வியாழன், 13 செப்டம்பர், 2018

கொலை களவு காமம் - சங்க மரபும் திருக்குறள் மறுப்பும்

சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு தனித்தனிப் பாக்களால் பாடப்பெற்றவை. இவ்விலக்கியங்கள் அகம், புறம், அகப்புறம் என்ற அமைப்பில் அமைந்தும்; ஆசிரியம், பரிபாடல், கலிப்பா ஆகிய பா வகையால் அமைந்தும் இருக்கின்றன.  திருக்குறளோ ஓரே ஆசிரியரால் குறள் வெண்பாவால் பாடப்பெற்ற 1330 பாக்களால் ஆனது.  இது அறம், பொருள், இன்பம் என்ற அமைப்பில் அமைந்திருக்கின்றது.  கொலை களவு காமம் குறித்து சங்க இலக்கியங்களிலும் திருக்குறளிலும் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை உற்று நோக்கினோமானால் இரண்டும் வேறுபட்டுக் காணப்படுவதைக் காணமுடிகிறது.  பிறர் உயிரை எடுப்பது கொலை; பிறர் பொருளை எடுப்பது களவு; முறையற்றுப் புணர்வது காமம் எனத் தீவினைகளைப் பாகுபடுத்தலாம்.

        ஐம்பெருங்காப்பியங்களில் - இரட்டைக் காப்பியங்களில் இரண்டாவதாக வைத்து எண்ணப்படும் மணிமேகலை ஆபுத்திரனாடடைந்த காதையில் சீத்தலைச் சாத்தனார் மனிதனால் தோன்றும் தீவினைகள் பத்து என்று குறிப்பிட்டுள்ளார்.  இதனை, 

      “கொலையே களவே காமத்தீ விழைவு
       உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
      பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்
      சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
      வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று
      உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப்
      பத்து வகையால் பயன்தெரி புலவர்” 1

என்னும் பாடல் வரிகள் சுட்டுவதைக் காணலாம். உடம்பினால் தோன்றும் தீவினைகள் மூன்று (கொலை, களவு, காமம்) என்றும், சொல்லினால் தோன்றும் தீவினைகள் நான்கு (பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல்) என்றும், செயலினால் தோன்றும் தீவினைகள் மூன்று (வெஃகல், வெகுளல், பொல்லாக் காட்சி) என்றும் சீத்தலைச் சாத்தனார் பட்டியலிட்டுள்ளதைக் காணும் போது அக்காலத்தில் மனிதனால் உண்டாக்கப்படும் தீவினைகள் பத்து என்பதை உணரமுடிகிறது.  சங்க காலத்திற்குப் பிற்பாடான மணிமேகலையில் தீவினைகளின் பட்டியலைப் பார்க்கும் போது, சங்க இலக்கியங்களில் விரவிக் கிடந்த தீவினைகளைச் சீத்தலைச் சாத்தனார் ஒருங்கிணைத்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.  இவற்றில் உடம்பினால் தோன்றும் தீவினைகளான கொலை, களவு, காமம் குறித்த மரபுகள் சங்க இலக்கியங்களில் எவ்வாறு காணப்படுகின்றன. இவை திருக்குறளில் கொலைக்கு மறுப்பாக கொல்லாமை, புலால் மறுத்தல் என்றும்,  களவுக்கு மறுப்பாக கள்ளாமை என்றும், காமத்திற்கு மறுப்பாக வரைவின் மகளிர், பிறனில் விழையாமை என்றும் கூறப்படும் செய்திகளைக் காணலாம்.

1. கொலை

கொலை என்பது உயிர்க் கொலையைக் குறிக்கும்.  அதாவது, மனிதன் மனிதனைக் கொல்லுவதும், பிற உயிர்களைக் கொள்வதும் எனக் குறிக்கும்.  சங்க காலத்தில் கொலை இரண்டு நிலைகளில் செய்யப்பட்டுள்ளது.  விலங்குகள் தன்னினும் வலிமை குன்றிய விலங்கினங்களை உணவுக்காக வேட்டையாடி கொல்லுகின்றன.  மனிதன் விலங்கினங்களைப் பொழுது போக்கிற்காக வேட்டையாடுவதன் மூலமும், உணவுக்காக வேட்டையாடுவதன் மூலமும் கொலை செய்கின்றான்.  அயல் நாட்டார் மீது போர் தொடுப்பதன் வாயிலாகவும் மனிதன் மற்றொருவனைக் கொலை செய்கின்றான்.  ஆகக் கொலையானது, உணவுக்காகவும், அயலான் இடத்தைக் கவர்வதற்காகவும் நடைபெறுகிறது.  போர்க்களத்தில் வீரர்கள் போரிடும் போது ஒருவரை ஒருவர் கொல்லுதல் தீவினையன்று.  ஏனெனில் தத்தம் நாட்டினைக் காக்கப் போர்முறை அறமாக சங்க கால மாந்தர் கருதினர்.  ஆனால், பாலை வழியில் பயணஞ் செய்வோரையும் ஏனையோரையும் அவர்தம் பொருள்களைப் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொடியோர்கள் புரியும் கொலை தீவினை ஆகும்.
தன் வலிமையினும் குறைந்த வலிமை பொருந்திய விலங்குகளை உணவுக்காக கொன்று தின்னும் வழக்கம் காட்டு விலங்குகளிடம் உண்டு.  அதேபோல், மனிதர்களும் உணவின் பொருட்டு தமக்கு விருப்பமான விலங்குகளைக் கொன்று அவற்றின் கறிகளைச் சமைத்து உண்டிருக்கின்றனர்.  பொழுது போக்கின் நிலையில் செல்வந்தர்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடியும் கொலை செய்து இருக்கின்றனர்.  இதுபோன்ற பல கொலைச் செயல்கள் சங்க இலக்கியங்களில் பரவிக் கிடக்கின்றன.  இருப்பினும் சான்றுக்கு ஒருசில இங்குக் காட்டப்படுகிறது.
கள்ளில் நிறைந்த காட்டினிடத்தே புள்ளிப் பொறி பொருந்திய கலைமானை, வறண்ட அழகிய அதன் கொம்புகள் சிதைந்து உதிருமாறு, புலால் விரும்பமுடைய புலி அதனைத் துரத்திப் பற்றிக் கொன்று தின்னும்; அப்புலி தின்று கைவிட்டுப் போன மூட்டுவாய் கழிந்த கடிய முடைநாற்றத்தினையுடைய தசையைத் தின்னுதற்குப் பெரிய தலைகளையுடைய எருவைகளோடு பருந்துகள் பலவும் ஒருங்கே வந்து சூழ்ந்திருக்கும் என்று அகநானூற்றில் மாமூலனாரின் பாடல் குறிப்பிடுகிறது.2  

  கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலையில் உணவின் பொருட்டு பரதவர் குலத்தில் தோன்றிய சிறுவர்கள் கடலில் வாழும் இறால் மீன்களையும், நிலத்தில் வாழும் ஆமையையும் சுட்டுத் தின்றனர் என்கிறார்.  இதனை, 

               “கடல் இறவின் சூடு தின்றும்,
வயல் ஆமைப் புழுக்கு உண்டும்”3
எனும் பாடலடிகள் உணர்த்தக் காணலாம்.

கூற்றத்தை ஒத்த, கொல்லுதலில் தப்பாத வேற்படையையுடைய மறவர், வழிச் செல்வார் வரும் வழியில் தங்கியிருந்து, பொழுது பட்டவழி, அவர்களைக் கொன்று, அவர்கள் பெற்று வந்த பொருட்களைக் கொள்ளையடிப்பர்.  இதனை, பாலைபாடிய பெருங்கடுங்கோ,

      “கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்
       ஆற்றுஇருந்து அல்கி வழங்குநர்ச் செகுத்த” 4

என்று குறிப்பிடுகிறார். 

யானையைக் கொண்டு வீழ்த்திய சிறந்த தொடையுடைய அம்பு, புலியின் வாயில் ஊடுருவிச் சென்று இறந்துபாட்டைச் செய்தது; பின் துளை பொருந்திய கொம்பையுடைய கலைமானை வீழ்த்தியது; பின் உரல்போலும் தலையையுடைய கேழலாகிய பன்னியைக் கொன்றது: பின் அதற்குப் பக்கத்தில் உள்ளதாகிய புற்றில் உள்ள உடும்பில் சென்று தைத்தது என்று ஓரியின் வில்லே என்று பரணர் பாடுகின்றார்.  இவ்வாறு வலி மிக்க வேகத்தில் வில்லை ஏற்றுபவன் ஓரியாகத்தான் இருக்கவேண்டும்.  இவன் தொழில் கொலைத்தொழில் அல்ல; ஆனால் ஏவிய அம்பு அதன் வேகத்தில் யானையையும், புலியையும், கலைமானையும், பன்றியையும், உடும்பையும் வீழ்த்தியது என்றால் அது அறத்தின் பார்பட்ட வேட்டையாகத்தான் இருக்கவேண்டும் என்கிறார்.

கொலை ஓர் அறமா?

கொலைத் தொழிலுக்கு அஞ்சாத அரசனின் நாடு எவ்வாறு இருக்கும் என்பதை கலித்தொகை எடுத்துரைக்கிறது.5 அதாவது, மரங்கள், இளமையிலேயே வறுமையுற்றவன் போல, தளிர்கள் வாடிய கொம்புகளை உடையனவாய் நின்றன; கொடுத்தற்கு மனம் சிறியவனானவனுடைய செல்வம், தன்னைச் சேர்ந்தார்க்குப் பயன்படாதவாறு போல, தன்னைச் சேர்ந்தவர்களுக்கு நிழலின்றியிருந்தன; யாவரிடத்தும் ஒழுக்கத்தைக் கடந்து, தீங்கு செய்பவன் அதனாற் புகழ் கெட்டு, இறுதிக் காலத்தே அவன் சுற்றத்தார் மட்டுமன்றி அவனும் கெடுவான்; அதுபோல, கதிரவனின் கதிர்கள் சுடுதலினால் சினைகள் மட்டுமன்றி, மரங்கள் வேறோடே வெம்பி நின்றன என்பதால் கொலைத் தொழில் சிறந்ததாகக் கருதவில்லை என்பது தெரிகிறது.

கொலைத் தண்டனை

   தண்டனை வழங்குவதன் பொருட்டும் மனிதன் மனிதனை கொலை செய்கின்றான்.  ஆற்றில் நீராடுவதற்கு ஒரு பெண் செல்கின்றாள்.  அங்குக் குளித்துக் கொண்டு இருக்கும்போது புனலில் மிதந்து வந்த பசிய பிஞ்சினைத் தின்றதன் தவறுக்குப் பொன்னால் அவள் நிறையளவு (எடைக்கு எடை) செய்யப்பட்ட படிமையை, எண்பத்தோரு களிறுகளோடு கொடுக்க அவளது தந்தை நிற்கவும், அவற்றை ஏற்றுக் கொளானாய், அவளைக் கொலை செய்தான் நன்னன் என்று பரணர் குறுந்தொகைப் பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.6 

கொலை மறுத்தால் அறம்

கொலை செய்யும் எண்ணம் சிறிதும் இல்லாதவன் எவ்வகைப்பட்ட வாழ்க்கையை வாழ்வான் என்பதை, புகார் நகரில் வாழ்ந்த மக்களின் இயல்பை பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

“கொலை கடிந்தும், களவு நீக்கியும்
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,
நல் ஆனொடு பகடு ஓம்பியும்,
நான் மறையோர் புகழ் பரப்பியும்,
பண்ணியம் அட்டியும், பசும்பதம் கொடுத்தும்,
புண்ணியம் முட்டாத் தண்நிழல் வாழ்க்கை,
கொடு மேழி நசை உழவர்”7
என்கின்றார்.  அதாவது, கொலைத் தொழிலைத் தாம் செய்யாமையோடு பிறரும் செய்யாத வண்ணம் விலக்கியும்; களவுத் தொழிலை நீக்கியும்; தேவர்களுக்குப் பலி முதலியன தந்து வழிபட்டும்; வேள்விகளை இயற்றி அவற்றின் ஆவுதிப் பொருள்களை அவற்றிற்குரிய தெய்வங்கள் நுகரும்படிக் கொடுத்தும்; நல்ல பசுக்களையும், எருதுகளையும் பாதுகாத்தும்;  அந்தணர்களுக்கு உண்டாகும் புகழினை அவர்களிடம் நிலைபெறச் செய்தும்; பெரிய புண்ணியங்களைத் தாங்கள் செய்தும்; அவ்வாறு செய்ய இயலாதவர்க்குத் தானம் வழங்கியும்; விளைந்த நெல்லையும் பாக்கையும் உணவாகத் தந்தும் இவ்வாறு அறச் செயல்கள் பலவற்றைத் தடையின்றிச் செய்யும் குளிர்ந்த அருள் உள்ளத்தைக் கொண்ட இல்லற வாழ்க்கையில் சிறந்து நிற்கும் வணிகர் பலர் புகார் நகரில் வாழ்ந்தனர் என்கின்றார்.

கொல்லாமை

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கொலைச் செயல்களைத் திருவள்ளுவர் தடுத்தாட்கொள்பவராக ‘கொல்லாமை’ என்னும் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.  அறங்களில் சிறந்த அறமாக எதுவிருக்குமெனில், ஐயறிவுடையன முதல் ஓரறிவுடையன வீறாய உயிர்களைக் கொல்லாமல் இருப்பதே என்கிறார்.  போர் அறத்தின் வாயிலாக உயிர்களைக் கொல்லுவதும், உணவின் பொருட்டு உயிர்களைக் கொல்லுவதும் ஆகாது என்று திருவள்ளுவர் கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய இரண்டு அதிகாரங்களில் வலியுறுத்துகின்றார்.  உயிர்க்கொலை புரிதல், உயிருக்குத் தீங்கு இழைத்தல் சமண சமயத்தில் தீச்செயலாகக் கருதுவதால் அவர் இவ்வாறு படைத்துள்ளார் எனலாம்.  

திருவள்ளுவர் அறவினை என்பது ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பது என்றும், அவற்றைக் கொல்லுவதாயின் பாவச் செய்கைகள் எல்லாம் தானே வந்து சேரும் என்றும், வீடுபேறு உண்டாவதற்கு நல்ல நெறி எதுவெனில் யாதொரு உயிரையும் கொல்லாமல் அறவழியில் நிற்பது என்றும், பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனைவாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும் கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன் என்றும், எக்காரணம் கொண்டும் தன்னுயிர் போமாயினும் பிறிதோருயிரை அதனுடம்பின் நீக்குந் தொழிலைச் செய்யாதிருப்பது நல்லது என்றும், தேவர் பொருட்டு வேள்விக்கண் பலி கொடுத்தல் இல்வாழ்வார்க்கு இன்பம் மிகும் என்று கூறப்பட்டதாயினும், துறவானமைந்தார்க்கு ஓருயிரைக் கொல்ல வருஞ் செல்வங் கடையாகும் என்றும், கொலைத் தொழிலையுடையவர் அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும் அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர் ஆவர் என்றும் கொல்லாமை என்னும் அதிகாரத்தின் வழி உணர்த்துகின்றார்.

தன்னுடைய ஊனை வளர்ப்பதற்கு பிறிதொரு உயிரை வதை செய்து தின்பது எவ்வகையில் பொருத்தமாகும் என்றும், பொருளின் பயன் அதனைப் பாதுகாவாதாற்கு இல்லை என்பது போல அருளாற் பயன்கோடல் ஊன் தின்பவர்க்கில்லை என்றும், கொலைக் கருவியைத் தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யுங் கொலையையே நோக்குமே யல்லாது அருளை நோக்காதது போல பிறிதோருயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குமே யல்லாது அருளை நோக்காது என்றும், அருள் என்பது கொல்லாமை என்றும், புலால் என்பது பிறிதோருடம்பின் புண் என்றும், தீயின்கண் நெய் முதலி அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒரு விலங்கினுயிரைப் போக்கி அது நின்ற ஊனையுண்ணாமை நன்று என்றும், ஓருயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை எல்லா உயிரும் கைகுவித்துத்து தொழும் என்கிறார்.

“கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் 
          டல்லவை செய்தொழுகும் வேந்து”8
என்பதில், பகைமை பற்றிக் கொல்லுதல் தொழிலைத் தம்மேற்கொண்டொழுகுவாரினுங் கொடியவன் பொருள் வெஃகிக் குடிகளை யலைத்தல் தொழிலைத் தன் மேற்கொண்டு முறையல்லவற்றைச் செய்தொழுகும் வேந்தன் என்று கொடுங்கோன்மை அதிகாரத்தில் வேந்தனின் நிலையை மறுக்கின்றார்.

“வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு”9
என்பதில் ஆறலைக்குமிடத்துத் தனியே வேல்கொண்டு நின்ற கள்வன் ஆறு செல்வானை நின் கைப்பொருள் தாவென்று வேண்டுதலோடொகும் என்கின்றார்.

      சங்க காலத்தில் போர் அறமாகவும், உணவுக்காக உயிர்களைக் கொன்று உணவாக்குவதும் மரபாக இருந்தது.  இலக்கியங்கள் வாழ்வின் வெளிப்பாடு என்பது உண்மை.  அப்படிப் பார்க்கும் போது, ஒரு நீதி போதிக்கும் நிலை எவ்வாறு உருவாகும் என்பதை உற்று நோக்கினால் ஒரு செயல் மிதமிஞ்சி நடக்கும் காலத்தில் அச்செயல் தவறான செயல் எனக் கருதினால் அதனை நிறுத்துவதற்கு, அதன் தவற்றை உணர்த்துவதற்கு தக்க நீதிமான்களால் மக்களுக்கு அறிவுறுத்தல்கள் உருவாக்கப்படும்.  அவ்வகையில் பார்க்கும் போது சங்க காலத்தில் போற்றப்பெற்ற கொலை செயல்கள் சங்கம் மருவிய காலத்தில் தழைத்தோங்கி இருந்திருக்கலாம்.  இதனைத் தடுக்கும் பொருட்டு திருவள்ளுவர் கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய இரண்டு அதிகாரங்களில் கொலை தடுப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  அண்மைக் காலத்தில் சாந்தலிங்க சுவாமிகள் கொலை மறுத்தல் என்று ஒரு நூலைப் படைத்துள்ளார்.

2. களவு

    களவு இரண்டு நிலைகளில் அமையும் ஒன்று அகக்களவு, மற்றொன்று புறக்களவு.  தலைவன் தலைவியின் அகத்தின்பாற்பட்ட களவு வாழ்க்கை அகக்களவு என்றும், பொருள்வயிற் மேற்கொள்ளப்படும் களவு புறக்களவு என்றும் கூறலாம்.  

    தலைவன் தலைவியின் மீது கொண்ட காதலால் இரவுக் குறியிடத்து யாருக்கும் தெரியாமல் தனியாக சந்தித்து தன்னுடைய வேட்கையைத் தணித்துக் கொள்வது களவுக்காதல் என்பர்.  இக்களவில் தலைவனும் தலைவியும் உணர்வால் ஒன்று பட்டாலும், மரபால் களவின்பம் துய்த்தல் திருமணத்திற்குப் பிறகே அமைதல் வேண்டும்.  திருமணத்திற்கு முன் அமையும் களவின்பம் உற்றார் உறவினர்க்குத் தெரியாமல் தோழிக்கு மட்டும் தெரிந்து, தலைவனும் தலைவியும் கூடும் இன்ப வேட்கையே களவு.  
நாள்தோறும் களவின்பத்தில் ஒழுகி, மணம் புரியாது காலம் தாழ்த்தும் தலைவன் இரவுக் குறியில் வந்தனன்.  இதனை மிளகுக் கொடி படரும் மலைச் சாரலிற் கடுவனும் மந்தியும் காதல் பயின்று இன்பம் நுகர்தலை ‘களவுப் புணர்ச்சியில் கடுவனோடு, சிவந்த முகமுடைய மந்தி ஈடுபட்டது.  அப்புணர்ச்சியால் வேறுபட்ட தன் கோலத்தை, தளிர்களைத் தின்னும் இயல்புடைய தன் சுற்றம் அறியுமோ என்று அஞ்சிற்று.  அது கரிய அடிமரத்தையும் பொன்போன்ற பூங்கொத்தினையும் உடைய வேங்கை மரத்தின் அழகிய கிளை மீது சென்று, ஆழமாகிய சுனை நீரை நோக்கித் தலை கவிழ்ந்திருந்து, தன் மெல்லிய தலையில் புணர்ச்சியால் குலைந்த உச்சி மயிரைத் திருத்தும்.  இங்ஙனம் களவில் திரியும் குரங்குகளை உடையவன் என்னுடைய மலைநாடன்’ என்று தலைவி கூறுவதாக ஒருபாடல் அமைந்துள்ளது.10  

களவிற்கு முக்கியத்துவம் கொடுத்தலால் தலைவனுக்கு இடையில் நிகழும் இடையூறுகள் எதுவும் அச்சமாகத் தெரியவில்லை.  இதனை,   

கருங்கால் வேங்கை வீஉகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை - நெடுவெண் நிலவே!11

எனும் பாடல் உணர்த்தக் காணலாம்.  தலைவனுக்கு இரவுக்குறி மறுத்து, வரைந்து கொள்ள வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.  புலியே யன்றிப் புலியோடு அதன் தாயும் தந்தையும் சுற்றமும் அக்காட்டில் உலவினாலும் தலைவியை இரவுக் குறியில் பெற்று இன்பம் நுகர்தல் ஒன்றே நோக்கமாக வருதலால் இடைவழியில் தோன்றும் இடையூறுகளுக்குத் தலைவன் அஞ்சவில்லை.  நிலவு களவிற்கு நல்லது அன்று என்று கூறினாலும் தலைவன் செவிமடுக்காமல் இரவுக்குறி ஒன்றே நோக்கமாகக் கொண்டிருந்தான் என்கிறது. 

களவு வெளிப்பட்டதும் தலைவி உரைத்தல்

தலைவன் தலைவிக்கு மலர் கொய்து வந்து காலத்தோடு கொடுப்பான்.  ஒரு நாள் காலங்கடந்து வந்த மலர் வாடியதைக் கண்டு, இம்மலர் வேறொருவருக்குக் கொய்து, அவள் மறுக்கப்பட்டமையால் எனக்குக் கொடுக்கிறாய் அதனால் தான் இம்மலர் வாடியிருக்கிறது என்பதாக ஒரு பாடல் பரிபாடலில் அமைந்துள்ளது.12   ‘முறிந்த அன்பினை உடைய தலைவனே, உன்னுடைய களவொழுக்கம் எனக்குப் புரிந்துவிட்டது.  உன்னை விரும்பாதவளுக்குக் கொய்து சென்ற மலர் அவள் ஏற்காததால் உன்னையே விரும்பிக்கொண்டிருக்கும் எனக்குக் காலங்கடந்து வந்து கொடுக்கிறாய்.  முன்பெல்லாம் நீ மலரைக் கொய்து கொண்டு வந்து எனக்குக் கொடுத்த போதெல்லாம் விரைந்து வந்து கொடுத்தமையால் மலரின் உருவம் துவளாமல் நன்றாக இருக்கும்.  ஆனால் இப்பொழுது இம்மலர், வேறு ஒருத்திக்குக் கொய்து சென்று அவளால் மறுக்கப்பட்டமையால் காலம் நீட்டித்து என்னிடம் கொண்டு வந்துள்ளாய்.  ஆதலின் உருவம் துவண்டு காணப்படுவதைக் காணமுடிகிறது’ என்று தலைவனின் களவொழுக்கத்தினைச் சுட்டிக் காட்டுகிறாள்.

தலைவியும் களவாணியும்

தலைவியின் திருமணத்தின் போது அவளது தந்தை அவளுக்குத் தந்த வளைகளும் ஆரமும் இப்பொழுது அவைகள் வேறொருத்தியிடம் இருப்பதைக் கண்டு அதன் உண்மைத் தன்மையை உணர்ந்து கொண்டவளாய், ‘என்னை ஏமாற்றி, என்னுடையனவற்றி என் தலைவன் வழி கவர்ந்து கொண்டவளே, அவரும் அவைகளும் உன்னுடையன அல்ல’ என்பதாக பரிபாடல்,

              “எந்தை எனக்கு ஈத்த இடுவளை, ஆரப்பூண்
               வந்தவழி நின்பால் மாயக் களவு அன்றேல்,
                தந்தானைத் தந்தே தருக்கு” 13 

என்ற வரிகள் இயம்புகின்றன.

தலைவியை மணந்து கொள்வதில் கருத்தின்றித் தலைவன் களவொழுக்கத்தையே விரும்பியவனாய் நாள்தோறும் இரவுக்குறியில் வந்த வண்ணம் இருந்தான்.  ஒருநாள் தலைவியை இரவுக் குறியில் கொண்டு வந்து நிறுத்தித் தோழி தனியளாகத் தலைவனைக் கண்டு தலைவியை மணந்து கொள்ளுமாறு வேண்டுவதாக நன்பலூர்ச் சிறுமேதாவியாரின் அகநானூற்றுப் பாடல் அமைகிறது.14 

களவொழுக்கத்தில் நின்ற தலைவன் வரைவொடு வந்து தலைவியை மணந்து கொண்டான்; அதுவரை அலர் தூற்றிய அவ்வூர் மக்கள் வாயடங்கியதை உலோச்சனனாரின் அகநானூற்றுப் பாடல் ஒன்று வெளிப்படுத்துகிறது.15 

        வழிப்பறி கொல்லை அக்காலத்தில் பெரிதும் வழக்கிலிருந்திருக்கிறது.  இச்செயலை பெரும்பாணாற்றுப்படை, வழிச்செல்வோர் அலறும்படி தாக்கி, அவர்களுடைய கைப்பொருளைக் கவர்ந்து கொள்ளும் களவினை, ஏர்த்தொழில் போன்று வாழ்க்கைக்குத் தொழிலாகக் கொண்டுள்ள கொடுமையோரை உடையது தொண்டைமான் இளந்திரையனது நாடு என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

                 “அத்தம் செல்வோர் அலறத் தாக்கி,
                   கைப்பொருள் வௌவும் களவுஏர் வாழ்க்கைக்
                  கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன்புலம்” 16

என்கின்றார்.

கள்ளாமை

சங்க காலத்தில் பெரிதும் போற்றப்பெற்ற களவு வாழ்க்கையை திருவள்ளுவர் கள்ளாமை என்னும் அதிகாரத்தில் மறுக்கின்றார்.  களவு செய்யாமை கள்ளாமை.  பிறருடைய உடையை அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை கள்ளாமை யாகும்.  திருவள்ளுவர் யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக் கொள்ளாதவன் வீட்டினை இகழாது விரும்புவான் என்கின்றார்.  மேலும், குற்றங்களைத் தன் நெஞ்சாற் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம் என்றும், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்றும் நினைக்க வேண்டாம் என்றும், களவினால உளதாகிய பொருள் வளர்வது போல் தோன்றினாலும் அது தன்னை விட்டுப் போய்விடும் என்றும், பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும் என்றும், அருளினது உயர்ச்சியை யறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல் பிறர்பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது என்றும், களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையவர் உயிர் முதலியவற்றை யளத்தலாகிய நெறியின்கணின்று அதற்கேற்ப ஒழுகமாட்டார் என்றும் களவு வாழ்க்கையை மறுக்கின்றார்.
3. காமம்

கூடா ஒழுக்கத்தினால் கூடி மகிழ்தலே காமம்.  தலைவன் தலைவி களவொழுக்கத்தில் கூடும் மரபு சங்க இலக்கியத்தில் பரவலாகக் காணப்படுகிறது.  இக்களவொழுக்கத்தினை தகையணங்குறுத்தல், புணர்ச்சிமகிழ்தல், நாணுத்துறவுரைத்தல், அலரறிவுறுத்தல், படர்மெலிந்திரங்கல், தனிப்படர்மிகுதி, நினைந்தவல்ல புலம்பல், களவு நிலையுரைத்தல், நெஞ்சொடுகிளத்தல், நிறையழிதல், அவர்வயின்விதும்பல், புணர்ச்சிவிதும்பல், புலவி, ஊடலுவகை போன்ற அதிகாரங்களில் போற்றும் திருவள்ளுவர் வரைவின் மகளிர், பிறனில் விழையாமை போன்ற அதிகாரங்களில் காம மறுப்பினை உணர்த்துகின்றார். காமம் என்பது, தன்னைச் சிறிதும் நன்மையுடையது என உணரும் அறிவில்லாதவரிடத்தும் சென்று தங்குகின்ற பெரிய அறிவில்லாமையை உடையது என்பதை நக்கீரனாரின்,

                    “------------- காமம் யாவதும்
                     நன்று என உணரார் மாட்டும்
                    சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே”17
என்ற பாடல் சுட்டுகிறது. 

காமத்தின் தன்மை

பிறர் கூறும் பழிச் சொற்களுக்கு அஞ்சுவதாயின், காமம் மெலிவடையும், பிறர் இகழ்ந்து கூறுதல் அற்றுப் போகுமாறு காமத்தை விட்டுவிட்டால், நாணம் மட்டுமே எஞ்சி நிற்கும்.18  தம்மை நினையும் தலைவரைப் பல்கால் காண்டலால் காமம் வளரும் தன்மையுடையது.19  காமம் என்பது, உள்ளத்தை மயக்கும் அணங்கு தாக்குதலும் அன்று, உடலை வருத்தும் நோயும் அன்று.  பழைய மேட்டு நிலத்தில் தழைத்த, இளமை நிரம்பாத புல்லைப், பள்ளத்தில் படுத்துக் கிடக்கும் முதிய பசு, நாவினால் தடவியதைப் போல, அது விருந்துணவாக அமைவது.20 காமத்தை, உலகினர் காமம், காமம் என இழித்துக் கூறுகின்றனர்.  காமம் என்பது, புறத்தே நின்று தாக்கும் தெய்வமும் அன்று. உடலை மெலிவிக்கும் நோயும் அன்று.  அது, பேயும் நோயும் போலக் காணப்படாததாய்ச் சிறுகிப் பெருத்தலும், பெருகிச் சிறுத்தலும் உடையதன்று.  யானையானது, அதிமதுரத் தழையை மென்று தின்று அதனால் உண்டாகிய மதத்தைப் போலத் தாம் காணுநரைத் தமக்கு உயிராகப் பெற்றால், காமம் பெருகி, நீண்ட காலம் நிற்கும் இயல்புடையதாகும்.21 

மடலேறுதல்

தலைவன், தோழியிற் கூட்டத்தால் தலைவியைப் பெற மேற்கொண்ட உத்தியே ‘மடலேறுதல்’ என்பர்.  காமம் மிக்க தலைவன், பனை மடலால் குதிரையை அமைத்து, அதன் மீது ஏறி, தான் விரும்பிய காதலியின் ஓவியத்தையுடைய கொடியைக் கையில் ஏந்தி, ஊரார் அறிய வீதிகளில் வருதல் மடலேறுதல் எனப்படும்.  இக்காட்சியைக் காண்பார், இன்னானோடு, இன்னாட்கு உறவுள்ளமை அறிந்து வெளிப்படையாக அலர் மொழிவர்.  அக்கொடுமை கண்டு நாணும் தலைவியின் பெற்றோர், அவளை அவனுக்கே மணம் முடிப்பர்.  இவ்வாறான செய்திகள் சங்க அக இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.  தலைவனின் காம நோயின் வெளிப்பாடாக இச்செயல் அமைகிறது.22  

இளமையும் காமமும்

காம உணர்வான இளமையில் அன்றி முதுமையில் வருமோ என்று நற்றிணையில் ஒரு பாடல் கேட்கிறது.  அதாவது, ‘பாலை நிலத்தின் வழிச் சென்று ஈட்டுகின்ற பொருளும் ஓர் இன்பம் செய்வதாகுமோ? அங்ஙனம் செய்யும் எனில் இளமையில் பெறும் காம இன்பத்தினும் சிறந்ததோ? அங்ஙனம் இல்லையே, பொருளால் ஏற்படும் வளமை இளமையினும் சிறந்ததோ? அங்ஙனம் இல்லையே, இளமையைப் பொருள் ஈட்டுதலில் கழித்தால் பொருளால் நேரும் வளமை, முதுமையில் காம இன்பத்தைத் தராது அன்றோ’ என்கிறது.  நிலைத்து நில்லாப் பொருள் மேல் கொண்ட பற்றுக் காரணமாக காம இன்பத்தை கருதாது விடுதல் நல்ல செயற்பாடு இல்லை என்பதாக இப்பாடல் பொருள் அமைகிறது.  அதனால், இளமையில் காமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும் என்கிறது சங்க இலக்கியம்.23 

பரத்தையர் பொருட்டு தலைவியின் நிலை

பரத்தையர் பக்கம் சென்ற தலைவன், அவள் மீது கொண்ட காதலால் என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் இருப்பதை,

“ஓர்ஊர் வாழினும் சேரி வாரார்;
சேரி வரினும் ஆர முயங்கார்;
ஏதிலாளர் கடலை போலக்
காணாக் கழிப மன்னே - நாண் அட்டு,
நல் அறிவு இழந்த காமம்
வில்உமிழ் கணையின் சென்று சேண்படவே”24
என்ற பாடல் உணர்த்துகிறது. நம்மிடத்து அயன்மையை உடைய தலைவர், தம் சேரியுள்ள ஒரே ஊரில் பரத்தையுடன் வாழ்ந்த போதிலும், தம் சேரிக்கண்  வருதல் செய்யார்.  ஒருகால், உணவு உண்பதற்காகத் தம் சேரிக்கு வந்த போதிலும், நம்மைத் தழுவுதல் இலர்.  சுடலையை ஒருவன் காணாமல் கடப்பதுபோல என்னைக் கண்ணெடுத்தும் பாராமல் செல்வர் என்று தலைவி கூற்றாக இப்பாடல் அமைகிறது.

களவுக்குப் பின் திருமணம்

இரவுக் குறியில் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் பிறகு திருமணத்தால் ஒன்றுபட்டனர் என்பதை,

“கணக்கலை இகுக்கும் கறிஇவர் சிலம்பின்
மணப்பு அருங்காமம் புணர்ந்தமை அறியார்,
தொன்றுஇயல் மரபின் மன்றல் அயர,
பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி,
நொதுமல் விருந்தினம் போல,இவள்
புதுநாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே.”25
என்பதால், கூடுதற்கு அரிய காமத்தால் நீ களவிலே வடி மகிழ்ந்தமையை அறியாத எம் இருமுது குரவரும் சான்றோரும் முதலானோர், தொன்றுதொட்டு வரும் முறைப்படி நும் திருமணத்தை நடத்தி, யாமும், நீ எம் தலைவியை மணந்து பெண் கொள்ளும் ஒழுக்கத்தினைக் கண் குளிரக் காண்பதோடு அயலாராகிய புதியோர் போன்று, இவளுடைய புதிய நாணத்தாலாகிய ஒடுக்கத்தினையும் அதுகாலைக் காண்போம் அல்லமோ! என்று தோழி  கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

இவ்வகைப்பட்ட காமத்தைத் திருவள்ளுவர், கண்டார்மாட்டு மகிழ்ச்சியைச் செய்வது26 என்றும், காமத்தை இடைவிடாது எய்தியவர் பெற்ற பயன்கள் எதுவெனில், புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீக்குதலும், அதன்பின் நிகழ்வதாய அப்புணர்ச்சியே27 என்றும், கடல் போலக் கரையற்ற காமநோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண்பிறப்புப் போல மிக்க தகுதியினையுடைய பிறப்பு உலகத்தில் இல்லை28 என்றும், அலர்தலால் காமம் வெளிப்படுவது29 என்றும், அலராந் தோறும் காமம் இனிதாகா நின்றது, கள்ளுண்பார்க்குக் களிக்குந் தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல30 என்றும், காம நோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்கலொல்லாத நாணும் தம்மைப் பொறாத என்னுடம்பின் கண்ணே உயிர் காத்தண்டாக அதன் இரு தலையினுந் தூங்கா நின்றன31 என்றும், தம்மாற் காதலிக்கப்படுங் கணவர் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர், பெற்றாரன்றே காம நுகர்ச்சி யென்னும் பரலில்லாத கனி32 என்றும், காமம் என்பது மகளிர் ஆடவர் என்னும் இருதலையினும் வேட்கை ஒருதலைக் கண்ணே வரும்33 என்றும், முன்கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைந்தாலும், அது பொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால் உண்டுழி யல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தலுடைத்து34 என்றும், தம்மால் விரும்பப்படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு அப்பிரிவான் வருவதோர் துன்பமில்லையாம்35 என்றும், நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக்கொண்டு வந்து கனவு தருதலான், அக்கனவின் கண்ணே எனக்கின்பம் உண்டாகா நின்றது36 என்றும், நெஞ்சே! ஒன்றின் நாண் விடமாட்டாயாயிற் காமவேட்கையை விடு, ஒன்றின் அது விடாமாட்டாயாயின் நாணினை விடு, இவ்விரண்டு யானோ பொறேன்.  அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின் ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன் தாங்கும் மதுகை யானிலன்37 என்றும், நாணாகிய தாழினைக் கோத்த நிறையென்னுங் கதவினை காமவேட்கையாகிய கணிச்சி முறியா நின்றது38 என்றும்,  நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும்39 என்றும், மகளிர் காமம் மறைக்கப்படுவதாகும்40 என்றும், பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் தலைமகள் கூடுவது41 என்றும், நீங்கிய காமத்தராய் தலைவியைப் பிரிந்து போயவர் மேற்கூடிய காமத்துடனே தன்கண் வருதலை நினைத்தல்42 என்றும், நினைத்த அளவினானே களிப்பெய்தலும், கண்ட அளவினானே மகிழ்வெய்தலும் கள்ளுக்கு இல்லை காமத்திற்கு உண்டு43 என்றும், மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின், அவரால் தம் காதலரோடு தினையளவும் ஊடுதல செய்யாமை வேண்டப்படும்44 என்றும், காமவின்பம் மலரினு மெலியதாயிருக்கும்45 என்றும்,  காம நுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்கு உரியராவார் ஆராமை பற்றித் தம்முள் ஊடுதல்46 என்றும் காமத்தின் தன்மைகளைத் திருவள்ளுவர் பல்வேறு இடங்களில் சுட்டிச் செல்கின்றார்.  காமநிலையினை வரவேற்ற திருவள்ளுவர் காம மறுப்பினையும் சுட்டிச் செல்கின்றார்.  வேண்டா காமம் எத்தன்மைத்து என்பதை பிறனில் விழையாமை, வரைவின் மகளிர் ஆகிய அதிகாரங்களில் எடுத்துரைக்கின்றார்.

வரைவின் மகளிர் யார் எனின் ஒருவனை அன்பு பற்றி விழையாது பொருள் பற்றி விழையும் மகளிர்47 என்றும், ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து அஃதெய்துந் துணையும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாதவர்48 என்றும், கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொதுமகளிர்49 என்றும், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னாது விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிர்50 என்றும் திருவள்ளுவர் கூறுகின்றார்.  இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் செறிவினையுடையார் தீண்டார்51 என்றும், இயற்கையாகிய மதிநன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினை உடையவர் பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நல்த்தைத் தீண்டார்52 என்றும், ஆடல் பாடல் அழகென்பனவற்றாற் களித்துத் தம் புல்லிய நலத்தை விலை கொடுப்பார் யாவர் மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார்53 என்றும் காம மறுப்பினை வரைவின் மகளிரில் எடுத்துரைக்கின்றார்.  

மேலும், பிறனுக்குப் பொருளாந் தன்மையை உடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை ஞாலத்தின்கண் அறநூலையும் பொருணூலையும் ஆராய்ந்தறிந்தார் மாட்டில்லை54 என்றும், தம்மை ஐயுறாதாரில்லாள் கண்ணே பாவஞ் செய்தலை விரும்பியொழுகுவார் உயிருடையரேனும் இறந்தாரே யாவர்55 என்றும், எத்துணைப் பெருமையுடையராயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும் எனில், காம மயக்கத்தால் தினையளவுந் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கட் புகுதல்?56 என்றும், பிறனில்லாள்கண் நெறி கடந்து செல்வானிடத்து பகையும் பாவமும் அச்சமும் குடிப்பழியும் என்னும் நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்57 என்றும் பிறனில் விழையும் தீயோரின் இயல்பை வெளிப்படுத்தும் திருவள்ளுவர், அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் யார் எனில், பிறனுக்குரிமை பூண்டு அவனுடைய இயல்பின் கண்ணே நிற்பாளது பெண்டன்மையை விரும்பாதவன்58 என்றும், பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்டகைமை சால்புடையயார்க்கு அறனுமாம், நிரம்பிய ஒருக்கமுமாம்59 என்றும், அச்சந் தருங் கடலாற் சூழப்பட்ட உலகத்து எல்லா நன்மைகளும் எய்துதற்குரியார் யாவரெனின், பிறனொருவனுக்கு உரிமையாகியாளுடைய தோளைச் சேராதார்60 என்றும், ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும் அவனுக்குப் பிறனெல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை யுண்டாயின், அது நன்று61 என்றும் கூறுகின்றார்.

இப்படியாக சங்க இலக்கியங்கள் பெரிதும் போற்றப்படும் கொலை, களவு, காமத்தைத் திருவள்ளுவர் கொலையையும் களவையும் முற்றிலும் மறுக்கின்றார்.  ஆனால், ஒழுக்கக் காமத்தை வரவேற்கும் திருவள்ளுவர் ஒழுக்கமற்ற, நெறியற்ற காமத்தை முற்றிலும் மறுகின்றார்.  இவ்வாறு இவ்விரு வகைப்பட்ட இலக்கியத் தன்மைகளைக் காணும்போது ஒரு காலத்தில் போற்றப்பட்டவை பிறிதொரு காலத்தில் வெறுக்கத்தக்கதாக ஆகியுள்ளதை உணரமுடிகிறது.

அடிக்குறிப்புகள்
1. மணி.24.125-131.
2. அகம்.97.
3. பட்.63-64.
4. குறுந்.283.5-6.
5. கலி.10.
6. குறுந்.291.
7. பட்.199-205.
8. குறள்.551.
9. குறள்.552.
10. நற்.151.
11. குறுந்.47.
12. பரி.6.61-67.
13. பரி.20.76-78.
14. அகம்.394.
15. அகம்.400.
16. பெரும்.39-41.
17. குறுந்.78. 
18. குறுந்.112.
19. குறுந்.152.
20. குறுந்.204.
21. குறுந்.136.
22. குறுந்.17, 28, 58.
23. நற்.126.
24. குறுந்.231.
25. குறுந்.112.
26. குறள்.1090.
27. குறள்.1109.
28. குறள்.1137.
29. குறள்.1144.
30. குறள்.1145.
31. குறள்.1163.
32. குறள்.1191.
33. குறள்.1196.
34. குறள்.1201.
35. குறள்.1202.
36. குறள்.1214.
37. குறள்.1247.
38. குறள்.1251.
39. குறள்.1252.
40. குறள்.1253.
41. குறள்.1257.
42. குறள்.1264.
43. குறள்.1281.
44. குறள்.1282.
45. குறள்.1289.
46. குறள்.1330.
47. குறள்.911.
48. குறள்.912.
49. குறள்.913.
50. குறள்.919.
51. குறள்.914.
52. குறள்.915.
53. குறள்.916.
54. குறள்.141.
55. குறள்.143.
56. குறள்.144.
57. குறள்.146.
58. குறள்.147.
59. குறள்.148.
60. குறள்.149.
61. குறள்.150.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக