செவ்வாய், 15 மே, 2018

பழந்தமிழர் பாடல்களில் ஞாயிறும் திங்களும்


பழந்தமிழர் பாடல்களில் ஞாயிறும் திங்களும்
முனைவர் மோ.கோ. கோவைமணி
இணைப்பேராசிரியர், தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்-10.
கல் தோன்றி மண் தோன்றாக் காலந்தொட்டே தமிழனின் நினைவுச் சின்னங்கள் கிடைக்கின்றன.  சிந்தசமவெளி நாகரிகம் தொடங்கி தமிழனின், மனிதனின் பதிவுகள் அகழாய்வுகள் மூலம் கண்டெடுக்கப்பட்டும் கண்டெடுத்துக்கொண்டும் இருக்கின்றனர்.  இவையன்றி அவனின் பதிவுகளில் இருந்தும் அவனின் அடையாளங்களைக் காணமுடிகிறது.  குறிப்பாக பழந்தமிழர்களின் இலக்கியங்களில் பலப்பல நினைவுச் சின்னங்களை, அவன் கண்டுணர்ந்தவற்றைப் பதிவு செய்திருக்கின்றான்.  இந்நிலையில் இக்கட்டுரை பழந்தமிழரின் பாடல்களில் குறிப்பாக சங்கப் பாடல்களில் காணப்படும் ஞாயிற்றைப் பற்றியும் திங்களைப் பற்றியும் எடுத்தியம்புகிறது.
ஞாயிறு
ஞாயிறு என்ற சொல் நாயிறு என்ற இலக்கியப் பெயராக விளங்குகிறது.  -ஞ என்று போலியாக வரும்.  நயம்பட உரை என்பதை ஞயம்படவுரை என்பார் ஔவையார்.  ஞாய் + இறு நயத்திற்கு உரிய பொருளோடு இருப்பது என்று பொருள்படும்.  நயம் நாயம் எனவும் நீளும்.  நயத்திற்குரிய கடவுள் நாயன் ஆவான்.  அடியார் நாயனார் எனப்பட்டனர்.  இதனடியாக ஆக்கம் பெற்று வடமொழிச் சொல்லாக வழங்குபவை நாயகன், நாயகி என்பவை தமிழில் நாச்சியார் என அழைக்கப்படுகிறது. பேரிருளில் இருந்து உயிர்கள் விடுதலை பெற்றுச் செயலாற்றுவதற்கு நாயகமாக இருத்தலின் நயக்கப்படும் செஞ்சுடர் ஞாயிறு என்று அழைக்கப்பட்டது.  இதைத் திங்கள், செவ்வாய் போன்று கோள்களுக்கு நயமாக இருப்பதால் ஞாயிறு எனப்பட்டது என்பர். (. பாலசுந்தரம், மொட்டும் மலரும் சொற்பொருள் விளக்கம், தொகுதி 1, .15)
ஞாயிற்றின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் காணப்படுபவை என்று காணும் போது வெளிவட்டமாகிய பல லட்சம் பாகை (20,00,000 டிகிலி கெல்வின்) வெப்பமுள்ள ஒளிர்க்கதிர்ப் பாபத்தை நெடுஞ்சுடர்க்கதிர்’ (Corona) என்றும், தகதகக்கும் பரப்பினை வெப்ப ஒளிப்படலம்’ (Photosphere) என்றும், அதன் உட்புறமே கனல் அகம்’ (Solar interor) என்றும் இன்று அறிவியல் குறிக்கிறது.  ஞாயிற்றின் உட்கூட்டில்’ (Core) ஹைட்ரஜன் (Hydrogen) அணுக்கள் ஹீலியம் (Helium) அணுக்களாக மாறும் அணுக்கருப்பபிணைவு(Nuclear Fusion) உமிழும் சக்தியின் வெளிப்பாடே வெப்பமிக்க சக்தியாகிறது. எனவே கதிரவனின் உள்ளகமானது கொதித்துக் கொண்டிருக்கும் என்பார் நெல்லை சு. முத்து. (நெல்லை சு. முத்து, விண்வெளிப்படிகளில் இந்தியா, .4)
ஞாயிற்றின் இந்நிலையினை சங்கப் புலவர்கள் நெருப்புக்குரிய கனல்என்ற சொல் கொண்டு (கனல் +) கனலி என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.  இதனை,
      வெந்தெறல் கனலியொடு மதிவலம் திரிதரும்
தண்கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது (பெரும்பாண். வரி.17-18)
என்று பெரும்பாணாற்றுப்படையும்,
            வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர்காயத்(து) எழுந்(து)அகம் கனலி ஞாயிறு  
(நற்றிணை, பா.163:9-10) 
என்று நற்றிணையும் குறிப்பிடுகின்றதைக் காணலாம்.
      சங்க காலப் புலவர்கள் ஞாயிற்றை அதன் தன்மை அடிப்படையிலும் பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.  பருதி, பரிதி, கனலி, இருள்வலி, சூரன், எல், செங்கதிரோன், கதிரவன், ஒளி, அனலி, அரி, பகலோன், வெய்யோன் என்றவாறு அப்பெயர்கள் சுட்டப்பெற்றிருக்கின்றன.
      ஞாயிற்றின் உதயத்தைக் குறிக்கும் பொழுது பருதிஎன்ற சொல்லைச் சுட்டுகின்றனர்.  இதனை,
            அகல்இரு விசும்பின் பாய்இருள் பருகிப்
பகல்கான்று எழுதரு பல்கதிர்ப் பருதி (பெரும்பாண். வரி1-2)
              ..... பரிதியஞ் செல்வன் (மணிமேகலை, பா.4:1)
என்று பெரும்பாணாற்றுப்படையும் மணிமேகலையும் சுட்டுகிறதைக் காணமுடிகிறது.
      ஞாயிறு பற்றிக் குறிப்பிடும் இடங்களில் சங்கப் புலவர்கள் அவற்றின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் அவற்றின் இயல்பினையும் சிறப்பினையும் உணர்த்தும் அடைமொழிகளையும் இணைத்தே குறிப்பிட்டுள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகத் திகழ்கிறது. 
            பகல்செய் மண்டிலம்  (பெரும்பாண். வரி.442)
            “....... மலர்வாய் மண்டிலம் (புறநானூறு, பா.175:9)
            வீங்கு செலல் மண்டிலம் (நெடுநல்வாடை, வரி.161)
            மைஅறு மண்டிலம் (கலித்தொகை, பா.141:12)
என்றெல்லாம் பெரும்பாணாற்றுப்படையும், புறநானூறும், நெல்நல்வாடையும், கலித்தொகையும் குறிப்பிடுவதிலிருந்து புலப்படுகிறது.  மேலும், இங்குப் பகல்செய் மண்டிலம்  (பெரும்பாண். வரி.442) என்றவிடத்தில் பகல்என்பதற்கு எல்என்றும் குறிக்கப்படுகிறது.  எல்என்பதற்கு இலங்குதல்என்பது பொருள்.  அஃது ஒளிர்தற் கருத்துடையது ஆதலின் ஞாயிறு’, ‘எல்எனப்பட்டது.  அதனடியாக எல்லை, எல், எல்லி என்ற வேறுபெயர்களும் பகலிற்கு எழுந்தன.  ஞாயிறு ஒளியைத் தருவதால் எல் என்பது பகல் என்னும் பொருளில் வந்தது என்பர்.
திங்கள்     
விண்வெளியில் பூமிக்கு அருகில் உள்ள கோள் நிலவு என்று அழைக்கப்படும் திங்கள் ஆகும். நிலவில் கால்சியம், அலுமினியம், டைட்டேனியம் போன்ற கனரகப் பொருட்களும், நீரில்லாத உலர்ந்த மண்களும் இருக்கின்றன.  இதனுடைய விட்டம் 3476 கிலோமீட்டராகும்.  பூமியின் விட்டத்தில் நான்கில் ஒரு பங்காகும்.  கவிஞர்கள் வருணிப்பது போல நிலவானது அழகாக இருப்பதில்லை. இதனுடைய மேற்பரப்பு கரடு முரடான கற்களும், பாறைகளும் நிரம்பியதாகவும் விண்கற்கள் மோதியதால் ஏற்பட்ட குழிகள் நிரம்பியதாகவும் காணப்படுகிறது.  நிலவிலிருந்து விண்வெளி வீரர்களால் சேகரித்துக் கொண்டு வரப்பட்ட கற்கள் பாறைகள் ஆகியவை ஏறக்குறைய 4600 மில்லியன் ஆண்டுகள் கொண்டனவாகும் என்பர். நிலவின் ஈர்ப்பளவு பூமியின் ஈர்ப்பளவில் ஆறில் ஒரு பங்கு ஆகும்.  அதாவது, 6 கிலோ எடையுள்ள ஒரு பொருள் நிலாவில் ஒரு கிலோ எடையுள்ளதாகக் காணப்படும்.  நிலாவில் பகல் வெப்பநிலை 120டிகிரி சென்டிகிரேட் வரையும் இரவில் மிகக் குளிர்ந்து -160டிகிரி சென்டிகிரேட் வரையும் காணப்படும். 
      ஞாயிற்றின் ஒளி வீச்சு நிலாவில் பட்டுத் தெறிக்கும் எதிரொளிப்பு ஒளியே நிலவின் ஒளியாகக் காணப்படுகிறது.  சங்கப் புலவர்கள் நிலாவைப் திங்கள், மதி என்று வேறு பெயர்களால் அழைத்திருக்கின்றனர். நிலாவானது இரவு நேரங்களில் பழங்காலங்காலந் தொட்டு திசைகாட்டும் கருவியாக விளங்கி வருகிறது.  இதனை,
            மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும் (பெரும்பாண். வரி.48)
என்று பெரும்பாணாற்றுப்படை குறிக்கின்றது.   நிலவின் வெளிச்சம் பற்றி,
            நிலவுன் கானல்....” (மதுரைக் காஞ்சி, வரி.114)
என்று மதுரைக்காஞ்சி வரியும் சுட்டுவதைக் காணலாம்.
      நிலவைப் பொறுத்தவரை வளர்பிறை, தேய்பிறை என்ற இரு நிலைகள் காணப்படுகின்றன.  நிலவில் ஏற்படும் வளர்பிறை, தேய்பிறை மாற்றங்கள் குறித்து பெரும்பாணாற்றுப்படை,
            அவ்வாய் வளர்பிறை சூடிச் செவ்வாய் (பெரும்பாண். வரி.412)
பிறைபிறந் தன்ன பின்ஏந்து கவைக்கடை (பெரும்பாண். வரி.11)
என்று வளர்பிறையின் தோற்றத்தினையும் தேய்பிறையின் தோற்றத்தினையும் குறிப்பிடுகிறது.
நிலவின் வளர்பிறை காலமும் தேய்பிறை காலமும் தமிழரின் ஒரு மாதக் கணக்கீடாகும்.  அதாவது, “இருள்மதி அல்லது அமாவாசை நாளிலிருந்து கடந்துள்ள நாள்களின் எண்ணிக்கை நிலவின் வயதாகும்.  இருள் மதிக்குப் பின்னர் மூன்றாம் நாள் மேற்கு வானில் சூரியன் மறைந்தவுடன் சந்திரன் ஒரு சிறு கோடாகத் தோன்றும்.  இதைப் பிறை என்பர்.  நாளுக்கு நாள் பிறை வளர்ந்து முழு மதியாக, 14.75 நாள் கழித்துக் கீழ்வானில் தோன்றும்.  இருள் மதியிலிருந்து முழுமதி வரை உள்ள காலம் வளர்பிறை காலம்  அல்லது சுக்கில என்றும், முழுமதியிலிருந்து மீண்டும் குறைந்து கொண்டே வந்து 14.75 நாள் கழித்து இருள் மதியாகும் காலம் தேய்பிறை காலம் அல்லது கிருஷ்ண பட்சம் என்றும் பெயர் பெறும் என்பர். (அறிவியல் களஞ்சியம் தொகுதி 9, .741)
நிலவில் சந்திர கிரணம் ஏற்படுகிறது.  பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
       குழவித் திங்கள் கோள்நேர்ந் தாங்கு     (பெரும்பாண். வரி.384)
என்கின்றார்.  அதாவது, இப்பாடலில் சிறியதாக வளைந்த பிறைச்சந்திரனைக் கிரகண காலத்தின்போது இராக என்று சொல்லப்படும் பாம்பு பற்றி இருப்பது போல மகர மீனின் வாய் போன்ற நெற்றிச் சுட்டி அமைந்திருப்பதாக என்று வருணித்துள்ளார்.  மேலும் இதனைக் கலித்தொகை,
            திங்கதிர் மதிஎய்க்கும் திருமுகம், அம்முகம்
பாம்பு சேர்மதிபோல் பசப்பூர்ந்து தொலைந்தக்கால் (கலி.4:16-17)
என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, சந்திரனைப் போன்ற ஒளி பொருந்திய முகமுடைய மகளிர் தலைவனுடைய பிரிவு தாங்காமல் பசலை நோய் வரப்பெற்றதால் முகம் வாடுகிறது.  இந்நிலையானது, கிரகண காலத்தில் பற்றிய பாம்பு சந்திரனைப்போல் இருப்பதாக இப்பாடல் வரி எடுத்துரைக்கிறது.   
       இவ்வாறு பழந்தமிழர் பாடல்களான சங்கப் பாடல்களில் ஞாயிறு பற்றியும் திங்கள் பற்றியும் எடுத்துரைத்திருப்பதைக் காணும்போது தன்னால் கையில் பிடிக்க முடியாத கண்ணால் காண முடியாத தொலையில் உள்ள கோள்களைப் பற்றிய சிந்தனை இருந்திருப்பதைக் காணும் போது அவனின் அறிவியல் சார்ந்த வானியல் சிந்தனை வெள்ளிடைமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக