வியாழன், 17 மே, 2018

இலக்கியங்களில் ஓலை

இலக்கியங்களில் ஓலை

முனைவர் மோ.கோ. கோவைமணி
இணைப்பேராசிரியர், தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் - 613 010.

காலந்தோறும் இரண்டு வகையான ஓலைகள் தமிழக மக்களின் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளன.  அவை ஒன்று, நாட்டுப்பனையோலை; மற்றொன்று, சீதாளப்பனையோலை.  இவ்விருவகை ஓலைகளிலுமே பெரும்பான்மையான செய்திகள் எழுதப்பெற்றுள்ளன.  சங்கம் மற்றும் இடைக்காலத்தில் பயன்பட்ட மூலவோலை நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அவ்வவற்றின் படியோலைகள் கிடைக்கின்றன.  அவற்றில் காணப்படும் செய்திகளைக் கொண்டே பழங்காலத்தில் ஓலைகள் புழக்கத்தில் இருந்தன என்பதை அறிகிறோம்.

இன்று நாம் காகிதத்தை எவ்வெவ் வகைகளில் எல்லாம் பயன்படுத்துகின்றோமோ அதேபோல் பல்வேறு வகைகளுக்கு அக்காலத்தில் ஓலைகள் பயன்பட்டு இருக்கின்றன.  வீட்டுக்கணக்கு, சாதகம், அரசாணைகள், திருமணம் மற்றும் விழா அழைப்பிதழ்கள், கருத்துப் பரிமாற்றக் கடிதங்கள், ஆவணங்கள், இலக்கியம் - இலக்கணம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையான செய்திகளை ஓலைகளில் எழுதியிருக்கின்றனர்.  மேலும் ஓலைகள் மூலவோலையாகவோ படியோலையாகவோ இல்லாமல் மாதிரிப் படிக்காகவும் ஓலைகளில் எழுதியிருக்கின்றனர்.  அதாவது, நீண்டநாள் நிலைத்திருக்கக் கூடிய செய்திகளைக் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் வெட்டும் போது பிழை நேர்ந்திடக் கூடாது என்பதற்காக - மாதிரிப் படிக்காக முதலில் ஓலையில் எழுதித் திருத்தம் பார்த்தபின் பிறகு கல்லிலும் செம்பிலும் வெட்டியிருக்கின்றனர்.  இதனைக் 'கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளும்' என்னும் வாசகத்தோடு கூடிய ஓலைச்சுவடிகளால் அறிகிறோம்.   

சங்க இலக்கியந் தொடங்கி ஓலை பற்றிய பல்வேறு குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.  அரசவைச் செய்திகளும் ஆணைகளும் அடங்கிய கடிதங்கள் ஓலையில் எழுதியதை,
"ஒட்டித்தான் விடுத்த ஓலை 
உட்பொருள் உரைமின் என்ன" (சீவக.2143)
"ஓலையுட் பொருளைக் கேட்டே 
ஔ¢ளெயி றிலங்க நக்கு" (சீவக.2148)
"கணக்குத்துறை முற்றிய கடுஞ்சொல் ஓலை
அரக்குப்பொறி யொற்றி யானையிற் போக்கி" (பெருங்.1:37:208-209)
என்பவைகளாலும், இவ்வாறு எழுதப்பெற்ற கடித ஓலைகளில் இன்னாரால் எழுதப்பெற்ற கடிதம் என்பதைக் குறிக்க முத்திரையிடப்பெற்ற செய்தியை மேற்குறிப்பிட்ட பெருங்கதை வரியாலும்,
"துகள்தபு காட்சி அவையத்தார் ஓலை" (கலி.94:42)
"மண்ணுடை முடங்கன் மாதவி யீத்தலும்" (சிலப்.13:76)
என்பவைகளாலும், திருமணச் செய்திகளடங்கிய கடித - அழைப்பிதழ்களைக்
"கொற்றவர் திருவுக் கேற்பக் குறித்துநாள் ஓலைவிட்டார்" 
(தடுத்தாட்கொண்ட புராணம்,9)
"பெருகுமண நாளோலை பெருஞ்சிறப்பி னுடன் போக்கி" 
(திருஞானசம்பந்தர் புராணம், 1169)
"தோகைமண வோலைகொடு தூதுவ ரடைந்தார்"
(நடைதம், நளன்தூது, 3)
என்பவைகளாலும், சொந்தச் செய்திகள் எழுதப்பட்ட கடிதங்களை,
"மாதவி யோலை மலர்க்கை னீட்ட"  (சிலப்.13:82)
".........  வேண்டிற் றெல்லாங் குறைவின்றித்
தரநாம் ஓலை தருகின்றோம்" (கழறிற்றறிவார் புராணம், 27)
"தேவர்கோன் எழுதும் ஓலை" (கழறிற்றறிவார் புராணம், 52)
என்பவைகளாலும், தொல்காப்பியம்,
"தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா" (தொல்.மரபியல், நூ.86)
என்பவையாலும் அறியலாம்.  இன்றும் பல இடங்களில் கடிதத்தை ஓலை என்றே அழைக்கும் மரபு மக்களிடம் உள்ளதை அறிவோம்.

ஓலைக்கடிதத்தை 'ஓலைப்பாசுரம்' எனவும் வழங்குவர்.  இதனை நச்சர், "ஓலைப் பாசுரமான மாலையைப் பிறர் அறியாதபடி இவையுங் கூடிக் கட்டினான்" (சீவக.1653 உரை) என்றும், 'வருக' என்னுமளவும் ஓலைப் பாசுரம் (சீவக.2147) என்றும், அடியார்க்கு நல்லார் உரையில் 'இவ்வாறு பலவகை ஏதம் பயக்குமென்று அவளெழுதிய ஓலைப்பாசுரத்திற் பொருளெல்லா முணர்ந்து" (சிலப்.13:93-95) என்றும் குறிப்பிடுவதால் ஓலைக்கடிதம் ஓலைப்பாசுரமாய் வழக்கத்திலிருந்ததும் புலனாகிறது.  புலவர்கள் வள்ளல்களுக்கு எழுதும் கவிதைக் கடிதம் 'ஓலைத்தூக்கு' என்று பெயர்பெற, இதனை நன்னூல், 'மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்' எனச் சுட்டுகின்றது.  இப்படிப் பழங்கால இலக்கியங்களில் ஓலை பற்றி வரக்கூடிய செய்திகளில் மிகுதியாகக் கடிதச் செய்திகளே இருப்பதைக் காண்கிறோம்.

ஓலையால் பெயர்பெறுவோர்

'அரசராயினார் கூறும் செய்தியை ஓலையில் எழுதுவார் 'திருமந்திரவோலை' என்றும், அவர்கள் தலைவராக இருப்பார் 'திருமந்திரவோலை நாயகம்' என்றும் பெயர் பெற்றனர்.  அரசரின் செயல் நடவடிக்கை முதலியவற்றை எழுதுவார் 'பட்டோலை' என்றும், கணக்கெழுதுவார் 'ஓலைக்கணக்கர்' என்றும், ஊர் நடவடிக்கைகளை அவையோர்க்குப் படித்துக்காட்டுவார் 'நீட்டோலை' என்றும் பெயர் பெற்றனர்(இரா. இளங்குமரன், சுவடிக்கலை, ப.10) என்ற குறிப்பிலிருந்து ஓலையில் எழுதுவோர் தொடங்கிப் படிப்போர் வரை ஓலையால் பெயர் பெற்றமையைக் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக