வியாழன், 13 செப்டம்பர், 2018

கந்தசாமி சுவாமிகளின் நூற்பதிப்புகள்

1907முதல் சிரவையாதீனத்தின் நூல் வெளியீட்டுப் பணி தொடங்கியது.   இதில் தவத்திரு இராமானந்த சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தவத்திரு கந்தசாமி சுவாமிகள், தவத்திரு சுந்தரசுவாமிகள், திருவாமாத்தூர் செ. முருகதாசர் ஐயா, திரு.கு. நடேச கவுண்டர், தவத்திரு மருதாசல சுவாமிகள், புலவர் ப.வெ. நாகராஜன் ஆகியோரின் நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், மலர்கள் அடங்கும்.   இவற்றில் சிரவையாதீனம் வெளியிட்ட தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் நூற்பதிப்புகளை கால வரிசைப்படி இக்கட்டுரை எடுத்தியம்புகிறது (ஒருசில நூல்கள் வேறு பதிப்பாளர்களாலும் வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்தி தக்க இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது).  தவத்திரு கந்தசாமி சுவாமிகளைப் பற்றிய நூல்களும், தவத்திரு கந்தசாமி சுவாமிகள் கருத்தரங்கக் கட்டுரைகள் வெளிவந்த திருவடி, ஆய்வு மஞ்சரி போன்றன இவற்றில் இடம்பெறவில்லை.

1. சற்குரு சரித வண்ணக்கோவை (வண்ணத்திரட்டு)

வண்ணத்திரட்டு எனும் நூலின் பகுதியாக கந்தசாமி சுவாமிகளின் சற்குரு சரித வண்ணக்கோவை இடம்பெற்றுள்ளது.  இதன் இரண்டாம் பதிப்பு 1929 சுக்ல வைகாசியில் வெளியிடப்பட்டுள்ளது.  இராமானந்தரின் வாழ்க்கை வரலாற்றை இரு அறுபத்துநான்கு கலை வண்ணங்களிலும் ஒரு எண்கலை வண்ணத்திலும் பாடப்பட்டுள்ளது.  இந்நூல் 1921ஆம் துன்மதி வைகாசி மாதம் வெளியாகியுள்ளது.

2. இராமானந்த சுவாமிகள் அலங்காரச் சிந்து (சிந்துத்திரட்டு)

சிந்துத் திரட்டில் இடம்பெற்றுள்ள மூன்று நூல்களில் முதலாவதாக தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் இராமானந்த சுவாமிகள் அலங்காரச் சிந்து இடம்பெற்றுள்ளது.  இந்நூல் காப்பு வெண்பா ஒன்றும், விநாயகர் துதி இரண்டும் ஆக மூன்று சிந்துப் பாடல்கள் பாயிரமாகப் பெற்றுள்ளது.  22 சிந்துப் பாடல்களால் ஆன இந்நூல் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துப்பாக்களின் அமைப்பில் அமைக்கப்பெற்றுள்ளது.  இந்நூல் 1926 அட்சய சித்திரையில் வெளியிடப்பட்டுள்ளது.

3. சங்கராசாரிய வைபவம் (பக்தமான்மியத்தின் 24ஆவது பிரிவு)

பக்தமான்மியத்தின் 24ஆவது பகுதியாக ஆதி சங்கரரின் பெருமையைக் கூறும் சங்கராசாரிய கதி அமைந்துள்ளது.  இந்நூல் 750 விருத்தங்களை உடையது.  இச்சங்கராசாரிய கதி தனி நூலாக வெளியிட்டபோது சங்கராசாரிய வைபவம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதில் ஸ்ரீசங்கர பகவத் பாதர் தலைசிறந்த திருமாலடியாராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.  இந்நூல் 1927 பிரபவ ஐப்பசி மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் பதிப்பு 1928இல் வெளியான பக்தமான்மியம் பதிப்பில் இடம்பெற்றுள்ளது.  இந்நூலுக்கு அருமையான உரையொன்றை புலவர் ப.வெ. நாகராசன் அவர்கள் எழுதியுள்ளார்.  இவ்வுரைப் பதிப்புடன் இந்நூல் பத்தமான்மியம் (சங்கராசாரியர் கதி) எனும் பெயரில் 2009இல் வெளிவந்துள்ளது.

4. அவிநாசிப் பிரபந்தத் திரட்டு

அவிநாசிப் பிரபந்தத் திரட்டில் அவிநாசிப்பர் பதிகம், பெருங்கருணாம்பிகை அம்மன் பதிகம், கருணாம்பிகை மாலை, கருணாம்பிகை யமக அந்தாதி, கருணாம்பிகைத் திருப்புகழ்ப் பஞ்சகம், விநாயகர் முருகர் திருப்புகழ்ப் பாக்கள் என ஐந்து சிற்றிலக்கியங்களின் தொகுப்பாகும்.  தேவாரம் பாடல்பெற்ற கொங்கேழ் தலங்களுள் அவிநாசியும் ஒன்று.  கருணாம்பிகை மாலை காப்புடன் நூற்றொரு கட்டளைக் கலித்துறையாலானது.  கருணாம்பிகை யமக அந்தாதி  காப்புடன் முப்பத்தொரு யமகக் கட்டளைக்கலித்துறையாலானது.  இத்திரட்டில் வெளிவந்த கருணாம்பிகை மாலை மட்டும் தனிப் பதிப்பாக 16.4.1975லும், கருணாம்பிகையம்மன் யமக அந்தாதி மட்டும் புலவர் ப.வெ. நாகராஜன் அவர்களின் உரையுடன் 6.12.1988லும் வெளிவந்துள்ளது.  இந்நூல் 1927 பிரபவ கார்த்திகையில் அபிநாசிப் வெளியாகியுள்ளது.  

5. மருதமலைப் பிரபந்தத் திரட்டு

மருதமலைப் பிரபந்தத் திரட்டில் மருதமலை அலங்காரம், யமக அந்தாதி, திருப்புகழ்ப் பதிகம் ஆகிய மூன்று மருதமலைக்குரிய சிற்றிலக்கியங்களும், கணபதி விநாயகர் திருப்புகழ், கணபதி யமக அந்தாதி, கணபதி வேணுகோபாலசாமி திருப்புகழ்ப் பதிகம் ஆகிய மூன்று கணபதி எனும் ஊருக்குரிய சிற்றிலக்கியங்களும், சிரவைக் கௌமார மடாலய முருகனை முன்னிலைப்படுத்துகின்ற வாழாப் பதிகம் என ஒன்றும், பொதுவான வேற்றெய்வ மாலை, மயில் பதிகம் என இரண்டுமாக மொத்தம் ஒன்பது பனுவல்கள் இடம்பெற்றுள்ளன.

மருதமலை அலங்காரம் காப்பு-நூல்-நூற்பயன் என 102 கட்டளைக் கலித்துறையாலானது.  மருதமலை யமக அந்தாதி நூறு யமகக் கட்டளைக் கலித்துறையாலானது. காப்பு, நூற்பயன் என இரு யமகக் கவிகளும் ஒரு  வாழி வெண்பாவும் நூலுக்குப் புறம்பாக இடம்பெற்றுள்ளன.  வேற்றெய்வ மாலை முருகப் பெருமானின் வேலாயுதத்தைப் போற்றும் முப்பது கட்டளைக் கலித்துறையாலானது.  காப்பும், நூற்பயனும் வெண்பாக்களாக அமைந்துள்ளன.  இராமானந்த சுவாமிகளைப் போற்றுவது வாழாப் பதிகம்.  திருவாசகத்தின் வாழாப் பத்தைச் சொல்லாலும் பொருளாலும் வடிவத்தாலும் எதிரொலிப்பது இந்நூல்.  கணபதி யமக அந்தாதி முப்பது கட்டளைக் கலித்துறையாலானது.  

    இந்நூல் 1927 பிரபவ கார்த்திகையில் வெளிவந்துள்ளது.  இத்திரட்டில் உள்ள மருதமலை அலங்காரம் 15.6.1979லும், கணபதி வேணுகோபாலசாமி திருப்புகழ்ப் பதிகம் 23.3.1964லும் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

6. பக்தமான்மியம்

வடமொழியில் சந்திரதத்தர் என்பவர் பக்தமாலா என்னும் பெயரில் சிவனடியார்கள், திருமாலன்பர்கள், தேவதாசர்கள் ஆகிய முத்திறத்தார் பலரையும் போற்றும் ஒரு மாபெரும் காப்பியத்தை யாத்துள்ளார்.  இதில் உள்ள 103 திருமாலடியார்கள் பற்றிய வரலாற்றை 7373 விருத்தங்களால் தமிழில் மொழிபெயர்த்துரைக்கும் அரிய காப்பியமாக பக்தமான்மியம் திகழ்கிறது.  இந்நூல், 1928இல் சென்னை கேசரி அச்சுக்கூடச் சுந்தரம் அய்யர் அவர்களால் முதலில் 7373 பாடல்களும் ஒரே நூலாகவும், அடுத்து அதே ஆண்டு 3394பாடல்கள் ஒரு தொகுதியாகவும், 3979 பாடல்கள் ஒரு தொகுதியாகவும் என வெளியிடப்பட்டுள்ளது.  

7. பக்தமான்மிய சாரம் என்னும் குருதோத்திர மாலை

பக்தமான்மியத்தில் இடம்பெற்றுள்ள 103 பாகவதர்களும் பரம்பொருளின் அம்சம் என்றும், தம் ஞானாசாரியராகிய இராமானந்தரும் அதுவே என்றும், ஒவ்வொருவர் வரலாற்றின் இறுதியிலும் அப்பாகவதரின் வாழ்க்கைச் சுருக்கத்தைக் குறிப்பிட்டு அவரே தம் குருநாதர் எனக் கந்தசாமி சுவாமிகள் இந்நூலை யாத்துள்ளார்.  இந்நூல் 108 பன்னிருசீர் விருத்தங்களைக் கொண்டுள்ளது.  இந்நூல் பாகவதர்களின் வரலாற்றுக் குறிப்பை உட்கொண்டிருப்பதால் பக்தமான்மிய சாரம் என்றும், குருவின் துதியாக அமைந்திருப்பதால் குருதோத்திரமாலை என்றும் பெயரிடப்பட்டுள்ளது.  இந்நூல் 1928இல் வெளியிடப்பட்டுள்ளது.

8. தண்டபாணி மாலை 

இரங்கசாமிக் கவுண்டன் புதூர்த் தோத்திரத் திரட்டு என்னும் நூலில் தண்டபாணி மாலை இடம்பெற்றுள்ளது.  இந்நூல் கந்த புராணத்தின் சுருக்கமாக 37 எழுசீர் விருத்தங்களால் பாடப்பெற்றது. இரங்கசாமியூர்த் தண்டபாணியனே என்பது இம்மாலையின் மகுடம் ஆகும்.  இந்நூல் 1929 சுக்கில சித்திரையில் வெளியாகியுள்ளது.

9. வண்ணத்திரட்டு

வண்ணத்திரட்டில் தண்டபாணி சுவாமிகள் பூர்வ அவதாரக் குறிப்பு வண்ணம், நற்றாயிரங்கல் துறை வண்ணம், சரித்திர சார வண்ணம், சாத்தேய வண்ணம், இராமானந்த சுவாமிகள் சரித்திர சார வண்ணங்கள் மூன்று என மொத்தம் ஏழு வண்ணப்பாக்கள் இடம்பெற்றுள்ளன.  இந்நூல் 1929 சுக்கில வைகாசியில் வெளியிடப்பட்டுள்ளது.  

10. இரத்தினாசலப் பிரபந்தத் திரட்டு

இரத்தினாசலப் பிரபந்தத் திரட்டில் இரத்தினாசல விநாயகர் பதிகம், இரத்தினாசல குமாரக்கடவுள் திருப்புகழ்ப் பதிகம், இரத்தினாசல குருமணிமாலை, இரத்தினாசல சந்நிதி முறையீடு, இரத்தினாசல யமக அந்தாதி ஆகிய ஐந்து பனுவல்கள் இத்திரட்டில் வெளியிடப்பட்டுள்ளன.

இரத்தினாசல குருமணிமாலை ஒர் அரிய தோத்திர நூலாக அமைந்துள்ளது.  காப்பும் நூலுமாக நூற்றொரு எழுசீர் விருத்தங்களும், நூற்பயன்  வெண்பா ஒன்றும் அடங்கியது.  இரத்தினாசல சந்நிதி முறையீடு காப்புச் செய்யுள் 1ம், நூல் 108ம், நூற்பயன் 1ம் ஆக 110 கட்டளைக் கலித்துறைகளால் யாக்கப்பட்டுள்ளது.  இரத்தினாசல யமக அந்தாதி காப்பு 1ம், நூல் 100ம், பயன் 1ம் ஆக 102 கட்டளைக் கலித்துறைகளால் யாக்கப்பட்டுள்ளது.  அடி முதல் மடக்கு என்னும் சொல்லணி அமைந்த யமகக் கவிகளாக இவைகள் அமைந்திருக்கின்றன.  இந்நூல் இதே ஆண்டு தனிப் புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.  இந்நூல் 1929 சுக்கில வைகாசியில் இரத்தினாசலப் பிரபந்தத் திரட்டு வெளியிடப்பட்டுள்ளது.   

11. பக்தி விசேடத் திரட்டு

பக்தி விசேடத் திரட்டு இரண்டு பாகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.  முதல் தொகுப்பில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் ஐந்து நூல்களில் இருந்து 140 செய்யுட்களும், இரண்டாம் தொகுப்பில் கந்தசாமி சுவாமிகளின் மொழிபெயர்ப்பு நூலான பக்தமான்மியத்தில் இருந்து 177 செய்யுட்களும் ஆக 317 செய்யுட்களாக இத்திரட்டு நூல் அமைந்துள்ளது.  இறையன்பின் ஏற்றத்தைப் பல கண்ணோட்டங்களில் இந்நூல் சிறப்பித்துக் கூறுகிறது.  இந்நூல் 1931 பிரசோத்பத்தி ஐப்பசியில் வெளியிடப்பட்டு உள்ளது.  

12. இராமானந்த சுவாமிகள் பிள்ளைத்தமிழ்

கந்தசாமி சுவாமிகள் யாத்த ஆறு பிள்ளைத்தமிழ் நூல்களில் இராமானந்த சுவாமிகள் பிள்ளைத்தமிழே முதல் நூலாகும்.  நூலுக்குப் புறம்பாகப் பாயிரம் மூன்றும், ஈற்றில் நூற்பயன், வாழி, அடியார் துதி என மூன்றும் ஆக ஆறு செய்யுட்கள் இடம்பெற்றுள்ளன.  இந்நூல் முழுக்க சாத்திரக் கருத்துக்கள் நிறைந்த பிள்ளைத்தமிழாக ஆசிரியார் யாத்துள்ளார் எனலாம்.  இந்நூல் 1934 ஸ்ரீமுக மார்கழியில் வெளியிடப்பட்டுள்ளது.  

13. கோயில்பாளையம் என்னும் கௌசைத் தலபுராணம்

இயம தருமனால் வழிபடப் பெற்றதாகக் கருதப்படும் தலமாக கோயம்புத்தூரில் இருந்து சந்தியமங்கலம் செல்லும் பெருவழியில் கோயில்பாளையம் விளங்குகிறது.  இத்தலத்தின் மீது கந்தசாமி சுவாமிகள் கௌசைத் தலபுராணம் யாத்துள்ளார்.  இந்நூல் பாயிரத்தோடு 6 படலங்கள் 193 விருத்தங்களாலானது.  செய்யுள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் தலபுராண இலக்கியத்தின் கூறுகள் எல்லாவற்றையும் இந்நூல் பெற்றுத் திகழ்கிறது.  இந்நூல் 1936 தாது வருடம் ஐப்பசி மாதம் வெளியிடப்பட்டுள்ளது.  

கோயில்பாளையம் தொடர்பாக கந்தசாமி சுவாமிகள் யாத்த காலகாலேச்சுரர் பதிகம், நடராசர் பதிகம், கருணாகர வல்லி மாலை, கற்பக விநாயகர் பதிகம், சண்முக மூர்த்தி திருப்புகழ்ப் பதிகம், கரிவரதராஜப் பெருமாள் பதிகம், கௌசைக் காளியம்மன் பதிகம் என ஏழு இலக்கியங்கள் இத்தலபுராணத்தோடு சேர்த்து பதிப்பிக்கப்பட்டுள்ளது.  இச்சேர்க்கைப் பிரபந்தங்களுள் கருணாகரவல்லி மாலை குறிப்பிடத்தக்க ஒரு நூலாகும்.  இந்நூல் காப்பு 1ம், நூல் 100ம், போற்றி 1ம், வாழி 1ம் ஆக 103 கட்டளைக் கலித்துறையாலானது.  திருக்கடையூருக்கு அபிராமி அந்தாதி என்றால் கோவில்பாளையத்திற்கு கருணாகரவல்லி மாலை எனலாம்.

கோயில்பாளையம் என்னும் கௌசைத் தலபுராணம் இரண்டாவது பதிப்பாகவும் பெரும்புலவர் ப.வெ. நாகராசன் அவர்களின் உரையுடன் 2005ஆம் ஆண்டு தனி நூலாக மூலமும் உரையும் கொண்ட முதல் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது.

14. வெள்ளக்கிணறு இராமானந்தாஸ்ரமத் தோத்திரத் திரட்டு

காளியப்பக் கவுண்டர் அவர்களால் வெள்ளக்கிணறு எனும் ஊரில் இராமானந்த ஆசிரமம் உருவாக்கப்பட்டது.  அந்த ஆசிரமம் தொடர்பாக கந்தசாமி சுவாமிகள் சுப்பிரமணியக் கடவுள் பதிகம், வேற்கடவுள் மாலை, திருப்புகழ்த் திருவாறு (ஷட்கம்), திருமுருகக் கடவுள் வடிவேல் வகுப்பு ஆகிய தோத்திர நூல்களைப் பாடியுள்ளார்.  இத்தோத்திர நூல்கள் வெள்ளக்கிணறு இராமானந்தாஸ்ரமத் தோத்திரத் திரட்டு எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.  இந்நூல் 1937 தாது வருடம் தை மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

வேற்கடவுள் மாலை காப்பு வெண்பா 1ம், நூற்பயன் விருத்தம் 1ம், நூல் 36 எண்சீர் ஆசிரிய விருத்தங்களால் ஆகியது.  இந்த மாலை இலக்கியத்தில் எந்தத் தலத்தைப் பற்றிய குறிப்பும் இல்லாததால் இதனைப் பொது இலக்கியமாகக் கொள்ளலாம்.  என்றாலும், நூற் பயனில் முருகானந்த சுவாமிகளின் (வெள்ளக்கிணறு காளியப்பக் கவுண்டரின் தீட்சா நாமம்) மனத்தகத்தும் புறத்தும் வேலாயுதம் விளங்கிக் கொண்டுள்ளது என்னும் குறிப்பால் இந்நூல் இத்தலத்து நூலாகக் கருதப்படுகிறது.  வண்ணப்பா வகைகளில் வகுப்பும் ஒன்று.  திருமுருகக் கடவுள் வடிவேல் வகுப்பு எனும் நூல் பதினாறு கலைகளால் வேலாயுதத்தின் பெருமையை வகுத்துக் கூறுகிறது.

15. அன்னியூர்த் தலபுராணமும் தோத்திரப் பதிகங்களும்

கோவை-சத்தியமங்கலம் பெருவழியில் அன்னூர் உள்ளது.  இத்தலம் பற்றி பாயிரம் உட்படப் பத்துப் படலங்களையும் 400 விருத்தங்களையும் கொண்டதாக அன்னியூர்த் தலபுராணம் அமைந்துள்ளது. இந்நூலுள் இடம்பெற்றிருக்கும் நகரப் படத்தில் மடக்குகள் பலவும் திரிபங்கி ஒன்றுமாகச் சித்திரக்கவிகள் இடம்பெற்றுள்ளன.  இந்த மடக்குகள் அனைத்திற்கும் நூலாசிரியராக கந்தசாமி சுவாமிகளே உரை கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலபுராணத்துடன் இத்தலம் தொடர்பாக கந்தசாமி சுவாமிகள் யாத்துள்ள ஐந்து பதிகங்களும், ஐந்து  திருப்புகழ்ப் பாக்களும், அன்னியூர்த் தலபுராண வசனமும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.  இந்நூல் 1937 ஈஸ்வர வருடம் வைகாசி மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

16. கணபதிப் புத்தூர் விநாயகர் தோத்திரப் பிரபந்தங்கள்

கோவை கணபதி எனும் பதியில் பிரசன்ன விநாயகர் கோவிலைப் பற்றிய பதிகமும் மாலையும் கந்தசாமி சுவாமிகளால் யாக்கப்பட்டுள்ளது.  பிரசன்ன விநாயகர் மாலை 36 எண்சீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனது.  காப்பு வெண்பா, நூற்பயன் விருத்தம் எனத் தனியாக அமைந்துள்ளன.  இந்நூல் 1937 ஈஸ்வர வருடம் ஆனி மாதம் வெளியிடப்பட்டுள்ளது.  இதன் இரண்டாம் பதிப்பாக 1964இல் கணபதி வேணுகோபாலசாமி திருக்கோயில் கும்பாபிஷேக நினைவு மலரில் வெளிவந்துள்ளது.

17. வெள்ளியங்கிரித் தோத்திரப் பிரபந்தம்

ஏழு மலைகளின் உச்சியில் இயற்கையாக அமைந்த குகையில் சிவபெருமான் தான்தோன்றியாக எழுந்தருளியுள்ள சிவத்தலமே வெள்ளியங்கிரி.  இத்தலத்தைப் பற்றிக் கந்தசாமி சுவாமிகள் விநாயகர் பதிகம், வெள்ளிக்கிரியான் பதிகம், சத்திநாயக மாலை, பஞ்சகிரித் திருப்புகழ் என்னும் நான்கு நூல்களை யாத்துள்ளார்.  சத்திநாயக மாலை 101 எழுசீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனது.  காப்பு வெண்பா ஒன்று தனியாக உள்ளது.  இந்நூல் 1938 வெகுதானிய வருடம் வைகாசி மாதம் வெளிவந்துள்ளது.

இப்பிரபந்தங்களோடு கந்தசாமி சுவாமிகளின் வெள்ளி வெற்புச் சிலேடை வெண்பா எனும் நூலையும் இணைத்து புலவர் ப.வெ. நாகராசன் அவர்களின் குறிப்புரையுடன்  அருட்செல்வர் உயர்திரு நா. மகாலிங்கம் அவர்கள் கோவை இராமானந்த அடிகளால் பவுண்டேஷன் என்னும் தம் அறக்கட்டளையின் வழியாக 1998இல் வெளியிடப்பட்டுள்ளது.   

18. பேரூர்ச் சாந்தலிங்க சுவாமிகள் பிள்ளைத்தமிழ்

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் தங்கையின் கணவரும் ஆகிய திருப்பேரூர்ச் சாந்தலிங்க சுவாமிகள் மேல் கந்தசாமி சுவாமிகளால் பாடப்பட்டது பேரூர்ச் சாந்தலிங்க சுவாமிகள் பிள்ளைத்தமிழ் எனும்  ஆண்பாற் பிள்ளைத்தமிழ் ஆகும்.  இந்நூல் பிள்ளைத்தமிழுக்குரிய கூறுகளை முழுமையாகப் பெற்றிருப்பதோடு சாத்திரக் கருத்துக்கள் மிகுந்து சொற்செறிவோடு அமைந்துள்ள இந்நூல் 1940இல் வெளியிடப்பட்டுள்ளது.

19. பேரூர்ப் பச்சைநாயகி பிள்ளைத்தமிழ் 

தேவார வைப்புத் தலமாகிய பேரூர் கந்தசாமி சுவாமிகளுக்கு முதன்மையான அபிமானத் தலமாக விளங்குகிறது.  இவர் இத்தலத்தைப் பற்றி மட்டும் 14 பிரபந்தங்கள் பாடியுள்ளார்.  இவர் ஒரு தலத்திற்கு அதிக பிரபந்தங்கள் பாடிய ஒரே தலம் இது மட்டுமே.  இத்தலத்து இறைவி பச்சைநாயகி மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்.  இவர் பாடிய பெண்பாற் பிள்ளைத்தமிழ் இது மட்டும் தான்.  இந்நூல் 1940 பிரமாதி வருடம் மாசி மகத்தில் வெளிவந்துள்ளது.  இதன் இரண்டாம் பதிப்பு 1974இல் சிரவை தவத்திரு தம்பி சுவாமிகள் என வழங்கப்பட்ட தவத்திரு மருதாசலசாமி அவர்களின் அரும்பதக் குறிப்புகளுடன் வெளிவந்துள்ளது.  அரும்பதவுரையும், விளக்கமும், இலக்கணக் குறிப்பும் கொண்டு சந்தி பிரித்த மூன்றாவது பதிப்பாக பெரும்புலவர் ப.வெ. நாகராசன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 2014ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

20. பேரூர்ப் பச்சைநாயகியம்மன் மாலை

பேரூர்ப் பச்சைநாயகி அம்மன் மீது 101 கட்டளைக் கலித்துறையால் யாக்கப்பெற்றது இந்நூல்.  காப்பு, வாழ்த்து என மேலும் இரு கட்டளைக் கலித்துறைகள் நூலுக்குப் புறம்பாக அமைந்துள்ளன.  இந்நூல் 1940 பிரமாதி வருடம் மாசி மகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

21. கணபதி அத்தனூரம்மை மாலை

கோவை, கணபதி என்னும் பகுதியில் பால வேளாளர்க்கு முதல் உரிமை உடைய அத்தனூரம்மன் கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் மீது 34 எழுசீர் ஆசிரிய விருத்தங்களால் கந்தசாமி சுவாமிகளால் பாடப்பட்டதே கணபதி அத்தனூரம்மை மாலை.  இதே பெயரில் வி.நா. மருதாசலக் கவுண்டர் அவர்களும் 33 கட்டளைக் கலித்துறையால் பாடியுள்ளார்.  இவ்விரு நூல்களும் ஒரே தொகுப்பாக 1941 விக்கிரம வருடம் தை மாதம் வெளியிடப்பட்டுள்ளது.  

1964ஆம் ஆண்டு வெளிவந்த கணபதி வேணுகோபாலசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக நினைவு மலரில் கந்தசாமி சுவாமிகள் யாத்த கணபதி அத்தனூரம்மை மாலை மட்டும் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.

22. திருப்பேரூர்த் தோத்திரப் பிரபந்தத் திரட்டு

கந்தசாமி சுவாமிகளால் திருப்பேரூர் பற்றி யாக்கப்பெற்ற ஏழு பதிகங்களோடு பட்டிநாயக மாலை என்னும் சிறப்புமிக்க பிரபந்தமும் கொண்டதே திருப்பேரூர்த் தோத்திரப் பிரபந்தத் திரட்டாகும்.  இந்நூல் காப்பு 1ம், நூல் 111ம், பின்னுரை 1ம் என 113 எழுசீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனது.  செய்யுளின் முற்பகுதி வேண்டுகோளாகவும், பிற்பகுதி தலபுராண வரலாற்றுச் சுருக்கமாகவும் இந்நூல் அமைந்துள்ளது.  இந்நூல் 1941 விக்கிரம வருடம் பங்குனி மாதம் வெளிவந்துள்ளது. 

23. குருந்தமலைப் பிரபந்தத் திரட்டு

  கொங்கு நாட்டில் புகழ்மிக்க குன்றுதோறாடல் தலங்களுள் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுவது குருந்தமலை.  கோவை-மேட்டுப்பாளையம் பெருவழியில் காரமடை தலத்திற்கு அருகே குருந்தமலை எனும் குன்றுத் தலம் உள்ளது.  இக்குன்றின் மீது குமரப்பெருமான் குழந்தை வேலாயுதன் வடிவாக எழுந்தருளியுள்ளார்.  இவர் மீது கந்தசாமி சுவாமிகள் அதிக ஈடுபாடு கொண்டு குருந்தாசலப் பதிற்றுப்பத்தந்தாதி, திருப்புகழ்ப் பதிகம் என்னும் இரண்டு பனுவல்களைப் பாடியுள்ளார்.  பாட்டியல் மரபுப்படி பத்துப்பாடல்கள் ஒரு யாப்பாகப் பத்து யாப்புகள் கொண்ட நூறு பாடல்கள் மண்டலித்த அந்தாதியாக அமைந்தது இந்நூல்.  இவ்விரு நூல்களும் குருந்தமலைப் பிரபந்தத் திரட்டாக 1942 விஷு வருடம் தை மாதம் வெளிவந்துள்ளது.

24. உடையாம்பாளையம் பிரபந்தத் திரட்டு

கோவை, சின்னவேடம்பட்டிக்கு மேற்கில் உள்ள உடையாம்பாளையத்தில் வீற்றிருக்கும் தெய்வங்களைப் பற்றி கந்தசாமி சுவாமிகள் பாடிய விநாயகர் பதிகம், வரதராஜப் பெருமாள் பஞ்சகம், மாரியம்மை மாலை, வஞ்சியம்மன் பஞ்சகம் ஆகியவை உடையாம்பாளையம் பிரபந்தத் திரட்டில் இடம்பெற்றுள்ளன.  மாரியம்மை மாலை காப்பு வெண்பா 1ம், நூல் 30 எழுசீர் ஆசிரிய விருத்தங்களும், நூற்பயன் 1 எழுசீர் ஆசிரிய விருத்தமும் ஆக 32 செய்யுட்களால் ஆனது.  இந்நூல் 1943 சுபானு வருடம் சித்திரை மாதம் வெளிவந்துள்ளது.  மாரியம்மன் மாலை மட்டும் இதன் இரண்டாம் பதிப்பாக 1992ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

25. காரைமடை இரங்கநாத மாலை

கோவை-மேட்டுப்பாளையம் பெருவழிச்சாலையில் காரைமடை உள்ளது.  இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இரங்கநாதப் பெருமான் மீது பாடப்பட்டதே காரைமடை இரங்கநாத மாலை.  இந்நூல் 101 எழுசீர் ஆசிரிய விருத்தங்களாலானது.  இந்நூல் 1944ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

26. இட்டசித்தி விநாயக மாலை

கச்சியப்ப முனிவரால் 3047 விருத்தங்களால் இயற்றப்பெற்ற விநாயபுராணத்தின் சுருக்கமாக கந்தசாமி சுவாமிகளால் சிற்றிலக்கிய வடிவில் பாடப்பெற்றதே இட்டசித்தி விநாயக மாலை ஆகும்.  இந்நூல் 106 எழுசீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனது.  இப்பதிப்பில் இந்த மாலையை அடுத்து விநாயகர் திருப்புகழ் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

27. முதலிபாளையம் திருவருள் விநாயக மாலை

கோவை-சத்தியமங்கலம் பெருவழியில் அமைந்துள்ளது முதலிபாளையம்.  இத்தலத்தில் உள்ள இராமானந்தாஸ்சிரமத்தில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமானே திருவருள் விநாயகர் ஆவார்.  இவர் மீது கந்தசாமி சுவாமிகள் முதலிபாளையம் திருவருள் விநாயக மாலையைப் பாடியுள்ளார்.  காப்பு வெண்பா 1ம், நூல் 31 எண்சீர் விருத்தங்கள், நூற்பயன் 1 எண்சீர் விருத்தம் என 33 செய்யுட்களால் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.  இம்மாலையை அடுத்துத் திருப்புகழ் ஒன்றும் வாழி விருத்தம் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.  இந்நூல் 1944 தாரண வருடம் ஆவணி மாதம் வெளியிடப்பட்டுள்ளது.  தெய்வத்திரு சி. வேலுசாமிக் கவுண்டர் அவர்கள் நினைவு வெளியீடாக 2004ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் திருப்பேரூர் சாந்தலிங்கர் அருள்நெறி மன்றம் இந்நூலினை வெளியிட்டுள்ளது.

28. குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி மாலை

குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி மாலை எனும் நூல் 101 எழுசீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனது.  காப்பும் கம்பீர விநாயகர் துதியும் தனியாக இந்நூலுள் அமைந்துள்ளன. இந்நூல் 1947 விய வருடம் தை மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

29. குன்னத்தூர்ப் புதூர்த் தோத்திரத் திரட்டு

குன்னத்தூர்ப் புதூர் தலத்தைப் பற்றிய மூன்று பதிகங்களும், 27 பக்கங்களில் அமைந்த இகபரசாதன விளக்கம் எனும் உரைநடை நூலும் இதனுள் இடம்பெற்றுள்ளன.  இந்நூல் 1947 சர்வசித்து வருடம் ஆனி மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

30. குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி பிள்ளைத்தமிழ்

குருந்தமைலை வீற்றிருக்கும் குழந்தை வேலாயுத சுவாமி மீது பாடப்பட்டதே இப்பிள்ளைத்தமிழ்.  கந்தசாமி சுவாமிகள் இறுதிக் காலத்தில் இறுதியாகப் பாடப்பட்டதே இப்பிள்ளைத்தமிழ்.  இந்நூல் சுவாமிகள் 1948இல் இறைவன் திருவடிகளை அடைந்த பிறகு 1949ஆம் ஆண்டு சனவரி மாதம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.  இதன் இரண்டாம் பதிப்பு திருப்பணிக்குழு வெளியீடாக (தனியார் பதிப்பு) 1970லும், மூன்றாம் பதிப்பு தவத்திரு மருதாசல சுவாமிகள் பொழிப்புரையுடன் 1996லும் வெளியிடப்பட்டுள்ளது.

31. குணியமுத்தூர்க் குமரகுருபரக் கடவுள் மாலை

கோவைக்குத் தெற்கில் அமைந்துள்ள குணியமுத்தூர் எனும் தலத்தில் வீற்றிருக்கும் குமரகுருபரக் கடவுள் மீது பாடப்பட்டதே இம்மாலை இலக்கியம்.  30 எண்சீர் ஆசிரிய விருந்தங்களால் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.  காப்பும் நூற்பயனும் தனியாக உள்ளன.  இந்நூல் 1949 விரோதி வருடம் ஆனி மாதம் வெளிவந்துள்ளது.

32. உதகமண்டலம் ஸ்ரீநிவாச மாலை

உதகமண்டலம் பழைய அக்கிரகாரத்தில் தாச பளஞ்சிக வைசியப் பெருமக்களால் கட்டப்பெற்றுள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சீனிவாசப் பெருமாள் மீது பாடப்பட்டதாக உதகமண்டலம் ஸ்ரீநிவாச மாலை அமைந்துள்ளது.  இந்நூல் 30 எண்சீர் விருத்தங்களாலானது.  காப்பு வெண்பாவும் நூற்பயன் விருத்தமும் தனியாக உள்ளன.  இந்நூல் 1950ஆம் ஆண்டு சனவரி மாதம் வெளிவந்துள்ளது.

33. திருத்துடிசைப் பிரபந்தத் திரட்டு

கோவை-மேட்டுப்பாளையம் பெருவழிச்சாலையில் துடியலூர் எனும் தலம் உள்ளது.  இத்தலத்தில் வீற்றிருக்கும் சுவாமி வீருந்தீசர், அம்மன் விசுவநாயகி, விநாயகர், முருகப்பெருமான் ஆகியோரைப் போற்றும் நான்கு பதிகங்களும் ஐந்து திருப்புகழ்ப் பாக்களும் கொண்டதாக திருத்துடிசைப் பிரபந்தத் திரட்டு அமைந்துள்ளது.  துடியலூர்த் தலபுராணத்தின் சுருக்கமாக விருந்தீசர் பதிகம் அமைந்துள்ளது.  இந்நூல் 1952 நந்தன வருடம் கார்த்திகை மாதம் வெளிவந்துள்ளது.

34. சிரவைத் தண்டபாணிக் கடவுள் பிள்ளைத்தமிழ்

சிரவை கௌமார மடாலயத்தில் எழுந்தருளியுள்ள தண்டபாணிக் கடவுள் மீது பாடப்பட்ட ஆண்பாற் பிள்ளைத்தமிழ் சிரவைத் தண்டபாணிக் கடவுள் பிள்ளைத்தமிழ் ஆகும்.  இந்நூல் 1953ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  இதன் இரண்டாம் பதிப்பு 1978இல் வெளிவந்துள்ளது.  2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்நூலின் மூன்றாம் பதிப்பு வெளிவந்துள்ளது.  இம்மூன்றாம் பதிப்பில் தேவையான அளவு உரையும், இன்றியமையாத கதைக்குறிப்புககளும் இலக்கணக் குறிப்புகளும் கொண்டு எளிமையாக படிப்போர் படிக்கும் விதத்தில் சந்தி பிரித்து பெரும்புலவர் ப.வெ. நாகராசன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ளது.

35. சிரவை யமக அந்தாதி மூலமும் உரையும்

கௌமார மடாலயத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானைப் போற்றும் 100 யமகக் கட்டளைக் கலித்துறையாலான இந்நூலில் நூலாசிரியர் கந்தசாமி சுவாமிகளாலேயே எழுதப்பட்ட பதவுரையுடன் முதல் 50 பாடல்கள் மட்டும் 1959ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளிவந்துள்ளது.  இதன் இரண்டாம் பதிப்பு நூல் முழுவதுமாக 1985இல் வெளியிடப்பட்டுள்ளது.

36. திருப்பழனியாண்டவர் திருப்பள்ளியெழுச்சி

பழனியாண்டவரைப் போற்றும் இந்நூல் திருப்பள்ளியெழுச்சி மரபு மாறாமல் 12 எண்சீர் ஆசிரியர் விருத்தத்தாலானது.  இதனையடுத்து மூன்று பதிகங்கள் இடம்பெற்றுள்ளன.  இந்நூல் 1959ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்துள்ளது.

37.  சிவகிரித் தண்டபாணி மாலை

திருப்பழனியாண்டவர் திருப்பள்ளியெழுச்சி வெளியான நூலின் இறுதியில் சிவகிரித் தண்டபாணி மாலை அமைந்துள்ளது.  காப்பு 1, நூல் 102 என 103 எழுசீர் ஆசிரிய விருத்தத்தால் இந்நூல் பாடப்பட்டுள்ளது.  இந்நூலில் ஆங்காங்கே அரும்பத உரை தரப்பட்டுள்ளது.  இந்நூல் 1959ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்துள்ளது.

38. காளப்பட்டி மாரியம்மன் தோத்திரத் திரட்டு

கோவை, சிரவணம்பட்டி மேற்கே காளப்பட்டி உள்ளது.  இவ்வூரில் வீற்றிருக்கும் மாரியம்மன் கோயில் மிகப் பிரசித்தி பெற்றது.  இம்மாரியம்மனின் தோத்திரங்களாக அமைந்த பஞ்சகம், மாலை, திருப்புகழ்ப் பாக்கள் ஆகியன இத்திரட்டில் இடம்பெற்றுள்ளன.  காப்பு வெண்பா 1ம், நூல் 30 எழுசீர் ஆசிரிய விருத்தம், நூற்பயன் 1 எழுசீர் ஆசிரிய விருத்தம் என 32 செய்யுட்களால் மாரியம்மன் மாலை அமைந்துள்ளது.  இத்திரட்டு 1962ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளிவந்துள்ளது.

39. திருப்பேரூர்க் கோவை

திருப்பேரூர்க்கோவை எனும் நூல் கந்தசாமி சுவாமிகள் இயற்றிய ஒரேவொரு ஐந்திணைக் கோவை ஆகும்.  அகப்பொருட்கோவை இலக்கிய மரபிற்கேற்ப 477 கட்டளைக்கலித்துறையால் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.  திருப்பேரூர் பட்டிப் பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டுள்ள இந்தக் கோவையில் சில புதிய துறைகளும், சில துறைகளுக்கு ஒன்றற்கு மேற்பட்ட காரிகைகளும் காணப்படுகின்றன.  இந்நூல் 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்துள்ளது.

40. திருப்பேரூர்க் கலம்பகம் மூலமும் உரையும்

கந்தசாமி சுவாமிகளால் இயற்றப்பெற்ற ஒரே கலம்பகம் திருப்பேரூர்க் கலம்பகம் மட்டுமே.  ஐம்பதுக்கும் மேற்பட்ட யாப்பு வகைகளையும் இருபத்து மூன்று கலம்பக உறுப்புகளையும் இச்சிற்றிலக்கியம் பெற்றுள்ளது.  இந்நூலுக்கு புலவர் ப.வெ. நாகராசன் அவர்கள் சிறந்த உரையை எழுதியுள்ளார்.  இந்நூலின் மூலமும் உரையும் கொண்ட பதிப்பு 1978ஆம் ஆண்டு சனவரி மாதம் வெளிவந்துள்ளது.

41. வெள்ளக்கிணறு பத்திரகாளியம்மன் மாலை

கொங்கு வேளாளர்களில் ஆதி கூட்டத்தாரின் குல தெய்வமான பத்திரகாளியம்மன் வெள்ளக்கிணறு எனும் தலத்தில் வீற்றிருக்கிறார்.  இவ்வம்மனைப் பற்றி சுவாமிகள் மாலை பாடியுள்ளார்.  இந்நூல் காப்பு வெண்பா ஒன்றும், நூல் 30 எழுசீர் ஆசிரிய விருத்தங்களும் ஆக 31 செய்யுள்களால் ஆனது.  இந்நூல் இக்கோயில் திருக்குட நீராட்டுப் பெருவிழாவை ஒட்டி 5.3.1980இல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்நூலுடன் விநாயகர் பதிகங்கள் இரண்டு இடம்பெற்றுள்ளன.

42. அவிநாசிக் கருணாம்பிகையம்மன் யமக அந்தாதி மூலமும் உரையும்

யமக அந்தாதியின் 30 கட்டளைக் கலித்துறைகளும் ககர மோனை பெற்று அமைந்துள்ளது அவிநாசிக் கருணாம்பிகையம்மன் யமக அந்தாதி ஆகும்.  இந்நூலுக்குப் புலவர் ப.வெ. நாகராசன் அவர்கள் உரை வரைந்திருக்கின்றார்.  இந்நூல் 1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்துள்ளது.

43. ஈச்சநாரி விநாயகர் பதிற்றுப்பத்தந்தாதி

கோவை-பொள்ளாச்சிப் பெருவழிச் சாலையில் உள்ள ஒரு விநாயகத்தலம். இத்தலத்து விநாயகர் மீது பாடப்பட்டதே ஈச்சநாரி விநாயகர் பதிற்றுப்பத்தந்தாதி ஆகும். இந்நூல் கட்டளைக் கலித்துறையாலான காப்பு 1ம், பல்வகையான விருத்தங்கள் நூறும் ஆக 101 செய்யுட்களால் ஆனது.  இந்தப் பதிற்றுப்பத்தந்தாதிக்குக் செம்மையான மூலப்படி எழுதி வைக்கப்பெற்றிருக்கவில்லை.  பழைய குறிப்பேடுகள், தனித்தாள்கள் ஆகியவற்றிலிருந்து சுவடிக் கலைஞர் திரு.ஆர். கிருஷ்ணன் அவர்கள் அரிதின் முயன்று தேடிக் கண்டுபிடித்துள்ளார் என்று ப.வெ. நாகராசன் அவர்கள் தம்முடைய சிரவையாதீனப் பதிப்புகள் எனும் நூலின் 76ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  இந்நூல் 1992ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்துள்ளது.

44. காரைமடைத் தலபுராணம் (தலப் புரபந்தங்களுடன்)

தவத்திரு கந்தசாமி சுவாமிகள் மூன்று தல புராணங்களை இயற்றியுள்ளார்.  அவற்றில் ஒன்றே காரைமடைத் தலபுராணம் ஆகும்.  மற்ற இரு தலபுராணங்களான அன்னியூர்த் தலபுராணம், கோயில்பாளையம் என்னும் கௌசைத் தலபுராணம் ஆகிய இரண்டு தலபுராணங்களைக் காட்டிலும் இத்தலபுராணம் அளவில் பெரியது.  இந்நூல் பாயிரத்தை உள்ளிட்ட 11 பாடலங்களையும் 438 விருத்தங்களையும் கொண்டுள்ளது.  தலபுராணங்களைக் காப்பிய அமைப்பில் இயற்றும் மரபிற்கேற்ப இக்காரைமடைத் தலபுராணம் நாட்டுப்படலம், நகரப்படலம், புராண வரலாற்றுப் படலம், பிரமதேவர் பூசித்த படலம், சித்திரன் பூசித்தபடலம், பிரகற்பதி வழிபடு படலம், குபேரன் பூசித்த படலம், கருடாழ்வார் பூசித்த படலம், இயமன் வழிபடு படலம், தொட்டியன் பூசித்த படலம் ஆகிய 11 படலங்களைக் கொண்டிலங்குகிறது.  இந்நூல் பெரும்புலவர் ப.வெ. நாகராசன் அவர்களின் உரையுடன் 2005ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  இந்நூலின் பின்னிணைப்பாக காரைமடைப் பிரபந்தத் திரட்டு வெளியிடப்பட்டுள்ளது.  இதில் ஸ்ரீரங்கநாத மாலை, சூடிக்கொடுத்த நாச்சியார் பதிகம், அரங்கநாதன் திருப்புகழ், அரங்கநாதன் அடைக்கலப் பதிகம், குருஇருடிமலைப் பொன்னூற்றம்மை பதிகம், பொன்னூற்றம்மைத் திருப்புகழ் போன்ற ஆறு பிரபந்தங்களில் இறுதி மூன்று பிரபந்தங்கள் பெரும்புலவர் ப.வெ.நாகராசன் அவர்களின் உரையுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

45. அன்னையர் அருட்பதிகங்கள்

பதிகம் என்பது இறைவனை வாழ்த்தும் பத்துப் பாடல்களைக் கொண்டது என்பர்.  இதற்குக் கடவுள் வாழ்த்தோ நூற்பயனோ கூறுவது பழந்தமிழ் மரபில் இல்லை.  ஆனால் தவத்திரு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும், தவத்திரு கந்தசாமி சுவாமிகளும் பதிகத்திற்கும் கடவுள் வாழ்த்து ஒன்றைப் பெரும்பாலும் நேரிசை வெண்பாவாகத் தருகின்றார்.  அதுபோல் நூற்பயனும் பதிகத்தின் இறுதியில் தருகின்றார்.  இதனால் பதிகத்தின் பாடல் எண்ணிக்கை 12, 13, 14 என விரிவடைகிறது.  

   இந்நிலையில், தவத்திரு கந்தசாமி சுவாமிகள் கோவையிலும் கோவையைச் சுற்றிலும் உள்ள பல்வேறு தலங்களில் எழுந்தருளியுள்ள தேவியர்களைப் போற்றிப் பாடப்பெற்ற அவிநாசிப் பெருங்கருணாம்பிகையம்மை பதிகம், பேரூர் அகிலாண்ட நாயகி பதிகம், கோயில்பாளையம் கருணாகரவல்லி பதிகம், துடியலூர் விசுவநாயகி பதிகம், அன்னியூர் தபோதகசௌந்தரி பதிகம், திருப்பூர் விசாலாட்சி பதிகம், கீரநத்தம் மாரியம்மன் பதிகம், கொண்டையன்பாளையம் மாரியம்மன் பதிகம், சிரவணம்பட்டி மாரியம்மன் பதிகம், பூளைமேடு மாரியம்மன் பதிகம், கோயில்பாளையம் காளியம்மன் பதிகம், குன்னத்தூர் புதூர் மாகாளியம்மன் பதிகம், தேவராயபுரம் மாகாளியம்மன் பதிகம், பூளைமேடு மாகாளியம்மன் பதிகம், சிவரணம்பட்டிப் பத்திரகாளியம்மன் பதிகம், வெள்ளானைப்பட்டிக் கரியகாளியம்மன் பதிகம், கோயில்பாளையம் கவையகாளியம்மன் தேர்உலாக் காட்சிப் பதிகம், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் பதிகம், கௌரிபாளையம் இராமகிருஷ்ணபுரம் இரேணுகையம்மன் பதிகம், குருஇருடிமலைப் பொன்னூற்றம்மை பதிகம், சிரவணம்பட்டி வீரமாச்சியம்மன் பதிகம், வெள்ளானைப்பட்டித் தேவநாயகி பதிகம், உடையான்பாளையம் வஞ்சியம்மன் பஞ்சகம், கணபதி காமாட்சியம்மன் பஞ்சகம், சின்னவேடன்பட்டி மங்கையம்மன் வாயுறை வாழ்த்து, மகாலக்குமி பதிகம், காரைமடை சூடிக்கொடுத்த நாச்சியார் பதிகம், கலைமகள் துதி போன்ற 28 பனுவல்கள் அன்னையர் அருட்பதிகங்கள் என்னும் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன.    

      இதைத் தவிரச் கந்தசாமி சுவாமிகள் பெரும்பாலான பதிகங்களை அடுத்து ஒரு தனித் திருப்புகழைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.  இம்முறையில் இத்தொகுப்பில் 12 திருப்புகழ்ப் பாக்களும் இடம்பெற்றுள்ளன.  இந்நூல் பெரும்புலவர் ப.வெ. நாகராசன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்துள்ளது.

46. தவத்திரு கந்தசாமி சுவாமிகள் பனுவல் திரட்டு தொகுதி -1

தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் புகழ்மிக்க 32 பனுவல்களின் திரட்டாக இந்நூல் அமைந்துள்ளது.  இந்நூலுள், விநாயக புராணசாரம் ஆகிய இட்டசித்தி விநாயக மாலை, கணபதிப்புத்தூர் பிரசன்ன விநாயக மாலை, முதலிபாளையம் திருவருள் விநாயக மாலை, பேரூர்த் தலபுராண சாரம் ஆகிய பேரூர்ப் பட்டிநாயக மாலை, வெள்ளியங்கிரி என வழங்கப்படும் தென்கயிலைச் சத்திநாயக மாலை, அவிநாசிக் கருணாம்பிகை மாலை, கோவில்பாளையம் என வழங்கும் கௌசைக் கருணாகரவல்லி மாலை, பேரூர்ப் பச்சைநாயகி மாலை, சின்னவேடம்பட்டி மஜரா உடையான்பாளையம் மாரியம்மன் மாலை, கணபதி அத்தனூரம்மை மாலை, காளப்பட்டிட மாரியம்மன் மாலை, குறும்பபாளையம் செல்வநாயகியம்மன் மாலை, பத்திரகாளியம்மன் மாலை, உதகமண்டலம் சீநிவாசப் பெருமாள் மாலை, காரைமடை இரங்கநாத மாலை, மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் மாலை, பழனிச் சிவகிரித் தண்டபாணியன் மாலை, குருந்தமலைக் குழந்தை வேலாயுதசாமி மாலை, சரவணம்பட்டிக் கரடு என வழங்கப்படும் இரத்தினகிரிக் குருமணி மாலை, கீரணம் என வழங்கும் கீரநத்தம் தண்டபாணி மாடில, கந்தபுராண சாரம் ஆகிய இரங்கசாமிக் கவுண்டன் புதூர் தண்டபாணி மாலை, குணியமுத்தூர்க் குமரகுருபரன் மாலை, சிவணபுரம் கௌமார மடாலயம் குமரகுருபரக் கடவுள் மாலை, உடையாம்பாளையம் தண்டபாணி அருட்குரு மாலை, சவுரிபாளையம் சுப்பிரமணிய மாலை, வேற்கடவுள் மாலை, வேற்றெய்வ மாலை, மருதமலை அலங்காரம், சரவணம்பட்டிக் கரடு என வழங்கும் இரத்தினாசலச் சந்நிதி முறையீடு, ஈச்சநாரி விநாயகர் பதிற்றுப்பத்தந்தாதி, குருந்தமலைப் பதிற்றுப்பத்தந்தாதி, பக்தமான்மிய சாரம் என்னும் குருதோத்திரமாலை ஆகிய 32 நூல்கள் இடம்பெற்றுள்ளன.  இந்நூலுக்குக் பதவுரையை புலவர் ப.வெ. நாகராசன் அவர்கள் எழுதியுள்ளார்.  தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் நூல்கள் கிடைக்கவில்லை என்பாருக்கும், அவரின் புலமைத்திறத்தால் வெளிப்பட்ட நூல்களில் பலவற்றை ஒருசேர பார்க்க வைத்த பதிப்பாக இந்நூல் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.  இதற்கு வித்திட்ட தவத்திரு குமரகுருபர சுவாமிகளையும், பதவுரை எழுதிப் பதிப்பித்த புலவர் ப.வெ. நாகராசன் அவர்களையும் என்னும் தமிழுள்ள அளவும் வாழ்வார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.  இந்நூல் 2012ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் வெளிவந்துள்ளது.

தொகுப்புரை

தவத்திரு கந்தசாமி யாத்து சிரவையாதீனம் 2012 வரை வெளியிட்ட 46 பதிப்புகளைப் பற்றியதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.  இதில் பெரும்பாலும் மாலைகளே.  இவற்றில் மூலப் பதிப்புகளே மிகுதியானவை.  இவற்றில் பெரும்பாலான நூல்கள் நூலாசிரியர் காலத்திலேயே மூல நூலாக வெளிவந்திருக்கின்றன.  அவர் காலத்திற்குப் பிறகு வெளிவந்த நூல்கள் பெரும்பாலானவை குறிப்புரையுடனோ, பதவுரையுடனோ, உரையுடனோ வெளிவந்திருக்கும் போக்கினைப் பார்க்கும் போது நூல்கள் பதிப்பான தன்மையை உணரமுடிகிறது.  சிரவையமகவந்தாதி எனும் ஒரு நூலுக்கு மட்டும் நூலாசிரியரின் உரை தேவைப்பட்டுள்ளதை உணர முடிகிறது.  அவ்வுரைப் பதிப்பும் ஆசிரியர் காலத்திற்குப் பிறகே வெளிவந்திருப்பதைப் பார்க்கும் போது நூலாசிரியர் காலத்தில் அவர்தம் நூலுக்கு உரைகண்ட பாங்கைக் காணமுடியவில்லை என்பது தெளிவாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக