வியாழன், 13 செப்டம்பர், 2018

கந்தன் கடாட்ச சதகம் - ஓர் அறிமுகம்

   சிரவையாதீனப் புலவர் மதுரகவி க.கி. இராமசாமி அவர்கள் கந்தன் கடாட்ச சதகம் எனும் நூலை இயற்றியுள்ளார்.  இந்நூலின் பெயரைத் தமிழ்ப்படுத்தி ‘கந்தன் அருள்விழி நூறு’ என்றும் அழைத்திருக்கின்றனர்.  இந்நூலுக்கு ஈற்றடி வழங்கியவர் கவியரசு கு. நடேச கவுண்டர் ஆவார்.  இந்நூல் காப்பு 1ம், நூல் 100ம் ஆக 101 செய்யுள்களாலானது.  வெண்பா யாப்பில் அமைந்த இந்நூல் தவத்திரு சுந்தரசுவாமிகளைச் சிறப்பாசிரியராகக் கொண்டு கோவை கௌமார மடாலயத்தின் வெளியீடான ‘மாதாந்திர அமுதம்’ எனும் மாதந்தோறும் வெளிவரும் ஆன்மீக இதழில் 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், குடம் 5, திவலை 4இல் தொடங்கி டிசம்பர் மாதம், குடம் 5, திவலை 6, 1985ஆம் ஆண்டு சனவரி மாதம் குடம் 5, திவலை 7, பிப்ரவரி மாதம் குடம் 5, திவலை 8, செப்டம்பர் மாதம் குடம் 5, திவலை 9, மார்ச்சு மாதம் குடம் 5, திவலை 10, ஜுலை மாதம் குடம் 6, திவலை 1, ஆகஸ்ட் மாதம் குடம் 6, திவலை 2, டிசம்பர் மாதம் குடம் 6, திவலை 6, 1986ஆம் ஆண்டு சனவரி மாதம் குடம் 6, திவலை 7 ஆகிய பத்து மாதங்களில் மாதந்தோறும் பத்துப் பாடல்கள் வீதம் குறிப்புரையுடன் வெளிவந்துள்ளது.  இவ்விதழில் வெளிவந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள இந்நூல் இதுவரை தனி நூலாக வெளிவரவில்லை.  இந்நூலின் சிறப்புக்களை அறிமுகப்படுத்தும் முகத்தான் இக்கட்டுரை அமைக்கப்பெற்றுள்ளது.

“தஞ்சடைந்த தொண்டர் தமைக்காத்தற் கென்றுகர
          மஞ்சடைந்த ஐயன் மலர்த்தாளென் - நெஞ்சடைந்த(து)
          ஆதலால் கந்தன் அருள்வழி நூறிசைப்பன் 
         காதலால் இன்பங் கலித்து.”

எனும் காப்புப் பாடலால் இந்நூலினை ஆசிரியர் ‘கந்தன் அருள்விழி நூறு’ என்று குறித்திருக்கின்றார்.  இதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு பாடலிலும் கந்தப்பெருமானின் அருட்பார்வை பற்றிக் குறிப்பிடப்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.  குறிப்பாக,

“கந்தனருட் பூங்கட் கடை”.                                          (1)
“காத்தளிக்கும் கந்தனருட் கண்”.                             (2)
“கந்தவேள் வெங்கமலக் கண்”.                                 (3)
“சங்காழி மால்மருகன் சட்சு”.                                    (4)
“வெறுத்தபுகழ் வேலான் விழி”.                                  (8)
“சங்க்ராம வேல்வலான் சட்சு”.                                   (10)
“களிப்பருள்செவ் வேள்கட் கடை.”                            (11)
“வேல்பிடிக்கும் கையான் விழி”.                                 (13)
“கழுக்கடையான் சேய்கட் கடை”.                             (14)
“காதல்வள்ளி நாதனருட் கண்”.                                   (21)
“காவல்செயுங் குமரன் கண்”.                                       (23)
“கஞ்சமாம் நங்கடம்பன் கண்”.                                    (52)
போன்ற தொடர்கள் பாடலின் ஈற்றடியாய் அமைந்து முருகப்பெருமான் கண்ணின் சிறப்பையும் பெருமையும் எடுத்தோதுவதாக அமைந்துள்ளமையைக் காணமுடிகிறது.

முக்கண் முதல்வனும், தலையில் கங்கை கொண்டவனும், பிறை நிலவு சூடியவனும், கழுத்தில் பாம்பைத் தரித்தவனுமாகிய சிவபெருமானின் மகன் முருகப்பெருமான் என்பதை ஆசிரியர், 

          “சரபக் குஞ்சு” (19) 

என்கிறார்.  சரபம் என்றால் பாம்பு, குஞ்சு என்றால் குழந்தை, பிள்ளை.  சரபக் குஞ்சு என்றால் சரபத்தினுடைய குஞ்சு என்றும், சரபத்தைக் கழுத்தில் அணிந்தவனாகிய சிவபெருமானின் குஞ்சு (பிள்ளை - மகன்) முருகப்பெருமான் என்றும் பொருள் கொள்ளலாம்.

திருமகளை மணங்கொண்டு, பாம்பணையில் பள்ளிகொண்டு, உலகத்தைக் காத்து இரட்சிக்கும் திருமாலின் மருகன் முருகப்பெருமான் என்பதை ஆசிரியர் பல இடங்களில் சுட்டிச் செல்கின்றார்.  குறிப்பாக, 

     “சங்காழி மால்மருகன்”                                                (4), 
     “ஊதுங் குழல்மாயற் கோர்மருகன்”                       (5), 
     “உரக சயனன் மருமான்”                                             (98) 

போன்ற தொடர்களால் அறியலாம்.

சொல்லமைப்பு

ஒரே சொல் ஒரு பாடலில் பல இடங்களில் வரும் போது வேறுவேறு பொருள் படும்படி பாடிய திறத்தினைக் காணமுடிகிறது.  குறிப்பாக, ‘கடை’ என்ற சொல்  திரும்பத் திரும்பக் கையாண்டுள்ளார்.

“பிறன்கடை நிற்கும் பெரும்பேதை யாகார்;
அறன்கடை நிற்குநரும் ஆகார் - மறங்கொண்(டு)
அழுக்கடையார்; நெஞ்சத் தழகடைவர் உற்றால்
கழுக்கடையான் சேய்கட் கடை.” (14)

மேலும், ஒரு சொல் பிரித்துப் பார்ப்பின் வேறுவேறு பொருள்படும்படி அமைக்கப்பெற்றிருக்கும் திறத்தினைக் காணமுடிகிறது.  “கண்ணீரா றானதென்” (17.4) என்ற சொல், ‘கண்+ஈராறு+ஆனது+என்’ என்று பிரித்துப் படித்தால் பன்னிரண்டு கண் பெற்ற முருகப்பெருமானைக் குறிப்பதாகவும், ‘கண்+நீர்+ஆறு+ஆனது+ என்’ என்று பிரித்துப் படித்தால் முருகப்பெருமானின் கண் நீர் ஆறுபோல் ஆனது என்றும் பொருள் கொள்ளலாம்.

முருகப்பெருமான் கண்ணின் சிறப்பு

முருகப்பெருமானின் கண் பார்வையின் சிறப்பைப் பலவிதங்களில் ஆசிரியர் விதந்தோதியிருந்தாலும் எடுத்துக்காட்டுக்கு இரண்டு மட்டும் இங்குச் சுட்டப்பெறுகிறது.  கையில் கரும்பும் கண்ணில் காமமும் கொண்ட காம தேவனின் கண் காமத்தைத் தோற்றுவிக்கும் என்றும், கந்தப் பெருமானின் பார்வையானது அக்காமத்தைப் போக்கும் திறம் வாய்ந்தது என்றும் ஆசிரியர் நயம்பட எடுத்துரைக்கின்றார்.  இதனைப்,

“பண்ணழியும் மென்மொழியார் பார்வைநெடு வேல்பாய்ந்த
புண்ணழியப் பார்க்குமயிற் புங்கவனார் - கண்ணெழில்கண்(டு)‘
அஞ்சா தரன்விழியால் அன்றழிந்த தேநன்று
கஞ்சா அழித்தஎழிற் கன்று.    (53)

என்கின்றார்.  இப்பாடல் கருத்தால்,

“தமிழினி தென்காற் கன்றிற்
றிரிதரு கஞ்சாக் கன்றைத்
தழலெழ வென்றார்”

என்ற திருச்செந்தூர்த் திருப்புகழ்ப் பாடலடிகளை நினைவு கூர்வதாக அமைவதைக் காணலாம். 

வனத்தில் வாழும் புலியினுடைய பார்வை பார்ப்பவர்க்கு அச்சத்தைக் கொடுத்தாலும் அதனுடைய குட்டிக்கு அச்சத்தைத் தோற்றுவிப்பதில்லை.  அதுபோல, கந்தப்பெருமானுடைய பார்வை தீயவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கினும் அவனுடைய பிள்ளைகளாகிய பக்தர்களுக்கு இன்பம் அளிக்கும் என்பதை,

“தானவருக் கச்சம் தருமுருகன்  கண்ணிணையன்
பானவருக் கின்பம் அளிக்குமே - மானமிகு
வன்புலியின் பார்வைபிற மானஞ்சு மேனுமது
தன்பறழுக் கின்பந் தரும்”. (90)

என்னும் பாடலால் அழகுற எடுத்துரைக்கின்றார்.

      கந்தப் பெருமானின் பார்வை உலக மக்களின் நோய்களையெல்லாம் போக்கும் தன்மை கொண்டது என்பதை, 

“சென்மச்சுரத்தைத் தணிக்கும் மருந்து”                            (68) 

என்று விதந்தோதுகின்றார்.

முருகப்பெருமான் அருட்செயல்

தன்னைச் சரணாகதி அடைந்தார்க்கு அருள் பாலிக்கும் கடவுளாக முருகப்பெருமானை ஆசிரியர் சித்தரிக்கின்றார்.  அவன் கையில் வைத்திருக்கும் வேலும், உடனிருக்கும் மயிலும் அன்றி எனக்கு வேறு துணையில்லை என்பார்க்கு நல்லன காட்டி அருள் புரிபவது முருகனின் கடைக்கண்ணின் இயல்பு என்பதை, 

                வேலு மயிலன்றி வேறுதுணை இல்லையெனக்
காலில்விழு வார்க்குக் கரையிலருள் - பாலித்(து)
உளமயலைப் போக்கி உயர்கதியில் வைத்தல்
இளமயிலோன் கண்ணுக் கியல்பு.         (9)

திருமுருகாற்றுப்படை நல்கிய நக்கீரனின் வாக்கைக் கேட்டு அகமகிழ்ந்து இன்பக் கண்ணீர் வடிக்கின்றாயோ? அல்லது நக்கீரனுடைய துயரங்கேட்டு துன்பக் கண்ணீர் வடிக்கின்றாயோ? உன் கண்ணில் நீர் வடிவதன் காரணம் என்ன என்பதை, 

போற்றுபுகழ்க் கீரன் புகன்ற திருமுரு
காற்றுப் படைகேட் டகமகிழ்ந்தோ - சாற்றுமவன்
எண்ணார் துயருக் கிரங்கியோ கந்தாநீ
கண்ணீரா றானதென்ன காண். (18)

என்கின்றார்.

கந்தப் பெருமானின் வேலின் கூர்மைக்கு நிகராகக் குன்றக் குறத்தியான வள்ளியின் விழிப் பார்வை ஒப்பாதல் கூடும் என்பதை,

“கொங்கையிருங் குன்றக் குறத்திபெருங் கூர்விழிக்குச்
செங்கைவேல் ஒப்பாதல்”                (26)

மீன்கள் தன் இனத்தைப் பெருக்குவதற்கு சினை விட்டு உருவாக்குவது போல ஆறுமுகத்தான் தன் அருட்பார்வையால் அருட்கருணையால் தன் பக்தர்களுக்கு வீடுபேறு அளிக்கின்றான் என்பதை,

மீனும் சினையை விழித்துமீ னாக்கும்வினை
யேனும் முருகாய இலங்கவே - ஞானகுகன்
ஆறுமுகத்தான் அருள்நீர்க்கண் மீனங்காள்
வீறுபெற நோக்கம்விளை மின். (100)

என்ற ஈற்றுப் பாடலை கவியரசு நடேசக் கவுண்டர் பாடியருளியிருக்கின்றார்.

இதுபோன்ற பல செய்திகள் கந்தனின் பார்வையையையும் அதன் அருளிச் செயல்களையும் ஆசிரியர் சிரவையாதீனப் புலவர் மதுரகவி க.கி. இராமசாமி அவர்கள் எடுத்தியம்பியுள்ளார்.  இந்நூலினை மாதாந்திர அமுதத்தில் மட்டும் காணக்கூடியதாக உள்ளது.  இதனைத் தனிநூலாக வெளியிட்டால் பயன் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக