இடுக்கண் வருங்கால் நகுக
முனைவர் மோ.கோ. கோவைமணி
இன்பம், துன்பம் ஆகிய இவ்விரண்டும் வாழ்வின் இரு கூறுகள். இன்பமே வாழ்வாகக் கொண்டவரும் துன்பமே வாழ்வாகக் கொண்டவரும் எருமேயில்லை. இவ்விரண்டும் ஒன்றன்பின் ஒன்று தொடர்ந்து மாறிமாறி வருவன. ஒருவன் இன்ப துன்பங்களுக்கு எவ்வாறு ஆட்படுகின்றான் என்பதைக் கொண்டே அவனுடைய மன நிலையை நிர்ணயம் செய்துவிடலாம். இன்பத்தின் போது துன்பம் வருவதும்; துன்பத்தின் போது இன்பம் வருவதும் இயல்பு. இவ்விரு நிலைகளின் போதும் மனிதனின் மனநிலை எவ்வாறு அமைகிறதோ அதற்குத் தக்கபடி அவனது பெருமைகளை இவ்வுலகம் பேசும். திருவள்ளுவப் பெருந்தகை 'இடுக்கண் வருங்கால் நகுக' என்கின்றார். இதனைப் வைத்துப் பார்க்கும் போது துன்பம் வரும்போது அத்துன்பத்திற்கு ஆட்படாமல் உளம் மகிழ்தலாக இருக்கவேண்டும். துன்பத்தை உடல் பெற்றாலும் உளம்பெறாது காத்தலே இதன்சிறப்பு. இத்தன்மை பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையான பெரியபுராணத்தில் எவ்வாறெல்லாம் இருக்கிறது எனக் காண்போம்.
இடுக்கண் செயல்
பெரியபுராணத்தில் இடம்பெற்ற நாயன்மார்களின் பெருமைகளை இறைவன் இரண்டு நிலைகளில் வெளிப்படுத்துகின்றார். ஒன்று, நேர்காணல் மூலம் பரிசோதிக்கப்பட்டு அடியார்களது பெருமையினை உலகுக்கு அறிவித்து ஏற்றல்; மற்றொன்று, நேர்காணலே இல்லாமல் அவரது பெருமையினை உணர்ந்து ஏற்றல். இதில் முதல் நிலை அடியார்களையே இறைவன் உள்ள நிலையில் இருந்து தாழ்த்தி உய்த்துணரச் செய்து உலகம் உய்யும் பொருட்டு உயர்த்திக் காட்டியுள்ளார். இவ்வகையில், பலர் உளரேனும் அவ்வகையினரையெல்லாம் ஆயின் ஆய்வு விரியும். எனவே, சிலரின் உளமகிழ்வை மட்டுமே இங்குக் காணமுடிந்தது.
1. அரிவாட்டாய நாயனார்
மிக்க செல்வத்து வேளாளர் குலத்தோன்றலாய் தாயனார் பிறந்தார். அவர் சிவபெருமானுக்கு ஏற்றன என்று செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நாள்தோறும் கொண்டு வந்து திருவமுது செய்விப்பாராய் இருந்தார். இதுவே, இவர்தம் தொண்டாகக் கொண்டிருந்தார். செல்வம் மிக்க காலத்து செய்துவந்த இத்திருப்பணி வறுமையுற்ற போழ்தும் தொடரலானார். மிக்க செல்வந்தராய் இருந்த தாயனார் நெல்லறுக்கும் வேலை செய்தார். செந்நெல் அறுத்து வரும் கூலியை இறையவர்க்குத் திருவமுதாக்கிப் படைத்தும், கார்நெல்லறுத்து வரும் கூலியைத் தாமும் உண்டு வந்தார். இந்நிலை நீண்டநாள் நீடிக்கவில்லை. இதிலும் மாற்றம் ஏற்பட்டது. வயல்களில் எல்லாம் நல்ல நீண்ட செந்நெல்லே விளைந்தன. தமக்கில்லையாயினும் இறைவர்க்குப் படைக்கவாவது கிடைத்ததே என்று உளம் மகிழ்வாராயினார். இதனைச் சேக்கிழார்,
"இந்த நன்னிலை இன்னல்வந் தெய்தினும்
சிந்தை நீங்காச் செயலின் உவந்திட" (அரிவாட்.7)
என்கிறார். தொடர்ந்து செந்நெல்லே கூலியாகக் கிடைக்க அவற்றையெல்லாம் இறைவர்க்கே அமுதாக்கிப் படைத்துவந்தார். வீட்டுத் தோட்டத்தில் விளையும் கீரை வகைகளை மட்டுமே தாம் உணவாகக் கொண்டார். அதுவும் தீர்ந்து போகவே தண்ணீர் குடித்து வாழ்ந்து வந்தார். இவ்வளவு துயர வறுமை வந்த போழ்தும் தாயனாரின் கொள்கையில் மாற்றங் கொண்டிலர். அப்போதும் செந்நெல்லறுத்த கூலியை இறைவர்க்கே அமுது படைத்து வந்தார். இவர்தம் உச்சகட்ட வறுமையைச் சேக்கிழார்,
"போதரா நின்றபோது புலர்ந்துகால் தளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார் மட்கல மூடு கையால்
காதலால் அணைத்தும் எல்லாம் சமரிடைச் சிந்தக் கண்டு
பூதநா யகர்தந் தொண்டர் போவதங் கினியேன் என்று" (அரிவாட்.15)
என்று கூறுகிறார். தங்களுடைய நாடி முற்றிலும் தளர்ந்தபோழ்தும் இறைவர்க்கு அமுது படைக்கச் செல்லும் மனத்திடம் இங்கு வெளிப்படுகிறது. தனக்குப் பிறகே தானம் தருமம் என்பர். உண்பதற்குகந்த உணவு கையில் இருந்தும் கொண்ட கொள்கையில் நின்ற தாயனார் அது இறைவர்க்கானதே ஒழிய நமக்குரிமை இல்லாதது என்றவராய் நின்ற தன்மை புலப்படுகிறது. இதனால் இவர்க்கு வறுமைதான் - துயரந்தான் எனினும் அவ்வறுமையும் துயரமும் ஊனுக்கேயன்றி உளத்திற்கில்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்.
2. இளையான்குடி மாறநாயனார்
இவர், தம்முன் வரும் சிவனடியார்கள் யாவரேனும் அவர்களை எதிர்கொண்டு தமது மனைக்கு அழைத்துவந்து பாதம் விளக்கி ஆசனத்திலமரத்திப் பூசித்து நான்கு வகையாலும் அறுசுவையாலும் அமைந்த நல்ல உணவை ஊட்டி வந்தார். இவ்வாறு ஒவ்வொரு நாளும் அடியார்கள் வந்து மகேசுவரபூசை கொண்டு மகிழ்ந்து வாழ்த்திச் சென்றதின் பயனாக செல்வங்கள் பலபெற்று வாழ்ந்து வந்தார்.
செல்வம் மிக்க காலத்தே செய்வதான இத்திருப்பணியை வறுமைக் காலத்தும் இத்திருப்பணியில் சிறிதும் குறைவு நேரிடாதவாறு செய்துவந்தார். இதற்காகத் தம்மிடமிருந்த பொருள்களையெல்லாம் விற்றொழித்தார். பொருள்கள் எல்லாம் தீர்ந்து போகவே கடன்கள் பெற்றுத் திருப்பணியைச் செய்தார். அடியார்க்கு மகேசுவர பூசை செய்வதாகக் கொண்ட கொள்கையில் மாற்றம் சிறிதும் பெறாதவராக வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் மழைக்காலம், நள்ளிரவு நேரம். உண்பதற்கு உணவும் உறக்கமும் இன்றி, வேறு ஆதரவும் இன்றி மனையில் இருந்தபோழ்து இறைவன் அடியார்போல் வேடம் பூண்டு நாயனார் மனையடைந்தார். இந்நிலையிலும் நாயனார் அவரை எதிர்கொண்டு அழைத்து திருமேனியை ஈரம்போக்கி ஆசனம் தந்து அமரச்செய்து அவர்க்கு உணவு ஊட்ட எண்ணினார். வீட்டில் ஒரு குன்றிமணி நெல்லோ அரிசியோ இல்லை. அவரே மிக்க வறுமையில் உணவும் உண்ணாது இருக்கிறார். இந்நிலையில் அடியாரை எப்படி உபசரிக்க முடியும்? கொண்ட கொள்கையில் நழுவ அவர் எண்ணம் இடம்தரவில்லை. இன்று அடியார்க்கு அழுது படைக்கும் வழிமுறையையே எண்ணினார். நீதிமுறை வழுவாத தன் மனையாளுடன் ஆலோசனை செய்யலுற்றார். இறுதியாக,
"செல்லல் நீங்கப் பகல்வித் தியசெந்நெல்
மல்லல் நீர்முளை பகல்வித் தியசெந்நெல்
வல்ல வாறமு தாக்கலும் ஆகும்" (இளையான்குடி.13)
என்ற முடிவுக்கு வருகின்றனர். விதைத்த செந்நெல்லை எடுத்து வந்து அமுது ஆக்குதல் என்பது கருவிலேயே குழந்தையை அழித்தது போலல்லவா ஆகும். தமக்கு உணவு உண்பதற்கு இல்லாத போழ்து தோன்றாத இவ்வுணர்வு அடியார்க்கு உணவு சமைத்தே ஆகவேண்டும் என்ற கடப்பாடு ஏற்படும் போது இவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. எவ்வகையான துயரம் வந்திட்ட போழ்திலும் அவற்றை உளமகிழ்ந்து ஏற்று உற்ற வகையான் செயலாற்றும் திறனை இளையான்குடி மாற நாயனாரிடம் காணமுடிகிறது.
3. மானக்கஞ்சாற நாயனார்
அரனடியார்களே தம்மையும் தமது உடைமைகளையும் உடையவர்களென்று உணர்ந்து, அவர்களுக்கே ஏவல் செய்யும் தொழில் புரிந்து, அவர்கள் வேண்டுவனவற்றைக் கூறுவதன் முன் குறிப்பறிந்து செய்துவந்தவர் மானக்கஞ்சாறனார். இறைவன் திருவருளினாலே நீண்ட நாட்களுக்குப் பிறகு அழகிய பெண்பிள்ளைக்குத் தந்தையானார். சீரோடும் சிறப்போடும் அப்பெண்குழந்தையை வளர்த்து வந்தார். மிகவும் வளர்ச்சி அடைந்து உரிய வயதில் மணப்பருவம் அடைந்தாள். அவளுக்கு மணம் செய்ய எண்ணி ஏயர்கோனுக்கு நிச்சயம் செய்தார்கள் பெரியோர். மானக்கஞ்சாறனாரது திருமனையிலும் நகரிலும் மண அலங்காரங்கள் சீரோடும் சிறப்போடும் செய்திருந்தனர். ஏயர்கோனாரும் தமது சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்திருந்தார். திருமணம் இனிதே நிறைவேறும் என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் இறைவன் மாவிரம முனிவராக வேடங்கொண்டு திருமணப் பந்தலுள் நுழைகிறார். மானக்கஞ்சாறனார் அவரை எதிர்கொண்டு அழைத்து வந்து இங்கு நடப்பனவற்றைக் கூறுகிறார். உளம்மிக மகிழ்ந்த நாயனார் மணக்கோலத்தில் நின்ற தன்னருமை மகளை அழைத்து வந்து அடியவரின் திருவடியில் பணியச் செய்கிறார். இவ்வேளையில் அடியார் தமக்கொன்று இவ்விடம் வேண்டும் என்கிறார். என்னவென உரைப்பீராகில் ஏதுவாய் இருக்கும் என்ன, அடியார்,
"மஞ்சுதழைத் தெனவளர்த்த மலர்க்கூந்தல் புறம்நோக்கி
அஞ்சலிமெய்த் தொண்டரைப் பார்த்தணங்கிவன்தன் மயிர்நமக்குப்
பஞ்சவடிக் காம்என்றார்" (மானக்கஞ்.29)
இதனைக் கேட்ட மானக்கஞ்சாறனார் சற்றும் தயக்கம் கொள்ளாமல் மணக்கோல அலங்காரத்தில் இருக்கும் தன் மகளின் கூந்தலை அரிந்தார். இதனைச் சேக்கிழார்,
"அருள்செய்த மொழிகேளா அடற்சுரிகை தனைஉருவிப்
பொருள்செய்தாம் எனப்பெற்றேன் எனக்கொண்டு பூங்கொடிதன்
இருள்செய்த கருங்கூந்தல் அடியில்அரிந் தெதிர்நின்ற
மருள்செய்த பிறப்பறுப்பார் மலர்க்கரத்தி னிடைநீட்ட" (மானக்கஞ்.30)
என்கிறார். மணக்கோலத்தில் இருக்கும் மகளின் மணக்கூந்தலை அரிதல் என்பது எல்லையில்லா துயரந் தருவதாகும். நல்ல செயல் நடந்துகொண்டிருக்க அச்சமயம் ஒருகேடு நிகழுமாயின் அதனையே முதலாகக் கொண்டு மகளின் வாழ்வு கெடுப்பாரும் உண்டு. இவ்வெவற்றையும் கருத்தில் கொள்ளாது இறைத்தொண்டில் இத்துயரச் செயல் அவருக்கு உளமகிழ்வாகவே இருந்திருக்கிறது. தன்னிடம் உள்ளதையே அடியார் கேட்டார் எனப் பூரிப்பும் கொள்கிறார்.
4. சிறுத்தொண்ட நாயனார்
தீதில் குடிப்பிறந்த திருவெண்காட்டு நங்கையுடன் ஒத்த கருத்துடன் சிறுத்தொண்டர் மனைவாழ்வு வாழ்ந்து வந்தார். நாள்தோறும் சிவனடியார்களை முறைமைப்படி முன்னர்த் திருவமுதூட்டிப் பின்னரே தாம் உண்ணும் நிலையினை நித்த நித்தம் நியமாகக் கொண்டு ஒழுகி வந்தார். இப்படியே செய்து வருங்கால் இறைவர் பயிரவர் வடிவுதாங்கி சிறுத்தொண்டர் மனை புகுந்தார். அன்று அமுதுண்ண அடியார் எவருமில்லாது கவலையுற்றிருந்தவருக்கு இவரின் வருகை பேரின்பத்தைத் தந்தது. பயிரவர் உடனே உணவு உண்ண மறுத்துத் தாம் உண்பது பற்றிக் கூறுகிறார். இதனைச் சேக்கிழார்,
"நண்பு மிக்கீர்! நாம்உண்ணப் படுக்கும் பசுவும் நரப்பசுவாம்;
உண்ப தஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறுவிண் றேல்இன்னம்
புண்செய் நோவில் வேலெறிந்தாற் போலும் புகல்வ தொன்றென்றார்" (சிறுத்தொண்.50)
என்கிறார். இதனைக்கேட்ட சிறுத்தொண்டர் அப்படியேயாகட்டும் என்று அமுது செய்விக்க விடைபெற்றுச் செல்கின்றார். பயிரவரின் எண்ணப்படி எத்தந்தையும் தாயும் உடன்படமாட்டார் என உணர்ந்த சிறுத்தொண்டர் திருவெண்காட்டு நங்கையுடன் கலந்தாலோசித்து தம்குலம் தழைக்க உதித்த குலக்கொடியையே பயிரவரின் உணவுக்குப் பக்குவப்படுத்துகின்றார்.
குலம் தழைக்கவந்த குலக்கொடிக்கு உடம்பில் சிறு காயம் பட்டாலே பெருந்துயரம் கொள்ளும் நாட்டினரிடையே தம் மகனையே தாய் மடியிருத்தித் தந்தையரிந்து சமைக்கும் செயல் எத்தகைய கொடுமை, இக்கொடுமைக்குச் சற்றும் இடம்கொடுக்காத சிறுத்தொண்டன் கொண்ட கொள்கையில் நின்று பிள்ளைக்கறி சமைத்தார். இக்கொடுமையினையும் ஓரளவு சகித்துக்கொண்டாலும் அடியாருடன் அன்னப்பகிர்புக்கு இன்னொரு சிவனடியாராகத் தானே உண்ண அமர்வது இது அதனினும் கொடுமையன்றோ.
இச்செயல்களையெல்லாம் சிவச்செயலாகவே கருதிய சிறுத்தொண்டருக்குத் துன்பமாகப் படவில்லை. இத்துன்பச் செயலை, கொடுமையான இச்செயலை, உளமகிழ்வுக்கு ஒவ்வாத செயலை இவர் உளமகிழ்வோடு செய்தமை உலகம் போற்றும் செயலாகும்.
5. கண்ணப்ப நாயனார்
இவர், இறைவன் மீது ஆறாத பேரன்பு கொண்டிருந்தார். மாமிசப் படையல் இறைவர்க்குப் படைக்கலாகாது என்ற உணர்வற்றிருந்த திண்ணனார் தாம் உண்ணும் வகையெல்லாம் இறைவரும் உண்ணும் தன்மையினர் என்று எண்ணியிருந்தார். நியமம் இல்லாத இவரின் பூசை முறைகளையும் இறைவன் ஏற்றுக்கொண்டார். இவரின் பூசை முறையில்லாததைக் கண்ட சிவகோசரியார் வெகுண்டார். அன்பின் மேலெல்லை காரணமாகத் திண்ணனார் செய்கிறார் என்பதை உணர்த்துவதற்காக ஒருநாள் சிவபெருமானின் திருக்கண்ணில் குருதியை வடிக்கின்றார். இதனைக் கண்ட திண்ணனார் மருந்துகொண்டு குணப்படுத்த எண்ணுகிறார், முடியவில்லை. 'உற்ற நோய் தீர்ப்ப தூனுக்கூனெனும்' உரையை உணர்ந்தவராய்த் தன்னுடைய ஒரு கண்ணைப் பெயர்த்து இறைவனுக்கு அப்பினார். குருதி நின்றது; ஆனந்தக் கூத்தாடினார். சற்று நேரத்தில் மற்றொரு கண்ணிலும் குருதி பாய்ந்தது. இப்பொழுது சற்றும் யோசியாமல் அடுத்த கண்ணைப் பெயர்த்து இறைவனுக்கு அப்ப முயச்சி செய்கிறார். இதனைச் சேக்கிழார்,
"கண்டபின் 'கெட்டேன்' எங்கள் காளத்தி யார்கண் ஒன்று
புண்டரு குருதி நிற்க மற்றைக்கண் குருதி பொங்கி
மண்டுமற் றிதனுக் கஞ்சேன் மருந்துகை கண்டேன்; இன்னும்
உண்டொரு கண்;அக் கண்ணை இடந்தப்பி ஒழிப்பேன்' என்று" (கண்ணப்.180)
என்கிறார். இந்த மனப்பான்மை திண்ணனாராகிய கண்ணப்பருக்கன்றி வேறு யாருக்கு வரும். கண்ணைப் பெயர்த்துக் கொடுத்தல் என்பது மானிடரால் இயலாதசெயல். தன்னுடைய கண் பெயர்ப்பதால் ஏற்படும் துன்பத்தை அவர் எண்ணவில்லை; ஒருகண் பெயர்த்த பிறகு அதில் ஏற்படும் வலியையும் குருதி வடிவதையும் எண்ணிப் பார்க்கவும் அவருக்கு மனமில்லை; இறைவர்க்கு அடுத்த கண்ணிலும் குருதி பாயவே உற்ற உபாயம் செய்யத் துணிகிறார். தன் துன்பத்தைப் பெரிதுபடுத்தாமல் இறைவன் துன்பத்தை உணர்த்த கண்ணப்பரின் உளமகிழ்வு இங்கு எண்ணத்தக்கதாகும்.
6. அதிபத்த நாயனார்
பரதவக் குலத்தோன்றலான அதிபத்தர், சிவபெருமான் மீது மிகுந்த பக்திகொண்டவராகத் திகழ்ந்தார். கடலிலே சென்று மீன் பிடிக்கும் தொழிலில் வல்லவராகத் திகழ்ந்து மிகுந்த செல்வந்தராகவும் வாழ்ந்துவந்தார். இவர்தம் தொழிலில் ஒரு நெறியைப் பின்பற்றி வந்தார். இதனைச் சேக்கிழார்,
"பட்ட மீன்களில் ஒருதலை மீன்படு தோறும்
நட்ட மாடிய நம்பருக் கெனநளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாதஅன் புடனென்றும் விருப்பால்" (அதிபத்த.11)
எனக் கூறுகின்றார். சிலநாள் கடலில் மீன்கள் அதிகம் கிடைக்காததால் தொழிலில் மந்தம் ஏற்பட்டது. அப்பொழுதும் தம் கொள்கையில் இருந்து வழுவாமல் கிடைத்த மீன்களில் தலையாய மீனை இறைவனுக்காகக் கடலலையில் விட்டுவந்தார். தம் செல்வங்களையெல்லாம் இழக்கும் நிலை ஏற்பட்டது. பிறகு ஒரேவொரு மீன் மட்டுமே தினந்தினம் கிடைக்கத் தொடங்கியது. அப்பொழுதும் தாம்கொண்ட கொள்கையில் வழுவாமல் கிடைத்த அவ்வொரு மீனையும் கடலலையில் விட்டுவந்தார். ஒருநாள், செஞ்சுடர் உதித்ததுபோல் உலகெலாம் வியக்கத்தக்க மீன் ஒன்று மட்டுமே கிடைத்தது. இவ்வொரு மீனே இவ்வுலகை வாங்கும்செல்வம் தரத்தக்கது. ஆனால், நெறி தவறாது வாழ்ந்த அதிபத்தர்,
"பொன்தி ரட்சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால்
ஒன்றும் மற்றிது என்னைஆ ளுடையவர்க் காகும்
சென்று பொற்கழல் சேர்கெனத் திரையொடுந் திரித்தார்" (அதிபத்த.17)
இச்செயல் யாருக்கே வரும். தமக்கு எவ்வளவுதான் துன்பங்கள் நேரினும் தன் சிந்தையில் வேறு மாற்று எண்ணங்கள் புகாதபடி காத்த அதிபத்தரின் உள்ளத்தை எப்படிப் பாராட்டுவது.
7. கலிய நாயனார்
திருவொற்றியூரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் திருக்கோயிலின் 'உள்ளும், புறமும், அல்லுநெடும் பகலும்இடுந் திருவிளக்கின் அணிவிளை'விக்கும் தொழிலைச் சிரமேற் கொண்டு செய்து வந்தார் கலிய நாயனார். தம்முடைய செல்வமெல்லாம் தேய்ந்தழிந்த பின்னையும் இத்திருப்பணியில்,
". . . . . . . . . . பேராத பேராளர்
வருமரபில் உள்ளோர்பால் எண்ணெய்மா றிக்கொணர்ந்து
தருமியல்பிற் கூலியினால் தமதுதிருப் பணிசெய்வார்" (கலிய. )
என்கிறார் சேக்கிழார். இப்படியாகத் திருப்பணி செய்து வந்தபோது, கூலி வேலை செய்யவும் நெருக்கடி நேரிட்டுவிட்டது. பணிசெய்வார் பலராயினர்; திருவிளக்கேற்ற எண்ணை பெறமுடியாத நிலை வந்துற்றது. எல்லா பொருள்களையும் இழந்த கலிய நாயனார், தன்னுடைய மனைவியை விற்கத் துணிந்தார். இழிவான இச்செயலை எவரும் ஏற்பாரில்லை. எந்நிலையிலேனும் திருவிளக்கேற்ற எண்ணியவர்,
"மணிவண்ணச் சுடர்விளக்கு மாளில்யான் மாள்வன்" (கலிய.14:3)
எனத் துணிகிறார்.
"திருவிளக்குத் திரிஇட்டங் ககல்பரப்பிச் செயல்நிரம்ப
ஒருவியஎண் ணெய்க்கீடா உடல்உதிரங் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறரிய" (கலிய.15)
முற்படுகின்றார் கலிய நாயனார். இச்செயல் அவரின் உள்ளத் தெளிவைப் புலப்படுத்துகிறது. எத்துன்பம் வரினும் மனைவியை விற்றேனும் திருவிளக்கேற்ற வேண்டும் என்ற துணிவு எவர்க்கும் எளிதில் வாராது. அப்படி வரின் அவர் துன்பத்தில் உளம் மகிழும் பேராண்மை பெற்றவராகத்தான் இருக்கமுடியும். இப்பண்பு கலிய நாயனாரிடம் காணமுடிகிறது.
8. மூர்த்தி நாயனார்
மதுரை, திருஆலவாயிலில் கோயில் கொண்டிருக்கும் சொக்கலிங்கப் பெருமானின் திருமேனிக்குத் தினமும் மெய்ப்பூச்சுக்குச் சந்தனக்காப்பு அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை என்றும் வழுவாமல் செய்துவந்தார் மூர்த்தி நாயனார். சமணர் நாட்டைக் கைப்பற்ற சைவர்தம் திருப்பணிகளுக்குச் சமணர்கள் இன்னல்கள் பல செய்யத் தலைப்பட்டனர். இவ்வின்னல்களுக்கு மூர்த்தி நாயனாரும் உட்பட்டார். இவரது திருப்பணியான சந்தனம் அரைத்துக் கொடுக்கும் பணியில் ஊறுகள் பல செய்தனர். எங்குமே சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்துவிட்டனர். வருந்தினார் மூர்த்தியார். இதற்கு என்ன தீர்வு காண்பது என யோசித்தவர்
"நட்டம்புரி வாரணி நற்றிரு மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்
கட்டும்புறந் தோல்நரம் பென்பு கரைந்து தேய" (மூர்த்தி.20)
செய்கிறார். இத்துணைத் துணிவு அவருக்கு எப்படி வந்தது? இறைவன் மீது கொண்ட பற்றும், கொண்ட கொள்கையில் வழுவாமையுமே யாகும். தன்னுடல் துயருற்றாலும் திருக்காப்புக்குச் சந்தனம் அரைத்துக்கொடுத்தே யாகவேண்டும் என்ற மனத்துணிபால் தன்னுடலுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பெரிதுபடுத்தாமல் மனதிற்கு ஏற்படும் இன்பத்தையே பெரியதாக நாடினமை இங்குப் புலப்படுகின்றது.
9. அப்பூதியடிகள்
"வடிவுதாங் காணா ராயும் மன்னுநீர் வாக்கின் வேந்தர்
அடிமையுந் தம்பி ரானார் அருளுங்கேட் டவர்நா மத்தால்
படிநிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலா யுள்ள
முடிவிலா அறங்கள் செய்து" (அப்பூதி.3)
அப்பூதியடிகள் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அப்பூதியடிகளின் மனையகத்தே தாம்போற்றும் இறைத்தொண்டர் திருநாவுக்கரசர் வந்தது கண்டு பெரும் மகிழ்வுற்றிருந்தார். 'தேசம் உய்ய வந்தவரைத் திருவமுது செய்விக்கும்' படிக் கேட்டுக்கொண்டு 'தூயநற் கறிகளான அறுவகைச் சுவையில் ஆக்கி'ய பிறகு தம்குலக்கொடியான இளம்திருநாவுக்கரசை வாழை இலை குருத்தைக் கொண்டுவா எனப் பணித்ததுமே, உளம் மகிழ்வால் இளங்குருத்து வாழையிலையைக் கொண்டுவர தோட்டத்திற்குச் செல்கின்றான். இலையைப் பறித்ததுமே அரவம் தீண்டுகிறது. விடம் வேகமாக முந்த, அதற்கும் முன்னர் திருநாவுக்கரசர்க்கு அன்னம் பரிமாறத் தேவையான வாழையிலையில் மாசு பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தவனாய், தன்னை அரவம் தீண்டியதையும் பெரிதுபடுத்தாமல்,
"எரிவிடம் முறையே ஏறித் தலைக்கொண்ட ஏழாம் வேகம்,
தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீந்து
விரியுரை குழறி ஆவி விடங்கொண்டு மயங்கி வீழ்வான்,
பரிகலக் குருத்தைத் தாயார் பால்வைத்துப் படிமேல் வீழ்ந்தான்"
(அப்பூதி.27)
தனக்கிட்ட செயல் எதுவாயினும் அதை எத்துயர் வந்திடினும் நிறைவேற்றும் இச்சிறுவனின் மனவுறுதியை இங்குக் காண்கிறோம். இதற்கும் மேலே ஒருபடி உயர்ந்து போகிறார் அப்பூதியார்,
"பெறலரும் புதல்வன் தன்னைப் பாயினுட் பெய்து மூடிப்
புறமனை முன்றிற் பாங்கோர் புடையினில் மறைத்து வைத்தே,
அறஇது தெரியா வண்ணம் அமுதுசெய் விப்போம்" (அப்பூதி.29)
என்ற எண்ணம் கொண்டு செயலாற்றுகின்றார். எல்லையில்லாத் துயரம் பெற்று இருந்தாலும் வாராது வந்த திருத்தொண்டர் திருநாவுக்கரசருக்கு அமுதளிப்பதில் ஊறு நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக உளமகிழ்வாகச் செய்த இச்செயலை என்னென்று சொல்வது.
இப்படியாக இவ்வொன்பது நாயன்மார்களன்றி இன்னும் பலர் இடுக்கண் வருங்கால் நகுதலைச் செய்திருக்கின்றனர்.
"ஈர அன்பினர் யாதும் குறைவிலார்"
"ஈண்டுவரும் துயருளவோ ஈசன் அடியார்க்கு"
"நடுக்கம் கெடுப்பது நமச்சி வாயமே"
என்னும் இம்மூன்று பொன்மொழிகளைத் தன்னகத்தே கொண்டு இருந்ததால் தான் இவர்களால் தமக்கேற்பட்ட துயரினைப் பெரிதுபடுத்த முடியவில்லை. இன்றைய சமுதாயத்திற்கு இந்தக் கருத்துகள் ஒப்பாகுமா என்று பார்க்கும்போது, ஒரு குடும்பத் தலைவன் தன்குடும்பம் நல்வழிப்பட வேண்டுமாயின், தான் பல இடர்களையும் அனுபவித்து அதனை வெளிக்குக் காட்டாமல் குடும்பத்தில் உள்ளோர் கூட அறியாதபடி அனுசரித்துச் செல்லவேண்டும். இல்லையேல் குடும்பம் இடர்ப்படுவது உறுதி. எனவே, இக்கருத்துகள் இன்றைய சமுதாயத்திற்கு மட்டுமல்ல என்றைக்கும் உகந்ததே என்று உறுதியாகக் கூறலாம். மக்களின் உயர்வுக்குப் பெரியபுராணம் வழிவகுக்கிறது எனலாம். அதாவது, கொண்ட கொள்கையில் வழுவாமலும் தனக்கிட்ட பணியில் இடர்நேராவண்ணம் காத்தலும் செய்தாலே வாழ்வில் மேன்மை தானாக வரும் என்பதுண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக