புதன், 16 மே, 2018

ஆறுமுக நாவலர் பதிப்புகள்

ஆறுமுக நாவலர் பதிப்புகள்
முனைவர் மோ.கோ. கோவைமணி
பழந்தமிழ் இலக்கிய வெளியீடுகளுக்குக் கால்கொண்டவர்; உரைநடை நூலாசிரியர்களில் தலைசிறந்தவர்; வசனநடை கைவந்த வல்லாளர்; நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், சமயச் சொற்பொழிவாளராகவும், சமயம் பரப்புவோராகவும், சமயத் தலைவராகவும் விளங்கியவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் என்று தமிழறிஞர்கள் பலவாறு குறிப்பிடுவர்.  இவ்வாறு பல்வேறு வகையான பாராட்டுதல்களைப் பெற்றவர்.  அவருடைய பணிகளில் முதலிடம் வைத்து எண்ணத் தக்கது பதிப்புப் பணியே ஆகும்.  நாவலர்தம் பதிப்புகள் அனைத்தையும் வைத்துக்கொண்டு ஆராயின் ஆய்வு விரியும் என்பதால் ஒருசில பதிப்புகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.
பதிப்புகள்
சுவடிப்பதிப்பு முன்னோடிகளில் முதன்மையானவராக வைத்து எண்ணக் கூடியவர் யாழ்ப்பாணம்-நல்லூர் ஆறுமுக நாவலர் பெருமான்.  பதிப்புலகில் பல புரட்சிகளை மேற்கொண்டவர்;  சுவடிப்பதிப்பிற்கு முகவரி கொடுத்தவர் நாவலர் என்றால் அது மிகையாகாது.  இவர்தம் பதிப்புகளை இரண்டு வகைகளாகப் பகுக்கலாம். அவை, 
1.  இயற்றிப் பதிப்பித்த நூல்கள்
2.  சுவடிப்பதிப்புகள் ஆகும்.
I. இயற்றிப் பதிப்பித்தவை
நாவலர் பெருமான் அவர்கள் தேவைக்கேற்ப பல நூல்களைத் தாமே இயற்றிப் பதிப்பித்திருக்கின்றார். இந்நிலையில், இவர் இயற்றிப் பதிப்பித்த நூல்களை நான்கு வகைகளாகப் பாகுபடுத்தலாம்.  அவை,
1. சைவ சமய நூல்கள்
2. கிறித்துவமத கண்டன நூல்கள்
3. வசன நூல்கள்
4. பாட நூல்கள் ஆகும்.
1. சைவ சமய நூல்கள்
மக்களிடையே சைவ சமயக் கருத்துகள் எளிதாக சென்றடையும் வண்ணம் பல நூல்களை நாவலர் பெருமான் இயற்றியிருக்கின்றார்.  இந்நூல்கள் சைவ சமயக் கருத்தை நிலைநாட்டும் தன்மைத்தாய் விளங்குகின்றன.  சைவ சமயக் கருத்தினை எளிமையாக்கி பிற சமயத்தினரும் சைவத்தை எளிமையாக உணரும் வண்ணம் சைவ சமயத்தின் பிழிவாக 'சைவ சமய சாரம்' என்ற நூலையும்; சைவ சமய நூல்களில் காணப்படக் கூடிய சில முக்கியமான விதிகளை மக்கள் எளிதில் உணரும் வண்ணம் 'சிவாலய தரிசன விதி', 'நித்திய கருமவிதி', 'சிரார்த்த விதி', 'தர்ப்பண விதி' ஆகியவற்றையும்; குருவிற்கும் மாணவர்க்கும் உள்ள உறவு நிலைகளைப் பற்றியும் அதற்குற்ற நியதிகளைப் பற்றியும் 'குருசிஷ்யக்கிரமம்' எனும் நூலையும் இயற்றிப் பதிப்பித்திருக்கின்றார்.
2.  கிறித்துவமத கண்டன நூல்கள்
இந்தியாவில் கிறித்துவர்கள் தங்கள் மதத்தைத் தீவிரமாக பரப்பிக் கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்தவர்; சைவ சமயக் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ஆறுமுக நாவலர்.  கிறித்துவர்கள் கிறித்துவம் பரப்புவதற்கு இந்தியாவிலிருக்கும் இந்திய மதங்களான சைவம், வைணவம் ஆகியவற்றை இகழ்ந்து, கிறித்துவத்தின் பெருமையை எளிய மக்களும் உணரும் பொருட்டு எடுத்துக்கூறத் தலைப்பட்டனர்.  கிறித்துவர்களின் சைவ சமய இகழ்ச்சிகளுக்குப் பதில் தரும் விதமாக நாவலர் பெருமான் சைவ சமயத்தின் பெருமையை உணரும் பொருட்டு கிறித்துவமதக் கண்டன நூல்கள் பலவற்றை இயற்றிப் பதிப்பித்திருக்கின்றார்.  இந்நிலையில் சைவ தூக்ஷண பரிகாரம், மித்தியாவாத நிரசனம், சுப்பிர போதம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை இயற்றிப் பதிப்பித்திருக்கின்றார்.
3. வசன நூல்கள்
இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுள் வடிவமாகவே இருப்பதால் அவற்றைப் பெரும்பாலோர் படிப்பதேயில்லை.  தமிழறிஞர் ஒருசிலரிடம் மட்டும் இருந்த தமிழிலக்கியத்தை-குறிப்பாக, சைவ இலக்கியத்தை மக்களிடையே கொண்டு சென்ற பெருமை ஆறுமுக நாவலருக்கேயுரியது.  நம்முடைய சைவ இலக்கியங்கள் பலவற்றை எளிய தமிழில் வசனமாக ஆக்கித்தந்தவர் நாவலர் பெருமான்.  இவ்வகையில் பெரியபுராண வசனம், திருவிளையாடற்புராண வசனம், கந்தபுராண வசனம், பெரியபுராண சூசனம் ஆகிய நூல்களை உருவாக்கித் தந்திருக்கின்றார்.  இதனால் சைவ இலக்கியங்களின் கருப்பொருளை அனைவரும் நுகர்ந்தனர்.  சைவ புராணங்களை வசனமாக்கியதன் மூலம் மக்கள் சைவ சமயத்தை எளிதில் உணர முற்பட்டனர்.  இதுவே, அக்காலக் கிறித்துவமதப் பிரச்சாரத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாக விளங்கியது எனலாம்.
4. பாட நூல்கள்
எளிய முறையில் சைவ சமயக் கருத்துக்களையும், புராணக் கதைகளையும் எழுதிய ஆறுமுக நாவலர் அவர்கள், மாணவர்களுக்கும் எளிய முறையில் பாடங்களை இயற்றியிருக்கின்றார்.  மாணவர்கள் முறையாகக் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக 'பாலபாடம் 1, பாலபாடம் 2, பாலபாடம் 3, பாலபாடம் 4' என்ற முறையில் நூல்களை இயற்றிப் பதிப்பித்திருக்கின்றார். இன்றளவும் இப்பாடமுறை சிறந்ததாகக் கருதப்பெற்று, நாவலர் தொடங்கி இன்றுவரை பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.  இலக்கணம் பயில்வோர்க்கு வினாவிடை அமைப்பில் 'இலக்கண வினா-விடை'யையும், சைவம் பயில்வோர்க்கு வினாவிடை அமைப்பில் 'சைவ வினா-விடை'யையும் இயற்றிப் பதிப்பித்திருக்கின்றார்.
II. சுவடிப்பதிப்புகள்
நாவலர் பெருமான் அவர்கள் ஓலைச்சுவடிகளிலிருந்து பல நூல்களை அச்சேற்றம் செய்திருக்கின்றார்.  இவர்தம் முயற்சிக்குப் பிறகே சுவடிப்பதிப்புகள் பெருக ஆரம்பித்தன எனலாம்.  இவர்தம் சுவடிப்பதிப்புகளை மூன்று நிலைகளாகப் பகுத்துக் காணலாம்.  அவை, 
1. மூலப் பதிப்புகள்
2. மூலமும் உரையும் கொண்ட பதிப்புகள்
3. புத்துரைப் பதிப்புகள் ஆகும்.
1. மூலப்பதிப்புகள்
மூல நூலாசிரியரின் கருத்துப்படி ஓலைச்சுவடியில் உள்ளதை உள்ளபடியே செய்யுள்/உரைநடை வடிவமாகப் பதிப்பிப்பதை 'மூலப்பதிப்புகள்' என்பர்.  இதில் பதிப்பாசிரியரின் குறிப்புகள்-பாடவேறுபாடுகள் ஆகியன அடிக்குறிப்பில் இடம்பெறும்.  இந்நிலையில் நாவலர் பெருமான் அவர்கள் காவியம், புராணம், திருமுறை, சிற்றிலக்கியம், இலக்கணம் போன்ற பொருண்மைகளில் பதிப்பித்திருக்கின்றார்.  அதாவது, காவியப் பதிப்பாக வில்லிபுத்தூரார் பாரதத்தையும்; புராணப் பதிப்புகளாக சேது புராணம், கந்த புராணம், பெரிய புராணம் போன்றவற்றையும்; திருமுறைப் பதிப்புகளாக திருவாசகம், திருக்கோவையார் போன்றவற்றையும்; சிற்றிலக்கியப் பதிப்புகளாக திருச்செந்தூரகவல், நால்வர் நான்மணிமாலை, மறைசையந்தாதி, சிதம்பர மும்மணிக்கோவை, குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் போன்றவற்றையும்; இலக்கணப் பதிப்புகளாக உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.
2. மூலமும் உரையும் கொண்ட பதிப்புகள்
மூல நூலாசிரியரின் கருத்திற்கு உரையாசிரியர் கூறும் விளக்கங்களையும் ஒருசேரக் கொண்ட சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு பதிப்பிப்பதை 'மூலமும் உரையும் கொண்ட பதிப்புகள்' என்பர்.  இந்நிலையில் நாவலர் பெருமான் அவர்கள் இலக்கணம், நீதிநூல், சமயம், திருமுறை, நிகண்டு போன்ற பொருண்மைகளில் பதிப்பித்திருக்கின்றார்.  அதாவது, இலக்கணப் பதிப்புகளாக நன்னூல் விருத்தியுரை, நன்னூல் காண்டிகையுரை, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, இலக்கணக் கொத்துரை, தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், இலக்கண விளக்கச் சூறாவளி போன்றவற்றையும்; நீதிநூற் பதிப்பாக திருக்குறள் பரிமேலழகருரையும்; சமயநூற் பதிப்புகளாக கொலை மறுத்தல், தருக்க சங்கிரகவுரை, அன்னபட்டீயம், பிரயோக விவேகம், திருச்சிற்றம்பலக் கோவையுரை போன்றவற்றையும்; திருமுறைப் பதிப்பாக திருக்கோவையார் நச்சினார்க்கினியருரையும்; நிகண்டுப் பதிப்பாக சூடாமணி நிகண்டுரையும் குறிப்பிடலாம்.
3. புத்துரைப் பதிப்புகள்
மூல நூலாசிரியர்/உரையாசிரியர் ஆகியோரின் கருத்துக்கேற்பப் பதிப்பாசிரியர் தாமே ஒரு புத்துரை எழுதிப் பதிப்பிப்பதைப் 'புத்துரைப்பதிப்பு' என்பர்.  இந்நிலையில் நாவலர் பெருமான் அவர்கள் நீதிநூல், புராணம், சமயம், சிற்றிலக்கியம் போன்ற பொருண்மைகளில் பதிப்பித்திருக்கின்றார்.  அதாவது, நீதிநூற் பதிப்புகளாக ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நன்னெறி, நல்வழி, வாக்குண்டாம் போன்றவற்றையும்; புராணப் பதிப்பாக கோயிற்புராணத்தையும்; சமயநூற் பதிப்புகளாக திருமுருகாற்றுப்படை, சைவ சமய நெறி, சிவதருமோத்தரம் போன்றவற்றையும்; சிற்றிலக்கியப் பதிப்புகளாக திருச்செந்தினீரோட்டக யமகவந்தாதி, மருதூரந்தாதி, சௌந்தரியலகரி போன்ற வற்றையும் குறிப்பிடலாம்.
பதிப்புமுறை
சுவடிப்பதிப்பு எவ்வாறு அமையவேண்டும் என்று வரையறை செய்தவர்களுள் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்கள் முதன்மையாகத் திகழ்கின்றார்.  ஆறுமுக நாவலர் அவர்கள் பதிப்பித்த பல்வேறு வகையான பதிப்புகளில் இருந்து இவர்தம் பதிப்புமுறையைக் காணலாம்.  பொதுவாக, இவர்தம் பதிப்பு முறையை பொதுக்கூறு, சிறப்புக்கூறு என்ற இரண்டு கூறுகளாகப் பாகுபடுத்திக் காணலாம்.
அ. பொதுக்கூறு
நாவலரின் பதிப்புகளில் பொதுவாகக் காணப்படக் கூடிய சில கூறுகளை 'பொதுக்கூறு' எனலாம்.  அதாவது, தலைப்புப் பக்கம், உள்ளுறை, முன்னிணைப்புகள்,  நூல் அமைப்பு, எண் அமைப்பு, பின்னிணைப்புகள், கட்டமைப்பு போன்ற கூறுகள் நாவலர் பதிப்புகளில் பெரும்பான்மை பொதுத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன.
1. தலைப்புப் பக்கம்
நாவலரின் பதிப்புகளின் தலைப்புப் பக்கத்தில் நூல் பற்றிய முழுமையான தகவல்களை ஒரு முன்னுரை போன்று அமைத்திருக்கின்றார்.  அதாவது, நூற்பெயர், நூலாசிரியர் பெயர், பதிப்பிக்கத் தூண்டியர், பதிப்பாசிரியர், வெளியீட்டாளர், வெளியிட்ட அச்சகம் மற்றும் இடம், பதிப்பு விவரம், பதிப்புக் காலம், பதிப்புரிமை போன்ற குறிப்புகள் தலைப்புப் பக்கத்தில் அமைத்திருக்கின்றார்.  எடுத்துக்காட்டாக,

கணபதி துணை
கோயிற்புராணம்
தில்லைவாழந்தணரும் திருக்கைலாசபரம்பரைச்
சைவசித்தாந்த குரவருமாகிய
கொற்றவன்குடி
உமாபதி சிவாச்சாரியார்
அருளிச்செய்தது.

இஃது

யாழ்ப்பாணத்து நல்லூர்
ஆறுமுக நாவலரவர்கள்
செய்த புத்துரையுடன்
சிதம்பர சைவப் பிரகாச வித்தியாசாலைத்
தருமபரிபாலகர்
Mudlr.G. சுப்பிரமணியம் J.P. அவர்களால்
சென்னபட்டணம்
வித்தியாநுபாலன யந்திரசாலையில்
அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.

4-ம் பதிப்பு
விலை ரூபாய் 1.4.0.
1952
நந்தன u வைகாசி t
(Copyright Registered)
2. உள்ளுறை
பதிப்பிற்குள் இடம்பெற்றிருக்கும் தலைப்புகள் எந்தெந்தப் பக்கங்களில் அமைந்திருக்கின்றன என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் விதமாக தலைப்புப் பக்கத்திற்கு அடுத்து அமைவது உள்ளுறையாகும்.  இந்த உள்ளுறையை ஆறுமுக நாவலர் அவர்கள் 'சூசி பத்திரம்' என்கின்றார்.  நூலுள் இடம்பெற்றிருக்கும் பல்வேறு வகையான தலைப்புகள் (தலைப்பு, உட்தலைப்பு) அமையப்பெற்றிருக்கும் பக்க எண்ணை இதனுள் சுட்டிச்செல்கின்றார்.
3. இணைப்புகள்
நூலுக்கு அணி சேர்க்கும் விதமாக அமைவது இணைப்புகள்.  இவ்விணைப்புகள் நூல் பகுதிக்கு அரணாகத் திகழ்பவை.  நாவலரின் பதிப்புகளில் பல்வேறு வகையான இணைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.  இவர்தம் பதிப்புகளில் முன்னிணைப்புகள், பின்னிணைப்புகள் என்ற இரண்டு வகையான இணைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.  முன்னிணைப்புகளாக முகவுரை(பெரியபுராணம் மற்றும் கந்தபுராணம் மட்டும்), வரலாறு(நூல் வரலாறு, உரையாசிரியர் வரலாறு ஆகியன தேவையேற்படும் போது மட்டும்), சரித்திரச் சுருக்கம், சிறப்புப் பாயிரம்(திருக்குறள் பரிமேலழகர் உரை-1860ஆம் பதிப்பிற்குத் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சி. தியாகராசச் செட்டியார், ச. தெய்வநாயகம் பிள்ளை, சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் ஆகியோர் சிறப்புப் பாயிரம் பாடியிருக்கின்றனர்), சிறப்புப் பாக்கள்(திருக்கோவையார்-1861ம் பதிப்பிற்குத் திருவாவடுதுறையாதீன வித்துவான் தாண்டவராய சுவாமிகள், திரிசிரபுரம் மாகவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தியாகராஜச் செடியார், சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார், திரிசிரபுரம் மு. முருகையப்பிள்ளை ஆகியோர் சிறப்புப் பாக்கள் பாடியிருக்கின்றனர்), நூலாசிரியர் வரலாறு,  நூல் பற்றிய சிறப்புச் செய்திகள், சருக்கவகராதி, பதிகவகராதி போன்றனவும்; பின்னிணைப்புகளாக சூத்திர முதற்குறிப்பகராதி, பாட்டு முதற்குறிப்பகராதி, பாலியலதிகாரவகராதி, திருக்குறளகராதி, புராணவகராதி, பிழை திருத்தம், புத்தக பிரகடனப் பத்திரம் போன்றனவும் இடம்பெற்றிருக்கின்றன.  இவ்வகையான இணைப்புகள் நூலுக்கேற்றவாறு சிலவற்றை விடுத்து பதிப்பிக்கப்பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது.
4. நூல்
நாவலர் பெருமானின் பதிப்புகளில் நூல் பகுதி பல்வேறு விதமாக அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.  அதாவது, மூலப் பகுதியாகவோ, மூலமும் உரையும் கொண்ட பகுதியாகவோ, உரைப்பகுதியாகவோ, மூலம் உரை (திருமுருகாற்றுப்படை,1849) தனித்தனியாகவோ இருக்கும்.  மேலும், அடிக்குறிப்பு கொண்டதாகவும், நூலுக்கு முன்னும் பின்னும் ஆறு+ஆறு வெற்றுத் தாள்கள் கொண்டதாகவும் ஒவ்வொரு பதிப்பும் அமையப்பெற்றிருக்கும். சூடாமணி நிகண்டுப்(1897) பதிப்பில் ஒவ்வொரு அச்சுத் தாளுக்கிடையே ஒரு வெற்றுத்தாள் வைத்து பதிப்பித்திருக்கின்ற நேர்த்தியையும் இவர்தம் பதிப்புகளில் காணமுடிகின்றது.  16 பக்கங்கள் கொண்டது ஒரு பாரம்.  நூல் எத்தனை பாரம் கொண்டது என்பதைக் குறிக்க ஒவ்வொரு பாரத்தின் தொடக்கத்திலும் பாரம் எண்-தமிழெண்ணாகக் கொடுத்திருக்கின்றார். 
5. எண்ணமைப்பு
நாவலர் பெருமானின் பதிப்புகளில் எண் பல நிலைகளில் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. இதனைப் பின்வருமாறு வரிசைப்படுத்திக் காணலாம்.
1. நூற்பா - செய்யுளின் தொடக்கத்தில் (இடப்பக்கம்) நூலில் இடம்பெற்ற அனைத்து நூற்பா - செய்யுளுக்கான தொடரெண் கொடுத்திருக்கின்றார்.
2. நூற்பா - செய்யுளின் இறுதியில் (வலப்பக்கம்) நூலில் இடம்பெற்ற சருக்கம், இயல், அதிகாரம் போன்றவற்றுக்கான தனியெண் கொடுத்து இருக்கின்றார்.  மேலும், உரை இருப்பின் உரைப்பகுதியையும் சேர்த்துத் தனியெண் கொடுத்திருக்கின்றார். 
3. தலைப்புக்கு என்று தனியெண் கொடுத்திருக்கின்றார்.  அதாவது, உள்தலைப்பு, இயல் தலைப்பு, பாடற்பொருள் தலைப்பு ஆகியவற்றுக்கும் தனியெண் கொடுத்திருக்கின்றார். 
4. தொகை வருமிடங்களிலும் எண் கொடுத்திருக்கின்றார்.
5. எடுத்துக்காட்டுக்கு வரிசை எண் கொடுத்திருக்கின்றார்.
6. முன்னிணைப்பு, நூல்பகுதி, பின்னிணைப்பு ஆகியவற்றுக்குத் தனித்தனியே      பக்கவெண் கொடுத்திருக்கின்றார்.
7. க, க0, க00 என்ற முறையில் எண்ணமைப்பு அமைத்திருக்கின்றார்.  ஆனால், க, ய, ள என்ற அமைப்பை நாவலர் பெருமான் கையாளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டமைப்பு
நாவலர் பெருமான் அவர்கள் வெளியிட்ட அனைத்துப் பதிப்புகளின் கட்டமைப்பும் முழு காலிக்கோ பைண்டிங் செய்யப்பெற்றதாகவே இருக்கின்றது.  இவற்றையெல்லாம் பார்க்கும் போது ஆறுமுக நாவலர் அவர்கள் நூலுக்கு உள்ளும் வெளியும் எவ்வாறெல்லாம் அமையவேண்டும் என்பதில் கவனத்தோடு இருந்திருக்கின்றார் என்பது தௌ¢ளத்தெளிவாகத் தெரிகின்றது.
ஆ.  சிறப்புக்கூறுகள்
ஆறுமுக நாவலர் தம்முடைய பதிப்புகளில் நிகழ்த்திய சில சிறப்புக் கூறுகளை இரண்டு நிலைகளாகப் பகுக்கலாம்.  அவை, 
i. அடிக்குறிப்பின் தன்மைகள்
ii. நூற் பகுதிக்குள் நாவலரின் பதிப்பு உத்திகள் ஆகும்.
i. அடிக்குறிப்பின் தன்மைகள்
ஆறுமுக நாவலர் அவர்களின் பதிப்புகளில் அடிக்குறிப்புகள் எவ்வாறெல்லாம் அமைந்திருக்கின்றன என்பதைப் பட்டியலிட்டுப் பார்க்கும்போது, அவை பதினெட்டு வகைகளாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.  அவை பின்வருமாறு:
1,  பாடலின் செய்திக்குரிய பதவுரை கூறிய பிறகு அதையொத்த சிலவற்றை     அடிக்குறிப்பில் வரிசைபடுத்துதல். எடுத்துக்காட்டாக, இலக்கணக் கொத்து மூலமும் உரையில் முதலாவது வேற்றுமையியலின் 9ஆவது சூத்திரத்திற்கு உரையாசிரியர் இரண்டு தொல்காப்பியச் சூத்திரங்களை உரைவிளக்கமாகக் காட்டியிருக்கின்றார்.  இதற்கு நாவலர் அவர்கள் "இவ்விரண்டுந் தொல்காப்பியச் சூத்திரம்.  முன்னையது (வினைசெ யிடத்தி னிலத்திற் காலத்தின்) உருவினையேற்ற சொற்பல பொருள் படுதற்கும், பின்னையது (பொருண்மை சுட்டல் விளங்கோள் வருதல்) உருபு நோக்கிய சொற்பல பொருள் படுதற்குங் காட்டப்பட்டன.  முன்னையதற்கு உதாரணம்: தட்டுப்புடைக்கண் வந்தான்; மாடத்தின்கணிருந்தான்; கூதிர்க்கண் வந்தான் எ-ம். பின்னையதற்கு உதாதரணம்: ஆவுண்டு; ஆசெல்க எ-ம். வரும்" என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
2.  உரையின் நடுவே வரும் சொல்லிற்கு மேலும் விளக்கம் தர முற்படும் போது     உடுக்குறியிட்டு அடிக்குறிப்பில் விளக்கம் தருதல். எடுத்துக்காட்டாக, திருக்குறள் பரிமேலழகர் உரைப்பதிப்பில் "இருள்சேர் இருவினை" என்னும் திருக்குறள் உரைக்கு நாவலர் பெருமான் அவர்கள், "ஈண்டு நல்வினை என்றது அழிதன் மாலையவாய துறக்கவின்ப முதலிய காமியங்களைப் பயப்பனவாகிய வேள்வி முதலியவற்றை, இவை வீட்டுக்கு நேரே வாயிலாகிய தத்துவ ஞானத்தைப் பயவாமை மாத்திரையேயன்றித் தீவினைபோல அது நிகழவொட்டாது தடைசெய்து நிற்றலுமுடையனவாம்.  ஆதலால், இந்நல்வினை தீவினை இரண்டும் ஒருவனுக்கு ஞானத்தைத் தடுத்துப் பந்த முறுத்தற்கண் பொன்விலங்கும் இரும்புவிலங்கும் போலத் தம்முள் ஒப்பனவாம் என்க.  சரியை, கிரியை, யோகங்கள் ஞானம் வாயிலாக வீடு பயத்தலின் ஈண்டு நல்வினை என்றது அவற்றையன்றென்க" என்று மேலும் விளக்கம் தருகின்றார்.
3.  உரையில் வேறுபாடு தோன்றுமிடத்து உடுக்குறியிட்டு அடிக்குறிப்பில் விளக்குதல்.   நன்னூல் விருத்தியுரையில் வேறுபாடுகள் தோன்றுமிடங்களில் அடிக்குறிப்பாகத் தம்முடைய கருத்தையும் பாடவேறுபாடுகளையும் நாவலர் பெருமான் குறிப்பிடுகின்றார்.  அதாவது, நன்னூல் சிறப்புப்பாயிர உரையில் சிவஞான முனிவர் 'விமரிசம்' என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்.  இதற்கு நாவலர் அவர்கள் 'விமரிசம் - சிந்தித்தல், விமரிசனமெனினுமொக்கும்' என்கின்றார்.  மேலும், "ஈண்டு உரையாசிரிய ரெனப்பட்டார் இளம்பூரணர்; ஆதியிலக்கணமாகிய தொல்காப்பியத்திற்கு முன்னருரை செய்தமையால் இவருக்கு உரையாசிரியரென்னும் பெயர் வழங்குவதாயிற்று" என்று உரையாசிரியர் யார் என்று விளக்குகின்றார்.
4.  ஒரு நூலின் விளக்கத்தினை மற்றொரு நூலில் கண்டு கொள்க என்று அடிக்குறிப்பில் உடுக்குறியிட்டு நூற்பெயர் சுட்டுதல்.  தொல்காப்பியம் சொல்லதிகாரம் வேற்றுமை மயங்கியல் 31ஆம் நூற்பாவிற்குச் சேனாவரையர் உரையில் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் ஒன்றே என்று சேனாவரையர் உரை வகுத்திருப்பதற்கு சிவஞானமுனிவர் அவர்களின் தொல்காப்பிய சூத்திர விருத்தி 34ம் பக்கத்தில் ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்றென்றல் பொருந்தாமையை எடுத்துச் சொல்லியிருப்பதை இங்குச் சுட்டிக் காட்டுகின்றார்.  இதேபோல், வேற்றுமை மயங்கியலில், 'இறுதியு மிடையும்', 'பிறிது பிறிதேற்றலும்' என்னும் சூத்திரங்களுக்குச் சேனாவரையர் முதலாயினார் உரைத்த உரையை மறுத்துச் சிவஞானமுனிவர் வேறுரையுரைத்தார்.  தொல்காப்பிய சூத்திரவிருத்தி 38, 39, 34, 35ம் பக்கங்களில் காண்க என்று குறிப்பிடுகின்றார்.
5.  உரைப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் மேற்கோளுக்கு உடுக்குறியிட்டு அடிக்குறிப்பில்     நூற்பெயர் சுட்டுதல்.  அதாவது, உரைப்பகுதியில் மேற்கோளாகக் காட்டும் பாடலைக் கொடுத்துவிட்டு அப்பக்கத்தின் அடிக்குறிப்பாக அப்பாடல் இடம்பெற்றிருக்கும் நூற்பெயரையும் செய்யுள் எண்ணையும் குறிப்பிடுகின்றார்.  குறிப்பாக, திருமுருகாற்றுப்படை - திருச்சீலைவாய் 'விண்செலன் மரபினையர்' என்ற வரிக்கு உரை வரைந்தவர், 
'நிலமிசை வாழ்க ரலமர றீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுண வாகச் சுடரொடு கொட்கு
மவிர்சடை முனிவரு மருள'
எனும் பாடலை மேற்கோளாகக் காட்டுகின்றார்.  இம்மேற்கோள் பாடல் எங்குள்ளது என்பதைக் குறிக்க அடிக்குறிப்பில் 'புறநானூறு 43ஆம் செய்யுள்' என்று குறிப்பிடுகின்றார்.
6.  உரையாசிரியரின் கருத்துக்கு மேலும் விளக்கம் தேவைப்படும்போது உடுக்குறியிட்டு அடிக்குறிப்பில் விளக்குதல்.  அதாவது, இலக்கணக் கொத்து (மூலமும் உரையும்)ப் பாயிர உரையில் அகர உயிரானது உருவெழுத்து, ஒலியெழுத்து, உணர்வெழுத்து, தன்மையெழுத்து என்று பொருள் கூறியவிடத்து நாவலர் அவர்கள், "எழுத்துக்கள் உருவெழுத்து முதலிய நான்கு பகுதியவாதலும் அவற்றினிலக்கணமும் வருஞ் சூத்திரங்களாலுணர்க:- 
க. உருவே யுணர்வே யொலியே தன்மை
யெனவீ ரெழுத்து மீரிரு பகுதிய.
உ. காணப் பட்ட வுருவ மெல்லா
மாணக் காட்டும் வகைமை நாடி
வழுவி லோவியன் கைவினை போல
வெழுதப் படுவ துருவெழுத் தாகும்.
ங. கொண்டவோர் குறியாற் கொண்ட வதனை
யுண்டென் றுணர்வ துணர்வெழுத் தாகும்.
ச.  இசைப்படு புள்ளி னெழாஅல் போலச்
செவிப்புல னாவ தொலியெழுத் தாகும்.
ரு. முதற்கா ரணமுந் துணைக்கா ரணமுந்
துணைக்கா ரணத்தொடு தொடரிய வுணர்வு
மவற்றொடு புணர்ந்த வகத்தெழு வளியின்
மிடற்றுப்பிறந் திசைப்பது தன்மை யெழுத்தே"
என்றவர், இன்னும் நான்கு பகுதியவாதலும் அவற்றினிலக்கணமும் வருஞ் சூத்திரங்களாலுணர்க:- 
க. "வடிவுபெயர் தன்மையுண் முடிவு நான்கா
நடைபெறு நாவலர் நாடிய வெழுத்தே.
உ. கட்புல னில்லாக் கடவுளைக் காட்டுஞ்
சட்டகம் போலச் செவிப்புல வொலியை
யுட்கொளற் கிடுமுரு பாம்வடி வெழுத்தே.
ங. வடிவுமுதன் மும்மையின் வழங்கு மெழுத்திற்
படுபல பகுதிக் கிடுபெயர் பெயரே.
ச.  தான முயற்சி தரக்கொளச் செவிப்புல
னாயவொலி தன்மை யெழுத்தா கும்மே.
ரு. உருவமுதன் மும்மையோ டொன்றிய வியல்பை
மருவவுளந் துணிவ துண்முடி வெழுத்தே" 
என்று குறிப்பிடுகின்றார்.

7.  உரையாசிரியரின் கருத்துக்கு வலிமையூட்டும் விதமாக உடுக்குறியிட்டு அடிக்குறிப்பில் மேற்கோள் பாடல்களைச் சுட்டுதல்.  'எந்நன்றி கொன்றார்க்கும்' என்னும் திருக்குறள் உரை விளக்கத்தில் "பெரிய அறங்களைச் சிதைத்தலாவது ஆன்முலையறுத்தலும் மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தடித்தலும் முதலிய பாதகங்களைச் செய்தல்" என்னும் பரிமேலழகரின் உரையானது புறநானூற்றுப் பாடலான, 'ஆன்முலை யறுத்த அறணி லோர்க்கும்' (புறம்.34) எனத் தொடங்கும் பாடலுக்கு ஒப்பானது என்று அப்பாடலை எடுத்துக் காட்டுகின்றார்.
8.  அருஞ்சொற்பொருள் தருதல். எடுத்துக்காட்டாக நாவலர் பதிப்பில் இடம்பெற்ற சில அருஞ்சொற்பொருள்கள் பின்வருமாறு:
இந்திரஞாலங் - இந்திரசாலம்(கீர்த்தித் திருவகவல்)
சோத்தம் - இழிந்தார் செய்யுமஞ்சலி(ஆசைப்பத்து, பா.4)
தோரியமகளிர் - ஆடிமுதிர்ந்த மகளிர்(தொல்.சூத்திரவிருத்தி, ப.12)
விமரிசம் - விமரிசனம், சிந்தித்தல் (நன்.விருத்தியுரை சிறப்புப்பாயிரவுரை)
குழல்வாய்மொழியம்மை - திருக்குற்றாலத்தெழுந்தருளியிருக்கும் தேவி
திருநாமம் (திருக்கோவையார்,பா.94)
சமவாயம் - ஒற்றுமை (இலக்கணக்கொத்துரை, நூ.42)
சையோகம் - கூட்டம் (இலக்கணக்கொத்துரை, நூ.42)
9.  விளக்கவுரை தருதல்.  
10.  இடப்பெயர்களைச் சுட்டுதல்
11.  தொகை விளக்கம் தருதல்
12.  பிற பிரதிகளில் இல்லாதவற்றைச் சுட்டுதல்
13.  பிறநூல்களை மேற்கோள் காட்டுதல்
     அ. மேற்கோள் பாடல்களின் நூற்பெயர் முதலானவை சுட்டுதல்
     ஆ. மேற்கோள் தொடரை முழுமை செய்தல்
14.  இலக்கணக் குறிப்பு தருதல். நாவலர் பதிப்புகளில் ஆங்காங்கு இலக்கணக் குறிப்பு சுட்டும் தன்மையைக் காணமுடிகிறது.  குறிப்பாக, திருவாசகம் கீர்த்தித்திருவகவல் என்னும் பகுதியில் "கோடி - கொடி கொடியென நீட்டல்விகாரம் பெற்றது" என்று  குறிப்பிட்டிருக்கின்றார்.
15.  வடமொழி கருத்துரைத்தல்
16.  சிறப்புப்பெயர் சுட்டுதல்
17.  பாடவேறுபாடு காட்டுதல்
18.  புராணக்கதைக் கூறுகளைக் காட்டுதல்  
ii. நூற்பகுதிக்குள் நாவலரின் பதிப்பு உத்திகள்
ஆறுமுக நாவலர் பதிப்புகளின் நூற்பகுதி பல உத்திகளைப் பெற்றுள்ளது.  அதாவது, பொருளுக்கேற்ப பாடலமைப்பை மாற்றிப் பொருளுரைக்கும் தன்மை,  மாற்றுரை கூறும் தன்மை, திருத்தப் பதிப்பு, உரையில் சொல்லையும் பொருளையும் வேறுபடுத்தும் தன்மை, மூலத்தினின்றும் பாடலை வேறுபடுத்தும் தன்மை, நூலின் தொடக்கம்-முடிவு அமைப்பு, பிழை சுட்டும் தன்மை, புறவுரை சுட்டும் தன்மை, புதிய சொல்லாட்சி, அச்சுத் தன்மை, மாணவர் பதிப்பு, நாவலர் பதிப்பில் சில குறைபாடுகள் போன்ற பல்வேறு உத்திகளைக் காணலாம். 
1. பொருளுக்கேற்ப பாடலமைப்பை மாற்றிப் பொருளுரைத்தல்
"புசிக்க பயற்றினையு மில்வாழ்வான் போனம்
புசிக்கலுமா நத்தமெனும் போது" (சைவசமய நெறி,173)
இ-ள். இல்வாழ்வான் பயற்றினையும் புசிக்க - இல்வாழ்வானானவன் அவ்விரண்டு திதியினும் பயற்றைப் புசித்திருக்கக் கடவன்; - நத்தம் எனும் போது போனம் புசிக்கலும் ஆம் - அது கூடாதாகில் நத்தமென்னுங் காலத்திலே அன்னம் புசித்தலுந் தகும். எ-று. என்பதில் பாடல் அமைப்பை முன்-பின்னாக மாற்றி நேர்ப்பொருளை உணர்த்துவதில் நாவலர் பெருமான் கைவந்தவர் என்பது தெரிகின்றது.
2. மாற்றுரை கூறுதல்
ஒன்றிக்கு மேற்பட்ட பொருளுரைக்குமிடத்து பாடலுரையின் உரிய பொருளையும் சருக்கத்தின் இறுதியில் அவ்வுரையின் மாற்றுரையாக சுட்டிக்காட்டுகின்றார்.  அதாவது, கோயிற்புராணம்-திருவிழாச் சருக்கம் 28ம் பாடலில் "நண்ணித் தினகரன் முதலோர் கிழமைகொ ணலமார் நவமணி யணிமேவ" (28:1) எனும் தொடருக்கு இப்பாடலின் பொருளில் "தினகரன் முதலோர் கிழமை நண்ணி நலம்கொள் ஆர் நவமணி அணி மேவப் பண்ணி - சூரியன் முதலிய நவக்கிரகங்களுக்கும் உரிமை பொருந்திய அழகு கொண்டு நிறைந்த நவரத்தினங்களினாலும் ஆபரணங்களைப் பொருந்தச் செய்து, - " என்றவர் அச்சருக்கத்தின் இறுதியில், "நண்ணிக் கொள் நலம் ஆர் நவமணி என்பதற்குப் பானுவார முதலிய ஏழு வாரத்தினும் பொருந்தி ஆராய்ந்து கொள்ளப்படும் நன்மை பொருந்திய நவரத்தினங்கள் எனப் பொருள் கூறலும் ஒன்று.
மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புருடராகம், வச்சிரம், நீலம், கோமேதகம், வைடூரியம் என்னு நவரத்தினங்களுள்ளும் மாணிக்கம் முதலிய ஏழும் முறையே பானுவார முதலிய ஏழு வாரங்களினும் பரிக்ஷிக்கற்பாலன.  கோமேதகம் பானு வாரத்தினும் வைடூரியம் சோம வாரத்தினும் பரிக்ஷீக்கற்பாலன" என்று மாற்றுரையையும் குறிப்பிடுகின்றார்.
3. திருத்தப் பதிப்பு
நாவலர் பெருமான் வெளியிட்ட பதிப்புகளில் பல பதிப்புகள் திருத்தப் பதிப்புகளாக வெளிவந்திருக்கின்றன. திருமுருகாற்றுப்படை முதற்பதிப்பில் இல்லாததை இரண்டாம் பதிப்பில் சேர்த்திருக்கின்றார். "போர்மிகு பொருந குரிசிலு மெனப்பல" (திருமுரு.276) 'குரிசிலு' மென்ற உம்மை அளவையின் என்பதனோடு கூட்டப்பட்டது என்னும் உரைப் பகுதியும்;  "விளிவின்.... றிருணிற"(திருமுரு.292-93) என்பதில் உள்ள 'இன்றி' என்பது 'இன்று' எனத் திரிந்து நின்றது என்னும் உரைப்பகுதியும் முதற்பதிப்பில் இடம்பெறவில்லை. அதன்பிறகு வந்த பதிப்புகளில் இவ்வுரைப்பகுதி இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.  
அதேபோல், 1839ஆம் ஆண்டில் 'சூடாமணி நிகண்டு' திரு. தாண்டவராய முதலியாரால் தி. விசாகப்பெருமாளையருடைய கல்விவிளக்க அச்சுக்கூடத்தில் அச்சிட்டு முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.  இதில் வேளாளரை வைசியர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.  நாவலர் அவர்கள் சூடாமணி நிகண்டுரையை 1849இல் பதிப்பிக்கும் போது வேளாளரை வைசியர் என்றே பாடங் கொண்டு பதிப்பித்தார்.  அதன்பிறகு மறுபதிப்பு வெளியானதில் வேளாளரைச் சூத்திரர் என்று மாற்றி, வைசியருக்குரிய இரண்டு பாடல்களையும் திருத்தி, 'மருவிய எழு' என்பதற்கு 'மருவிய ஆறு' என மாற்றிப் பதிப்பித்திருக்கின்றார்.
4. உரையில் சொல்லையும் பொருளையும் வேறுபடுத்தும் தன்மை
நாவலர் பெருமான் பல நூல்களுக்குப் புத்துரை வரைந்திருக்கின்றார்.  அவர்தம் உரைகளில் சொல்லையும் பொருளையும் வேறுபடுத்திக் காட்டும் தன்மை சுவடிப்பதிப்புலகில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருக்கின்றது.  'சைவ சமய நெறி' எனும் நூல் 727 திருக்குறளையுடையது.  இந்நூல், ஆசிரியரிலக்கணம், மாணாக்க ரிலக்கணம், பொதுவிலக்கணம் என மூன்று இயல்களாக அமைந்துள்ளது.  குறிப்பாக, விபூதி தரிக்கும் தானங்கள் பற்றி,
"சிரநெற்றி காது திரண்ட கழுத்தி
னுரந்தோளி னாபி தனிலும்.
இ-ள். சிரம்-உச்சியிலும்-நெற்றி-நெற்றியிலும்-காது-காதுகளிலும்-திரண்ட கழுத்தின்-திரண்ட கழுத்திலும்-உரம்-மார்பிலும்-தோளின்-புயங்களிலும்-நாபிதனினும்-உந்தியிலும்-எ.று."(191) என்று குறிப்பிட்டிருக்கின்றார்.  இங்கு நாவலரின் பதிப்பு முறையொன்றைக் காணவேண்டும்.  உரையுள் சிறுகோடு(-) பெருங்கோடு(-) என இட்டிருக்கின்றார்.  சிறுகோடு, சொல்லுக்கும் பொருளுணர்த்தும் சொல்லுக்கும் இடையில் உள்ளது.  பெருங்கோடு, ஒரு சொல்லையும் மற்றொரு சொல்லையும் வேறுபடுத்திக்காட்டவல்லது.  இதேபோல், கோயிற்புராணத்தில் ஒன்றினின்று ஒன்றை வேறுபடுத்திக்காட்ட ;- மற்றும் ,- என்ற குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ளார்.
5. மூலத்தினின்றும் பாடலை வேறுபடுத்தும் தன்மை
நூல் பதிப்பிக்கும் காலத்து நாவலர் பெருமான் அவர்கள் மூல நூலாசிரியரின் வாக்கை நுணுகி ஆய்ந்து இவ்வாக்கு நூலாசிரியருடையதல்ல என்பதைத் துணிச்சலாக எடுத்துக் காட்டுகின்றார்.  திருக்கோவையார் என்கின்ற திருச்சிற்றம்பலக் கோவையாரில் முதலில் இடம்பெற்ற, 
"எண்ணிறைந்த தில்லை யெழுகோ புரந்திகழக்
கண்ணிறைந்து நின்றருளுங் கற்பகமே - நண்ணியசீர்த்
தேனூறு செஞ்சொற் றிருக்கோவை யென்கின்ற
நானூறு மென்மனத்தே நல்கு" (விநாயக வணக்கம்)
"ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்
காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்ப
நேரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர்
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே" (நூற் சிறப்பு) 
ஆகிய பகுதிகள் மூல நூலாசிரியர் வாக்கல்ல என்றும், அவை பிற்காலத்தான்றோராற் செய்யப்பட்டன என்றும் சுட்டிக் காட்டுகின்றார்.
6. நூலின் தொடக்கமும் முடிவும்
ஒவ்வொரு நூலின் தலைப்புப் பக்கத்தின் முதலில் பிள்ளையார்சுழி போட்டு 'கணபதி துணை' என்று தொடங்குகின்றார்.  நன்னூல் விருத்தியுரையில் பிள்ளையார்சுழி போட்டு 'பரமபதிதுணை' என்று தொடங்குகின்றார்.  மேலும், சமய நூல்களாயின் 'திருச்சிற்றம்பலம்' என்று கூடுதலாகச் சேர்த்துக் கொள்கின்றார்.  ஒவ்வொரு நூலின் இறுதியில் 'திருச்சிற்றம்பலம்' என்று முடிப்பவர் 'இலக்கணச் சுருக்கம்' என்னும் நூலின் இறுதிப் பகுதியில் 'பரமபதிதுணை' என்று முடித்திருக்கின்றார்.  நாவலர் பதிப்புகளில் இவ்வாறு ஒரு முறையற்ற தன்மையையும் காணமுடிகிறது.

7. கூடுதல் விளக்கம் தருதல்
நாவலர் பெருமானின் பதிப்புகளில் உரையாசிரியர் கூறிய கருத்துக்குப் பொலிவூட்டும் வகையில்  மேலும் பல கருத்துக்களை  பல்வேறு இடங்களில் புகுத்தியிருக்கின்றார்.  குறிப்பாக, நல்வழி பதிப்பில், பதவுரை, இதனது தாற்பரியம் ஆகிய பகுதிகளுக்கு மேலும் நீண்ட விளக்கம் தருகின்றார்.  'சிவாயநமவென்று' எனவரும் பாடலுக்கு அவ்வாறு விளக்கம் தரும் அவர் நிறைவில் 'அது திருநாவுக்கரசு நாயனார் முதலிய மெய்ஞ்ஞானிகள் சரித்திரங்களாலும் அறிக' எனக் கூடுதல் விளக்கம் தருகின்றார்.
8. பிழை சுட்டும் தன்மை
நூலாசிரியர் கூறிய கருத்தை அப்படியே போற்றும் தன்மை கொண்டவரல்லர் நாவலர் அவர்கள்.  இலக்கண விளக்கத்தில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்துகளைச் சிவஞான முனிவர் இலக்கண விளக்கச் சூறாவளி என்றொரு நூலை யாத்தார்.  இந்நூலின் சொல்லதிகாரப் பெயரியலில் 'ஒன்றே பல' எனத் தொடங்கும் நூற்பாவிற்குச் சிவஞான முனிவர் "ஆண்பால் பெண்பா லென்னும் வழக்கு உயர்திணைக்கே யன்றி அஃறிணைக்கின்றென்றார்.  இக்கருத்தினை நாவலர் பெருமான் 'ஆண்பா லெல்லா மாணெனற் குரிய', 'பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய' என்று மரபியற் சூத்திரங்களையும், ஆண்மை சுட்டிய பெயர் பெண்மை சுட்டிய பெயரென்னுங் குறியீடுகளையும், களிறு பிடி முதலிய வழக்குகளையும் மறந்தாற்போலும்" என்று சிவஞான முனிவரின் கருத்தில் ஏற்பட்ட பிழையைச் சுட்டிக் காட்டுகின்றார்.
9. புறவுரை சுட்டும் தன்மை
நாவலர் பெருமான் அவர்கள் புத்துரை வழங்குமிடத்து,  மூல நூலாசிரியரின் கருத்துக்கு மாறுபாட்ட கருத்தைச் சுட்டும் தன்மையைக் காணமுடிகிறது.  அதாவது, ஆத்திசூடி-கொன்றைவேந்தன் புத்துரைப் பதிப்பில்(1853) 'சனி நீராடு' என்பதற்கு நாவலர் பெருமான் உரைவழங்குமிடத்து, 'புதன்கிழமையிலும் முழுகலாம்' என்று உரைக்குப் புறம்பாக விளக்குவதை உணரமுடிகிறது.  இது உலகத்தோடு ஒட்ட ஒழுகுந் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனலாம்.
10. புதிய சொல்லாட்சி
நாவலர் தம்முடைய பதிப்புகளில் பல்வேறு வகையான புதிய சொல்லாட்சிகளைப் பயன்படுத்தியிருக்கின்றார்.  நாவலரின் நல்வழி உரையில் 'ஒருவன் பிறன்மனையாளை இச்சிக்கின்' என்றெழுதுவது இக்காலத்தில் 'பயணித்தல்' என்றெழுதுமாப் போலே அமையக்கூடும் என்கின்றார்.  அதுபோல, 'வெகுசனம்' என்ற சொல்லை முதன்முதலில் நாவலர் அவர்களே கையாண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
11. அச்சுத்தன்மை
நாவலர் அவர்களின் பதிப்புகளில் அச்சுவேறுபாடு, அச்சுப்படி திருத்துதல் போன்றவற்றிற்குச் சிறப்பிடம் தந்திருக்கின்றார்.  இயல்தலைப்பு, உள்தலைப்பு, நூற்பா, உரை, அடிக்குறிப்பு போன்ற ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு வகையான புள்ளிகளில் அச்சுக்களைத் தேர்ந்தெடுத்து அச்சிட்டிருக்கின்றார்.  மேலும், நாவலர் பெருமான் வசன நூல்களை உருவாக்கும் போது தாமே அச்சுக்கூடத்திற்குச் சென்று, அங்கு இவர் சொல்லச் சொல்ல அச்சக ஊழியர்கள் அச்சுக்கோர்ப்பர் என்பர்.  நாவலர் பதிப்பித்த நூல்களில் அச்சுப்பிழைகள் இல்லை என்று எல்லோரும் பாராட்டும் அளவுக்கு நூலைப் பதிப்பித்துள்ளார்.  எவ்வளவு கூர்ந்து கவனித்தாலும் சில அச்சுப்பிழைகள் வருவது இயல்பு.  இருப்பினும் அவற்றையும் கண்டெடுத்து நுலின் இறுதியில் பிழைதிருத்தம் என்ற பகுதியில் சுட்டிக்காட்டி பிழையற்ற பதிப்பைக் கொண்டுவருவார்.  "ஆறுமுக நாவலர் வேறொரு 'பாஷையிலே' நினைத்து மீளத் தமிழில் எழுகிறவரில்லை.  வீண்சொல், அடை எதுவும் இல்லை.  இன்னோசையை இவரின் நடை இயல்பாய்ப்பெறும்" என்கின்றார் பேராசிரியர் கைலாசபிள்ளை(ஆறுமுக நாவலர் சரித்திரம்).
12. மாணவர்  பதிப்பு
நாவலர் அவர்கள் பயன்படுத்துவோர்க்கு ஏற்பத் தம்முடைய பதிப்பை அமைத்துக்கொள்வார்.  இவரின் நன்னூல் காண்டிகையுரைப் பதிப்பு மாணவர்களை மையமாகக் கொண்டு பதிப்பிக்கப்பட்டது எனலாம்.  அதாவது, நன்னூல் காண்டிகையுரைப் பதிப்பில், ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும் பரீஷை வினாக்கள் என்ற பகுதியை அமைந்திருக்கின்றார்.  மேலும், உபாத்தியாயருக்கு அறிவித்தல் என்ற ஒரு பகுதியையும் நாவலர் அமைத்திருக்கின்றார்.  அதில், "உபாத்தியாயர் நாடோறும் தம்  மாணாக்கர்களுக்குச் சொல்லும் பாடத்தை முன்னரே வீட்டில் அவதானத்தோடு வாசித்துச் செவ்வையாக ஆராய்ந்து உள்ளத்தில் அமைத்துக் கொள்ளவேண்டும்" என்று குறிப்பிடுகின்றார்.  நூலுக்கு இறுதியில் 'அப்பியாசம்' என்னும் ஒரு பகுதியையும் நாவலர் அவர்கள் அமைத்திருக்கின்றார்.  இலக்கணங் கற்றவர் இலக்கியத்தில் அவ்விலக்கணம் அமைந்து கிடக்குமுறையை ஆராய்ந்து விதியோடு கூறப் பயிலவேண்டும்.  அது செய்யப் பயிலாதவிடத்து இலக்கணக் கல்வியால் ஒருபயனுமில்லை என்று இலக்கணப் பயிற்சியின் இன்றியமையாமையையும் குறிப்பிடுகின்றார்.
13. நாவலர் பதிப்பில் சில குறைபாடுகள்
சுவடிப்பதிப்பில் இன்றைய தேவை என்ற அடிப்படையில் பார்க்கும் போது நாவலர் பெருமானின் பதிப்புகளில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது.  பதிப்புரை, சுவடிச்செய்தி, முகவுரை(பெரியபுராணம், கந்தபுராணம் தவிர) போன்றவை இன்றைய சுவடிப்பதிப்பில் தேவையாகக் கருதப்பெறுகிறது.  ஆனால் இவை நாவலர் பதிப்புகளில் காணப்படவில்லை.  பதிப்புரை இல்லாததினால் இவர்தம் பதிப்புமுறைகள், பதிப்புக்கொள்கை, முந்தைய பதிப்புகள் பற்றிய விவரம், பதிப்பில் செய்துள்ள மாற்றம் ஆகிய எதையும் இவர்தம் கூற்றாக அறிய முடிவதில்லை.
பல்வேறு சுவடிகளை ஆராய்ந்து ஒப்புமை செய்து பாடவேறுபாடுகளைக் குறித்து முழுமையாக்கும் பணி சுவடிப்பதிப்புப் பணிகளில் முக்கியமானதாகும்.  நாவலர் அவர்கள் எந்தப் பதிப்புப் பணியை மேற்கொண்டாலும் அதற்குப் பல சுவடிகளை ஆதாரமாகக் கொண்டு ஒப்புநோக்கி ஆய்வு செய்த பின்னரே அச்சிடுவார்.  சுவடிகளின் ஆதாரம் இல்லாமல் இவராக எதையும் திருத்துவதில்லை.  இது, சுவடிப்பதிப்பின் நேர்மை எனப்படுகிறது.  இவர் பதிப்பித்த நூல்களின் தலைப்புப் பக்கத்தில் "யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்களால் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து அச்சிற் பதிப்பிக்கப்பட்டது" என்னும் குறிப்பிருக்கும்.  ஆனால், எப்பிரதிகளை ஒப்பு நோக்கினார் என்ற குறிப்பு எந்த பதிப்பிலும் குறிப்பிடுவதில்லை.  இதனால் நாவலர் அவர்கள் பார்வையிட்ட சுவடிகளை அறியமுடியாத நிலை உருவாகிறது.
முடிவுரை
நாவலர் பதிப்பில் பல நிறை குறைகள் இருந்தாலும் அவரின் பதிப்பு நோக்கம் இதுதான் என்று வெளிப்படையாகத் தெரிகின்றது.  அதாவது, ஓலைச்சுவடியிலுள்ள நூல்களை எப்படியாவது அச்சேற்றம் செய்துவிட வேண்டும்; பிழையற்ற பதிப்பு கொண்டு வரவேண்டும்; நுலாசிரியரின் கருத்தறிந்து அடிமாற்றம், சொற்களைத் திரித்தல் போன்ற எவ்வித மாற்றமுமின்றி மூலபாடத்தைத் தந்து திருத்தமான பதிப்பைச் செவ்விய வடிவமைப்புடன் கொண்டுவரவேண்டும் போன்ற நோக்கங்களை ஆறுமுக நாவலருடைய பதிப்புக்களில் காணலாம்.
துணைநூற்பட்டியல்
1. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 9ம் பதிப்பு, சர்வசித்து வருடம், சித்திரை மாதம்.
2. இலக்கணக்கொத்து மூலமும் உரையும், ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 2ம் பதிப்பு, விகிர்தி வருடம், பங்குனி மாதம். 
3. கோயிற்புராணம், ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 4ம் பதிப்பு 1952
4. சூடாமணி நிகண்டு, ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 2ம் பதிப்பு, விளம்பி வருடம், மார்கழி மாதம்-1898
5. சைவ சமய நெறி, ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 7ம் பதிப்பு, இரக்தாக்ஷி வருடம், தை மாதம்.
6. திருக்குறள் பரிமேலழகர் உரை, ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1860.
7. திருக்கோவையார் நச்சினார்க்கியர் உரை, ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1861.
8. திருமுருகாற்றுப்படை, ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 19ம் பதிப்பு 1967.
9. திருவாசகம், ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, இராக்ஷச வருடம், தை மாதம்-1915.
10. தொல்காப்பியம் சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 2ம் பதிப்பு, விகிர்தி வருடம், பங்குனி மாதம்.
11. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், ஆறுமுக நாவலர் & சி.வை. தாமோதரம் பிள்ளை(பதி.), வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, விய வருடம், ஆனி-1886.
12. நன்னூல் காண்டிகையுரை, ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 2ம் பதிப்பு, சுபகிருது வருடம், மார்கழி மாதம்- 1902.
13. நன்னெறி, ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 3ம் பதிப்பு, இராக்ஷச வருடம், சித்திரை மாதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக