வியாழன், 13 செப்டம்பர், 2018

சங்க இலக்கியச் சுவடிகள் - பதிப்புப் பார்வை

மூல நூலாசிரியரின் கருத்தைப் பிறர் ஓலைகளில் அப்படியே படியெடுத்துள்ளனர். சிலர் அக்கருத்துருவிற்குப் பொழிப்புரை, கருத்துரை, குறிப்புரை, விளக்கவுரை போன்ற வற்றைச் சேர்த்து ஓலைகளில் எழுதி இருக்கின்றனர். இவ்வாறு உரையாசிரியர்களாலும் படியெடுக்கப்பட்ட வர்களாலும் மூல நூல் பல்கிப் பெருகிச் சுவடிகள் பலவாயின.  இது தொடக்க காலப் பதிப்பு நிலையாகும்.  இந்நிலையில் மூல நூலாசிரியரின் கருத்துரு பல்வேறு படிநிலைகளில் பலப்பல உருவாகி, உலகம் முழுவதும்  பல்வேறு இடங்களில் தமிழ்ச் சுவடிகள் பாதுகாக்கப் பெற்று வருகின்றன.  இவ்வாறு பாதுகாக்கப்பெற்று வரும் சுவடிகளைக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி ஓலைச்சுவடியில் உள்ள எழுத்துருக்கள் தாள்களில் அச்சேற்றம் பெறத் தொடங்கின.  

கி.பி.1812இல் வெளிவந்த திருக்குறள் - நாலடியார் ஆகிய இருநூல் கொண்ட மர அச்சுநூல் பதிப்பே அச்சுச் சுவடிப்பதிப்பின் தொடக்கம் எனலாம். இப்பதிப்பை, தொண்டை மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சைநகரம் மலையப்பபிள்ளை குமாரன் ஞானப்பிரகாசன் அவர்கள் மாசத் தினச் சரிதையின் அச்சுக்கூடம் வழி பதிப்பித்திருக்கின்றார்.  இப்பதிப்பு தொடங்கி பல்வேறு கால கட்டங்களில் தமிழிலக்கிய இலக்கணங்கள் சுவடிகளிலிருந்து வெளிவந்து செம்மொழியின் தனித்தன்மையை உலகம் உணர வழிவகை செய்துள்ளது.  

தொடக்க கால சுவடிப்பதிப்புகள் அப்போது பதிப்பாசிரியருக்குக் கிடைத்த சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு பதிப்பிக்கப் பெற்றவையாகும்.அதன் பிறகு முதல் பதிப்பாசிரியரின் திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பாகவோ, வேறொரு பதிப்பாசிரியரால் மீள் பதிப்பாகவோ வெளிவந்துள்ளன.  இவை அக்காலப் பதிப்பாசிரியரின் முயற்சியால் சில சுவடிகளை ஒப்புநோக்கி பதிப்பிக்கப் பெற்றவை ஆகும்.  ஏற்கெனவே வெளிவந்த பதிப்புகளை மையமாகக் கொண்டு பலர் உரையுடனும், மூலத்துடனும் இன்று வெளியிட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் 66 இடங்களில் ஓலைச்சுவடிகள் சேகரிக்கப் பெற்று, பாதுகாத்து வருகின்றனர். மேலும், பல்வேறு தமிழறிஞர்களின் வீடுகளில் இன்றும் பல சுவடிகள் முடங்கிக் கிடக்கின்றன.  இவற்றை யெல்லாம் தொகுத்து செவ்வியல் இலக்கியங்களுக்கான செம்பதிப்பு வெளிவரவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் நோக்கத்தோடு இக்கட்டுரை அமைகிறது.  இங்குச் சங்க இலக்கியத்திற்கான பதிப்புப் பார்வை மட்டும் உற்று நோக்கப்படுகிறது.

சங்க இலக்கியம் - பதிப்புச் சுவடிகள்

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியே, அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை.

எனக் குறிக்கும் பாடலால் எட்டுத் தொகையில் இடம் பெற்ற நூல்களின் முறை வைப்பை அறியலாம்.

முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை
பெருகுவள மதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை, கோல்குறிஞ்சி, பட்டினப்
பாலை, கடாத்தொடும் பத்து.

எனக் குறிக்கும் பாடலால் பத்துப்பாட்டில் இடம்பெற்ற நூல்களின் முறை வைப்பை அறியலாம். 

1. நற்றிணை

எட்டுத் தொகையுள் முதலாவதாகிய நற்றிணை பதிப்பைப் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் 1914ஆம் ஆண்டு தம்முடைய உரையுடன் பதிப்பித்துள்ளார்.  உ.வே. சாமிநாதையரின் சுவடி இரண்டு, தி.த. கனகசுந்தரம் பிள்ளையின் சுவடி இரண்டு ஆகிய நான்கு சுவடிகளையும், சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலக காகிதச் சுவடியையும் கொண்டு பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் இப்பதிப்பைக் கொணர்ந்துள்ளார்.  இப்பதிப்பு 1952, 1956, 1962ஆம் ஆண்டுகளில் முறையே மறுபதிப்புகளாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது.  

பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நற்றிணை ஆய்வுரையுடன் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரின் பதிப்பைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1967ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையின் நற்றிணை விளக்கவுரையை சென்னை அருணா பப்ளிகேஷன்ஸ் 1966ஆம் ஆண்டு முதலிருநூறு பாடல்களை ஒரு தொகுதியாகவும், அடுத்த இருநூறு பாடல்களை மற்றொரு தொகுதியாகவும் என இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.  சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூல் நிலையச் சுவடி, மதுரைத் தமிழ்ச் சங்கச் சுவடி, டொம்மிச்சேரி கருப்பையா தேவரின் சுவடி, புதுப்பட்டி சிவ.மு. முத்தையா செட்டியாரின் சுவடி ஆகிய நான்கு நற்றிணைச் சுவடிகளையும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரின் அச்சுப் பதிப்பு, பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த சென்னை சைவசித்தாந்த மகாசமாசப் பதிப்பு ஆகிய இரண்டு நற்றிணை அச்சுப் பிரதிகளையும் கொண்டு இப்பதிப்பை வெளியிட்டுள்ளார்.

புலியூர்க்கேசிகனின் நற்றிணை தெளிவுரையைப் பாரி நிலையம் 1967ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  பிறகு இது பல பதிப்புகளைப் பெற்றுள்ளது.

இப்பதிப்புகளில் சுவடியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தவை பின்னத்தூர் அ. நாராயணசாமி பதிப்பும், ஔவை சு. துரைசாமிப்பிள்ளை பதிப்பும் ஆகும்.  

தற்போது நற்றிணைச் சுவடிகள் உ.வே. சாமிநாதையர் நூலகத்தில் ஒன்றும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றும் இருப்பதை அறியமுடிகிறது. 

2. குறுந்தொகை

திருக்கண்ணபுரம் திருமாளிகைச் சௌரிப்பெருமாளரங்கனார் தம்முடைய உரையுடன் குறுந்தொகையை 1915ஆம் ஆண்டு பதிப்பித்திருக்கின்றார்.  சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகச் சுவடி, முத்துரத்தின முதலியார் வருவித்துக் கொடுத்த சுவடி,  மதுரைத் தமிழ்ச் சங்கச் சுவடி என மூன்று சுவடிகளைக் கொண்டு இப்பதிப்பைக் கொணர்ந்துள்ளார்.

குறுந்தொகை மூலம் மட்டும் 1920ஆம் ஆண்டு கா. நமச்சிவாய முதலியார் வெளியிட்டுள்ளார்.

இராமரத்தின ஐயரின் குறுந்தொகை புத்துரையைக் கலாநிலையம் வார இதழில் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதந் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வெளியிட்டுள்ளது.  இவ்வுரை தனிநூலாக வெளிவரவில்லை.

திருக்கண்ணபுரம் திருமாளிகைச் சௌரிப்பெருமாளரங்கனாரின் குறுந்தொகை அச்சுப் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு குறுந்தொகை மூலம் மட்டும் புரசைவாக்கம் சோ. அருணாசல தேசிகர் 1933ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் தம்முடைய பதவுரை, விளக்கவுரையுடன் குறுந்தொகையை 1937ஆம் ஆண்டு பதிப்பித் திருக்கின்றார். திருவாவடுதுறை ஆதீனச் சுவடி, திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் சுவடி, மந்தித்தோப்பு மடத்துச் சுவடி, செங்கோல் மடத்துச் சுவடி, திருமயிலை சண்முகம் பிள்ளை காகிதச் சுவடி, சோடாசவதானம் சுப்பராய செட்டியார் சுவடி, தொழுவூர் வேலாயுத முதலியார் சுவடி, சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக காகிதச் சுவடி, புதுக்கோட்டை ராதாகிருஷ்ணையர் காகிதச் சுவடி, திருக்கோணமலை த. கனகசுந்தரம் பிள்ளை காகிதச் சுவடி எனப் பத்து மூலச் சுவடிகளைக் கொண்டு குறுந்தொகைப் பதிப்பை உ.வே. சாமிநாதையர் பதிப்பித்திருக்கின்றார்.  இதன் இரண்டாம் பதிப்பு 1947ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

மகாவித்துவான் ரா. இராகவையங்காரின் குறுந்தொகை விளக்கவுரையை (முதல் 112 பாடல்கள்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1946ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

உ.வே. சாமிநாதையரின் விளக்கவுரைப் பதிப்பை அடியொற்றி பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய குறுந்தொகை விளக்கவுரையைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1955இல் வெளியிட்டுள்ளது.

புலியூர்க்கேசிகனின் குறுந்தொகை தெளிவுரையைப் பாரிநிலையம் 1965ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இது பல பதிப்புகளைக் கண்டுள்ளது.

பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளையின் குறுந்தொகை 1985ஆம் ஆண்டு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.  இலண்டனிலிருந்து வரவழைக்கப்பெற்ற காகிதச் சுவடியின் நுண்படம் (எழுதப்பெற்ற ஆண்டு 1894), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திருந்து வரவழைக்கப்பட்ட மகாவித்துவான் ரா. இராகவையங்காரின் கையெழுத்துப்படி (மதுரையில் 1899இல் எழுதப்பெற்றது), மதுரைப் புலவர் இளங்குமரனிடமிருந்து பெறப்பெற்ற பூண்டியப்பப் புலவரின் ஏட்டுக் குறிப்பு, திரு. அடிகளாசிரியரின் வழியாகக் கிடைத்த 226 பாடல்களுக்கான காகிதச்சுவடி ஆகிய நான்கு சுவடிகளையும், திருக்கண்ணபுரம் சௌரிப்பெருமாளரங்கனாரின் பதிப்பு, புரசைவாக்கம் சோ. அருணாசல தேசிகரின் மூலப்பதிப்பு, கலாநிலையம் இதழில் வெளியான இராமரத்தின ஐயரின் உரை, உ.வே. சாமிநாதையரின் பதிப்பு, பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பு ஆகிய ஐந்து குறுந்தொகைப் பதிப்புகளையும்  அடியொற்றிப் பொழிப்புரையாக, ஆய்வுப்பாட நுண்பதிப்பாக வெளியிட்டுள்ளார்.

இப்பதிப்புகளில் சுவடியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தவை திருக்கண்ணபுரம் சௌரிப்பெருமாளரங்கனார் பதிப்பும், உ.வே. சாமிநாதையர் பதிப்பும், பேராசிரியர் மு. சண்முகம்பிள்ளை ஆய்வுப்பாட நுண்பதிப்பும் ஆகும்.  

தற்போது குறுந்தொகைச் சுவடிகள் உ.வே. சாமிநாதையர் நூலகத்தில் ஒன்றும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றும், சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் ஒன்றும், திருவாவடுதுறை ஆதீனத்தில் ஒன்றும் இருப்பதை அறியமுடிகிறது. இங்குள்ள சுவடிகளை உ.வே. சாமிநாதையரும், மு. சண்முகம் பிள்ளையும் பயன்படுத்தி உள்ளதால் இனிக் குறுந்தொகைச் சுவடிகள் இருக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இருப்பினும், பல தமிழறிஞர்கள் வீடுகளில் இருக்கலாம். மாற்றுச் சுவடி கிடைக்கும் நிலையில் குறுந்தொகைக்கு வேறொரு பதிப்பு தேவையாகிறது.

3. ஐங்குறுநூறு

மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை எனும் திணை வைப்பு முறையில் முறையே நூறு நூறு பாடல்கள் கொண்டதாக உ.வே. சாமிநாதையர் ஐங்குறுநூறு பதிப்பை 1903ஆம் ஆண்டு பதிப்பித்திருக்கின்றார்.  இதன் இரண்டாம் பதிப்பு 1920ஆம் ஆண்டும், மூன்றாம் பதிப்பு 1944ஆம் ஆண்டும் வெளிவந்துள்ளது.  திருவாவடுதுறை ஆதீனச் சுவடி, கே.எம். வேலுப்பிள்ளை சுவடி, திருமயிலை சண்முகம் பிள்ளை சுவடி ஆக மூன்று மூலம் மற்றும் கருத்துரை கொண்ட சுவடிகளும், ஆழ்வார் திருநகரி தே. இலட்சுமணக் கவிராயரின் மூலம், கருத்துரை மற்றும் பழைய உரை கொண்ட சுவடியும் கொண்டு இப்பதிப்பைப் பதிப்பித்திருக்கின்றார்.

ஔவை சு. துரைசாமிப்பிள்ளையின் முதல் நூறு பாடல்களுக்கான ஐங்குறுநூறு உரையை 1938ஆம் ஆண்டு கா. கோவிந்தன் வெளியிட்டுள்ளார்.  அதன்பிறகு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக மருதம் மற்றும் நெய்தல் ஒரு தொகுதியாகவும், குறிஞ்சி மற்றும் பாலை ஒரு தொகுதியாகவும், முல்லை ஒரு தொகுதியாகவும் என மூன்று தொகுதிகளாக ஐங்குறுநூறு பதிப்பை 1957ஆம் ஆண்டு பதிப்பித்திருக்கின்றார்.  இப்பதிப்பிற்கு உ.வே. சாமிநாதையரின் பதிப்பும், சீர்காழி கோவிந்தசாமி ரெட்டியாரின் சுவடியும் துணைபுரிந்திருக்கின்றன.

பொ.வே. சோமசுந்தரனாரின் ஐங்குறுநூறு விளக்கவுரையைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1961ஆம் ஆண்டு வெளியிட்டு உள்ளது. இதன் மறுபதிப்பு 1966ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

இப்பதிப்புகளில் சுவடியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தவை உ.வே. சாமிநாதையரின் பதிப்பும், ஔவை சு. துரைசாமிப் பிள்ளையின் பதிப்பும் ஆகும்.  

தற்போது ஐங்குறுநூறு சுவடிகள் உ.வே. சாமிநாதையர் நூலகத்தில் ஒன்றும், திருவாவடுதுறை ஆதீனத்தில் ஒன்றும் இருப்பதை அறியமுடிகிறது. 

4. பதிற்றுப்பத்து

உ.வே. சாமிநாதையர் பழைய உரையுடன் 1904ஆம் ஆண்டு பதிற்றுப்பத்தைப் பதிப்பித்துள்ளார்.  இதன் இரண்டாம் பதிப்பு 1920ஆம் ஆண்டும், மூன்றாம் பதிப்பு 1941ஆம் ஆண்டும், நான்காம் பதிப்பு 1945ஆம் ஆண்டும், ஐந்தாம் பதிப்பு 1949ஆம் ஆண்டும், ஆறாம் பதிப்பு 1957ஆம் ஆண்டும் வெளிவந்துள்ளது.  திருவாவடுதுறை ஆதீனச் சுவடிகள் இரண்டு, சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகச் சுவடி, ஆழ்வார் திருநகரி தே. இலட்சுமணக் கவிராயரின் சுவடி, ஜே.எம். வேலுப்பிள்ளையின் சுவடி, தி.த. கனகசுந்தரம் பிள்ளையின் சுவடி, திருமயிலை சண்முகம் பிள்ளையின் சுவடி ஆக ஏழு சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு இப்பதிப்பைக் கொணர்ந்துள்ளார்.

ஔவை சு. துரைசாமிப்பிள்ளையின் பதிற்றுப்பத்து விளக்கவுரையை 1950ஆம் ஆண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது.  இப்பதிப்பிற்கு இரண்டு ஏட்டுச் சுவடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் அவர், யாரிடமிருந்து சுவடி பெற்ற செய்தியைக் குறிப்பிடவில்லை.  இதன் இரண்டாம் பதிப்பு 1955ஆம் ஆண்டும், மூன்றாம் பதிப்பு 1958ஆம் ஆண்டும், நான்காம் பதிப்பு 1963ஆம் ஆண்டும், ஐந்தாம் பதிப்பு 1968ஆம் ஆண்டும் வெளிவந்துள்ளது.

பண்டிதர் சு. அருளம்பலத்தின் பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரையை யாழ்ப்பாணத்துக் காரைநகர் அ. சிவானந்தநாதன் 1960ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

இப்பதிப்புகளில் சுவடியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தவை உ.வே. சாமிநாதையர் பதிப்பும், ஔவை சு. துரைசாமிப்பிள்ளை பதிப்பும் ஆகும்.  

தற்போது மூலமும் உரையும் கொண்ட பதிற்றுப்பத்துச் சுவடிகள் உ.வே. சாமிநாதையர் நூலகத்தில் ஒன்றும், கொல்கத்தா இந்திய தேசிய நூலகத்தில் ஒன்றும் இருப்பதை அறியமுடிகிறது. 

5. பரிபாடல்

பரிமேலழகர் உரையுடன் கூடிய பரிபாடல் பதிப்பை உ.வே. சாமிநாதையர் 1918ஆம் ஆண்டு பதிப்பித்திருக்கின்றார். இதன் மறுபதிப்பு 1935ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  திருவாவடுதுறை ஆதீனச் சுவடி (முதற்பாட்டுரை முதல் 19ஆம் பாட்டு 38ஆம் அடி மூலம் வரை), ஆழ்வார் திருநகரி தே. இலட்சுமணக் கவிராயரின் சுவடி (இரண்டாவது முதல் 22ஆவது பாடல் உரை வரை) இரண்டு, தருமபுர ஆதீன ஒற்றை ஏடுகள் (பாயிரம், பனிக்கடல் (5) எனும் பாடல் மட்டும் எழுதிய ஏடுகள்) இரண்டு, இரா. இராகவையங்கார் உதவிய மூல ஒற்றை ஏடுகள் இரண்டு ஆகியன கொண்டு உ.வே. சாமிநாதையர் இப்பதிப்பைக் கொணர்ந்துள்ளார்.

பொ.வே. சோமசுந்தரனாரின் பரிபாடல் விளக்கவுரையை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1957ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இதன் இரண்டாம் பதிப்பு 1964ஆம் ஆண்டும், மூன்றாம் பதிப்பு 1969ஆம் ஆண்டும் வெளிவந்துள்ளது.

புலியூர்க்கேசிகனின் தெளிவுரையை பாரி நிலையம் 1971ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இது பல பதிப்புகளைப் பெற்றுள்ளது.

இப்பதிப்புகளில் சுவடியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது உ.வே. சாமிநாதையரின் பதிப்பு மட்டுமே.  

தற்போது பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும் கொண்ட சுவடிகள் உ.வே. சாமிநாதையர் நூலகத்தில் ஒன்றும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றும், திருவாவடுதுறை ஆதீனத்தில் ஒன்றும் இருப்பதை அறியமுடிகிறது. 

6. கலித்தொகை

சி.வை. தாமோதரம் பிள்ளை கி.பி.1887ஆம் ஆண்டு கலித்தொகை நச்சினார்க்கினியர் உரையைப் பதிப்பித்திருக்கின்றார்.  யாழ்ப்பாணம் வி. கனகசபைப் பிள்ளை, திருமணம் கேசவ சுப்பராய முதலியார், மயிலை இராமலிங்கம் பிள்ளை, புதுச்சேரி நெல்லித்தோப்பு சொக்கலிங்கம் பிள்ளை பேத்தி ஆகியோருடைய சுவடிகள், தஞ்சை சரஸ்வதிமகால் நூலகம், சென்னை பிராசிய கிரந்த மண்டபம் ஆகிய நிறுவனச் சுவடிகள், பெயர் தெரியாத திண்டிவன நண்பரின் சுவடி ஆகிய நச்சினார்க்கினியரின் உரைச் சுவடிகளையும், புதுவை நயனப்ப முதலியார், ஆறுமுக நாவலர், திருவாவடுதுறை ஆதீனம் (2 சுவடிகள்), திருவாவடுதுறை ஆதீன உதவியுடன் பெற்ற (2 சுவடிகள்) சுவடிகள் ஆகிய மூலச் சுவடிகளையும் அடிப்படையாகக் கொண்டு சி.வை. தாமோதரனார் கலித்தொகையைப் பதிப்பித்திருக்கின்றார்.

இ.வை. அனந்தராமையர் சி.வை.தாமோதரம் பிள்ளையின் பதிப்பில் இருந்த சில குறைபாடுகளை நீக்கும் பொருட்டு 1925ஆம் ஆண்டு பாலைக்கலி மற்றும் குறிஞ்சிக் கலியும், மருதக்கலி மற்றும் முல்லைக்கலியும், 1931ஆம் ஆண்டு நெய்தற்கலியும் என மூன்று தொகுதிகளாகப் பதிப்பித்திருக்கின்றார்.  இப்பதிப்பு நச்சினார்க்கினியர் உரையுடன் கூடியதாகும்.  இம்மூன்று தொகுதிகளின் இணைந்த நிழற்படப் பதிப்பை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1984ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

உ.வே.சாமிநாதையர் கொடுத்த சி.வை.தா.வின் கலித்தொகை அச்சுநூல் ஒன்று மற்றும் ஏட்டுச் சுவடி இரண்டு கொண்டும், அனவரத விநாயகம் பிள்ளை மற்றும் கா. நமச்சிவாய முதலியார் ஆகியோர் சில கலித்தொகை சுவடிகளை ஒப்பிட்டு திருத்தம் மேற்கொண்டிருந்த சி.வை.தா.வின் அச்சுநூல்கள் கொண்டும் இப்பதிப்பை இ.வை. அனந்தராமையர் பதிப்பித்திருக்கின்றார்.  மூலம் மட்டும் கொண்ட ஒரு பதிப்பை 1930ஆம் ஆண்டு இ.வை. அனந்தராமையர் பதிப்பித்து இருக்கின்றார்.

அதன் பிறகு திரு.தை.ஆ. கனகசபாபதி பாலைக்கலிக்குப் புத்துரையொன்றியற்றி 1937ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். 

பாகனேரி வெ.பெரி.பழ.மு. காசிவிசுவநாதன் செட்டியாரின் பொருளுதவியுடன் இளவழகனார் ஆராய்ச்சி முன்னுரையும் நச்சினார்க்கினியர் உரையும் சேர்ந்த ஒரு பதிப்பை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1938ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இப்பதிப்பு 1943, 1949, 1955, 1958, 1962, 1967ஆம் ஆண்டுகளில் முறையே வெளிவந்துள்ளது.

சக்திதாசன் சுப்பிரமணியத்தின் விளக்கவுரையைச் சென்னை, ரமா பப்ளிகேஷன்ஸ் 1958ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. 

புலியூர்க்கேசிகனின் தெளிவுரையைச் சென்னை, தேனருவிப் பதிப்பகம் 1958ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இதன் இரண்டாம் பதிப்பை இப்பதிப்பகம் 1965ஆம் ஆண்டும், இதன் மூன்றாம் பதிப்பை பாரி நிலையம் 1971ஆம் ஆண்டும் வெளியிட்டுள்ளது.  

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வள்ளுவப் பண்ணை வழியாக 1958ஆம் ஆண்டு ஒரு பதிப்பைக் கொணர்ந்துள்ளார்.

பொ.வே. சோமசுந்தரனாரின் விளக்கவுரையைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1969ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இதன் மறுபதிப்பு 1970ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

இப்பதிப்புகளில் சுவடியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தவை சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பும், இ.வை. அனந்தராமையரின் பதிப்பும் ஆகும்.  

தற்போது கலித்தொகைச் சுவடிகள் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் இரண்டும், உ.வே. சாமிநாதையர் நூலகத்தில் மூன்றும், திருப்பதி ஸ்ரீவெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் ஒன்றும் இருப்பதை அறியமுடிகிறது. 

7. அகநானூறு

அகநானூற்றின் முதற்பதிப்பை ரா. இராகவையங்கார் கி.பி.1920இல் மயிலாப்பூர் கம்பர் விலாசம் வே. இராசகோபாலன் உதவியுடன் பதிப்பித்திருக்கின்றார். பொ. பாண்டித்துரைத் தேவர் உதவிய பெரும்பழனை ஏட்டுச் சுவடி, திருநெல்வேலி ஸ்ரீமான் நெல்லையப்பக் கவிராயர், சென்னை ஸ்ரீமான் தி.த. கனகசுந்தரம் பிள்ளை (ஏட்டுச் சுவடி மற்றும் காகிதச் சுவடி), சென்னை மேரி ராணியார் கல்லூரித் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமான் கா.ரா. நமச்சிவாய முதலியார், திருமயிலை வித்துவான் ஸ்ரீமான் சண்முகம் பிள்ளை ஆகியோரின் சுவடிகளையும், சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூல் நிலையச் சுவடியையும் அடிப்படையாகக் கொண்டு ரா. இராகவையங்கார் இப்பதிப்பைக் கொணர்ந்துள்ளார்.  1923ஆம் ஆண்டில் அகநானூற்றின் இரண்டாம் பதிப்பும், 1935ஆம் ஆண்டில் மூன்றாம் பதிப்பும், 1926ஆம் ஆண்டில் களிற்றியானைநிரை மட்டும் இவரால் வெளியிடப் பெற்றுள்ளது.

அகநானூறு களிற்றியானைநிரையின் முதல் தொண்ணூறு பாக்களுக்குப் பழைய குறிப்புரையும், எஞ்சிய முப்பது பாக்களுக்கு வே. இராசகோபாலன் விளக்கவுரை எழுதியும் 1926ஆம் ஆண்டு வெளியிட்டார்.  மணிமிடைபவளத்தில் முதல்நாற்பது பாக்களுக்கு மட்டும் விளக்கவுரை எழுதி நூல் முழுமையும் 1933 வெளியிட்டார். இவர் உரை எழுபது பாக்களுக்கு மட்டுமே (91-160) அமைந்துள்ளது.  

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை ஆகியோர் நூல் முழுமைக்கும் விளக்கவுரை வரைந்துள்ளனர்.  இவ்வுரைப் பதிப்பு களிற்றியானைநிரை 1943இலும், நித்திலக்கோவை 1944இலும், மணிமிடைபவளம் 1946இலும் வெளிவந்துள்ளன.  பாகனேரி வெ.பெரி.பழ.மு. காசிவிசுவநாதன் செட்டியார் அவர்களின் பொருளுதவியுடன் இவற்றைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் வெளியிட்டுள்ளது.  பின்னர், நூல் முழுமையும் இவர்கள் உரையுடன் ஒரு தொகுதியாக மறுபதிப்பு 1961, 1965, 1968ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளது.

புலியூர்க்கேசிகனின் களிற்றியானைநிரை தெளிவுரை  மற்றும் மணிமிடைபவளம் தெளிவுரைகளை 1960இலும், நித்திலக்கோவை தெளிவுரையை 1962இலும் பாரி நிலையம் வெளியிட்டுள்ளது.  இதன் பிறகு பல பதிப்புகளை இந்நூல் கொண்டுள்ளது.

பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார்  களிற்றியானை நிரையின்  முதல் ஐம்பது பாக்களுக்கு எழுதிய விளக்கவுரையை 1966இலும், முதல் நூறு பாக்களுக்கு எழுதிய விளக்கவுரையை 1974இலும், நூல் முழுமைக்கும் எழுதிய விளக்கவுரையை 1970இலும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர் சி. கணேசையர் ஈழகேசரி இதழில் 1956-1958இல் களிற்றியானை நிரைக்கு மட்டும் எழுதிய உரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா சிறந்த முன்னுரையுடன் 2002இல் வெளியிட்டுள்ளார்.  

அகநானூறு முழுமைக்கும் உரிய உரையினைப் பேராசிரியர் மயிலம் வே. சிவசுப்பிரமணியன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சென்னை உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம் 1990இல் வெளியிட்டுள்ளது.  

இப்பதிப்புகளில் சுவடியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது இரா. இராகவையங்காரின் பதிப்பு மட்டுமே. 

தற்போது அகநானூற்றுச் சுவடிகள் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தில் 6(மூலம் - 3, உரை 2, மூலமும் உரையும் 1)ம், திருவாவடுதுறை ஆதீனத்தில் ஒன்றும், கொல்கத்தா இந்திய தேசிய நூலகத்தில் ஒன்றும் இருப்பதை அறியமுடிகிறது. 

8. புறநானூறு

எட்டுத் தொகை நூல்களில் எட்டாவதாக எண்ணத்தக்க புறநானூற்றின் முதற் பதிப்பை மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் பழைய உரையுடன்  1894ஆம் ஆண்டு பதிப்பித்து இருக்கின்றார்.  திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிகர், திருத்தணிகை சரவணப் பெருமாளையர், யாழ்ப்பாணம் நல்லூர் சதாசிவப் பிள்ளை மற்றும் த. கனகசுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணம் வி. கனகசபைப்பிள்ளை, மந்தித்தோப்பு சங்கர சுப்பிரமணிய தத்த சுவாமிகள், திருநெல்வேலி கவிராச ஈசுவரமூர்த்திப் பிள்ளை ஆகியோரின் மூலச ¢சுவடிகளையும்,  அரியூர் சாமிநதையர், திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிகர், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர், ஆழ்வார் திருநகரி தாயவலந்தீர்த்த கவிராயர், மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் (இரண்டு சுவடிகள்), வண்ணார்பேட்டை திருப்பாற்கடனாத கவிராயர், தென்காசி சுப்பையா பிள்ளை, தூத்துக்குடி குமாரசாமிப் பிள்ளை, யாழ்ப்பாணம் வண்ணைநகர் சுவாமிநாத பண்டிதர் ஆகியோரின் மூலமும் உரையும் கொண்ட சுவடிகளையும், மதுரைத் தமிழ்ச் சங்க மூலமும் உரையும் கொண்ட சுவடியையும் அடிப்படையாகக் கொண்டு உ.வே. சாமிநாதையர் இப்பதிப்பைக் கொணர்ந்துள்ளார்.   இதன் இரண்டாம் பதிப்பு 1923லும், மூன்றாம் பதிப்பு 1935லும், நான்காம் பதிப்பு 1950லும், ஐந்தாம் பரிரப்பு, 1956லும், ஆறாம் பதிப்பு 1963லும், ஏழாம் பதிப்பு, 1971லும் உ.வே. சா. நூல் நிலையம் வெளியிட, இதற் நிழற்படப் பதிப்பைத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 1985ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  மூலம் மட்டும் கொண்ட புறநானூற்றுப் பதிப்பை உ.வே. சாமிநாதையர் அவர்கள் 1936ஆம் ஆண்டு கொணர்ந்துள்ளார்.

ஔவை சு. துரைசாமி பிள்ளையின் புறநானூறு விளக்கவுரையின் முதல் இரு நூறு பாடல்களை ஒரு தொகுதியாகவும், பின் இருநூறு பாடல்களை மற்றொரு தொகுதியாகவும் எனச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1947 மற்றும் 1951ஆம் ஆண்டுகளில் முறையே வெளியிட்டுள்ளது.  பல சுவடிகளை ஒப்பிட்டு ஆய்ந்து வெளிவந்த உ.வே. சாமிநாதையரின் இரண்டாம் பதிப்பு அச்சு நூலையும், அரித்துவார மங்களம் வா. கோபாலசாமி ரகுநாத ராசாளியார் சுவடியையும் அடிப்படையாகக் கொண்டு இப்பதிப்பை வெளியிட்டுள்ளார். இவ்விரண்டின் இணைந்த மறுபதிப்பு 1952ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் புறநானூறு விளக்கவுரையைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1955ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

புலியூர்க்கேசிகனின் தெளிவுரையைச் சென்னை, கேசிகன் பதிப்பகம் 1958ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இதன் மறுபதிப்பு 1959ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

புறநானூறு மூலமும் உரையும் - முன் செம்பாகமாக முதல் இருநூறு பாடல்களை தஞ்சை வடிவேல் பதிப்பகம் வழியாக 2003ஆம் ஆண்டு பதிப்பித்திருக்கின்றார்.

முனைவர் கி. இராசா 'புறநானூறு மூலமும் உரையும் திணை துறைப் பதிப்பு' என்ற பதிப்பு 2007ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.  இப்பதிப்பிற்கு உ.வே.சாமிநாதையரின் பதிப்பும், எஸ். வையாபுரிப்பிள்ளையின் பதிப்பும் துணை புரிந்திருக்கின்றன.  திணை - துறை வாரியாக புறநானூறு பிரிக்கப்பெற்று முறைப்படுத்தி பதிப்பிக்கப்பெற்ற சிறப்பினை இப்பதிப்பு பெற்றுள்ளது.  இதுவரை வெளிவந்த பதிப்புகளின் போக்கை இப்பதிப்பு சிறிது திசை திருப்புகிறது.

இப்பதிப்புகளில் சுவடியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தவை உ.வே.சாமிநாதையரின் பதிப்பும், ஔவை சு. துரைசாமிப் பிள்ளையின் பதிப்பும் ஆகும்.

தற்போது புறநானூற்றுச் சுவடிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம் (மூலம் 3, மூலமும் உரையும் 7), பேரூர் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகிய இடங்களில் இருப்பதை அறியமுடிகிறது. 

9. பத்துப்பாட்டு

உ.வே. சாமிநாதையர், பத்துப்பாட்டு நச்சினார்க்கினியர் உரையுடன் 1889ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்திருக்கின்றார். இப்பதிப்பே பத்துப்பாட்டு முழுமையும் வெளிவந்த முதற் பதிப்பாகும்.

திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வேலூர் குமாரசாமி ஐயர், ஆறுமுகமங்கலம் குமாரசாமி பிள்ளை, திருநெல்வேலி  கவிராச நெல்லையப்பப் பிள்ளை, வண்ணாரப்பேட்டை திருப்பாற்கடனாத கவிராயர், ஆழ்வார் திருநகரி தேவர்பிரான் கவிராயர், பொள்ளாச்சி வித்துவான் சிவன் பிள்ளை, திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை, ம.வி. கனகசபைப் பிள்ளை, களக்காடு சாமிநாத தேசிகர் ஆகியோரின் சுவடிகளையும், தருமபுர ஆதீனப் புத்தகசாலை, சென்னை அரசாங்கக் கையெழுத்து நூல்நிலையம் ஆகிய இடங்களில் உள்ள சுவடிகளையும் அடிப்படையாகக் கொண்டு உ.வே.சா. இப்பதிப்பைப் பதிப்பித்திருக்கின்றார்.  இதனையடுத்து மேலும் சில திருத்தங்களுடன் உ.வே.சா. அவர்கள் 1918ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பைக் கொணர்ந்துள்ளார்.  இதன் மூன்றாம் பதிப்பு 1961ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  இம்மூன்றாம் பதிப்பை நிழற்படப் பதிப்பாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1986ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. 1931ஆம் ஆண்டு மூலம் மட்டும் கொண்ட பதிப்பை உ..வே. சாமிநாதையர் வெளியிட்டுள்ளார்.  

பொ.வே. சோமசுந்தரனாரின் பத்துப்பாட்டு விளக்கவுரையை இரு தொகுதிகளாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் 1956ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இதன் மறுபதிப்புகள் 1962, 1966, 1968, 1971... என வெளிவந்திருக்கின்றன.

இப்பதிப்புகளில் சுவடியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது உ.வே.சாமிநாதையரின் பதிப்பு மட்டுமே. 

தற்போது பத்துப்பாட்டுச் சுவடிகள் திருவனந்தபுரம் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், இந்திய தேசிய நூலகம் - கொல்கத்தா, திருவாவடுதுறை ஆதீனம், உ.வே.சா. நூலகம் (மூலம் 1, நச்சினார்க்கினர் உரை 1) ஆகிய இடங்களில் இருப்பதை அறியமுடிகிறது.

பத்துப் பாட்டில் இருக்கக் கூடிய திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியன தனித்தனிப் பதிப்புகள் பல பெற்றிருக்கின்றன.

சங்க இலக்கியம் - தொகுப்புப் பதிப்புகள்

1. வையாபுரிப்பிள்ளை பதிப்பு

பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை மேற்பார்வையில் சைவ சித்தாந்த மகாசமாசம் 1940ஆம் ஆண்டு 'சங்க இலக்கியம்' என்ற தலைப்பில் ஒரு பதிப்பை உருவாகியுள்ளது.  பாடிய புலவர்களை அடிப்படையாகக் கொண்டு அகர வரிசைப்படி எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றின் பாக்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இது ஒரு புதிய முயற்சி எனலாம்.   புலவருடைய பாடல்கள் அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, பரிபாடல், புறநானூறு என்ற அகர நிரலில் எடுத்துத் தொகுக்கப் பெற்றுள்ளன.  இதன் இரண்டாம் பதிப்பினை 1967இல் பாரி நிலையமும், மூன்றாம் பதிப்பினை 2006 முல்லை நிலையமும் வெளியிட்டுள்ளது.

அகநானூற்றுக்குக் கம்பர் விலாசம் வே. இராசகோபால ஐயங்காரின் ஏட்டுச்சுவடி மற்றும் காகிதச் சுவடி, சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் காகிதச் சுவடி, பவானந்தர் கழகக் காசிதச் சுவடி; ஐங்குறுநூற்றுக்கு சென்னை அரசாங்க நூல் நிலையச் சுவடி; கலித்தொகைக்கு நெல்லை அம்பலவாணக் கவிராயரின் சுவடி, பவானந்தர் கழகக் காகிதச் சுவடி; குறுந்தொகைக்கு மதுரைத் தமிழ்ச் சங்கச் சுவடி, தி.த. கனகசுந்தரம் பிள்ளையின் காகிதச் சுவடி, இரா. இராகவையங்காரின் காகிதச் சுவடி, முத்துரத்தின முதலியாரின் காகிதச் சுவடி, சென்னை அரசாங்க நூல் நிலையச் சுவடி; நற்றிணைக்கு மதுரைத் தமிழ்ச் சங்கச் சுவடி, இரா. இராகவையங்காரின் காகிதச் சுவடி, சென்னை அரசாங்க நூல் நிலையச் சுவடி, பவானந்தர் கழகக் காகிதச் சுவடி; பதிற்றுப்பத்துக்கு இரா. இராகவையங்காரின் காகிதச் சுவடி, தி.த. கனகசுந்தரம் பிள்ளையின் காகிதச் சுவடி; பரிபாடலுக்கு தி.த. கனகசுந்தரம்பிள்ளையின் காகிதச் சுவடி, புறநானூற்றுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கச் சுவடி, சென்னை அரசாங்க நூல் நிலைய காகிதச் சுவடி, தி.த. கனகசுந்தரம் பிள்ளையின் காகிதச் சுவடி, மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளையின் காகிதச் சுவடி; பத்துப்பாட்டு மூலம் மட்டும் கொண்ட கா.ரா. நமச்சிவாய முதலியாரின் காகிதச் சுவடி, திருமுருகாற்றுப்படைக்கு எம்.பி.எஸ். துரைசாமி முதலியாரின் சுவடி, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு ஆகியவற்றிற்கு முறையே அம்பலவாணக் கவிராயரின் சுவடி, சென்னை அரசாங்க நூல் நிலைய காகிதச் சுவடி; மதுரைக் காஞ்சி மற்றும் பட்டினப்பாலைக்கு சென்னை அரசாங்க நூல் நிலைய காகிதச் சுவடி, மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளையின் காகிதச் சுவடி; நெடுநல்வாடை மற்றும் குறிஞ்சிப் பாட்டுக்கு மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளையின் சுவடி; மலைபடுகடாத்திற்கு சென்னை அரசாங்க நூல் நிலைய காகிதச் சுவடி ஆகிய சுவடிகளைக் கொண்டு இப்பதிப்பை எஸ். வையாபுரிப்பிள்ளை வெளியிட்டுள்ளார்.

2. மர்ரே எஸ். இராஜம் பதிப்பு

மர்ரே எஸ். இராஜம் அவர்கள் 1957ஆம் ஆண்டு சங்க இலக்கியத்தை தனித்தனி நூல்களாக வெளியிட்டுள்ளார்.  இத்தொகுப்புடன் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஒரு தொகுதியாகவும், தொல்காப்பியம் ஒரு தொகுதியாகவும் வெளிவந்துள்ளன.  

சங்க இலக்கியங்களைத் தக்க அறிஞர்களைக் கொண்டு ஆராய்ந்து எளியோரும் கல்வியாளரும் புரிந்துகொள்ளுதற்குரிய செம்பதிப்பாகவும் மலிவுப் பதிப்பாகவும் வெளியிடுதலை முதன்மை நோக்கமாகக் கொண்டு அறிஞர் குழுவின் உதவியுடன் மர்ரே எஸ். இராஜம் இப்பதிப்பை வெளியிட்டுள்ளார்.  இதன் தனிச்சிறப்பு, பாக்கள் சந்தி பிரித்துப் பதிப்பிக்கப்பெற்றிருப்பதுதான். தேவையான இடங்களில் நிறுத்தக்குறி, மேற்கோள் குறி, வியப்புக்குறி, வினாக்குறி முதலானவை இப்பதிப்பில் சுட்டத்தக்கதாகும். பெரும்பான்மையும் கம்பர் விலாசம் வே. இராசகோபாலன் அவர்கள் பதிப்பினையே இப்பதிப்பாசிரியர் குழு பின்பற்றியுள்ளதென்பதை பேராசிரியர் சோ.ந. கந்தசாமி அவர்கள் தெரிவிக்கின்றார்.  மேலும், பாட்டு தொகைகளைப் பயில்வார்க்குப் பல வகையிலும் உதவியாக உள்ள புலவர்கள் அகராதி, பாடப்பட்டோர் பெயர் வரிசை, சொல் - தொடர் விளக்கம், கதைகளும் வரலாற்றுக் குறிப்புகளும், பழக்க வழக்கங்கள், கட்டுரைத் தொடர்கள், உவமைகள், வருணனைகள் போன்றவற்றைக் குறிப்பிடும் 'பாட்டும் தொகையும்' என்ற சங்க இலக்கியக் கருவி நூல் ஒன்றையும் இத்தொகுப்புடன் வெளியிட்டுள்ளார். இதன் இரண்டாம் பதிப்பை நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் 1981ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

3. பழந்தமிழ் இலக்கியப் பேழை

பழந்தமிழ் இலக்கண இலக்கிய காவிய நூல்களை எல்லாம் உரைகளுடன் ஒருங்கே பெற்றுப் பயன்பெறும் வகையில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் 1970ஆம் ஆண்டு 'பழந்தமிழ் இலக்கியப் பேழை' என்ற ஒன்றை வெளியிட்டது.  இப்பதிப்பிற்குச் சுவடிகள் எதுவும் பயன்படுத்தவில்லை.  ஏற்கெனவே வெளிவந்த நல்ல பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இப்பேழையைக் கழகம் வெளியிட்டுள்ளது.

தொல்காப்பிய உரைகள் பதினொரு தொகுதிகளாகவும், பத்துப்பாட்டு இரண்டு தொகுதிகளாகவும், எட்டுத்தொகை பதினொரு தொகுதிகளாகவும், பதினெண் கீழ்க்கணக்கு ஏழு தொகுதிகளாகவும், காப்பியங்கள் (சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி, வளையாபதி, குண்டலகேசி, உதயணகுமார காவியம், நீலகேசி, யசோதர காவியம்) பதினொரு தொகுதிகளாகவும் இப்பேழை அமைந்திருந்தது.

4. வர்த்தமானன் பதிப்பு

புலவர் அ. மாணிக்கம் உரையினைச் சென்னை  வர்த்தமானன் பதிப்பகம் முதற்பதிப்பாக 1999ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. 

நற்றிணை - புலவர் நா. இராமையா பிள்ளை
குறுந்தொகை - முனைவர் இரா. பிரேமா
ஐங்குறுநூறு - புலவர் அ. மாணிக்கனார்
பதிற்றுப்பத்து - புலவர் அ. மாணிக்கனார்
பரிபாடல்        - புலவர் அ. மாணிக்கனார்
கலித்தொகை - புலவர் அ. மாணிக்கனார்
அகநானூறு - புலவர் அ. மாணிக்கனார்
புறநானூறு - புலவர் அ. மாணிக்கனார்
பத்துப்பாட்டு - புலவர் அ. மாணிக்கனார்

போன்றோர் இச் சங்க இலக்கியத் தொகுதிக்குப் புத்துரை எழுதி இருக்கின்றனர்.

5. நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் பதிப்பு

முனைவர் அ.அ. பரிமணம் மற்றும் முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன் ஆகியோரைத் தலைமைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு 'சங்க இலக்கியம்' பதினான்கு தொகுதிகளாக சென்னை நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் முதற்பதிப்பை 2004இலும், இரண்டாம் பதிப்பை 2006ஆம் ஆண்டிலும், மூன்றாம் பதிப்பை 2007லும் வெளியிட்டுள்ளது.  

நற்றிணை         -  முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்
குறுந்தொகை - முனைவர் வி. நாகராசன்
ஐங்குறுநூறு - முனைவர் அ. தட்சிணாமூர்த்தி 
பதிற்றுப்பத்து - முனைவர் அ. ஆல¦ஸ்
பரிபாடல்         - முனைவர் பெ. சுப்பிரமணியன்
                முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்
                முனைவர் அ. தட்சிணாமூர்த்தி
கலித்தொகை - முனைவர் அ. விசுவநாதன்
அகநானூறு - முனைவர் இரா. செயபால்
புறநானூறு - முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்
                முனைவர் அ. விசுவநாதன்
                முனைவர் வி. நாகராசன்
                முனைவர் இரா. ஆரோக்கியசாமி
                முனைவர் க. திலகவதி
                முனைவர் வெ. சத்தியநாராயணன்
பத்துப்பாட்டு - முனைவர் வி. நாகராசன்

போன்றோர் இச் சங்க இலக்கியத் தொகுதிக்கு பழைய உரைகளுடன் தழுவிய புத்துரை எழுதி இருக்கின்றனர்.

6. திருக்கோயிலூர் மடாலயப் பதிப்பு

பேராசிரியர்கள் தெ.முருகசாமி, நா. மீனவன், சுப. அண்ணாமலை, தமிழண்ணல் ஆகியோரின் கூட்டு முயற்சியால் வரையப்பெற்ற உரையினைக் காரைக்குடியினைச் சார்ந்த கோவிலூர் மடலாயம் 2004இலும் வெளியிட்டிருத்தல் குறிப்பிடத்தக்கது.

7. முனைவர் சு.வே. சுப்பிரமணியம் பதிப்பு

முனைவர் ச.வே. சுப்பிரமணியம் அவர்கள் 2006ஆம் ஆண்டு மூலம் மட்டும் கொண்ட சங்க இலக்கியத்தை மணிவாசகர் பதிப்பகம் வழி வெளியிட்டுள்ளார். இப்பதிப்பின் தனிச் சிறப்புக்களைக் க.ப. அறவாணன்,

"இதுகாறும் பிரதிகளில் அகப்படாத தொல்காப்பிய உரைகளாலும், புறத்திரட்டாலும் தெரிய வருகின்ற சில செய்யுட் பகுதிகளைத் தந்துள்ளமை, அடிவரையறை அடிப்படையில் அகநூல்கள் ஐந்தினையும்  அமைத்துள்ளமை, சொற்களைப் பிரித்துத் தெளிவாகப் பாடல்களைப் பதிப்பித்துள்ளமை, 473 புலவல்களையும், அகர வரிசையில் நல்கி, அவர்கள் பாடியுள்ள பாடல் எண்களையும் நல்கியுள்ளமை, புறத்திணைத் துறைகள், பாடல் எண்கள், அட்டவணையாக வழங்கப்பெற்றுள்ளமை" என்று இந்நூலின் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

8. இணையதளப் பதிப்பு

உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் இணையதளத்தின் மூலம் தமிழிலக்கியங்களைத் தெரிந்துகொள்ள, சென்னையில் இயங்கி வரும் தமிழ் இணையப் பல்கலைக்கழக இணைய தளத்தில் (www.tamilvu.org) நூலகம் என்ற பகுதியில் 'சங்க இலக்கியம்' இடம்பெற்றுள்ளது.  இதில் நூலாசிரியர் அடிப்படையிலோ, பாடல் முதற்குறிப்பு அடிப்படையிலோ, பாடலில் இடம்பெற்றுள்ள சொற்களின் அடிப்படையிலோ, திணை, துறை அடிப்படையிலோ சங்க இலக்கியப் பாடல்களைத் தெரிவு செய்து படித்துக்கொள்ள வழி செய்திருக்கின்றனர்.

சுவடிகள் இருப்பிடம்

ஓலைச்சுவடி பதிப்பு முதல் இணையதளப் பதிப்பு வரை சங்க இலக்கியம் தனிப்பதிப்புகளாகவும் தொகுப்பு வெளியீடுகளாகவும் பல கண்டிருந்தாலும் இவை முழுமையான, திருத்தமான பதிப்பு தானா? என்பதில் ஐயமே மேலிடுகிறது.  ஏனெனில் இன்னும் பழம்பதிப்பாசிரியர்கள் பார்வையிடாத சங்க இலக்கியச் சுவடிகள் (ஏடு மற்றும் காகிதம்) பல இருக்கின்றன.  இவை உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களிலும், அறிஞர்தம் வீடுகளிலும் பாதுகாத்து வருகின்றனர்.  குறிப்பாக, கீழ்க்காணும் இடங்களில் சுவடிகளைப் பாதுகாத்து வருகின்றனர்.

1. அடையாறு நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை.
2. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
3. ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, சென்னை.
4. ஆசியாடிக் சொஸைட்டி நூலகம், கொல்கத்தா.
5. ஆதி பீமாராஜா கோஸ்வாமி மடம், தஞ்சை.
6. இரமணாஸ்ரமம், திருவண்ணமலை.
7. இந்திய அலுவலக நூலகம், லண்டன்.
8. இந்திய தேசிய நூலகம், கொல்கத்தா.
9. உப்சலா பல்கலைக்கழக நூலகம், உப்சலா, சுவீடன்.
10. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.
11. எடின்பர்க் பல்கலைக்கழக நூலகம், லண்டன்.
12. எதினோகிராபிகல் அருங்காட்சியகம், ஸ்டாக்ஹோம், சுவீடன்.
13. ஒரிசா மாநில அருங்காட்சியகம், புவனேஸ்வர்.
14. கலைமகள் கல்வி நிலையம், ஈரோடு.
15. கிங்ஸ் நூலகம், பாரிஸ்.
16. கிளாஸ்கோ பல்கலைக்கழக ஹண்டேரியன் நூலகம், கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து.
17. கீழ்த்திசை ஆராய்ச்சி நிறுவனம், ஜெய்பூர், ராஜஸ்தான்.
18. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சேப்பாக்கம், சென்னை.
19. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், திருவனந்தபுரம்.
20. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், பரோடா.
21. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், மைசூர்.
22. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 
ஐதராபாத்.
23. கீழ்த்திசைப் பொது நூலகம், பாட்னா.
24. குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
25. கே.எஸ். வெங்கட்டாசார் அரசினர் மகாராஜா சமஸ்கிருத கல்லூரி, 
மைசூர்.
26. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நூலகம், கேம்ப்ரிட்ஜ்.
27. கேலடி அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம், 
கேலடி, கர்நாடகா.
28. கோவிலூர் மடம், காரைக்குடி.
29. கௌமார மடாலயம், சரவணம்பட்டி, கோவை.
30. சமஸ்கிருத ஆய்வு அகாடமி, மேல்கோட்டை.
31. சரஸ்வதி பவன் நூலகம், வாரணாசி.
32. சி.பி. ராமசுவாமி அய்யர் பவுண்டேசன், சென்னை.
33. சோவியத் யூனியன் ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட் நூலகம், லெனின்கிராடு,          சோவியத் யூனியன்.
34 ட்ரினிட்டி கல்லூரி, பாப்லின் நூலகம், அயர்லாந்து.
35 டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூலகம், திருவான்மியூர், சென்னை.
36. டாக்டர் வி.எஸ். கிருஷ்ணா நூலகம், ஆந்திரா பல்கலைக்கழகம், 
வால்டர்.
37. தமிழ்ச் சங்கம், மதுரை.
38. தமிழ்ப் பல்கலைக்கழகம், ஓலைச்சுவடித்துறை, தஞ்சாவூர்.
39. தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர்.
40. திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை.
41. தேசிய அருங்காட்சியகம், கோபன்ஹேகன், டென்மார்க்.
42. பண்டார்க்கர் கீழ்த்திசை ஆராய்ச்சி நிலையம், புனா.
43. பிப்லியோதெக்கோ நேசனிலே, பாரிஸ்.
44. பிபிலோதேகா அப்போஸ்டிலிகா, வாடிகன் நகரம், ரோம்.
45. பிபிலோதேகு நேஷனல், பாரிஸ், பிரான்சு.
46. பிரிட்டிஷ் அருங்காட்சியகம், லண்டன்.
47. பிருந்தாவன் ஆராய்ச்சி நிறுவனம், மதுரா.
48. பிரெஞ்சிந்திய நிறுவனம், பாண்டிச்சேரி.
49. போடிலியன் நூலகம், ஆக்ஸ்போர்டு
50. மகாராஜா சரபோசி சரஸ்வதிமகால் நூலகம், தஞ்சாவூர்.
51. மத்திய நூலகம், பரோடா.
52. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
53. மாநில மற்றும் பல்கலைக்கழக நூலகம், ஹம்பர்க், மேற்கு ஜெர்மனி.
54. ரன்வீர்சிங் ஆராய்ச்சி நிறுவனம்
55. ராம்பூர் ராஜா நூலகம், ராம்பூர், உத்திரபிரதேசம்.
56. ராயல் ஏசியாடிக் சொசைட்டி நூலகம், லண்டன்.
57. ராயல் நூலகம், கோபன்ஹேகன், டென்மார்க்.
58. லூதரன் மிஷன் சர்ச் அருங்காட்சியகம், லிப்ஷிக், கிழக்கு ஜெர்மனி.
59. லெனின்கிராடு பல்கலைக்கழக நூலகம், லெனின்கிராடு, சோவியத் யூனியன்.
60. லெனின் மாநில நூலகம், மாஸ்கோ, சோவியத் யூனியன்.
61. ஸ்ரீமௌனசுவாமிகள் மடம், சிதம்பரம்.
62. ஸ்ரீவெங்கடேஸ்வரர் கீழ்த்திசை நிறுவனம், திருப்பதி.
63. ஸ்ரீவெங்கடேசுவரா பல்கலைக்கழகம், திருப்பதி.
64. ஸ்காட்லாந்து எடின்பர்க் தேசிய நூலகம், ஸ்காட்லாந்து.
65. ஜான் ரைலாட்ஸ், மான்செஸ்டர், இங்கிலாந்து.
66. ஜெர்மன் ஓரியண்டல் சொசைட்டி நூலகம், ஹேல், கிழக்கு ஜெர்மனி.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் நோக்கில் 2003இல் இந்திய அரசுப் பண்பாட்டுத் துறையின் கண்காணிப்பில் தேசிய சுவடிகள் பாதுகாப்புச் சேவையகம் (National Mission for Manuscripts) தோற்றுவிக்கப்பெற்றது.  இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுவடிகளுக்கான கணக்கெடுப்பு பிப்பரவரி 1-5, 2006ல் நடத்தப்பெற்று தமிழ்நாட்டில் மட்டும் 30 மாவட்டங்களில் சுமார் 25,000 சுவடிகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பெற்றுள்ளது.

இச்சேகரிப்புகளில் செவ்வியல் இலக்கண இலக்கியச் சுவடிகளும், மருத்துவம், சோதிடம் உள்ளிட்ட பல பொருண்மைகள் கொண்ட சுவடிகளும் இருக்கலாம்.  இவற்றையெல்லாம் தொகுத்தால் செவ்வியல் ஆய்வின் பரப்பு விரியும்.

கருத்துரை

சங்க இலக்கியச் சுவடிகள் உலகம் முழுவதும் பரவி இருப்பதை உணர முடிகிறது.  இச்சுவடிகள் அனைத்தையும் ஒப்பிட்ட குறுந்தொகை பதிப்பு போன்றதொரு பதிப்பு மற்ற நூல்களுக்கும் வரவேண்டும்.  ஏற்கெனவே வந்த பதிப்புகளைக் கொண்டே புத்துரைகளையும், பொழிப்புரைகளையும், குறிப்புரைகளையும், தெளிவுரைகளையும், விளக்கவுரையும் எழுதி வெளியிடுவதில் எந்தப் பயனும் இல்லை.  தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்கப் பெற்றுள்ள இந்நிலையில், இன்று கிடைக்கக் கூடிய சுவடிகளையும், வெளிவந்த பதிப்புகளையும் ஒப்பிட்டு தூய்மையான பாடம் கண்டு வெளிப்படுத்துதலே  பயனுடையதாக இருக்கும்.  ஆனால் அனைத்துச் சுவடிகளையும் பார்வையிடாத பதிப்பு முழுமை பெறாத பதிப்பாகத்தான் இருக்கும்.  எனவே, இனி வருங்காலங்களிலாவது இக்குறைப்பாட்டைப் போக்கின பதிப்புகள் வெளிக் கொணர்ந்தால் தமிழும் தமிழுலகும் மேலும் மேன்மைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக