வியாழன், 13 செப்டம்பர், 2018

கம்பனில் சூழ்ச்சிப் பந்தல்

      காலந்தோறும் எழுந்த காவியங்களில் தமிழகத்தில் மிகுதியும் போற்றப் பெற்றது கம்பரின் இராமகதையாகும்.  இதைக் கம்பராமாயணம் என்று அழைப்பர்.  கம்பனின் காவியத்தில் இடம்பெற்றுள்ள சூழ்ச்சிகளை வெளிக்காட்டும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

இயல்பாக நடக்கவேண்டிய காரியங்களைத் தடுத்து எதிர்வினையைத் தூண்டும் விதமாக மாற்றுவது சூழ்ச்சி எனலாம்.  சூழ்ச்சியை நேர்முகச் சூழ்ச்சி என்றும், மறைமுகச் சூழ்ச்சி என்றும் வகைப்படுத்தலாம்.  சூழ்ச்சி செய்பவர் தானே களத்தில் இறங்கிச் செய்யும் சூழ்ச்சியை நேர்முகச் சூழ்ச்சி என்றும்,  சூழ்ச்சி செய்வர் களத்தில் இறங்காமல் தனக்கொரு ஏவலாளை வைத்துச் செய்யும் சூழ்ச்சியை மறைமுகச் சூழ்ச்சி என்றும் கொள்ளலாம்.  சூழ்ச்சி நடத்தும் மாந்தரைக் கொண்டு ஆண் சூழ்ச்சி என்றும், பெண் சூழ்ச்சி என்று நேர்முகச் சூழ்ச்சியைப் பாகுபடுத்தலாம்.  அதுபோல், ஆண் - ஆண் சூழ்ச்சி என்றும், பெண் - பெண் சூழ்ச்சி என்றும், ஆண்-பெண் சூழ்ச்சி என்றும், பெண் - ஆண் சூழ்ச்சி என்று மறைமுகச் சூழ்ச்சியைக் கொள்ளலாம்.  கம்பராமாயணத்தில் பெண்ணால் ஏற்படும் மறைமுகச் சூழ்ச்சிகளே இடம்பெற்றுள்ளன.  இவ்வகையில், மந்தரை என்ற கூனியால் பெண் - பெண் என்ற மறைமுகச் சூழ்ச்சியும், சூர்ப்பனகையால் பெண் - ஆண் என்ற மறைமுகச் சூழ்ச்சியும் வெளிப்படக் காணலாம்.

கூனியின் சூழ்ச்சிப் பந்தல்

சூழ்ச்சிக்காரக் கிழவியைக் கம்பர் மந்தரை என்று சில இடங்களிலும், கூனி என்று பல இடங்களிலும் குறிப்பிடுகின்றார்.  வடமொழிச் சொல்லான மந்தரையைக் கம்பர் கூனி என்று தமிழ்ப்படுத்திப் பயன்படுத்துகின்றார்.  மந்தரை என்ற வடமொழிச் சொல்லிற்குக் 'குனிந்த, வளைந்த, கோணலான, கூனல் முதுகுடைய, மத்து' என அகராதிகள் பொருளுரைக்கின்றன.  மந்தரை எனும் சொல்லைவிட கூனி எனும் சொல்லையே கம்பர் அதிகம் பயன்படுத்துகின்றார்.

'கொடுமனக் கூனி' என்றே கம்பன் இவளை முதன் முதலில் தம் காவியத்தில் அறிமுகப்படுத்துகின்றான்.  கூனியின் உடல் மட்டுமன்று உள்ளமும் ஊனமுடையதே, வளைவுடையதே, பிறப்பிலேயே கயமைக் குணம் நிறைந்தவளாகத் திகழும் கூனியைக் கம்பன்,

"தோன்றிய கூனியும், துடிக்கும் நெஞ்சினாள்
ஊன்றிய வெகுளியாள், உளைக்கும் உள்ளத்தாள்
கான்றுஎரி நயனத்தாள், கதிக்கும் சொல்லினாள்
மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள்" 
(கம்ப.அயோ. மந்தரை சூழ்ச்சிப் படலம், பா.48)

என்கின்றார்.  இப்பண்புகள் நிறைந்த கூனி தன்னுடைய மறைமுகச் சூழ்ச்சியைக் கைகேயியைக் கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றுகின்றாள்.  

கொடிய நெஞ்சம் படைத்தவர்கள், மிகச்சிறிய செயலைக் கூட மறக்காமல் காலம் வரும்போது தன்னாலோ பிறரைக் கொண்டோ பழி தீர்த்துக்கொள்ள தயங்கமாட்டார்கள்.  இதற்காக எந்தவொரு இழப்பையும் அவர்கள் ஏற்கத் தயங்குவதும் இல்லை.  இளமைக் காலத்தில் இராமன் உண்டையால் அடித்ததை மனதில் இருத்திக் கொண்ட கூனி, தக்க சமயத்தில் பழி தீர்க்கக் காத்திருந்தவள் போல் அவளின் செயற்பாடுகள் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.  தனக்கு நேர்ந்த இவ்வித இன்னல்களுக்குத் தான் இளமையில் கூனியின் மீது உண்டை எய்த நிகழ்ச்சிக்குக் கூனி செய்த சூழ்ச்சியே காரணம் என்று இராமபிரானே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கின்றான்.  இதனைக் கம்பர், 

"சிறியர்என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்றுஇந்
நெறிஇகழ்ந்து, யான்ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு
குறியது ஆம்மேனி ஆய கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின், வெந்துயர்க் கடலில் வீழ்ந்தேன்"
(கம்ப. கிட்கிந்தா. அரசியற் படலம், பா.12)

என்று இராமன், சுக்கிரீவனுக்கு அரசியல் அறம் உரைக்கின்ற காலத்தில் உணர்த்துவதைக் காணும் போது இன்னல்கள் வரும் போது, தன்னுடைய முன்செயல்களில் நடந்த தவறுகளை எண்ணிப்பார்க்கும் இராமனின் பண்பு வெளிப்பட கூனியின் சூழ்ச்சிச் செயல்கள் பந்தலாகின்றன.

தசரதனின் மனைவியர் மூவரில் அதிகமாக அன்பைப் பெற்றவள் இளைய மனைவியான கைகேயியே.  தசரதன் தன்னிடம் மற்ற மனைவியர்களைக் காட்டிலும் மிகவும் அன்பாக இருப்பதைக் கண்டு கோசலை மற்றும் சுமித்திரையை கைகேயி ஒருபொருட்டாக மதிப்பதில்லை.  தசரதனும் தனது உள்ளத்தில் கைகேயிருக்கு முதலிடம் கொடுத்திருந்தான்.  இச்சமயத்தில் கோசலை, சுமித்திரை மற்றும் கைகேயி ஆகியோர்களுக்குப் புதல்வர்கள் உண்டாகியபோது தசரதன் கோசலையின் மகன் இராமன் மீது மிகுந்த பாசம் வைக்கின்றான்.  மனைவி என்ற நிலையில் கைகேயிக்கு முதலிடமும், மகன் என்ற நிலையில் கோசலையின் வயிற்றில் பிறந்த இராமனுக்கு முதலிடமும்  தசரதன் தம்முடைய உள்ளத்தில் இடம் கொடுத்திருந்தான்.  இந்நிலையில், கோசலையின் மகன் இராமன் மீது கைகேயி தன் மகனைக் காட்டிலும் அன்பைச் செலுத்தியது இயற்கையின் செயலே ஆகும்.  இந்த இயற்கைச் செயலை உணராதிருந்த நிலைப்பாட்டை, கைகேயின் உள்மனத்தில் அமிழ்ந்து கிடந்த பரதன் மீதான பாசத்தை வெளிக்காட்டியவள் கூனியே ஆவாள்.

"வாழ்ந்தனள் கோசலை மதியினால்" 

என்று கூனி கூற, 

"மன்னர் மன்னனேல் கணவன்; 
மகன் பன்னரும் பெரும்புகழ்ப் பரதன்" 

என்று கைகேயி பதிலுரைக்கின்றாள்.  இங்கே இராமன் மீது கைகேயி வைத்திருந்து அன்பு, உறவு நீங்கிவிடுகிறது.  இந்தத் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கைகேயின் மனதை முற்றிலும் மாற்றிவிடுகின்றான்.  கூனியின் சூழ்ச்சி இல்லை என்றால் கைகேயின் குறை உள்ளத்தை அறிந்திருக்கவே வாய்ப்பில்லை.

கூனி, கைகேயின் துயிலைக் குலைத்துத் தனது சொற்பெருக்கால் அவளது தூய சிந்தனையைத் திரித்துத், தீய வரங்கள் இரண்டனைக் கேட்டுப் பெறுமாறு வலியுறுத்துகின்றான்.  கூனியின் சொற்சூழ்ச்சிக்கு ஆட்பட்ட கைகேயி துயரத்தில் ஆழ்ந்தவளாகக் காணப்பட, மன்னன் தசரதனும் கைகேயின் துயர்க்கோலத்தைக் காண, வேண்டுவது யாதோ கேள் தருகின்றேன் என்று கூற, கைகேயி இரண்டு வரங்களைக் கேட்கின்றாள்.  அவ்வளவு தானே என்று அவன் மீது கொண்ட மோகத்தால் மன்னன் தசரதனும் 'வரமீந்தேன்' என்று நிபந்தனை ஏதுமின்றி வரங்களைத் தருகின்றான்.

மன்னன் கைகேயின் மயக்கத்தில் கிடந்த காலத்தில் பெற்ற வரத்தினை கூனி தன்னுடைய சூழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றாள்.  கூனியால் தூண்டப்பெற்ற கைகேயி, இராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கவிருக்கும் சமயத்தில் தனக்கு மன்னன் ஏற்கெனவே கொடுத்த இரண்டு வரங்களை இச்சமயம் வேண்டிப் பெறுகின்றாள்.  இராமன் காடாளவும், தன்மகன் பரதன் நாடாளவும் வேண்டும் என்ற இரண்டு வரங்களைக் கேட்ட பிறகு, தசரதன் ஆழ்ந்த துயரக் கடலில் வீழ்கின்றான்.  தசரதன் அலமரும் நிலையில் 'இவளது சிந்தை திரிந்ததெங்ஙன்?' என்றொரு ஆய்வு வினாவை அகத்தே கிளர, அவளை நோக்கி, 

".............................................. நீ திகைத்தது உண்டா?
பொய்ந்நிலை யோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ?"
(கம்ப.அயோத். கைகேயி சூழ்வினை.பா.22)

என்றொரு விசாரனை செய்கின்றான்.  இதனை எதிர்நோக்கிக் காத்திருந்தவள் போன்று, அவளும் இமைப்பொழுது இடைவெளியும் இடைப்படா வண்ணம், 

"திசைத்ததும் இல்லை, எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை, முன்ஈந்த இவ்வரங்கள்
குசைப்பரியோய்! தரின், இன்று கொள்வென், அன்றேல்
வசைத்திறன் நின்வயின் வைத்து மாள்வென் என்றாள்"
(கம்ப.அயோத்.கையேயி சூழ்வினை. பா.23)

என்று மறுமொழி கூறுகிறாள்.  மன்னனது இரத்தலும் இறைஞ்சுதலும் யாதொரு நல்விளைவுகளும் இன்றிக் கொன்னே கழிய எதிர்ப்பட்ட இரவு அவளுக்குத் தூக்கத்தினையும் அவனுக்குத் துக்கத்தினையும் அளித்தது.

மறுநாள் காலை வேளை, கைகேயின் தனி மாளிகையில் முன்னிரவு நடந்தது யாருக்கும் தெரியாததால் மக்கள், மன்னர்கள், வேதபாரகர், வசிட்டர் முதலியோர் அவையிடை நிறைந்து, கும்பங்களில் தூய நீரை நிரப்பி அரியணையும் அமைத்த வசிட்டன், சுமந்திரனை அனுப்பி மன்னன் தசரதனை அழைக்க, சுமந்திரன் கைகேயின் ஏவலால் இராமனை அழைத்து வரச்செய்தும், மன்னனையும் இராமனையும் சந்திக்க விடாமல் தான் பெற்ற வரத்தினை எடுத்துக் கூற சிற்றன்னை என்று பாராது தாயாகவே பார்த்து வளர்ந்த இராமன் மறுமொழி கூறாது, தந்தையைச் சந்திக்காது அன்னை கையேயின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கானகம் செல்கின்றான்.  இங்குக் கைகேயின் சூழ்ச்சிபந்தல் நிழலாடுகிறது.

கூனியின் சூழ்ச்சிக்குக் கைகேயி முற்றிலும் ஆட்பட்டுவிட்டாள் என்பதை அவளது செயற்பாடுகளில் இருந்து முற்றிலும் உணரமுடிகிறது.  கூனியின் சூழ்ச்சிக்குள் ஆட்பட்ட கைகேயி, அன்பு இரக்கம் எனும் நற்பண்புகளைத் துறந்து, கொண்டது முடிக்கும் குறிக்கோளோடு, எண்ணித் துணிந்து, தெளிவோடும் உறுதியோடும் செயல்படுகின்றாள்.  கொண்டவன் கண் முன்னே பார்மிசை வீழ்ந்து கிடப்பது கண்கூடாகக் கண்டும் மருளவில்லை; அருளின்றி நின்றிருந்த நிலையிலும், முனிவனைக் கண்டதும் சற்றும் தடுமாறவில்லை.  இத்தகைய விழிப்போடும் திறமையோடும் செயலாற்றிய கைகேயி எங்கும் கூனியைச் சுட்டிக் காட்டியவளாகத் தோன்றவில்லை.  

எனக்கு மன்னன் அளித்திருந்த வரத்தின் தன்மையாலேயே,
"வாக்கினால்வரம் தரக்கொண்டு, மைந்தனைப்
போக்கினேன், வனத்திடை போக்கி, பார்உனக்கு
ஆக்கினேன், அவன் அது பொறுக்கலாமையால்
நீக்கினான் தன்உயிர் நேமி வேந்து"    (கம்ப.அயோத்.பள்ளிப். பா.65)

என்று உறுதிப்படக் கூறுமளவுக்குக் கூனியின் சூழ்ச்சியால் மனத்தின்மை பெற்றவளாகக் கைகேயி காணப்படுகின்றாள்.

இராமன் கோல் துறந்த அயோத்தியா காண்ட நிகழ்ச்சிக்கும், கானும் கடலும் கடந்த ஆரணிய - கிட்கிந்தா - சுந்தர காண்ட நிகழ்ச்சிகளுக்கும், இராவணனை அழித்து இமையோர் இடுக்கண் காத்த யுத்த காண்ட நிகழ்ச்சிக்கும் கூனியும் கைகேயியும் செய்த சூழ்ச்சியே மூலமாக அமையக் காணலாம்.

சூர்ப்பனகையின் சூழ்ச்சிப் பந்தல்

கையேயி பெற்ற வரத்தின் சூழ்ச்சியால் கானக வாழ்வை மேற்கொண்டிருக்கும் இராமனைப் பஞ்சவடியில் சூர்ப்பனகை காண்கிறாள்.  ஏக பத்தினி விரதனாகிய இராமனின் அழகில் தணியா வேட்கை கொண்டு, அவனைக் கவர்ச்சிக்க வேண்டி வேற்றுருவம் தாங்கி, தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றாள்.  சூர்ப்பனகையின் மோகத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டு இருக்கும் போது பர்ணசாலையில் இருந்து சீதை வெளிப்படுகின்றாள்.  இராமனின் மனைவியைக் கண்டதும் சூர்ப்பனகை வெம்புகின்றாள்.  இவ்வளவு அழகு பொருந்திய சீதை மனைவியாக இருக்கும் போது அவன் என்னை எப்படி அணைவான் என்று எண்ணுகின்றாள். தானே அவனை வௌவ முற்பட்டு, உறுப்புகள் குறைக்கப் பெறுகின்றாள்.  ஆசையால் அவற்றையும் பொருத்துத் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு மன்றாடுகின்றாள்.  அவர்கள் ஏற்காத போழ்து, சூர்ப்பனகை சூழ்ச்சிப் பந்தல் அமைக்க முற்படுகின்றாள்.

இராமனை அடையவேண்டும் என்றால் அவனுடன் அணைந்திருக்கும் சீதையைப் பிரிக்கவேண்டும் என்று எண்ணமிட்டவளாய்ச் சகோதரன் இராவணனை சீதையின் மீது இச்சைகொள்ளச் செய்கின்றாள்.  உலகத்தில் எவ்வளவோ இன்பங்கள் இருக்க அண்ணா, சீதை உன் பக்கத்தில் இருந்தால் அவ்வின்பத்தின் தலையாயது அது என்று கூறிச் சீதையின் அழகைச் சூர்ப்பனகை வருணிக்கின்றாள்.

"வில்ஒக்கும் நுதல்என் றாலும், வேல்ஒக்கும் விழிஎன் றாலும்
பல்ஒக்கும் முத்துஎன் றாலும், பவளத்தை இதழ்என் றாலும்
சொல்ஒக்கும் பொருள் ஒவ்வாதால், சொல்லல்ஆம் உவமை உண்டா?
நெல்ஒக்கும் புல்என் றாலும், நேர்உரைத்து ஆக வற்றோ!"
(கம்ப.ஆரணிய. சூர்ப். சூழ்ச்சிப்படலம், பா.74)

"இந்திரன் சசியைப் பெற்றான், இருமூன்று வதனந் தோன்தன்
தந்தையும் உமையைப் பெற்றான், தாமரைச் செங்கணானும்
செந்திரு மகளைப் பெற்றான், சீதையைப் பெற்றாய் நீயும்
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே" 
(கம்ப.ஆரணிய. சூர்ப். சூழ்ச்சிப்படலம், பா.75)

என்று சீதையைச் சூர்ப்பனகை வருணிக்கும் பாங்கைப் பார்க்கும் போது இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதை உணராதவனாய் இராவணன் மயக்கம் கொள்கின்றான்.  சூர்ப்பனகை, 

"மீன்கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த
தேன்கொண்டு ஊடாடும் கூந்தல், சிற்றிடை சீதை என்னும்
மான்கொண்டு ஊடாடு நீ,உன் வாளை வலிஉலகம் காண
யான்கொண்டு ஊடாடும் வண்ணம், இராமனைத் தருகி என்பால்"
(கம்ப.ஆரணிய. சூர்ப். சூழ்ச்சிப்படலம், பா.79)

என்று வெளிப்படையாக இராமனை அடைய வேண்டும் என்ற வேட்கையை இராவணனிடம் கூறுகின்றாள்.  இருப்பினும் சீதையின் சிந்தையில் மூழ்கி இருந்த இராவணனுக்கு இந்தச் சூழ்ச்சி புலப்படாமல் போயிற்று.  சிந்தையில் தெளிவற்றவனாய்ச் சீதையைக் கவர்ந்து வந்து, வீழ்ந்த கதையைக் காண்கிறோம்.

இவ்வாறு கம்பனில் இரண்டு வகையான சூழ்ச்சிகள் பந்தலாய் நிழலாடி கதை முழுக்க விரவி, தன்னுடைய ஆளுமையைச் செலுத்தி இருப்பதைக் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக