செவ்வாய், 15 மே, 2018

அப்பர் பாடல்களில் எழுத்துப்போலிகள்


அப்பர் பாடல்களில் எழுத்துப்போலிகள்
முனைவர் மோ.கோ. கோவைமணி
இணைப்பேராசிரியர், தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் – 613 010.
       ஒரு சொல்லில் ஓரெழுத்திற்கு மாற்றாக வேறோர் எழுத்து வந்தாலும் அச்சொல்லின் பொருள் மாறாது.  அவ்வாறு வந்த எழுத்தை 'எழுத்துப்போலி' என்றும், போலி எழுத்து என்றும் கூறுவர்.  இவ்வெழுத்துப்  போலியானது அப்பர் பாடல்களில் பயின்று வரும் தன்மை குறித்து இக்கட்டுரை ஆராய்கின்றது.
எழுத்துப்போலி
       தொல்காப்பியர், அகரமும் இகரமும் கூடி ஐகாரம் போலாகுமென்றும், அகரமும் உகரமும் கூடி ஔகாரம் போலாகுமென்றும், அகரத்துடன் யகரமெய் கூட ஐகாரம் போலாகுமென்றும், அகரத்துடன் வகரமெய் கூடி ஓளகாரம் போலாகுமென்றும், மொழியீற்றில் இகரம் யகரம் போலாகுமென்றும் எழுத்துப் போலிகளின் வகைகளை ஐந்தாக்குகின்றார் (தொல்.மொழிமரபு நூ.21-25),  தொல்காப்பியர் பொதுவாகக் கூறிய எழுத்துப் போலிகளுக்கு நன்னூலார் பெயர் சுட்டிச்செல்கின்றார். அதாவது மொழிக்கு முதல்-இடை-கடைப் போலிகளைச் சுட்டியவர், ஓசையின்பம் காரணமாக அடிஎதுகை மற்றும் அடிமோனைத் தொடைகளில் ஐகார நெட்டெழுத்திற்கு இகரயகரங்களும், ஓளகார நெட்டெழுத்திற்கு உகர வகரங்களும் வரும் என்கின்றார் (நன்னூல், நூ.122-125).  இவ்விருவரின் கருத்துக்களையும் உட்கொண்டு இலக்கண விளக்கம் யாத்த திருவாரூர் வைத்தியநாத தேசிகர் அவர்கள் தம்முடைய உரைப் பகுதியில் 'முற்றுப்போலி' ஒன்றுண்டு என்பதைக் கம்பராமாயணக் காப்புப் பாடலில் வரும் 'அஞ்சு - ஐந்து' என்பதை எடுத்துக்காட்டியிருக்கின்றார்.
       தொல்காப்பியர் சுட்டிய 'போலி'யை நன்னூலார் 'போலி, சந்தியக்கரம்' என்று இரண்டாக்கிப் பார்த்துள்ளார்.  மேலும், இலக்கணக் கொத்துடையார் 'இணையெழுத்து' என்றும்; வைத்தியநாத தேசிகர் (இலக்கண விளக்கம், நூ.36), நச்சினார்க்கினியர் (தொல்.நூ.54), வீரசோழியம் நூலாசிரியர் (வீர. நூ.3), நேமிநாதர் (நேமிநாதம், நூ.9), சங்கரநமச்சிவாயர் மற்றும் இராமாநுசக் கவிராயர் ஆகியோரின் நன்னூல் 125ஆம் நூற்பாவிற்கான உரையில் 'போலி'யை 'எழுத்துப் போலி' என்றே சுட்டிச் செல்கின்றனர்.  இப்போலியை வடநூலார் 'சமானாக்கரம்' என்றும், மொழியியலார் 'Free Variatian', 'Substitute' என்றவாறும் சுட்டுகின்றனர்.
       தொல்காப்பியர் காலத்துக்குப் பிறகு அப்பர் தேவாரம் கி.பி.7ஆம் நூற்றாண்டு தோன்றியது.  தொல்காப்பியர் கூறிய எழுத்துப்போலி அப்பர் பாடல்களில் எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பது பற்றியும், அப்பர் சுவாமிகள் காலத்திற்குப் பிறகு 11ஆம் நூற்றாண்டு யாப்பருங்கல விருத்தியும், வீரசோழியமும்; 13ஆம் நூற்றாண்டு நன்னூலும்; 17ஆம் நூற்றாண்டு இலக்கண விளக்கமும்; 18ஆம் நூற்றாண்டு தொன்னூல் விளக்கமும்; 19ஆம் நூற்றாண்டு முத்துவீரியமும் தோன்றியிருக்கின்றன.  இவ்விலக்கண நூல்கள் எடுத்தியம்பும் எழுத்துப் போலிகளுக்கு அப்பர் தேவாரம் அடிப்படையானது பற்றியும் இக்கட்டுரை விளக்க முற்படுகின்றது.
சந்தியக்கரம்
       "அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
        ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்"
                            (தொல்.மொழிமரபு, நூ.23)
என்னும் நூற்பாவில் தொல்காப்பியர் அகரத்திற்குப் பின்பு இகர வடிவு போல 'ய்' என்ற ஒற்றுச் சேர்ந்து ஐகாரம் என்ற நெட்டொலி தோன்றும் என்கின்றார் (ஐவனம்-அய்வனம்).  இளம்பூரணர் அவர்கள், 'மெய்பெறத் தோன்றும்' என்றதனால் அகரத்தின் பின்னர் உகரமேயன்றி வகரப் புள்ளியும் ஓளகாரம் போல் வருமெனக் கொள்க (ஓளவை-அவ்வை) என்கின்றார்.  இளம்பூரணரின் கருத்தை வலியுறுத்தும் நோக்கில் வ.உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் தொல்காப்பியப் பதிப்பில் இந்நூற்பா,
       "அகரத் திம்பர் யவகரப் புள்ளியும்
        ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்"
என்றவாறு பதிப்பாகி இருக்கின்றது. இக்கருத்தை,
       "அகரம் வகரத்தினோடு இயைந்து ஓளவாம் யகரத்தினோடு
        அகரம் இயைந்து ஐயது ஆகும்" (வீரசோழியம், 3:1-2)
என்று புத்தமித்திரரும்,
       "ஆய்தமும் யவ்வும் அவ்வொடு வரினே
        ஐயெ னெழுத்தொடு மெய்பெறத் தோன்றும்"
       "உவ்வொடு வவ்வரின் ஓளவிய லாகும்"
என்ற அவிநயனாரின் கருத்தை யாப்பருங்கல விருத்தியாசிரியர் 'அசைக்கு உறுப்பாகும் எழுத்தின்வகை'க்குக் கூறும் விருத்தியில் மேற்கோளாக ஆண்டுள்ளார்.  இதற்கு வரலாறு கூறும் முகத்தான் "அய்யன், கய்தை, தய்யல், மய்யல், கய்யன் என அகரத்தோடு யகர ஒற்று வந்து ஐயன், தையல், மையல், கைன் என்னும் ஐகாரத்தின் பயத்தவாயினவாறு.  கஃசு, கஃதம், கஃசம் என அகரத்தோடு ஆய்தம் வந்து கைசு, கைதம், கைசம் என்னும் ஐகாரத்தின் பயத்தவாயினவாறு.  அவ்வை, நவ்வி, அஉவை, நஉவி என அகரத்தோடு வகர ஒற்றும் உகரமும் வந்து ஓளவை, நௌவி என்னும் ஓளகாரத்தின் பயத்தவாயினவாறு" (யா.வி.ப.29) என்று யாப்பருங்கல விருத்திகாரர் குறிப்பிடுகின்றார். இளம்பூரணரின் உரைக்கருத்தினையும் புத்தமித்திரரின் கருத்தினையும், யாப்பருங்கல விருத்திகாரர் கருத்தினையும் உட்கொண்டு நன்னூலார்,

       "அம்முன் இகரம் யகரம் என்றிவை
        எய்தின் ஐயொத் திசைக்கும்; அவ்வொடு
        உவ்வும் வவ்வும் ஓளவோ ரன்ன" (நன்னூல், நூ.125)
என்று நூற்பா வகுக்கின்றார்.  அதாவது, அகரத்தின் முன்னர் இகரமும் யகரமும் தம்முள் ஒத்துவரின் ஐ என்னும் நெட்டெழுத்து ஒலிக்கும்; அகரத்தோடு உகரமும் வகரமும் தம்முள் ஒத்துவரின் ஓள என்னும் நெட்டெழுத்து ஒலிக்கும் என்கின்றார் (அஇ-ஐ; அய்-ஐ; கஇ-கை; கய்-கை; அஉ-ஓள; கஉ-கௌ; கவ்-கௌ). இந்நெட்டெழுத்துக்கள் (ஐ,ஓள) உடம்படுமெய் பெற்று கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருவன பற்றியும்; உடம்படுமெய் பெறாது பிராகிருத மொழியில் வருவது பற்றியும் மொழியியலார் எடுத்துரைப்பர்.  தமிழ்மொழியில் கூட பிற்கால வடமொழி எழுத்துக்களை எழுதுமிடத்து ஐ, ஓள என்பன ய, வ பெற்று வருகின்றதையும் உணரமுடிகின்றது (வைத்தியன்-வயித்தியன்; மௌனம்-மவுனம்).
       இவ்வாறு 'ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்' என்னும் தொல்காப்பியரின் கூற்று புத்தமித்திரர், யாப்பருங்கல விருத்தியாசிரியர், நன்னூலார் ஆகியோரால் தெளிவாக்கப்பெற்ற பின் இலக்கண விளக்க உரையில் திருவாரூர் வைத்தியநாத தேசிகர் அவர்கள் (பக்.62-63)
       "பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
        பேதை வினைமேற் கொளின்" (திருக்குறள் 836)
       "கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
        மெய்யறி யாமை கொளல்" (திருக்குறள் 925))
       "ஔவித் தழுக்கா றுடையானைச் செய்யவன்
        தவ்வையைக் காட்டி விடும்" (திருக்குறள் 167)
என வருவன மோனைத் தொடையோடும் எதுகைத் தொடையோடும் மாறுபட்டு இலக்கண வழுவாகா வண்ணம் போலியைக் கடியாது போற்றலும் வேண்டும் என்கின்றார்.  இவ்வமைப்பு அப்பர் தேவாரத்தில் பரவலாகக் காணப்படுகின்றது.  ஓசை இன்பம் கருதி அப்பர் சுவாமிகள் யகர ஒற்று ஐகாரம் என்னும் நெட்டெழுத்தொலியாக அடியெதுகை மற்றும் அடிமோனைத் தொடையில் வைத்துப் பாடிய பாடல்கள் எண்பது ஆகும்.  குறிப்பாக,
       "செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளும்
        கையர் கனைகழல் கட்டிய காலினர்
        மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
        பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே" (4:16:1)
என்னும் அப்பர் பாடலின் ஒவ்வோர் அடியின் முதல் அசையானது  'செய் - கை - மெய் - பொய்' என வந்திருப்பதால் உணரலாம்.  இதேபோல் ஏனைய பாடல்களிலும் அடியெதுகை மற்றும் அடிமோனைத் தொடைகள் அமைந்திருப்பதைப் பின்வருமாறு சுட்டிக்காட்டலாம் (ஒவ்வொரு பாடலடியின் முதற்சீர் இங்குத் தரப்பெறுகின்றது),
       பொய்விரா - மெய்விரா - ஐவரால் - செய்வரால் (4:4:1)
       பையஞ் - கையஞ்சு - பொய்யஞ்சு - ஐயஞ்சினப் (4:4:10)
       மெய்யெலாம் - உய்யலாம் - கொய்யுலா - கையினால் (4:5:1)
       பையர - மையரி - செய்யெறி - கையெரி (4:22:4)
       பொய்யினை -ஐயநீ - வையகந் - பையநின் (4:23:7)
       பொய்யினால் -மெய்யனாய் -செய்யதா - ஐயநான் (4:26:2)
       பொய்விரா - மெய்விரா - ஐயவரால் - செய்வரால் (4:41:1)
       மையினார் - கையிலோர் - எய்வதோர் - கையினால் (4:44:5)
       மையரி - கையெரி - ஐநெரி - செய்வதொன் (4:54:2)
       கையராய் - மெய்யராய் - உய்வராய் - பையரா (4:58:5)
       செய்யநின் - மையணி - சைவனே - ஐயனே (4:62:4)
       பொய்ம்மறி - மைம்மறி - கைம்மறி - செந்நெறி (4:67:8)
       வையனை - செய்யனை - கையனை - ஐயனை (4:71:2)
       உய்த்தகால் - வைத்தகால் - மொய்த்தகாண் - வைத்தகால் (4:77:10)
       பைக்கை - வைக்கை - மொய்க்கை - மிக்க (4:88:10)
       கொய்ம்மலர் - மெய்ம்மலர் - மைம்மலர் - நின்மலன் (4:89:5)
       கையது - வெய்யது - செய்யினில் - ஐயனை (4:90:1)
       கைத்தலை - பொய்த்தலை - செய்த்தலை - அத்தனை (4:90:2)
       மையணி - மெய்யணி - செய்ய - ஐயனை (4:90:9)
       வைத்த - சித்த - மொய்த்த - அத்தன் (4:94:5)
       மெய்யம்பு - பொய்யம்பெய் - கையம்பெய் - குய்யம்பெய் (4:99:3)
       பைதற் - செய்தற் - உய்தற் - எய்தற் (4:100:2)
       கையிலிடு - உய்யுநெறி - ஐயன்அண் - பொய்யன் (4:101:9)
       பைங்கால் - அங்காற் - செங்காற் - வெங்காற் (4:104:2)
       நெய்தற் - கைதை - பைதற் - எய்தப் (4:106:1)
       மைகொள் - பைகொள் - செய்ய - ஐய (5:2:7)
       நெய்யொப் - மெய்யொப் - ஐயொப் - கையொப் (5:3:5)
       மையுலாவிய - கையுலாவிய - ஐயன் - உய்யலாம் (5:7:12)
       நெய்தலாம்பல் - மெய்யினார் - தையல் - பைதல் (5:9:5)
       பொய்தொழாது - செய்தெழா - வைதெழா - கைதொழா (5:19:3)
       செய்தவன் - எய்த - கைது - ஐது ( 5:28:9)
       வையந்தான் - மெய்யைக் - ஐயன் - கையில் (5:29:9)
       வையம் - ஐயனை - பைகொளாட - பொய்யர் (5:35:2)
       கைகொள் - மைகொள் - செய்யமேனி - ஐயர் (5:35:7)
       வெங்கண் - பைங்கண் - செங்கண் - அங்கண் (5:36:8)
       செய்ய - மைய - கைகொள் - ஐயனே (5:40:4)
       பொய்யனை - மெய்யனை - கையனை - ஐயனை (5:48:9)
       ஐயனே - உய்யலாம் - செய்யபாதம் - வையம் (5:60:7)
       உய்யுமாறிது - கைகொள் - கையினான் - கொய்கொள் (5:69:5)
       செய்ய - நெய்ய - கையலாய் - கையில் (5:72:2)
       கையனைத் - செய்யனைத் - கொய்யனைத் - ஐயனைத் (5:75:3)
       கையினோடு - ஐயன் - பொய்யிலா - மையுலாவிய (5:79:7)
       பொய்யெலாம் - கையன் - ஐயன் - மெய்யன் (5:80:9)
       மெய்யனை - கையனை - மையனுக் - ஐயனை (5:83:5)
       மெய்யின் - பொய்யை - கையின் - ஐயன் (5:84:7)
       நெய்யும் - பொய்யும் - ஐயன் - மெய்யைக் (5:95:4)
       ஐயன் - மெய்யன் - மைகொள் - பைகொள் (5:97:10)
       செய்யனே - வெய்யனே - கையனே - ஐயனே (6:4:4)
       வைதெழுவார் - கைதொழுது - நெய்தொழுது - தெய்வப்புனற்(6:6:3)
       கையோர் - செய்யதிரு - மெய்யொரு - ஐயனார் (6:9:7)
       கையெலாம் - பொய்யெலாம் - செய்யெலாஞ் - நெய்தல்வாய் (6:11:9)
       ஐயிரண்டும் - செய்வினைகள் - செய்மலரங் - எய்யவந்த (6:16:6)
       மையார் - நெய்யார் - வையார் - ஐவாயரவம் (6:21:3)
       கைகிளரும் - மெய்கிளரும் - பைகிளரும் - வைகிளரும் (6:23:2)
       ஐயன் - கையன் - வெய்யன் - செய்யன் (6:24:8)
       பையாடரவங் - நெய்யாடு - செய்யானை - ஐயாறுமே (6:29:9)
       மெய்த்தான - இத்தான - மைத்தான - நெய்த்தான (6:42:1)
       வைத்தானை - வித்ததானை - உய்த்தானை - பொய்த்தானை (6:43:8)
       மையனைய - கையவனே - மெய்யவனே - செய்யவனே (6:44:10)
       மெய்யானை - கையானை - பையாடரவ - ஐயானை (6:46:8)
       கையாற் - மெய்யின் - பொய்யர் - மைகொள் (6:49:10)
       மைவான - பெய்வானை - பொய்வானை - செய்வானை (6:50:6)
       நெய்யினோடு - கையின்மழு - செய்யதிரு - வெய்யகனல் (6:52:5)
       கைவேழ - செய்வேள்வி - மெய்வேள்வி - ஐவேள்வி (6:53:4)
       மைசேர்ந்த - பொய்சேர்ந்த - மெய்சேரப் - கைசேர (6:56:5)
       செய்யமலர் - பொய்யா - மெய்யாக - கையானை (6:56:9)
       செய்யாய் - ஐயாய் - வெய்யாய் - கையார் (6:57:3)
       கையுலா - பையுலா - செய்யுலா - மெய்யெலாம் (6:59:3)
       செய்யானை - ஐயானை - மெய்யானை - கையானை (6:60:2)
       மையாரும் - கையானே - செய்யானை - ஐயாவுன் (6:62:7)
       பொய்யேது - எய்தானை - கையானை - செய்யானை (6:63:5)
       மெய்யானை - பொய்யானை - பையானை - செய்யானை (6:66:5)
       மெய்யன் - கையம் - ஐயம் - வையம் (6:77:9)
       மையாருங் - ஐயாறும் - பையாடரவ - செய்யாள் (6:78:7)
       கையிலுண்டு - பொய்யிலாத - கையினார் - செய்யினார் (6:86:9)
       வெய்யவன் - மெய்யவன் - கையவன் - செய்யவன் (6:87:7)
       ஐத்தான - மைத்தான - பைத்தான - நெய்த்தானம் (6:93:2)
       பையரவ - மைவிரவு - ஐவரையும் - பொய்யுரை (6:99:3)
       நெய்யாடி - மையாடு - கொய்யாடு - பொய்யாத (6:99:8)
       இதேபோல் வகர ஒற்று ஔகாரம் என்னும் நெட்டெழுத்தொலியாக அமைந்த பாடலொன்று அப்பர் தேவாரத்தில் இடம்பெற்றுள்ளது.  அப்பாடல்,
       "ஔவ தன்மை யவரவ ராக்கையான்
        வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ
        மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு
        பௌவ வண்ணனு மாய்ப்பணி வார்களே" (5:97:13)
என்பதாகும்.  இப்பாடல்களைக் கொண்டு பார்க்கும் போது யகர ஒற்று ஐகார ஒலிக்கும்;  வகர ஒற்று ஔகார ஒலிக்கும் அப்பர் சுவாமிகள் கையாண்டிருப்பது தெரிகின்றது.  இவ்விரண்டில் பெரும்பான்மை யகர ஒற்று ஐகார ஒலியாக ஒலிப்பதையே மேற்காணும் பாடல்கள் உணர்த்துகின்றது.
இடைப்போலி
       ஒரு சொல்லில் போலி எழுத்துகள் எங்கெங்கு அமையும் என்று தொல்காப்பியர் விதி வகுக்கவில்லை,  ஆனால் நன்னூலார் மொழிக்கு முதல் - இடை - கடை ஆகிய மூவிடங்களில் போலி எழுத்துகள் உருவாகும் என்கின்றார். இடைப்போலி குறித்து நன்னூலார்,
       "ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
        ஞஃகான் உறழும் என்மரும் உளரே" (நன்னூல், 124)
என்று கூறுகின்றார்.  அதாவது, மொழியிடைக்கண் சிலவிடங்களில் ஐகாரத்தின் பின்னும், யகர ஒற்றின் பின்னும் இயல்பாக வரும் என்றும், நகரத்தோடு ஞகரம் உறழ்ந்து வரும் என்றும் கூறுகின்றார்.  நன்னூலாரின் நூற்பாவிற்கு மேலும் விளக்கம் கூற முற்பட்ட வீரமாமுனிவர், "சஞயவரின் ஐஅச் சமமெனத் திரியும்"(தொன்னூல் விளக்கம், 27) என்று கூறுகின்றார். இவ்விருவரின் கருத்தையும் உட்கொண்டு முத்துவீர உபாத்தியாயர்,
       ",,யமுன் அ,ஐ யாகு முதலிடை" (முத்துவீரியம், 112)
என்றும்,
       "ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
        ஞஃகான் னுறழு மென்மனார் புலவர்" (முத்துவீரியம், 113)
என்றும் கூறுகின்றார்.  இவ்விதிக்கு விளக்கம் தரத்தக்கதாக நன்னூல் காண்டிகையுரையுள்,
       "செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
        மெஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்க
        நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான்
        கைஞ்ஞின்ற ஆடல்கண்டாற் பின்னைக்கண் கொண்டு காப்பதென்னே"(4:80:5)
என்னும் அப்பர் தேவாரம் மேற்கோளாக ஆளப்பெற்றுள்ளது.  இதனைப் பார்க்கும் போது நன்னூலார் விதி வகுக்க அப்பர் சுவாமிகளின் பாடல் பயன்பட்டிருக்கின்றது என்று துணியலாம்,  இதே போக்கில்,
       "மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடி
        மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
        கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்ன
        கின்னரங் கேட்டு கந்தார் கெடில வீரட்ட னாரே" (4:28:10)
       "மைஞ்ஞவில் கண்டேன் தன்னை வலங்கையின் மழுவொன் றேந்திக்
        கைஞ்ஞவில் மானினோடுங் கனலெரி யாடி னானைப்
        பிஞ்ஞகன் தன்னை அந்தண் பொருவேளூர் பேணி னானைப்
        பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப் பொறியிலா அறிவி லேனே" (4:60:4)
என்பன போன்ற பாடல்களும் அப்பர் தேவாரத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
முடிவுரை
       தொல்காப்பியர் கூறாதுவிட்ட எழுத்துப்போலிகளை அவர்க்குப் பின்வந்த பவணந்தியார் மொழிமுதற் போலி, மொழியிடைப்போலி, மொழிகடைப்போலி, சந்தியக்கரம் எனப் பிரித்திருக்கின்றார்.  பவணந்தியாருக்குப் பின் வந்த வீரமாமுனிவர் மற்றும் உபாத்தியாயர் ச,,யக்களுக்கு முன்னிற அகரம் முதல் மற்றும் இடையில் ஐகாரமாகத் திரியும் என்றுரைத்திருக்கின்றார்.  இவற்றில் 'நகரத்தோடு ஞகரம் உறழும்' என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பது அப்பர் சுவாமிகளின் 'செய்ஞ்ஞின்ற' எனத்தொடங்கும் பாடலே என்பதை நன்னூல் காண்டிகையுரை சான்றாக்குகின்றது.  அதாவது, கி.பி.7ஆம் நூற்றாண்டில் முகிழ்ந்த அப்பர் தேவாரப் பாடல்களுக்குப் 13ஆம் நூற்றாண்டில் எழுந்த நன்னூல் இலக்கணம் வகுத்திருப்பதைப் பார்க்கும் போது 'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் மரபு' என்னும் கூற்று உண்மையாகின்றது. இதற்கு அப்பர்பாடல்களே சான்று.

பயன்பட்ட நூல்கள்
 1 ,   இலக்கண விளக்கம்-எழுத்தும் சொல்லும், திருவாரூர் வைத்தியநாத
       தேசிகர், சேயொளி(பதி.), கழகம், சென்னை, 1973
 2,    தேவாரம் அடங்கன்முறை-பாகம் 2, மயிலை இளமுருகனார்(பதி.),
       திருவருளகம், சென்னை, 1953
 3.    தொல். எழுத்து. மொழிமரபு - உரைவளம், ஆ. சிவலிங்கனார்(பதி.),
       உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1981
 4.    தொல். எழுத்து. இளம்பூரணம், அடிகளாசிரியன்(பதி.), 1969
 5.    தொல். எழுத்து. (இளம். & நச்சர்.), தா.மா. வௌ¢ளைவாரணம்(பதி.),
       மோகன் பதிப்பகம், சென்னை, 1983
 6.    தொல். எழுத்து. மொழிமரபும் நூன்மரபும் மாணிக்கவுரை, வ.சுப.
       மாணிக்கம் (உரை), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1989
 7.    தொன்னூல் விளக்கம், வீரமாமுனிவர், கழகம், சென்னை, 1984
 8.    நன்னூல் காண்டிகையுரை, ஆறுமுகநாவலர் நிழற்படப்பதிப்பு, தமிழ்ப்
       பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1984
 9.    முத்துவீரியம், முத்துவீர உபாத்தியாயர்(ஆசி.), கு. சுந்தரமூர்த்தி(பதி.), கழகம்,
       சென்னை, 1972
10.    யாப்பருங்கல விருத்தி, புலவர் இளங்குமரன்(பதி.), கழகம், 1976
11.  வீரசோழியம், புத்தமித்திரனார்(ஆசி.), ச.வே. சுப்பிரமணியனார்(பதி.)தமிழ்ப் பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு 1979.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக