வியாழன், 13 செப்டம்பர், 2018

சங்க இலக்கியம், திருமுறை உணர்த்தும் குடந்தை

காலந்தோறும் உருவாகிய உருவாகிக் கொண்டிருக்கின்ற வரலாற்றுப் பதிவுகளைப் பல்வேறு காலச் சுவடிகள் நமக்குக் காட்டிக் கொடுக்கின்றன.  அந்த வகையில்தான் தொல்லாய்வுகள், கல்வெட்டாய்வுகள், ஓலைச்சுவடியாய்வுகள் அமைந்திருக்கின்றன.  மேலும், அவ்வக்காலத்து வாழ்ந்த பெரியோயர்களால் படைக்கப்பட்ட இலக்கியங்களிலும் அவ்வக்கால வரலாறுகள் இடம்பெற்றிருக்கின்றன.  குறிப்பாக, குடந்தையைப் பற்றிப் பழங்கால இலக்கியங்களான சங்க அக இலக்கியங்களான அகநானூறு மற்றும் நற்றிணைகளில் குடவாயிற் கீரத்தனார் பாடல்களிலும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரின் திருமுறைகளிலும் இடம்பெற்றிருக்கின்றன.  அவற்றைப் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.  

குடந்தை

சோழநாட்டுத் தஞ்சைப் பகுதியில் உள்ள குடவாயில் என்னும் ஊரைச் சேர்ந்த கீரத்தனார் என்பவர் சங்க காலத்தில் வாழ்ந்து சங்கப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார்.  தன்னுடைய ஊர்ப் பெயரை முன்னொட்டாகக் கொண்டு குடவாயிற் கீரத்தனார் என்றும், குடவாயிற் கீரத்தன் என்றும்   குறிப்பிட்டுள்ளார்.  இவருடைய பாடல்கள் அகநானூற்றில் 35, 44, 60, 79, 119, 129, 287, 315, 345, 366, 385, ஆகிய பாடல்களும், நற்றிணையில் 27, 42, 212, 379 ஆகிய நான்கு பாடல்களும், குறுந்தொகையில் 79, 281, 369 ஆகிய மூன்று பாடல்களும், புறநானூற்றில் 242ஆம் பாடலும் ஆகப் பதிதொன்பது பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

எந்தவொரு புலவரும் தம்முடைய பாடல்களில் தம்மூர் பற்றியும், தம்மூரைச் சுற்றியுள்ள சிறப்பு வாய்ந்த ஊர் இருப்பின் அவற்றினைப் பற்றியும் அவற்றின் பெருமைகளைப் பற்றியும் சுட்டிச் செல்லாமல் இருக்கமாட்டார்கள்.  அவ்வகையில் பார்க்கும் போது குடவாயிற் கீரத்தனார் தம்மூரைப் பற்றித் தம் பாடல்களில் குடவாயில் என்றும், குடந்தைவாயில் என்றும் இருவேறு நிலைகளில் குறித்துள்ளார்.  

நீங்காத புதுவருவாயுடையதும் மிக்க பழைய நெல்லினையுடைய பல குடிப்பரப்பினை உடையதும் யானை படியும் குளத்தினையும் நெருங்கிய காவற் காடுகளையும் உடையதுமாகிய குளிர்ந்த குடவாயில் அன்ன சிறப்பினள் தலைவி என்ற அகநானூற்று முல்லை நிலத்துப் பாடலாக விளங்கும் 44ஆம் பாடலில்,                                                                                                                                                     
“தண்குட வாயிலன்னோள்” (அகம்.44:18)

என்றும், புற்கென்ற தலையை உடைய பெண் குரங்கினது, மரமேறும் தன் தொழிலையும் சரிவரக் கல்லாத இளமையுடைய வலிய குட்டி குன்றிடத்தே உள்ள பொருந்திய மனையின் மற்றத்தினின்றும் நீங்காமல் இருக்கும்.  நெருப்புக் கொழுந்து விட்டது போன்ற மலர்கள் நெருங்கிய பூங்கொத்தினை உடைய வேங்கை மரத்தின் தாழ்ந்த கிளையிடத்தே மறைந்திருந்து தலைவியின் கையிலிருந்த தேன் கலந்த இனிய பாலைக் கிண்ணத்தோடு வலியக் கைப்பற்றிச் சென்றுவிட்டது.  அதனால் ஓவியர் எழுதினாற் போல அமைந்த இவள் கண்ணின் அழகெல்லாம் சிதையுமாறு அழுதனள்.  அவ்வாறு அழுததனால், கண்கள் தேர்களை இரவலர்க்குப் பரிசிலாக வழங்கும் வள்ளன்மை மிக்க சோழ மன்னர்க்குரிய குடவாயில் என்னும் ஊரில் மழைபெய்து நிரம்பிய அகழியிடத்துக் குளிர மலர்ந்த பெய்யும் மழைநீரை ஏற்கும் நீலமலர் போன்றன என்பதை நற்றிணை குறிஞ்சி நிலத்துப் பாடலாக விளங்கும் 379ஆம் பாடலில்,.  

             தேர்வண் சோழர் குடந்தை வாயில்
             மாரிஅம் கிடங்கின் ஈரிய மலர்ந்த,
             பெயர்உறு நீலம் போன்றன;  (நற்.379:7-9)

என்றும் குறிப்பிட்டுள்ளார்.  குடவாயிலென்பதை குடந்தை என மேலையோர் திரித்தனர் என்று நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், வேங்கட விளக்க உரையிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.  இவ்வூர் கும்பகோணத்திற்கு அருகில் இருப்பதாலும் குடந்தைக்கு வாயில் போன்று இருப்பதாலும் குடந்தை வாயில் என்றும், குடவாயில் என்றும் குறித்தனர் என்பர்.  இவ்வூர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள குடவாசல் என்று இன்று அழைக்கப்படுகிறது.  குடவாயில், குடந்தைவாயில் ஆகிய பெயர்கள் குடவாசலைக் குறிப்பிடுகின்றனவே யன்றி குடந்தையைக் குறிப்பிடுவனவாக இல்லை.  குடவாயிற் கீரத்தனாரின் பாடல்களில் அகநானூற்று அறுபதாம் பாடலில் வெல்லும் வேலினை உடைய கொற்றச் சோழர், பகைவர் திறையாகக் கொடுத்த நிதியைக் குடந்தையில் வைத்துக் காத்துள்ளனர் என்பதைக்,  “கொற்றச் சோழர் குடந்தை வைத்த” (அகம்.60:13) என்று குறிப்பிடுகின்றார்.

       பன்னிரு திருமுறைகளில் கும்பகோணத்தைக் குடந்தை என்றும், குடமூக்கு என்றும், குடந்தைக் காரோணம் என்றும் சமயப் பெரியோர் அழைத்திருக்கின்றனர்.  திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறையில் “திருக்குடந்தைக் காரோணப் பதிகம்” மற்றும் மூன்றாம் திருமுறையில் “திருக்குடமூக்குப் பதிகம்” ஆகிய இரண்டு பதிகங்கள் குடந்தையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.  திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறையில் “திருக்குடமூக்குப் பதிகம்” மற்றும் ஆறாம் திருமுறையில் “திருக்குடந்தைக் கீழ்க்கோட்டப் பதிகம்” ஆகிய இரண்டு பதிகங்கள் குடந்தையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.  நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் “கன்னார் மதில்சூழ் குடந்தைக் கிடந்தாய்” (திவ்.திருவாய்.5:8:3) என்று குடந்தை பற்றிக் குறிப்பிடுகிறது.

சங்க இலக்கியம்  

        பெரிய கடற்பரப்பில் சிவந்த இறால்மீன் நடுங்கும்படி மீன்களை முகக்கும் கொடிய தொழிலையுடைய நேரிய கோல்வினையுடைய அழகிய வலையினைக் கையிலே கொண்டவாறு நீண்ட படகில் தந்தையானவன் மீன் பிடிக்கும் தொழிலில் தங்கினான்.  உப்பு விற்று வாங்கி வந்த நெல்லாலே ஆக்கப்பட்ட மூரலாகிய வெண்சோற்றை அயிலை மீனை இட்டு ஆக்கிய சுவை மிகுந்த புளிங்கறியை அதிலே ஊற்றிக் கொழுமீன் கருவாட்டுடன் தந் தந்தைக்கு அவனுடைய இளமை பொருந்திய மகள் உணவாகக் கொடுப்பாள்.  அத்தகைய இடமாகிய, வலிமை பொருந்திய தேரினையுடைய சேரனது தொண்டியைப் போன்ற எம் தலைவியின் ஒளிரும் வனையல்களைத் தழும்பு ஏற்படும் வண்ணம் நெருக்கி அமுக்கி வருத்தாதே!
வாடைக் காற்று கொண்டு வந்து குவித்த உயர்ந்த மணல் மேடுகளைக் கொண்ட பரந்த கடற்கரைப் பக்கத்தில் மாலையணிந்த தோழியருடன் சிற்றில் புனைந்து ஓரை விளையாடினும், உன் மேனி வருந்தும் என அறப் பண்பு இல்லாத எம் தாய் ஒரு பயன் இன்றியும் வீணே சினங்கொள்வாள்.  அத்தகையவன் நின் செயலைக் கண்டால் வெல்லும் வேலையுடைய வெற்றி பொருந்திய சோழ மன்னர் குடந்தை என்னும் ஊரின்கண் பாதுகாத்து வைக்கப்பட்ட, பகைவர் நாடு திறையாகத் தந்த நிதியைக் காட்டிலும் மிகவும் அரிய பாதுகாப்பினைச் செய்வாள்  என்பதை,

            கொற்றச் சோழர் குடந்தை வைத்த
            நாடுதரு நிதியினும் செறிய
            அருங்கடிப் படுக்குவள், அறன்இல் யாயே.  (அகம்.60:13-15)

என்கின்றார்.  சுங்கப் பாடல்களில் குடவாயிற் கீரத்தனார் மட்டுமே குடந்தை பற்றிக் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இக்குடந்தையைக் குடவாயில் என்பாரும் உளர்.

திருமுறைகள் 

கும்பகோணம் தேவாரங்களில் குடமூக்கு என வழங்கப்படுகிறது.  பஞ்சக்குரோசத் தலங்கள் சூழ்ந்தது.  கங்கை யமுனை முதலிய ஒன்பது தீர்த்தங்களும் வந்து வழிபடும் பெருமை உடையது.  பதினான்கு கோயில்களையும் பதினான்கு தீர்த்தங்களையும் உடையது.  ஒன்பதாம் நூற்றாண்டு முதல் சோழ அரசர்கள் இதனைத் தலைநகராகக் கொண்டிருந்தனர்.  சோழர்கள் இருந்த இடமாகிய சோழ மாளிகையும், இடிந்து போன பழங்கோயில்களும் இதற்குச் சான்று எனலாம்.  இத்தலத்தில் (குரு சிம்ம ராசியில் பிரவேசிக்கும் காலமான) 12 வருடத்திற்கு ஒருமுறை மகாமக தீர்த்தத்தில் மக்கள் நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  இங்கேயுள்ள பாடல்பெற்ற சிவத்தலங்கள் திருக்குடமூக்கு, குடந்தைக் கீழ்க்கோட்டம், குடந்தைக் காரோணம் ஆகியனவாகும்.  திருக்குடமூக்கில் கும்பேசுவர சுவாமியும், குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் நாகேசுவர சுவாமியும், குடந்தைக் காரோணத்தில் காசி விசுவநாதரும் கோயில் கொண்டுள்ளனர்.  இத்திருத்தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமானைப் பற்றித் திருமுறைகளில் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் குறிப்பிட்டுள்ளனர்.  திருநாவுக்கரசர் திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம், திருக்குடமூக்கு ஆகிய இரண்டு பதிகங்களிலும், திருஞானசம்பந்தர் திருக்குடந்தைக்காரோணம், திருக்குடமூக்கு ஆகிய இரண்டு பதிகங்களிலும் குறிப்பிட்டுள்ளனர்.

திருஞானசம்பந்த சுவாமிகளின் தேவார முதல் திருமுறையில் திருக்குடந்தைக்காரோணப் பதிகத்தில் கும்பேசுவர சுவாமியையும் தேவியையும் பக்திப் பரவசத்துடன் பாடிப் பரவியிருப்பது வியத்தகு விண்ணப்பங்களாகும்.  அவை பின்வருமாறு: 

  • கார்மேகம் போன்ற கருமை பொருந்திய கண்டத்தினராய், எட்டுத் தோள்களோடு விளங்குபவராய்த் திருக்குடமூக்குக் காரோணத்தில் எழுந்தருளியுள்ள எந்தையராகிய சிவபெருமான் அருள் செய்யும் இளமைக் கோலத்தில் விளங்குபவர்.  கச்சணிந்த கொங்கைகளையுடைய பார்வதி தேவியை ஒருபாகமாகக் கொண்டுள்ளவர்.  நீண்ட சடைமுடியில் நீர் மயமான கங்கையையும் பிறையையும் சூடியுள்ளவர்.  இயல்பான இருவிழிகளோடு நெற்றியில் மூன்றாவது கண்ணுடையவர்.  கூரிய மழு என்னும் ஓர் ஆயுதத்தை ஏந்தியுள்ளவர் என்றும்,
  • மாடவீதிகளும், மணம் கமழும் சோலைகளும் உள்ளன.  இச்சோலைகளில் தோகையோடு கூடிய மயில்கள் உலாவுகின்ற குடந்தைக் காரோணத்தில் உறையும் இறைவரான சிவபெருமான், கொடியில் பொருந்திய இடபத்தோடும், இளமைக் கோலத்தோடும் விளங்குபவர்.  இவரை, மணிமுடி சூடிய மன்னர்கள், இளமான் கண்கள் போன்ற விழியினை உடைய பெண்கள், மூவுலகத்திலும் உள்ள மக்கள், தேவர்கள், முனிகணங்கள், பவளத்தைப் போன்ற வாயினை உடைய அரம்பையர்கள் முதலான பலரும் போற்றித் துதித்து வணங்குவர் என்றும்,
  • குளிர்ச்சி தரும் குலைகளோடு கூடிய வாழை மரங்களும் மட்டைகளுடன் கூடிய தென்னை மரங்களும் சூழ்ந்து அழகு செய்யும் குடமூக்கில் மலைமங்கை பங்கராக, கையில் அனலேந்தியவராக எழுந்தருளி, பொன் அணிகளோடு விளங்கும் தனங்களையும் மூங்கில் முளை போன்ற வெண்மையான பற்களையும், இளம்பிறை போன்ற நெற்றியையும் இசை போன்ற மொழியையும் உடைய பார்வதி தேவியால் விரும்பப்படும் சிவபெருமான் என்றும்,
  • நிரம்பப் பெற்ற மணம் மிக்க பூக்கள், மகரந்தம் நிறைந்த சோலைகள், எழிலார்ந்த காடுகள் சூழப்பட்டு இருக்கும் குடமூக்கில் நீர்நிலைகளில் உள்ள தாமரை, கழுநீர், குவளை முதலிய பூக்களின் நறுமணம் முற்பட்டு வந்து பொலிவெய்துகிறது.  இத்தலத்தில் காரோணம் எனப் பெயர் பெறும் திருக்கோயிலில் சிவபெருமான் எழுந்தருளி உள்ளார்.  இவர், காதல் நிறைந்த உமையம்மையைத் தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளார்.  மனைகள் தோறும் சென்று பலி ஏற்பவராகவும், காதில் குழை அணிந்தவராகவும், காள கண்டராகவும் இத்தலச் சிவபெருமாள் விளங்குகின்றார் என்றும்,
  • சிவனடியார்கள் மூப்புக் காலத்து நலியும் போது நியதி தத்துவத்தின் வழியே நெறியாளராய் நின்று காக்கும் குடமூக்குக் காவலர்.  முற்காலத்தில் அனலையே அம்பாக வில்லில் கோர்த்து முப்புரங்களை அழத்தவரும், அருச்சுனன் செய்த தவத்தின் நிலை கண்டு இரங்கிப் பாசுபதாத்திரம் என்ற அம்பை வழங்கியவரும், நம் உடலை வருத்தும் நோய்கள் -நம்மைப் பற்றிய வினைகள் - மனத்தை வருத்தும் துன்பங்கள் ஆகியவற்றைத் தீர்த்து காலன் அடையா வண்ணம் காத்தருள்பவர் என்றும், 
  • ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகம் முழுவதும் திரிநிது பலி ஏற்று உழலும் வாழ்க்கையர், மான் தோலைப் பூணூலில் அணிந்தவர், புலித்தோலை ஆடையாக அணிந்தவர், யானைத்தோலால் உடம்பைப் போர்த்தவர்.  சுடுகாட்டில் நடனம் புரிபவர். இவ்வாறான இறைவர் தேனார் மொழி அமையொடு குடமூக்கில் கூடி மகிழ்ந்துறைபவர் என்றும், 
  • இராவணன் மலைபோன்ற திரண்ட தோள்களை உடையவன். மதம் மிக்க வாள் போரில் வல்லவன்.  அவன் கயிலை மலையைப் பெயர்க்க எத்தனித்த போதே, அவ்வளவில் மணம் கமழும் தம் திருவடியின் நுனிவிரலால் அம்மலையின் உச்சியில் ஊன்றியவர்.  இராவணனின் பத்துத் தலைகளும் நெரித்தன.  இராவணன், பணிந்து புகழ்மிக்க சாமகீதம் பாடினான்.  அப்பாட்டைக் கேட்டு மகிழ்ந்து, அப்பொழுதே அவனுக்கு ஒளி பொருந்திய சந்திரஹதசம் என்னும் வாளைக் கொடுத்து அருளியர் குடமூக்கு நாதரே என்றும், 
  • காலனை அழித்த காலகாலர், கரிய திருமாலும் சிவந்த தாமரை மேல் விளங்கும் நான்முகனும் ஒருவருக்கொருவர் மாறுபட்டு வாதாடி இருவரும் அண்டங்கள் அனைத்திலும் அடிமுடிகளைக் காணத் தேடிச் சென்றும் காண இயலாத வண்ணம் ஓங்கி உயர்ந்து நிற்பவர் குடமூக்கு நாதரே என்றும் குறிப்பிடுகின்றார்.

   இதுபோல் திருஞானசம்பந்த சுவாமிகளின் மூன்றாம் திருமுறையில் திருக்குடமூக்குப் பதிகத்திலும், திருநாவுக்கரசரின் ஐந்தாம் திருமுறையில் திருக்குடமூக்குப் பதிகத்திலும் கும்பேசுவர சுவாமியையும் தேவியையும் இவ்விரு தொண்டர்கள் பாடிப் பரவியிருப்பது நெஞ்சையள்ளுவதாக உள்ளது.  இத்தலத்தில் இறைவன் எவ்வாறு வீற்றிருந்தான் என்பதைத் திருஞானசம்பந்தர், இரவிரி திங்கள்சூடி யிருந்தான், ஏத்தர வங்கள்செய்ய இருந்தான், இயலொடு வானமேத்த இருந்தான், எக்கரை யாருமேத்த இருந்தான், இடிபடு வானமேத்த இருந்தான், இழைவளர் மங்கையோடும் இருந்தான், இலைமலி சூலமேந்தி இருந்தான், இடுமணல் எக்கர்சூழ இருந்தான், ஈரிரு கோவணத்தோடு இருந்தான், கூடலர் கொன்றைசூடி இருந்தான். இவ்வாறு இருந்த கும்பேசுவரனை சேருபவர்கள் எய்தும் நிலையினை,

               வெண்கொடி மாடமோங்கு விறல் வெங்குரு நன்னகரான்
               நண்பொடு நின்றசீரான் தமிழ் ஞானசம் பந்தனல்ல
               தண்குட மூக்கமர்ந்தான் அடி சேர்தமிழ் பத்தும்வல்லார்
               விண்புடை மேலுலகம் வியப் பெய்துவர் வீடெளிதே.  

என்கின்றார். அதுபோல், திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறையில் குடமூக்கில் உறையும் கும்பேசுவரரைக் கோவணத் துடையான், கூந்தாடி உறைபவன், கங்கையாளவள் கன்னி யெனப்படும் கொங்யைளிடம் உறைபவன்,  கோதாவிரியிடம் உறைபவன், கொக்கரை உடையான், சரச்சுவதியவள் கோமியும் உறையும், குரவனார் உறையும் தலத்தில் அரக்கன் இராணவன் கீதம் பாடியதும் குடமூக்கிலே என்கிறார்.

திருநாவுக்கரசர் ஆறாம் திருமுறையில் திருக்குடந்தைக் கீழ்க்கோட்டப் பதிகத்தில் நாகேசுவர சுவாமியைப் பற்றியும் தேவியைப் பற்றியும் பாடிப் பரவியிருப்பது பரவசப்படுத்துகிறது.  சொற்பொருள் கடந்த சுடர்சோதி, கயிலைமலை வாணர், இருண்ட கண்டர், திண்தோளர், மடப்பாவை மணாளர், மூவிலைவேற் குழகர், பலிதிரியும் அழகர், நீறலைத்த திருவுருவம், நெற்றிக் கண்ணர், நிலா வலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கையர், மலைமடந்தை கொழுநர், தக்கனது பெருவேள்வி தகர்த்தவர், சந்திரனைத் தரித்தவர், காலன் வலி தொலைத்தகழற்காலர், காமனெழில் அழல்விழுங்கியவர், ஆணொடு பெண்ணியல்லரானவர், நீலம் பச்சை செம்பொன் நிறத்தவர், முக்கண்ணர், தேவிக்குத் தேகத்தில் ஒரு பாகம் தந்தவர், கோச்சோழர் குலத்தரசு கொடுத்தவர், புலித்தோல் உடையவர், பூணநூல் புனிதர் என்னை எவ்வாறு ஆட்கொண்டார் என்பதை, 

               ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை 
               இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
               கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக் 
              குறியில்அறு குணத்தாண்டு கொண்டார் போலும்
              தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை 
              சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க்
              கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த 
              குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

என்கின்றார்.  

இவ்வாறு சங்கப் பாடல்கள் தொடங்கி திருமுறைப் பாடல்கள் வரை குடந்தையைப் பற்றிக் குறிப்பிடுகின்றதைக் காணமுடிகிறது.  சங்க காலத்தில் குடந்தை நகரத்தில் இருந்த திரைச்சாலை பற்றிக் குறிப்பிடுகிறது.  திருமுறைகளில் குடந்தை நகரத்தில் வீற்றிருக்கக் கூடிய தலங்களைப் பற்றியும் அத்தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமானின் சிறப்புகளைப் பற்றியும் விளக்குவதாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது. 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக