தமிழ்மாமுனிவர் ஆசிரியர் மங்கலங்கிழார்
முனைவர் மோ.கோ. கோவைமணி
இணைப்பேராசிரியர், தலைவர்;
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் - 613 010.
தமிழ்நாட்டின் வடவெல்லையாக 1911ஆம் ஆண்டிற்கு முன்னர் வடவேங்கடம் மற்றும் திருக்காளத்தி உட்பட பல்வேறு
பகுதிகள் இருந்து வந்தன. அப்போது இருந்த
பிரித்தானிய அரசு பல புதிய மாவட்டங்களை உருவாக்கியது. 1911ஆம் ஆண்டு ஏப்ரல்
முதல் நாளன்று வடார்க்காடு மாவட்டத்தில் உள்ள தமிழர்ப் பகுதிகளான திருத்தணி, புத்தூர், திருக்காளத்தி, சந்திரகிரி, சித்தூர், பலமனேரி, புங்கனூர் ஆகிய வட்டங்களைப் பிரித்தும். கடப்பை மாவட்டத்தில் உள்ள தெலுங்கர் பகுதிகளான மதனப்பள்ளி, வாயல்பாடு ஆகிய இரண்டு வட்டங்களைப் பிரித்தும் புதிதாக இருமொழி பேசும் மக்கள்
கொண்ட மாவட்டமாக சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. பனகல் அரசர், பொல்லினி முனிசாமி நாயுடு போன்றோர் சென்னை மாகாண முதல்வராக இருந்த காரணத்தால் சித்தூர் மாவட்ட அதிகார மையங்களில் தெலுங்கர்களே ஆதிக்கம் செலுத்தினர். பெரும்பான்மை தமிழர்கள் மீது தெலுங்குமொழி கட்டாயமாக திணிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் தெலுங்கு மொழியைப் பேசவும் படிக்கவும்
செய்தது. இச்சூழலில் வளரும் தலைமுறை
மாணாக்கர்களுக்குத் தமிழ்மொழிக் கல்வியை அளித்து
இலட்சக்கணக்கான தமிழர்களைத் தெலுங்கராக மாறிப் போகாமல் தடுத்தி நிறுத்திய மறத்தமிழராம் மாத்தமிழர் தமிழ்மாமுனிவர் ஆசிரியர் மங்கலங்கிழார் அவர்களைப் பற்றியதாக இக்கட்டுரை அமைகிறது.
தோற்றம்
தற்போதைய வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்து உள்ள புளியமங்கலம் என்னும் சிற்றூரில் திருவாளர் ஐயாசாமி முதலியாருக்கும் திருமதி பொன்னுரங்கம்
அம்மையாருக்கும் திருமகனாய் துளுவ வேளாளர் மரபில் சைவ சமயத்தினராக கி.பி.1897ஆம் ஆண்டு பிறந்தவர்தான் இக்கட்டுரையின் நாயகன் தமிழ்மாமுனிவர் ஆசிரியர் மங்கலங்கிழார் ஆவார். இவரது இயற்பெயர் குப்பன் என்கின்ற குப்புசாமி ஆகும்.
தொடக்கக் கல்வி
தன்னுடைய ஐந்தாம் வயதில் புளியமங்கலத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில்
பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். ஐந்தாம் வகுப்பு வரை
புளியமங்கலத்தில் படித்தவர் அதற்குமேல் அவ்வூரில் படிக்கும் வசதி இல்லாததால் தம்முடைய தமக்கையார் சென்னை புரசைவாக்கத்தில் கணவரோடு வாழ்ந்து
வருகையாலும், அவர்களுக்குக் குழந்தைச் செல்வம் இல்லாததாலும், குப்புசாமிக்கு மேற்கல்வி கொடுக்க வேண்டியும் குப்புசாமியை சென்னையில் உள்ள
பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியில் சேரத்து பயிலச் செய்தனர். எல்லா பாடங்களிலும்
தலைசிறந்து விளங்கிய குப்புசாமிக்குப் பேரிடி காத்திருந்தது. தன்னுடைய மாமாவின் மறைவு தொடர் படிப்புக்குச் சறுக்கல் ஏற்பட்டது.
இருப்பினும் தன்னை மகனாகவே வளர்த்த தமக்கையை விட்டு ஒதுங்காமல் தமக்கையின் குடும்பத்தைக் காக்கும் மகவாக மாறி
மாமா செய்து வந்த தச்சுத்தொழிலை மேற்கொண்டு வந்தார்.
குப்புசாமியின் பள்ளிப்படிப்பு ஐந்தாம் படிவத்தோடு நின்றுவிட்டது. என்றாலும் டி.என். சேஷாசலம் அய்யர் அவர்களின் இரவுப் பள்ளி அவரது படிப்பினைத் தொடர வாய்ப்பளித்தது. இவ்விரவுப்பள்ளியில் பல ஏழை மாணாக்கர்களுக்குக் கற்பகத் தருவாக விளங்கியது. சேஷாசல அய்யர் இரவுப்பள்ளி நடத்தியதோடு எல்லோரும் இலக்கிய
இன்பத்தைப் பருக ஒரு கலாநிலையம் என்ற இலக்கிய வார இதழை நடத்தத் தொடங்கினார். இவ்விதழின் பெரும்பகுதி குப்புசாமி என்கிற மங்கலங்கிழாரின் மேற்பார்வையில் நடந்து வந்தது.
அய்யர் அவர்கள் தம் பெருஞ்செல்வத்தை அவ்விலக்கியப் பணிக்காகவே செலவிட்டார். இருப்பினும் ஒரு கால கட்டத்தில் பொருள்நிலை போதாமல் கலாநிலையம் தத்தளித்த போது
தானும் தன் மாணவர்களில் சிலருடன் சேர்ந்து பல நாடகங்கள் நடத்தி கலாநிலையத்திற்குப்
பொருளீட்டினார். கலாநிலையம் பெயரிலே நாடகம் தயாரிக்கப்பட்டு சென்னை, சிதம்பரம், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் நடத்தப்பட்டது. இந்நாடகத்தில் பங்கு பெற்ற மாணவர்களுக்குத் தமிழ் நாடகக்கலைத் தந்தை சங்கரதாஸ்
சுவாமிகள் பயிற்சியளித்துள்ளார்.
கிழார் நாடகங்களில் பெரும்பாலும் பெண்வேடம் ஏந்தி நடிப்பார். கிழார் பெண்வேடத்தில் நடிக்கும்போது உண்மையான பெண்ணென்று
நினைக்கும் படியான தோற்றமளிப்பார். நாடக மன்னரான கிட்டப்பா
கிழாரின் நடிப்பைப் பாராட்டியுள்ளார். எப்பாடுபட்டு உழைத்தும்
கலாநிலையம் வெளிவராமல் நின்றுவிட்டது என்றாலும் இரவுப்பள்ளி மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. இப்பள்ளியில் கிழாரும் பயின்று பின்
ஆசிரியராகவும் இருந்து ஏழை மாணவர்களுக்குக் கல்வி கற்றுத் தரும்படியான பொதுத்தொண்டாற்றினார்.
திருமணம்
தன்னுடைய 25ஆம் வயதில் திருவள்ளுரில் வசித்த நெருங்கிய உறவினரான
அய்யாசாமி முதலியார் - அங்கம்மாள் தம்பதியரின் அன்பு மகள் கமலம்மாளை தன்னுடைய 25ஆம் வயதில் கி.பி.1922இல் திருமணம் செய்துகொண்டார்.
தொழிலும் கல்வியும்
குடும்பத்தைக் காக்க தச்சுத்தொழிலை மேற்கொண்டு வந்தாலும் மனதைக் காக்க தமிழ்
பயில பல நல்லறிஞர்களை நாடிய மங்கலங்கிழார் மே.வி. வேணுகோபாலப்பிள்ளையுடன் திரு.க. நமச்சிவாய முதலியார் உதவியுடன் இலக்கணப்புலி திரு.கா.ர. கோவிந்தராச
முதலியாரிடம் பாடம் படிக்கலாயினர். வேலை நாட்களில் இரவிலும்
ஞாயிற்றுக்கிழமைகளில் பகலிலுமாக இவர்களின் தமிழ்ப்பசி நிறைவேறிக்கொண்டிருந்தது.
அஷ்ட பிரபந்தங்கள், நன்னூல் காண்டிகை மற்றும்
விருத்தியுரை, பொருள் இலக்கண நூல்கள், தொல்காப்பியம் போன்றவற்றைப் பயின்றார்.
ஆசிரியத் தொழில்
கிழார் அவர்கள் வாழ்க்கைக்குத்
தொழில் செய்து கொண்டும், மனைவி மக்களோடு குடும்பம்
நடத்திக் கொண்டும், அறிவு வளர்ச்சிக்குத் தமிழ் கற்றுக் கொண்டும் இருந்தவரை திரு. கா.ர. கோவிந்தராச முதலியார் அவர்கள் தம்மைப் போலவே தம் மாணவரையும்
ஆசிரியராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம்முடைய எண்ணத்தை கிழாரிடம் சொல்ல, கிழாரோ அப்போது அரசு பட்டறையில் தச்சுத்தொழில் மேஸ்திரியாக இருந்து வந்தார். இப்பணிக்கு அவர் வாங்கும் ஊதியத்தைவிட ஆசிரியர் பணிக்கான ஊதியம் மிகமிகக் குறைவு.
என்றாலும் ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் பதினைந்தாண்டுகள் பணியாற்றினார்.
பாடம் நடத்தும்போது பாடத்தைச் செய்தியாகக் கூறிவிடாமல் மாணவரைக் கூறவைத்து
புரிவிப்பதோடு மறவாமல் பசுமரத்து ஆணிபோல் மனதில் பதியவைப்பார் என்று அவரிடம் பாடங்கேட்ட என் தந்தையார் மோ.கு. கோதண்டன் கூறக் கேட்டதுண்டு.
இப்பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் இவருக்குக் குருதிக் கொதிப்பு
ஏற்பட அவதிப்பட்டு அதற்கு நாட்டுமருத்துவம் மேற்கொண்டார். அம்மருத்துவம் இவருக்கு ஒவ்வாமையால் வாய் பிடிப்பு ஏற்பட்டு அதனால் பற்கள்
உதிரும் நிலை அடைந்தன. இதற்குப் புறா
இறைச்சி உண்டால் சரியாகிவிடும் என்ற போது புலால் உண்ணாமையை தம் வாழ்நாள் கொள்கையாக
ஏற்றுக் கொண்டிருந்தவருக்கு இது சங்கடத்தை ஏற்படுத்த தம்முடைய பற்களையெல்லாம்
பிடுங்கிவிட்டு பொய்ப்பல் கட்டிக் கொண்டார். உடல்நிலை ஒவ்வாமையால் தாம் செய்து வந்த ஆசிரியத் தொழிலைத் துறந்தார்.
மீண்டும் கல்வி கற்றல்
ஆசிரியப் பணியனைத் துறந்தாலும் தமிழின் மீது உள்ள காதல் இவருக்குச் சிறிதும்
குறையவில்லை. கற்றது கைம்மண் அளவு
கல்லாதது உலகளவு என்பர். கலாநிலையம் சேஷசால அய்யர் மற்றும் இலக்கணப்புலி கா.ர. கோவிந்தராச முதலியார் ஆகியோரிடம் கற்ற கல்வியே இவரைச் சிறந்த தமிழ் மகானாக எண்ணினாலும் இவரின்
தமிழாவல் மேலும் மேலும் கல்வியறிவைப் பெறத்தூண்டியது எனலாம். இந்நிலையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களிடம் திருக்குறளைப் பல கோணங்களில் தெளிவுற பயின்று
அவரது இறுதிக் காலத்தில் ஊன்றுகோலாக விளங்கினார். இவரின் தமிழார்வம் இலக்கண இலக்கிய நூல்களைக் கற்றதோடு நிற்காமல்
சைவ வைணவ நூல்களையும் கற்கத் தொடங்கினார். தமிழ் நூற்பயிற்சி
அறிவுக்குத்தான் விருந்தளிக்கும், உள்ளத்திற்கும் உயிருக்கும்
மொழிப்புலமை மட்டும் முழு அமைதியைத் தராது என்றெண்ணியவர் வேதாந்த நூல்களை திரு.கோ. வடிவேல் செட்டியாரிடம்
பயின்றார்.
மணியக்கார் ஆகுதல்
இந்நிலையில் புளியமங்கலத்தில் வாழ்ந்து வந்த தந்தையார் இறந்துவிடவே, அவரின் உறவினர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி “மணியம்” வேலையை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று குப்புசாமியும்
சென்னையிலிருந்து தம் பிறந்த ஊரான புளியமங்கலத்திற்கு இடம்பெயர்ந்தார். 1934இல் ஊர்;த்தலைவர் பொறுப்பை ஏற்றுத் திறம்பட பணியாற்றினார். இதனால் அவ்வூர் மக்கள் மங்கலங்கிழார் என்று அழைக்கலாயினர். இப்பெயரே நாளடைவில் எல்லோரும்
அழைக்கும் பொதுப்பெயராக நிலைத்து நின்றது. இவரின் தொடக்க கால நடிப்புத்திறனைப் பார்த்தவர்கள் திரைப்படங்களில் நடிக்க அழைத்தனர். இந்நிலையில் சந்திரகுப்த
சாணக்கியர் என்ற திரைப்படத்தில் சாணக்கியராக நடித்து அத்தோடு
திரைப்படத் தொழிலுக்கு மூடு விழாவும் நடத்திவிட்டார்.
ஆசிரியத் தொழில்
மங்கலங்கிழார் தனக்குக் கல்வி புகட்டிய டி.என். சேஷாசல அய்யர் வழியில் புளியங்குளத்தில் இரவுப்பள்ளியைத் தொடங்கித் தமிழ் கற்பிக்கும்
பணியில் ஈடுபட்டார். அப்போது இராணிப்பேட்டை
சின்மயானந்தா அடிகளோடு தொடர்பு கிடைத்ததால் துறவு நிலைக்கு மாறினார். அதுமுதல் வெண்மையான
வேட்டியும். காவி ஜிப்பாவும், கதர் சால்வையும் அணியத் தொடங்கினார். அவரின் புறத்தோற்றம் மாறினாலும் உளத்தோற்றம் மாறவில்லை. சித்தூர் மாவட்டம் முழுவதும் தெலுங்கு மொழி ஆதிக்கத்தால் தமிழ்மொழி அழியும் நிலைகண்டு
அவரின் உள்ளம் குமுறியது. உடனடியாக
அங்குள்ள தமிழர்களுக்குத் தமிழ் விழிப்புணர்ச்சியூட்டிட 1939இல் வளர்புரத்தில் “அறநெறித் தமிழ்ச்சங்கம்” என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். பின்னர் இச்சங்கம் விரிவடைந்து குருவராயப்பேட்டை, அம்மையார்குப்பம், மின்னல், நரசிங்கபுரம், கீழ்ப்புத்தூர், மேல்புத்தூர், நாராயணவனம், சத்திரவாடி, சிந்தலப்பட்டடை, பொதட்டூர்;ப்பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, புதுப்பேட்டை, சுரைக்காயப்பேட்டை, மத்தூர், மத்தேரி முதலிய 16 கிராமங்களுக்குக் கிளை பரப்பியது.
மங்கலங்கிழார் முயற்சியால் மேற்கண்ட ஊர்களில் தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டு நான்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. அவைகள் ஆரம்ப வகுப்பு, ஓளவை வகுப்பு, சிற்றிலக்கிய வகுப்பு, பேரிலக்கிய வகுப்பு என்பனவாகும்.
முதலிரண்டு வகுப்பு மாணவர்களுக்கு இலக்கியம் கற்கும் மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்கள் பாடம் நடத்தினர். இவரிடம் பாடம் பயின்றவர்கள் பல ஆயிரம் பேர் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்று தமிழாசிரியர் பணிக்குச் சென்றனர்.
அறநெறிக்கழகம்
அறநெறிக்கழகம் மூலம் தமிழுணர்வு பெற்ற மாணவர்களைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஊரிலும் “மாணவர் மாநாடு” என்ற பெயரில் விழா நடத்தப்பட்டது. அவ்விழாவில்
தமிழறிஞர்களான தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மு. வரதராசனார் ஆகியோர் பங்கு பெற்று தமிழ் எழுச்சியூட்டினர். அதுபோல், தமிழ்ச் சான்றோர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரின் திருநாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் திரு.வி.க., ச. சச்சிதானந்தம், பாலூர் கண்ணப்ப முதலியார், முனைவர் மா. இராசமாணிக்கனார், தென்னிந்திய சீவரட்சகத் தலைவர் ஸ்ரீபால், மறைமலையடிகள் மகள் நீலாவதி அம்மையார் ஆகியோர் பங்கேற்று சொற்பொழிவாற்றியுள்ளனர். திரு.வி.க. இவரை “வித்தியானந்தர்” என்றே அழைப்பார். மேலும், திருத்தணியில் தமிழ் வளரச்சிக்கழகமும் பொதட்டூர்ப் பேட்டையில் தமிழாசிரியர் பயற்சிப் பள்ளியும் என இவரது தமிழ்ப்பணி விரிவடைந்தது. கிழாருக்குத் தமிழ்ப்பணி ஒரு கண்ணென்றால்
தமிழ்மண் மீட்புப்பணி மறுகண்ணாக இருந்தது.
வடவெல்லைப் போராட்டம்
1947இல் வடக்கெல்லைப் போராட்டம் உதயமானபோது இவரது பங்களிப்பு அளப்பரிதாக இருந்தது.
1949இல் தமிழ் வளர்ச்சிக்கழகம் உருவான போது வடக்கெல்லைப் போராட்ட நண்பர்கள் பலர் இவரை அடையாளம் கண்டனர். அறநெறித்தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்ப் பெருமக்களுக்கொரு வேண்டுகோள், தமிழ்நாட்டின் வடக்கு பற்றி விரிவாக எழுதி வெளியிட்டார். மேலும், இப்போராட்டத்தின் முழக்கங்களைத் தாமே எழுதினார்.
1952 திசம்பர் இறுதியில் பிரதமர் நேரு ஆந்திரம் தனிமாநிலமாகப் பிரிக்கப்படும் என்றும், அதில் தமிழ் மாவட்டமான சித்தூரும் உள்ளடங்கும் என்றும் அறிவித்தார். இதை எதிர்த்து ம.பொ.சி. முயற்சியில் வடக்கெல்லை பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டதில்
கிழாரும் தீவிர உறுப்பினராக இருந்து செயல்பட்டார். 25.06.1953இல் 144 தடையை மீறி மறியல் நடந்த போது கிழார் கைது செய்யப்பட்டு திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டார்.
இறுதிப்பணி
வடக்கெல்லை பாதுகாப்புக்குழுக்கூட்டம் மீண்டும் 10.07.1953இல் சென்னையில் கூடி சித்தூர் மாவட்டத் தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை பற்றி
விவாதித்து பிரதமர் நேருவைச் சந்திக்க முடிவெடுக்கப்பட்டது. கிழார் தில்லி செல்லாமல் பொதட்டூர்ப்பேட்டையில் கட்டப்பட்டு
வரும் தமிழாசிரியர் பயிற்சி பள்ளி வேலையில் தீவிரமாக இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு பள்ளிப்பட்டு மருத்துவமனையில்
சிகிச்சை பலனின்றி 31.08.1953இல் இயற்கை எய்தினார்.
இவர் வடவெல்லை, தமிழ்நாடும் வடவெல்லையும், தமிழ்ப்பொழில், நளவெண்பா விளக்க உரை, இலக்கண விளக்கம், இலக்கண வினாவிடை, நன்னூல் உரை ஆகிய முதன்மையான நூல்களைப் படைத்திருக்கின்றார். கிழாரின் பெயரைத் தாங்கி இப்பகுதியில் எட்டுக்கும் மேற்பட்ட ஊர்களில் தொடக்கப்பள்ளி, தெரு, இலக்கிய மன்றம், நூல் நிலையம், உருவச்சிலை, அறக்கட்டளை, நற்பணி மன்றம், பூங்கா, மாளிகை போன்றவை அமைக்கப்பட்டுள்ளமையே இவரது
சிறப்புக்கு விளக்காகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக