கம்பாடியில் அச்சாயிற்று.  இந்நூலுக்காகவே அச்சு வார்ப்பாலையும், அச்சுத்தாள் ஆலையும் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக அச்சுக்கலையின் தொடக்க காலத்தில் கிறித்துவ சமய பரப்பலுக்கான நூல்களே வெளிவந்துள்ளன.  இந்தியாவில் - ஏன் உலக அளவிலும் அச்சகங்கள் தோன்றி பல ஆண்டுகள் கழித்தே இதழ்கள் தோன்றியுள்ளன.

பருவ இதழ்

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிவருவதைக் 'கால இதழ்' (Periodical) அல்லது 'பருவ இதழ்' (Magazine) எனலாம்.  வாரம், திங்கள், திங்கள் இருமுறை, திங்கள் மும்முறை, இருதிங்கள், முத்திங்கள், நாத்திங்கள், அரையாண்டு, ஆண்டு என உறுதிசெய்யப்பெற்ற காலங்களில் தொடர்ந்து வெளிவருவதைப் பருவஇதழ் என்று கூறலாம்.  'பருவம்' என்னும் சொல்லானது,
"இவை பாராட்டிய பருவமு முளவே" (அகநா.26:11)
என்பது காலத்தையும், 
"ஆதவம் பனிமழை அனிலத் தச்சுறாப்
பாதவ மாமெனப் பருவ மாறினும்
பேதைபங் குடையவெம் பிரானை உன்னியே
மாதவம் புரிந்தனன் மதலை வேண்டியே" (கந்தபு.மார்க்.176)
என்பது ஓராண்டுக்குண்டான கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் ஆகிய ஆறு காலங்களையும்,
"காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல
மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண முன்னி
ஆசற நடக்கு நாளு ளைங்கணைக் கிழவன் வைகிப்
பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவஞ் செய்தான்"(சீவக.851)
என்பது ஆண்டுக்குண்டான பன்னிரண்டு திங்களில் ஒன்றான பங்குனித் திங்களைப் பங்குனிப் பருவம் என்று கூறியதால் பருவம் என்பது திங்களாவதையும்,
"கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்றா பெருஞ்செல்வம், இல்லத்து
உருவிடைக் கன்னியரைப் போல, பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும்" (நாலடியார், 274)
என்பது தக்க காலத்தையும், 
"பருவமா ராயிரந் தீர" (கம்பரா.அகலி.28)
என்பது ஆண்டையும் குறிப்பதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  ஆகப் பருவம் என்பது காலத்தையும் திங்களையும் ஆண்டையும் ஆண்டிற்குட்பட்ட சம காலப் பகுப்புகளையும் கொண்டது என்பது தெளிவாகின்றது.  ஓலையும் ஏடும் மிகப் பழமையான சொற்கள். புல்லினத்தின் உறுப்புகளைத் தொல்காப்பியர்,
"தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்" (தொல்.பொருள்.மரபு.86)
எனும் நூற்பாவால் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்பன பனை, தெங்கு, கமுகு முதலியவற்றின் இலைகளைக் குறிப்பிடுகின்றது என்கின்றார்.  எழுதப்பெற்ற நிலையில் உள்ளதைத் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  இன்றோ தாளில் எழுதப்பெற்று அல்லது அச்சடிக்கப்பெற்று ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிவருவதை ஏடு என்றும், இதழ் என்றும் அழைக்கின்றனர்.  அதாவது நாளேடு, வாரயேடு, திங்களேடு என்பன நாளிதழ், வார இதழ், திங்களிதழ் என்றழைப்பதால் உணரலாம்.  பழங்காலத்தில் எழுதப்பெற்று ஏடாகக் குறிப்பிட்டதை இன்று அச்சடித்த நூலாகவும் இதழாகவும் கருதுகின்றனர்.

"வடமொழி வாசகஞ் செய்தநல் லேடு" (சிலப்.15:58)
என்பது எழுதப்பெற்ற ஓலை ஏட்டையும்,
"பொருவருங் கவிதை யேட்டைப் போற்றிமுன்" (திருவிளை.கிழியறுத்த,11)
என்பது கவிதை எழுதப்பெற்ற ஓலையேட்டையும்,
"நீடுமெய்ப் பொருளின்உண்மை நிலைபெறுந் தன்மை யெல்லாம்
ஏடுற வெழுதி" (திருஞானசம்பந்தர் புராணம், 796)
என்பது எழுதவிருக்கும் ஓலையையும்,
"ஏட்டுப்பொறி நீக்கி மெல்லென விரித்து"(பெருங்கதை, 4.10.109)
"இறைவரும் கைவிடார் ஏடவர்பால் சென்ற
பிறரும் அறிந்து இன்பம் பெறலால்" (முதுமொழி மேல்வைப்பு, 69)
"ஆற்றல் அழியும் என்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின்புறத்து எழுதார் - ஏட்டுஎழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வு இன்று"(திருவள்ளுவமாலை, 15)
என்பன எழுதிய ஓலையையும் சுட்டுகின்றன.  எனவே ஏடு என்பது எழுதப்பெற்ற ஓலையைக் குறிப்பிடுவது தெளிவு.  ஏடும் இதழும் ஒன்றே என்பதை, 
"ஏடவிழ் மலரால் நான்பணிந்து ஏத்த அருள்செய்த"
எனும் தேவாரத் தொடர் உணர்த்துகின்றது.  பழங்காலத்தில் ஏடு என்பது இன்று இதழாகத் திரிந்துள்ளது எனலாம்.பாரதிதாசன் இதழைப் பற்றி "காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்" என்று வர்ணிக்கின்றார்.  ஆகப், பருவ இதழானது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து வெளிவருவது எனலாம்.

உலகப் பருவ இதழ்

கி.பி.1480ஆம் ஆண்டிலேயே ஆஸ்திரியாவில் அச்சகங்கள் இயங்கத் தொடங்கிவிட்ட போதிலும் லைனர்ஜெய்டாஸ் என்ற வார இதழ் கி.பி.1605ஆம் ஆண்டில் வெளிவந்தது.  இதுவே, உலகத்தின் முதல் வார இதழாகும். இவ்விதழ் கி.பி.1714ஆம் ஆண்டில் வளர்ச்சியுற்று நாளிதழாக மாறியது.  உலகத்தில் பிரசுரமான முதல் நாளிதழும் இதுதான்.  இனி உலகெங்கும் தோன்றிய முதல் இதழ்களை காலநிரல்படி வரிசைப்படுத்திப் பார்ப்போம். 'உலகப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும்' எனும் நூலில் கூறப்பெற்றுள்ள கருத்துக்களின் அடிப்படையில் இவ்வாண்டு நிரல் அமைக்கப்பெற்றுள்ளது.

ஐரோப்பாக் கண்டம்
லைனர்ஜெய்டாஸ் - 1605 (ஆஸ்திரியா)
நியுவிடிச் டிஸ்ஷெரி - 1605 (பெல்ஜியம்)
லா கெஸட் - 1631 (பிரான்ஸ்)
மெர்குர் ஜீசே போஸ்கியா - 1661 (போலந்து)
மெய்லிகௌரஸ் - 1702 (பிரிட்டன்)
பிராஸ்கோநோவினி - 1719 (செக்ஸ்லோவேகியா)
பியூலி ஈராயில் - 1762 (சுவிட்சர்லாந்து)
உறிப்உறியார்சே - 1763 (இத்தாலி)
நர்ஸ்கே இன்டலிஜன்ஸ் செட்வேர் - 1763 (நார்வே)
ஸ்லாவெனோ - 1768 (யூகோஸ்லாவியா)
ஸ்பிடிஷ் டிடிங்கல் - 1771 (பின்லாந்து)
காலமாயா - 1821 (கிரீஸ்)
குரியுனால் ருமேனிஸ்கி - 1829 (ருமேனியா)
ஆட்டன் பிளாடட் - 1830 (ஸ்வீடன்)
வக்சம்பர்ஜர் ஓர்ட் - 1848 (லக்சம்பர்க்)
டையானிட்டி கோடிசிகா - 1864 (போர்ச்சுக்கல்)
தாரபோனி - 1913 (அல்பேனியா)
டைம்ஸ் - 1864 (மால்டா)
ஐரிஷ் பிரஸ் - 1931 (அயர்லாந்து)
உறங்கிஸ்னோவி - 1942 (சைப்ரஸ்)
அமெரிக்கக் கண்டம்
தி பப்ளிக் அக்கரன்ஸஸ் - 1690 (அமெரிக்கா)
கெசட்டர் டி மெக்ஸ்கோ - 1722 (மெக்ஸிகோ)
கெசட்டேகுவாடி மாலா - 1729 (குவாடிமாலா)
நோவோஸ் காட்டியா - 1752 (கனடா)
எல்மெரிகுரியோ பெருவானா - 1791 (பெரு)
புஜி மிவியாண்டி - 1792 (ஈக்வடார்)
கெசட்டி பொலிட்டிக்கே - 1804 (¬உறட்டி)
கெசட்ட டிகாரகாஸ் - 1808 (வெனிசுலா)
லா அரோரா டிச்சிலி - 1812 (சிலி)
லா கெசட்டா - 1830 (உறாண்டுராஸ்)
டு ஜீல்புர் - 1848 (ஐஸ்லாந்து)
பியன் பன்னிகோ - 1878 (உருகுவே)
லிஸ்டில் டையோரியா - 1889 (டொமினிக்கன் ரிபப்ளிக்)
டயோரியா வாடிக்கே - 1890 (எல்சால்வடார்)
எல்ஜாலேடியா - 1909 (போர்ட்டோ ரீகோ)
டிரினிடாட் கார்டியன் - 1917 (டிர்னிடாட் டொபாக்கோ)
லா டிரிபியூன் - 1925 (பராகுவே)
ஆசியா கண்டம்
பெங்கால் கெசட் - 1780 (இந்தியா)
பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கெசட் - 1805 (மலேசியா)
கொழும்பு ஜர்னல் - 1832 (இலங்கை)
நியூஜிலாந்து கெசட் - 1840 (நியூஜிலாந்து)
ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் - 1845 (சிங்கப்பூர்)
சௌத் சைமாமார்னிங் போஸ்ட் - 1850 (உறாங்காங்)
உறாலேபனாஸ், உறரஜோலப் - 1863 (இஸ்ரேல்)
அல்உறி ஜாஜ் - 1908 (சவுதி அரேபியா)
சிராஜ் அல் அக்பர் - 1912 (ஆப்கானிஸ்தான்)
எல்ரே-அல்-கம் - 1960 (குவைத்)
உநௌ - 1974 (மல்கோரியா)
ஆப்பிரிக்கா கண்டம்
சிரியா-லியோன் கெசட் - 1801 (சிரியாலியோன்)
தி ராயல் கோல்டு கோஸ்ட் கெசட் - 1822 (கானா)
சௌத் ஆப்ரிக்கா கமர்ஷியல் அட்வர்டைசர் - 1824 (தென்ஆப்பிரிக்கா)
லைபிரியா ªஉறரால்டு - 1826 (லைபீரியா)
அல்வாகேயி - 1830 (எகிப்து)
லேசர்ஜில் - 1831 (மொரீஷயஸ்)
கெஜட்டி - 1870 (மடகாஸ்கர்)
ரொடிஷியா ªஉறரால்ட் - 1891 (ஜிம்பாப்வே)
அப்பிரிக்கன்ஸ்டாண்டர்ட் - 1902 (உகாண்டா)
லொராஸ்கே மார்கிஸ் உறார்டியல் - 1905 (மோசாம்பில்)
லிவின்ங்ஸ்டோன் மெயில் - 1906 (ஜாம்பியா)
என அமைந்திருக்கக் காணலாம்.  இவைகளைப் பார்க்கும் போது உலக நாடுகளிலேயே இதழ்களின் தொடக்கமாக கி.பி.1605இல் வெளியான லைனர்ஜெய்டாஸ் (ஆஸ்திரியா) மற்றும் நியுவிடிச் டிஸ்ஷெரி (பெல்ஜியம்) ஆகிய இரண்டு வார இதழ்களைத் தான் குறிப்பிட முடிகிறது.  எனவே, உலக இதழியல் வரலாற்றில் நாளிதழ், வார இதழ், மாதம் இருமுறை மற்றும் மும்முறை இதழ், மாத இதழ், முத்திங்களிதழ், நாத்திங்களிதழ், அரையாண்டிதழ், ஆண்டிதழ் ஆகியவைகளில் வார இதழே முதன் முதலில் வெளிவந்த பெருமையைப் பெறுகிறது.

இந்தியப் பருவ இதழ்

ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது இந்தியாவின் தலைநகராய் இருந்த கல்கத்தாவில் கி.பி.1780 சனவரி 29ஆம் நாளன்று ஜேம்ஸ் அகஸ்டஸ் இக்கே என்னும் ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் 'வங்காள கெசட்' என்ற முதல் வார இதழ் தொடங்கினார். இதுவே, இந்தியாவில் முதல் இதழுமாகும்.  இந்தியாவில் முதல் இதழ் ஆங்கிலத்தில்தான் வெளிவந்துள்ளது.  

அதுபோல் இந்திய மொழிகளில் வங்கமொழியில் தான் முதல் இதழ் வெளிவந்துள்ளது என்பர் இதழியலாளர்கள்.  ஆனால், அ.மா. சாமி அவர்கள், "இந்திய இதழியல் வரலாற்றைக் கல்கத்தாவில் இருந்து தொடங்குவார்கள்.  அதற்குக் காரணம், அன்று கல்கத்தா இந்தியாவின் தலைநகராக விளங்கியது.  அங்கே தான் இந்தியாவின் முதல் இதழும் முளைவிட்டது.  அங்கே வாழ்ந்த ஆங்கிலேயர் தான் முதன்முதல் இந்திய இதழியல் வரலாற்றை எழுதி வைத்தார்கள்.  இந்தியர்களும் இன்றுவரை அதை அப்படியே பின்பற்றிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, தாங்களாகச் சொந்தமாக ஓர் இதழியல் வரலாறு எழுதவேயில்லை.  உண்மையில் இந்திய இதழியல் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படவேண்டும்.  அச்சு இதழ்கள் தோன்றி வளர அச்சகங்களே அடிப்படை.  இந்திய மொழிகளில் முதன் முதல் அச்சுக்கண்டமொழி தமிழே" (19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள், ப.13) என்கிறார்.  இவரின் கருத்து ஆராயப்படவேண்டிய ஒன்றுதான்.  மேலும், இவர் இந்தியாவிலேயே தமிழ் மொழியில் தான் முதல் இதழ் தோன்றி இருக்கின்றது என்றும் வாதிடுகின்றார்.  இவரின் கூற்று ஏற்புடையதாகவே உள்ளது.  இந்திய மொழிகளின் முதல் இதழ்களை கால நிரல்படுத்திக் காண்போம்.
மாச தின சரிதை - 1812 (தமிழ்)
சமாச்சார் தர்பன் - 1818 (வங்காளம்)
திக் தர்சன் - 1818 (வங்காளம்)
மும்பாய்னா சமாச்சார் - 1822 (குஜராத்தி)
மீரட்-அல்-அக்பர் - 1822 (உருது)
ஊதந்த் மார்டண்டு - 1826 (இந்தி-தேவநாகரி)
பம்பாய் தர்பன் - 1832 (மராத்தி)
சத்தியதூதன் - 1835 (தெலுங்கு)
விஞ்ஞான நிக்ஷேபம் - 1840 (மலையாளம்)
அருணோதயா - 1846 (அசாமி)
கர்னாடிக் பிரகாசிகா - 1865 (கன்னடம்)
அக்பர் தர்பார் சாகிப் - 1867 (பஞ்சாபி)
ஆஷா - 1925 (ஒரியா) என அமைவதைக் காணலாம்.

தமிழ்ப் பருவ இதழ்

தமிழ்மொழியில் கி.பி.1554இல் 'கார்த்தில்யா' என்னும் அச்சுநூல் உருவாகி ஏறக்குறைய 250 ஆண்டுகள் கழிந்த பின்னரே இதழ்கள் தோன்றத் தொடங்கியுள்ளன.  கி.பி.1802இல் 'சிலோன் கெசட்' என்னும் மும்மொழி (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) இதழில் 'அரசாங்க வர்த்தமானி' என்ற தனிப்பெயருடன் தமிழ் இடம்பெற்றுள்ளது.  இவ்விதழின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு கட்டுரை அல்லது செய்தியும் மூன்று மொழிகளிலும் வெளியாகும்.  மூன்று மொழிகளில் ஏதாவது ஒன்றைத் தெரிந்தவர்கள் அந்தப் பத்திரிகையைப் படிக்கலாம்.

ஜான்மர்டாக்(கி.பி.1819-1904) அவர்கள் தொகுத்த 'தமிழ் அச்சு நூல்களின் பட்டியல்' என்னும் நூலை அவரது காலத்திலேயே 1865ஆம் ஆண்டு அச்சிட்டு வெளிப்படுத்தினார்.  இந்நூலில், 'பருவ இதழ்கள் - செய்தித்தாள்கள்' என்ற பகுதியில் அக்காலத்தில் வெளிவந்த 12 இதழ்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.  இப்பன்னிரண்டு இதழ்களில் பத்து இதழ்கள் கிறித்துவச் சமயத்தைச் சார்ந்ததாகவும் மற்ற இரண்டு இதழ்கள் பிரம்மஞான இயக்கத்தைச் சார்ந்ததாகவும் இருக்கின்றன.  இப்பட்டியல் முழுமையானதாக இருக்க முடியாது என்கிறார் அ.மா. சாமி.  "மர்டாக் தமிழில் அதிகப் புலமை இல்லாதவர்.  (இலங்கையில் கூட சிங்கள இதழ்தான் நடத்தினார்) இவரது தமிழறிவு மிகவும் குறைவு என்பது நூலின் முன்னுரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மற்ற இதழ்களைப் படிக்க அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.  கிறித்துவக் கல்விக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் கிறித்துவஇதழ்கள் அனைத்தும் மர்டாக்கின் பார்வைக்கு வந்திருக்கக் கூடும்.  மற்ற இதழ்களை அவர் பார்த்ததாகவே தெரியவில்லை. நமக்குத் தெரிந்து 1831 - 1865 ஆண்டுகளுக்கு இடையே இருபதுக்கு மேற்பட்ட இதழ்கள் (கிறித்துவ சமயத்தைச் சாராதவை) வெளிவந்தும், அவை பற்றி மர்டாக் குறிப்பிடாததற்கு இதுதான் காரணமாக இருக்கும்" (19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள், ப.26) என்னும் இவரின் கூற்று தமிழில் வெளிவந்த இவரது இதழ்களின் பட்டியலைக் காணும்போது உண்மையென்றே தோன்றுகிறது.

மர்டாக் பட்டியலில் தமிழ்மொழியில் முதன்முதலாக வெளிவந்த இதழாகத் 'தமிழ் மேகசி'னைக் குறிப்பிடுகிறார்.  இவ்விதழ் சென்னைக் கிறித்துவக் கல்விக் கழகத்தின் சார்பில் 1831ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  ஜான்மர்டாக் குறிப்பிடும் பட்டியலின்படி 'தமிழ் மேகசின்' (1831)ம், அ.மா. சாமி குறிப்பிடும் பட்டியலின்படி 'மாசத்தினச்சரிதை' (1812)ம் தமிழ்மொழியில் தமிழ் நாட்டில் வெளிவந்த முதல் இதழ் என்கிறார்கள்.  இதில் எது சரியானது?

இதழ்களின் பட்டியலில் 'தமிழ் மேகசின்' இடம்பெற்றிருக்கின்றது.  ஆனால் 'மாசத்தினச்சரிதை' இதழ்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.  மாறாக, 'மாசத்தினச் சரிதையின் அச்சுக்கூடம்' என்னும் அச்சுக்கூடத்தின் பெயரைக் கொண்டு 'மாசத்தினச் சரிதை' இதழைக் குறிப்பிடுகின்றார் அ.மா.சாமி.

உலகப் பொது மறையாம் திருக்குறள் முதல் முதலில் அச்சேறியது கி.பி.1812இல் தான்.  "திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர் பிழை தீர்த்துச் சென்னைப் பட்டினத்திற்கு அனுப்பிவிச்சு அவ்விடத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீனவித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடி கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டு அச்சிற் பதிப்பித்த காயிதப் பொத்தகம்" என்று அச்சேற்றியவர்களைப் பற்றி அந்நூலிலேயே குறிப்பு காணப்படுகிறது.  இந்நூலை யார் - எங்கு - எப்பொழுது - எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது என்பதை இந்நூலின் முகப்பு அட்டையில் இடம்பெற்றிருக்கும் குறிப்பு தெரிவிக்கின்றது.  "இது பொத்தகம் கலியுகாப்தம் 4900க்கு அங்கீரச வருடம் தொண்டை மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகர மலையப்பப்பிள்ளை குமாரன் ஞானப்பிரகாசனால் அச்சில் பதிக்கப்பட்டது.  மாசத்தினச்சரிதையின் அச்சுக்கூடம். இ.ஆண்டு 1812" என்னும் குறிப்பால் மாசத்தினச்சரிதை என்னும் அச்சுக்கூடத்தில் இருந்து 1812ஆம் வருடம் தஞ்சைநகர மலையப்பப்பிள்ளை குமாரன் ஞானப்பிரகாசன் அவர்களால் சென்னையிலிருந்து 'திருக்குறள் - மூலபாடம்' வெளிவந்ததாக அறிய முடிகிறது.

இதழ்கள் தோன்றிய காலந்தொட்டு இதழ்களின் பெயரில் அச்சகங்கள் நிறுவப்பட்டு வந்துள்ளன என்பது வரலாற்று உண்மை.  அதாவது அத்தினீயம் அண்டு டெய்லி நியூஸ் பிரஸ், இந்து பிரஸ், கல்வி விளக்க அச்சுக்கூடம், சுதேசமித்திரன் அச்சுக்கூடம், ஞானரத்னாகரம் அச்சுக்கூடம், ஞானபானு அச்சுக்கூடம், திராவிட வர்த்தமானி அச்சுக்கூடம், வித்தியா ரத்னாகரம் பிரஸ், மெய்ஞ்ஞான விளக்கம் அச்சுக்கூடம், வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், விவேக கலாநிதி பிரஸ், விவேக சந்திரோதயம் அச்சுக்கூடம், அத்வைத விளக்கம் என்னும் அச்சுக்கூடம் போன்ற பல இதழ்களின் பெயர்களில் அமைந்த அச்சுக்கூடங்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இக்கூற்றின்படி, 'மாசத்தினச்சரிதை' என்ற மாத இதழும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்திருக்கவேண்டும்.  திருக்குறள் இவ்வச்சகத்தின் வழியே கி.பி.1812இல் வெளியிடப்பட்டிருப்பதற்கு நூல் ஆதாரம் கிடைத்திருக்கின்றது.  இந்நூல் தோன்றிய கி,பி.1812ஆம் ஆண்டையே 'மாசத்தினச் சரிதை' மாத இதழின் ஆண்டாகக் கொள்ளப்ப்ட்டிருப்பது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை.  அச்சுக்கூடங்களின் வரலாற்றைப் பார்க்கும்போது முதலில் பிரச்சாரத் துண்டு அறிக்கைகளும் அரசின் ஆணைகளுமே வெளியிட்டுப் பிறகு பல மாத/ஆண்டுகளின் முயற்சியால் நூல்களை உருவாக்கியுள்ளனர்.  "உலக நாடுகளில் அச்சுக்கலையின் வளர்ச்சியையொட்டியே செய்தி வெளியீடுகள் துண்டுப் பிரசுரங்களாக அச்சிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன" என்கிறார் மு.அ. முகம்மது உசேன் (தமிழ் இதழியல், ப.19).  கி.பி.1455இல் 'கீர்த்தனைகள்' என்ற உபவாசப் பத்திரிகையை ஜான்கூடன்பர்க் வெளியிட்டார்.  இதுவொரு துண்டுப் பிரசுரமாகும்.  இது 13 பக்கங்களைக் கொண்டது.  இதன்பிறகு பல துண்டுப் பிரசுரங்கள் வெளிவந்து சேமிப்பாரின்றி அழிந்திருக்கலாம்.  முன்னர்க் குறிப்பிட்டது போல் 1455, 1465, 1470, 1474, 1477, 1482, 1495, 1553, 1556 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் அச்சகங்கள் நிறுவப்பட்டு இருக்கின்றன.  இவ்வச்சகங்களின் பணி எதுவுமே நமக்கு முழுமையாகத் தெரியவில்லை.  சேமிப்பதற்கு ஏதுவில்லாத கிறித்துவ சமயப் பரப்புத் துண்டுப் பிரசுரங்களை இவ்வச்சகங்கள் வெளியிட்டிருக்கலாம்.

கட்டடம் செய்யப்பெற்ற நூல்கள் உலகின் ஏதோவொரு மூளையில் கிடைப்பதால் அதனைக் கொண்டு அவ்வவற்றின் வரலாற்றைக் கணிக்கின்றோம்.  ஒரு அச்சகம் நூல்களை மட்டும் வெளியிடுவனவாக இருந்திருக்க முடியாது.  நூல்களை வெளியிடுவது அவ்வச்சகத் தொழில்களில் ஒன்றாகவே இருந்திருக்கின்றது.  ஒரு அச்சகத்தின் துணைத் தொழிலான நூல்வெளியீட்டைக் கொண்டு அவ்வச்சகம் நூல் வெளியிட்ட ஆண்டில் தோன்றியது என்று ஆணித்தரமாகக் கூறமுடியாது.  இவ்வச்சகம் நூல்களை வெளியிடுவதற்கு முன் பல ஆண்டுகள் அச்சுத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.  அனுபவமுள்ள அச்சுக்கூடத்தில் தான் நூல்கள் அச்சிடக் கொடுப்பது வழக்கம்.  1812இல் வெளியான 'திருக்குறள்-மூலபாடம்' தஞ்சையைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் சென்னையில் உள்ள 'மாசத்தினச்சரிதை' அச்சுக் கூடத்தில் ஏன் அச்சிட்டிருக்கிறார்.  அக்காலத்தில் இவ்வச்சுக்கூடம் 'மாசத்தினச்சரிதை' என்னும் மாத இதழைத் திறம்பட நடத்தி வந்திருக்கவேண்டும்.  இதனைக் கண்ட ஞானப்பிரகாசம் இவ்வச்சகத்தில் அச்சிட்டிருக்கவேண்டும் என்பதே உண்மை.  எனவே, அனுபவமிக்க அச்சகமாக மாசத்தினச்சரிதை அச்சுக்கூடத்தை கருதிப் பார்ப்பின் இவ்வச்சுக்கூடம் கி.பி.1812க்கும் முன்னரே 'மாசத்தினச்சரிதை' எனும் மாத இதழ் தமிழகத்தில் முதன் முதலில் வெளிவந்திருக்கக் கூடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக