ஆத்திசூடித் திறவுகோல்
முனைவர்
மோ.கோ.கோவைமணி
மக்களிடம் அதிகமாகப் புழக்கத்திலுள்ள
ஒருநூல் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு வகையான இலக்கியங்களாக முகிழ்வதும்,
இலக்கியங்களில் இடம்பெறுவதும் இயல்பு. ஒருநூலின் சிலபல பாடல்களைக் கொண்டோ,
அனைத்துப் பாடல்களைக் கொண்டோ அவற்றுக்கு விளக்கம்
தரும் வகையில் பல செய்யுள் நூல்கள் காலந்தோறும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. முருகேசர் முதுநெறி வெண்பா,
வடமலை வெண்பா, இரங்கேசர் வெண்பா,
சோமேசர் முதுமொழி வெண்பா,
சிவசிவ வெண்பா, திருத்தொண்டர் வெண்பா,
முதுமொழி மேல்வைப்பு,
திருக்குறள் குமரேச வெண்பா,
திருத்தொண்டர் மாலை போன்றவை திருக்குறளுக்கு விளக்க
நூல்களாக அமைந்திருப்பதைக் காணலாம். இந்நூல்களில்
திருக்குறள் அல்லது திருக்குறள் கருத்துகள் இடம்பெற்றிருக்கும்.
திருக்குறளுக்கு அடுத்த நிலையில் ஔவையாரின்
ஆத்திசூடிக்கும் விளக்க நூல்கள் பல எழுந்திருக்கின்றன. ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி),
ஆத்திசூடி வெண்பா (ஆசிரியர் பெயர் தெரியவில்லை),
ஆத்திசூடி அந்தாதி,
ஆத்திசூடிச் சிந்து,
ஆத்திசூடிப் புராணம்,
ஆத்திசூடித் திறவுகோல் போன்றவை ஆத்திசூடிக்கு விளக்க
நூல்களாக அமைந்திருப்பதைக் காணலாம். இவ்வகையான
விளக்க நூல்கள் செய்யுள் நடையில் அமைந்திருக்கின்றன. இவைகளைச் செய்யுள் நடையில் அமைந்த
உரைநூல்கள் என்றே கூறலாம். இங்கு 'ஆத்திசூடித் திறவுகோல்'
குறித்துக் காண்போம்.
ஆத்திசூடித் திறவுகோல்
குருமுனியின் 'ஆத்திசூடித் திறவுகோல்'
13 விருத்தப்பாக்களாலானது. ஆத்திசூடியின்
உயிர்வருக்க எழுத்துக்களுக்கு மட்டும் திறவுகோலாக-உரையாக இந்நூல் அமைந்துள்ளது. அதாவது, 'அறஞ்செய விரும்பு'
முதல் 'அஃகம் சுருக்கேல்'
வரையுள்ள 13 ஆத்திசூடி சொற்களுக்குப் பொருள் கூறும் முகமாக
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு விருத்தம் என்ற முறையில் 13 விருத்தங்களாக இந்நூல் அமைந்துள்ளது. ஆத்திசூடியின் ஏனைய உயிர்மெய் வருக்கங்களுக்கு இந்நூலாசிரியர்
எழுதினாரா என்று தெரியவில்லை. 13ஆவது பாட்டின் இறுதியில் 'ஆத்திசூடி குருமுனித் திறவுகோல் உயிரெழுத்து 12க்கும் விபர முற்றும்'
என்று எழுதப் பெற்றிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது உயிர்மெய்
எழுத்துகளுக்கான ஆத்திசூடித் திறவுகோல் தனியாக எழுதப் பெற்றிருக்கவேண்டும் என்றே நினைக்கத்
தோன்றுகின்றது. ஆனால் அந்நூல் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை கிடைத்த உயிரெழுத்துகளுக்கான 'ஆத்திசூடித் திறவுகோல்'
பாடல்களில் ஆசிரியர்தம் நோக்கும் போக்கும் உரைத்திறனும்
வெளிப்படுவதைக் காணலாம். இந்நூல் சென்னை அரசினர்
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ள சுவடியை ஆதாரமாகக் கொண்டு அந்நூலகப் பருவஇதழ்த்
தொகுதி 2, பகுதி 1,
1949இல் வ.ரா. கல்யாணசுந்தரம் அவர்களால்
பதிப்பிக்கப் பெற்றிருக்கின்றது.
நூலமைப்பு
ஔவையின் நீதிவாக்கியம் முதலிலும் இதன்பொருள்
(இ-ள்) என்ற முறையில் ஒவ்வொரு சொல்லிற்கும் முறையே அமைந்திருக்கின்றது. இதனுள் அண்டத்தன்மை, சித்தர்கள்-யோகிகள்,
இறைவன், இறையடியவர்கள், மனிதர்கள் போன்றோரின் தன்மைகள் பலவாறாக எடுத்தோதி,
பொருத்தமுடைய வாக்கியங்களுக்கு மேற்கோளாக எடுத்துக்காட்டப்
பெற்றிருக்கின்றது.
'ஆறுவது சினம்'
என்ற வாக்கியத்திற்குக் 'கோபம் தனியத் தகுவதாகும்'
என்பர்.
இதற்குக் குருமுனி அவர்கள் சிறந்ததொரு எடுத்துக்காட்டுடன் இவ்வாக்கியப் பொருளைத்
தருகின்றார். மார்க்கண்டேயன் இடைவிடாது சிவபூசையில்
ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். அப்போது அவன்
ஆயுட்காலம் முடிகின்றது. இதனால் இயமன் பாசக்
கயிற்றினை மார்க்கண்டேயன் மீது வீசுகின்றான்.
அக்கயிறு, மார்க்கண்டேயன் வழிபாடு நிகழ்த்திக்கொண்டிருந்த சிவலிங்கத்தையும் சேர்த்து இழுத்தது. இதனால் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து,
சிவபெருமான் வெளிப்பட்டு காலனைக் காலால் மிதித்து
'காலாரி'
என்னும் வடிவம் தாங்குகின்றார். சிவபூசையில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் மீது பாசக்கயிறு
வீசக்கூடாது என்பது பொதுவிதி. ஆனால் அதையும்
மீறி இயமன் மார்க்கண்டேயன் மீது பாசக்கயிறு வீசுகின்றான். அக்கயிறு இறைவன் மீதும் பட,
இறைவனாகிய எனக்கே பாசக்கயிறு வீசுகின்றாயா! என்று
சினங் கொண்டு காலதேவனைக் காலால் மிதித்து வைத்துக்கொள்கின்றார். இதனால் நாட்டில் உயிரிழப்பு இன்றி மக்கள்தொகை அதிகரித்துவிடும்
என்றஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டுகின்றனர். அவர்களின் வேண்டுகோலை ஏற்றுக் காலனை விடுவித்தார்
என்பது புராணக்கதை. சிவபெருமான் சினம் தணிந்ததால்
தான் இயமன் தன்பணி தொடர முடிந்தது என்ற கருத்தை மையமாக்கிப் பொருள் கொண்டிருக்கின்றார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய
சிறுத்தொண்டர், இறையடியவர்க்கு
அமுதினை முன்னூட்டிப் பின்னுண்ணும் பழக்கத்தினை உடையவர். எத்துன்பம் வந்திடினும் அடியவர்க்கு அமுதூட்டும்
நிலையில் சிறிதும் வழுவாதவர். தன் பிள்ளைக்கறி
சமைத்து பைரவர்க்கு அமுதூட்டும் போதும் நிலைதடுமாறாதவர். அவரின் இச்செயலையும் ஔவையின் 'ஐயமிட்டுண்' என்னும் வ்£க்கியத்தையும் இந்நூலாசிரியர் தொடர்ப்புப்படுத்திப்
பொருள் கொண்டிருக்கின்றார். இதுபோல் இந்நூல்
முழுமைக்கும் பொருள் அமைந்திருப்பதைக் காணலாம்.
ஔவையின் ஆத்திசூடி வாக்கியங்களை மூலமாகக்
கொண்டு குருமுனி அவர்கள் தன்னுடைய உயரிய எண்ணங்கள் மக்கள் மத்தியில் சென்றடைய இந்நூலின்
மூலம் வழி செய்திருக்கின்றார் எனலாம். உயரிய
சித்தாந்தக் கருத்துக்களை அனைவரும் எளிதில் உணர்ந்துகொள்ளும் விதமாக ஔவையின் வாக்கினைத்
துணைக்கழைத்திருக்கும் குருமுனியின் போக்கு பாராட்டுக்குரியதே. ஓர் பாலபாட நூலுக்கும் சித்தாந்தக் கருத்துக்கள்
உண்டு என்பதை இந்நூலாசிரியர் எடுத்தியம்பியிருப்பது பாராட்டுக்குரியது என்றால் அது
மிகையன்று. இந்நூல் பின்வருமாறு:-
1. அறஞ்செய விரும்பு
அரனென்ற பொருளல்லா லுலகிலண்
டருக்குத்தான் முனிவருமே காணாசூக்ஷ்மம்
சரமென்றும் பெயர்பெற்று வுலகில்தானும்
தனக்குள்ளே தானாகி யண்டமாகிப்
பரமென்ற கீர்த்தியுள்ள சித்தர்யோகி
பரிவாக யஷ்டரித்தும் நமனைவெல்வார்
குருவென்றுஞ் சீஷரென்றுங் கற்பமென்றுங்
குவலயத்தி லறஞ்செய்ய
விரும்புமாச்சே.
2. ஆறுவது சினம்
ஆருவது ஆரு(று)தலம் நிலையைக்கண்டு
அனுதினமு மிருபத்தெட் டக்ஷரத்தினாலே
பேருபெற வோம்நமசி வாயத்திற்குப்
பிறவிதனை மாற்றிவிடப் பெருமைபெற்றுக்
கார்சொரியுஞ் சரமாரி பழக்கஞ்செய்து
காலனைக்கா லாலுதைத்துக் கருணைகொண்டு
சீருடனே சின்மயத்தைத் தியானஞ்செய்து
தீருவதுதா னாறுவதுசினம்
நமக்குள்ளாச்சே.
3. இயல்வது கரவேல்
தாராத வித்தையை யெடுத்துவிட்டாலிடி
தானே யுன்தலையில் விழுமேபாரு
புவிதனிலே யின்னதென் றறிந்தறஞ்செய்தாய்
புண்ணியனே யுனக்குவசம் புனிதவாழ்வு
கயமான மிலகுங் கருத்துந்தோணுங்
காணாத சிலம்பொலியின் காக்ஷிகாணுஞ்
சுயம்புலிங்க மாகவேநீ யாவாயல்லோ
சடுதியாய்நீ
யியல்வதை மறந்திடாதே.
4. ஈவது விலக்கேல்
ஈவதுதா னாதவிந்து பூதியத்தில்
இனிதாக்குந் தினந்தினமு மருச்சித்தாக்கால்
கெவனமதில் தூக்கிவிடும் கிருபையோடு
கம்பீரம் பெற்றுச்சிவ யோகியாவாய்
மௌனமது கைகூடும் யுகாந்தகாலம்
வச்சிரம்போல் தேகமது வாசிநிற்குங்
கவனமா யீவதுதான் விலக்கிவிட்டால்
சண்டாள நற்கதியைச்
சாருவாயோ.
5. உடையது விளம்பேல்
அண்டசத்துக்களின் சங்கதிகளைக் கல்லாதா
னொருத்தனுக்கு நீயுரைத்தால் மூழ்கிப்போவா
யுடையவன்தான் மூதண்டங் கண்டுகொள்வா
னொருவனுமே தானருந்தித் தாயைக்கண்டு
படைமுகத்தில் வில்லெடுப்பான் சுரம்தொடுத்துப்
பாழான வொன்பதுபத் தாறுபேரை
விடவிடென நடுக்கமது செய்துவைத்து
விருதாக வுடையவனே
விளம்பானைய்யா.
6. ஊக்கமது கைவிடேல்
ஊக்கமது அண்டவிந்த யெனவாறுந்தா
னுற்பனமா யிருதயத்தி லிருத்திக்கொண்டு
ஆக்கையதை யழிக்காமல் நடேசர்பாத
மனுதினமு மர்ச்சித்து அருளைப்பெற்று
வாக்குமன மொன்றாகச் சமாதிபூண்டு
மயிற்பால மீதினிலே மனக்கண்சாத்தித்
தேக்கில்லா வமுதமதைக் கொண்டுநித்தம்
சின்மயத்தி
னூக்கமதைக் கைவிடாதே.
7. எண்ணெழுத்திகழேல்
எண்ணெழுத்தைக் கைப்பற்றிக் கொண்டுந்தா
னிருந்துவிளை யாடிடுவா யஷ்டசித்தும்
கண்ணெழுத்தாற் கருவிகளைச் சுட்டறுத்துக்
கருணையுள்ள தண்டியின்மே லேறியாடி
வண்ணனைத்தான் மாடாக்கிச் சமைத்துவுண்டு
மார்க்கமதைக் கருத்தாலே யறிந்துகொண்டு
திண்ணமுள்ள எண்ணெழுத்தை மாய்ப்பாயானால்
தெரித்துவிடு
முன்சிரசு சித்தமாமே.
8. ஏற்பதிகழ்ச்சி
ஏர்ப்பதுதா னாரென்று லானைக்கல்லை
யில்லறத்தை வைத்தவன் பூசியாத
கார்த்திகையா மருச்சுனன்றான் கண்டெடுத்த
கருத்தனை யறியாத கசட்டுமாக்கள்
பார்த்திருந்தும் பெண்டுபிள்ளை பெண்ணைத்தேடிப்
பாழான நரகத்தி லழுந்திநிற்கும்
போற்றியதோர் பொருளறிந்து தின்பானானா
லெக்காலும்
மாய்ப்பதில்லை யிகழ்ச்சியாமே.
9. ஐயமிட்டுண்
ஐய்யமிட்டான் சிறுத்தொண்டன் பிண்டத்தாலே
ஆத்தாளுங் கருணைவைத்துக் கடாக்ஷித்தாள்தான்
பைய்யரவமே கொண்டான் காரமான
பாவையைத்தான் சிரசில்வைத்தான் பரிசில்தேகம்
மெய்யதனை நீக்கிவிட்டான் மகாரத்தாலே
மேதினியி லவனுமொரு சித்தனானான்
வைய்யகத்து மயக்கமதை நீக்கிவிட்டு
மருவிஐய மிட்டுண்ண
மகிழுந்தானே.
10. ஒப்புரவொழுகு
ஒப்புரவாய்ப் பூதியத்தைச் சீர்படுத்தி
யுயர்ந்திருக்குந் தாம்பரத்தைத் தகடுதட்டிக்
கப்பில்லாப் பூபதியை மேலேயேற்றிக்
கருவான தேய்வினிலே கதிக்கவாட்டித்
தப்பில்லா யெருவாலே புடத்தைப்போட்டுத்
தருவான விருதுருத்தி கொண்டுவூதி
அப்பனே உருக்கியபின் ஆ,ஊநாடி
அழகான வொப்புரவா
யழகுசெய்யே.
11. ஓதுவதொழியேல்
ஓதுவ தண்டபிண்டம் நந்திபிண்ட
மொருக்காலும் மறந்துவிட்டா லாண்டுபாழாம்
சேதமது செய்யாமல் செய்தாயானால்
திருமகளே ஆண்டுக்கு முன்னூறாகும்
பாதமதை பின்னதென்று பூசைசெய்து
பண்பான வரியென்று பகர்வாயானால்
காதமது போய்விடு மோதுவதில்
கலங்காதே தோளிலேதான்
கண்டுகொள்ளே.
12. ஔவியம் பேசேல்
ஔவியமது இருந்துநீ பேசுவாயாகி
லைந்திருந்துங் காலாகி மடித்துப்போவாய்
ஔவியமதை விட்டுநீ யாதிதன்னை
யஞ்சலித் தடிதொழுது அமர்ந்துநின்றால்
ஔவியத்தால் கூக்குரல்கள் ரொம்பவுண்டு
ஆறிரண்டு பன்னிரெண்டி லடங்குஞ்சோதி
ஔவியத்தை யின்னதென் றறிந்தாயானா
லண்டரண்ட முன்வசமே
யாகுந்தானே.
13. அஃகஞ் சுருக்கேல்
சுருக்குவது மயிர்ப்பால மீதில்தானுந்
தூண்டாத தீபம்போ லிருக்கவேணும்
பழகச்சே தெரியுமல்லோ காயின்போகம்
பலிதமா மில்லையென் றறிந்துகொள்ளு
பெருக்கவே போசனமு நீருமுண்டால்
பேதைகளே மனிதருக்குச் சாவுமுண்டோ
உருக்கலந்த போதேதா னெல்லாமாச்சு
ஊஅக்கஞ் சுருக்கமதை
யுன்னிப்பாரே.
ஆத்திச்சூடி குருமுனித் திறவுகோல்
உயிரெழுத்து 12க்கும் விபர முற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக