சங்க கால நடுகல்
நம்பிக்கையும் வழிபாடும்
முனைவர் மோ.கோ. கோவைமணி
இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்-613 010.
சமுதாயத்தில் சிறப்புமிக்க ஒருவரின் நடவடிக்கைகளாலும் அவரின் பண்பாலும் அவரின்
இறப்பிற்குப் பின் அவர்களது நினைவாக சுற்றத்தார்களாலும் உற்றவர்களாலும் நடப்படும்
கல்லே நடுகல் எனப்படுகிறது. நடுகல்
என்றால் நடப்பட்ட கல் என்று பொருள்படும்.
இதனை சங்க இலக்கியத்தில் ஒன்றான அகநானூறு,
“நட்டபோலும் நடாஅ நெடுங்கல்” (அகம்.269:1)
என்கிறது. வீரத்தினைப் போற்றும்
பண்பின் அடிப்படையில் தோன்றிய நினைவுச் சின்னம் பின்னர் காலப்போக்கில் ஆவி பற்றிய
நம்பிக்கையின் பாற்பட்ட நிலையில் நடுகல் வழிபாடாக உருப்பெற்றது. வீரயுகத்தில் நினைவுச் சின்னமாகக் கருதப்பட்ட
ஒன்று காலப்போக்கில் வழிபாடாக மாற்றம் பெற்ற நிலையினை இது காட்டுகிறது. எனவே
நடுகல் நடப்படும் வழக்கம் நம்பிக்கை வயப்பட்ட நிலையில் நம்பிக்கை வயப்பட்ட
வழக்கமாக மாறியமையினையே நடுகல் வழிபாடு அமைகிறது.
நடுகல் நம்பிக்கை
பழந்தமிழரின் வீரத்தைப் போற்றும் பண்பும் ஆவி பற்றிய நம்பிக்கையுமே நடுகல்
நடுவதற்கு அடிப்படை காரணமாயின.
வீரத்தினையே உயர்வாகக் கருதிய தமிழகத்தில் நடுகல் எடுக்கும் வழக்கம்
காலப்போக்கில் வேறு சில சமுதாய மதிப்புப் பெற்ற மனிதப் பண்புகளுக்கும் சிறப்பளித்தமையினை
நம்பு, மானம், புகழ் ஆகியவற்றிற்காக உயிர்நீத்து நடுகல்லான
மாந்தரின் வாழ்வியல் நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன. நடுகல் எடுக்கும் வழக்கத்தில் ஏற்பட்ட
இடமாற்றம் ஆவிக் கொள்கைக்கு வழியமைத்ததனைப் பிரேசர் என்ற சமூகமானிடவியல் ஆய்வாளர், ‘இறந்தவனது ஆன்மாவைச் சில
சடங்குகள் மூலம் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கலாம். அங்குள்ள ஓர் பொருளில் நுழைந்து கொள்ளச்
செய்யலாம் என்ற நம்பிக்கை உலகமெங்கும் பண்டைய மக்களின் பண்பாட்டில் காணப்படுகிறது’ என்று நடுகற்களும் நம்பிக்கைகளும் என்ற தன்னுடைய
கட்டுரையில் அறிஞர் நா. வானமாமலை குறிப்பிடுகின்றார். மேலும் அவர், போரில் மாண்ட ஆவி சில நாட்களுக்கு உலகில் உலவுவதாகவும் சாவுச் சடங்குகள்
கழிந்த பின்னரே வேறுலகு செல்வதாகவும் நம்பினர்.
சாவுச் சடங்குகள் நிகழ்த்துவதற்குமுன் கல்நாட்டிச் சடங்கு செய்தால் ஆவியின்
ஒரு பகுதி அங்கு தங்குமெனவும் விழாக்காலங்களில் பழம் பிறப்புணர்வுடைய மேலோர்
உலகிலுள்ள ஆவி இக்கல்லுக்கு வரும் என்ற நம்பிக்கை வழிபடுபவர்களுக்கு இருந்தது
என்கின்றார். நடுகல்லில் இறந்தோர் ஆவி
புகுந்ததாக நம்பும்நிலை நடுகல் வழிபாட்டிற்கு வழிகாட்டியமையினை இதன் மூலம்
உணரமுடிகிறது.
இறந்து ஆவியாகிப் போனவர்களுடைய ஆன்மாவிற்கு ஆற்றல் அதிகம் என்றும், அது ஆக்க சக்தியாகவும் அழிவுச் சக்தியாகவும்
வெளிப்படலாம் என்றும் எண்ணுவது கல் நாட்டுவோருடைய நம்பிக்கையாகும். எலிஸியம் என்பது இறந்த வீரர் புகும் சுவர்க்கம்
எனவும் அது இவ்வுலகிலேயே உள்ளதென்றும் பண்டைய கிரேக்கர்கள் நம்பினர்;;;;;; அது போலவே பண்டைய ஜெர்மானியம், ரோமானியர், எகிப்தியர், சீனர், தமிழர் ஆகியோரும் சுவர்க்கம் என்ற கருத்தில்
நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர் என்கிறார் நா. வானமாமலை.
வீரர்கள் போருக்குச் செல்லும் போது நடுகற்களை வாழ்த்திப் பலி கொடுத்துச்
சென்றமை அக்கால நடுகல் நம்பிக்கையினைப் புலப்படுத்துகிறது. இ;ங்கு வீரர்கள் நடுகல்லில் அடங்கியுள்ள ஆவியின் துணைபெற்றுச் செல்வதே
அந்நம்பிக்கையாகும். இவ்வழிபாட்டின்
எச்சத்தைக் கல்நாட்டுதல் என்னும் சாவுச் சடங்கில் காணமுடிகிறது.
வடக்கிருந்தார்க்கும் நடுகல் எடுக்கும் வழக்கம் தமிழர்களிடையே பண்டு தொண்டு
இருந்து வந்துள்ளது. இது அவர்களது
நினைவுச் சின்னமாகக் கருதப்படுகிறது.
நோக்கங் கருதி வடக்கிருந்து உயிர்விட்ட சான்றோர்க்கு நடுகல் எடுக்கும்
வழக்கம் பழந்தமிழரிடையே சிறப்புக் கருதிய நினைவுச் சின்னமாக அமைந்திருந்தனையே
வடக்கிருந்தார், வாள் வடக்கிருந்தார்
ஆகியோர்க்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் புலப்படுத்துகின்றன. நடுகல்லானோர் காலப்போக்கில் வழிபாட்டிற்கு உரிய
தெய்வமாக மாறிவிடுவதனைச் சங்க இலக்கியத்திலும் சிலம்பிலும் சுட்டப்பெறும் நடுகல்
வழிபாடு உணர்த்துகிறது. கோப்பெருஞ்சோழன்
தன் நிலையில் தாழ்வு வந்துழி மானங்காக்க வடக்கிருந்து உயிர் நீத்ததனை அவனது
நண்பர்களாகிய பிசிராந்தையார், பொத்தியார், பெருஞ்சதுக்கப்
பூதநாதனார் ஆகியோர் புறநானூற்றில் முறையே 212:5-10, 223, 219 ஆகிய பாடல்கள் வழி உணர்த்துகின்றனர். இப்பாடல்களின் வழி நட்பிற்காக
உயிர்துறக்கும் தன்னலங் கருதாத நிலை புலப்படக் காண்கிறோம். பாரியின் பெரும்பிரிவு கபிலர்
வடக்கிருத்தலுக்குக் காரணமாய் அமைவது கொண்டு மன்னர்-புலவர் உறவு அமையும் விதத்தினை
புறநானூறு 236ஆம் பாடல்
உணர்த்துகிறது. நட்புக்கருதி வடக்கிருந்து
நடுகல்லாகிய பிசிராந்தையாரைக் கண்ணாகனார் புகழ்ந்ததை புறநானூறு 218ஆம் பாடல் சுட்டக் காணலாம். சமணப் பெண் துறவியாகிய கவுந்தியடிகள்
உண்ணாநோன்பிருந்து உயிர் விட்டமையை சிலப்பதிகாரம் நடுகல் காதையில் தெளிவுற
எடுத்தியம்புகிறது. இதனைச் சமணர்கள்
சல்லேகனை நோன்பாகக் கருதுவர்.
தமிழரின் வீரத்தைப் பாராட்டு முகத்தான் தோன்றிய நடுகல் வழிபாடு காலப்போக்கில்
மனிதனின் பிற பண்புகளைப் பாராட்டும் நிலையினதாக அமைவதனை வடக்கிருந்தார் நடுகற்கள்
தெரிவிக்கின்றன. நடுகல் எடுக்கும் வழக்கம்
சங்க காலத்தில் ஆண்களுக்குரிய ஒன்றாகக் கருதப்பட்டது. காலப்போக்கில் பெண்களுக்கும் நடுகல் எடுக்கும்
வழக்கம் தோன்றியது. இளங்கோவடிகள், தொல்காப்பியர் காட்டும் நெறியில் நின்று
கண்ணகிக்குக் கல்நாட்டிக் கடவுளாக்கிய புதுமையினைச் செய்துள்ளார். கணவனை இழந்த பெண்டிர் தீப்பாய்ந்து உயிர்நீத்தபின் அவர்களுக்குக் கல்நடும் வழக்கம்
தென்னிந்தியாவில் சங்க காலத்திலேயே பரவலாகக் காணப்பட்டதாயினும் அதனை எந்தவொரு
சங்கப் பாடல்களும் சுட்டவில்லை என்பார் ஜி.எல்.ஹார்ட். கண்ணகிக்குக் கல் எழுப்பியது காலத்தால் ஏற்பட்ட
வழிபாட்டு மாற்றம் எனக் கொள்ளலாம். இருப்பினும் கண்ணகிக்குப் பத்தினிக்கோட்டம்
அமைத்தது கடவுள் வழிபாடு பாற்பட்டதாகக் கருதலாமே தவிர நடுகல் வழிபாடு எனக் கருத
சற்று தயக்கம் ஏற்படுகிறது.
தொல்காப்பியர்,
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை
வாழ்த்தலென்று
இருமூன்று மரபிற் கல்லொடு புணர (தொல்.பொருள்.63:19-21)
என்பதால், இங்கு ஆடவர்க்குரிய
ஒன்றாகவே நடுகல்லைக் குறிப்பிடுகின்றார்.
சங்க இலக்கியத்திலும் நடுகல் ஆண்களுக்குரிய ஒன்றாகக் காட்டப்பட்டிருப்பது
கொண்டு பழந்தமிழர் நடுகல் நாட்டுவதனை ஆண்களுக்குரிய ஒன்றாகக் கருதியமை
புலப்படுகிறது.
போரில் மாய்ந்தோரும், கறவையினை மீட்டோரும், வடக்கிருந்தோரும், பத்தினிப் பெண்டிரும் நடுகல் எடுப்பதற்குரியவர்களாகக் கருதப்பட்டனர். போரில் மாய்ந்தோருக்கு நடுகல் எடுக்கப்பெற்ற
செய்தியினை அகநானூறு 53ஆம் பாடலும், கறவையினை மீட்டோர்க்கு நடுகல் எடுக்கப்பெற்ற
செய்தியினை புறநானூறு 261ஆம் பாடலும், வடக்கிருந்தோர்க்கு நடுகல் எடுக்கப்பெற்ற செய்தியினை புறநானூறு 223ஆம் பாடலும், பத்தினிப் பெண்டிர்க்கு நடுகல் எடுக்கப்பெற்ற செய்தியினைச் சிலப்பதிகாரம்
நடுகல் காதையிலும் சுட்டப்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. உயிர்நீத்த பின்னரே நடுகல் எடுக்கும் வழக்கம்
நிலவியதனை அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்றவை
எடுத்துரைப்பதனைக் காணமுடிகிறது.
வடக்கிருந்து உயிர் நீத்தவர்கள் நான்கு நிலைகளில் உயிர்
நீத்திருக்கின்றனர். இதனை சங்கப் பாடல்கள்
தெளிவாக எடுத்துரைக்கின்றன. தன்
நிலைமையில் தாழ்வு ஏற்பட்டதை எண்ணி வடக்கிருத்தலைப் புறநானூறு 213ஆம் பாடலும், புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருத்தலைப் புறநானூறு 65ஆம் பாடலும்> மானத்திற்காக வடக்கிருத்தலைப் புறநானூறு74ஆம் பாடலும், நட்புக்காக வடக்கிருத்தலைப் புறநானூறு 215ஆம் பாடலும் எடுத்துக்காட்டாக அமையக் காணலாம். இக்கூற்றுடைய பாடல்களை உற்று நோக்கும் போது
மானவுணர்ச்சியும் நட்புமே வடக்கிருத்தலுக்குரிய காரணமாக அமைகிறது எனலாம்.
நடுகல் வழிபாடு
சங்கப் பாடல்கள் சுட்டும் நடுகல் வழிபாட்டுமுறை பழங்கால மக்களின் வழிபாட்டு
இயல்புகளைக் கொண்டிருக்கக் காணலாம். நடுகல் வழிபாடு பலியும் கள்ளும் பீலியும்
துடியும் பயன்படுத்தியமை பண்டைத் தமிழரின் இயற்கையான வழிபாட்டு முறையினைத்
தெரிவிப்பனவாக உள்ளது. நடுகல் வழிபாட்டினை
அகநானூறு 35ஆம் பாடலில்
அம்மூவனார் குறிப்பிடுகின்றார்.
இப்பாடலில் கரந்தை மறவர்க்கு நடுகல்நட்ட செய்தியும் வழிபட்ட மரபும்
சுட்டப்பட்டு இருக்கிறது. இப்பாடல்
ஒன்றில் மட்டுமே செம்மறியாட்டுக் குட்டியினைப் பலியிட்டு நெல்லாற் சமைத்த கள்ளோடு
படைத்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. பீலி
சூட்டும் மரபு புறநானூறு 232 மற்றும் 260ஆம் பாடல்களில்
சுட்டப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
மேலும் பீலி சூட்டுவதன் காரணம் அழகுபடுத்தும் நிலையில் அமைந்த ஒன்றா அல்லது
ஏதாவது குறியீட்டின் அடிப்படையில் பயன்கொண்ட ஒன்றா என்பது சித்தனைக்குரிய
ஒன்றாகும். நடுகற் பீலி சூட்டித்
துடிப்படுத்து என்று அகநானூற்று (35:8) வரி துடி முழக்குதலே நடுகல் வழிபாட்டில் பேசப்பட்டுள்ளமை கொண்டு சிறுதெய்வ
வழிபாட்டு நிலை புலப்படக் காண்கிறோம்.
நடுகல் பெரும்பாலும் மேற்கூரையற்ற நிலையில் காடுகளில் நடப்பட்டிருப்பினும்
ஆடையினைப் பந்தராகக் கட்டியமையை அகநானூறு 260ஆம் பாடலும், கூரையமைத்திருந்தமையைப் பட்டினப்பாலை (78-81)யும் குறிப்பிட்டிருப்பதைக் காணமுடிகிறது.
நடுகல்லில் நடுகற்களான வீரனின் பெயரும் சிறப்பும் பொறித்தமையும், அவனது படைக்கலங்களை நடுகல்லுக்கு அருகிலேயே
ஊன்றியிருந்தமையையும் அகநானூறு 131ஆம் பாடலில் மருதனிள நாகனார் எடுத்துரைத்திருக்கின்றார். நடுகல்லில் பீடும்
பெயரும் எழுதுதல் பெருவழக்காக அமையும்.
இதனை எடுத்துடை நடுகல், பெயரோடு நட்டகல், குயிலெழுத்து, கோடுமாயெழுத்து போன்ற சொல்லாட்சிகளில் சங்க இலக்கியங்களில் குறி;ப்பிடப்பட்டிருக்கின்றன. எழுத்துடை நடுகல் என்று ஐங்குறுநூறு 352ஆம் பாடலும், பெயரோடு நட்டகல் என்று மலைபடுகடாமும் (வரி. 386-389)>
குயிலெழுத்து என்று அகநானூறு 297ஆம் பாடலும், கோடுமாயெழுத்து என்று அகநானூறு 343ஆம் பாடலும் சுட்டக் காணலாம். வீரமே
நடுகல்லிற்கு அடிப்படையாக அமைகின்ற நிலையில் அவனது படைக்கலங்களும் நடுகல்
வழிபாட்டில் வைத்து வழிபாடு செய்யப்பெறுகிறது.
இவ்வாறான காட்சிகளை அகநானூறு 67 மற்றும் 131ஆம் பாடல்களும்> பட்டினப்பாலை (வரி.78-81)யும் சுட்டிச் செல்கின்றன.
இவ்வாறு அமைந்த நடுகல் மற்றும் நடுகல் படைக்கலங்களை வழிபடுவதற்குப்
பழந்தமிழர்கள் நெல்லையும் மலரையும் தூவி வழிபட்டிருக்கின்றனர். நெல்லையும் மலரையும் தூவி தெய்வத்தினை வழிபடும்
முறை பழந்தமிழரின் வழிபாட்டு முறைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. இம்முறையே நடுகல் வழியாட்டிலும்
காணமுடிகிறது. நெல்லைத் தூவி வழிபட்டதைப்
புறநானூறு 355ஆம் பாடலும், மலரைச் சூட்டி வழிபட்டடை அகநானூறு 343ஆம் பாடலும் எடுத்தியம்புகிறது.
வழிபாட்டில் தூவி வழிபடுவதைப் போல் படைத்து வழிபடுதலும் உண்டு. நடுகல் வழிபாட்டில் பழந்தமிழர்கள் படைத்தும்
வழிபட்டிருக்கின்றனர். நடுகல்லுக்குப்
படைத்தல் என்பது நடுகல்லானவர்கள் விரும்பிப் பயன்கொண்ட பொருளாகலாம் என்பது
நினைத்தற்குரியது. இன்றைய நடைமுறையில்
இறந்தோர்க்குப் படைத்தலில் அவர்கள் விரும்பிய, பயன்படுத்திய பொருட்கள் இடம்பெறுநிலை நடுகற்கும் பொருந்துவதாக அமைகிறது. மேலும், நடுகல்லுக்கு நாட்பலி செய்தலும் வழக்கமாக இருந்திருக்கிறது. இதனை அகநானூறு 289ஆம் பாடலும் புறநானூறு 329ஆம் பாடலும் தெரிவிக்கின்றன. அதாவது, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் நடுகல்லுக்கு
நாட்பலி ஊட்டிய தன்மையினைப் புறநானூறு 329:1-5இல் காலையில் நீராட்டி நறிய
தூபங்காட்டி வழிபட்டதை உணர்த்துகிறது.
மேலும், மல்லிகைப்பூ காலை
வழிபாட்டில் பலியாகப் பயன்பட்டதனை அகனாநூறு 289ஆம் பாடலில் இளங்கீரனார் எடுத்துரைக்கின்றார்.
அள்ள+ர் நன்முல்லையார் நடுகல்லை வழிபட்டு வேண்டியதைப் பெறலாம் என்ற
நம்பிக்கையைப் புறநானூறு 306ஆம் பாடலில் எடுத்துரைக்கின்றார்.
அதாவது இல்லறத்தை நல்லறமாக்க விழையும் பெண்ணொருத்தி நடுகல்லைத் தொழுது
விருந்தெதிர் கோடலைத் தருமாறு வேண்டி வழிபட்டமை இப்பாடலில் வெளிப்படுகிறது. நடுகல்லைத் தொழுதால் மழை பெய்யும் என்ற
நம்பிக்கையும் பழங்கால மக்களிடம் நிலவியிருந்ததைப் புறநானூறு 263ஆம் பாடல் எடுத்தியம்புகிறது.
மேற்காணும் சான்றுகளின் அடிப்படையில் காணும் போது நடுகல் பழந்தமிழரின்
நம்பிக்கை வழிப்பட்ட ஒன்றாகவும், அந்நடுகற்கள் கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்ட ஒன்றாகவும் விளங்கியிருப்பதைக்
காணமுடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக