வெள்ளி, 7 செப்டம்பர், 2018

ஔவையாரின் ஆத்திசூடி - பாடவேறுபாடுகள்



திருவள்ளுவரின் திருக்குறளுக்குள்ள அருமையும் பெருமையும் ஔவையாரின் ஆத்திசூடிக்கும் உண்டு.  திருக்குறளுக்குப் பலர் உரை கண்டதுபோல் ஆத்திசூடிக்கும் பலர் உரை கண்டுள்ளனர்.  இன்று ஐம்பதிற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளும், பல ஆத்திசூடியுரைகளும், பல காகிதப் படிகளும் கிடைக்கின்றன.  இவற்றையெல்லாம் வைத்து ஆராயின் ஆத்திசூடிக்குத் தெளிவான - முடிவான பாடமும் உரையும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.  ரா. இராகவையங்கார், யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர், நா.மு. வேங்கடசாமி நாட்டார், பரிமேலழகர், பாரதிபித்தன் ஆகியோர் ஆத்திசூடிக்கு உரை வரைந்திருக்கின்றனர்.  ஆத்திசூடி உரைக்கு அவர்கள்  கொண்ட பாடங்கள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை மட்டும் இங்கு ஆராயப்பெறுகிறது.

ஆத்திசூடி அமைப்பு

கட்டளை மொழிகளால் இரண்டிரண்டு சொற்களில் தமிழ் நெடுங்கணக்கு முறையில் அமைந்துள்ள பாடல்களாக ஆத்திசூடி அமைந்துள்ளது.  ஔவையாரின் ஆத்திசூடி 'அறஞ்செய விரும்பு' என அகர முதலில் தொடங்கி, 'அம்ம வோர்ந்து வழிபோ' என வகர வருக்கம் ஈறாக மொழி முதலாம் எழுத்துக்களைக் கொண்டு அகர வரிசையில் அமைந்துள்ளது.

ஆத்திசூடி உரைகள்

ஆத்திசூடிக்கு அறிஞர்கள் பலர் உரை எழுதியுள்ளனர்.  அவற்றுள் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் எழுதிய பாலபாடமும், இராமாநுசக்கவிராயர் எழுதிய பதவுரையும், அரியூர் சுவாமிநாத ஐயரால் எழுதப்பட்டு உ.வே. சாமிநாதையரால் பார்வையிடப்பட்டு 1898இல் வெளிவந்துள்ள விருத்தியுரையும், இந்திரபீடம் கரபாத்திர சுவாமிகளது ஆதீனத்தைச் சேர்ந்த வேதாந்தியால், வேதாந்தத் தத்துவப்படி வெளிப்படை, உள்ளுறைப் பொருள்களோடு 116 பக்கங்களில் எழுதி வெளியிடப்பட்டுள்ள உரையும், மாகறல் கார்த்திகேய முதலியாரின் ஆத்திசூடி, முதற்சூத்திர விருத்தி உரையும், ஆத்திசூடியில் உள்ள 13, 31, 45, 51, 58 ஆகிய எண்களுடைய பாடல்களுக்கு யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் எழுதிய உரையை மறுத்து, செந்தமிழ் இதழின் ஆறாம் தொகுதியில் 'ஔவையார் நீதி மொழியுரை மயக்கம்' எனும் தலைப்பில் மு.சு. பூரணலிங்கம் பிள்ளை எழுதியுள்ள உரையும் (ஆத்திசூடி பரிமேலழகர் உரை,ப.7), ம. இராசேந்திரன் அவர்களால் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை வெளியீடான உயராய்வில் வெளியான 'ஆத்திசூடி பரிமேலழகர் உரை (1988)யும், பாரதி பித்தனின் ஆத்திசூடி இலக்கியம் எனும் நூலில் (ஔவையார், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் ஆத்திசூடி நூல்களுக்கான உரை) இடம்பெற்ற ஔவையாரின் ஆத்திசூடி உரையும் குறிப்பிடத்தக்கனவாம்.

பாடவேறுபாடு

ஔவையாரின் ஆத்திசூடியில் இருபது பாடல்களில் மட்டுமே உரையாசிரியர்களால் பாடவேறுபாடுகள் குறிப்பிடப்பெற்றுள்ளன.  இதில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் பாடமும், நா.மு. வேங்கடசாமி நாட்டார் பாடமும் ஒன்றாகவே அமைய ரா. இராகவையங்கார் பாடம் மட்டும் பதினைந்து இடங்களில் மாறுபடுகிறது.  மற்ற ஐந்து இடங்களில் மூவரின் பாடமும் ஒன்றாகிறது.  பரிமேலழகர் இம்மூவரினின்றும் பல இடங்களில் பாடவேறுபாடு கொள்கிறார்.  திருத்துண், இயங்குத் திரியேல், சான்றோர் எனத்திரி, மெல்லியார் தோள்சேர், வல்லமை பேசேல், தூக்கி வினை செய்யேல் ஆகிய பாடங்களில் பரிமேலழகர் முற்றிலும் மாறுபடுகிறார்.  பாரதிபித்தன் பரிமேலழகரின் வல்லமை பேசேல் பாடத்தையும், இராகவையங்காரின் அம்ம ஒன்னாரைத் தேறேல் எனும் பாடத்தையும் 'ஒன்னாரைத் தேறேல்' எனவுங்கொண்டு மற்ற பாடங்கள் எல்லாம் நாவலர் மற்றும் நாட்டார் பாடங்களையே கொண்டுள்ளார்(காண்க: பின்னிணைப்பு).

பாட ஆய்வு

'சான்றோர் எனத்திரி' எனப் பரிமேலழகரும் 'சான்றோரினத்திரு' என ரா. இராகவையங்கார், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், நா.மு. வேங்கடசாமி நாட்டார், பாரதிபித்தன் ஆகிய நால்வரும் குறிப்பிடுகின்றனர்.  இவ்விரு பாடங்களில் எது சரியான பாடம் எனத் தெளிதல் வேண்டும்.  ஒருவன் சான்றோனாக இருப்பதால்தான் பெருமையடைகிறான் என்கிறார் பரிமேலழகர்.  இதனைத் தன்னை உலகத்திலே எல்லாரும் இவன் புத்திமான் என்று சொல்லிக் கொண்டாடத்தக்கதாக நடக்கவேணும் (பரி.உரை.பா.44) என்று அவர்தம் வாக்கு உணர்த்தும்.  ஒருவன் சான்றோர்க்கிடையே இருப்பதால்தான் பெருமையடைகிறான் என்று ரா. இராகவையங்கார், நாவலர், நாட்டார், பாரதிபித்தன் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.  குறிப்பாக, ரா. இராகவையங்கார் அவர்கள் 'அரசாணையையும் நெறிப்படுத்தவல்ல தக்காரினத்தனாயிருக்க என்கின்றது இஃதென்க.  'அறிவுடையோனாறரசுஞ் செல்லும்' என்றார் பிறரும்.  சுழலும் சக்கர நெறியைத் தொடர்ந்து செல்கின்ற தக்காரெனினு மமையும்.  இதன்பொருள்: சால்புடையார் துணைமைக்கண் நிலைத்திருக்க என்றவாறு.

சான்றோர் - 'ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் (புறம்.191) என்றபடி அறிவும் குணனும் அமைந்தோர்.  இவருள்ள ஊரில் வாழ்தல் மாத்திரையானே பிசிராந்தையார் யாண்டு பலவாகவும் நரையிலையா யின்புற்றா ரென்று கேட்கப்படுதல் கொண்டு இவர் துணைமையினுள்ளார்க்கெய்தும் பேறு உய்த்துணரலாகும்.  இனம் - துணை 'இனனிலனாய்' (குறள்.868) 'என்புழிப்போலச் சான்றவர் கேண்மை சிதைவின்றாயூன்றி வலியாகிப் பின்னும் பயக்கும்' என்றார் மூவாதியரும் (ஆத்திசூடியுரை,பா.45)".  இதே கருத்தை அடியொற்றித் தங்கள் கருத்தினை வெளியிட்டவர்கள் ஆறுமுகநாவலர், நா.மு. வேங்கடசாமி நாட்டார் மற்றும் பாரதிபித்தன் ஆவார்கள்.

ஒவ்வொருவரும் தாம் கொண்ட பாடலின் அடிப்படையில் அவர்களின் உரைகள் அமைந்துள்ளன என்றாலும் இதில் எது சரியான பாடம் எனத் தெளிதல் வேண்டும்.  ஒரு நூலுக்கு உரை எழுதும்போதும் பாடத்தைத் தெரிவு செய்யும் போதும் அந்நூல் யாருக்கு - எவருக்கு - எவ்வயதினருக்கு என்று தெரிவு செய்திடுதல் அவசியமாகும்.  அப்படிப்பார்க்கும் போது ஆத்திசூடி என்னும் நூல் சிறுவர்களுக்கு அறிவுரைகூறும் நூலாக அமைகிறது.  எனவே, சிறுவர்க்குக் கூறும் அறிவுரைப்படி பாடமும் உரையும் காணப்படவேண்டும்.

இங்குச் 'சான்றோரினத்திரு' என ஆத்திசூடி உரையாசிரியர்கள் நால்வரும் ஒருமித்துக் கூற பரிமேலழகர் மட்டும் 'சான்றோர் எனத்திரி' என்கிறார்.  சான்றோனாகத் திரிதல் குழந்தைகளுக்கு அழகன்று; சான்றோரிடையிருப்பதே அழகு.  சான்றோர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளமாட்டார்.  வெளிப்படுத்திக் கொள்வோர் சான்றோர் எனக் கருதமாட்டார்.  இந்த அடிப்படைக் கருத்திலேயே பாடல் மாறுபடுகிறது.  அறுவடைக்குகந்த நெற்பயிர் தலைதாழ்த்தி இருப்பதுபோல் கல்வி-கேள்விகளில் சிறந்த சான்றோர் தன்னடக்கத்துடன் காணப்படுவர்.  அத்தன்னடக்கத்தின் இடையே சிறுவர் இருந்து வளர்ந்தார்கள் என்றால் அவர்தம் தன்மைகள் பெற்று மேன்மையடைவர்.  குழந்தைப் பருவத்தே சான்றோன் எனத் திரிந்தால் கல்வி-கேள்விகளைப் பயில்வது யாரிடம்? ஒருவனின் குணத்தைத் தெரிந்துகொள்ள அவனின் நண்பனைத் தெரிந்துகொள்; அவனின் கல்வியை மதிப்பிட குருவைத் தெரிந்துகொள் என்பார்கள்.  குழந்தைப் பருவத்தே பழகிக்கொள்ளும் நடைமுறை வழக்குகளே அவன் வாழ்வுக்குத் துணையாகும் எனலாம்.  எனவே, குழந்தைகள் சான்றோனாய்த் திரியாமல் சான்றோர்க்கிடையே வளர்வதே பொருத்தமுடையதாகும்.  ஆகவே, இங்குச் 'சான்றோரினத்திரு' எனும் பாடம் சரியானதாகும்.

இவ்வாறு இந்நூலில் காணப்படும் இருபது பாடவேறுபாடுகளையும் ஆய்வு செய்து - சரியான பாடத்தைத் தெரிவு செய்து வெளியிடப்படுமாயின் ஔவையாரின் ஆத்திசூடி தெளிவுபெறும் என்பது திண்ணம்.


பின்னிணைப்பு
ஔவையாரின் ஆத்திசூடி பாடவேறுபாடுகள்
இராகவையங்கார் நாவலர் நாட்டார் பரிமேலாகர் பாரதிபித்தன்
இலவம்பஞ்சில் கிட துயில் துயில் துயில் துயில்
இடம்பட வீடிடேல்        வீடெடேல் வீடெடேல் வீடெடேல் வீடெடேல்
கோஓதாட்டொழி        கோதாட் கோதாட் கோதாட் கோதாட்
                        -டொழி -டொழி -டொழி -டொழி
செய்வினை        செய்வன செய்வன செய்வன செய்வன
  திருந்தச்செய்
தானமிட விரும்பு        தானமது தானமது தானமது தானமது
தேயத்தோ               தேசத்தோ தேசத்தோ தேசத்தோ தேசத்தோ
  டொத்துவாழ்
நுண்மை நுவலேல் நுகரேல் நுகரேல் நுகரேல் நுகரேல்
புகழ்பட வாழ் புகழ்ந்தாரைப் புகழ்ந்தாரைப் புகழ்ந்தாரைப் புகழ்ந்தாரைப்
                     போற்றி         போற்றி   போற்றி   போற்றி
பூமி விரும்பு      திருத்தியுண் திருத்தியுண் திருத்துண் திருத்தியுண்
பைதலோடு     பையலோடு பையலோடு பையலோடு பையலோடு
  இணங்கேல்
அம்மவுத்தமனாஇரு வுத்தமனா வுத்தமனா வுத்தமனா வுத்தமனா
அம்மவூருடன்      வூருடன்      வூருடன்        வூருடன் வூருடன்
  கூடிவாழ்
வைகறை              துயிலெழு துயிலெழு துயிலெழு துயிலெழு
  தொழுதெழு
அம்ம             ஒன்னாரைச் ஒன்னாரைச் ஒன்னாரைச் ஒன்னாரைத்
  வொன்னாரைத்      சேரேல்         சேரேல்   சேரேல்   தேறேல்
  தேறேல்
அம்மவோர்ந்து ஓரஞ் ஓரஞ் ஓரஞ் ஓரஞ்
  வழிபோ            சொல்லேல்   சொல்லேல்   சொல்லேல்   சொல்லேல்
இயல்புஅலா  இயல்புஅலா இயல்புஅலா இயங்கித் இயல்புஅலா
  தனசெயேல் -தனசெயேல் -தனசெயேல் திரியேல் -தனசெயேல்
சான்றோரினத்திரு சான்றோ சான்றோ சான்றோர் சான்றோர்
                  -ரினத்திரு -ரினத்திரு எனத்திரி இனத்திரி

மெல்லின்நல்லார் மெல்லியார் மெல்லிநல்லார்
தோள்சேர்              ----                   ---                      தோள்சேர்   தோள்சேர்
வளமைபெற வாழ்             ----             ---             வல்லமை வல்லமை
  பேசேல்   பேசேல்
தூக்கி வினைசெய்    ----               ---            தூக்கிவினை தூக்கிவினை 
  செய்யேல்   செய்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக