செவ்வாய், 15 மே, 2018

ஆய்வியல் நெறிமுறைகள்

ஆய்வியல் நெறிமுறைகள்
கருதுகோள்-சிக்கல்-ஆய்வேடு தயாரித்தல்
முனைவர் மோ.கோ. கோவைமணி
முன்னுரை
ஆய்வுக்கு அடிப்படையே கருதுகோள் ஆகும்.  இக்கருதுகோள் என்றால் என்ன? இதன் தன்மைகள் என்ன? இவற்றின் தோற்றுவாய் எவ்வாறெல்லாம் அமையும்? ஆய்வுப் பொருள் என்றால் என்ன? ஆய்வுச் சிக்கலின் தோற்று வாய்கள், ஆய்வுச் சிக்கலின் தேவை மற்றும் பயன், ஆய்வேடு தயாரிக்கும் முறைகள் என்பன பற்றியெல்லாம் இப்பகுதி விளக்குகின்றது.
கருதுகோள் 
ஆய்வைத் தொடங்கும் முன் இவ்வாய்வின் இலக்கு அல்லது கொள்கை அல்லது குறிக்கோள் ஆகியன எவ்வாறு அமையவேண்டும் என்று தற்காலிகத் தீர்வை அமைத்துக்கொள்ளுதல் 'கருதுகோள்' ஆகும்.  இக்கருதுகோள் ஆய்வாளரின் ஊகத்தாலும், அனுபவத்தாலும், அனுமானத்தாலும், முன்மொழி யுரையாலும் நிகழக்கூடியது.  இக்கருதுகோள் ஆய்வு செய்யப் புகும்முன் உருவாக்கிக் கொள்வதாகும்.  ஆய்வுப் பொருளுக்கு விடை காண முற்பட்ட போது, ஆய்வாளர் கொண்ட கருதுகோள் சரியாகவும் அமையலாம்; தவறாகவும் அமையலாம்.  ஆய்வு இத்தகையதாக இருக்கலாம் என்று எண்ணித் தொடங்குவதே 'கருதுகோள்'.  இதனை ஆங்கிலத்தில் 'Hypothesis' என்பர்.
கருதுகோளின் தேவை
ஆய்வில் மெய்ம்மையைத் தேடிக் காண்பதற்கான ஒரு கருவியே கருதுகோள். கருதுகோள் இல்லாத ஆய்வு கடிவாளம் இல்லாத குதிரை போன்றது.  கருதுகோள் என்பது, ஆய்வின் ஊகம் என்றாலும், இவ்வூகமே ஆய்வுக்குத் தேவையான தரவுகள் திரட்டுவதற்கும் தேவையற்ற தரவுகளைச் சேகரிப்பதைத் தடுப்பதற்கும் உறுதுணையாகிறது.  எனவே, ஆய்வாளனுக்குக் கருதுகோள் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கின்றது.
கருதுகோளின் தகுதிகள்
ஆய்வாளர் தம் ஆய்வுக்கு ஊகமாக அமையும் ஒரு முடிவைக் குறித்து எண்ணும் போது, சில தகுதிகளைப் பெற்றதாகக் கருதுகோள் அமையவேண்டும்.  அதாவது, செயன்முறையால் சோதிக்கத்தக்கதாகவும், கோட்பாட்டளவில் தெளிவுடையதாகவும், ஆய்வுப்பொருளோடு நெருங்கிய தொடர்புடையதாகவும், பொதுத்தன்மை நீங்கிய சிறப்புடையதாகவும், கிடைக்கும் உத்தியோடு தொடர்புடையதாகவும், எளிமையானதாகவும், தரவுகளை வகைப்படுத்த உதவுவதாகவும், தொடர்ந்து தரவுகள் திரட்ட உந்துவதாகவும் கருதுகோள் அமைந்திருக்கவேண்டும்.
கருதுகோள் உருவாக்கம்
கருதுகோள் உருவாக்காத நிலையில் ஆய்வாளரின் பணி கடுமையாக இருக்கும்; காலம் தேவையின்றி வீணழியும்;  கருத்துத் தெளிவின்மை உருவாகும். எனவே, ஒரு ஆய்வாளன் கருதுகோளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  கருதுகோள் உருவாக்கிக் கொள்வதற்கு ஆய்வாளர் ஆய்வுப் பொருள் குறித்த ஆழ்ந்த சிந்தனையைப் பெற்றிருக்கவேண்டும்.  அதாவது, ஆய்வாளன் ஆய்வுப் பொருள் குறித்து கூர்மையான உற்றுநோக்கல் தன்மை பெற்றவராகவும், ஒழுங்குபடுத்தப்பெற்ற கற்பனை மற்றும் படைப்புச் சிந்தனை அமையப் பெற்றவராகவும், வாய்பாடு வடிவமாகக் கொள்ளப்பட்ட வரையறை உருவக்குபவராகவும் இருக்கவேண்டும்.
கருதுகோளின் வகைகள்
கருதுகோளின் வகைகளை எளிய கருதுகோள், மாற்றுக் கருதுகோள், பயனில் கருதுகோள், எதிர்மறைக் கருதுகோள் எனப் பகுக்கலாம்.
எளிய கருதுகோள்
எத்தரப்பினரும் புரிந்துகொள்ளுவதற்கு உகந்த வகையில் அமைத்துக் கொள்ளும் கருதுகோள் 'எளிய கருதுகோள்' ஆகும்.
மாற்றுக் கருதுகோள்
தேர்ந்தெடுத்த கருதுகோள் பயன்படாது என்றறிந்த நிலையில் வேறொரு கருதுகோள் உருவாக்கிக் கொள்வது 'மாற்றுக் கருதுகோள்' ஆகும்.
பயனில் கருதுகோள்
தேர்ந்தெடுக்கப்பட்ட கருதுகோள் தொடக்க நிலையிலோ, இடையிலோ பயன்தராமல் போவது 'பயனில் கருதுகோள்' ஆகும்.
எதிர்மறை கருதுகோள்
நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் அமையக் கூடிய கருதுகோள் 'எதிர்மறைக் கருதுகோள்' ஆகும்.
ஆய்வுப்பொருள்
ஆய்வாளன் தேர்ந்தெடுக்கப்படும் கருதுகோள் ஆய்வுப் பொருளாகிறது.  இவ்வாய்வுப் பொருளானது ஆய்வுச் சிக்கல் நிறைந்ததாக இருக்கவேண்டும்.  அதாவது, கொள்கை அளவிலோ செயல்முறை அளவிலோ ஒரு சிக்கலைத் தோற்றுவிப்பதே ஆய்வுப் பொருளாகும்.
ஆய்வுச் சிக்கல்
ஆய்வுக்கு அடிப்படையானது 'ஆய்வுச் சிக்கல்' ஆகும்.  இவ்வாய்வுச் சிக்கல் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை உட்டுவொர்த்து என்னும் அறிஞர் ''சிக்கல் என்பது எதுவென்றால், எதற்கு நாம் நம் உள்ளுணர்வின் மூலம் உடனடியாகவும் வெற்றிகரமாகவும் விடைகாண முடியாத நிலையுளதோ; எது நமக்குப் பழக்கப்பட்ட முறைகளினால் எளிதில் தீர்வுகாண முடியாததாகவுளதோ அதுவே'' என்கின்றார்.
ஆய்வுச் சிக்கல் தேர்வில் எண்ணத்தக்கன
ஆய்வுக்குரிய சிக்கலைத் தேர்ந்தெடுக்கும் முன் ஆய்வாளர் பின்வருமாறு எண்ணுதல் வேண்டும்.
1. ஆய்விற்குத் தேர்ந்துகொண்ட துறை தனக்கு ஆர்வமுடையதா?
2. சிக்கல் தம் பாடப்பொருளோடு இயைந்ததா?
3. ஆய்வுச் சிக்கலைத் தீர்ப்பதற்கான ஆர்வம் தன்னுடைய அறிவு வேட்கையால் பிறந்ததா?
4. ஆய்வு பண வருவாயைக் கருதியதா?
5. பதவி, செல்வாக்கு உயர்வைக் கருதியதா?
6. இச்சிக்கல் ஏற்கெனவே வேறொருவரால் எண்ணப்பட்டதா?
7. இதற்குமுன் எண்ணப்பெற்று நிறைவேறாமல் உள்ளதா?
8. சிக்கலைத் தீர்ப்பதற்குரிய முதன்மை மற்றும் துணைமை ஆதார நூல்கள் கிடைக்குமா?
9. சிக்கல் தீர்வுக்கான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகள் கிடைக்குமா?
10. சிக்கலுக்குகந்தவாறு ஆய்வு வழிகாட்டி நெறிப்படுத்துவாரா?
11. காலச்சூழல், இட அமைவு, பொருளாதார வாய்ப்பு ஆகியன சிக்கலை அணுக இடந்தருமா?
12. குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்வுகாண முடியுமா?
13. சிக்கல் தீர்வால் தனக்கும் சமுதாயத்திற்கும் அறிவுலகிற்கும் பயனுண்டா?
14. இன்றைய அறிவுத்துறையில் நிறைவு செய்யப்பட வேண்டிய இடைவெளிகளைக் காட்டுகின்ற துறையா? இடைவெளிகள் உள்ளனவா? இணைப்பு அவசியமா?
15. திரும்பப் பார்க்கவேண்டிய, ஆய வேண்டிய, செம்மை செய்யவேண்டிய நிலை ஆய்வுச் சிக்கல் தேர்ந்தெடுக்கும் துறையில் உள்ளதா?
16. இன்றைய ஆய்வுத்துறை சார்ந்த அறிவுப் பரப்பு எல்லைகட்கு அப்பால் மேலும் ஆராய இடம் உள்ளதா?
17. தொடங்கும் ஆய்வு நிறைவு செய்யவிருக்கும் முடிவுகள், இன்றைய உடனடியான தேவைக்கு உகந்தவைதானா?
18. மொழி, இலக்கியத் துறையிலுள்ள நிறைவுறாத இடைவெளிகளை இது போக்குமா?
19. இவ்வாய்வால் மொழிப்பயன்பாடு ஏற்படுமா?
20. பிற்கால ஆய்வுக்கு வழிகாட்டியாக அமையுமா?
போன்ற வினாக்களுக்கு விடை கிடைக்கும் ஆய்வுச் சிக்கலைஆய்வாளர் தேர்ந்துகொள்ளவேண்டும்.
ஆய்வுச் சிக்கல் தேர்வு முறைகள்
ஒரு குறிப்பிட்ட சிக்கலை விடுவிப்பதற்கான நோக்கம் என்ன என்பதை மனதிற்கொண்டே சிக்கலைத் தேர்ந்தெடுக்கின்றனர்.  பெரும்பாலும் பட்டம் பெறுவதை நோக்கமாகக் கொண்டே ஆய்வாளர்கள் சிக்கலைத் தேர்வு செய்கின்றனர்.  என்றாலும் ஆய்வுக்குச் சிக்கல் அவசியமாகிறது.  இவ்வகையில் தேர்ந்தெடுக்கும் முறைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
அ. தனது சொந்த ஆர்வத்தை அல்லது முயற்சி ஆர்வத்தை நிறைவு செய்வதற்கு வேண்டியவாறு சிக்கலைத் தேர்ந்தெடுத்தல்.
ஆ. முன்னிகழ்ந்த ஆய்வுகளில் குறைபாடு கண்டால், அவற்றின் முறைகளிலோ முடிவுகளிலோ குழப்பமிருந்தால் அவற்றைக் களைவது.  புதிய சான்றுகளாலும் வேறு முறைகளினாலும் ஏற்கெனவே கண்ட மெய்ம்மையை நிறுவுதற்குரிய ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்.
இ. சமுதாயத்தின் தேவையை நிறைவு செய்யும் சிக்கலைத் தேர்ந்தெடுத்தல்.
ஈ. எதிர்கால ஆய்வுக்கு வித்திடும் சிக்கலைத் தேர்ந்தெடுத்தல்.
உ. பயன்பாடு கருதிய சிக்கலைத் தேர்ந்தெடுத்தல்.
ஊ. ஆய்வாளருக்குத் தெரிந்துள்ள அனைத்தையும் வரலாற்றுச் சான்றுகளோடு அலசி ஆய்வுச் சிக்கலைத் தேர்ந்தெடுத்தல்.
எ. ஆய்வுச் சிக்கலில் முரண்பாடான இடங்களைத் தேர்ந்தெடுத்தல்.
ஆய்வுச் சிக்கலை வரையறுத்தல்
ஆய்வாளர் தேர்ந்தெடுக்கும் ஆய்வுச் சிக்கலானது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டதாக இருக்கவேண்டும்.  எல்லையகன்ற ஆய்வுச் சிக்கலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு இடர்ப்படக் கூடாது.  ஆய்வுச் சிக்கலை வரையறுக்கத் தேவையான சில எண்ணங்கள் பின்வருமாறு:-
அ. ஆய்வு எல்லையை வரையறுத்தல்
ஆ. ஆய்வாளர் சிக்கலைத் தீர்க்கும் அறிவு பெற்றவராக இருத்தல்
இ. ஆய்வுக் காலத்திற்கு ஏற்ப ஆய்வுப் பரப்பை அமைத்தல்
ஆய்வுச் சிக்கலின் தோற்றுவாய்கள்
ஆய்வுச் சிக்கலை உருவாக்குவதற்குப் பல்வேறு தோற்றுவாய்கள் உள்ளன.  அவை பின்வருமாறு:-
அ. வகுப்பறைகளில் எடுக்கப்படும் பாடங்களில் உருவாகும் சிக்கல்.
ஆ. கருத்தரங்குகளில் அரங்கேறும் கட்டுரைகளில் எழுப்பப்படும் வினாக்களில் உருவாகும் சிக்கல்.
இ. பல்வேறு நூல்களில் உருவான கருத்து மாறுபாடுகளினால் உருவாகும் சிக்கல்.
ஈ. முன் ஆய்வேடுகள் விட்டுச்சென்ற சிக்கல்.
உ. முன் ஆய்வேடுகள் சுட்டிச் சென்ற சிக்கல்
ஊ. முன் ஆய்வேடுகள் சுட்டத் தயங்கிய சிக்கல்.
எ. காலமுறை இதழ்கள் வாயிலாக வெளியான கருத்துக்களின் அடிப்படையில் எழுந்த சிக்கல்.
ஏ. கட்டுரைத் தொகுப்புகளில் காணப்படும் சிக்கல்.
ஐ. ஆய்வுக் குழுக்களின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டும் குறிப்பிடப் பெறாது மறைமுகமாக உணர்த்தும் சிக்கல்.
ஒ. மாநாட்டு உரைத் தொகுப்புக்களில் காணத்தகும் சிக்கல்
எனத் சிக்கலின் தோற்றுவாய்கள் அமைகின்றன.
ஆய்வுச் சிக்கலைத் தேர்ந்தபின் செய்யவேண்டுவன
ஆய்வுச் சிக்கலைத் தேர்ந்துகொண்டு அதன் காலம் மற்றும் பரப்பு எல்லைகளை வரையறுக்கப்பட்ட பின் ஆய்வாளர் செய்யவேண்டிய கடமைகள் பலவுண்டு.  அவற்றுள் சில பின்வருமாறு:-
அ. ஆய்வாளர் பட்டம் பெறுவதற்கான ஆய்வில் ஈடுபடும்போது ஆய்வாளர் சில ஆய்வுத் தாள்களையோ ஆய்வுக் கட்டுரைகளையோ வெளியிட்டிருக்க வேண்டும்.
ஆ. ஆய்வைத் தொடங்கும் முன்பு ஆய்வாளர் தாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான முதன்மை மற்றும் துணைமை ஆதாரங்களை தக்க வல்லுநர்களைக் கொண்டோ ஆய்வு நெறிகாட்டியைக் கொண்டோ உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
இ. ஆய்வுக்குரிய தரவுகளைத் தொகுப்பதற்கு ஒரு திட்டமிட்ட செயற்குறிப்பை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
ஈ. காண வேண்டிய நூலகங்கள், பார்க்கவேண்டிய களங்கள், காணவேண்டிய வல்லுநர்கள், சந்திக்கவேண்டிய அலுவலகங்கள், பதிவு செய்ய வேண்டிய நேர்காணல்கள், எடுக்கவேண்டிய புகைப்படங்கள், தயாரிக்க வேண்டிய வரைபடங்கள் ஆகியவற்றைத் தொடக்கத்திலேயே திட்டமிட்டுக்கொண்டு உரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.
ஆய்வுச் சிக்கல் தேடுவதில் ஏற்படும் தவறுகள்
ஆய்வாளர் தாம் செய்யப்புகும் ஆய்வுச் சிக்கலைத் தேர்ந்தெடுக்கும் போது சில தவறுகளும் நடைபெறுவதுண்டு.  அவை பின்வருமாறு:-
அ. தன் அறிவெல்லையையும், முயற்சியின் பரிமாணத்தையும் உணராமல் மிக விரிவான தலைப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டுப் பின் வருந்துதல்.
ஆ. ஆய்வுக்குத் தேவையான பொருட்செலவு பற்றி எண்ணாமல் அகலக் கால்வைத்துவிட்டு திண்டாடுதல்.
இ. ஆய்வு மேற்கொள்ளும் கால அளவைக் கருத்தில் கொள்ளாது ஆய்வில் ஈடுபடுதல்.
ஈ. ஆய்வுக்குத் துணைசேர்க்கும் தரவுகளின் வலிமையைக் கருத்தில் கொள்ளாமல் ஆய்வில் ஈடுபடுதல்.
உ. ஆய்வு முடிந்த நிலையில் இவ்வாய்வால் தனக்கும் சமுதாயத்திற்கும் எந்தப் பயனும் இல்லையே என்ற ஆய்வு
ஊ. முன்னாய்வை அடியொற்றி பொய்த்தோற்றத்தை உருவாக்கும் ஆய்வு.
எ. ஆய்வுலகம் ஏற்றுக்கொள்ளாத ஆய்வு
ஆய்வு நெறியாளரை ஆய்வாளர் பயன்படுத்தும் விதம்
ஆய்வாளர் ஆய்வு வழிகாட்டியோடு வைத்துக்கொள்ளத்தக்க உறவு நிலையைப் பொருத்தே ஆய்வாளரின் ஆய்வு அமையும்.  அவை பின்வருமாறு:-
அ. தலைப்புத் தேர்வில் ஆய்வு நெறியாளரின் உதவியை நாடுதல்.
ஆ. ஆய்வு நெறியாளரோடு ஒத்திசைவு கொண்டு அவ்வப்போது ஆய்வில் ஏற்படக்கூடிய சிக்கல்களை விவாதிப்பதும் அதற்குகந்தவாறு தீர்வு காணுதலும்.
இ. ஆய்வாளர் தாம் எடுத்துக்கொண்ட ஆய்வுச் சிக்கலுக்குத் தீர்வு காண அணுகவேண்டிய நபர்களைப் பற்றியும், நூலகங்களைக் குறித்தும், முன்னாய்வுகள் குறித்தும், முன்னாய்வு முடிவுகள் குறித்தும் விவாதித்து தெரிந்துகொள்ளல்.
ஈ. ஆய்வில் ஆய்வாளர் செய்யும் தவறுகளை நெறியாளர் சுட்டிக்காட்டும் போது ஆய்வாளர் அத்தவறைத் திருத்திக்கொள்ளத் தயங்காமை.
உ. ஆய்வுக் காலங்களிலும் அதற்குப் பிறகும் ஆய்வு நெறியாளரோடு ஆய்வாளரின் உறவு நல்லுறவாக அமைத்துக்கொள்ளல்.
ஆய்வறிக்கை
ஓர் ஆய்வாளர் தாம் கண்ட சான்றுகளையும் முடிவுகளையும் படிப்பவர்கள் எளிதில் உணர்ந்து மதிப்பிடத்தக்க வகையில் வாய்மொழியாகவோ, வரிவடிவாகவோ வெளிப்படுத்துவது 'ஆய்வறிக்கை' ஆகும். 
வாய்மொழி அறிக்கை
எழுத்துரு பெறாமல் வாய்மொழி வழியாக அமையும் அறிக்கை 'வாய்மொழி அறிக்கை' ஆகும்.  இவ்வறிக்கை, நிருவாகிகளுக்கு அளிக்கப்படுவனவாகவும் கருத்தரங்குகளில் அளிக்கப்படுவனவாகவும் அமையும்.
வாய்மொழி அறிக்கையின் நிலைப்பாடு
வாய்மொழி அறிக்கையின் நிலைப்பாட்டைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
அ. உடன் பணியாற்றுபவர்களுடன் கருத்துப் பரிமாற்றம்
ஆ. பொதுவான சிக்கல் ஒன்றை பலர் கூடி ஆராயும் நிலை.
இ. ஆய்வாளரின் சிக்கலை நேரடி விவாதத்தில் அணுகும் தன்மை
ஈ. முடிவுகளை வெளியிடுவதில் நேர்மையும் வெளிப்படையாகச் சொல்லுகிற தன்மை
உ. கருத்துக்களைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் விரைவாகவும்  எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் வெளியிடுதல்
வரிவடிவ அறிக்கை
ஆய்வாளன் தாம் ஏற்றுக்கொண்ட சிக்கலுக்கான தீர்வை எழுத்துருவில் அளிக்கும் அறிக்கை 'வரிவடிவ அறிக்கை' ஆகும்.  இவ்வறிக்கை யாருக்காக எழுதுகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு பல வகைகளில் அமைக்கலாம். அவை,
அ. பொதுமக்களுக்கான அறிக்கை
ஆ. நிருவாகிகளுக்கான அறிக்கை
இ. துறைசார்பு அறிக்கை
என அமையும்.
பொதுமக்களுக்கான அறிக்கை
எல்லோரும் புரிந்துகொள்ளுமாறு எளிமை, தெளிவு, கவர்ச்சி ஆகியவற்றைப் பெற்று பொருட்சிதைவு ஏற்படாதவாறு எழுதப்பெறும் அறிக்கை 'பொதுமக்களுக்கான அறிக்கை' ஆகும்.  இவ்வறிக்கை பெரும்பாலும் விளக்கப்படமாகவும் வரைபடமாகவும் அமையும்.  மேலும், இவ்வறிக்கையின் முதலில் ஆய்வு முடிவுகளையும் பரிந்துரைகளையும் சொல்லிய பிறகே ஏனைய நிலைகளை எழுதத் தொடங்கவேண்டும்.
நிருவாகிகளுக்கான அறிக்கை
நிருவாகிகளுக்கு அளிப்பதற்காக எழுதப்படும் பொதுப்படையான ஆய்வறிக்கை ' நிருவாகிகளுக்கான அறிக்கை' ஆகும்.  இவ்வறிக்கை பயன் கருதி மேற்கொள்ளப்படுவதாகும்.  இவ்வறிக்கையானது தொழிலியல் சார்புடன் விவரிக்கப்பட்டு, தொகுப்புரையும் முக்கியமான பரிந்துரைகளும் கொண்டதாக அமையும்.
துறைசார்பு அறிக்கை
ஆய்வாளர் தனக்குப் பிடித்த துறையைப் பற்றித் துறைசார்ந்த ஆய்வாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் அளிக்கும் அறிக்கை 'துறைசார்பு அறிக்கை' ஆகும்.  இவ்வறிக்கை பல நிலைகளில் அமையும் தன்மையைப் பெற்றுள்ளது.
அ. விரிவான அறிக்கை (ஒரு துறையில் தனிச்சிறப்புடைய ஆய்வாளர் பலரால் ஆராய்ந்து எழுதப்படுவது.  அதாவது, ஒரு குழுவின் உறுப்பினர்கள் ஒருபொருள் குறித்துத் தனித்தனியாக ஆராய்ந்து ஒவ்வொருவரின் ஆய்வறிக்கையையும் ஒன்று சேர்த்துப் பொதுவானதொரு அறிக்கை எழுதுவது).
ஆ. ஒருபொருள் பற்றிய தனிநெடுங்கட்டுரை
இ. துறைசார்ந்த இதழுக்கு எழுதப்படும் கட்டுரை
ஈ. தொழிலியல் சாராத முழு அறிக்கை
என அவை அமையும். 
மேலும், இவ்வறிக்கை ஐந்து முக்கியமான பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருக்கவேண்டும்.  அவை,
அ. சிக்கலும் அதன் தன்மையும்
ஆ. நெறிமுறைகளும் அவற்றின் அறிவியல் வழியான துல்லியமும் செம்மையும்
இ. புள்ளி விவரங்களும் அவற்றின் நம்பகத்தன்மையும்
ஈ. புள்ளி விவரத்தைத் தருக்க வடிவாக விளக்கி வெளியிட்டுள்ள முறை
உ. முன்னுரை, சிக்கலின் விளக்கம், மேற்கொண்ட ஆய்வு நெறிமுறை, மெய்ம்மைகள், கண்டுபிடிப்புகள், அதன் விளைவுகள், முடிவுகள், பரிந்துரைகள் என அமையும்.
ஆய்வறிக்கை எழுதும்முன் ஆய்வாளரின் நிலை
அ. ஆய்வறிக்கை எழுதப் புகுமுன் ஓர் ஆய்வாளன் திட்ட வரையறை மற்றும் கருத்துச் சுருக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.  திட்ட வரையறை என்பது என்னென்ன தலைப்புக்களில், எவ்வெப்பொருள் பற்றி எழுதுவதெனக் குறித்துக்கொள்ளும் ஒழுங்கு முறைப்பட்ட வரையறைச் சட்டகம் ஆகும். ஒவ்வொரு தலைப்பினுள்ளும் உட்பிரிவுள்ளும் என்னென்ன எழுதக்கூடும் என்ற கருத்துரைகளைச் சுருக்கமாக வரைந்து கொள்வது கருத்துரைச் சுருக்கம் ஆகும்.
ஆ. தெளிவான சிந்தனையும் கடுமையான முயற்சியும் பொறுமையும் கூர்ந்து செயல்படும் திறமும் சிக்கலை விடாது மனத்திலிருத்தித் தீர்வு காணத் துடிக்கும் மனப்பாங்கும் ஆய்வறிக்கை எழுதப் புகுமுன் ஓர் ஆய்வாளன் மனதில் கொள்ளவேண்டும்.
இ. ஆய்வில் சொல்லவேண்டிய கருத்துக்களை மனதில் ஒழுங்குபடுத்திக்கொண்டு செயல்படுவது ஆய்வாளனுக்கு இன்றியமையாத ஒருசெயலாகும்.
ஆய்வறிக்கை எழுதும் படிநிலைகள்
ஆய்வறிக்கை எழுதுவதற்குப் பல படிநிலைகள் உண்டு. அவை,
அ. ஆய்வின் போதே உடன் எழுதிக்கொண்டு வருவது
ஆ. சான்றுமூலங்களைத் தொகுத்துப் பகுத்தாய்ந்து விளக்கங்களையும் முடிந்த பின்பு இறுதியில் எழுதுவது
இ. சிக்கலை என்னவென்று விளக்குவதும் கருதுகோளை எடுத்துரைப்பதும் பின்பற்றும் ஆய்வு நெறிமுறை யாதென விளக்குவதும் ஆகிய இவற்றை முன்னதாகவே விளக்கி எழுதுவது
என அமையும்.
ஆய்வறிக்கை தயாரித்தல்
ஆய்வறிக்கை தயாரித்தலை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.  அவை, 
அ. ஆய்வறிக்கை எழுதும்முன் செய்யவேண்டுவன
ஆ. ஆய்வறிக்கை எழுதும்போது செய்யவேண்டுவன
இ. ஆய்வறிக்கை எழுதுதல் என அமையும்.
ஆய்வறிக்கை எழுதுமுன் செய்யவேண்டுவன
ஆய்வறிக்கை எழுதுமுன் ஆய்வாளர் செய்யத்தக்க செயல்முறைகள் எட்டு ஆகும்.  அவை, 1. தரவுகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுதல், 2. எவருக்காக ஆய்வறிக்கை எழுதுகிறோம், 3. ஆய்வேட்டின் பயன், 4. முடிவுகளைத் தெரிவித்தல், 5. கடைப்பிடித்த ஆய்வு முறை, 6. தரவுகளின் ஒழுங்கு, 7. இயல் பிரித்தல், 8. பின்னிணைப்புகளை முடிவு செய்தல் என்று கு.வெ. பாலசுப்பிரமணியம் அவர்கள் பிரிப்பார்.
தரவுகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுதல்
ஆய்வேடு எழுதப் புகுமுன் தொகுக்கப்பெற்ற தரவுகளை ஆய்வுச் சிக்கலின் தீர்வுக்கேற்ற வண்ணம் ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும்.  தரவுகளை ஒழுங்குபடுத்திக்கொள்ள சில வரன்முறைகள் உண்டு.  அவை பின்வருமாறு:-
அ. தரவுகள் ஆய்வுச் சிக்கலின் தீர்வுக்கு உகந்ததா? ஆதாரம் காட்டக்கூடியதா?
ஆ. தரவுகள் எந்த இயலுக்குப் பொருத்தமானது?
இ. தரவு முழு விவரம் பெற்றுள்ளதா?
ஈ. கொண்ட கருத்தை நிறுவுவதற்கும் வலியுறுத்துவதற்கும் மறுப்பதற்கும் ஒப்புமைப்படுத்துவதற்கும் உகந்த தரவா?
உ. ஏற்கெனவே வேறு யாராலும் காட்டப்பட்ட அல்லது ஆதாரமாகக் கொள்ளப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட தரவா?
என்றவாறான தரவு வினாக்களை எழுப்பி விடை கண்டு தரவுகளை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்.
எவருக்காக எழுதுதல்
ஆய்வறிக்கையை எவருக்காக எழுதுகிறோம் என்பதை மனதில் கொண்டு ஆய்வாளர் செயல்படவேண்டும்.  இதனை கு.வெ. பாலசுப்பிரமணியம் அவர்கள் பத்து நிலைகளாகப் பிரிப்பார்.  அவை,
அ. ஆய்வுக்கட்டுரை அல்லது பொருள் விளக்கக் கட்டுரை
ஆ. விளக்க ஆராய்ச்சிக் கட்டுரை
இ. குறித்த பொருள் பற்றிய இலக்கிய ஆய்வு
ஈ. ஆய்வறிக்கை
உ. விசாரணை அறிக்கை
ஊ. தொழில்நுட்ப விளக்க அறிக்கை
எ. தனிவரைவு நூல்
ஏ. முதல் தகவல் அறிக்கை
ஐ. மதிப்பீட்டறிக்கை
ஒ. வரவு செலவறிக்கை
என அமையும்.
ஆய்வேட்டின் பயன்
பட்டம் பெறுவதற்காக இவ்வாய்வேடு எழுதப்பெற்றது என்பதைவிட இவ்வாய்வேட்டிற்காக இவருக்கு இப்பட்டம் வழங்கப்பெற்றது என்று கூறுவதே சிறப்பாகும்.  ஆய்வின் சிறப்பு நோக்கி அளிக்கப்பெறும் பட்டம் ஒன்றே ஆய்வின் முடிந்த பயனில்லை.  எழுதப்பெற்ற ஆய்வேடு ஆய்வுலகில் எவ்விதமான வரவேற்பைப் பெற்றது என்பதும், எவ்வகைச் சிக்கல்களை யெல்லாம் இவ்வாய்வேட்டால் தீர்வு பெற்றதென்பதும், இவ்வாய்வாய் வேட்டால் எத்தனை பேருக்கு ஆய்வுக்கண் திறக்கப்பெற்றதென்பதும் ஆய்வேட்டின் பயன்களாகக் கொள்ளப்படும்.
முடிவுகளைத் தெரிவித்தல்
தொகுக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் முடிவுகளைத் தீர்மானித்தல் வேண்டும்.  சிக்கலின் தீர்வுகள் இவையென்றும், பெறப்பட்ட புதிய பொருண்மைகள் இவையென்றும், இனம்புரியா இருளிலிருந்து முயன்று அடையப்பெற்ற ஒளித்தடங்கள் இன்னவையென்றும், இதுவரை எண்ணிய கருத்துக்கள் தவறானவை என மெய்ப்பிக்கும் முடிவுகள் இவையென்றும், மேலாய்வைத் தூண்டக்கூடிய முடிவுகள் இவையென்றும் முடிவுகளை வகைதொகை செய்துகொள்ள வேண்டும்.
கடைப்பிடித்த ஆய்வுமுறை
ஆய்வாளர் ஆய்வுச் சிக்கலைத் தீர்ப்பதற்கு மூல நூல்களின் துணையோடு முடிவுகளைக் காண்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆய்வுமுறை ஒன்றைத் தேர்ந்தெடுத்தலே `கடைப்பிடித்த ஆய்வுமுறை' ஆகும்.  அதாவது, வரலாற்று முறை, ஒப்பீட்டு முறை, சோதனை முறை, உய்த்துணர் முறை, செலுத்துநிலை ஆய்வு, அமைப்பியல் முறை, நடைமுறைசார் ஆய்வு, மாதிரி ஆய்வு, அளந்தறி ஆய்வு, மதிப்பீட்டாய்வு முறை, புள்ளிவிவர ஆய்வு முறை, மரபியல் ஆய்வு முறை, தருக்கமுறை ஆய்வு, விளக்கமுறை ஆய்வு, ஒற்றைப் பொருண்மை முறை ஆய்வு, கோட்பாட்டாய்வு முறை, அறிவியல் ஆய்வு முறை, விரிநிலை ஆய்வு முறை, தெரிநிலை ஆய்வு முறை போன்ற ஆய்வு முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் சிக்கலுக்கான தீர்வு காண்பதாகும்.
தரவுகளின் ஒழுங்கு
ஆய்வேட்டை எழுதுவதற்கு முன் தொகுக்கப்பெற்ற தரவுகளை ஒழுங்குப்படுத்துதல் இன்றியமையாததாகும்.  அதாவது, தரவுகளைக் கால வரிசையாகவோ, நிகழ்ச்சிகளின் வரிசையாகவோ, பெயர்களின் வரிசையாகவோ முறையாக ஒழுங்குபடுத்திக் கொள்ளவதாகும்.
இயல் பிரித்தல்
ஆய்வாளர் தலைப்பைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட பின் தரவுகளைத் தொகுக்கப்படுவதற்கு முன் ஆய்வுக்குரிய இயல் தலைப்பு முடிவு செய்யவேண்டும்.  இயல் தலைப்பு முடிவு செய்தபின்னரே தரவுகளைத் தொகுத்தல் சாலச்சிறந்தது.  ஆய்வேட்டின் ஒவ்வொரு இயலும் ஆய்வுச் சிக்கலை மையமிட்டதாகவும் இயைபுடனும் அமைந்திருக்கவேண்டும்.  இயல் பிரிப்பின் அமைப்பைக் கொண்டே ஆய்வுப் போக்கை உய்த்துணர்ந்துவிட முடியும்.
பின்னிணைப்புகளை முடிவு செய்தல்
ஆய்வேட்டிற்குத் துணைசெய்ததும், ஆய்வேட்டின் இயல்பகுதிக்குள் சுருக்கமாக இடம்பெற்றதும், ஆய்விற்கு வலு சேர்ப்பனவாகக் கருதுவதும் போன்ற இன்ன பிறவற்றைப் பின்னிணைப்புகளாகத் தரலாம்.  அதாவது, ஆய்வின் உட்பகுதியில் இயல்களுக்குள் சில விவரங்களைச் சுருக்கங்களாகக் கொடுக்கப்பட்டிருக்கும் போது அவற்றின் விரிவைப் பின்னிணைப்பாகக் கொடுக்கலாம். பட்டியல்கள், வரைபடங்கள், நிலப்படங்கள், முழு அறிக்கைகள், அட்டவணைகள், வழி விளக்கப் படங்கள், நிழற்படங்கள் போன்றனவும் பின்னிணைப்புகளாகக் கொடுக்கலாம்.
ஆய்வறிக்கை எழுதும்போது செய்யவேண்டுவன
ஆய்வறிக்கை எழுதும்போது செய்யவேண்டிய செயல்முறைகள் பன்னிரண்டு ஆகும்.  அவை, 1. முன்னுரை, 2.ஆய்வுத் தலைப்பு விளக்கம், 3. மேற்கொள்ளும் ஆய்வு முறை விளக்கம், 4. கருதுகோள் விளக்கம், 5.இயல் முன்னுரையும் பத்தி பிரிப்பும், 6. எடுத்துரை உத்திகள், 7. இயல் முடிப்பு, 8. அடிக்குறிப்பும் மேற்கோளும், 9. ஆய்வு நடை, 10. இயல் இயைபு, 11. முடிவுரை, 12. பின்னிணைப்புகள் என்று கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள் பிரிப்பார்.
முன்னுரை வரைவு
ஆய்வின் அக அமைப்பு, ஆய்வின் நோக்கம், ஆய்வின் பின்புலம், ஆய்வாளரின் ஆர்வம், ஆய்வாளரின் தகுதி, தலைப்பிற் கொண்ட ஈடுபாடு, ஆய்வு முன்னோடிகள், ஆய்வுச் சிக்கலைத் தெரிதலின் காரணம், ஆய்வின் வரையறை, ஆய்வின் எல்லைகள், ஆய்வின் பரப்பு, ஆய்வுநெறி, ஆய்வுப் பகுப்பு, ஆய்வில் மேற்கொண்ட உத்திகள், ஆய்வில் எதிர்கொண்ட இடர்ப்பாடுகள், கருதுகோள், உதவியாய் அமைந்தன, ஆய்விற்குத் துணை நின்றோர், ஆய்விற்குப் பயன்தந்த நூலகங்கள், களங்கள், ஆய்வுச் சிக்கலில் முடிவுகண்ட பகுதிகள், முடிவு காணாப் பகுதிகள், எதிர்கால ஆய்வுத் தொடர்ச்சிக்கு அமைந்த இடங்கள் ஆகிய அனைத்தும் முன்னுரையில் இடம்பெறவேண்டும்.  எனவே, ஆய்வு முன்னுரையை ஆய்வாளர் தொடக்கத்தில் எழுதுதல் கூடாது.  ஆய்வின் இயல்கள் அனைத்தும் எழுதி ஆய்வு முடிவுரையையும் எழுதிய பின்னரே முன்னுரை எழுதவேண்டும்.
ஆய்வுத் தலைப்பு விளக்கம்
தெரிந்தெடுக்கப்பட்ட ஆய்வுத் தலைப்பிற்கான விளக்கத்தை முன்னுரையில் விளக்கவேண்டும்.  தலைப்பில் அயல் மொழிப் பெயர்கள், தொழில்நுட்பக் கருவிகளின் பெயர்கள், குறியீட்டுப் பெயர்கள், புனைபெயர்கள், ஊர் மற்றும் ஆறு போன்றவற்றின் பெயர்கள், சுருக்கக் குறியீட்டுப் பெயர்கள் ஆகியவை தலைப்பில் இடம்பெற்றிருக்குமானால் அவற்றிற்கான விளக்கத்தை முன்னுரையில் விளக்குதல் வேண்டும்.
மேற்கொள்ளும் ஆய்வு முறை விளக்கம்
ஆய்வாளர் எடுத்துக்கொண்ட சிக்கலைத் தீர்ப்பதற்கு அணுகும் ஆய்வு முறை எது என முன்னுரையில் விளக்குதல் வேண்டும்.  அதாவது, சுவடிப்பதிப்பாய்வா?, வரலாற்று முறை ஆய்வா?, ஒப்பீட்டு முறை ஆய்வா?, சோதனை முறை ஆய்வா?, உய்த்துணர்முறை ஆய்வா?, செலுத்துநிலை ஆய்வா?, அமைப்பியல் முறை ஆய்வா?, நடைமுறைசார் ஆய்வா?, மாதிரி ஆய்வு முறையா?, அளந்தறி ஆய்வு முறையா?, மதிப்பீட்டாய்வு முறையா?, புள்ளிவிவர ஆய்வு முறையா?, விளக்கவியல் ஆய்வு முறையா?, செயல்முறை ஆய்வு முறையா?, மரபியல் ஆய்வு முறையா? எனத் தெரிந்து விளக்கம் தருதல் வேண்டும்.
கருதுகோள் விளக்கம்
ஆய்வை மேற்கொள்வதற்கு எடுத்துக்கொண்ட கருதுகோள் இன்னதென்று முன்னுரையில் குறிப்பிடவேண்டும்.  கொண்ட கருதுகோள் இறுதிவரை உறுதிவாய்ந்ததாக இருந்ததா? இடையில் கருக்கோள் மாற்றம் பெற்றதா? கருதுகோள் கைவிடப்பட்டதா? என்பதற்கான காரணங்களை முன்னுரையில் விளக்கவேண்டும்.  கருதுகோள் பெறுவதற்குக் காரணமாக அமைந்த நிகழ்ச்சிகள், சிந்தனைகள், பட்டறிவு போன்ற இன்னோரன்ன கூற்றுகளை ஆய்வு முன்னுரையில் இடம்பெறச் செய்யவேண்டும்.
இயல் முன்னுரையும் பத்திப் பிரிப்பும்
ஒவ்வொரு இயலுக்கும் இயல் தொடர்பான - சுருக்கமான முன்னுரையை அமைத்துக் கொள்ளவேண்டும்.  ஒரு கருத்திற்கு ஒரு பத்தி என்ற வரையறையை ஆய்வாளர் கடைப்பிடிக்க வேண்டும்.  ஒரு கருத்துக்குள் நான்கைந்து உட்பிரிவுகள் வரும்போது ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
எடுத்துரை உத்திகள்
ஓர் இயலுக்குள் கூறும் கருத்தை எடுத்துத்துரைக்கும் உத்தி முறையை இதுவெனச் சுட்டல் வேண்டும்.  அதாவது, உள்ளுறை, இறைச்சி, குறிப்பு போன்றவற்றால் பொருள் புதைந்தும், மறைந்தும் இருக்கக் கூடியவற்றை வெளிப்படுத்துதலும், வஞ்சப்புகழ்ச்சி, பழித்தது போன்று புகழ்தல் போன்றவற்றைப் புலமறிந்து தெளிவாக்குதலும், அங்கதம், நிரல்நிறை, அடிமறி, கொண்டு கூட்டுப் போன்றவற்றால் தெற்றெனப் பொருள் விளங்கா இடங்களை விளக்குதலும் ஆகிய செயல்களைத் தகுந்த உத்திகளைக் கொண்டு ஆய்வாளர் விளக்குதல் வேண்டும்.
இயல் முடிப்பு
ஒவ்வோர் இயலை முடிக்கும் போது இயல் தொடக்கத்தில் படிப்பவர்க்கு ஏற்பட்ட ஐயங்கள், திரிபுகள் ஆகியன அகற்றப்பட்டிருக்க வேண்டும்.  இயல் முடிவில் இவ்வியலின் முடிவுகள் பின்வருமாறு என்றோ?, இதுகாறும் கண்டவற்றால் கீழ்வரும் மெய்ம்மைகளை அறியப்பெற்றோம் என்றோ? கூறி இயலின் முடிவுரையைச் சுருக்கிக் கூறலாம்.
அடிக்குறிப்பும் மேற்கோளும்
ஒரு நூலின் அடிகளையோ வரிகளையோ கருத்தையோ சாரத்தையோ எடுத்துக் கூறும் போது அவற்றை ஒற்றை (கருத்துச் சாரத்தை) மற்றும் இரட்டை (உண்மைச் செய்தியை) மேற்கோள் குறிகள் இட்டுக்காட்டி இறுதியில் எண் கொடுத்து அடிக்குறிப்பில் அந்நூற்பகுதி குறித்த விவரங்களைக் காட்டவேண்டும்.  இவ்வாறு காட்டும் முறையானது மூன்று நிலைகளில் தற்போது நிகழ்கின்றது.  அடிக்குறிப்பெண் பெற்ற விளக்கப் பகுதி அடிக்குறிப்பெண் பெற்ற பக்கத்திலேயோ, இயல் இறுதியிலோ, ஆய்வேட்டின் இறுதியிலோ குறிப்பிடல் உண்டு.  ஆனால் இவற்றில் முதல் முறையே சிறந்ததாகக் கருதப்படுகிறது.  சிலர் அடிக்குறிப்புச் செய்திகளை ஆய்வுப் பகுதியிலேயே அடைப்புக் குறிக்குள் இட்டுச் செல்கின்றனர்.  இது தவறான முறையாகும்.  இதனால் படிப்பதில் இடர்ப்பாடுகள் நிகழ வாய்ப்புள்ளது.
பிறரின் கருத்தை ஆய்வாளர் இரண்டு நிலைகளில் எடுத்தாள்கின்றார்.  பிறர் கருத்தை அப்படியே இரட்டை மேற்கோள் குறிக்குள் பயன்படுத்துதல், பிறரின் கருத்தை உள்வாங்கிக் கொண்டு ஆய்வாளரின் நடையில் ஒற்றை மேற்கோள் குறிக்குள் வெளிப்படுத்துல் என்றவாறு மேற்கோள்கள் ஆய்வேட்டில் அமையப்பெற்றிருக்கவேண்டும்.
ஆய்வு நடை
ஆய்வு நடையே ஆய்வேட்டை சிறக்கச் செய்யும் தன்மை வாய்ந்தது.  ஆய்வு நடை எளிய சொற்களால் நீண்ட தொடர்களாக அமையாமல் சிறுசிறு தொடர்களாய் அமைதல் வேண்டும்.  தொடர்களில் பொருத்தமுள்ள சொற்களைக் கையாளுதல் வேண்டும்.  ஒருசொல் பலபொருள் கொண்ட சொற்களைப் பயன்படுத்தும் போது இவ்விடத்திற்குப் பொருத்தமான சொல் இதுதான் என்று கருதிக்கொண்டு ஆய்வேடு முழுமையும் அதே சொல்லைப் பயன்படுத்தவேண்டும்.  ஓரிடத்தில் ஒருசொல்லும் பிறிதொரு இடத்தில் அப்பொருள் தரக்கூடிய வேறொரு சொல்லும் பயன்படுத்துதல் கூடாது.  ஆய்வு நடையானது ஆற்றொழுக்கு போல் தெளிந்த நீரோடையாக செல்லவேண்டும்.  கூறியது கூறல் தவிர்த்தல் வேண்டும்.  முரணான செய்திகளை விவாதித்து இடையில் விட்டுவிடுவது ஆய்வு நடையில் தொய்வை ஏற்படுத்தும்.  அவ்வகையான செய்திகளை முற்றிலும் விட்டு விடுதல் நல்லது.
இத்தலைப்பில் இதுவரையில் எவரும் ஆராய்ந்து கூறாத கருத்துக்களை இந்த ஆய்வேடு அளிக்கின்றது என்றோ, கலைத்துறையில் இஃது ஒரு சாதனையாகும் என்றோ, எவரும் காணாத புதிய ஆய்வு முடிவுகளை இந்த ஆய்வேட்டில் காணமுடியும் என்றோ கூறும் செருக்கு நடையைத் தவிர்க்கவேண்டும்.  காணமுடிகின்றது, சொல்லப்படுகின்றது, அறியப்படு கின்றது, தெரிவிக்கப்படுகின்றது, என்றும் கருத இடமிருக்கின்றது, சொன்னாலும் பிழையில்லை, கருதத்தான் வேண்டியுள்ளது போன்றவாறான நடையமைப்பை ஆய்வேட்டிற்குள் தவிர்த்தல் நல்லது. பொதுவாக ஆய்வேட்டின் நடையானது இலக்கண நூல்களில் அமைந்திருக்கும் நூற்பா அமைப்பைப் போன்று அமைந்திருத்தல் நலம் பயக்கும்.
இயல் இயைபு
ஓர் ஆய்வேடு இயல் பிரிப்புத் தன்மையின் அடிப்படையிலேயே அவ்வாய்வேடு எவ்வாறு செல்கிறது எப்போக்கைக் கொண்டுள்ளது எனக் கணிக்கலாம்.  `பருவஇதழ்களில் சுவடிப்பதிப்புகள்' என்னும் ஆய்வுத் தலைப்பில் சுவடிப்பதிப்புகளை வெளியிட்ட பருவஇதழ்கள், சுவடிப்பதிப்பு வரலாற்றில் பருவஇதழ்கள், பருவஇதழ்ச் சுவடிப்பதிப்பும் தனிநூற்பதிப்பும், பருவஇதழ்ச் சுவடிப்பதிப்புகள் - வகையும் வடிவும், பருவஇதழ்களின் நோக்கும் போக்கும் என்றவாறான இயல் தலைப்புகள் ஆய்வேட்டின் தலைப்புக்கு ஒத்ததாக அமைந்திருக்கக் காணலாம்.
முடிவுரை
ஆய்வு முடிவுரையில் ஆராய்ச்சி செய்து கண்ட முடிவுகளை மட்டும் தொகுத்துக் கூறவேண்டும். எதிர்கால ஆய்வுக்கான வழிகளையும், ஆய்வியல் தன்மைகளையும் சுட்டிக் காட்டலாம்.
பின்னிணைப்புகள்
துணை நூற்பட்டியல் (முதன்மை மற்றும் துணைமை- அடிக்குறிப்பில் இடம்பெற்ற நூல்கள், அடிக்குறிப்பில் இடம்பெறாமல் பயன்பட்ட நூல்கள், தொடர்புடைய பிற நூல்கள்), ஆய்வோடு தொடர்புடைய அட்டவணைகள், ஆய்வுத் தொடர்பான ஆவணங்கள், ஆய்வுத் தொடர்பான வரைபடங்கள், கள ஆய்வு அறிக்கைகள், நேர்காணல்கள், கல்வெட்டு மற்றும் செப்பேட்டின் நகல்கள், நிழற்படங்கள் என்ற முறையில் பின்னிணைப்புகள் அமைய வேண்டும். 
துணைநூற்பட்டியலில் தனிநூல்கள், தொகை நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், பதிப்பு நூல்கள், பிறமொழி நூல்கள், அகராதிகள், கலைக் களஞ்சியங்கள், அறிக்கைகள், நிறுவன வெளியீடுகள், மலர்கள், ஆய்வேடுகள் ஆகியவை அகரவரிசையில் ஆசிரியர் பெயர் வரிசையிலோ அல்லது நூற்பெயர் வரிசையிலோ தனித்தனியாக வெளிப்படுமாறு காட்டப்பெற வேண்டும். 
ஆய்வறிக்கை எழுதுதல்
ஆய்வறிக்கையை எழுதும் போது தொகுக்கப்பெற்ற தரவுகளை முறைப்படுத்த வேண்டும். இதற்கு மூன்று வகையான வரைவுகள் தேவைப்படுகின்றன.
முதல் வரைவு
ஆய்வேட்டின் உள்ளடக்கத்தில் கவனம் கொண்டு எழுதப்படுவது முதல் வரைவு ஆகும்.  ஒவ்வோர் இயலிலும் தலைப்பு தொடர்பான செய்திகளை தொகுத்துத் தரவுகளின் அடிப்படையில் மிக நிதானமாக எழுதுதல் வேண்டும்.  ஆய்வு நடையில் முக்கிய கவனம் தேவை.  முறைப்படுத்தப்பெற்ற தரவுகள் ஒவ்வொன்றையும் இடம்பார்த்து உரிய இடத்தில் அமைத்தல்வேண்டும்.  முதல் வரைவு எழுதும்போது அங்கங்குத் தரவுகள் புதியதாகத் தேவைப்படக் கூடிய இடங்கள் தோன்றும்.  அவ்விடங்களை நிரப்பக் கூடிய வகையில் இடம்விட்டு வரைவு தயாரிக்கவேண்டும்.  தகுதியற்ற சொற்களைத் தவிர்க்க வேண்டும்.  முதல் வரைவில் முன்னுரை முடிவுரை நீங்கலாக எல்லாச் செய்திகளும் இடம்பெற்றுவிட வேண்டும்.
இரண்டாம் வரைவு
இரண்டாம் தரவு எழுதுமுன் முதல் வரைவில் விடுபட்ட தரவுகளை இடம்பெறச் செய்யவேண்டும்.  முதல் வரைவில் எழுதப்பெற்ற தரவுகளில் நீக்கவேண்டியவற்றை நீக்குதல், கருதுகோளின் அமைவைக் கருதுதல் ஆகியவற்றை ஆய்வாளர் மனதில் கொண்டு இரண்டாம் வரைவை எழுதுதல் வேண்டும்.  இரண்டாம் வரைவில் தொடர் அமைப்பு, பத்தி பிரிப்பு, பத்தித் தலைப்புகள், இயல்பு முடிவுகள், மேற்கோள்கள், மேற்கோள் குறிகள், அடிக்குறிப்புகள், அடிக்குறிப்பெண்கள், அடைப்புக் குறிகளுக்கு உள்ளே இடம்பெறுபவை, இடையே வரும் ஆங்கிலப்பெயர்கள் ஆகியவற்றை ஆய்வாளர் சரிபார்த்து அமைக்கவேண்டும்.  இரண்டாவது வரைவை பிறரொருவரிடம் காட்டி சரிபார்க்கவேண்டும்.  அதாவது, உடன் பணியாற்று பவரிடமோ உடன் பயிலும் ஆய்வாளரிடமோ படித்துக் காட்டி கருத்துக்கேட்க வேண்டும்.  பின்னர் நெறியாளரிடம் கொடுத்து மாற்றம் செய்யவேண்டிய பகுதிகள் எதுவெனக் கேட்டறியவேண்டும்.
மூன்றாம் வரைவு
மூன்றாம் வரைவு எழுதத் தொடங்குவதற்கு முன் ஆய்வேட்டில் இடம்பெறவேண்டிய பின்னிணைப்புகளை ஒழுங்கு செய்து வரிசையுற அமைத்துக்கொள்ளவேண்டும்.  அதன் பின்பு ஆய்வேட்டின் இயல்களைக் கூர்ந்து படித்து நிறுத்தக் குறிகள், எழுத்துப் பிழைகள், தொடர்ப் பிழைகள், பக்க அமைப்பு, அடிக்குறிப்பு எண் ஆகியவற்றை மறு ஆய்வு செய்யவேண்டும்.  இயல்கள் அனைத்தும் செம்மையுற எழுதிய பிறகு முடிவுரையில் சொல்லவேண்டிய செய்திகளை ஒழுங்குபடுத்திக்கொண்டு முடிவுரையை எழுதுதல்வேண்டும்.  இயல்கள் மற்றும் முடிவுரை எழுதியான பிறகு முன்னுரை எழுதுதல் வேண்டும். மூன்றாம் வரைவு எழுதி முடிந்த பிறகு முன்னுரைக்கு முன்னால் ஆய்வேட்டின் தலைப்புப் பக்கம், நெறியாளர் சான்றிதழ், ஆய்வாளர் உறுதிமொழி, ஆய்வாளரின் நன்றியுரை, சுருக்கக் குறியீட்டு விளக்கம், பொருளடக்கம் ஆகியவற்றை இடம்பெறச் செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக