செவ்வாய், 15 மே, 2018

பழந்தமிழரின் நீர்வழி வாணிகம்


பழந்தமிழரின் நீர்வழி வாணிகம்
முனைவர் மோ.கோ. கோவைமணி
இணைப்பேராசிரியர், தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்-613 010.
            ஒரு நாடு தம் மக்களுக்கு வேண்டிய இயற்கை வளம் யாவற்றையும் பெற்றிருத்தல் இயலாது.  அப்படியே தன்னிறைவு பெற்று விளங்கினாலும் உபரியாக உள்ளதைப் பிற மக்களுடன் பகிர்ந்தே வாழத் தலைப்படும்.  எனவே, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பொருள் பரிமாற்றம் என்பது அவசியமான ஒன்றாகும்.  இஃது வெளிநாட்டு வணிகம் எனப்பட்டது.  தமிழகத்தில் இவ்வாறான வணிகம் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது.  தமிழர்கள் ஐரோப்பிய ஆசிய நாடுகளோடு கடல் மூலமாக வாணிகம் செய்துள்ளனர்.  இவற்றை இலக்கியச் சான்றுகள் மூலம் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
நீர்வழி வாணிகம்
            தமிழ் நாட்டின் இயற்கையைத் தமிழர்கள் கடல் கடந்து வாணிகம் செய்து சிறப்புப் பெற வைத்துள்ளனர்.  தொன்மைக் காலம் தொட்டே இவர்கள் கடல் நீரின் வலிமை புரிந்து அதை அடக்கி ஆண்டுள்ளனர் என்பதற்குப் புறப்பாடல் வரிகளே சான்றாக உள்ளன (நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி). தமிழர்கள் கடலோர மற்றும் நடுக்கடலில் பயணம் செய்தும் வாணிகம் செய்துள்ளனர். (மயிலை சீனி. வேங்கடசாமி, பழங்காலத் தமிழர் வணிகம், .40).  கடலில் வணிகம் செய்வதற்குக் கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசல், புனை, தோணி, திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் ஆகியவை பயன்படுத்தப்பட்டு உள்ளன.  நாட்டின் கரையோரங்களில் செல்வதற்குச் சிறுசிறு ஓடங்களையும், பிறநாட்டு வணிகத்திற்கு நுண்ணிய தொழில்நுட்பமடைந்த நாவாய்களையும் பயன்படுத்தியுள்ளனர் என அறிகிறோம். 


நீர்வழி அயலக வாணிகத் தொடர்புகள்      
அராபியர்
தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, கடல் கடந்து சென்று வாணிகம் செய்திருப்பதைப் பட்டினப்பாலை (வரிகள்.185-191) மெய்ப்பிக்கின்றது.  தமிழ்நாட்டு வணிகர், பாரசீக வளைகுடாவோடு நின்றிருந்த காலத்தில், அவர் கொணர்ந்த பொருள் எகிப்து முதலான தொலைநாடுகளுக்குச் சென்று விற்ழுப் பொருள் சேர்க்கும் தரகராய் விளங்கியவர் அராபியர்.  தமிழ் நாட்டுக்கு வடமேற்கிலிருந்து வந்த அராபிய வணிகர் சேர நாட்டின் முசிறி துறைமுகத்துக் வந்து வணிகம் செய்தனர்.  முசாரிபஸ் என்ற சொல்லிலிருந்து முறிசி தோன்றியது.  முசாரிபஸ் என்றால் பயணிகள் தங்கும் இடம்என்று பொருள் உணர்த்துகிறது.  முசிறியில் அவர்கள் வணிகம் செய்த இடத்துக்குப்பந்தர்என்று பெயரிட்டு இருந்தார்கள்.  பந்தர் என்றால் அரபு மொழியில் கடைவீதி என்பது பொருள்.  முசிறி துறைமுகத்துப் பந்தரில் முத்துக்களும் விலையுயர்ந்த நகைகளும் விற்கப்பட்டன.  பதிற்றுப்பத்து 6ஆம் பத்து 5ஆம் செய்யுளில்,
நன்கல வெறுக்கைத் துஞ்சும் பந்தர்
என்றும், 7ஆம் பத்து 7ஆம் செய்யுளில்,
பந்தாப் பெயரிய பேரிசை மூதூர்
என்றும், 8ஆம் பத்து 4ஆம் செய்யுளில்,
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்
என்றும் பந்தர் அங்காடி கூறப்படுகிறது.
          அராபியர் தமிழ் நாட்டோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தபடியால் அரிசி என்னும் தமிழ்ச்சொல் அரபு மொழியில் ஓரூஜ் என்று வழங்குகிறது.  அராபியர்  அக்காலத்தில் தமிழ் நாடாக இருந்த சேர நாட்டிலிருந்து மூங்கிலைக் கொண்டுபோய் அரபி நாட்டில் வளர்த்தனர்.  அராபியர், தமிழ் நாட்டுப் பொருள்களை, முக்கியமாகச் சேர நாட்டு மிளகைக் கொண்டு போய்ச் செங்கடல் துறைமுகங்களிலும் எகிப்து நாட்டில் நைல் நதி, கடலில் கலக்கும் இடத்திலிருந்து அலெக்சாண்டிரியா துறைமுகப்பட்டினத்திலும் விற்றனர்.  அங்கிருந்து பொருள்களைக் கொண்டு வந்து தமிழ் நாட்டில் விற்றார்கள்.  அக்காலத்தில் அராபியர் கிழக்கிந்தியத் தீவுகளுக்குச் சென்று வணிகம் செய்யவில்லை.  தமிழர் கிழக்கிந்தியத் தீவுகளுக்குப்போய் அங்கிருந்து கொண்டு வந்த பொருட்களை இங்கிருந்து அராபியர்  வாங்கிக் கொண்டுபோய் வெளிநாடுகளில் விற்றனர்.  தொலைதூரக் கிழக்கு நாடுகளில் உண்டான பொருட்களை மேற்கு நாடுகள் வாங்கிக் கொண்டு போவதற்குத்தமிழ்நாடு அக்காலத்தில் மத்திய வணிக இடமாக அமைந்திருந்தது என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி (பழங்காலத் தமிழர் வணிகம், 1992, பக்.57-58).
          அராபியர்களால் நீண்ட நாட்கள் தமிழகத்துடன் வணிக உறவு வைத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் தமிழ்நாட்டுக் கலங்கள் பாரசீக வளைகுடாவைத் தவிர்த்து நேரடியாக செங்கடல் நோக்கிச் சென்றவுடனே அராபியர் இடத்தைக் கிரேக்கரும், ரோமானியரும் பற்றிக் கொண்டனர்.  அதன் பின்னர் மீண்டும் கி.பி.7ஆம் நூற்றாண்டில் இவர்களது வணிகம் தொடர்ந்தது.  இஞ்சிஇந்தியப் பொருள் எனத் தெரியாத அளவிலேயே  அரேபிய இடைத்தரகர்கள் அதை அரேபிய ஏற்றுமதிப் பொருள் எனக் கருதும் அளவில் வணிகம் செய்தாக வார்மிங்டன் விளக்குகிறார் (E.H. Warmington, The Commerce between the Roman Empire and India, 1928).
யவனர்
          சங்க காலத்தில் தமிழகத்தோடு வணிகம் செய்து வந்த ஐரோப்பியர் யவனர் எனப்பட்டனர்.  இச்சொல்அயோனிஸ்என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பிறந்த்து.  சங்க இலக்கியங்களில் அயல் நாட்டவரைக் குறிப்பிட பொதுவாக யவனர் என்னும் சொல்லைப் பயன்படுத்தினர்.  தமிழ் உரையாசிரியர்கள் யவனரைச் சோனகர் என்று குறிப்பிட்டுள்ளனர்.  சோனகர் யவனர்களில் ஒரு பிரிவினராகக் கருதப்படுகிறது.  பின்பு கிரேக்க நாட்டாரும் ரோம் நாட்டாரும் யவனர் என்று அழைக்கப்பெற்றனர் என்று வரலாற்று ஆசிரியர்களிடம் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
வணிகத்தின் பொருட்டு தமிழகம் வந்த யவனர் பலர் இங்கு நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.  அத்தகையோர் அரசர்களுக்கு மெய்க்காப்பாளர்கள் (முல்லை.59-63), அரண்மணை காவல்காரர், இராணுவப் பாசறை காவல் ஆகிய பணிகளில் இடம்பெற்றனர். மேலும் அவர்கள் மேலைக்கடலில் கடற்கொள்ளைகள் நடைபெற்றபோது, ரோமானிய வணிகர்களின் மரக்கலங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் பொறுப்புகளிலும் இருந்துள்ளனர்.  மேற்கூறிய யவனர்களின் சிறப்புக்களைச் சங்க இலக்கியமான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றில் ஆறிடங்களில்  (அகம்.49, புறம்.50, நெடுநல்.101, பதிற்.2:8-9, முல்லை.59, பரி.20:104) காணப்படுகின்றன என்பர் (R. Nagaswamy, Roman Karur, 1995-96, p.102).
கலம் என்னும் சொல் கிரேக்கம், தமிழ் என்னும் இரண்டு மொழிகளுக்கும் உரிய சொல்.  கிரேக்க மொழியில் (kalom) கலம் என்னும் சொல்லுக்கு மரவீடு என்பது  பொருள்.  இந்தச் சொல்லை யவனர்  கப்பல்களுக்கும் பெயராக வழங்கினர்.  யவனர் வணிகத்தின் பொருட்டுத் தமிழ் நாட்டுக்கு வந்தபோது இச்சொல்லைத் தமிழர் அறிந்திருந்தனர்.  அறிந்து செய்யுட்களிலும் பயன்படுத்தி இருக்கின்றனர்.   யவனர் தந்த வினைமான் நன்கலம்” (அகம்.149), “யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்” (புறம்.56) என்பதால் தமிழிலும் கலம் என்னும் சொல் உண்டு என்பது தெரியவருகிறது.  இத்தமிழ்ச் சொல்லுக்குப் பானை, சட்டி என்பது பொருள்.  ஒரே ஓசையுள்ளதாக இச்சொல் இருந்தபடியால் தமிழர் அடைமொழி கொடுத்து இச்சொல்லை வெவ்வேறு பொருள்களில் பயன்படுத்தியிருக்கின்றனர்.
சாவகம்
          சங்க காலத் தமிழர் அக்காலத்தில் சாவகத் தீவுகளுக்குக் கடல் கடந்துபோய் வணிகம் செய்திருக்கின்றனர்.  மணிமேகலை சாவக நாட்டைக் கூறுகிறது.  இதைச் சூழ்ந்திருந்த மற்ற தீவுகளில் உற்பத்தியான பொருள்கள் எல்லாம் சாவகத் தீவுக்குக் கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டுள்ளன.  தமிழ் நாட்டிலிருந்து சென்ற தமிழ் வணிகரும் வட இந்தியாவிலிருந்து சென்ற இந்திய வணிகரும் சீன நாட்டிலிருந்து சென்ற சீன வணிகரும் சாவகத் தீவுடன் வணிகம் செய்துள்ளனர்.  அக்காலத்தில் சாவகம் சீன நாட்டுக்கும் இந்தியாவிற்கும் இடையே மத்திய வணிக நிலையமாக இருந்தது. மற்ற நாடுகளில் கிடைக்காத பளித வகை இலவங்கம், சாதிக்காய், குங்குமப்பூ முதலான வாசனைப் பொருட்கள் அங்கு உண்டாயின என மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகின்றார் (பழங்காலத் தமிழர் வணிகம், பக்.65-66).  மேலும், இவர் பலநாட்டுக் கப்பல் வணிகர், அக்காலத்தில் உலகப் புகழ்பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினத்திலே வந்து தங்கியிருந்த்தைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன (பட்டினப்பாலை, 216-218, சிலம்பு. இந்திர விழா வரி.9-12, கடலாடு காதை வரி.130-131). அங்கு வந்திருந்த அயல்நாட்டு வணிகரில் சாவகத் தீவிலிருந்து வந்தவர்களும் இருந்தனர் என்று கருதலாம் என்கிறார்.  ஆக, அக்காலத்தில் சாவகத் தீவின் வணிகர் கப்பல்களிலும் குறும் படகுகளிலும் பல கடல்களைக் கடந்து சென்றார்கள்.
          இவ்வாறாக சங்க காலத் தமிழக மக்கள் அராபியர், யவனர் மற்றும் சாவகர் நாட்டு மக்களுடன் கொண்ட வணிகத்தை சங்க இலக்கியம் மற்றும் சிலப்பதிகாரம் மூலமாக அறியமுடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக