காப்பாற்ற முடியாத சுவடிகள் தவிர்க்கமுடியாதவை. காப்பாற்ற முடிந்தவை தவிர்க்கப்படவேண்டியவை. பிறந்தவன் இறப்பான். தோன்றியது தானாகவே மறையும். இது இயற்கை. காப்பாற்ற வேண்டியவை மறையும்போது மறையாமல் காப்பாற்ற வேண்டியது நம் கடப்பாடாகும். இந்நிலையில் சுவடிகள் எவ்வாறெல்லாம் மறைந்து போகிறது. அவற்றைக் காக்கும் வழிமுறைகள் என்னவென்பதை இனிக்காண்போம்.
வாழும் ஓலைச்சுவடிகள்
சங்க காலத்திற்கு முன்பே தொடங்கி இன்றுவரை சுவடிகள் திரட்டப்பட்டு இருக்கின்றன. இடைக்காலத்தில் ஆலயங்களும் மடங்களும் தமிழ்ச் சங்கங்களும் சுவடிகளைத் திரட்டிப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. 'இத்தொகை முடித்தான் பூரிக்கோ' எனக் குறுந்தொகை தொகுத்ததையும், நம்பியாண்டார்நம்பி திருத்தொண்டர் புராணம் தொகுத்ததையும் இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். மேலும், 'அகத்தியனொடு தமிழாய்ந்தும் நூற்கடலைக் கரைகண்டு நோன்பகடு ஆயிரம் வழங்கியும் மன்னெதிரா வகைவென்று தென்மதுராபுரம் செல்லும் அங்கதவில் அருந்தமிழ் நற்சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்தும் வளமதுரை நகர் கண்டும் மற்று அதற்கு மதில் வகுத்தும் வளமிக்க மதியதனால் ஒண்தமிழ் வடமொழியும் பழுதர தாம் ஆராய்ந்து பண்டிதரில் மேல் தோன்றியும்' எனத் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுவதைக் காணலாம்.
சுவடிகளைத் திரட்டிப் பாதுகாப்பதனால் தான் இன்றைய நிலையில் அவைகளை நிலைகொள்ளச் செய்யமுடியும். இந்நிலையில் பிற்காலத்தில் திரட்டுதல் பணியானது நான்கு நிலைகளில் நடைபெற்று வருகிறது. அவை,
1. பாதுகா£கத் திரட்டுதல்
2. திருத்தப்பதிப்பிற்காகத் திரட்டுதல்
போன்ற முறைகளாகும்.
1. பாதுகாப்பிற்காகத் திரட்டுதல்
கி.பி.18ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை முறையாக சுவடிகளைத் திரட்டிப் பாதுகாத்து வந்துள்ளனர். இதில் தனிமனிதன் முதல் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வரை சுவடிகளைத் திரட்டிப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
அ. தனிமனிதனால் திரட்டப்பட்ட சுவடிகள்
காலின் மெக்கன்ஸியால் திரட்டப்பட்ட சுவடிகளின் ஒரு பகுதியை இங்கிலாந்திலுள்ள இந்திய அலுவலக நூலகம், கல்கத்தா பண்டைப்பொருள் சேமிப்பு நிலையம், மீதியைச் (தென்னாட்டு மொழியைச் சேர்ந்தது மட்டும்) சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், டாக்டர் லெய்டன் மற்றும் பிரௌன் திரட்டிய சுவடிகள் இங்கிலாந்து இந்திய அலுவலக நூலகம், ஒயிட் எல்ல¦ஸ் சேகரித்த வீரமாமுனிவரின் சதுரகராதி, தேம்பாவணி, கொடுந்தமிழ், பரமார்த்த குருகதை, போதமறுத்தல் போன்ற சுவடிகள் சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சரபோசி மன்னர் (1798-1832) திரட்டிய சித்த, ஆயுர்வேத, யுனானி போன்ற மருத்துவம் மற்றும் இலக்கிய இலக்கணச் சுவடிகளைத் தஞ்சை சரஸ்வதிமகால் நூலகம், எட்டோர்ட்டு ஏரியல் திரட்டிய ஓலைச்சுவடி மற்றும் தாள் சுவடிகளைப் பாரீஸ் தேசிய நூலகம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தனியார் திரட்டிய சுவடிகளைப் பாதுகாத்து வருகின்றன. இதுதவிர, பாண்டித்துரைத்தேவர், கனகசபைப்பிள்ளை, இரா. இராகவையங்கார், திருநெல்வேலி ஈசுவரமூர்த்திப்பிள்ளை போன்றோர்களும் சுவடிகளைத் திரட்டிப் பாதுகாத்துள்ளனர் என்ற செய்தியையும் அறியமுடிகிறது.
ஆ. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள்
தனிமனிதரால் சுவடிகளைத் திரட்டிப் பாதுகாப்பது போல பாரி நிலையம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே. சாமிநாதையர் நூலகம், திருவாவடுதுறை ஆதீனம், பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம், திருப்பதி தேவஸ்தானம், பேரூர் ஆதீனம், தஞ்சை ஆதி பீமாராவ் கோஸ்வாமி மடம்,திருவான்மியூர் ஆசியவியல் நிறுவனம்,சென்னை அடையாறு நூலகம், திருவண்ணாமலை இரமணாஸ்ரம நூலகம், சென்னை சி.பி. இராமசுவாமி அய்யர் பவுண்டேசன், திருவனந்தபுரம் அரண்மனை நூலகம், போன்ற தனியார் நிறுவனங்களும்; திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், கல்கத்தா தேசிய நூலகம், தஞ்சை சரஸ்வதிமகால் நூலகம், சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், மைசூர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், ஐதராபாத் தேசிய கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், குதாபக்ஷ் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்,ஈரோடு கலைமகள் கல்விநிலையம் போன்ற அரசு நிறுவனங்களும் திரட்டிப் பாதுகாத்து வருகின்றன.
2. படிப்பதற்காகத் திரட்டிய சுவடிகள்
தொடக்கக் கல்வியைக் கற்றவர்கள் மேற்கல்வியைக் கற்க விரும்பியவர்கள் ஆசிரியரைத் தேடிச்சென்றனர். அப்படித் தேடிச்செல்லும் போது கற்கப் போகும் நூல்களை முன்கூட்டியே எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். தம்மிடம் இல்லாத சுவடிகளைப் பிறரிடம் வாங்கிக் கொண்டோ படியெடுத்துக்கொண்டோ எடுத்துச் சென்றிருக்கின்றனர். இம்முறையில் சுவடிகளைத் திரட்டிப் படித்தவர்களில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர், யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
3. அச்சிடுவதற்காகத் திரட்டிய சுவடிகள்
அச்சுக்கலை தோற்றத்தின் காரணமாக படிப்பதற்காகவும் பாதுகாக்கவும் திரட்டிய சுவடிகள் படிப்படியாக இன்றுவரை பலப்பல சுவடிகள் அச்சேறி வருகின்றன. இப்பதிப்புகள் சுவடிப் பதிப்பாகவும், திருத்தப் பதிப்பாகவும் வெளிவந்துள்ளன. தனியார் முதல் நிறுவனங்கள் வரை இச்செயலில் ஈடுபட்டுள்ளன. பல பதிப்பாசிரியர்கள் தங்களின் ஆர்வத்தால் பலப்பல சுவடிகளைப் பதிப்பித்து இருக்கிறார்கள். குறிப்பாக, 'சென்ற நூற்றாண்டின் முதற்பகுதியில் அ. முத்துசாமிப்பிள்ளை, புதுவை நயனப்ப முதலியார், முகவை இராமாநுஜக் கவிராயர், வீராசாமிச் செட்டியார், திருத்தணிகை சரவணப் பெருமாளையர், திருத்தணிகை விசாகப்பெருமாளையர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் பதிப்பாக நாலடியார், திருக்குறள், ஆத்திசூடி முதலிய நீதிநூல்கள்; நன்னூல், அகப்பொருள் விளக்கம், வெண்பாமாலை, தண்டியலங்காரம், நேமிநாதம் முதலிய இலக்கண நூல்கள்; தஞ்சைவாணன் கோவை, பெரிய புராணம், அந்தாதி, சதகம், கோவை முதலிய சிற்றிலக்கியங்கள் அச்சாயின' என்று பேரா. மு. சண்முகம்பிள்ளை அவர்கள் (சுவடிப்பதிப்பு வரலாறு, கருத்தரங்க மலர், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை, 1990) குறிப்பிட்டுள்ளார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பலபுராண நூல்கள், கம்பராமாயணம், பாரதம், கந்தபுராணம், காஞ்சிப்புராணம், தணிகைப் புராணம் முதலிய புராணங்கள், பல்வேறு வகையான சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்கள் பல வெளிவரலாயின. வடலூர் வள்ளலாராகிய இராமலிங்க சுவாமிகள், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தியாகராச செட்டியார், சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார், எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை, திருமணம் செல்வக்கேசவராய முதலியார் ஆகியோர் சுவடிப்பதிப்புகளை வெளிக்கொணர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
டாக்டர் உ.வே. சாமிநாதையர் காலத்தில் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், இராசகோபால அய்யங்கார், வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார், மறைமலையடிகள், சுன்னாகம் அ. குமாரசாமிப்பிள்ளை, வ.உ. சிதம்பரம்பிள்ளை ஆகியோரும் சுவடிப்பதிப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சங்கம், கழகம், நிறுவனம், பல்கலைக்கழகம் எனப் பல அமைப்புகளின் வாயிலாகச் சுவடிப்பதிப்புகள் முதற்பதிப்பு(திருத்தப் பதிப்பு/சுத்தப் பதிப்பு)களாக வெளிவரலாயின. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கம் வாயிலாகப் பல சுவடிப்பதிப்புகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், திரு. நாராயணையங்கார், சேற்றூர்ச் சுப்பிரமணியக் கவிராயர், மு.ரா. அருணாசலக் கவிராயர், மு.ரா. கந்தசாமிக் கவிராயர், தி.கி. இராமாநுஜ ஐயங்கார், டாக்டர் உ.வே. சாமிநாதையர், பேரா. வையாபுரிப்பிள்ளை ஆகியோரின் பதிப்புகள் இதிலடங்கும்.
சென்னையில் சரவணப்பவானந்தம் பிள்ளையவர்கள் நிறுவிய பவானந்தர் கழகத்தின் வாயிலாக பவானந்தர், கா.ர. கோவிந்தராஜூ முதலியார், மகாவித்துவான் மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை ஆகியோரின் பதிப்புகள் வெளிவந்துள்ளன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், உ.வே. சாமிநாதையர் நூலகம், ஆசியவியல் நிறுவனம், திருப்பதி தேவஸ்தானம் திருவேங்கடவன் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களும் சுவடிப்பதிப்புகளாகப் பல பதிப்புகளைப் பலப்பல பதிப்பாசிரியர்களைக் கொண்டு வெளியிட்டுள்ளன.
4. திருத்தப் பதிப்பிற்காகத் திரட்டிய சுவடிகள்
சுவடிப்பதிப்பு வெளியிடுவதிலும் சுத்தப்பதிப்பாக, திருத்தப்பதிப்பாக வெளியிடுவதில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர், பேரா. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
ஆறுமுக நாவலர் அவர்கள் பல சுவடிகளை ஒப்பு நோக்கி, உண்மைப் பாடங்களை வரையறுத்துப் பிழையின்றி நூல்களை அச்சிட்ட பெருமைக்குரியவர். திருக்குறள், பெரியபுராணம், திருவாசகம், திருக்கோவையார், வில்லிபாரதம், சூடாமணி நிகண்டு, தொல்காப்பியச் சொல்லதிகாரச் சேனாவரையர் உரை, நன்னூல் காண்டிகையுரை, நன்னூல் விருத்தியுரை முதலியன இவர்தம் திருந்திய பதிப்புகளாகும்.
சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பல சுவடிகளை ஒப்புநோக்கி மூலபாடம் உரைபாடங்களை எழுத்து வேறுபாடுகளால் அமைத்துத் தந்துள்ளார். வீரசோழியம், தொல்காப்பியம்-சொல்லதிகாரம் மற்றும் பொருளதிகாரம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை, சூளாமணி, தணிகைப்புராணம் முதலியன இவர்தம் பதிப்புகளாகும்.
டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் சங்க நூல்களுள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகையுள் புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் என்பவற்றையும், ஐம்பெருங்காப்பியங்களுள் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றையும் சீரிய முறையில் பதிப்பித்துள்ளார். இவை தவிர, நன்னூல் மயிலைநாதர் உரை, புறப்பொருள் வெண்பாமாலையுரை, பெருங்கதை, திருவிளையாடற்புராணம், அந்தாதி, உலா முதலிய பல சிற்றிலக்கிய வகைகளிலும் நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
பேரா. வையாபுரிப்பிள்ளை அவர்கள் நாமதீபநிகண்டு, பொதிகை நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, கயாதர நிகண்டு, தொல்காப்பிய பொருளதிகாரத்தின் இளம்பூரணர் உரை முதலிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
இவர்களன்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணக் காவியத்தை காண்டங் காண்டமாகச் சுவடி நுண்பதிப்பாக வெளியிட்டுள்ளார்கள். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையின் வாயிலாகத் தொல்காப்பியம் செய்யுளதிகாரம் மற்றும் பொருளதிகாரம், குறுந்தொகை, சீவேந்திரர் சரிதம், செழியதரையன் பிரபந்தங்கள், ஆத்திசூடி, அகத்தியர் வைத்திய காவியம் 1500, நோயும் மருந்தும், வைத்திய சிந்தாமணி, நான்மணிக்கடிகை, சாந்தாதி அசுவமகம் போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளனர்.
தாழும் ஓலைச்சுவடிகள்
ஓலைச்சுவடிகள் அழிந்ததற்கான காரணங்களை மூன்று நிலைகளில் சுட்டலாம்.
1. இயற்கை அழிவு
2. செயற்கை அழிவு
3. அறியாமை அழிவு
என அமையும். எனவே, ஓலைச்சுவடிகளின் தாழ்வும் மறைவும் இதனை ஒட்டியே அமையும் எனலாம்.
இயற்கை அழிவு
பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் சுவடிகள் மறைவதற்கு இயற்கை ஓர் காரணியாக இருக்கின்றது. ஓலைகளில் எழுதப்பட்ட சுவடிகள் மட்டுமன்று கல்லில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளம், செப்புத் தகடுகளில் எழுதப்பட்ட செப்பேடுகளும் இயற்கையின் செயலோட்டத்தில் மறைந்திருக்கின்றன. மாறுபடும் தட்பவெப்பச் சூழ்நிலையே இதற்கு முக்கிய காரணமாகிறது. ஓலைச்சுவடிக்குப் பெரும்பாலும் குளிர்ச்சியான சூழ்நிலையே தேவைப்படும். எனவேதான், இந்தியாவைப் பொருத்தமட்டில் வடக்கைவிட தெற்கில் சுவடி மறைவுகள் அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன.
பயன்பாடு மற்றும் தக்க பாதுகாப்பு இல்லாத சுவடிகள், சுவடிக்குள் உருவாகும் இராமபாணம், கறையான், போன்ற 'சுவடி அழிப்பான்'களினால் மறைகின்றன/அழிகின்றன. மழை நீரோ, பனித்துளியோ, ஈரக்காற்றோ சுவடியின் மீது படும்போதும்; பெருமழையின் காரணமாக ஏற்படும் நில அரிப்பாலும், ஈரப்பதத்தாலும், சூராவளிக் காற்றினாலும், பூகம்பத்தினாலும், கடல் கொந்தளிப்பினாலும், புகைபடுவதாலும், தீயினாலும், மின் கசிவினாலும், வெப்பத்தினாலும் சுவடிகள் மறைந்தும் அழிந்தும் இருக்கின்றன. இன்றும் இச்சூழ்நிலைகள் ஏற்படும்போது பல இடங்களில் பாதுகாத்து வைத்திருக்கும் சுவடிகள் அழிந்தும் மறைந்தும் வருகின்றன என்பது உண்மை. இதுபோன்ற இயற்கை அழிவுகளால் ஓலைச்சுவடிகள் செப்பனிட முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மையன. இயற்கையாக அழியக்கூடிய காரணிகளை மூன்று நிலைகளாகப் பகுக்கலாம். அவை,
அ. பௌதீகக் காரணிகள்
ஆ. உயிரியல் காரணிகள்
இ. வேதிமக் காரணிகள்
என அமையும்.
அ. பௌதீகக் காரணிகள்
பௌதீகக் காரணிகளான தூசு, ஒளி, தட்பவெப்பம், நீர் (மழை, வௌ¢ளம்), தீ ஆகியவைகளால் சுவடிகள் அழிவுக்குள்ளாகின்றன.
1. தூசு
சுவடிகள் அழிய முதல் காரணமாக இருப்பது தூசு. தூசு இரண்டு வகைப்படும். அவை,
1. சுற்றுப்புறத் தரைப்பகுதியிலிருந்து எழும் நுண்ணிய மண் துகள்கள்
2. வாகனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் கழிவுப்
புகை மற்றும் வேதிமக் கூட்டுப் பொருட்கள்
என்பனவாகும். இதுபோன்ற தூசுகளில் எண்ணெய் மற்றும் வேதிக குணம் உண்டு.
தூசு சுவடிகளின் மீது படிந்து நாளாவதாலும், தூசு காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சுவதாலும் சுவடிகளின் மேற்புறம் நிற மாற்றமும் கறைகளும் ஏற்படுகின்றன. வேதிமக் குணம் கொண்ட தூசுகள் சுவடிகளில் உள்ள செல்லுலோஸ் நார்ப்பொருளைச் சிதிலம் அடையச் செய்யும். தூசு படிவதால் சுவடிகளின் எழுத்துக்கள் மறையும். கையாளாத ஓலைச்சுவடிகளில் படியும் தூசு காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி சுவடிகளை ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளச் செய்யும். தூசே சுவடிகளுக்கு ஏற்படும் மற்ற அழிவுகளுக்கும் அடிப்படைக் காரணம் ஆகும்.
2. ஒளி
ஒளி நமக்கு இயற்கையாகச் சூரியனிடமிருந்தும்; செயற்கையாக மின்சாரத்தைப் பயன்படுத்தி ஒளிரும் இழை விளக்குகள், குழல் விளக்குகள், வேதிம வாயு விளங்குகள், புதிய விளக்குகள் ஆகியவற்றிடமிருந்தும் கிடைக்கின்றன.
ஒளியானது கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய மின்காந்தத்தினால் வெளிப்படும் ஒளித்துகளின் வெளிப்பாடாகும். ஒளிக்கற்றையில் வெளிப்படும் வெவ்வேறு நிற ஒளித்துகள்களின் அலைவு தூரம், அலைவு வேகம் போன்றவற்றால் கதிர்களின் ஒளிச் சக்தி மாறுபடும்.
இயற்கையாகவும் செயற்கையாகவும் கிடைக்கும் ஒளிக் கதிர்களில் உள்ள குறிப்பிட்ட அலைவு வேகமுள்ள ஒளிக் கற்றையை மட்டுமே நாம் கண்ணால் காணமுடியும். ஒளி அலைவுகளின் நீளத்தை நானோ மீட்டர் என்ற அலகில் குறிப்பிடப்படுகிறது. 400 முதல் 760 நானோ மீட்டர் அலைவு நீளம் கொண்ட ஒளிக்கதிர்களை மட்டும் நாம் கண்ணால் காணமுடியும். கண்ணால் காணக்கூடிய ஒளிக்கற்றை நிறமாலையில் தோன்றும் ஏழு நிறங்களின் சேர்க்கையாகும். 400 நானோ மீட்டருக்குக் குறைவான அலைவு நீளம் கொண்ட ஆல்பா, பீட்டா, காமா, 'X' கதிர்கள் வானவெளியில் உள்ள ஓசோன் காற்று மண்டலத்தால் தடுக்கப்படுகிறது.
ஒலிக்கற்றையில் உள்ள VIBGYOR ஏழு நிறங்களும் வெவ்வேறு அலைவு நீளம் கொண்டவை. ஊதாக் கதிர்களுக்கு அருகில் உள்ள புறநிற ஊதாக் கதிர்களின் அலைவு நீளம் குறைவாக இருப்பதால் அது அதிக சக்தியைக் கொண்டுள்ளது. ஆகையால் அது சுவடிகளில் பட்டு அதனுள் ஊடுருவிச் செல்லும்.
நம் கண்ணுக்குப் புலப்படாத புறநிற ஊதாக் கதிர்களின் அலைவு நீளம் குறைவாக இருப்பதால் அதற்குச் சக்தி அதிகம். அவை பொருட்களை ஊடுருவிச் செல்லும். குறைவான அலைவு நீளம் கொண்ட புறநிற ஊதாக் கதிர்கள் சுவடிகளின் மீது படிவதால் வேதிமாற்றத்தை உண்டு பண்ணும். சுவடிகளில் உள்ள லிக்னின் என்ற பொருள் ஒளியின் தாக்கத்தால் நிற மாற்றம் அடைகிறது. மேலும் காகிதச் சுவடிகளின் மீது எழுதப்பட்டுள்ள எழுத்துக்களும், ஓவியங்களின் வண்ணங்களும் மாற்றமடையும்.
நிறமாலையில் சிவப்பு நிறத்திற்கு அருகில் உள்ள அகநிற சிவப்புக் கதிர்கள் அதிக வெப்பத்தைச் சுவடிகளின் மீது ஏற்படுத்தும். இதனால் சுவடிகளின் ஈரத் தன்மை குறைந்து சிதிலமடையும். ஒளியின் தாக்கத்தால் சுவடிகளில் உள்ள எழுத்துக்கள் மட்டுமின்றி அதன் உறுதித்தன்மையும் பாதுக்கப்படுகிறது. ஆகையால் சுவடிகளின் மீது நேரடியாக ஒளிபடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், சுவடி வைப்பறையில் சுமார் 50-70 லக்ஸ் ஒளி உள்ளவாறு அமைத்தால் சுவடிகளுக்கு அழிவு இல்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
3. தட்பவெப்ப நிலை (Climate)
தட்பவெப்ப நிலை என்பது காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் வெப்பத்தைக் குறிப்பதாகும். ஒரு கட்டிடத்திற்கு வெளியே உள்ள தட்பவெப்ப நிலையை அகண்டவெளி தட்பவெப்ப நிலை (Macro Climate) என்றும், ஒரு அறைக்குள்ளே இருக்கும் தட்பவெப்ப நிலையைக் குறுவெளி தட்பவெப்ப நிலை (Micro Climate) என்றும் குறிப்பிடுவர். கரிம வகைப் பொருட்களான ஓலை மற்றும் காகிதச் சுவடிகள் தட்பவெப்ப நிலைமாறுபாட்டால் அழிவிற்குள்ளாகின்றன. தட்பவெப்ப நிலை மாற்றமே சுவடிகள் அழிவிற்கு முக்கிய காரணமாகும். வெப்பமும், ஈரத் தன்மையும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது. வெப்பம் அதிகமாக உள்ள பொழுது காற்றில் ஈரப்பதம் குறைந்தும், வெப்பம் குறைவாக உள்ள போது ஈரப்பதம் அதிகமாகவும் காணப்படும். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் (Tropical Country) ஒரே மாதிரியான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பது மிகவும் கடினமான செயலாகும்.
சுவடிகள் தாவரப் பொருட்களால் ஆனபடியால் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. ஆகையால் மழைக் காலங்களில் காற்றிலுள்ள அதிகப்படியான ஈரத்தை உறிஞ்சுகிறது. இதனால் சுவடிகள் விரிவடையும். வெப்பம் அதிகம் உள்ள காலங்களில் சுவடிகள் ஈரத்தை வெளியிடுவதால் சுவடிகள் சுருங்குகின்றன. இவ்வாறு ஏற்படும் மாறுபட்ட தட்பவெப்ப நிலையால் சுவடிகள் அடிக்கடி விரிந்து சுருங்குகின்றன. இதனால் சுவடிகளின் உறுதித் தன்மை குறைந்து நாளடைவில் அழிவிற்குள்ளாகின்றன.
ஓலை மற்றும் காகிதச் சுவடிகள் ஈரத்தை உறிஞ்சி வெளிவிடுவதால் உறுதித்தன்மை குறைவது மட்டுமின்றி, வளைந்து கொடுக்கும் தன்மையும் குறைகிறது. மேலும் சுவடிகளில் சுருக்கங்களும் ஓரங்களில் வெடிப்புகளும் ஏற்படும். மழைக் காலங்களில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அதிக நாட்கள் ஈரத்துடன் இருப்பதால் சுவடிகளின் நார்ப்பிடிப்பு பாதிப்படையும்.
ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் சுவடிகளின் மீது படிந்து பூஞ்சைக் காளான்களாக வளரும். சுவடிகளின் மீது வளரும் பூஞ்சைக் காளான்களை உணவாக உண்ண வரும் பூச்சிகளால் சுவடிகள் அழிவிற்குள்ளாகின்றன.
தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஒரு தொடர் அழிவிற்கான சூழ்நிலை ஏற்படும். பொதுவாக சுவடி வைப்பறையில் 20 டிகிரி செல்சியஸ் முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமும், 55% முதல் 60% காற்றில் ஈரப்பதமும் ஒரே சீராக இருக்குமாறு அமைத்தால் சுவடிகளை அழிவிற்குள்ளாகாமல் பாதுகாக்கலாம்.
மாறாத வெப்பமும், ஈரப்பதமும் அமைக்கச் சீரமைக்கப்பட்ட (Controlled) குளிர்சாதன வசதி செய்யலாம். ஆனால் குளிர்சாதன வசதி 24 மணிநேரமும் இடைவிடாது செயல்பட்டு வரவேண்டும். அவ்வாறு இல்லாமல் மாறுபட்ட தட்பவெப்ப நிலை ஏற்படுமானால் பூஞ்சைக் காளான் வளர்ச்சி மிக விரைவாக எற்படும். பூஞ்சைக்காளான் சுவடிகள் அழிவிற்கு ஒரு முக்கிய காரணியாகும். தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு தனியார் சுவடித் தொகுப்புகள் தட்பவெப்ப நிலை மாறுபாட்டை கவனிக்காமல் தொடர்ந்து பராமரிக்கபடாமல் இருப்பதால் பூஞ்சைக் காளான் மற்றும் பூச்சிகளின் பாதிப்பு ஏற்பட்டு அழிவிற்குள்ளாகின்றன.
4. நீர்
காற்றில் உள்ள ஈரப்பதம் குறைந்தால் சுவடியில் உள்ள ஈரத்தன்மை குறைவதாலும், காற்றில் உள்ள ஈரப்பதம் மிகுதியானால் சுவடியின் ஈரத்தன்மை அதிகமாவதாலும், திரவ நிலையில் ஏற்படும் ஈரத்தன்மை மிகுதலாலும் குறைதலாலும் சுவடிகள் அழிவை நாடிச்செல்கின்றன. பொதுவாக, நூலகங்களுக்கு நீரின் பாதிப்பு என்பது மழை மற்றும் வௌ¢ளம் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
i. மழை
சுவடிகள் மழை நீரால் நேரிடையாக பாதிப்படைவதில்லை. எனினும், தொடர் பருவ மழையின் காரணமாக தட்பவெப்ப நிலை மாற்றத்தினால் பூஞ்சைக் காளான் ஏற்பட்டு சுவடிகளை அழிவுக்குள்ளாக்குகின்றது. மேலும் அதிகமான ஈரப்பதம் உள்ள போது சுவடிகளைக் கையாளுவதால் சிதிலமடைந்து பாதிப்படைகின்றன. காகிதச் சுவடிகள் மழை நீர் பட்டால் அவற்றிலுள்ள எழுத்துக்கள் கரைந்துவிடும்; சுவடிகளின் மீது படிந்துள்ள தூசியினால் கறை ஏற்படும்.
ii. வெள்ளம்
அதிக மழை பெய்து வௌ¢ளம் ஏற்படுவதனாலும் இயற்கையின் சீற்றத்தினாலும் கடல் கோல்கள் ஏற்பட்டு வௌ¢ளப் பெருக்கு ஏற்படுகிறது. இதனால் சுவடிகள் வைத்திருக்கும் வைப்பறைகள் மற்றும் இல்லங்கள் சேதமடைகின்றன.
இயற்கையின் சீற்றத்தால் பல்வேறு கால கட்டங்களில் கடல்கோள்களால் சுவடிகள் அழிவுற்றுள்ளன. சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையில், தென்பகுதி நாற்பத்தொன்பது நாடும், குமரி, கொல்லம் முதலிய பனிமலை நாடும், காடும், நதியும், வீதியும், நீர்க்குமரி வடபெருங் கோட்டில் காடும் கடல் கொண்டொழிந்தது எனக் குறிப்பிடுகிறார்.
1961ஆம் ஆண்டு மே 21ஆம் நாள் சிலி நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 70,000 சதுர மைல்கள் அழிவிற்குள்ளாகியுள்ளன. கடல் அலைகள் சுமார் 10 அடி முதல் 30 அடி வரை உயர்ந்து பல கரையோர நகரங்களை அழிவிற்குள்ளாக்கியுள்ளன.
இன்று இருப்பது போல் செய்தி ஊடகங்களின் வளர்ச்சியின்மையால் அதன் தாக்கம் மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் இன்று செய்தி ஊடகங்களின் வளர்ச்சியினால் 2004ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி தென்கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட கடல்கோலின் தாக்கம் அனைவரையும் நடுங்கச் செய்துள்ளது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி ஏற்பட்டு பல கிராமங்கள் உருத்தெரியாமல் அழிந்துபோயின. ஆகையால் நூறாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் கடல்கோள்களினால் சுவடிகள் அழிவிற்குள்ளாவது என்பது இயற்கையின் நியதியாக இருக்கின்றது.
5. தீ
தீயினால் செப்பனிட முடியாத அளவிற்கு அழிவுகள் ஏற்படும். வீடுகளில் அசை என்னும் தூக்கில் சமையலறைகளில் சுவடிகள் தொங்கவிட்டிருப்பதால் சமையலறையில் ஏற்படும் தீயினாலும், வன்முறையாளர்களினால் ஏற்படும் தீயினாலும் சுவடிகள் அழிவுற்றிருக்கின்றன.
கி.பி.1920ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ந் தேதி பாண்டித்துரை தேவர் அவர்களால் உருவாக்கப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் திடீரென ஒரு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்தினால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேகரித்து வைக்கப்பெற்றிருந்த பல அரிய ஓலைச்சுவடிகளும் காகிதச் சுவடிகளும் அச்சு நூல்களும் அழிந்துள்ளன. இதனால் பல சுவடிகளும் நூல்களும் தமிழுலகம் அறியா வண்ணம் மறைந்து போயின.
சில நூல்கள் முழுமை பெறாது பாதியிலேயே வெளிவராமல் நின்றுள்ளன. குறிப்பாக, தமிழ்ச் சொல்லகராதியின் மூன்றாம் பாகத்தில் தா முதல் நகரம் வரையே அச்சிடப்பட்டிருக்கின்றது. ஏனைய பகுதிகள் அச்சாகவில்லை. இதனைச் சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள், "சங்கத்தில் நேர்ந்த தீவிபத்தில் இம்மூன்றாம் பாகத்தில் தா முதல் நகரம் வரையுள்ள அச்சிட்ட பாகந்தவிர, அச்சிடுவதற்குப் பரிசோதித்து வைத்திருந்த அசலும் நகலும் ஆகிய காகிதக் கையெழுத்துப் பிரதிகள் முழுவதையும் இழந்துவிட்டமை" கண்கூடு என்கின்றார்.
நேபாளத்தில் 12வது நூற்றாண்டில் ஜகஜய மல்லன் என்ற மன்னன் பசுபதிநாதர் ஆலயத்திற்கு பூஜைகளைச் செய்யும் பூசாரிகளுக்குப் பயிற்சி தருவதற்காக பசுபதிநாதர் கோவிலிலிருந்து 350அடி தொலைவில் மரச்சட்டத்தால் ஆன நான்கு அடுக்கு ஆகம இல்லத்தினைக் கட்டியிருந்தார். இவ்வில்லம் பூசாரிகளின் பயிற்சிக் கூடமாகவும் அரிய ஓலைச்சுவடிகள் காப்பகமாகவும், ஆவணங்களின் இருப்பிடமாகவும் இருந்துள்ளது. இக்கட்டிடத்தில் 24 ஜுன் 2005இல் தீவிபத்து ஏற்பட்டு அரிய ஓலைச்சுவடிகள் தீயில் கருகி அழிந்துள்ளன.
ஆ. உயிரியல் காரணிகள்
சுவடிகள் நுண்ணுயிர் கொண்ட தாவரமான பூஞ்சைக் காளான்; சிறு உயிரினங்களான புத்தகப்புழு, கரப்பான் பூச்சி, கறையான், புத்தகப்பேன், வௌ¢ளிமீன்; சிறு பிராணிகளான சுண்டெலி, அணில் போன்றவற்றால் அழிவுக்குள்ளாகின்றன. இவ்வகைக் காரணிகளே உயிரியல் காரணிகள் ஆகும்.
1. பூஞ்சைக் காளான்
உலகில் அதிக அளவிலான கரிமப் பொருட்களால் ஆன பாரம்பரியப் பொருட்களும் சுவடிகளும் பூச்சைக் காளான்களால் அழிவிற்குள்ளாகின்றன. பாரதம் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் இதன் தாக்கம் மிக அதிகம்.¢ இப்பூஞ்சைக் காளானானது, காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் வளர்தல் ஆகும். பூஞ்சைக் காளான்களில் பல வகைகள் இருப்பினும் கருப்பு, வௌ¢ளை, சாம்பல் நிறங்கள் கொண்ட அஸ்பெரிசிலிஸ் (Asperigilus) என்ற வகையைச் சார்ந்த நுண்ணுயிர்கள் (Spores) மட்டுமே சுவடிகளின் அழிவிற்குக் காரணமாக இருக்கின்றன.
பூஞ்சைக் காளான்கள் நுண்ணிய தாவரத்தின் அமைப்பைக் கொண்டிருக்கும். இதன் வேர்கள் சுவடிகளின் நார் இணைப்புகளுக்குள் ஊடுருவி வளர்வதால் சுவடிகளின் உறுதித் தன்மை குறைகிறது. சுவடிகளின் நார்ப்பொருட்களைச் சேர்க்கப் பயன்படுத்திய சேர்ப்புப் பொருட்களை உறிஞ்சுவதால் நார்களின் இணைப்பு பாதிக்கப்படுகிறது. மேலும் பூஞ்சைக் காளான்களின் வேர்களின் மூலம் வெளியிடப்படும் திரவத்தால் தாள்களும், ஏடுகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். பூஞ்சைக் காளானின் தாக்கத்திற்குள்ளான சுவடியை உடனடியாக வெப்பமான சூழ்நிலைக்குக் கொண்டு வருவதால் சுவடியில் உள்ள ஈரப்பதம் ஆவியாகி ஏடுகள் பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும்; சுத்தம் செய்ய முடியாத அளவிற்குக் கறைகளை ஏற்படுத்தும்.
சுவடிகளின் மீது பூஞ்சைக் காளான் வளர்வதால் ஏற்படும் நாற்றத்தால் ஈர்க்கப்பட்ட பூச்சிகள் காளானைச் சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் ஈரப்பதத்தால் மிருதுவாக்கப்பட்ட சுவடிகளையும் சேதமுறச் செய்கின்றன. பூஞ்சைக் காளானின் தாக்கத்தைச் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் ரோமானியப் பேரரசர் இரண்டாம் பிரிட்ரிக் (frederick II) குறிப்பிட்டுள்ளார். அவர் காலத்தில் தயாரிக்கப்பட்ட தரம் குறைவான காகிதங்களில் எழுதியதால் பூஞ்சைக் காளான் பாதிப்பு ஏற்படுவதை அறிந்து அனைத்துக் காகிதச் சுவடிகளையும் பார்ச்மெண்டில் எழுதுவதற்கு உத்திரவிட்டுள்ளார். பூஞ்சைக் காளான்களால் பாதிக்கப்பட்ட சுவடிகளைச் சரியான நேரத்தில் உரிய முறையில் பாதுகாக்காவிடில் அவற்றைச் சில வகையான பூச்சிகள் பாதிப்படையச் செய்யும்.
2. பூச்சி வகைகள்
உயிரியல் காரணிகளினால் பெரும்பான்மையான சுவடிகள் அழிவிற்குள்ளாகின்றன. குறிப்பாக புத்தகப்புழு, புத்தகப்பேன், வௌ¢ளிமீன், கரப்பான் பூச்சி, கறையான் போன்ற பூச்சி வகைகளாலும், எலி, அணில் போன்ற சிறுபிராணிகளாலும் சுவடிகள் அழிவிற்குள்ளாகின்றன.
சுவடிகள், புத்தகங்கள் மற்றும் கரிம வகையைச் சார்ந்த எழுதுபொருட்கள், கலைப்பொருட்கள் ஆகியவற்றையும் இவை பாதிக்கும்.
மேலே குறிப்பிட்ட பூச்சிகளுடன் வண்டுகள், குளவிகள் போன்ற பூச்சிகள் வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக உள்ளன. குளிர்பிரதேசங்களில் சில வகைக் கரப்பான் பூச்சிகளும், துணிகளைப் பாதிக்கும் வண்டுகளும், அந்துப் பூச்சிகளும் அதிகமாக உள்ளன.
இவ்வாய்வாளர் சுவடிகள் பாதுகாப்புப் பயிற்சிக்காக இங்கிலாந்து சென்ற போது பார்வையிட்ட 19 நிறுவனங்களில் ஹார்னிமன் அருங்காட்சியகம், கியு தாவரத் தோட்டம் ஆகிய இரண்டு நிறுவனங்களைத் தவிர ஏனைய நிறுவனங்களில் பூச்சிகளின் தாக்கம் இல்லை. உறார்னிமன் அருங்காட்சியகத்தில் உறார்னிமன் என்னும் கோமகன் தனது வியாபாரத்தின் மூலம் கிடைத்த வருவாயைத் தான் சென்ற நாடுகளிலிருந்து கலைப்பொருட்களாக வாங்கித் தொகுத்து வைத்துள்ளார். இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவிலிருந்து வாங்கப்பட்ட அழகிய வேலைப்பாடு கொண்ட தரை விரிப்பில் பூச்சிகளின் தாக்கம் இருந்தது. கியு தோட்டம் (Kew Gardan) என்னும் தாவரவியல் பூங்காவில் உள்ள தாவர மாதிரிகளில் புச்சிகளின் தாக்கம் இருந்தது. மேலும் அங்கு வசித்த காலத்தில் வெளிர்நிற கரப்பான் பூச்சிகள் இருந்ததையும் காணநேர்ந்தது.
மேலை நாடுகளில் கிரேக்கம் மற்றும் ரோமில் இருந்த அரிய நூல்கள் பூச்சிகளின் தாக்கத்தினால் அழிந்துவிட்டதாக அண்டிடேனிஸ், அரிஸ்டாட்டில், அஸ்சோனியஸ், இசிடோரஸ், லூகிசெயஸ், மார்கியல், ஓவியட், சிம்போசியஸ் போன்றோர் எழுதிய படைப்புகளில் பூச்சிகளின் தாக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர்.
அரிஸ்டாட்டில் கி.மு.335இல் எழுதிய 'உறிஷ்டரியோ அனிமலியம்' (Historia Animalium) என்ற நூலில் புத்தகங்களின் மீது வாலில்லாத தேள் போன்ற பூச்சிகளைப் பார்த்ததாகக் குறிப்பிடுகின்றார்.
பாரதம் போன்ற வெப்ப நாடுகளில் புத்தகப்புழு, வௌ¢ளி மீன், கரப்பான் பூச்சி, கறையான், புத்தகப் பேன் போன்ற பூச்சிகளினால் காகிதச் சுவடிகள் அழிவிற்குள்ளாகின்றன. ஓலைச்சுவடிகள் புத்தகப்புழு, கரப்பான் பூச்சி மற்றும் கறையான்களால் அழிவிற்குள்ளாகின்றன. அவற்றுள் பெருமளவு புத்ததகப் புழுவின் தாக்கத்தால் பாதிப்பினால் அழிந்துபோன சுவடிகள் மிகமிக அதிகம் எனலாம்.
i. புத்தகப்புழு (Bookworm)
சுவடிகளைத் துளையிட்டுச் சேதப்படுத்தும் புழுக்களைப் புத்தகப்புழு என்று அழைப்பர். இவ்வகைப் புழுக்களானது உலகில் உள்ள சுமார் 200 வகையான பூச்சிகளின் முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் எனக் கூறப்படுகிறது. சுவடிகளின் மீது பூஞ்சைக் காளானின் தாக்கம் இருக்கும் பொழுது, காளானை உணவாக உட்கொள்ள வரும் பூச்சிகளின் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள், புத்தகப் புழுக்கள் எனப்படுகிறது.
இப்புழுவானது காரட் போன்று தலைப்பகுதி பெருத்தும், வால்பகுதி சிறுத்தும் இருக்கும். இப்புழு 5மி.மீ. நீளமுடையதாகவும், வெண்மை நிறம் கொண்டிருக்கும். சுவடிகளின் மேற்புறத்திலிருந்து கீழ்ப்புறம் வரை துளையிடும் தன்மை கொண்டது. புழுக்கள் வளர்ந்து பூச்சிகளாக வெளியேறும் பொழுது மேலும் முட்டையிட்டுச் செல்லும் சுவடிகளைச் சரியான பாதுகாப்புச் செயல்முறைகள் செய்யவில்லையெனில், செப்பனிட முடியாத அளவிற்கான தாக்கத்தை ஏற்படுத்தும். ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதியபின் மஞ்சள் அல்லது தாவர இலைச் சாற்றுடன் கரி பூசாத ஓலைச்சுவடிகள் மிக வேகமாக அழிவிற்குள்ளாகின்றன.
இப்புழு உலோகத் தகடுகளைத் தவிர மற்ற பொருட்களில் ஊடுருவும் திறன் கொண்டது. ஓலைச்சுவடிகளைத் தாக்கும் புத்தகப் புழுவினைக் காஸ்டலஸ் இன்டிகஸ் (Gastrulus Indicass) என்பர்.
ii. கரப்பான் பூச்சி
சுவடிகளை அதிகமாகத் தாக்கக் கூடிய பூச்சிகளில் கரப்பான் பூச்சியும் ஒன்று. இது பல வகைப்படும். உலகெங்கும் சுமார் 1200 வகை கரப்பான் பூச்சிகள் இருப்பதைப் பூச்சியியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
கரப்பான் பூச்சிகள் சுவடிகளுக்கும் புத்தகங்களுக்கும் முக்கிய எதிரி என்பதை 1602இல் வெளியான யுனிஸ்சிஸ் அல்டேராவன்டஸ் (Ulysses Aldrovandus) என்பரின் குறிப்புகள் உணர்த்துகின்றன. மேலும் 1837இல் மேற்கிந்திய நாடுகளில் மிக அதிகமாகக் கரப்பான் பூச்சிகள் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.
பொதுவாகக் கரப்பான் பூச்சிகள் வீட்டுச் சமையல் அறைகளிலும், கழிவறைகளிலும் அதிகமாகக் காணப்படும். இப்பூச்சிகள் பகலில் மறைந்திருந்து இரவில் உணவு தேடப் புறப்படும். இவை 2.5செ.மீ. முதல் 5 செ.மீ. வரை நிளம் உடையதாக இருக்கும். கரப்பான் புச்சிகளின் வாய் அமைப்பு ஓலைச்சுவடிகளையும் காகிதச் சுவடிகளையும் கடித்துச் சேதப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பூச்சிகள் 16 முதல் 30 முட்டைகள் வரை வைக்கும் எனக் கூறப்படுகிறது. கரப்பான் பூச்சிகள் ஆறு மாதங்கள் முதல் 2லுவருடங்கள் வரை வாழக் கூடியவை.
சுவடிகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கம் பொழுதோ சுவடிகளின் மீது பசைப்பொருட்கள் தடவியிருந்தாலோ கரப்பான் பூச்சிகளின் தாக்கம் இருக்கும். அதன் வாய் அமைப்பு சுவடிகளின் மேற்புறத்தைச் சுரண்டிச் சாப்பிடும் தன்மையில் அமைந்துள்ளதால், சுவடிகளைச் செப்பனிட முடியாத அளவிற்கான சேதத்தை உண்டாக்கும். கரப்பான் பூச்சிகளின் தாக்கம் சுவடிகள் ஈரமாக இருக்கும் பொழுதோ, வைப்பறையில் உணவுப் பொருட்கள் பயன்படுத்திலோ அதிகமாக இருக்கும்.
iii. கறையான்
சுவடிகளைச் செப்பனிட முடியாத அளவிற்கு முழுமையாக அழிக்க வல்லது கறையான்கள் ஆகும். கறையான்கள் வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இதனைச் சிதல் என்றும் அழைப்பர். கறையான்கள் உலோகத்தால் ஆன பொருட்களைத் தவிர கரிம வகைத் தாவரப் பொருட்கள் அனைத்தையும் சேதமடையச் செய்யும். கறையான்களில் 1861 வகைகள் உள்ளன என்பதையும் அவை சுமார் இரண்டாயிரம் மில்லியன் காலத்திலிருந்து பூமியில் இருப்பதாகவும் கூறப்படுகின்றன.
கறையான்கள் கூட்டம் கூட்டமாக வாழக் கூடியவை. அவைகளில் ராஜா, ராணி, வேலைக்காரர்கள், காவலாளி, என்ற நான்கு பிரிவுகள் உண்டு. இராணி கறையானுக்கு இறக்கைகள் உண்டு. இது மற்ற கறையான்களை விட உருவத்தில் பெரியதாக இருக்கும். இவை வெளிச்சத்திற்கு அஞ்சியே இருளில் தமது செயல்களை மறைவாகச் செய்யும். இராணி கறையான் 24 மணி நேரத்தில் 30,000க்கும் மேற்பட்ட முட்டைகள் இட்டு இனப்பெருக்கம் செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கறையான்கள் பூமிக்குள் ஈரப்பதம் இருக்கும் இடங்களில் தமது நடமாட்டத்தைக் கொண்டிருக்கும். மழைக்காலங்களிலும் அல்லது வேறு காரணங்களாலும் ஈரம் பூமியின் மேற்பகுதி வரை வரும்பொழுது கறையான்களின் செயல்பாடுகள் தரையின் மீது ஏற்படும். அச்சமயங்களில் தரையில் உள்ள சுவடிகள் மரச்சாமான்கள் பாதுகாப்புச் செய்யப்படாத மர பீரோக்கள் போன்றவற்றை சேதமுறச் செய்யும். பொருட்கள் மற்றும் சுவடிகளின் வெளிப்பகுதி அப்படியே இருக்க உட்பகுதியைச் சாப்பிட்டு அழிக்கக் கூடியவை.
1781இல் ஹென்றி ஸ்மித்மேன் (Henry Smeathman) என்பவரால் வெளியிடப்பட்ட தத்துவக் கோட்பாடு (Philorophical transaction) என்ற நூலில் ஆப்பிரிக்காவில் சுவடிகள் அதிகமாக கறையான்களால் அழிந்தன எனக் குறிப்பிடுகின்றார். பாரதத்தின் பலபகுதிகளிலும் கரையான்களால் சுவடிகள் அழிந்துள்ளன. சிதம்பரம் கோவிலிருந்த தேவாரச் சுவடிகள் கறையான்களால் மண் மலைபோலக் காட்சியளித்ததைக் குடம்குடமாக எண்ணெய் ஊற்றி, கரையான்கள் அழித்தது போக மீதியைச் செப்பனிடப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
iv. புத்தகப்பேன் மற்றும் வெள்ளிமீன்
புத்தகப் பேன் மற்றும் வௌ¢ளிமீன்கள் காகிதச் சுவடிகளை மட்டும் தாக்கக் கூடியவை. ஓலைச்சுவடிகளுக்கு இவற்றால் பாதிப்பு இல்லை. வௌ¢ளிமீனை இராமபாணம், சக்கரைப்பூச்சி எனப் பல பெயர்களால் அழைப்பர். இப்பூச்சி, கேரட்டின் அமைப்புடன் சுமார் 2.5மி.மீட்டரிலிருந்து 3.5செ.மீட்டர் நீளம் கொண்டது. இது வெளிர்ச்சாம்பல் நிறமுடையது. இதன் தலையில் ஆண்டெனா போன்ற அமைப்பும் மூன்று வால்களும் இருக்கும். இதன் வாயமைப்பு பொருட்களின் மேற்பகுதியைச் சுரண்டிச் சாப்பிடும் வகையில் அமைந்துள்ளது. ஆகையால் இப்பூச்சிகள் காகிதத்தைவிட காகிதம் ஈரமாக உள்ள நிலையில், அதன் மீது பூசப்பட்டுள்ள மேற்பூச்சுப் பொருட்களான (Loading Materials) மாவுப் பொருட்களை சுரண்டிச் சாப்பிடுவதால் காகிதச் சுவடிகள் அழிவிற்குள்ளாகின்றன.
அதுபோல புத்தகப் பேன்கள் எனப்படும் புத்தகச் செல்கள், ஓலைச்சுவடிகளின் மேல் வளரும் பூஞ்சைக் காளாணையும் பசைப் பொருட்களையும் சுரண்டித் திண்ணும் வாய் அமைப்பு கொண்டவை. இப்பூச்சிகளால் ஓலைச்சுவடிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பு இல்லை, எனினும் தொடர்ந்து இப்பூச்சிகள் சுரண்டித் தின்பதால் ஓலைச்சுவடிகளில் துளைகளை ஏற்படுத்தி அழிவிற்குள்ளாக்கும்.
v. சிறு பிராணிகள்
சுண்டெலி, எலி, அணில் போன்ற பிராணிகளாலும் சுவடிகள் அழிவிற்குள்ளாகின்றன. இப்பிராணிகள் சுவடிகளை உணவாக உட்கொள்வதில்லை. இதன் பல்லமைப்பினாலும் தங்குவதற்கு மிருதுவான இடத்தைத் தேடுவதாலும் சுவடிகளைக் கடித்துத் தூளாக்கிச் சேதமடையச் செய்கின்றன.
இ. வேதிமக் காரணிகள்
சுற்றுப்புற மாசுவினாலும், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிருவம் வேதிமக் கழிவுப் பொருட்களினாலும், சுவடிகளின் மேலே பாதுகாப்பிற்காகப் பூசப்படும் மேற்பூச்சினாலும் சுவடிகள் வேதிமாற்றத்திற்குள்ளாகின்றன. சுவடிகளைப் பாதிக்கும் இவ்வகையான காரணிகளே வேதிமக் காரணிகள்.
1. வேதிமக் கழிவுப்பொருட்கள்
விஞ்ஞான வளர்ச்சியினாலும் தொழிற் புரட்சியினாலும் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்கள், இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றில் அதிகப்படியாக சல்பர்-டை-ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் உள்ளன. கடலோர நகரங்களில் உள்ள காற்றில் உப்பு நீர்த் துகள்கள் உள்ளன. இது போன்ற வேதிப்பொருட்கள் காற்றில் உள்ள ஈரத்துடன் சேர்ந்து சுவடிகளின் மீது கார்பானிக் அமிலம், சல்புரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் என படியும். இவ்வகை அமிலங்கள் சுவடிகளின் நார்ப்பொருட்களைத் தாக்கி நிறமாற்றம் ஏற்படுத்திச் சிதிலமடையச் செய்கின்றன.
மேலும் வேதிமப் பொருட்களால் செல்லுலோஸ் எனப்படும் தாவர நார்ப்பொருளை ஏற்படுத்திச் சங்கிலித் தொடர்பு பாதிப்பதால் சுவடிகள் சிதிலமடைகின்றன. அமிலத் தன்மையால் சுவடிகளில் உள்ள லிக்னின் என்ற பொருளுடன் வினைபுரிந்து நிறமாற்றம் அடைகிறது. காற்றில் அதிகமாக உள்ள பிராணவாயுவுடன் ஆக்ஸிடேசன் என்ற வினை புரிவதாலும் நிறமாற்றமும் சிதிலமும் ஏற்படுகிறது. வேதிமாற்றத்தால் ஏற்படும் ஓசோன் வாயுவினால் சுவடிகள் விரைவில் அழிவு நிலையை அடையும்.
கென்ஸோ தோய்ஷி மற்றும் டி. கென்ஜோ ஆகியோர் புதிய கான்கிரிட் கட்டிங்களில் இரண்டு வேனிற்காலங்களுக்கு முன் சுவடிகளையும் ஆவணங்களையும் வைப்பதால் கட்டிடப் பொருட்களிலிருந்து வெளியாகும் வேதிப்பொருட்களின் தாக்கம் சுவடிகளுக்கு ஏற்படும் எனக் கூறியுள்ளனர்.
செயற்கை அழிவு
இயற்கையைவிட செயற்கையாகவே பெரும்பான்மையான சுவடிகள் அழிந்திருக்கின்றன. மக்களின் விருப்பு, வெறுப்பு, சமயக் காழ்ப்புணர்ச்சி, மன்னர்களுக்கிடையேயான போர் போன்ற பல்வேறு காரணங்களால் சுவடிகள் அழிவிற்குள்ளாகியுள்ளன. இவற்றைச் செயற்கை அழிவு எனக் கொள்ளலாம்.
வெற்றிபெற்ற வேந்தன் அந்நாட்டில் பகைவரின் வரலாற்றையும் கலைகளையும் அழித்துத் தன்னுடைய தனித்தன்மையை வளர்க்க ஈடுபடுவர். அவ்வாறு தன் தனித்தன்மையை வளர்க்க முற்பட்டபோது அழிக்கப்பட்டவைகளில் பழமையை விளக்கும் கருக்கோலாக விளங்கிய ஓலைச்சுவடிகளும் இதில் அடங்கும். "காடக சோமாஜியாருக்கு ஏகபோகமதுவாக எழில் செப்பேடு கொடுத்தான், இவ்வூர் இரண்டின் செப்பேடு மறக்கேட்டில் அழிந்து போயின" என்னும் குறிப்பிலிருந்தும், "மதுரை மாநாட்டுக்குத் தலைவராய் போந்திருந்த வேற்று நாட்டவர் குதிரைக்கு வெந்நீர் காய்ச்சுதற்குத் தொகுத்திருந்த சுவடிகள் இருநூறு நாட்கள் பயன்பட்டன" என்னும் குறிப்பிலிருந்தும் உணரலாம்.
அடிக்கடி இடமாற்றம் செய்வதினாலும், பொருளுக்கு விற்கப்படுவதினாலும், ஆடிப்பெருக்கில் விடுவதினாலும், பயன்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் முறைகள் தெரியாததினாலும் சுவடிகள் அழிந்திருக்கின்றன. காரணம் தெரியாமலேயே பல சுவடிகள் அழிந்திருக்கின்றன. இதனை உ.வே.சாமிநாதையர் அவர்கள், "உத்தமதானபுரம் லிங்கப்பைர் என்பவர் சுவாமிமலை குறவஞ்சி நாடகம், உத்தமதானபுரம் அம்பிகை கணபதி கீர்த்தனை அவர்களுடைய குமாரர்களுடன் சேர்ந்து பாடிக்காட்டி இருக்கிறார்கள். இதை நான் என் காதால் கேட்டிருக்கிறேன். ஆனால், நான் பதிப்பிக்கும் போது ஒரு சுவடி கூட இல்லை" என்கிறார். மேலும், "தாம் தர்மபுரி ஆதீனத்தில் கண்ணால் பார்த்த வளையாபதி சுவடியானது தாம் பதிப்பிக்கத் தொடங்கிய காலத்தில் அச்சுவடி கிடைக்கவில்லை" என்றும் கூறுகிறார். இதனால்தான் சி.வை. தாமோதரம் பிள்யைவர்களின் பதிப்புப்பணி பற்றிய கருத்து வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. அவர், "தாம் பத்து வருடங்களுக்கு முன் படித்த சுவடி பதிப்பிக்கும்போது கிடைக்கவில்லை. அதனால்தான் என்னால் இயன்ற அளவு சுவடியில் உள்ளதை அச்சில் ஏற்ற முனைந்துள்ளேன். அச்சிலேற்ற வேண்டும் என்ற ஒரே கண்ணத்தால் பிழைகள் சில ஏற்பட வாய்ப்பேட்டிருக்கும். எனவே, அதனைத் திருத்தி வருங்காலத்தவர் முனைவார்கள் என்ற நம்பிக்கையில் பிழைகளோடும் பதிப்பித்து இருக்கிறேன்" என்ற கூற்று சுவடிக் காப்புக்கு வழி வகுக்கிறது.
1. போரினால் அழிவு
சுவடிகள், மன்னர்களிடையே நடந்த போர், அரசியல் மாற்றம், மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயருதல், மாற்றுச் சமயக் கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் அழிந்திருக்கின்றன.
மக்களின் கருத்துக்களைப் பதிய வைத்துப் பிற்காலச் சந்ததியினருக்குப் பயன்படுத்த எழுதப்பட்ட சுவடிகளைப் பாதுகாக்க கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே பல நூலகங்கள் உருவாகியுள்ளன. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட பல நூலகங்கள் மேற்குறிப்பிட்ட காணரங்களால் அழிந்திருக்கின்றன. அவ்வகையில் உலகில் புகழ்பெற்ற அலெக்ஸாண்ரியா நூலகத்தில் இருந்த ஏழு லட்சம் சுவடிகள் கி.பி.48இல் ஜீலியஸ் சீசரால் படையெடுக்கப்பட்ட போது அழிக்கப்பட்டுள்ளன. சுதந்திர ஆர்வம் கொண்ட உமர்முக்தர் இஸ்லாமிய வேத நூலான குரானைத் தவிர மற்ற நூல்கள் இருக்கக் கூடாது என்ற கருத்துகொண்டு பல நூல்களை அழித்திருக்கின்றார்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டிருந்த ஏதன்ஸ் நூலகம் அழிக்கப் பட்டுள்ளது. 3,00,000 நூல்களுடன் இருந்த ஆசியா மைனரிலிருந்த நூலகம் அழிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல கோயில்களிலும், அரண்மனைகளிலும் இருந்த நூலகங்கள், வேற்று மன்னர்களின் படையெடுப்பால் அழிந்திருக்கின்றன.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வியாபார நோக்கமாக இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்கள் நாடு பிடிக்கும் எண்ணத்தில் போட்டியிட்டுப் பல அரண்மனைகளை அழித்து அதிலிருந்த சுவடிகளை இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவர்களால் அழிக்கப்பட்ட நூலகங்களுள் மிகவும் முக்கியமானது மைசூர் மன்னர் திப்புசுல்தானின் அரண்மனை நூலகமாகும். திப்புசுல்தான் 1799இல் ஆங்கிலேயரிடம் தோற்ற பின் அவ்வரண்மனைப் பொருட்களை ஆங்கிலேயர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இந்நூலகச் சுவடிகளை எடுத்துச் செல்லும் முன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சார்லஸ் ஸ்டுவார்ட் அட்டவணை ஒன்றைத் தயாரித்து அச்சிட்டுள்ளார். அவ்வட்டவணையின் ஒரு பிரதி தஞ்சை சரஸ்வதிமகால் நூலகத்தில் பாதுகாக்கப்படுவதை அறியமுடிகிறது.
பத்தாண்டுகளுக்கு முன் நடந்த இலங்கை உள்நாட்டுப் போரில் மிகவும் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் அழிந்துள்ளது. இதுபோன்று பல பண்டைக்கால நூலகங்கள் போரினால் அழிந்திருக்கின்றன.
2. தீயினால் அழிவு
சுவடிகள், போரினால் மட்டுமின்றி பல காரணங்களால் மன்னர்களாலும், சமய வாதிகளாலும் தீயினால் அழிந்திருக்கின்றன. சுவடிகள் மற்றும் புத்தகங்களுக்கு நெருப்பு வைத்த முதல் நாடு சீனா எனக் கூறப்படுகிறது.
கி.மு.220இல் சீனாவைச் சின் வம்ச மன்னர் ஆண்டு வந்தார். இவர் சீனப் பெருஞ்சவரைக் கட்டத் தொடங்கியவர். இம்மன்னருக்குக் கன்பூசியம் பிடிக்காததால் கன்பூசிய நூல்களைத் தீயிலிட்டுள்ளார்.
உறிட்லர் ஆட்சிக்கு வந்ததும் ஜெர்மனியில் புத்தக எரிப்பு தொடங்கியதாகக் கூறப்படுகிறது. 1933ஆம் ஆண்டு மே 1ந்தேதி நள்ளிரவில் ஜெர்மன் பல்கலைக்கழக நூலகத்தை ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூட்டமாக வந்து எரித்தனர் என அதை நேரில் கண்ட வில்லியம் எல்ஷைலர் குறிப்பிடுகின்றார்.
1988இல் சோவியத் அறிவியல் கழக லெனின் கிரேடு நூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,00,000 நூல்கள் அழிவுற்றதாகக் கூறப்படுகிறது.
அன்பை வளர்க்க, பண்பை வளர்க்க எழுந்த சமயங்கள் உண்மையான சமய நோக்கத்தைப் புரிந்துக்கொள்ளத் தவறி சரியில்லாத முறைகளைக் கையாண்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட போர், பூசல்களினால் பல சுவடிகளும், அயல் சமயத்தவர் கோவில்களும் அங்கிருந்த நூலகங்களும் அழிவிற்குள்ளாகியிருக்கின்றன.
'நல்ல நூல்கள் அனலில் எரியாது; புனலில் மூழ்காது எதிர்க்கும்' என்று வீரம் பேசி, அனல் வாதம் - புனல் வாதம் காரணமாக ஏராளமான சமய நூல்கள் அழிவிற்குள்ளாகியிருக்கின்றன.
மதுரையில் சமணர்களுக்கும், ஞானசம்பந்தருக்கும் ஏற்பட்ட அனல் வாதத்தின் போது அவரவர் தாங்கள் எழுதிய சுவடிகளை நெருப்பிலிட்டுள்ளனர். சமணர்கள் எழுதிய ஓலைகள் தீயில் எரிந்து சாம்பலாக, சம்பந்தர் எழுதிய ஓலைகள் நெருப்பில் எரியாமல் அப்படியே இருந்தன எனவும்; அதேபோன்று புனல் வாதத்தின் போது எழுதி ஆற்றிலிட்ட சுவடிகளில் சமணர்கள் எழுதிய ஓலைகள் வைகை நீரில் அடித்துச் செல்ல, சம்பந்தர் எழுதிய ஓலைகள் மட்டும் ஆற்றை எதிர்த்துச் சென்று கரை ஒதுங்கின எனவும் கூறப்படுகின்றன.
இதுபோன்ற போட்டிகளால் சமணர்கள் எழுதிய சுவடிகள் மற்றவர்கள் பயன்பாட்டிற்குக் கிடைக்கவில்லை. அனல் வாதம், புனல் வாதம் நிகழ்வுகளை விஞ்ஞானப் பூர்வமாகச் சித்தித்தோமானால் ஓலைகள் தீயில் எரியாமலும், நீரில் மூழ்காமலும் இருக்க ஏதேனும் காப்பு முறை செய்திருக்கக் கூடும் எனலாம்.
அறியாமையினால் அழிவு
நமது நாட்டின் பாரம்பரியப் பண்பாடு, கலை, வரலாறு பற்றிக் கூறும் சுவடிகள் மக்களின் அறியாமையாலும், சூழ்நிலைகளால் செய்த தவறுகளினாலும் அழிவிற்குள்ளாகியிருக்கின்றன. அறியாமை அழிவானது மக்கள் சுவடிகளைப் பற்றி அறிந்துகொள்ளாததனால் ஏற்படுவதாகும்.
அந்நியருக்குச் சுவடிகள் விற்பனை செய்ததால் பல வெளிநாட்டு நூலகங்களில் காட்சிப் பொருட்களாகவும், சில நூலகங்களில் மற்றவர் அறியா வண்ணம் சிறை பிடிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.
நமது முன்னோர்களைப் பின்பற்றி சரியான காரணத்தை அறியாத மூடப் பழக்கங்களாலும், பாதுகாப்பு என்ற பெயரில் செய்த தவறான பாதுகாப்பு முறைகளாலும் சுவடிகள் அழிந்திருக்கின்றன.
1. சுவடிகளைத் தீயிலிடல்
சமயப் பூசல்கள் மட்டுமின்றி அறியாமையினாலும் சுவடிகளைத் தீயிலிட்டுள்ளனர். இயற்கைக் காரணிகளால் சிதிலமடைந்த சுவடிகளில் உள்ள பூச்சிகள் மற்ற சுவடிகளுக்குப் பரவுவதைத் தடுக்க, சிதிலமடைந்த சுவடிக்கு மாற்றுச் சுவடி எடுத்துக்கொண்ட பின் பழைய சுவடிகளை நெய்யில் தோய்த்து யாகம் செய்யும் போது நெருப்பிலிடுவது வழக்கமாக இருந்துள்ளது. நாளடைவில் மூதாதையர்கள் இறந்தபின் அவர்கள் பயன்படுத்திய சுவடிகளை நெருப்பிலிடுவதை அறியாமையால் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் பல சுவடிகள் அழிந்திருகின்றன.
தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்கள் சுவடிகளைப் பதிப்பித்து வெளியிடும் பொருட்டு பல்வேறு இடங்களில் சுவடிகளைத் தேடியுள்ளார். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் கரிவலம் வந்தபோது, அங்கு நல்லூர் வரகுணபாண்டியனின் ஏட்டுச் சுவடிகள் கோவிலில் இருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியுள்ளார். பின், தேவஸ்தான தர்மகர்த்தாவைப் பார்த்துக் கேட்ட பொழுது அவரோ பழைய சுவடிகளை கண்ட கண்ட இடங்களில் போடக் கூடாது எனச் சிலர் கூறியபடி, அக்கினி வளர்த்து சுவடிகளை நெய்யில் தோய்த்து ஆகுதி செய்யப்பட்டுவிட்டது எனக் கூறியதைக் கேட்டு மிகவும் கவலை கொண்டிருக்கின்றார்.
2. சுவடிகளை ஆற்றில்விடல்
சுவடிகளை நெருப்பில் இட்டது போன்று காலத்தால் சேதமடைந்த பழைய சுவடிகளைப் பார்த்துப் படியெடுத்துக் கொண்டு இனி பழைய சுவடிகள் பயன்படாது என அறிந்த பின் அதில் உள்ள தூசிகளும், பூஞ்சைகளும், பூச்சிகளும் மற்ற சுவடிகளுக்குப் பரவுதல் கூடாது என்ற எண்ணத்தில் புதுப் பிரதி செய்த பின் பாதிப்படைந்த சுவடிகளைச் சில நல்ல நாட்களில் ஆற்றிலிடுவது வழக்கமாக இருந்துள்ளது.
தமிழகத்தில் புதுப் புனலைக் கொண்டாடும் நாளான ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு அன்று சிதிலமடைந்த சுவடிகளை ஆற்றிலிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். அவ்வழக்கத்தை கண்மூடித் தனமாகப் பின்பற்றிய சந்ததியினர் ஆடிப்பெருக்கு, போகிப் பண்டிகை போன்ற காலங்களில் செய்யப்படும் ஒரு வகையான சடங்காகக் கொண்டு நல்ல சுவடிகளையும் ஆற்றில் வீசும் தவறுகள் நடந்திருக்கின்றன.
தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்கள் ஏடு தேடும் பணியாகத் திருநெல்வேலிக்குச் சென்றிருந்தபோது அங்குத் தெற்குப் புதுத் தெருவில் வசித்த வக்கில் சுப்பையா பிள்ளை என்பவரிடம் சில ஏடுகள் உண்டென்று கேள்வியுற்று அங்குச் சென்றார். அவர்கள், "எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக்கணக்காக இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து உபயோகமில்லாமற் போய்விட்டன. இடத்தை அடைத்துக் கொண்டு பார்க்கப் பிரயோசனமில்லாமல் இருந்த அவற்றை என்ன செய்வதென்று யோசித்தேன். அவற்றில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கோ எனக்குத் திறமை இல்லை. அழகான அச்சுப் புத்தகங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் அந்தக் குப்பையைச் சுமந்து கொண்டிருப்பதால் என்ன பயன் என எண்ணி ஒரு ஆடி பதினெட்டாம் பெருக்கன்று சுவடிகளைத் தேர் போலக் கட்டி விடுவது சம்பிரதாயமென்று சில முதிய பெண்மணிகள் கூறினார்கள். நானும் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடி மாதம் பதினெட்டாம் தேதி வாய்க்காலில் விட்டுவிட்டேன்" என்று கூறியதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டிருக்கின்றார்.
தனி நபர் மட்டுமின்றி சமயம் வளர்க்கத் தோன்றிய மடங்களிலும் இவ்வாறு நடந்துள்ளதை தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்கள் குறிப்பிடுகின்றார். "தருமபுர ஆதீனத்தின் புத்தக சாலைக்குச் சென்ற பொழுது அங்கு ஆயிரக் கணக்கில் ஏடுகள் இருந்தன எனவும், அவற்றை முறையாகக் கட்டி அடுக்கி வைத்திருந்ததாகவும், மறுமுறை சென்று அச்சுவடிகளைப் பற்றிக் கேட்ட பொழுது, 'சில தினங்களுக்கு முன் பதினெட்டாம் பெருக்கில் காவிரியில் கொண்டு போய் விட்டு விடுவதற்காகப் பல பழைய கணக்குச் சுருணைகளையும் சிதிலமான வேறு சுவடிகளையும் கட்டிச் சிறிய தேரில் வைத்துக் கொண்டு போனார்கள்" என்று காறுபாறு ஸ்ரீசுவாமிநாதத் தம்பிரான் கூறியதாகக் குறிப்பிடுகின்றார்.
கல்வி நாகரிகம் வளர்ச்சியடைந்த இந்நாளிலும் சில இடங்களில் இதனைக் கண்மூடித்தனமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுவதனைப் பல நிகழ்வுகள் மூலம் அறியமுடிகிறது. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இலத்தூர் சுந்தரராஜ பட்டாச்சாரியர் படைப்புகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்த காலத்து அவ்வாய்வாளர் தமக்கேற்பட்ட அனுபவத்தினைப் பின்வருமாறு கூறுகின்றார்.
'தலைப்பு மட்டுமே தெரிந்து அதன் நூல்களைத் தேடி அப்புலவரின் சந்ததியினரிடம் கேட்கும் பொழுது அவர்கள் எங்கள் மூதாதையரான சந்தரராஜ பட்டாசாரியர் சுவடிகள் எங்கள் ஊர்த் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள அனந்தநாராயண பட்டாச்சாரியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியதை அடுத்து அவரிடம் கேட்ட பொழுது, அவர் அந்தச் சுவடிகள் அனைத்தும் மந்திரச் சுவடிகள் அவற்றை எனது இல்லத்தில் வைத்திருக்கும் வரை எனக்குச் சரியாக தூக்கம் வரவில்லை. ஆகையால் பழைய வழக்கப்படி அனைத்துச் சுவடிகளையும் ஓர் ஆடி பதினெட்டில் தாமிரபரணி ஆற்றில் விட்டுவிட்டேன் என்று மகிழ்ச்சியாகக் கூறியதாகக் கூறினார்' என்கின்றார்.
3. வெளிநாட்டவர் எடுத்துச்செல்லல்
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாரதத்திற்கும் மேலைநாடுகளுக்கும் வர்த்தகத் தொடர்பு இருந்தமையைத் தொல்பொருள் அகழாய்வின் மூலம் அறியமுடிகிறது.
புத்த மத்தின்பால் ஈடுபாடு கொண்டு கீழைநாட்டு கல்வியாளர்களும், யாத்திரிகர்களும் பாரதத்திற்கு வந்து கல்வி கற்றதுடன் நூற்றுக்கணக்கான சுவடிகளைப் பாரதத்திலிருந்து தொகுத்து எடுத்துச் சென்றுள்ளார்கள். பாரதத்திற்கு வந்த வெளிநாட்டு யாத்திரிகர்களில் முக்கியமானவர்களான பாகியான், யுவான்சுவாங், ஈத்சிங் போன்றோர்களும்; கொரியா நாட்டிலிருந்து வந்த ஆர்யவர்மன், உய்நிச் (Hwvi-Nich) தாவோசி போன்றவர்களும் பல சுவடிகளை எடுத்துச் சென்றுள்ளனர் என்பதைப் பல குறிப்புகள் மூலம் அறியமுடிகிறது.
4. வெளிநாட்டவர்க்குச் சுவடிகளை விற்றல்
வெளிநாட்டவர்க்குச் சுவடிகள் விற்பதை அறியாமை அழிவு எனக் கூறலாம். மேலை நாட்டு ஆய்வாளர்களும், கலை ஆர்வலர்களும், அறிஞர்களும் பல்வேறு கீழ்த்திசை நாடுகளில் கள ஆய்வுப் பணி செய்தவர்களும், வியாபாரத்திற்காக வந்த பல்வேறு நாட்டு வணிகர்களும், இந்நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களும் சுவடிகளை வாங்கிச் சென்றுள்ளார்கள். சுவடிகளுக்கு நல்ல விலை கொடுக்கத் தயாராக இருந்தனர். நம் நாட்டுப் பொருளாதாரச் சூழ்நிலை அவர்கள் எண்ணம் ஈடேற வாய்ப்பளித்தது எனலாம். அவர்களின் தேவையறிந்து ஒத்துழைப்பதற்கென்றே ஆங்காங்கே வியாபாரிகளும் தரகர்களும் இருந்துள்ளனர். இந்தியர்களால் விற்கப்பட்டு அந்நியர்களால் விலைக்கு வாங்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான சுவடிகள் மேலை நாட்டு நூலகங்களிலும், அருங்காட்சியங்களிலும் தலைப்புகூடத் தெரியாமல் யாருக்கும் பயன்படாமல் காட்சிப் பொருட்களாக வைத்துள்ளனர். இதனால் அதில் பொதிந்துள்ள அறிய தகவல்கள் நமக்குப் தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது. இன்றும் பாரதத்தில் பல்வேறு அரும்பொருள்களும், சுவடிகளும் சில விற்பனை நிலையங்களின் மூலம் மறைமுகமாக வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
5. பேணாக்குறை
கோவில்கள், அரண்மனைகள், மடங்கள் மற்றும் இல்லங்களில் உள்ள சுவடிகளைப் பாதுகாத்து வருபவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் குறைவாக இருந்தாலோ, அதன் முக்கியத்துவத்தைப் பற்றி அறியாமல் இருந்தாலோ சுவடிகள் அழிவிற்குள்ளாகின்றன. அது மட்டுமின்றி இருக்கக் கூடிய சுவடிகளைப் பராமரிக்கும் வசதி இல்லாதவர்கள், அதைப் பற்றி அறியாதவர்கள், சுவடி தன்னிடம் இருப்பது பெருமை எனக் கருதிக்கொண்டு அவற்றை வருடத்திற்கு ஒருமுறை பூசை செய்து விட்டு அப்படியே வைத்திருப்பவர்கள் போன்றோரின் பேணாக் குறையால் பல சுவடிகள் அழிவிற்குள்ளாயின.
ஈரோடு மாவட்டம் வேலாம் பாளையம் என்ற ஊரில் சுவடிகள் உள்ளன என்பதை அறிந்து அவற்றைத் தொகுக்கச் சென்றபோது அங்கு அவர்கள் சுவடிகளைத் தேவையற்ற சாமான்கள் அடுக்கி வைக்கும் அறையில் இரண்டு சாக்குகளில் மூட்டையாகக் கட்டி வைத்திருந்தனர். அந்தக் குடும்பத்தில் மூத்தவர் இருந்த வரை அம்மூட்டைகளைச் சரஸ்வதி பூசையன்று எடுத்து வழிபாடு செய்த பின் அப்படியே வைத்து விடுவது வழக்கம் எனக் கூறினார்கள். பல ஆண்டுக் காலம் சுவடிகளைப் பிரித்துச் சுத்தம் செய்யாததால் அனைத்து ஓலைகளும் சிதிலமடைந்திருந்தன. பூச்சிகளும், எலிகளும் சுவடிகளைப் பாதிக்கச் செய்திருந்தன.
அதே மாவட்டத்தில் உள்ள பவானி அருகில் கண்ணடிபாளையத்திலும் இதே நிலையைக் காணமுடிந்தது. சிலருக்குச் சுவடிகளை என்ன செய்வது என்று தெரியாமல் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. சிலர் மூதாதையர்கள் வைத்துச் சென்ற சொத்து எனக் கருதி அதை யாருக்கும் வழங்குவதில்லை.
தமிழகத்தில் காரைக்குடியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் மூன்றாவது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதும், சமய வளர்ச்சிக்காக நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரால் கோவிலூரில் ஏற்படுத்தப்பட்டதுமான மடமே கோவிலூர் மடமாகும். நூறு ஆண்டுகட்கு மேலாக அம்மடம் சமய வளர்ச்சிக்காகவும் பண்பாட்டிற்காகவும் பல்வேறு செயல்பாடுகளைச் செய்து வந்துள்ளது. இம்மடத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் உள்ளன. இங்குள்ள சுவடிகளின் பாதுகாப்பானது மடத்தை நிருவகிக்கும் மடாதிபதிகளின் ஆர்வத்தைப் பொறுத்தே உள்ளது எனலாம். தற்பொழுது உள்ள மடாதிபதிக்கு முன் இருந்த சிலருக்குச் சுவடிகளின் மீது ஆர்வமின்மையால் அவற்றைக் கையாளாமலும், சரியாகப் பேணாமலும் வைக்கப்பட்டிருந்தன. இதனால் பல சுவடிகள், சுவடிகளைப் பாதிக்கும் புழுக்களாலும், பூஞ்சைக் காளான்களாலும் அழிவிற்குள்ளாகியுள்ளன. தற்போதைய மடாதிபதி மிகுந்த ஆர்வத்துடன் சுவடிகள் பாதுகாப்பிற்கான முயற்சிகளைச் செய்து வருகின்றார்.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்து அரண்மனையில் 600க்கும் மேற்பட்ட சுவடிகள் மன்னர்களால் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. பணி நிமித்தம் காரணமாக மன்னரின் சந்ததியினர் வேறு இடத்திற்குக் குடியிருப்பை மாற்றியுள்ளனர். இதனால் அவ்வரண்மனையில் உள்ள சுவடிகள் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தன. அச்சுவடிகளைத் தஞ்சை சரஸ்வதிமகால் நூலகத்திற்கு எடுத்து வர, மரஅலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சுவடிகளைத் திறந்து பார்க்கும்போது பாதிக்கும் மேற்பட்ட சுவடிகள் பூஞ்சைக் காளாகளாலும் பூச்சிகளாலும் பாதிப்படைந்துள்ளது தெரியவந்தது.
6. மூடப்பழக்கம்
மன்னர்களுக்கிடையேயான போர்கள், சமயக் காழ்ப்புணர்ச்சி போன்றவை பழங்காலத்தில் சுவடிகள் அழிவிற்குக் காரணமாக இருந்துள்ளன. ஆனால் கல்வி, கலை, பண்பாடு, விஞ்ஞான வளர்ச்சி அடைந்த 21ஆம் நூற்றாண்டில் மக்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவரைப் பற்றி அவதூராகவோ, தவறாகவோ எழுதினால் அவர்களுடன் போரிடுவது போன்ற வன்முறையில் ஈடுபட்டு பொருள் மற்றும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு 2004ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி மகாராஸ்டிரா மாநிலம் புனா நகரில் உள்ள பண்டார்க்கர் கீழ்த்திசை ஆராய்ச்சி நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான சுவடிகள், நூல்கள் சூரையாடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. பல எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் அவர்கள் தலைவராக மதிக்கும் சிவாஜியைப் பற்றி அமெரிக்க வரலாற்று ஆராய்ச்சியாளர் அந்நூலகத்தைப் பயன்படுத்தி எழுதிய சிவாஜி முஸ்ல¦ம் இந்தியாவில் இந்து மன்னன் என்ற நூலே யாகும். இது போன்ற அழிவினை ஏற்படுத்துபவர்கள் சுவடிகளை மீண்டும் எழுத முடியுமா என எண்ணியிருந்தால் இந்த அழிவு ஏற்பட்டிருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக