வெள்ளி, 14 செப்டம்பர், 2018

சரஸ்வதிமகால் நூலக இலக்கியச் சுவடிகள்

சரபோஜி மகாராஜாவின் சரஸ்வதிமகால் நூலகம் தஞ்சைக்கு மகுடமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.  இந்நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மராட்டியம் போன்ற மொழிகளில் 7000க்கும் மேற்பட்ட சுவடிகள் இருக்கின்றன.  இச்சுவடிகளில் இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சோதிடம், மாந்திரீகம், வரலாறு போன்ற பல்வேறு பொருண்மைகள் இடம்பெற்றுள்ளன.  இவற்றில் ஏறக்குறைய 3000 தலைப்புகளில் இலக்கியச் சுவடிகள் காணப்படுகின்றன.  குறிப்பாக, தமிழ்ச் சுவடிகளில் இருக்கக்கூடிய சில இலக்கியச் செய்திகளை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வு எய்துகின்றேன்.

கதிர்காம வேலவன் தோத்திரம்

ஈழநாட்டில் - கதிர்காமத்தில் வீற்றிருக்கும் வேலாயுதப்பெருமானின் தோத்திர நூலாகக் ‘கதிர்காம வேலவன் தோத்திரம்’ அமைந்துள்ளது.  இது 40 கட்டளைக் கலித்துறையால் ஆனது.  கதிர்காம வேலாயுதப் பெருமானின் சிறப்பியல்புகளை இனிதாக விளக்குகின்றது.  ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ‘கதிரார் கடாசலனே’ என்ற மகுடம் அமைந்துள்ளது.  

கந்தர் காதல்

கந்தப்பெருமான் மீது காதல் கொண்ட பாட்டுடைத் தலைவி தன் காதலைக் கூறுவதாக கந்தர் காதல் அமைந்துள்ளது.   முருகப் பெருமானைச் சோலையில் சந்தித்துப் பிரிந்த வருத்தத்தைத் தலைவி தோழிக்குச் சொல்ல, தோழியின் உதவியால் தலைவனுடன் மீண்டும் கூடி இன்புறுவதை மையமாகக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 

 கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்

வைத்தியநாத தேசிகரின் ‘கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்’ திருவாரூரிலே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானின் அருகிலிருக்கும் ‘கமலாம்பிகை அம்மன்’ மீது பாடப்பெற்றுள்ளது.  திருவாரூரைக் கமலாலயம் என்றும் அழைப்பர்.  

காஞ்சி மன்னன் அம்மானை

காஞ்சி மாநகரை ஆண்ட மன்னன் ஒருவனின் (பூங்குறிச்சி ஊரைச் சேர்ந்த தேசிகன்) திருமணச் செய்திகளைக் கூறுவதாக இச்சுவடி அமைந்துள்ளது.  காஞ்சி மன்னன், பாண்டியன் மகள் மீது காதல் கொள்கிறான்.  பாண்டியன் பெண் கொடுக்க மறுக்கவே, மாறுவேடத்தில் காஞ்சி மன்னன் சென்று, பாண்டியன் மகளை மணக்கும் பகுதி இந்நூலின் முதற் பகுதியாக அமைகிறது.  காஞ்சி மன்னனின் காதல் மனைவி மசக்கையினால் மலைமிதுக்கம் பழம் வேண்டுகின்றாள்.  அதுபோது, மலைக்குச் செல்லும் காஞ்சி மன்னன் குறவர்களிடம் அகப்பட்டுக் கொள்கின்றான்.  அப்போது குறமாது ஒருத்தியின் உறவு உண்டாகின்றது.  இவ்வுறவு இடையில் முறியடிக்கப்பட்டுச் சோகத்தில் முடியும் பகுதி இந்நூலின் பிற்பகுதியாக அமைந்துள்ளது.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

காத்தவராயன் சுவாமி பேரில் கும்மிப்பாடல்

பெரியசாமிக் கவியின் ‘காத்தவராயன் சுவாமி பேரில் கும்மிப்பாடல்’ 189 பாடல்களாலானது.  சேப்பிளையானின் வளர்ப்பு மகனாக வளர்ந்த காத்தவராயன் ஆரியமாலை என்னும் பிராமணப் பெண்ணையும், ஓந்தாயி என்னும் தன்குலப் பெண்ணையும் மணந்தவன்.  பார்வதிதேவி எறும்பிற்குச் செய்த துன்பத்தின் பாவத்தைப் போக்க உருவாக்கின நந்தவனத்தில் காவலனாகப் பணிபுரிந்தவன் காத்தவராயன்.  பூவாயி என்பவளுடைய மதுக்கடையில் இருந்த காத்தவராயனைச் சேப்பிளையான் சிறைப்படுத்தி, அரசன் விசாரணை செய்து கழுவில் ஏற்றப்படக் காத்தவராயன் இறந்துவிடுகின்றான்.  இதனைக் கேட்ட ஆரியமாலையும் மடிந்துவிடுகின்றாள்.  இரு மனைவியர் வாழ்வால் உண்டாகும் இன்னல்களை இந்நூல் சுட்டிக்காட்டுகின்றது.  

குயில்ராமாயணம்

அமிர்த கவிராயரின் ‘குயில்ராமாயணம்’ 128 எண்சீர் ஆசிரிய விருத்தத்தால் ஆனது.  இராமாயணக் கதையைக் ‘கூவாய் குயிலே’ என்ற சொல்லை மகுடமாக வைத்து இந்நூல் பாடப்பெற்றுள்ளது.  இந்நூலைக் ‘கோகில ராமாயணம்’ என்றும் கூறுவர்.  கம்பராமாயணக் கதையைப் பின்பற்றி இந்நூல் அமைக்கப்பெற்றுள்ளது.  

குருநாதபூபதி பேரில் அட்டமங்கலம்

குருநாதபூபதி என்ற குறுநில மன்னனைத் தலைவனாகக் கொண்டு இந்நூல் பாடப்பெற்றுள்ளது.  குருநாதபூபதியைக் காத்தருள வேண்டுவதாக இப்பாடல்கள் அமைக்கப்பெற்றுள்ளன.  மாவை என்னும் ஊரைச் சேர்ந்த குருநாதபூபதியின் தலத்தைக் குறிப்பிட்டு அத்தலத்திலுள்ள இறைவியின் திருநாமத்தைச் சொல்லி, என் தலைவனைக் காக்க எனச் சிதம்பரத்தில் உள்ள சிவகாமசுந்தரியையும், காஞ்சி காமாட்சியையும், தஞ்சை ஆனந்தவல்லியையும், புள்ளிருக்குவேளூர் தையல்நாயகியையும், கமலையம்பதி கமலாம்பிகையையும் வேண்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது.  

குருக்ஷேத்திர மாலை

பாரதக் கதையில் வரும் குருக்ஷேத்திரன் கதையே ‘குருக்ஷேத்திர மாலை’யாக உருவாக்கப்பெற்றுள்ளது.  குருக்ஷேத்திரன் என்பவன் பூசை முடித்துப் பூந்தேரில் புறப்பட்டுப் போகும்போது மரகதத்தை உமிழ்கின்றான்.  அது தவம் புரிந்துகொண்டு இருந்த கண்ணன் கையில் விழுகிறது.  அதனால் மாயனின் சீற்றத்திற்குக் குருக்ஷேத்திரன் ஆளாகின்றான்.  இச்செயலிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள சிவன் - நான்முகன், எமன் ஆகியோரிடம் குருக்ஷேத்திரன் அடைக்கலம் வேண்டுகின்றான்.  அவர்கள் காரணம் கேட்டு அபயமளிக்க மறுத்துவிடுகின்றனர்.  பின் வேட்டைக்குச் சென்றுகொண்டு இருந்த அருச்சுனனிடம் அபயம் வேண்ட, அவன் காரணம் கேட்காது அபயமளித்துக் காரணம் கேட்கிறான்.  இருவரும் தவறுக்கு வருந்துகின்றனர்.  மாயன் நாரதரைத் தூதனுப்புகின்றார்.  நாரதரும் குருக்ஷேத்திரனுக்கு அபயமளித்தல் முறையன்று என்பதை பஞ்சவர்களுக்கு உணர்த்தி, பயனின்றி மீள்கின்றான்.  மாயன் படை திரட்டிட உத்தரவு இடுகின்றான்.  அருச்சுனன் மனைவிகளில் ஒருத்தியான சுபத்திரை மாயனிடம் முறையிட்டுத் தடுக்க முயன்று அதற்காகப் பாண்டவர்களிடம் தூது போகிறாள்.  தூது பயனற்றதாகப் போகவே போர் மூள்கின்றது.  போரில் அருச்சுனனைத் தவிர அனைவரும் மாள்கின்றனர்.  பின் அருச்சுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்குவாதம் நிகழ்கின்றது.  ‘அழியக்கூடிய உயிர் பெரிதன்று, அபயம் கொடுத்தவனை உயிர் கொடுத்தேனும் காக்கவேண்டும்’ என அருச்சுனன் கூற, மாயன் மகிழ்ந்து காண்டீபனாகுமென்று அருச்சுனனுக்கு ஆசி கூறி மாண்டவர்களை உயிர்ப்பித்து, குருக்ஷேத்திரனையும் மன்னிப்பதாக இக்கதை அமைந்துள்ளது.  

சட்டைநாதர் தோத்திரம்

காழியம்பதியில் கோயில் கொண்டுள்ள சட்டைநாதர் மீது இந்நூல் பாடப்பெற்றுள்ளது.  நரசிம்மத்தைக் கொன்ற நரசிம்மத் தலையினைத் தனது தலைமாலையின் நாகமணியாகவும், தோலைச் சட்டையாகவும் போர்த்திக் கொண்ட சட்டைநாதரின் சிறப்பியல்புகள் கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

சரப புராணம்

திருமலைநாயனாரின் ‘சரப புராணம்’ 431 விருத்தங்களாலானது.  ‘சரபம்’ என்பது ‘என்காற்புள்’ எனவும், ‘சிம்புள்’ எனவும் வழங்கப்பெறும். திருமால், இரணியனை அழிக்க எடுத்த நரசிம்ம அவதாரம்.  இரணியனைக் கொன்றதும் உலகை அழிக்கத் தொடங்கியது.  இதையழிக்கச் சிவபெருமான் பாதி மிருக உடலும் பாதி பறவை உடலும் மனித மார்பும் தோள்களும் நான்கு திருக்கரங்களும் சிம்மத் தலையும் கொண்ட சரப உரு எடுத்தார்.  இச்சரபம் நரசிங்கத்தைக் கிழித்தழித்ததை இந்நூல் சுட்டுகின்றது.  

சிவகாமியம்மன் பேரில் அகவல்

தில்லையில் கோயில் கொண்டு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் சிவகாமசுந்தரி அம்மை மீது பாடப்பெற்ற சிவகாமியம்மன் பேரில் அகவலில் அம்மையின் சிறப்பியல்புகள் விதந்தோதப் பெற்றுள்ளன.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

சிவபாரத சரித்திரம்

கவீந்திர பரமானந்தரின் வடமொழியிலான ‘சிவபாரத சரித்திரம்’ எனும் நூலின் தமிழ்மொழிபெயர்ப்பே இந்நூல்.  மராத்திய சாம்ராஜ்ஜியத்தை நிறுவிப் புகழ்கொண்ட ஆதிசிவாஜியின் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.  இதனுள் சம்போ மகாதேவருடைய மகிமையும், துளஜாதேவி அம்மனுடைய மகிமையும், தர்மார்த்த காம மோஷங்களுடைய மகிமையும், தீர்த்தங்களுடைய மகிமையும், துலுக்கர்களோடு யுத்தம் பண்ணியதும், அந்தத் துலுக்கர்களை நாசம் பண்ணுவதற்கு இவர் ஜென்மம் எடுத்ததும், பல ராஜாக்களுடைய வரலாறுகளும், யானை குதிரைகளுடைய இலட்சணங்களும், கோட்டைக் கொத்தலங்களுடைய இலட்சணங்களும், ராஜாக்களுடைய நீதிமுறைகளும், சூரிய வம்சத்திலே உதித்தவர்களுடைய கதைகளும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன.  இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் பெயர் தெரியவில்லை.  

சுந்தரர் சரித்திரச் சுருக்க அகவல்

கள்ளப்புலியூர் பர்வத சஞ்சீவி அய்யரின் ‘சுந்தரர் சரித்திரச் சுருக்க அகவல்’ 139 மற்றும் 231 நிலைமண்டில ஆசிரியப்பாவாலான இரண்டு நூல்களாகும்.  முதல் நூல் சுருக்கமாகவும், இரண்டாம் நூல் அதன் விரிவாகவும் அமைந்துள்ளன.  சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாற்றுச் சுருக்கமாக இந்நூல் விளங்குகின்றது.  

சுமிருதி சந்திரிகை

மக்கள் வாழ்வதற்கு வேண்டிய ஒழுக்க நெறிகளை இந்நூல் கூறுகின்றது.  உரைநடையில் அமைந்த இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  ‘சுமிருதி சந்திரிகை’ என்பது வேதக் கருத்துக்களை எளிய இனிய முறையில் அறிவுறுத்துவதைக் குறிப்பிடுவதாகும்.  அதாவது, 'சட்ட நூல்' என்று சொல்லத்தக்க சிறப்புடையதாக இந்நூல் திகழ்கிறது.  இன்ன இன்னார் இப்படி இப்படி நடக்கவேண்டும். இப்படி நடக்கத் தவறினால் இன்ன இன்ன தண்டனைகள் கொடுக்கப்படல் வேண்டும் போன்றவை இந்நூலில் கூறப்பெற்றுள்ளன.  குறிப்பாக, சாட்சி சொல்பவர் எவ்வாறு இருக்கக் கூடாது  என்பதை, துட்ட குணங்களாகிய குற்றம் இல்லாதவன் போல் காணப்படுதல், காரணமின்றி மிகவும் கூப்பிடல், அடுத்தடுத்து மிகவும் பெருமூச்செரிதல், கால்களாலே நிலத்தைக் கீறுதல், கைகளையும் நக்குதல், உதடுகளை மெல்லுதல், முகத்தின் நிறம் மாறுபடல், நெற்றி வெயர்த்தல், வாய் தடுமாறல் இவை முதலாகக் காணப்படுகின்ற குணங்களையும், விலக்குதற்கு ஏதுவான காணப்படாத சொல் நிலைமையின்மை முதலானவற்றையுஞ் சோதித்து அறிந்து அவ்வகைக் குணமுடைய துட்டரைச் சான்றுரைத்தலினின்றும் நீக்குதல் வேண்டும் என்கிறது.  மேலும், அடிமையர் யார் யார் என்பதையும் இந்நூல் சுட்டுகிறது.  அதாவது, வீட்டடிமை, விலையடிமை, அடையடிமை, தாய அடிமை, அனாகால பிருதன், ஈட்டடிமை, கடன் மீளடிமை, போரில் கிடைத்தவன், பணசிதன், நானுனக்கு அடிமை, துறவுகெட்ட அடிமை, செய்யப்பட்ட அடிமை, சோற்றடிமை, வடவாபிருதன் போன்ற அடிமை வகையினரை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

செட்டிச்சியம்மாள் கதை

அமராபதிச் செட்டிச்சியின் வரலாற்றைக் கூறுவதாக இந்நூல் செட்டிச்சியின் சிவபக்தியையும் 32 தானங்களையும் எடுத்துக் கூறுகின்றது.  இந்திரனையும் சித்திரபுத்திரனையும் வணங்காத அமராபதியை எமலோகம் அழைத்துவர எமன் வருகின்றான்.  சிவ பக்தியால் எமனால் அவளை நெருங்க முடியவில்லை.  பிறகு தீயவர்கள் அவளை எமலோகம் அழைத்துச் செல்ல, அங்குப் பல சித்திரவதைக்கு உள்ளாக்கியும் சிவபக்தியால் தப்பித்துக்கொள்ள சிவகணங்கள் உதவிபுரிகின்றன.  மனம் மாறி அனைவரையும் துதிக்க எண்ணுகின்றாள்.  இந்நிலையில் மீண்டும் பூலோகம் வந்து உயிர் மீண்டு வாழ்கின்றாள் என்பதே இக்கதை.  இறுதியாக இந்நூலுள் சித்திரபுத்திரன் வரலாறும் கூறப்பெற்றுள்ளது.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

செந்தில் வேலவன் தோத்திரம்

இது, திருச்செந்தூரில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் செந்தில் வேலவன் மீது பாடப்பெற்றுள்ளது.  ஒவ்வொரு செய்யுளின் முன்னிரண்டடிகள் வேண்டுகோளாகவும், பின்னிரண்டடிகள் இராமாயணக் கதையை எடுத்துரைப்பதாகவும் இந்நூற் பாடல்கள் அமைந்துள்ளன.  மேலும் எல்லாச் செய்யுள்களின் இறுதியிலும்,

“செங்கண் மால்மருகா! செந்தில்வாழ் முருகா!!
தேவனே! அமரர் தேசிகனே!!”

என்ற தொடர் மகுடமாக அமைந்துள்ளது.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

ஞானக்குறவஞ்சி

குறவஞ்சி நடையில் ஞானத்தினை எளிமையாகக் கூறும் இந்நூல் மூன்று பகுதிகளால் அமைந்துள்ளது.  முதலிரு பகுதியைக் குமரகுருபரனும் மூன்றாம் பகுதியைப் பீருமுகம்மதுவும் இயற்றியிருக்கின்றனர்.  இந்நூலில் தலைவன் உலாவரல் முதலானவை இல்லாமல் குறவன் வருகை, குறவன் தன் பெருமை கூறல், குறவன் பறவை வரவு கூறுதல், அமைதி வேண்டல், மெய்ஞ்ஞானப்புள் போகாதிருத்தல், கண்ணி கொண்டு வருதல், கண்ணிகளைத் திருத்திவைத்தல், குறவன் ஞானப்புள்ளைப் பிடித்தல், வாழ்த்து ஆகியவை முதற்பகுதியிலும், குறவன் தோற்றம், குறவன் தன் சொந்தமலை கூறுதல், சிவபட்சி வருவதைக் கூறுதல், அமைதி வேண்டல், சிவ பட்சிகளைச் சுற்றி வளைத்தல், அவை போகாமற் காத்தல், அவை இரை மேய்தல், கண்ணி கொண்டு வருதல், சிவ பட்சிகளைப் பிடித்தல், வாழ்த்து ஆகியவை இரண்டாம் பகுதியிலும், சிங்கன் - சிங்கி தருக்கம் மூன்றாம் பகுதியிலும் இடம்பெற்றுள்ளன.  முதற் பகுதியில் ஞானத்தைப் பற்றுதல் போலவும், இரண்டாம் பகுதியில் சிவத்தினைப் பற்றுதல் போலவும், மூன்றாம் பகுதியில் வினாவிடை வாயிலாகத் தத்துவங்களைப் பற்றுதல் போலவும் இந்நூல் அமைந்துள்ளது.  

ஞானசாரம்

காழிக்கண்ணுடைய வள்ளலாரின் ‘ஞானசாரம்’ 118 கட்டளைக் கலித்துறையால் ஆனது.  தொடக்கத்தில் விநாயகர் காப்பு, நடராசர் - அம்பிகை - நால்வர் - தொண்டர் ஆகியோர்களுக்குத் தோத்திரம் கூறும் இந்நூல் சிவப்பிரகாசரின் நூல் அமைதியை ஒட்டிச் சித்தாந்தப் பொருளை முறையாக உணர்த்துகின்றது.  ஞானசாரம் என்ற பெயரில் பல நூல்கள் தோன்றியிருக்கின்றன.  

ஞானவம்மானை

குமாரதேவரின் ‘ஞானவம்மானை’ 31 அம்மானைப் பாடல்களாலானது.  ஞானத்தை விளக்கும் முகமாக அமைந்துள்ள இந்நூல் மூன்று பெண்கள் பாடுவதாக உள்ளது.  அதாவது, முதற்பெண் ஒரு செய்தியைச் சொல்ல, இரண்டாமவள் ஒரு வினாவை எழுப்புவாள்.  மூன்றாமவள் அதற்குத் தக்க பதிலளிப்பாள்.  உலகில் மனிதன் உடல், உயிர் முதலியவற்றையே தானென்று எண்ணியும், உலகப் பொருள்களை உண்மைப் பொருள்கள் என்று கருதியும், அவற்றில் விருப்பு வெறுப்பு கொள்வதால்தான் உலகத் துன்பங்கள் ஏற்படுகின்றன என்றும், இவ்வறியாமையை ஞானத்தால் போக்கினால் ஆனந்தமான வாழ்வு மேற்கொள்ளலாம் என்றும் இந்நூல் உணர்த்துகின்றது.  காட்டாக, ஒரு பாடலைக் காண்போம்.

ஆணல்ல பெண்ணல்ல வென்றான்கா ணம்மானை
யச்சு சுழன்றா லறிவென்றா னம்மானை
காணும் மறிவுநீ யென்றான்கா ணம்மானை
காணுங்காற் போதங் கரைகாணே னம்மானை.

தஞ்சை வௌ¢ளைப்பிள்ளையார் குறவஞ்சி

தஞ்சையிலுள்ள வௌ¢ளைப்பிள்ளையாரை மையமாகக் கொண்டு இந்நூல் பாடப்பெற்றுள்ளது.  இக்குறவஞ்சி குற்றாலக்குறவஞ்சி, சரபேந்திர பூபால குறவஞ்சி போலல்லாமல் மதுரை மீனாட்சியம்மை குறம் போன்றதெனலாம்.  இந்நூலில் தலைவன் பவனி வருதல் போன்றன இடம்பெறவில்லை.  கடவுள் வாழ்த்து முடிந்ததும் குறத்தி வந்துவிடுகின்றாள்.  தன்னுடைய வரலாறு, குலப்பெருமை முதலானவற்றைக் கூறுகின்றாள்.  பின்னர் தலைவிக்குக் குறி கூறுகின்றாள்.  பிள்ளையில்லாத காரணத்தால் தலைவன் மறுமணம் புரிந்து இளையாளுடன் வாழ, ஊர் ஏசுகின்றனர்.  அப்போது குறத்தி தஞ்சை வௌ¢ளைப்பிள்ளையாரை நினைவில் நிறுத்தி ‘பிரிந்த கணவனை மீண்டும் வரப்பெற்று, மக்களைப் பெறுவாய், நிந்தித்தவர்கள் வாயடைக்கும்படி வாழ்வாய்’ என்று குறி கூறுகின்றாள்.  ஒவ்வொரு செய்யுளின் ஈற்றடியிலும் வௌ¢ளைப்பிள்ளையாரின் புகழும் செயலும் பேசப்படுகின்றன.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

தத்துவ விளக்கம்

சம்பந்த சரணாலயர் என்கிற காழிக் கண்ணுடைய வள்ளலாரின் ‘தத்துவ விளக்கம்’ 51 கட்டளைக் கலித்துறையாலானது.  இந்நூல் பதி விகாரம், பசு விகாரம், பாச விகாரம் ஆகிய மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது.  

திருச்செங்கோட்டகவல்

சேலம் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோட்டில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் முருகக்கடவுள் மீது பாடப்பெற்றதே ‘திருச்செங்கோட்டகவல்’ ஆகும்.  இது 74 அகவலடிகளாலானது.  திருச்செங்கோட்டில் பாம்பின் படம் போல் உள்ள மலையின் மீது முருகப்பெருமான் எழுந்தருளி இருக்கின்றார்.  இத்திருச்செங்கோட்டில் ஒரு புலவர் முருகப்பெருமான் மீது அன்பு பூண்டு இருந்தார்.  அப்போது வெளிமாநிலத்தில் இருந்து ஒரு புலவன், தான் பாடும் பாடலின் இரண்டு அடிகளுக்கு மேல் தொடர்ந்து இரண்டடிபாட முடியாத புலவர்களைத் தனது அடிமையாக்கிக் கொண்டு வருவானாயினான்.  அத்தகையவன் திருச்செங்கோடு வர நேர்ந்தது.  வந்தவன் திருச்செங்கோட்டுப் புலவரையும் அடிமை கொள்ளக் கருதினான்.  இதனையறிந்த செங்கோட்டுப் புலவர் முருகப்பெருமானை வேண்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

திருச்சோற்றுத்துறை தலபுராணம்

திருவிடைமருதூர் அம்பலவாண தேசிகரின் ‘திருச்சோற்றுத்துறை தலபுராணம்’ 448 பாடல்களாலானது.  சோழநாட்டுக் காவிரியின் தென்கரையில் ‘திருச்சோற்றுத்துறை’ எனும் திருத்தலம் உள்ளது.  சிவபக்தனான அருளாளன் (மறையவன்) பசிப்பிணியால் வருந்தும்போது அவனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத சோறு அளித்தருளிய தலம் இது என்பது கர்ண பரம்பரை வழக்கு.  இந்நூல், பாயிரம், புராண வரலாறு, நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, தலச்சருக்கம், தீர்த்தச் சருக்கம், மாகநானச் சருக்கம், துலாநானச் சருக்கம், சேடச் சருக்கம், கவுதமச் சருக்கம், சூரியச் சருக்கம், கசன்மச் சருக்கம், கேதார விரதச் சருக்கம், சோமவார விரதச் சருக்கம், சிவராத்திரி விரதச் சருக்கம் போன்ற பகுதிகளாலானது.  இப்புராணம் திருச்சோற்றுத்துறைத் தலத்தின் எழில்மிகு தோற்றத்தினையும், இந்திரன் சூரியன் கௌதமர் ஆகியோர் எம்பெருமானுக்கும் இத்தலத்திற்கும் உள்ள வரலாறுகள் பலவற்றையும் பல கதைகளுடன் ஒப்பிட்டு விளக்குகிறது.  

திருஞானசம்பந்த சுவாமிகள் பிள்ளைத்தமிழ்

துறைசை ஸ்ரீமாசிலாமணி தேசிக சுவாமிகளின் ‘திருஞானசம்பந்த சுவாமிகள் பிள்ளைத்தமிழ்’ திருஞானசம்பந்தப் பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பெற்ற இந்நூல் 100 பதினான்குசீர் கழிநெடிலடியாசிரிய விருத்தத்தாலானது.  பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் கொண்டது.  திருஞானசம்பந்தரின் வாழ்க்கையில் அருளிச் செய்த நிகழ்ச்சிகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன.  ஆடல்வல்லானான தியாகேசப் பெருமானது திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஞானசம்பந்தப் பெருமானுக்குத் தைப்பூசத்துக்கு முந்தைய பத்து நாள்களிலும் திருவுலா செய்வித்துச் சுவாமி நடைவானத்து வரும்போது இப்பிள்ளைத்தமிழையும் பாடுகின்றனர். இம்முறை இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது.  

திருநாவுக்கரசு சுவாமிகள் சரித்திரச் சுருக்க அகவல்

பர்வத சஞ்சீவி அய்யரின் ‘திருநாவுக்கரசு சுவாமிகள் சரித்திரச் சுருக்க அகவல்’ 102 அகவலடிகளாலானது.  இந்நூல் திருநாவுக்கரசரின் வாழ்க்கை வரலாற்றில் நிகழ்ந்த சிறப்புமிக்க சில நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.  

திருநீலகண்டர் பள்ளு

அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்டரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ‘திருநீலகண்டர் பள்ளு’ அமைந்துள்ளது.  இது 16 பதினான்குசீர் கழிநெடிலடியாசிரிய விருத்தத்தாலானது.  ஒவ்வொரு பாடலின் ஈற்றிலும் ‘பள்ளீரே’ என்ற சொல் மகுடமாக அமைந்துள்ளது.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

திருநெறி விளக்கம்

சம்பந்த சரணாலயர் என்கின்ற காழிக் கண்ணுடைய வள்ளலாரின் மாணாக்கர் ஒருவரால் இயற்றப்பெற்ற ‘திருநெறி விளக்கம்’ 177 விருத்தத்தாலானது.  சிவப்பிரகாசரின் பாடல்களில் வரும் சொற்களையும் தொடர்களையும் இந்நூலாசிரியர் பலவிடங்களில் அப்படியே பயன்படுத்தியுள்ளார்.  

திருவூடல்

இறைவனும் இறைவியும் ஊடிக் கொண்டதை உணர்த்துவது ‘திருவூடல்’ ஆகும்.  அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில் இறைவன் - இறைவி ஊடல் தொடர்பான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.  இதில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

தேரூர்ந்த சோழன் கதை

தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்களுள் மனுநீதிச் சோழனும் ஒருவன்.  அவன், நீதி தவறாது வாழ்ந்த கதையை உரைநடையில் எழுதப்பெற்றதே ‘தேரூர்ந்த சோழன் கதை’ ஆகும்.  ஒரு மன்னன் செய்யக் கூடாதவை எவையெவை என்பதைத் தொகுத்துக் கூறும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

நண்ணாவூர் சங்கமேசுவரசுவாமி வேதநாயகி அம்மன் பேரில் விறலிவிடுதூது

‘நண்ணாவூர் சங்கமேசுவரசுவாமி வேதநாயகி அம்மன் பேரில் விறலிவிடுதூது’ எனும் இந்நூல் 954 கண்ணிகளாலான குறையுடையது.  நூலின் இறுதிப் பகுதி சுவடியில் இல்லை.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  இஃதோர் உயர்திணைத் தூதாகும்.  அதாவது விறலி தூது செல்கின்றாள். சோடசவதானி என்னும் தலைவன் காமரசக் குளிகை கண்ணாடி என்னும் பரத்தைபாற் சிக்குண்டு வான்பொருளிழந்து, நொந்து, வருந்தி, நண்ணாவூர் சங்கமேசுவரர், வேதநாயகியம்மன் கோயிலடைந்து அவ்விறைவர் அருளால் பொருள்பெற்றுத் திரும்பவும், மனையடைந்த போது மனையாள் கதவுதாளிட அவ்வூடலைத் தீர்க்குமாறு விறலியினைத் தூது விட்டதாக இந்நூல் கூறுகின்றது.  

நாசிகேது புராணம்

நாசிகேது என்பவனுடைய வாழ்க்கை நிகழ்ச்சியை எடுத்துக் கூறும் ‘நாசிகேது புராணம்’ உரைநடையாலானது.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  திவ்வியாங்கன் என்னும் மகரிஷி தன்மகன் நாசிகேதுவைப் பூசைக்குப் பூ கொண்டுவரப் பணிக்கின்றான்.  நாசிகேது மற்ற ரிஷி குமாரர்களுடன் விளையாடிவிட்டுக் காலங்கடந்து பூ கொண்டு வர மகரிஷி சாபமிடுகின்றார்.  அதாவது, நீ எமராசன் அறியாமல் எமலோகம் புகுவாய் என்கின்றார்.  தன்நிலை உயர்ந்த மகரிஷி, நீ எமலோகம் சென்று நிகழ்காலச் சம்பவங்களை அறிந்து உன் கூடு அழிவது முன்னே உன் கூட்டில் புகுந்து பிராணனுடன் எழுந்திருப்பாய்’ என்று சாபவிமோசனமும் தருகிறார்.  இக்கூற்றுப்படி நாசிகேது எமலோகம் சென்று அங்கு நடப்பவற்றையெல்லாம் நேரில் பார்த்துவிட்டு மீண்டும் தம்முடலில் புகுந்து உயிர்த்தெழுந்து தாம் எமலோகத்தில் கண்டவற்றை இங்குள்ளோர் அறியுமாறு கூறுவதே இக்கதை.  

பஞ்சநதீசுரர் தோத்திரம்

திருவையாற்றில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெருமானாகிய ‘பஞ்சநதீசுரர்’ மீது இந்நூல் பாடப்பெற்றுள்ளது.  இரண்டு பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலான இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

படத்தொகுப்புக் கதை

மகாலின் வடமொழிப் பகுதியில் ரிக்வேத சம்ஹிதை என்ற பெயரில் 811 காகிதச் சுவடிகள் உள்ளன.  அவற்றிலுள்ள 85 சுவடிகளின் முகப்புப் பக்கத்தில் அழகிய வண்ண ஓவியங்கள் சிறிய அளவில் தீட்டப்பெற்றுள்ளன.  17,18,19ஆம் நூற்றாண்டுகளில் தீட்டப்பட்ட இவ் ஓவியங்கள் இன்றும் வண்ணமழியாமல் புதுமையாய் விளங்குகின்றன.  இந்தக் காகிதங்கள் வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பெறப்பட்டு வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன.  சில சுவடிகளின் முகப்பில் பென்சிலால் வரைபடம் ஆரம்பம் செய்து முடிக்கப் பெறாமலும் உள்ளது.  இச்சுவடிகளின் கடைசி பக்கங்கள் பல்வேறு பூக்களின் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.  இவை ஒன்றுபோல் மற்றொன்று இல்லாமல் ஒவ்வொன்றும் தனித் தன்மையுடையதாய் தோன்றுவது உற்று நோக்கற்பாலது.  தாவரச் சத்துக்களால் தயாரிக்கப்பட்ட மையினால் விளைந்த இச்சித்திரங்கள் இன்றும் புதுமையோடு காட்சி தருகின்றன.  இத்தொகுப்பில் உள்ள 85 சுவடிகளில் உள்ள படங்களைப் பார்க்கும்போது திருவிளையாடற் புராணம், சிவபுராணம், ஹாலாஸ்ய மகாத்மியம், சுதபுற மகாத்மியம், புண்டரீக மகாத்மியம் போன்ற நூல்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

பட்டினத்தார் வெண்பா

திருவெண்காடர் என்னும் பட்டினத்தடிகளின் ‘பட்டினத்தார் வெண்பா’ 100 வெண்பாக்களாலானது.  இந்நூல் சொற்சுவை, பொருட் சுவையோடு கூடி ஞானவழியை நெஞ்சறிவுறுத்துவதுமாக அமைந்துள்ளது.  மேலும் இல்லறமே பல்லறங்களிலும் சாலச் சிறந்தது என்றும், அவ்வில்லறத்தை இனியதாக நடத்திப் பின்னர் துறவு கோடல் இனிது என்றும் இந்நூல் விளக்குகின்றது.  

பட்டினத்துப்பிள்ளை சரித்திரச் சுருக்கம் (அகவல்)

திருவள்ளுவர், திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், தாயுமானவர் போன்றோரின் திருக்கூட்ட மரபில் பட்டினத்துப் பிள்ளையும் ஒருவராகக் கருதப்படுபவர்.  இவர்தம் வாழ்க்கை வரலாற்றை 196 அகவலடியாக அமைந்ததே ‘பட்டினத்துப் பிள்ளை சரித்திரச் சுருக்கம்’ ஆகும்.  பட்டினத்துப்பிள்ளையின் இளமைப் பருவம் முதல் இறுதி வரையிலான வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  இந்நூலானது,

திருமிக வளருந் தேவர் தினமும்
பரிவுட னுறையும் பட்டிண மொத்த
பூம்பு காரெனப் புகன்றிடு நல்ல
தீங்கில் காவிரிப் பூம்பட் டிணத்தில்
தீங்கிலா துறையுஞ் செட்டியார் மரபில்
வந்தே யுதித்த வைசிய ரொருவர்
ஒப்பில் லாப்பல கப்பல்கள் வைத்தும்
கவன முடனே நவமணி விற்றும்
வாணிபஞ் செய்து மானுட நல்ல
சிவனையென் னேரமுஞ் சிந்தையில் நினைந்தும்....

என்று தொடர்ந்து செல்வதைக் காணமுடிகிறது.

பழனிமாலை

பழனிமலையில் கோயில் கொண்டுள்ள முருகப்பெருமான் மீது சிருங்கார ரசமாகப் பாடப்பெற்ற 30 கலித்துறையாலானது.  ஒவ்வொரு பாடலின் ஈற்றிலும் ‘பழனிக் கதிபதியே’ என்ற தொடர் மகுடமாக அமைந்துள்ள இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

பழனிவேலவன் தோத்திரம்

பழனிமலையில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ‘பழனிவேலவ’னைப் பற்றிய தோத்திர நூலே ‘பழனிவேலவன் தோத்திரம்’ ஆகும்.  இந்நூல் 10 பதினான்குநீர் கழிநெடிலடியாசிரிய விருத்தத்தாலானது.  இந்நூல் ‘பழனிவாழ் முருகா! தேவனே! அமரர் தேசிகனே!’ எனும் ஈற்றடி ஒவ்வொரு பாடலுக்கும் மகுடமாக அமைந்துள்ளது.  முன்னிரண்டடிகளில் வேண்டுகோளும், பின்னிரண்டடிகளில் இராமாயணக் கதையும் அமையுமாறு இந்நூற் பாடல்கள் அமைந்துள்ளன.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

மகாமக அந்தாதிக் கும்மி

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசிமகம் ‘மகாமகம்’ எனப்படுகின்றது.  தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணம் மகாமகத்தால் பிரசித்திபெற்றது.  காப்பு 1, கடவுள் வாழ்த்து 4, நூல் 50 அந்தாதிப் பாடல்களாலான இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  கன்னியா தீர்த்தம், அமிர்தசரஸ் போன்றவற்றிற்கு விவரமும், ஞானவான் சரித்திரமும் கும்பகோணம் என்பதற்கும் கும்பேசரென்பதற்கும் விளக்கம், ஏமவாகு மனைவி வேதாளம் நீங்கியது, சுதாமாவும் வீரவர்மாவும் புத்திரனையடைதல், அஸ்தி என்பவள் பரிசுத்தமான கதை போன்றனவும் இதில் இடம்பெற்றுள்ளன.  

மன்னார் மோகனப் பள்ளு

இராசமன்னார் கோயில் எழுந்தருளியுள்ள விஷ்ணுவைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற ‘மன்னார் மோகனப் பள்ளு’ அறுசீர் விருத்தத்தாலான காப்பு 1, நூல் பதினான்குசீர் கழிநெடிலடியாசிரிய விருத்தத்தாலான 11 பாடல்களாலானது.  பள்ளு இலக்கணத்திற்குரிய எவ்வித இலக்கண அமைப்பும் இதில் இல்லை.  ஆயினும் நூற்பெயரில் மட்டுமே பள்ளு என்றுள்ளது.  இந்நூல் பள்ளு இலக்கியத்திற்குரிய சில பகுதிகளை மட்டும் பெற்று, ஒவ்வொரு பாடலும் ‘பள்ளீரே’ என்ற ஈற்றுத் தொடரைப் பெற்று விளங்குகின்றது.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

மூதுரை

ஔவையாரின் ‘மூதுரை’ கடவுள் வாழ்த்து 1, நூல் 30 வெண்பாக்களாலானது.  இதனை வாக்குண்டாம் என்றும் கூறுவர்.  இந்நூல் இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளைப் பெற்றிருக்கிறது. 

மூர்த்திநாயனார்க்கரசளித்த திருவிளையாடல்

பெரும்பற்றப்புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் ‘மூர்த்திநாயனார்க்கரசளித்த திருவிளையாட’லும் ஒன்று.  இந்நூல் 15 பாடல்களாலானது.  பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்துள் வரும் திருநகரங்கொண்ட திருவிளையாடலுக்கு மாற்றாக இந்நூல் இதில் இடம்பெற்றுள்ளது.  வணிகனாகிய மூர்த்தநாயனாரின் சிவபக்தி சிறப்பால் அரசாளும் வாய்ப்பு வந்ததன் கதையே இந்நூல்.  

வருமுருகாற்றுப்படை

அருணகிரிநாதரின் ‘வருமுருகாற்றுப்படை’ காப்பு 1 கட்டளைக்கலித்துறை, நூல் 64 அகவலடிகளாலானது.  முருகப்பெருமானின் பெருமைகளையும், சிறப்புக்களையும் எடுத்துக்கூறி பல்வகைச் சிறப்புக்களையெல்லாம் பெற்றவனே! உன்னை ஏத்துவார் முன் இமைப்பொழுதில் வந்து அருள்தருக! என வேண்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது.  

வலைவீசு புராணம்

தலையன்பிற் கட்டுண்டு, ஆலவாயழகர், அரும்பிட்டுப் பச்சிலையிட்டு ஆட்செய்யும் அன்னையாம் வந்தியவள் தரும்பிட்டுப் பிட்டுண்டு, அன்னை அங்கயற்கண்ணியொடும் மதுரையில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அவ்வழகிய சொக்கர், அடியார்கள் பொருட்டுக் கூடலம்பதியில் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் புரிந்தார்.  அவ்வறுபத்து நான்கிலும் வலைவீசிய திருவிளையாடல் ஒன்று.  இத்திருவிளையாடல் திருவாலவாயுடையார் திருவிளையாடலில் 22வது திருவிளையாடலாகவும், பரஞ்சோதியாருடையதில் 57ஆவது திருவிளையாடலாகவும் பாடப்பட்டுள்ளது.  இத்திருவிளையாடலை மட்டும் காங்கேயன் என்ற புலவர் தனிப் புராணமாகப் பாடியுள்ளார்.  இப்புராணம் மகாலில் இருப்பது மகாலுக்குப் பெருமை தருவதாகும்.

மதுரைச் சொக்கநாதர் திருவிளையாடல்கள் 64இல் வலைவீசிய திருவிளையாடலும் ஒன்று.  இத்திருவிளையாடலைக் காங்கேயன் என்பார் 254 பாடல்கள் கொண்ட புராணமாக யாத்துள்ளார்.  சிவபெருமான் கயிலையில் வீற்றிருந்து பருப்பதன் மகளாகிய பார்வதி தேவிக்கு ஞானகோசத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார்.  அப்போது ஆறுமுகக் கடவுள் ஒரு கருவண்டின் உருக்கொண்டு பார்வதி தேவியாரின் கூந்தலில் மறைந்திருந்து கேட்டார்.  அதனையறிந்த சிவபெருமான் ஒட்டுக்கேட்ட குற்றத்திற்காக முருகனை முனிந்து ஆழியில் ‘மகரமீன்’ ஆகுமாறு சபித்தார்.  பின்னர் உரையாடலில் உமாதேவியார் சிவத்தினும் சக்தியே பெரிதென்று வாதிட்ட குற்றத்திற்காக, உடை கையிலிருந்த ஞானகோசத்தினை வாங்கிக் கடலில் எறிந்துவிட்டு, அங்கயற்கண்ணியாம் பார்வதியைப் பரதவர் மகளாகுமாறு சபித்தார்.  உண்மையுணர்ந்த உமை சாபநீக்கம் கேட்டாள்.  சிவபெருமான் ‘நாமே உன்னை வந்து மணப்போம்’ என்று கூறினார்.  பார்வதி தேவியார் பரதவர் மகளானார்.  முருகன் மகரமீனானார்.  சிவனார் உமை கையினின்றும் வாங்கி எறிந்த ஞானகோசத்தை முருகனாகிய மரகமீன் விழுங்கிக் கடலைக் கலக்கி மீனவர்களையும் துன்புறுத்தியது.  அதுகண்ட பரதவர் தலைவன் ‘இம்மீனைப் பிடிப்பவர்க்கு என் மகளைத் தருவேன்’ என்று கூறினான்.  சில காலம் செல்ல எல்லாம் வல்ல எம்பெருமான் வலைஞனாகச் சென்று வலைவீசி அம்மகர மீனைப் பிடித்து மலையன் மகளை மணம்புரிந்தார் என்பதே இப்புராணக் கதை.  

விசயராகவ நாயக்கர் அய்யன் பேரில் முளைப்பாட்டு

தஞ்சையை ஆண்ட இரகுநாதநாயக்கருக்கும் (கி.பி.1600-1631), அவருடைய மனைவியான கலாவதி என்பவருக்கும் மூன்றாவது மகனாக விசயராகவ நாயக்கர் பிறந்தார்.  இவர், கி.பி.1633-1673 முடிய நாற்பத்தோராண்டுகள் ஆட்சி செய்தார்.  இவ்விசயராகவ நாயக்கர் மீது பாடப்பெற்ற முளைப்பாலிகைப் பாட்டே இந்நூல்.  இது 81 அகவல் வரிகள் கொண்டது.  விசயராகவ நாயக்கர் பவனி வரும்பொழுது பெண்கள் முளைப்பாலிகையை மங்கலப் பொருளாக வைத்து, அதைத் தெய்வமாகக் கருதி, அவர்கள் அம்மன்னனையே கணவனாக அடையவேண்டுமென்று அம்முளைப்பாலி நாச்சியாரைப் பணிந்து பாடுவதாக இந்நூல் அமைந்துள்ளது.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

நாட்டுப்புற மக்களிடையே முளைப்பாலிகை மங்கலப் பொருளாகப் பயன்படுத்தப்பெறுகின்றது.  பெரும்பாலும் இறைவிழாக் காலங்களில் முளைப்பாலிகையை வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் மக்களிடையே இன்றும் உள்ளதாகும்.  விழா நாயகர் தெருவில் உலா வரும்போது பெண்கள் முளைப்பாலிகை வைத்து வழிபாடு செய்து அவ்விழா நாயகரையே கணவனாக அடையவேண்டும் என்று பாடும் பாட்டு ‘முளைப்பாட்டு’ ஆகும்.  இவ்வகை உலா இலக்கியத்தை ஒத்ததாகத் திகழ்கின்றது.  

விபூதி தோத்திரம்

பழனிமலை ஆறுமுகப் பெருமானின் திருநீற்றுப் பெருமையினைக் கூறும் ‘விபூதி தோத்திரம்’ 10 பதினான்குசீர் கழிநெடிலடியாசிரிய விருத்தத்தாலானது.  திருநீற்றினால் பெருமை பெற்ற பிற வரலாறுகளையும் இந்நூல் சுட்டிக்காட்டுகின்றது.  ஒவ்வொரு பாடலின் ஈற்றிலும்,

“அடியவர்க் கருள்தரு கிருமைசெய் பழநிமலை
அறுமுகவர் தருதிருவெண் ணீறே”

என்ற அடியை மகுடமாகக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

ஸ்ரீவீரபோக வசந்தராயர் வரலாறு

ஸ்ரீவீரபோக வசந்தராயரின் வரலாற்றினை உரைநடையில் கூறும் இந்நூலுள் வீரபோக வசந்தராயரின் மகிமைகள் கூறப்பெற்றுள்ளன.  இதில் அத்தியாயம் என்பதை பத்திரிகை எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது.  

பதினெண்கீழ்க்கணக்கு இலக்கியம்

திருக்குறள் பழைய உரை, திருக்குறள் ஜைன உரை, நாலடியார் உரைவளம் (மூன்று பழைய உரைகள்)

பக்தி இலக்கியம்

திருக்கோவையார்

சட்ட நூல்

சுமிருதி சந்திரிகை

இசை நூல்கள்

இராமநாடக கீர்த்தனைகள், கீர்த்தனைகள், சப்தம் என்னும் தாளச்சொற்கட்டு, சிறுத்தொண்ட நாயனார் இசை நாடகம், ஐந்து தமிழிசை நாட்டிய நாடகங்கள் (பூலோக தேவேந்திர விலாசம், சந்திரிகா ஹாஸை விலாசம், சகசி மன்னன் மீது குறவஞ்சி, விஷ்ணு சாகராஜ விலாசம், காவேரி கல்யாணம்), தமிழிசைப் பதங்கள், தமிழிசைப் பாடல்களும் நாட்டியப் பதங்களும், தாள சமுத்திரம்

குறவஞ்சி

சகரி மன்னன் மீது குறவஞ்சி, ஞானக்குறவஞ்சி, தஞ்சை வௌ¢ளைப்பிள்ளையார் குறவஞ்சி

திருத்தாலாட்டு

நம்மாழ்வார் திருத்தாலாட்டு

உலா

நாகை கனகசபைநாதர் உலா

வெண்பா

பட்டினத்தார் வெண்பா

சரித்திரச் சுருக்க அகவல்

சுந்தரர் சரித்திரச் சுருக்க அகவல், திருநாவுக்கரசு சுவாமிகள் சரித்திரச் சுருக்க அகவல், பட்டினத்துப் பிள்ளை சரித்திரச் சுருக்க அகவல்

பிள்ளைத்தமிழ்

கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ, குலோத்துங்கள் பிள்ளைத்தமிழ், தரங்கை வீரவேலாயுதசாமி பிள்ளைத்தமிழ், திருஞானசம்பந்த சுவாமிகள் பிள்ளைத்தமிழ், திருப்பெருந்துறை சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ், திருவாரூர் சத்தியஞான பண்டாரம் பிள்ளைத்தமிழ், பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ்

மாலை

இராஜகோபால மாலை, குருஷேத்திரமாலை, சிநேந்திரமாலை, பழனி மாலை

கும்மி

காத்தவராய சுவாமி பேரில் கும்மிப்பாடல், மகாமக அந்தாதிக் கும்மி

அந்தாதி

அருணகிரி அந்தாதி - பொழிப்புரையுடன், குடந்தையந்தாதி, புல்லையந்தாதி - குறிப்புரையுடன், மருதூரந்தாதி - பழைய உரையுடன்

பள்ளு

திருவேட்டை நல்லூர் ஐயனார் பள்ளு, மன்னார் மோகனப் பள்ளு

சதகம்

குமரேச சதகம், திருவாய்மொழி வாசகமாலை எனும் விவரண சதகம், நாராயண சதகம் - பொழிப்புரையுடன், பர்த்ருஹரி நீதி சதகம், வடிவேல் சதகம்

வண்ணம்

வண்ணத்திரட்டு (23 வண்ணங்கள்)

முளைப்பாட்டு

விசயராகவ நாயக்கர் அய்யன்பேரில் முளைப்பாட்டு

தோத்திரம்

கதிர்காம வேலவன் தோத்திரம், சட்டைநாதர் தோத்திரம், சிவகாமி அம்மன்பேரில் அகவல், செந்தில் வேலவன் தோத்திரம், திருச்செங்கோட்டகவல், பஞ்சநதீசுரர் தோத்திரம், பழனிமலை வடிவேலர் பதிகம், பழனிவேலவன் தோத்திரம், விபூதி தோத்திரம்

தூது

செண்டலங்காரன் விறலிவிடுதூது, விறலிவிடுதூது

அம்மானை

அதிரியர் அம்மானை, அரிச்சந்திரன் அம்மானை, இராமய்யன் அம்மானை, இராமர் அம்மானை, கஞ்சனம்மானை, காஞ்சிமன்னனம்மானை, சித்திர புத்திரர் அம்மானை, சீவக சிந்தாமணி அம்மானை, சுந்தரி அம்மானை, ஞானவம்மானை, துரோபதை அம்மானை, பாரத அம்மானை, பார்சுவநாதர் அம்மானை, பொன்னர் - சங்கர் அம்மானை, மதுரை வீரன் அம்மானை, மார்க்கண்டேயன் அம்மானை - அரும்பதவுரையுடன், வீரையன் அம்மானை, ஸ்ரீபார்சுவநாதர் அம்மானை, ஸ்ரீராமர் அம்மானை

சிற்ப நூல்கள்

சில்பரத்தினம், மய நூல், மயமதம்

நாட்டுப்புற இலக்கியம்

ஆலம்நபி கதைப்பாட்டு, இராயர் அப்பாச்சி கதைகள், காமாட்சி தவசு, காவேரி கல்யாணம், குச-லவன் கதை, குயில் ராமாயணம், செட்டிச்சியம்மாள் கதை, தேரூர்ந்த சோழன் கதை, நளச்சக்கரவர்த்திக்கதை, பஞ்சதந்திர வசனம், மரியாதைராமன் கதைகள், மலையருவி

நீதி நூல்கள்

நீதித் திரட்டு (32 நீதி நூல்கள்), நீதி நூல், மூதுரை

நாடகம்

அதிரூபவதி கல்யாணம், அரவான் களப்பலி - இசை நாடகம், அரிச்சந்திரன் நாடகம், சந்திரிகா ஹாஸை விலாசம், சிவகாமசுந்தரி பரிணய நாடகம், பூலோக தேவேந்திர விலாசம், விஷ்ணு சாகராஜ விலாசம்

தத்துவம்

கணபதி உபாசனை அல்லது மஹாகணபதி விதானம், களாபூரணோதம், சங்கற்ப நிராகரனம் மூலமும் உரையும், சதாசிவத் தியானம் -பொழிப்புரையுடன், சமாதிலிங்கப் பிரதிட்டை விளக்கம் - உரையும் விளக்கமும், சித்தாந்த நிச்சயம் - மூலமும் உரையும், சிவஞான தீபம் - தெளிவான உரையுடன், சிவபாரத சரித்திரம், சிவபூஜா பத்ததி, சிவப்பிரகாச விகாசம் - பாட்டும் சிற்றுரையும், சௌமிய சாகரம், ஞானசாரம், தத்துவ விளக்கம், பிரபோத சந்திரோதயம் (மெய்ஞ்ஞான விளக்கம்), பிரயோக விவேகம் - மூலமும் உரையும், வீராகமம் - உரையுடன்

புராணம்

அருணாச்சல புராணம், ஆத்திசூடிப் புராணம், கும்பகோணப் புராணம், கூர்ம புராணம், சரப புராணம், ததீசிப்புராணம், திருச்சோற்றுத்துறை தலபுராணம், திருநல்லூர்ப் புராணம் - குறிப்புரையுடன், திருப்பெருந்துறைப் புராணம் - குறிப்புரையுடன், திருவாப்பூர்ப் புராணம், திருவையாற்றுப் புராணம், நாசிகேது புராணம், பெருந்தேவனார் பாரதம் (மாவிந்தம்) - பொழிப்புரையுடன், வலைவீசு புராணம், வினாவிடைப் புராணம், வைத்தியநாதசுவாமி திருவிளையாடல், சோமயாகப் பெருங்காவியம்

தொகுப்பு நூல்கள்
வள்ளலார் பிரபந்தங்கள் 

(திருநெறி விளக்கம், தத்துவ விளக்கம், வள்ளல் ஞானசாரம்)
முருகர் கதம்பம் (வருமுருகாற்றுப்படை, கந்தர் காதல், பழனி மாலை, திருச்செங்கோட்டகவல்)

மூன்று தமிழிசை நாடகங்கள் 

(மனத சந்தரப்பிரசாத சந்தான விலாசம், பாண்டிய கேளீ விலாச நாடகம், புரூரவ நாடகம்)

(திரிபுரை மாலை, மனோன்மணி மாலை, பழனிமாலை, கும்பேச்சுரமாலை)

தனிப்பாடற் றிரட்டு - பொழிப்புரையுடன்

இலக்கண நூல்கள்

தொல்காப்பியம் - அதிரையர் உரை, தொல்.எழுத்து. நச்சர்., அகப்பொருள் விளக்கவுரை, ஆசிரிய நிகண்டு, இலக்கணக் கொத்து மூலமும் உரையும், இலக்கண விளக்கம் - எழுத்து, சொல், பொருள், சிதம்பரச் செய்யுட்கோவை, பஞ்சகாவிய நிகண்டு, யாப்பருங்கலம்

சோதிட நூல்கள்

காலப்பிரகாசிகை, காலப்பிரகாசிகை, பஞ்சபட்சி சாஸ்திரம், வராகர் ஓரா சாத்திரம், ஜாதக அலங்காரம், ஜாதக சந்திரிகை, ஜாதக சார தீபிகை, கணக்கதிகாரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக