வியாழன், 17 மே, 2018

பழந்தமிழர் இலக்கியங்களில் நெசவும் ஆடையும்

பழந்தமிழர் இலக்கியங்களில் நெசவும் ஆடையும்
முனைவர் மோ.கோ. கோவைமணி 
இணைப்பேராசிரியர், துறைத்தலைவர்
ஓலைச்சுவடித்துறை, 
தமிழ்ப் பல்கலைக்கழகம், 
தஞ்சை-613 010.
         ஒரு நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி அந்நாட்டினுடைய அறிவியல் வளர்ச்சியின் அளவுகோல் ஆகும்.  மனிதன் தொடக்க காலம் முதல் தன் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் எடுத்துக்கொண்ட முயற்சியை அறிந்துகொள்ள இலக்கண இலக்கியங்கள் துணைபுரிகின்றன.  தமிழரின் தொழில்நுட்பத்தை இவ்விலக்கண இலக்கியங்கள் காட்டும் நிலையினைக் கண்ணுறும் போது தமிழரின் அறிவுத்தேடலின் பரப்பு தெரிகிறது.  வேளாண் தொழில், நெசவுத்தொழில், கட்டுமானத் தொழில், மட்பாண்டத் தொழில், தச்சுத்தொழில், தோல் தொழில், உலோகத்தொழில், இசைக்கருவி தொழில் மற்றும் பிற தொழில்கள் பற்றிய குறிப்புகள் பழந்தமிழரின் இலக்கியங்களில் கொட்டிக்கிடக்கின்றன.

பொதுவாக உலகில் தோன்றும் உயிர; வகைகளுள் மனித இன்ம ஒன்று நீங்கலாக மற்ற உயிரினங்கள் அனைத்தும் உணவு, உறைவிடம் என்ற இரண்டையும் அடிப்படைத் தேவையாகக் கொண்டுள்ளன.  மற்ற உயிரினங்கள் அனைத்திற்கும் அடிப்படைத் தேவையாக அமையாத ஒன்றையும் மனித இனம் கண்டுள்ளது.  அதாவது, மனித இனம் உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகளாகக் கொண்டுள்ளது.

பழங்காலத்தில் மக்கள் ஆடை, அணிகலன் முதலியன இன்றி வாழ்ந்து வந்தனர;.  பின்னர; இயற்கையாகக் கிடைப்பன சிலவற்றை உடுத்தி வந்தனர்.  அவற்றுள் இலைகளை ஆடையாக அணிந்தும் இருந்தனர்.  இந்நிலையின் வளர்ச்சியாக மகளிர் இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடைகளை அணியத் தொடங்கியுள்ளனர்.  இதனை, கரிகாற்சோழப் பெருவளத்தானின் விருந்தோம்பல் சிறப்பை வெளிப்படுத்த விழையும் முடத்தாமக் கண்ணியார் ஈரும் பேனும் வேர்வையால் மிகவும் நனைந்து, வேறுபட்ட பல நூல்கள் கொண்டு தைக்கப்பெற்று நைந்து போயிருந்த என் ஆடையை அகற்றிப் புத்தாடை கொண்டுவரச் செய்து என்னிடம் தந்து அணிந்துகொள்ளச் செய்தான் என்று பரிசில் பெற்றவர் குறிப்பிடும் செய்தியாகப் பதிவு செய்கின்றார்.  மேலும், இவ்வாறு அணிந்து கொள்ளக் கொடுத்த ஆடை எவ்விதமாக இருந்தது என்பதனையும் இவ்விடத்தில் சுட்டிச் செல்கின்றார்.  அதாவது, இழை போன வழி ஈது என்று அறிய முடியாத வகையில் நுட்பமாக நெய்யப்பட்டிருந்த பூத்தொழிலையுடையதாய், பாம்பின் தோலை ஒத்திருந்த புதுப் பட்டாடையை அணிந்தேன் என்பதிலிருந்து பட்டாடை நெய்யப்பட்ட நெசவுத் தொழில்நுட்பம் வெளிப்படுகிறது.  இதனை,
"ஈறும் பேனும் இருந்துஇறை கூடி
           வேரொடு நனைந்து, வேற்றுஇழை நுழைந்த
           துன்னற் சிதாஅர துவர நீக்கி,
           நோக்கு நுழைகல்லா நுண்மைய,பூக்கனிந்து
           அரவுஉரி அன்ன, அறுவை நல்கி,
           மழைஎன மருளும் மகிழ்செய் மாடத்து,
          இழையணி வனப்பி னின்னகை மகளிர்”1
என்று பொருநராற்றுப்படை சுட்டுவதிலிருந்து பழங்கால மகளிர் இலையையடுத்து ஆடை அணிந்திருந்தது புலப்படுகிறது.   தமிழர்கள் பருத்தி, பட்டு, கம்பளி உடைகளை உடுத்தியும், மெல்லிய ஆடைகளைப் புனைந்தும், பூவேலைப்பாடுகள் அமைந்த ஆடைகளை அணிந்தும் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இலக்கியங்கள் பல சான்றளிக்கின்றன.  ஆடையை, “அறுவை, உடுக்கை, உடை, கிழி, துணி, துண்டு, வெட்டி, வேட்டி, சிதார், ஆடை, சுறை, போர்வை, துகில், படாம், சீலை, புடவை”2 என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

நெசவுத் தொழில்நுட்பம் 
 மக்கள் சமுதாயத்திற்கு உணவினை அடுத்து ஆடையை இன்றியமையாததாகக் கருதினர்.  பண்டைத் தமிழர்கள் விலங்குகளைப் போல இருந்துவந்த நிலையை ஆடையின் கண்டெடுப்பு அதனை மாற்றத் தொடங்கியதெனலாம்.  ஆடை அணியத் தொடங்கிய காலந்தொட்டு இன்று வரை நெசவுத்தொழிலும் அவற்றின் தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டே வருகிறது.  “இது வீட்டுத் தொழில்களில் முக்கியமானது.  பண்டைத் தொழில்களுள் ஒன்று.  விவசாயத்திற்கு அடுத்து மக்கள் நாகரிகம் அமைய்த தொடங்கியதும் கையாண்ட முதல் கைத்தொழில்”3 என்று நெசவுத் தொழில் பற்றிக் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.  மனிதனுக்கு ஆடை எவ்வளவு இன்றியமையாதது என்பதை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் வள்ளுவப் பெருந்தகை,
               “கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
                 உண்பதூஉம் இன்றிக் கெடும்”4
என்கின்றார்.  நாம் மற்றவர்களுக்குச் செய்யும் உதவியைக் கண்டு பொறாமைப்படபவன், சொந்த பந்தங்கள் இல்லாமல், உண்பதற்கும் உடை அணிவதற்கும் வழியில்லாமல் கெட்டு அழிவான் என்று உணர்த்தப்படுவதால் உணவுக்கும் உடைக்கும் வள்ளுவர் கொடுத்த பெருமை புலப்படும்.

எட்டுத்தொகை நூல்களில் புறத்திணை உணர;த்தும் நூல்களில் ஒன்றான புறநானூற்றில் உணவின் முக்கியத்துவம் பற்றியும் ஆடையின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்தியம்பப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.  அதாவது,
“தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர;க்கும்,
  நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார;க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர;ஒக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினேஇ தப்புந பலவே”5
என்ற மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரின் பாடலில் “உண்பது நாழி உடுப்பவை இரண்டே” என்னும் வரியால் உணவையும் உடையையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.  உண்பது, உடுப்பது ஆகிய செயல் இரண்டிலும் அரசனும் ஆண்டியும் ஒன்றேயாதலால், பெற்ற செல்வத்தால் செய்ய வேண்டுவது ஈதலறமே என்பதை உலகோர்க்கு உணர்த்தும் முகமாக இப்பாடலாசிரியர் இப்பாடல் வழி எடுத்தியம்புகின்றார்.  அதாவது, தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற வேந்தர்க்குப் பொதுவாதலின்றித் தமக்கே உரித்தாக ஆட்சி செய்து, வெண்கொற்றக் குடையால் நிழல் செய்த அரசர்க்கும், இடையாமத்தும், நண்பகலும் துயிலாது, விரைந்த வேகம் கொண்ட விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வியறிவில்லாத ஒருவனுக்கும் உண்ணப்படும் பொருள் நாழித் தானியமே, உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை என இரண்டே என்பதால் ஒருவனுக்கு வாழ்க்கையில் முக்கியத் தேவைகளில் நாழித் தானியமும், அரைக்கு நான்கு முழமும் மேலுக்கு இரண்டு முழமுமாக இரண்டாடையும் முக்கியம் என்கின்றதால் உணவுக்கும் உடைக்கும் அவர் கொடுத்த முக்கியத்துவம் புலப்படும்.

ஆடை நெய்தல் என்பது தொன்றுதொட்டே இருந்து வருகின்றது.  பண்டைத் தமிழர்கள் தோல், மயிர், பருத்தி, பட்டு ஆகியவற்றைக் கொண்டு நெசவுத் தொழிலை மேற்கொண்டனர்.  இதனைப் தொண்டைமான் இளந்திரையனைக் கழயலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படையில் நீர்பாயல் துறைப்பட்டினத்தின்கண் அமைந்திருக்கும் மகளிரின் எழில் தோற்றச் சிறப்பினை விளக்குமிடத்தில் மகளிர் அல்குலிடத்தே கிடந்து அசையும் துகில் கொன்றையின் அரும்புடைய கிளையில் பனி மாசு படர;ந்தமை போன்று உள்ளது என்று அம்மகளிர; அணிந்திருந்த ஆடையின் நுட்பத்தை எடுத்துக்காட்டுகின்றார்.  இதனை,
“பைங்காழ் அல்குல் நுண்துகில் நுடங்க”6
என்ற பாடல் வரி நுண்ணியதாக ஆடை நெய்யப்பட்டதையும்,
“ஆவி அன்ன அவிர;நூல் கலிங்கம்”7
என்று பாலாடை போல ஆடை நெய்யப்பட்டதையும் குறிப்பிடுகின்றது.  சிலப்பதிகாரத்தில்,
“பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டுநுண் வினைஞர் காருகர் இருக்கையும்”8
என்று ஆடையானது பட்டு, மயிர், பருத்தி ஆகிய இம்மூன்றினாலும் நெய்யப்பட்டதாக உணர்த்துகிறது.

பட்டு ஆடை
பருத்தி உடைகளைவிட பட்டு உடை தரத்திலும், மென்மையிலும், நயத்திலும், அழகிலும், விலையிலும் உயர்ந்தது ஆகும்.  பண்டையத் தமிழகத்தில் உயரிய பட்டு உடை நெய்யப்பட்டுள்ளது.  பட்டு நூலினைக் கொண்டு பட்டு உடை நெய்யப்பட்டுள்ளது.  அப்பட்டுடையின் கரைகளில் திரள முடிந்த முடிகள் அமைக்கப்பெற்று விளங்கியுள்ளன.  இதனைக் கரிகாலனது கொடையின் சிறப்பை விளக்கும் முடத்தாமக் கண்ணியார் தம்முடைய பொருநராற்றுப்படையில்,
“கொட்டைக் கரைய பட்டுடை நல்கி”9
என்று உணர்த்துகின்றார்.  அதாவது, கரிகாற் சோழனின் திருவடி நிழலை அணுகி அவனைத் தொழுது அவன் முன் நிற்பீராயின், அதுகாறும் நும்மைப் பற்றி நின்ற வறுமை நும்பால் இல்லையாகும்.  கன்றை ஈன்ற பசு, கன்றை விரும்பிப் பார்ப்பது போன்று நும்மை ஆர்வத்துடன் நோக்கி, நுமது கலையினைத் தான் கேட்டற்கு முன்னரே விரைந்து, கொட்டைப் பாசியின் வேர் போன்று அழுக்கோடு, குறைந்துபோன, தையலையுடைய சிதைந்துபோன நும் ஆடைகளை நீக்கிக் கரையிடத்தே கொட்டைகள் முடியப் பெற்ற தூய பட்டுடையைக் கொடுத்து உடுக்கச் செய்வான் என்று அவனது சிறப்பினை உணர்தும் போது பட்டுடையைக் குறிப்பிடுகின்றார்.

தையல் தொழில்நுட்பம்
பண்டைத் தமிழர்கள் நேர்த்தியான ஆடையை நெய்வது மட்டுமின்றி அவ்வாடையைத் தைப்பதற்கு அக்காலத்தில் தையல்காரர;கள் இருந்திருக்கிறார்கள்.  அத்தையற்காரர்கள் மகளிருக்கும், ஆடவருக்கும் அரசியல் அலுவலர்களுக்கும் ஆடையைத் தைத்துத் தந்துள்ள குறிப்பு இலக்கியங்களில் காணப்படுகிறது.  இதனைக் கொண்டு பார்க்கும் போது அக்கால மக்கள் தையல் தொழில்நுட்பத்தினையும் மேற்கொண்டிருந்தனர் என்பது விளங்குகிறது.  அன்றிலிருந்து இன்று வரை தையற் தொழிலிலும் பிறதொழில்நுட்பத்தில் மேற்கொள்ளும் வளர்ச்சியைப் போல் வளர்ந்து வருவதைக் காணமுடிகிறது.
“சிதார் என்பது தையலொடு பொருந்திய பொத்தல் துண்டு”10
என்று மனையியல் என்னும் நூலில் சிவகாமசுந்தரி அவர்கள் குறிப்பிடுகின்றார்.  ஓர் துணியை நூல் கொண்டு நூற்றபின் உருவம்ம கொள்வது தைத்த ஆடையாகும்.  அழுக்குப் படிந்த தைத்த ஆடையைப் பற்றித்,
“துன்னற் சிதாஅர் துவர நீக்கி”11
“துன்னற் சிதாஅர் நீக்கித் தூய”12
என்னும் பாடல் வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. பெரும்பாணாற்றுப்படையில் தையற்தொழிலின் மூலம் தைக்கப்பட்ட ஆடையினை,

                “.......... எய்திப் படம் புக்குப்
                பொருகணை தொலைச்சிய புண்தீர் மார்பின்
                விரவு வரிக்கச்சின் வெண்கை யொள்வாள்”13
என்று சுட்டுகின்றது.

இதுபோன்று அன்றைய ஆடைகளின் நேர்த்தியும் அழகும் பற்றிய பல குறிப்புகள் இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.  கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய இழைகளால் ஆடை நெய்யப்பட்டது.  அழகிய பூத்தொழில் செய்யப்பட்டிருந்தது.  பாம்பின் சட்டையைப் போல மென்மையாக ஆடை சிறந்து விளங்கியது என்பதையெல்லாம் காணும்போது பழந்தமிழரின் நெசவுத் தொழில்நுட்பமும் அவற்றை தைக்கும் தொழில்நுட்பமும் பண்டைக் காலந்தொட்டே இருந்து வருவது என்பது திண்ணம்.

அடிக்குறிப்புகள்
1. பொருநராற்றுப்படை, வரி.79-85.
2. சு. சிவகாமசுந்தரி, மனையியல், ப.125.
3. கலைக்களஞ்சியம், தொகுதி 4, ப.215.
4. திருக்குறள். பா.166.
5. புறநானூறு, பா.189.
6. பெரும்பாணாற்றுப்படை, வரி.329.
7. மேலது, வரி.469.
8. சிலப்பதிகாரம், வரி.5:16-17.
9. பொருந., வரி.155.
10. சு. சிவகாமசுந்தரி, மனையியல், ப.125.
11. பொருநராற்றுப்படை, வரி.81.
12. மேலது, வரி.154.
13. பெரும்பாணாற்றுப்படை, வரி.69-71.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக